எர்னஸ்டோவின் முதல் பயணம்
மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 3
ஒருமுறை பியூனஸ் அயர்ஸ் சுரங்க ரயிலில் தனது நண்பருடன் வீட்டுக்குத் திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. அவர்களிடம் துண்டிக்கப்பட்ட மனித கால் ஒன்று இருந்தது. ‘பரிசோதனை’ செய்யப்போகிறோம் என்று சொல்லி மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து எடுத்து வந்திருந்த ‘பொருள்’ அது. செய்தித்தாளில் இரண்டு சுற்று சுற்றி கொண்டு வந்திருந்தால், முழுவதுமாக மறைக்கமுடியவில்லை. இதைக் கவனித்த பிற பயணிகள் பயணம் நெடுக அச்சத்துடன் எர்னஸ்டோவைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய கலக்கத்தை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தார் எர்னஸ்டோ.
ஒரே மாதிரியான அலுப்பூட்டும் வாழ்க்கைமுறையில் இருந்து விலகவேண்டும் என்றால் இப்படிப்பட்ட அனுபவங்கள் தேவை. வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி போகிறோமோ அந்த அளவுக்குச் சுதந்தரத்தை அனுபவிக்க இயலும். கோர்டோபாவில் இருந்த தன் உறவினரை எர்னஸ்டோ நேசித்ததற்குக் காரணம் அவர்களுடைய வீட்டை அடைய குறைந்தது 10 மணி நேரம் காரில் செல்லவேண்டும் என்பதுதான். இதே இடத்துக்கு இன்னொரு வழியிலும் செல்லலாம். சரக்கு வண்டிகளை இடைமறித்து உதவி கேட்டு ஏறி, வழியில் ஏதாவது சிறு வேலைகள் செய்து, ஆங்காங்கு ஓய்வெடுத்துச் செல்லவேண்டும். இதற்கு சில தினங்கள் பிடிக்கும். எர்னஸ்டோவுக்கு இந்த வழிதான் பிடிக்கும்.
மருத்துவக் கல்லூரியின் மூன்றாவது ஆண்டு நிறைவில், ஜனவரி 1, 1950 அன்று தனது முதல் பயணத்தை எர்னஸ்டோ மேற்கொண்டார். அர்ஜென்டினாவின் உட்புறங்களை அலைந்து திரிந்து தரிசிக்கவேண்டும் என்பது திட்டம். ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு அதில் இத்தாலிய எஞ்சின் ஒன்றைப் பொருத்திக்கொண்டு தனியே புறப்பட்டுவிட்டார். கிளம்புவதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொப்பி, கண்ணாடியுடன் சைக்கிளில் அமர்ந்து, காலை நிலத்தில் பதித்தபடி படத்தில் காட்சியளிக்கிறார் எர்னஸ்டோ. கூடுதல் டயர் ஒன்றை கழுத்தில் மாலைபோல் மாட்டியிருக்கிறார். (ஜான் லீ ஆண்டெர்சனின் புத்தகத்தில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது).
கோர்டோபாவை அடைந்து, அங்கிருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள San Francisco del Chanar பகுதியை அடையவேண்டும். எர்னஸ்டோவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரானாடோ (Alberto Granado) அங்குள்ள தொழுநோய் மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருகிலேயே ஒரு மருந்துகடையும் நடத்திக்கொண்டிருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு சுற்று பயணத்தைத் திட்டமிடவேண்டும்.
மாலை நேரம் வீட்டைவிட்டு வெளியேறினார் எர்னஸ்டோ. மோட்டாரை இயக்கி, பெருத்த சத்தத்துடன் உற்சாகமாக சிறிது தூரம் கடந்துவிட்டு, வேகம் கைகூடியவுடன் வண்டியை மிதிக்கத் தொடங்கினார். விரைவிலேயே இன்னொரு மிதிவண்டிக்காரரின் சிநேகம் கிடைத்தது. இருவரும் விடியும்வரை வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டிருந்தனர். பிலார் என்னும் நகரத்தை அடையும்போது எர்னஸ்டோ பெருமிதத்துடன் சிரித்துக்கொண்டார். இந்த இடத்தைத் தாண்டி உன்னால் போகமுடியாது என்று வீட்டில் இருந்து கிளம்பும்போது சொல்லியிருந்தார்கள்.
