போதிதர்மர் வாழ்கிறார்

போதிதர்மர் / அத்தியாயம் 10

போதிதர்மர் இறப்பதற்கு முன்பே அவரது புகழ் சீனதேசம் முழுவதும் பரவிவிட்டது. அவர் இறந்து ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் ‘சான்’ புத்த மதம் ஜப்பானை அடைந்தது. ‘சான்’, ‘ஜென்’ ஆக பெயர் மாற்றம் பெற்றது. தாமோ (Damo) தாய்சீ தருமா (Taishi Daruma) ஆனார். பெயர் மட்டுமா மாறியது? ஜென்னின் பூர்வீகமே மாறியது.

போதிதர்மர் வரலாறு பலராலும் காலப்போக்கில் சரமாரியாக பின்னப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பின்னியதால் இன்று எது நிஜம் எது பொய் என பிரித்தறிய இயலாத குழப்பப் பின்னலாகக் காட்சியளிக்கிறது.

அதன் விளைவாக ஜப்பானியர்கள் போதிதர்மரை குறுதெய்வமாக, தெருமுனைக் கடவுளாக, நோய்நொடி போக்கும் ஆவியாக, வீரிய சக்தியளிப்பவராக இன்னும் என்னென்னமோவாக சித்தரித்து சிங்காரித்துள்ளனர். இவை சிங்காரமா சீரழிவா என்று நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

நம்மூர் திருஷ்டி தகடுகளைப் போல் சிகப்பு நிறத்தில் ஒருவகை தகட்டில் போதிதர்மரது பயங்கரமான உருவத்தைப் பொரித்து குழந்தைகளின் கழுத்து, கை, கால்களில் தாயத்தாக கட்டித் தொங்கவிடுகின்றனர். அந்தத் தாயத்து குழந்தைகளை பெரியம்மை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பது நம்பிக்கை. 1850க்குப் பின் அம்மை தடுப்பூசி அறிமுகமானதால் இந்த வழக்கம் ஜப்பானியர்கள் மத்தியிலிருந்து சிறிது சிறிதாக மறைந்து தொலைந்து போனது.

இதைவி போதிதர்மர் பொம்மை என்றொன்று ஜப்பானியர்கள் மத்தியில் ரொம்பப் பிரபலம். இப்பொம்மைகள் கால்கள் இல்லாமல் இந்திய வீடுகளில் தொங்கும் திருஷ்டி பூசணிக்காய்களைப்போல் காட்சியளிக்கின்றன. இவை, கிட்டத்தட்ட நம் தஞ்சாவூர் பொம்மைகள் போன்றவை, தள்ளிவிட்டால் எழுந்து நிற்கும்.

கால்கள் இல்லாத போதிதர்மர் பொம்மைகளுக்குப் பின் ஒரு பெருங்கதை உள்ளது. போன அத்தியாயத்தில் பார்த்தோமல்லவா, தியானத்தில் இருந்த போதிதர்மர் அந்தக் குகையில் இருந்து மாயமாக மறைந்தார் என்று ஜப்பானியர்கள் நம்புவதாக. அதே கதை இங்கும் தொடர்கிறது.

இரு நூல்களை அங்கு விட்டுவிட்டு மாயமாக மறைந்தார் என்று பார்த்தோம். அந்நூல்களுடன் தன் கால்கள் இரண்டையும்கூட அவர் விட்டுச் சென்றார்.  ஒரே இடத்தில் பல ஆண்டுகள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்ததால் அவருடன் அவரது கால்கள் வர மறுத்துவிட்டனவாம். எனவே, அவற்றை போதிதர்மர் அங்கேயே விட்டுச்சென்றுவிட்டார்.  இதனாலேயே போதிதர்மர் பொம்மைகள் கால்கள் இன்றி காணப்படுகின்றன. அவர் ஆவி ரூபத்தில் சென்றார் என்று சிலர் கருதுவதால்தான் இன்றும் அவர் எந்தத் துன்பத்தினுள்ளும் நுழைந்து அதனைத் தீர்த்துவைக்கும் ஆற்றல் பெற்றவர் என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.

இன்றைய போதிதர்மர் பொம்மைகள் கண்களின்றிக் காணப்படுகின்றன. அதற்குப் பின்னாலும் இருக்கிறது ஒரு கதை.

ஒருநாள், போதிதர்மர் குகையில் தியானம் செய்துகொண்டிருக்கையில் தூக்கம் அவர் கண்களைத் தழுவியது. விழித்துப்பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. தான் தியானிக்காமல் தூங்கியதை நினைத்து நினைத்து மனம் நொந்தார். ‘இந்தத் தூக்கத்துக்குக் காரணம் எனது கண்களின் இமைகள் தானே?’ என்று கோபப்பட்டு தன் இமைகளை இலையைப் பிடுங்குவதுபோல் வெடுக்கெனக் கிள்ளி எறிந்துவிட்டாராம்.

மண்ணில் விழுந்த அந்த இமைகளிலிருந்து ஒரு செடி முளைத்து எழுந்தது. அதனைக் கண்ட மக்கள் செடியின் இலைகளைப் பறித்து வெந்நீரில் இட்டு அருந்தினர். அருமையான சுவை. அது போக அவர்களிடம் அண்ட வந்த தூக்கத்தையும் அது விரட்டி அடித்தது. தூக்கத்தைப் போக்கும் புனிதம் வாய்ந்ததாகக் கருதி அந்த நீருக்கு ‘தேநீர்’ என பெயரிட்டனர். ஆகையால் அந்தச் செடியின் இலை தேயிலையானது. இன்றுவரை சீனர்களும் ஜப்பானியர்களும் மஹாயான பௌத்தர்களும் ‘தேநீரை’ புனிதமாகக் கருதி பயபக்தியுடன் அருந்துகின்றனர். இது நாம் பாலுடன் அருந்தும் தூள் தேநீர் அல்ல, அவர்கள் அருந்துவது சுடுநீரில் இட்டு அருந்தும் உயிர்ச்சத்து நிரம்பிய ‘பச்சை’ தேநீர்.

போதிதர்மர் இமைகளற்றவர் என்று ஜப்பானியர்கள் கருதுவதால்தான், போதிதர்மர் பொம்மைக்கு இமைகள் மட்டுமின்றி கண்களும் இல்லை. தருமா பொம்மைக்கு கண்கள் வரைவதென்பது ஜப்பானியர்களுக்குத் தனிப்படலம். முதலில் தருமா பொம்மையை எதற்காக ஜப்பானியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்.

‘போதிதர்மர் பொம்மை’ ஒரேயொரு பலனுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. சிகப்பு என்பது பண்டைய ஜப்பானியர்கள் மத்தியில் பிணிக்கடவுளின் இஷ்ட நிறம் என நம்பப்பட்டது. ஆகையால் போதிதர்மரின் சிவப்பு நிற பொம்மை தங்களை பிணியிலிருந்து காக்கும் என அவர்கள் நம்பினர். குறிப்பாக பெரியம்மையிடமிருந்து. அக்காலத்தில் (15 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை), அந்த அளவுக்கு அம்மை ஜப்பானியர்களை காவுவாங்கிய கொள்ளை நோய். ஜப்பானியர்களை மட்டுமல்ல உலகில் வாழ்ந்த மனித குலத்தையே அந்த நோய் ஒரு கலக்கு கலக்கியது எனலாம். நாம் ஏற்கெனவே பார்த்தவாறு இந்த வழக்கம் அம்மைத் தடுப்பூசி வந்தபின்னர் மறைந்தது.

போதிதர்மர் பொம்மை நல்ல சகுனத்தின் சின்னமானது. அந்த பொம்மைக்கு எவ்வளவுக்கெவ்வளவு அழகாக நாம் கண்களை வரைகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை.

அரசியல் பதவி, திருமணம், புது வருடப் பிறப்பு, வேலை, மதிப்பெண் என அனைத்துக் காரியங்களை தொடங்குவதற்கு முன்பும் ‘போதிதர்மர் பொம்மைக்கு’ விழி திறக்கும் படலம் நடக்கின்றது. இது ஜப்பானியர்களிடம் இன்றும் நிலவும் வழக்கம்.

தங்களது எந்த நோக்கம் நிறைவேற வேண்டுமோ அதை மனத்தில் கொண்டு ஜப்பானியர்கள் புது வருடத்தன்று போதிதர்மர் பொம்மையை கடைகளில் இருந்து வாங்குவார்கள். தங்களது லட்சியத்தை மனத்தில் தியானித்தபடி பொம்மைக்கு ஒரு கண் மட்டும் வரைவார்கள். அதுவும் பெரும்பாலும் இடது கண். மற்ற வலது கண் அவர்களது நோக்கம் நிறைவடையும்பொழுது பூர்த்திசெய்யப்படுகிறது. பூர்த்தியடையாவிட்டால் அதுவரை போதிதர்மர் ‘ஒற்றைக்கண்ணனாக’ காட்சியளிப்பார். ஜப்பானிய அரசியல்வாதிகள் தேர்தலுக்கு நிற்கும்பொழுது ஒரு போதிதர்மர் பொம்மையை வாங்கி இடக்கண் வரைவதும், தேர்தலில் வென்றுவிட்டால் வலக்கண்ணை பெரும் ஆரவாரத்துடன் தன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வரைந்து தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதும் இங்கு சகஜம்.

போதிதர்மர் பொம்மைகள் போதிதர்மர் திருவிழாக்களில் தான் அதிகம் விற்பனையாகின்றன. இந்த திருவிழாக்கள் Great Daruma Fairs of Japan என்று அழைக்கப்படுகின்றன. மேலும், ‘போதிதர்மர் திருவிழா’ என்றும் ஒரு திருவிழா ஜப்பானியர்களால் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. இதில் பூர்த்தி செய்யப்பட்ட போதிதர்மர் பொம்மைகளை தீயிலிட்டு பொசுக்குவதுதான் உற்சவ நிகழ்ச்சியாகும். இந்தத் திருவிழாவைக் காண விரும்புபவர்கள் மார்ச் 3,4 ஆகிய தினங்களில், டோக்கியோவிலுள்ள ஜிந்தாய்ஜி கோவிலுக்குச் (Jindaiji Temple) சென்றால் உற்சவத்தில் கலந்து மகிழலாம்.

போதிதர்மர் பொம்மைகளிலும் பல்வேறு தினுசுகள் உண்டு. போதிதர்மரின் கொடூர முகம், ஆந்தை முகம், குரங்கு முகம், நாய் முகம், பெண் முகம் எனப் பல வகைகள். இந்த பொம்மை கோலிக்குண்டு அளவிலிருந்து பலாப்பழ அளவுவரை கிடைக்கிறது. உருண்டை, நீழ்உருண்டை என பல கோண அமைப்புகளிலும் பொம்மைகள் விற்கப்படுகின்றன.

போதிதர்மர் பொம்மையின் குரங்கு முகத்துக்கும் ஆந்தை முகத்துக்கும் நாய் முகத்துக்கும் பெண் முகத்துக்கும் பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. இதில் பெண் முகத்துக்காகக் கூறப்படும் கதை சற்று வித்தியாசமானது.

