மமதா : நான் ஆணையிட்டால்…

காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னையை உருவாக்கவும் தெரியும்; அதைத் தீர்க்கவும் தெரியும்! – கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் எழுந்தபோது மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உதிர்த்த வாசகம் இது. ஆட்சியைப் பிடித்தபிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய கூட்டணிக் கட்சிகளிடம் எப்படியெல்லாம் அலட்சியத்துடனும் திமிர்த்தனத்துடனும் நடந்துகொள்ளும் என்பதற்கு சத்திய சாட்சியமாக அமைந்த வாசகம் இது.

ஸ்பெக்ட்ரம் தொடங்கி தேர்தல் வரை திமுகவிடம் காட்டிய துரைத்தனத்துக்கு இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. உபயம்: மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியிடம் இருந்தே பாலபாடம் கற்றுக்கொண்டு, தற்போது அதே கட்சிக்கு விஷப்பரீட்சை வைத்துக்கொண்டிருக்கிறார் மமதா பானர்ஜி. மமதாவின் அதிரடி காய் நகர்த்தல்களால் பேயறைந்துபோல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

கூட்டணி அரசு அமைந்தது முதலே காங்கிரஸ் கட்சியைத் தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் மமதா. கூட்டணியின் ஆகப்பெரிய கட்சி என்பதால் மமதா சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்தது காங்கிரஸ் தலைமை. மற்ற நேரங்களில் பொங்கியெழும் மமதா, சட்டமன்றத் தேர்தலின்போது அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்த்தது காங்கிரஸ். ஆனால் அது நடக்கவில்லை. வழக்கம்போல அதிரடி அரசியலையே கடைப்பிடித்தார் மமதா.

ரயில்வே பட்ஜெட் விஷயத்தில் எதிர்ப்புக்குரலை வலுவாக எழுப்பியபோது காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடம் அதிகரித்தது. தினேஷ் திரிவேதிக்குப் பதிலாக முகுல் ராயை வலுக்கட்டாயமாக அமைச்சராக்கியதில் காங்கிரஸ் தலைமைக்கு வருத்தம்தான். அதை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் உத்தரபிரதேசத்தில் பிரும்மாண்ட வெற்றியைப் பெற்று தேசிய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருமாற்றம் அடைந்தார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்.

திரிணாமுல் காங்கிரஸைக் காட்டிலும் அதிக எம்.பிக்களை வைத்திருக்கும் முலாயம் சிங் யாதவைக் கொண்டு மமதாவுக்கு செக் வைக்கலாம் என்று முடிவுசெய்தது காங்கிரஸ் தலைமை. தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்காவிட்டாலும்கூட, காங்கிரஸுக்கும் முலாயமுக்கும் நட்பு உண்டு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை முலாயம் கொடுத்துவருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில்தான் ஐ.மு.கூ அரசின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது காங்கிரஸ். அந்த விழாவில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டவர் முலாயம் சிங் யாதவ். மற்ற விருந்தினர்களைக் காட்டிலும் முலாயமுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது காங்கிரஸ். அப்போது அதை மௌனமாக ரசித்துக்கொண்டிருந்தார் மமதா.

இப்படியொரு பரபரப்பான சூழ்நிலையில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பேச்சு எழுந்தது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி மௌனம் சாதித்தது. ஆகவே, மமதாவும் அமைதியாகவே இருந்தார். திடீரென காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்தக்கூடும் என்ற செய்தி கசியத் தொடங்கியது. அந்த நொடியில் இருந்தே களத்தில் இறங்கிவிட்டார் மமதா.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியை மமதா பானர்ஜி ஆதரிப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றுதான் காங்கிரஸ் தலைமை நினைத்தது. ஆனால் அந்த இடத்தில்தான் மமதா தனது அதிரடி காய் நகர்த்தல்களைத் தொடங்கினார். மண்ணின் மைந்தர்தான். அதில் சந்தேகமில்லை. அதற்காக அவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார் மமதா.

கூட்டணி விஷயத்திலாகட்டும், ஆட்சி விஷயத்திலாகட்டும், மமதா பானர்ஜி கோபம் கொள்ளும் சமயங்களில் எல்லாம் அவரை சமாதானம் செய்ய சோனியா காந்தி அனுப்புவது பிரணாப் முகர்ஜியைத்தான். பிறகு மமதா சமாதானம் அடைவார். அந்த அளவுக்கு பிரணாப் முகர்ஜிபை மதித்தவர் மமதா. ஆனாலும் அவரைக் குடியரசுத் தலைவராக மமதா விரும்பவில்லை என்பது காங்கிரஸ் கட்சிக்கு முதல் அதிர்ச்சி.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் பற்றிப் பேசுவதற்காக டெல்லி வந்த மமதா பானர்ஜி. உடனடியாக சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவைச் சந்தித்துப் பேசினார். இது காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாவது அதிர்ச்சி. அதுதான் மமதாவின் விருப்பமும்கூட.

