அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே…

kamal_1324716gபுன்னகை மன்னன் படத்தில் கதாநாயகி ரேவதி சிங்களப் பெண்ணாக வருவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சில்லறை வில்லனாக வருவார்கள். அவர்கள் சிங்களப் பெண்ணைக் கடத்துவதாகவும், கமல்சார் அவர்களை அடித்து விரட்டுவதாகவும்கூட காட்சி உண்டு. சிங்களப் பெண்ணின் தந்தைதான் க்ளைமாக்ஸில் வெடிகுண்டு வைத்துக் கொல்வார் என்றாலும் அதற்கு உதவுவது இலங்கைத் தமிழ் கதாபாத்திரங்கள்தான். இது இலங்கையில் இன அழித்தொழிப்பு படு மும்மரமாக நடந்த காலகட்டத்தில் வந்த படம்.

வேட்டையாடு விளையாடு படத்தில் ஹோமோசெக்ஸ்காரர்களாகச் சித்திரிக்கப்படும் வில்லன்களுக்குத் தூய தமிழ்ப்பெயர். தெனாலி படத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பேசும் கதாபாத்திரம் ஒரு கோமாளியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

சிட்ஃபண்ட் நடத்துபவர்கள் ஏழை எளிய மக்களின் பணத்தையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு ஓடியபோதுதான் சிட்ஃபண்ட் நடத்தி ஏமாற்றப்பட்டு சின்னாபின்னமாகும் நல்லவர் ஒருவரைப் பற்றி படம் எடுத்தார்.

தென் மாவட்டங்களின் சாதி கலவரங்களுக்கு தேவர் ஜாதி அடிப்படைவாதிகளே காரணமாயிருக்க, கமலோ தொடர்ந்து தேவர் ஜாதிப் பெருமிதத்தையே தன் படங்களில் இடம்பெறச் செய்துவந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் செயல்பட்டும் கமலுக்குத் தமிழகத்தில் ஒருவகையான முற்போக்கு பிம்பம் உருவானதற்கான முக்கியக் காரணம் அவர் இந்து மதத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சிப்பதுதான். அதையும் கூர்ந்து கவனித்தால் அவர் சைவ இந்து மதத்தை மட்டுமே எள்ளி நகையாடுவது தெரிந்திருக்கும்.

இதுதான் அவருடைய அரசியல் செயல்பாடுகள். இவற்றாலெல்லாம் பெரிய அபாயம் எழுந்ததில்லை. ஆனால், மாறுபட்டுச் சிந்திக்கிறேன் என்ற போர்வையில், இப்போது சர்வதேச ரவுடி அமெரிக்காவின் தரப்பு நியாயத்தை எடுத்தியம்பக் கிளம்பியிருக்கிறார். இது மிகவும் தவறானது; கேவலமானது. ஹிட்லரைப் பற்றிப் படமெடுப்பதாக இருந்தால் ஹிட்லர் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவார் என்று நினைக்கிறேன்.

பேசாப் பொருளைப் பேசுதல் என்பது வேறு. அதிகார மையத்தின் பக்கத்தில் இருக்கும் அரைகுறை நியாயங்களைப் பேசுவது என்பது வேறு. கமல் இரண்டாவதைத்தான் கால காலமாகச் செய்துவருகிறார். அந்த வகையில் அவர் ஒரு கலைஞன் என்ற மரியாதைக்கு ஒரு காலமும் உரியவர் அல்ல. அவரும் தன்னை வெளிப்படையாக ஒரு வியாபாரியாகத்தான் அடையாளப்படுத்தியும் கொள்கிறார். அப்படி இருக்கும்போது அவருடைய விஸ்வரூபம் படத்துக்குத் தடை விதிக்கப்பட்டதை ஒரு கலைப்படைப்புக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாகவும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கமலின் இந்தச் செயலானது செருப்பு நிறுவனம் ஒன்று காலணிகளில் இந்து தெய்வங்களின் படத்தை அச்சிட்டு வியாபாரம் செய்ய முயன்றதைப் போன்ற ஒரு செயல்தான். அவர்களைப் பொறுத்தவரை சீப் பப்ளிசிட்டியில் ஆரம்பித்து விற்பனையைப் பெருக்க உதவும் ஒரு தந்திரம் அது. ஆனால், ஒரு வியாபாரிக்கு மக்கள் கூட்டத்தில் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அவர்கள் எவ்வளவு சிறிய தரப்பாக இருந்தாலும் இழிவுபடுத்த எந்த அதிகாரமும் கிடையாது. இங்கு சுதந்தரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, ஒரு கலைஞனுக்குத் தரவேண்டிய மரியாதையை ஒரு வியாபாரிக்கு வீணடிக்காமல் இருப்பதுதான் ஒரு சமூகத்துக்கு நல்லது.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதலில் டி.டி.ஹெச்சில் படத்தை வெளியிடுவதாகப் பொய் சொல்லி மக்களிடம் இருந்து பணத்தைக் கறந்தார். படத்தின் தேதியைத் தனது சொந்த வசதிக்காக மாற்றி வைத்ததாகச் சொன்னபோது கூட தனது மீடியா பார்ட்னர்களுக்கு நன்றி தெரிவித்தவர் பணம் கட்டிய பார்வையாளர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. இஸ்லாமிய கூட்டமைப்பினருக்குப் படத்தைப் போட்டுக் காட்டியவர் அவர்களுடைய உணர்வுகளுக்குத் துளியும் மரியாதை செலுத்தவில்லை. கதை நிகழும் களம் ஆஃப்கானிஸ்தான். அங்கே தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களாக முஸ்லிம்களைத்தானே காட்ட முடியும் என்று இன்று நியாயம் பேசுகிறார். (முஸ்லிம்களை தீவிரவாதியாகக் காட்டத்தான் ஆஃப்கானிஸ்தானைக் களமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் கமல் என்கிறார்கள் தமிழக முஸ்லிம் கூட்டமைப்பினர். இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதாவது அதில் இந்து அடிப்படைவாதிகளை கட்டம்கட்டப்போகிறார். இப்போது இஸ்லாமியர்களுக்குத் தன்மீது ஏற்பட்ட கோபத்தைச் சரிக்கட்டும் வகையிலும் தனது முற்போக்கு பிம்பத்துக்கு ஏற்பட்ட அடியை சீர் செய்யும்வகையிலும் அந்தப் படத்தை அதீதமாக எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. ‘கலைஞனல்லவா’, இப்படித்தான் இருப்பார்.)

உன்னைப் போல் ஒருவன் படத்தைப் போல இந்து ஆயுத வியாபாரி உதவுவதாக ஆஃப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட படத்தைக் காட்ட முடியாதுதான். இந்த விஷயம் பிரச்னையை உருவாக்கும் என்பதால், கதாநாயகனை ஒரு முஸ்லிமாகக் காட்டி பேலன்ஸ் செய்யப் பார்த்திருக்கிறார். ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இந்த பம்மாத்தை நன்கு புரிந்துகொண்டுவிட்டதால் கமல் சொல்லும் எந்த சமாதானத்தையும் ஏற்க முன்வரவில்லை. இஸ்லாமியர் அமைப்பினர் படத்துக்குத் தடை கோரியதில் ஓரளவு நியாயம் உண்டு என்றாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தியவிதமும் பேசிய பேச்சுகளும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவையே.

சோவியத் ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா இஸ்லாமியர்களைத் தனது எதிரியாக வளர்த்தெடுத்து வந்திருக்கிறது. இரட்டை கோபுரத் தாக்குதல் என்பது அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செய்த அநியாயங்களுக்கான பதிலடியே தவிர அது முதல் தாக்குதல் அல்ல. அதைச் சாக்காக வைத்து அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் எதிராக நடத்தி வரும் அராஜகங்கள் எல்லாம் குறைந்தபட்ச அரசியல் வாசிப்பு உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மைகளே. அப்படியிருக்க அமெரிக்கர்களை நல்லவர்களாகக் காட்டி ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அது அடிப்படையிலேயே இஸ்லாமியருக்கு எதிராகிவிடுகிறது. அதிலும் ஆஃப்கானிஸ்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் என படத்தை எடுத்துவிட்டு படத்தைப் பார்த்தால் நீங்கள் எனக்கு தலை வாழை இலை போட்டு அன்லிமிடட் பிரியாணி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஒருவருக்கு எவ்வளவு தெனாவட்டு இருக்கவேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு நடந்துகொள்ளும் விதம் சரியென்றேபடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களைப் போல் மிதமாகப் போராடுபவர்கள் அல்ல. மேற்கத்திய கிறிஸ்தவர்களைப் போல் தந்திரமாக ரவுடித்தனம் செய்பவர்களும் அல்ல. இதற்கு முன்பே பம்பாய் படத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துவைத் திருமணம் செய்வதாகக் காட்டியதற்கே வெடி குண்டு வீசியவர்கள், அமெரிக்க தூதரகத்தை வெகு சமீபத்தில் முடக்கியவர்கள். அரசு விதித்த தடையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து சில திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. கரூரில் இரண்டு திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கோவையில் வேறு பல குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இப்படி நடக்கும் என்பது அரசுக்கு முன்பே உளவுத்துறை மூலம் தெரியவந்திருக்கலாம். அதன் அடிப்படையில் அரசு படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்திருக்கக்கூடும். எனவே, இது சரியான செயல்பாடுதான். ஆந்திரம், மலேசியா, இலங்கை என பல இடங்களில் இந்தப் படத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இது சொந்தப் பகை காரணமாக ஜெயலலிதா எடுத்த தவறான முடிவாகச் சொல்லவே முடியாது.

