கசடதபற…யரலவழள

languageஅம்மா, ஆடு, இலக்கணம் / அத்தியாயம் 4

தமிழில் ‘மெய்’ என்றால் உடம்பு, அது உயிரைச் சாராமல் தனித்து இயங்கமுடியாது. அதேபோல, உயிர் எழுத்துகளோடு இணைந்து மொழியை உருவாக்கும் முதல் எழுத்துகளை மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம்.

க், ங், ச், ஞ் என்று தொடங்கும் இந்தப் பதினெட்டு எழுத்துகள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். அவற்றை ‘ஒற்று எழுத்துகள்’ என்றும் சொல்வார்கள், தலைமேல் ஒரு புள்ளி இருப்பதால், ‘புள்ளி எழுத்துகள்’ என்று அழைப்பவர்களும் உண்டு.

உயிரெழுத்துகளில் குறில், நெடில் உள்ளதுபோல், மெய்யெழுத்துகளில் கிடையாது. எல்லாமே அரை மாத்திரை அளவு கொண்ட, அதாவது, குறிலைவிடக் குறுகி ஒலிக்கக்கூடிய எழுத்துகள்தாம்.

பதினெட்டு மெய்யெழுத்துகளை, தலா ஆறு எழுத்துகளைக் கொண்ட மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள். இதுவும் நம் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயம்தான்:

* வல்லினம்
* மெல்லினம்
* இடையினம்

இந்தப் பெயர்களே அந்த எழுத்துகளின் தன்மையை நமக்கு உணர்த்திவிடும். ‘வல்லினம்’ அல்லது ‘வல்லெழுத்துகள்’ என்பவை மேஜைமேல் தட்டிப் பேசுவதுபோல் வன்மையாக ஒலிக்கக்கூடியவை, ‘மெல்லினம்’ அல்லது ‘மெல்லெழுத்துகள்’ பூவால் ஒற்றுவதுபோல் மென்மையாக ஒலிக்கக்கூடியவை, இந்த இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ளவை ‘இடையின’ எழுத்துகள்.

வல்லின, மெல்லின, இடையின வகையைச் சார்ந்த எழுத்துகள் எவை என்பதைச் சின்னப் பிள்ளைகூட அறியும். இந்த எளிய சூத்திரப் பாடலின்வழியாக:

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்

மூவகை மெய்யெழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்வதற்கு இந்தப் பாடல் உதவினாலும், அடிப்படையில் இதில் ஒரு சின்னப் பிரச்னை இருக்கிறது. க, ச, ட போன்றவை மெய்யெழுத்துகள் அல்ல, உயிர்மெய் எழுத்துகள். அதற்காக ‘க்ச்ட்த்ப்ற் வல்லினம்’ என்று பாடினால் பல் தெறித்துவிடும்!

ஆகவே, இந்தச் சூத்திரத்தில் வரும் ஒவ்வோர் எழுத்தின் தலையிலும் ஒரு புள்ளி வைத்து மனத்துக்குள் படித்துக்கொள்ளவேண்டும். அதாவது, க், ச், ட், த், ப், ற் வல்லினம்… இப்படி!

அது சரி, மெய்யெழுத்துகளை இப்படி மூன்று வகையாகப் பிரிக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

மறுபடி, உச்சரிப்புதான் காரணம். பதினெட்டு மெய்யெழுத்துகளையும் நாம் மூன்று வெவ்வேறுவிதமாக உச்சரித்தால்தான் அவற்றின் சரியான ஒலி கிடைக்கும்:

* வல்லின எழுத்துகள், மார்பிலிருந்து தொடங்கி ஒலிக்கவேண்டியவை (சொல்லிப்பாருங்கள்!)
* மெல்லின எழுத்துகள், மூக்கிலிருந்து ஒலிக்கவேண்டியவை
* இடையின எழுத்துகள், மார்புக்கும் மூக்குக்கும் இடையே, அதாவது கழுத்திலிருந்து ஒலிக்கவேண்டியவை

இந்த உச்சரிப்புமுறையை நாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். காரணம், தமிழில் பெரும்பாலான எழுத்துகள் (18 மெய், 216 உயிர்மெய்) இந்த முறையில்தான் உச்சரிக்கப்படுகின்றன.

அதாவது, நாம் ‘கி’ என்று சொன்னாலும், அது ‘க்’ என்ற வல்லின மெய்யெழுத்தில் தொடங்கி, பின் ‘இ’ என்ற உயிரெழுத்தின் தன்மையைப் பெற்று முடியும். ஆகவே, அதை மார்பிலிருந்து தொடங்கி உச்சரிக்கவேண்டும். இதே சூத்திரம்தான் மீதமிருக்கும் எல்லா எழுத்துகளுக்கும்!

மெய்யெழுத்துகளில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், தமிழில் எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்காது.

இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு, ஒலிக்குறிப்புகள். உதாரணமாக, ‘ச்சே’, ‘கதவு க்ரீச் எனச் சத்தமிட்டது’ என்றெல்லாம் ஒரு சொல்லையன்றி, ஓர் ஒலியைக் குறிப்பிட்டு எழுதும்போதுமட்டும் இந்தக் கட்டுப்பாட்டை மீறலாம். அதையும் தவிர்க்கமுடிந்தால் ரொம்ப நல்லது.

அடுத்து, இன எழுத்துகள்.

முதலெழுத்துகள் முப்பதையும் சில குறிப்பிட்ட விதங்களாக ஜோடி சேர்த்துக் குறிப்பிடுவதைதான் ‘இன எழுத்துகள்’ என்கிறது இலக்கணம்.

எழுத்துகளை ஏன் இனம் பிரிக்கவேண்டும்?

இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை இந்த நன்னூல் சூத்திரத்தில் காணலாம்:

தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனமே!

அதாவது, கீழ்க்காணும் ஐந்து அம்சங்களில் ஒன்றோ, அல்லது பலவோ ஒத்துவருகிற எழுத்துகளை ‘இன எழுத்துகள்’ என்று அழைக்கிறோம்:

* ஒலி பிறக்கும் இடம்
* ஒலி எழுப்புவதற்கான முயற்சி செய்யும் விதம்
* ஒலி அளவு (மாத்திரை)
* பொருள்
* வடிவம்

உதாரணமாக, அ, ஆ என்ற இரண்டு உயிரெழுத்துகளை எடுத்துக்கொள்வோம். இவை இரண்டின் வடிவமும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கிறது, இவற்றை உச்சரிக்கும் விதமும் ஒரேமாதிரி இருக்கிறது, இல்லையா?

இதனால், அ, ஆ ஆகியவை ஓர் இனம், இணை பிரியா நண்பர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இதுபோல, முதலெழுத்துகளில் பல இனங்கள் உண்டு.

உயிர் எழுத்துகளில் அடுத்தடுத்து வரும் குறிலும் நெடிலும் இனமாகும். ஐ, ஔ ஆகிய இரண்டு நெடில்களுக்குமட்டும் இன எழுத்து கிடையாது. இப்படி:

* அ, ஆ
* இ, ஈ
* உ, ஊ
* எ, ஏ
* ஐ (தனி எழுத்து, இன எழுத்து இல்லை)
* ஒ, ஓ
* ஔ (தனி எழுத்து, இன எழுத்து இல்லை)

மெய் எழுத்துகளில், வல்லின எழுத்துகள் ஆறும், மெல்லின எழுத்துகள் ஆறோடு சேர்ந்து இனமாகும், இடையின எழுத்துகள் ஆறும் தனி இனமாகும். இப்படி:

* க், ங்
* ச், ஞ்
* ட், ண்
* த், ந்
* ப், ம்
* ற், ன்
* ய், ர், ல், வ், ழ், ள்

இன எழுத்துகளின் வகைகளைப் பார்த்துவிட்டோம், ஆனால், இவை எதற்காக என்பது இன்னும் புரியவில்லை. சும்மா எழுத்துகளை ஜோடி சேர்த்துவிட்டால் ஆயிற்றா? அதற்கு என்ன நோக்கம்?

இதற்குப் பல நோக்கங்கள் உண்டு. உதாரணமாக, கவிதை எழுதுகிறவர்கள் இன எழுத்துகளை வைத்து எழுதும்போது ஒலி நயம் கூடும்.

இதைப் புரிந்துகொள்வதற்கு, கீழே உள்ள இரண்டு வாக்கியங்களையும் அடுத்தடுத்து சொல்லிப்பாருங்கள்:

* அன்பே, ஆருயிரே!
* அன்பே, மான்விழியே!

இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரேமாதிரி ஒலிப்பவைதான். ஆனால், இரண்டாவது வாக்கியத்தைவிட, முதல் வாக்கியத்தைச் சொல்லும்போது ஒரு தனிப்பட்ட ஒலி அழகு சேர்ந்துகொள்ளும். அதைச் சொல்லும்போதே நம்மால் தெளிவாக உணரமுடியும்.

இதற்குக் காரணம், அ, ஆ இரண்டும் இன எழுத்துகள். அவற்றை அடுத்தடுத்த சொற்கள் அல்லது வாக்கியங்களின் தொடக்கத்தில் பயன்படுத்தும்போது, ‘மோனை’ என்கிற கவிதை அழகு சேர்கிறது.

கவிதைகளில் மோனையின் முக்கியத்துவத்தைப்பற்றி விளக்கமாகப் பேசுவதற்கு இது இடமல்ல. இப்போதைக்கு, இன எழுத்துகளைப் பேச்சில், எழுத்தில் பயன்படுத்துவது தனி நயம் என்பதைமட்டும் புரிந்துகொண்டால் போதுமானது.

இதற்குக் கவிஞர்களெல்லாம் வேண்டாம், சாதாரணமாக நம் பாமரர்கள் சொல்லும் பழமொழிகளிலேயே இன எழுத்தைப் பயன்படுத்தி மோனை நயத்தைக் கூட்டுவார்கள். உதாரணமாக:

* அகல உழுவதைவிட, ஆழ உழு
* ஆடிக் காற்றில், அம்மியும் பறக்கும்
* ஊர் வாயை மூட, உலை மூடி உண்டா?
* ஒரு கை தட்டினால், ஓசை எழுமா?

இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லமுடியும். இன எழுத்துகளின் மிகப் பிரபலமான பயன்பாடு, இந்த மோனை நயம்தான்.

மெய்யெழுத்துகளைப் பொறுத்தவரை, இன எழுத்துகளால் வேறுவிதமான பயன்பாடு உண்டு, இரண்டு சொற்கள் இணைவதற்கான புணர்ச்சி இலக்கணத்தில்.

இந்தத் தொடரில் புணர்ச்சி இலக்கணம்பற்றி விரிவாகப் பேசவிருக்கிறோம். இப்போதைக்கு, இன எழுத்துகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒரே ஒரு சிறிய உதாரணத்தைமட்டும் பார்ப்போம்.

‘பூந்தொட்டி’ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள், அது ‘பூ’ மற்றும் ‘தொட்டி’ என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது, பூ + தொட்டி = பூந்தொட்டி

ஆனால், ’பூ’, ‘தொட்டி’ இரண்டிலும் இல்லாத ஒரு புதிய எழுத்து (ந்) இங்கே தோன்றியிருக்கிறது. அது எப்படி?

இதற்கான இலக்கண சூத்திரம், ‘பூப் பெயர் முன் இன மென்மையும் தோன்றும்’. அதாவது, ‘பூ’ என்ற சொல்லுக்கு அருகே ஒரு வல்லின எழுத்து வந்தால், அதன் இன மென்மை, அதாவது, அதே இனத்தைச் சேர்ந்த மெல்லின எழுத்து அங்கே தோன்றும்.

பூ + தொட்டி … இங்கே ‘பூ’ என்ற சொல்லுக்கு அருகே ‘த்’ என்ற வல்லின எழுத்து வந்துள்ளது, அதன் இனத்தைச் சேர்ந்த மெல்லின எழுத்து ‘ந்’ (மேலே உள்ள பட்டியலைப் பார்க்கவும்), ஆகவே, பூ + தொட்டி = பூந்தொட்டி.

வேறோர் உதாரணம் பார்ப்போம் : பூ + சோலை.

இங்கே ‘பூ’ என்ற சொல்லுக்கு அருகே ‘ச்’ என்ற வல்லின எழுத்து வந்துள்ளது. அதன் இனத்தைச் சேர்ந்த மெல்லின எழுத்து ‘ஞ்’, ஆகவே பூ + சோலை = பூஞ்சோலை.

