மர்ம சந்நியாசி – 6

நீதிமன்றத்தில் மேஜோ குமாரின் மரணம் அல்லது மரணமாகக் கருதப்படும் சம்பவத்தைக் குறித்து இரு வேறு கதைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று சந்நியாசியின் கூற்று. இன்னொன்று எதிர் தரப்பான பிபாவதியின் கூற்று.

மேஜோ குமார் டார்ஜிலிங்கில் இருக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தான். சிப்பிலிஸ் நோய்க்குகூட முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு அந்த நோயிலிருந்து மீண்டான். டார்ஜிலிங்கில் இருக்கும்போது தினந்தோறும் காலையில் போலோ விளையாடச் செல்வான். மாலை வேலைகளில் ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாடுவான்.

சந்நியாசி நீதிமன்ற சாட்சிக் கூண்டில், மேஜோ குமாருக்கு டார்ஜிலிங்கில் என்ன நடந்தது என்ற விவரத்தை பின்வருமாறு தெரிவித்தார்.

‘1908ம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் தேதி எனக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருந்தது. என்னுடைய மைத்துனன் சத்திய பாபு, மருத்துவக் கல்லூரி மாணவன் அஷுதோஷ் குப்தாவை எனக்கு வைத்தியம் பார்க்கும்படி அனுப்பி வைத்தான். (அஷுதோஷ் குப்தாவும், ஜெய்தேபூரிலிருந்து மேஜோ குமாருடன் டார்ஜிலிங் வந்த கும்பலில் ஒருவன். அவனுடைய தந்தைதான் ஜெய்தேபூர் அரண்மனையின் மருத்துவர்).

மே 6 ஆம் தேதி அன்று எனக்கு வாய்வுத் தொல்லையுடன் வயிற்று வலியும் ஏற்பட்டது. நான் வலிதாங்கமாட்டாமல் கோபப்பட்டேன், அனைவரிடமும் எரிந்து விழுந்தேன். (மேஜோ குமார் சாதரணமாகவே கோபக்காரன், முரடன். தன்னுடைய வயிற்று வலியின் காரணமாக அவன் அனைவரிடமும் கடிந்து கொண்டான். அவனுடைய மனைவி பிபாவதி ஏதும் பேசாமல் பயந்து போய், பங்களாவின் ஒர் அறையில் தனியே இருந்தாள். பிபாவதிக்கு இரண்டு ஆயாக்கள்தான் பேச்சு துணைக்கு. சத்திய பாபு, பிபாவதிக்குத் துணையாக அரண்மனையிலிருந்து யாரையும் கூட்டி வரக்கூடாது என்று சொல்லியிருந்தான்).

எனக்கு வைத்தியம் செய்வதற்கு ஐரோப்பிய மருத்துவர் ஒருவர் வந்தார். ஐரோப்பிய மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தை நான் இரண்டு நாள் உட்கொண்டேன். ஆனால் 7 ஆம் தேதி, ஆஷு பாபு ஒரு கண்ணாடிக் குடுவையில் ஏதோ ஒரு மருந்தை கொண்டுவந்து என்னை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். அந்த மருந்தை வாங்கி நான் வாயில் ஊற்றிக்கொண்டேன். அவ்வளவுதான், ஒரே நெஞ்செரிச்சல். எரிச்சல் தாங்கமுடியாமல் அலறினேன். ஆஷு நீ எனக்கு குடிப்பதற்கு என்ன கொடுத்தாய் என்று கத்தினேன். எரிச்சல் தாங்கமுடியாமல் குடித்த மருந்தை வாந்தி எடுத்தேன். வாந்தி எடுப்பது தொடர்ந்தது. நிற்கவே இல்லை.

அடுத்த நாள் 8ஆம் தேதி, மலம் கழிக்கும் போது ரத்தப் போக்கு ஏற்பட்டது. பிறகு சிறிது நேரத்துக்கெல்லாம் சுய நினைவிழந்து மயங்கி விட்டேன். அதற்குப் பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.’

அதன் பின்னர் என்ன நடந்தது என்று, தான் விசாரித்து தெரிந்துகொண்ட விவரங்களை சந்நியாசி தன்னுடைய வழக்குக்கான பிராதில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.

‘மே மாதம் 8 ஆம் தேதி, சனிக்கிழமை 6 மணியளவில் நான் இறந்ததாக நினைத்துக்கொண்டு,  ஈமக் காரியங்கள் செய்ய அன்று இரவே 7 மணியிலிருந்து 8 மணி அளவில் என்னை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்திருக்கிறது. பலத்தக் காற்று வீசியிருக்கிறது. இந்த இயற்கை சீற்றத்தை தாக்குப் பிடிக்கமுடியாமல் என்னை தூக்கி வந்தவர்கள் என்னை வழியிலேயே விட்டுவிட்டனர்.

அந்தச் சூழ்நிலையில், அருகிலிருந்த நான்கு சாதுக்கள் நான் முனங்குவதைக் கேட்டு என்னைத் தூக்கிவந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் எனக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் என்னை இடுகாட்டுக்குத் தூக்கி வந்த நபர்கள் என்னைக் காணாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். பிறகு அடுத்த நாள் காலை, வேறொரு இறந்தவரின் பிணத்தை தூக்கி வந்து, என்னுடைய உடம்பை தேடிக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி, மறுபடியும் இடுகாட்டுக்குச் சென்று புதிதாக தூக்கி வந்த உடம்பை எரியூட்டி இருக்கிறார்கள். அந்த உடம்பு தலை முதல் கால் வரை துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதன் முகத்தைக் கூட ஒருவராலும் பார்க்க முடியவில்லை.’

இந்த சம்பவங்களைப் பற்றி பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் சொன்னதாவது :

‘மேஜோ குமார் மே மாதம் 6 ஆம் தேதி முதல் உடல் நலம் இல்லாமல் இருந்தார். மே 7 ஆம் தேதியன்று அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 8 ஆம் தேதியன்று அவர் உடல் நிலை மோசமடைந்தது. அன்று டாக்டர் லெப்டினண்ட் கர்னல் ஜான் டெல்ப்பு கால்வெர்ட், மேஜோ குமாருக்கு சிகிச்சை அளிக்க வந்தார். அவர் குமாருக்கு ஊசி போட முனைந்தார். ஆனால் குமார் அதற்கு மறுத்துவிட்டார். குமார் தன்னுடைய படுக்கையறைக்கு அடுத்த அறையில் ஒரு விரிப்பில் படுத்திருந்தார். காலை 8 மணியிலிருந்து 9 மணியளவில் டாக்டர் நிப்பாரான் சந்திர சென் என்பவர் வந்து குமாரைப் பார்த்தார். நான் ஒரு அறையின் கதவருகே நின்றுகொண்டிருந்தேன். ஆஷு பாபுவும், சத்திய பாபுவும் குமாருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு காலை 10 மணியளவில் குமாருக்கு வாந்தி வந்தது. மதியம் 2 மணியளவில் குமாரின் வயிற்று வலி அதிகமானது. குமாருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. டாக்டர் கால்வெர்ட்டை அழைத்துவர ஆட்கள் அனுப்பப்பட்டனர். டாக்டர் கால்வெர்டு மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வந்து குமாரைப் பார்த்தார். டாக்டர் கால்வெர்டு, குமாருக்கு உடனடியாக ஊசி போட்டாகவேண்டும் என்று தெரிவித்தார். குமார் அதற்கு ஒப்புக் கொண்டார். ஊசி போட்ட பிறகு குமாரின் வலி குறைந்தது. ஆனால் குமார் ரொம்பவும் சோர்ந்து காணப்பட்டார்.
அதற்குப் பிறகு சில செவிலியர்கள் வந்து குமாரைப் பார்த்துக்கொண்டனர். குமாரின் உடம்பு சில்லென்று ஆனது. செவிலியர்கள் குமாரின் உடம்பில் ஏதோ பவுடரைப் போட்டுத் தேய்த்துவிட்டனர். டாக்டர் கால்வெர்ட் மாலை 8 மணி வரை இருந்தார். பின்னர் அவர் உணவருந்துவதற்காகச் சென்றுவிட்டார்.

இருட்டிய பிறகு என்னுடைய மாமா சூரிய நாரயாண் பாபு, பி.பி.சிர்கார் என்ற ஒரு மருத்துவருடன் குமாரைப் பார்க்க வந்தார். மே 8 ஆம் தேதி நள்ளிரவில் மேஜோ குமார் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரான் சந்திர சென் இருவரும் இருந்தார்கள். ‘

(டாக்டர் கால்வெர்டு மற்றும் டாக்டர் நிப்பாரனை விசாரிக்கையில், தாங்கள் இரவில் குமாருடன் இருக்கவில்லை என்றும்,  வீட்டுக்குச் சென்றபிறகு மீண்டும் திரும்பிவந்து குமாரைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர்).

பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் மேலும் சொன்னதாவது : குமார் இறந்த பிறகு, நான் குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தேன்.