இப்பொம்மை ‘ஹிம் தருமா’ (Hime Daruma) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இளவரசி போதிதர்மர் என்று பொருள். போதிதர்மர் ஒன்பது ஆண்டுகள் குகைக்குள் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தது ஒரு பெண்ணின் ஒன்பது மாத கர்ப்பத்தைக் குறிக்கிறதாம். இது போக ஹிம் தருமருக்கான கதை இன்னும் பல கிலோ மீட்டருக்கு நீள்வதால், இத்துடன் இதனை முடித்துக்கொள்வது சாலச் சிறந்தது. சுருக்கமாக, போதிதர்மரைப் பெண்ணாக சித்தரிக்கும் நோக்குடன் செய்யப்படும் பொம்மை இது அவ்வளவு தான்.

பெண் குழந்தைகள் நோய், நொடி இன்றி கொழுக்மொழுக் என ‘அழகாக’ வளர்வதற்கான நேர்த்தியுடன் இவை ஜப்பானியப் பெண்பிள்ளைகளின் பெற்றோர்களால் வாங்கப்படுகின்றன. இவற்றுக்கு விலைமகளிரிடையேயும் பெரும் வரவேற்பும் உண்டு.  இப்பொம்மையில் ‘தள்ளிவிட்டால் எழுந்து நிற்கும்’ பண்புக்கு பல்வேறு ஆற்றல்கள் உள்ளனவாம்.

  • நம்மைப் பீடித்துள்ள நோய்களால் விழுந்து கிடக்கும் நாம் எழுந்திரித்து நிற்போம்.
  • விடாமுயற்சி, மனவுறுதி, அச்சமின்மை ஆகியவற்றை அளித்து நம் உள்ளத்தை எழுச்சி பெறச்செய்யும்.
  • காமத்தைத் தூண்டும்.
  • இழந்த வீரியத்தை மீட்டெடுக்கும்.
  • வாடிக்கையாளர்களிடம் வீழ்ந்து எழ விலைமாதர்களுக்கு ஆற்றல் அளிக்கும்.
  • மலட்டுத்தன்மையை விரட்டி கருத்தரிக்க உதவும்.

மெய்ஜி (Meiji) காலகட்டமான 1912 வரை போதிதர்மர் பொம்மை படைப்பாற்றல் வடிவத்தில் அதாவது லிங்க வடிவில் செய்யப்பட்டதாம். அதேபோல், டோகுகுவா (Tokugawa) பரம்பரை அரசாண்ட காலத்தில் விலைமகளிர் ‘தருமா’ என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டனராம். இந்த டோகுகுவா மன்னர்களின் ஆட்சியில் போதிதர்மர் கேலிக்குரியவராகவும், நகைப்பிற்குரியவராகவும், ஆபாச பேச்சுக்குரியவராகவும் அன்றைய கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டார் என்பது அப்போதைய ஓவியங்களின் மூலம் தெரியவருகிறது. விலைமகளிருடன் இருப்பவராகவும், பெண்ணாகவும், பெண் உடை தரித்தவராகவும் போதிதர்மரை இவர்கள் தீட்டியுள்ளனர். ஏன் இவ்வாறு செய்தனர் என்பதற்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளன.

இப்பிட்ஸூ போதிதர்மர் (Ippitsu Daruma) என்பது ஒருவகை சித்திரம். கையை எடுக்காமல் தூரிகையால் போடப்படும் போதிதர்மரின் ஒற்றை வளையச் சித்திரம். இதற்கும் பல்வேறு சக்திகள் உண்டு. பட்டுப் புழுக்கூட்டினால் செய்யப்படும் மாயூ போதிதர்மர் (Mayu Daruma) பொம்மைகளும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு நல்லதாம்.

ஆக, நிலவில் வடை சுடும் நம் பாட்டியைப் போல் போதிதர்மர் ஜப்பானியர்களின் வாழ்வில் ஒன்றிவிட்ட ஒருவர். இன்றைய ஜப்பானிடம் இருந்து பிரித்தெடுக்க இயலா சின்னம்.

இவ்வளவு மூடநம்பிக்கைகள் புரையோடியிருக்கும் ஜப்பான் போதிதர்மரது நோக்கத்தை வரையறுக்க முடியாத அளவுக்குச் சிதைத்துவிட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த தருமா பொம்மைகள் உருவெடுத்ததற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. இது கொஞ்சம் நம் மனத்துக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி.

டக்கசாகி (Takasaki) நகரே போதிதர்மர் பொம்மைகளை தயாரிப்பதன் முன்னோடி. முன்னொரு காலத்தில், சுமாராக பதினேழாம் நூற்றாண்டில் ஜப்பானில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் முடிந்தும் மக்களை பொருளாதார வறட்சி வாட்டியது. அப்போது அங்கிருந்த கோயிலில் (Shōrinzan Darumaji Temple) வாழ்ந்த போதிதர்மர் (அவரது அவதாரமாம்), அம்மக்களை தன் உருவபொம்மையை உருவாக்கி விற்று அதன் மூலம் பொருளீட்டும்படி யோசனை அளித்ததைத் தொடர்ந்து அவ்வூர் மக்கள் இதில் ஈடுபட்டனராம். வறட்சியும் விலகியதாம்.

போதிதர்மர் கூறியதாகச் சொல்வது உண்மையோ இல்லை புருடாவோ, இப்பொம்மைகளால் ஒரு கூட்டம் பெரும் வறட்சியிலிருந்து தப்பியது மகிழ்ச்சிக்குரிய செய்தி. எது எப்படியோ இன்றுவரை ‘போதிதர்மர் பொம்மை’ தயாரிக்கும் தொழில் ஓகோவென இருக்கிறது. சுமார் ஒன்றரை மில்லியன் பொம்மைகள் டக்கசாகியிலிருந்து தயாராகின்றன. இது போதிதர்மர் பொம்மையின் மொத்த உற்பத்தியில் எண்பது சதவிகிதமாகும்.

இப்படியாக, போதிதர்மர் இன்றும் வாழ்கிறார். ஜென்னின் மூலமாகவும், குங்ஃபூவின் மூலமாகவும், புனைக்கதைகளின் வாயிலாகவும், சடங்கு சம்பிரதாயங்களின் வாயிலாகவும், மூட நம்பிக்கையின் வாயிலாகவும், பழமொழிகளின் வாயிலாகவும், பொம்மைகள் மற்றும் இன்னபிற வாயிலாகவும். ஜெய் போதிதர்மா!

முடிந்தது

தடுக்கப்பட்ட அறிவு

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 10

பிரிட்டிஷார் இந்தியாவில் கண்டு வியந்த பல அம்சங்களில் ஒன்று அதன் விஞ்ஞான, தொழில் நுட்ப மேன்மை. உலகின் பிற பகுதிகள் ஒவ்வொரு துறையிலும் எந்த அளவுக்கு பயணித்திருந்தனவோ அதைவிட இந்தியா மேலான நிலையில் இருந்ததை ஆரம்பகால ஐரோப்பியர்கள் பார்த்து வியந்திருக்கின்றனர். போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் இந்தியத் தாவரங்கள் பற்றிய, குறிப்பாக கேரள தாவரங்கள் பற்றிய, தகவல்களைத் தொகுத்து ஹோர்டஸ் மலபாரிகஸ் என்ற 12 வால்யூம்கள் கொண்ட மிகப் பெரிய தொகுப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இந்தியத் தாவரங்கள் பற்றிய அந்தத் தகவல் திரட்டை உருவாக்க நான்கு இந்தியர்கள் பெரிதும் உதவினார்கள். அதில் மூவர் பிராமணர். ஒருவர் சூத்திர (ஈழவ) பிரிவைச் சேர்ந்தவரும் ஆயுர்வேதத்தில் சிறந்தவருமான அச்சுதன் வைத்தியன்.

கோவாவில் இருந்து கன்னியாகுமரி வரையிலான பகுதியில் இருந்த சுமார் 750 வகைத் தாவரங்களைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் அதில் இடம்பெற்றிருந்தன. இந்தியத் தாவரங்களைப் பற்றிய தகவல் திரட்டுக்கு இந்தியர்கள் உதவி செய்ததில் பெருமைப்பட ஒன்றும் இல்லைதான். ஆனால், இந்தியாவில் அப்படியான பகுப்பு முறை முன்னரே இருந்ததால்தான் அந்தப் பணியை எளிதில் முடிக்க முடிந்தது. ஆயுர்வேதத்திலும் அதற்கு முன்பாகப் பின்பற்றப்பட்ட மருத்துவ முறையிலும் ஏராளமான மூலிகைகளைப் பற்றிய குறிப்புகளும் அவற்றின் குணங்களும் மிகத் துல்லியமாக விவரிக்கப்பட்டிருந்தன.

அதுபோல், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவில் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்துமே மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டவையாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, கலப்பை. மண்ணைக் கிளறி விதைப்பது உலகில் எல்லா சமூகங்களிலும் நடைமுறையில் இருந்த ஒரு விஷயம்தான். ஆனால், இந்திய கலப்பை போன்ற செயல் திறம் மிகுந்த ஒரு கருவி உலகில் வேறு எங்கும் இருந்திருக்கவில்லை. இந்தியாவில் அம்மை நோய்க்கான தடுப்பு மருந்து அந்த காலகட்டத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்த மருந்துகளைவிட செயல்திறம் மிகுந்ததாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தடுப்பு மருந்தைவிட இந்திய பாரம்பரியத் தடுப்பு மருந்து அதிக நோய்ப் பாதுகாப்பைத் தந்திருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரும்பு உயர் தரமானதாக இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவில் சுமார் 10,000 இரும்பு உலைகள் இருந்ததாகவும் ஒரு உலையில் வாரத்துக்கு அரை டன் இரும்பு உருக்கித் தயாரிக்கப்பட்டதாகவும் பிரிட்டிஷ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 35-40 வாரங்கள் இயங்கியதாக வைத்துக்கொண்டால் ஆண்டொன்றுக்கு ஓர் உலை மூலம் சுமார் 20 டன் இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கும். உலகின் வேறு எந்தப் பகுதியை விடவும் இது அதிகமான அளவுதான். அதோடு அந்த இரும்பின் தரமானது ஸ்வீடனின் மிகச் சிறந்த இரும்பைவிடவும் சிறப்பாக இருந்ததாக அயர்ன் வொர்க்ஸ் இன் ராமநாயக்க(ன்)பேட்டை என்ற தலைப்பில் 1795-ல் எழுதிய கட்டுரையில் டாக்டர் பெஞ்சமின் ஹைன் குறிப்பிட்டிருக்கிறார்.

