சிங்களர்கள்: அடையாளம், இனவாதம், வெறுப்பு அரசியல்

18TH_PROTEST_1399042f1

இலங்கை கால்பந்தாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்னும் முதல்வரின் கருத்துக்கு தி இந்து எழுதிய தலையங்கத்தை முன்வைத்து 6 செப்டெம்பர் 2012 அன்று இவ்வாறு எழுதியிருந்தேன்.

//இலங்கை அரசின் மீதான கோபத்தை இலங்கை விளையாட்டு வீரர்கள்மீதும் சுற்றுலாப் பயணிகள்மீதும் வெளிப்படுத்தியது நிச்சயம் தவறுதான். ‘இன்று பள்ளிக்கூட கால்பந்து அணியினரைத் திருப்பியனுப்பினார்கள். நாளை கிரிக்கெட் வீரர்களைத் தடை செய்யச் சொல்வார்கள். இலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகக் பயணிகளும் வரக்கூடாது என்று தடை செய்யக் கோருவார்கள். இது ஆபத்தான விளையாட்டு!’ என்னும் தி இந்து எடிட்டோரியலின் கவலையும்கூட நியாயமானதுதான்.//

அதே கட்டுரையில், தி இந்துவின் பக்கச் சார்பு குறித்தும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

//தமிழர்களின் கல்வீசும் செயல்பாட்டைக் கண்டித்து தலையங்கமும் கார்ட்டூனும் செய்திக்கட்டுரைகளும் தீட்டிய தி இந்து, இதே உக்கிரத்துடன், இதே தார்மிகக் கோபத்துடன் இலங்கையை என்றேனும் கண்டித்திருக்கிறதா? இல்லை எனில், இதுவும்கூட ஒருவகை வெறுப்பு அரசியல்தான் அல்லவா?//

அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது.

//முழு விழிப்புடனும் சுயநினைவுடனும் இருக்கவேண்டிய அவசியம் நமக்குத்தான் இருக்கிறது. இயல்பாக நம்முள்ளே எழுந்தாலும் சரி, செயற்கையாக வெளியில் இருந்து தூண்டிவிடப்பட்டாலும் சரி, ஆபத்தான வெறுப்பு அரசியல் வளையத்துக்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, வரலாற்றை ஆழமாகவும் அகலமாகவும் கற்பதும், கற்றதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் மட்டும்தான்.//

ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று முதல்வர் மீண்டும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். மீண்டும் தி இந்து அதை எதிர்த்து எழுதியிருக்கிறது.  நான் முன்னர் எழுதிய கட்டுரை இப்போது இதற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். (கட்டுரையின் முழுவடிவம் இங்கே).

2

இந்தக் கட்டுரை சிலருக்குக் கோபத்தையும் வேறு சிலருக்குக் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இன்றுகூட ஒரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார்.

//இலங்கைக் கால்பந்தாட்டக்காரர்களைத் தமிழக அரசு சட்டப்படி வெளியேற்றியது, புத்த பிட்சுக்களின் மீது சில தனிமனிதர்கள் தாக்குதல் நடத்தினர், இரண்டையும் இணைத்து மோசடி செய்கிறது இந்து தலையங்கம், ஓர் இனப்படுகொலை செய்த நாட்டின் விளையாட்டாளர்களை வெளியேற்றுவது என்பது எப்படி இனவாதமாகும்? இந்தக் கவலை நியாயமானது என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள் மருதன்? //

விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது ஓர் அரசின் செயல்பாடு. புத்த பிட்சுக்களின்மீது தாக்குதல் நடத்திய சில தனிமனிதர்களின் செயல்பாடு. ஒரு நாட்டு அரசின் செயல்பாடும் அந்நாட்டு மக்கள் சிலரின் செயல்பாடும் ஒன்றா என்பதுதான் கேள்வி. நிச்சயம் வெவ்வேறுதான். அதே சமயம் இரண்டுமே ஆபத்தானவை என்பதால் இரண்டும் சேர்த்தேதான் எதிர்க்கப்படவேண்டும்.

சிங்கள இனவாத அரசு, தமிழர்களை அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்தக்காக ஒடுக்குவது நியாயமல்ல என்றால் சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு ஒடுக்குவதும் நியாயமற்றதுதான்.

ஆனால், நம்மில் பலரால் சிங்களர்களின் செயல்பாடுகளையும் தமிழகத்தின் செயல்பாடுகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கமுடியவில்லை. அதற்கு மனம் ஒப்பவில்லை. பல கேள்விகள் அலைமோதுகின்றன. பல்லாயிரம் பேரைக் கொன்றவர்களும் கல்லெறிபவர்களும் ஒன்றா? இருவருக்கும் ஒரே நீதியா? இருவருடைய குற்றங்களையும் ஒன்றுபோல் பாவித்து தீர்ப்பு எழுதுவது சாத்தியமா? படுகொலை செய்பவர்கள்மீது ஆத்திரப்பட்டு சிறு கல் வீசினால் அது கொடுஞ்செயல் ஆகிவிடுமா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடவேண்டுமானல், இவற்றோடு சேர்த்து இன்னும் இரு  கேள்விகளை நாம் எழுப்பவேண்டும்.

  • ஒரு நாட்டின் அரசையும் அதன் மக்களையும் ஒன்றுபோல் பாவிக்கவேண்டுமா?
  • ஒரு நாட்டின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்களும் பொறுப்பேற்கவேண்டுமா?

எனில், அமெரிக்க அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் ஒருவர், அமெரிக்கர்கள் அனைவரையும் எதிர்த்தாகவேண்டுமா? சோவியத் ரஷ்யாவை அல்லது செஞ்சீனத்தை ஏற்கும் ஒருவர் ஒவ்வொரு ரஷ்யரையும் ஒவ்வொரு சீனரையும் அரவணைக்கவேண்டுமா?

3

ஒருவருடைய அடையாளம் என்பது என்ன என்னும் ஆதாரமான கேள்வி இங்கே எழுகிறது. The Argumentative Indian புத்தகத்தில் அமர்த்தியா சென் இதுபற்றி விவாதிக்கிறார். ஒருவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார். அவர் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். அவருக்கு கால்பந்து பிடிக்கும். அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் பார்வை இருக்கிறது. அவர் மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கிறார். அவர் ஒரு கணவர். தன் மகனுக்குத் தகப்பன். அவர் கற்றறிந்தவர். அவர் ஒரு இந்தியர். அவர் ஒரு முஸ்லிம். இதில் எது அவருடைய அடையாளம்? எந்த அம்சத்தை அல்லது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்மீதான மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது? எந்த அடையாளத்தைக் கொண்டு அவர் ஏற்கப்படுகிறார் அல்லது நிராகரிக்கப்படுகிறார்? அவரைப் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம் எத்தகையது? இது மிகவும் முக்கியமானதொரு கேள்வி. காரணம், இந்தப் பிம்பத்தை வைத்துதான் நாம் அவரை எதிர்கொள்கிறோம்.

மஹிந்த ராஜபக்ஷேவை ஒரு  ஃபாசிஸ்டாக அன்றி வேறெப்படியும் நம்மால் கற்பனை செய்யமுடியாததற்குக் காரணம் அவருடைய பிற குணாதிசயங்களைக் காட்டிலும் அவருடைய ஃபாசிச குணம் மேலெழும்பியிருப்பதுதான். அந்தக் குணமே அவரது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் வடிவமைக்கிறது.

ஒரு ஃபாசிஸ்ட் என்னும் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷே எதிர்க்கப்படவேண்டியவர். ஒரு போர்க்குற்றவாளி, கிரிமினல் என்னும் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டியவர். அவருடைய  அரசியல் நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று. முறியடிக்கப்படவேண்டிய ஒன்றும்கூட. மஹிந்த ராஜபக்ஷேவின் அடையாளம் இதுவே. அவர் ஒரு சிங்களராகவும் இருக்கிறார். அவ்வளவுதான்.

இதே ரீதியில், மஹந்த ராஜபக்ஷேவின் அரசை ஒரு ஃபாசிஸ்ட் அரசு என்னும் முறையில் எதிர்க்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷேவுக்குத் துணை நிற்கும் அவருடைய அரசையும் ராணுவத்தையும் எதிர்க்கவேண்டும். அதே வரிசையில், சிங்களப் பேரினவாதம் எதிர்க்கப்படவேண்டியது. ஆனால் சிங்களர்கள் அனைவரும் எதிர்க்கப்படவேண்டியவர்களா?

அமெரிக்க எதிர்ப்பு என்பது அனைத்து அமெரிக்கர்களையும் எதிர்ப்பது என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டால், நோம் சாம்ஸ்கி, ஹோவர்ட் ஜின், பாப் உட்வர்ட்உள்ளிட்ட அமெரிக்க விமரிசகர்களையும் சேர்த்தேதான் நாம் எதிர்க்கவேண்டியிருக்கும்.

சிங்கள அரசைக் கடுமையாகச் சாடி பலியான லசிந்த விக்கிரமதுங்கவை ஒரு சிங்களர் என்பதற்காக நாம் எதிர்க்கவேண்டுமா என்ன?

எதிர்க்கவேண்டியது சிங்கள இனவாத அரசைத்தான்; சிங்களர்களை அல்ல. இந்த உண்மை தெரிந்தேதான் இங்குள்ள அரசியல் கட்சிகளும் சில இயக்கங்களும் வெறுப்பு அரசியலை மக்களிடையே பரப்பிவிடுகின்றன. அவற்றுக்கு நாம் இரையாகக்கூடாது.

4

sl_1401580fஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் அதன் சிறுபான்மை இன மக்களை எப்படி நடத்துகிறது என்பதைத் தொடர்ச்சியாக கவனித்து, ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவேண்டியது அந்நாட்டு மக்களின் தார்மிகக் கடமையாகும். இந்த அளவுகோலின் அடிப்படையில்தான் இலங்கைப் பிரச்னையை நாம் கவனிக்கவேண்டும். அங்கே ஒருவேளை சிங்களர்கள் சிறுபான்மையினராக இருந்து, பெரும்பான்மை தமிழர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டால், அப்போது நாம் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் குரல் கொடுக்கவேண்டும். நம் இனம், நம் மொழி, தொப்புள்கொடி உறவு போன்ற பதங்களை அப்போது பயன்படுத்தமுடியாது என்றபோதிலும்.

‘சிங்களர்கள்’ என்னும் அடையாளத்தை இப்போது மூன்றாகப் பிரிக்கலாம்.

  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கையை ஏற்பவர்கள் / அவற்றால் பலனடைபவர்கள்.
  • இலங்கை அரசின் இனவாதக் கொள்கைகளை ஏற்காதவர்கள் / அவற்றை எதிர்ப்பவர்கள்.
  • அரசியல் பார்வை ஏதுமற்றவர்கள்.

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான நம்  போராட்டத்தில் இரண்டாவது பிரிவினரை நாம் ஒன்றிணைத்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது பிரிவினரை வென்றெடுக்கவேண்டும்.

முதல் பிரிவினர் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.

எப்படிப் பார்த்தாலும், சிங்களர்களோடு உரையாடாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல், அவர்களோடு முரண்படாமல் இலங்கைத் தமிழர் போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது. சிங்களர்களை அவர்கள் சிங்களர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒதுக்குவது பிரச்னையின் தீவிரத்தை அதிகரிக்கவே செய்யும்.

சிங்கள அரசின்மீதான கோபத்தை சிங்களர்கள்மீது செலுத்துவதும் அதற்குத் துணை போவதும் சிங்கள அரசுக்கு சாதகமான செயல்பாடாகத்தான் இருக்கும். அரசியல் பார்வை ஏதுமற்ற சிங்களர்களும்கூட தங்கள் அரசோடு வேறுவழியின்றி ஒன்றிப்போகும் அபாயமும் ஏற்படும்.

ஆட்சியாளர்களைப் போலன்றி, பாட்டாளி வர்க்கம் சர்வதேசத்தன்மை கொண்டிருக்கவேண்டியது அவசியம். மாணவர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி, மக்கள் போராட்டமாக இருந்தாலும் சரி. பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்கும் சேர்த்து குரல் கொடுத்து அவர்களையும் ஒன்றிணைத்து போராடுவதன்மூலம் மட்டுமே ஒடுக்கப்படும் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரமுடியும்.

