ஒரு பெண்ணைக் கடத்திச் செல்லும் மனநோயாளி தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறான். முதலில் பயமும் கோபமும் கொள்ளும் அந்தப் பெண் அவனுடைய அப்பாவித்தனமான குணத்தைப் பார்த்ததும் மனது மாறி அவனுடைய அன்பை ஏற்றுக் கொள்கிறாள்.
இது எந்தப் படம் என்று கேட்டால், 1991 நவம்பரில் வெளியான குணா என்ற காவியத்தின் கதைச்சுருக்கம் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள் இல்லையா… அதுதான் இல்லை. ஜனவரி 1990-ல் ஸ்பானிய மொழியில் வெளியான டை மி அப்! டை மி டவுன் என்ற படத்தின் கதைச் சுருக்கம்.
இரண்டிலும் நாயகன் மனநோயாளி. ஸ்பானிய மொழிப் படத்தில் நாயகி திரைப்பட நடிகையாக இருப்பார். தமிழில் பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்ணாக இருக்கிறார். ஸ்பானியப் படத்தில் அந்தப் பெண் தொடக்க காலத்தில் முழு நீளச் சிற்றின்பப் படங்களில் நாயகியாக இருந்திருப்பார். போதாத குறையாக போதைக்கும் அடிமையாகி இருப்பார். அப்படியாக அவருடைய காதலற்ற வாழ்க்கையும் தூய அன்புக்கான ஏக்கமும் அந்தப் படத்தில் கோடிகாட்டப்பட்டிருக்கும். தமிழில் நாயகியின் சிறு வயதிலேயே அவருடைய அம்மா இறந்துவிட்டதாகவும் அப்பா பணப் பைத்தியமாக இருந்ததாகவும் அதனால் நாயகி அன்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது.
ஸ்பானிய படத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதும் தன் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதும் நாயகியின் விதி என்று அந்த நாயகன் சொல்வான். தமிழில் நாம் காதல்ர்களாக இருக்க வேண்டும் என்பது விதி என்று சொல்லப்படுகிறது. ஸ்பானிய மொழியில் அந்த நாயகன் தன் மன நோயின் அங்கமாக அப்படி நினைக்கிறான். இங்கு தன்னை சிவனின் அம்சமாக (அல்லது சிவனாகவே) நாயகன் நினைக்கிறான். நாயகியைத் தனது துணையாக அதாவது அபிராமி என்ற தெய்வமாக நினைக்கிறான். ஸ்பானிய நாயகன் கார் திருடும் திறமை கொண்டவன். தமிழ் நாயகனும் அப்படியே. ஸ்பானிய படத்தில் நாயகியை அவருடைய அபார்ட்மெண்டிலேயே சிறைவைக்கிறார் நாயகன். தமிழில் காட்டுக்குக் கடத்திச் செல்கிறார். ஸ்பானிய நாயகி கடைசியில் நாயகனின் அன்பைப் புரிந்துகொள்கிறார். இங்கும் அவ்வண்ணமே.
இப்படியான ஆரத்தழுவலை முறையான அனுமதி பெற்று அல்லது குறைந்தபட்சம் தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்துவிட்டுச் செய்திருந்தால் எந்த இழப்பும் வந்திருக்கப் போவதில்லை. ஒரு படத்தைப் பார்த்தேன். அது பிடித்திருந்தது. அதை நமது சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறேன். மூலப் படைப்பாளிகளுக்கு நன்றி என்று ஒரு சிறிய அங்கீகார அட்டையைப் படத்தில் காட்டியிருந்தால் எந்த பிரச்னையும் வந்திருக்கப் போவதில்லை. ஒருவேளை காப்புரிமை என்ற பெயரில் ஒரு தொகையைக் கேட்டால் படத்தின் லாபத்தில் ஒரு பகுதியைக் கொடுப்பது குறைந்தபட்ச தொழில் தர்மம் சார்ந்த ஒன்றுதான். இதில் ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னவென்றால், மூலப்படமானது கணிசமான வெற்றியைப் பெற்ற ஒன்று. இப்படி ஒரு படத்தை காப்பியடித்து எடுத்தால் சர்வதேசப் படங்கள் பார்க்கும் நபர்களுக்கு அடுத்த நிமிடமே தெரிந்துவிடுமே என்ற பயமோ அவமான உணர்வோ துளியும் இல்லாமல் போனது எப்படி? தமிழக/இந்திய ஊடகத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் நம் நண்பர்கள்தான் என்ற ரவுடித்தனத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஸ்பானிய மொழி இயக்குநர் இந்து அடையாளங்களைத் தனது படத்துக்குள் கொண்டுவந்திருக்கவில்லை. தமிழிலோ சிவன், அபிராமி, பவுர்ணமியில் திருமணம் என இந்து அடையாளங்கள் இடம்பெறும் ஒரு கதையிலும் கிறிஸ்தவ அம்சங்கள் சம்பந்தமே இல்லாமல் இடம்பெறுகின்றன. அவை மத நல்லிணக்க நோக்கில் அல்லாமல் மதத் திணிப்பாகவே இருக்கின்றன. நாயகன் நாயகியைக் கடத்திச் சென்று தங்க வைக்கும் இடம் பாழடைந்த தேவாலயமாக இருக்கிறது. அங்கு அவன் நாயகியை தன் மனத்தில் இருக்கும் தெய்வ வடிவில் பார்க்கும் ஒரு காட்சி வருகிறது. வெண்ணிற உடை… பாழ் நெற்றி… பின்னணியில் ஜன்னல் கண்ணாடியில் சிலுவை அடையாளம்… அதைப் பார்த்தால் கதாநாயகன் காதலித்தது அபிராமியையா ஆப்ரஹாமியையா என்ற சந்தேகம்தான் ஒருவருக்கு எழும்.