இவை எல்லாவற்றையும்விட மருத்துவத்தில் இந்தியா எட்டியிருந்த உயரம்தான் பிரிட்டிஷாரை மலைக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி இன்று உலகில் வெகுவாக முன்னேறி இருக்கும் மருத்துவப் பிரிவு. அதன் வேர்கள் இந்தியாவில்தான் இருந்திருக்கிறது என்பது அன்றைய பிரிட்டிஷாருக்கு மட்டுமல்ல இன்றைய இந்தியர்களுக்குக்கூட நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கும். ஐரோப்பியர்கள் நீராவியில் இருந்து ரயில் எஞ்சினைக் கண்டுபிடித்தார்கள். நாம் இட்லி சுட்டோம் என்று நம்மை நாமே கேலிச் சித்திரமாக ஆக்கிக் கொள்வதில்தான் நமக்கு மிகவும் பெருமிதம்.

இந்தியாவின் கடந்த காலம் பிற நாடுகளை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்தது என்ற உண்மையை இந்தியர்களே மறுப்பதற்கான காரணம் வெகு எளிது. இந்தியாவின் கடந்த காலத்தை வைதிக-பிராமண ஆதிக்கம் மிகுந்த காலமாக அடையாளப்படுத்தியே அவர்களுடைய அரசியல் ஆசான்கள் வகுப்பு எடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எனவே, இந்தியாவின் சிறப்பு என்று எதையாவது சொன்னால் அது பிராமணர்களைப் புகழ்ந்ததாக ஆகிவிடும். பிராமணர்களை தீமையின் பேருருவமாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். இதற்கு எந்தவித ஆதாரங்களும் தேவையில்லை. அது அப்படித்தான் என்று அடித்துச் சொன்னாலே போதும் என்ற எளிய சூத்திரத்தால் முடுக்கிவிடப்பட்டுதான் இன்றைய இந்திய சிந்தனை நதி பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எல்லா இடங்களையும் போலவே இங்கும் வேலைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன; அகமண முறை நிலவியிருக்கிறது. ஆனால், அவையெல்லாம் பிராமணர்களின் கண்டுபிடிப்பாக சொல்லப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகின்றன. மனு ஸ்மிருதி என்பது பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகுதான் இந்த அளவுக்கான முக்கியத்துவத்தையே பெற்றது. அவர்களால்தான் அது தொகுக்கவும்பட்டது. அதில் என்னென்ன இடைச்செருகல் என எந்த ஆய்வும் எங்கும் செய்யப்பட்டதே இல்லை. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ‘பிற்படுத்தப்பட்ட சாதிகளையும்’, ‘தாழ்த்தப்பட்ட சாதிகளையும்’ அங்கமாகக் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள்தான் கடந்த ஐம்பது ஆண்டுக்கு முன்புவரை நீதிமன்றமாக இருந்துவந்திருக்கின்றன. இன்றும் தமக்குள்ளாகவே பேசித் தீர்த்துக் கொள்ளும் பஞ்சாயத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இன்றும் மனித மலத்தை மனிதரே அள்ளுகிறாரா… மனுதான் காரணம். தலித்கள் பிற்படுத்தப்பட்டவர்களால் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறார்களா… ஆரிய, பிராமணர்கள்தான் காரணம் என கிளிப் பிள்ளைகள்கூட சொல்லக் கூசும் அளவுக்கு விஷயத்தின் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள மறுத்து மட்டையடி அடிப்பதே இங்கு போராளிக்குணமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் புகழ்ந்தால் பிராமணர்களைப் புகழ்ந்ததாகிவிடும். பிராமணர்களைப் பழிக்க வேண்டுமா… இந்தியாவின் கடந்த காலத்தைப் பழித்தால் போதும் என்று இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்ததாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இந்தியாவின் பல்வேறு சாதிக் குழுக்களில் பிராமணர்களும் ஒரு பிரிவினர். ஒவ்வொரு சாதியினரும் தத்தமது தொழில்களை எந்த அளவுக்கு மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்களோ அதைவிடக் கூடுதலாக பிராமணர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொண்டதன் மூலம் சமூக மேலாண்மையை அடைந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கீகாரத்தோடு அவர்கள் தங்கள் நிலையைத் தக்கவைத்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் இந்தியாவின் கட்டடக்கலையில் ஆரம்பித்து மருத்துவம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் என ஏராளமானவற்றில் பிராமணர்களுக்கு இணையாக பிற சாதியினரும் கணிசமாக பங்களித்திருக்கிறார்கள். இந்தியா என்பது வெறும் பிராமண பூமி மட்டுமே அல்ல. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் மருத்துவத் தொழில் நுட்பமானது எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களால் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும். மண் பானை, செங்கற்கள் செய்யும் குயவர்கள்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

திப்பு சுல்தானுடனான போரில் பிரிட்டிஷாரின் படையில் இருந்த ஒருவருடைய மூக்கு அறுபட்டுவிட்டது. ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லும் காளை வண்டியின் ஓட்டுநராக இருந்த அவர் பல மாதங்கள் சிதைந்த மூக்குடனே வசித்து வந்திருக்கிறார். அவருக்கு மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த குமார் என்ற ஒருவர் செயற்கை முறையில் மூக்கை ஒட்ட வைத்திருக்கிறார். அந்த அறுவை சிகிச்சையை அருகில் இருந்து பார்த்த பிரிட்டிஷ் மருத்துவர்கள் தாமஸ் க்ருஸ், ஜேம்ஸ் ஃபிண்ட்லே விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். உடைந்த சிலை அல்லது பானையின் பாகத்தை களி மண் பூசி ஒட்ட வைப்பதுபோல் வெகு அழகாக அவர்கள் ஒட்ட வைத்திருக்கிறார்கள். இந்தப் பாணியைப் பின்பற்றித்தான் நவீன அறுவை சிகிச்சையின் தந்தை என்று உலகம் இன்று கொண்டாடும் ஜே.சி.கார்ப்யூ (J.C. Carpue, FRS) தன் முதல் அறுவை சிகிச்சையை 1815-ல் பிரிட்டனில் செய்திருக்கிறார்.

மூக்குக்குத் தேவையான தோல் மற்றும் சதைப்பகுதியை நெற்றியில் இருந்து குயவர்கள் எடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு என மருத்துவ உலகம் இன்றும் கொண்டாடுகிறது. பொதுவாக சதை அதிகமாக இருக்கும் கால் அல்லது பிற பகுதியில் இருந்து எடுப்பதுதான் எளிது என்று தோன்றும். அறுவை சிகிச்சையின் தந்தை என்று போற்றப்படும் சுஷ்ருதர் கூட கன்னத்தில் இருந்து தோலை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறார். ஆனால், மூக்குக்குத் தேவையான தோலை நெற்றிப் பகுதியில் இருந்து எடுப்பதில் நிறத்தில் ஆரம்பித்து பல ஆதாயங்கள்  இருப்பதை இன்றைய மருத்துவ உலகம் பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கண்டடைந்திருக்கிறது. அதுவோ இந்தியாவில் மிகவும் சர்வ சாதாரணமான பிரிவைச் சேர்ந்தவர்களால் எளிதில் கண்டடையப்பட்டிருக்கிறது.

முதலில் அடிபட்ட மூக்கின் மேல் மெழுகால் ஆன மூக்கு ஒன்றை ஒட்ட வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு அதன் விளிம்புகளை நெற்றி வரை பூசி மொழுகியிருக்கிறார்கள். பிறகு நெற்றியில் இருந்து தோலைப் பிய்த்து எடுக்காமல் கீழே இழுத்துக் கொண்டு வந்து மூக்கின் நடுவே சுவாசத்துக்கு மட்டும் இடைவெளி இருக்கும் வகையில் மூக்கின் மேலே பொருத்தியிருக்கிறார்கள். புதிய தோலானது பழைய தோலுடன் நன்கு ஒட்டும் வகையில் ஐந்தாறு இடங்களில் டெரா ஜபானிகா எனப்படும் பிசின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மருந்துகளும் போடப்படவில்லை. நாலைந்து நாட்கள் கழித்து அந்த பிசின் நீக்கப்பட்டு நெய் தடவிய துணி போர்த்தப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து நீட்டிக் கொண்டிருக்கும் தோல் பகுதிகள் சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. முதல் கட்ட அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தாறு நாட்கள் நோயாளி படுத்த படுக்கையாகவே வைக்கப்படுகிறார். அதன் பிறகு, மூக்கில் துவாரம் சரியாக இருப்பதற்காக துணிச் சுருள்கள் வைக்கப்படும். இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் நெற்றியில் இருந்த தழும்பு காலப்போக்கில் மறைந்துபோய்விடுவதாகவும் ஜே.சி.கார்ப்யூ வியந்து பாராட்டியிருக்கிறார்.

நேருக்கு நேர் மோதி வெல்ல முடியாத பலசாலி ஒருவனை அவனுடைய எதிரிகள் வீழ்த்திய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவனைப் பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன உடம்புக்கு முடியவில்லையா, மிகவும் சோர்வாக இருக்கிறீர்களே, முன்பு போல் கம்பீரம் இல்லையே என்று சொல்லிச் சொல்லியே அவனை உளவியல் ரீதியில் கலக்கமடைய வைத்து அதன் மூலம் அவனை நோய்க்குள் தள்ளிவிட்டார்களாம். இந்தியா அப்படியான ஒரு நிலையில்தான் இப்போது இருக்கிறது. செவி வழிச் செய்திகளாக, பாடல்களாக தலை முறை தலைமுறையாகக் கடந்து வந்திருக்கும் ஒரு அறிவானது அடுத்த தலைமுறைக்குப் போக முடியாதபடி தடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.

0

அணுவும் மூலக்கூறும்

மேட்டர் / அத்தியாயம் 8

Amedeo Avogadro

அணு பற்றிய கருத்தைத் தெளிவாக முன்வைத்தவர் டால்ட்டன். ஹைட்ரஜன் வாயுவை எடுத்துக்கொண்டால் அதனுள்ளே ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும். ஆக்சிஜன் வாயுவில் ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும். இந்த இரண்டு வாயுக்களும் ஒன்றுசேர்ந்து வினை புரியும்போது ஒரு ஹைட்ரஜன் அணுவும் ஓர் ஆக்சிஜன் அணுவும் இணையும். விளைவாக ஒரு நீர் அணு உருவாகும். அதேபோல அம்மோனியா என்ற வாயு, ஒரு நைட்ரஜன் அணு, ஒரு ஹைட்ரஜன் அணு இணைந்து வருவது. இதுதான் டால்ட்டனின் கருத்து.

ஆனால், கே லூஸாக்கின் பரிசோதனை முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தன. ஒரு லிட்டர் ஆக்சிஜனுடன் இணைய இரண்டு லிட்டர் ஹைட்ரஜன் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் நைட்ரஜனுடன் இணைய மூன்று லிட்டர் ஹைட்ரஜன் தேவைப்படுகிறது. இப்படி அவர் சோதித்துப் பார்த்த வாயுக்கள் எல்லாமே அழகாக முழு எண்கள் விகிதத்தில் இணைந்தன.

இங்கே நாம் கொள்ளளவைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் இரண்டு வாயுக்களும் ஒரே வெப்பத்தில், ஒரே அழுத்தத்தில் உள்ளன என்பதையும் சேர்ந்தே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் ஆக்சிஜன், இரண்டு லிட்டர் ஹைட்ரஜன் என்று நான் சொன்னது ஒரு புரிதலுக்காகத்தான். கே லூஸாக்கின் கருத்தின்படி, ஒரு பங்கு ஆக்சிஜனுக்கு இரண்டு பங்கு ஹைட்ரஜன் தேவை.