வழியில் ஒரு காரை நிறுத்தி, கைக்கிளை அத்துடன் இணைத்து மணிக்கு 60 கிமீ வேகத்தில் பறக்கமுடிந்தது. திடீரென்று டயர் வெடிக்க, சாலையோரம் ஒதுங்கி, அங்கிருந்தவர்களுடன் சிநேகம் பிடித்து மனம் விட்டு உரையாட முடிந்தது. (மேட் பானம் கொடுத்தார்கள். ஆனால் பயங்கர தித்திப்பு.) வீட்டைவிட்டு வெளியேறி, ‘41 மணி நேரம், 17 நிமிடங்களுக்குப் பிறகு’ கிரானாடோவைச் சந்தித்தார் எர்னஸ்டோ. அவருடன் சில தினங்கள் தங்கியிருந்தார். கிரானாடோவின் சகோதரர்களுடன் இணைந்து அருகிலுள்ள ஒரு நீர் வீழ்ச்சிக்குச் சென்றார். பாறைகளில் தாவி, குன்றுகளின் மீதேறி, உயரத்தில் இருந்து குதித்து, தாற்காலிக வெள்ளம் ஒன்றில் அடித்துச் செல்லப்பட்டு…பரிபூரண சுதந்தரம்!
கிரானாடோ பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவமனைக்குச் சென்றார் எர்னஸ்டோ. ரக்பி, புத்தகங்கள் போக இப்போது அவர்களுக்கு மருத்துவ ஆர்வமும் பொதுவாக இருந்ததால் ‘எதிர்கால மருத்துவக் கனவு’ குறித்து ஆர்வத்துடன் விவாதித்தார்கள். ‘எங்கள் இருவருக்குமே மருத்துவம் ஒரு பொதுவான எதிர்காலத்தை அளிக்கும் என்று நம்பினோம்’ என்று அந்தக் கணத்தை நினைவுகூர்ந்தார் கிரானாடோ. கிரானாடோவுடன் இணைந்து தொழுநோய் மருத்துவமனைக்கு சென்று வந்தார் எர்னஸ்டோ.
அடுத்த கட்ட பயணத்தை இரு நண்பர்களும் சேர்ந்து தொடங்க இருந்தனர். கிரானாடோ தனது மோட்டார் பைக் மூலம் எர்னஸ்டோவின் சைக்கிளை கயிறு கட்டி இழுத்துச் செல்லவேண்டும். ஆனால், அது சரி வரவில்லை என்பது தெரிந்ததும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார் எர்னஸ்டோ. அன்று இரவு, லொரெடோ என்னும் சிறு நகரத்தில் தங்க, காவல் துறையினர் இடம் கொடுத்தனர். எர்னஸ்டோ ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் என்பதைத் தெரிந்ததும் உள்ளூர் மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இன்னும் சில தினங்கள் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். எங்கள் நகரத்தின் ஒரே மருத்துவராக இங்கேயே இருந்துவிடுங்களேன் என்றும்கூட ஆசை காட்டினார்கள். Santiago del Estero என்னும் இடத்தில் ஓர் உள்ளூர் பத்திரிகை நிருபர் எர்னஸ்டோவைப் பேட்டி கண்டார். ‘என்னைப் பற்றி என் வாழ்நாளில் முதல் முறையாக வெளிவந்த கட்டுரை ’ அது.
ஒருமுறை தனது சைக்கிள் டயரை பஞ்சர் ஒட்டிக்கொண்டிருந்தபோது, உள்ளூர் நபர் ஒருவர் அவரிடம் பேச்சுக்கொடுத்தார். முந்தைய தினம் பத்திரிகை நிருபர் கேட்ட அதே கேள்விகள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? எதற்காக இந்தப் பயணம்? எர்னஸ்டோ அளித்த பதில் அவரைத் திகைக்கவைத்தது. ‘வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். ஆனால் குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லையா?’ பல முறை யோசித்தும் எர்னஸ்டோவுக்கு விடை கிடைக்கவில்லை. ஆர்வமும் துடிதுடிப்பும் போதாதா, நோக்கம் என்றொன்று இருக்கவேண்டுமா என்ன?
சால்டா என்னும் பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது ஒரு வனப்பகுதியைக் கடக்கவேண்டியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினார். அடர்ந்த கானகம். நெருக்கமாக வளர்ந்திருக்கும் மரங்கள். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை மயக்கும் இயற்கை காட்சிகள். தன்னை மறந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார் எர்னஸ்டோ. ‘எனக்குள் உருவாகி, வளர்ந்துகொண்டிருந்த ஏதோ ஒரு விஷயம்… பக்குவமடைந்துவிட்டதை உணரமுடிந்தது.’ நகரத்தின் பெருத்த ஒலி, கால்களில் சக்கரம் பொருத்தியது போல் ஓடும் மனிதர்கள், இயந்திரத்தனமான வாழ்க்கை அனைத்தின்மீதும் சலிப்பு ஏற்பட்டது. இதுதான் அமைதி. நகரம், ‘அமைதிக்கு நேர் எதிரான நிலைகொண்டது.’
