சே : ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை

மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 2

பதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி சான்றிதழ், ‘வெரி குட்’, ‘அவுட்ஸ்டாண்டிங்’ போன்ற மதிப்பீடுகளைக் கொண்டிருந்தாலும், சகமாணவர்கள் எர்னஸ்டோவை அப்படியொன்றும் ஒரு பிரமாதமான படிப்பாளியாகக் காணவில்லை. விளையாட்டு, அரட்டை, கிண்டல், ஊர் சுற்றல் என்று மிக இயல்பான ஒரு எர்னஸ்டோவைத்தான் அவர்கள் அறிந்திருந்தனர். எப்பொழுதும் நம்முடன் சுற்றிக்கொண்டிருக்கும் எர்னஸ்டோ தேர்வுகளில் மட்டும் எப்படி நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுவிடுகிறான் என்று அவர்கள் வியந்திருக்கவேண்டும்.

வெளிக்காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் எர்னஸ்டோ புத்தகங்களை அபாரமாக நேசித்தார். செலியாவும் எர்னஸ்டோ சீனியரும் சேகரித்து வைத்திருந்த மூவாயிரத்து சொச்ச புத்தகங்கள் எர்னஸ்டோமீது அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தின. ஆயிரத்தோரு இரவுகள், பாப்லோ நெருடாவின் கவிதைகள், பிராய்ட், ஜேக் லண்டன், அனடோல் பிரான்ஸ் என்று வாசிக்கத் தொடங்கினார். சுருக்கப்பட்ட கார்ல் மார்க்ஸின் மூலதனமும் கிடைத்தது. (ஆனால், அப்போது எனக்கு அதில் எதுவுமே புரியவில்லை!) எர்னஸ்டோவின் நண்பர் ஒருவர் நினைகூர்ந்தபடி, ‘பேரார்வத்துடன் எர்னஸ்டோ புத்தகங்களை அணுகினான். வயதுக்கு மீறிய கனமான தலைப்புகளை அவன் வாசிப்பது தெரிந்தது.’

எர்னஸ்டோ தனது முதல் ‘தத்துவ அகராதியை’ உருவாக்க ஆரம்பித்திருந்தார். 165 பக்க கையெழுத்துப் பிரதி அது. எழுத்தாளர்கள், தலைப்புகள் என்று வரிசைக்கிரமமாக விவரங்கள் திரட்டப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் பக்க எண்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கடவுள், இசை, பொன்மொழிகள், நம்பிக்கை, நீதி, மரணம், உல்லாசம், சாத்தான் என்று குறிப்புகள் விரிவடைகின்றன. ஆச்சரியமளிக்கும் வகையில், மார்க்சியம் பற்றிய குறிப்புகளை எர்னஸ்டோ, அடால்ஃப் ஹிட்லரின் மெயின் காம்ஃப் நூலில் இருந்து திரட்டியிருப்பதாக ஜான் லீ ஆண்டர்சன் தனது நூலில் (Che  Guevara – A Revolutionary Life) குறிப்பிடுகிறார். யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் ‘ஒன்றிணைந்து சதி வேலைகளில் ஈடுபடுவது’ பற்றிய ஹிட்லரின் குறிப்புகளை எர்னஸ்டோ தன் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார்.

ஹெச்.ஜி. வெல்ஸின் உலக வரலாற்றில் இருந்து அரிஸ்டாடில் மற்றும் புத்தர் பற்றிய குறிப்புகளை எடுத்தாண்டிருக்கிறார். காதல், நேசம், தேசப்பற்று, பாலியல் அறம் ஆகியவற்றுக்கு பெட்ரண்ட் ரஸ்ஸல் (Old and New Sexual Morality) உதவியிருக்கிறார். நினைவாற்றல் பற்றிய பிராய்டின் கோட்பாடுகள் எர்னஸ்டோவைக் கவர்ந்திருக்கின்றன. சமூகம் பற்றி ஜேக் லண்டன் (லெனின் இறுதியாக ஜேக் லண்டனின் கதைகளையே வாசித்ததாக நதேஷ்தா குரூப்ஸ்கயா குறிப்பிடுகிறார்), மரணம் பற்றி நீட்ஷே எழுதியவற்றின் சாரம் எர்னஸ்டோவின் குறிப்பேட்டில் காணப்படுகிறது.

அடுத்த பத்தாண்டுகளில், எர்னஸ்டோ மேலும் ஆறு குறிப்பேடுகளை உருவாக்கினார். வாசிப்பு ஆழத்துக்கும் புதிய புரிதல்களுக்கும் ஏற்ப குறிப்புகள் திருத்தியமைக்கப்பட்டன. ஹிட்லரை நிராகரித்துவிட்டு, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் படைப்புகள்மூலம் மார்க்சியத்தை அணுகத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஜவாஹர்லால் நேருவின் எழுத்துகளில் இருந்து சில பத்திகளையும் எர்னஸ்டோ குறித்து வைத்துக்கொண்டார்.

இலக்கியம், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் என்று எர்னஸ்டோவின் ஆர்வம் பரவியது. தன்னால் நேரில் காணமுடியாத நாடுகளையும் சந்திக்கமுடியாத மக்களையும் இலக்கியத்தின் மூலம் எர்னஸ்டோ தரிசித்தார். கண்கள் மூடி கனவு கண்டார். அவர் பார்க்க விரும்பியவை, புகை மூடிக் கிடக்கும் உல்லாசப் பிரயாணிகளுக்கான இடங்கள் அல்ல. மயக்கும் தொலைதூர தேசங்கள் அல்ல. அவர் கனவு கண்டது லத்தீன் அமெரிக்கா குறித்து.

பிடிநோஸ்ட் (Osvaldo Bidinost Payer) என்னும் நண்பர் குறிப்பிடுவது போல், எர்னஸ்டோவின் லத்தீன் அமெரிக்கக் கனவு விரிவடைந்ததற்கு மற்றொரு காரணம் அவர் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினர்கள். பல்வேறு விதமான பின்னணி கொண்ட மனிதர்களையும் செலியா தன் வீட்டுக்கு வரவழைத்து, உபசரித்து, உரையாடி மகிழ்ந்தார். சில சமயம் ஈக்குவடாரில் இருந்து சில கவிஞர்கள் வந்திருப்பார்கள். கவிதைகள் பற்றிய சுவையான, காரசாரமான விவாதங்கள் நடைபெறும். சில சமயம், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து போவார்கள்.

எர்னஸ்டோ சீனியருக்கு இப்படிப்பட்ட ‘அறிவார்ந்த உரையாடல்களில்’ ஆர்வம் இருக்காது. தடதடக்கும் தனது இருசக்கர வாகனத்தை (La Pedorra) ஓட்டியபடி அவர் வெளியேறிவிடுவார். கலை, இலக்கியம், வரலாறு, சமூகம் என்று விரிவாக விவாதிக்கும் செலியாவின் ஆற்றலை எர்னஸ்டோ ரசித்துக்கொண்டிருப்பார். ‘அவர்களுடைய வீடு ஒரு மனித மிருகக்காட்சி சாலை போல் காட்சியளித்தது’ என்கிறார் பிடிநோஸ்ட். எப்பொழுது சென்றாலும் ஏதாவதொரு விவாதம், அனல் பறக்கும் சண்டை அல்லது கவிதை வாசிப்பு. அன்றைய தினம் உணவு மேஜையில் எத்தனை பேர் கூடுவார்கள், எத்தனை பேருக்கு உணவு பகிர்ந்தளிக்கப்படும், விவாதத்தின் திசை என்ன என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘உலகத்தின் வரவேற்பறை போல் அந்த வீடு காட்சியளித்தது.’

சில சமயங்களில், விருந்தினர்களின் தொடர் வருகைகளால் எர்னஸ்டோவின் வாசிப்பு தடைபடுவதும் உண்டு. பொறுக்கமுடியாமல் குளியலறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் வாசித்துக்கொண்டிருப்பார். வாழ்க்கை முழுவதும் நீடித்த பழக்கமாக இது மாறிவிட்டது.

1946ல் எர்னஸ்டோவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. ஜூன் மாதம் தனது பதினெட்டாவது பிறந்த நாளை எர்னஸ்டோ கொண்டாடினார். தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்துகொண்டே சாலை அமைக்கும் அரசு நிறுவனத்தில் பகுதி நேர வேலை செய்யத் தொடங்கினார். மண்ணின் தரத்தை அறிவதில் எர்னஸ்டோ நிபுணத்துவம் பெற்றதைக் கண்ட நிறுவனம், தனியார் நிறுவனங்கள் சாலை அமைக்க பயன்படுத்தும் மண்ணைச் சோதனை செய்யும் பணியை எர்னஸ்டோவுக்கு ஒதுக்கியது. தன் மகன் ஒரு பொறியியலாளராக உருவெடுப்பார் என்று எர்னஸ்டோ சீனியர் திடமான நம்பிய காலகட்டம் அது. அவர் முன்னெடுத்துச் சென்ற கட்டுமான வேலை எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்காததால் கையிருப்பு நிலம், வீடு என்று அடுத்தடுத்து சொத்துகளை விற்கவேண்டியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவேராவின் குடும்பம் பியூனஸ் ஏர்ஸுக்குத் திரும்பிவந்தது.