மெய்யெழுத்துகளில் உள்ள இனங்களை நினைவு வைத்துக்கொள்வது சுலபம். பல சொற்களில் இவை மெல்லினம், அதன்பிறகு வல்லினம் என்ற வரிசையில் அருகருகே வந்து ஒலி நயத்தைக் கூட்டும்.

உதாரணமாக, க், ங் ஆகியவை இன எழுத்துகள். இவை அருகருகே வரும் சொற்கள், அங்கு, இங்கு, தங்கு, தங்கம், எங்கள், உங்கள் போன்றவை.

இதேபோல் மற்ற மெய்யெழுத்து இனங்களுக்கும் ஏகப்பட்ட உதாரணங்களைக் காட்டமுடியும் : பஞ்சு, குண்டு, பந்து, பாம்பு, இன்று போன்றவை.

இதோடு, நமது முதலெழுத்துப் பகுதி நிறைவு பெறுகிறது. ஒருவேளை முக்கியமான தலைப்புகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள், பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்து, சார்பெழுத்துகள்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* மெய்யெழுத்துகள் (18)
* வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6)
* வல்லினம், மெல்லினம், இடையினம் ஒலி தொடங்கும் இடம்
* இன எழுத்துகள்
* எழுத்துகளை இனம் பிரிப்பதற்கான அம்சங்கள்
* உயிர் இன எழுத்துகள், மெய் இன எழுத்துகள்
* மோனை
* பூப்பெயர்ப் புணர்ச்சி
* அருகருகே வரும் வல், மெல் இன எழுத்துகள்

0

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

pig

மாற்றம் : யார் மனிதன், யார் விலங்கு என்று கண்டறியமுடியாதபடி அனைவருடைய முகங்களும் ஒன்றுபோல் இருந்தன என்னும் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை வாசகம் நினைவுக்கு வருகிறது.  ஜார்ஜ் புஷ்ஷின் நான்காவது ஆட்சிக்காலத்தை ஒபாமா நடத்திக்கொண்டிருக்கிறாரா? அல்லது ஒபாமாவின் முதல் இரு ஆட்சிக்காலத்தை புஷ் நடத்திக்கொடுத்தாரா?

அமெரிக்கா பிற நாடுகளை மட்டுமல்ல அமெரிக்கர்களையே ரகசியமாக உளவு பார்த்துக்கொண்டிருக்கிறது என்னும் உண்மையை  இதற்கு முன்பே சிலர் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றாலும் முதல் முறையாக உலகின் பெரும் கவனம் இதற்குக் கிடைத்திருப்பதற்குக் காரணம் எட்வர்ட் ஸ்நோடென். புஷ் அரசு, பல மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட வாழ்வில் தேவையில்லாமல் தலையிடுகிறது என்று கோபாவேசத்துடன் பிரசாரம் செய்து தன்னை ஒரு லிபரலாக முன்னிறுத்தி புஷ்ஷை வீழ்த்தியவர் ஒபாமா. இப்போது புஷ்ஷின் அதே திட்டங்களை (கிட்டத்தட்ட ஒன்றுவிடாமல்) மேலதிகத் தீவிரத்துடன் ஒபாமா தொடர்கிறார். குவந்தணாமோ சிறைச்சாலையை மூடுவேன் என்று முழங்கினார். செய்யவில்லை. போர்களை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்றார். செய்யவில்லை.

ஜப்பான் சரணடைந்துவிட்டது, இரண்டாவது உலகப் போர் முடிவடைந்துவிட்டது என்று 1945ல் ஹாரி ட்ரூமேன் அறிவித்தபோது, அமெரிக்கர்கள் இனம் புரியாத மகிழ்ச்சியோடு வீதிகளில் திரண்டு வந்து ஆர்ப்பரித்தார்கள். ஜப்பனில் அணுகுண்டுகள் வீசப்பட்டது அவர்கள் நினைவில் இல்லை. அமெரிக்கா வென்றுவிட்டது என்பதால் எழுந்த மகிழ்ச்சி அல்ல அது. அவர்களுடைய உயிரையும் உணர்வுகளையும் தின்றுகொண்டிருந்த போர் முடிந்துவிட்டதால் எழுந்த ஏக்கப் பெருமூச்சே மகிழ்ச்சியாக வீதிகளில் வெளிப்பட்டது.

பராக் ஒபாமா வெற்றிபெற்றபோதும் இதே போன்ற மகிழ்ச்சி அமெரிக்க வீதிகளில் வெளிப்பட்டது. புஷ்ஷின் போர்கள் முடிவடைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். சொன்னதைப் போலவே ஒபாமா மாற்றத்தைக் கொண்டுவந்துவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகின் பெரும்பகுதியில் எதிரொலித்த நம்பிக்கை இது. வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பினத் தலைவர் என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு மகிழ்ந்தது மீடியா உலகம்.

உலகை மட்டும் ஏமாற்றியிருந்தால் பரவாயில்லை. அமெரிக்காவையும் சேர்த்தே ஏமாற்றியிருக்கிறார் ஒபாமா. அதற்காக (மட்டும்) அமெரிக்கர்கள் இப்போது பொங்கியிருப்பது மட்டுமே உறுத்துகிறது. விலங்குப் பண்ணையோடு சேர்த்து ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984-ஐயும் அமெரிக்கர்கள் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டிய தருணமிது. The Big  Brother is not just watching the world, but watching you too.

0

0743276671A Pinch of Salt : பிரிட்டிஷ் பயண எழுத்தாளரான ஏஏ கில் என்பவர் எழுதிய AA Gill is away என்னும் புத்தகத்தை வாசித்து முடித்தேன். சூடான், டான்ஸானியா, எத்தியோப்பியா, டோக்கியோ, டெல்லி, க்யூபா, அர்ஜெண்டினா என்று கில் மேற்கொண்ட பயணங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. நீங்கள் எதைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று ஒரு பத்திரிகை எடிட்டர் கேட்டபோது கில் இவ்வாறு பதிலளித்திருக்கிறார். ‘இடங்களை, மனிதர்களாகப் பாவித்து பேட்டி எடுத்து எழுதப்போகிறேன்.’ இந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு வரி அறிமுகமும் இதுதான்.

நல்ல எழுத்து, ஒவ்வொரு இடத்தையும் பற்றிய சுருக்கமான, தெளிவான, பல சமயம் அழகான அறிமுகம் என்றபோதும்  ஒரு சிட்டிகை உப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டியிருக்கிறது. முதல் காரணம், கில்லின் prejudices. ஒரு திடமான முன்முடிவோடுதான் ஒவ்வொரு நாட்டையும் அவர் காண்கிறார். க்யூபாவையும் ரஷ்யாவையும் முதல் பார்வையிலேயே வெறுத்தொதுக்குகிறார். கம்யூனிசத்தின் நிழல் அல்ல, நிழல் விழுந்த இடம்கூட அவருக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது காரணம், பாலியல், பெண்கள், ஃபோர்னோகிராஃபி மீதான அவருடைய ஒருவகை obsession. எங்கு சென்றாலும் இதே வரிசையில் இவற்றையே அவர் ஆர்வத்துடன் தேடித்திரிகிறார்.

நல்ல வேளையாக, இந்தியாவை அவருக்குப் பிடித்திருப்பதற்கு முதன்மையான காரணம் தாஜ் மஹால். It is the most complete thing என்று வாய் பிளந்து வியக்கிறார். அவர் வியக்கும் மேலும் சில இந்திய விஷயங்கள். 30 அல்லது 300 அல்லது 3000 மில்லியன் கடவுள்கள். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் மேலே வந்து இடிக்காத மக்கள். (அவர் சொல்வது!). ஒரே ஒருமுறை தெரியாமல் இடித்துவிட்டு, தன் நெஞ்சை கையால் தொட்டு அமைதியாகவும் இங்கிதத்துடனும் பொயட்டிக்காகவும் சாரி கேட்ட ஒரு மனிதன். பிரிட்டன்மீது இன்னமும் மரியாதை வைத்திருக்கும் மனிதர்கள். (‘ஆயிரம் இருந்தாலும் டெலிகிராம், ரயில்வே எல்லாம் அவன் கொடுத்தது சார்’). பொருளாதாரரீதியில் மட்டுமே ஏழையாக இருக்கும் இந்தியர்கள். (வரலாறு, கலாசாரம், ஆன்மிகம் ஆகிய விஷயங்களில் அமெரிக்கர்கள்கூட இந்தியாவிடம் இருந்து கற்கவேண்டுமாம்).

பிரயாண எழுத்தாளர்களில் பெரும்பாலானோரால் ஏன் Stereotyping இல்லாமல், prejudice இல்லாமல் புத்தகம் எழுதமாட்டேன் என்கிறார்கள்?

0

 

Disguise: பிரதி வெள்ளி என்று அறிவிக்கப்பட்ட ‘புரட்சி’ கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் மிகச் சரியாக திங்கள் அன்று வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த ஒழுங்கீனத்தை மூடிமறைக்கவும் தொடர் வரவேண்டிய இடத்தை இட்டுநிரப்பவும்தான் இந்தப் புதிய திடீர் பகுதி என்று இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்திருக்கக்கூடும்.

0

மருதன்

விசாரணை கமிஷன் / பகுதி 6

imagesஒரு கனவின் வரைபடம் / அத்தியாயம் 6

காட்சி எண் 23

இடம் : விசாரணை மன்றம்

வக்கீல் : சரிம்மா. நீங்க அந்த ஓரமா நில்லுங்க. நான் இவரை விசாரித்துவிட்டுக் கூப்பிடுகிறேன்.

வக்கீல் : சார். உங்க பேர் என்ன சார்…?

நழுவி ஓட முற்பட்டவன் : தவமணி.

வக்கீல் : தவமணி சார், நீங்க என்ன வேலை பாக்கறீங்க.
(தவமணி சற்றுத் தயங்குகிறார்).

வக்கீல் : சொல்லுங்க. தைரியமா சொல்லுங்க.

தவமணி : போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள்.

அரசு வக்கீல் தடுமாறியபடியே போலீஸ் கமிஷனரைப் பார்க்கிறார். கமிஷனர் அவரை முறைக்கவே சட்டென்று தவமணி பக்கம் திரும்புகிறார்.

வக்கீல் : சரி. நீங்க எந்த பிராஞ்ச்ல இருக்கீங்க.

தவமணி : ஈ – 3 ஸ்டேஷன்ல இருக்கேன்.

வக்கீல் : சம்பவம் நடந்த இடத்துல உங்கள் பார்த்தாக இந்த அம்மா சொல்றாங்களே. நீங்க போயிருந்தீங்களா?

தவமணி : இல்லை நான் அப்போ லீவுல இருந்தேன். என் சம்சாரத்துக்கு உடம்பு சரியில்லாம இருந்ததுனால ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி இருந்தோம். நான் அங்கதான் இருந்தேன்.

வக்கீல் : அதுக்கு யாராவது சாட்சி இருக்காங்களா?

தவமணி : அதுக்கு ஏற்பாடு பண்ணிடலாம் (சற்று சுதாரித்து) அவங்கள வர வைக்க ஏற்பாடு பண்ணலாம்.

வக்கீல் : உங்கள் அவங்க பாத்ததா சொல்றாங்களே.

தவமணி : அவங்க ஏதோ பதட்டத்துல அப்படிச் சொல்றாங்க. நீங்க வேணா என்னோட ஸ்டேஷனல் இருக்கிற ரெஜிஸ்டரப் பாக்கலாம். அன்னிக்கு நான் லீவுல இருந்தேன். நான் இருந்த ஆஸ்பத்திரியோட ஸ்டாஃப் கிட்ட கூட நீங்க விசாரிக்கலாம்.

வக்கீல் : அப்போ நீங்க அன்னிக்கு அங்க போகவே இல்ல.

தவமணி : ஆமாம்.

வக்கீல் : சரி நீங்க போகலாம்.

அடுத்த சாட்சியாக போலீஸ் கமிஷனர் வருகிறார். மக்கள் தரப்பு வக்கீல் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு கேள்விகளை ஆரம்பிக்கிறார்.

மக்கள் தரப்பு வக்கீல் : மறியல் நடந்த அன்றும் மலைப் பகுதியில் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்பட்ட அன்றும் உத்தரவுகளைப் பிறப்பித்த உயர் அதிகாரியாக நீங்கள்தான் இருந்திருக்கிறீர்கள், இல்லையா?

கமிஷனர் : ஆமாம்.

வக்கீல் : மறியல் நடந்த அன்று துப்பாக்கிச் சூடு நடந்தாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்திருந்தது. பொதுவாக கூட்டத்தைக் கலைப்பதென்றால் கண்ணீர் புகைதானே வீசுவார்கள். துப்பாக்கியால் சுடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டிருந்ததா என்ன?