ஹார்லே டேவிட்சன் (அமெரிக்க இரு சக்கர வாகனம்) வண்டி ஓட்டிக்கொண்டு ஒருவர் எதிரில் வந்தார். வா, கயிறு போட்டு அழைத்துச் செல்கிறேன் என்று வரவேற்பும் அளித்தார். காற்று முகத்தில் அறைய, மோட்டார் வண்டியின் பின் பறந்து செல்வது சுகம்தான் என்றாலும் டயர் பஞ்சர் ஆகி முட்டுச் சந்தில் உட்கார்வதைத் தவிர்க்கவேண்டும் அல்லவா? மறுத்துவிட்டார். இருவரும் ஒன்றாக காபி அருந்தி, கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டார்கள்.
அருகிலுள்ள ஒரு நகரத்தை எர்னஸ்டோ வந்தடைந்தபோது, ஒரு பெரிய சரக்கு வண்டியில் இருந்து ஹார்லே டேவிட்சன் கீழிறக்கப்படுவதைக் கவனித்தார். சற்று முன் சந்தித்த நபரின் உடலும் அடுத்ததாக இறக்கிவைக்கப்பட்டது. அவன் ஒரு ‘தற்கொலைப் போராளி’ என்று நினைத்துக்கொண்டார் எர்னஸ்டோ. இவனுடைய பயண நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? ‘ஒரு சாலையின் திருப்பத்தில் மரணத்தைச் சந்தித்திருக்கும் இந்த வீரனை யார் அறிவர்களா?’
சால்டா வந்தடைந்தார். அன்றிரவு ஒரு லாரியில் அமர்ந்து உறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தோளில் தட்டி ஓட்டுனர் எழுப்பும்வரை நல்ல உறக்கம். இப்படியே சிறிது சிறிதாக முன்னேறி பொலிவியா வரை சென்றுவிடமுடியாதா என்ன? ஆசைதான். ஆனால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்தது. மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாதது பற்றி வருத்தத்துடன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதினார். ‘வழியில் வெள்ளப் பெருக்குகள் ஏற்பட்டுள்ளதை அறிந்துகொண்டேன். எரிமலையொன்று விழிப்புடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். நான் திரும்பிவிடுகிறேன்.’ இன்னும் சில வாரங்களில் நான்காம் ஆண்டு படிப்புத் தொடங்கவிருந்தது.
நினைவுகளை அசைபோட்டபடி திரும்பிகொண்டிருந்தார் எர்னஸ்டோ. தொழுநோயாளிகள், மருத்துவர்கள், ஏழைகள், சாலையோரவாசிகள், விவசாயிகள் என்று எத்தனை விதமான மனிதர்கள்! எத்தனை விதமான அனுபவங்கள்! பழங்குடிகளின் வாழ்க்கை முறையை எர்னஸ்டோ நேரில் கண்டது அதுவே முதல் முறை. அர்ஜென்டினாவின் நிஜமுகத்தைக்கூட முதல்முதலாக கண்டதுபோல் இருந்தது எர்னஸ்டோவுக்கு. நகரங்கள் முன்வைக்கும் தோற்றம் போலியானது. ஒரு நாட்டின் ஆன்மா வெளிப்படையாக தெரிவதில்லை. அதைத் தேடிப்போகவேண்டியிருக்கிறது. அர்ஜென்டினா மட்டுமல்ல மற்ற நாடுகளுமகூட இப்படித்தான் ‘இரட்டை வேடம்’ பூண்டிருக்கும் போலும்.
பயணம் முடிவுக்கு வந்தபோது, ஆறு வாரங்களில் 12 மாகாணங்களையும், 4000 கிமீ தூரத்தையும் எர்னஸ்டோ கடந்து சென்றிருந்தார். தனது சைக்கிளைப் பழுது பார்ப்பதற்காக மோட்டார் பொருத்தி கொடுத்த Amerimax Company-யைத் தொடர்பு கொண்டார் எர்னஸ்டோ. இவ்வளவு தூரம் மோட்டார் ஓடியிருக்கிறதா என்று வியந்த நிர்வாகம், எர்னஸ்டோவுக்குக் கடிதம் எழுதியது. இந்த விஷயத்தை எங்கள் விளம்பரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதித்தால் இலவசமாகவே வண்டியைச் சரிசெய்து தருவோம். எர்னஸ்டோ ஒப்புக்கொண்டு பதில் கடிதம் எழுதினார். ‘இந்த சைக்கிள் அபாரமான முறையில் என்னுடன் ஒத்துழைத்தது. கடைசியில்தான் கம்ப்ரெஷன் பழுதடைந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனவே இதனை உங்களிடம் அனுப்பிவைக்கிறேன்.’
வீட்டுக்குள் நுழையும்போதே எர்னஸ்டோ யோசிக்கத் தொடங்கிவிட்டார். அடுத்த பயணம் எப்போது?
(தொடரும்)