எனவே, ரஜினிகாந்தும், கலைஞர் கருணாநிதியும் சொல்லியிருப்பதுபோல் இஸ்லாமிய தரப்பினருக்கு ஏற்பில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு படத்தை வெளியிடவேண்டும். மக்கள் படத்தைப் பார்த்துவிட்டு நிராகரிக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த அளவுக்கு சுதந்தரம் ஒரு வியாபாரிக்கு நிச்சயம் இருக்கவேண்டும்.
ஆனால், ஒரு கலைஞன் ஆஃப்கானிஸ்தான் பற்றிப் படம் எடுப்பதாக இருந்தால், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும் அமெரிக்க ராணுவத்தாலும் பாதிப்புக்கு உள்ளாகும் எளிய இஸ்லாமிய மக்களின் வேதனையைத்தான் படமாக்குவான். இந்து முஸ்லிம்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் படமெடுக்க வேண்டியதன் அவசியம் இருக்கும் நேரத்தில் கலை சுதந்தரம் என்ற பெயரில் இடைவெளியை அதிகப்படுத்தும்வகையில் படமெடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. பிற விஷயங்களில் எல்லாம் மிகையையும் கற்பனையையும் கட்டவிழ்த்துவிடும் திரைப்படைப்பாளிகள் சமூகப் பொறுப்புணர்வுடன் சென்சிட்டிவான விஷயங்களிலும் யதார்த்தத்தைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளுவது நல்லதே. பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் அல்லவா.
அல்லது யதார்த்தத்தை சித்திரிப்பதென்றால் உண்மையை முழுவதுமாகச் சித்திரிக்கவேண்டும். தீவிரவாதிகள் குர்ரானைப் படித்துவிட்டு துப்பாக்கி தூக்குவதாகக் காட்டினால், பைபிளைப் படித்துவிட்டு குண்டு வீசுவதாகவும் காட்டத்தான் வேண்டும். அரை உண்மை எப்போதுமே அபாயமானதுதான்.
கலைஞனை அப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்பவர்கள் முதலில் கலைஞன் என்பவன் யார் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். கமலைப் பற்றிப் பேசும்போது இந்த விவாதம் தேவையற்றதுதான் என்றாலும் சொல்லிவைப்பது நல்லது என்று தோன்றுவதால் சொல்கிறேன்.
எம்.எஃப்.ஹுசேன் போன்றவர்கள் இந்து கடவுள்களை மையமாக வைத்து படங்கள் வரைவதுண்டு. அதை கலை சுதந்தரம் என்றும் சொல்வார்கள். ஆனால், இஸ்லாமிய உருவங்களையோ மதிப்பீடுகளையோ படமாக வரைய அவர்களுடைய தூரிகை முன்வரவே செய்யாது. அவர்களுடைய கலை ஊற்றை அப்படியாக அவர்களே சுயமாக சில கற்களைப் போட்டு அடைத்துக்கொள்ளும்போது பிற மதத்தினர் நாலைந்து கல்லைச் சேர்த்துப் போட்டால் அதையும் ஏற்றுக்கொள்வதுதான் நல்லது. அதிலும் கமலைப் போன்ற வியாபாரிகள் முழுக்க முழுக்க பணம் தரும் பினாமி எஜமானர்களுக்கு விசுவாசமாக ஒரு விஷயத்தைச் செய்யும்போது அதை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமான செயல்பாடுதான்.
இந்தப் படம் வெளிவராவிட்டால் தன்னுடைய அனைத்து சொத்துகளும் கைவிட்டுப் போய்விடும் என்று செண்டிமெண்ட் கார்டை இறக்கிப் பார்க்கிறார். திரையுலக நடைமுறைகள் தெரிந்தவர்களுக்கு அவர் சொல்வதில் இருக்கும் பசப்புகள் நன்கு தெரிந்திருக்கும். அதோடு, இஸ்லாமியக் கூட்டமைப்பினரின் போராட்டத்தை கலாசார தீவிரவாதம் என்று சொல்லிவருகிறார். உண்மையில் அது மத தீவிரவாதம்தான். தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று பயந்து படத்தை தற்காலிகமாகத் தடை செய்தால் உடனே மாநிலத்தையும் நாட்டையும் விட்டே போய்விடுவேன் என்று மிரட்டுகிறார். சாப்ளின், சல்மான் ருஷ்டி, ஹுசேன் ரேஞ்சில் தன்னைப் போலியாகக் கற்பனை செய்துகொள்வதால் வரும் உளறல் இது.

imagesசமீப காலமாக வெளியாகும் படங்களையும் மீடியாவின் பிற செயல்பாடுகளையும் பார்க்கும்போது வேறொரு சந்தேகம் பலமாக எழுகிறது. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா தெளிவான திட்டமொன்றைத் தீட்டியிருப்பதாகத் தோன்றுகிறது. தங்கள் மீது குவியும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை இந்தியா மீது மடைமாற்றும் பணியில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. அதன் மூலம் இஸ்லாமிய பிரச்னையையும் தீர்த்துவிடலாம். இந்தியாவையும் சரிக்கட்டிவிடலாம். இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அப்படிப் பார்க்கும்போது கமல் மிகப் பெரிய சதித்திட்டத்தின் கைப்பாவையாக இருப்பதுபோல் தெரிகிறது. நிச்சயம் அவருக்கு அந்தக் கெட்ட எண்ணமிருக்காது என்றே நம்புகிறேன்.

தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களின் மூலம் தேவர் இறுமாப்பை கொம்பு சீவிவிட்டு பல்வேறு கலவரங்களுக்கு மறைமுகமாகக் காரணமாக இருந்த கமல், இப்போது இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு நேரடியாக வித்திடுபவராக ஆகியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஆஸ்போர்னிடம் என்ன கதையைச் சொல்லியிருக்கிறாரோ… ஒரு வியாபாரியாக அதிக முதலீட்டைத் தேடிப் பெற்றுக் கொள்ள கமலுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர் ஒரு பிரிவினைவாதி அல்ல பகுத்தறிவுவாதி என்பதால் அவரிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது: அமெரிக்கக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே… அடி வருடியாய் ஆகிவிடாதே தாண்டவக்கோனே.

0

BR. மகாதேவன்

டிடிஎச்-க்கு என்ன பதில், கமல்ஹாசன்?

imagesகோவிந்த் நிஹிலானியும் கமல்ஹாசனும் வசனமெழுதிய படம் குருதிப் புனல். கமல்ஹாசன்தான் நாயகன். போலிஸ் அதிகாரி வேடம். சிறைபிடிக்கப்பட்ட தீவிரவாதியிடம், அவன் சினிமாவைப் பார்த்து பலஹீனமான இளைஞர்களை நம்பியிருப்பதாக அந்த போலிஸ் அதிகாரி வசனம் பேசுவதாக காட்சி வரும்.

இந்த வசனத்தின்படி சினிமா பார்க்கும் இளைஞர்களை பலவீனமானவர்கள் என்பதாக சித்தரிக்க முடிந்த கமல்ஹாசனால், அந்த பலவீனமான ரசிகர்களைக் கொண்டே, தனக்கென ஓர் உயர்ந்த பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

தன்னளவில் பலத்தை அதிகரித்துக்கொண்டு ஒரு ஹீரோவாக வளர்ந்த கமல்ஹாசன், புதுமைகளுக்குப் பெயர் போனவர். வித்தியாசமான மேக்கப், காட்சி அமைப்புகளில் பரிசோதனை முயற்சி, பத்து வேடங்கள், வயது கடந்த கிழவனை ஹீரோவாகக் காட்டும் சினிமா… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இதெல்லாம் Movie Making எனப்படும் சினிமா எடுப்பதில் மட்டும் செய்து கொண்டிருந்த புதுமைகள். இப்போது சினிமாவை விற்பதில் புதுமை செய்யலாம் என நினைத்துத் தனது புதிய படமான விஸ்வரூபத்தினை., டிடிஎச் தொலைக்காட்சியில் ரிலீஸ் என்று அறிவித்தார். அதுவும் அந்தப் படம் ஜனவரி 10ம்தேதி இரவு ஒன்பதரை மணிக்கு டிடிஎச் சானல்களில் காட்டப்படும்.. அதன் பின்னர் மறுநாள் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. ஏர்டெல் டிடிஎச் சேவைக்காக பிரத்யேக ப்ரஸ் மீட் நடந்து இந்தத் திட்டம் மிக வேகமாக பிரபலமடையத் தொடங்கியது.

இது மாதிரி டிடிஎச் ரிலீஸ் செய்ய பல டிடிஎச் சேவை நிறுவனங்கள் முன்வந்தன. அந்த நிறுவனங்களின் சானல்களில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான கமல்ஹாசனே தோன்றி விளம்பரங்கள் செய்தார். இதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தை, டிடிஎச் சானலில் பார்க்க ஒரே ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் சந்தாதாரர்கள் கட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட்து. கமல்ஹாசனின் விளம்பரத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் இந்த சந்தாவினைக் கட்டத் தொடங்கினார்கள்.  இப்படி வசூல் ஆன தொகை ஒரு கட்டத்தில் முன்னூறு கோடியினைக் கடந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தச் சமயத்தில் இந்த திரைப்படத்தை டிடிஎச் தளத்தில் வெளியிட தியேட்டர் ஓனர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது.

திரைப்படத்தினை சினிமா தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும். டிடிஎச்-சில் வெளியிட்டால் அது சினிமா தியேட்டர்களின் வருவாயைப் பாதிக்கும் என்பது தியேட்டர் முதலாளிகள் தரப்பின் வாதம்.

டிடிஎச்-சில் படம் பார்க்கும் ரசிகர்கள் வெறும் மூன்று சதவிகிதம்தான். அதனாலே தியேட்டரில் படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் கூட்டம் மாறப் போவதில்லை. தியேட்டர் ஓனர்களின் பயமும் எதிர்ப்பும் நியாயமில்லை. அநாவசியமானது, அர்த்தமில்லாதது என்று விளக்கம் சொல்லி கமல்ஹாசனின் அறிக்கையும் பேட்டியும் வெளியானது. அந்த  அறிவிப்பில், வீட்டிலே சுவற்றிலே பெருமாள் படம் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்காக திருப்பதிக்கு பெருமாளை வழிபடச் செல்கின்றவர்கள் குறைந்துவிட்டார்களா என்ன, வீட்டிலே சிறந்த சமையல் மூலம் சுவையான உணவு கிடைக்கிறது என்பதற்காக மக்கள் ஹோட்டலுக்குப் போவதில்லையா என்ன என்று மிகவும் உருக்கமாக கமல்ஹாசன் சொன்னதை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன், தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கமும், குடியரசும் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றம் என்பதாகவும் சொன்னார்.

இந்த திரைப்படத்தை டிடிஎச்சில் வெளியிட இருக்கும் தனக்கு இதனால் பல தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களிடமிருந்து மிரட்டல் வருவதாகப் பேட்டிகளில் சொன்ன கமல்ஹாசன், இது குறித்து காவல் துறையில் புகாரும் தந்தார். மிரட்டலுக்குத் தான் பயப்படப் போவதில்லை என்றும் படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதி டிடிஎச்-சில் வெளியாகும் என்றும் அறிவித்தார்.

தனக்கு சட்டப்படி இருக்கும் உரிமையைக் குறிப்பிடும் கமல்ஹாசன், இந்தப் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்திருப்பதாகவும், அப்படி செய்ய தன்னை யாரும் நிர்பந்திக்கவில்லை எனவும், அப்படி யாரும் தன்னை நிர்பந்திக்க இயலாது என்றும் பேட்டியில் சொன்னார்.

அதே பேட்டியில், இந்தப் படத்தை டிடிஎச்-சில் வெளியிடும் அதே நாளில், திரையரங்குகளிலும் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களின் சங்கங்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும், சினிமா துறையின் நன்மையினைக் கருதி அந்தக் கருத்தினை தான் ஏற்றுக் கொள்ளக் கூடும் என சூசகமாகத் தெரிவித்தார். தனது உழைப்பும் உரிமையுமான இந்தப் படத்தினை எப்படி எங்கே வெளியிட வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும், இதற்கு எதிராக தனக்கு இடர் தருகின்றவர்கள் Competion Act 2002 ன் ஷரத்துகளின் படி Competition Commisison of India உரைத்துள்ள தீர்ப்புகளின்படி தவறு இழைத்தவர்களாக ஆகின்றார்கள் என்றும் சொல்லி, அதன் அடிப்படையில் பதிமூன்று பேருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகவும் பேட்டியின் போது சொன்னார்.

