கொஞ்சம் நம்பிக்கை நிறைய துணிச்சல்
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 3
வேலைக்குச் செல்லாத, 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள்? பெரும்பாலானோர் தொலைக்காட்சியில் சரணாகதி அடைந்துவிடுகிறார்கள். அல்லது உறக்கம். அல்லது அக்கப்போர் வெட்டிக்கதைகள்.
இவையனைத்துமே மன உளைச்சல் ஏற்படுத்தும் விஷயங்கள். நேரத்தையும் வீணாக்கி உடலையும் வருத்திக்கொண்டு இப்படி பொழுதை ஓட்டுவதற்குப் பதில் சுயதொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்தலாமே?
இப்படிச் சொன்னால் உடனே உதிக்கும் சந்தேகம், சுயதொழில் செய்தால் வீட்டு வேலைகளை எப்படிக் கவனித்துக்கொள்வது என்பதுதான். உண்மையில், வேலைக்குப் போகும் பெண்களும், சுயதொழில் செய்வோரும் வீட்டு வேலைகளை எளிதாகவே கையாள்கிறார்கள். மற்றவர்களோ, நேரம் அதிகம் இருக்கிறது என்று கால விரயம் செய்கிறார்கள்.
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று சொன்னாலும் இயல்பாக சில செயல்களைப் பெண்கள் மட்டுமே திறம்படச் செய்யமுடியும். அதேபோல சில செயல்களை ஆண்கள் மட்டுமே திறம்படச் செய்ய முடியும். அவரவர் திறமை எதில் இருக்கிறது என்று அறிந்து செயல்படும் போதுதான் வெற்றி எளிதாகிறது.
சுயதொழிலில் வெற்றி கிடைக்குமா என்னும் தயக்கமும் பலரை வீட்டுக்குள் முடக்கிவைத்திருக்கிறது. எதையும் முயற்சி செய்யாமல் தோல்வியைப் பற்றி சிந்திப்பவனைவிட, முயற்சி செய்து தோல்வி அடைபவன் மேல் என்பதை இவர்களுக்கு நினைவூட்டவேண்டும். இந்த இடத்தில் என் வாழ்க்கைப் பாதையிலிருந்து ஒரு சில அனுபவத் துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். ‘உங்களிடம் திறமை இருக்கிறது. அறிவு இருக்கிறது. சுயமாகத் தொழிலில் ஈடுபடும் ஆர்வம் இருக்கிறது. அடி எடுத்து வைப்பதில் என்ன தடை?’ என்று அவர் கேட்டார். ஒரு சிறு பொறியாக விழுந்த இந்தச் சிந்தனை என்னைத் துரத்த ஆரம்பித்தது.
சுயதொழிலா? என்னால் முடியுமா? என் கணவர் வீடு திரும்பியவுடன் இதைப்பற்றிப் பேசினேன். தன் நண்பர்கள் சிலருடன் மின்னணு துறையில் தொழில் செய்ய முனைந்து பெரும் பிரச்னையில் அவர் திண்டாடிக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு பார்ட்னர் எதிர்பாராமல் இறந்துவிட்டார். மற்றொரு நபரோ கலப்புத்திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததால் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். தொழில் பயங்கரமாக ஆட்டம் கண்டது.
கலப்புத் திருமணம் செய்து கொண்டு, எதிர்ப்புகளுக்கு இடையில் சமுதாயத்தை எதிர்நோக்கியிருந்த சமயம் அது என்பதையும் நினைவுபடுத்தவிரும்புகிறேன்.
‘நான்கு ஆண்கள் சேர்ந்து தொழில் செய்ய நினைக்கும் போதே இவ்வளவு பிரச்சனைகள். நீ தனியாக என்ன செய்வாய்?’
எது என்னைச் சுயதொழிலில் ஈடுபட வைத்தது? தன்னம்பிக்கையா? மேலே வரவேண்டுமென்ற தணியாத தாகமா? என் பிரசனைகளுக்குத் தோள் கொடுக்க அருகில் யாருமில்லையே என்ற ஆதங்கமா? இல்லை இதற்கெல்லாம் மீறிய சக்தியா? தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் தெளிவாகக் கூற இயலும். இவை அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு சக்திதான் சுயதொழிலைப் பற்றி சொந்தமாக என்னை முடிவெடுக்க வைத்தது.
பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். எந்தத் துறையில் இறங்கலாம்? எதில் என் பலமும் இருக்கிறது? கம்ப்யூட்டர் துறை சார்ந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். முன்னரே பழக்கப்பட்ட துறை என்பது ஒரு காரணம். குறிப்பாக, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, பவர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உற்பத்தி பிரிவில் இடம் இருப்பது தெரிந்தது. மின்வெட்டுகளும் மின்சாரப் பற்றாக்குறையும் அலுவல்களை மிக மோசமாக பாதித்துக்கொண்டிருந்த சமயம் அது. எனவே நிச்சயம் மின் உற்பத்திக்கான தேவை பரவலாக இருக்கும். மேற்கொண்டு அதிகரிக்கவும் செய்யும். அதனால் அந்தத் துறையையே நான் இறுதியாகத் தேர்ந்தெடுத்தேன்.
அடுத்த சில நாள்கள் என் கணவரிடம் இதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசி விவாதத்தில் ஈடுபட்டேன். ‘நமக்கு அனுபவமோ பணபலமோ இல்லை. இருவரும் வாழ்வின் தொடக்கத்தில் இருக்கிறோம். நான் மட்டும் தொழில் முயற்சியில் ஈடுபடுகிறேன். நீ வேறு வேலை தேடிக்கொள்.’ என்றார் அவர்.