(குமார் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த Step Aside பங்களாவின் மேற்பார்வையாளரான ராம் சிங் சுபா, பங்களா அருகில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவர் தன்னுடைய சாட்சியத்தில் கூறிய விஷயம் இது. ‘நான் லேபாங் ரேஸ் கோர்ஸில் குதிரைப் பந்தயத்தைப் பார்த்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பினேன். வரும் வழியில் குமார் தங்கி இருந்த பங்களாவில் அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. அங்கு வீட்டில் பெண்கள் அழுது கொண்டிருந்தனர். நான் பங்களாவுக்குள் நுழைந்து அங்கு உள்ளவர்களை விசாரித்ததில், குமார் சற்று நேரத்துக்கு முன்னர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.’ ராம் சிங் சுபா மேலும் தொடர்ந்தார். ‘நான் 7:30 மணியளவில் பங்களாவின் மாடிக்குச் சென்று பார்த்தேன். அங்கு முன் அறையில் குமார் தரையில் கிடத்தப்பட்டு இருந்தார். அவர் உடல் முழுதும் ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு சத்திய பாபு, ஆஷு பாபு, டாக்டர் பி.பி.சிர்கார் மற்றும் பங்களாவின் உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு பத்து நிமிடம் தலையைக் குனிந்தவாறு இருந்துவிட்டு வரண்டாவின் வழியாக வெளியே வர முற்பட்டேன். அப்பொழுது ஒரு அறையைக் கடக்க நேர்ந்தது. அந்த அறையின் கண்ணாடிக் கதவின் வழியாக பிபாவதியை பார்க்கமுடிந்தது. அங்கு அவள் ஒரு இரும்புக் கட்டிலின் மேல் குப்புறப்படுத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். பிபாவதி இருந்த அறை வெளியில் பாட்லாக் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. மேற்சொன்ன சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது பிபாவதி உண்மையைச் சொல்லவில்லை என்று தெரிகிறது).

பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் மேலும் தொடர்ந்தார். ‘மேஜொ குமார் Billory colic காரணமாக உயிர் இழந்தார். நள்ளிரவு என்பதால் மேஜோ குமாரை அடக்கம் செய்யமுடியவில்லை. மறுநாள் காலை, மேஜோ குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் தீயூட்டப்பட்டது. ‘

இரு தரப்பினரும் தத்தம் நிலைப்பாடுகளை நிரூபிக்க, மொத்தமாக 96 சாட்சிகளை விசாரித்தனர். அந்த சாட்சிகளில் முக்கியமானவர் டாக்டர் லெப்டினண்ட் கர்னல் ஜான் டெல்ப்பு கால்வெர்ட். இவர் பிபாவதியின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். டாக்டர் கால்வெர்ட், சம்பவம் நடந்த சமயத்தில் டார்ஜிலிங்கில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினர். ஓய்வு பெற்றபிறகு அவர் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். அவரை இங்கிலாந்து சென்று விசாரிக்க, டாக்கா நீதிமன்றம் ஒரு விசராணைக் கமிஷனை ஏற்படுத்தியது. தன்னுடைய தள்ளாடும் வயதில் டாக்டர் கால்வெர்ட் விசாரணைக் கமிஷன் முன்னர் ஆஜராகி, 22 வருடங்கள் முன் நடந்த சம்பவங்கள் குறித்து சாட்சியம் அளித்தார். டாக்டர் நிப்பாரன் சந்திர சென் என்பவரும் மேஜோ குமாருக்கு வைத்தியம் அளித்த வகையில் பிபாவதியின் தரப்பில் சாட்சியம் அளித்தார்.

மே மாதம் 8 ஆம் தேதி, மதியம் 12 மணியளவில் மேஜோ குமாருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமடைந்த தருணத்தில் டாக்டர் கால்வெர்டும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென்னும் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். இந்த இரண்டு மருத்துவர்களும் மேஜோ குமார் குணமடைய நிறைய மருந்துகள் எழுதிக் கொடுத்தனர்.

டார்ஜிலிங்கில் உள்ள ஸ்மித் ஸ்டெயின்ஸ்டிரீட் அன் கோ (Smith Steinstreet & Co) என்ற மருந்துக்கடையின் பதிவேட்டிலிருந்து திரட்டப்பட்ட விவரங்களின் படி, டாக்டர் கால்வெர்ட் முதலில் எழுதிக்கொடுத்த மருந்துச்சீட்டு, டாக்டர் கால்வெர்டைத் தொடர்ந்து, டாக்டர் நிப்பரான் எழுதிக்கொடுத்த மருந்துகள், டாக்டர் கால்வெர்ட் இரண்டாவது முறை எழுதிக் கொடுத்த மருந்துகள், டாக்டர் சென் மேஜோ குமாருக்காக கடைசியாக எழுதிக் கொடுத்த மருந்துகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.

மேற்சொன்ன மருந்துகள் எதற்காக வழங்கப்பட்டன என்று நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. வாதி தரப்பில் இரண்டு மருத்துவர்களும் பிரதிவாதி தரப்பில் இரண்டு மருத்துவர்களும் சாட்சியம் அளித்தனர்.

டாக்டர் மேக் கில்கிறிஸ்ட் என்பவரும் டாக்டர் பிராட்லி என்பவரும் வாதி சார்பில் சாட்சியம் அளித்தனர். மேஜர் தாமஸ் மற்றும் கர்னல் டாக்டர் டென்ஹாம் வைட் என்பவரும் பிரதிவாதி தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மருத்துவம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவப் புத்தகங்கள் பல அலசி ஆராயப்பட்டன.

பிபாவதி தரப்பில், Biliary Colic-க்கால் தான் மேஜோ குமார் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேஜோ குமார் உடல் நலம் இல்லாமல் இருந்த சமயத்தில், அவருக்கு Biliary Colic என்று எந்த மருத்துவரும் தெரிவிக்கவில்லை. மேஜோ குமார் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில், அந்தப் பெயரை அவர் குடும்பத்தார் யாரும் கேள்விப்படவே இல்லை.  மேஜோ குமார் இறந்த பிறகு முதல் முறையாக  மே மாதம் 10 ஆம் தேதியன்று மேஜோ குமாரின் அண்ணனான மூத்த குமாருக்கு (பாரா குமாருக்கு) டாக்டர் கால்வெர்ட் எழுதிய கடிதத்தில்தான் அது குறிப்பிடப்பட்டிருப்பதாக பிரதிவாதி தரப்பில் சாட்சியம் அளிக்கப்பட்டது.

ஏன் டாக்டர் கால்வெர்ட் பாரா குமாருக்கு அந்தக் கடிதத்தை எழுதினார் என்று பிரதிவாதி தரப்பில் சொல்லப்படவில்லை? யார் இந்தக் கடிதத்தை பாரா குமாரிடம் சேர்த்தனர் என்பதற்கும் விளக்கம் இல்லை. சத்திய பாபுவால் இது தொடர்பான சரியான விளக்கம் தர முடியவில்லை.

1921ம் ஆண்டில் சந்நியாசியைப் பற்றி விசாரணை நடத்திய டாக்கா கலெக்டரான நீதாமிடம், சத்திய பாபு டாக்டர் கால்வெர்டின் கடிதத்தை முதன்முறையாக கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தை சத்திய பாபு கலெக்டரிடம் கொடுத்ததன் காரணம், மேஜோ குமாரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்ற விவரத்தை டாக்டர் கால்வெர்ட் அதில் தெரிவித்திருந்தார்.

டாக்டர் கால்வெர்ட் நீதிமன்ற விசாரணைக் கமிஷனிடம் அளித்த தன்னுடைய சாட்சியத்தில், மேஜோ குமார் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிர் இழந்தார் என்று தெரிவித்தார். ஆனால் அவர் பாராகுமாருக்கு எழுதியக் கடிதத்தில் மேஜோ குமார் Biliary Colic-கால் இறந்ததாக குறிப்பிட்டிருந்தார். டாக்டர் கால்வெர்ட்டின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. ஒரு இடத்தில் மேஜோ குமார் இறந்ததற்கான காரணம் Biliary Colic என்று சொன்ன டாக்டர் கால்வெர்ட், இன்னொரு இடத்தில் ரத்தப் போக்கு என்றார்.

இந்த வழக்கில் Biliary Colic பற்றி அதிகம் இடம்பெறுவதால், அது குறித்து ஒரு சிறு அறிமுகம் இங்கே அவசியமாகிறது. சாட்சியம் அளித்த நான்கு மருத்துவர்களும் Biliary Colic  பற்றிய தங்களுடைய விளக்கங்களுக்கு ஆதாரமாக Price’s Treatise என்ற மருத்துவப் புத்தகத்தையே மேற்கோளாகக் காட்டினர். கல்லீரல் வெளிப்படுத்தும் பித்தமானது ஹெப்பட்டிக் சுரப்பி மூலமாக சிஸ்டிக் சுரப்பியில் சென்று சேருகிறது. பிறகு சிஸ்டிக் சுரப்பி, பித்தநீரை மண்ணீரலுக்கு எடுத்துச்செல்கிறது. சில சமயங்களில் இந்தப் பித்தநீர், சிஸ்டிக் சுரப்பியில் கட்டிப்பட்டு நாளடைவில் கற்களாக மாறிவிடுகிறது. அப்படி சிஸ்டிக் சுரப்பியில் உருவாகும் பெரிய கற்களால் வலது தோள்ப்பட்டையில் தீவிர வலி ஏற்படும். வயிற்றில் வலி ஏற்படாது. வயிறுக்கும் Biliary Colicக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  இதனால் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது. அறுவை சிகிச்சை மூலமாகத்தான் Biliary Colicக்கை சரி செய்ய முடியும். இந்நோய் ஏற்படுத்தும் வலியைக் குறைப்பதற்காக வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓபியம் வழங்கப்படும் .