ஆனால் எர்னஸ்டோவுக்கு வேறு கனவுகள் இருந்தன. அவர் ஒரு மருத்துவராக விரும்பினார். உண்மையில், ஒரு பொறியலாளராக மாறுவதற்கான படிப்பும் அனுபவமும்தான் அவரிடம் மிகுதியாக இருந்தன. இருந்தபோதும், ‘ஒரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளராக மாற விரும்பினேன். மனித குலத்துக்குத் தேவைப்படும் மிக முக்கியமான ஒன்றைக் கண்டறியவேண்டும் என்று கனவு கண்டேன்!’ உயிருக்குயிராக நேசித்த தனது பாட்டியைக் காப்பாற்ற நவீன மருத்துவம் தவறிவிட்டதால் அத்துறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க சாதனை புரியவேண்டும் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று எர்னஸ்டோவின் குடும்பத்தினர் கருதுகிறார்கள். தன்னை வாட்டிக்கொண்டிருந்த ஆஸ்துமாவுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அவர் இத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். எப்படியும் பொறியியல் துறையைக் காட்டிலும் மருத்துவமே அவருக்கு நெருக்கமானதாக இருந்தது.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே டாக்டர் சல்வடோர் பிசானி என்பவரின் மருத்துவமனையில் ஆஸ்துமா பிரிவில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார் எர்னஸ்டோ. ஆஸ்துமா நோயாளிகளை எர்னஸ்டோ கவனித்துக்கொண்ட முறையிலும் ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் அவர் செலுத்திய ஆர்வத்தையும் கண்ட பிசானி, எர்னஸ்டோவை சம்பளம் இல்லாத ஆய்வாளராக தன்னுடன் இணைத்துக்கொண்டார். பிசானி தான் கண்டறிந்த ஒருவித தடுப்பூசியைப் பயன்படுத்தி தன் நோயாளிகளின் ஆஸ்துமா தொல்லைகளைப் போக்குவதில் ஓரளவு வெற்றி பெற்றவர். எர்னஸ்டோவுக்கும் அவரே சிகிச்சை அளித்திருக்கிறார். பிசானியின் மருத்துவப் புலமையால் கவரப்பட்ட எர்னஸ்டோ ஒவ்வாமை துறையில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்தார்.

வீட்டில், எர்னஸ்டோ சீனியருக்கும் செலியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பிரிந்துசெல்லும் முடிவில் அவர்கள் இருந்தனர். மூத்த மகனாக, வீட்டின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பும் எர்னஸ்டோவுக்கு இருந்தது. ஒரே வீட்டில் இருந்தாலும் தன் தந்தையும் தாயும் தனித்தனியே பிரிந்து வாழ்வது எர்னஸ்டோவைப் பாதித்தது. உணவு மேஜையில் தன் தந்தையைச் சந்திக்கும்போது கோபத்துடன் எர்னஸ்டோ சண்டையிடுவது வழக்கம்.‘அப்போது எங்களைப் பார்ப்பவர்ளகள் எங்களை விரோதிகள் என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். ஓயாமல் நாங்கள் விவாதித்துக்கொண்டும் முரண்பட்டும் கிடந்தோம். ஆனால் அடியாழத்தில் எங்களிடையே நட்பு இருந்தது.’ என்று நினைவுகூர்ந்தார் எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்.

எர்னஸ்டோவை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன் அவன் மருத்துவனாக விரும்புகிறான்? எனில், ஏன் அவன் இலக்கியமும் வரலாறும் வாசிக்கிறான்? ஏன் அவ்வப்போது பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறான்? அவன் கனவு என்ன? அவன் தன்னை எப்படிப் பார்த்துக்கொள்கிறான்? என்னவாக மாறவிரும்புகிறான்? ‘உண்மையைச் சொல்லவேண்டுமானால், எர்னஸ்டோவை மனதளவில் நான் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.’

(தொடரும்)

தலையாட்டி பொம்மை

தஞ்சை பல விஷயங்களுக்குப் புகழ் பெற்றது. தலையாட்டி பொம்மை அவற்றில் ஒன்று. தஞ்சையில் பெரிய கோவிலுக்கு வெளியிலும் பேருந்து நிலையம் அருகே சில கடைகளிலும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும்.

பல வண்ணங்களில், வெவ்வேறு வடிவங்களில் கண்ணைக் கவர்கின்றன இந்த பொம்மைகள். பல முறை கீழே தள்ளினாலும், எழுந்து கொள்கிறது. கழுத்துக்கு மேலே, தலையை மட்டும் காற்றில் ஆட்டியவாறு நடனம் புரிகிறது.

பெரிய கோவிலுக்கு அருகே தலையாட்டி பொம்மை விற்கும் பெரியவருடன் பேசும்போது  அவர் தலையாட்டி பொம்மை குறித்த சில தகவல்களை கூறினார். அவர் கூறியது இதோ.

தலையாட்டி பொம்மை தஞ்சைக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் என்கிற ஊரில் தான் தயாரிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபடுகின்றன.

இந்த பொம்மை மூன்று வித சைஸ்களில் வருகிறது. சைஸை பொறுத்து விலை ரூ 30,  ரூ 60. அல்லது ரூ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது (வெளி நாட்டு சுற்றலா பயணிகளுக்கு ரேட்டே வேறு !)

பொம்மையின் கீழ் பாகம் சற்று வெயிட்டான களிமண்ணால் செய்யப்பட்டது. மேற்பாகம் காகிதக் கூழால் ஆனது என்பதால்  எடை மிகவும் குறைவு.  இதனால் தான் மேல்பாகம் வளைந்து கீழே விழுந்தாலும், கீழே உள்ள அதிக எடை காரணமாக உடன் மேலே வந்து விடுகிறது.

இப்படி காகிதம் மற்றும் களிமண்ணால் பொம்மையை செய்தபின் அழகான வண்ணம் பூசுகின்றனர். வெவ்வேறு நிறங்களில் தயாராகி தஞ்சை வந்து சேர்கிறது பொம்மைகள்.

எவ்வளவோ சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தஞ்சை கோயில் வெளியில், இந்த தலை ஆட்டி பொம்மைகளுடன் பல வருடங்களாக தன் வாழ்க்கையை கழிப்பதாக சொன்னார் பெரியவர்.

கொலு நேரத்தில் மட்டுமே இந்த பொம்மைகள் நிறைய விற்பனை ஆகும் என்றும் மற்ற நேரங்களில் இதை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் வருந்தினார்.

நிறைய பேர் பொம்மையை பார்த்து விட்டு விலை கேட்டு விட்டு சென்று விடுகின்றனர். பொம்மையை பார்ப்போரில், வாங்குவோர் குறைந்த சதவீதமே ! இருப்பினும் தஞ்சை தலை ஆட்டி பொம்மையை மிக விரும்பி, ரசித்து பார்த்து வாங்கி போவோரும் ஒரு சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

தலையாட்டி பொம்மை என்றாலே ஆணைத் தான் சொல்வதாக பொதுவாக நினைப்போம். மனைவி சொல்லை கேட்கும் கணவர்களைத் தலை ஆட்டி பொம்மை என சொல்வது வழக்கம். (எல்லா வீட்டிலும் இதே கதை தானே?)  நிஜத்தில் பெண் தலையாட்டி பொம்மையும் கூட இருக்கிறது. பெரியவரின் நினைவாக ஆண் மற்றும் பெண் தலையாட்டி பொம்மை வாங்கி கொண்டு விடை பெற்றோம்.

0

மோகன் குமார்

சேமித்தால் ஆனந்தம்

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 2

செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.

பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் வாழ்நிலை முன்னேற்றம் காண்பதில்லை. இதே போல்தான் மத்தியதரக் குடும்பங்களின் நிலையும். குறைவு என்றாலும் மாதாந்திர சம்பாத்தியம் இருக்கும். இருந்தும், முன்னேற்றம் இருக்காது.

மூட்டை தூக்கிப் பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள், சிறு சிறு வேலை செய்பவர்கள் என்று பலரிடமும் நான் பேசியிருக்கிறேன். உங்களுடைய ஒரு நாள் சம்பளம் என்ன? அவர்களும் தோராயமாகச் சொல்வார்கள். சுமார், நூறு ரூபாய்! மேலும், இந்த 100 ரூபாய் என்பது அவர்களுடைய லாபமாக இருக்கும்.

இவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்துக்கும் பிற தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாக இருப்பதை எனது ஆராய்ச்சிப் படிப்பின் போது தெரிந்து கொண்டேன். தவிரவும், தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வியின் அவசியம் பற்றியும், நல்ல வாழ்க்கை முறையை பற்றியும் அறியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.

நல்ல ஒரு வழிகாட்டுதலை மிகுந்த சிரமப்பட்டாவது அரசாங்கமும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு அளிக்கும் பட்சத்தில், உண்மையான பொருளாதாரச் சீர்திருத்தத்தை இவர்களிடையே ஏற்படுத்தி விட முடியும். எதுவுமே செய்யாமல் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி நாம் கவலைப்படவோ திட்டமிடவோ முடியாது.

0

‘என்னுடைய வருமானம் 7,000 ரூபாய், இதில் நான் என் குடும்பத்தை, அதன் தேவைகளை எப்படிச் சமாளிப்பேன்?’ என்று கேட்பவர்களுக்காக திட்டமிடுவது சாத்தியம்.

முதல் காரியமாக நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா? இனி உங்கள் மாதச் சம்பம் 6700 மட்டுமே. ஒரு சுயகட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் கிரகித்துக்கொள்ளவேண்டும். உங்கள் சம்பளம் 6700 மட்டுமே என்றால் என்ன செய்வீர்கள்?

செலவினங்களைக் குறைக்க வேண்டியிருக்கும். அத்தியாவசியம் எது? அனாவசியம் எது? தேவையானது எது? தேவையற்றது எது? என்று பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கும். எவ்வளவுதான் நம் மனதை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், தேவையற்றதை வாங்குவதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கும்.

விளக்கமாகப் பார்ப்போம். ஒரு குடும்பத்தின் தேவைகள் என்னென்ன? வீட்டு வாடகை, பால், அரிசி, மளிகைப் பொருட்கள், குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு. இவை குறைந்தபட்சத் தேவைகள், அத்தியாவசியமானவையும்கூட.