கூட்டணியின் ஆகப்பெரிய கட்சியாக திரிணாமுல் இருக்கும்போது, கூட்டணியில் இல்லாத முலாயம் சிங்கை முன்னிலைப்படுத்தியது தன்னை வெறுப்பேற்றவே என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாதவரா என்ன மமதா? பார்த்தார். சாட்சிக்காரனுடன் சமாதானம் ஆவதைவிட சண்டைக்காரனோடு கைகோத்துவிடுவது என்று முடிவுசெய்தார். அப்படிச்செய்வதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார். அதன்மூலம் பல அதிரடிகளை நிகழ்த்தலாம் என்று கணக்கு போட்டார். அதன் ஒருபகுதியாகவே முலாயம் சிங் யாதவைச் சந்தித்துப் பேசினார் மமதா.

பேச்சுவார்த்தை முடிந்தபிறகு மறுநாள் சோனியாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் வாய்ப்பு பிரணாப் முகர்ஜிக்கு என்றும் இரண்டாவது வாய்ப்பு ஹமீத் அன்சாரிக்கு என்றும் சோனியா சொன்னதாகப் பத்திரிகையாளர்களிடம் கூறினார் மமதா. அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சோனியா சொன்ன வேட்பாளர்கள் பற்றி முலாயமிடம் பேசியபிறகுதான் சொல்லமுடியும் என்றார். இது காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது அதிர்ச்சி.

சொன்னபடியே முலாயம் சிங் வீட்டுக்குச் சென்று விவாதித்தார். பிறகு நேராக சோனியாவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சந்தித்தது பத்திரிகையாளர்கள். அதுவும், முலாயம் சிங் யாதவையும் கூடவே வைத்துக்கொண்டு. சோனியா காந்தி முன்வைத்த வேட்பாளர்களைப் பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை என்று ஒரேபோடாகப் போட்டார் மமதா. அடுத்து, தங்களுடைய வேட்பாளர் வரிசையை விவரித்தார். ஆம். சோனியா இரண்டு வாய்ப்புகளைச் சொன்னார். ஆனால், மமதாவோ அதைவிட ஒருபடி மேலே சென்றார். மூன்று வேட்பாளர்களைச் சொன்னார். அவருடைய முதல் வாய்ப்பு, அப்துல் கலாம். மூன்றாவது வாய்ப்பு, சோம்நாத் சாட்டர்ஜி. இரண்டாவது வாய்ப்பு யாருக்கு என்பதைப் பிறகு பேசலாம். இப்போது மற்ற இரண்டு வாய்ப்புகள் பற்றிப் பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் பிரணாப் முகர்ஜி. அவரை என்னவென்று சொல்லி மமதாவிடம் ஆதரவு கோருகிறது காங்கிரஸ்? வங்கத்தின் மைந்தன் என்று. அந்தப் பாட்டையே திரும்பிப் படித்திருக்கிறார் மமதா. ‘உங்களுக்கு வங்கத்தின் மைந்தந்தானே வேண்டும்.. இதோ நான் அறிமுகம் செய்கிறேன்.. சோம்நாத் சாட்டர்ஜி.. அவரை நிறுத்துங்கள். இது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நான்காவது அதிர்ச்சி.

காங்கிரஸ் கட்சியின் இன்னொரு சாய்ஸ், ஹமீத் அன்சாரி. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நிறுத்துகிறோம் என்பது காங்கிரஸின் வாதம். அதுதானே விஷயம். இதோ.. என்னுடைய சிறுபான்மை சமூக வேட்பாளர் அப்துல் கலாம். அவரை நிறுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மமதா. இது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த ஐந்தாவது அதிர்ச்சி.

யாரை வைத்து மமதாவை மட்டம் தட்ட நினைத்ததோ அவருடனேயே கைகோத்துக்கொண்டு மமதா ஆடும் அரசியல் சதுரங்கத்தை காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி கலையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. சரி.. மமதா கொடுத்த இன்னொரு முக்கிய அதிர்ச்சியைப் பார்த்துவிடலாம். மமதாவும் முலாயமும் முன்னிறுத்தும் இரண்டாவது வேட்பாளர், பிரதமர் மன்மோகன் சிங். இப்படியொரு குண்டைத் தூக்கிக் காங்கிரஸ் மைதானத்தில் போடுவதன்மூலம் பல மாற்றங்களை நிகழ்த்தலாம் என்பதுதான் மமதாவின் கணக்கு.

பிரதமர் மன்மோகன் குடியரசுத் தலைவர் ஆகும் பட்சத்தில் அவருடைய இடத்துக்கு யாரைக் கொண்டுவருவது? பிரணாப் முகர்ஜியையா, ராகுல் காந்தியையா? பிரணாப்பைக் கொண்டுவந்தால் ராகுல் ஆதரவாளர்கள் அதிருப்தியடைவார்கள். ராகுலைக் கொண்டுவந்தால் பிரணாப்புக்கு தர்மசங்கடம். எப்படிப் பார்த்தாலும்
காங்கிரஸ் பாடு திண்டாட்டமாகிவிடும். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு மமதாவின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. ஆகவே, மமதாவைப் பகைத்துக்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு அத்தனை லாபகரமான சங்கதியல்ல.

ஆக, குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் பலத்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறது காங்கிரஸ். அதிலிருந்து மீள்வதில்தான் கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலம் இருக்கிறது. கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்னையை உருவாக்கவும் தெரியும்; தீர்க்கவும் தெரியும் என்று. பார்க்கலாம். தீர்க்கிறார்களா அல்லது ….. என்று!!

0

ஆர். முத்துக்குமார்