தன்னை நம்பி , டிடிஎச் மூலம் இந்தப் படத்தை வெளியிட தன்னுடன் இணைந்து நின்ற டிடிஎச் சேனல்களைத் தன்னுடைய பார்ட்னர்கள் என்றே குறிப்பிட்ட கமல்ஹாசன், அவர்களைத் தான் கைவிடப் போவதில்லை என அழுத்தமாகப் பல முறை அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், படத்தின் கதாநாயகன், சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற முன்னணி நடிகர் எனும் அடிப்படையில், டிடிஎச் சானல்களின் விளம்பரம் மூலம் தியேட்டருக்கு வருவதற்கு ஒருநாள் முன்பு, டிவி சேனலில் இந்த திரைப்படம் வரும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கி, ரசிகர்களை சிறப்புச் சந்தா செலுத்த வைத்திருந்த தன்னுடைய செயலைக் குறித்து கமல்ஹாசன் இந்தப் பேட்டியில் எந்த வார்த்தையும் பேசவில்லை. இது அவரை நம்பி சந்தா செலுத்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

விஸ்வரூபம் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதை கமல்ஹாசன் அறிவித்த நிலையில், டிடிஎச் சேனல்களும் செயலில் இறங்கின. கமல் முன்னர் அறிவித்தபடி இந்தப் படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே டிடிஎச் சேனல்களில் வெளியாகாது என்று சொல்லி சில சேனல்கள் சந்தா செலுத்தியவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரத் தொடங்கின. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றப்பட்ட நிலைதான்.

பணம் செலுத்திய சந்தாதாரர்கள் டிடிஎச் சேவை வழங்கும் சேனல்களின் தொலைப்பேசி சேவை வழியே மேலும் விபரம் தெரிந்து கொள்ள முயன்றனர்.. ஆனால் அவர்களுக்கு திட்டவட்டமான பதில் கிடைக்கவில்லை. இந்த திரைப்படம் எப்படியும் ஒரு நாள் டிடிஎச் சேனல்களில் வெளியாகும்; ஒளிபரப்பாகும் தினத்தன்று பார்த்துக் கொள்ளுங்கள் என்ற பொறுப்பற்ற பதில் கிடைத்தவர்கள்தான் ஏராளம். இந்த நிலையில், தங்கள் பணம் திரும்பக் கிடைக்குமா என்கிற குழப்பம் பலருக்கும் நீடித்தது.

புதிதாக, ‘விஸ்வரூபம் படம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது’ எனும் அறிவிப்பை வெளியிட்டது இந்தப் படத்தைத் தயாரிக்கும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல். ஆனால், முன்னர் அறிவித்தபடி டிடிஎச் சேனல்களில் இந்த திரைப்படம் வெளியாகுமா, ஆகாதா எந்த தேதியில் வெளியாகும் என்பன போன்ற திட்டவட்ட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தன்னுடைய பேட்டியிலும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தனக்கும் இருக்கும் சர்ச்சைகள், சுமூக உறவு ஏற்பட மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து மட்டுமே பேசிய கமல்ஹாசன், ரசிகர்கள் குறிப்பாக டி.எச் சேனல்களில் இவரது படத்தைப் பார்ப்பதற்கு பணம் கட்டிய ரசிகர்களைப் பற்றி எதுவும் பேசவில்லை. பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், கமல்ஹாசன் என்னுடைய பணம் எங்கே என்றொரு வெளிப்படையான கடிதம் வெளியானது.

டிடிஎச் சானல்களில் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து, ரசிகர்களைப் பணம் கட்ட வைக்கக் காரணமான கமல்ஹாசனுக்கு, தான் தொழில் செய்வதில், இடைஞ்சல் வந்த நிலையில், தனக்குள்ள சட்டபூர்வமான உரிமையினை, ஆணித்தரமாக சொன்ன கமல்ஹாசனுக்கு, தான் தொழில் செய்வதைத் தடுத்து மிரட்டுகிறார்கள் என்று காவல் துறையிடம் நேரில் சென்று புகார் கொடுத்து, பாதுகாப்பு வேண்டிய கமல்ஹாசனுக்கு, தனக்கிருக்கும் சட்டபூர்வமான உரிமையினை எடுத்துச் சொல்லி இடர் தந்தவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய கமல்ஹாசனுக்கு, சட்டத்தின் மூலமாகவே சில கேள்விகளை முன் வைக்கலாம்.

முதல்கேள்வி :

கமல்ஹாசன் முன்னர் விளம்பரங்களில் அறிவித்ததுபோல் திரையரங்குகளில் வெளியாகும் முன்பு, டி.டி எச் சேனல்களில் ஏன் விஸ்வரூபம் வெளியாகவில்லை?

இந்தப் படத்தை டி. டி ஹெச் சானல்களில் வெளியிட்ட மறுநாளே திரையரங்குகளில் வெளியிட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி விளம்பரத்தில் சொன்னபடி சேவை வழங்க வேண்டும். இது கமல்ஹாசனுக்குத் தெரியுமா ?

விளம்பரங்களில் சொன்னபடி திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு முன்பு டிடிஎச் சானல்களில் வெளியிடாத நிலையில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவர் Misleading Advertisement செய்தவராகவும், Unfair Trade Practiceக்குத் துணை போனவர் ஆகிறார் என்று கருத வாய்ப்புள்ளது என்பதை கமல்ஹாசன் தெரிந்து வைத்திருக்கிறாரா?

இரண்டாவதுகேள்வி :

திரையரங்குகளுக்கு முன்பு, டிடிஎச் சேனல்களில் விஸ்வரூபம் வெளி வராத நிலையில் அதற்கான நியாயமான காரணத்தினை நுகர்வோருக்குச் சொல்லவும் கடமைப்பட்டவராகிறார் என்பது கமல்ஹாசனுக்குத் தெரியுமா?

அப்படி காரணம் சொல்லாமல் இருப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக் குறைவு என்று கருத வாய்ப்பு உண்டு என்பதும் கமல்ஹாசனுக்குத் தெரியுமா

மூன்றாவது கேள்வி

இந்த சந்தா வசூல் விவாகரத்தில் இத்தனை கோடி வசூல் ஆன நிலையில் சந்தாதாரர்களுக்கு விளம்பரத்தில் சொன்னபடி முதலில் திரைப்படம் வெளியிடப்படாத நிலை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 418ன் படி மோசடி என கருத வாய்ப்புண்டாகும் என்று தெரியுமா?

*

இந்தக் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் சொல்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பதில் சொல்வாரேயானால் அவர் சொன்னது போலவே பக்ரீத் பண்டிகையின் போது விருந்து வைத்து ஏழைக் குழந்தைகளுக்கு பிரியாணி செய்து பரிமாறலாம். முன்பு ஒருதரம் ஆனந்தவிகடன் பேட்டியில் கமல்ஹாசன் ஆசைப்பட்டு சொன்னது மாதிரி, அவர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியையும் அந்த விருந்துக்கு அழைக்கலாம். விருந்துக்கு அழைப்பவரின் நேர்மை, காந்திக்குப் பிடிக்குமா என்பதையும் Moral Angle-லில் நின்று கொண்டு கமல்ஹாசன் யோசித்துப் பதில் சொல்லலாம்.

One man cannot do right in one department of life whilst he is occupied in doing wrong in any other department of life. Life is indivisible whole என்று சொல்லி அப்படியே கடைபிடித்தவர் காந்தி.

0

சந்திரமௌளீஸ்வரன்

கொல்கத்தா புத்தகக் கண்காட்சி

Kolkata Course 1ஆசியாவின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சில முக்கிய விவரங்கள்.

 • 37வது கொல்கத்தா உலகப் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 அன்று ஆரம்பமாகியுள்ளது. வழக்கமாக 12 நாள்கள் நடைபெறும் கண்காட்சி இந்த முறை மம்தா பாணர்ஜியின் ஆலோசனையின்படி 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10 வரை கண்காட்சி நடைபெறும்.
 • இடம் மிலன் மேலா மைதானம். முழுமையான வரைபடம் இங்கே.
 • சென்ற ஆண்டு விற்பனை 15 கோடி.  இந்த ஆண்டு விற்பனை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.
 • சென்ற ஆண்டு 14 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த முறை மேலும் 3 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 • போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 • நுழைவுக் கட்டணம் இல்லை.
 • கொல்கத்தாவின் சில முக்கிய இடங்களில் இருந்து அரங்கத்துக்குச் செல்ல இலவசப் பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  புத்தக ஆர்வலர்களைக் கவர்ந்து ஈர்க்கவே இந்தத் திட்டம்.
 • கிட்டத்தட்ட 800 பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.
 • இந்த ஆண்டின் சிறப்பம்சம், பங்களாதேஷ். (சென்ற ஆண்டு இத்தாலி).
 • அமர்த்தியா சென், அமிதாவ் கோஷ், சஷி தாரூர்,  பிகோ ஐயர் உள்ளிட்ட 85 பிரபலங்கள் உரையாடுகிறார்கள். முழு விவரம் இங்கே.

0

 

ஆணாதிக்கமும் பெண்ணுரிமையும்

8185828679மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 25

‘ஆணாதிக்கக் கருத்துகளும் வர்ண (சாதி) ஆதிக்கக் கருத்துகளும் கொண்டது’ என்பதுதான் மனு ஸ்மிருதி மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டு. ஆணாதிக்க மனோபாவமும் சாதி அல்லது வர்க்கம் சார்ந்த ஏற்றத்தாழ்வும் எல்லா சமூகங்களிலும் இயல்பாக இருந்த ஒன்றுதான். பழங்குடி சமூகங்கள் மொழி, தேசம், இனம், மதம் என எந்த அடையாளத்தின் கீழ் அணிவகுத்த போதிலும் இந்த உணர்வுகளே எல்லா சமூகங்களிலும் ஆதாரமாக இருந்திருக்கின்றன. இந்து சாதிய வாழ்க்கையைப் பார்த்த மேற்கத்தியர்கள் இங்கு நிலவும் ஆணாதிக்க, சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பிற இடங்களில் நிலவும் அத்தகைய மனோபாவத்தோடு பொருத்திப் பார்த்து ‘மனித இயல்பு இப்படியாகத்தான் இருக்கிறது. நவீன உலகுக்குள் நுழையும்போது இவற்றில் பெரும்பாலானவை காலத்துக்கு ஏற்ப மாறும்’ என்ற புரிதலுடன் அணுகியிருந்தால் இந்து சாதிய வாழ்க்கைபற்றிய அவர்களுடைய மதிப்பீடுகள் வேறாக இருந்திருக்கும்.

குறைந்தபட்சம் இந்தியாவில் இருந்து தோன்றிய அரசியல், சமூக சிந்தனையாளர்களாவது இந்து சாதிய வாழ்க்கையை மனித குலத்தின் பிற சமூக வாழ்க்கை முறைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒரு நியாயமான முடிவை எடுத்திருந்தால் இந்து சாதிய வாழ்க்கை இந்த அளவுக்கு இழிவானதாக அவர்களுக்குத் தோன்றியிருக்காது. ஆனால், துரதிஷ்டவசமாக சாதிய வாழ்க்கை குறித்த அப்படியான ஒரு மதிப்பீடு உருவாகியிருக்கவில்லை.

மேற்கத்தியர்கள் இந்தியாவில் நிலவிய ஆணாதிக்க, சாதிய உணர்வுகளை இந்து உயர் வர்க்கத்தினரின் சதியாகக் காட்ட விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு ‘வேத புத்தகம்’ தேவையாக இருந்தது. அப்படியான ஒன்றாக மனு ஸ்மிருதியை உருவாக்கி எடுத்தார்கள். மனு ஸ்மிருதி மூலம் கிடைத்த மத (?) அங்கீகாரமே பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட அனைத்து தீங்குகளுக்கும் தார்மிக வலுவைத் தந்ததாக அவர்கள் புதிய கண்டுபிடிப்பை முன்வைத்தனர். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களை அவர்கள் பார்த்திருந்ததால், இந்தியாவிலும் அப்படியான ஒரு பெரிய மத அமைப்பு இருந்திருக்கவேண்டும்; அதுதான் இவை அனைத்தையும் செய்திருக்கவேண்டும் என்று சொல்ல விரும்பினார்கள். அப்படியாக, இந்து மதம் என்று ஒற்றைப்படையான மதத்தையும் மனு ஸ்மிருதியை அதன் மூல நூலாகவும் தங்களுடைய தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்டார்கள். அதை வழிமொழிந்தபடி நம் தேசத்தில் பலர் முளைத்தெழுந்தனர்.

