காஷ்மிர் டைரி – 3
நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தபிறகு ஹோட்டலைக் காலி செய்துவிட்டு சிகாகோ என்னும் பெயர் கொண்ட ஷிகாராவுக்குக் குடிபுகுந்தோம். அடுத்த மூன்று மூன்று நாள்களுக்குப் படகுதான் வீடு. முதல் நாள், டால் ஏரியை ஒட்டிய குடியிருப்பு மற்றும் கடைப் பகுதிகளைச் சுற்றினோம். பஞ்சாபி தாபாக்கள், மீன், இறைச்சிக் கடைகள், துணிக்கடைகள், காஷ்மிர் ஷால், போர்வைகள் விற்கும் கடைகள், கைவினை அங்காடிகள், சிறு உணவகங்கள், தேநீர் கடைகள் ஆகியவற்றைக் கடந்து சென்றோம். காய்கறிகளை கை வண்டிகளில் கொண்டு சென்றார்கள் வியாபாரிகள். இந்துக்களைக் கவர சிவபெருமான் படமும், இஸ்லாமியர்களைக் கவர உருது வாசகங்களும் கடைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தகரக் கூரையுடன் கூடிய வீடுகளின் தொகுப்புகள் இடையிடையே தென்பட்டன. இருவர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய சிறு படகுகளைப் பலர் வைத்திருக்கிறார்கள். கடைகளுக்குச் சென்று வர, சாமான்கள் வாங்கி வர, சிறு பயணங்கள் மேற்கொள்ள இவை பயன்படுத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களும் பெண்களும் தன்னந்தனியே படகைச் செலுத்துகின்றனர். கடந்து செல்லும்போது குழந்தைகள் கையசைக்கிறார்கள். ஷிகாராவில் அமர்ந்திருக்கும்போது கடக்க நேரிட்டால், மலர் ஒன்றை எடுத்து புன்சிரிப்புடன் அளிக்கிறார்கள்.
செங்கல் வீடுகளின் கூரைகளும்கூட பிரமிட் போன்ற அமைப்புடன்தான் இருக்கின்றன. பனி மழை பொழியும்போது சிதறல்கள் எதுவும் வீட்டின் மேல் தங்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு. நாங்கள் சென்ற பொழுது, மரங்கள் இலைகளின்றி குச்சிக்குச்சியாக நின்றுகொண்டிருந்தன. காய்த்து தொங்கும் ஆப்பிள்களைப் பார்க்கமுடியவில்லை. ‘அது பரவாயில்லை, ஆப்பிள் மரங்களைக் கண்ட பலரால் பனிப்பொழிவைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அது பெரிய துயரமல்லவா?’ என்றார் நண்பர் ஒருவர்.
உள்ளூர் மக்கள் தங்களுக்கான ஆடைகளையும் உடைகளையும் இதுபோன்ற தள்ளுவண்டி வியாபாரிகளிடம் இருந்தே வாங்கிக்கொள்கிறார்கள். கம்பளி, கையுறை, காலுறை, அங்கிகள், தொப்பிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என்று பலவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இரு சக்கர வாகனங்களில், சட்டைகளையும் சுடிதார் துணிகளையும் கட்டி எடுத்து வந்து விற்கிறார்கள்.
தகரத் துணிக்கடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் ஒரு வியாபாரி. டால் ஏரியில் வசிக்கும் நடுத்தர வர்க்க ஷிகாரா பணியாளர்கள் சிலரை இவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இவர்களும் படகு வீட்டில்தான் குடியிருக்கிறார்கள். ஒய்யாரமாக அல்ல ஒதுக்குப்புறமாக. முழுக்க முழுக்க தகரத்தால் உருவாக்கப்பட்ட ஷெட்டுகள். வெடவெடக்கும் குளிரில் பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள் ஒடுங்கியிருக்கிறார்கள். ஆண்களில் சிலர் வியாபாரிகளாகவும் சிலர் துப்புறவுத் தொழிலாளர்களாகவும் சிலர் ஷிகாராவில் பணிபுரிபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கான அரசுத் தகரப் பள்ளிகள் அருகிலேயே இருக்கின்றன. ஒருவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்தோம். எலுமிச்சை தேநீர் கொடுத்து உபசரித்தார்கள். சுற்றுலாப் பயணிகளைச் சுற்றிச்சுற்றித்தான் இவர்கள் வாழ்க்கை இயங்கிக்கொண்டிருக்கிறது.
மீன் வற்றல் போன்ற ஒன்றை இவர் தன் வீட்டுக்கு வெளியில் காயவைத்துக்கொண்டிருந்தார். தயக்கத்துடனும் வெட்கத்துடனும் சிறிதே பேசினார். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிநீர் தொட்டி இருக்கிறது. இந்தப் பகுதியில் மின்சாரம் கிட்டத்தட்ட தடையின்றி கிடைக்கிறது. ஏரிக்கரையை மாசுபடுத்துவது இவர்களுடைய வாழ்வாதாரத்தையே குலைத்துவிடும் என்பதால் கழவுநீரைத் தனியே இன்னொரு தொட்டியில் சேகரித்து அப்புறப்படுத்துகிறார்கள். டால் ஏரியை அவ்வப்போது துப்புறவுப் படகுகள் உலா வந்து தூர் வாருவதால் சுத்தமாகவே இருக்கின்றன. அடுப்புக்குப் பெரும்பாலும் விறகுகளே பயன்படுத்தப்படுகின்றன.
காஷ்மிரில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, பாதுகாப்பு வசதிகள் போதவில்லை என்றார் இவர். ‘சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சோன்மார்க், குல்மார்க் போன்ற இடங்களில் உள்ள ராணுவத்தினரும் ஸ்ரீ நகர் போன்ற பகுதிகளில் உள்ள ராணுவத்தினரும் வெவ்வெறான முறையில் உங்களை நடத்துவார்கள். உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு நீங்கள் இந்துவா, இஸ்லாமியரா என்பதைப் பொறுத்தும், நீங்கள் காஷ்மிர் வாசியா, சுற்றுலாப் பயணியா என்பதைப் பொறுத்தும் அமையும்.’
டால் ஏரியில் இயங்கும் மிதக்கும் தபால் நிலையம். சச்சின் பைலட், உமர் அப்துல்லா இருவராலும் 2011ல் திறந்து வைக்கப்பட்டது. புகைப்பட போஸ்ட்கார்ட், காஷ்மிர் பற்றிய சில புத்தகங்கள் ஆகியவையும் இங்கு கிடைக்கின்றன.
(தொடரும்)














