மகாராஷ்டிரா : செழுமையும் வறட்சியும்

தி ஹிந்துவில் பிப்ரவரி 27, 2013 அன்று பி. சாய்நாத் எழுதிய How the other half dries கட்டுரையின் மொழியாக்கம்

27Sainath_jpg_1378079gஎவ்வாறு மறுபகுதி வறண்டு போகிறது ?

“அடுக்குமாடி குடியிருப்பு என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைக் கனவு. அரசனின் மகுடத்தின் உச்சியில் பதிக்கப்படும் நவரத்தினம் போன்றது இது.”  படாடோபமான வாழ்க்கை முறை அவற்றை இன்னும் பெரியதாகச் சொல்கிறது.  ஒவ்வொரு குடியிருப்பு வளாகத்திலும் சொந்தமாக நீச்சல்குளம் இருக்கிறது.  “மிக ஆடம்பரமானது”, “சிறப்பான கலைநயமான வடிவமைப்புகள்” “உங்கள் வாழ்நிலை உயர்வுக்கு பொருந்தும் அமைப்புகள்” என்று விளம்பரங்கள் பளபளக்கின்றன.

 தோட்டங்களுடன் கூடிய தனி வீடுகளை (வில்லா) உருவாக்குபவர்களும் கட்டடக் கட்டுமான முதலாளிகளும் இப்படிப்பட்ட குடியிருப்புகளை “முதல் தரத்தில் மதிப்பிடக் கூடியவை” என்று உயர்வாக சொல்கின்றனர்.  அவை 9000 முதல் 22000 சதுர அடி அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொன்றுக்கும் நீச்சல் குளம் உண்டு.  இன்னும் வரவிருக்கிற ஒரு குடியிருப்பு வளாகத்தின் உச்சியில் அதாவது மேல்தளத்தில் ஓர் ஆச்சர்யம் அமையவிருக்கிறது. ஆம், நீங்கள் அனுமானிப்பது போல் அங்கும் ஒரு நீச்சல் குளம் இருக்கும்.

இவையெல்லாம் புனே நகரத்தில் மட்டும்.  இவையனைத்துக்கும் கூடுதலான வசதிகளோடு, கூடுதலான தண்ணீரும் தேவைப்படுகிறது. ஒரு சிறிய ஆனால் கர்வம் கொள்ள வைக்கும் போக்கு யாதெனில், இன்னும் இது போல் நிறைய வரப்போகிறது என்பதுதான்.  எந்த மண்டலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக வறட்சி நிலவி வருகிறதோ, அங்குதான்  இவையனைத்தும் தற்போது தோன்றியுள்ளன.  மகாராஷ்டிராவில் அதன் முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவாண் பார்வையில், அந்த மாநிலம் இது வரை சந்தித்திராத மிக மோசமான வறட்சியைச் சந்திக்கிறது.  அந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தற்போது தண்ணீர் லாரியின் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றன.  ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் லாரி வந்தால் நீங்கள் அதிருஷ்டசாலி. இல்லாவிட்டால் வாரத்துக்கு ஒரு முறையோ இரு முறையோ வரும்.

ஆம், நீச்சல் குளங்களுக்கும், வறண்ட ஏரிகளுக்குமிடையே தொடர்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அது பற்றி நிச்சயமாக சிறிய அளவிலான விவாதம்கூட இல்லை.  கடந்த 24 ஆண்டுகளில், 12-க்கும் மேற்பட்ட நீர் நிலை பூங்காக்கள், செயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், நீர் விளையாடு களங்கள் உள்ள (தீம் பார்க்) பொழுதுபோக்கு பூங்காக்கள் தோன்றியுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.  ஆனால் ஒரு கட்டத்தில் அவை மாநகர் மும்பையில் மட்டும் இருப்பனவாக அமைந்தது.

பெரிய அளவிலான மாற்றங்கள்

 

மாநிலம் முழுவதும் அனைத்து வறட்சி பாதித்த மண்டலங்களிலும் நம்பிக்கையின்மை வளர்ந்தது.  7000 கிராமங்களுக்கு மேல் கடுமையான வறட்சி அல்லது உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.  அலுவலக விவரங்களின்படி இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மண்டலங்களும் மோசமடைந்து வருகின்றன.  ஆனால் வறட்சி பாதித்த பகுதி என வகைப்படுத்தப்படவில்லை. அது போல் பாதிக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் மிகச் சிலர் சிறிய அளவில் உதவிகள் பெற்றனர்.  அதாவது அந்தப் பகுதிகளுக்கு தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.  ஏறக்குறைய ஐம்பது லட்சம் கால்நடைகள் வளர்ப்பு முகாம்களை நம்பியிருக்கின்றன.  நம்பிக்கையின்மையின் காரணமாக கால்நடைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.  நீர் தேக்கங்களில் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருப்பு இருந்தது.  சிலவற்றில் அவையும் இன்றி வறண்டிருந்தன.  ஆனால் 1972ல் ஏற்பட்ட கடுமையான வறட்சிக்கு பிறகு தற்போது ஏற்பட்டிருக்கும் வறட்சி மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியாகும்.

கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு திருப்பிவிடப்பட்டது.  அதே போல் வாழ்க்கை தரத்தை மாற்றிக் காட்டுகிறோம் என விளம்பர உத்தியை கையாண்ட வியாபார நிறுவனங்களுக்கும் தண்ணீர் பெருமளவில் அளிக்கப்பட்டது.  கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அவ்வாறு திருப்பிவிட்ட வகையில் மக்களின் ரத்தம் சிந்தப்பட்டது.  மாவல் நகரத்தில் 2011ல் கோபமுற்ற விவசாயிகளை நோக்கி காவல்துறையினர் சுட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் காயமுற்றனர்.  பாவனா அணையிலிருந்து பிம்ரிசின்ச்வாட் எனுமிடத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல விளைநிலங்களின் வழியாக குழாய்கள் அமைத்த அரசின் நடவடிக்கையை எதிர்த்து அவர்கள் போராடியபோது அந்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் ஏற்படப்போகும் நீர் இழப்பை கணக்கிட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.  அந்த நேரத்தில் அரசு சுமார் 1200 பேர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தது.  வன்முறையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்பட்டது.

துணை முதலமைச்சர் அஜித்பவார் அவர் பங்கிற்கு விவசாயத்தை மூடும் வகையில் தொழிற்சாலைகளின் கட்டுபாட்டில் நிலங்களை கொண்டு வந்தார்.  இன்னும் சற்று மோசமாகும் வகையில் சட்டத்திருத்தமே அவரால் கொண்டு வரப்பட்டது.  ஏற்கெனவே மோசமாக உள்ள மகாராஷ்டிரா நீர்வள சீரமைப்பு அதிகார ஆயச்சட்டத்தில் ஒரு புதிய ஷ‌ரத்தைச் சேர்த்து தண்ணீர் விநியோக கொள்கை முடிவை யாரும் எதிர்க்க இயலாத வண்ணம் தடை ஏற்படுத்தினார்.

பொழுது போக்கு கேளிக்கைகளுக்கு தண்ணீரை திருப்பிவிடுவது ஒன்றும் புதிதல்ல என்ற போதிலும், 2005ல் பெரிய அளவில் கேளிக்கை மற்றும் உணவு கிராமம், நீர் விளையாட்டுகள் நிறைந்த மகிழ்வு பூங்காக்கள் ஆகியவை நாக்பூர் மாவட்ட ஊரக பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.  உண்மையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிய நேரம் அது. அந்தக் கேளிக்கை கிராமத்தில் 18 விதமான நீர் வீழ்ச்சிகள், நீர் விளையாட்டு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  அந்த இடத்தில்தான் இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை பனி மலை மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் அமையப்பெற்றது.  47 டிகிரி வெப்பம் நிலவுகையில் தொடர்ந்து பனிக்கட்டியாக பராமரிப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல.  அதற்கு மிக அதிகமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால், அந்த மண்டலத்தில் வசித்த சாதாரண மக்களுக்கு 15 மணி நேர மின் வெட்டு ஏற்பட்டது.  மேலும் அதிக அளவிலான நீரும் அதற்காக செலவிடப்பட்டது.

 லாவாசா மற்றும் விவசாயம்

கடந்த ஆண்டுகளில் சில கோல்ப் மைதானங்கள் தோன்றியதும் இந்த மாநிலத்தில்தான்.  ஆழ்துளை குழாய்கள் பதிக்கப்பட்டு தற்போது 22 மைதானங்கள் உள்ளன.  கோல்ப் மைதானத்தை பராமரிக்க மிகுதியான தண்ணீர் செலவழிக்கப்படுகிறது.  கடந்த காலங்களில் இதனால் விவசாயிகளிடம் கோபத்தை விளைவித்து பல மோதல்கள் நடைபெற்றுள்ளது.  கோல்ப் மைதானங்களைப் பராமரிக்க அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகள் தூவப்படுவதால் அவை மற்ற நீர் ஆதாரங்கைளயும் மாசுபடுத்துகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்டு “சுதந்தர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்றழைக்கப்படும் லாவாசா திட்டத்துக்காக பெருமளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து பல எதிர்ப்பு இயக்கங்களை நாங்கள் இந்த மாநிலத்தில் பார்க்க முடிந்தது.

மாநிலத்தில் மிகுதியான வறட்சி நிலவுகையில் தனது குடும்ப திருமணத்தை ஆடம்பரமாக நிகழ்த்தியதற்காக சரத்பவார் தனது சொந்த கட்சியின் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் என்பவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்காக பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றார்.  ஆனால் மத்திய விவசாயத் துறை அமைச்சரான பவார் எப்போதும் லாவாசா திட்டத்தைப் பற்றி பெருமை பேசுவதிலேயே நேரத்தைச் செலவழித்தார்.  லாவாசா திட்டம் குறித்து இணையத்தளத்தில் உள்ள புள்ளி விவரங்களிலிருந்து 0.87 டிஎம்சி தண்ணீரை இருத்தி வைக்க அனுமதி உள்ளதாக தெரிய வருகிறது.  அதாவது ஏறக்குறைய 24.6 பில்லியன் லிட்டர் தண்ணீர் ஆகும்.

எந்த மாநிலமும் குறைவான பாசனத்துக்கு மிகுதியான பணம் செலவழிப்பது இல்லை.  பொருளாதார ஆய்வறிக்கை 2011-12 லிருந்து கடந்த 12 ஆண்டுகளில் 0.1 சதவீத நிலங்களில்தான் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிய வருகிறது.  அதாவது இந்த மாநிலத்தில் 18 சதவீதத்திற்கு குறைவான நிலங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

பத்தாயிரம் கோடிகளில் பணம் செலவழிக்கப்பட்டு பல கோடீஸ்வரர்களை உருவாக்குகிறது. மறுபுறம் மிகக் குறைவாகவே பாசனம் மேற்கொள்ளப் படுகிறது.  விவசாயம் குறைந்து கொண்டே வரும் அதே நேரத்தில் பெரும் அளிவில் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டது. (2011-12 பொருளாதார ஆய்வின்படி உணவு தானிய உற்பத்தியில் 23 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது).