அனைத்து மருத்துவர்களும் கருத்து ஒத்து சொன்ன விஷயம் ஒருவருக்கு Biliary Colic இருந்தால் அவருக்கு ரத்தப் போக்கு ஏற்படாது என்பதுதான். காரணம் சிஸ்டிக் சுரப்பியில் உருவான கல்லால் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்தம் கசிந்து குடல் வழியாக வெளியேறும். அப்படி வெளியேறும் ரத்தம் சிவப்பாக இருக்காது. கறுப்பாகவும் தார் போன்றுமிருக்கும். காரணம், கல்லின் பாதிப்பால் ஏற்பட்ட ரத்தம் சிறுகுடல் வழியாக பெருங்குடலுக்குச் சென்று, அங்கிருந்து மலக்குடலுக்கு வந்து சேர்வதற்கு சுமார் 25 அடி நீளம் உள்ள குடல்பகுதிகளை கடக்கவேண்டும். அப்படி கடக்கும் வழியில் மற்ற உணவுகளுடன் ரத்தமும் ஜீரணிக்கப்பட்டு, அதனுடைய கழிவுகள் கறுப்பாகவும் தார் போன்றும் வெளியேறும். மலத்தில் ரத்தம் வெளிப்பட்டால், அது குடலின் கீழ்பகுதி அல்லது ஆசனவாயில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இருக்குமே தவிர Biliary Colicக்கால் இருக்காது”.

மேஜோ குமாருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் கால்வெர்டும் மேற்சொன்ன மருத்துவ விளக்கத்தை ஒத்துக்கொண்டார்.

நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த நான்கு மருத்துவர்களும், மேலும் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தினர். அவை “மேஜோ குமாருக்கு ஏற்பட்டது வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு) இல்லை. காரணம் மேல்சொன்ன நோய் இருந்தால் இந்த இரு உபாதைகளும் ஏற்படாது. மலச்சிக்கல்தான் ஏற்படும்.”

சத்திய பாபு ராஜ்பாரி அரண்மனைக்கு, மேஜோ குமாரின் நிலைமையை தெரிவிப்பதற்காக அனுப்பிய தந்திகளில் எதிலுமே மேஜோ குமாருக்கு Biliary Colic என்று குறிப்பிடவில்லை.

அந்தத் தந்திகள் பின்வருமாறு:

மே 6 – காலை 10 மணி. நேற்று இரவு குமாருக்கு காய்ச்சல் அடித்தது. 99-க்கு கீழ்தான் இருந்தது. இப்பொழுது காய்ச்சல் இல்லை.

மே 6 – மாலை 6:45 மணி, குமாருக்கு காய்ச்சல். தாங்க முடியாத வயிற்று வலி. சிவில் சர்ஜன் குமாரை கவனித்து வருகிறார்.

மே 6 – மாலை 8:55 மணி, காய்ச்சல் இருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வயிற்று வலி. இப்பொழுது குறைந்துவிட்டது. கவலைப்பட வேண்டியதில்லை. மறுபடியும் வரும் என்ற பயம் வேண்டாம்.

மே 7 – காலை 7:10 மணி – குமார் நன்றாகத் தூங்கினார். காய்ச்சலும் இல்லை, வயிற்று வலியும் இல்லை.

மே 8 – காலை 11:15 மணி – காய்ச்சல் இல்லை, கொஞ்சம் வலி இருந்தது. அடிக்கடி வாந்தி வருவதாக தெரிவிக்கிறார். சிவில் சர்ஜன் கவனித்துக் கொள்கிறார். கவலைப்பட வேண்டியதில்லை. உணவாக சாதம் கொடுக்கப்படுகிறது.

மேலும் டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென், மேஜோ குமாருக்கு எழுதிக் கொடுத்த மருந்துகள் எதுவுமே Biliary Colicக்கான சிகிச்சை தொடர்பானது இல்லை.

டாக்டர் கால்வெர்ட், பெல்லாடோனா (Belladonna) ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்திருந்தார். அது வயிற்று வலி கண்டவர்களுக்கு வயிற்றின் மேல் தடவப்படும் மருந்து.

டாக்டர் கில்கிறிஸ்ட் தன்னுடைய சாட்சியத்தில், மேஜோ குமார் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று வைத்துக்கொண்டால் கூட மருந்துச் சீட்டை பார்க்கும்பொழுது அதற்காக சிகிச்சை எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

எனவே மேஜோ குமார் Biliary Colicக்கால் இறந்தார் என்பது தவறு.

எனவே அரசு மருத்துவரான டாக்டர் கால்வெர்ட் நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்வதற்கு ஆங்கிலத்தில் perjury என்று பெயர். நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்தால் அது சட்டப்படி குற்றம். அதற்கு தண்டனையும் உண்டு.

சத்திய பாபுவுக்கு, மேஜோ குமார் இன்ன காரணத்தினால்தான் இறந்தார் என்று ஒரு ஆதாரம் தேவைப்பட்டது. அந்தப் போலி ஆதாரம் தான், டாக்டர் கால்வெர்டினால் பாரா குமாருக்கு எழுதப்பட்ட கடிதம்.

அப்படியானால் மேஜோ குமாருக்கு மே மாதம் 8 ஆம் தேதி என்ன நடந்தது?

(தொடரும்)

தேவர் மகன்: அம்மிகள் சிலைகளாவதில்லை – 2

இதே படத்தை சாதிப் பிரச்னையை மையமாக வைத்து எடுப்பதானால், வேறுவிதமாக திரைக்கதை எழுதுவேன். சாதி மோதலை அல்லாமல், சாதி நல்லிணக்கத்தை முன்வைத்து அந்தக் கதையை எழுதுவேன். இது லட்சியவாத அணுகுமுறைதான். ஒருவித சமரசம் இதிலும் இருக்கிறது. ஆனால், இதில் கூடுமானவரை பிரச்னையின் பன்முகப் பரிமாணங்களைத் தொட்டுக்காட்ட முயற்சி செய்வேன்.

முதல் வேலையாக, இந்தியாவில் எங்கெல்லாம் யாரெல்லாம் சாதிக்கு எதிராக ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்கிறார்கள், இப்போதும் செயல்பட்டுவருகிறார்கள் என்பது தொடர்பான தகவல்களைச் சேகரிப்பேன். அண்ணா ஹசாரேயில் ஆரம்பித்து எத்தனையோ பேர் கிராம மக்களை ஒற்றுமையாக வாழ வழிசெய்து வந்திருக்கிறார்கள். பெரியாரிய இயக்கங்களில் ஆரம்பித்து மதம் சார்ந்த அமைப்புகள் வரை எத்தனையோ அமைப்புகள் பல்வேறு சமூக நல்லிணக்கத் திட்டங்களை முன்வைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் என் திரைக்கதையில் இணைத்துக்கொள்வேன்.

சாதிச் சண்டையில் பிரிந்து கிடக்கும் ஊரை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன்தான் சக்திவேல் தன் நண்பர்களுடன் ஊருக்கு வருவான். இரட்டை குவளை முறை, தலித்களுக்குக் குறைவான கூலி, கோயில் தேரை இழுக்கத் தடை, சாராயக்கடைகள் என அந்த ஊரில் இருக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றுக்கும் நடைமுறை சார்ந்த ஒரு தீர்வை அவன் முன்வைப்பான்.

பெரும்பாலான தலித் மக்கள் தேவர்களின் நிலத்தில் கூலி வேலை செய்பவர்களாக இருப்பதால், முதலில் பொருளாதாரரீதியாக தலித்துகள் சொந்தக் காலில் நிற்க வழி செய்வது அவசியம் என்று சக்திவேல் நினைப்பான். அவனுடைய அப்பாவுக்கு 200-300 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தை உச்ச வரம்புச் சட்டத்தை ஏய்க்கும்வகையில் கோயில் அறக்கட்டளை ஒன்றுக்கு எழுதிவைத்திருப்பார். முதலில் அதை ரத்து செய்துவிட்டு, அந்த நிலத்தை தலித் மக்களுக்கு ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்ற வகையில் சக்திவேல் பிரித்துக் கொடுப்பான். கூலித் தொழிலாளியாக இருந்தவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகைக்கும், குத்தகைதாரராக இருந்தவர்களுக்கு அந்த நிலத்தை விற்றும் தலித் மக்களை தற்சார்பு பெறச் செய்வான்.

ஒரு அலுவலகத்தில் பியூனை கிளார்க் ஆக்கினால் கிளார்க்கை சீனியர் கிளார்க் ஆகவாவது ஆக்குவது அவசியம் என்ற அம்சத்தின் அடிப்படையில் தேவர் சாதியினரின் வளர்ச்சிக்கும் சில ஏற்பாடுகள் செய்வான். பொருளாதார முன்னேற்றம் வந்தால் சாதி சார்ந்த வெறுப்பு அடியோடு ஒழிந்துவிடும் என்று சொல்ல முடியாது. என்றாலும் அது ஓரளவுக்கு நிலைமையை மேம்படுத்த உதவும். குறைந்தபட்சம் அதிருப்தியானது வன்முறையாக வெளிப்படாமலாவது இருக்கும் என்று நம்பி தொழிற்சாலைகள் ஆரம்பிக்க முயற்சிகள் எடுப்பான். கிராமங்கள் பெரிதும் விவசாயத்தை நம்பி இருப்பதால், தரிசு நிலங்களை விளை நிலங்களாக ஆக்குதல், ஆறு, குளங்கள், ஏரிகளை சீர்படுத்துதல், விவசாய உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல் என மக்களுக்கு நேரடியாகப் பயன் தரக்கூடிய தொழில்களை ஆரம்பிக்க முயற்சி எடுப்பான். முற்றிலும் தரிசான நிலங்களில் சூரிய பேனல்களை வைத்து மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடுவான்.