ஆனால் ஒரு திரைப்படத்துக்குச் செல்வதும், உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதும், பக்தி என்னும் போர்வையில் மிக அதிகமாகப் பூஜைக்குச் செலவிடுவதும் அவசியம் அற்றது.
பூஜை என்ற பெயரில் அதிக அளவில் செலவுகளை இழுத்துக் கொள்பவர்களை எனக்குத் தெரியும். வருடத்துக்குக் குறைந்தது மூன்று முறையாவது தீர்த்த யாத்திரை செல்வார்கள். மன நிம்மதிக்காக என்பார்கள். திரைப்படம் பார்ப்பவர்களும் இதே பதிலைத்தான் சொல்வார்கள்.

ஒரு மனிதனுடைய தூய மனபக்திதான் இறைவனுக்கும் அவனுக்கும் உள்ள தொலைவைக் குறைக்கிறது. எச்சில் பழத்தை ராமனுக்கு ஊட்டிய சபரியாகட்டும், ஒரு பிடி அவலை கிருஷ்ணனுக்கு வழங்கிய குசேலராகட்டும், சிவனின் கண்களிலிருந்து வழிந்த உதிரத்தை நிறுத்த தன்னையே குருடாக்கிக் கொண்ட சிவபக்தர் கண்ணப்பர் ஆகட்டும்… இவர்களில் யாருமே பணக்காரர்கள் இல்லை. செல்வத்தால் இறைவனைப் பூஜித்தவர்கள் இல்லை. நாம் மட்டும் ஏன் பணத்தைச் செலவழித்து தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்ளவேண்டும்? அதுவும், மன நிம்மதிக்காக?

திரைப்படம் பொழுதுபோக்குக்காக என்று சொல்வோம். ஆனால் நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், அதிக பணம் கொடுத்தாவது அந்தப் படத்தைப் பார்க்கத் துடிக்கிறோம். மாதக் கடைசி பற்றிய சிந்தனை அப்போது எழுவதில்லை. எந்த மகிழ்ச்சிக்காக அந்தப் பணத்தை இழந்தீர்களோ, அந்த மகிழ்ச்சி உங்களை விட்டு நெடுந்தூரம் போய் விடுகிறது.

குடும்பத்தின் செலவுகளைத் தவறாகத் திட்டமிடுவதால் மட்டுமே பெரும்பாலான பிரச்னைகள் தொடங்குகின்றன என்பது வெளிப்படை.

பல வீடுகளில் செய்யப்படும் பொதுவான தவறுகள் கீழே பட்டியலிடிப்பட்டுள்ளன. இவற்றில் சில உங்களுக்கும் பொருந்தலாம்.

 • அவ்வப்போது சிடி, கேசட் என்று வாங்கி குவிப்பது.
 • அடிக்கடி புடைவைக்காரன் வருகிறான் என்பதால் நிறைய துணிமணிகளைக் கடனில் வாங்குவது.
 • உணவுப் பொருள்களை வாங்குவதில் கூட திட்டமிடுதலின்றி ஊதாரித்தனமாகச் செலவு செய்வது.
 • மிக அதிகமாக கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
 • வீட்டுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ விளம்பரங்களில் வரும் பொருட்களால் ஈர்க்கப்பட்டு, கடனை வாங்கியாவது அப்பொருளை வாங்கத் துடிப்பது.
 • வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களைச் சிக்கனமாகச் செலவு செய்யாமல் இருப்பது.
 • வீட்டு வைபவங்களுக்கு அதிகமாகச் செலவிடுதல்.
 • ஆடை, ஆலங்காரம் என்று நிறைய செலவிடுவது.

மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வது ஒரு சிந்தனைப் பரிமாற்றத்துக்கு, ஒரு நட்புறவான சூழ்நிலைக்கு உதவும். பத்து ரூபாய் செலவு செய்தும் இதனை அடையமுடியும். இரண்டு ரூபாய் கடலை வாங்கித் தின்றால் கூட, இந்த நெருக்கத்தை குடும்பத்தில் ஏற்படுத்திவிட முடியும்.

அடிநாதம் இதுதான். எது பொழுதுபோக்கு? எது எனக்காக மகிழ்ச்சியை அளிக்கும் செயல்? எது உல்லாசம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் கண்டறியவேண்டும். நான் இப்போது செய்யும் செய்கை, பின்னால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? கொடுக்காதெனில் அதைச் செய்யாதிருப்பது உத்தமம். மேற்கொண்டு பொருளீட்டத் தெரியாதவர்கள் தன் கை இருப்பையும் இழப்பது எந்த வகையில் சிறந்தது?

பணத்தைச் செலவு செய்வதில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட, பணத்தைக் கையில் வைத்திருப்பதில் கிடைக்கும் ஆனந்தம் பெரியது.

கையில் பணம் இல்லையென்றால், விரக்தியும் எரிச்சலும் கோபமும்தான் ஏற்படும். உங்களை அழுத்தும் பொருளாதாரப் பிரச்னைகளைப் பறறிதான் நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள். கையில் பணம் இருந்தால், பிரச்னைகள் பின்னுக்குப் போய்விடும்.

முதல் வாரம் கரெண்ட் பில் கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தையின் பிறந்த நாள், நண்பர்கள் திருமணம் என்று ஏதாவது ஒன்று உள்ளே புகுந்து அந்தப் பணத்தை அபகரித்துச் சென்றுவிடும். சரி, கடைசி தேதிக்குள் கட்டிவிடலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டு அப்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுவார்கள்.

மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் தடைபடும் அளவுக்குப் போன பிறகு, பணம் தேடி அங்கும் இங்கும் செல்வார்கள். தொலைபேசிக் கட்டணம், பேப்பர் கட்டணம், மளிகைக் கடை பாக்கி, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பால் செலவு என்று அனைத்துக்கும் இந்த நிலைமைதான்.

இந்தச் சூழலில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஒன்றுதான். முக்கியமான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, எக்காரணம் கொண்டும் வேறொரு விஷயத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. சுயக் கட்டுப்பாட்டுடன் உங்களுக்கு நீங்களே இந்த விதியை விதித்துக்கொள்ளவேண்டும். செய்தால், அநாவசியமாக மற்றவர்களிடம் கடன் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது.

0

இந்த இடத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். முன்பெல்லாம், ஒரு கஷ்டத்தின்போது மற்றவர்கள் முன் பணத்துக்காகத் தலைகுனிந்து நிற்பது அவமானமான ஒரு செயலாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், கடனுக்கு மிக அழகிய முலாம் பூசப்பட்டுவிட்டது. கடன் வாங்குவது என்பதே மிகப்பெரிய கௌரவம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. ஓ! எனக்குக் கடன் கொடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா என்றுகூட சிலர் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

கடன் கேட்பது தவறில்லை என்ற எண்ணம் பரவலாகப் பரவியிருக்கிறது. சொன்ன நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்தல் தனி நபரின் நாணயத்தின் பிரதிபலிப்பாகக் கருதி இருந்த காலம் போய், ‘என்ன? கொடுப்பேன் என்று சொன்னேன்! அதற்கென்ன இப்போ? முடியவில்லை!’ என்று எந்தவித உறுத்துதலின்றி சொல்லப் பழகிக்கொண்டிருக்கிறோம்.

செல்வம் சேர்க்கவேண்டும் என்று உண்மையில் நீங்கள் மனதார விரும்பினால், ஒரு சபதம் செய்துகொள்ளுங்கள்.நான் கடன் கேட்கமாட்டேன்! மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பராக இருக்கும்பட்சத்தில் இப்படிச் சொல்லுங்கள். இனி நான் கடன் கொடுப்பதில்லை!

உடனே உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். தேவை இருப்பவர்களுக்கு உதவி செய்வது மனித நேயம் இல்லையா? உங்கள் மனித நேயம், உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்றால் அப்படிப்பட்ட மனித நேயம் எந்த வகையிலும் உதவாது என்பதுதான் உண்மை.

மனித நேயம் கொண்ட பலரும், பெரும் சங்கடங்களில் சிக்கி, ஈவு இரக்கமற்ற மனிதர்களாகப் பிற்காலத்தில் மாறி இருக்கிறார்கள். ‘நான் நல்ல மனிதனாகத்தான் இருந்தேன். ஆனால் உலகம் என்னை மாற்றிவிட்டது’ என்று இவர்கள் வருந்தியது உண்டு.

இன்றைய பொருளாதார உலகின் எழுதப்படாத சாசன விதி என்ன தெரியுமா? Unwritten Economic Constitutional Law என்றுகூட இதனை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் பணத்தைக் கையாள்வதில் உணர்வுபூர்வமாகச் சிந்திக்காதீர்கள். புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, புத்திசாலித்தனமாகச் செயல்படுத்துங்கள்.

நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் சரி, நன்கு பரிச்சயமானவராக இருந்தாலும் சரி. தெரியாத நபர் ஒருவரிடம் எப்படி கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவீர்களோ அப்படியே இங்கும் செய்யுங்கள். அவ்வாறு செய்யாமல், கடன் பெற்றவரின் நாணயத்தைப் பற்றியும் நம்பகத்தன்மை பற்றியும் பின்னால் புலம்புவதில் பயனில்லை.

கடன் கொடுப்பவதன்மூலம் நீங்கள் யாருக்கும் உதவமுடியாது. ஒருவரைத் தவறான பாதையில் வேண்டுமானால் கொண்டு செல்லலாம்.

(தொடரும்)

போதிதர்மர் யார்?

போதி தர்மர் / அத்தியாயம் 1

தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன.

எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. இல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து.

இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே. அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. தமிழர் பண்பாட்டை பாதித்தன. அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா?

வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.

பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தழைத்தது.