நாயகனின் அன்பைப் புரிந்துகொண்டு, அதாவது நாயகனின் மனதில் இருக்கும் அபிராமியாகத் தன்னை மாற்றிக்கொண்டு, நாயகி தன் காதலைச் சொல்கிறாள். கிட்டத்தட்ட இது ஒரு மினி க்ளைமாக்ஸ். அப்போது ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. அந்தப் பாடலின் உணர்வெழுச்சி மிகுந்த தருணத்தில் கேமரா மிக நிதானமாக எங்கு நகர்கிறது தெரியுமா… தேவாலயத்தின் மேலிருக்கும் சிலுவையை நோக்கி!
படத்தின் முடிவில் வரும் பவுர்ணமி நிலவு கூட சிலுவையின் மேலாகவே ஒளியைப் பாய்ச்சியபடி எழுகிறது. அபிராமி என்ற பார்வதி தேவியின் அவதாரமாக நாயகியைப் பார்க்கும் படத்தில் எதற்காக இத்தனை கிறிஸ்தவ அடையாளங்கள். வேண்டுமென்றால் கதாநாயகன் காதலர் தினத்தை ஆரம்பித்த பாதிரியாரினால் உத்வேகம் பெற்று ஏதோவொரு கிறிஸ்தவ பெண் தெய்வத்தை (டயானா?!) தன் மானசீகக் காதலியாக நினைத்துக்கொண்டு ஏங்குவதாகப் படத்தை அழகாக எடுத்திருக்கலாமே. இந்தியர்கள்/இந்துக்கள் அதை இரு கரம் கூப்பி வரவேற்கத்தானே செய்வார்கள். எதற்காக சர்க்கரைப் பொங்கலில் வைனைக் கலக்க வேண்டும்?
இந்த அடிப்படைத் தவறுகள் நீங்கலாகப் படத்தில் பெரிதாக வேறு தர்க்கபூர்வமான பிழைகளைச் சுட்டிக்காட்ட முடியாது. ஏனென்றால், கதாநாயகன் தர்க்கபூர்வமாகச் சிந்திக்கும் திறமை இல்லாதவன். ஏதாவது ஒரு காட்சியை லூசுத்தனமாக இருக்கிறது என்று நாம் சொன்னால், அது பாராட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் ஒன்று, கமல்சாருக்கு இது மிகவும் லகுவான கதாபாத்திரம். எந்த மெனக்கெடலும் இல்லாமல் அவருடைய இயல்பான சிந்தனையுடன் வெளிப்பட்டாலே போதும். அதை அவர் சிறப்பாகவே செய்தும் காட்டியிருக்கிறார்.
ஹைதராபாத்தில் இருக்கும் மன நோயாளி நாயகன் சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் ஊட்டியில் இருக்கும் கைவிடப்பட்ட தேவாலயத்துக்கு நாயகியைக் கடத்திக் கொண்டுவந்து வைக்கிறான். ஓர் இந்தியக் குடிமகனுக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்குப் போக அனுமதி கிடையாதா என்ன?
அதிலும் அவர் அங்குதான் போயிருப்பார் என்பது நாயகனின் சித்தப்பாவுக்கு யாரும் சொல்லாமலேயே தெரிந்துவிடுகிறது. அதற்கு ஒரு அபாரமான காரணம் படத்தில் முன்பாகவே சொல்லப்பட்டிருக்கும். அதாவது, நாயகன் அன்கோவினர் தாங்கள் திருடும் கார்களை ஒரு மலையில் வைத்துப் பிரித்து விற்பதாகப் படத்தில் ஒரு காட்சியில் சொல்லப்படுகிறது. திருட்டுப் பொருட்களைப் பிரித்து விற்க சரியான இடம் ஒரு மெக்கானிக் ஷாப் அல்லது புதுப்பேட்டை போன்ற ஸ்பேர்பார்ட்ஸ் வளாகம்தான். ஆனால், கதைப்படி ஹைதராபாத்தில் இருந்து ஊட்டிக்கு நாயகியைக் கடத்திக் கொண்டுவர வேண்டியிருந்ததால் அதற்கான ஒரு சாக்காக அந்த வசனம் முன்கூட்டியே செருகப்படுகிறது. ரொம்பவும் நுட்பமாகச் செயல்படுவதாக நினைத்து ஒரு காட்சியில் அங்கு அம்பாசெடர் கார் ஒன்று ஸீட், ஸ்டியரிங் எல்லாம் கழட்டப்பட்டு ஷெட்டில் நின்றுகொண்டிருப்பதாக வேறு காட்டியிருப்பார்கள். மலை உச்சில வந்து எவண்டா ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கப்போறான்? என்ற கேள்வியை நாம் கேட்காமல் இருப்பதுதான் நமக்கு நல்லது.
நாயகன் குடும்பத்தினர் வசிக்கும் இடமாக ஹைதராபாத் காட்டப்படுவதன் நோக்கமும் இயல்பாக இல்லை. படத்தின் ஆரம்ப காட்சிகள் ரெட் லைட் ஏரியா போன்ற ஒன்றில்தான் நடப்பதாக யோசிக்கப்பட்டிருக்கிறது. பிரதான காதல் ஜோடியின் காதலில் கிளு கிளு கம்மி என்பதாலோ என்னவோ. கேட்டால், மன நோய்க்கு அந்தக் குடும்பப் பின்னணியைக் காரணமாகக் காட்டக்கூடும். கதாநாயகன் சேற்றில் மலர்ந்த செந்தாமரையாகவே இருக்கிறான் என்பது வேறு விஷயம். எது எப்படியென்றாலும் தமிழ் நாட்டில் அப்படி ஒரு இடத்தைக் காட்டமுடியாது என்பதால் அந்தக் காட்சிகள் ஹைதராபாத்தில் நடக்கின்றன. தெலுங்கு டப்பிங்கில் அந்த இடம் தமிழ் தேசமாக மாற்றப்பட்டிருக்குமோ என்னவோ… தெரியவில்லை. இப்படி ஹைதராபாத்துக்கும் ஊட்டிக்குமாகக் கதை தறிகெட்டு ஓடுவதன் காரணம் என்னவென்றால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பே திரைக்கதை ஒழுங்காக எழுதப்பட்டிருக்கவில்லை. இதனால் படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கின்றன.