இரு சாதிகளில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குவான். இரு சாதியினரும் ஒன்றாக பாடுபட்டால் வளமான வாழ்க்கை சாத்தியம் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பான்.

இரட்டைக் குவளை முறையைப் போக்க டிஸ்போஸபிள் கிளாஸ்களை அந்த ஊருக்கு அறிமுகப்படுத்துவான். அந்த ஊரில் பேருந்து நிறுத்தம் தொடர்பாக அடிக்கடி சண்டை நடக்கும். சாதிய அமைப்பில் தேவர்கள் மேல் அடுக்கில் இருப்பவர்கள். தலித்துகள் அவர்களைச் சார்ந்து இருப்பவர்கள். இதுதான் நூற்றுக்கணக்கான வருடங்களாக நிலவி வரும் விஷயம். நவீன அரசு உருவான பிறகு இந்த சமன்பாடு மாறத் தொடங்குகிறது. ஒவ்வொரு நவீன அம்சத்தின் வருகையும் பெரும் போராட்டத்தை சந்திக்க நேர்கிறது. அந்த ஊருக்கு ஒரு பஸ் முதன் முதலாக விடப்படுகிறது. பேருந்தைப் பொறுத்தவரையில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு இருக்கை என்பது அதன் நியதி. பேருந்தானது சேரி வரை போகிறது. அதாவது அங்கிருந்துதான் புறப்படுகிறது. எனவே, தலித் மக்கள் முதலில் வண்டியில் ஏறிவிடுகிறார்கள். ஓரிரு நிறுத்தங்கள் கழித்த பிறகே தேவர்களின் பகுதி வருகிறது. அங்கு ஏறும் தேவர்களுக்கு உட்கார இடம் கிடைப்பதில்லை. நேற்றுவரை நம்மிடம் கை கட்டி வேலை பார்த்து வந்தவர்கள் நமக்கு முன்னால் உட்காருவதா என்று தேவர்களுக்குக் கோபம் வருகிறது. இதனால் பேருந்தை சேரி வரை போகவிடாமல் தடுக்கிறார்கள். அல்லது தேவர்கள் வரும்போது தலித்துகள் எழுந்து இடம் கொடுக்க வேண்டும் என்று சண்டையிடுகிறார்கள். இது தொடர்பான சண்டை அந்த ஊரில் அடிக்கடி நடக்கிறது.

சக்திவேல் இதைத் தீர்க்க ஒரு வழி யோசிக்கிறான். வேன்கள் சிலவற்றை தனது ஊருக்குக் கொண்டுவருகிறான். அந்த வேனில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. எனவே, அதில் ஏறுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அதிகப் பணம் கொடுக்க முடிந்தவர்களுக்கு இருக்கை என அது கொஞ்சம் மாறுபட்ட நியதியை அங்கு கொண்டுவருகிறது. தேவர்கள் வசதியானவர்களாக இருப்பதால் அதில் அவர்கள் ஏறிச் செல்ல முடிகிறது. தலித்துகளிலும் பணக்கார்ர்கள் மட்டுமே அதில் ஏற முடிகிறது. ஒருவகையில் பணக்கார ஜாதியினருக்கான வாகனம் என்ற வகையில் அது அந்தப் பிரச்னையை மட்டுப்படுத்துகிறது. விசேஷ சலுகை அல்லது பெருமிதம் என்பது வெறும் சாதியின்/பிறப்பின் அடிப்படையில் இருக்கும்போது அது மிகப் பெரிய அநீதியாகத் தோன்றுகிறது. அதுவே பொருளாதார அடிப்படையில் முன்வைக்கப்படும்போது இன்றைய சமூகம் அதை ஏற்றுக் கொள்ளவே செய்கிறது. அந்தவகையில், கூடுதல் கட்டணத்தில் தனியார் வாகனங்களை இயக்குவது அந்த பிரச்னையை எளிதில் தீர்த்துவிடுகிறது.

அடுத்ததாக அந்த ஊரில் இருக்கும் கோயில் விஷயத்தில் இரண்டு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி பிரச்னை வருகிறது. இரு தரப்பினருமே அந்தக் கோயிலில் தங்களுக்குத்தான் உரிமை உண்டு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியான இன்னொரு தெய்வத்தை வைத்து புதியதாக ஒரு கோயில் கட்டத் தீர்மானிக்கிறான். சாதியால் பிரிந்து கிடக்கும் மக்களை மொழி அடிப்படையில் ஒன்று சேர்த்து தமிழ் அன்னைக்கு ஒரு கோயில் கட்டுகிறான். அங்கு வழிபாடுகள் முழுக்க முழுக்க தமிழிலேயே நடக்க ஏற்பாடு செய்கிறான்.

இப்படியான செயல்களால் மெள்ள சக்திவேலின் புகழ் ஊரில் பரவ ஆரம்பிக்கிறது. பத்திரிகைகளில் இருந்து அவரைப் பேட்டி எடுக்க வருகிறார்கள். நீங்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஆதிக்க சாதிக்கு பணிந்து போவதாகவே இருக்கின்றனவே என்று நிருபர்கள் கேட்கிறார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றும். ஆனால், உண்மை அது அல்ல. உண்மையில் மனித இனமானது சாதி என்ற பழங்குடி வாழ்க்கையில் இருந்து விலகி மொழி, மதம், தேசம் என மிகப் பெரிய அடையாளங்களின் கீழே ஒன்றிணைந்து வாழ ஆரம்பித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அந்தப் பெரிய அடையாளங்களின் கீழே ஒன்றிணைவதில் எந்த அளவுக்கு நன்மை அதிகமோ அதே அளவுக்குத் தீமையும் அதிகம். மதத்தின் பெயரால் தேசத்தின் பெயரால் மொழியின் பெயரால் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும்போது சாதி சார்ந்த வன்முறை என்பது ஒன்றுமே இல்லை. அவை ஆக்டோபஸ் என்றால் இது வெறும் சிலந்திதான். இதற்காக சாதிய வன்முறையை நான் ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை. ஆதிக்க சாதியினரைக் கொடுங்கோலர்களாக சித்திரிக்கத் தேவையில்லை என்றுதான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அதுதான் பிரச்னையை மிகவும் சிக்கலாக்குகிறது.

தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் பிற சாதிகளுடன் எந்தப் பெரிய மோதலும் கிடையாது. விட்டுக் கொடுத்தல், புரிந்து கொள்ளுதல் என பிற தரப்பினருடன் இந்த இரண்டு பிரிவினருமே சுமுகமான வாழ்க்கையே வாழ்ந்துவருகிறார்கள். அதிருப்தி இருக்கும்பட்சத்தில் அதை வன்முறை அற்ற வழிகளிலேயே வெளிப்படுத்தி வருகிறார்கள். தேவர்-தலித் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் மட்டும் எலியும் பூனையும் போல் ஒருவித நிரந்தரமான, ஆழமான பகைமை இருக்கிறது. இதில் ஒரு தரப்பை அழித்து இன்னொன்றை வெற்றி பெறச் செய்தல் என்பது சாத்தியமும் அல்ல. தேவையும் அல்ல. இரண்டு தரப்பும் ஒன்றாக அடுத்த கட்டத்துக்கு நகர எது வழி என்பதைத்தான் நான் பார்க்கிறேன். நாளை தலித்களுக்கும் அவர்களுக்குக் கீழே இருக்கும் பிரிவினர்களுக்கும் இடையில் பிரச்னை பெரிதானால், தலித்துகளுக்கு சில விஷயங்களை விட்டுக்கொடுத்துத்தான் கீழே இருப்பவர்களால் இயங்கவே முடியும். இது மனித இயல்பு. இதை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும்.

இது நான் புதிதாக கண்டுபிடித்த வழக்கம் அல்ல. காலகாலமாகவே, பெரிய சக்கரவர்த்திகளையும் மாமன்னர்களையும் சமாளிக்கக் குறுநில மன்னர்களும் ஜமீன்தார்களும் பாளையக்காரர்களும் பின்பற்றிய வழிதான். மேலிருப்பவன் பெரும் படையுடன் வரும்போது ஒரு தொகையைக் கப்பமாகக் கட்டி அனுப்பி வைத்துவிடுவார்கள். இது ஒருவகையில் இரண்டு தரப்புக்குமே வெற்றி என்ற கோட்பாட்டை மையமாகக்கொண்டது. இவ்வளவு ஏன்… துடியான சாமிகளை அது கேட்கும் பலி கொடுத்து சாந்தப்படுத்துவது இலலையா என்ன?

இந்த பஸ் பிரச்னையையே எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில் நான் என்ன செய்திருக்கிறேன். கூடுதல் வாகன வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறேன். அதில் சாதிக்கு முன்னுரிமை என்பதை மாற்றி பணத்துக்கு முன்னுரிமை என்பதைக் கொண்டுவந்திருக்கிறேன். இன்றைய சூழலில் இது எல்லாரும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு விஷயம்தான். கூடுதல் வசதி வாய்ப்பு இருப்பதால் இந்த பிரச்னை இரண்டு தரப்புக்கும் லாபகரமான ஒன்றாக முடிந்துவிட்டிருக்கிறது. இதை நான் ஆதிக்க சாதிக்குப் பணிந்து போகும் செயலாக நினைக்கவில்லை. பாய்ந்தோடும் நீரானது வழியில் குறுக்கிடும் பாறையைச் சுற்றி வளைந்து போவதுபோல் விடுதலைப் போராட்டத்தையும் தேவைப்படும்போது நெகிழ்ச்சியுடன் நடத்துவதில் தவறே இல்லை என்று சொல்கிறான்.