0

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம், பாலா!

balaபரதேசி படம் குறித்து இணையத்தில் பலவிதமான விமரிசனங்கள், விவாதங்கள் வலுத்துவருகின்றன. குறிப்பாக எழுத்தாளர்கள் இப்படம் பற்றிய தனது நிலைப்பாட்டை சொல்லி வருகிறார்கள். படம் எப்படியுள்ளது என்று பேசுவதற்கு முன் விமரிசனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். பரதேசி படத்துக்கான விமரிசனம் பெரும்பாலும் இரண்டு வகைகளாக இருக்கின்றன.

ஒன்று: இந்தப் படத்தையும் அதன் மூலப் பொருளாகச் சொல்லப்படும் ‘எரியும் பனிக்காடு’ புத்தகத்தையும்  ஒப்பிட்டு படத்தின் பலவீனங்களைக் குறிப்பிடுவது.

இரண்டு : இந்தப் படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேதனைகளை உணர்த்துகிறது என்ற ஒற்றை வரிக்காக படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்வது.

இவ்விரண்டு குறிப்புகளையும் மறந்து ஒரு படமாக, ஒரு கலைப் படைப்பாக  பரதேசி படம் எப்படி இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை.

முதல் விஷயத்துக்கு வருவோம். படத்தைவிட நாவல் உண்மைக்கு அருகிலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நாவல் படமாகும்போது நாவலை ஒரு அளவுகோளாக (பென்ச்மார்க்) எடுத்துக்கொண்டு இரண்டையும் ஒப்பிட்டுக் குறை கூறுவது சரியான பார்வையாக இருக்காது. நாவலைப் படமாக்கிய எத்தனைப் படங்கள் கதையை, கதை நடையை   மாற்றாமல் அமைக்கப்பட்டன? நாவலைப் படமாக்கி வெற்றி பெற்ற எத்தனைப் படங்கள் நாவல் தரும் முழு உணர்வுகளைத் தந்தன? எண்ணிப் பார்த்தால் படத்துக்கு இணையாக நாவலுக்கும் விமரிசனங்கள் இருக்கக் கூடும்.

படத்தை ஒப்பிட்டுப் பார்த்து நாவலைப் புகழ்ந்து பேசும் வழக்கம் இங்கு அதிகமிருக்கிறது. சொல்லப்போனால் படத்தின் குறைகளை மற்றும் லாஜிக்கல் பிழைகளைக் குறிப்பிட்டு நாவலைப் புகழ்பவர்கள் அனைவரும் இந்நாவலை படம் வெளியான பின்னர் தான் படித்திருக்கிறார்கள். இப்படம் வெளியான பின்னர் தான் நாவல் பற்றிய விமரிசனங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. நம் சூழலில் புத்தகங்கள் எவ்வளவு கவனிக்கப்படுகின்றன, பேசப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். நாவல் வேறு, படம் வேறு. படத்தில் உள்ள கதைப் பிழைகள், தர்க்கரீதியான பிழைகள் அனைத்தும் சரியாக இருந்தாலும் இதனை நாவலோடு ஒப்பிட்டுக் குறை கூறுபவர்களின் பார்வை மாறாது, மாறியிருக்காது என்பதே உண்மை.

அடுத்தது படத்தைப் புகழ்பவர்கள் பக்கம் வருவோம். உண்மையில், படத்துக்கு மக்களிடையில் கிடைத்த வரவேற்பு ஆச்சர்யம் அளிக்கிறது.  மக்களுக்கு இவ்வளவு பொறுமை எப்போது வந்தது? பிறகுதான் காரணம் புரிந்தது. மக்களின் விமர்சனம் சில template க்குள் நுழைந்துவிட்டது.  ‘இந்தப் படம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்கள் நிறைந்த வாழ்வைச் சொல்லும் உண்மைக் கதை’. இந்த ஒற்றை வாக்கியம் மட்டும்தான் அதைப் புகழ்வதற்குக் காரணம். அதாவது இப்படியொரு வரலாற்றுச் சம்பவமே நடக்கவில்லை என்றாலோ அல்லது தேயிலை தொழிலாளர்கள் யாரும் வேதனைப் படுவதில்லை என்றாலோ இந்தப் படம் படு தோல்வி என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல், ஒரு சராசரி தமிழ் சினிமா ரசிகன் இந்தப் படத்தை கன்னாபின்னா என்று திட்டியிருப்பான்.

இன்னும் சிலர் படத்தை விமரிசிக்க பயப்படுகிறார்கள். துயரப்படுபவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படத்தை நல்லாயில்லை என்று சொல்லலாமா?

பரதேசிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு இன்னொரு முக்கியக் காரணமும் உள்ளது. மக்களின் ரசனை fact-க்கு அடிமையாகிக் கிடக்கிறது. இரண்டு கதைகளை சொல்லும் படம், அகோரிகளைப் பற்றிச் சொல்லும் ஒரே படம், மலைவாழ் மக்களின் வாழ்வைச் சொல்லும் ஒரே படம், முதன் முதலில் இந்த இசைக் கருவியை உபயோகித்த இசை. முதன் முதலில் இந்த நாட்டில் அமைக்கப்பட்ட இசை. இது போன்ற கவர்ச்சிகரமான வாக்கியங்கள் அவர்களை ஈர்க்க போதுமானதாக இருக்கின்றன. படைப்பைப் பற்றிய கருத்துகளை இவையே முடிவு செய்துவிடுகின்றன.

என்னைப் பொருத்தவரை, உலக அளவில் சிறந்த படங்களாகப் பேசப்படும் Life is Beautiful மற்றும் The Motorcycle Diaries ஆகியவையே இவ்வளவு பாராட்டுகளுக்குத் தகுதியற்றவை. இவை இரண்டுமே சாதாரணப் படங்கள்தான். ஆனால் உலக அளவில் இவ்வளவு புகழ்ந்து பேசப்படுவதற்கான ஒரே காரணம் இப்படங்களின் கதை வரலாற்று உண்மைகளைச் சார்ந்து உள்ளன. உலகளவில்  ரசிகர்களுக்கு இப்படியொரு பார்வை இருக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

உண்மைக் குறிப்புகளைப் பற்றியும் தர்க்கப் பிழைகள் பற்றியும் அனைவரும் பேசிவிட்டதால் நான் அவற்றைப் பேசப் போவதில்லை. இது போன்ற குறிப்புகளை விடுத்து ஒரு படமாக பரதேசி எப்படியுள்ளது என்று பார்ப்போம். படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் மகிழ்ச்சியான கிராமத்துக் காட்சிகள் அனைத்தும் மற்ற எந்த படங்களிலும் வரும் சாதாரண நகைச்சுவைக் காட்சிகளை ஒத்தவைதான். அவை தனித்துவம் மிகுந்தவை என்று நினைக்க வைப்பதற்கு தமிழ் சினிமாவின்  monotonous போக்குதான் காரணம். மற்றபடி படத்தின் முதல் அரை மணி நேரத்தில் பாராட்டும்படியாக எதுவுமில்லை.

அதற்கு பிறகு இன்னும் மோசம்.  சோகம் நிறைந்த உண்மைக் கதையைச் சொல்லும் படம் என்பது சரி தான். அதற்காக படம் தட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சோகமோ மகிழ்ச்சியோ இல்லை வேறு எந்த வகையோ படத்தை எதாவது ஒன்று நகர்த்திச் செல்ல வேண்டும். அது பரதேசியில் இல்லை. சோகத்தைச் சொல்லும் படங்கள் எவ்வளவோ உள்ளன. அவை எல்லாம் சுவாரஸ்யமற்ற படங்கள் ஆகிவிடவில்லை. சுவாரஸ்யம் என்றால் கதைக்கு தேவையில்லாமல் தனியே திணிக்கப்படும்  கமர்ஷியல் அம்சங்கள் அல்ல.

Apocalypto, Schindler’s List போன்ற படங்கள் முழுக்க முழுக்க சோகம் மற்றும் கொடுமைப் படுத்துதல் சார்ந்த படங்கள் தான். ஆனால் அவற்றில் நம்மைக் கதைக்குள் இழுத்துச் செல்லக் கூடிய திரைக்கதை இருந்தன. பரதேசியில் அப்படி எதுவுமில்லாமல் சோகம் என்ற ஒன்று மட்டுமே தட்டையாக வெளிப்படுகிறது.

ஒரு ஆசிரியரிடம் அடி வாங்கி வேதனைப்படும் சிறுவனைப் பற்றிய ஒரு படம் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாள் மாணவன் வருகிறான். ஆசிரியர் அவனை நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார். இரண்டாம் நாள் வருகிறான். அதே நடக்கிறது. மூன்றாவது நாளும் அதே. இப்படியே ஒரு மாதம் முழுவதும் நடப்பது போல் காட்டுகிறார்கள். அதோடு படம் முடிந்துவிடுகிறது. எப்படி இருக்கும்? கடைசியில் இது உண்மையில் ஒரு புகழ் பெற்ற சுதந்தரப் போராட்டத் தியாகியின் வாழ்வில் நடந்த கதை என்று  சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உடனே அது தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் படம் ஆகிவிடுமா? அவ்வளவு வேண்டாம் ஒரு நல்ல படம் ஆகிவிடுமா? அப்படித் தான் இருக்கிறது பரதேசி மீது பொழியும் பாராட்டு மழைகள்.

கதைக்கரு எந்த உணர்வைக் கொண்டுள்ளதோ அவ்வுணர்வைப் பார்வையாளனுக்கு அளிக்கும் பங்கு படத்தின் திரைக்கதைக்கு உள்ளது. சோகத்தை அதுவும் இது போன்ற ஒரு வரலாற்றுச் சோகத்தை வடிவமைக்கும்போது அதில் நேர்த்தி இருக்க வேண்டும். கதைக்குள் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வலிமை படைப்பில் இருக்க வேண்டும். கதையின் ஓட்டமும் படத்தின் முடிவும் மனதுக்குள் உறுதியான விளைவுகள் ஏற்படுத்த தவறிவிட்டன என்பதே யதார்த்த உண்மை .

‘அடுத்தது என்ன?’ என்கிற கேள்வி ஒவ்வொரு பார்வையாளனுக்குள்ளும் சினிமா பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டிருக்கும். படம் இக்கேள்விக்கான பதிலை அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது கேள்வியை மறக்க வைக்க வேண்டும். ‘அடுத்தது எதுவும் இல்லை’ என்கிற பதிலோடு ஒரு மணி நேரம் படம் நகர்வது தப்பே இல்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் ரசிகன் அந்த ஒரு மணி நேரமும் இந்தக் கேள்வியை மறந்திருக்க வைப்பது படத்தின் பொறுப்பு. பரதேசி அதில் பெரிதும் தடுமாறியது.

ஒரு கலைப் படைப்பாக இப்படத்தில் பாலா பெரிதும் தடுமாறியிருக்கிறார் அல்லது தோற்றிருக்கிறார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாலா என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால், இப்படத்தின்மூலம் அவருக்குக் கிடைத்திருக்கும் உணர்ச்சி வசப்படக்கூடிய ரசிகர்களையும் சேர்த்தே அடுத்த படத்திலிருந்து அவர் திருப்திப்படுத்த வேண்டும் என்பதே கடினமான உண்மை.