கதாநாயகி ஒரு கட்டத்தில் அவன் கட்டிய சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பித்து அந்த தேவாலயத்தின் பின்வாசலில் போய் மறைந்து நின்றுகொள்கிறார். வெளியில்போன நாயகன் திரும்பிவந்ததும் சங்கிலி அறுபட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். வேகமாக பின் வாசல் பக்கம் வருகிறான். நாயகி சடாரென்று அவன் மண்டையில் கம்பால் ஓங்கி அடிக்கிறார். நாயகன் தடுமாறிக் கீழே விழுந்துவிடுகிறான். இப்போது ஒரு பெண் தப்பிக்க என்ன செய்யவேண்டும்? நேராக முன் வாசல் வழியாக வேகமாக ஓடினால் போதும். ஆனால், அவளோ மிகப் பெரிய பள்ளமாக இருக்கும் பின்வாசல் பகுதியைப் பார்த்து ஓடி ஆபத்தில் சிக்கிக் கொள்கிறாள். பின்வாசலில் பெரிய பள்ளம் இருப்பது அவளுக்கு முன்பே தெரியும். நாயகன் தான் மன வளர்ச்சி குறைந்தவன். நடிப்பவர்கள் அனைவருமேவா? என்று நீங்கள் கேட்கக்கூடாது. நாயகன் எவ்வழி… கதாபாத்திரங்கள் அவ்வழி என்பதுதானே தமிழ் சினிமாவின் பொன் மொழி.
நாயகி, மன நோயாளியான நாயகன் மேல் காதல் கொள்வதற்கு எந்த வலுவான காட்சியும் வைக்கப்படவில்லை. கடத்திச் செல்பவர்கள் மீது கடத்தப்பட்டவர்களுக்கு நல்லபிப்ராயம் ஏற்படுவது உண்டு. அந்த ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் கூட கடத்திச் சென்றவர் விடுதலை செய்த பிறகுதான் செயல்பட ஆரம்பிக்கும். அதுவும்கூட அது நட்பு, பாசம் என்ற அளவுக்கு வர வாய்ப்பு உண்டு. அந்தக் கடத்தல்காரன் வசீகரமான ஆளுமையாக இருந்தால் காதலாக மாற வாய்ப்பு உண்டு. இங்கோ கடத்தியவன் ஒரு மன நோயாளி. அவன் மீது உங்களுக்கு கருணைதான் தோன்ற முடியும். காதல் அல்ல.
ஒரிஜினலிலும் இதே தவறு இடம்பெறுகிறது. ஆனால், அங்கு அதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்பானிய நாயகி சிற்றின்பப் படங்களில் நடித்தவர். இந்த ஒன்றே போதும் அவர் வாழ்க்கையில் ஆண்களால் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள. அதன் காரணமாக அவர் போதை மருந்துக்கும் அடிமையாகிவிட்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னை வெறித்தனமாக நேசிக்கும் ஒருவர்மீது அதிலும் பிற ஆண்களைப் போன்ற எந்த சூது வாதும் தெரியாத ஒருவராக இருக்கும்பட்சத்தில் அவர் மீது காதல் வருவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும். அதிலும் மேலைநாட்டுக் குடும்ப வாழ்க்கையின் இலக்குகள் மிகவும் எளிதானவை. குழந்தை குட்டிகள் பெற்றெடுத்து, பேரன் பேத்திகள் பார்த்து என எந்த நீண்ட காலப் பொறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒன்று. மனதுக்குப் பிடித்தவரை சேர்ந்து வாழ்தல் என அது மிக குறைவான இலக்குகளை மட்டுமே உடையது. தமிழ் திருமண பந்தம் அப்படியான ஒன்று அல்ல. அதோடு தமிழில் நாயகிக்கு தாய்ப்பாசமும் தந்தைப் பாசமும் கிடைத்திருக்கவில்லை. அவ்வளவுதான். உடனேயே தன்னைக் கடத்திச் சென்ற மன நோயாளியைக் காதலித்துவிடுகிறார். அழுத்தம் அதிகரித்தால் கிடைத்த துவாரம் வெளி வெளியேறுவது காற்றின் இயல்பு. காதல் அப்படியான ஒரு வெளிப்பாடு அல்ல. கண்களால் வார்த்தைகளால் அதாவது நாகரிகமாக, ஒருவித சுய கட்டுப்பாடுடன் வெளிப்படும் உணர்வு.
பதினாறு வயதினிலே படத்தில் காய்ச்சல் வந்ததும் மருத்துவரை அழைத்து வந்து வைத்தியம் பார்த்து, கஞ்சியெல்லாம் காய்ச்சிக் கொடுக்கும் சப்பாணி மீது மயிலுக்குக் காதல் குபீரென்று பீறிட்டுக் கிளம்பியது. இங்கும் நாயகியின் விக்கலை நிறுத்தி, அடிபட்ட காலுக்கு கட்டுப் போட்டு கவனித்துக்கொண்டதும் சப்பாணியின் அப்கிரேடட் வெர்ஷனான குணா மீது நவீன மயில் அபிராமிக்கு காதல் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது. அது என்ன மாயமோ தெரியலை, நாயகன் ரவுடியாக, மொள்ளமாறியாக, முடிச்சவிக்கியாக, குருடனாக, நொண்டியாக, கூனனாக, பைத்தியமாக எப்படி இருந்தாலும் பேரழகிகளான நாயகிகள் அவனை விழுந்து விழுந்து காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கணவனைக் கூடையில் சுமந்து தாசி வீட்டுக்குக் கொண்டு சென்ற நாயகி மனோபாவத்தில் இருந்து நாம் ஒரு அங்குலம்கூட நகர்ந்திருக்கவில்லை என்பதை யோசித்துப் பார்க்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
இதுபோன்ற குறைபாடு உடையவர்களை ஒரு பெண் தனது அண்ணனாகவோ தம்பியாகவோ நினைக்கலாம். நண்பனாக நினைக்கலாம். அல்லது தன் மகனாகக்கூட தாயன்பு மேலிட நினைக்கலாம்.