இது பலருக்கு வியப்பாக இருக்கலாம், களப்பிரரின் காலம் இருண்ட நூற்றாண்டல்லவா? எனும் கேள்வி எழலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி ஒதுக்கி வந்தனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகளும் வரலாற்று ஆய்வுகளும் இந்தக் கருத்தை உடைத்தெறிகின்றன. உண்மையில் களப்பிரர் வரவுக்குப் பின்னர்தான் மக்களை நெறிப்படுத்தும் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. களப்பிரர்களின் சிறப்பை இருட்டடிப்பு செய்யவே திட்டமிட்டு அவர்களின் ஆட்சியை இருண்டகாலம் என்று பொய்யுரைத்ததாகக் கூறுகின்றன.

இவ்வாறு பௌத்தமும் சமணமும் வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த தருணத்தில்தான் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மீண்டும் பெரும் எழுச்சி பெற்ற பல்லவர்கள் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த களப்பிரர் ஆட்சியை வீழ்த்தி அகற்றுகின்றனர்.

இப்படியாக ஆட்சியை மறுபடியும் கைப்பற்றிய பல்லவர்களும் பௌத்த சமண சமயங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த இரண்டாம் தலைமுறையில் வந்த பல்லவ மன்னன் (சிலர் கோசிவர்மன் என கூறுவதுண்டு) ஒருவனின் மூன்றாம் மகன்தான் போதிதாரா எனும் இயற்பெயர் கொண்ட போதிதர்மர் என்பது பொதுவான கருத்து.

ஆனால் போதிதர்மர் களப்பிரர் வம்சத்தை சார்ந்தவர் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது. வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டுதான் கிடக்கிறது. போதிதர்மர் களப்பிரராக இருந்ததாலேயே அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.

இதனாலேயே போதிதர்மர் பற்றிய செய்திகள் மிகச் சொற்பமாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளன. அதிலும் அவரது இந்திய வாழ்க்கை குறித்த குறிப்புகளைத் தொகுத்தால் ஒரு பக்கத்தைக்கூட தாண்டமுடியாது.  இப்பொழுது நமக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தகவல்கள், செய்திகள்கூட சீன மற்றும் ஜப்பானிய ஆசிரியர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளவைதான்.

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யுவாங் சுவான்ஸியின் லியோயங் என்பவரின் ‘பௌத்த மட பதிவுகள்’ என்னும் நூலும், ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் என்பவரின் ‘இரண்டு நுழைவாயில்கள் மற்றும் நான்கு சட்டங்கள்’ எனும் நூலும், ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோக்ஷுவான் என்பவரின் ‘பிரபல பௌத்த துறவிகளின் சரிதம்’ எனும் நூலும் தான் போதிதர்மரின் வரலாற்றை பதிந்த மூன்று முக்கிய சீன நூல்கள் எனலாம்.

இவ்வாறு பதியப்பட்டுள்ள சீன, ஜப்பானிய வரலாற்றாசிரியர்களின் பதிவிலும் பெருத்த முரண்பாடு காணப்படுகிறது. உதாரணத்துக்கு போதிதர்மர் தேநீர் பருகினார் என்கிற ஒரு சாதாரண நிகழ்வை பதிவு செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.

‘போதிதர்மர் தேநீர் பருகுகிறார்’

‘அது இனிப்பானது’

‘இல்லை கசப்பானது’

‘அதன் நிறம் பச்சை’

‘அதன் நிறம் வெள்ளை’

‘அதன் நிறம் கருப்பு’

‘அதன் நிறம் சிவப்பு’

‘அது எங்கள் வீட்டு தேநீர். நான்தான் பரிசளித்தேன்’

‘போதிதர்மர் பருகும் தேநீர் அவருக்கு தேவலோகத்தில் இருந்து வருகிறது’

‘போதிதர்மர் போன பிறவியில் தேநீர் பயிரிடுபவராக இருந்தார். அதனால் தான் அவர் இந்த பிறவியில் தேநீராய் அருந்துகிறார்’

‘போதிதர்மர் கசப்பான தேநீரை அருந்துவதன் பின்னணியில் இருக்கும் தத்துவம், வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக்கொண்டால் தான் நம் வாழ்வு ஆரோக்கியமாகச் செல்லும்.’

இப்படித்தான் போதிதர்மர் பற்றிய நிகழ்வுகளை முரண்பாட்டு மூட்டையாகப் பதிந்துவைத்துள்ளனர் சீனர்கள். ஜப்பானியர்களோ இதற்கு ஒரு படி மேலே சென்றுவிடுகின்றனர்.

‘போதிதர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல வல்லமையும் பெறுவாய். ஏனென்றால் அவர் அதனை ஒன்பதாண்டுகள் தவமிருந்து பெற்றார்’ என்று ஒரு சாதாரண நிகழ்வை புராணம் ஆக்கிவிடுகின்றனர்.

எது உண்மை; எது மிகை என்பது புரியாத புதிர்தான்.

‘தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்தபடி வரலாறு புனையப்பட்ட மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம். அதனால், போதிதர்மரின் வாழ்க்கையை மீட்டு எழுத முயற்சிக்கும் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை.’ என்று புலம்புகிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் John McRae.

அவரது கருத்துப்படி போதிதர்மரின் வரலாற்றை எழுதுவதென்பது இன்றைய, நேற்றைய ஆசிரியர்களின் தலைவலி அல்ல. பல நூற்றாண்டு காலமாக தொன்றுதொட்டு நிலவிவரும் சங்கடம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மரின் சீடரான தான்லின் காலத்திலேயே நிலவிய தலைவலி இது.

இப்படி இருக்கையில், போதிதர்மர் இன்ன இடத்தில்தான் பிறந்தார், இன்னாருக்கு மகனாக, இன்ன குலத்தில், இன்ன தேதியில் என்று அவர் பற்றிய செய்திகளை திட்டவட்டமாக வரையரை செய்வது இயலாத காரியம்.

(தொடரும்)

கருக்கலைப்பு – சரியா தவறா?

கமலிக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகியும் குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் சென்றனர். சில மாத சிகிச்சைக்குப் பிறகு கரு உண்டானது. எல்லோருக்கும் சந்தோஷம். எதை வாயில் வைத்தாலும் குமட்டிக்கொண்டு வந்தது. தண்ணீரைக் கூட குடிக்க முடியவில்லை. சோர்ந்து போனாள். அம்மா வீட்டில் ஓய்வெடுக்கட்டும் என்று ஊரில் விட்டு வந்தார் கணவர். பத்து நாள்களில் வாந்தி நின்றது. சாப்பிட முடிந்தது. வயிற்றில் அசௌகரியம் ஏதும் தெரியவில்லை. தூங்கி எழும்போது தலைச் சுற்றல் இல்லை… விஷயம் தெரியாத கமலி மகிழ்ந்தாள். அம்மாவிடம் சொன்னாள். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அம்மா. கரு இறந்துவிட்டது. உடனே சுத்தம் செய்யவேண்டும் என்றனர். கணவருக்குத் தகவல் போனது. மறுநாள் காலை கரு வெளியேற்றப்பட்டது. தாய்மையை உணரவைத்த அந்த முதல் கரு வெளியேறியதில் உடைந்துபோனாள் கமலி. இந்த நேரத்தில் ஆறுதல் சொல்ல வரவேண்டிய அவளுடைய கணவனும் வரவில்லை. ஓராண்டு கரு உருவாகாததற்குச் சொன்ன காரணத்தையே கரு இறந்துபோனதற்கும் சொன்னார் கணவர். என் குழந்தையைக் கொன்றவளுக்கு இனி இந்த வீட்டிலும் என் மனதிலும் இடமில்லை என்றார்.

*

ஒருநாள் தோழியிடம் இருந்து போன். தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தைக் கலைக்கப் போவதாகவும், கணவர் மருத்துவர்களுக்குப் பயந்துகொண்டு வர மாட்டேன் என்று சொல்வதாகவும் கூறினாள். அவருக்கு விருப்பமில்லையா என்றேன். இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். நேற்றே மருந்து வைத்துவிட்டார்கள்.. இனி ஒன்றும் செய்ய முடியாது. துணைக்கு வா என்றாள். பாண்டிபஜாரில் இருந்த அந்தக் கருக்கலைப்பு மருத்துவமனைக்குச் சென்றோம். சுமார் 30 பேர் அன்று மட்டும் கருக்கலைப்புக்காகக் காத்திருந்தனர். ஆண்கள் வெகு குறைவாக இருந்தார்கள். மகிழ்ச்சியுமில்லை; துக்கமுமில்லை. அமைதியாகப் பொழுது கரைந்தது. வரிசையாகக் கூப்பிட்டார்கள். பத்து நிமிடங்களில் முடிந்தது என்று உதவியாளர் ஒருவர் குரல் கொடுத்தார். தோழியின் பெயரைச் சொன்னவுடன் அருகில் சென்றேன். அரை மணி நேரம் கழித்து, ஜுஸ் கொடுத்து அழைத்துச் செல்லுங்கள் என்றார். “என்னம்மா, கலைக்குறதுன்னா முன்னாடியே செய்திருக்கலாமில்ல.. கரு நல்லா வளர்ந்திருச்சு.. எப்படித்தான் ரிஸ்க் எடுக்கிறாங்களோ’ என்றார்.

கலைத்த பிறகு தோழியின் மனநிலை மாறியது. கலைக்கச் சொன்ன கணவனிடம் ஒரு வாரம் பேசவில்லை. ஓர் ஆண்டு கழித்து போனில் சொன்னாள்: “என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்துவிட்டது. நான் உண்டாகியிருக்கேன்!’