ஒருபுறம் உணவு தானிய உற்பத்தி குறைந்த போதிலும் மகாராஷ்டிராவில் மூன்றில் 2 பங்கு நிலங்களில் வறட்சி மிகுந்து, தண்ணீர் கிடைக்காத நிலையிலும் கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.  ஒரு மாவட்ட ஆட்சியர்கூட இந்த வறட்சி காலத்தில் கரும்பு பிழிவதை நிறுத்த தலைப்படவில்லை.  கரும்பாலைகள் தினசரி 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தின.  சர்க்கரை ஆலை முதலாளிகளின் அதிகாரத்தால் கரும்பு பிழிவதை தற்காலிக இடை நீக்கம் செய்வதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர்கள் தற்காலிக இடை நீக்கம செய்யப்பட்டனர்.

ஒரு ஏக்கரில் பயிராகும் கரும்புக்கு தேவையான தண்ணீரை கொண்டு 10 முதல் 12 ஏக்கர் நிலங்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவித்துவிட முடியும்.  மகாராஷ்டிராவில் பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரில் பாதி இந்த கரும்பிற்கு செல்வதால், 6 சதவீத நிலங்கள் மட்டுமே பாசனம் பெறும் பகுதியாக இருந்தது.  கரும்புக்கு 180 ஏக்கர் இன்ச் தண்ணீர் தேவை.  அதாவது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு 3000 ஊரக பகுதி வீடுகளின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவேற்றிவிட முடியும்.

சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் நீர் தேவை என்ற கணக்கின்படி,  இந்த மண்டலத்தில்தான் நீர் இருப்பு பட்டியல் வருடந்தோறும் குறைந்து வருகிறது. இவையெல்லாம் மகாராஷ்டிராவில் பயிரிடப்படும் ரோஜாப்பூ விவசாய உற்சாகத்தை குறைத்துவிடவில்லை.  அதற்கு கிடைக்கும் சிறிய உத்திரவாத வியாபார போக்கினால் மேலும் சிலரை அந்தப் பயிருக்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.  ரோஜாக்களுக்கு அதிக நீர் தேவை.  அதற்கு “212 ஏக்கர் இன்ச்” தண்ணீர் தேவை.  அதாவது 21.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு ஏக்கருக்கு. ரோஜா உற்பத்தி சிறிதளவானாலும் மாநிலத்தில் நடைபெறும் சில கொண்டாட்டங்களால் அதற்கு வரவேற்பு உள்ளது.  இதன் ஏற்றுமதி இந்த வருடம் 15 – 25 சதவீதம் உயர்ந்துள்ளது.  ரூபாயின் வீழ்ச்சி, நீடித்த குளிர்காலம், மற்றும் “காதலர் தினம்” போன்றவை ரோஜா உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் சீரமைப்பு நடவடிக்கைகள் என்பதைப் பொறுத்தவரை பெரிய அளவிலான தண்ணீரைத் தனியார்மயப்படுத்துதலில்தான் இருந்துள்ளது.  இந்த இயற்கை வளத்தின் மீதான சமூக கட்டுப்பாடு மிகவும் வேகமாக செயலிழக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் நிலத்தடி நீரை மிகுதியாக வீணடிப்பதாலும் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.  தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை அங்கு கொண்டுவர மகாராஷ்டிரா கடுமையாக உழைத்துள்ளது. கடல் போல் விரிந்து பரந்த வறண்ட நிலங்களுக்கு நடுவில் தனியார் நீச்சல் குளங்கள்.  பணக்காரர்களுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இல்லை.  ஆனால் மீதமுள்ளவர்களின் எதிர்பார்ப்பு தினந்தோறும் ஆவியாகிக்கொண்டிருக்கிறது.

0

நன்றி : பி. சாய்நாத், தி ஹிந்து / தமிழில் : எஸ். சம்பத்

மூடுமந்திரம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்

Right-To-Informationபகலில் கிடைத்த இரண்டாவது சுதந்தரம் என்றும் காங்கிரஸ் அரசாங்கத்தின் சாதனையாகவும்  சொல்லப்படுவது 2005ல் நடைமுறைக்கு வந்த தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.  இந்தச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கம் அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதன் நிர்வாக அதிகார அமைப்புகள் வெளிப்படைத் தன்மையுடையதாக இருக்க வேண்டும். அதன் வாயிலாக பொதுமக்களின் வேண்டுகைகள், கோரிக்கைகள் ஊழலின்றி, லஞ்சமின்றி நிறைவேற்றப்படுவதை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்பதாகும்.

அந்தச் சட்டத்துக்கு இணங்க நடுவண் தகவல் ஆணையமும் மாநிலம் தோறும் மாநில தகவல் ஆணையங்களும் நிறுவப்பட்டன. இதில் துவக்கம் முதலே நடுவண் தகவல் ஆணையம் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின்படி அரசுப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் சமூகப் பணிகளில் முன்னணியாக அறியப்பட்ட பிரபலங்கள் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் 31 ஷரத்துக்கள் மட்டுமே கொண்ட சிறப்பான சட்டம் என்பதுடன், ஒவ்வொரு ஷரத்தும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக அமைக்கப்பட்டிருப்பதால் இதுவரை பணியாற்றிய பல தகவல் ஆணையர்கள் மிகச் சிறப்பாக இது குறித்த தாவாக்களை தீர்த்து வைத்துள்ளனர்.

குறிப்பாக நடுவண் தகவல் ஆணையம் உயர்நீதிமன்றங்களுக்கு இணையாக இரு ஆணையர்கள் அமர்வு, முழு அமர்வு என்றெல்லாம் அமர்ந்து விசாரித்து தீர்வுகள் கண்டிருக்கிறது.  பொது அதிகார அமைப்புகளின் தரப்பில் கற்றறிந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்கள். அத்தகைய சூழலிலும் சட்டத்தின் குறிப்பிட்ட அதிகார வரம்பில் நின்று பல ஆணையர்கள் நல்ல தீர்வுகளை தந்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆண்டு தகவல் ஆணையம் குறித்த வழக்கு ஒன்றின் தீர்வில் இந்திய உச்ச நீதிமன்றம் (பார்க்க பெட்டியில் குறிப்பிட்டுள்ள தீர்வு) தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம் பெறும் வகையில் சட்டக்கல்வியில் தேறி அதில் அனுபவம் பெற்றவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், இரு ஆணையர்கள் அமர்வு எனில் அதில் ஒரு ஆணையர் சட்டம் பயின்றவராக இருக்க வேண்டும் என்றும் தீர்வளித்தது. அந்த தீர்ப்பு நாடு முழுவதும் அந்த சட்டத்தை பயன்படுத்துபவர்கள், ஆணையர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் மத்தியில் கருத்து முரண்களை, விவாதங்களை உருவாக்கியது. அது குறித்த நடுவண் அரசின் மேல்முறையீடு / சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் முன்பாக நிலுவையிலுள்ளது.

IN THE SUPREME COURT OF INDIA
CIVIL ORIGINAL JURISDICTION
WRIT PETITION (CIVIL) NO. 210 of 2012
Namit Sharma … Petitioner
Versus
Union of India … Respondent
J U D G M E N T
Swatanter Kumar, J.

2. … Thus, we hold and declare that the expression ‘knowledge and experience’ appearing in these provisions would mean and include a basic degree in the respective field and the experience gained thereafter. Further, without any peradventure and veritably, we state that appointments of legally qualified, judicially trained and experienced persons would certainly manifest in more effective serving of the ends of justice as well as ensuring 102 better administration of justice by the Commission. It would render the adjudicatory process which involves critical legal questions and nuances of law, more adherent to justice and shall enhance the public confidence in the working of the Commission. This is the obvious interpretation of the language of these provisions and, in fact, is the essence thereof…..

7. It will be just, fair and proper that the first appellate authority (i.e. the senior officers to be nominated in terms of Section 5 of the Act of 2005) preferably should be the 104 persons possessing a degree in law or having adequate knowledge and experience in the field of law….

8. The Information Commissions at the respective levels shall henceforth work in Benches of two members each. One of them being a ‘judicial member’, while the other an ‘expert member’. The judicial member should be a person possessing a degree in law, having a judicially trained mind and experience in performing judicial functions. A law officer or a lawyer may also be eligible provided he is a person who has practiced law at least for a period of twenty years as on the date of the advertisement. Such lawyer should also have experience in social work. We are of the considered view that the competent authority should prefer a person who is or has been a Judge of the High Court for appointment as Information Commissioners. Chief Information Commissioner at the Centre or State level shall only be a person who is or has been a Chief Justice of the High Court or a Judge of the Supreme Court of India.

9. The appointment of the judicial members to any of these posts shall be made ‘in consultation’ with the Chief Justice 105 of India and Chief Justices of the High Courts of the respective States, as the case may be….

நாடு முழுவதிலும் மற்றும் தமிழகத்திலும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுள்ளனர். மறுபுறம் நாட்டின் வட மாநிலங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை, தவறுகளை, ஆக்கிரமிப்பு போன்றவைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட பல தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.

இத்தகைய சூழ்நிலையின் பின்னணியில் தமிழக தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது? சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. பொதுமக்களில் பலர் இந்தச் சட்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் அரசு அலவலகங்கள்? ஆய்வு செய்தால் அதிர்ச்சியான விவரங்களே கிடைக்கின்றன.

நடுவண் தகவல் ஆணையத்தைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே பல வழக்குகளில் தகவல் தருவதில் உள்ள தாமதத்தை ஆணையம் கண்டித்திருக்கிறது. தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும் தாமதத்துக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் அத்தகைய அபராத விதிப்பு நடவடிக்கைகள் அல்லது பொது அதிகார அமைப்புகளான அரசு அலுவலர்களைக் கண்டிப்பது என்பது தமிழகத்தைப் பொருத்தவரை அதிகமில்லை.

அரசு அலுவலகங்கள் துறை சார்ந்த தகவல்களை தாமாகவே முன்வந்து தமது இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்றும்,  அரசாணைகள், உத்திரவுகள், பதிவுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தக் கூடிய விவரங்களை மின்மயப்படுத்தி அந்தந்த துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும் சொல்லப்பட்டுள்ளது. நடுவண் தகவல் ஆணையமும் பல மாநில தகவல் ஆணையங்களும் சட்டத்தின்படி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

  • ஆனால் தமிழக தகவல் ஆணையத்தின் இணையத்தளத்தில் ( http://www.tnsic.gov.in) நுழைந்தால் அரசாணை எண் 136, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 31/08/2012ன் படி நியமனம் செய்யப்பட்ட ஆணையர்களின் பெயர்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை.
  • புள்ளி விவரங்கள் எனும் இணைப்பைத் தொட்டால் Under Construction என்று வருகிறது. சட்டம் இயற்றி 8 ஆண்டுகளாக புள்ளி விவரங்களை வெளியிடாத ஆணையம், எவ்வாறு மற்ற அதிகார அமைப்பின்மீது தீர்வளிக்க தார்மீக உரிமை பெறும்?
  • ஆணையர்களின் பணி ஒதுக்கீடு என்று பார்த்தால் இரண்டு ஓய்வு பெற்ற ஆணையர்களுக்கு முன்னதாக பணி ஒதுக்கீடு செய்த விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • வழக்கு தீர்வுகள் டிசம்பர் 2012 வரை மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டத்தின்படி ஆண்டு அறிக்கைகள் பதிவேற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு ஆணையத்தால் மட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
  • சுற்றறிக்கைகள், உத்திரவுகள் என்ற வகையில் எந்த உத்திரவும் இணையத்தில் பதிவேற்றப்படவில்லை.