இவற்றையெல்லாம்விடப் ப்டத்தில் இருக்கும் பெரிய குறை என்னவென்றால், படத்தின் ஆன்மாவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விட்டிருப்பதுதான்.
மனநோயாளியான ஒருவன் இயல்பான ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். இதுதான் கதையின் முடிச்சு. அந்தப் பெண் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்கிறாளா… அது முடியுமா… அது சரியாக இருக்குமா இருக்காதா என கதையானது அந்த அம்சத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கவில்லை.
மன நோயாளி நாயகனுக்கு பாலுறவுத் தொழில் செய்யும் குடும்பப் பின்னணி…. கோயிலில் திருடச் செல்கிறான். அங்கு நாயகியைப் பார்த்ததும் கடத்திச் செல்கிறான். காவல்துறை அவனைத் துரத்துகிறது. ஒரு காவல் துறை அதிகாரியைத் தவறுதலாகக் கொன்றுவிடுகிறான். காவலர்கள் அவனைச் சுற்றி வளைக்கிறார்கள். க்ளைமாக்ஸானது காவல்துறைக்கும் நாயகனுக்கும் இடையிலான போராட்டமாக ஆகிவிடுகிறது. இது போதாதென்று கதையில் திடீரென்று நாயகியின் சொத்தை அபகரிக்க நினைக்கும் வில்லன் வருகிறான். அவன் நாயகியை க்ளைமாக்ஸில் கொன்றுவிடுகிறான். இந்த சம்பவங்கள் எல்லாமே கதையின் ஆன்மாவோடு துளியும் சம்பந்தப்படாதவை.
மன நோயாளி – இயல்பான பெண். இவர்கள் இருவரும் வேறு வேறு உலகில் வாழ்பவர்கள். இருவருக்கு இடையில் மிகப் பெரியதொரு சுவர் இயல்பாகவே இருக்கிறது. அந்தச் சுவரை உடைத்து அவர்கள் எப்படிச் சேர்கிறார்கள் என்று கதையானது அவர்களுடைய மனநிலைகளை மட்டுமே மையமாகக்கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். வில்லன், போலீஸ் போன்றவையெல்லாம் பிற வணிக, மசாலா படங்களின் அம்சங்கள். இந்தப் படத்துக்குச் சிறிதும் தேவையில்லாதவை.
ஒரு வித்தியாசமான கதைக் கருவைப் பார்க்கும்போது அதை மேலே எடுத்துச் செல்வது எப்படி என்றுதான் நீங்கள் யோசிக்கவேண்டும். அதைவிடக் கீழான ஒன்றை எதற்காக மெனக்கெட்டுச் செய்யவேண்டும்? தங்கத்தைத் தோண்டி எடுக்க முடிந்தவர்கள் எல்லாருமே நுட்பமான நகைகளைச் செய்துவிட முடியுமா என்ன? அதிலும் தங்கக் கட்டிகளைக் கடத்திக் கொண்டுவருபவனிடம் இதைவிட வேறு என்ன கலையழகை எதிர்பார்க்க முடியும்?
சாதி, மதம் போன்ற சென்சிட்டிவான விஷயங்களைப் படமாக எடுக்கும்போது ஏகப்ப்ட்ட சாக்குபோக்குகளைச் சொல்வார்கள். இந்தப் படத்தில் அதுபோல் எந்த சிக்கலும் வரவாய்ப்பில்லை. அப்படி இருந்தும் எடுத்துக்கொண்ட விஷயத்தைத் தீவிரமாக ஏன் அணுகவில்லை? இப்போது உங்களுக்குப் புரிகிறதா பிரச்னை எங்கு இருக்கிறது என்று.
0
எனது திரைக்கதையை நிச்சயம் வேறு விதமாகத்தான் எழுதுவேன். மன நோயாளியான நாயகன் தன் ஆழ் மன தேவதையைக் கடத்திக்கொண்டு சென்று சிறை வைக்கிறான். அவன் ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் கோளாறினால் ஒரு மன நோயாளியாக இருக்கிறான். பாபநாசத்தில் சிகிச்சைக்காக கொண்டுவிடப்படுகிறான். அவன் தெய்வாம்சம் பொருந்தியவன் என்றும் பார்வதி தேவியே (அபிராமியே) பூமியில் பிறந்து அவனைத் திருமணம் செய்து கொள்வாள் என்றும் விளையாட்டாகச் சொல்கிறார்கள். அதை நம்பி வாழும் நாயகன், ஒரு திருவிழாவின் போது அங்கு வரும் ரோகினி என்ற பெண்ணை பார்வதி தேவியின் அவதாரமாகப் பார்த்து அவள் மீது காதல் கொள்கிறான். அவளிடம் தன் பேரன்பைச் சொல்ல முயற்சி செய்கிறான். அது முடியாமல் போகிறது. பலர் கூடி இருக்கும் இடத்தில் தனது அன்பை அவளுக்குப் புரிய வைக்க முடியாது என்று அவளைக் குற்றாலக் காட்டுக்குக் கடத்திச் செல்கிறான்.அங்கு ஒரு பாழடைந்த சிவன் கோயில் இருக்கிறது. அதில் இருவரும் தங்குகிறார்கள். காட்டில் கிடைக்கும் காய் கனிகளை எடுத்து வந்து அவளுக்குக் கொடுக்கிறான்.
தனது ஃபிளாஷ்பேக்கைச் சொல்கிறான். சிறு வயதில் மன நிலை சரியில்லாமல் எங்கெல்லாமோ ஓடிப் போய் அடிவாங்கிவந்ததால் காலில் பெரிதாக ஒரு கல்லைக் கட்டி விட்டதையும் போகும் இடமெல்லாம் அதைத் தூக்கியபடியே போனதையும் சொல்கிறான். பாபநாசத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு பட்ட வேதனைகளைச் சொல்கிறான். கடைசியாக நான் சிவனின் அவதாரம் என்றும் நீ பார்வதியின் அவதாரம் என்று சொல்கிறான். அதைக் கேட்கும் நாயகிக்கு அவன் மேல் பரிதாபம் ஏற்படுகிறது.