ஐ.நா தீர்மானத்தால் என்ன பயன்? கலையரசன் பேட்டி

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள ஐ.நா தீர்மானம் குறித்தும் அதன் பின்னணி அரசியல் குறித்தும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரும் இடதுசாரி சிந்தனையாளருமான கலையரசனுடன் ஒரு பேட்டி.
ஐ.நா தீர்மானம் யாருக்குக் கிடைத்த வெற்றி? இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் ஏதேனும் பலன் உண்டா?
unhrc_geneva1இதனை வெற்றியாக பார்ப்பதை விட, யாருக்கு சாதகமானது என்று பார்ப்பதே பொருத்தமானது. அதற்கு முதலில் ஐ.நா. தீர்மானம் எந்த நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டது என்பதையும் சுருக்கமாக பார்த்து விடுவோம். வளர்ச்சி அடையாத மூன்றாமுலக நாடுகளில், அல்லது முன்பு கொள்கை அடிப்படையில் மாறுபட்ட இரண்டாமுலக நாடுகளில் (முன்னாள் சோஷலிச நாடுகள்), மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்த நாடுகளை “நல்வழிப் படுத்துவதற்காக”, உருவானதுதான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம். ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டி, ஐ.நா. அந்த நாட்டில் தலையிட முடியும். முன்பு யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் பெரிதும் உதவியது. அதாவது, ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று சொல்லலாம்.
ஆனால், சம்பந்தப்பட்ட நாடு எவ்வளவு தூரம், மேற்கத்திய நலன்களுக்கு விரோதமானது என்பதைப் பொறுத்து, தீர்மானத்தின் அழுத்தம் அதிகரிக்கப்படும். இலங்கை அரசின் இராஜதந்திர நடவடிக்கை எதுவும் மேற்கத்திய நலன்களுக்கு எதிரானதல்ல. அதனால், தீர்மானம் மிகவும் மென்மையாக இருக்கிறது. அமெரிக்கத் தீர்மானம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது, அதிலேயே அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, போருக்குப் பின்னரான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசினால்தான் உருவாக்கப்பட்டது. அதைக்கூட மதிப்பதில்லை. ஒவ்வொரு வருடமும், ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அழுத்தம் கொடுப்பதால், அந்த ஆணைக்குழுவானது ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆலோசனையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.
இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது பலன் உண்டா என்று கேட்டால், அதற்கு ஆம் என்றும், இல்லை என்றும் பதிலளிக்கலாம். ஆம் என்றால், எத்தகைய பலன்கள்? இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தப்படலாம். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப் படலாம். இதன் மூலம், தமிழர்களின் (மனித) உரிமைகள் மதிக்கப்படலாம். அமெரிக்க அழுத்தத்தை பயன்படுத்தி, சம உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம். சட்டத்துறை சுதந்திரமாக செயற்பட்டால், ஒரு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் உருவாகலாம். அது, சிறிலங்கா இராணுவம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பிலும் குற்றமிழைத்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்கலாம். மேற்குறிப்பிட்ட இலக்கினை அடைவது தான், அமெரிக்க தீர்மானத்தின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது போல, இந்த நடவடிக்கைகள் தமிழீழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கு உதவப் போவதில்லை. அதன் விளைவாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரதேசம் எதுவும் உருவாகப் போவதில்லை. அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கூறலாம்.

 அமெரிக்காவுக்கு திடீரென்று இலங்கைத் தமிழர்கள்மீது ஏன் இந்த அக்கறை?   

அமெரிக்காவுக்கு தமிழர்கள் மேல் விசேட கரிசனை இருப்பதாக கருத முடியாது. கடந்த காலத்தில், இரண்டு இனங்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் அந்நாடு செய்து கொண்டிருந்தது. அதாவது, ஒரு நேரம் தமிழர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். இன்னொரு நேரம், சிங்களவர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். உண்மையில், அமெரிக்கா யாரையும் ஆதரிக்கவில்லை. அது தனது பொருளாதார நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது. கடந்த காலத்தில், இந்தியாவும் அப்படித்தான் நடந்து கொண்டது.
தெற்காசியப் பிராந்தியத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையில், தனது ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது. அரபு வளைகுடாவில் உள்ள, எண்ணெய் வள நாடுகளில் இருந்து, சீனா, ஜப்பான் போன்ற தூர கிழக்காசியாவுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாகத்தான் செல்லும். சீனாவோ, அல்லது இந்தியா தன்னிலும், அந்த விநியோகப் பாதையின் குறுக்கே வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. இன்றைக்கும், சர்வதேச வர்த்தகம் அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் தான் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் மேற்கத்திய நலன்களுக்கு எதிரான அரசு இருப்பதையும், அமெரிக்கா விரும்பவில்லை. அதற்காக, சிலநேரம் தமிழர்கள் சார்பாக நடப்பதாக காட்டி, இலங்கை அரசின் மேல் அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அமெரிக்காவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதித்ததும் ஒரு காரணத்தோடுதான்.
இதே போன்ற அரசியலைத் தான், முன்பு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்த இந்திரா காந்தியின் அரசும் செய்து கொண்டிருந்தது. வல்லரசுகளின் விளையாட்டில் இருந்து தமிழ் மக்கள் தப்ப முடியாது. ஆனால், இந்த நிலைமையை எந்தளவு தூரம், எமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. “தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குரலில் பேச வேண்டும்,” என்ற நடைமுறைச் சாத்தியமற்ற, சிறுபிள்ளைத் தனமான அரசியலால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. சில குறைபாடுகள் இருந்தாலும், ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை முன்னிறுத்துவது தவிர்க்கவியலாதது. இன்றைய நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணக்கப்பாட்டை கொண்டு வந்து, தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமையை பலப்படுத்துவதும் அவசியமானது. அமெரிக்க தூதரகமும், இதனை பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளது.
அமெரிக்காவே ஒரு போர்க்குற்றவாளிதான் என்ற போதும் அமெரிக்காவை விட்டால் இப்படியொரு அழுத்தத்தை இலங்கைக்கு அளிக்க வேறு யாருக்கும் திறன் இல்லை என்று சொல்லப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  
அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலைக் குற்றங்களைக் கூட புரிந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இது வரையில் எந்த விசாரணையும் இல்லை. அதனால், பிற நாடுகளை குற்றம் சாட்டும் தார்மீக கடமையை அமெரிக்கா இழந்துவிட்டதும் உண்மைதான். ஆனால், ஒரு உலகப் பேரரசு என்ற முறையில், உலகில் சமாதானத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம். சரித்திர காலத்தில், ரோமர்களால் Pax Romana (ரோமர்களின் சமாதான ஆட்சி) என்றும், அல்லது பிரிட்டிஷாரால் Pax Britannica (பிரிட்டிஷ் சமாதான ஆட்சி) என்றும் அழைக்கப்பட்ட, “ஒரு மேலாண்மை வல்லரசின் கீழான நீதி” பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  நான் முன்பு சுட்டிக் காட்டியது போன்று, மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் யாவும், இன்று வரையில் அமெரிக்காவின் எதிரிகளை குறி வைத்து தான் ஏவப்பட்டு வந்தன. சில நேரம், நட்பு நாடுகளிலும், அமெரிக்கா எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான கருவியாக பயன்படுத்தப்படுகின்றது.
இலங்கையிலும், அதிகபட்சம் ஒரு ஆட்சி மாற்றத்தைதான், அமெரிக்க தீர்மானம் இலக்காக கொண்டுள்ளது. அதை தவிர்த்துவிட்டு பார்த்தால், இலங்கையில் இனப்பாகுபாடு நிறுத்தப்படவும், தமிழ் மக்களின் சம உரிமை போன்றவற்றை பெற்றுக் கொள்ளவும், அமெரிக்க அழுத்தம் உதவலாம். ஏற்கனவே, இனப்பிரச்சினையை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கு எந்தளவு உள்ளது? இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போருக்கு, அமெரிக்காவின் ஆதரவும் ஒரு காரணம். பனிப்போரின் இறுதிக் காலத்தில் ஈழப்போர் தொடங்கியது என்பதையும், உலகில் வல்லரசுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்ட காலத்தில் அந்தப் போர் தீவிரமடைந்து இருந்ததையும் மறந்து விடலாகாது.
ஒற்றைத் துருவ வல்லரசாக, அமெரிக்கா தனது மேலாண்மையை நிச்சயப்படுத்திக் கொண்ட பிறகு, மூன்றாமுலக நாடுகளில் நடந்த இனப்போர்களுக்கும் முடிவு கட்டப்பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான உலகமயமாக்கல் கொள்கை முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டது. அதற்கு, இன்று “தோற்றுப்போன” ஈழத் தமிழர்கள் முகம் கொடுக்கிறார்கள். வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை கட்டுதல் போன்ற சிங்கள பேரினவாத நடவடிக்கைகள்கூட, அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கைக்கு உட்பட்டுதான் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை ஈடுகட்டும் வகையில்தான், தமிழரின் மனித உரிமைகள், சம உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஐ.நா. தீர்மானம் அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால்: அமெரிக்காவின் அழுத்தமானது, அடக்கப்படும் தமிழர்களை சுதந்தரமாக நிம்மதிப் பெருமூச்சுவிட வைக்கும். ஆனால், அது ஒரு விடுதலை ஆகாது. தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமானால், அமெரிக்காவின் உலகமயமாக்கலுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கும்.
அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்க மறுக்கும் அளவுக்கு இலங்கைக்கு உண்மையில் துணிச்சல் இருக்கிறதா? யார் கொடுத்த துணிச்சல் இது?
உண்மையில் அது ஒரு வகையில் அமெரிக்கா கொடுத்த துணிச்சல்தான்! அமெரிக்க தீர்மானம், இலங்கை மீது பெரிய அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை. அது முன்பு யூகோஸ்லேவியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போன்று கடுமையாக இல்லை. அமெரிக்கா அவற்றை தனது எதிரி நாடுகளாக கருதியது. ஆனால், சிறிலங்காவை தனது நட்பு நாடாக கருதுகின்றது. ஐ.நா. தீர்மானம் ஒரு புறம் இருக்கையில், அமெரிக்கப் படைகள், சிறிலங்கா படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். USAID என்ற அமெரிக்க அரசின் பணத்தில் இயங்கும் தொண்டு நிறுவனம், யாழ்ப்பாணத்தில் கலாசார, களியாட்ட விழாக்களை நடத்தியுள்ளது. இது போன்ற பல உதாரணங்களை குறிப்பிடலாம். சட்ட அடிப்படையில் பார்த்தால், ஐ.நா. வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. இந்த விடயங்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இலங்கை அரசுக்கு தெரியாமல் இருக்குமா? மேலும், ஏற்கனவே இஸ்ரேல், இலங்கைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றது. அண்ணன் எவ்வழியோ, தம்பியும் அவ்வழியே செல்வது தானே உலக யதார்த்தம்?
இலங்கையின் செயலைப் போர்க்குற்றம் என்று அழைப்பதா அல்லது இனப்படுகொலை என்பதா?
kal_alesund11983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரம், உண்மையில் ஒரு இனப்படுகொலை என்று, ஏற்கனவே என்னைப் போன்று பலர் கூறி வந்துள்ளனர். கொழும்பு நகரில் வாழ்ந்த தமிழர்களின் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, தமிழர்களை நர வேட்டையாடிய சம்பவங்களை, இனப்படுகொலை என்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது? 2002ம் ஆண்டு, குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்த அதே பாணியில் தான், 1983ல் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அன்றைக்கு நடந்த இனப்படுகொலைக்கு எதிராக, ஸ்ரீலங்கா அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, இன்றைய தமிழ் தேசியவாதிகள் யாரும் முன்வரவில்லை. அன்று நடந்த இனப்படுகொலையை, குறைந்தபட்சம் தமது தொடர் அரசியல் பிரச்சாரத்துக்காகக்கூட பயன்படுத்தவில்லை. அது மட்டுமல்ல, இலங்கையில் ஏற்கனவே வேறு பல இனப்படுகொலைகளும் நடந்துள்ளன. 1971 மற்றும் 1989 – 1990 ஆகிய காலப்பகுதியில் சிங்கள மக்களை அழித்தொழித்த இனப்படுகொலை பற்றி யாரும் பேசுவதில்லை. ஏற்கனவே, இலங்கை அரசை இனப்படுகொலை குற்றத்தில் சிக்க வைப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் தவறவிடப் பட்டுள்ளன. இதனால், இனப்படுகொலையாளர்களின் தன்னம்பிக்கை பெருமளவு அதிகரித்திருந்ததை, நாம் புரிந்து கொள்ளத் தவறி விட்டோம்.
2009 ம் ஆண்டு, எத்தனை ஆயிரம் மக்கள் அழிந்தாலும், புலிகளை அழித்தே தீருவதென்று இலங்கை அரசு கங்கணம் கட்டிய பொழுது தான், நாம் விழித்துக் கொண்டோம். ஆனால், அந்த நேரம் காலம் கடந்து விட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்ற பெயரில், புலிகளுக்கு எதிராக உருவான புனிதக் கூட்டு, தமிழ் இனப்படுகொலையைக்கூட மௌனமாக அங்கீகரிக்கும் அளவுக்கு சென்றது. இறுதிப்போரில், சிறிலங்கா இராணுவமும், புலிகளும் மூர்க்கமாக மோதிக் கொண்டதால், அங்கே போர்க்குற்றங்களும் நடைபெற்றுள்ளன.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம், சர்வதேச சட்டத்தின்படி, போர்க்குற்றங்கள் எவை என்பதை வரையறுப்பது இலகு. ஆனால், இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டுமானால், அதற்கென்று சில அளவுகோல்களை வைத்திருக்கின்றனர். மிக முக்கியமாக, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற திட்டம் அங்கே இருந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, யூதர்களை முற்றாக அழிக்க வேண்டுமென்ற திட்டம் ஒன்றை, ஜெர்மன் நாஜிகள் “Endlösung”  என்ற பெயரில் தீட்டி வைத்திருந்தார்கள். அது போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். ஒரு நாட்டில் நடந்த போரையும், அதன் இறுதியில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதையும் இனப்படுகொலை என்று ஒரு தடவை தீர்ப்பு கூறிவிட்டால், அது சர்வதேச அரங்கில் பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கும். அந்த தீர்ப்பு, வேறு பல உலக நாடுகளின் விடயத்திலும் பிரயோகிக்கப்படலாம். உதாரணத்துக்கு, இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் இஸ்ரேலை தண்டிக்க வேண்டுமென, பாலஸ்தீன ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். அதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றும்.
0

எரியும் பனிக்காடும் பரதேசியும் : ஒரு நாவலைக் கொல்வது எப்படி?

paradesi1

ஏற்கெனவே ஏழாம் உலகம் என்ற ஜெயமோகனின் நாவலை நான்கடவுள் என்ற பெயரில் கந்தரகோலமாக்கிய பாலா, இந்தமுறை எரியும் பனிக்காட்டை வெட்டிச் சீரழித்திருக்கிறார்.