கே லூஸாக்கின் கருத்தை டால்ட்டன் ஏற்றுக்கொள்ளவில்லை. டால்ட்டனுக்கு இதில் என்ன பிரச்னை?

ஒரு பாத்திரத்தில் ஒற்றைப்படை எண்ணுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் இருந்தால் அதில் ஆக்சிஜன் அணுக்களைச் செலுத்தினால் என்ன ஆகும் என்பதுதான் டால்ட்டனின் கேள்வி. ஒவ்வோர் ஆக்சிஜன் அணுவுக்கும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் தேவை என்றால், கடைசியாக மிச்சமாக இருக்கும் ஒற்றை ஹைட்ரஜன் அணுவுக்கு என்ன ஆகும்? ஒரு நீர் மூலக்கூறில் ஒரு ஹைட்ரஜன் அணுவும் அரை ஆக்சிஜன் அணுவும் இருக்குமா? அரை ஆக்சிஜன் அணு என்பதே இருக்கமுடியாதே? அது அணுக்கொள்கைக்கு மாறானதே?

இங்குதான் இத்தாலிய வக்கீல் அவகாட்ரோ (Amedeo Avogadro) வருகிறார். 1776-ல் பிறந்த அவகாட்ரோ, இயற்பியலில் மிகுந்த நாட்டம் கொண்டார். சட்டம் படித்திருந்தாலும், அவர் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பின்னர் டூரின் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் ஆனார்.

கே லூஸாக்கின் கொள்ளளவுக் கோட்பாட்டைப் படித்த அவகாட்ரோ, டால்ட்டனின் மறுப்பையும் புரிந்துகொண்டார். டால்ட்டனின் மறுப்பை எப்படி எதிர்கொள்வது? அதே நேரம் கே லூஸாக்கின் பரிசோதனைகளை எப்படி எடுத்துக்கொள்வது?

இதற்கு ஒரே விடைதான் சாத்தியம். ஒரு தனிமம் வாயுவாக இருக்கும்போது அதன் அணுக்கள் இரட்டை இரட்டையாகச் சேர்ந்து இருக்கவேண்டும். அதாவது ஆக்சிஜனில் ஒவ்வோர் ஆக்சிஜன் அணுவும் தனித்தனியாக உலவிக்கொண்டிருக்காது. அது இரட்டை இரட்டையாக O-O அதாவது O2 என்று இருக்கும். இதேபோலத்தான் ஹைட்ரஜனில் H-H (H2), நைட்ரஜனில் N-N (N2) என்று இருக்கும்.

இந்த எளிமையான கொள்கையை அவகாட்ரோ முன்வைத்ததுமே அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிட்டன. மூலக்கூறுகள் என்பவை சேர்மங்களில் மட்டுமல்ல, தனிமங்கள் வாயுக்களாக இருக்கும்போது அவற்றிலும் இருக்கும். ஆக்சிஜன் வாயுவில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருக்கும். ஒவ்வொரு ஆக்சிஜன் மூலக்கூறிலும் இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும் என்றார் அவகாட்ரோ.

நீர் உருவாகவேண்டும் என்றால், ஓர் ஆக்சிஜன் மூலக்கூறும் இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் நெருங்கி வரும். அவை வேதிவினை புரிந்ததும் இரண்டு நீர் மூலக்கூறுகள் உருவாகும். அதேபோலத்தான் ஒரு நைட்ரஜன் மூலக்கூறும் மூன்று ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் இணைந்து இரண்டு அம்மோனியா மூலக்கூறுகள் உருவாகும்.

டால்ட்டன் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்து இருக்கமுடியாது என்றார் அவர். ஒன்றை ஒன்று கடுமையாக விலக்கும்படியான மின்னூட்டம் கொண்டவை அவை என்பது டால்ட்டனின் கருத்து.

டால்ட்டனின் எதிர்ப்பைத் தாண்டி, அவகாட்ரோ தன் கருத்தை விரிவாக்கினார். அதன்படி, குறிப்பிட்ட வெப்பத்திலும் அழுத்த்த்திலும் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை நிறைக்கும் அனைத்து வாயுக்களிலும் ஒரே எண்ணிக்கையுள்ள மூலக்கூறுகள்தாம் இருக்கும். அதாவது ஒரு லிட்டர் ஆக்சிஜனில் இருக்கும் அதே எண்ணிக்கை மூலக்கூறுகள்தாம் ஒரு லிட்டர் அம்மோனியாவிலும் இருக்கும், ஒரு லிட்டர் ஹைட்ரஜனிலும் இருக்கும், ஒரு லிட்டர் கரியமில வாயுவிலும் இருக்கும்.

இது மிக மிக தைரியமான ஒரு கருதுகோள். இதற்கு அவகாட்ரோவின் கருதுகோள் என்று பெயர். இதிலிருந்து வருவதுதான் அவகாட்ரோ எண் என்ற எண்ணிக்கை. இதனைப் பின்னர் பார்க்கலாம்.

அவகாட்ரோ தன் கருத்தை வெளியிட்டது 1811-ம் ஆண்டில். ஆனால் அவகாட்ரோவின் இந்தப் புரட்சிகரமான கருத்து, ஐரோப்பாவில் பெரிய பாதிப்பை உடனடியாக ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அப்போதைக்கு அறிவியல் தாதாவாக இருந்தவர் டால்ட்டன். டால்ட்டனுக்கு ஏற்புடையதாக இல்லாத கருத்து பிரபலமாவது சாத்தியமே இல்லை.

1860 வரையில் யாரும் அவகாட்ரோவைக் கண்டுகொள்ளவில்லை. அந்த ஆண்டில்தான் ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூஹே என்ற நகரில் அறிவியலாளர்கள் ஒன்றுகூடி முதல் உலக வேதியியல் மாநாட்டை நடத்த முடிவு செய்தனர்.

அந்த மாநாட்டில்தான் அவகாட்ரோவின் நாட்டவரான ஸ்டானிஸ்லா கேன்னிசாரோ (Stanislao Cannizaro) அனைத்து விஞ்ஞானிகளையும் உட்காரவைத்து அவகாட்ரோவின் கொள்கைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று விளக்கிச் சொன்னார். அந்த மாநாட்டில்தான் அவகாட்ரோ கொள்கையை கேன்னிசாரோ விளக்குவதை ரஷ்ய மாணவரான திமித்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev) என்பவர் அமர்ந்து, திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தார்.

0

லெனினும் இந்திய விடுதலையும்

ஜூலை 1, 1905 அன்று இந்தியன் ஒப்பீனியன் ஏட்டில் காந்தி இப்படி எழுதினார். ‘ரஷ்ய மக்கள் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் இந்தப் புரட்சியானது இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகக் கருதப்படும். நாங்களும்கூட கொடுங்கோன்மைக்கு எதிராக ரஷ்யாவின் பாதையைப் பின்பற்றலாம்.’ புரட்சி வெற்றிபெற்ற பிறகு, 1928ல் காந்தி இவ்வாறு எழுதினார். ‘போல்ஷ்விக் பதாகைக்குப் பின்னர் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்கள் லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது.’

1917 ரஷ்யப் புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி எழுதிய லெனினும் இந்திய விடுதலையும் என்னும் நூல் இந்தப் பணியைச் சீராகத் தொடங்கிவைத்தது.

ரஷ்யப் புரட்சியைக் கண்டு பிரிட்டிஷ் இந்தியா சினமும் அச்சமும் கொண்டிருந்த காலகட்டம் அது. அவ்வாறு அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்பது காந்தியின் கருத்து. போல்ஷ்விக் புரட்சியை அவர் அபாயம் என்று கருதவில்லை. யங் இந்தியாவில் 1920ல் காந்தி எழுதியது.‘போல்ஷ்விக் அபாயம் என்பதை நான் ஒருபோதும் நம்பியதில்லை. ரஷ்ய போல்ஷ்விக் அபாயம் அல்லது வேறு எந்தவொரு அபாயம் குறித்து இந்திய அரசாங்கம் ஏன் பயன்படவேண்டும்?’

ஆனால், பிரிட்டிஷ் இந்தியா நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. ரஷ்யர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியை இங்கே அரங்கேற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? லெனினையும் அவரது போல்ஷ்விக் கட்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜார் அரசுக்கு ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?

ஓர் உபாயத்தைக் கையாண்டது பிரிட்டன். போல்ஷ்விக் புரட்சி பற்றியும் குறிப்பாக லெனின் பற்றியும் செய்திகள் எதுவும் பரவாதபடி தடை செய்தது. ரஷ்யாவிலிருந்து ஆவணங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. கிடைத்தவையெல்லாம் எதிர்மறையான செய்திகள்தாம். லெனினின் சர்வாதிகாரம் பற்றிய, போல்ஷ்விக்குகளின் வன்முறை செயல்பாடுகள் பற்றிய செய்திகளே பிரிட்டனால் வரலாறு என்னும் போர்வையில் பரப்பப்பட்டன. கம்யூனிசம் மனித குலத்துக்கு விரோதமான ஒரு தத்துவம் என்பது தீவிரமாக வாதிடப்பட்டது. கம்யூனிசத்தைப் பின்பற்றுவது அல்ல, அவ்வாறு நினைப்பதும்கூட சமூக விரோதமான செயல் என்று அறிவுறுத்தப்பட்டது. லெனின் ஒரு கொடூரமான கொலைகாரன் என்றும், ரத்தக் காட்டேரி என்றும் மண்டையோட்டு மாலை போட்டுக்கொண்டு வலம் வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டது.

ஆனால், அனைத்து தடைகளையும் மீறி, ஆங்கிலேயர்களின் கட்டுக்கதைகளை உடைத்து, லெனினை இந்தியர்கள் தரிசித்தார்கள். நேரு, காந்தி, திலகர் போன்ற இந்திய தேசியவாதத் தலைவர்களையும் இந்திய மக்களையும் போல்ஷ்விக் தத்துவம் ஒருசேரப் பற்றிக்கொண்டது. உண்மையில், போல்ஷ்விக்குகள் பற்றிய பிரிட்டனின் தவறான பிரசாரமே, பல மக்களை லெனினை நோக்கித் திருப்பியது என்றும் சொல்லலாம். அப்படி என்ன ஆபத்தான சித்தாந்தம் என்னும் ஆர்வக் குறுகுறுப்புடன் பலர் சோவியத் நோக்கி நகரத் தொடங்கினர்.