அடுத்ததாக, எந்தக் கெட்ட பழக்கத்தையும் ஒரேயடியாக நிறுத்த முடியாது. எனவே, பெரிய கெட்ட பழக்கம் ஒன்றை சிறிய கெட்ட பழக்கத்தால் பதிலீடு செய் என்ற கோட்பாட்டின்படி ஊரில் இருக்கும் சாராயக் கடையை மூடிவிட்டு கள்ளு இறக்கவும் வேறு இடங்களில் இருந்து வாங்கவும் ஏற்பாடு செய்வான். அதுவும் வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கடை திறந்திருக்கும். குடும்பத்தினரின் தேவைகளுக்குப் போக எஞ்சிய பணம் மட்டுமே போதைப் பொருளுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் என்று தீர்மானிப்பான். எனவே, ஆண்களுக்கான சம்பளத்தை நேராக வீட்டுப் பெண்கள் வசமே கொடுப்பான்.

உன்னால் முடியும் தம்பி படத்தில், குடித்தால் கணவனுடன் உடலுறவு கொள்ளமாட்டேன் என்று மனைவிகள் முடிவெடுப்பதுபோல் பாலச்சந்தர் காட்டியிருப்பார். அதுகூட நல்ல வழிதான். (தனிப்பட்ட முறையில் குடியையோ குடிப்பவர்களையோ நான் இழிவாகக் கருதவில்லை. குடும்பத்துக்கும் பிறருக்கும் எந்த இழப்பும் ஏற்படாதவரையில் அதை அனுமதிப்பதில் தவறில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தமே. அந்த வகையில் மக்களுக்கு ஒழுங்காகக் குடிக்கக் கற்றுக் கொடுப்பதை ஒரு தீர்வாக படத்தில் இடம்பெற வைப்பேன். குடியை அடியோடு ஒழித்தால்தான் கிராம மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதுதான் உண்மை என்று இது தொடர்பாக நான் மேற்கொள்ளும் ஆய்வில் தெரியவந்தால் நிச்சயம் அதையே ஒரு தீர்வாக படத்தில் முன்வைப்பேன்.)

அடுத்ததாக, ஊரில் நடக்கும் தேர் திருவிழாவில் தலித்களை வடம் தொட்டு இழுக்க விடாமல் தேவர் சாதியினர் தடுப்பார்கள். முதல்வர், ஜனாதிபதி போன்ற பிரபலங்களைத் தேரோட்டத்தில் பங்கெடுக்க வைத்தால் தன் சாதியினரால் பெரிதாக எந்த எதிர்ப்பையும் காட்ட முடியாது என்று தீர்மானித்து அவர்களை அழைக்கலாம் என்று சக்திவேல் யோசனை சொல்வான். தலித்களை தேர் இழுக்க அனுமதிக்கலாம் என்ற எண்ணம் கொண்ட ஊர் பெரிய மனிதர்களில் சிலர் ஜனாதிபதியெல்லாம் நம்ம ஊருக்கு வருவாரா என்று சந்தேகத்தை எழுப்புவார்கள். இப்போது ராணுவ விமானத்தில் பறப்பது, கடலில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்களில் ஜனாதிபதிகள் ஈடுபடுவதற்குக் காரணம் அவர்களை அந்த அதிகாரிகள் கூப்பிடுவதால்தான். நாமும் கூப்பிட்டுப் பார்ப்போம் என்று சக்திவேல் சொல்லுவான். அதன்படியே டில்லிக்குப் போய் விஷயத்தைச் சொல்வார்கள்.

சாதி, மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுபோல் விழாக்களில் பங்கெடுப்பது என்று தீர்மானித்தால் ஜனாதிபதிக்கு 24 மணி நேரமும் இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கத்தான் நேரம் இருக்கும். அவரால் வேறு வேலை எதையும் பார்க்க முடியாது என்று சொல்லி தட்டிக்கழிக்கப் பார்ப்பார்கள். அயல் நாட்டு நல்லுறவை உருவாக்க கோடிக்கணக்கில் செலவிட்டு உலகம் சுற்றுவதைவிட இது ஆயிரம் மடங்கு மேல் என நாயகன் சொல்லுவான். ஆனால், பாதுகாப்பு காரணங்கள், வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என பல காரணங்களைச் சொல்லி வராமல் தட்டிக்கழித்துவிடுவார்கள்.

மாநில முதல்வரைப் போய் அழைக்கலாம் என்று பார்த்தால் அவர் சந்திக்கவே நேரம் ஒதுக்காமல் அலைக்கழிப்பார். எதிர்க்கட்சித் தலைவரைப் போய்ச் சந்தித்தால் அவரோ பொதுக்குழு கூட்டிப் பிறகு பதில் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிடுவார். இதனிடையில் தேரோட்ட நாள் வந்துவிடும். அரசு தரப்பில் நாலைந்து தலித்களை மட்டும் வடம் பிடிப்பதுபோல் புகைப்படம் எடுத்துக் கொண்டுவிட்டு அவர்களை அப்புறப்படுத்திவிட்டு தேவர்கள் மட்டும் தேரை இழுத்து விழாவை நடத்தி முடிப்பார்கள்.

இதைப் பார்க்கும் சக்திவேல் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டுவான். ஈழவனைச் சிவனின் கோயிலுக்குள் வரக்கூடாதென்றுதானே தடுக்கிறீர்கள். சிவனை ஈழவனின் சேரிக்குள் போகாதே என்று தடுக்க உங்களால் முடியுமா என்ன என்று சேரிகளில் பெரிய சிவாலயங்களைக் கட்டி ஈழவர்களை ஆக்கபூர்வமான முறையில் சாதி அடுக்கில் மேலேறச் செய்த நாராயண குருவைப்போல் தலித் மக்களுக்கு என்று ஒரு பிரமாண்டமான தேரைச் செய்ய முடிவெடுக்கிறான். ஸ்தபதி ஒருவரை அழைத்து வந்து ஏழெட்டு மாதங்களுக்குள் ஒரு தேரைச் செய்து முடிகிறான். அதில் என்ன கடவுளை பிரதிஷ்டை செய்யப் போகிறான் என்பதை ரகசியமாகவே வைத்திருப்பான். தேரோட்டத்தின் அன்று திரைச்சீலை மெள்ள உயருகிறது. பிரமாண்ட சுடலை மாடனின் சிலை பீடத்தில் கம்பீரமாக இருப்பதைப் பார்த்து மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். தேவர்களின் தேர் ஓடிய அதே தெருக்களில் மட்டுமல்லாமல் இந்த புதிய தேர் சேரிக்குள்ளும் கம்பீரமாக வலம் வரும்.

சமபந்தி போஜனம் தொடர்பாகப் பிரச்னை எழும். இரு தரப்பினரையும் கூப்பிட்டு வைத்துப் பேசுவான். மாட்டுக்கறி சாப்பிடறவன்கூட உக்கார்ந்து நாங்க சாப்பிட முடியாது என்று தேவர்கள் சொல்வார்கள். அப்படியானால், மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிட்டால் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்த் தயாரா என்று சக்திவேல் கேட்பான். தலித்களில் சிலர் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாட்டுக்கறியைச் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. ஆடு, கோழி சாப்பிடறது மாதிரித்தான் இதுவும். இதை எதற்காக விடவேண்டும் என்று சொல்வார்கள். மாடு விவசாயத்துக்கு உதவக்கூடிய விலங்கு. விவசாயத்தை தொழிலாகக் கொண்ட எங்களுக்கு அது தெய்வம் மாதிரி. தை திருநாள் போன்ற விசேஷ நாட்களில் மாட்டுக்கு மரியாதை செய்து கும்பிடுவது எங்கள் பழக்கம். அப்படியான மாட்டை அடித்துக் கொன்று தின்பது எங்கள் தெய்வத்தைக் கொல்வதற்கு சம்ம். அப்படியானவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட எங்களால் முடியாது என்று தேவர்கள் மறுத்துவிடுவார்கள். இவ்வளவு பேசுகிறீர்களே… அணிலையும் பூனையையும் தின்னக்கூடிய நரிக்குறவர்களுடன் தலித்களை முதலில் சம பந்தி போஜனம் நடத்தச் சொல்லுங்கள். அதன் பிறகு எங்கள் கூட உட்கார்ந்து சாப்பிட வரட்டும் என்று தேவர்கள் சொல்வார்கள்.

சக்திவேல் இது தொடர்பாக, தலித்களிடம் பேசுவான். இப்போது தேவர்களின் வார்த்தைகளை தலித்துகள் பேச ஆரம்பிப்பார்கள். சக்திவேல் நிதானமாக விஷயத்தை எடுத்துச் சொல்வான். உணவுப் பழக்கம் என்பது இயற்கை ஏற்படுத்திய விஷயம். எல்லா விலங்குகளும் தாவர பட்சிணியாக இருந்தால் தாவரங்களின் இனம் அழிந்துவிடும். எல்லாமே விலங்குகளைச் சாப்பிடுபவையாக இருந்தால் விலங்கு இனம் அழிந்துவிடும். எனவே, சில விலங்குகள் தாவரங்களையும் சில விலங்குகள் தாவரபட்சிணிகளையும் உண்பதாக இயற்கை படைத்திருக்கிறது. மனிதனுக்கு எல்லாவற்றையும் சாப்பிட முடியும் என்பதால், அவனுக்கும் சில தடைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதன் அடிப்படையில் மனமானது சிலவற்றை ஏற்றுக்கொள்கிறது. சிலவற்றை விலக்குகிறது. இப்படி வளங்களைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்தால்தான் ஒருவித சமநிலை நிலவமுடியும். இதில் ஏற்றத் தாழ்வுக்கு இடம் இல்லை என்று சொல்கிறான். அதன்படி தலித்துகள் முதலில் நரிக்குறவர்களுடன் சம பந்தி போஜனம் நடத்துகிறார்கள். அதன் அடுத்த கட்டமாக தேவர்களும் தலித்களுடன் சம்மாக உட்கார்ந்து உண்கிறார்கள்.