அவர்களில் மிக முக்கியமானவர் அம்பேத்கர். அவரைப் பொறுத்தவரை இந்திய வரலாறென்பது பெருமளவுக்கு பவுத்த – பிராமணப் போராட்டமே. இஸ்லாமியர்களால் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டதைவிட அதிக அழிவு பவுத்த இந்தியாவுக்கு பிராமணர்களால் வந்தது என்று கூறுகிறார். சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் பவுத்தம் அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் இருவரையும் பிராமண மதம், மனு ஸ்மிருதியை உருவாக்கிக் கட்டம் கட்டித் தாக்கியதாகச் சொல்கிறார் (மது, மாமிசத்தை அறவே விலக்கச் சொன்ன பவுத்தம் சூத்திரர்களுக்கு எந்த அளவுக்கு உவப்பாக இருந்திருக்கும் என்பதும், துறவை லட்சியமாக வைத்த பவுத்தம் பெண்களுக்கு என்ன விடுதலையைத் த்ந்திருக்கும் என்பதும் அம்பேத்காருக்கு மட்டுமே தெரிந்த உண்மை).

அப்படியாக உலகின் பிற இடங்களில் இயல்பாக இருந்த ஒரு விஷயம் இந்தியாவில் இருந்ததற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவின் சதிதான் காரணம் என்ற புதிய கோட்பாடு வெகு உற்சாகமாக உருவாக்கப்பட்டது. இது உண்மையாக இருந்திருக்குமென்றால், பெண்களும் சூத்திரர்களும் கைகோத்திருந்தால் இருவருமே ‘விடுதலை’ அடைந்திருக்க முடியும். எண்ணிக்கையில் அவர்களே மிகவும் அதிகம். ஆனால், அப்படியான ஒன்று நடக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தம்முடைய நிலையை நம் இன்றைய முற்போக்காளர்கள் சொல்வதுபோல் வேதனை நிறைந்ததாக நினைத்திருக்கவில்லை. சிறையில் இருந்தால்தானே விடுதலையைப் பற்றி யோசிக்க முடியும்.

சொத்துரிமை இல்லை; விரும்பிய வேலையைச் செய்யும் சுதந்தரம் இல்லை; சமையல், குழந்தை பராமரிப்பு என வீட்டுக்குள்ளேயே முடங்க நேர்ந்துவிட்டது; விரும்பிய ஆணைத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை; கணவன் இறந்தால் மறுமணம் செய்துகொள்ள வழியில்லை… என பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகப் பல விஷயங்களை மனு ஸ்மிருதியைக் காரணம் காட்டிப் பட்டியலிடுவார்கள். இவை எந்த அளவுக்கு உண்மை என்பதையும் மனு ஸ்மிருதி எப்படியான தாக்கத்தைச் செலுத்தியது என்பதையும் பார்ப்போம்.

முதலாவதாக, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான ஒடுக்குமுறைகள் இரு பிறப்பாளர்களுக்கு அதாவது பிராமண, சத்ரிய, வைசிய ஜாதிப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டவையே. சூத்திரர் பிரிவில் வரும் பெண்கள் ஒப்பீட்டளவில் சுதந்தரமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதாவது, மனு ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருப்பவற்றுக்கு உட்படாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விவாகரத்து, பல புருஷ விவாகம் போன்றவற்றில் ஆரம்பித்து சதி கொடுமையில் ஈடுபடுத்தப்படாததுவரை சூத்திர ஜாதிப் பெண்கள் மேலான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தொழில் சார்ந்து வெளியில் செல்வது சகஜமாக இருந்திருக்கிறது. விவசாயத்தில் ஆரம்பித்து சலவைத் தொழில், மண் பாண்டங்கள் செய்தல் எனப் பெரும்பாலான தொழில்களில் சூத்திர ஜாதிப் பெண்கள் ஆணுக்கு சமமாகப் பங்கெடுத்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கணவனை இழந்த இளம் பெண்களுக்கு மறுமணம் செய்துவைக்கவில்லை என்பது பெண்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இது பிராமண ஜாதியில் மட்டுமே அதிகமாக இருந்திருக்கிறது. அவர்களிலும் திருமணம் செய்து கொண்டவர்களில் இளம் வயதில் கணவனை இழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து பத்து சதவிகிதம் இருக்கலாம். பிராமணர்களின் எண்ணிக்கையே ஒட்டு மொத்த பெண்களின் விகிதத்தில் மூன்றுக்கு அதிகம் இருக்காது. அந்த மூன்று சதவிகிதத்தில் வெறும் பத்து சதவிகிதம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் விகிதத்தை எடுத்துப் பார்க்கும்போது மிக மிகக் குறைவாகவே இருக்கும். மறுமண மறுப்பு மிகவும் கொடூரமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், புறக்கணிக்கத் தகுந்த அளவிலான பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியை ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒன்றாக பூதாகரமாக்கியதில் எந்த நியாயமும் இல்லை.

மேலும், இளம் பெண்ணுடைய கணவன் இறந்துவிடுவதால் ஒரு பிராமணக் குடும்பத்தில் மறுமணமே செய்துவைக்காமல் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தப் பெண் சூத்திர ஜாதியைச் சேர்ந்த ஒருவரிடம் நீங்கள் என்னை மணந்து கொள்வீர்களா என்று கேட்டிருந்தால் வைதவ்ய சோகத்தில் இருந்து அவர் எளிதில் வெளியேறியிருக்க முடியும். சூத்திரர் குலமும் அடைக்கலம் கேட்டு வந்த பெண்ணைத் தன் தலைக்கு மேல் வைத்து தாங்கியிருக்கும். பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சூத்திரரும் தன்னம்பிக்கை அதிகம் பெற்று சுய மரியாதை மிகுந்தவராக வெகு எளிதில் மேல் நிலை அடைந்திருக்க முடியும். பிராமண எதிர்ப்பெல்லாம் சூத்திரர்களின் வலிமைக்கு முன்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. எனவே, இங்கும் சிறையின் சாவி அடைபட்டுக் கிடந்தவரின் இடுப்பில்தான் இருந்திருக்கிறது.

பெண்களுக்கு இறை வழிபாட்டுச் சடங்குகளில் கணிசமான முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. வேதம், காயத்ரி மந்திரம் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பிற வழிபாடு சார்ந்த ஸ்லோகங்கள், பாடல்கள் கற்றுக்கொள்ள பிராமணப் பெண்களுக்கு எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை. தாய்த்தெய்வ வழிபாட்டில் முளைப்பாரி எடுப்பதில் ஆரம்பித்து, பால் குடம், தீ மிதித்தல் என அனைத்திலும் பெண்களுக்கு சிறப்பான இடம் இருக்கத்தான் செய்திருக்கிறது. அதோடு இல்லறத்தில் இருக்கும் எந்தவொரு ஆணும் தன் மனைவி இல்லாமல் எந்தவொரு சடங்கையும் செய்ய அனுமதி கிடையாது. மனு ஸ்மிருதி பெண்களை எதிலும் ஒதுக்கவில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுவதுண்டு. பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும்போது திருமணச் செலவுகளோடு, வரதட்சணை, சீர் வரிசை என கணிசமான தொகை பெண்ணுக்குத் தந்து அனுப்பப்படும். அது கணவன் கைக்குத்தான் போகிறது என்றாலும் தந்தையைப் பொறுத்தவரையில் அவர் தன் மகளுக்கு சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து அனுப்பத்தான் செய்கிறார். நகையாகத் தரப்படுவதை அந்தப் பெண்தான் அணிந்துகொள்கிறாள். நிலமாகவோ பணமாகவோ பிற வழிகளில் வந்து சேர்வதையும் அவள் அனுபவிக்கத்தான் செய்கிறாள். எனவே, சொத்தில் உரிமையே இல்லை என்று நிச்சயம் சொல்ல முடியாது.

இங்கு நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அடிப்படை உரிமைகள் என நவீன உலகைச் சேர்ந்த நாமாக ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்திக் கொள்வதைவிட மனித இனம் தனது இயல்பான நகர்வில் எதைக் கண்டடைந்திருக்கிறதோ அதையும் கருத்தில் கொள்ளவேண்டும். நடந்து செல்லும்போது வழியில் ஒரு மேடு இருந்தால் அதில் ஏறிக் கடப்பது ஒருவகை. அதைச் சுற்றி வளைந்து செல்வது இன்னொருவகை. இரண்டில் எது சரி என்பது ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த இயல்பு சார்ந்தது. முதலாவதுதான் சரி… இரண்டாவது தவறு என்று சொல்வது எப்போதும் சரியாக இருப்பதில்லை. இயற்கையில் ஒருவித சமநிலை இருக்கவேண்டும் என்பதற்காக, சில உயிரினங்கள் தாவர உண்ணிகளாகவும் சில மாமிச உண்ணிகளாகவும் இருப்பதுபோல் சமூகச் செயல்பாடுகளில் ஆண்கள் வீட்டுக்கு வெளியிலான வேலைகளையும் பெண்கள் வீட்டுக்குள்ளான வேலைகளையும் பிரித்துக்கொண்டு செய்து வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் எளிதான வேலையே தரப்பட்டிருக்கிறது. அந்தவகையில் அது அவர்களுக்குக் கிடைத்த வரம்தான்.

அடிப்படையில் சமையல் தொழிலும் ஒருவகையான கலையே. அதிலும் சுவையான உணவின் மூலம் தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்குத் தரமுடியக்கூடிய சந்தோஷமானது வேறு எந்தக் கலைஞனுக்குக் கிடைக்கும் மன நிறைவுக்கும் பெருமிதத்துக்கும் சற்றும் குறையாததுதான். எனவே, சமையல், குடும்பப் பராமரிப்பு போன்ற பணிகள் பெண் மீது திணிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விமர்சனங்கள் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியானவையே. எந்தவொரு செயலையும் செய்வதா… வேண்டாமா என்று தேர்ந்தெடுப்பதற்கான சுதந்தரம் ஒருவருக்கு இருக்கவேண்டுமென்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், சுதந்தரம் இல்லை என்பதனாலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று நமக்குப் பெரும் சுமையாகிவிடுவதுமில்லை.