*

சந்தோஷ் என்ற பெயரை வைக்கும்போது அமுதாவுக்கும் குமாருக்கும் தெரிந்திருக்காது, தங்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தைப் பார்க்கப் போவதில்லை என்று! சந்தோஷுக்கு வயது 17. அபாரமான உயரம். சிவந்த நிறம். அவனால் அசைய முடியாது. உட்கார முடியாது. நடக்க முடியாது. பேச முடியாது. எதையும் புரிந்துகொள்ளவும் முடியாது. உயிர் ஒன்று மட்டுமே உடலில் இருக்கிறது. உணவு, தண்ணீர் கொடுத்தால் உள்ளே போகும். கழிவுகள் வெளியேறும். குழந்தையாக இருந்தபோது அவனைப் பராமரிப்பது எளிதாக இருந்தது. வளர, வளர.. யாராவது ஒருவர் உதவியின்றி அவனைக் குளிப்பாட்ட இயலாது. கணவர் அலுவலகம் சென்றுவிட்டால், அருகில் யாரையாவது உதவிக்குக் கூப்பிடவேண்டும். அவர்கள் பரிதாபத்துடன் உதவுவார்கள். குளித்து, உடை மாற்றி, பவுடர் போட்டு மீண்டும் படுக்கை.. கடந்த பத்து ஆண்டுகளாக வெளியில் எங்கும் அவர்கள் செல்வதில்லை. உடல்நிலை சரியில்லை என்றால் கூட மருத்துவரிடம் அழைத்துப் போவது அவ்வளவு கடினம்.

அமுதாவும் குமாரும் அலுக்காமல் சளைக்காமல் சந்தோஷுக்குப் பணிவிடை செய்துவந்தனர். குடும்பத்தினர் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியும் கூட இருவரும் மறுத்துவிட்டனர். அந்தக் குழந்தையும் இப்படிப் பிறந்தால்?

ஒருமுறை கோயிலுக்குச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. அமுதாவுக்கும் குமாருக்கும் கை, கால்களில் பலத்த அடி. ஆனால் சந்தோஷ்…

‘குழந்தைக்கு ஏதாவது ஆயிருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிட்டுப் போய்ப் பார்த்தேன். சின்ன சிராய்ப்புகளோட அவன் அப்படியே இருந்தான்… என்னால தாங்க முடியலைங்க’ என்று அமுதா கதறினார்.

கருவிலேயே குழந்தையைப் பற்றித் தெரிந்திருந்தால் கலைத்திருக்கலாம் என்கிறார்கள் அமுதாவும் குமாரும்.

*

பக்கத்துவீட்டில் ஒரு குடும்பம். அவர்களுக்கு ஆண், பெண் இரு குழந்தைகள். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வராவிட்டால் எள் உருண்டை, பப்பாளி சாப்பிடுவார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் மருத்துவரிடம் செல்வார். ஓர் ஊசி.

‘ஏன் இப்படிச் செய்றீங்க?’
‘குழந்தையையா கொல்றோம்? அது வெறும் திசுதாங்க.’
‘குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலாமே?’
‘அதெல்லாம் பண்ணினா என் உடல் கெட்டுப்போயிடும்னு கணவர் பயப்படறார்.’

*
வயல் வேலைக்குச் செல்பவர் பொன்னம்மாள். அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் ஆண் குழந்தைகள் இரண்டும் இருந்தன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கிராமத்துக்குச் சென்று கருவைக் கலைத்துவிட்டு வருவார். “எங்க சம்பாத்தியத்தில் அஞ்சு பேர் சாப்பிடறதே கஷ்டம். இதில் இன்னொன்னை எங்களால தாங்க முடியாது. நமக்கு உடம்பு நல்லா இருந்தால்தான் உழைக்க முடியும். கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் வேற நோய் வரும்னு சொல்றாங்க.. அதான். அந்த மனுஷனைக் கிட்ட வராதேன்னு சொன்னால் பகல்ல கேட்டுக்கறார்.. தண்ணி போட்டதும் மாறிடறார்… அப்புறம் உண்டானதும் கலைச்சிட்டு வான்னு விரட்டுறார்… ஏதோ குழந்தை உண்டானதில் அவருக்குப் பங்கில்லாதது போல அவ்வளவு வெறுப்பா பேசுவார். இந்தாளு சும்மா இருந்தா ஏன் உண்டாகப் போகுது?’

*

மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இயற்கையாக கருச்சிதைவு ஏற்பட்டு, அழுதுகொண்டிருந்தபோது அவள் அம்மா சொன்னார், “நீயும் நானும் பெண்ணாகப் பிறந்து எவ்வளவு சீரழிஞ்சோம்.. கடவுளே இந்தக் கேடு கெட்ட உலகத்தில் இருந்து குழந்தையைக் காப்பாத்திட்டார். அது பிறந்து அப்பன் கிட்ட அடி வாங்கி, புருஷன் கிட்ட அடிவாங்கி, மகன்கிட்ட அடிவாங்கிப் போய்ச் சேருவதற்கு, பிறக்காமல் போனது நல்ல விஷயம்தான்’ என்றார்.

இன்னும் என்னென்ன காரணங்களுக்காக கருக்கலைப்பு நடைபெறுகிறது?

 • குடும்பத்தின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கலைக்கப்படுகிறது.
 • முதல் குழந்தை பெண்ணாக இருந்து, அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் கரு கலைக்கப்படுகிறது.
 • வறுமையில் வாடும் குடும்பங்களில், பெண் குழந்தைகள் என்றால் திருமணச் செலவுகள் அதிகம்… ஆண் குழந்தை என்றால் மிகக்குறைந்த வயதிலேயே கூலி வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள்… வயதான காலத்தில் தங்களைக் காப்பாற்றுவார்கள்.. இப்படி நினைப்பதால் பெண் கருக்கள் அழிக்கப்படுகின்றன.
 • படிப்பு, பொருளாதார வசதி, ஜோதிடம் போன்ற காரணங்களாலும் கருக்கள் அழிக்கப்படுகின்றன.

நம் நாட்டில் படித்தவர்களாக இருந்தாலும் சரி, படிக்காதவர்களாக இருந்தாலும் சரி… எல்லா தவறுகளையும் எல்லாருமே செய்கிறார்கள். இதில் எந்தப் பேதமும் இல்லை.

இந்தியச் சூழ்நிலையில் ஒரு பெண்ணின் நிலை எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். சமீபத்தில்தான் பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா என்று கேட்கும் எண்ணமே வந்திருக்கிறது. திருமணம் முடிந்தவுடன் ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடும்போது இருவருக்குமே அது புது அனுபவம்… அந்த நேரத்தில் குழந்தை, எதிர்காலம் என்றெல்லாம் பெரிதாக யோசிப்பதில்லை. நிறுத்தி, நிதானத்துக்கு வரும்போது குழந்தை உருவாகிவிடுகிறது. அப்போது வேறு பல விஷயங்கள் முதன்மையாகப்பட்டால் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் குழந்தைக்காக உறவில் ஈடுபடுவதில்லை. மாறாக, உறவில் ஈடுபடும்போது குழந்தை உண்டாகிவிடுகிறது.

பலருக்கு கருத்தடை சாதனங்கள் மீது இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை. அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள மனத்தடை இருக்கிறது. அல்லது கருத்தடை சாதனங்கள் உண்மையிலேயே அவர்களுக்கு வசதியாக இல்லாமலும் இருக்கலாம். கருத்தடை சாதனங்களிலும் காப்பர் டியையே பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துகிறார்கள். அல்லது மாத்திரைகளை விழுங்குகிறார்கள். (கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதிலும் குடும்பக் கட்டுப்பாடு செய்வதிலும் கூட பெண்களைத்தான் அதிகம் ஈடுபடுத்துகிறார்கள்). மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவிளைவு ஏற்படும் என்ற பயத்தால் அதைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. ஆண்களுக்குக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தும் அளவுக்குப் பொறுமையும் பொறுப்பும் இருப்பதில்லை.

எந்தச் சாதனங்களும் பயன்படுத்தாமல், உறவில் ஈடுபட அழைக்கும்போது பெண் அதை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்தரம் எத்தனை பேருக்கு இங்கே இருக்கிறது? உறவு என்பது ஆண்கள் விருப்பம் சார்ந்ததாகவே இன்று வரை இருக்கிறது. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவும் நிச்சயம் பெண்ணிடம் இல்லை. ஒரு பெண் மனத்தளவிலும் உடல் அளவிலும் பிள்ளை பெறத் தகுதியானவளா என்று பார்ப்பதில்லை. ஒரு குழந்தை உருவாகும்போது ஆண்-பெண் இருவருக்கும் சம பங்கிருக்கிறது. ஆனால் கரு உருவாகி, வளர்ந்து, குழந்தை பிறந்து, வளர்க்கும்போது ஆணை விடப் பெண்களின் பங்கே அதிகம் இருக்கிறது. ஆனால் குழந்தை தொடர்பான எந்த முடிவும் அவளைக் கேட்டு எடுக்கப்படுவதில்லை.

கரு உருவான பிறகு… அதைப் பெற்றுக்கொள்ளலாமா, கலைக்கலாமா என்ற முடிவும் பெண்ணிடம் இல்லை. குடும்பம் தீர்மானிக்கிறது. கணவன் தீர்மானிக்கிறான். பெண் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அதைக் கலைக்கவேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறாள். கணவர், குடும்பத்தினர் விருப்பமின்றி ஒரு பெண் குழந்தை பெற்று, வளர்ப்பது என்பது நம் குடும்பங்களில் அவ்வளவு சுலபமில்லை.

கணவனும் குடும்பத்தினரும் கருக்கலைப்பு செய்யச் சொல்வது ஏன்?

கருவை நாம் குழந்தையாக நினைப்பதில்லை. அந்தக் கருவுக்கும் வலி இருக்கும் என்பதை அறிவதில்லை. அதனால் கருக்கலைப்பை ஒரு குற்றமாகக் கருதுவதில்லை. கருக்கலைப்புச் செய்வதால் ஒரு பெண்ணின் உடல்நிலை மோசமாகும் என்பதைக் கவனத்தில் கொள்வதில்லை. முறையாகக் கருக்கலைப்பு மையத்துக்கு வந்து செய்பவர்களை விட அவரவர் தெரிந்த வழிகளில், தெரிந்த ஆள்களிடம் செய்வதுதான் அதிகமாக இருக்கிறது.