ஏழாம் உலகம் குறைப்பிறவிகளான, முடமான, பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களையும் அவர்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களையும் விவரிக்கும் நாவல். நாம் நாகரிகம் என்று நம்பக்கூடிய இருபதாயிரம் வருட வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிக் கதறியபடியே ஓடும் நாவல். மானுடம் என்ற சொல்லின் மகத்தான நிழல் (நன்றி: சு.வேணுகோபால்). ஆனால், அந்த நாவலை அகோரிகளுடன் பிணைத்து ஒரு கதாநாயக சாகசத்தை படு செயற்கையாக திணித்து வீணடித்திருந்தார் பாலா. இப்போது டேனியல் எழுதிய ரெட் டீ.

பாலா முழுவதுமாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் டேனியலின் நாவல்தான் பரதேசியின் அஸ்திவாரம். நாவல், பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டிராத தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வேதனை நிறைந்த வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டது. அந்த வாழ்க்கை பலருக்கும் தெரியாது என்பதால், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் நாவலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் நாவலாசிரியர் கலைபீடத்தில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து சில காரியங்கள் செய்திருப்பார். கதாபாத்திரங்கள் தமக்குள் மட்டும் பேசிக்கொள்ளாமல் வாசகர்களைப் பார்த்தபடி நின்று பேசுவது போன்ற குறைகள் நாவலின் கலையம்சத்தை சிறிது பாதிக்கிறது என்றாலும் அந்த வாழ்க்கையின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால், நாவலின் தரத்தை அது அவ்வளவாகப் பாதிக்கவில்லை.

danielஅப்படியாக, டேனியல் தேயிலைத் தோட்ட வாழ்க்கையின் சாற்றை வடித்து நாவல் கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்திருக்க, பாலாவோ, சாறைக் கொட்டிவிட்டு சக்கையை நம் முன் கொண்டுவந்து குவித்திருக்கிறார். தங்கச் சுரங்கத்துக்குச் சென்றவர் மண்கட்டிகளை எடுத்துக்கொண்டு வந்து நம்மிடம் காட்டியிருக்கிறார். இந்த மண்கட்டிகளிலும் சில தங்கத் துகள்கள் மின்னுவதைவைத்து தமிழ் திரைச் சமூகம் புளகாங்கிதப்பட்டுக் கொள்கிறது. இதில் எளிய பார்வையாளனின் பிரமிப்பை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால், இலக்கிய பரிச்சயமும் உலக சினிமா பரிச்சயமும் கொண்ட கூட்டமும், எப்போது வேண்டுமானாலும் மன்னர் கூப்பிட்டு அனுப்பலாம் என்ற நப்பாசையில் காத்திருக்கும் அந்தப்புர மகளிரைப்போல், தங்களின் தயார்நிலையை அறிவிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கும்போதுதான் கோபம் வருகிறது.

இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன் நாவலை நான் முழுவதுமாகப் படித்திருக்கவில்லை. எனவே, படம் குறித்த என் மனப்பதிவு படத்தின் அளவிலேயே உருவானதுதான். நாவலைப் படித்த பிறகு அந்த விமர்சனம் மேலும் வலுப்பட்டிருக்கிறது.

நாவல் வேறு… சினிமா வேறு என்பது உண்மைதான். ஆனால், நாவலை சினிமாவாக ஆக்கும்போது எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்… எதையெல்லாம் புதிதாகச் சேர்க்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதுதான் உங்கள் செயலை நியாயப்படுத்த முடியும். வெறுமனே திரைப்படத்தில் செய்திருப்பவை எல்லாம் காட்சி ஊடகத்துக்காகச் செய்யப்பட்டவை என்று சொல்லிக்கொள்வது சரியல்ல.

நில உடமையாளர்களான நாயக்கர்களாலும் தேவர்களாலும் ஒடுக்கப்படும் தலித்கள்தான் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். ஹோட்டல்களின் முன்னால் இருக்கும் இருக்கையில் தலித்களுக்கு உட்கார அனுமதி கிடையாது என்பதில் ஆரம்பித்து அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து யதார்த்த அம்சங்களும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்க அவருடைய சாதிப்பாசம் தடுத்துவிடுகிறது. மேலும் நாவலில் தலித்களைக் கொடுமைப்படுத்தும் கங்காணியாக வருவது ஒரு தலித். அதையும் தெளிவாகச் சித்திரிக்காமல் விட்டுவிடுகிறார். அப்படியாக, இது யதார்த்தப் படம்தான். ஆனால், யதார்த்தம் இருக்காது. இது ஒரு மனிதனை உடம்பில்லாமல் சித்திரிப்பதைப் போன்றது.

நாவலில் கங்காணி ஒவ்வொரு ஊரிலும் ஆள் பிடிக்கும் முறை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிராமத்தில்  இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும்தான் அவன் அழைத்துச் செல்வான். அதுதான் சாத்தியம். ஏனென்றால், அப்போதுதான் அடுத்த தடவை அந்த ஊரில் வந்து வேறு யாராவது இரண்டு அப்பாவிக் குடும்பத்தை அழைத்துச் செல்லமுடியும். ஒரே கிராமத்தில் இருந்தே ஐம்பது அறுபது பேரை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தினால், அடுத்தமுறை அந்த ஊர் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாமல் போய்விடும்.

அதோடு,  ஒவ்வொருகிராமத்தில் இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும் தனிமைப்படுத்தி அழைத்துச் செல்வதில் இன்னொரு தந்திரமும் அடங்கியிருக்கிறது. அப்படி தனியாக இருப்பவர்கள்தான் அடக்குமுறையை எதிர்த்துப் போராடப் பயப்படுவார்கள். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் அழைத்துச் சென்றால் அவர்களிடையே வலுவான ஒற்றுமை இருக்கும். எந்தவொரு அடக்குமுறையையும் அவர்கள் எளிதில் எதிர்த்துவிடுவார்கள். எனவே, கங்காணிகள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஓரிரு குடும்பங்களை மட்டுமே அழைத்துச் செல்வார்கள்.

பாலாவோ தன் படத்தில் ஒரே கிராமத்தில் இருந்து அனைவரையும் அழைத்துச் செல்வதாகக் காட்டியிருக்கிறார். அதாவது, நாவலில் இருந்து இவர் வித்தியாசமாகச் சிந்திக்கிறாராம். அப்படிச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் பலவீனமான நாவலை எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும். அது உங்கள் திறமைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்றால் பலமான நாவலை எடுத்துக் கொண்டுவிட்டு பேசாமல் அதன் காலடியில் உங்களை ஒப்புக்கொடுத்துவிடவேண்டும், நடிகர்கள் இயக்குநர்களிடம் ஒப்புக்கொடுக்கிறார்களே அதுபோல். நான் ஓர் இயக்குநன். என் பங்களிப்பு தேவை என்ற பெயரில் ஏதேனும் செய்ய முற்பட்டால் இப்படித்தான் ஆகும். கல்லைச் சிலையாக்குபவனுக்குத்தான் சிற்பி என்று பெயர். சிலையைப் படிக்கல்லாகச் சிதைப்பவனுக்கு வேறு பெயர்.

அடுத்ததாக, நாவலில் நாயகனும் நாயகியும் தங்கள் சொந்த ஊரை விட்டுச் செல்வதற்கான காரணம் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த ஊரின் வறுமை வெகு நுட்பமாக, படு யதார்த்தமாக நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். நாயகியின் கொலுசை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து நாலைந்து நாட்கள் சாப்பிட்டிருப்பார்கள். அதுவும் கேப்பை மாவு கஞ்சியும் சுட்ட மிளகாய்களும்தான் உணவு. அதுகூடக் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். உள்ளூரில் வேலை எதுவும் இல்லாமல் போய்விட்டிருக்கவே, பக்கத்து டவுனுக்குப் போய் வேலை தேடுவான் நாயகன் கருப்பன்.

இன்னிக்கு வேலை இல்லை நாளைக்கு வா என்று ஒரு ஹோட்டலில் சொல்வார்கள். உங்க அடிமை சாமி… அடிமையோட பொஞ்சாதி, அம்மா யாருமே நேத்திலிருந்து எதுவுமே சாப்பிடலை. நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்னிக்கே செய்யறேன் என்று பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சுவார் நாயகன் (ஆங்கில மூலத்தில் அடிமை – ஸ்லேவ் என்ற நேரடியான வார்த்தையை டேனியல் எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை. முற்போக்கு மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது). இப்படியான நிலையில்தான் கங்காணியின் கழுகுப் பார்வையில் சிக்குவார். திரைப்படத்திலோ இது மேலோட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, வேறு ஊருக்குச் செல்லும் நாயகன் நேராக அங்கிருக்கும் ஒரு ஹோட்டலின் முன்னால் போட்டிருக்கும் பெஞ்சில் போய் ஏறி உட்கார்ந்துவிடுகிறார். உடனே அந்த ஹோட்டல்காரர் அவனைப் போட்டு அடி அடியென்று அடிக்கிறார். அதில் தலித்கள் உட்காரக்கூடாது என்பது நாயகனுக்குத் தெரியாதாம். அதாவது, அவருடைய ஊரில் அப்படியான எந்த வழக்கமும் கிடையாதாம்.

அதன் பிறகும்கூட கங்காணி சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அப்படியே புறப்பட்டுவிடமாட்டான் நாவலின் நாயகன். மனைவி, அம்மா, மாமனார் என அவனுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராகக் கேட்பான். எல்லாருக்குமே பயமாகத்தான் இருக்கும். கடைசியில் ஒரு பல்லி கூரையில் இருந்து கத்தும். அதை நல்ல சகுனமாகக் கருதி புறப்பட ஆயத்தமாவார்கள். நாவலை முழுவதும் படித்து முடித்த பிறகு எங்கு பல்லி சத்தம் கேட்டாலும் நமக்கு ஒருமுறை தூக்கிவாரிப்போடும். அந்த அளவுக்கு அது எளிய மக்களின் அப்பாவித்தனத்தின் மீது வலி மிகுந்த இரக்கத்தை உருவாக்கும்.

நாவலில் நாயகன் தன் அம்மாவை விட்டு விட்டுச் செல்லத் தீர்மானிப்பான். முப்பது நாற்பது வருடங்கள் கூடவே இருந்த தாயை விட்டுப் பிரியும் சோகம் ஒருபுறம்… சுற்றிச் சுற்றி வாட்டும் நிகழ்காலம் ஒரு புறம். நிச்சயமில்லாத எதிர்காலம் இன்னொருபுறம் என அவனுடைய வேதனையானது நாவலில் அணையில் சேகரமாகும் நீர்த்துளி போல் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டே வரும். இவற்றில் எதுவுமே படத்தில் இடம்பெறவில்லை.

முக்கியமாகப் படத்தில் காட்டப்படும் பூர்விக கிராமம் அப்படி ஒன்றும் பஞ்சம் பிழைக்க வேறு இடத்துக்குத் துரத்தும் ஒன்றாக இல்லை. ஊரில் திருமணம் தடபுடலாக நடக்கிறது. கூடை கூடையாகப் பணியாரம், அண்டா அண்டாவாக நெல்லுச் சோறு. இந்த நேரத்தில் ஊர்ப் பெரியவர் ஒருவர் (முழுநேரக் கவிஞர் அண்ணாச்சி விக்கிரமாதித்யன்) இறந்துவிடுகிறார். அந்தச் செய்தி தெரியவந்தால் என்ன செய்வார்கள். எந்தக் கிராமத்திலாவது திருமணத்தை நிறுத்தி வடித்த சோற்றையெல்லாம் வீணாக்குவார்களா? ஒருவேளை திருமணத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பாக இறந்திருந்தால் வேண்டுமென்றால் திருமண நாளைத் தள்ளிவைக்கலாம். திருமணத்தின் அதே நாளில் தாலி கட்டுவதற்கு சிறிது முன்பாக ஒருவர் இறந்தால் யார்தான் என்னதான் செய்யமுடியும்? இது கூட நமக்குப் பெரிய பிரச்னையில்லை. ஒரு கிராமத்தின் வறுமையைக் காட்ட இந்தக் காட்சியா கிடைத்தது.