நமது உடல் நம்முடைய விருப்பத்தைக் கேட்டுத் தரப்பட்ட ஒன்றல்ல. நம்மில் சிலருக்குச் சிறகுகள் வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இன்னும் சிலருக்கு நீரில் மூழ்கி வாழ ஆசை இருக்கலாம். மனித உடலில் கூட உயரமாக இருக்கவேண்டும். அழகாக இருக்கவேண்டும். ஆரிய நிறமாக, திராவிட நிறமாக இருக்கவேண்டும் என்று பல ஆசைகள் இருக்கக்கூடும். ஆனால், மனித உடலானது நம் விருப்பத்தின்படித் தேர்ந்தெடுக்க முடிந்த ஒன்றல்ல. அப்படியிருந்தும் நம்மீது திணிக்கப்படும் உடலை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழவில்லையா? இயற்கை நமக்குக் கற்றுத் தந்திருக்கும் பாடத்தைப் பயன்படுத்தி சமூக விதிமுறைகளையும் ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழ முடிவெடுப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அந்த வாழ்க்கை அவருக்கு வேதனை நிரம்பியதாகத்தான் இருந்தாகவேண்டுமா என்ன? இருப்பதை வைத்து வாழத் தெரிந்தவருக்கு இல்லாதது குறித்த ஏக்கம் இருக்காது.
மனு ஸ்மிருதியின் தாக்கம் பற்றிப் பேசும்போது இன்னொரு விஷயத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பெண் சிசு கொலை என்ற கொடூரச் செயல் நடைபெற்றுவந்திருக்கிறது.

பெண் குழந்தைகளைப் பிறந்த உடனேயே கொன்றுவிடவேண்டுமென்று மனு ஸ்மிருதியில் எந்த இடத்திலும் சொல்லியிருக்கவில்லை. மனு ஸ்மிருதியில் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தியிருப்பதால்தான் தமிழகக் கிராமப்புறங்களில் இப்படிச் செய்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. பெண் குழந்தைகளைக் கள்ளிப் பால் ஊற்றியும் நெல் மணியைக் கொடுத்தும் கொன்றதெல்லாம் ஒரு பெண்தான். பெண் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்களிடமிருந்து குழந்தை இல்லாத தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்திருந்தால் இந்தப் பிரச்னை எளிதில் தீர்ந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேல் சாதியினரில் குறிப்பாக பிராமணர்களில் இது இல்லை என்பதால், பிரிட்டிஷ் மற்றும் அவர்களுடைய தாக்கத்தால் முற்போக்கு வாசகங்களை முழங்கியவர்களுடைய கடைக்கண் பார்வை இந்தத் தீய செயலின் மீது விழவே இல்லை.

பெண் குழந்தையைப் பிறந்த உடன் கொல்லும் ஒரு சமூக வழக்கமும் பெண்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் ஒரு புத்தகமும் நம்முன் இருக்கிறது. பெண்களின் பரிதாபமான நிலைதான் நமது விமர்சனத்தின் அடிப்படைக் காரணம் என்றால், நிச்சயம் பெண் சிசு கொலைதான் அதிதீவிரத்துடன் எதிர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், இந்தியப் பொதுபுத்தியில் அது தொடர்பான எந்தவொரு பெரிய சலனத்தையும் பிரிட்டிஷ் காலகட்டத்திலும் அதற்குப் பிறகும் நாம் பார்க்கவே முடிவதில்லை. ஆனால், மனு ஸ்மிருதியை எரிக்க இந்தியாவில் எந்த மூலைக்குப் போனாலும் ஒரு ரெடிமேட் கும்பல் தயாராகவே இருக்கிறது. பிராமண ஜாதி தன் தவறுகளைத் திருத்திக்கொண்டு செழுமை அடையப் பாடுபடும் முற்போக்காளர்கள் பிற ஜாதியினரை மேம்படுத்துவதிலும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது.

பெண் குழந்தையைப் பிறந்த உடனே கொல்லும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும் ‘திராவிட’ சமூகம், பெண்களைக் கல்வி கற்க விடாமல் தடுக்க மட்டும் ‘ஆரிய’ ஸ்மிருதி ஒன்றின் அங்கீகாரத்துக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்குமா? இந்த இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்வி மனு ஸ்மிருதி ஏன் இங்கு அமலாகவில்லை? (மனு ஸ்மிருதியின் விதிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது மிகையாக எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுபவர்கள் அதைவிடக் கொடிய ஒரு விஷயத்தை கண்டும் காணாததுபோல் தாண்டிச் செல்வதில் இருக்கும் அரசியலை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை இங்கு குறிப்பிடுகிறேன்).

பெண்களை ஆண்கள் நடத்தும் விதத்தைப்பற்றிச் சொல்லும்போது அடிமைத்தனம் என்ற ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அடிமையை நடத்துவதற்கும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கான முடிவுகளைத் தானே எடுப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அடிமையை நடத்தும் விதத்தில் அடிமைக்கு துன்பம் விளைவிக்கும் தன்மையே அதிகமாக இருக்கும். பெண்களை ஆண்கள் நடத்திய விதத்தில் அப்படியான விளைவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். சர்வாதிகாரத்துக்கும் நல்லெண்ண சர்வாதிகாரத்துக்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற முடிவைத் தானாகவே எடுக்கும் தந்தை தனது அனுபவத்தின் அடிப்படையிலும் சமூக நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் புரிதல் உள்ளவர் என்ற வகையிலும் பொறுப்பின் அடிப்படையிலும்தான் அதைச் செய்கிறார். இங்கே தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை என்பது ஒரு குறைதான் என்றாலும், தந்தை மூலம் அமைத்துத் தரப்படும் வாழ்க்கையானது அப்படியொன்றும் வாழ முடியாததாக இருப்பதில்லை.

மணமகனின் பொருளாதார நிலையில் ஆரம்பித்து அவனுடைய குண நலன்களை அலசி ஆராய்ந்துதான் திருமணம் செய்துவைக்கிறார். அவருடைய கணிப்புகள் பொய்யாக வாய்ப்பு உண்டு. ஆனால், அவர் நல்லெண்ணத்தில்தான் அதைச் செய்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் வரத்தேவையே இல்லை. எனவேதான் கடந்த காலத்தில் பெண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய பெண்ணிய அளவுகோலைக் கொண்டு அன்றைய வாழ்க்கையை அளந்து பார்த்தால், அது நரகம்போல் தோன்றக்கூடும். ஆனால், அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு அது வேறுவிதமாகத்தான் இருந்திருக்கும்.
மேலும், பெண்ணின் சம்மதத்தைக் கேட்காமல் திருமணம் தீர்மானிக்கப்பட்டதைப்போலவே ஆணின் விருப்பத்தையும் நேற்று யாரும் கேட்டிருக்கவில்லை. குடும்பத்தலைவர் தன் குழந்தைகளுக்கு எது நல்லது என்பதைப் பார்த்து செய்து தரத் தெரிந்தவர் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் அனைவருக்கும் இருந்தது. எனவே, ”சுதந்தரம்’ என்பது பெண்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டிருக்கவில்லை.

வீட்டு வேலை தவிர பிற வேலைகளைச் செய்ய அனுமதி கிடைத்திருக்கவில்லை என்பது பெரிய குறையே அல்ல. ஏனென்றால் நேற்றைய உலகில் அனைவருமே தமக்கென நிச்சயிக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். இன்றைப்போல் விதவிதமான வேலைகள் இருந்திராத அந்தக் காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்குமே இருந்திருக்கவில்லை. ஒரு உடம்பின் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்துவருவதுபோல் சமூகத்தின் ஒவ்வொரு வேலைகளை ஒவ்வொரு பிரிவினர் செய்துவந்திருக்கிறார்கள். எனவே, வீடு என்பது சிறையாகத்தான் இருந்திருக்கவேண்டும் என்று அவசியமில்லை. வெளியில் இருந்து பாதுகாப்பு தரும் இடமும்கூட. வீட்டுக்குள் செய்துவரும் வேலைகள் உங்களுக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தரும்பட்சத்தில் அல்லது உங்கள் மனத்தை வீட்டு வேலைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள முடிந்தபட்சத்தில் ஒருவர் தன் வாழ் நாளின் பெரும்பாலான காலத்தை வீட்டை விட்டு வெளியே வராமல் கழித்துவிடுவதில் எந்தப் பெரிய வேதனையும் இருந்திருக்க முடியாது.

பெண்ணுரிமை பேசும் அனைவரும் தமது பாட்டிகள் கொள்ளுபாட்டிகளிடம் ஒரு சில மணி நேரங்களைக் கழித்தால் பல உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியும். அந்த வாழ்க்கையில் அவர்களுக்கான பல சந்தோஷத் தருணங்கள் இருந்திருக்கின்றன. பெண்கள் தமக்கு இருக்கும் இயல்பான வசீகரம், அன்பு, பொறுமை, தியாக குணம், தாய்மை, சில நேரங்களில் பெண்ணாதிக்கம் இவற்றின் மூலம் குடும்பத்தில் பெற முடிந்த மதிப்பும் மரியாதையும் எந்த ஸ்மிருதியாலும் மறுக்கப்படமுடியாததுதான். மகளாக இருந்தபோது தந்தையாலும், மனைவியாக இருந்தபோது கணவராலும், தாயாக இருக்கும்போது மகனாலும் பாதுகாக்கப்படும் ஒரு பெண் சுதந்தரத்தை இழந்திருக்கக்கூடும். ஆனால், சந்தோஷத்தை இழந்ததாக நிச்சயம் சொல்ல முடியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆணாதிக்கம் என்பது ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு குழந்தையையும் அந்த ஆணாதிக்கக் கருத்துகளுடன் வளர்த்தெடுத்தது ஒரு பெண்தான். அந்தவகையில் கடந்த கால வாழ்க்கை வேதனை நிறைந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால், அந்தக் குற்றத்தைச் செய்ததில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு. அப்ரூவராக மாறித் தப்பித்துக் கொள்வதுகூடச் சாத்தியமில்லாத வகையிலான குற்றம். இதில் தன்னைப் பாதிக்கப்பட்டவராகச் சொல்வதெல்லாம் மிகவும் அதீதமானது. உண்மையில் அந்த வாழ்க்கைக்கு அவர்கள் எளிதில் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமே பறந்து திரிவதற்கான இறகுகள் உண்டு என்றாலும் எல்லாப் பறவைகளுமே கூட்டைச் சுற்றிய பகுதிகளுக்குள்ளாகவே தம்முடைய பறத்தலை நிறுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை; எந்தப் புற நிர்பந்தமும் இருப்பதுமில்லை.

இன்று இந்து/இந்திய சமூகம் பெண்களுக்கு பல தளங்களில் சம வாய்ப்புகளைத் தந்துவருகிறது. பெரிய போராட்டம் எதுவும் தேவைப்படாமலே இன்று பல கதவுகள் எளிதில் அகலத் திறந்திருக்கின்றன. நேற்றைய பெண்களிடமும் அந்த சமத்துவக் கோரிக்கை இருந்திருக்கவில்லை. எனவே, தட்டாத கதவு திறக்கப்படாததில் பெரிய வலி இருந்திருக்க முடியாது. தன்னைவிட வலிமையானவராகத் தான் கருதும் ஒருவருக்கு அடுத்தபடியில் இருக்க சம்மதிப்பது ஒருவர் மிகவும் இயல்பாகச் செய்யும் செயலே. அங்கு மேலே இருப்பவர் மீது மதிப்பும் மரியாதையும் விசுவாசமும் இருந்தாலே போதும். அடக்குமுறை தேவையே இல்லை. சார்ந்திருக்கும் வாழ்க்கையிலும் சந்தோஷம் உண்டு.