கமிஷனர் : (தொண்டையைச் செருமியபடி) துப்பாக்கியால் சுடுவதற்கு நான் உத்தரவு தரவும் இல்லை. உண்மையில் அன்று துப்பாக்கிச் சூடு நடக்கவும் இல்லை. என்ன நடந்தது என்றால், காவல் பணி செய்து கொண்டிருந்த பெண் காவலர்களைப் போராட்டக்காரர்கள் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள். வேறு சேட்டைகளும் செய்திருக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த, கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுதான் வீசினார்கள்.

வக்கீல் : மூன்று ரவுண்ட் துப்பாக்கி குண்டு சுடப்பட்டதாக சொல்லப்படுகிறதே?

கமிஷனர் : அவை வெறும் ரப்பர் குண்டுகள். கூட்டத்தினரைப் பயமுறுத்தி கலைத்துவிட அதைப் பயன்படுத்தினார்கள். அவ்வளவுதான்.

வக்கீல் : அப்படியானால் அந்தக் குண்டு பாய்ந்து குல்லா அணிந்த வாலிபர் ஒருவர் இறந்ததாகவும் அவரது உடலை சிதறி ஓடியவர்கள் பார்த்ததாகவும் கடைசியில் பிரேதப் பரிசோதனை அறையில் கிடத்தப்பட்ட பிணங்களில் அப்படி ஒரு உடல் இருந்திருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறதே.

கமிஷனர் (சற்றுத் திகைத்து, பின் சுதாரித்து) : உங்களுக்குக் கிடைத்த தகவலை நீங்களே மறு பரிசீலனை செய்து பார்த்தால் உங்களுக்கே உண்மை தெரிந்துவிடும். அதாவது பிரேதப் பரிசோதனை அறையில் கிடத்தப்பட்ட பிணங்களில் குல்லா அணிந்த வாலிபரின் உடல் இருந்திருக்கவில்லை, அப்படித்தானே? எப்படி இருந்திருக்க முடியும்? அப்படி ஒரு வாலிபர் உண்மையில் இருந்திருந்தால்தானே அது சாத்தியமாகும்?

வக்கீல் : அவரது ரத்தம் தோய்ந்த உடலை காவலர்கள் தங்கள் வாகனமொன்றில் எடுத்துப் போட்டு அப்புறப்படுத்திவிட்டதாகச் சொல்லப்படுகிறதே.

கமிஷனர் : இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. போராட்டக்காரர்கள் பொய்களைப் பரப்புவதில் சாதுர்யமானவர்கள் என்பதே இதிலிருந்து தெரிகிறது.

வக்கீல் : தன் மகனை மறியல் நடந்த தினத்தில் இருந்து காணவில்லை என்று ஒருவர் புகார் கொடுத்துள்ளாரே. ஏன் அந்த உடல் அவருடைய மகனுடையதாக இருந்திருக்கக் கூடாது?

கமிஷனர் : இப்போது நீங்களும் சாதுரியமானவர் என்பது தெரிகிறது. ஆனால், உங்களுக்கும் சாதுர்யம் பத்தாது. பாருங்கள், நீங்கள்தான் சொன்னீர்கள், மறியல் நடந்த அன்றிலிருந்து ஒரு வாலிபனைக் காணவில்லை என்று. அந்த வாலிபர் ஏதாவது ஒரு பெண்ணுடன் ஓடிப் போயிருக்கலாம். வீட்டில் கோபித்துக் கொண்டு எங்காவது போயிருக்கலாம். எத்தனையோ சாத்தியக்கூறுகள் இருக்கிறது இல்லையா? அப்பறம் அப்படிப் போன இடத்தில் ஆற்றில் மூழ்கி யாருக்கும் தெரியாமல் இறந்து போயிருக்கலாம். யாராவது அவனைக் கொன்றிருக்கலாம் என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. அவன் என்றாவது ஒரு நாள் நிச்சயம் திரும்பி வருவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

வக்கீல் : மலைப்பகுதிக்குச் சென்று நூற்றுக்கணக்கான காவலர்கள் அங்கு படுமோசமாக நடந்து கொண்டிருக்கிறார்களே. நீங்கள் அவர்களுக்கு என்ன உத்தரவு தந்தீர்கள்?

கமிஷனர் : படு மோசமாக நடந்து கொண்டார்கள் என்று நீங்கள் எந்தவித ஆதாரமும் இன்றி சொல்லக் கூடாது. என்ன நடந்தது என்பதைக் கண்டறியத்தான் இந்த விசாரணையே. உண்மையில், என்ன நடந்தது என்றால் மறியல் நடந்து முடிந்தபின் மலைப் பகுதியைக் கண்காணிக்கும் பொருட்டு இரண்டு காவலர்களை அங்கு நியமித்திருந்தோம். அவர்களுள் ஒருவரைப் போராட்டக்காரர்கள் கொன்று விட்டார்கள். கொன்றவர்களைப் பிடிக்கப் போன காவலர்களை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். கை கலப்பு நடந்திருக்கிறது. தங்கள் நண்பனைக் கொன்றுவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் சில காவலர்கள் லேசாக அத்துமீறி இருக்கக்கூடும். நான் கொன்றவர்களைப் பிடித்து வாருங்கள் என்று சொல்லித்தான் அனுப்பினேன். அதைத்தான் அவர்களும் செய்தார்கள்.

வக்கீல் : அப்படியானால் வீடுகள் இடிக்கப்பட்டு, தோட்டங்கள் தீ வைக்கப்பட்டு, உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தனவே? அதை யார் செய்தது?

கமிஷனர் : அதுதான் எனக்கும் புரியவில்லை. எனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காவலர்கள் மிகவும் நல்லவர்கள். நான் சொன்னதை மட்டுமே செய்வார்கள். காவலரைக் கொன்றவர்களை ஒப்படைத்துவிடும்படி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஊர் மக்கள் மறுத்திருக்கின்றனர். பேச்சு வார்த்தை முற்றி கை கலப்பு வரை போயிருக்கிறது. சிலரை சந்தேகப்பட்டுக் காவலர்கள் பிடிக்கப் போயிருக்கிறார்கள். அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கொண்டு விடவே கதவை உடைத்துக் கொண்டு போய் பிடிக்க வேண்டியதாயிற்று. வீட்டுக்குள்ளேயே சண்டை நடந்ததில் மேஜைகள், பீரோக்கள் சேதமடைந்திருக்கக் கூடும். தோட்டத்தின் வழியே தப்பித்து ஓட முயன்றவர்களைப் பிடிக்கப் போன போது தோட்டம் சேதமடைந்திருக்கக் கூடும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே நான் சில புகைப்பட நிருபர்களையும், வீடியோ கிராஃபர்களையும் மலைப் பகுதிக்கு அனுப்பினேன். காவலர்கள் அத்துமீறி நடந்திருக்கின்றனரா என்பதைக் கண்டறிவதற்காக அவர்களை அனுப்பினேன். ஆனால், மக்கள் அவர்களை ஊருக்குள் அனுமதிக்கவே இல்லை. அதன் பின் அவர்கள் கூடிக் கலந்தாலோசித்து தமது வீடுகளை, உடைமைகளைத் தாங்களே சேதப்படுத்தி விட்டு பழியைக் காவலர்கள் மீது போட்டு விட்டிருக்கிறார்கள். இதுதான் நடந்தது நீதிபதியவர்களே.

வக்கீல் : அப்படியானால் இன்று கொஞ்சம் முன்பாக ஒரு பெண் தன்னைக் கேவலமாக ஒரு காவலர் திட்டியதாகச் சொன்னார்களே? அதுவும் பொய்தானா?

கமிஷனர் : அனேகமாக அப்படித்தான் இருக்கும். அதோடு இன்னொரு விஷயம். கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள். எனக்குக் கோபம் வந்தால், “நீங்கள் சொல்வது சரிதானா பாருங்கள்” என்று சொல்வேன். “என்ன பேசுகிறோம் என்பது தெரிந்துதான் பேசுகிறீர்களா” என்பேன். அது என் பாணி, என் ஸ்டேட்டஸ், என் டெபுடிகள் சற்று கடுமையாகப் பேசுவார்கள். அவர்களுக்கும் கீழே இருப்பவர்கள் அதைவிடக் கடுமையாகப் பேசுவார்கள். நான் இதைச் சரி என்று சொல்லவில்லை. அது அவர்களுடைய பாணி. பாதிக்கப்பட்டதாக நீங்கள் சொல்பவர்கள் சாதாரணமாகவே பாலியல் தொடர்பான வார்த்தைகளை வெகு சகஜமாகப் பயன்படுத்துவார்கள். எனவே, அப்படியே காவலர்கள் சொல்லியிருந்தாலும் அது பெரிய விஷயம் அல்ல.

வக்கீல் : பயன்படுத்தும் வார்த்தைகள் அல்ல; அதற்குப் பின்னால் இருக்கும் உணர்வுதானே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்துவதற்கும், காவலர்கள் வெறியோடு பயன்படுத்தியதற்கும் வித்தியாசம் இருக்கிறதே.

கமிஷனர் : நமக்குத்தான் அப்படித் தோன்றுகிறதே தவிர, உண்மையில் அது அப்படி அல்ல. அதோடு கூடுதலாக எனக்கு ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. பொதுவாக நீதி விசாரணை என்றால் நான்கு தரப்புகள் இருப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பக்கம் இருப்பார். புகார் தந்தவர் ஒரு புறம் இருப்பார். நீதிபதி என்று ஒருவர் தனியாக இருப்பார். அவர் குற்றம் சாட்டப்பட்டவரும், புகார் தந்தவரும் சொல்வதைக் கேட்டு மட்டுமே ஒரு முடிவுக்கு வந்து விட மாட்டார். வந்து விடவும் முடியாது. ஏனெனில் அவர்கள் இருவருமே தாம் சொல்வதுதான் சரி என்று வாதிடுவார்கள். அப்படியானால் உண்மை என்பது எப்படித்தான் கண்டுபிடிக்கப்படும்? அங்கே சாட்சி என்ற இன்னொரு தரப்பினர் இருப்பார்கள். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேண்டியவர்களாகவும் இருக்க மாட்டார்கள். குற்றம் சுமத்தியவருக்கு வேண்டியர்களாகவும் இருக்க மாட்டார்கள். சம்பவம் நடக்கும் இடத்தில் அல்லது வேறு இடத்தில் கூட இருக்கலாம். நடந்தது என்ன என்பது பற்றி அல்லது சம்பந்தப்பட்ட நபர் முன்பு எப்படி நடந்து கொண்டார் என்பது பற்றி தன் அனுபவம் சார்ந்து அவர் சொல்லுவார். நீதிபதி அவர்கள் அதைக் கணக்கில் கொண்டு தான் நீதியே வழங்குவார்கள். அதுதான் முறை. இங்கு சாட்சி என்ற தரப்பே இல்லையே.

பாதிக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் சொல்கிறார்கள், காவலர்கள்தான் செய்தார் என்று, காவலர்கள் சொல்கிறார்கள் நாங்கள் செய்யவில்லையென்று. இந்நிலையில் மூன்றாம் நபராக சாட்சிகள் வேறு யாரும் இல்லவும் இல்லை. அதோடு, காவலர்களுக்கு பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுபவர்களை அடிப்பதினாலோ, திட்டுவதினாலோ என்ன கிடைத்து விடப் போகிறது. எனவே அவர்கள் அப்படிச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் ரொம்பவும் குறைவே. இதுதான் நீதிபதி அவர்களே நான் சொல்ல விரும்புவது. இனி நீங்கள் மேலும் விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்து உங்கள் தீர்ப்பை வழங்கலாம்.

கமிஷனர் சொன்னதுபோலவே அவரிடம் கேள்விகள் கேட்பது முடித்துக்கொள்ளப்படுகிறது.
கமிஷனர் விடை பெற்றுச் செல்கையில் செல்போனை எடுத்து யாருக்கோ அழைப்புவிடுக்கிறார். நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் கண்காணிப்பு இயக்கத்தின் தலைவர் வின்சன்டின் செல்பேசி அதிர்கிறது. எடுத்துப் பார்ப்பவர் திடுக்கிட்டு சட்டென்று வெளியே வருகிறார்.