இது குறித்து எஸ்.ஏ. டாங்கே இவ்வாறு எழுதுகிறார். ‘போல்ஷ்வியம் என்பது ரஷ்யாவின் தலைவன் ஆனபின், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அரசாங்கங்களும் அதை பேய்த்தனமானது, அட்டூழியமானது மற்றும் சர்வாதிகாரமானது என்று சித்தரித்து மக்களின் சிந்தனையில் அவை குறித்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் செயல்பாடு என்று லேசான சாயல் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப்படுகிறது என்பதுடன் எந்தவொரு நாட்டிலுமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்தும் மக்கள் துண்டிக்கப்படுகிறார்கள்…போல்ஷ்விக்குகளின் உறுதியான சர்வதேச கொள்கையில் இதற்கான காரணம் பொதிந்துள்ளது.’

அந்தக் கொள்கை இதுதான். அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காலனி நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சோவியத் ஆதரவு அளிக்கும் என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். மக்களை காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

காந்தியின் அமைதி வழியிலான போராட்டம் இந்திய சுதந்தரத்தைப் பெற்றுத்தராது, ரஷ்யாவில் நடைபெற்றதைப் போன்ற புரட்சி மூலமே ஆங்கில ஆதிக்கத்தை உடைக்கமுடியும் என்னும் கருத்தாக்கம் உருபெற ஆரம்பித்தது. எஸ்.ஏ. டாங்கேயின் எழுத்துகளில் இந்த உண்மை காணக்கிடைக்கிறது.

‘ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது… அது இந்தியத் தொழிலாளரின் கரங்களில் உள்ளது. பயங்கரப் போக்கில் ஈடுபடும் ராணுவச் செயல்பாடுகளும், அவற்றின் வெற்றியும் சிப்பாய்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்துக்கு வேகமாகக் கொண்டுசெல்வதிலும், ராணுவத்திற்கான உணவுப் பொருட்கள் வெடிபொருட்களை கொண்டுசெல்வதிலும் பிரதானமாகச் சார்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளிகளால் செய்யப்படுகின்றன. முக்கியமான தருணத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்ய மறுத்தால், ரயில்வேத் தொழிலாளிகள், தந்தி ஊழியர்கள், கூலிகள் மற்றுமிதர வகைப்பட்ட தொழிலாளிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால், அதாவது சதிவேலை என்றழைக்கப்படுவதை ஏற்பாடு செய்தால் நம்முடைய வெற்றி நிச்சயம். அரசாங்க பயங்கரப் போக்கு என்பதன் முழுச் செயல்பாடும் முடக்கப்படும் என்பதுடன் அது பணிந்தே தீரவேண்டும்.’

மராத்தி மொழியில் லெனினின் முதல் வாழ்க்கை வரலாறு 1922ல் வெளியிடப்பட்டது. ‘நிகோலய் லெனின் : ரஷ்ய ஜனநாயகத்தின் நிறுவனருடைய வரலாறு’ என்னும் இந்நூலை எழுதியவர், ராம்கிருஷ்ண கோபால் பிடே என்பவர். ஏன் லெனினின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதத் துணிந்தார் என்பதற்கான காரணம் முன்னுரையில் காணப்படுகிறது.

‘அது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்த நாட்களாகும். இந்தியர்களாகிய நாங்கள் சுதந்தரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சனத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம். லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாது. எனவே புரிபடாமல் இருந்தது. அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. லெனினுடையதானது ஒரு இணையற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் ஒரு முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம். அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.’

லெனின் பற்றிய விவாதங்கள் இங்கே மும்முரமாக தொடங்கின. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகை அலுவலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஆங்கில மாத ஏடுகள் இருந்தன என்றும் அலுவலக நூலகத்தில் சில புத்தகங்கள் இருந்தன என்றும் தெரியவருகிறது. (லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி).

சம்ஹதி (ஒற்றுமை) என்னும் வங்கமொழிப் பத்திரிகை 1923ம் ஆண்டு ஜிதேன் குப்தா என்னும் ஏழை அச்சுத் தொழிலாளியால் தொடங்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கிடந்து துவள நேரிட்டபோதும்கூட கடைசி வரை பத்திரிகையை அவர் நடத்தி வந்தார். ரஷ்யப் புரட்சி குறித்து சம்ஹதி என்ன சொல்லியிருக்கிறது? ‘எவ்வாறாயினும் மேல்தட்டு வர்க்கங்கள் தாம் உலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தின. தற்பொழுது கீழ்மட்ட வர்க்கங்கள் விழித்துக்கொண்டுவிட்டன என்பதுடன் அவற்றை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று பேய்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய மகிழ்ச்சியானது மிக்க வேதனைகள் மூலம் வருகிறது. உருவாக்கத்திற்கு இத்தகைய வேதனைகள் தேவைப்படுகின்றன.’

ஜனவரி 30, 1925ல் முகம்மதி என்னும் இஸ்லாமிய ஏட்டிய வெளிவந்த கருத்து இது. ‘லெனின் ரஷ்யாவை மட்டும் விடுதலை செய்தார் என்று கூறுவது உண்மையைக் குறைத்துச் சொல்வதாகும். செயலற்றிருந்த மனித குலத்தை சுதந்தரப் பாடலுடன் ஒருவர் கிளர்ந்தெழச் செய்தானென்றால், லட்சோப லட்சம் மக்களுக்கு மகிழ்ச்சி என்று எதிர்பால ராஜ்யத்தின் கதவை ஒருவர் திறந்தானென்றால், துன்பதுயரமும், வறுமையும் நிறைந்த இவ்வுலகில் ஒருவர் சாந்தப்படுத்தும் அமிர்தத்தை விநியோகித்தாரென்றால் அவர்தான் லெனின்.’

இங்கு சிறு கலகம் ஏற்பட்டாலும், சிறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் லெனினை நோக்கி கை நீட்டியது பிரிட்டிஷ் இந்தியா. காந்தியும்கூட லெனினின் சித்தாந்தத்தால் கவரப்பட்டுவிட்டார் என்றும் இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சம்சாட்டினார்கள். ஸ்வராஜ்யா புனா, மராத்தி வார இதழில் மார்ச் 30, 1920 அன்று இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியானது. ‘இந்தியா மீது போல்ஷ்விக் திட்டங்கள் குறித்தும் போல்ஷ்விக்குகளுடன் திரு. காந்தியின் தொடர்புகள் குறித்தும் செய்திகள் எங்கும் பரவியுள்ளன. ஆனால், உண்மையில் இத்தகைய செய்திகள் அனைத்தும் தவறானவையாகும். போல்ஷ்விக் பிரசாரம் இல்லாமலேயே இந்தியாவில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் பொருளாதார திவால் நிலைமையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும்தான் போல்ஷ்வியத்தை தோன்றச் செய்துள்ளது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் உலகம் முழுவதும் அதிகாரத்தைச் செலுத்த ஆசை கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கும்போது, ஏன் போல்ஷ்விக்குகள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது?…நான்கு ஆண்டுகளுக்கு 90 கோடி ரூபாய்க்கு குறையாத பற்றாக்குறைக்கு பொறுப்பான நிர்வாக முறையின் விளைவுதானே போல்ஷ்வியமாக இருக்கமுடியும்?’

காங்கிரஸ் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தன் திசைவழியை மாற்றிக்கொண்டது என்கிறது ஜூலை 26, 1922 அன்று வெளிவந்த ஆத்ம சுத்தி என்னும் இந்தி இதழ். ‘ஏழைகள் பிரச்சினை இதுவரை காங்கிரஸில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியானது நடுத்தர வர்க்க மனிதர்களின் கரங்களில் உள்ளது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போகும்போது அதிகாரம் தங்கள் கரங்களில் வருமென்று அவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களும் வர்த்தகர்களுமாவர். சுயராஜ்ஜியம் வரும்பொழுது அன்னியப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் மூலம் லாபம் பெற வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்கள் அப்பொழுது உயர் பதவிகள் கிடைக்குமென்று கருதுகின்றர். எனவே, சாதாரண மக்கள் காங்கிரஸ் குறித்து அக்கறை காட்டவில்லை.’

காஸி இஸ்லாம் தூமகேது, டிசம்பர் 15, 1922 இதழில் இந்தக் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். ‘ஒரு நாட்டின் சுதந்திரமானது, மக்களால் உதவிடப் பெறாத ஒரு சில படித்த மனிதர்களைக் கொண்டு மட்டும் அடையப் பெற்றுவிடாது என்ற மகத்தான உண்மை இயக்கத் தலைவர்களுக்குத் தோன்றவில்லை. துவக்கத்தில் நாம் செய்த தவறை இன்று நாம் கண்டுபிடித்து விட்டோம். அனைத்து அதிகாரங்களும் ஒரு சில படித்த தலைவர்களின் பிடியில் இருப்பது மட்டும் சுதந்திரமல்ல. சுய பாதுகாப்பிற்காக நமது நாட்டை நாம் பலப்படுத்த விரும்பினால் நாம் இதயபூர்வமாக ஆன்மாபூர்வமாக மக்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.’

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல உலக மக்களுக்கும் லெனினும் ரஷ்யப் புரட்சியும் கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடம் ஒன்றுகலக்காமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் எதிலும் எப்போதும் வெற்றிபெறமுடியாது.

0

மருதன்

இந்தி விஷயத்தில் வேண்டாம் வீம்பு!

மொழிப்போர் / அத்தியாயம் 8

இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மெல்ல மெல்லப் பொங்கியெழுந்த சமயத்தில் அண்டைப் பகுதியான ஐதராபாத்தில் போர்ச்சூழல் உருவானது. சமஸ்தான இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டிவந்த சமயத்தில் ஐதராபாத் சமஸ்தானம் முரண்டு பிடித்தது. விளைவு, ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர் படைகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.

ஐதராபாத்தில் உள்ள கலவரச் சூழல் வேறு. இங்கே இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வேறு.  இரண்டும் ஒன்றாகி, மிகப்பெரிய கலவரங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வேகத்தைச் சற்றே குறைத்துக்கொள்வது என்று போராட்டக்குழு முடிவெடுத்தது. 16 செப்டெம்பர் 1948 அன்று போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் பெரியார். இது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை சோர்வடையச் செய்தது. அவர்களைத் தேற்றும் பொறுப்பை அண்ணா கையில் எடுத்துக்கொண்டார்.

‘போராட்டம் தீவிரமாகவும் வெற்றியை நோக்கியும் சென்று கொண்டிருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வரும்வரைக்கும் நம்முடைய நேரடி நடவடிக்கைகளை நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறார் பெரியார்.’ என்றார். அதன் அர்த்தம், ஹைதராபாத் யுத்தம் முடிந்ததும் மொழிப்போர் மீண்டும் தொடங்கும் என்பதுதான்.

ஹைதரபாத் நிஜாம் சரண் அடைந்து, யுத்தம் முடிவுக்கு வந்தபிறகும்கூட இந்தி விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை. இதனால் அதிருப்தியடைந்தார் பெரியார். ‘மீண்டும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கும். அப்போது அரசாங்கம் அதனை ஒடுக்கமுயலும். தடியடிகள், துப்பாக்கிச்சூடு எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனாலும் எங்கள் அழைப்பு வந்ததும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியே வாருங்கள். படிப்பைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அல்லது சிறையிலேயே பள்ளி நடத்தலாம். ஆசிரியர்களையும் உடன் அழைத்துவாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக 23 அக்டோபர் 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழக மாநாடு கூடியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் பேசினார் அண்ணா.