0

கடன் கிடைக்கிறது

Personal_Loanஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 26

சிறு தொழில் அதிபர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இப்பொழுது நாம் சொல்லும் செய்தி, இருபாலருக்கும் பொருந்தும். நல்ல கல்விப் பின்னணி மற்றும் அனுபவத்தோடு தொழிலை மேற்கொள்பவர்கள் முதல் வகை. தகுந்த முன்னேற்பாடுகளோ பின்னணியோ இன்றி சுயதொழிலில் இறங்குபவர்கள் இரண்டாவது வகை. முந்தைய பிரிவினரைவிட இவர்களே அதிகம் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு இவர்கள் நிவர்த்தி செய்துகொள்கிறார்கள். தவறான வழிகாட்டுதல்கள் அமைந்துவிட்டால் இவர்களால் பிரச்னையில் இருந்து மீளமுடியாமல் போய்விடுகிறது. இவர்களை மனத்தில் கொண்டு வழிகாட்டும் திறன் கொண்டவர்கள் நிரம்பிய ஓர் ஆய்வுக்கூடங்களை அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்.

குறுந்தொழில் அதிபர்கள் பெரும்பாலும், சுற்றுப்புறச்சூழலைப் பற்றியோ, தங்கள் நிறுவனங்களால், தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படுவது பற்றியோ கவலைப்படுவதில்லை என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. இதைக் குறைப்பதற்கு குறைந்த செலவில் எரிபொருள் சேமிப்பதற்கும், சுற்றுபுறச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்களை அதை செயல்படுத்துமாறு கட்டாயமாக்கினால், தொழில் வளர்ச்சியோடு சமுதாயமும் பாதுகாக்கப்படும்.

இதன் மூலம் இன்னொரு அனுகூலமும் உண்டு. சுயதொழிலை தீவிரமாக கையாளாமல் மேம்போக்காக அதில் இறங்குபவர்களுக்கு தெளிவான ஒரு செய்தியை அளிக்கமுடிகிறது. கடுமையான சட்டத்திட்டங்களைக் கருத்தில் கொண்டு கவனமாகத் தொழிலைத் தொடரவேண்டும். அல்லது, விலகிக்கொள்ளவேண்டும்.

பல துறைகளில் பல பொருள்களுக்கு வரிவிகித சதவிகிதங்கள் தாறுமாறாக இருக்கின்றன. நமது நாட்டில் பெரும் நிறுவனங்கள் பட்ஜெட் வருவதற்கு முன்பே வரிகளின் போக்கைத் தீர்மானம் செய்யுமளவுக்குத் திறமை படைத்தவை. ஆனால் இந்த விதத்தில் இன்னும் குறுந்தொழிலதிபர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குக்கூடப் போராடவேண்டியுள்ளது. ஆகவே அரசாங்கம் கலந்தாய்வுக் கூட்டங்கள் மூலம், நேர்மையான அதிகாரிகளை தொழிலதிபர்கள் முன்நிறுத்தி, அவர்களுடைய தொழில் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முயற்சிக்கலாம்.

பட்ஜெட் தொடர்களுக்கு முன்பு நேர்மையான குறுந்தொழில், சிறுதொழில் அதிபர்களை வைத்து கூட்டம் நடத்தி கருத்துக்களை அறிந்துக்கொள்ள அரசு முயற்சி செய்யவேண்டும். மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஈஎஸ்ஐ, பிஎஃப் போன்ற சலுகைகளுக்கு உள்ள விதிமுறைகள் இன்னும் குறுந்தொழிலதிபர்களுக்கு சாதகமாக இல்லை என்றே கூறலாம். ஒரு குறுந்தொழிலதிபர் 10 பணியாளர்களைக் கொண்டு நிறுவனம் நடத்தினால் ஈஎஸ்ஐ பிரிவுக்குள் அவர் வந்துவிடுவார் என்று விதிமுறை இருக்கிறது. அதனால், சிலர் 5 அல்லது 6 நபர்களைக் கொண்டே தங்கள் தொழிலை நடத்துகின்றனர். சில சமயங்களில் தொழிலுக்கு வேண்டிய ஆர்டர்கள் அதிகமாகும்போது, அதிகப் பணியாளர்களை நியமனம் செய்வர். அதனால் சிறு தொழில் நிறுவனத்தின் சம்பளப் பட்டுவாடா தொகை அதிகமாகும். ஆனால் ஆர்டர்கள் குறையும் போது அதே பணியாளர்கள் நிறுவனத்துக்குச் சுமையாகிவிடுகிறார்கள். இதனால் அதிக அளவில் குறுந்தொழில் நிறுவனங்கள் ஈஎஸ்ஐ சலுகைகளை அளிப்பதற்கு யோசனை செய்கின்றனர். ஆனால் ஈஎஸ்ஐ சலுகை இல்லாததால் நல்ல பணியாளர்கள் வேலைக்குக் கிடைப்பதும் கடினமாக உள்ளது. இதற்கு மாறாக கீழ்க்கண்டவாறு செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட குறுந்தொழில் நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்கள் அதிக டர்ன்ஓவர் காண்பித்தால், ஈஎஸ்ஐ பிரிவுக்குள் வருமாறு செய்யலாம். தொழில் தொய்வடையும் போது அதிலிருந்து விலக்கு அளிக்கவும், மீண்டும் அது வலுவடையும் போது ஈஎஸ்ஐயில் தன்னை உட்படுத்திக் கொள்ளவும் சட்டத்தில் இடமிருக்கவேண்டும். இது குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாகப் பணியாற்றவும் நல்ல பணியாளர்களை வேலைக்கு அமர்த்த ஏதுவாகவும் அமையும். இதைப் போல பிஎஃப் பற்றிய விதிமுறைகளும் மாற்றியமைத்தால் நல்ல அங்கீகாரத்துடன் குறுந்தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

0

இன்னும் பெருமளவு பெண்கள் தொழில்முனைவோராக ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியாகவும் இந்தச் சம்பாத்தியம் அவர்களுக்குப் பல வழிகளில் உபயோகமாக இருக்கிறது. ஒருவேளை தனித்து செயல்படும் சூழல் உருவானாலும் இது அவர்களுக்குக் கைகொடுக்கும். எனவே பெண்களை அதிக எண்ணிக்கையில் சுயதொழிலில் ஈடுபட வைக்கவேண்டும். அதற்கான உந்துதலை அவர்களுக்கு அளிக்கவேண்டும். வியாபார நுணுக்கங்களையும் பணத்தைக் கையாளும் முறைகளையும் சொல்லித்தர வேண்டும்.

குடும்பத்தினரின் ஊக்குவிப்பு முதன்மையான தேவை. இரண்டாவது, வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவி. தொழில்முனைவோராக வளரத் துடிக்கும் பெண்களுக்கு துணைபுரிய வங்கிகள் முன்வரவேண்டும்.

இனி பெண்களுக்குத் தற்போது கிடைக்கும் வங்கிகளின் ஆதரவு குறித்து பார்ப்போம்.

குறு மற்றும் சிறுதொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு பெருமளவில் ஒவ்வொரு மாநிலமும் பணஉதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிராம விடியல் என்ற குறுந்தொழிலுக்குகான நிதி நிறுவனம் பிற சமூக நிறுவனங்களோடு இணைந்து கடன் உதவி செய்கிறது. இது தனிநபர் கடனாகும். இதற்கு கியாரண்டி தேவையில்லை. ஆனால் விண்ணப்பத்தில் எல்லா விதமான தகவல்களும் விரிவாக அளிக்கப்படவேண்டும். கடன் உதவியின் அளவு சுமார் 30 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை இருக்கும். இதுதவிர தேனா வங்கி பெரும்பாலான குறுந்தொழிலுக்கு நிதி உதவி அளிக்கின்றது.

ஸ்ரீ சக்தி என்ற பிரிவின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடனுதவி தொகை குறு மற்றும் சிறு தொழில்களுக்கு அளிக்கிறது. (http.//.www.statebankofindia.com).

பிரியதர்ஷனி என்ற பிரிவின்கீழ் பாங்க் ஆஃப் இந்தியா பெண் தொழில்முனைவோருக்கு சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க உதவுகிறது. தொழிலுக்கான இயந்திரங்கள் வாங்க கடன் தொகை அளிக்கிறது. இதில் இரண்டு லட்சத்துக்கு மேல் கடனுதவி பெறுபவர்களுக்கு 1 சதவிகித வட்டி குறைப்புக் கிடைக்கிறது. இவ்வங்கியின் இணையதளத்துக்குச் (www.bankofindia.com) சென்று மேலும் விவரங்கள் அறியலாம்.

கனரா வங்கி கேன் மஹிலா (Canara Bank-Can Mahila) என்ற திட்டத்தின்கீழ் இல்லத்தரசிகள் முதல், பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயத்தொழில் செய்யும் பெண்களுக்குக் கடனுதவி அளிக்கிறது. வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் கணினி, தங்க ஆபரணங்கள் வரை வாங்கலாம். 18 முதல் 55 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தக் கடனுதவி அளிக்கப்படுகிறது. பணிபுரியும் பெண்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு அவரது ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்குள் இருந்தால் ரூ.50,000 வரை கடனுதவி பெறலாம். வங்கியின் இணையதளம் (www.canarabank.in) ஆகும்.

விக்லங் மகிலா விகாஸ் யோஜனா என்ற திட்டத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, உடல் ஊனமுற்ற, மாற்றுத்திறன் பெற்ற பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. உடல் ஊனமுற்றவரின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு மாற்றுத்திறனுக்கான பயிற்சி வழங்கி (Vocational Training) ரூ.25,-000 வரை புதிய தொழில் முயற்சியில் இறங்க உதவி செய்கிறது. இது குறித்து விபரங்கள் வங்கியின் கீழ்கண்ட இணையதளத்தில் காணலாம். (www.unionbankofindia.co.in)

யூகோ வங்கியின் நாரி சக்தி என்ற திட்டத்தின் அடிப்படையில், பணிபுரியும் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 5 வருடகாலங்களில் தவணை முறையில் கடனைத் திரும்ப செலுத்துவதிலும், வட்டியில் சில சலுகையும் வழங்குகிறது. வங்கியின் இணையதளம் www.ucobank.com.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ‘சென்ட் கல்யாணி’ என்ற திட்டத்தின் அடிப்படையில், பெண் தொழில்முனைவோருக்குக் கடனுதவி அளிக்கிறது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும் வியாபாரம் மற்றும் தொழிற்கல்வி சார்ந்த பணிகளுக்கும் பெண் தொழில் முனைவோர்களை இந்த வங்கி இருகரம் நீட்டி வரவேற்கிறது.

(தொடரும்)

தொடரும் மொழிப்போர்

annavum rajajiyumமொழிப்போர் / அத்தியாயம் 14  

சின்னச்சாமியின் மரணம் கனன்று கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு நெருப்பை வேகமாக விசிறிவிட்டது. மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பல தரப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்தனர். இந்தி ஆட்சிமொழியாக மாறவிருக்கும் 26 ஜனவரி 1965 நெருங்க நெருங்க போராட்டத்தின் வேகம் கூடியது. எங்கு பார்த்தாலும் போராட்டம், கோஷம், கறுப்புக்கொடி, கண்டனக்குரல்.

இன்றைய அத்தியாவசியப் பிரச்னை சோற்றுப் பிரச்னைதானே தவிர மொழிப்பிரச்னை அல்ல என்றார் காமராஜர். உடனடியாக எதிர்வினை ஆற்றினார் அண்ணா. சோற்றுப்பிரச்னைதான் பிரதானம் என்றால் எதற்காக பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இந்தித் திணிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்; பேசாமல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவித்துவிட்டு, சோற்றுப் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தலாமே என்றார் அண்ணா.

