காந்தி ஏந்திய ஆயுதம்

மொழிப்போர் / அத்தியாயம் 2

விடுதலைப் போராட்டம் வலுத்துக்கொண்டிருந்த சமயம் அது. என்ன செய்தால் இந்தியர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி யோசித்துக்கொண்டிருந்தது. காரணம், பல மொழிகள் பேசும், பல கலாசாரத்தைப் பேணும், பல இன மக்களை இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைத்து ஆட்சி செய்துகொண்டிருந்தனர் ஆங்கிலேயர்கள்.

இனம், மொழி மற்றும் கலாசாரப் பிரிவுகளைப் போல வேறுபல பிரிவுகளும் இந்தியர்களிடம் மண்டிக்கிடந்தன.  பல மதங்கள். பல சாதிகள். வெவ்வேறு பழக்கவழக்கங்கள். ஆளுக்கொரு தெய்வ வழிபாடு. ஆளுக்கொரு அரசியல் நிலைப்பாடு.  ஆம், இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைப் பின்பற்றியவர்கள் மட்டும் இருக்கவில்லை. இந்துத்துவத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் இருந்தார்கள். கம்யூனிஸ சிந்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இருந்தார்கள். கடவுள் மறுப்பாளர்கள் இருந்தனர். பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் பரவியிருந்தனர். புரட்சியாளர்கள் பலரும் இருந்தனர். உணவில் தொடங்கி உணர்வு வரை பல வேறுபாடுகள் இருந்தன.

ஆக, பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவைப் பிரித்தெடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக இந்தியர்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும். பல வேற்றுமைகளுக்கு மத்தியில் ஏதேனும் ஒரு ஒற்றுமையைக் கண்டுபிடிக்கவேண்டும் அல்லது கொண்டுவரவேண்டும். அதைக்கொண்டு இந்தியர்கள் அனைவரையும் ஒற்றைக்குடையின்கீழ் கொண்டுவர வேண்டும். இதுதான் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் கனவு. பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்தரத்தை வலியுறுத்திக் கொண்டிருந்த அவர்களுக்கு அது அத்தியாவசிய தேவையும்கூட.

கனவை நனவாக்க காந்தியின் நினைவுக்கு வந்த ஆயுதம், மொழி. ஆங்கிலேயர்களை காந்தியும் காங்கிரஸும் வெறுத்தபோதும் ஆங்கிலத்தை மட்டும் வெறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நடத்தும் நிர்வாகக் கூட்டங்களில், பொதுக்கூட்டங்களில், மாநாடுகளில் எல்லாம் ஆங்கிலமே பிரதானமாக இருந்தது. ஆங்கிலத்திலேயே பேசினர். ஆங்கிலத்திலேயே தீர்மானங்கள் நிறைவேற்றினர். தமது கருத்துகள் ஆங்கிலேயர்களைச் சென்றடைவதற்கு அதுதான் வசதியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர்.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒருவித மனமாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்குச் சுதந்தரம் தரமறுக்கும் ஆங்கிலேயர்கள் மீது வெறுப்பு வளரத் தொடங்கியது. அந்த வெறுப்பை ஆங்கிலத்தின்மீதும் காட்டத் தொடங்கினர். அந்நிய மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக அவரவர் பேசும் இந்திய மொழிகளில் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தவேண்டும் என்று குரலெழுப்பத் தொடங்கினர். அப்போதுதான் காந்திக்குப் புதிய யோசனை பிறந்தது.

ஆங்கிலேயர்களின் மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இன்னொரு இந்திய மொழி ஒன்றைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஓரணியில் திரட்டிவிடலாம் என்று நினைத்தார் காந்தி. இந்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்திமொழியைக் கற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணையவேண்டும் என்று பகிரங்க அழைப்பு விடுத்தார் காந்தி. அந்தக் கருத்தை மெல்ல மெல்ல மக்களிடம் கொண்டுசெல்லத் தொடங்கினார். மேடைகளில் இந்திமொழி பற்றிப் பேசினார். பத்திரிகைகளில் இந்திமொழியின் அவசியம் பற்றி எழுதினார்.

காந்தியைப் பின்பற்றி இதர காங்கிரஸ் தலைவர்களும் இந்தியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். 1893 ஆம் ஆண்டு காசி நகரில் நகரி பிரச்சாரனி சபா என்ற அமைப்பும் 1910 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் இந்தி சாகித்ய சம்மேளன் என்ற அமைப்பும் முன்னதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்தி இந்தியைப் பரப்பும் பணியைத் தீவிரப்படுத்தினார் காந்தி. இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கவேண்டும்; இந்தியாவின் சுய மரியாதை என்பது இந்தியர்கள் அனைவரும் ஒரே இந்திய மொழியைப் பேசுவதில்தான் இருக்கிறது என்ற காந்தியின் வாதங்களுக்கு இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. இந்தி பேசாத மக்கள் அனைவரும் ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டு இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பிரசாரம் செய்தார். 1915 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது மாயவரத்தில் நடந்த வரவேற்புக்கூட்டத்தில் அவருக்கு ஆங்கிலத்தில் வரவேற்பிதழ் வழங்கப்பட்டது. அதில் காந்திக்குக் கொஞ்சம் அதிருப்தி. அதனை மேடையில் பதிவுசெய்த அவர், இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

காந்தியின் இந்தி ஆதரவுப் பிரசாரத்துக்கு வட இந்தியாவில் இருந்த வரவேற்பு தென்னிந்தியாவில் இல்லை. என்தால், தட்சண பாரத இந்திப் பிரசார சபா உருவாக்கப்பட்டது. பேராவலுடனும் துணிவுடனும் இந்தியைப் பரப்புவதற்காக இந்த அமைப்பைத் தொடங்குகிறோம் என்று 1918 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த தொடக்கவிழாவில்
பேசினார் காந்தி. ஏனென்றால், இந்திக்குத் தென்னிந்தியாவில் ஆதரவு
இருக்காது என்பதும் எதிர்ப்பு இருக்கும் என்பதும் காந்திக்கு மிக நன்றாகவே தெரியும்.