‘மறியல் தொடங்குவதற்கு முன்னரே நமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னோம். நாடாளும் சர்க்கார் அவற்றைக் கேட்க மறுத்தது. காரணங்கள் பல காட்டினோம். காதுகொடுக்க மறுத்தது. கட்டாயமாக்க வேண்டாம் என்று நாம் கெஞ்சினோம். அவர்கள் மிஞ்சினார்கள். புலவர்களைக் கொண்டு புத்திகூறச் செய்தோம்; புன்மையாளர்கள் மதித்தனர் இல்லை. கலை நிபுணர் கல்யாண சுந்தரனாரும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரும் இந்தியால் தமிழ் கெடும் என்று கூறிவிட்டபின்னர் முதன்மந்திரி ஓமந்தூர் ரெட்டியாரும் அமைச்சர் அவினாசியாரும், ‘கெடாது, கெடாது’ என்று எவ்வளவுதான் கூறினாலும் பொதுமக்களால் இவர்கள் வார்த்தையில் எப்படி நம்பிக்கை கொள்ளமுடியும்? வாதாடிப் பார்த்தோம். பயனில்லை. மறியலைக் கொஞ்சம் நிறுத்தியும் பார்த்தோம். புத்தி வரவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் போரும் நின்றுவிட்டது. எனவே, அறப்போர் மீண்டும் தொடங்க வேண்டியதுதான். தொடங்கும் நாளை தலைவர் அறிவிப்பார்’

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மீண்டும் நவம்பர் முதல் தேதி முதல் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கட்டாய இந்திக்கு எதிராக மறியல் நடத்துங்கள்; அரசு தடைவிதித்தால் அதையும்மீறி மறியல் செய்யுங்கள்; கைது செய்து வழக்கு தொடர்ந்தால் ஜாமீனில் வெளியே வராதீர்கள்; எதிர்வழக்கு ஆடாதீர்கள்; அபராதம் விதித்தால் செலுத்தாதீர்கள் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் போராட்டக்காரர்களுக்குத் தரப்பட்டன.

30 அக்டோபர் 1948 அன்று சென்னை ஜிம்கானா திடலில் திரு.வி.கலியாண சுந்தரனார் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியாளர்களே, ஆணவத்தால் அழியாதீர். நாட்டு மக்களின் மனதை நன்கு அறிந்து நான் கூறுகிறேன். இந்தி விஷயத்தில் வீம்பு வேண்டாம். வீண் பிடிவாதம் வேண்டாம். கட்டாயத்தை விட்டுவிடுங்கள். கபடம் வேண்டாம். கர்வம் வேண்டாம். பெரியாரைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். இன்றிரவே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். அறப்போர் தொடங்குவதற்குள் நாளைய தினமே ஒரு உத்தரவை வெளியிடுங்கள், கட்டாய இந்தியைக் கைவிட்டுவிட்டோம் என்று. அறவழி நாடுகள். அன்பு மார்க்கம் தேடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

அறிவித்தபடியே இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் மீண்டும் வலுக்கத் தொடங்கியது. பல மாவட்டங்களிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கும்பகோணம், தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர், திருவாரூர், நன்னிலம், கொடவாசல், பேரளம், கல்லக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்தது அரசு. என்றாலும், தடையை மீறிப் பொதுக்கூட்டங்களும் மறியல்களும் நடந்தன. அவற்றைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. தடியடிப் பிரயோகம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார், கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், கே.ஏ. மணியம்மை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ப்பட்டு, சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. இவர்களில் என்.வி. நடராசனைக் கைதுசெய்த காவலர்கள், அவருடைய உடலில் இருந்து ரத்தம் வரும்வரைக்கும் தாக்கியதோடு, அவருக்குக் கைவிலங்கு போட்டபடியே வீதியில் அழைத்துச்சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன கதி ஏற்படும் என்பதை போராட்டத்தில் ஈடுபடுவோருக்குப் புரியவைக்க காவலர்கள் பயன்படுத்திய உத்தி அது.

சென்னை மாகாணத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்தி மொழி குறித்து தேசிய அளவிலான விவாதம் எழுந்தது. குறிப்பாக, சுதந்தர இந்தியாவின் ஆட்சி மொழி எது என்பது குறித்த விவாதங்கள் தேசிய அளவில் எழுந்தன. இந்திய அரசியல் நிர்ணய சபை 4 நவம்பர் 1948 அன்று கூடியது. அந்தக் கூட்டத்தில் மொழிப்பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய எல்.கே. மெய்திரா என்ற உறுப்பினர், ‘நம்முடைய நாடாளுமன்றத்தில் இந்தி மொழியில் பேசாவிட்டால் சுதந்தரம் என்பது அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிடும்’ என்றார். அவருடைய கருத்துக்கு வேறுசில உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இந்தக் கருத்தை தென்னகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏற்கவில்லை.

‘தென்னக மக்கள் சார்பாக ஒரு எச்சரிகையைத் தெரிவிக்க விரும்புகிறேன். தென்னாட்டில் ஏற்கெனவே பிரிவினை கேட்கும் சக்திகள் (திராவிடர் கழகம்) உள்ளன. அவற்றின் பலத்தை நாம் முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சிசெய்யவேண்டும். உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள நண்பர்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதற்குப் பதிலாக இந்தி ஏகாதிபத்தியம் என்ற சவுக்கடியைக் கொடுக்கிறார்கள்’ என்றார் டி.டி. கிருஷ்ணமாச்சாரி.

மொழி விவகாரத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் இந்தி ஆதரவாளர்கள், ஆங்கில ஆதரவாளர்கள் என்று இரண்டு கூறுகளாகப் பிரிந்துநின்று விவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கூர்மையடைவதற்குப் பதிலாக கடுமையடைந்தது. அப்போது பேசிய பிரதமர் நேரு, ‘அவசரம் காட்டினால் நமது நோக்கங்கள் நிறைவேறாது. சிறுபான்மையினர் மீது அவர்கள் விரும்பாத ஒன்றை பெரும்பான்மை கொண்டு திணிக்க முற்பட்டால், இந்த அவையோ அல்லது நாடோ எதை அடைய விரும்புகிறதோ அதற்கு வெற்றி கிடைக்காது’ என்றார்.

மொழி விவகாரத்தில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும் பிரதமர் நேருவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. சுதந்தர இந்தியாவின் அரசியல் சட்டம் இந்தியில் நிறைவேற்றப்பட்டதாக இருக்கவேண்டும் என்றார் ராஜேந்திர பிரசாத். ஆனால் அரசியல் சட்டம் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும். இந்தி மொழியாக்கத்தை அங்கீகரித்தால் ஒவ்வொரு
இந்தி சொல்லுக்கும் பொருள் கொள்வது தொடர்பாக அவையில் காரசாரமான விவாதங்கள் ஏற்படும். ஒருமித்த கருத்து ஏற்படாது. நேரம் விரயமாகும் என்றார் பிரதமர் நேரு.

இந்தியா, ஆங்கிலமா என்பது தொடர்பாக ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் இடையே கடிதப் பரிவர்த்தனைகள் நடந்தன. ஆனால் இருவருமே தத்தமது நிலையில் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து 8 ஆகஸ்டு 1949 அன்று இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை மீண்டும் கூடியது. அதில் பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

முக்கியமாக, முதல் பத்து ஆண்டுகளுக்கு இந்தி அல்லது ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்ற யோசனை சொல்லப்பட்டது. ஆனால் ஆங்கில ஆதரவாளர்களோ, ‘அல்லது’ என்ற பதத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தை அப்புறப்படுத்தப்பார்க்கிறீர்கள் என்று குற்றம்சாட்டினர். மேலும், முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். இந்தியைத் திணிக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் விரும்பினால் ஆங்கிலத்துடன் இந்தியையும் முதல் பதினைந்து ஆண்டுகாலத்துக்கு ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்றனர்.

வாதப் பிரதிவாதங்கள் நீடித்துக்கொண்டே சென்றதையடுத்து, மத்திய ஆட்சிமொழி தொடர்பாகப் பொது உடன்பாடு காண்பதற்கு குழு ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இது அரசின் சார்பாக மைக்கப்பட்ட குழு அல்ல; காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆலோசனை கூறுவதற்காக, அவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு!

0

லாபங்களும் இழப்புகளும்

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 10

சூச்சிகாமாட்டா சுரங்கத்தை நெருங்க நெருங்க மூச்சு முட்டுவது போல் இருந்தது. மாபெரும் தாமிர வளம் நிறைந்த பகுதி அது. இருபது மீட்டர் உயரமுள்ள அடுக்குத் தளங்கள் சுரங்கத்தில் அமைந்திருந்தன. தாதுவை எளிதாகக் கொண்டு செல்வதற்கான இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ‘கவர்ச்சியோ உணர்ச்சியோ அற்றதாக, ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக’ அந்தச் சுரங்கம் அமைந்திருந்தது போல் இருந்தது எர்னஸ்டோவுக்கு.

செல்வத்தை அள்ளித்தரும் இடமாக சுரங்கம் அவருக்குக் காட்சியளிக்கவில்லை. ‘திறந்தவெளியில்தான் தாது எடுக்கப்படுகிறது என்பதையும், டன் ஒன்றுக்கு ஒரு சதவீதம் தாமிரத்தைக் கொண்டு கனிமவளம் பெருமளவில் சுரண்டப்படுகிறது என்பதையும் போக்குவரத்தின் தனிச்சிறப்பான அமைப்பே புலப்படுத்துகிறது.’

எந்த இயற்கையைத் தேடி அலைந்து வந்தாரோ அந்த இயற்கை இங்கே வெடிவைத்து சிதறடிக்கப்படுவதை அவர் கண்கொண்டு பார்த்தார். ‘ஒவ்வொரு நாள் காலையிலும் மலையில் வெடிவைக்கப்படுகிறது.’ தொழில்நுட்ப விவரங்கள் உள்பட அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விரிவாக தன் நோட் புத்தகத்தில் குறித்துக்கொண்டார் எர்னஸ்டோ. தகர்க்கப்பட்ட கனிமக் கற்கள் ராட்சத இயந்திர வாகனப் பெட்டிகளில் ஏற்றப்படுகின்றன. கற்கள் இயந்திரத்தை அடைகின்றன. அங்கே கற்கள் நொறுக்கப்படுகின்றன. நடுத்தர அளவுள்ள சரளைக் கற்கள் உடைக்கப்படுகின்றன. பிறகு கந்தக அமிலக் கரைசலில் போடப்படுகின்றன. வேதியியல் மாற்றங்கள் நடைபெறுகின்றன. திரவத்தில் மின்சாரம் தொடர்ச்சியாக செலுத்தப்படுகிறது. தாமிரம் மெல்லிய தாமிரத் தகடுகளில் ஒட்டிக்கொள்கிறது. ஐந்து அல்லது ஆறு நாள்களுக்குப் பிறகு இந்தத் தகடுகள் உருக்கும் உலைக்கு அனுப்பப்பட ஏற்ற நிலையைப் பெற்றுவிடும். தக்க முறையில் 12 மணி நேரம் உருக்கப்பட்ட பிறகு இந்தத் தகடுகளில் இருந்து ‘350 பவுண்ட் எடையுள்ள தாமிர வார்ப்புப் பாளங்களைப் பெறமுடியும். ஒவ்வொரு நாள் இரவும் நாற்பத்தைந்து லாரிகளில் ஒவ்வொன்றிலும் இருபது டன் தாமிரம் வீதம் வரிசையில் எடுத்துச் செல்லப்படும். ஒருநாள் உழைப்பின் பலன் இது.’