ஏற்கெனவே தமிழ் நாடு தகவல் ஆணையத்துக்கு முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சியின் கருத்தை கேட்காமல் தலைமைச் செயலாளர் (ஓய்வு) திரு. ஸ்ரீபதி இ.ஆ.ப., அவர்களை நியமித்ததில் தமிழகம் முழுவதிலும் ஆர்வலர்களிடையே பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.  தலைமைச் செயலாளராக பணிபுரிந்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்ட தீர்வுகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்திருப்பவர் என்பதால் ஒரு அரசியல் கட்சி சார்ந்து செயல்பட வாய்ப்புள்ளது என்கிற ஐயம் காரணமாக அவர் நியமனத்தை எதிர்த்து சிலர் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள்.

சில தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு தமிழக ஆணையம் தற்போது எவ்வாறு செயல்படுகிறது என கேட்டேன். சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவரும், த.அ.உ.சட்டத்தை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருபவருமான திரு வி.அன்பழகனின் (அன்பு) மறுமொழி இது. “எனது தரப்பு இரண்டாவது மேல்முறையீடுகள் ஏறக்குறைய 36 எண்ணம் ஆணையம் முன்பாக விசாரிக்கப்படாமல், விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையிலுள்ளது.” இன்றும் தலைமை தகவல் ஆணையர் (ஸ்ரீபதி) காவல்துறை சார்ந்த த.அ.உ. சட்ட வழக்குகளைத் தானே விசாரிக்கும் வகையில் பட்டியலிட்டுக் கொண்டு பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக பல வழக்குகளை தள்ளுபடி செய்துவிடுகிறார் என்றும் அவர் தெரிவிக்கிறார். மேலும், பல வழக்குகளை விசாரிக்காமலேயே யார் மீது புகார் சொல்லப்பட்டுள்ளதோ அந்தப் பொது தகவல் அலுவலருக்கே புகாரை அனுப்பி தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை தபாலில் அனுப்பிய ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் என்ற வகையில் 3 – 4 வரி உத்திரவுகளாக ஆணையம் பல வழக்குகளை தீர்வு செய்து வருகிறது. இது சட்டம் இயற்றிய நோக்கத்தையே சிதறடிப்பதாக உள்ளது என்கிறார்.

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று 76 வயதாகும் இன்றைய நிலையிலும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பலரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்து வரும் மற்றொரு ஆர்வலர் பொள்ளாச்சி திரு பாஸ்கரன்.  அவரிடம் இது பற்றிக் கேட்டபோது,
தமிழகத் தகவல் ஆணையம் ஏறக்குறைய செயல்படாத நிலையில் உள்ளது என்றார். “சட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் – நடுவண் அரசுக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் கொண்டு செல்லும் வழக்கில் முந்தைய மத்திய தகவல் ஆணைய தீர்வுகள், அல்லது தமிழக தகவல் ஆணைய தீர்வுகளை சுட்டியாக (Citation) தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வாதிட்டோம்.  ஆனால், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆணையர்களில் இருவர் அது முந்தைய ஆட்சி கால தீர்வு என்றும் தற்போது எங்கள் ஆட்சியின் தீர்வை கேளுங்கள் என்றும் சொல்லிவிட்டார். தங்கள் நியமனத்தையே ஏதோ ஆளுங்கட்சி சார்ந்த மாவட்டச் செயலாளர் நியமனம் போல் கருதி ஓப்பன் கமெண்ட் செய்தது எனது நண்பர்களின் வழக்கில் நிகழ்ந்துள்ளது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.”

நமக்கு அருகிலுள்ள கேரள- ஆந்திர- கர்நாடக மாநில அரசுகளின் தகவல் ஆணைய இணையளங்களைப் பார்வையிட்டால், அவர்கள் அவ்வப்போது தகவல்களை – ஆணைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பதும், 4 – 5 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை பதிவேற்றம் செய்திருப்பதையும் காண முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், தகவல் ஆணையர்களின் சொத்து விவரங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

அய்யன் வள்ளுவர் குறள் வழிநின்று ஆட்சி நடைபெறும் நமது மாநிலத்தில்,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி

என நடுவுநிலைமை தவறாது, வெளிப்படைத்தன்மையுடன் நமது தகவல் ஆணையம் செயல்படவேண்டுமென்பது ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் அவா. சீர்படுமா ஆணையம்? பொறுத்திருந்து பார்ப்போம்.

0

எஸ். சம்பத்

கருணையும் மரணமும்

Afzal Guruஇந்திய அரசாங்கம் சமீப காலமாக மக்களுக்கு காலையில் சுட சுட செய்திகளை வழங்கிவருகிறது. 26/11 மும்பை தாக்குதல் கைதி அஜ்மல் கசாப் பூனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதைத் தொடர்ந்து டில்லி பாராளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளி அப்சல் குரு டில்லி திகார் சிறையில் கொல்லப்பட்டார். இந்த மரண தண்டனைகளுக்கெல்லாம் காரணம், தூக்கிலிடப்பட்டவர்களின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதுதான். அஜ்மல் கசாப், அப்சல் குரு சர்ச்சை ஓய்வதற்குள் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் மரண தண்டனை மீதான கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் இப்பொழுது தடாலடியாக ஒவ்வொருவராத தூக்கிலிடப்படுவதை மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

ஏன் அவசரம்?

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு அவசரமாக கைதிகளை தூக்கிலிடுகிறார்கள் என்கிறார்கள் சிலர். இந்துக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்தே அஜ்மல் கசாப்பும், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டதாக சிலர் விமரிசனமும் செய்கிறார்கள். எது எப்படி இருப்பினும் ஜனாதிபதியின் அதிரடி முடிவு சட்டப்படி சரிதானா என்று பலருக்கு சந்தேகம் இருந்துவருகிறது.

உண்மையில், மரண தண்டனை கைதிகளின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்வதில் ஜனாதிபதிக்கு அப்படியொன்றும் பெரும் பங்கு இல்லை. அவர் மற்ற விவகாரங்களைப் போல் இதிலும் ஒரு ரப்பர் ஸ்டாம்புதான். இந்திய அரசியல் சட்டத்தின் 72 ஆம் ஷரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தன் மீது வழங்கப்பட்ட மரண தண்டனையை நிராகரிக்கக் கோரி ஜனாதிபதியினிடம் கருணை மனு அனுப்பி வைக்கலாம் (ஒரு மாநிலத்தின் ஆளுனரிடமும் இந்திய அரசியல் அமைப்பின் 161 வது ஷரத்தின்படி கருணை மனு தாக்கல் செய்யலாம். இது குறித்து மேலும் அறிய  தமிழ்பேப்பரில் முன்னர் வெளியான ஹாய் அட்வகேட் பகுதியைப் பார்க்கவும்).

ஜனாதிபதி, தன்னிடம் வந்து சேரும் கருணை மனுக்கள்மீது தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது. ஒவ்வொரு கருணை மனுவையும் உள்துறை அமைச்சகத்தின்மூலம் மத்திய மந்திரி சபையின் ஆலோசனைக்கு அவர் அனுப்பி வைப்பார். மத்திய மந்திரி சபை தன்னுடைய முடிவை உள்துறை அமைச்சகத்தின்மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும். மந்திரி சபை எடுத்த முடிவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதியை தூக்கிலிடவேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்தால் அதை ஜனாதிபதி ஏற்றுதான் ஆகவேண்டும். வேண்டுமென்றால் மறு பரிசீலனை செய்ய மறுபடியும் கருணை மனுவை மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கலாமே தவிர, இந்த விவகாரத்தில் ஜனாதிபதியால் செய்வதற்கு மேலதிகம் ஒன்றுமில்லை. அதனால் ஜனாதிபதியை இதில் குற்றம் சொல்லிப் பலனில்லை.

யார் காரணம்?

கருணை மனு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்பட்டால் அதற்கு முழுக் காரணமும் மத்திய அரசுதான். அதே போல் கருணை மனுவின்மீதான இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமும் மத்திய அரசுதான். குறிப்பிட்ட ஒரு மனு ஏன் துரிதமாகச் செயல்படுத்தப்படுகிறது, இன்னொன்றுக்கு மட்டும் ஏன் காலதாமதம் போன்ற கேள்விகளுக்கு அரசுதான் பதிலளிக்கவேண்டும்.

கருணை மனுவும் தாமதமும்

ஒரு கருணை மனுவை இத்தனை நாள்களுக்குள் விசாரித்து முடிவு வழங்கவேண்டும் என்று சட்டவிதிகளெல்லாம் இல்லை. ‘எங்களிடம் 33 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் முடிவெடுப்போம். அதனால் ஏற்படக்கூடிய கால அவகாசத்தால்தான் கருணை மனுக்களின் மீதான முடிவு தாமதப்படுகிறது‘ என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. ஆனால், முன்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பின்னால் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். பின்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் முன்னதாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் (ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிளவேந்திரன்) கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ’கருணை மனுவின் மீதான முடிவை அரசாங்கம் மிகவும் தாமதமாக சுமார் 9 ஆண்டுகள் கழித்து எடுத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடைய கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாங்கள் உயிரோடு இருப்போமா அல்லது கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவோமா என்ற மன சஞ்சலத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறோம். இது இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்துக்கு எதிரானது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்.’

இந்த மனுதாரர்கள் தங்கள் வழக்குக்கு முன்மாதிரியாக, ஏற்கெனவே இதே போன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டுகின்றனர். அது, வைத்தீஸ்வரன் -எதிர்- தமிழ் நாடு அரசு – (1983) 2 SCR 348. அதில் குறிப்பிடப்படும் விஷயங்கள் இவை. ‘இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்தின்படி, கவுரவத்துடன் வாழவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. (பந்து முக்தி மோர்ச்சா -எதிர்- மத்திய அரசாங்கம் (1984) 3 SCC 161). சிறையில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. (சார்ல்ஸ் சோப்ராஞ் -எதிர்- திகார் சிறை அதிகாரி – AIR 1978 SC 514; சுனில் பாத்ரா – எதிர் – டில்லி நிர்வாகம் AIR 1994 SC 1675). வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் எங்கள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் மரண பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாம். எங்கள் கருணை மனு மீதான முடிவை அரசாங்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தியதின் மூலம் எங்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையால் எங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கிறது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும்.’

வைத்தீஸ்வரனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து பல மரண தண்டனை கைதிகள், தங்களுடைய கருணை மனுவின் முடிவை அரசாங்கம் தாமதமாக வெளியிட்டது. அதனால் நாங்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானோம் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

உச்ச நீதிமன்றத்துக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. ஒரு கொலை வழக்கை மூன்று நீதிமன்றங்கள் விசாரித்து மரண தண்டனை வழங்குகிறது. அதாவது சாட்சிகளை விசாரித்து தீர்ப்பை வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம் (கீழ் நீதிமன்றம்); அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்; பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம். இந்த மூன்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் என்று ஏகமனதாக முடிவெடுக்கிறது. இந்நிலையில், காலதாமதத்தை முன்னிறுத்தி ஆயுள் தண்டனையாக மாற்றுவது சரிதானா? திரிவேனிபென் – எதிர்- குஜராத் அரசு – 1989 1989 AIR SC 1335 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய வைத்தீஸ்வரன் வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்தியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பென்ச் திரிவேனிபென் வழக்கை விசாரித்தது. முடிவில் பின்வரும் தீர்ப்பை வெளியிட்டது.