கிராமப்புறங்களில் தேவர்களின் தெருக்களுக்குள் தலித்துகள் செருப்பு அணிந்து போகக்கூடாது… சைக்கிளில் ஏறிச் செல்லக்கூடாது என பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சக்திவேல் சொல்கிறான். தலித்துகள் உங்களைவிட எந்தவித்தத்தில் தாழ்ந்தவர்கள்… பிராமணரல்லாதவர்கள் அக்ரஹாரத்துக்குள் நுழையக்கூடாது என்று இருந்ததை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட்டிருக்கும் நிலையில் தேவர்கள் இப்படிச் செய்வது தவறு என்று சொல்கிறான். இது தொடர்பான வாக்குவாதம் முற்றுகிறது. தலித்துகள் உங்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தால் இதுபோன்ற விஷயங்களை விலக்கிக் கொள்வீர்களா என்று சக்திவேல் சவால்விடுகிறான். சரி… மோதிப் பார்த்துவிடுவோம் என்று தேவர்கள் அருவாள், வேல் கம்புகள் அணி வகுக்கிறார்கள். தலித்களும் தங்கள் ஆயுதங்களுடன் மோதத் தயாராகிறார்கள்.

இப்படிச் சண்டை போடவேண்டாம். ஜல்லிக் கட்டில் தேவர் சாதியினர் வளர்க்கும் காளையை ஒரு தலித் அடக்கிக் காட்டுவார். அப்படி முடியாமல் போனால், இதைவிடக் கூடுதல் அடக்குமுறைகளை நீங்கள் விதித்துக் கொள்ளலாம் என்று சக்திவேல் சொல்லுவான். இரு தரப்பினரும் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதன்படியே ஜல்லிக்கட்டு அனல் பறக்க ஏற்பாடு செய்யப்படும். அந்தப் போட்டியில் சீறிவரும் காளையை ஒரு தலித் நேருக்கு நேராக நின்று கொம்பைப் பிடித்து அடக்கி, அதன் கழுத்தில் காலை வைத்து அழுத்தி, கீழே விழவைத்து வெற்றிபெறுவார். ஏனென்றால், தான் அடக்கப்போவது வெறும் ஒரு காளையை அல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும்.

இப்படியாக ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தீர்வுகளை நாயகன் முன்வைப்பான்.
ஒரிஜினல் படத்தில் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு ஊர் நலனுக்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதாக காட்சி இடம்பெற்றிருக்கும். அதை மிகவும் என் திரைக்கதையில் மாற்றி அமைப்பேன். இரு சாதியினருக்கு இடையே நல்லுறவை வளர்க்க கலப்புத் திருமணத்தை நாயகன் முன்னெடுப்பான். விமரிசையாக நடக்கும் திருமண விழாவில் தலித் போராளி ஒருவர், நாயகனைப் பார்த்து நீ ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு ஊருக்கு உபதேசம் செய் என்று சொல்லுவார்.

எனக்கு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதில் எந்த தயக்கமும் கிடையாது. ஆனால், ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதால் அது சாத்தியமில்லை என்று நாயகன் சொல்லுவான். அதெல்லாம் இல்லை… தலித் மீது உனக்கு இருக்கும் வெறுப்பினால்தான் உயர் சாதிப் பெண்ணாகப் பார்த்து காதலிக்க ஆரம்பித்திருக்கிறாய் என்று மடக்குவார். மேடையில் மாலை அணிந்தபடி கலப்புத் திருமணத்துக்கு தயாராக உட்கார்ந்திருப்பவர்கள் அனைவரும் நாயகனின் இந்த மோசடிக்கு நாங்கள் துணை நிற்கப் போவதில்லை என்று மாலையைக் கழட்டிப் போடுவார்கள். இப்படியான ஒரு இக்கட்டான சூழலில் நாயகன் தன் லட்சியத்துக்காகக் காதலைத் தியாகம் செய்வான். அவனுடைய காதலியே கண்ணீர் மல்க தாலியை எடுத்துக் கொடுப்பாள். தலித் பெண் ஒருத்தியை சக்திவேல் மணந்துகொள்வான்.

அதன்பிறகு வேறு சிக்கல்கள் வர ஆரம்பிக்கும். நிலத்தை ஊருக்குப் பிரித்துக் கொடுத்ததையும் பிற நல்ல செயல்களையும் ஆதரித்த நாயகனின் குடும்பத்தினர் தலித் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். மெள்ள அந்த தலித் பெண் அவர்கள் மனத்தில் இடம்பிடிப்பாள். எதற்கும் அசைந்து கொடுக்காத சின்ன ஐயாவின் வெட்டி சாதிப் பெருமிதம் பேரக் குழந்தை பிறந்ததும் மெள்ள உருக ஆரம்பிக்கும்.

இப்போதைய படத்தில் நாயகன் சக்திவேலும் அவருடைய அப்பாவுக்கும் இடையிலான அன்னியோன்னியத்தை வெளிப்படுத்த இயக்குநர் ஒரு காட்சி வைத்திருப்பார். தன்னிடம் பேசி முடித்துவிட்டுப் போகும் மகனை அப்பா வைத்த கண் வாங்காமல் பாசத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார். வாசல் வழி வெளியே போன மகன், காதலி தன் ஆசைக் காதலனைத் பார்ப்பதுபோல், திரும்பிப் பார்ப்பார். அப்பா சட்டென்று வெட்கப்பட்டு தன் பார்வையை விலக்கிக் கொள்வார். அதை எனது திரைக்கதையில் சற்று மெருகூட்டுவேன். தலித் மருமகளுக்குப் பிறந்த குழந்தையை சின்ன ஐயா மற்றவர்கள் முன்னால் கொஞ்சக் கூச்சப்படுவார். ஒரு நாள் குழந்தை கூடத்தில் தனியே விளையாடிக்கொண்டிருக்கும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு குழந்தையை எடுத்துக் கொஞ்சப் போவார். அப்போது பார்த்து சக்திவேல் அந்தப் பக்கம் வந்துவிடவே அசடு வழிந்தபடியே தான் வேறு எதையோ தேடிக்கொண்டு வந்ததாக நடிப்பார். அப்படியா என்று சொல்லிவிட்டு சக்திவேல் போய்விடுவான். அவன் போய்விட்டானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சப் போவார். இப்போது, சக்திவேல் மெள்ள திரும்பி எட்டிப்பார்ப்பான். எந்த சாக்கும் சொல்ல முடியாத வகையில் சின்ன ஐயாவின் கையில் குழந்தை இருக்கும். சக்திவேல் மென்மையாகப் புன்னகை செய்தபடியே விலகிச் செல்வான். சின்ன ஐயா குழந்தையை ஆசை தீர முத்தமிட்டுக் கொஞ்சுவார்.

உண்மையில் சக்திவேல் லண்டனில் படித்து அமெரிக்காவில் செட்டில் ஆகத்தான் தீர்மானித்திருப்பான். அங்கு அவன் சந்திக்கும் கறுப்பர் இனப் போராளி ஒருவரின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் சொந்த கிராமத்தை மேல் நிலைக்குக் கொண்டுவர முடிவெடுத்து ஊர் திரும்பியிருப்பான். உங்கள் நாட்டின் க்ரீமி லேயர் ஆட்கள் எல்லாம் அந்நிய நாட்டுக்காரருக்கு எடுபிடி வேலை செய்வதில் காட்டும் அக்கறையை சொந்த நாட்டுப் பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டுங்கள். அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பாவிடமிருந்தும் நீங்கள் எதையெல்லாமோ இறக்குமதி செய்துவருகிறீர்கள். முதலில் தேச பக்தியையும் சொந்த நாட்டினர் மீதான அக்கறையையும் இறக்குமதி செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருப்பார். அவருடைய வார்த்தைகளால் உந்தப்பட்டுத்தான் சக்திவேலும் அவனுடைய நண்பர்களும் கிராமங்களில் நிலவும் சாதிய மோதல்களுக்குத் தீர்வுகாணுதல் என்பதை தங்களுடைய லட்சியமாக எடுத்துக்கொண்டு களம் இறங்கியிருப்பார்கள் என்று கதையை ஆரம்பிப்பேன்.