8 ஜனவரி 1965 அன்று கூடிய திமுக செயற்குழு, ஜனவரி 26 அன்று குடியரசு நாளை துக்க நாளாக அனுசரிக்க முடிவுசெய்தது. சுதந்தர தினத்தை இன்ப நாளாகக் கொண்டாடிய அண்ணா, குடியரசு தினத்தைத் துக்கநாளாக அனுசரிப்பது துரோகச் செயல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர் காங்கிரஸ் தலைவர்கள். குடியரசு தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினம்தான். அந்த நாளில் இந்தி எதிர்ப்பை ஒத்திவைத்தால் என்ன செய்வீர்கள்? இந்திதான் ஆட்சிமொழி என்பதை திமுகவும் தென்னக மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மூலைக்கு மூலை பொய்ப் பிரசாரம் செய்வீர்கள். அதைத் தடுக்கவே குடியரசு நாளை அமைதியான முறையில் துக்கநாளாக அனுசரிக்கிறோம் என்றார் அண்ணா!

கடந்த காலங்களில் இந்தியின் காவலராக அடையாளம் காணப்பட்ட ராஜாஜி, தற்போது இந்தியை எதிர்க்கத் தயாராகி இருந்தார். நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்கள் மூன்று கோடி பேரை கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே ஆட்சிமொழி சட்டம் என்று தன்னுடைய சுயராஜ்யா இதழில் எழுதிய ராஜாஜி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் திமுகவுக்கு நேசக்கரம் நீட்டினார்.

திமுகவின் துக்கள்நாள் அறிவிப்பு குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பக்தவத்சலம், திமுக குடியரசு தினத்தை அமைதியான முறையில் துக்கநாளாகக் கொண்டாடினாலும் அதனைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் சும்மா இருக்காது. திருமண வீட்டில் யாராவது அழுதுகொண்டிருந்தால் அதைத் திருமண வீட்டார் அனுமதிக்கமாட்டார்கள். அழுதுகொண்டிருப்பவர்களை வெளியே பிடித்துத் தள்ளி விடுவார்கள். திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவதை அரசாங்கம் அனுமதிக்காது. கலவரமே ஏற்பட்டாலும் திமுகவினருக்கு அரசு பாதுகாப்பு தராது. பொதுமக்களே அவர்களுடைய அடாத செயலைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள் என்றார்.

போராட்டத்தில் இறங்குவது குறித்து சென்னை, மதுரை, தஞ்சை, திருச்சி, கோவை என்று பல இடங்களில் மாணவர்கள் கூடிப்பேசினர். இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் முதலாம் ஆண்டு நினைவுநாள் 25 ஜனவரி 1965 அன்று போராட்டத்தைத் தொடங்க முடிவுசெய்தனர் மாணவர்கள். போராட்டங்கள் குறித்த தகவல்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கடிதம் மூலமாக அனுப்பப்பட்டன. சில மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆதரவு திரட்டினர்.

25 ஜனவரி 1965 அன்று போராட்டம் தொடங்கியது. மதுரையைச் சேர்ந்த கா. காளிமுத்துவும் நா. காமராசனும் இந்திய அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகல்களை எரித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இடையில் காங்கிரஸ் கட்சியினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

மதுரையில் மட்டுமல்ல, கோவை, திருச்சி, மேலூர், மாயவரம், தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம், விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மாணவர் போராட்டங்கள் ஆக்கிரமித்தன. மாணவர்கள் தலைவர்கள் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேச விரும்பினர். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் பக்தவத்சலம்.

26 ஜனவரி 1965 அன்று அதிகாலை நான்கு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞர் இந்தித் திணிப்பைக் கண்டித்துத் தீக்குளித்துவிட்டார் என்ற செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தற்கொலைச் சம்பவங்கள் தொடர்ந்தன. அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று தமிழுக்காகத் தம்மைப் பலிகொடுத்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது.

ஜனவரி 26 அன்றுதான் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் முந்தைய நாளில் இருந்தே திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரையும் கைது செய்தது பக்தவத்சலம் அரசு. ஆனாலும் போராட்டம் தடைபடவில்லை. திமுகவினர் தமது வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர்.

திமுகவினர் ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மாணவர்களின் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருந்தது. மாணவர் போராட்டங்களுக்கும் தீக்குளிப்புகளுக்கும் பின்னணியில் திமுகவினரின் கரங்கள் இருக்கின்றன என்றார் சாஸ்திரி. போராட்டத் தேதிக்கு முன்பே திமுகவின் முக்கியத் தலைவர்களையும் தொண்டர்களையும் கைது செய்துவிட்ட சூழலில் மாணவர்களை திமுக தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு அல்ல; குழப்பம் விளைவிக்கும் முயற்சி என்றார் அண்ணா.

3 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது. கட்சி சார்புள்ள மாணவர்கள் பலர் அமைப்புக்குள் இருந்தபோதும் எந்தவித கட்சி சாயமும் இல்லாத ரவிச்சந்திரன் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாகப் போராட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பிறகு மாணவர் அமைப்பின் சார்பில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்திக்கச் சென்றனர்.

ஜனவரி மாத இறுதியில் மாணவர்களை சந்திக்க மறுத்த முதலமைச்சர் இப்போது கொஞ்சம் இறங்கி வந்திருந்தார். அப்போதே சந்தித்திருந்தால் எத்தனையோ உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கமுடியும். சேதங்களைத் தடுத்திருக்க முடியும். முதல்வர் – மாணவர் சந்திப்பு நடந்தது. ஆனால் அப்படியொரு சந்திப்பே நடந்திருக்க வேண்டாம் என்ற அளவுக்கு மாணவர் தலைவர்களை அவமதித்து அனுப்பினார் முதலவர். போதாக்குறைக்கு, இந்தித் திணிப்பை வாபஸ்பெற முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார் பிரதமர் சாஸ்திரி.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இந்தி எழுத்துகள் அழிப்பு, கடையடைப்பு என்று போராட்டம் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் போராட்டத்தை அடக்கும் நோக்கத்துடன் ஏராளமான மாணவர்களைக் கைது செய்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டது. தேவைப்பட்டால் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயாராக இருங்கள் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி அண்ணாவை வந்தடைந்தது.

நிலைமை எல்லை மீறுகிறது என்று தெரிந்ததும் மாணவர்களை அழைத்துப் பேசினார் அண்ணா. ஒரு போராட்டத்துக்குத் தேவையான அனைத்து உத்திகளையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள்; உங்கள் ஆயுதக் கிடங்குகளில் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் தீர்ந்துவிட்டன; எனினும், தமிழுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. போதும். போராட்டம் போதும். நேரடி நடவடிக்கையை உடனே நிறுத்துங்கள். இதுதான் அண்ணா கொடுத்த யோசனை.

அண்ணாவின் தலையீட்டுக்குப் பிறகும் மாணவர்கள் அமைதியடையவில்லை. போராட்டம் தொடர்ந்தது. விளைவு, துப்பாக்கியைத் தூக்கினர் காவலர்கள். ஏழு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். இது அரசாங்கம் சொன்ன கணக்கு. ஆனால் அசல் கணக்கு இன்னும் அதிகம் என்றனர் மாணவர் தலைவர்கள்.

திடீர் திருப்பமாக இந்தித் திணிப்பைக் கண்டித்தும் ஆங்கில நீட்டிப்பு குறித்த உத்தரவாதத்தைக் கோரியும் 11 பிப்ரவரி 1965 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி. சுப்ரமணியமும் ஓ.வி. அளகேசனும் தமது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் இருவருமே ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற்றனர்.

16 பிப்ரவரி 1965. திடீரென திமுக பொருளாளர் கருணாநிதி இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்த மாணவர்களைத் தூண்டிவிட்டவர் கருணாநிதி என்பதுதான் அரசு முன்வைத்த குற்றச்சாட்டு. ஆனால் இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தவர்களைப் பார்த்து முதலமைச்சர் பக்தவத்சலம் திருப்திப்படுவதாக முரசொலியில் கார்ட்டூன் வெளியிட்டதுதான் கைதுக்குக் காரணம் என்பது கருணாநிதியின் வாதம்.

கொந்தளிப்பு அதிகரித்திருந்த சூழலில் 22 பிப்ரவரி 1965 அன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடியது. ஆட்சி மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றனர் இந்திரா, பிஜூ பட்நாயக், எஸ்.கே. பாட்டீல் உள்ளிட்டோர். ஆனால் திருத்தத்துக்கான தேவையே எழவில்லை என்றனர் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம் போன்றோர். சிக்கல் நீடித்தது. பிறகு முதல்வர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் சாஸ்திரி. பிரச்னை பற்றி ஆராய்ச்சி செய்ய துணைக்குழு அமைத்ததோடு கடமையை முடித்துக் கொண்டது அந்த மாநாடு.

காங்கிரஸ் கட்சி கூட்டிய செயற்குழு செயலற்றுப் போயிருந்தது; முதலமைச்சர்கள் நடத்திய மாநாட்டிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயிருந்தன. அதிருப்திகள் சூழ்ந்த நிலையில் முதலமைச்சர் பக்தவத்சலத்தைச் சந்தித்துப் பேசினார் மாணவர் தலைவர் ரவிச்சந்திரன். இந்தி பேசாத மாநிலங்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி மொழி விஷயத்தில் மத்திய அரசு எந்தவித முடிவையும் எடுக்காது; ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற நேருவின் உத்தரவாதம் காப்பாற்றப்படும் என்று பிரதமர் சாஸ்திரி உறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற என்னால் ஆனதைச் செய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்தார் முதலமைச்சர் பக்தவத்சலம்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கவும் பக்தவத்சலம் தவறவில்லை. ‘இனியும் மாணவர்கள் கூடிநின்று கிளர்ச்சி செய்தால் விமானத்தில் இருந்து துப்பாக்கியால் சுடச்சொல்வேன்!’ அதன் தொடர்ச்சியாக மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார் மாணவர் போராட்டக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன். அந்த முடிவை பல மாணவர்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு, இந்தித் திணிப்பு விஷயத்தில் மாணவர்களுக்கு மன நிறைவு தரக்கூடிய தீர்வைக் கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்த அந்த மாணவர்கள், ரவிச்சந்திரனுக்குப் பதிலாக விருதுநகர் பெ. சீனிவாசனைத் தலைவராக்கினர்.

மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால் துப்பாக்கிச்சுடுகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. மொழிப்பிரச்னையைப் பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள்; கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று மீண்டும் கோரிக்கை விடுத்தார் அண்ணா. பத்திரிகைகள், பெற்றோர் ஆகியோரின் ஆதரவு குறைவதை உணர்ந்துகொண்ட மாணவர்கள் 14 மார்ச் 1965 அன்று இந்தித் திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அளவுக்கு மீறிய அடக்குமுறை காரணமாகப் போராட்டங்கள் நசுக்கப்பட்டன என்றாலும் மனத்துக்குள் எரிந்துகொண்டிருந்த போராட்ட நெருப்பை அரசாங்கத்தால் அணைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நடந்த பொதுத்தேர்தலில் அந்த நெருப்பு தனது பலத்தை நிரூபித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை சுமார் நாற்பது ஆண்டுகளாக ஆட்சியின் அருகில்கூட வராமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

(முடிந்தது)

ஆர். முத்துக்குமார் எழுதிய ‘மொழிப்போர்‘ தனிப் புத்தகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. நான்கு கட்டங்களாக நடைபெற்ற மொழிப்போராட்டமும், தொடர்ந்து அவ்வப்போது எழுந்த இந்தித் திணிப்பு முயற்சிகளும் மிக விரிவாக இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தை தமிழகம் எதிர்கொண்ட விதம், எதிரான விமரிசனங்கள், ஆய்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள இந்தப் புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. மொழிப்போர் குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி டி.என். சேஷன் வரை பலரும் முன்வைத்த விமரிசனங்களும் அவற்றுக்கான எதிர்வினைகளும் இந்நூலில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் எழுந்த பாடப்புத்தகச் சர்ச்சை குறித்த விவாதங்களும் இடம்பெறுகின்றன.

அரசாங்கம் என்ன செய்யவேண்டும்?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 25

இன்று மத்திய, மாநில அரசுகள் குறுந்தொழில் வளர்ச்சிக்குப் பலவாறான சலுகைகள் அளிக்கின்றன. இருந்தாலும், இன்றைய சூழலில் சுயதொழில் செய்ய யார் முன்வருகிறார்கள்? குறிப்பாக பெண்கள் முன்வருகிறார்களா? இல்லை என்றே பதிலளிக்கவேண்டியிருக்கிறது. காரணம், இன்றும் அரசாங்கச் சூழல் சிறுதொழிலுக்கு அனுகூலமாக இல்லை.

உதாரணத்துக்கு வங்கிகளை எடுத்துக்கொள்வோம். சுயதொழில் முனைவோருக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றனவா? பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. ஒருவேளை கடன் கொடுத்து அது திரும்பி வராமல் போனால் பதில் சொல்லியாகவேண்டும் என்னும் எண்ணத்தில் கடன் கொடுப்பதை இவர்கள் தவிர்க்கின்றனர். வங்கிக் கிளை மேலாளர்களுக்கு தெளிவான வழிமுறைகளையும் 4_8விதிகளையும் அரசாங்கம் முதலில் நிர்ணயிக்க வேண்டும்.

நேர்மாறாக, ஒரு சில வங்கி அதிகாரிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சிபாரிசோடு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தகுதியில்லா நபர்களுக்கும் கடன் கொடுக்கின்றனர். அசையாச் சொத்துகள் இல்லாத நபர்களுக்கும் கடன் கொடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. ஆனால், அவற்றை பெரும்பாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆகவே வங்கிக் கடன் குறித்த தெளிவான விதிமுறைகளை பொதுமக்கள் அறியுமாறு அரசு விளம்பரப்படுத்தவேண்டும். தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் கிடைப்பதையும் உறுதிசெய்யவேண்டும்.

குறுந்தொழில் அதிபர்களுக்கு திறமையான ஆள்கள் கிடைப்பது அரிதாகி கொண்டுவருகிறது. நல்ல நபர்களைத் தேர்வு செய்யும் பொழுது, பெரும் பணத்தை ஊதியமாக அளிக்க வேண்டி வருகிறது. இதற்கு அரசாங்கம் கீழ்க்கண்டவாறு செய்யலாம்.

 1. அரசாங்க வேலைக்கு பணி நியமனம் செய்யும்போது ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது அங்கீகரிக்கப்பட்ட, நேர்மையாக தொழில் செய்து கொண்டிருக்கும் குறுந்தொழில் அலுவலகங்களில் பணி புரிந்து இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.
 2. குறுந்தொழில், சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் மேலெழுந்தவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரூ.25 அல்லது 50 லட்சம் டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் குறுந்தொழில் பிரிவிலும், 5 கோடி டர்ன்ஓவர் செய்யும் கம்பெனிகள் சிறுதொழிலாகவும் பிளாண்ட் அண்ட் மெஷினரியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் பிரிவுகள் இன்னமும் விரிவாகப் பிரிக்கப்படவேண்டும். அதேபோல் வரிச்சலுகைகளும் இப்பொழுதைவிட அதிகமாக அளிக்கப்பட வேண்டும்.
 3. அரசு டெண்டர்களில் பங்கு பெறும்போது பலவித பெரிய ஆர்டர்களுக்கு அரசாங்கம் விதிக்கும் விதிமுறைகளில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், பங்குபெற முடியாமல் போகிறது. இதற்கு மாறாக மத்திய, மாநில அரசுகள், எந்த தொழிலையும் வாங்குவதற்கு முன், அதன் எண்ணிக்கை மற்றும் அளவுக்கு ஏற்றவாறு அதைப் பிரித்து, அந்தந்த பகுதியிலுள்ள சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுக்க வழிவகை செய்தால் சிறுதொழில்கள் இன்னும் நன்கு வளரும்.

இன்று பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி அதிகம் செய்வதால் பொருள்களின் விலையை கணிசமான முறையில் குறைக்க முன்வந்துள்ளன. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களால் அவற்றோடு போட்டிப் போட முடியவில்லை.

பொதுமக்களும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனத்தைப் பற்றிய தங்களின் மதிப்பீட்டுகளை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும். எந்த தொழில் நிறுவனமும், தொழிலில் நேர்மையோடு பெயர் பெற்று விளங்குமானால், அவற்றின் பொருள்களுக்கு ஆதரவு அளிக்க மக்கள் முன் வர வேண்டும்.

அடுத்ததாக, குறு மற்றும் சிறு தொழில்களுக்கு பெரும்பாலும் விளம்பரம் அளிப்பதற்கு பணப்பற்றாக்குறை இருக்கும். ஆதலால் அரசாங்கம் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்வதற்கு அந்த நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பர வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதன் மூலம் ஈட்டியிருக்க வேண்டும்.
இதை மேம்போக்காகச் செய்யாமல் கட்டாயமாக்கினால் நலிந்துகொண்டிருக்கும் சிறு மற்றும் குறுந்தொழிலின் சந்தை விரிவடையும். இதனால் அத்தொழில்கள் வீழ்ச்சி அடையாமல் வளர்ச்சி அடையும்.

அடுத்ததாக குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, அரசாங்கம் சில சலுகைகளை அளிக்க முன்வரவேண்டும். இதன் மூலம் ஈஎஸ்ஐ மற்றும் பிஎஃப் உட்பிரிவுகளுக்குள் வராத குறுந்தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலன் காக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்தந்த நிறுவனங்களிலிருந்து அரசாங்கம் வசூலித்துக் கொள்ளலாம்.

குறுந்தொழில் அதிபர்களில் திறமையாகவும் நேர்மையாகவும் செயல்படும் நபர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கலாம். பொதுமக்களின் மத்தியில் அவர்களையும் அவரது நிறுவனப் பொருள்களையும் பிரபலப்படுத்தலாம். அரசாங்க விழாக்கள் மற்றும் அரசாங்கக் கண்காட்சிகள் போன்றவை நடக்கும்பொழுது, இந்தக் குறுந்தொழில் நிறுவனங்களின் பொருள்களை அத்தகைய இடங்களில் விளம்பரப்படுத்துவதற்கு அனுமதிக்கலாம்.
அரசாங்கமே, பல கண்காட்சிகளை வெவ்வேறு பிரிவுகளுக்காக நடத்தலாம். இந்தியாவை பொருத்தமட்டில் முறையாகப் பதிவு செய்து சரியாக வரிகள் செலுத்தி, நிலையாக குறு மற்றும் சிறுதொழிலை நடத்தும் நிறுவனங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. (Organised SME Sector) மாறாக, சில விசிடிங் கார்ட்டுகள் மற்றும் லெட்டர் பேடுகள், ஒரு கைப்பேசி எண் இவற்றைக் கொண்டு சிறு தொழில் செய்வதாக பாவனை செய்து கொண்டிருக்கும் நபர்களே அதிகம். அங்கீகாரம் இல்லாமல் தொழில் நடத்தும் நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு எத்தனையோ கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது.

என் அனுபவத்தில் பல குறுந்தொழில் அதிபர்கள் எந்த வித பதிவுகளுமின்றி கோடிக்கணக்கில் வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். கருப்பு பணப்புழக்கத்தை நாட்டில் அதிகப்படுத்துவதில் இதைப் போன்ற நபர்களின் பங்கு கணிசமானது. இவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தை கடுமையாக்கி தண்டனைக்கு உட்படுத்தினாலன்றி, இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. இந்தச் சூழலில் நாட்டுப்பற்றோடு சமுதாய நோக்கோடு, தானும் வாழ்ந்து பிறரும் வாழ, தொழிலின் துன்பங்களை ஏற்க முன் வரும் நபர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள்.

பெரும்பாலான சிறு தொழிலதிபர்களுக்கு, போடும் முதலீட்டை திருப்பி எடுக்கவே நெடுங்காலமாகிறது. இத்தகைய நிகழ்கால அச்சுறுத்தலால், தொழில் செய்ய திறமையுள்ள பல தனி நபர்கள் முடங்கிப் போகின்றனர். அதனால் அரசாங்கம் முழு வீச்சாக நடைமுறை சிக்கல்களைக் களைந்து, இன்னும் விழிப்புணர்ச்சியோடு, யதார்த்தமான திட்டங்களைத் தீட்டி குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் உயிர்ப்புடன் இருப்பதற்கு முனையவில்லையென்றால், இன்னும் சில வருடங்களில், திறமையிருந்தும், தொழில் செய்ய முன்வருவது நின்றுவிடும்.

மக்கள்தொகை பெருக்கமுள்ள இந்தியா போன்ற நாடுகளில், குறுந்தொழில்களின் அழிவு பெரிய பொருளாதாரச் சிக்கல்களையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்தும். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளோ, ஒரு தொழிலின் தன்மை, அதற்குரிய சந்தை போன்றவற்றை நுணுக்கத்தோடு ஆராய்வதை விட்டுவிட்டு, பிணையாக கொடுப்பதற்கு அசையா சொத்து இருக்கும் பட்சத்தில் மட்டும் கடன் கொடுக்க முன் வருகின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விஷயமாகும். அதாவது தொழில் உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் கவனத்தைச் செலுத்தாமல், அது தொய்வடைந்து, தோல்வியடையும்போது தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அசையாச் சொத்துக்கள் உதவும் என்ற தவறான கண்ணோட்டத்தோடு வேலை செய்கின்றனர்.

உதாரணமாக, கடன் கொடுக்கும் சிறுதொழில்கள் எல்லாம் தோல்வியடையும்போது, அவர்கள் கொடுத்த அசையாச் சொத்துகளை அரசாங்கம் விற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொழிலதிபரின் தோல்வியின் மூலம், பல புதிய தொழிலதிபர்களை உருவாக்கமுடியாது. புதிய தொழில்கள் உருவாகாத பட்சத்தில், திறமையுள்ள தொழிலதிபர்களின் தொழில்கள் நலிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அரசாங்கம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்களை குறைந்தது மாதத்துக்கு ஒரு முறையாவது, அந்தந்த பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்து, வல்லுனர்களை அழைத்து, தொழிலதிபர்களுடன் உரையாடல் செய்தால், தொழிலதிபர்களின் நடைமுறை சிக்கல்களை அறிந்துக் கொள்ள முடியும்.

0