‘ஒரு நீதிமன்றம் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய பிறகு, சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்து ’தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைளுக்கு எதிரானது’ என்று வாதிடமுடியாது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் இரண்டாண்டுகள் காலம் தாழ்த்தியதால் வைத்தீஸ்வரன் வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது தவறானது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு கருணை மனுவின் மீதான முடிவை ஒரு அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கட்டளையிட முடியாது. கருணை மனுவின்மீதான விசாரணையை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதை காலதாமதமாக கருதமுடியாது. ஆனால் காரணமே இல்லாமல் ஒரு அரசாங்கம் கருணை மனுவின் மீதான தன்னுடைய முடிவை தாமதப்படுத்தினால் அதை கருத்தில் எடுத்துக்கொண்டு மரண தண்டனை கைதிகளுக்கு தகுந்த பரிகாரங்களை நீதிமன்றம் வழங்கலாம். ஆனால் அப்படி தண்டனையை குறைப்பதற்கு முன்னர் குற்றத்தின் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’

கருணை மனுமீதான காலதாமதமான முடிவை எதிர்த்துதான் ரிட் மனு தாக்கல் செய்யலாமே தவிர, கருணை மனுவை தனக்கு சாதகமாக ஜனாதிபதி முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கத்தை எதிர்த்து மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்யமுடியாது. ஆனால் ஆந்திர மாநில ஆளுனர் ஒரு மரண தண்டனை கைதியின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். ஆந்திர ஆளுனர் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர ஆளுனர் கருணை மனுவை சரியாக யோசிக்காமல் முடிவெடுத்திருக்கிறார். அவர் அவ்வாறு முடிவு எடுத்ததற்கு காரணங்கள் தகுந்ததாக இல்லை. ஆளுனர் தன் முடிவை எடுப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் அவர் பார்வைக்கு வழங்கப்படவில்லை. எனவே ஆளுனர் எடுத்த முடிவு தவறானது. சம்பந்தப்பட்ட கைதியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது சரியில்லை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. (எப்புரு சுதாகர் -எதிர்- ஆந்திர அரசு – AIR 2006 SC 3385).

ராஜிவ் கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 2011ல் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் தேவையற்ற காலதாமாதம் செய்திருப்பதாக மேற்பஐ மூவரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில்தான் மேற்சொன்ன வீரப்பன் கூட்டாளிகளும், ’தங்கள் கருணை மனுக்களை அரசாங்கம் தேவையற்ற கால தாமதத்துடன் நிராகரித்திருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜிவ் காந்தி கொலையாளிகளின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் வேறொரு பென்ச் முடிவை வெளியிடும் தருவாயில் இருப்பதால், அந்த முடிவு வரும் வரை வீரப்பன் கூட்டாளிகளின் மனுவின் மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதற்கிடையில், மூவருக்கும் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றாதபடி இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. ராஜிவ் கொலையாளிகளின் ரிட் மனு தீர்ப்புக்காக வீரப்பன் கூட்டாளிகள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

0

கவனம் இங்கே தேவை

shoppingஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 29

எதையாவது இலவசமாகவோ அல்லது டிஸ்கவுண்ட் என்ற பெயரில் சிறிது விலையைக் குறைத்து கொடுத்தாலோ மட்டுமே ஒரு பொருளை வாங்கும் மனோபாவம் பலரிடம் இருக்கிறது. சொல்லும் விலையைக் கொடுத்து ஒரு பொருளை வாங்கும்போது திருப்தி ஏற்படுவதில்லை. தங்கமாக இருந்தாலும் சரி, குண்டூசியாக இருந்தாலும் சரி.

ஒரு பொருள் விற்கப்படும் பொழுது அதனால் விற்பவருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அந்தப் பொருள் தொழிலுக்குரிய தகுதியை இழந்து விடுகிறது. அப்படியென்றால் டிஸ்கவுண்ட் எப்படிக் கொடுக்கப்படுகிறது? நேர்மையற்ற சிலர் பொருளின் விலையை அதிகப்படுத்தி பின்னர் சிறிது குறைக்கின்றனர். இன்னும் சிலர், தங்களுடைய லாபத்தில் இருந்து குறைத்துக்கொண்டு அதன் பங்கை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பார்கள். இதுவே சரியான நடைமுறையாகும்.

பெரிய ஷாப்பிங் மால்களில் ஃபிக்ஸட் பிரைஸ் எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட விலைப் பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கும். இந்த வகை கடைகளில் டிஸ்கவுண்ட் கிடைக்காது. வாடிக்கையாளர்களும் மௌனமாக சொன்ன விலைக்குப் பொருள்களை வாங்கிச் சென்றுவிடுவார்கள். பேரம் பேசுவது எல்லாம் சிறு வியாபாரிகளிடம் மட்டும்தான்.

உண்மையில், நிர்ணயித்த விலையைக் காட்டிலும் மிக அதிக அளவில் விலைக் குறைப்பு செய்தால், நாம் உற்சாகப்படக்கூடாது. உஷாராகவேண்டும். ஸ்டாக் க்ளியரன்ஸ் என்று சொல்லி சரக்குகளைத் தீர்ப்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்பதும் பொருள் வாங்கினால் மற்றொரு பொருள் இலவசம் என்பது வியாபார உத்திகளே. விற்பனையாகாத அல்லது கொள்முதல் ஆகாத பொருள்களே இவ்வாறு கவர்ச்சிகரமாகத் தள்ளிவிடப்படுகின்றன. எந்தப் பொருள் அதிகம் விற்பனையாகிறதோ அதன் விலையைக்கூட்டி விற்காத பொருளை இலவசம் என்று இணைத்து விற்றுவிடுவார்கள்.

நிறுவனங்களை மக்கள் புரிந்துகொள்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் மக்கள் நிறுவனங்களைப் புரிந்துகொள்வதும். பல கார்பரேட் நிறுவனங்கள் இதற்காக மார்கெட் ரிசர்ச் பிரிவுக்குப் பல கோடிகள் செலவு செய்கின்றன. மக்களின் மனநிலையையும் தேவைகளையும் புரிந்துகொண்டு அதற்கேற்பவே ஒரு நிறுவனம் தன் பொருள்களைச் சந்தைப்படுத்துகின்றன. ஒரு பொருள் யாருக்குத் தேவைப்படுகிறது? (டார்கெட் ஆடியன்ஸ்) அவர்களுடைய சமூகப் பின்னணி என்ன? வயது என்ன? பொருளாதாரப் பின்னணி என்ன? எவ்வளவு விலை வைத்தால் அவர்களால் வாங்கமுடியும்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொண்டால்தான் வெற்றி கிடைக்கும்.

திரைப்படத் துறையினர் இந்த ரீதியில் வெற்றி பெறுவதை நாம் பார்க்கமுடியும். திறமையான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தியே திரைப்படங்களின் வெற்றி இன்று உறுதி செய்யப்படுகிறது. சமீபத்திய கொலைவெறி பாடல் ஹிட் ஆனதை இங்கே பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம்.

சில தொழில்கள் அபாரமான வெற்றிகளை அடையாவிட்டாலும்கூட, உயிரோட்டமாக மினிமம் கியாரண்டியுடன் தங்கள் பொருள்களை விற்று சமூகத்தில் நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொள்கின்றன. பல குறுந்தொழில்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.

0

சட்டபூர்வமான அங்கீகாரத்துடன் மட்டுமே எந்தவொரு தொழிலையும் தொடங்கி நடத்தவேண்டும். சிலர் பெயர் பலகை இல்லாமல், உரிய முறையான சட்ட ரீதியான பதிவுகளை மேற்கொள்ளாமல் தமது வேலையில் ஈடுபட்டிருப்பர். பின்னர் வளர்ச்சி அடையும் நிலையில், முன்னரே உரிய பதிப்புகள் மேற்கொள்ளாத காரணத்தால்,சில நல்ல பயன்களை அடையத் தவறிவிடுவர். தமது நிறுவனத்தின் இருப்பிடத்தை வணிக வளாகம் என்ற பிரிவின் கீழ் மின்சார வாரியத்தில் பதிவு செய்யாமல் இருத்தல், அரசாங்கத்துக்குரிய வரிகளைச் சரிவரச் செலுத்தாது இருத்தல் ஆகியவை பின்னாள்களில் மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும்.

சரிவர முறையாகச் செயல்படாததால், அரசாங்கம், சுங்கம், மின்சார வாரியம் ஆகிய பிரிவுகளிலிருந்து திடீர் சோதனைகள் நடைபெற்றால் பிடிபட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்துவிட்டால் பணம், நேரம் இரண்டையும் மிக அதிகம் செலவு செய்து தவறுகளைச் சரிசெய்துகொள்ள நேரிடும். தேவையற்ற மனச்சோர்வும் ஏற்படும்.

அதேபோல சிறுதொழில் (எஸ்எஸ்ஐ), தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடெட்), ப்ரொப்பரைட்டர் கன்சர்ன் ஆகியவற்றை உரிய முறையில் பதிவு செய்யவேண்டும். விற்பனை வரி, சேவை வரி, TDS  போன்ற வரிகளைச் சரியான முறையில் செலுத்தவேண்டும்.

தொழிலுக்குப் பொருத்தமான தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதும் நன்மை அளிக்கும். அக்மார்க், ஐஎஸ்ஐ போன்ற தரக்கட்டுப்பாடுகள் அவசியம் எனில், அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

0

சிறுதொழில்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன. அதில் முதன்மையானது உலகமயமாக்கலின் தாக்கம். இன்றைய சூழலில் மிகக் குறிப்பிட்ட சில தொழில்களைத் தவிர, அனைத்தும் தொழில்நுட்பத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. சுதேசி இயக்கத்தைப் போற்றி முன்னிறுத்திய நம் நாடு இன்று பல நாடுகளின் தொழில்நுட்பத்தை நம்பியே இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக்கொள்வது அவசியம்.

அந்த வகையில் சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் நிறுவனம் சார்ந்த தொழில் நுட்பம் எந்த வகையில் எல்லாம் மாறி வருகிறது என்பதையும், அந்தந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்திடமிருந்து எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதையும், தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு இணையதளம் பெரிதும் பயன்படும். உலகளவில் நடக்கும் மாற்றங்களைத் தெரிந்துகொண்டு, பொருட்களின் ஏற்றுமதி அல்லது இறக்குமதி சார்ந்த முடிவெடுக்கலாம்.

பிறநாட்டு நிறுவனங்களோடு வணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்போது, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை.
ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் அயல்நாட்டு வணிகத்தில் பெரும் ஈடுபாடு காட்டினாலும், தாங்கள் யாருடன் தொழில் உறவில் ஈடுபடப் போகிறார்களோ, அவர்களுடைய பின்னணியைத் தெரிந்து கொண்ட பின்னரே, தொழில் செய்யத் தொடங்குவர். அதேபோல், நாமும் அந்தந்த நிறுவனத்தின் பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.

எந்தவொரு நிறுவனத்தின் பணபலத்தைவிட, அவர்கள் தங்கள் நாட்டில் பெற்றிருக்கும் நற்பெயரும், வியாபார நாணயமும்தான் மற்றவர்களை ஈர்க்கும். இன்று பிரபலமான பல நிறுவனங்கள், பல்வேறு நாடுகளுக்கிடையே உள்ள நிறுவனங்களை ஒன்றிணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில நிறுவனங்கள் இதற்கென உள்ள வணிகச் சந்தையை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து, தாங்கள் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுடைய பலம், பலவீனங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தொழில் தொடர்பை விரிவுபடுத்துகின்றன.