இதுவரை ஓரளவுக்கு சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கும் கதையில் ஒரு முக்கியமான திருப்பம் வரும். சக்திவேலில் கிராமமானது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படும். முருகேசன் என்ற ஒரு தலித்தை அந்த பஞ்சாயத்தின் தலைவராக நியமிக்க சக்திவேல் குழுவினர் தீர்மானிப்பார்கள். ஊரில் இருக்கும் பெரிய மனிதர்களுக்கு அது பிடிக்காமல் போய்விடும். சக்திவேலை எதிர்ப்பதில் முதல் ஆளாக அவனுடைய அப்பா சின்ன ஐயாவே இருப்பார். எல்லா பிரச்னைகளையும் சமாளித்த சக்திவேலுக்கு தன் அப்பாவை எப்படிச் சமாளிக்க என்பது தெரியாமல் போய்விடும். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கும்.
இந்தியாவுக்கே ஒரு தலித் ஜனாதிபதி ஆகியிருக்காரு. நீங்க என்னடான்னா பஞ்சாயத்து தலைவரா ஆக விடமாட்டேன்னு சொல்றீங்களே என்று தந்தையிடம் சக்திவேல் வாதாடுவான். அவரை எங்களுக்கு யாருன்னே தெரியாதப்பு. ஆனா நீ இன்னிக்கு பஞ்சாயத்து தலைவரா நிறுத்தறியே இந்த முருகேசனை எங்களுக்கு நல்லாத் தெரியும். அவன் வீட்டுல ஒரு வேளை அடுப்பு எரியணும்னா அதுக்கு எங்க கிட்ட வாங்கற கூலி இருந்தாத்தான் முடியும். இன்னிக்கு அவன் உடம்புல ஒண்டுத்துணி ஒட்டியிருக்குன்னா அதுக்கு நாங்கதானப்பு காரணம். இன்னிக்கு நேத்திக்கு இல்லை.. தலைமுறை தலைமுறையா அவங்க குடும்பமும் சாதிசனமும் நம்ம குடும்பத்துக்கு நம்ம சாதி சனத்துக்கும் கைகட்டித்தான் இருந்து வந்திருக்காங்க. இன்னிக்கு அவனைப் போயி எனக்கு மேல உட்கார வைக்கறியே… நியாயமா? என்று சீறுவார். வாக்குவாதம் உச்சத்தை எட்டவே நீ உண்மையிலயே எனக்குத்தான் பிறந்தியா… இல்லன்னா உங்க அம்மா யாராவது பள்ளன் பறையனுக்குத்தான் உன்னைப் பெத்தாளா என்று ஆக்ரோஷத்தில் கத்துவார். அதைக் கேட்டதும் சக்திவேல் சப்த நாடியும் ஒடுங்கிப் போய்விடுவான்.

முருகேசன் பஞ்சாயத்து தலைவரானா அவனை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போவேன் என்று சூளுரைப்பார். அப்பா, நீங்க நல்லருன்னு எனக்குத் தெரியும். இந்த ஜாதி வெறி உங்க கண்ணை மறைக்குது. உங்க தப்பை நீங்க உணர்ந்து நிச்சயம் திருந்துவீங்க. உங்களை நான் திருத்துவேன் என்று சவால் விட்டுவிட்டு, முருகேசனை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைப்பான் சக்திவேல்.

பஞ்சாயத்து கமிட்டி கூட்டத்தை, கோயிலில் வைத்து வட்ட மேஜை மாநாடுபோல் அனைவரையும் சம உயரமான இருக்கையில் அமரவைத்து நடத்துவான். முருகேசனுக்கு பாதுகாப்புக்காக எப்போதும் இரண்டு காவலர்களை அரசு நியமித்திருக்கும். ஊரில் எப்போதும் ஒருவிதப் பதற்றம் நிலவியபடியே இருக்கும்.

ஒரு நாள் இரவில் முருகேசனையும் சேரி மக்களையும் வெட்டிக் கொல்வது என்று சின்ன ஐயா தலைமையில் ஒரு சதித் திட்டம் தீட்டப்படும். அது தெரிய வந்ததும் முருகேசனும் சேரி மக்களும் சற்று தூரத்தில் இருக்கும் காட்டுக்குள் தஞ்சம் புகுந்துவிடுவார்கள். மழைக்காலம் என்பதால் மாலை நான்கு மணி வாக்கிலேயே லேசாக இருட்ட ஆரம்பித்திருக்கும். இரவு நேரக் காவலர்கள் மாலை ஆறு ஏழு மணிக்கு மேல்தான் வருவார்கள் என்பதால் வேல் கம்பும் அருவாளுமாக சின்ன ஐயாவின் ஆட்கள் கொலை வெறியுடன் சேரிக்குள் நுழைவார்கள். யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடப்பதைப் பார்த்து எங்கு போயிருப்பார்கள் என்று கூடிப் பேசுவார்கள்.

அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிய முருகேசன் கடைசியாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நாலைந்து பேருடன் சேரிக்கு வந்திருப்பார். சின்ன ஐயாவும் அவருடைய ஆட்களும் அவர்களைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். அந்த ஊருக்கு அருகில் இருக்கும் அணையில் நீர் அளவுக்கு அதிகமாக சேகரமாகியிருக்கும். அணை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில இடங்களில் விரிசல் விட்டிருக்கும். முருகேசனை வெட்டப் போகும் நேரத்தில் அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய ஆரம்பிக்கும். சேரியும் தேவர்கள் வசிக்கும் பகுதியும் அணைக்குப் பக்கத்திலேயே இருந்ததால் வெள்ளத்தில் அனைவரும் சிக்கிக் கொண்டுவிடுவார்கள். சின்ன ஐயாவை வெள்ளம் அடித்துச் சென்றுவிடும். நீச்சல் தெரிந்த நிலையிலும் வயதானதால் அவர் நீரில் தத்தளிப்பார்.

கிடைத்த மரம் ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்த முருகேசன் சின்ன ஐயா உயிருக்குப் போராடுவதைப் பார்ப்பான். .நீரில் பாய்ந்து சென்று சின்ன ஐயாவைக் காப்பாற்றுவான். ஒரு மரக்கிளையில் அவரை பத்திரமாக உட்கார வைத்துக்கொண்டு இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்து அவரைக் காப்பாற்றுவான். அந்த வெள்ளத்தில் தேவர்களும் தலித்களும் தங்கள் பகையை எல்லாம் மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள். மறுநாள் பொழுது விடியும்போது எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக இருக்கும். பக்கத்து ஊருக்கு வேலை விஷயமாகப் போயிருந்த சக்திவேலும் அவனுடைய நண்பர்களும் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஊருக்கு விரைந்து வருவார்கள். தலித்களும் தேவர்களும் பரஸ்பரம் உதவி செய்துகொள்வதைப் பார்த்து மெய்சிலிர்த்து நிற்பார்கள். உங்களை ஒண்ணு சேர்க்க ஒரு புயலும் வெள்ளமும் வரவேண்டியிருக்கே… என்று கண்கலங்குவான். கிழக்கே அடர்த்தி குறையத் தொடங்கிய கறுப்பு மேகங்களைக் கிழித்தபடி புதிய சூரியன் உதிக்க ஆரம்பிக்கும்.
இந்தத் திரைக்கதையில் கதாநாயகன் முன்வைக்கும் தீர்வுகளை சாதி பிரச்னை தொடர்பான ஒரு விவாதத்தை ஆரம்பித்து வைக்கும் ஒன்றாகத்தான் இடம்பெறச் செய்திருக்கிறேன். வாசகர்கள், இவற்றில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். இதில் சொல்லப்படாத பிரச்னைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் எழுதி அனுப்புங்கள். இந்த விஷயங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியுமா என்று ஒன்றாக நாம் முயன்று பார்ப்போம்.

0

B.R. மகாதேவன்

தேவர் மகன்: அம்மிகள் சிலைகளாவதில்லை – 1

சர்வ தேச அளவிலான விருதாக இருப்பதால் ஆஸ்கர் விருது கமிட்டியினர் பல்வேறு விலைகளைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று இந்தியப் படங்களை, குறிப்பாகத் தமிழ்ப் படங்களை அவ்வப்போது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுவதுதான்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யத் தெரிந்தவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற தாராளக் கொள்கையை இனியும் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணத்தை அவர்களுக்கு மீண்டும் அழுத்தமாகத் தந்திருக்கக்கூடிய படம் 1992-ல் கமல்சார் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, நடித்து, தயாரித்து வெளியான தேவர் மகன்.

இந்தப் படத்தை இயக்கியவர் பரதன். பொதுவாக, கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் இயக்குநர்களுடைய பணிகளில் ஆர்வமிகுதியால் (!?) குறுக்கிடுவது வழக்கம். சந்தான பாரதி, சுந்தர் சி. போன்றவர்கள் இயக்கியதாகச் சொல்லப்படும் படங்கள் உண்மையில் கமலால் இயக்கப்பட்டதுதான் என்பது திரையுலகில் இருப்பவர்களுக்குத் தெரிந்த ஒரு ரகசியம். கமல்ஹாசனின் இத்தகைய செயல்பாடுகளினால் பிற இயக்குநர்களுடன் அவருக்கு முரண்பாடுகள் ஏற்படுவதும் ஒருவழியாகப் படம் முடிக்கப்பட்டு வெளிவருவதும் ஊருக்கே தெரிந்த ஒரு ரகசியம்.

இந்தப் படத்திலும் இயக்குநருடன் கமல்ஹாசனுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. டைட்டிலில் பெயர் போடும்போது கமல்ஹாசனின் பெயர் அடர் பச்சைப் பின்னணியில் வெண் எழுத்துகளில் மிகத் தெளிவாக இடம்பெற்றிருக்கிறது. இயக்குநரின் பெயர் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கும் வெண்ணிற நதி நீரின் பின்னணியில் அதே வெண்ணிற எழுத்துகளாக அதாவது, பெயர் என்ன என்பதே தெரியாதவகையில் இடம்பெறுகிறது. இயக்குநர் இந்தப் படத்துடனான தனது தொடர்பை கவுரவமாக நினைக்கவில்லையா… தயாரிப்பாளர் இயக்குநரை இருட்டடிப்பு செய்தாரா… எது காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், படம் பார்த்து முடித்தபோது முந்தைய காரணம்தான் உண்மையாக இருக்கும் என்றே தோன்றியது.