எறத்தாழ மூவாயிரம் பேர் ஈடுபடும் உற்பத்தி நடவடிக்கை பற்றிய சுருக்கமான எளிய விவரணை இது என்று குறிப்பிடுகிறார் எர்னஸ்டோ. இந்த உற்பத்தி நடவடிக்கையால் யாருக்குப் பலன்? அந்தப் பலனை யார் அனுபவிக்கிறார்கள்? சுரங்கத்தில் பணியாற்றும் மூவாயிரம் சொச்சம் பேர் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார்கள்? சுரங்கத்தின் கதி என்ன?

‘நைட்ரேட் தாது நிறைந்த, புல் பூண்டுகூட முளைக்காத இந்த மலைகள் காற்று, மழை ஆகியவற்றின் தாக்குதலுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அற்றவையாக இருக்கின்றன. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் உரிய காலத்துக்கு முன்பே மூப்படைந்து தங்களது சாம்பல் நிற முதுகெலும்போடு காட்சியளிக்கின்றன. அவற்றின் சுருக்கங்கள் அவற்றின் உண்மையான புவியியல் ரீதியான வயதைப் பற்றிய தவறான கருத்தை உருவாக்குகின்றன. இந்த இடத்தைச் சூழ்ந்துள்ள எத்தனை மலைகள் இதேபோன்று மிகப் பெரும் வளங்களைத் தங்கள் மடிகளில் மறைத்து வைத்துள்ளனவோ… தங்கள் வயிற்றுக்குள் மண்வாரி இயந்திரங்களின் வெற்றுக் கைகளை அனுமதிக்கக் காத்திருக்கின்றனவோ…’

சுரங்கத் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை எர்னஸ்டோவுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அரை மணி நேரம் சுற்றி வருவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ‘இது சுற்றுலாத் தலமல்ல, சுற்றிப் பார்த்தவுடன் நீங்கள் வெளியே போய்விடுவது நல்லது. எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன!’ என்று சுரங்கத்தின் கங்காணிகள் கண்டிப்பான குரலில் எர்னஸ்டோவுக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அவர்கள் திறன்மிக்கவர்களாகத் தோற்றமளித்த அதே நேரம், திமிரானவர்களாகவும் இருந்தார்கள். இவர்களிடம் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைமை எப்படி இருக்குமோ?

விரைவில் சுரங்கத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெறுவதாக இருந்ததை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக இருந்த ஒருவரிடம் (அவர் ஒரு கவிஞரும்கூட) உரையாடும்போது மேலதிக விவரங்கள் கிடைத்தன. சுரங்கத்தின் செயல்பாடுகள், பணியாளர்களின் நிலைமை, வேலை நிறுத்தத்துக்கான காரணங்கள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்று பலவற்றையும் கேட்டறிந்துகொண்டார் எர்னஸ்டோ. இறுதியாக அவர் கேட்ட கேள்வி இது. ‘இந்தச் சுரங்கம் எத்தனை பேரை பலி வாங்கியிருக்கிறது?’

அவர் ஆச்சரியமடைந்தார்.‘இந்தப் புகழ்பெற்ற சுரங்கங்கள் இங்கே இருக்கிற தாமிரம் முழுவதையும் சுத்தமாகச் சுரண்டியெடுத்துவிடும். உங்களைப் போன்றவர்கள் என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் இதற்காக எத்தனை உயிர்கள் பலியாக்கப்பட்டன என்று யாருமே இதுவரை கேட்டதில்லை. இந்தக் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது, மருத்துவர்களே. ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு நன்றி.’

எர்னஸ்டோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. ‘உணர்ச்சியற்ற ஆற்றலும் கையாலாகாத கசப்புணர்வும் இந்த மாபெரும் சுரங்கத்தில் கைகோர்த்துச் செல்கின்றன. உயிர் வாழவேண்டும் என்ற நெருக்கடியால் ஏற்பட்ட வெறுப்பும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் முனைப்பும் எதிரெதிராக இருந்தபோதிலும், அதையும் மீறி இவ்விரு பண்புகளும் இணைந்திருக்கின்றன.’

மிக முக்கியமான ஒரு பார்வை இது. கொள்ளை லாபம் அடிக்கத் துடிப்பவர்களும் ஒருவேளை உணவுக்கு உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பணயம் வைக்கத் துடிப்பவர்களும் கைகோர்க்கும் அதிசயத்தையும் அவலத்தையும் எர்னஸ்டோ இந்தச் சுரங்கத்தில் தரிசித்தார். லாபம், மேலும் லாபம் என்னும் துடிப்பு இயற்கையை மட்டுமின்றி மனிதர்களையும் சேர்த்தே அழிக்கிறது என்பதை எர்னஸ்டோ உணர்ந்துகொண்ட தருணம் இது.

‘வெறும் உணவைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட எத்தனை மனித உயிர்களை இவை (சுரங்கங்கள்) குடித்தனவோ… இந்த யுத்தத்தில் தனது புதையல்களைப் பாதுகாப்பதற்காக இயற்கைஏற்படுத்தியுள்ள ஆயிரக்கணக்கான மரணக்குழிகளில் துயரமான மரணத்தைச் சந்தித்தவர்கள் எத்தனை பேரோ… காவியங்களில் இடம் பெறாத இத்தகைய ஏழை வீரர்களின் எத்தனை உயிர்களை (தவிர்க்க இயலாமல்) இவை குடித்தனவோ…’

சிலி நில ஆய்வு நிறுவனம் சல்ஃபேட் தாதுவைச் சுரண்டுவதற்கு இன்னொரு ஆலையை அமைத்து வருவதை எர்னஸ்டோ அறிந்துகொண்டார். ‘உலகத்திலேயே மிகப் பெரியதாக விளங்கப் போகின்ற இந்த ஆலையின் 96 மீட்டர் உயரப் புகைப்போக்கிகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் முழு உற்பத்தியும் இந்த ஆலையிலேயே நடைபெறப் போகிறது. அதே சமயத்தில், ஆக்ஸைடு தாதுவளம் தீர்ந்து வருவதால் பழைய ஆலையின் உற்பத்தி சிறிது சிறிதாகக் குறைந்து முற்றிலுமாக நின்றுவிடும். புதிய உருக்காலைக்குத் தேவையான கச்சாப் பொருள்கள் ஏற்கெனவே பிரம்மாண்டமான அளவுக்குத் தயாராக உள்ளன. 1954ம் ஆண்டு ஆலை திறக்கப்பட்டவுடன் உடனடியாக உற்பத்தியும் தொடங்கிவிடும்.’

ஆனால் இதை எப்படி வரையறுப்பது? வளர்ச்சி என்றா? பழைய ஆலையா, புதிய ஆலையா என்பதா இங்கு முக்கியம்? எவ்வளவு நவீனமாக ஓர் ஆலை இயங்குகிறது என்பதா அதை மதிப்பிடுவதற்கான அளவுகோல்? ஓர் ஆலையின் கட்டுமானத்தைவிட, உற்பத்தித் திறனைவிட, இயந்திரங்களைவிட, லாபத்தைவிட பணியாளர்கள் முக்கியம் அல்லவா? அவர்களுடைய வாழ்நிலை முக்கியமல்லவா?

மிக அடிப்படையான ஒரு கேள்வியும் எர்னஸ்டோவுக்கு எழுந்தது. ஆலைகளை யார் நிர்வகிக்கவேண்டும்? தனியார் நிறுவனங்களா அல்லது அரசாங்கமா?

0

இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்

இந்திய நாகரிகம் தொன்மையானது, தொடர்ச்சியானது. அரிதானதும்கூட. சீன நாகரிகத்தில் மட்டுமே இத்தகைய தொன்மையையும் தொடர்ச்சியையும் பார்க்க முடியும் என்று பண்டைய இந்திய வரலாறு என்ற நூலில் கே.சி. சௌத்திரி என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

‘அந்நியர்கள் வரும்போது அவர்களுடைய கருத்துகளும், ஏற்கெனவே பாவிக்கப்பட்டு வந்த கருத்துகளும் — இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் –  இணைக்கப்பட்டன. அதன்மூலம் புதிய கருத்துகள் வார்த்தெடுக்கப்பட்டன. இதுவே இந்திய நாகரிகத்தின் உயிராகவும் மூச்சாகவும் இருந்தது. காலாகாலத்துக்கும் அதற்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுத்தது.’

மனிதன் நாகரிக உருவாக்கத்துக்கு முந்தியவன், பழைமையானவன். தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி எடுத்துச்சென்றன. அவற்றை இணைத்துப்பார்க்கும் போது பல கண்ணிகள் விடுபட்டுப் போயிருப்பதும் புலப்படத்தான் செய்கிறது.

மனிதன் மிகப் பலவீனமான மிருகம். அதே சமயம் மனிதன் மட்டுமே சுற்றுச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் தன் தேவைக்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்ட மிருகம்.

This begining is as animal as social life itself at this stage. It is mere herd-consciousness, and at this point man is only distinguished from sheep by the fact that with him consciousness takes the place of instinct or that his instinct is a conscious one. (The German Ideology, Marx and Engels).

சுற்றுப்புறத்தைக் கட்டுப்படுத்த அவன் எடுத்துக்கொண்ட விவேகமான முறைமைகளும், மற்ற மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியவற்றோடு ஒட்டி வாழ அவன் முயன்றதும்தான் மனித நாகரிக முன்னேற்றத்துக்கான ஆணிவேர்களாகும்.

நாகரிக வளர்ச்சியின் அஸ்திவாரம் முதலாவது விவேகம், இரண்டாவது அவனுடைய சூழ்நிலை. சூழ்நிலை என்பது அவன் வாழும் பகுதியின் இயற்கை தன்மையையும், சிறப்புத் தன்மையையும் பொறுத்துள்ளது.

வரலாறு என்பது காலக்கணக்குக்கு உட்பட்டதாகும். இல்லையென்றால் தொடர்பற்ற சில கதைகளாக மாறிவிடும். வரலாற்றின் ஒரு கண் காலக் கணக்கு. மற்றொன்று அது எழுதப்படும் மண்ணின் புவியியலாகும். (Physical Geography).