நாவலில் பூர்விக கிராமத்தில் இருந்து தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் மேற்கொள்ளும் பயணம் மிக அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். போகும் வழியில் ஒவ்வொரு ஊரில் தங்கிக் கொள்வது, உணவுக்கு செய்திருக்கும் ஏற்பாடுகள், வழியில் தென்படும் தெளிந்த நீரோடையில் குளிப்பது இவை எல்லாவற்றையும்விட ரயிலை முதல் முறையாகப் பார்க்கும் கிராமத்தினரின் அனுபவங்கள் நாவலில் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். பெரும் சத்தத்துடன் புகையைக் கக்கியபடி நுழையும் ரயிலைப் பார்த்து மிரண்டு அதில் ஏற பயப்படும் பெண்களில் ஆரம்பித்து ஆரம்பகட்ட உற்சாகம் வடிந்து ரயில் பெட்டியின் வெம்மை தகிக்க ஆரம்பிப்பதுவரை ஒவ்வொன்றையும் துல்லியமாக விவரித்திருப்பார் நாவலாசிரியர்.

பாலா அந்தப் பயணத்தை முற்றாக வெட்டி எறிந்துவிட்டிருக்கிறார். வேறொருவர் தயாரிப்பாளராகக் கிடைத்திருந்தால் அந்தக் கால ரயில், அந்தக் கால தண்டவாளம், அந்தக் கால ரயில்வே ஸ்டேஷன், அந்தக் கால நட்டு போல்டுகள் என மஞ்சக் குளித்திருக்கலாம். சொந்தக் காசாயிற்றே… எனவே, நாவலின் ஆதார ஸ்ருதி பிசகுகிறதே என்ற கவலை சிறிதும் இல்லாமல் ரயில் போர்ஷனை படத்தில் இடம்பெறச் செய்யாமல் விட்டிருக்கிறார். அப்படியாக சாதிப் பாசத்தால் சில சமரசங்கள்… பணப்பாசத்தால் மேலும் சில சமரசங்கள் (என்ன செய்ய… இதையெல்லாம் மீறித்தானே யதார்த்தக் கலையைப் படைக்க வேண்டியிருக்கிறது!)

நாவலில் மூன்று நாட்கள் பஸ்ஸிலும் ரயிலிலும் பயணம் செய்து அடைந்த தேயிலை எஸ்டேட்டை திரைப்படத்தில் 48 நாட்கள் நடந்தே சென்றடைகிறார்கள். இந்தப் பயணத்தை ஆப்ரிக்காவில் இருந்து கறுப்பர்களை வெள்ளையர்கள் பிடித்து இழுத்துச் சென்றார்களே அதற்கு இணையான ஒன்றாகச் சித்திரிக்கிறார் இயக்குநர். போகும்வழியில் நூற்றுக்கணக்கில் இறந்தது, இறந்தவர்களைக் கடலிலும் காடுகளிலும் அப்படியே போட்டுவிட்டுப் போனது என உலகின் மிகப் பெரிய சோகத்தை சற்றே தொலைவில் உள்ள எஸ்டேட்டுக்குப் போகும் வழியில் நடப்பதாகக் காட்டுகிறார். அதிலும் ஒரே கிராமத்தில் இருந்து செல்பவர்கள், வழியில் தங்கள் கிராமத்து நபர் ஒருவர் உடல் தளர்ந்து விழுந்துவிடவே அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள். இத்தனைக்கும் தேயிலைத் தோட்டச் சிறைக்குள் அவர்கள் போய் மாட்டிக்கொள்ளவே இல்லை. இந்த நிமிடத்தில்கூட கங்காணியின் உண்மை சொரூபம் தெரிந்து பூர்விக கிராமத்துக்கே அவர்கள் திரும்பியிருக்க முடியும். நாவலில் தேயிலைத் தோட்டத்துக்குப் போய்ச் சேரும் வரை கங்காணியின் முழு கொடூர முகம் தெரியவராது.

இரண்டாம் பாகத்தின் ஆரம்ப காட்சிகளில் பெருமளவுக்கு நாவலை ஆரத் தழுவி இருப்பதால் படத்தின் அருமையான நிமிடங்களாக அவை தேறிவருகின்றன. இருந்தும் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் ஒருக்கும் ஒரு இளம் பெண்ணுடன் பருவ வயதினனான நாயகனை ஒரே வீட்டில் தங்க வைப்பது போன்ற பாலாவின் அசட்டுத்தனங்கள் அந்தப் பகுதியிலும் ஆங்காங்கே இடம்பெறவே செய்கின்றன.

நாவலில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஊர் திரும்ப வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடல் நலம் குன்றியதாலும் செட்டியாரால் கூடுதல் கடன் பொய்யாக எழுதப்பட்டதாலும் எதிர்பார்த்த பணம் கையில் சேர்ந்திருக்காது. எனவே, எஸ்டேட்டிலேயே மேலும் ஓரிரு வருடங்கள் தங்கி பணம் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என்று தீர்மானிப்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது, எப்படியாவது தப்பித்துப் போய்விடுங்கள்… இங்கே தங்காதீர்கள் என்று நம் மனது கிடந்து துடிக்கும். ஆனால், அவர்களோ கூண்டைத் திறந்துவிட்டாலும் வெளியில் வந்து சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, அமைதியாகக் கூண்டுக்குள் மீண்டும் நுழைந்து கதவை மூடிக்கொள்ளும் அப்பாவிக் கிளிகளைப் போல் அங்கேயே தங்க முடிவெடுத்துவிடுவார்கள். படத்தில் அப்படியான காட்சி இடம்பெறவில்லை.

அதோடு, ஆங்கிலேய துரைகள் வெளிப்படையாக எல்லாரும் பார்க்கும்போதும் கூலிப் பெண்களிடம் லேசாக சில்மிஷம் செய்வது உண்டு என்றாலும் படுக்கைக்கு அழைப்பது என்பது மிகவும் நுட்பமாகவே செய்யப்படும். ஏற்கெனவே துரையின் வழிக்கு வந்திருக்கும் பெண் மூலம் புதிய பெண்ணுக்கு வலைவிரிக்கப்படும். துரையின் வீட்டைப் பெருக்கி சுத்த்ம் செய்துவிட்டு வந்துவிடுவோம் என்று புதியவளை அழைத்துச் செல்வாள். அங்கு போன பிறகு, இரவு உணவையும் சமைத்துவைத்துவிட்டு வா, நான் போகிறேன் என்று சொல்வாள். இன்னொரு ஆணுக்கு சமைத்துப் போடு என்ற ஒற்றை வாக்கியம் ஆழமான பொருள் பொதிந்தது. நுட்பமான வெளிப்பாடு, நாசூக்கு என்பதெல்லாம் எளிய மக்களுக்கு அந்நியமான ஒன்றல்ல. அவர்களுடைய வாழ்க்கையிலும் அது ஏராளம் உண்டு. இப்படியானவையெல்லாம் எளிய பார்வையாளருக்குப் புரியாது என்று சொல்லும் ஒரு படைப்பாளியின் ரசனை உணர்வைத்தான் நாம் இங்கு சந்தேகிக்க வேண்டும். இவை எல்லாம் நாவலில் அற்புதமாக இடம்பெற்றிருக்க படமோ தட்டையாகத் திரையில் விரிகிறது.

வெள்ளைக்கார துரைமார் கூலிப் பெண்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோலவே, துரையம்மாக்களும் வாட்ட சாட்டமான சிவந்த நிற கூலித் தொழிலாளர்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கணவன் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் இருக்கும்போது கணவனின் தம்பியை உடலுறவுக்கு அழைக்கிறாள் ஒருத்தி. தன் மனைவியை துரைக்கு விருந்தாக்கி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் இடைநிலைப் பணியாளர்கள் என வாழ்வின் பல்வேறு பக்கங்கள் நாவலில் போகிற போக்கில் விரிகின்றன.

தங்கள் குதிரைகளுக்கான லாயத்துக்கு சிமெண்ட் தரை போட்டு அருமையாகக் கட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்களை படு மோசமான சூழலில் வாழ வைக்கிறார்கள். வெள்ளைக்காரர்களுக்கு முன்பாக இந்தியர்கள் யாரும் செருப்பு போடக்கூடாது, குடை பிடிக்கக்கூடாது என்ற கெடுபிடிகள். பணி நேரத்தில் இழைக்கப்படும் கொடுமைகள்… உடல் நலம் மோசமாக இருந்தாலும் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத அவலம், பாதி குணமான உடம்புடன் பணி செய்ய வேண்டிய கொடூரம் என நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வேதனைகளை முகத்தில் அறைந்தாற்போல் சித்திரித்திருக்கிறது.

மழைக்காலத்தில் வெள்ளம் வருகிறது. ஆற்றுக்குக் கரையோரமாக இருக்கும் லைன் வீடுகளில் இருப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவர்கள் எல்லாம் கரையில் தவித்தபடி நின்றுகொண்டிருக்க ஒரு சிறுவனும் சிறுமியும் அடித்துச் செல்லப்படுவதும் அவருடைய அம்மா கதறி அழுவதும் மற்றவர் அவரைத் தடுத்துப் பிடிப்பதும் நாவலில் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டிருக்கும். படத்தில் இவை எதுவுமே கிடையாது.

இவையெல்லாவற்றையும்விட படத்தை ஒரேயடியாகக் காலி செய்வது தலித் கிறிஸ்தவ டாக்டரும் (டாக்டர் பரிசுத்தம்) அவருடைய வெள்ளைக்கார மனைவி கதாபாத்திரமும்தான். கிறிஸ்தவ மத மாற்றச் செயல்பாடுகள் என்பது இரண்டு வடிவங்களைக் கொண்டது. ஒரு சில பாதிரியார்கள் ஆத்மார்த்தமாக சேவை மனப்பான்மையுடன் கைகளில் சிலுவையைச் சுமந்தபடி உலகெங்கும் பயணித்தார்கள். சக மனிதர்பால் அவர்கள் கொண்ட அன்பே அவர்களை அப்படிச் செயல்பட வைத்தது. அவர்களுடைய சேவை என்பது புல் நுனியில் சேகரமாகும் பனித்துளியைப் போன்றது. ஆனால், கிறிஸ்தவ நீரோடை என்பது அத்தகைய பனித்துளிகளால் மட்டுமே நிரம்பியது அல்ல. அது, பல்வேறு அரசியல், பொருளாதாரத் தந்திரங்களின் கழிவுநீரும் கலந்தது. இந்த இரண்டு அம்சங்களில் ஏதேனும் ஒன்றை மட்டுமே சித்திரிப்பது பெரும் தவறு. அந்த ஏதோ ஒன்றையும் படு கேவலமாகச் சித்திரிப்பது மிகப் பெரிய தவறு. இந்தப் படத்தில் அதைத்தான் பாலா செய்திருக்கிறார்.

மலேரியா நோயினால் தோட்டத் தொழிலாளிகள் ஒருவர் பின் ஒருவராக இறந்து விழுந்துகொண்டிருக்க, அந்த மருத்துவ தம்பதியோ மதம் மாற்றுவதற்குக் கிடைத்த நல் வாய்ப்பாக அதைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்தக் காட்சிகளின் செயற்கைத்தன்மை படத்தின் ஒட்டுமொத்த உணர்வை கீழிறக்கிவிடுகின்றன.