இப்படிச் செய்வதால் அவர்களுக்கு விஷயம் வெளியில் தெரியாமல் காக்கப்படுகிறது. செலவும் குறைவாக இருக்கிறது. இதுபோன்ற வழிகளில் செய்பவர்களுக்குச் சரியாகச் சுத்தம் செய்யப்படாமல் தொற்று ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை வரவழைத்துவிடுகிறது.

இந்தியாவில் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு 2010-ம் ஆண்டில் மட்டும் 25,29,979. சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு சுமார் 80 லட்சம்.

உலகம் முழுவதிலும் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளில் 97 சதவிகிதம் வளரும் நாடுகளில் நடைபெறுகின்றன.

பிரசவத்தின்போது நடைபெறும் உயிர் இழப்புகளைவிட, பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் கருக்கலைப்புகளில் உயிர் இழப்புகள் அதிகம்.

இன்று குடும்பக் கட்டுப்பாடு பற்றி ஓரளவு விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் உடல் உறவு, கருத்தடை சாதனங்கள், பெண் நலம், உயிர் பற்றிய மதிப்பீடு போன்றவற்றில் இன்னும் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. திருமணத்துக்கு முன்பே ஆணுக்கும் பெண்ணுக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவேண்டும்.

கருவைக் கலைப்பதும் பெண்ணின் உடல் நிலை மோசமடைவதும் கண்டிப்பாகத் தடுக்கப்படவேண்டும். அதேநேரத்தில் குறைபாடுள்ள கரு, உடல் நலமில்லாத தாய், மனநிலை சரியில்லாத தாய், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்… இதுபோன்ற காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்படுவதைத் தவறு என்று சொல்லக்கூடாது. அதைப் பெற்றுக்கொள்வதோ, கலைப்பதோ அவர்கள் உரிமை.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேசியவர்கள் பலரும் கருக்கலைப்பே கூடாது என்றார்கள். குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் வேண்டும் என்றார்கள். ஈரமில்லாதவர்கள்… கொலைகாரர்கள் என்றெல்லாம் பேசினார்கள். எதையும் பேசுவது எளிது. சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வலி புரியும்.

அதேநேரத்தில் எதிர்பாராத கர்ப்பம், சூழ்நிலை சரியில்லாமை, ஜோதிடம், பெண் குழந்தை போன்ற காரணங்களுக்காகச் செய்யப்படும் கருக்கலைப்புகள்?

கருக்கலைப்பே கூடாது என்றும், ‘அது ஓர் உயிர்.. பாவம்…’ என்றும் மதம் போதித்த கருத்துகளைக் கொண்டு கூச்சல் போடுபவர்களுக்கு… கருவாக இருக்கும் வரைக்கும்தான் மதிப்பா? உயிரா? பிறந்த குழந்தைகளுக்கு நாம் என்ன செய்கிறோம்? பிறந்த பிறகு ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் பலியாகின்றனர்? எவ்வளவு லட்சம் குழந்தைகள் வறுமைக்கு இரையாகின்றனர்? எவ்வளவு குழந்தைகள் சுகாதாரமின்மையால் நோய்க்குப் பலியாகின்றனர்? எவ்வளவு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர்?

கருக்கலைப்பு தடுப்பை கடுமையான சட்டமாக்குவதன் மூலம் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் மேலும் பெருகுவதற்கே வாய்ப்பு அதிகம். இது மேலும் தாய்களின் உடல்நலத்தைப் பாதிக்கும்; மரணத்தை அதிகரிக்கும். முதலில் மக்களிடம் கருத்தடை சாதனங்கள், குழந்தை பிறப்பு திட்டமிடல்கள், உயிர் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். வறுமைக்குப் பலியாகாமல் அனைவரையும் வாழத் தகுதியுள்ளவர்களாக மாற்றுவோம். குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்ணுக்கு இருக்கும் உரிமையை வழங்குவோம்.

பெண்களிடம் விழிப்புணர்வும் கருக்கலைப்பு உரிமையும் வரும்போது, கருக்கலைப்புகள் நடைபெறாது. கருக்கலைப்புக்குத் தடை இல்லாத வளர்ந்த நாடுகளில் 5% கருக்கலைப்புகள்தான் நடைபெறுகின்றன என்பதாலேயே இந்தக் கருத்தை ஆணித்தரமாகச் சொல்ல முடிகிறது.

0

மின்மினி

வரலாற்று உண்மையும் உண்மை வரலாறும்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 1

இந்தியாவில் கல்வி என்பது பிரிட்டிஷாரால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக கிறிஸ்தவ மிஷனரிகளால்.

இதுதான் இந்தியக் கல்வி பற்றிப் பெரும்பாலானோருடைய மனதில் கல்வெட்டுபோல் அழுத்தமாகப் பதிந்திருக்கும் வாசகங்கள். ஒரு பொய்யானது தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தால் காலப்போக்கில் அது உண்மையாகிவிடும் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் இது.

கொஞ்சம் தாராள மனம் கொண்டவர்கள் இந்தியாவில் கல்வி பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆனால், அது பிராமண, சத்ரிய, வைசிய சாதிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. அதிலும் பிராமணர்கள் மட்டுமே கல்வியின் முழுப் பயனையும் அனுபவித்து வந்திருந்தார்கள் என்று சொல்வார்கள். ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்ட 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலைமை அதுதான் என்றாலும் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்போது மட்டும் அதை கண்டனத்துக்குரியதாகச் சொல்வார்கள். (ஆனால், உண்மையில், இந்தியாவில் அதற்கு முன்பு கல்வி, அனைவருக்கும் தரப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது என்பது வேறு விஷயம்). அந்த 17-18-ம் நூற்றாண்டுவரை இந்தியா உலகப் பொருளாதார வல்லரசாக இருந்துவந்திருக்கிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இருந்திருக்கிறது. தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. இலக்கியம், ஓவியம், இசை, கட்டடக்கலை போன்றவற்றில் உச்சத்தை எட்டியிருக்கிறது.

ஆனால், அந்த இந்தியாவானது கல்வி அறிவு இல்லாத தேசம். சாதி வெறிபிடித்த தேசம். பெண்ணடிமை நிறைந்த பகுதி. கணவன் இறந்ததும் மனைவியும் உடன் கட்டை ஏறிவிடுவார்கள். இந்தியா காட்டுமிராண்டிகள் வாழும் தேசம். யானை, பாம்பு, குரங்குகள் நிறைந்த நாடு. கிட்டத்தட்ட இந்தியாவை ஓர் விசித்திர பொருட்காட்சி சாலையாக, சீர்திருத்தப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கும் போக்குதான் மேற்கத்தியர்களுக்கு இருந்தது. அப்படியான ஓர் இந்தியாவைத்தான் அவர்கள் விரும்பினார்கள். எனவே, அதையே அவர்கள் கண்டடையவும் செய்தார்கள். ஆனால், உண்மையான இந்தியா என்பது முற்றிலும் வேறானதாக இருந்தது.

உடன்கட்டை ஏறுதல் தவறான நடைமுறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பிரிட்டிஷார் சொன்னதுபோல் அது அவ்வளவு அதிகமாகவோ நாடு முழுவதுமோ இருந்ததில்லை. அது இந்திய நாடு முழுவதும் இருப்பதாகவும், இந்து மதம் அதை நிர்பந்திப்பதாகவும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள் என்றும் பிரிட்டிஷ் அரசு கூறியது. ‘சில விதிவிலக்குகளைத் தவிர, அனைத்து ஹிந்துக்களும் (எந்தப் படிநிலையில் இருப்பவராக இருந்தாலும்) உடன்கட்டை ஏறுவதைப் புனிதமானது என்றே எண்ணுகிறார்கள்’ என்பதுதான் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்க அரசாணை பிறப்பித்த வில்லியம் பென்டின்க் பிரபுவின் கண்டுபிடிப்பாக இருந்தது. அதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் தரவில்லை. அவருடைய இந்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், உடன்கட்டை ஏறுவதை உயர்வாக எண்ணும் மனோபாவம் இருந்தது என்பதுதான் தெரியவருகிறதே தவிர அதையேதான் அனைவரும் பின்பற்றினார்கள் என்று அல்ல. நாம் உயர்வாக நினைக்கும் அனைத்தையும் செய்வதில்லையே! அப்போதைய ஆவணங்களிலும் உடன்கட்டை ஏறுதல் மிகக் குறைவாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் இருக்கின்றன.

உடன்கட்டை ஏறும் வழக்கம் சில வகுப்பினரிடையே, அதுவும் சில குடும்பங்களில் மட்டுமே இருந்திருக்கிறது. வட மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, இந்தியாவின் வேறு இடங்களில் இந்த வழக்கம் வெகு சொற்பமே. 1815-1828 இடையேயான பதின்மூன்று ஆண்டுகளில், பதிவு செய்யப்பட்ட உடன்கட்டை ஏறல்களில் 63 சதவிகிதம், கல்கத்தாவைச் சுற்றி நடந்திருக்கிறது. இதில் விநோதம் என்னவென்றால் அந்தப் பகுதி அப்போது ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தது. 63% என்றதும் ஏதோ பெரிய அளவு என்றுதான் தோன்றும். ஆனால், 1824ல் பிரிட்டிஷார்களாலேயே தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வங்காள மாநிலத்தில் விதவைகளான 250,000 பெண்களில், சிதையில் ஏறியவர்களின் எண்ணிக்கை 600 தான். அதாவது 0.2 சதம் தான்.