கமிஷனர் : என்னப்பா உன் வக்கீல் திடீர்னு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறான். நாங்க ஒர்த்தனைச் சுட்டது நெஜம்தான். நீங்க அவனுக்கு குல்லால்லாம் போட்டு விடறீங்க. என்ன சங்கதி? கொடி பிச்சிருக்கறவங்கள, சட்டைல கொடியக் குத்தியிருக்கிறவங்கள மட்டும்தான் அடிக்கலாம்னு உத்தரவு தந்திருந்தேன். நீ நைஸா குல்லா பாலிடிக்ஸை இதுக்குள்ள கொண்டு வர்றியா… தம்பி இது நல்லதில்லை.

வின்சன்ட் (சிரித்தபடியே, தணிந்த குரலில்) : உங்களுக்குத் தெரியாத பாலிடிக்ஸா… எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்.

கமிஷனர் : எதுவானாலும் இப்படி திடுதிப்னு எல்லாம் கேட்கக்கூடாது. நீ இதை முன்னாலேயே சொல்லி வைக்கலாம் இல்லையா? சரி பாத்து நடந்துக்கோ. இந்தக் காலத்துல நல்லவங்க கிட்டயே நல்லவிதமா நடந்துக்க முடியறதில்லை.

பேசியபடியே தன் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டுச் செல்கிறார். மக்கள் கண்காணிப்பு இயக்கத் தலைவர் சிரித்தபடியே செல்போனை அணைத்துவிட்டு நீதிமன்றத்துக்குள் நுழைகிறார்.
சிறிது நேரத்தில் நீதிபதி தன் தீர்ப்பை வழங்குகிறார்.

நீதிபதி : கடந்த நவம்பர் 23 அன்று செந்தமிழ் நகரில் காவல் துறையினர் அத்து மீறி நடந்ததாக மக்கள் கண்காணிப்பு இயக்கத்தின் சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்குகிறது. சாலை வசதி கேட்ட ஊர் மக்கள் ஒன்றிணைந்து போராடியபோது அதை சாக்காக வைத்துக் கொண்டு சில விஷமிகள் தங்கள் சுய லாபங்களைக் கணக்கில் கொண்டு பல அடாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் தன் எல்லை வரை ஆத்மார்த்தமாக முயன்று பார்த்திருப்பதை இந்த நீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது; மதிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு ரூ.20,000மும் இறந்து போன்றவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000மும் தரும்படி அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. காவலர்கள் மீதான குற்றச்சாட்டிற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை இந்த நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நஷ்டஈட்டுத் தொகையை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளும்படி இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

மக்களுக்கு இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் மிகுந்த கோபம் ஏற்படுகிறது. டாக்டர் எழுந்து ஏதோ சொல்ல முற்படுகிறார். காவல்துறை அவரை வெளியே தள்ளிக் கொண்டு செல்கிறது.
நஷ்ட ஈடு தரும் நாளில் மக்கள் அந்த இடத்திற்குச் சென்று கொடுக்கப்படும் பணத்தை வாங்கி அதிகாரிகளின் முகத்தில் வீசி எறிகிறார்கள். காவலர்கள் வந்து அவர்களை விரட்டி அடிக்கிறார்கள்.

மக்களும் டாக்டரும் சோகமாக நடந்து சென்று ஒரு பூங்காவில் சென்று அமர்கிறார்கள். டாக்டர், ஒரு சில இளைஞர்களுடன் தனியாக ஒரு மூலையில் சென்று அமர்கிறார். சற்று தொலைவில் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இருக்கும் காலி மைதானத்தில் காளை ஒன்றுக்கு மூக்கணாங் கயிறு மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் மூர்க்கத்தனமாகத் திமிறும் காளை சிறிது நேரத்தில் ரத்தம் கசிய வேதனையில் அடங்கிப் போகிறது. அப்போது அந்தப் பூங்காவுக்கு முப்பது நாற்பது பேர் கூட்டமாக வருகின்றனர். வட்டமாக ஒரு மரத்தடியில் அமர்கின்றனர். அவர்களது கையில் சிறிய சிறிய பேனர்கள், தட்டிகள் இருக்கின்றன. அவர்கள் ஒருவன் எழுந்து நின்று பேசத் தொடங்குகிறான்.

அன்பிற்குரிய தோழர்களே… நடந்து வரும் அரசு பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. செருப்பின்றி நடப்பவனுக்குத் தெரியும் சூரியனின் கொடுமை. ஆனால், குளிர்பதன அறைகளில் பிறந்தவர்களின் கையில் நாம் அதிகாரத்தைக் கொடுத்து வைத்திருக்கிறோம். வெய்யிலாக இருக்கிறது என்று அவனிடம் சொன்னால் கோடை வாசஸ்தலத்துக்குப் போய் விட்டு வாருங்களேன் என்கிறான். அவனா பேசுகிறான். அவன் இருக்கும் அரியணை பேசுகிறது. அவனை அரியணையில் அமர்த்திய நாம் தெருவில் தட்டழிந்து திண்டாடுகிறோம். நாம் அதிகமாக எதையும் கேட்கவில்லை. வெய்யிலில் இருந்து ஒரு சிறிய பாதுகாப்பு. ஒரு செருப்பு. ஒரு சிறு குடை. அமர ஒரு நிழல். நமக்கு அவையும் மறுக்கப்படுகிறது. நாம் அதைப் போராடிப் பெற்றாக வேண்டும். அழும் குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும். கருணையே வடிவான தாயிடமே அதுதான் நியதி என்றால் இவர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. என்ன நடக்கவேண்டும் எப்படி நடக்கவேண்டும் என்பதை இனி நாமே தீர்மானித்தாக வேண்டும். மக்கள் சக்தி தோற்றதாக சரித்திரமே இல்லை.

அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் மலைப் பகுதி பெரியவர் ஒருவருக்கு தாங்கள் ஒன்றுகூடி மனு கொடுத்தது, சாலையில் மறியல் செய்தது, காவலர்கள் வந்து அடித்தது, விசாரணைக் கமிஷனில் சொன்னது போன்றவை நினைவுக்கு வருகிறது. மெல்ல மெல்ல அவருக்குக் கோபமும் ஆவேசமும் கிளம்புகிறது. அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போய் ஆவேசமாக இடைமறிக்கிறார்.

பெரியவர்: இவன் சொல்றதைக் கேட்காதீங்க. இவனால ஒண்ணும் பண்ண முடியாது. உங்களால ஒண்ணும் முடியாது. நாங்களும் இது மாதிரிதான் ஒண்ணாச் சேர்ந்து ஊர்வலம் போனோம். கொடி பிடிச்சோம். போதும் போதும்னு சொல்ற அளவுக்கு பட்டாச்சு. உங்களுக்கும் அதுதான் நடக்கும். ஒரு மயிராண்டியாலயும் உங்களுக்கு ஒதவ முடியாது. இருக்கறத வச்சிக்கிட்டு பல்லக் கடிச்சிக்கிட்டு வாழ்ந்துட்டுப் போயிடுங்க. இல்லைன்னா இப்ப இருக்கறதும் இல்லாமப் போயிடும். நாமெல்லாம் இந்தப் பூமில வாழறதுக்காகப் பொறக்கல. மத்தவங்கள வாழ வைக்கறதுக்காகத்தான் பொறந்திருக்கோம். எஜமானுங்க என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்கிட்டுப் போகணும். அவங்க குனியச் சொன்னா குனியணும். படுக்கச் சொன்னா படுக்கணும். அவுகளுக்கு கூரை ஆகாசம் மட்டுக்கும் இருக்கும். எப்படி வேணுமானாலும் நிமிர்ந்து நடக்கலாம். நமக்குக் கூரை நம்ம தலைக்கு மேல இருக்கு. நாம நிமிந்தா ஒரேயடியா அமுக்கிப் போடும். வயசுல மூத்தவன் சொல்லறேன். என் சொல்லுக்கு ஒரு வெல கொடுங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்லுதேன். கொடி பிடிக்காதீங்க. கூட்டம் போடாதீங்க. உங்களுக்குப் புண்ணியமாப் போகும். ஓடாத் தேய்ஞ்சு உரு அழிஞ்சு போனாலும் செருப்பு கால்லத்தான் கெடக்கணும். போங்க தம்பிங்களா. போங்க. தர்ற கூலிய வாங்கிட்டு சொல்ற வேலையைச் செஞ்சுக்கிட்டு உடம்புல உசிரோட ஒரு மூலைல இருந்துட்டுப் போயிடுங்க. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்லுதேன். போயிடுங்க…

பேசியபடியே தரையில் சாய்கிறார். சிலர் அவரைக் கைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு ஒரு ஓரமாக அழைத்துச் செல்கிறார்கள்.

டாக்டரும் அவருடன் இருப்பவர்களும் நடந்ததை வேதனையுடன் பார்த்தபடியே இருக்கிறார்கள்.

இளைஞர்களுள் ஒருவன் : ஆமா, இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல.

டாக்டர் : (விரக்தியுடன்) அவரச் சொல்லி என்னப்பா பிரயோஜனம். அவரால எது முடியுதோ அதைச் செய்யறாரு.

இளைஞன் : அதுதான் தப்புன்னு சொல்லுறேன். எது முடியுதோ அதைச் செஞ்சு பிரயோஜனமில்ல. எதைச் செய்யணுமோ அதைச் செய்யணும்.

குனிந்தபடியே புல் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் டாக்டர் சட்டென்று நிமிர்ந்து பார்க்கிறார்.

இளைஞன் : எங்க செய்யணுமோ அங்க செய்யணும் (கலெக்டர் அலுவலகம் இருக்கும் திசையைச் சுட்டிக் காட்டிச் சொல்கிறான்).

டாக்டர் முகத்தில் புன்னகை அரும்புகிறது. கண்களில் ஒளி ஏற்படுகிறது. அருகில் இருப்பவர்களை நிதானமாகப் பார்க்கிறார். இளைஞன் சொன்னது சரிதான் என்பதுபோல் எல்லோரும் தலையசைக்கிறார்கள். டாக்டர் மெல்லத் தன் கையை அவர்கள் முன்னால் நீட்டுகிறார். ஒவ்வொருவரும் தங்கள் கையை அவரது கை மேல் வைத்து சபதமெடுப்பது போல் இறுக்கிப் பிடிக்கிறார்கள்.

டாக்டர் : (உறுதியான குரலில்) இதுவரை அன்பா கேட்டுப் பார்த்தாச்சு. மயில் தானா இறகு போட்டதாச் சரித்திரம் கிடையாது. போடத்தான் வச்சிருக்காங்க. நாமளும் அதைச் செய்வோம். நமக்கு அதைத் தவிர வேற வழியில்ல. இத்தனை நாள் சிந்தின ரத்தமும் கண்ணீரும் வீணாகக் கூடாது. யார் இதுக்குக் காரணமோ அவங்க இதுக்குப் பதில் சொல்லியே ஆகணும். நாம யாருங்கறத அவங்களுக்குக் காட்டியே ஆகணும்.

பின்னணியில் கலவரமான இருண்ட மேகக் கூட்டமும் செந்நிறத்தில் சூரியனும் தென்படுகின்றன.

இது முடிவல்ல… ஆரம்பம் என்ற குறிப்புடன் படம் முடிகிறது.

இறுதிக் காட்சி விடியலைக் குறிக்கிறதா… அஸ்தமனத்தைக் குறிக்கிறதா..? இருளை விரட்டும் ஒளிப்பிழம்பா… இருந்த சொற்ப ஒளியையும் மூடப் போகும் காரிருளா… படத்தைப் பற்றிய கலந்துரையாடலில் ஜேயிடம் அதைப் பற்றிக் கேட்டபோது, தெரியவில்லை என்று மட்டுமே பதில் சொன்னார்.

இந்தப் படம் ஒரே ஒரு முறை மட்டுமே திரையிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் அரசியல் கட்சித் தலைவர், அராஜகத்தைக் கட்டவிழ்த்த கட்சியுடன் அரசியல் கூட்டணி அமைத்துக்கொண்டுவிட்டதால், இந்தப் படத்தைத் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அவருடைய கட்சியினர் புகுந்து கலகம் செய்தார்கள். அந்த அரசியல் தலைவருக்கு ஆதரவாக நின்ற அறீவுஜீவி வர்க்கமும் அந்தச் செயலுக்கு தேடிப் பிடித்து ஒரு நியாயத்தைக் கற்பித்திருந்தார்கள். தன் மீது விழுந்த அடிகளைத் தாங்கிக் கொண்டபடியே, நீங்கள் செய்யும் கலகத்தை வரவேற்கிறேன். ஆனால், செய்யப்பட வேண்டிய இடம் இது அல்ல என்ற ஜே யின் வார்த்தைகள் இன்றும் கதி கிட்டாத அவனது ஆன்மா போலவே அலைந்துகொண்டிருக்கிறது.