தொழிலில் நிலைநிற்பதற்கு அல்லது தொடர்ந்து செல்வதற்கு, நம் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு அச்சப்படாமல், அந்த ஓட்டத்துக்கு ஈடுகொடுக்க மனதளவில் நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு செய்தால் நம் தொழில் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் மறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் நம் தொழில் நம் கண்முன்பே நொடித்துப்போகும்.

நாம் எந்தந்த நாட்டுடன் வியாபாரத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றோமோ, அந்தந்த நாட்டின் வியாபாரக் குறிக்கோள்கள், வியாபார உத்திகள், கலாசாரம் முதலியவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். எந்த நிறுவனத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலும், அந்த நிறுவனத்தின் மனிதர்களோடு பழகுகிறோம். அந்தச் சூழலுக்கும், புதிய மனிதர்களின் விருப்பு வெறுப்புகளை எடைபோட்டுப் பார்த்தும், நம் அணுகுமுறையைத் தக்கவாறு மாற்றிக்கொண்டும் செல்வது இன்றியமையாதது.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களின் வாங்கும், விற்கும் பொருளைப்பற்றி நாம் எவ்வாறு ஆராய்கிறோமோ, அதே போல் கொண்டு செல்லும், கொண்டு வரும் வழிவகைகளையும் நுணுக்கமாக ஆராய்வது முக்கியம். உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு நாம் பொருட்களைக் கொண்டு வரும் அல்லது கொண்டு செல்லும் மார்க்கங்கள் என்ன? கடல்வழி மார்க்கமா? தரைவழி மார்க்கமா? சுங்கத் தீர்வின் அளவு என்ன? எப்படி பேக்கேஜ் செய்வது? என்று பல கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

0

இளைய தலைமுறையினரின் கவனச் சிதறல்கள்

countering-media-influence“எழுச்சி மிகு எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள்தான்” இந்தியாவின் இன்றியமையாத தேவை. அம்மாதிரியான இளைஞர்கள் இருந்தால் போதும். வளமான இந்தியாவை உருவாக்கி விடலாம் என்றார் சுவாமி விவேகானந்தர். “‘இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்’ என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும்.” என்கிறார் மாண்புமிகு அப்துல் கலாம்.

இன்றைய தலைமுறை நுகர்வுக் கலாசாரத்தாலும் கவனச் சிதறல்களாலும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?  அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பதென்ன?
நுகர்வோர் மனநிலை:
ஏழையான சமூகத்தில், அவர்களுடைய தேவை எளிமையானது, வெளிப்படையானது, நேர்மையானது. அவை உணவு, உடை, உறைவிடம், நன்னீர், ஆரோக்கிய உடல்நலம் ஆகியவைதான். உள்ளூரில் தயாரிக்கும்/கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அவற்றைக் கொண்டே தங்கள் வாழ்வியலை நகர்த்துகிறார்கள். நடுத்தக் குடும்பங்களிலும், செல்வ வளமிக்க குடும்பங்களிலும்தான் “தேவைகளைத்”தாண்டி “விருப்பம்” பிரதானமாகியுள்ளது. நீண்ட நாள் ஆசைகள், திடீர் ஆசைகள், குழப்ப மனநிலை, மயக்க நிலை, அந்தஸ்து என பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வோர் மனநிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
நடுத்தரக் குடும்பங்களில்தான் பெரும்பாலும் பொருட்களை வாங்கிக் குவிப்பதா அல்லது சேமிப்பதா என்று முடிவெடுக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். நுகர்வோர் மனநிலைக்கு அடிமையாகிற சமூகத்தில் அவர்களை எது மகிழ்விக்கும் என அறியாமல்  குழப்பத்தில் உள்ளனர். செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைதான் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது.
பொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தங்களின் “மகிழ்ச்சி “அடங்கியுள்ளது என்பதைக் காட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்பு தாங்கள் “வளமிக்கவர்கள்” என்று காட்டுகிற மனப்பாங்கே உள்ளது. அதில்தான் அந்தஸ்து அடங்கியுள்ளது என  நினைக்கிறார்கள். எதிர் பாலியலை கவர்வதற்கும் மயக்குவதற்குமாக பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.  இதைத்தான் ” பகட்டான நுகர்வு” என வர்ணிக்கிறார் அமெரிக்காவின் பொருளாதார வல்லுனரும், சமூகவியலாளருமான தோர்ஸ்டீன் வெப்லென் (Thorstein Veblen). மகிழ்ச்சி எனச் சொல்லி பொருட்களை வாங்கிக் குவித்தாலும் பெரும்பாலும் அவர்கள் வாங்கிக் குவிக்கிற பொருட்கள்  பயனற்று இருப்பதைக் காண இயலும்.
தீர்மானிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் தங்களின் தேவைகளைக் கருதி குறிப்பிட்ட  சில பொருட்களை வைத்துக் கொள்வதே சமூக நுகர்வு (Social Consumption ) ஆகும். உதாரணமாக ஒருவர் மோட்டார் பைக் வைத்துக் கொள்ளுதல், மொபைல் போன் வைத்துக் கொள்ளுதல், வீடு வாங்கிக் கொள்ளுதல், தரமான பள்ளிகளில் குழந்தைகளைப்  படிக்கச் செய்தல் ஆகியவைதான் சமூக நுகர்வுக்கான காரணிகள்.
சுற்றத்தினருக்கு இணையாக வாழ வேண்டும். தங்களின் சுற்றத்தார் படிக்க வைக்கிற பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இதை நிறைவேற்ற விடுமுறை நாட்களில் கூட பணிபுரிகிறார்கள். ஓய்வு பெறும் நாள் வரை ஓயாது ஓடுகிறார்கள். ஒருவர் ஓடுவதைப் பார்த்து அடுத்தவர் ஓடுகிற சமூகமாகத்தான் நுகர்வு மனநிலை இவர்களை மாற்றியுள்ளது.
உதாரணமாக, ஐரோப்பிய அரசுகள்  தன்னல வயப்படுதலில் ( Self Exploitation ) ஒருவர் சிக்காமலிருக்க  வருடத்தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இவர்களின் நுகர்வு மனோநிலையால் பந்தைய குதிரைகளாக உள்ளனர்.
தொழில் நுட்பமும் நுகர்வு மனநிலையும்:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை பத்திரிக்கைகளின் காலம் என அழைக்கலாம். அதன் பின்னர் ஏற்பட்ட காலத்தை வானொலி மற்றும்  சினிமாக்களின் காலமாகச்  சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில்தான் தொலைக்காட்சி ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தையும், தற்போதைய காலத்தையும் கணினி, multimedia  மற்றும் டிஜிட்டல் காலம் என வர்ணிக்கலாம்.
இன்று ஏதேனும் ஒரு திரைக்கு முன்னால் பலமணி நேரம் இளைஞர்களும் குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள்.
தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்னரே பெரும்பாலும் விளம்பரங்கள் மக்களை ஆக்கிரமிப்பு செய்தன. சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் தரமானவை என உறுதி செய்தன. ஆகையால் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மீதான மோகம் வளர்ந்தது. தரத்தின் அடிப்படையில் விலை குறித்த கவலையின்றி பொருட்களை வாங்கினார்கள். இவர்களைத் தான் பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், அதன் அதிகாரிகள் குறி வைத்தார்கள். இதற்கு அவர்கள் தொலைக்காட்சி மற்றும் பிரபல இணையதளங்களான Google, Facebook போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டார்கள்.
தொலைக்காட்சியும் விளம்பரங்களும்:
இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்கள் குறித்த சில புள்ளி விவரங்களைக் காணலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 1990கள் வரை அரசு தொலைக்காட்சி சேவைகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்தன. 1990கள் முதல் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சி சேவைகள் உருவாகின.  2011 ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஏற்பட்ட செலவு 333.88  பில்லியன் இந்தியன் ரூபாய். இது 2010 ஆம் ஆண்டைக் காட்டிலும் 13% அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்ய 140.26 பில்லியன் இந்தியன் ரூபாயும் , பத்திரிக்கைகள் மூலம் விளம்பரம் செய்ய 133.02 பில்லியன் இந்தியன் ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில்  இந்தியாவில்  47.2% வீடுகளில் (150 மில்லியனுக்கும் மேலாக) தொலைக்காட்சி உள்ளது எனவும், 63 % மக்களின் கைகளில் மொபைல் உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. விளம்பரங்களின் மூலம் Google இணையதளம் 2011ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், Facebook இணையதளம் 1.8 பில்லியன் டாலர்களையும் வருமானம் ஈட்டியுள்ளது .
பெரும்பாலும் குழந்தைகளுக்கான உணவு வகைகள், குளிர் பானங்கள், சாக்லேட், மொபைல் போன், அழகு சாதனங்கள் பற்றிய விளம்பரங்களே அதிகமாக இடம் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்வதற்காக விளம்பரங்களை  மாடல் அழகிகளைக் கொண்டும் நடிக நடிகையர் மற்றும் விளையாட்டு வீரர்களை வைத்தும் வருமானம் ஈட்டுகின்றன உற்பத்தி நிறுவனங்கள்.
கவனச் சிதறல்களும் விளைவுகளும்:
அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் குழந்தைகளும்  இளைஞர்களும் ஒருநாளில் குறைந்த பட்சம் மூன்று மணிநேரம் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்றும், DVD அல்லது சினிமா பார்ப்பதில் ஒரு மணி நேரமும்  , கணினி மற்றும் டிஜிட்டல் மீடியா முன்பாக இரண்டு மணி நேரம் அமர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மூன்று மணி நேரத்தை ஒருநாளில் தொலைக்காட்சி முன்பாக செலவிடுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சியின் முன்பாகவே அதிக நேரத்தை இளைஞர்களும் குழந்தைகளும் செலவழிக்கிறார்கள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது சமூக நலனுக்கும் உகந்ததல்ல. தனி நபர் நலனுக்கும் நல்லதல்ல. பெரும்பாலும் இளைஞர்கள் தொலைக்காட்சியும் சினிமாவும் பார்ப்பதால் சிகரெட், குடிக்கு அடிமையாகும் போக்கும், பாலியல் சம்பந்தமான கெட்ட சிந்தனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் மூலமாக வன்முறை சிந்தனைகளும் வக்கிரச் சிந்தனைகளும் அதிகமாகின்றன.
தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டுள்ளனர். குடும்பத்துக்குள் கூடிப்பேசுதல் என்பது பெருமளவு குறைந்துள்ளது. குழந்தைகளும், இளைஞர்களும் தங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக்கூட காணாது தொலைக்காட்சி பார்ப்பதில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அதிக பணிச்சுமையும் கல்விச் சுமையும் காரணமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் விருந்தினரை சென்று பார்ப்பதிலும், வீட்டிற்கு வருகிற விருந்தினர்களை உபசரிப்பதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைக்  காணும் பொருட்டு தங்களின் செயல் திட்டங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். பலருக்கும் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன்னே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணமும் பெருகி உள்ளதைக் காண இயலும்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் சினிமா, பாடல், மற்றும் விளையாட்டு ஆகியவற்றை காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பெரும்பாலும் தேவையான விடயங்களை அறிந்து கொள்வதற்குப் பதிலாக பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டுமே தங்களின் ஆர்வத்தை செலுத்துகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் மத்திய மந்திரிகளைப் பற்றியோ, மாநில அரசின் அமைச்சர்களைப் பற்றியோ, நாட்டின் பொதுநலம் சார்ந்த பிரச்னைகள் பற்றிய அறிவோ ரொம்பவே குறைவாக உள்ளது அல்லது இல்லை என சொல்லலாம். ஒருவேளை சில மந்திரிகளை தெரிந்து வைத்தாலும் அவர்களின் அமைச்சரவை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வோ அது குறித்த அறிவோ இல்லை.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை சில புள்ளி விவரங்களுடன் காணலாம்.
அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உடற்பருமனாவதற்கும் தொடர்புள்ளது என RTL (Radio Television Luxumberg Entertainment channel) மற்றும் OECD (Organaisation for Economic Cooperation and developement)  ஆகிய இரண்டும் இணைந்து  நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஓடி விளையாடுவது குறைந்துள்ளது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து , அதில் காட்டுகிற உணவுப் பொருட்களையும், அதிக கொழுப்புள்ள தின் பண்டங்களை வாங்கி உண்ணுவதாலும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதாலும்தான்  உடற்பருமன் ஆகிறது.
OECD மற்றும் World Values Data Bank Survey ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் சமூக நலனில் அக்கறையின்மையும், பொது நலச்சேவை செய்வது பெருமளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. Social Trust மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் அதிகம் தொலைக்காட்சி பார்க்கிற நாடுகளில் ஊழலும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
நரம்பியல் விஞ்ஞானிகள் விளம்பரங்களுக்கும் நுகர்வு மனநிலைக்கும் நாம் ஏன் தள்ளப்பட்டுளோம் என்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள்.
முதலாவதாக மனித மூளையானது சூழ்நிலைக்கேற்றார் போல மாறும்  தன்மை கொண்டது. ஆகையால் கேட்கிற, பார்க்கிற விடயங்கள் மூளையில் எளிதாகப் பதிந்து விடுகின்றன. இது போன்ற காரணங்களால் மூளை காலத்துக்கேற்றார் போல தொடர்ச்சியாக புதுப்புது நிகழ்வுகளை பதிவு செய்து கொள்கிறது. தியானம் செய்வது மன அமைதியைத் தரும். ஆனால் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் மன அமைதி கெடும். மேலும் மகிழ்ச்சி இராது என நரம்பியல் விஞ்ஞானிகள் கருத்துரைக்கிறார்கள் .
இரண்டாவதாக பெண்களைக் கவர்ச்சியாகக் காண்பிப்பதாலும் பாலியல் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதாலும்  மனிதர்களின்  நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகின்றன.
மூன்றாவதாக விளம்பரதாரர்களால் அறிமுகம் செய்யப்படும் பொருட்களை மேலும் மேலும் வாங்க வேண்டும் என்ற நுகர்வு மனநிலையை இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் விளம்பரங்கள் ஏற்படுத்தியுள்ளன.
நான்காவதாக, பெரும்பாலும் தெளிவற்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம். ஆகையால் நாம் வாங்குகிற பொருள் தேவையா தேவையற்றதா என அறியாத குழப்ப நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.
விளம்பரங்களின் மூலமாக ஏற்பட்ட  அடிமை நுகர்வு மனப்பான்மையாலும், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாலும் மன அமைதி கெடுகிறது. இதிலிருந்து வெளிவர மனதைத்  தன்வயப்படுத்த வேண்டும். நுகர்வு கலாசாரத்திலிருந்து விடுபடவேண்டும். ஓய்வு நேரத்தை நல்வழிகளில் உபயோகப்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறந்த கல்வி, இயற்கையோடு இயைந்த தன்மை, அடுத்தவர்களோடு ஒருங்கிணைத்து செயல்படுதல் என சிறு வயதிலிருந்தே பள்ளிகளும் பெற்றோரும் இயங்கவேண்டும். வளமிக்க வாழ்வைத் திரும்பப்  பெறவும் தங்களை மேம்பட்ட சமூகவாதிகளாக அடையாளப்படுத்தவும் வேண்டுமானால் இளைய சமுதாயத்தின் கனவுச் சிதறல்களைத் தடுத்தாகவேண்டும்.
Sources:

மரண தண்டனை கொடுக்கலாம்!

anti-rape-protestsjan32013பள்ளி பயின்ற காலத்தில் எல்லாப் பாடப் புத்தகத்தின் அட்டையிலும் இந்திய வரைபடத்தில் வெள்ளை புடவை சுற்றிய ஒரு பெண் கையில் கொடியுடனும், தலையில் கிரீடத்துடனும் காட்சியளிப்பாள். அவளை நாம் இந்தியத்தாய் என்போம். நிலத்தை உழுவதற்கு முன் பூமி மாதாவை வணங்குவோம். பூஜையறையில், கோயில்களில் விதவிதமான பெண் தெய்வங்களை வழிபடுவோம். பெண் கடவுளுக்கு நிகரானவள் என்று நமக்கு எப்போதும் போதிக்கப்படுகின்றது.  இந்த வழக்கம் உலகில் வேறெங்கும் இல்லையென்றே எண்ணுகிறேன்.(இயேசுநாதரின் தாயாக இருப்பதால் மட்டும் மேரி மாதாவுக்குச் சிறப்பு).
ஐரோப்பாவிலும்,அமரிக்காவிலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிள்ளைகள் அவர்கள் தாய் தந்தையுடன் வசிப்பது இல்லை. வேலை கிடைத்தவுடன் தனியாகத்தான் இருப்பார்கள். திருமணம் செய்து கொள்வார்கள். சொந்த வீட்டுக்கே விருந்தாளிகள் போலதான் வருவார்கள். ஆனால் இந்தியர்களான  நாம் அப்படி வளர்வதில்லை.அம்மா என்பவள் தெய்வம், அவள் சொல்லே வேதம் என்று அவள் பாதங்களிலே கிடப்போம் அல்லது அப்படி சொல்வதில் பெருமை கொள்வோம். மேலும் அக்காவை இன்னொரு தாயாகவும் தங்கையை பிள்ளையாகவும்  பாவிப்போம்.
இந்தியக்குடும்பத்தில் இருக்கும்  ஆணுக்கு தன் குடும்பத்து பெண்களுடனான தொடர்பு மிகுந்த  நெருக்கமானது. எனவே பெண்களின் உளவியலை புரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு மிக அதிகம். அவர்கள் சந்திக்கும் உடல் ரீதியான பிரச்னைகளையும், வெளியே அவர்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகளும் அதனால் அவர்கள் படும் பாதிப்புகளையும் நாம் நன்கு அறிந்துகொண்டே தான் வளர்கிறோம். எனவே, இந்தப்பெண்களின் மூலமாக நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மைப் பக்குவப்படுத்தத்தான் வேண்டுமில்லையா? ஆனாலும் பள்ளிப்போகும் 8 வயது  சிறுமியை  கற்பழித்து, கழுத்தை நெறித்துக் கொன்று போடும் சம்பவங்களும், தாழ்ந்த சாதி மக்கள்  வசிக்கும்  கிராமத்தில்  புகுந்து சிறுமிகள்  முதல் பாட்டிகள் வரை கூட்டுப்புணர்ச்சி  செய்யும் போலீஸ்காரர்களும், ஒரு  பெண்ணை த் தாக்கி  அவளை  பலரும் கற்பழித்து  வீசியெறிந்து விட்டு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனிதர்கள் பலரும் இந்நாட்டில் பெருகக் காரணமென்ன?
நம்மிடத்தில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் பெருகிக்கொண்டே வருவதன் காரணம் பெண்ணின் அவசியத்தை உணர்ந்த அளவிற்கு அவளின் மதிப்பை, அவளின் சரிசமத்துவத்தை நாம் உணரவில்லை. அவள் என்னவாக இருந்த போதிலும் அவள் நமக்கு ஒரு படி கீழ் தான் என்ற எண்ணம் நம் ஜீனிலேயே பதிவாகி இருக்கின்றது.பெண்களாலே பிறந்து,பெண்களாலே வளர்ந்து,பெண்களுடனே வளர்ந்து அவர்களையே நாம் ஏய்க்கக் காரணம்  அதுவே. அவளை வெறும் உழைத்துக்கொட்டும் இயந்திரமாகவோ அல்லது செக்ஸ் டூலாகவோதான் நாம் பாவிக்கிறோம்.
மேலும் பெண் என்பவள் வீக்கர் செக்ஸ் ஆக இருப்பதால் அவர்களை ஏறி மிதிக்கும் மனோபாவம் வளர்ந்துவிட்டது. இது இந்தியாவின் தேசிய வியாதி. பெண்களை ஆபாசமாக கேலி கிண்டல் செய்வதெல்லாம்  நமக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. என்ன செய்தும் பேசாமல் போய்விடுவாள் என்ற சிந்தனையும், தீவிரமற்ற  சட்டங்கள்  ஒன்றும்  பெரிதாக செய்யாது  என்பதும்  இது போன்ற  ஆண்களுக்கு  சாதகமாக இருக்கிறது. பாட்டன் முப்பாட்டன் காலப்பெண்கள் தொடங்கி இன்று நம் தாய் வரை பெரும்பாலும் வீட்டுள் அடங்கியே இருக்கிறார்கள், அவர்களையே நாம் பார்த்து வந்திருக்கிறோம். திடீரென்று இன்றைய பெண்களின் நாகரிக முன்னேற்றத்தை நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சகோதரியையும் மனைவியையும் இந்த விஷயத்தில் அடக்கி வைக்கவே  நினைக்கிறோம்.
அலுவலகத்தில்,பள்ளியில் கல்லூரியில் எதிர்த்தோ, துணிச்சலாகவோ  பேசும்  பிற பெண்களை அசிங்கமான பெயர் வைத்து அழைப்போம். ஏனென்றால் ஒரு பெண்ணை கேவலப்படுத்த, மட்டந்தட்ட, குத்திக்கிழிக்க  நாம் எடுத்துக்கொள்ளும் ஆயுதம் அவள் சென்சிடிவாக வைத்திருக்கும் கற்பு மட்டுமே. டெல்லியில் மிகக்கொடூரமான வன்புணர்ச்சி நடந்ததற்கு வித்தே மேலே சொன்ன விஷயங்கள் தான்.
தன் நண்பனுடன் இரவில் பஸ்ஸில் ஏறிய பெண்ணை, வெளியே ஆணுடன் இந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை என்று அகங்காரமாக கேட்கப்பட்டு கடுமையாக இரும்புக்கம்பியால் தாக்கப்படுகிறாள். அது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணை நாசப்படுத்தியதற்கு காரணம் நிச்சயமாக செக்ஸ் வறட்சி இல்லை. அந்த இரவில்  அந்த மிருகங்களின்  நோக்கம் தங்களுடைய செக்ஸ் இச்சைகளை பூர்த்தி செய்துகொள்வது இல்லை. சகமனிதனை பற்றி சிந்திக்காத திமிர். நாலு பேர் சேர்ந்துவிட்டால் எந்த பொறுக்கித்தனமும் செய்யலாம்  என்கிற திமிரின் நீட்சி.
உயர்குடி, பதவித்திமிர்