என்னால் அவர் விளக்கத்தை ஏற்கமுடியவில்லை. பிறகு அவர் ஒருவழியாக ஒப்புக்கொண்டார். ஒரு கன்டிஷனோடு. ‘அப்படியென்றால் உன் பெயரில் தொழில் முயற்சியை ஆரம்பித்துக்கொள். அதன் சாதக, பாதகங்களுக்கு நீதான் பொறுப்பு.’
சரி என்றேன்.
அடுத்து என்ன? நெருங்கிய உறவினர்களிடம் பேசினேன். அந்தச் சந்திப்புகளில் அவர்கள் திணிக்க முயன்ற விஷயம் ஒன்றுதான். ‘உன்னால் தனியாக எதுவும் செய்யமுடியாது. அந்த எண்ணத்தை விட்டுவிடுவததான் நல்லது. உன் நல்லதுக்குத்தான் சொல்கிறோம்.’
நான் பின்வாங்கவில்லை. கையில் சிறிதளவு பணமே இருந்தது. அதை வைத்துதான் தொடங்கியாகவேண்டும். முதலில், அலுவலகத்துக்கான இடம். அலுவலகமும் அதை நடத்துபவரின் அறையும் பெரியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் நகரின் மையப்பகுதியில் இடம் பார்த்துக்கொண்டேன்.
பெரிய அறையின் நடுவில் ஒரு நாற்காலி, சிறு மேஜை போட்டு உட்கார்ந்த தருணத்தில் மனதில் ஆயிரம் எண்ணங்கள். நான் ஜெயித்தால் சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்கும். தோற்றால், கிண்டலடிக்கப்படுவேன். எது கிடைக்கப்போகிறது?
இத்தருணத்தில் தாய்மையும் அடைந்தேன். வயிற்றில் கருவுடன் பண உதவி வேண்டி வங்கிகளின் கதவுகளைத் தட்டத் தொடங்கினேன். என் உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான பல சோதனைக் கருவிகளும் (Testing Equipments) அலுவலகத்தில் வந்து இறங்கியாகி விட்டது. கடன் கேட்கலாம் என்றால் தனி நபராக நான் பலருக்கும் அறிந்த ஆளில்லை. பிரபல வங்கி ஒன்றில் நான் கொடுத்த விண்ணப்பத்தை ஏற்று நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள்.
காலை 11.00 மணிக்கு என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும் 10.45க்கு நான் அங்கே நின்றேன். ஐந்தாவது மாடியில்தான் நேர்முகத்தேர்வும் நடந்தது. லிஃப்ட் வேலை செய்யவில்லை. ஐந்து மாடிகளையும் கடந்து மேலேறி அமர்ந்தபோது, அந்த வங்கிப் பணியாளர் உங்கள் முறை வருவதற்கு குறைந்தது இன்னும் இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டுமென்றார். காலையில் ஏற்படும் அயற்சி காரணமாகச் சாப்பிட எதுவும் பிடிக்காததால் சிறிது கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டிருந்தேன்.
ஏதாவது சாப்பிடலாம் என்றாலோ ஐந்து மாடி இறங்கி ஏற வேண்டுமே என்ற பயம். என்னைப்போல் பல ஆண்களும் பெண்களும் நேர்முகத் தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். முன்பின் தெரியாத அலுவலகத்தில், அதுவும் கடனுக்காக வந்துள்ள நிலையில், அங்கு பணிபுரிபவர்களிடம் என் நிலையைச் சொல்லி ஏதாவது வாங்கி வந்து தாருங்கள் என்று சொல்வதும் சரியில்லையென்பதால், மனதை ஒருமுகப்படுத்தி நேர்முகத்தேர்வை எப்படி சிறப்பாகச் செய்வது என்பதைப் பற்றிய சிந்தனையில் மட்டும் நேரத்தைக் கடத்தினேன்.
இடையில் வந்த சூடான காபி பசித்தவன் கையில் கிடைத்த உணவைப் போலாயிற்று. சுமார் மூன்று மணி நேரக் காத்திருத்தலுக்குப்பின் உள்ளே அழைக்கப்பட்டேன். மிகப் பெரிய நவீன அறையில் சுமார் ஆறு பேர் மர்ந்திருந்தார்கள். இரண்டுபேர் சாதாரண முறையில் கேள்விகளைக் கேட்டபோதும், மற்ற நால்வர் ‘பெண்கள் சுய தொழிலுக்கு வருவதைப் பற்றிய, அதுவும் எந்தவிதமான வர்த்தகத் தொடர்பும் இல்லாத குடும்பத்திலிருந்து வருவதை’ ஏற்றுக்கொள்ள முடியாதவராக இருந்தார்கள்.
தேவையற்ற பணிவோ, அசாதாரணமான பொய்களோ இன்றி, நம்பிக்கையுடன் பதிலளித்தேன். என் பதில் அவர்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை நேர்முகத் தேர்வு முடிந்தபோது தெரிந்தது. ஒரு பெரிய கதவு எனக்காகத் திறக்கப் போகிறது என்னும் ஆர்வம் மறைந்த நிலையில் அடுத்தது என்ன என்று யோசிக்கத் தொடங்கினேன்.
(தொடரும்)