0

ஓசையின்றி ஓர் உரையாடல்

dialogueபேசு மனமே பேசு / அத்தியாயம் 11

எதைப் பற்றி யோசிக்கும்போதும், அதாவது உள் உரையாடல் நடத்தும்போதும், அந்த விஷயத்தின் தன்மை பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பிரச்னை நாம் எதிர்பாராத நேரத்தில் அல்லது எதிர்பாராதவிதத்தில் சந்திக்க நேர்ந்தால், அதைக் குறித்து பயம் ஏற்பட்டால் என்ன செய்வோம்? அப்போதைக்கு அந்தப் பிரச்னை குறித்து எதுவும் செய்ய வேண்டாம் என்று முடிவெடுப்போம். அதற்கான காரணமாக, வெளி உலகுக்கு சொல்வது, ‘என்ன செய்யறதுன்னே தெரியல, ரொம்பக் குழப்பமாக இருக்கு’ என்பதாக இருக்கும்.

இந்த சமயத்தில் பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், அதற்கான உதவி பெறுவதற்குக் கூட, அதற்கான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மனதுக்குள்ளேயே வேறு விதமாக நினைத்து (உரையாடிப்) பாருங்கள். ‘பிரச்னை வந்து விட்டது. அதை எப்படியும் இப்போதே சந்திப்பேன். தள்ளிப் போடுவதால், பிரச்னை மேலும் சிக்கலாகுமே தவிர, தீவிரத்தன்மை குறையப் போவதில்லை. அதனால் சமாளிப்பது குறித்து யோசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

இப்போது மூளைக்கு நாம் அனுப்பும் செய்தி என்னவென்றால், ‘பிரச்னையை எதிர்நோக்கத் தயாராக இருக்க வேண்டும்’ என்பதுதான். மூளை இவ்வாறான உத்தரவு வந்தவுடன், அது சம்மந்தமான எண்ணங்களை, திறன்களைத் தேடி அவற்றை மனதோடு தொடர்பு படுத்தும். எதையாவது தேடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எப்படியும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்குள் தீவிரமாக நினைத்துச் (சொல்லிப்) பாருங்கள். உடனடியாக மனத்தில் பல்வேறு சாத்தியக் கூறுகள், அந்தப் பொருள் வைத்திருக்கக்கூடிய இடங்கள், வழக்கமாக உங்களது செயல்கள் போன்றவை, அடுத்தடுத்து நினைவுக்கு வரும். இதைச் செய்வது நமது மூளைத் திறன். செய்ய வைப்பது நமக்குள் நடக்கும் உள் உரையாடல்.

இதுபோன்ற மௌன உரையாடல்களின் தன்மையை நம்மால் மாற்ற முடிந்தால், அவற்றின் அடிப்படையில் நமது உணர்ச்சிகளும், செயல்பாடுகளும் மாறும். இதை நாம் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையில் கூட பொறுத்திப் பார்க்கலாம். நமது தினசரி வேலைகளுக்கு மத்தியில், பல காரணங்களுக்காக திடீரென்று சோர்வாக உணரக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையிலேயே கடும் உடல் உழைப்பு, ஒரே விதமான வேலையைத் தொடர்ந்து செய்வதால், மனத்தில் வளர விட்ட சலிப்பு, வேறு வழியில்லாத சூழ்நிலையில், நிர்பந்தத்தால் வேலை செய்யும்போது, வேலையைத் தவிர்க்க முடியவில்லையே? என்ற ஆதங்கம், சுயபரிதாபம், கையாலாகாத் தனம்’ குறித்த கோபம், கொந்தளிப்பு போன்றவற்றால் மனம் சோர்வடையும். இதன் வெளிப்பாடு, உடல் களைப்பினால் தெரியவரும்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு விஷயம் கவனிக்கத் தக்கது. நாம் செய்யும் வேலை நமக்கு சோர்வை உண்டாக்கவில்லை. அவை பற்றிய நமது அபிப்பிராயங்கள், எண்ணங் கள் மற்றும் முடிவுகள் தாம் நம்மை சோர்வுக்கு இட்டுச் செல்கின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் மாற்ற வேண்டியது பணிகளே அல்ல. அவை பற்றிய நமது அபிப்பிராயங்களை. யாரும், எந்த வேலையையும், ஏதாவது ஒரு லாபம் அல்லது நன்மை இல்லாவிட்டால் செய்ய மாட்டார்கள். அந்த லாபத்தை, நன்மையை நம்மால் அப்போதைய சூழ்நிலையில், குறிப்பிட்ட வேலையை, பணியை செய்தால்தான் அடைய முடியும் என்ற நிலை இருக்கிறது. இதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்படியும் அந்த வேலையைச் செய்தாக வேண்டும் என்ற நிலையில், அதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இதை செயல்படுத்த மனத்தில் உங்களுக்குள் உரையாடல் (சிந்தனை) நடத்துங்கள். ‘நிலைமையை நான் புரிந்து ஏற்றுக்கொள்கிறேன். என்னிடம் ஏராளமான சக்தி இருக்கிறது. எப்போதும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும், காரியங்களை செய்து கொண்டிருக்கிறேன். இதில் நான் வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.’ என்ற வாக்கியத்தை தொடர்ந்து சொல்லுங்கள்.

வழக்கமாக நம்மால் முடியாது என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் மற்றும் காரியங் களின் பின்னால் இருப்பது அவை பற்றிய எதிர்மறைச் செய்திகள், எண்ணப் பதிவுகளாக இருப்பதுதான். இவற்றை ஒழிப்பதற்கு பதிலாக, புதிதாக நம்பிக்கைத் தரும் எண்ணங் களை உள் உரையாடல் மூலம் பதிவு செய்தாலே போதுமானது. இதன் வெளிப்பாடு உடல் ரீதியிலான செயல்பாடுகளில் வெளிப்படும். விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும், நம் எண்ணங்களுக்கு ஏற்றவாறு உடலில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

நடைமுறையில் பார்த்தாலும், மனத்தின் எண்ணங்கள், அதாவது உங்களுக்குள் நீங்கள் நடத்தும் உரையாடல்களால், உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். ‘அப்போதிலிருந்து ஒரே யோசனை. தலைவலிதான் மிச்சம்’ என்ற சலிப்பு மிகுந்த வாக்கியத்தை பிறர் சொல்லிக் கேட்டிருப்போம். நாமே கூட பல சந்தர்ப்பங்களில், உணர்ந்தோ, சொல்லியோ இருப்போம்.

தலையில் அடி ஏதும் படாமலே, உடலில் வியாதிகள் ஏதும் இல்லாமலே, பெறும்
‘யோசனை’ யால் எப்படி தலைவலி உண்டாகிறது? இதிலிருந்து நமது எண்ணங்களுக்கும், உடல் செயல்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு, ஒன்றை ஒன்று சார்ந்த தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் பார்த்தால், நம்மை ஊக்கப்படுத்தும் புது உத்திரவுகள், நமது
மூளையில் உள்ள செல்களில், வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலுக்குத் தேவையான சக்தி, மூளையினால் அனுப்பப்படுகிறது. அதைக் கொண்டு நாம் செயல்படுகிறோம். இதில் மந்திரமோ, செப்பிடு வித்தையோ ஏதுமில்லை. உடல் இயக்கத்தில் மனத்தின் பங்கு… மன இயக்கத்தில் எண்ணங்களின் அதாவது உரையாடல்களின் பங்கு என்பதாலே புரிந்து கொண்டால், இவை எந்த அளவுக்கு பலனுள்ளன என்பதையும் புரிந்து, ஏற்றுக் கொள்வோம்…

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது மிகப் பழமையான முதுமொழி. உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்தாம், முகத்தின் பாவனைகளை, உடல் மொழியைத் தீர்மானிக்கின்றன எனபதை நமது முன்னோர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். குறிப்பிட்ட சூழ்நிலையில் நமது உணர்வுகள் என்ன என்பது பற்றி மற்றவர்களால் ஓரளவாவது உணர முடிவதுபோல, நம்மாலும் முடியும் அல்லவா? இதற்குக் காரணம் நம்முள் நிகழும் மௌன உரையாடல்கள், நமது முகத்தில் உணர்வுகளாக, உணர்ச்சிகளாக வெளிப்படுகின்றன. அதனால்தான் மற்றவர்களால் முடியாது என்று ஒதுக்கப்படும், அஞ்சும் காரியங்களைப் பற்றி அதைப் புதிதாக எதிர் கொள்பவருக்கு, என்னால் எங்கே முடியப் போகிறது? என்ற எண்ணம் உருவாவதில்லை.

ஏனென்றால் அந்தக் காரியத்தைப் பற்றியும், அதிலுள்ள கடினமான அம்சங்கள் பற்றியும், மனத்தில் எந்த விதமான எண்ணங்களும் ஏற்படாததால்தான் எதைப் பற்றியும் குறிப்பிட்ட அபிப்பிராயம் ஏற்படுத்திக் கொண்டால், அதுதான் நம்மை வழி நடத்தும். இதனால் நாம் மேற்கொள்ளும் பயணம் நமக்குத் திருப்தி தரவில்லை என்றால். பயணத்தையோ, பாதையையோ குறை சொல்லிப் பலனில்லை. இவற்றுக்கு அடிப்படைக் காரணமான
சிந்தனையைத்தான் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதை மாற்றத் தேவையானால் தயங்காமல் மாற்ற வேண்டும். மாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்குக்கூட, மனதுக்குள் மௌன உரையாடல் நடக்க வேண்டும். அதன்பின்னர் தான், புதிய, நம்பிக்கை தரும் செய்திகளை எண்ணங்களாக, உள் உரையாடல்களாக நடத்த முடியும். இவைதான் நமது வாழ்க்கைப் பாதையை, செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் என்பதைத் தெரிந்து ஏற்றுக் கொண்டால், ‘மௌன உரையாடல்’ எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து
செயல்படுத்துவோம்.

0

பாணர்கள்

harpsபறையர்கள் / அத்தியாயம் 10

பாணர்கள், முத்தமிழும் இசை நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பதாலும் இசையில் தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும் அவர்களுக்கு அரசர் அவைக் களங்களிலும் தடையில்லாத நுழைவு கிடைத்தது. பரிசுகளும் மரியாதைகளும் கிடைத்தன.
அரசர் பாணர்க்குப் புலவுச் சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரைப்பூ, களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்ததாகப் புறநானூறு பதிவு செய்திருக்கிறது. பாணர் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனர் என்றாலும் பொதுவாக வறுமையால் வருந்தினார்கள். வள்ளல்களைத் தேடி மலை, காடு என்று திரிந்தனர் என்கிறது தொல்காப்பியம்.

ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ், பண் இவற்றைக் ‘கருப்பொருள்’ என வகைப்படுத்துவர். மக்கள் வாழ்வியலுக்கு ஏற்பவும், நிலத்தின் தட்ப வெப்பங்களுக்கு ஏற்பவுமே உற்பத்தி உறவுகள் அமையும். ஆதலால் உணவுப்பொருளும் நிலத்துக்கு ஏற்பவே உற்பத்தி செய்யப்படும். இவற்றுள் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று பறை பற்றியது. மற்றொன்று யாழ் பற்றியது. பண்ணுக்குரிய கருவிகளை எல்லாம் யாழ் என்பதில் அடக்குகின்றனர்.

குறிஞ்சி யாழ், முல்லையாழ், மருதயாழ், நெய்தல் யாழ், பாலையாழ் என்று ஐவகை யாழின் அமைப்புக்கு ஏற்ப பெரும்பாணர் என்றும் சிறுபாணர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். தமிழரின் வாழ்வோடு இணைந்து வளர்ந்த இசையின் வளர்ச்சியில் இப்பாணர்களின் வளர்ச்சியும் அமைந்திருந்தது. இந்த வாணர்கள் பறைகளை முழக்கி, போர்க்களத்திலும், ஏர்க்களத்திலும் பாடியதுடன் அரசுச் செய்திகளை மக்களுக்கு அறிவிப்பதிலும் பெரும் பங்காற்றினர்.

அரசர் உறங்கச் செல்லும் போதும், துயில் எழும்போதும் அந்தந்த நேரத்துக்குரிய பண்களை யாழில் மீட்டுவது பாணர்களின் பணி.