அதோடு, நிஜத்தில் இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு மூல காரணமாக நாவலை எழுதிய டேனியலின் சாயலில் அந்தக் கேவலமான மருத்துவர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1925-ல் மக்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நாவலில் விவரித்திருந்த டேனியல் உண்மையில் 1940-ல்தான் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருப்பார். எனவே, படத்தில் 1940-ல் வரும் மருத்துவராகக் காட்டப்பட்டிருப்பவர் டேனியலின் சாயலில் படைக்கப்பட்டவர்தான் என்று நம்பமுகாந்தரமிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாவலில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்களில் சிலவற்றை அப்படியே திரைப்பட மருத்துவரும் பேசுகிறார். இது கிட்டத்தட்ட டேனியல்தான் அந்த மருத்துவர் என்று உறுதிப்படுத்தும்விதமாகவே இது இடம்பெற்றிருகிறது. அதிலும் அந்த டாக்டர் பரிசுத்தத்துக்கு அம்பேத்கர் போன்ற உடை அணிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

உண்மையில் டேனியல் இந்த உருக்கமான நாவலை எழுதியதோடு நிற்காமல், தோட்டத் தொழிலாளர்களுக்காகத் தென்னிந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம் என்ற ஒன்றை அமைத்து நினைத்தே பார்த்திராத பல உரிமைகளை வென்றெடுத்துத் தந்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரின் சாயலில் படைக்கப்பட்ட கதாபாத்திரம் மத மாற்றத்துக்காக நாக்கைத் தொங்கப் போட்டபடி அலைந்ததாகக் காட்டியிருப்பது மிகவும் தவறு. ஒரு கலைஞனாக இருந்திருந்தால் பாலா நிச்சயமாக இப்படிச் செய்திருக்கமாட்டார். அதனால்தான், நான் கடவுளிலும் பிதாமகனிலும் வைத்திருந்த கதாநாயக சாகச க்ளைமாக்ஸை இந்தப் படத்தில் வைக்காமல் இருந்ததற்காக பாலாவை பாராட்ட முடியாமல் போய்விட்டிருக்கிறது.

இந்த இடத்தில் பாலாவுக்கு என்ன சிக்கல் வந்திருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். நாவலில் ஒரு மருத்துவர் கதாபாத்திரம் வருகிறது. அவர் தோட்டத்தொழிலாளிகளின் வேதனையைப் பார்த்து மனம் வருந்தி சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கிறார். நாவலில் வரும் டாக்டர் பெரும் புரட்சியாளராகவோ பெரும் மீட்பராகவோ எல்லாம் சித்திரிக்கப்படவில்லை. நிஜத்தில் டேனியல் அப்படியான செயலைச் செய்திருக்கிறார் என்றாலும் நாவலில் வரும் டாக்டர் சில அடிப்படை சீர்திருத்தங்களை மட்டுமே செய்கிறார். ஒருவகையில் அந்த மருத்துவர் வந்த சிறிது காலத்துக்குள்ளேயே நாவல் முடிவடைந்துவிடுகிறது. எனவே, அவர் தான் செய்த சாதனைகளை நாவலில் விரிவாக இடம்பெறவைக்கவில்லை.

படத்தைப் பொறுத்தவரையில் பாலா நாவலுக்கு இணையான வேறொரு அழுத்தமான க்ளைமாக்ஸை எழுதிவைத்திருக்கிறார். கதாநாயகன் தோட்டச் சிறையில் இருந்து தப்பிக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்க பூர்விக கிராமத்தில் இருக்கும் நாயகி அவனைத் தேடி அங்கு வந்து சேர்வதாக கதையை முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் பாலா செய்த உருப்படியான ஒரே விஷயம் அதுமட்டுமே. நரகக் குழியில் வந்து விழுந்துவிட்டாயே அங்கம்மா என்ற நாயகனின் அலறல் தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் இடம்பிடிக்கும் காட்சியே. இந்த க்ளைமாக்ஸ் இத்தனை வலுவாக இருக்கவேண்டுமென்றால், மருத்துவ கதாபாத்திரம் எந்த நன்மையையும் செய்ததாகக் காட்டமுடியாது. அப்படிக் காட்டினால், முழுவதும் இருள் நிரம்பிய வாழ்க்கை என்ற சித்திரம் இடம்பெற முடியாமல் போய்விடும். அதே நேரத்தில் அந்த மருத்துவரைக் கொடூரமானவராகவும் காட்ட முடியாது. நிஜத்தில் அவர் செய்த சாதனைகளே அதற்குச் சாட்சி. நல்லவராகவும் காட்ட முடியாது… கெட்டவராகவும் காட்டமுடியாது… இதைவிடச் சிறந்த க்ளைமாக்ஸையும் யோசிக்க முடியாது என்ற இக்கட்டில் சிக்கிய பாலா அந்த மருத்துவர் கதாபாத்திரத்தை கோமாளியாகச் சித்திரித்திருக்கிறார். இது அவருடைய கலைத் திறமையின் பலவீனத்தைக் காட்டுகிறது.

paradesi-3

உண்மையில் இந்தப் பிரச்னையை அவர் எப்படித் தீர்த்திருக்கவேண்டும்? அந்த நல்ல மருத்துவரை கங்காணியும் துரைகளும் சேர்ந்து வேறு இடத்துக்குத் துரத்திவிடுகிறார்கள் என்று காட்சி அமைத்திருக்கலாம். நாவலிலேயே அதற்கான குறிப்புகள் இருக்கின்றன. வெள்ளைத் துரைகளுக்கு நல்ல மருத்துவரை வைத்து தொழிலாளர்களுக்குச் சிகிச்சை தர ஏற்பாடு செய்வதில் உடன்பாடு இருந்திருக்கவில்லை. கங்காணியும் வேறு சில கதாபாத்திரங்களும் புதிய மருத்துவரின் வருகையால் அதிருப்தி அடைந்து அவர் மீது பொய்க் குற்றம் ஏதாவது சுமத்தி அங்கிருந்து விரட்டிவிட திட்டமிடுகிறார்கள். இதையெல்லாம் படத்தில் வலுவாகக் கொண்டுவந்து அந்த மருத்துவரை இடமாற்றம் செய்திருக்கலாம். அப்படியாக, மெள்ளக் கறுத்துக் கொண்டு வரும் மேகக்கூட்டம் கொடுங்காற்றினால் கலைந்து போய்விடுவதுபோல் ஒரு சிறிய ஆசுவாசத்தைத் தந்த மருத்துவரின் வருகை ஏமாற்றத்துடன் முடிவதாகக் காட்டியிருக்கலாம். அவர்கள் ஒரு மருத்துவரின் வருகையை பெரும் விடுதலையாக நினைத்துக் கொண்டிருக்க, அது மேலும் ஒரு படி அவர்களைக் கீழே தள்ளிவிடுவதாக அவர்களுடைய வேதனையை இன்னும் அதிகரித்துக் காட்டவே செய்யும். க்ளைமாக்ஸுக்கு கூடுதல் கனம் கிடைக்கவே செய்யும். ஆனால், பாலா அப்படி சிந்தித்திருக்கவில்லை.

அல்லது மதமாற்றத்தின் மீதான வலுவான விமர்சனத்தை முன்வைக்க விரும்பினால், அந்த மருத்துவரின் சேவை மனப்பான்மைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குறுகிய மனோபாவத்தை கலை அழகுடன் அதாவது இயல்பாகச் சித்திரித்திருக்கவேண்டும். இந்த இரண்டும் செய்யாமல் அந்த மருத்துவரைக் கோமாளியாக்கியதன் மூலம் படத்தை மிகவும் கீழிறக்கிவிட்டிருக்கிறார்.

பரதேசி திரைப்படத்துக்கான டீஸரையும் அதற்கு முன்பாக வெளியான படத்துணுக்குகளையும் பார்த்தபோது மனிதர்களை வைத்து வேலை வாங்குவதில் பாலா கில்லாடி என்பது நன்கு வெளிப்பட்டிருந்தது. பாலாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் மட்டும் கிடைத்தால் ஓர் அருமையான படத்தை அவரால் தந்துவிடமுடியுமே என்ற ஆதங்கமே படத்தைப் பார்த்து முடித்ததும் ஏற்பட்டது.

0

பிரபல கொலை வழக்குகள் நூல் வெளியீடு – அனைவரும் வருக!

 

 

 

invite

 

கலிகாலமடா சாமீ!

escalator“எங்க காலத்துல குழவியத்தான் சுத்துவோம். இப்ப என்னடான்னா உரலும் சேர்ந்து சுத்தறதே….! உரல் ஒரு பக்கம்; குழவி ஒரு பக்கம் சுத்தற கூத்த இப்பத்தான் பாக்கறேன். கலி காலங்கறது சரியாத்தான் இருக்குடீம்மா!”

தானியங்கி அரவை இயந்திரம் வந்தவுடன் ஒரு பாட்டி இப்படி சொல்லி மோவாக்கட்டையில இடிச்சுடுண்டு போனாளாம்.

ஆரம்பத்தில் வியப்பாக இருந்தாலும் போகப்போக பழகிவிட்டது.

துணி துவைக்கற இயந்திரம் முதன்முதலில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது வாராவாரம் இந்த இயந்திரம் தயாரிக்கிற நிறுவனத்திலிருந்து ஒருவர் வந்து இயந்திரத்தின் வேலை திருப்திகரமாக இருக்கிறதா, துணிகளை நன்றாக அலசுகிறதா? நன்றாக பிழிகிறதா? இன்னும் என்னவெல்லாம் அந்த இயந்திரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து எடுப்பார். பாவம், அவர் தொழில் கேள்வி கேட்பது.

ஒருமுறை என் கணவர் பதில் சொன்னார்: ‘துணி துவைத்து, உலர்த்தி, இஸ்திரியும் பண்ணி வெளியே வந்தால் நன்றாக இருக்கும். அதுவும் ‘அப்பா துணிகளை (என் கணவரின்) முதலில் வெளியே தள்ளு’ என்று ப்ரோக்ராம் செய்யும்படி இருந்தால் நன்றாக இருக்கும்’

என் அம்மா சொல்வாள்: ‘உங்காத்துக்கு துணி மடிக்கற மெஷின் தான் வேணும்ன்னு.’ எங்க வீட்டுக்கு வந்தால் அம்மாவோட வேலை துணி மடிக்கறது! அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்கு!

சரி இப்போ எதுக்கு பழங்கதை என்கிறீர்களா? சொல்லுகிறேன் என் சோகக்கதையை.

இப்ப வந்திருக்கிற தானியங்கி இயந்திரங்களில் என்னை ரொம்பவும் பயமுறுத்துவது நகரும் படிக்கட்டுகள் அதாங்க, எஸ்கலேட்டர்!

அதென்னமோ அதைப் பார்த்தாலே நானும் (அது மேல ஏறாமலேயே) நகருவது போல பிரமை! முதலில் தட்டையாக வெளி (எங்கிருந்து?) வந்து பிறகு மடிந்து மடிந்து மேலே போவது பார்க்கவே ஒரு மாதிரி இருக்கும்.

எத்தனை மாடிகள், எத்தனை படிக்கட்டுகள் இருந்தாலும் பரவாயில்லை ஏறிடுவேன். இந்த நகரும் படிக்கட்டுல ஏற ரொம்ப பயம். அதனாலேயே பிள்ளையோ, பெண்ணோ ‘மால்’ போலாமான்னா வேண்டாம்ன்னு சொல்லிடறேன். கட்டாயம் போகவேண்டும் என்கிற அவசியம் ஏற்பட்டால் படிக்கட்டுகளைத் தேடிப் பிடித்து ஏறுவேன்! சின்னஞ்சிறுசுகள் எஸ்கலேட்டர்ல போகும் போது, ‘நான் எத்தனை ‘fit’ பாருங்கள், படி ஏறுகிறேன்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு படி ஏறுவேன். வேறு என்ன செய்ய?

இன்னொன்றும் சொல்லவேண்டும். எனக்கும் மாடிப் படிகளுக்கும் அப்படி ஒரு ராசி. நான் எங்கு போனாலும் எங்கள் வீடு மாடியில்தான். இப்போது இருக்கும் வீட்டுக்கு வருமுன் நாங்கள் இருந்த வீடு இரண்டாவது மாடியில். நான் ஆங்கில வகுப்புகள் எடுத்தது 3 மாடியில். சில மையங்களில் 2வது மாடியில் வகுப்புகள் இருக்கும்.

யார் வீட்டுக்காவது போனேன் என்றால் அவர்கள் மாடியில் இருப்பார்கள். ‘நாங்க கீழ தான் இருந்தோம். இப்போதான் மாடிக்கு குடி பெயர்ந்தோம்’ என்பார்கள், என்னைப் பார்த்தவுடன்!

ஆறு மாதங்களாக யோகா வகுப்புகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் – 3 வது மாடியில். தினமும் நான் ஏறி இறங்குவது மொத்தம் 150 படிகள்!

இவ்வளவு இருந்தும் எஸ்கலேட்டர் என்றால் பயம் தான்!