உலக நாகரிகங்களை, சிந்துவெளி நாகரிகம், நைல் நாகரிகம், டைகரிஸ் – ஈப்ரிடஸ் நாகரிகம், யாங்ஸி நாகரிகம் என்று நான்காகப் பார்க்கிறார்கள். இந்திய நாகரிகம் அல்லது சிந்துவெளி நாகரிகம் என்பது இணையற்ற சில சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறது. ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைப் பெற்றிருக்கிறது.

அந்நிய கருத்துகள் வந்தபோதும் அதனைச் செரிமானம் செய்துகொண்ட போதும் தனக்கென்று உள்ள சில அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டது. மேற்கத்திய கலாசாரம் கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. இயற்கையை வெல்வதன் மூலம் இது முன்னேறியது. இயற்கையை வெல்வதுதான் நாகரிகத்தின் சாராகக் கருதி தன்னை வளர்த்துக் கொண்டது.

இந்திய நாகரிகமோ ஒத்து வாழ்வதும், சுற்றுச் சுழலோடு இணைந்து வாழ்வதும்தான் முக்கியமானது என்று கருதியது.

‘இயற்கையை ஆளுவோம் என்று மேலை நாகரிகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மனிதனுக்கு நேர் எதிராக நிற்கும் இயற்கையிடமிருந்து வளமான வாழ்வைப் பறிக்க முனைவதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் அடிநாதம்…. ஆனால் இந்தியாவின் பார்வை வித்தியாசமாக இருந்தது. மனிதனும் உலகமும் வெவ்வேறானவை என்று பார்க்காமல், இரண்டும் இணைந்ததுதான் முழுமையான உண்மை, தனி மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள இணக்கம்தான் முக்கியமானது என்று இந்தியா கருதியது.’ (குருதேவர் ரவீந்தரநாத் தாகூர் 1912 – 12ம் ஆண்டுகளில் சிகாகோ, ஹார்வர்டு பல்கலைப்கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து).

இந்திய நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதையும் வரலாற்றாளர்கள் சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அது மொழியில், சமூக அமைப்பில், மதத்தில், இலக்கியத்தில் பரவியுள்ளது.

‘ஹரப்பா நாகரிகத்தில் ஈசன் என்றும், பசுபதி என்றும், அன்னை தெய்வம் என்றும் வழிபட்டு வந்தார்கள். இன்றும் சிவனாகவும் பார்வதியாகவும் வழிபாடு நடப்பது அதன் எச்சம்’ என்கிறார் கே.சி. சௌத்திரி.

‘பனிக்கட்டி உருண்டு வரும்போது தன்னுள் ஏராளமானவற்றை சேர்த்துக் கொள்கிறது. மேலும் மேலும் கனமடைந்தாலும் அதன் உட்பகுதியை மேலே சேர்ந்தவை மூடாமல் பளிங்கு போல வெளிக்காட்டுகிறது. இந்திய நாகரிகமும் இப்படிப்பட்டதுதான்!’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு தன்னுடைய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திய நாகரிகத்தின் அடிப்படை சகிப்புத்தன்மை. அதனை அமல்படுத்தும்போது ஏற்படுவதுதான் ஒற்றுமையில் வேற்றுமை சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் பரந்துபட்ட உலகில் பரவ வேண்டும் என்பதுதான் இந்திய நாகரிகத்தின் அடிப்படையான நோக்கம்.

Brothers and Sisters என்று விவேகானந்தர் சிகாகோ நகரத்துச் சிறு மண்டபத்தில் அழைத்ததன் முழு அர்த்தமும், சாரமும், இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடுதான். இதுதான் இந்திய நாகரிகத்தின் அழிவற்ற குணம்.

இந்த சகிப்புத்தன்மை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல்ரீதியான பலவீனமாகவும் இருந்ததுண்டு. இருந்தும் இதுதான் இந்தியத் தன்மையின் சிறப்பு என்றும் அந்நிய மோதல்கள் ஏற்பட்ட போதும் இந்தச் சிறப்புத் தன்மை தொடர்வதும் முக்கியமானதாகும்.

இந்தியாவில் புவியியல் இருப்பும் அதன் நாகரிகத்தில் சிறப்பான வளர்ச்சியை உருவாக்கியது. கடும்பனியுள்ள வடக்கு மலைப்பகுதி, சிந்து, கங்கை, பிரம்மபுத்திராவால் நனைக்கப்படும் சமவெளிகள், தக்காண பீடபூமி, உயரத்திலிருந்து சரிந்து கடலைச் சந்திக்கும் தென்பகுதி என்று உலகத்தின் எந்த நாட்டுக்கும் இல்லாத வானிலை சூழல் அந்த மக்களின் அன்றாட வாழ்வில் வேறுபாடுகளை உருவாக்கியது.

புகைப்படத்தில் மட்டுமே கடலைப் பார்க்கும் உ.பி. டில்லி கிராமத்துச் சிறுவனும், அதே வயதில் சீறிப் பாயும் கடல் அலை மேல் ஏறி விளையாடும் குமரிச் சிறுவனையும் இந்த தேசத்தில் பார்க்க முடியும். புவியியல் மனிதனின் திறமையை நிர்ணயிக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடு வரலாற்றையும் வரலாறு நாகரிகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.

வானுயர்ந்த மலைத் தொடர், பிரம்மாண்டமான நதிபுரத்து வெளிகள், உயர்ந்த பீடபூமி, பரந்துபட்ட பாலைவனம் ஆகியவை சிறப்புத் தன்மையை அளித்தன. ஷிவாளி மலை முகட்டில் பிறக்கும் கங்கை வங்கத்தில் சங்கமமாகிறாள். எத்தனை மனிதர்கள் – எத்தனை வேறுபாடுகள் – இருந்தும் அந்த வேறுபாட்டை வளப்படுத்திக் கொண்டே அந்த மக்களை இணைக்கும் நூலாகவும் அவள் இருக்கிறாள்.

கைபர் கணவாய் அந்நியர்கள் புக வாய்ப்பளித்தது. ஆரியர்களிலிருந்து அகமது ஷா அப்தாலி வரை பலரும் வந்தார்கள். எத்தனை கருத்துக்கள் வந்து சேர்ந்தன. பாரசீகத்தினர், கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் என்று இந்தக் கணவாய் பலருடைய வருகைக்குச் சாட்சியாக இருந்தது.

தென் பகுதியின் நீண்ட கடற்கரைகள், ரோம், சினா, மலாய், தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு தொடர்பைத் தந்தன. இதன்மூலம், இந்தியா, உலக மக்கள் அதிகமாக வாழக்கூடும் மையப்பகுதியாக மாறியது. வேறுபட்ட மதங்கள், இனங்கள், மரபுகள், பழக்க வழக்கங்கள் சங்கமிக்கும் பகுதியாக மாறியது.

இங்கு ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் திராவிடர்களும், சீனர்களும், சாகர்கள், ஹீனர்கள், பாதன்கள், முகலாயர்கள் ஆகியோரும் மிகப் பெரிய சமுத்திரமாக மாறி தங்கள் அடையாளங்களை இழந்தார்கள் என்று ரவீந்திரநாத தாகூர் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

இந்தியா, இந்துக்களுக்கு பௌத்தர்களுக்கு சமணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு, பார்சிகளுக்கு, கிறிஸ்துவர்களுக்கு தாய் வீடாக மாறியது. இனம், மதம், மொழி, பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று பார்ப்போமானால், இந்தியா பன்முகத் தன்மை கொண்ட மக்கள் தொகுதியாகும்.

அந்தமான், நிகோபர், நாகாலாந்தில் தென்படும் நீக்ரோ சாயல், சிக்கிம், பூட்டான் சிட்டகாங் பகுதியில் காணப்படும் மங்கோலியச் சாயல், வங்கம், பீகார், ஒரிசா, உ.பி., தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள பரந்த நெற்றியைக் கொண்ட சாயல், பஞ்சாப், ராஜஸ்தான் சிந்து பகுதியில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதிச் சாயல் என்று எத்தனை இனங்களின் சாயல்கள் இங்கு உள்ளன! இந்தச் சாயல் கொண்டவர்கள் ஒரு பகுதி என்றில்லாமல் பரந்து வசிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

இயற்கை தன்னுடைய பன்முக வெளிப்பாட்டைக் காட்ட இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வேறெந்தப் பூமிப் பகுதியிலும், இயற்கை இத்தனை அழகாக, கம்பீரமாக அமையவில்லை. இதுவே இந்தியாவில் காணும் ஒற்றுமைக்குள் வேற்றுமை என்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கண்காட்சி சாலையாகும் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். கடும்பனி உள்ள காஷ்மீர், பனிக் காலத்தில் கடும் குளிரும், கோடை காலத்தில் கடும் வெப்பமும் கொண்ட வங்காளம், ஒரிசா, பீகார் எப்போதுமே வெப்பம் கொண்ட தென் இந்தியா ஆகியவை இங்கு மட்டுமே உள்ளன. விதவிதமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இந்த மண்ணில் மட்டுமே உள்ளன. மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு வேறுபாடுகள் தென்படும்.

அணுகிப் பார்த்தால் இதற்கிடையே ஓர் இணக்கம் இருப்பது புலப்படும். இந்த இணக்கம் தான் இந்தியாவின் ஆத்மா. இந்திய நாகரிகத்தின் அடிநாதம்.

ஆரியர்களும், ஹீனர்களும், முகலாயர்களும் வந்தார்கள். பின்னாளில் டச்சு, பிரான்சு, ஆங்கிலேயர்கள் என்று வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை பின்னங்களாக்கி, அதனை முழுமையாக்கிய ரசாயனம் தான் இந்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த சுவையாகும். இதன்பால் உருவானதுதான் ஓர் ஒன்றிணைந்த கலாசாரம்.

இந்திய ஒற்றுமை என்பது அரசியல் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. மௌரிய, குப்த, மொகலாய சாம்ராஜ்ஜியங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் மக்களின், சமூக, பொருளாதார ஒற்றுமை என்பது அப்படியே இருந்தது. இது இந்தியர்களிடைய ஒருமைப்பாட்டை வளர்ந்தது. (ஜே.என். சர்க்கார் எழுதிய இந்திய ஒற்றுமை – என்ற கட்டுரை).

‘இந்திய ஒற்றுமை என்பது ரத்தம், நிறம், மொழி, உடை, பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஒன்று’ என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு ஹிஸ்டரி ஆஃப் இந்தியா நூலாசிரியர் வி.ஏ. ஸ்மித். இதன் உன்னதம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற சுதந்தரப் போராட்டத்தின்போது வெளிப்பட்டது. மகாராஷ்டிரா மட்டும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று மராட்டியனோ, வங்காளம் விடுதலை பெற வேண்டுமென்று வங்காளியோ, தமிழ்நாடு மட்டும் விடுதலையடையவேண்டும் என்று தமிழனோ போராடவில்லை. ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்காக அனைவரும் போராடினார்கள்.

இயற்கையோடு மட்டுமல்லாமல், சக மனிதனோடும் சேர்ந்து இணைந்து வாழ்வதுதான் இந்திய நாகரிகத்தின் வேரும், சாரமும் ஆகும்.

0

திலீபன்