பறை வகைகளில் ஒன்றான இணைப்பறை, பாணர்கள் இசைத்து வந்த ஒரு கண்பறை யாகும். பாணர்கள் இசைப்பாடலுக்குக் கிணையை முழக்கினார்கள். காலையில் வள்ளல்களைத் துயில் எழுப்பிக் கிணையை இசைத்துப் பாடினார்கள். கிணையை இசைத்துக் குறிஞ்சி நிலத்தைப் பாடினார்கள். உழவினையும், எருதுகளையும் போற்றி யாழிலிட்டு இசைத்துக் கிணையைக் கொட்டி நாள்தோறும் பாட விரும்பினர். புறநானூற்றில் இடம் பெறும் செய்திகள் இவை.

பாணர் குலத்துப் பெண்கள் கல்வியறிவும் கலையறிவும் பெற்றிருந்தனர். ஔவையார், காக்கைப் பாடினியார் போன்ற சாதாரண குடும்பப் பெண்கள் புலமையினால் புகழ் பெற்றிருந்தனர்.

பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலே இசைக் கலையில் வல்லவராயிருந்த பாணர் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தாழ்ந்த நிலையை அடைந்து தீண்டப்படாதவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கி.பி. 7,8,9ம் நூற்றாண்டுகளில் சிறப்பு பெற்றிருந்த இசைப்பாணர் மரபு கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு அருகிவிட்டது.

பண்டைக் காலத்தில் பாணர்க்கு வறுமை தோன்றியதற்கும் அது பின்பு முற்றிப் பிணப்பறை தவிரப் பிறவழிகளில் தொழில் நடத்தவிடாது கெடுத்தமைக்கும் காரணம் ஆரிய வர்ணாசிரமத்தால் பாணர் தாழ்த்தப்பட்டதும் ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதும்தான். பாணர் தீண்டாதார் அல்லது தாழ்ந்தோராக அரசரிடமும் பெருமக்களிடமும் அண்டமுடியாது போனது. இந்த இழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

தமிழின் பெருமைக்கும், சிறப்புக்கும் அடிப்படையாக அமைந்தது தமிழ் இசையாகும். அத்தமிழ் இசையை வளர்த்தவர்களும் பரப்பியவர்களும் பாணர்கள். இந்தப் பாணர்கள் பெற்றிருந்த சமூக மதிப்பு மிகவும் உயர்ந்தது. இது சங்க கால நிலை. ஆனால் பக்தி இயக்கக் காலத்தில் தீண்டத்தகாத சாதியினராக இவர்கள் தள்ளப்பட்டனர்.

இலக்கிய வளர்ச்சியில் உரைநடை தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே பாட்டு (செய்யுள்) தோன்றியதென்பது உறுதி. பண், பாண், பாட்டு என்னும் சொற்கள் தமிழில் ஆதியிலிருந்தே உள்ளன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுதுபோக்கு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பாணர் முதலில் சாதாரணமான பாடுநராக இருந்தனர். முல்லைத் திணைக் காலத்தில் அரசன் உருவான பின்னர் அரசவைப் பாணர்களும், புலவர்களுமாக உயர்வடைந்த அவர்கள், தமிழரிடையே ஆதியிலிருந்து மதிக்கப்பட்டனர்.

தூய தமிழ்ப்பண்பாடு தொடங்கிய நீண்ட நெடுங்காலத்தில் பாணர், அரசன் நண்பர்களாகவும், அறிவுரை கூறுநராகவும் இருந்தனர். பிற்காலத்தில் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியப் பண்பாடு தென்னிந்தியப் பண்பாட்டுடன் கலந்த பின்னர், அதாவது வரலாற்றுக் காலத்தில் (கி.மு. 500க்குப் பின்) பாணர், தென்னிந்தியாவில் மிகத் தாழ்த்தப்பட்ட தீண்டாத சாதியாக சமூகத்தில் தாழ்நிலை அடைந்தனர்.

ஜார்ஜ் லூசர்ன் ஹார்ட் தனது ‘பழந்தமிழ்ச் செய்யுள்கள் அவை தோன்றிய சூழலும், அவற்றை அடியொற்றிய சமஸ்கிருதப் படைப்புகளும் (1975)’ என்ற நூலில் எழுதுகிறார். ‘பாணர் தமிழரிடையே தொன்று தொட்டு இருந்து வருபவர். சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர். எனவே பண் அடிப்படையில் தென்னிந்திய தொன்மை இசை வடவரிடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது. ‘பண்’ என்னும் சொல்லிலிருந்து ‘பாணன்’ என்னும் சொல் தோன்றியது. மாறாக பிற்கால இந்திய இசையின் ராகங்கள் (அவை பண்களின் உருமாற்றங்களே) தென்னிந்தியத் தொல் இசையிலிருந்து உருவாயின என்பதே சரி. தக்காணப் பெருங்கற்கால நாகரிகம் சார்ந்த வாய்மொழி இலக்கியமானது பாணர்கள் மற்றும் எழுத்தறிவு பெறாத நாட்டுப்புறப் பாடகர்களிடையே உருவாகி கி.பி. முதல் நூற்றாண்டை ஒட்டி மகாராஷ்டிரப் பிராகிருதத்தில் பரவி, அங்கிருந்து இந்த இலக்கியத்தின் தாக்கம் சமஸ்கிருதக் கவிஞர்களிடம் ஏற்பட்டதன் காரணத்தால்தான் தரமான காவியச் செய்யுள் இலக்கியம் தோன்றியது. தென் இந்திய சாதியினரில் தாழ்நிலையில் இருந்த பாணரிடையே இருந்துதான் இந்தியாவின் இசையும் பாடல்களும் பெருமளவு உருவாயின.’

சங்க காலத்திலேயே இசை, நடனம், ஓவியம் ஆகிய கலைகள் சிறந்து விளங்கின. இன்றைய இந்திய இசை ஆரியர் தமிழரிடமிருந்து கற்றதே. இசையறிவை ஆரியரல்லாதவர்களிடம் ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே சாம வேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர்.

இன்று கர்நாடக இசை எனப் பெயர் கொண்டு உலவுவது தமிழிசையே. முகமதியர் 1565க்குப் பின்னர் தென்னாட்டில் புகுந்தபோது (விஜய நகர அரசர் காலத்தில்) கர்நாடக மன்னர் தலைமை வகித்ததாலும், தமிழ் நாட்டிலும் கர்நாடக மன்னர் தலைமை இருந்ததாலும் ‘கர்நாடகச் சங்கீதம்’ என்று அழைத்தனர்.

சீர் – சீரை – சீர்மை; சீரன் – கீரன்; சீர்த்தி-கீர்த்தனை; ஆக தமிழ்ச் சிந்தனை கீர்த்தனையாகியது. இக்கீர்த்தனை வடிவம் (அதாவது பல்லவி, அனுபல்லவி, சரணம்) சங்க காலத்தில் உருவானதே.

இசையொரு (ஆடலும் நடனமும்) கூத்தும் சங்ககாலத்திலேயே சிறந்து விளங்கின. சிலப்பதிகாரத்தில் இந்தக் கலைகளின் உச்சநிலையைக் காணலாம். அடியார்க்கு நல்லார் உரை அக்கலை நுட்பங்களை விளக்குகிறது.

தமிழ் ஆடல் கலை 1925 வரை சின்னமேளம்/சதிக்கச் சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி ‘பரத நாட்டியம்’ எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழ் ஆடற்கலை ‘பரதர்’ பெயரில் வழங்கும் நாட்ய சாஸ்திரத்தில் இருந்து பிறந்தது எனக்கூறுவது பிதற்றல் என்பதை பாவேந்தர் பாரதிதாசன் தம் நூல்கள் பலவற்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0

கிரிக்கெட் வாரியத்தைக் கலைக்கவேண்டும்!

sriniஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் எவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போது தெரிந்துவிட்டது. புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் இது. செயலர், நிதி காப்பாளர், இந்திய பிரிமியர் லீக் தலைவர் என்று அனைவரும் கட்டுப்பாட்டுக் கழகத்தைவிட்டு வெளியேறுவதோடு, இன்னும் பலர் இந்தப் புனிதமான கொள்கைக்காக வெளியேற வரிசையாக நிற்கின்றனர்.

அதிகம் வசைபாடப்பட்ட தங்கள் தலைவரைத் தூக்கி வீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் இந்திய பிரிமியர் லீகும் ‘வெளியேற்று சூத்திரத்தைப்’ பயன்படுத்துகின்றன. ஆனால், சீனிவாசனை வெளியேற்றுவதன்மூலம் ஐபிஎல்லையோ அல்லது கிரிக்கெட்டையோ தூய்மைப்படுத்திவிடமுடியுமா என்ன?

கவனிக்கவும், அங்கு ஒரு பழம் மட்டும் அழுகிவிடவில்லை. மொத்தப் பழத்தோட்டமும் அழுகியுள்ளது. ‘மூன்று கிரிக்கெட் வீரர்கள் மட்டும்’ என்ற வாதம் ஒரு பெரிய மோசடி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய பிரிமியர் லீக் இரண்டையும் இந்த அழுகல் நாற்றமடிக்க வைத்துள்ளது. ஊடகம் சீனிவாசனின் உச்சந்தலைக்கு குறிவைத்துள்ளது. இதுவும்கூட ஒரு கேளிக்கையாகத்தான் இருக்கிறது.

நேற்றைய சீனிவாசனனின் விசுவாசிகள் நாளைக்குத் தன்னையும் தாக்குவார்கள் என்று சரத்பவாருக்குத் தெரியும். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து வெளியேறிய சஞ்சய் ஜெக்டால், அஜய் ஷிர்கே, ராஜிவ் சுக்லா ஆகியோர் அத்தகைய ஒரு கோப்பையை அடைய தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில், சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் (அல்லது பொது நலன் சம்பந்தப்பட்ட ஓர் அமைப்புக்கு) தலைமையேற்றிருக்கக்கூடாது. ஆனால் அதற்காக அவரது வெளியேற்றத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது அபத்தமானது.

சமீப காலமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இந்திய பிரிமியர் லீகை உருவாக்கியவர்களுள் ஒருவர் லண்டனில் சட்டத்திலிருந்து தப்பி வாழ்பவர். தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தனது நலனுக்கு உகந்ததாக விதிகளை மாற்றிக்கொண்டதை சட்டபூர்வமாக்கிய அந்தத் தலைவர் இப்போது வெளியே வந்துள்ளார்.

சரத்பவாரைப் பொருத்தவரை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தபோது விவசாய அமைச்சரான அவர் விவசாயம் தொடர்பாக மேலை நாடுகளுக்குப் பறந்ததைக் காட்டிலும் கிரிக்கெட்டுக்காக பறந்ததுதான் அதிகம்.

கடந்த ஏப்ரல் மாதம், பம்பாய் உயர்நீதிமன்றம், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடந்தபோது, பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினருக்கான ஊதியத்தை வழங்கவேண்டுமென்று அந்தப் போட்டியை பார்க்க வந்த கூட்டத்தினருக்கு எரிச்சலுடன் உத்திரவிட்டது. அந்தத் தொகை சுமார் 9 கோடி இருக்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்தது. அவ்வாறு பணம் செலுத்தாதவர்கள் சொத்தை ஜப்தி செய்யுமாறும் உத்திரவிட்டது. இறுதியில் முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, ஷாருக்கான் போன்றவர்களுக்குப் பலன் சென்றடையும் வகையில் 20 கோடி வரை கேளிக்கை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டது. மொத்தத்தில், அரசிடமே ஐபிஎல் பணம் பெற்றுள்ளது. ஆத்திரமடைந்த பம்பாய் உயர்நீதிமன்றம் அந்தத் தொகையை உடனே வசூலிக்க உத்திரவிட்டது. அதே நேரம், அரசுக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களைக்கூட ஏதோ சொற்ப தொகைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல்லுக்கு வாடகைக்கு விட்டது.

இந்தப் பின்னணியில் நாம் செய்யவேண்யதெல்லாம் ஒன்றுதான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையே கலைத்துவிட்டு புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவேண்டும். அதன் கடந்த காலத்தை ஒரு பொது தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும். பொது நலன் என்றாலே வெறுப்படையும் ஒரு துறை இந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். தண்டனையிலிருந்து விதிவிலக்கு வசதி, தனது அதிகாரத்தில் தனக்குள்ள நம்பிக்கை, பெரு நிறுவன அரசியல் மற்றும் ஊடகங்கள் துணை போன்றவையே இந்த நிலைக்குக் காரணம்.