இந்தியாவில் நடக்கும் முக்கால்வாசி வன்கொடுமைகளுக்குக் காரணம் ஜாதி வெறியும், பதவித் திமிரும் தான். இதை நிறைய உண்மைச் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இந்தியாவை உலுக்கிய அனைத்து சம்பவங்களும் தாழ்ந்த சாதிக்கோ, ஏழை மக்களுக்கோ தான் நடந்தேறி இருக்கின்றன. ஒரே ஒரு உண்மை கதையை இங்கே சொல்கிறேன்.
1992ல் ராஜஸ்தானிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் ‘குஜ்ஜார்’ உயர் குடியை சேர்ந்த ராம் கரன் என்பவன் தன்னுடைய ஒன்பது மாதக் குழந்தைக்கு திருமணம் (சரியாகத்தான் எழுதி இருக்கிறேன் வருடம் அல்ல மாதம் தான்!) செய்ய வைக்க முயன்றான். அதே ஊரில்  பெண்கள் முன்னேற்றத்திற்கு, ஏழை மக்களுக்கென்று சுய உதவிக்குழு நடத்திவந்த பன்வாரி தேவி என்ற தாழ்ந்த ஜாதிப்பெண் அதை போலீசில் சொல்லி திருமணத்தை நிறுத்திவிட்டாள். (ஆனால் மீண்டும் அடுத்த நாளில் அது போலீஸ் உதவியுடன் நடந்தது என்பது வேறு விஷயம்).
ராம் கரனும் அவன் கூட்டாளி ஐந்து பேரும் பன்வாரி தேவியை அவள் வீட்டிலேயே அவன் கணவன் எதிரிலேயே கற்பழித்துச்சென்றனர். உடனே அங்கிருந்து தன் கணவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற பெண்ணை விசாரித்த போலீஸ் அவளின் ரத்தம் தோய்ந்த கீழாடையை சாட்சிக்காக வாங்கி வைத்துக்கொண்டது. உண்மையாகவே அவள் கெடுக்கப்பட்டாளா என்று சந்தேகித்த போலீஸ் அவளை மருத்துவமனைக்குகச் சென்று டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் வாங்கிவரச் சொன்னது. அங்கே லேடி டாக்டர்கள் வேலைக்கு வராததால் (சட்டப்படி ஆண் டாக்டர்கள் பரிசோதனை செய்யக்கூடாது), அங்கிருந்து அவள் 55 கி.மீ தூரத்தில் உள்ள சவாய் மான்சிங் (ஜெய்பூர்) மருத்துவமனைக்கு cervical smear டெஸ்டுக்கு அனுப்பப்பட்டாள்.
அங்கே மாஜிஸ்ட்ரேடின் அனுமதி வேண்டும் என்று கூறி காலம் கடத்தப்பட்டது 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்படவேண்டிய சோதனை 52 மணி நேரம் கழித்துதான் செய்யப்பட்டது. இந்த கேஸ் மாவட்ட நீதிமன்றத்துக்குப் போக, கீழ்கண்டவாறு தீர்ப்பு வந்தது. ‘குஜ்ஜார் உயர் குடியை சேர்ந்தவர்கள் ஒரு தலித் பெண்ணை கற்பழித்திருக்க வாய்ப்பில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும்  ஒருவருக்கொருவர் சொந்தம் என்பதால் அவர்கள் கூட்டுப்புணர்ச்சியில் ஈடுபட வாய்ப்பில்லை. பல மணி நேரங்களுக்குபிறகு செய்யப்பட்ட செர்விகல் சோதனை பொய்த்துப்போனதால் பன்வாரி பொய் சொல்கிறாள்.’
விடுதலையான ஐந்து பேருக்கும் ஊர் எம்எல்ஏ தலைமையில் விழா எடுக்கப்பட்டது. அதன் பின் அந்த ஊரில் பன்வாரி குடும்பம் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டது. பின்னாளில் பன்வாரி தேவியின் கதை முந்திரா என்ற டைரக்டரால் படமாக எடுக்கப்பட்ட போது, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தோண்டித்துருவி எடுத்து எழுதிய போது இந்தியா முழுக்க பரவலாக அறியப்பட்டது. ஒரு  பெண் கற்பழிக்கப்பட்டபின் தானே முன் வந்து இவ்வளவு தைரியமாக கோர்ட், கேஸ் என்று அலைந்து போராடியது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை. இதன் பின் ராஜஸ்தானில் பெண்கள் மத்தியில் நிறைய மாற்றங்கள் வரத்தொடங்கியது. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான நிறைய பெண்கள் புகார் கொடுக்க முன்வந்தனர்.பின்னாளில் பன்வாரி தேவி ஐநா அரசின் பெண்கள் விருதைப் பெற்றாள். ஆனால்  கடைசி வரைக்கும் அவள் கேட்ட நியாயம் மட்டும் கிடைக்கவே இல்லை.
மேலே சொன்னது லட்சத்தில் ஒன்று தான். இன்னும் கஷ்மீர், மிசோரம் போன்ற பார்டர்களில் இந்திய ராணுவ வீரர்கள் விசாரணை என்ற பெயரில் துப்பாக்கி முனையில் கிராமப்பெண்களை கூட்டம் கூட்டமாக அவர்கள் கன்னிகளா, கிழவிகளா, கர்ப்பமானவர்களா என்ற பாகுபாடில்லாமல் செய்த கொடுமைகள் ஏராளம். 1992ல் தமிழ் நாட்டில் தருமபுரி-வாச்சாத்தியில் 259 போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சந்தன கடத்தல் சோதனை என்ற பெயரில் உரை அடித்து நாசம் செய்து இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக பதினெட்டு பெண்களை கூட்டுப்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு 2011ம் வருடம் தான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்குள் 50 பேருக்கு மேல் இறந்து விட்டனர்.

மிகுநாகரீகம் 

டிவியில் பார்த்தபோது “எங்கள் ஆடைகளை சரி செய்யச்சொல்லாதீர்கள்,உங்கள் பையன்களை கண்டித்து வையுங்கள்” என்ற வாசகம் தாங்கிய அட்டைகளை ஏந்தியபடி பெண்கள் கூட்டம் கோஷமிட்டுக்கொண்டிருந்தது. பெண்கள் கவர்ந்திழுக்கும் உணர்சிகளை  தூண்டும்  ஆடைகளை அணிவது தான் பாலியல் அத்துமீறலுக்கு,கற்பழிப்புக்கு மூலக்காரணமா? இருக்க முடியாது. ஏனென்றால் பள்ளி செல்லும் நான்கு வயது சிறுமியோ ஒரு தலித்பெண்ணோ அல்லது பழங்குடிப் பெண்ணோ எப்படிப்பட்ட கவர்ச்சியான உடைகளளை அணிந்துவிடப்போகிறாள்?
நகரமோ கிராமமோ பெண்களின் மீதான ஆண்களின் மனோபாவம் ஒன்று போலவே இருக்கிறது. பீட்சா, கோக் தின்று கொண்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு  காரில் சென்றாலும் அவர்கள் மனதளவில் கற்கால மனிதர்களாகவே இருக்கின்றனர். மேலும் அமெரிக்க,ஐரோப்பாவின் நகரங்களில் நூற்றுக்கு ஐந்து பேர்கள் தான் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பார்கள்.  ஆனால் இந்தியாவின் பெருநகரங்களில் அப்படி இல்லை. இங்கே பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து கூலிப்பிழைப்புக்கும் சிறு தொழில்களுக்கும் வந்தவர்களும் தான் ஏராளம். இவர்களுக்கும் பணத்தில் புரளும் மேல்தட்டு மக்களுக்கும் சமுதாய இடைவெளி ரொம்ப அதிகம்.
உதரணமாக பெங்களூரில் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு IT கம்பனிகளில் வேலை முடிந்து நடு  இரவில் கம்பெனி கார்களில் வீடு திரும்பும் பெண்கள் நிறைய பேர் அந்த டிரைவர்களால் கற்பழித்து கொல்லப்பட்டனர். காரணம் சமுதாய அந்தஸ்து மற்றும் இடைவெளியால் வரும் காழ்ப்புணர்ச்சி.
இப்போது தான் ஒரு புரட்சி ஒன்று கிளம்பி பெண்கள் பாதுகாப்புக்கென்று  பல புதிய சட்டங்கள் வரப்போவதாக  தெரிகின்றது. இதன் மூலம் தண்டனைகள் கடுமையாகலாம், ஆகவேண்டும். எப்போதும் இல்லாத அளவுக்கு  Gender Equality and the Empowerment of Women என்ற ஐநா அமைப்பு பெண்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியஅரசை வலியுறுத்தி இருக்கிறது.
எத்தனையோ  கிராமங்களில், எத்தனை எத்தனையோ  பெண்கள்  கூட்டம் கூட்டமாக  நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் விழிக்காத இந்தியா, டெல்லி போன்ற பெருநகரத்தில் ஒரு மேல்வர்க்கப்பெண் வன்கொடுமையால் கொல்லப்பட்டபோது விழித்திருக்கிறது. இனி கடுமையான சட்டங்கள், தண்டனைகள், பெண்களுக்கு 24 மணிநேர சேவை மையம், இரவில் ரோந்து போலீஸ் அதிகரிப்பு என்று பரபரப்பாக சட்டங்கள் ஏற்படுத்தப்படலாம். அவை   நகர்புற பெண்களின் பாதுகாப்பைக் கூட்டலாம். ஆனால் கீழ்நிலை மக்களுக்கும், பழங்குடி இனத்தவருக்கும் இதனால் எந்த விடிவும் வரப்போவதில்லை.
ஏனென்றால் சட்டத்தை நடத்தும் துறைகள் தான் பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை செய்திருக்கின்றன. அப்படி உண்மையான சீர்திருத்தம்  கொண்டு வரவேண்டுமென்றால்  மொத்தமாகவே  இதை  வேறு  பார்வை  கொண்டு  பார்க்க வேண்டும். மேலும்  என்னதான் சட்டங்கள் வந்தாலும் வன்முறையில் புரையோடிப்போன நாடு இது.  அவ்வளவு சீக்கிரம் திருந்திவிடாது. இங்கே வளர்ச்சி என்பது வளர்ச்சியாக இல்லாமல் வீக்கமாக இருக்கிறது. ஆகவே  பெண்கள்  மிகு நாகரிகங்களை முழுமூச்சுடன் பேணி வளர்க்க முயற்சிக்காமல் இருக்கலாம்.
அழகாக உடையணிந்து கொள்வதில், தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதில் தவறேதும் இல்லை. ஆபாசமாக அணிவது தான் ஆபத்து, அவசியமில்லாதது கூட. சௌகரியத்துக்கு உடையணிபவர்களைக் காட்டிலும் அடுத்தவர்களை சஞ்சலப்படுத்த  உடையணிபவர்களே  அதிகம். உள்ளத்திலும் சிந்தனையாலும் உறுதியாக நிற்பவர்கள் சமுதாயத்தை சந்திக்க தைரியமிருப்பவர்கள் உடையை பற்றி பெரிதாக கவனமெடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உடை, உணவு, படிப்பு முதலான விஷயங்களில் மட்டும் மாற்றம் கொண்டு நாகரிக வளர்ச்சியடைந்து விட்டதாக மார் தட்டிக்கொள்ளும் இந்த தேசத்தில் பெண் சுதந்தரம் என்பது எட்டாப்பழம் தான். ஆகவே உண்மையான மாற்றம் வரும் வரை (வருமா?) இதில் கவனமெடுத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.
இதெல்லாம் நாகரிக வளர்ச்சி, வெளிநாட்டுக் கலாசாரம் என்று கேட்பவர்களிடம் ஒன்றே ஒன்று தான் திரும்பக்கேட்டாக வேண்டும். அவர்களிடம் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது? அதில் எத்தனையை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்? இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுப் பெண்களிடம்கூட ட்ரெஸ்-கோட் என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் மீறினால் பெற்றோர்களும் கல்வி நிர்வாகமும் அதை நிச்சயம் கண்டிப்பார்கள்.
தூக்கு தண்டனை