கமல் நடனத்தில் தேர்ந்தவர் என்பதால் இங்கு ஒரு அற்புதமான செவ்வியல் நடனப் பாடலை இடம்பெற வைப்பேன். சிவனாகவும் அபிராமியாகவும் அவர் ஒருவரே மாறி மாறி ஆடி இறுதியில் அர்த்த நாரீஸ்வரராக ஆன்மிக உன்மத்த நிலையை அடைவதாக காட்டுவேன். கமலின் வாழ்க்கையில் மட்டுமல்ல இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே மிக அற்புதமான நடனப் பாடலாக அது இடம்பெறும். நான் இதற்குப் பெரிதாக சிரமப்படமாட்டேன். நடனத்துறையில் சிறந்த மேதை ஒருவரை அழைத்து காட்சியைச் சொல்லிவிட்டு ஓரமாக போய் சேர் போட்டு உட்கார்ந்து ரசிப்பேன்.
இதுபோன்று பல சம்பவங்கள் நடக்கும். அவனுடைய போக்கிலேயே போய் அவனை வழிக்குக் கொண்டுவர முடிவு செய்வாள். இதனிடையில் அபிராமியைக் காரில் இருந்து தோளில் போட்டுக் கொண்டுவந்தபோது வழியில் வைத்து அவளுடைய சங்கிலி விழுந்துவிட்டிருக்கும். அதை ஆடு மேய்ப்பவர் ஒருவர் எடுத்துச் சென்றிருப்பார். மலை அடிவாரத்தில் அவர் தன் கூடாரத்தை நோக்கிப் போகும் ஒரு மாலையில் அபிராமியின் குடும்பக் காப்பாளரான சுரேஷ்குமார் (வில்லன்) அந்தச் சங்கிலியைப் பார்த்துவிடுவார். அது எங்கு கிடைத்தது என்பதைக் கேட்டு பாழடைந்த கோயிலில் நாயகி இருப்பதைத் தெரிந்துகொண்டுவிடுவார். நேராக அந்த இடத்துக்குத் தன் அடியாளுடன் வருவார். அப்போது நாயகனும் நாயகியும் குளிக்கப் போயிருப்பார்கள். கோயிலில் தேடிப் பார்த்துவிட்டு காணவில்லை என்றதும் வில்லன் அங்கிருக்கும் ஒரு மரத்தினடியில் நின்று உதவியாளருடன் சிகரெட் குடித்தபடியே பேசிக் கொண்டிருப்பார்.
என்னங்க… ஊர்ல இருந்தபோது சொத்தையெல்லாம் உங்க பேருக்கு மாத்திக்க ஏற்பாடெல்லாம் செஞ்சீங்க. இப்ப மொதலாளியம்மா காணாமப் போனதும் சொத்து பூரா தானா கைக்கு வந்துச்சுன்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு அவங்களைத் தேடிக் கண்டுபிடிக்க இவ்வளவு கஷ்டப்படறீங்களே என்பார் அடியாள்.
உனக்குப் புரிஞ்சது அவ்வளவுதான். நான் அவளைத் தேடி வந்தது கூட்டிட்டுப் போறதுக்காக இல்லை. கொன்னு இங்கயே குழி தோண்டிப் புதைக்கறதுக்காக. ப்ழியை ஈஸியா கடத்தினவன் மேல் போட்டுத் தப்பிச்சிடுவேன். கடத்திட்டுப் போனவன் இதுவரை என்கிட்ட பணம் கேட்டு எதுவும் பேசலை. அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு. என் திட்டம் தெரிஞ்சுபோய் இவளே ஏதாவது நாடகமாடறாளான்னு தெரியலை என்று வில்லன் சொல்வான்.
இதை ஒரு மரத்தின் மறைவில் இருந்து கேட்கும் நாயகனும் நாயகியும் நைசாக அங்கேயே மறைந்துகொண்டுவிடுவார்கள். சிறிது நேரம் காத்திருந்துவிட்டு வில்லன் காரை எடுத்துக்கொண்டு போய்விடுவார். ஆனால், இரவில் திரும்பிவருவார். பகலில் எங்கு ஒளிந்துகொண்டாலும் இரவில் இங்குதானே வந்தாகவேண்டும். நன்றாகத் தேடிப்பார் என்று தன் உதவியாளனிடம் சொல்வார். குணாவும் அபிராமியும் கார் வந்த சத்தம் கேட்டு ஏற்கெனவே ஒளிந்துகொண்டிருப்பார்கள். அபிராமி கோயில் கருவறைக்கு மேலே இருக்கும் சிறிய கோபுரத்தில் மறைவிடம் ஒன்றில் பதுங்கியிருப்பாள். குணா கருவறையில் பதுங்கியிருப்பான். ஆனால், வில்லன் அவனைக் கண்டுபிடித்துவிடுவார். தீப்பந்தம் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு தூணில் கட்டிப் போட்டு, நாயகி இருக்கும் இடத்தைச் சொல்லச் சொல்லி சித்ரவதை செய்ய ஆரம்பிப்பார். எவ்வளவு அடித்தும் குணா கடைசிவரை அபிராமி இருக்கும் இடத்தைச் சொல்லவே மாட்டான். ஒளிந்துகொண்டிருக்கும் அபிராமிக்கு அவன் படும் வேதனையைப் பார்த்ததும் அழுகையாக வரும். ஆனால், அவனைக் காப்பாற்ற கீழிறங்கிவந்தால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பாள்.
குணா இறந்துவிட்டதாக நினைத்து அங்கேயே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். காலையில் அபிராமி வந்து பார்ப்பாள். ரத்தம் சொட்டச் சொட்ட குணா சிரித்தபடியே நின்றுகொண்டிருப்பான். என்னை காட்டிக் கொடுத்துட்டு நீ தப்பிச்சிருக்கலாமே என்று அழுதபடியே அவனது கட்டுகளை அவிழ்ப்பாள். ஏன் இப்படிச் செஞ்ச என்று கேட்பாள். ‘காதல்…’ என்று குணா ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வான்.செத்துருவேன்னு பயந்துட்டியா… எனக்கு சாவு கிடையாது என்று சொல்லிச் சிரிப்பான்.