இந்தத் தேசத்தின் பெயரில் செயல்படும் ஓர் அமைப்பு இந்தியக் கிரிக்கெட் அணியை நடத்தும்போது, அது பொறுப்பானதாக, பொதுமக்களுக்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால், அழகான ஒரு விளையாட்டின் ஆன்மாவையே அழித்துவிடும் ஒரு உயர்நிலை வர்த்தக நடவடிக்கையாக ஐபிஎல் உள்ளது. இது இழிவானதாகவும் தரமற்ற கட்டுமானம் கொண்டதாகவும் கலாசாரத்தைச் சீரழிப்பதாகவும் உள்ளது.

வர்த்தகரீதியான வெற்றி என்று சாக்குபோக்கு சொல்லி நடந்தவற்றுக்குப் பரிகாரம் கோருகிறது ஐபிஎல். அவர்களைப் பொறுத்தவரை இந்தச் ‘சிறிய தவறுகள்’ வர்த்தகரீதியான பலன்களால் சரிசெய்யப்படுகின்றன.

இந்தச் சறுக்கலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏதோ திடீரென்று கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது உண்மையல்ல. இந்தியாவிலுள்ள அனைத்து பிரதான ஊடகங்களும் தினந்தோறும் இத்தகைய மோசடிகளை வெளிக்கொண்டுவருவதைப் பார்க்கமுடிகிறது. இதே ஊடகங்கள்தான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது அவற்றை உச்சியில் தூக்கிப் பிடிக்கின்றன.

ஊடகங்கள் தற்போது கொடுத்த நெருக்கடி பயனுள்ளது. டெல்லி, மும்பை காவல்துறை மூலமும், அமலாக்கப் பிரிவு மூலமும் இந்த ஊழல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு நிருபர்கள்மூலம் வெளிக்கொணரப்பட்ட பல சிறந்த வெளியீடுகள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கே உரித்தான கலாச்சார பலத்தால் மறைக்கப்பட்டுவிட்டன. வாரியத்தின் சம்பளப் பட்டியலிலேயே இருந்துகொண்டு அதன் செயலை மிகைப்படுத்தி புகழ்ந்துரைக்கும் ஆலோசகர்களாகவே தொலைக்காட்சி ஊடகங்களில் சிலர் இருக்கின்றனர்.

அதில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளான முன்னாள் விளையாட்டு வீரர்களும் உள்ளனர். இதுநாள் வரை இந்த எதிரும் புதிருமான கருத்தாக்கங்களை விளம்பர நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஐபிஎல்லில் முதலீடு செய்துள்ள விளம்பரதாரர்கள் சரிவடையத் தொடங்கியதும் அந்தக் கவலை எழுந்துள்ளது. ஆனால், உண்மையில் அதிக சரிவைச் சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட்தான்.

ஒரு சில தவறுகள் நடந்துவிட்டதற்காக ஐபிஎல்லைப் பெரிய அளவில் காயப்படுத்திடவேண்டாம் என்று சிலர் சமாதானம் பேசுகிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டுக்கும், இந்திய பிரிமியர் லீகுக்குமான நலனை உண்மைக்குப் புறம்பான வகையில் சிறுமைப்படுத்துகிறது.

இந்திய கிரிக்கெட்டின் ஆத்மாவை ஐபிஎல் பாழ்படுத்திவிட்டது. ஓர் இந்திய வேட்கையை, உணர்வை தனியார்மயமாக்கியதுடன், ஊழல் வர்த்தகத்தையும் வளர்த்திருக்கிறது. தற்போது பெரிய நிறுவனங்களும், கார்ப்பரேட் குழுக்களும் அவர்களது அரசியல் சகாக்களும், திரைத்துறை நடிகர்களும், விளம்பரத் துறையினரும்தான் கிரிக்கெட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர். கிரிக்கெட்மீது உண்மையான ஆர்வம் கொண்டுள்ள பொது ரசிகர்களிடமிருந்து என்றோ அது கைநழுவிவிட்டது. இந்தியாவின் சர்வதேச அணிகளைத் தேர்வு செய்யும் இந்திய உள்நாட்டுக் குழுமம் தற்போது தன்னைக் காயப்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களை இந்தக் குழுமம் நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் தற்போது ஐபிஎல்லுக்கு வீரர்களை அளிக்கும் ஒரு களமாக சுருங்கிவிட்டது. மோசமான தரமுள்ள லீக் போட்டிகளில் விளையாடி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதைவிட்டுவிட்டு, ஏன் அநாவசியமாக ரஞ்சிக் கோப்பை போன்ற தரமான போட்டிகளில் ஒருவர் விளையாட வேண்டும்? உண்மையில் இந்த இந்தியன் பிரிமியர் லீக் இதுவரை எந்த நல்ல வீரரையும் கிரிக்கெட்டுக்குக் கொடுக்கவில்லை.

ஏதோ சில பழங்கள் மட்டும் அழுகிவிட்டது என்ற வாதமே ஒரு மோசடி. அசாதாரண சந்தர்பத்தில் பழத்தோட்டக்காரர்கள் என்ன செய்வார்களோ அதை நாம் செய்யவேண்டியுள்ளது. பழத்தோட்டத்தை முற்றாக எரித்துவிட்டு, புதிய செடியை நடுவோம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை முற்றாக கலைத்துவிட்டு, புதியதைத் தொடங்கவேண்டும். கிரிக்கெட்டை மறு பயிரிட்டு வளர்ப்போம்.

(தி ஹிந்துவில் கடந்த ஜூன் 1 அன்று வெளியான Burn the orchard, re-grow cricket என்னும் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம். அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், எஸ்.சம்பத்).

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : அடிப்படைகள் 1

karl-marx-wikimedia-commonsபுரட்சி / அத்தியாயம் 9

உண்மைதான், மார்க்சியத்தை அவ்வளவு சுலபத்தில் ஒருவர் படித்துப் புரிந்துகொண்டுவிடமுடியாதுதான். கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறை எழுதிச்செல்லும்போது, ‘மார்க்சியம் கற்பது என்பது கற்பாறைச் சுனையிலிருந்து நீர் எடுப்பதாகும்’ என்று குறிப்பிடுகிறார் வெ. சாமிநாத சர்மா. இங்கிலாந்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் சிந்தனையாளரும் பேச்சாளருமான மாரிஸ் கார்ன்ஃபோர்த் இந்தச் சிக்கலையும் அதற்கான தீர்வையும் தனது நூல் ஒன்றில் விவரிக்கிறார். மார்க்சிய இலக்கியங்கள் வாசிப்பதற்கு கடினமாக இருப்பது‘விஷயத்தின் கடினமான தன்மையால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பழக்கமில்லாத சொற்களாலும் நேர்கிறது… இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பிட்ட இடத்தில் அழுந்தி சிக்கிக்கொள்ளதீர்கள். அந்தப் பகுதியை நீங்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொடர்ந்து மேற்கொண்டு படியுங்கள். கடினமான பகுதி முடிவுற்றதும் மீண்டும் நீங்கள் வழித்தடத்துக்கு வருவதை உணர்வீர்கள். இன்னும் விரிவான படிப்புடனும் விஷயத்துக்கு இன்னும் அதிகமான பரிச்சயத்துடனும் நீங்கள் அந்த நூலுக்கு மீண்டும் திரும்பலாம்.’

மார்க்சியத்தைப் புரிந்துகொள்வது என்பது ஒருசில சொற்றொடர்களைப் புரிந்துகொள்வதோ ஒருசில இலக்கணங்களையோ சூத்திரங்களையோ மனப்பாடம் செய்துகொள்வதோ அல்ல. ‘மாறாக, சோஷலிசத்துக்கான போராட்டத்தின் போக்கில் எவ்வாறு மார்க்சியத்தின் கோட்பாடுகள் வளர்க்கப்பட்டன, நமது பங்குக்கு நமது சொந்தப் போராட்டத்திலும் எவ்வாறு நாம் நடைமுறைப்படுத்தவும் வளர்க்கவும் முடியும் என்பதைக் கற்றறிவதாகும். எந்த அளவு நாம் நமது மார்க்சியக் கல்வியை முன்னேற்ற முடியுமோ, அந்தளவு நன்றாக நமது நடைமுறை அரசியல் வேலைக்கு நம்மைத் தயாரித்துக் கொள்கிறோம். அதே சமயம் எந்த அளவு நாமே அரசியல் அனுபவங்களைப் பெறுகிறோமோ அந்த அளவு நாம் மார்க்சியத்தின் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் நம்மை மேலும் நன்றாகத் தயாரித்துக் கொள்கிறோம்.’

கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் இருவரும் தங்கள் சொந்தப் போராட்டங்களின் ஊடாகத்தான் கம்யூனிசத்தைக் கண்டடைந்தார்கள். வாழ்க்கை வேறு, தத்துவம் வேறு என்று பிரித்து பார்க்காமல் இரண்டையும் பிணைத்துப் புரிந்துகொண்டவர்கள் இவர்கள். ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்து அல்லது ஏதோ சில நிகழ்வுகளின் அடிப்படையில் அவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறிவிடவில்லை. தத்துவம், வரலாறு, பொருளாதாரம், சமூக அறிவியல், இலக்கியம் என்று விரிவாகவும் ஆழமாகவும் ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தியும் அவர்கள் கற்றனர். தவிரவும், மக்களிடம் இருந்தும் அவர்கள் பாடம் படித்துக்கொண்டார்கள். பண்டைய கிரேக்க வரலாறாக இருந்தாலும் சரி, ஹெகலின் தத்துவமாக இருந்தாலும் சரி; நடப்பு அரசியல், சமூக நிகழ்வுகளோடும் நடைமுறை வாழ்வின் பிரச்னைகளோடும் அவற்றைத் தொடர்புபடுத்தியே சிந்தித்தனர்.

முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம்; ஆளும் வர்க்கம், அடிமை வர்க்கம். இந்த இரண்டில் எதை ஆதரிக்கவேண்டும் என்பதில் அவர்களுக்குக் குழப்பங்கள் இருக்கவில்லை. ஏன் தொழிலாளர் வர்க்கத்தை மார்க்ஸும் எங்கெல்ஸும் உயர்த்திப் பிடித்தனர்? தொழிலாளர்களுக்காகப் போராடுவதை எப்படி மக்களுக்காகப் போராடுவது என்று அவர்கள் எடுத்துக்கொண்டனர்? மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய தியொடோர் ஓய்செர்மான் எழுதுகிறார். ‘முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அடித்தளங்களை, அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியார் உடைமை, முதலாளித்துவப் போட்டி, சுரண்டல், உற்பத்தியில் அராஜகம் ஆகியவற்றை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்ளமுடியாது. இந்தக் காரணத்தாலேயே தொழிலாளி வர்க்கத்தின் சமூக விடுதலையானது, அதே சமயத்தில் சகல உழைப்பாளி மக்களுடைய, சகல சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய சமூக விடுதலையையும் இயல்பாகவே ஏற்படுத்துகிறது.’ தொழிலாளர்களின் விடுதலை உழைக்கும் மக்களின் விடுதலையாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாகவும் திகழும் என்பதை மார்க்ஸும் எங்கெல்ஸும் கண்டுணுர்ந்த அந்தத் தருணம் முக்கியமானது.

மார்க்சியம் என்பது வெறும் தத்துவம் மாத்திரமல்ல என்கிறார் வெ. சாமிநாத சர்மா. ‘மார்க்சியம் என்பது மனித வாழ்க்கையை பண்படுத்திக் காட்டுகிற ஓர் ஒழுங்குமுறை. மானிட ஜாதியின் சரித்திரத்தைப் புதிய உருவத்தில் காட்டும் கண்ணாடி. பொருளாதாரத்தை முக்கிய அடிப்படையாகக் கொணட சமுதாயத்தின் தோற்றம். முதலாளித்துவத்தின் முடிவு இன்னபடிதான் ஆகும் என்று அறுதியிட்டுச் சொல்கிற இறுதி வாசகம்… மார்க்ஸின் முடிபுகளைச் சிலர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவன் அந்த முடிபுகளுக்கு வந்த வழியை யாரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.’

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் எந்த வழியில் பயணம் செய்து தங்கள் முடிவுகளைக் கண்டைந்தார்கள் என்பதை ஆராயும்போது அவர்களுடைய ஆளுமையும் சிந்தனையோட்டமும் வளர்ந்த கதையும் நமக்குக் கிடைக்கிறது.