தற்போது தண்டனைக்குக் காத்திருக்கும் அந்த மிருகங்கள் அன்றிரவு அப்பெண்ணை இரும்புக்கம்பியால் அடித்து  பலமுறை புணர்ந்திருக்கின்றனர். அதோடல்லாமல் கம்பியை அவள் பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்தி பலமாக இழுத்ததால் அவள் சிறுகுடல், பெருங்குடல் வெளியே சரிந்திருக்கிறது. 5%குடல் பகுதிதான் வயிற்றுக்கு உள்ளே இருந்ததாக சப்தர்ஜங் மருத்துவமனை டாக்டர் ஒருவர் தெரிவிக்கிறார்.மேலும் பஸ்ஸில் இருந்து வெளியே தூக்கிப்போடப்பட்டதால் தலையில் பலமாக அடிபட்டு மூளையில் ரத்தம் உறைந்து, உடலின் முக்கிய பாகங்கள் செயலிழந்து மரணமெய்தி இருக்கிறாள்.
கைதாகியுள்ள ஆறு பேரில் ஒருவன் மைனர். அவன் செய்த செயலால்தான் அந்தப்பெண் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டாள் (அதை  என்னால் இங்கே எழுத முடியவில்லை). இவ்வளவு கொடூரத்தைச் செய்தவர்களுக்கு மரணதண்டனை தான் கொடுக்கவேண்டும் என்பது பலரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில்  சொல்கிறார்கள்.  இது போன்ற குற்றங்களுக்கு இந்த வழக்கில் மரண தண்டனை கொடுத்து பெஞ்ச்மார்க் அமைக்கலாம். திட்டமிட்டு, தெளிவான சிந்தனையுடன், தீர்மானமாகச் செய்யும் குற்றங்களுக்கு, பதவித் திமிரில் செய்யப்படும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறேதுமில்லை.

0

இப்ராஹீம்

கணவனும் மனைவியும்

The successful agreementசுயதொழில் பற்றிய கருத்தரங்குகளில் பெருமளவில் கேட்கப்படும் ஒரு கேள்வி இது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாமா? அதன் சாதக பாதகங்கள் என்ன? மேடம், என் மனைவி வீட்டுல சும்மா சீரியல் பார்த்துக்கிட்டிருக்காங்க, அவளுக்கு ஏதாவது தொழில் கத்துக்கொடுங்க என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். பெண்களும் இதே போல் கேட்டிருக்கிறார்கள். நான் என் கணவனோடு இணைந்து தொழில் தொடங்கவேண்டுமா அல்லது தனியாகவே தொடங்கவேண்டுமா?

தொழில் என்பது என்னை பொறுத்தமட்டில் பெருமளவு அறிவு சம்பந்தப்பட்டது. மனிதர்களை எடைபோடவும் சந்தையைப் புரிந்துகொள்ளவும் முடிவுகள் எடுக்கவும் ஆற்றல் படைத்தவர்களே தொழிலில் இறங்கவேண்டும். குடும்பம் என்பது சற்று மாறுபட்ட அமைப்பு. உறவுகளிலும் உணர்வுகளிலும் உண்மை இருந்தால் போதுமானது. புத்திபூர்வமான அணுகுமுறை பல சமயங்களில் குடும்பச் சூழலை இயந்திரத்தனமாக மாற்றிவிடும் அபாயமும் உண்டு.

சமீபத்தில் பத்திரிகையில் படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. அதிகமான குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் மனைவியும், அதிகமாக நிறைகளை மட்டுமே சுட்டிக் காட்டும் நட்பும், ஒருவனை என்றுமே உயர்த்துவதில்லை. தொழிலென்று வரும்போது, கணவனோ மனைவியோ தங்களது பலம் அல்லது பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தொழிலை வழி நடத்திச் செல்லும் திறமை யாருக்கு அதிகம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். தலைமைப் பண்பு அதிகமுள்ள அந்த நபரை இன்னொருவர் ஏற்று அங்கீகரிக்கவேண்டும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது. ஒருவேளை,  மனைவி தலைமேற்கும் பட்சத்தில், அவரை முன்னிலைப்படுத்தி தொழிலைக் கொண்டு போவதில் கணவனுக்கு எந்தவித ஈகோவும் இருக்கக்கூடாது. நட்புணர்வுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் இருவரும் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் அங்கே தொழில் வளர்ச்சி  பெருகும்.

தொழில் நிமித்தமாகத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சமயங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கவேண்டியது அவசியம். ஒவ்வொரு தொழிலும், தட்பவெப்ப மாறுதல்களைப் போல் மாறுதலுக்கு உட்பட்டதே. வளமையான வசந்த காலங்களில் லாபத்தை அனுபவிக்கவும் தொழில் நலிவடையும் சமயங்களில், அந்தத் துன்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் இருவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் தொழில்களில் தொழில் வளர்வதை விட, குடும்பச் சூழலில் நிம்மதி பறிபோவதுதான் அடிக்கடி நடந்துவிடுகிறது. இதற்கு தொழில் காரணமல்ல. சமூகத்தின் ஆண் பெண் கண்ணோட்டமே காரணம்.
பொதுவாக, பெண்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்ட முன்வரும் ஆண் வர்க்கம், தன் மனைவி என்று வரும்பொழுது, பெண்களின் புத்திக்கூர்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணின் கருத்துக்கு, வீட்டில் பெண் மறுப்பளித்தால் அது அவளுடைய ஆணவமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.

பெண்களும் பெரும்பாலும் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றனர். அதிகம் அடங்கிபோவது அல்லது அதிகம் அடக்கப் பார்ப்பது. இரண்டில் இருந்தும் விடுபட்டு, அவரவருக்குரிய இடத்தில் இருந்துகொண்டு அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொள்ளும்போதுதான் வாழ்க்கை அமைதியாகச் செல்லும்.

கணவன், மனைவி இருவருமே அறிவுகூர்மையில் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், தொழில்களைத் தனித்தனியாக செய்வதில் தவறில்லை. ஆண், பெண் என்ற பாகுபாட்டை மறந்து, தொழில் என்று வரும்போது, ஒருவர் மற்றவரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெறவேண்டும். ஒரு தொழிலுக்கு பல திறமையாளர்கள் தேவைப்படலாம். ஆனால் முன்னிலைப்படுத்தப்படும் நபர் ஒருவராக இருப்பது நலம்.

பொதுவாக பணம் என்று வரும்பொழுது, பெண்கள் அதிகபட்ச பாதுகாப்பை மனதில் கொண்டு செயல்படுவர். ஆண்களோ அது சாம்ராஜ்யமாக விரிவடைவதில் அதிகமாகக் கவனம் செலுத்துவார்கள். பெண்கள் தொழில் செய்வதில் பெரும்பாலாலும் ஒரு நேர்த்தி, ஒழுங்கு முறை இருக்கும். ஆனால் பிரம்மாண்டங்களை அவ்வளவு எளிதில் அடைய மாட்டார்கள்.

இதற்கு விதிவிலக்குகளும் இருக்கலாம். பிரம்மாண்டத்தை உருவாக்கும் திறமை இருப்பினும், பெண்கள் பொதுவாக சிறிது அடக்கி வாசிக்கும் மனோபாவத்தை உடையவர்களாக இருப்பர். ஆண்களோ இதற்கு முற்றிலும் வேறாக, தொழில் சாம்ராஜ்ஜியங்களை நிறுவுவதில் அதிக ஆர்வம் காட்டுவர். மனைவிக்கு கணவனைப் போல் சிறந்த பிசினஸ் பார்ட்னர் கிடைப்பது அரிது. அதேபோல் கணவனுக்கும் நேர்மையான தொழில் பங்காளர் அமைவது அரிது.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் திறமையைக் கண்டு அவரை ஊக்குவித்து, உலகப் பாடகியாக்கிய பெருமை திரு. சதாசிவம் அவர்களையே சாரும். இன்றும் திருமதி. சுதா ரகுநாதன், திருமதி. நித்யஸ்ரீ  மகாதேவன், நளினி சிதம்பரம், கவிஞர் தாமரை, சுகாசினி மணிரத்தினம், ஐஸ்வர்யாராய் பச்சன், வாணி ஜெயராம் போன்றோர் உள்ளனர். பெண்களை முடக்காமல், அவர்களை முன்னிலைப்படுத்தி, ஊக்குவிக்கும் பெருந்தன்மை இருக்கும்பொழுது, பெண்கள் சாதனையாளர்களாக வர முடியும்.

குடும்ப வேலைகள் என்று வரும் பொழுது, சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளுதல் என்று பலவற்றிலும், ஆண் இறங்கி வந்து வேலைகளை சமமாக பங்கிட்டுக் கொள்ளும் போதுதான், பெண் பதட்டமின்றி வெளி வேலைகளைக் கவனிக்க முடியும். ஆனால் ஆண்களில் ஒரு பிரிவினர், ‘நான்  வெளியில் போவதைத் தடுக்கவில்லையே, மேலே படிப்பதைத் தடை செய்யவில்லையே, வேலைக்குப் போவதை மறுக்கவில்லையே, நானும் சுதந்தரம் கொடுத்துதான் இருக்கிறேன்’ என்று சொல்வார்கள்.

ஆனால் இவர்கள் பெண்களிடம் ஓர் அஸ்திரத்தைப் பிரயோகிப்பார்கள். ‘நீ காலையில் எழுந்து எல்லா வீட்டு வேலை, சமையல் இன்றும் பிற வேலைகள், குழந்தைகள் பராமரிப்பு, சில்லரை வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, மாலை இரவு மெனுவரை  பிளான் செய்தபின்னர், என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்!’

இதை சொல்வது ஆண்களுக்கு எளிதானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்பொழுது உடலளவிலும் மனரீதியிலும் எளிதில் பலமிழந்துவிடுகின்றனர். அதற்குமேல் தொழில், வேலை போன்றவற்றில் சுமையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு மாறாக குடும்பப் பொறுப்புகளை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு, குழந்தை பராமரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஆண்கள், பெண்களை முன்னேற்றினால் அதிக அளவு தொழில் மாற்றங்கள் ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. கணவன் மனைவி இவர்களுக்கு மட்டும் இவை பொருந்தும் என்பதில்லை. குடும்ப உறவினருக்கிடையே நடக்கும் எந்தத் தொழிலிலும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் இரட்டையர்களான சூலமங்கலம் சகோதரிகள், ஹைதராபாத் சகோதரர்கள், பிரியா சகோதரிகள், கணேஷ் குமரேஷ் போன்ற பலரும், சுருதி பிசகாமல் ஒன்றிணைந்து இசையை வெளிப்படுத்தும் பொழுது, அது அதிக பட்ச உத்வேகத்தோடு, திறமைகள் உயர்ந்து வெளிப்படுகின்றன என்பதே உண்மை. சுருதி பிசகாத இசையைப் போல் லாபம் குன்றாத தொழிலும் ஒன்றிணைந்து இயங்குதல் என்பது மிக அவசியம்.

0