வாரணாசி பற்றிய புள்ளிவிவரங்கள் நமக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தரும். 1820க்கும் 1828க்கும் இடையேயுள்ள ஒன்பது ஆண்டுகளில், 125 பேர்தான் உடன்கட்டை ஏறினார்கள். ‘உடன்கட்டை ஏறுவது மதரீதியான கட்டாய வழக்கமாக இருந்திருக்கவில்லை; இந்தியா முழுதிலும் அது நடைமுறையில் இருந்திருக்கவும் இல்லை’ என்று வாரணாசியின் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார். இவைதான் பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மைகள். ஆனால், ஹிந்துக்களின் வாழ்க்கை நெறியைப் பழிக்கவும் தங்களுடைய ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதற்கும் ஆங்கிலேயர்கள் இந்த வழக்கத்தைப் பெரிதுபடுத்திவிட்டார்கள். உடன்கட்டை ஒழிப்பு சட்டம் அமலுக்கு வந்ததும், மத போதகர் வில்லியம் கேரி, ‘…கடந்த இருபது நூற்றாண்டுகளில் முதன்முறையாக, இரத்தம் கலக்காமல் கங்கை கடலைச் சென்றடைந்தது’ என்று எழுதியிருக்கிறார்.

இந்த சொற்ப எண்ணிக்கை என்பது மட்டுமல்லாமல் உடன்கட்டை ஏறுதல் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட விஷயம். அதை ஆணாதிக்கம் என்று மட்டுமே பார்ப்பது மிகவும் பிழையான பார்வை.

எதிரி மன்னனின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட போரில் கொல்லப்பட்டுவிட்ட கணவனுடன் சேர்ந்து தீயில் இறங்குவது மேல் என்று நினைத்த ராணிகள் உண்டு. சுமங்கலிகளுக்குக் கிடைக்காத பாக்கியமாகப் பெண்கள் பெருமிதமாக நினைத்ததுண்டு என்று கி.ராஜநாராயணன் தன் கோபல்ல கிராமத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அனுமரணம் என்ற பெயரில் பழங்காலத்தில் ஒருவர் இறந்ததும் அவருடைய மனைவி மட்டுமல்லாமல், அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த உறவினர்கள், நண்பர்கள், பணியாட்கள் என பலரும் உடன்கட்டை ஏறியிருக்கிறர்கள். இன்றும்கூட கொள்கைக்காகவும் தலைவருக்காகவும் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. அரசியல்வாதிகளின் சுயரூபங்களும் பச்சோந்தித்தனங்களும் வெகுவாக அம்பலமாகிவிட்ட நிலையிலும் விசுவாசமான அப்பாவித் தொண்டர்கள் தீக்குளிப்பது நடக்கத்தான் செய்கிறது. இதற்குப் பின்னால் உள்ள உளவியல் நிதானமாக ஆராய வேண்டிய ஒன்று. ஆனால், கலகம் செய்பவர்களையும் அடங்க மறுப்பவர்களையும் விட்ச் ஹண்டிங் என்ற பெயரில் தீயில் தள்ளி எரித்த பின்னணியில் இருந்து வந்த பிரிட்டிஷாருக்கு உடன்கட்டை ஏறுதல் ஒரு ஆணாதிக்கச் செயலாக மட்டுமே பட்டதில் வியப்பில்லை. ‘காட்டுமிராண்டிகளை ரட்சிக்க’ அவர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக அதை பூதாகரப்படுத்தினார்கள். அதுவே இன்று உண்மையாக நம்பப்பட்டுவருகிறது.

இதேபோலத்தான் கொள்ளைக்காரர்களைப் பற்றி (Thug) காலனி ஆட்சியால் பெரிதுபடுத்தியும் திரித்தும் கூறப்பட்டது. இந்தக் கொள்ளைக்காரர்கள் சாதாரணமான திருடர்கள்தான். ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்டதில் பத்து சதவிகிதம்கூட அவர்கள் கொடூரமானவர்கள் அல்ல. வட இந்தியாவில் ஒரு குறுகிய நிலப்பரப்பில்தான் அவர்கள் இருந்தனர் (சம்பல் கொள்ளைக்காரர்களைப் போல). அவர்கள் பெரிய சமூக விரோதிகள் எனப் பெரிதுபடுத்திக் காட்டப்பட்டதால், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, முழு இந்திய மக்களுமே அந்தக் கொடிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று எண்ணத் தோன்றும். அவர்களது ரகசியமான, கொலைகார நடவடிக்கைகளைப் பற்றி நாடகங்களும் நாவல்களும் உருவாக்கப்பட்டன. ‘தக்’ என்னும் வார்த்தையையும் ஆங்கில அகராதியில் சேர்த்துக்கொண்டனர்.

விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றபோது, இந்தியத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பிறந்ததும் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவார்களாமே என்று அங்கிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இந்தியா குறித்த பிழையான சித்திரம் எப்படி இத்தனை காலம் நிலைபெற்று வந்திருக்கிறது என்பதற்கான விடை தெரியவேண்டுமானால், இந்தியாவின் வரலாறாக நாம் படித்துவருவது யார் எழுதிய வரலாறை என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டாலே போதும். கடந்த காலத்தைத் தெரிந்துகொள்வதன் நோக்கம் நிகழ்காலத்தை சீரமைத்து, வரும் காலத்தை வளமாக்குவதுதான். நேற்றைய இந்தியா மிகவும் சிறப்பாக இருந்தது என்பது இன்றைய இந்தியாவை மேம்படுத்த உதவுமென்றால் அந்தவகை புரிதலையே ஏற்றுக்கொள்ளவேண்டும். நேற்றைய இந்தியா மிகவும் தவறானது என்ற பார்வை ஒருவேளை நாளைய இந்தியாவை மேம்படுத்த உதவும் என்றால் அதையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இரண்டின் நோக்கமும் நாளைய இந்தியாவை வளப்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.

ஆக்குதல் அதுவே நோக்கம். அழித்தல் அல்ல; சீரமைத்தல் அதுவே இலக்கு. சீர் குலைத்தல் அல்ல. இதுதான் வரலாறு எழுதப்படுவதன் நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியாவின் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.

0

வரலாறு என்பதை, நடந்ததை நடந்த விதத்திலேயே பதிவு செய்யும் ஆவணம் என்று ஒரு வசதிக்காக வரையறுக்கலாம். அதன் அடிப்படையில் பார்க்கும்போது திருநெல்வேலியின் வரலாறு என்ற நூலை எழுதிய பிஷப் கால்ட்வெல் சொன்னதுபோல் இந்தியர்களுக்கு சரித்திர பிரக்ஞை மிகவும் குறைவுதான். பழங்கால மன்னர்களைப் பற்றி புலவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்களை வரலாற்று ஆதாரமாகக் கொண்டால் தொலைந்தோம்! கிட்டத்தட்ட அந்தப் பெயரில் ஒருவர் வாழ்ந்தார் என்பதை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளமுடியும். மற்றவை கலை அழகு, கற்பனை.

உலகில் பழங்காலத்தில் எழுதப்பட்ட எல்லா சமூக வரலாறுகளிலும் இப்படியான கற்பனை கலந்துதான் இருந்திருக்கிறது. எனவே, நமது வரலாற்று அணுகுமுறையைப் பற்றி விமரரிசிக்கும்போது அதே காலகட்டத்தில் உலகில் பிற பகுதிகளில் நிலைமை எப்படி இருந்தது என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் நம்மைப் பற்றி நாம் எழுதியதில் சுய பெருமிதம் கலந்து இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, நமது வரலாறு அந்தவகையில் அந்நியர்களின் வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

ஆனால், அந்நியர்கள் எழுதும் விஞ்ஞானபூர்வ வரலாறும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தகுந்ததல்ல.  ஏனென்றால், அவற்றில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் அவர்களுடைய அரசியல் நலனே வெளிப்படையாகவோ மறைவாகவோ பொதிந்து காணப்படும். ஆனால், நாம் அந்தத் தவறைத்தான் செய்கிறோம்.

வரலாற்று நதி மீது நாம் பிரிட்டிஷாரின் படகைக் கொண்டு பயணம் செய்கிறோம். அது, நதியின் கரையில் இருக்கும் சொற்ப பாழ் நிலங்களையும் முள்ளும் புதரும் நிறைந்த சதுப்பு நிலங்களையும் மட்டுமே வெகு அருகில் கொண்டு சென்று காட்டும். நதிக்கரையோர நந்தவனங்களையும் தோப்புகளையும் வயல்வெளிகளையும் வெகு தூரக்காட்சிகளாக இருண்ட பின்னணியில் காட்டிவிட்டுச் சென்றுவிடும். அவர்கள் நம் கையில் தரும் தொலைநோக்குக் கருவியும் விசித்திரமான ஒன்று. நாயை ஓநாயாகக் காட்டும் தன்மைகொண்டது.

நம் முன்னே இரண்டு வரலாறுகள் உள்ளன. ஒன்று சுய பெருமிதமும் கற்பனையும் கலந்தது. இன்னொன்று அரசியல் உள்நோக்கம் மிகுந்தது. உண்மை என்பது இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது. அந்நியர்களில் அரசியல் நோக்கம் இல்லாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் நம்மவர்களில் மிகைப்படுத்தாமல் எழுதியவர்கள் யார் என்பதையும் பார்த்து இரண்டையும் ஒருங்கிணைப்பதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாகப் போக வாய்ப்புக் கிடைக்கும்.

0

இது பற்றி நாம் சிந்திக்க ஆரம்பிக்கும்போது நம் மனதில் தோன்றவேண்டியவர்களில் முக்கியமானவர் தரம்பால். காந்தியவாதியான தரம்பால், ஒரு வித்தியாசமான கலவையிலானவர். இந்தியா மீது பெருமிதம் கொண்ட நபர். அதே நேரம் ஆங்கிலேயரைப் போல் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை முன்வைத்துப் பேசக்கூடியவர்.