எல்லோரும் எஸ்கலேட்டர்-ல ஏறி ஆடாம அசையாம மேல போறத பார்க்கும் போது ‘ச்சே! எனக்கு மட்டும் என்ன பயம்?’ ன்னு தோணும். சில வீரதீரப் புலிகள் நகரும் அதன் மேல் நடந்து போவார்கள்.

மனதை ரொம்பவும் தயார் பண்ணிப்பேன். அடுத்தமுறை பயப்படாமல் ஏறிடணும் என்று. ‘ஒண்ணுமேயில்லை. நீ ஒரு காலைத் தூக்கி வை. அதுவே நகர ஆரம்பிச்சுடும்!’ என்று என்னுடன் வருபவர்கள் சொல்லுவார்கள். அதுதான், அது நகருவதுதான் எனக்கு அலர்ஜி!

சென்னை சென்ட்ரல் மாலில் என் அக்கா அனாயாசமாக அதில் ஏறிப்போவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நான் கீழேயே நின்று விட்டேன். அவள் பாவம், நான் பக்கத்தில் வருவதாக நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டு போனவள் திரும்பிப் பார்த்தால், நான் கீழேயே நகரும் படிக்கட்டை பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டே நிற்கிறேன்!

அக்கா மேலிருந்து (சத்தமாக) சொன்னாள்: ‘ஒரு காலை தூக்கி வை. அவ்வளவுதான்.’ அதுதானே வரவில்லை எனக்கு! நானும் என் காலுக்கு கட்டளை இடுகிறேன். அது இருந்த இடத்திலேயே ஆணி அடித்தாற்போல நின்று கொண்டிருக்கிறது!

சரி இவ்வளவு சொல்லுகிறார்களே, எஸ்கலேட்டரின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு முயற்சி செய்யலாம் என்று கையை அதன் மேல் வைத்தேன். ஐயையோ! என் கைமட்டும் மேலே மேலே…கால்கள் நான் நின்ற இடத்திலேயே!

அடச்சே! கைப்பிடியாவது ஒரே இடத்தில் நிலை நிற்காதோ? என்ன கலிகாலமாடா சாமீ! உரலும், குழவியும் தான் நினைவுக்கு வந்தன!

போனவாரம் ஒரு மால் போனோம். முதலிலேயே என் மகளிடம் சொன்னேன்: ‘மாப்பிள்ளையும் வருகிறார். எஸ்கலேட்டர் அருகில் போய் ஒரு ‘சீன்’ போட வேண்டாம். மாடிப்படியில் ஏறி வருகிறேன்’ என்று. அவள் கேட்கவில்லை. இன்று ‘உன்னை எஸ்கலேட்டரில் ஏற்றிவிட்டு விட்டு மறுவேலை’ என்றாள்.

வழக்கம்போல எஸ்கலேட்டர் அருகில் போய் அதையே உற்றுப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

‘காலை எடுத்து வைம்மா!’

எங்கள் பின்னால் சிலர் வந்தனர்.

‘இரு, இரு, அவர்கள் போகட்டும்’ – தைரியம் வர எனக்கு கொஞ்ச நேரம் வேண்டுமே!

‘அவர்கள் போயாச்சு! அப்பா, என் கணவர் இருவரும்  போயாச்சு. வா நீ!’

ஏ! காலே! நீ எங்கிருக்கிறாய்?

எத்தனை உசுப்பினாலும் என் கால்களில் அசைவே இல்லை.

திடீரென்று என் அருகில் ஒரு பெண்மணி. என் வலதுகையை சுற்றி தனது  இடது கையால் கெட்டி (ஆ! வலிக்குது!) யாகப் பிடித்துக் கொண்டார்.

‘கால எடுத்து வையுங்க!’ என்றார்.

அவர் மிரட்டிய மிரட்டலில் காலை எடுத்து வைத்தேன். எஸ்கலேட்டர் என்னை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டது! நடந்ததை உணர கொஞ்ச நேரம் ஆயிற்று எனக்கு.

அட! நான் எஸ்கலேட்டரில் போய்க் கொண்டிருக்கிறேன்! கடைசி படி வந்தவுடன், ’உம், இப்போ காலை வெளியே வையுங்க!’ இன்னொரு மிரட்டல்!

‘தேங்க்ஸ், நன்றி, தன்யவாத…’ எல்லா மொழிகளிலும் நான் சொல்ல, அவர் கடமையே கண்ணாக அடுத்திருந்த எஸ்கலேட்டரில் இறங்கிப் போய் விட்டார்.

அப்பாடி! நாங்கள் தேடி வந்த கடை எங்கே? என் மாப்பிள்ளை சொன்னார்: ‘இன்னும் ஒரு மாடி ஏறவேண்டும்!’

‘கடவுளே…!’

இந்தமுறை என் பெண் ஒரு பக்கம், என் கணவர் மறுபக்கம் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த ‘bouncer’ பெண்மணி இருக்கிறாரா என்று.

‘ஏறுங்க! அவர் குரல் காதில் ஒலிக்க ஏறிவிட்டேன்.

‘அம்மா ஏறியவுடன், எஸ்கலேட்டர் வேகம் குறைந்து விட்டது பாரு!’ என் கணவரின் ஜோக் கூட என்னை சிரிக்க வைக்கவில்லை. அத்தனை சீரியஸ்ஸாக தலையைக் குனிந்துகொண்டே வந்தேன்!

அடுத்த மாடியும் எஸ்கலேட்டரிலேயே!

ஒருவழியாக ஷாப்பிங் முடிந்தது. கீழே போக வேண்டுமே! எனது பயம் மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. என் கை மூலம் என் பயத்தை உணர்ந்த என் பெண், ‘இப்போ லிப்ட்டில இறங்கலாம், கவலைப் படாதே!’ என்றாள். இன்னிக்கு எஸ்கலேட்டர் ஏற்றம் கத்துக்கோ. அடுத்தமுறை இறக்கம் சொல்லித் தரேன்…!’ என்று பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள். நானும் எஸ்கலேட்டர் பயம் தெளிந்து அவளது சிரிப்பில் கலந்து கொண்டேன்.

0

உங்களுக்கு நேர்ந்த சுவையான, சுகமான, முக்கியமான அனுபவங்கள் தமிழ்பேப்பரில் வெளிவரவேண்டுமானால் ‘எனது தர்பார்’ என்று தலைப்பிட்டு சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். அனுப்பவேண்டிய முகவரி :  editor@tamilpaper.net – ஆசிரியர்.

அரை உண்மைகளின் அபாயம்

images (3)லயோலா கல்லூரி மாணவர்களின் ‘தன்னெழுச்சியான’ போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகமெங்கும் புரட்சி அலை பொங்கி எழ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே கொந்தளித்துக் கொண்டிருந்த இணையவெளியைத் தொடர்ந்து இப்போது ஊடக வெளியும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ், திமுகவை தேர்தலில் தோற்கடிக்க இந்த ‘எழுச்சி’ உதவும் என்பதால், அதிமுக புன்முறுவலுடன் இந்த போராட்டங்களை மறைமுகமாக ஊக்குவித்துவருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் கையை மீறி இந்தப் போராட்டம் போக அனைத்து வாய்ப்புகளும் உண்டு. இந்தப் போராட்டத்தின் சில கோரிக்கைகள்: இலங்கை அரசை சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். வெறும் போர்க்குற்றம் அல்ல; இனப்படுகொலை செய்த அரசு என அதற்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். இந்தியா இலங்கையுடன் அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும் இந்தப் பேரழிவில் முழு பங்கு உண்டு. தமிழகத்துக்கு என்று தனியாக வெளியுறவுத்துறை அமைக்கப்படவேண்டும். இதையெல்லாம் செய்யவில்லையெனில் நாங்கள் வரி கட்டமாட்டோம்.

இந்தத் ‘தன்னெழுச்சியான’ கோரிக்கைகள் மாணவர்களுடையதுதான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக சில மாணவத்தனமான கோரிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன. மற்றபடி இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம், இலங்கை செய்தது இனப்படுகொலை. இந்தியாவும் அதற்கு முழு உடந்தை. இந்த இரண்டு விஷயங்களைத் தமிழக மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் என்பதுமட்டுமே.

மிகவும் உணர்வுபூர்வமான இந்தப் பிரச்னையில் தமிழகத்தில் இப்போது ஒருவித பாசிச மாற்று அமைப்பு கட்டமைக்கப்பட்டுவருகிறது. இலங்கைப் பிரச்னையில் தனி ஈழத்துக்குக் குறைவாக யார் பேசினாலும் அவர்கள் தமிழினத் துரோகியே என்ற நிலையை மெள்ள உருவாக்கிவருகிறார்கள். இலங்கை அரசு மிக மோசமான குற்றங்களை இழைத்திருப்பது உண்மையே. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கும் ஒருவர் வேறு சில விஷயங்களையும் கட்டாயம் பேசியாக வேண்டும்.

இலங்கை ஈழப் பிரச்னை என்பது நீண்ட நெடும் வரலாறைக் கொண்டது. பல்வேறு ஊடுபாவுகள் கொண்டது. ஈடுபட்ட அனைத்து தரப்புகளின் கைகளிலும் ரத்தக் கறை உண்டு. ஆனால், அவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒற்றை குற்றவாளி (சிங்கள-இந்திய கூட்டணி) மட்டும் கட்டம் கட்டப்படுவதற்கான சர்வதேச அரசியல் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விடுதலைப் புலிகள் செயல்பட்டுவந்த காலகட்டத்தில் அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி இலங்கைக்கு ஆதரவு அளித்துவந்த அமெரிக்க அரசு இன்று யோக்கியன் போல் நீதிபீடத்தில் ஏறி அமர்ந்து இலங்கையைக் குற்றம்சாட்டுகிறது. அதோடு நின்றுவிடாமல் இந்திய அரசையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தந்திரத்தையும் சர்வதேச அரசியல் சக்திகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக மோசமாக இந்தச் சதி வலையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இது தொடர்பான முழுச் சித்திரமும் கிடைக்கவேண்டுமென்றால், சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவேண்டும். பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷாகப் பிரித்து மிகப் பெரிய சாதனையைச் செய்திருந்தார் இந்திராகாந்தி. இந்திய ராணுவத்தினரை தெய்வமாகத் தொழும் பங்களாதேஷிகள் இன்றும் உண்டு (அந்தப் போரில் அப்படி ஒரு ரட்சகனாக இருந்த இந்திய ராணுவம் இன்று என்ன நிலையை அடைந்திருக்கிறது… இதற்கு யார் காரணம் என்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை).

கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாகப் பிரித்துவிட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் பஞ்சாபை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்ற பெயரில் தீவிரவாத சக்திகள் தூண்டிவிடப்பட்டன. அதை அடக்க இந்திரா எடுத்த முயற்சிகள் அவருடைய உயிருக்கு உலை வைத்தன. அதோடு பஞ்சாப் பிரச்னையும் மெள்ள முடிவுக்குவந்தது (மிஷன் ஆல்ரெடி அக்கம்ப்ளிஸ்ட்). ஏற்கெனவே, மூத்த இளவரசர் சஞ்சய் காந்தி ‘விமான விபத்தில்’ கொல்லப்பட்டிருந்தார். அடுத்ததாக, ஆட்சிக்கு வந்த இளைய இளவரசர் ராஜீவ் காந்தி தன் அன்னையின் வழியில் இலங்கை விஷயத்தில் ராஜ தந்திரத்துடன் செயல்பட்டு சர்வதேச அளவில் புகழ் பெற வழிநடத்தப்பட்டார்.

கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்திய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்ததால் தனிநாடாக உருவாக்குவது எளிதான செயலாக இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்; அவர்களுக்கு மாநில சுய ஆட்சி பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் நியாயமான நோக்கம். எனவே, ராஜீவ்காந்தி அந்த உடன்பாட்டுக்கு ஆத்மார்த்தமாக முயன்றார். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் அமைதிப்படை என இந்திய ராணுவத்தை அங்கு அனுப்பினார். தனி ஈழம் என்பது மிகவும் நியாயமற்ற கோரிக்கை என்பதுதான் இந்தியாவின் கொள்கை. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரும்பாலான நாடுகளின் தீர்மானமும் அதுவே.