கார்ல் மார்க்ஸ் தனது டாக்டர் பட்ட ஆய்வுக்காக டெமாக்ரிடஸ், எபிக்யூரஸ் என்னும் இரு கிரேக்கத் தத்துவஞானிகளை எடுத்துக்கொண்டு ஒப்பீடு செய்தார். டெமாக்ரடிஸைவிட எபிக்யூரஸ் மார்க்ஸைக் கவர்ந்ததற்குக் காரணம் டெமாக்ரடிஸ் உறுதியானவராக, மாற்று கருத்துகளுக்கு இடம் கொடுக்காதவராகத் திகழ்ந்தார். இப்படிப்பட்ட உறுதித்தன்மை மனித சுதந்தரத்தை மறுக்கிறது என்பது மார்க்ஸின் கருத்து. அதேபோல், கிரேக்கப் புராணத்தில் வரும் டைட்டன் வீரன் புரோமீதியஸ்மீது மார்க்ஸுக்கு அபிமானம் இருந்தது. களி மண்ணில் இருந்து மனிதனை உருவாக்கியவன் இவன். கடவுளிடம் மட்டுமே குவிந்திருந்த நெருப்பைத் (செல்வம் என்றும் கொள்ளலாம்) திருடி, பொது மக்கள் பயன்பாட்டுக்காக ‘மறுவிநியோகம்’ செய்தவன். ஆக, மனிதன் தோன்றியதற்கு மட்டுமல்ல அவன் முன்னேறியதற்கும் நாகரிகமடைந்ததற்கும்கூட புரோமீதியஸ்தான் மூலக்காரணம். ‘எளிமையாகச் சொல்லவேண்டுமானால், நான் அனைத்து கடவுள்களையும் வெறுக்கிறேன்’ என்கிறான் புரோமீதியஸ். ‘கல்லோடு சேர்த்து என்னைப் பிணைத்திருக்கும் சங்கிலியோடு இருப்பேனே ஒழிய, ஜீயஸின் (கடவுள்களின் தந்தை) அடிமையாக ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்’ என்னும் புரோமீதியஸின் வாசகத்தை மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

ஃபிரெட்ரிக் எங்கெல்ஸின் ஆரம்ப கால ஆதர்சனம் பழங்குடி அமெரிக்க இந்தியர்கள். பீதோவன் பிடிக்கும். ஷெல்லியை ஜெர்மனியில் மொழிபெயர்த்தார். ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், இத்தாலியன் ஆகிய மொழிகளைத் துரிதமாகக் கற்றார். தனது 19வது வயதில், மதம் ஒரு மயக்கப் பொருள் என்று கண்டுகொண்டார் எங்கெல்ஸ். மதத்தை எதிர்த்து குரல் எழுப்பிய ஆங்கில சோஷலிஸ்டுகளைக் கண்டு பெருமிதம் கொண்டார். ஜனநாயகம் பற்றி தனது 23வது வயதில் எங்கெல்ஸ் இப்படி எழுதினார். ‘ஜனநாயகம் என்று பேசும் அனைத்து அரசாங்கங்களும் முரண்பாடுகள் கொண்டவை. அது ஒரு பொய். அது ஒரு போலித்தனம். இந்த வகை ஜனநாயகம் ஒரு கட்டத்தில் தவிர்க்கவியலாதபடி உடைந்து நொறுங்கும். அதன் முரண்பாடுகள் நிச்சயம் வெளியில் தெரியவரும். ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்று, அடிமை முறை. நிலவவேண்டும். அல்லது கம்யூனிசம் எனப்படும் நிஜமான சமநிலை, நிஜமான சுதந்தரம் நிலவவேண்டும்.’

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே சுதந்தரத்தை நேசித்தனர். இருவரும் வெவ்வேறு வழிகளில் பயணம் செய்து இந்த முடிவை வந்தடைந்தனர். மார்க்ஸ் தத்துவம் பயின்றுகொண்டிருந்தபோது, எங்கெல்ஸ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்தார். கவிதை எழுதினார். பீதோவனின் இசையில் மூழ்கிப்போனார். ஓவியங்கள் தீட்டினார். ஒரு கட்டத்தில் தவிர்க்கவியலாதபடி இருவரும் புத்தகங்களில் இருந்து கண்களை விலக்கி, தாம் வாழ்ந்து வந்த காலகட்டத்தையும் அதன் மக்களையும் வாசிக்கத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு தொழிலாளர்களின் துன்பமும் துயரமும் போராட்டமும்தான் தெரிந்தது. மார்க்ஸால் அதற்குப் பிறகு கிரேக்கத் தத்துவத்தில் மட்டும் மூழ்கிக்கிடக்கமுடியவில்லை. எங்கெல்ஸால் இசையை ரசிக்கமுடியவில்லை. கவிதை எழுத விருப்பமில்லை. இருவரும் சோஷலிசத்தின்மீது ஆர்வம் செலுத்தினர். அதே சமயம், இளவயதிலேயே அவர்கள் திடமான கம்யூனிஸ்டுகளாக மாறிவிட்டனர் என்று சொல்லமுடியாது.

இங்கேதான் நாம் அவர்களைக் கூர்மையாகக் கவனிக்கவேண்டும். கட்டுரைகள் எழுதவும் பதிப்பிக்கவும் தொடங்கியிருந்த எங்கெல்ஸ் திடீரென்று தனது 22வது வயதில் இனி எதுவும் எழுதப்போவதில்லை என்று முடிவு செய்தார். ‘நான் சுயமாகக் கற்றுக்கொண்ட ஒரு தத்துவவியலாளன். ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிக்கொள்வதற்கும் தேவைப்படும்போது அதைத் தற்காத்துக் கொள்வதற்கும் போதுமான விஷயங்களை நான் கற்றிருக்கிறேன். ஆனால், என் கருத்தாக்கத்தை முன்னிறுத்தி வெற்றிகரமாகப் போராடுவதற்கு தேவையானதை நான் இன்னமும் கற்கவில்லை.’

கம்யூனிசம் குறித்து முதல்முறையாக எழுதும்போது மார்க்ஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். ‘அதைப் பற்றி இன்னமும் விரிவாகப் படிக்கவேண்டியிருக்கிறது, அதைப் பற்றி ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கிக்கொள்வதற்கு இன்னமும் ஆழமாக ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது.’ இளவயது மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரையும் பற்றி கிரிஸ்டோஃபர் ஹில் எழுதும் ஒரு கட்டுரையில் காணப்படும் குறிப்புகள் இவை.

இங்கே நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் கண்மூடித்தனமாகவோ அல்லது வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலோ தங்கள் சித்தாந்தத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை. ஆனால் இன்றுவரை, மார்க்சியத்தை விமரிசிக்கும் பெரும்பாலானோர் மார்க்சியத்தை முறைப்படி கற்றுத்தேர்ந்தவர்களில்லை. அதே போல், மார்க்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் பலரும்கூட மார்க்சியத்தைக் கற்பதில் போதுமான ஆர்வம் செலுத்துவது இல்லை. தங்களுக்குத் தெரிந்த ஒரு சில விஷயங்களின் அடிப்படையில் இவர்கள் மார்க்ஸை ஏற்கவோ நிராகரிக்கவோ செய்கிறார்கள். கம்யூனிசத்தை நிராகரிப்பதற்கு அல்ல, அதை ஏற்பதற்கும்கூட நிறைய வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதையும் மார்க்ஸே அவ்வாறு கற்றுத் தேர்ந்தவர்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

மார்க்ஸ் தனது திருமணத்துக்குப் பிறகு அடுத்த இரு மாதங்களை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் அரசியல் சித்தாந்தம் மற்றும் வரலாற்றைத் தீவிரமாகக் கற்றுத் தேர்வதில் செலவழித்தார். அவருடைய வாசிப்பு வழக்கம் குறித்து சில வார்த்தைகள். காலை ஏழு மணிக்கு எழுந்திருப்பார். கணக்கில்லாமல் பல கோப்பை காபி அருந்துவார். அதற்குப் பிறகு தொடரும் வாசிப்பு பகல் இரண்டு மணி வரை நீளும். மதிய சாப்பாடு முடிந்ததும் மீண்டும் தொடங்கும் வாசிப்பு இரவு வரை ஓய்வின்றி தொடரும். இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு விருப்பமிருந்தால் சிறிது உலாவுவார். இல்லாவிட்டால் மீண்டும் படிப்பு. விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி வரை படித்துக்கொண்டே இருப்பார். மார்க்ஸின் படிக்கும் அறையை அவருடய மருமகன் Paul Lafargue கீழ்வருமாறு வர்ணிக்கிறார். ‘மார்க்ஸின் அறை தோட்டத்தின் பக்கமாக அமைந்திருந்தது. ஜன்னலுக்கு எதிர்புறத்தில் கணப்புச் சட்டி. அதன் அருகில் புத்தக அலமாரிகள். மேலே பத்திரிகைக் கட்டுகள், கையெழுத்துப் பிரதிகள் முதலியன கூரைவரை அடுக்கியிருக்கும்… பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றை ஒழுங்காக அடுக்கி வைக்கிறோமென்று யாராவது சொன்னால் அதற்கு மார்க்ஸ் இணங்க மாட்டார்… ஏதேனும் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டவேண்டுமென்றால், சட்டென்று குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தை எடுத்து தேவையான பக்கத்தை கண்டுபிடித்துவிடுவார்.’

மார்க்சியம் கடினமானது என்னும் சுலபமான காரணத்தைச் சொல்லி நகர்ந்துவிடும் மார்க்சிய எதிர்ப்பாளர்களும் ஆர்வலர்களும், மார்க்ஸ் ஒரு விஷயத்தை எப்படிக் கற்றுத் தேர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். மார்க்சியம் வழிபாட்டுக்குரிய ஒரு தத்துவமோ கண்மூடித்தனமாக எதிர்க்கவேண்டிய ஒரு ஆபத்தான சித்தாந்தமோ அல்ல என்பது அதை வாசிக்கத் தொடங்கும்போதுதான் தெரியவரும்.

இந்தப் புரிதலோடு மார்க்சியத்தின் அடிப்படைகளுக்குள் நுழைவோம். அதற்கு லெனினின் சில அறிமுகக் குறிப்புகள் நமக்கு உதவக்கூடும். மார்க்சியத்தின் தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக்கூறுகளும் என்னும் தலைப்பில் மார்க்ஸின் முக்கியப் பங்களிப்புகளைப் பட்டியலிடுகிறார் லெனின். மாரிஸ் கார்ன்ஃபோர்த் வார்த்தைகளில் அவற்றைப் பார்க்கலாம்.

  • இயங்கியல் கண்ணோட்டத்தின்மூலம் பொருள்முதல்வாதத்தை ஆழப்படுத்தி வளர்த்தெடுத்தார் மார்க்ஸ். பொருள்முதல்வாதத்தை மனித சமுதாயத்தைப் புரிந்துகொள்ளும் முறையுடன் இணைத்து வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற அதன் முடிவுக்கு கொண்டு சென்றார்.
  • சமுதாயத்தின் அரசியல் மற்றும் கருத்தியல் மேல்கட்டுமானம் முழுவதும், சமுதாயத்தின் பொருளாதார ஒழுங்கமைவை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் காட்டினார்.
  • நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அமைப்பைப் கற்றறிந்தார். உபரிமதிப்பு கோட்பாடு அவருடைய பொருளாதாரத் தத்துவத்தின் மூலக்கல்லாகும். முதலாளித்துவத்தின் வளர்ச்சி, பண்டப் பொருளாதாரம் மற்றும் எளிய பரிவர்த்தனை ஆகியவற்றின் முதல் வித்துக்களிலிருந்து தொடங்கி அதன் உச்சபட்ச வடிவங்களுக்கும் பெருவீத உற்பத்திக்கும், சென்றடைவதைச் சித்திரித்துக் காட்டினார். கூட்டு உழைப்பின் மாபெரும் ஆற்றலை, முதலாளித்துவ அமைப்பு தோற்றுவிப்பதை எடுத்துக் காட்டினார்.
  • வர்க்கப் போராட்டக் கோட்பாட்டை விரித்துரைத்தார். தொழிலாளி வர்க்கம், புதிய சமூக அமைப்பைப் படைக்கும் வல்லமை படைத்த ஒரு சமூக சக்தியாகும் என்பதை எடுத்துக்காட்டினார்.

‘கார்ல் மார்க்ஸ் குறித்து’ என்னும் நூலில் மார்க்ஸின் போதனைகளை ஏழு தலைப்புகளில் பிரித்துக் காட்டுகிறார் லெனின். 1) பொருள்முதல்வாத தத்துவம், 2) இயங்கியல், 3) வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், 4) வர்க்கப் போராட்டம், 5) பொருளாதாரக் கோட்பாடு, 6) சோஷலிசம், 7) பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் போர்த்தந்திரங்கள்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

0