அபிராமி அவனை உடனே காரில் ஏற்றிக் கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வாள். ஓரளவுக்கு மருந்துபோட்டு பேண்டேஜ் கட்டி விட்டதும் அவனை காரிலேயே மலையடிவாரத்துக்கு அழைத்துச் செல்வாள். நகரின் மிகப் பெரிய மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்வாள்.
இதனிடையில் தன் காதலனுக்குத் தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு வரச் சொல்வாள். அவளைக் காணாமல் தேடி அலைந்துகொண்டிருந்தவன் உடனே புறப்பட்டுவருவான். ஆனால், வந்தவனோ குணாவைக் கொல்லவேண்டும் என்ற வெறியில் இருப்பான். அதோடு இத்தனை நாள் தனியாக இருந்த அவள் கற்புடன் இருக்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்வதிலேயே குறியாக இருப்பான். அதுபற்றி அவன் தலைமை மருத்துவரிடம் பேசிக் கொண்டிருப்பதை யதேச்சையாகக் கேட்டுவிடும் நாயகி நிலைகுலைந்துபோய்விடுவாள். தான் இதுவரை நேசித்த ஒருவன் இவ்வளவு கேவலமானவனா என்று அவளுக்கு ஆத்திரமும் அழுகையும் வரும்.
குணாவுக்கு உடல் நிலை சரியாவது வரை எதுவும் பேசாமல் இருப்பாள். நன்கு குணமானதும் அவனை அழைத்துக்கொண்டு அதே பாழடைந்த கோவிலுக்குப் போய் ஒரு தாலியை அவன் கையில் கொடுத்து கட்டச் சொல்வாள். குணாவுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியாது. இப்போதைய படத்தில் தாலிகட்டியதும் அடுத்த நொடியே குறட்டைவிட்டுத் தூங்குவதாகக் காட்டியிருக்கிறார்கள். சின்னத் தம்பி பிரபுவுக்குக்கூட கல்யாணம்னா கெட்டி மேளம் கொட்டுவாங்க… சாப்பாடு போடுவாங்க என சுறுசுறுப்பான பல உண்மைகள் தெரிந்திருந்தது. தன் வாழ்நாள் முழுவதும் அபிராமி அபிராமி என்று ஏங்கித் தவித்த குணாவோ தாலி கட்டிய அடுத்த நொடியே குறட்டைவிட்டபடி தூங்கிவிடுகிறான்.
காதல் இளவரசன், காதல் மன்னன், காதல் முது மன்னன் என காலத்துக்கு ஏற்ப கமல் படங்களிலும் வெளியிலும் நிறைய வித்தைகள் காட்டுவதுண்டு. ஆனால், இந்தப் படத்தில் முற்றிலும் நேர்மாறாக நடந்துகொள்கிறார். அவருடைய காதல் விளையாட்டுகள் எவ்வளவு பரிதாபமாக இருக்குமோ அதைவிட இந்த விலகல் அபத்தமாக இருக்கிறது. இயல்பாக இல்லாத எதுவுமே அப்படித்தானே இருக்கவும் முடியும். எனது படத்தில் அப்படி நடக்காது. முதலில் சிவனாகவும் அபிராமியாகவும் நாயகனே ஆடிய நடனம் இப்போது மீண்டும் ஆடப்படும். கதாநாயகி அபிராமியாக இப்போது உடன் ஆடுவாள். காமமும் தெய்விகமும் கலந்து வெளிப்படும் நடனமாக அதைச் சித்திரிப்பேன். இந்தப் பாடலை அல்ட்ரா மோஷனில் படமாக்குவேன். பம்பாய் படத்தில் உயிரே பாடலை மணிரத்னம் ஸ்லோமோஷனில் படமாக்கியிருப்பார். தெய்வத்திருமகளில் கூட, விழிகளில் ஒரு வானவில் பாடலில் அல்ட்ராமோஷன் இடம்பெறிருக்கும். பாடலின் ட்யூனுக்கும் நடன அசைவுகளுக்கும் இடையில் மிக அற்புதமான ஒத்திசைவு அதில் வெளிப்பட்டிருக்கும். ஆனால் அதிலும் ஒவ்வொரு ஷாட்டும் சட் சட்டென்று மாறுவது நெருடலாக இருக்கும். நான் அதை முழுவதும் டிஸ்ஸால்வ் ஷாட்களாகப் படம்பிடிப்பேன். நாயகி நாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளும் தருணம் அவனுடைய வாழ்க்கையின் கொண்டாட்ட தருணமல்லவா.
இருவரும் ஆடி முடிக்கும்போது வாசலில் ஒரு கார் வந்து நிற்கும். அதில் இருந்து வில்லன் ஆவேசமாகப் பாய்ந்து வருவார். கதாநாயகியைப் பார்த்ததும் சட்டென்று துப்பாக்கியை எடுத்துச் சுடுவார். ஆனால், குணா வேகமாகக் குறுக்கே பாய்ந்து அந்த குண்டை தன் நெஞ்சில் வாங்கிக் கொள்வார். அதைப் பார்த்ததும் வில்லன் பதறிவிடுவார். உண்மையில் கதாநாயகியைக் கொன்றுவிட்டு அந்தப் பழியை நாயகன் மேல் போடுவதுதான் அவருடைய திட்டம். குண்டு நாயகன் மேல் பாய்ந்ததும் பயந்துவிடுவார்.
அபிராமி மடியில் கிடக்கும் நாயகனைக் கட்டித் தழுவியபடி அழுவாள். அவன் சொல்லிய அந்தாதிப் பாடல்களைச் சொல்லி அவனை எழுந்திருக்கச் சொல்வாள். மெள்ளக் கண்கள் செருக, குணா அந்தப் பாடலைத் தானும் பாடுவான். அவன் பிழைத்துவிடுவான் என்ற உற்சாகத்தில் நாயகி பாடலை உணர்ச்சிபூர்வமாக மேலும் தொடர்வாள். நாயகனின் குரல் மெள்ளத் தேய ஆரம்பிக்கும். அவனுடைய கன்னத்தை மாறி மாறித் தட்டியபடியே பதறுவாள். நாயகன் கடைசிவரிகளை மெள்ள முனகியபடி கண் மூடுவான்.