ஆனால், இலங்கை இந்த இடத்தில் தன் நரித்தனத்தை காட்டியது. இந்தியாவை இந்த போரில் சிக்க வைக்க வேண்டும் என்ற சர்வதேச தந்திரத்தின் அங்கமாக அது இந்திய அமைதிப் படையை தன் நாட்டுக்குள் முதலில் அனுமதித்தது. ஆனால், அடுத்தகட்டமாக தன்னுடைய இறையாண்மைக்கு இழுக்காகிவிட்டது என்ற போர்வையில் இந்திய ராணுவத்தைத் துரத்தி அடிக்கத் தீர்மானித்தது. தாற்காலிக உடன்பாடாக விடுதலைப் புலிகளுடன் நட்புறவு கொண்டு, இந்திய ராணுவம் செய்தவற்றை விட மிக அதிகமான குற்றச்சாட்டுகளை அதன் மீது சுமத்தி அதை அங்கிருந்து அகற்றினார்கள். அடுத்த தேர்தலில் ராஜீவ் வென்றுவிடுவார் என்ற நிலை ஏற்பட்டபோது, மீண்டும் இந்திய அமைதிப் படையை அனுப்பிவிடுவாரோ என்ற பயத்தில், விடுதலைப் புலிகள் ராஜீவையும் அப்பாவிக் காவலர்களையும் இந்திய மண்ணில் கொன்றார்கள். அதுவரை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் ஆதரவாக இருந்த தமிழக மாநிலக் கட்சிகளும் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு எதிர்நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மூன்று ‘எதிர்பாராத’ மரணங்களைத் தொடர்ந்து அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற சோனியாவின் மீது ‘விதிவசமாக’ ஆட்சிப் பொறுப்பு திணிக்கப்பட்டது. (முன்னாள்) இந்தியப் பிரதமரைக் கொன்றதற்காகவும் தமிழகத்தில் பிரிவினை சக்திகள் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு விமான, கடல் சார்ந்த படைகளின் உதவியைத் தந்தது. முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை ஒழிக்கத் தந்த இந்த உதவியானது இலங்கையில் நடந்த இன்ன பிற வன்முறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு இன்று இந்தியாவும் போர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை இந்தியா மீதும்கூட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஏற்கெனவே ஆரிய திராவிட கதைகள் வேறு இங்கு வலுவாக வேருன்றித்தான் இருக்கின்றன.

இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது என்பது போன்ற வெளிப்படையான காரணங்களில் ஆரம்பித்து, ராஜிவ் கொல்லப்பட்டபோது அருகில் எந்த காங்கிரஸ் தலைவரும் இல்லாமல் போனது எப்படி? சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய வீடியோ எப்படி மாயமாக மறைந்தது என்ற விடைதெரியாத கேள்விகள் வரை பல காரணங்கள் இருக்கின்றன. எனவே, இந்தியா கடைசிவரை இலங்கைக்கு சாதகமாகவே நடந்துகொள்ளும். சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மனங்களிலும் இந்தியா மீதான மதிப்பு மேலும் குறையவே செய்யும்.

இப்படியான சூழலில் லயோலா கல்லூரி மாணவர்கள் ‘தன்னெழுச்சியாக’ போராட்டத்தை மூன்று மிக அபாயகரமான நோக்கங்களைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்கள். முதலாவதாக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. கிழக்குப் பகுதி தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் என பெரும்பான்மையான தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களே. விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் மட்டும்தான் இலங்கை ராணுவம் தன் தாக்குதலை நிகழ்த்தியிருந்தது. கொழும்புவிலும் பிற இலங்கையின் பகுதிகளிலும் ஈழத்தைவிட மிக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இப்போதும் வசித்து வரத்தான் செய்கிறார்கள். இனப்படுகொலை என்றால் அவர்களும் சேர்த்தே கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், இலங்கை அரசு அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

இரண்டாவதாக, இந்தப் போரில் விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்கள் குறித்து சிறு குறிப்பு கூடக் கிடையாது. பொய்யைவிட அரை உண்மைகள் மிக ஆபத்தானவை. இலங்கை – ஈழப் பிரச்னையில் இலங்கை அரசு எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட்டதோ அதற்கு சற்றும் குறையாத அட்டூழியங்களை விடுதலைப் புலிகள் இயக்கமும் செய்து வந்திருக்கிறது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் யார் ஆண்டது… அதற்கு முன் யார் ஆண்டது என்பதெல்லாம் ஒருவகையில் நிரூபிக்க முடியாத உண்மைகள். நவீன அரசு எப்போது எந்த ஒப்பந்தத்தின் பேரில் உருவாகிறதோ அதன் அடிப்படையில்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கவேண்டும். சேர சோழ பாண்டியர்களின் போர்களால் நிறைந்ததுதான் தமிழக சரித்திரமும். நாளையே மதுரையை எங்களுக்குப் பிரித்துக்கொடு என்று பாண்டியர்கள் போராடினால் தமிழ் இறையாண்மை அரசு அவர்களை ஒடுக்கத்தான் செய்யும். தங்களுடைய நலன்கள் போதிய அளவுக்கு கவனிக்கப்படவில்லை என்று கருதும் பிரிவினர் தங்கள் எதிர்ப்பை ஆதி முதல் அந்தம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி உரிமைகளை வென்றெடுக்கத்தான் முயற்சி செய்யவேண்டும்.

கேவலம் ஒரு கருத்துக் கணிப்பில் தனக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விஷயத்தை வெளியிட்ட அற்ப காரணத்துக்காக மூன்று தமிழ் அப்பாவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தையும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு பேருந்தை எரித்து தமிழ் மாணவிகளைக் கொன்றவர்களையும் இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. இவ்வளவு ஏன், சாதிப் பிரச்னைகளில் கொல்லப்படுபவர்கள் எல்லாருமே அப்பாவித் தமிழர்கள்தானே. சாராயக் கடை திறந்து மெள்ள மெள்ளக் கொல்லப்படுவதும் தமிழர்கள்தானே. சிறு எதிர்ப்புகூட தெரிவிக்காத நிலையிலேயே இந்தப் படுகொலைகள் என்றால் நாட்டைப் பிரித்துக் கொடு என்றால் நம் தமிழ் அரசு நம் தமிழ் மக்களை எப்படி நடத்தும் என்பதை யோசித்துப் பார்த்துவிட்டு அடுத்த வார்த்தைகளைப் பேசுவது நல்லது. அகதிகளாக இங்கு வந்து ஆண்டுக்கணக்காக துன்பத்தில் தவிப்பவர்களுக்கு இந்த தமிழினத்தலைவர்களும் காவலர்களும் இனமான எழுச்சி நாயகர்களும் செய்து கிழித்தது என்ன என்பதையும் யோசித்துப் பார்க்கவேண்டும்.

இத்தனைக்கும் தமிழகத்தில் கூட தாய் மொழிக் கல்வி இருந்திராத நிலையில் ஈழத்தில் முழுக்க முழுக்க தமிழிலேயே மருத்துவக் கல்லூரி வரை படித்து முடிக்க முடிந்திருந்தது. நீதிக் கட்சி தொடங்கியபோது சொற்ப எண்ணிக்கையிலான பிராமணர்கள் அரசுப் பணிகளில் பெருமளவு இடத்தைப் பிடித்திருந்ததுபோல் இலங்கையில் சிறுபான்மையாக இருந்த தமிழர்கள் (சுமார் 15%)  அரசுப் பணிகளில் 40-50% இடங்களில் இருந்தார்கள். இலங்கை அமைச்சகத்திலும் தமிழர்கள் கணிசமாக இடம்பெற்றிருந்தனர். இவையெல்லாம் 1983-ல் பேரழிவு ஆரம்பிப்பதற்கு முந்தைய நிலை. அப்படியாக தனி நாடு கோருவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில்தான் விடுதலைபுலிகள் போராட்டத்தை அதுவும் மிக மூர்க்கமான வன்முறைப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமியர்களைப் போட்டது போட்டபடி துரத்தியடித்ததில் இருந்து அவர்களை இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று கண்டந்துண்டமாக வெட்டியும் வெடி குண்டு வைத்தும் கண்மூடித்தனமாகக் கொன்றழித்திருக்கிறார்கள். பாலசந்திரனை விட மிகச் சிறிய குழந்தைகளையெல்லாம் கூட மசூதியில் தொழுது கொண்டிருந்தபோது நேருக்கு நேர் நின்று சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். இதைவிட தமிழ் இனத்துக்குள்ளேயே பிற போராட்டக் குழுவினரை சரமாரியாகக் கொன்று குவித்திருக்கிறார்கள். ஆயுதக் கடத்தலில் ஆரம்பித்து அனைத்துவகையான திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவை குறித்து ஒரு வார்த்தைகூட இன்றைய போராட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

மூன்றாவதாக, இந்தியாவை இந்தப் போரில் பிரதான குற்றவாளியாக இணைக்கும் பணியை வேகத்துடன் முன்னெடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, வை.கோ. பழ நெடுமாறன், சீமான், மே 17 இயக்கம் போன்றவர்களுக்கு இடப்பட்ட பணியும் இதுவே. ‘தன்னெழுச்சியாகப்’ போராட முன் வந்திருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களும் இதையே முன்வைத்திருக்கிறார்கள். அப்படியாக இலங்கையைச் சீரழித்தது போதாதென்று இந்தியாவையும் அழிக்கும் நோக்கில்தான் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மிகையான, பாதி உண்மைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரத்த சரித்திரத்தின் இந்த இரண்டாம் பாகம் சரியாக இனங்காணப்பட வேண்டும். ஒரு பெரும் கொடுங்கனவின் தொடக்க நிமிடங்கள் இவை. நாளைய பெரும் வன்முறைக்குத் தோதாக இது போன்ற நடவடிக்கைகளால் நிலம் தயார்படுத்தப்பட்டுவருகிறது. சில நோய்களை வரும் முன்பே தடுத்துவிடவேண்டும். வந்த பிறகு மீட்சிக்கான வழியே கிடையாது.

இலங்கைக் கடற்படையால் தமிழக/இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக பேசப்படுபவற்றைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தாலே அரை உண்மை எவ்வளவு அபாயகரமானது என்பது புரிந்துவிடும். தமிழகப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவது, தமிழக மீனவர்கள் வலிமையான மோட்டர் படகுகளைப் பயன்படுத்துவது, இலங்கை மீனவர்களுக்கு அவர்களுடன் போட்டிபோட முடியாத நிலை, தமிழ மீனவர் குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள் கூட இலங்கை அரசின் மீது பழிபோடப்படுதல், அரசியல் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்திக் கூறப்படும் நிகழ்வுகள், கைது போன்ற இலங்கைக் கடற்படையின் முதல் கட்டத் தொடர் எச்சரிக்கைகள், மாற்று மீன் பிடித் தடங்களை உருவாக்குதல், கடல் பாசிகள் வளர்த்தல் என எதுவுமே பேசப்படாமல் வெறுமனே இலங்கை அரசு தமிழக/இந்திய மீனவர்களைக் கொல்கிறது என்ற ஒற்றைக் குற்றச்சாட்டு பிரச்னையை மேலும் பெரிதாக்க மட்டுமே செய்யும்.

பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக, இந்திய அரசும் அதன் அதிகாரவர்க்கமும் இந்தப் பிரச்னையைக் கையாளும் திறமை கொண்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் தரப்புக்கான எண்ணெயை ஊற்றி பிரச்னையைக் கொழுந்துவிட்டெரியவே செய்வார்கள். அல்லது அந்த திசையில் உளவுத்துறையால் வழிநடத்தப்படுவார்கள். மக்களாட்சியில் மக்கள்தான் மன்னர்கள்… அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்தான் அடுத்தகட்ட மன்னர்கள் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால், உண்மையில் தேசங்கள் இவர்களால் ஆளப்படுவதில்லை. சர்வதேச வஞ்சக உளவாளிகளால் அது ஆளப்படுகிறது. பிரிவினைவாதிகளுக்கு உணவிடும் அவர்கள்தான் இறையாண்மையைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற பேரில் அரசையும் ஆட்டுவித்துவருகிறார்கள். சதுரங்கத்தின் இரண்டு பக்கமும் அவர்களே அமர்ந்து ஆடும் இந்த ஆட்டத்தில் உருட்டப்படும் காய்கள்தான் நாமும் நம் தலைவர்களும்.

பாரத மாதாவின் முகமூடிக்குப் பின்னால் இன்றிருப்பது சூனியக்காரி. நாம் சூனியக்காரி மீது எறியும் அம்புகள் எல்லாம் கேடயமாகப் பிடிக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் தேகத்தைத்தான் குத்திக் கிழிக்கின்றன. மீட்பு தேடி ஓடும் நம்மை, புதிய அவதாரமெடுத்து அரவணைக்கக் காத்திருப்பதோ தெய்வ வடிவில் இருக்கும் சாத்தான். சூனியக்காரிக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் அச்சமூட்டுவதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருக்கிறது.