‘துணிவுடன்’ என்ற பதத்தை மேடையில் பயன்படுத்தியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அந்தத் துணிச்சலைத் தன்னுடைய எழுத்திலும் பிரதிபலித்தார் காந்தி. பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் வட இந்தியர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் திராவிடர்கள் எதிர்பார்க்கக்கூடாது. பெரும்பான்மையினர் பேசுகின்ற பொதுவான மொழியைத்தான் திராவிடர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று 1920ஆம் ஆண்டு தனது யங் இந்தியா பத்திரிகையில் எழுதினார் காந்தி.

இந்தியைப் பரப்புவதற்காக நாடு தழுவிய அளவில் நிதிவசூலும் நடந்தது. குறிப்பாக, வட இந்தியர் ஒருவரிடம் இருந்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி பெறப்பட்டது. 1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில் அந்த நிதிவசூலுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் நிதிவசூல் நடைபெறத் தொடங்கியது.

இந்தியைப் பரப்பும் பணியில் காந்தி மட்டும் ஈடுபடவில்லை. அவருக்கு உதவியாக பி.டி. தாண்டன், கோவிந்த் தாஸ், மதன் மோகன் மாளவியா உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி அய்யர் முக்கியமானவர். 1924 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் கலந்துகொண்ட சத்தியமூர்த்தி அய்யர், இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியை மாற்றவேண்டும் என்ற காந்தியின் லட்சியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பேசினார்.

‘வயதானவர்கள் இந்தியை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால், அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் இந்தி இரண்டாவது மொழியாகவும் கட்டாயப் பாடமாகவும் சொல்லித்தரப்படும் பட்சத்தில் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொதுமொழியாக இந்தியைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!’

இந்தி மொழி குறித்த காந்தியின் கருத்தைப் பிரதிபலித்ததோடு சத்தியமூர்த்தி அய்யர் நிறுத்திக்கொள்ளவில்லை. கூடுதல் வலுவையும் சேர்த்திருந்தார். இந்தியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்பது காந்தியின் பிரசாரம். இல்லையில்லை, இந்தியைக் கற்றுக்கொள்வது கட்டாயம் என்பது சத்தியமூர்த்தி அய்யரின் கட்டளை. இந்த இடத்தில்தான் நெருடல் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு ஒவ்வொரு ஆண்டிலும் கூடுவது வழக்கம். 1925 ஆம் ஆண்டுக்கான காங்கிரஸ் கட்சி மாநாடு கான்பூர் நகரில் கூடியது. உண்மையில் அந்த மாநாடு இந்தியைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை மாநாடு என்றுதான் சொல்லவேண்டும். அந்த மாநாட்டில்தான் இந்தியைப் பற்றிய தனது எதிர்காலத்திட்டங்களையும் கனவுகளையும் பதிவுசெய்தார் காந்தி.

‘காங்கிரஸ் மாநாடுகளில் ஆங்கிலத்திலேயே விவாதம் செய்துகொண்டிருந்தால் நமது கட்சி இந்தியர்களின் கட்சியாக அங்கீகாரம் பெறவே முடியாது. தவிரவும், ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே மாநாட்டில் தமது கருத்துகளைத் தெரிவிக்க இயலும் என்ற நிலை இன்றுவரை நீடிக்கிறது. சீரிய கருத்துகளைக் கொண்ட தலைவர்கள் பலரும் மாநாடுகளில் கலந்துகொள்வதற்கும் தமது கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் தடையாக இருப்பது ஆங்கிலம். ஆக, காங்கிரஸ் கட்சி இந்தியர்களின் கட்சியாகச் செயல்படவேண்டும் என்றால்,
காங்கிரஸின் கொள்கைகளும் நோக்கங்களும் கடைக்கோடி இந்தியனுக்கும் சென்று சேரவேண்டும் என்றால், காங்கிரஸ் கூட்டங்களில் பேசப்படும் மொழி ஒரு இந்திய மொழியாக இருக்கவேண்டும். ஆக, ஆங்கிலத்தின் பயன்பாட்டைத் தவிர்த்து, எல்லோரும் இந்தியைப் பயன்படுத்தவேண்டும்!’

காந்தியின் கனவை நனவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். காங்கிரஸ் கட்சி தன்னுடைய அலுவல் மொழி பற்றிய விதியான 33வது பிரிவைத் திருத்தம் செய்வதற்குத் தயாரானது. காங்கிரஸ் கட்சியின் கருத்துகளும் பரிமாற்றங்களும் கூட்டங்களும் ஆங்கில மொழியில் நடத்தப்படவேண்டும் என்பதுதான் 33வது பிரிவு சொல்லும் செய்தி. அந்தப் பிரிவு, ‘இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில் இந்தி மொழியில் நடத்தப்படும். இந்தி தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் பேசலாம்’ என்று திருத்தம் செய்யப்பட்டது. ஆக, காந்தியின் வழியே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஆசியைப் பெற்றது இந்தி.

(தொடரும்)