இதனிடையில் நாயகியின் காதலனும் அங்கு வந்து சேருவான். நாயகன் ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்த்ததும் ஒருவகையில் சந்தோஷப்படுபவன் கதாநாயகிக்கு அருகில் சென்று உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பதறியபடியே கேட்பான். எவளாவது கற்புக்கரசி கிடைப்பா… போய் டார்ச் அடிச்சுப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… என்று நாயகி அவன் முகத்தில் காறி உமிழ்வாள்.
வில்லனை அழைத்து, இப்படிப் பண்ணிட்டியே… நான் ஏற்கெனவே என் சொத்தைப் பூரா உன் மனைவி பேர்ல எழுதி வெச்சிட்டுத்தான் வந்திருக்கேன். இத்தனை நாள் என் அப்பா பணம் பணம்னு பேயா அலைஞ்சப்போ நீயும் உன் மனைவியும்தான் எனக்கு ஆறுதலா இருந்தீங்க. ஆனா நீயும் உன் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கிட்டிருந்திருக்கன்னு தெரிஞ்சதும் வருத்தமாத்தான் இருந்தது. அப்பறம்தான் நினைச்சேன். என்னதான் உன் மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் எனக்குக் கிடைச்ச ஆறுதல் இல்லைன்னு ஆகிடுமா என்ன… அதுக்கு சன்மானமா உன் மனைவி குழந்தைங்க பேர்ல பாதி சொத்தை எழுதிவெச்சிட்டேன். இப்ப இப்படி ஆகிடிச்சு… மீதி சொத்தையும் நீயே எடுத்துக்கோ. மனைவி குழந்தைங்க கிட்டயாவது உண்மையான அன்போட நடந்துகோ என்று சொல்லிவிட்டு தன் மடியில் இறந்து கிடக்கும் குணாவைத் தூக்கிக் கொண்டு மெள்ள மலை உச்சியை நோக்கி நடப்பாள்.
வில்லனும் முன்னால் காதலனும் அவள் முடிவை மாற்றிக் கொள்ளச் சொல்லி கெஞ்சியபடி பின்னாலே வருவார்கள். குணாவைப் பார்த்து சிரித்தபடியே அந்தாதிப் பாடலைப் பாடியபடி அவர்களைப் பொருட்படுத்தாமல் நடப்பாள். உச்சியை ஏற ஏற அவளுடைய பாடலின் வேகம் அதிகரிக்கும். உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா… திரும்பி வா… என்று இருவரும் வழியை மறிப்பார்கள்.
அவர்களை விலக்கித் தள்ளிவிட்டு, மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல… அதையும் தாண்டிப் புனிதமானது என்று சொல்லியபடியே மலை உச்சியில் இருந்து குணாவின் உடலை அணைத்தபடி குதிப்பாள். இரண்டு உடலும் பாறைகளில் மோதி உருண்டு தரையைப் போய்த் தொடும். இருவருடைய உடம்பில் இருந்து வழியும் ரத்தமும் ஒரு சிறு ஓடை போல் தேங்கி நிற்கும். மெள்ள பவுர்ணமி நிலவு உதிக்கும். தேங்கிக் கிடக்கும் ரத்தத்தில் அதன் பிம்பம் தெரியும். வீசும் மெல்லிய குளிர் காற்றில் ரத்தத்தின் மேல் படலம் அதிரும். அது பரிசுத்தமான காதல் ஜோடியின் மரணத்துக்கு சாட்சியாக இருக்க நேர்ந்துவிட்டதே என்று நிலவு நடுங்குவதுபோல் இருக்கும்.
0
இந்தக் கதைகூட ஏற்கெனவே எடுக்கப்பட்ட கதையின் ஃப்ரேமுக்கு உட்பட்டு
எழுதிய கதைதான். இதை நான் தியேட்டர் ரிலீஸுக்க்காக மட்டுமே எடுப்பேன்.
ஃபெஸ்டிவல்களுக்கு என்று இன்னொரு வெர்ஷனும் எடுப்பேன். அந்தக் கதையை
கதாநாயகியின் கோணத்தில் இருந்து சிந்தித்து எழுதுவேன். ஒரு மன நோயாளியை
திருமணம் செய்ய முன்வரும் அளவுக்கு அவள் என்ன சுய விருப்பமோ
தன்னம்பிக்கையோ இல்லாத ஜடமா? அவளுக்கும் ஆசா பாசங்கள், தனக்கு எது
சரியென்று சிந்தித்து முடிவெடுக்கும் திறன் எல்லாம் இருக்கத்தானே
செய்யும். ஒரு ஆணாதிக்கச் சிந்தனையை அவள் எதற்குச் சுமக்க வேண்டும்? இந்த
அடிப்படையில் கதாநாயகிக்கு நாயகன் மீது ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை
பரிதாபம் மட்டுமே ஏற்படுவதாகவே எழுதுவேன். மேலும், அதை கதாநாயகன்
புரிந்துகொண்டு அவனுடைய மனதில் மாற்றம் ஏற்படுவதாகவே கதையை முடிப்பேன்.