இந்தியாவில் பழங்காலத்தில் கல்வி எப்படி இருந்தது என்பதை மிக அழுத்தமாக, மிக விரிவாக பிரிட்டிஷாரின் ஆரம்பகால ஆவணங்களைக் கொண்டு இவர் விவரித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, அவர் முன்வைத்திருக்கும் தரவுகளில் பெரும்பான்மை மதராஸ் பிரஸிடென்ஸியைச் சார்ந்தவை. இருந்தும் அந்த ஆவணங்கள் போதிய கவனத்தை இந்தியாவில், ஏன் தமிழகத்தில் கூடப் பெறவில்லை. அதற்கான காரணம் மிகவும் எளிமையானது.

முதலாவதாக அந்த ஆவணங்கள் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபோது பிரிட்டனில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிடச் சிறப்பானதாக இந்தியாவில் இருந்திருக்கிறது என்று சொல்கிறது.

இரண்டாவதாக, அந்தக் கல்வி பெற்றவர்களில் பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்று இன்று அடையாளப்படுத்தப்படுபவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்று சொல்கிறது.

பொய்களால் மறைக்கப்பட்டிருக்கும் அந்த உண்மையை தரிசிக்க நீங்கள் தயாரா? தரம்பாலின் வழிகாட்டலில் இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அலசுவோம்.

(தொடரும்)

உலகம் எதனால் ஆனது?

மேட்டர் / அத்தியாயம் 1

ஹிக்ஸ் போஸான் ‘கிட்டத்தட்ட’ கண்டுபிடிக்கப்பட்டு, கடவுளைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பொது ஊடகங்களும் கடவுள் தூள் தூளாக ஆனதாக திராவிடர் கழகத்தின் ‘உண்மை’ ஏடும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டு, அனைத்துப் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் வெளியாகி, அடுத்த செய்திகளுக்கு அனைவரும் போனபிறகு ஆரம்பிக்கும் தொடர் இது.

இந்த உலகம் எதனால் ஆனது?

உலகம் என்றால், அச்சொல் எதனைக் குறிக்கும்? பூமியையா? பிரபஞ்சம் முழுமையுமா? கம்பனின் ‘உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்’ என்பதை எடுத்துக்கொண்டால் அவர் சொல்லும் உலகம் என்பது இந்தப் பிரபஞ்சம் முழுமையும் சேர்த்துத்தான். எனவே அதே பொருளிலேயே பயன்படுத்துகிறேன்.

இந்த உலகம் எதனால் ஆனது? இதனை மெதுவாக, மிக மெதுவாகப் புரிந்துகொள்ள முற்படும் முயற்சிதான் இந்தத் தொடர்.

உலகத்தை உலோகத்திலிருந்து ஆரம்பிப்போம்.

உலோகம்

ஆதி மனிதன் இயற்கையாகக் கிடைத்த பொருள்களைத் தன் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். பழைய கற்காலம் என்று சொல்லப்படும் காலம் சற்றேறக்குறைய இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக் காலத்திலேயே அதி அற்புதமான கற்கருவிகளை அவன் உருவாக்கியிருக்கிறான்.

இந்தக் கருவிகள் பலவும் சென்னையின் புறநகரான பல்லாவரத்தில் எக்கச்சக்கமாகக் கிடைத்துள்ளன. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என்று சொல்லப்படும் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பல்வேறு கருவிகள் பெருமளவில் கிடைத்துள்ளன.

கல், மண், மரம் – இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள். மரம் என்றால் தாவரத்தின் பல்வேறு விளைபொருள்கள் என்று வைத்துக்கொள்ளலாம். மண் என்றால் களிமண், மண்கட்டி, துகள் மண் என்று அனைத்தும். களிமண்ணைச் சுட்டால் வரும் மண் பாண்டம், செங்கல், ஓடுகள் ஆகியவையும் அடங்கும் என்று வைத்துக்கொள்வோம். கல் என்றால் வகைவகையான கற்கள். கடுமையான கற்கள், மென்மையான கற்கள், மாக்கல், சுண்ணாம்புக்கல், சுரண்ட எளிதான கல், அடித்தாலும் உடையாத கல என்று இயற்கையில் கிடைக்கும் எல்லாவிதமான கற்களும்.

ஆதிமனிதன் நிகழ்த்திய பெரும் பாய்ச்சல், நெருப்பு. சிக்கி முக்கிக் கல் உரசும்போதோ, மரத்தைக் கடையும்போதோ தீப்பொறி பறக்கிறது. எளிதில் பற்றிக்கொள்ளும் பஞ்சோ, வைக்கோலோ அருகில் இருந்தால் தீ பரவும். பின் காய்ந்த சுள்ளிகள், நெருப்பை அதிகமாக்கும். அதில் பசு நெய்யை அல்லது மிருகக் கொழுப்பை அல்லது தாவர எண்ணெயை வார்த்தால் தீ கொழுந்துவிட்டு எரியும்.

எரியும் மரக்கட்டைகள் கரியாக ஆவதை அவன் பார்த்திருப்பான். அந்தக் கரித்துண்டுகளும்கூட நன்கு எரிபவைதான்.

மரத்தைக் கரித்துண்டுகளாக ஆக்கும்போதுதான் அவன் மிக முக்கியமான தனிமம் ஒன்றை உருவாக்கியிருப்பான். ஆனால் நாம் தாண்டிச் செல்கிறோம். உண்மையில் நமக்குத் தனிமம் என்றாலே என்னவென்று இன்னும் தெரியாது.

கல்லால் ஆன கருவிகளுக்கு அடுத்து மனிதன் மேற்கொண்ட மிகப்பெரும் பாய்ச்சல்தான் உலோகங்கள்.

பளிச் பளிச் என்று மின்னி மினுக்கும் உலோகங்கள் என்று இன்று நாம் அறிந்திருப்பவை பல. ஆனால் ஆதிமனிதனுக்குத் தெரிந்திருந்தவை ஏழே ஏழு உலோகங்கள்தாம்.

தங்கம், வெள்ளி, செப்பு, வெள்ளீயம், காரீயம், இரும்பு, பாதரசம்.

ஆதிகால இலக்கியங்களிலேயே இந்த உலோகங்களைப் பற்றி நாம் பார்க்கிறோம். பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் நமக்குக் கிடைத்துள்ள அரும்பொருட்களிலும் இந்த உலோகங்களையே, அல்லது இவற்றின் பயன்பாடுகளையே நம்மால் காணமுடிகிறது.

இந்த ஏழு உலோகங்களில் எதை மனிதன் முதலில் கண்டுபிடித்திருப்பான்?

இதற்கான விடையைத் தேடிச் சென்றபோது, எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. நான் செப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், தங்கம்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள் ஆய்வாளர்கள்.

காரணம் எளிது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு உலோகங்களில் தங்கம்தான் அப்படியே அதன் நேரடி வடிவில் கிடைக்கக்கூடியது. வெள்ளியும் செப்பும் ஓரளவு நேரடியாகக் கிடைக்கக்கூடியவை. ஆனால் தங்கம்தான் மிக அதிகமாக, நேரடியாகக் கிடைக்கக்கூடியது.

நேரடியாக என்றால்?

இக்கட்டத்தில் தனிமம், சேர்மம், தாது ஆகியவை பற்றி சுருக்கமாகவாவது பார்ப்போம். கவனியுங்கள். இவையெல்லாம் ஆதிமனிதனுக்குத் தெரியாத தகவல்கள். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை.

தனிமம் என்றால் தனித்து இருப்பது. ஆங்கிலத்தில் எலிமெண்ட் என்ற பெயரில் வழங்கப்படுவது. அடிப்படையானது என்று பொருள் தரக்கூடியது. தமிழில் நேரடியாக அந்தப் பொருள் வருவதில்லை. தனிமம் என்றால், வேறு ஏதோ சில ஒன்று சேர்ந்து இது உருவாகவில்லை.

இதற்கு நேர்மாறுதான் சேர்மம். ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்றுசேர்ந்து வேதிவினை புரிந்தால் கிடைப்பது சேர்மம்.

பாருங்கள், மேலும் சில புதிய சொற்களை விளக்கவேண்டியிருக்கிறது. வேதிவினை என்றால்? பின்னர் பார்க்கப்போகிறோம்.

ஆதிமனிதன் இது எதைப் பற்றியும் அறியாமலேயே தங்கத்தோடு விளையாடியிருப்பான். சுத்தத் தங்கம் மிகவும் மென்மையானது. அதனைக் கையாலேயே தட்டிக் கொட்டி, கற்கருவிகளைக் கொண்டு நகைகளாக ஆக்கியிருக்கலாம். காசுகளாக ஆக்கியிருக்கலாம். ஆனால் சிறு குழந்தை பல்லால் கடித்தாலேயே பிய்ந்து போய்விடக்கூடியதாக இருந்திருக்கும்.

இப்படியே வெள்ளிகூட சில இடங்களில் கிடைத்திருக்கும்.

ஆனால் செப்பும் வெள்ளீயமும் கிடைத்தவுடன்தான் மனித நாகரிகம் சட்டென மாறுகிறது.

இவற்றைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. செப்பு பெரும்பாலும் தனிமமாகக் கிடைக்காது. வெள்ளீயம் கட்டாயமாகத் தனிமமாகக் கிடைக்காது. இவையெல்லாம் ஏதோ உலோகச் சேர்மமாகத்தான் கிடைக்கும். அப்படிப்பட்ட சேர்மத்தைத்தான் தாது என்ற பெயரில் நாம் அழைக்கிறோம்.

இப்படித் தாதுவாகக் கிடைத்த பொருள்களிலிருந்து வெள்ளி, செப்பு, வெள்ளீயம் ஆகியவற்றை எப்படி உருவியெடுத்தனர் நம் முன்னோர்கள்?

இந்தக் கதையைத் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

(தொடரும்)