பெண்ணை காதலின்/காமத்தின் வடிவமாகக் கற்பிதம் செய்து மன மயக்கத்தில்
இருந்தவன் தாய்மையின் வடிவமாக உணர்ந்து மாறுவதாக கதையை எழுதுவேன். ஆரம்ப காட்சிகளில் குணா தான் பார்க்கும் பெண்களை எல்லாம் முலைகளாகவும்
யோனியாகவும் மட்டுமே பார்ப்பவனாக இருப்பான். அவன் எழுதுவது, வரைவது
பேசுவது எல்லாமே உடலுறவை மையப்படுத்தியதாகவே இருக்கும். அவன் பொது
இடங்களில் பாடும் பாடல்கள் இனிமையாக எந்த விபரீதமும் இல்லாத ஒன்றாகத்தான்
இருக்கும். ஆனால், மலைக் கொங்கை, நல்லரவின் படம் போன்ற அல்குல் என
வார்த்தைகள் விரவி வரும் அந்தப் பாடலுக்கு அவன் பொழிப்புரை வாசிக்க
ஆரம்பிக்கும்போதுதான் நிலைமை மோசமாகும். ஒவ்வொரு தடவையும் வீட்டை விட்டு
வெளியே போய்விட்டு வரும்போதும் எங்காவது தர்ம அடி வாங்கி ரத்தக்
காயத்துடன்தான் வீட்டுக்கு வருவான். அவனைப் பொறுத்தவரையில் முலை, யோனி,
உடலுறவு இவையே சிந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் அப்படித்தான் என்றாலும் நாம் ‘நாகரிகம்’
தெரிந்தவர்கள். அந்த நாகரிகம் தெரியாமல் இருப்பதுதான் குணாவின் நோயே.
இப்போதைய படத்தில் நாயகன் மாடு, குருவி, குயில் ஆகியவற்றுடன் பேசுபவனாக
இருக்கிறான். கவித்துவமாகவும் தத்துவார்த்தமாகவும் பேசக்கூடியவனாக
கிட்டத்தட்ட மாபெரும் கலைஞனாகவே அடையாளப்படுத்தப்படுகிறான். அதோடு உடல்
வலிமையை எடுத்துக்கொண்டாலோ, என்ன உயரத்தில் இருந்து விழுந்தாலும் விழுந்த
சிறிது நேரத்துக்கு மட்டுமே உடலில் காயங்கள் இருக்கும் வகையில் அபூர்வ
தேகத்தைப் பெற்றவனாக இருக்கிறான். சுருக்கமாகச் சொல்வதானால், ஆக்ஸ் நறுமண
விளம்பர நாயகனைவிட ஹைலி லவ்வபிளாக இருக்கிறான். என் மன நோயாளிக்
கதாநாயகனைக் கொஞ்சம் நோயாளியாகவே காட்டுவேன். முட் செடியை முள்ளுடனே
வரைவேன். இலைகள்கூட இல்லாமல் மலர்கள் மட்டுமே பூத்துக் குலுங்கும்
அதிசயச் செடியாக அல்ல.
தெய்விக அழகுடன் இருக்கும் ஒரு பெண்ணுடன் கூடுவதுதான் வாழ்க்கையின்
லட்சியம் என்று அவன் வாழ்ந்துவருவான். நாயகியைப் பார்த்ததும் அவளுடைய
பேரழகில் மயங்கி அவளைக் காட்டுக்குக் கடத்திச் செல்வான். அங்கு அவனுடைய
வேதனை நிறைந்த கடந்த காலத்தைத் தெரிந்துகொள்ளும் நாயகி அவனைத் திருமணம்
செய்து கொள்வதாகக்கூறி ஊருக்கு அழைத்து வந்துவிடுவாள். அவனை ஒரு
மருத்துவமனையில் சேர்த்து அருகில் இருந்து கவனித்துக்கொள்வாள். அவளுடைய
காதலனுக்கு இந்த விஷயங்கள் பிடிக்காமல் போகும். இதனால் அவர்களிடையே
விரிசல் ஏற்படும். யாரோ ஒருவனுக்காக உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும்
என்னைப் புறக்கணிப்பது நியாயமா என்று அவன் கோபப்படுவான்.
இந்த வெர்ஷனில் அவன் சந்தேக புத்திக்காரனாக வரமாட்டான். தன் காதலியின் முழு அன்பும்
தனக்கே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவனாக இருப்பான். நாயகியின்
குடும்பத்தினரும் அவளுடைய செய்கையைக் கண்டிப்பார்கள். அதுதான்
மருத்துவமனையில் சேர்த்தாயிற்றே… நீ என்ன பாபா ஆம்தேயா… உன்
வாழ்க்கையை நோயாளிகளுக்கு சேவை செய்தே கழிக்கப்போகிறாயா என்று கேலி
செய்வார்கள். ஊரில் உள்ள நோயாளிகளையெல்லாம் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு
எனக்கு அன்பு கிடையாது. ஆனால், குணா அப்படி அல்ல. என் வாழ்க்கையோடு
பிணைக்கப்பட்டவன். என்னால் பைத்தியமானவன் அல்ல. ஆனால், என்னை நினைத்து
பைத்தியமாக இருப்பவன். அதனால் அவனுக்கு நான் சிகிச்சை செய்கிறேனென்று
சொல்வாள். இதனால் அவளுக்குத் தன் காதலனை இழக்க நேரிடும். ஆனாலும் அவன்
என்றாவது தன்னைப் புரிந்துகொண்டுவருவான் என்று இவள் குணாவைத் தொடர்ந்து
பராமரித்துவருவாள்.
ஆனால், அவள் தன்னை ஏமாற்றிவிட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத்
தெரியவந்ததும் ஆத்திரமடைவான். அவளை மீண்டும் கடத்திச் சென்றுவிடுவான்.
பாழடைந்த கோயிலில் வனவாசிப் பெண் ஒருத்தியின் பிரசவத்தை நேரில் பார்க்க
நேரிடும். மயக்கம் தெளிந்து எழுந்து தொப்புள் கொடியை அறுத்துவிட்டு
அந்தப் பெண் பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதைப் பார்க்க நேரும். முலையும்
யோனியும் காமத்தின் உறுப்புகள் அல்ல; தாய்மையின் அம்சங்கள் என்பதைத்
தெரிந்துகொள்வான். நாயகியின் காலில் விழுந்து, அம்மா… தாயே… என்று
கதறி அழுவான். நாயகியும் அவனைத் தன் மகனாக மடியில் இட்டுத் தாலாட்டுவாள்
என்பதாகப் படத்தை முடிப்பேன்.
0
B.R. மகாதேவன்