அடர்பச்சை கமல்

வெளிறிய பரதன்

படத்தில் தென் தமிழகத்தில் நடக்கும் கலவரங்கள் இடம்பெறுகின்றன. சண்டையால் மூடப்பட்டுக் கிடக்கும் கோயில் இடம்பெறுகிறது. அணையை உடைத்து ஊருக்கு அழிவை ஏற்படுத்துவது இடம்பெறுகிறது. பொதுப் பயன்பாட்டுக்கான சாலையை மறித்து ஒரு பிரிவினரை அதன் வழியே போகவிடாமல் தடுக்கும் செயல் நடக்கிறது. தேர் திருவிழாவின் போது குண்டு வெடிக்கிறது. இப்படியாக சம கால சாதி, மதக் கலவர நிகழ்வுகள் அனைத்தும் படத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், இவையெல்லாமே சாதி, மதச் சண்டையாக இடம்பெறாமல் கேவலம் பங்காளிச் சண்டையால் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

தேவர் சாதிக்குள் பங்காளிச் சண்டைகள் உண்டு என்பது உண்மைதான். ஆனால், அது இப்படியான பரிமாணங்களில் ஒருபோதும் வெளிப்படாது. இரு குடும்பத்து சண்டை என்பது அந்தக் குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவது என்ற அளவில்தான் நடக்கும். அதிகபட்சம் அவர்களுக்கு உதவும் மிக நெருங்கிய நபர்களுக்கு பயமுறுத்தல் என்ற அளவுக்கு வேண்டுமானால் நடக்கலாம்.. இங்கோ இரண்டு சாதிகளுக்கு இடையிலான சண்டைபோல் குடிசைகளைக் கொளுத்துதல், அணையை உடைத்தல், தேருக்குத் தீ வைத்தல் என பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரமாக நடக்கிறது.

நிஜத்தில் ஒருவேளை இப்படி நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறி அடுத்த நிமிடமே இரு குடும்பத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுவிடுவார்கள். படத்திலோ ஏராளமான வெட்டும் குத்தும் கொலையும் நடந்த பிறகும் ஒரே ஒரு சாட்சிகூடக் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. என்னதான் தேவர் பூமி பஞ்சாயத்தை மட்டுமே நம்பியதாக இருந்தாலும் காவல்துறை என்பது ஓரளவுக்குத்தான் ஒதுங்கி நிற்கும். அதுவும்போக கதை என்ன 18-19-ம் நூற்றாண்டிலா நடக்கிறது? கிட்டத்தட்ட படம் வெளியான 1990-களில் தானே நடக்கிறது.

இந்தக் கதையின் அபத்தம் நன்கு புரியவேண்டுமென்றால், ஒரு உதாரணம் சொல்கிறேன். அழகிரி-ஸ்டாலின் சண்டையில் ஸ்டாலினின் ஊரான சென்னையை அழகிரி ஸ்கட் ஏவுகணை தாக்கி அழிக்கிறார்… ஆட்கொல்லி வைரஸை ஊருக்குள் பரவவிட்டு அனைவரையும் கொல்கிறார் என்றெல்லாம் காட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல முட்டாள்த்தனமானது.
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இரு சாதிகளுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான சண்டையாகப் படம் எடுத்தால் பிரச்னை வரும் என்றால் எதற்காக சாதியையோ மதத்தையோ மையமாகக்கொண்டு படம் எடுக்கவேண்டும். யாராவது வசனகர்த்தா நகைச்சுவை ததும்ப எழுதிக் கொடுத்தால், சரியான ஏற்ற இறக்கத்தோடு பேசி நடிக்க கமலுக்குத்தான் தெரியுமே. யானைக்கு நிலத்திலும் முதலைக்கு நீரிலும் கமலுக்கு லைட் சப்ஜெக்டிலும் பலம் என்பது உலகுக்குக்கே தெரிந்த விஷயம்தானே. அப்படியே கனமாக எதையாவது கையாள வேண்டும் என்று நினைத்தால் அன்னார் ஜிம்முக்குப் போவதுதானே சாலச் சிறந்தது.

தமிழ்ச் சூழலில் சாதி பற்றி படம் எடுப்பது சிரமம் என்றால், சாதியைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்பதை அல்லவா முதலில் எடுக்க வேண்டும். பிற தமிழ் திரையுலகப் படைப்பளிகள் சாதி என்ற ஒன்று இருப்பதாகவே காட்டாமல் இருக்கும் நிலையில் நாம் ஏதாவது ஒரு சாதியையாவது காட்டுகிறோமே… சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் என்று கமல் நினைத்திருக்கக்கூடும். ஆனால், நத்திங் ஈஸ் பெட்டர் தேன் நான்சென்ஸ் என்ற ஒரு வசனமும் உண்டு என்பது அன்னாருக்குத் தெரியாது போலிருக்கிறது.

நம்மவாளை வேணும்னா எப்படி வேணும்னாலும் விமர்சிக்கலாம். மத்தவாளைப் பத்திப் பேசினா லாங் சைஸ் அருவாளை எடுத்துண்டு வந்துடுவா என்று கமல் மாமா பயப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால், தேவர் சமூகத்துக்குள்ளாகவே அந்த வன்முறை வெளிப்படுவதாகக் காட்டி அதன் மூலம் அவர்களை சுய பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்ற நல்லெண்ணம் கமலுக்குத் தோன்றியிருக்கவும்கூடும். ஆனால், ஒரு பிரச்னையை அதன் முழு வடிவில் அணுகுவதுதான் முறை. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக இருந்தால் ஒரு பெண்ணுக்கு ஆண் இழைக்கும் அநீதிகளைச் சித்திரித்துத்தான் அதை விவாதப் பொருளாக ஆக்கமுடியும். ஆண்களுக்கு இடையே நடக்கும் வன்முறையைக் காட்டிவிட்டு ஆணாதிக்கத்தைக் கைவிடு என்று சொல்வது அசட்டுத்தனமானது. நிற வெறியைப் பற்றிப் படம் எடுப்பதானால், கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் செய்யும் தீங்கை காட்டித்தானே அதை விமர்சிக்க முடியும்.

***

தேவர் மகன் படத்தை உருப்படியாக எடுப்பதென்றால் இரண்டுவிதங்களில் எடுக்கமுடியும். ஒன்று, சாதிப் பிரச்னையை மையமாக வைத்து தைரியமாக, நேர்மையாக எடுக்கலாம். அல்லது பங்காளிச் சண்டையை உருப்படியாக எடுக்கலாம். இரண்டாவதை முதலில் பார்ப்போம்.

அண்ணன் பசங்களுக்கும் தம்பி பசங்களுக்கும் இடையிலான சண்டை என்றதும் பொதுவாக எல்லாருக்கும் மனதில் தோன்றக்கூடிய ஒரு விஷயம்: மகாபாரதம்.

ஆதி காவியங்களில் ஒன்றான அது நிமிர்ந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் தென்படும் வானம் போல் பிருமாண்டமாக பேரழகுடன் விரிந்துகிடக்கிறது. இந்தப் படம் வெளியான அதே வருடம்தான் சத்தியவான் சாவித்திரி கதையை மையமாக வைத்து ரோஜா படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். மலையாள இயக்குநர் லோகித தாஸ் தன் பல படங்களை இதுபோல் புராண, பாரம்பரிய கதைகளின் நவீன வடிவமாக இயக்கியிருக்கிறார். அது கலை அழகும் வணிக வெற்றியும் ஒரு சேர வாய்க்கப்பெற்ற ஃபார்முலா.

கமல் தன்னைப் பெரியாரியவாதியாக அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டு. அது ஒருவேளை மகாபாரதத்தின் சாயலில் தன் படத்தை எடுப்பதில் இருந்து அவரைத் தடுத்திருக்கக்கூடும். அதை யாரும் தவறு என்று நிச்சயம் சொல்லவே முடியாது. ஆனால், பெரியாரிய சிந்தனைகளை அவர் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறாரா என்பது சந்தேகமே. கறுப்புச் சட்டை அணிந்தபடி பல படங்களில் தோன்றி இருக்கிறார் என்பது உண்மைதான் (அன்பே சிவத்தில் கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும்போதுகூட கறுப்புச் சட்டைதான்). ஆனால், பெரியாரிய சிந்தனைகளில் அவருக்கு அந்தக் கறுப்புச் சட்டையை அணிவது மட்டுமே பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் அவருடைய சிவந்த மேனிக்கு கறுப்புச் சட்டை எடுப்பாக இருக்கிறது என்பதால்தான் பெரியாரிய சிந்தனையே அவருக்குப் பிடித்திருக்கிறதோ என்னமோ? இல்லையென்றால், ஆதிக்க சாதியான தேவர் சாதியை மட்டுமே பெருமிதப்படுத்தி அவர் படங்கள் எடுப்பதை ஒருவர் எப்படித்தான் விளக்கமுடியும்?

படத்தின் ஒன்லைன் கதை அருமையான ஒன்றுதான். வன்முறையே கூடாது என்று சொல்லும் ஒருவனுக்கு கடைசியில் வன்முறையில் ஈடுபடவேண்டி வந்துவிடுகிறது. இதற்கான திரைக்கதைதான் படு பலவீனமாக இருக்கிறது. முதலாவதாக, வன்முறையைத் தவிர்க்க கதாநாயகன் செய்யும் செயல்கள் புத்திசாலித்தனமானவையாக இல்லை. காவல்துறையை துணைக்கு அழைக்கிறார். கலெக்டரை பயன்படுத்திக் கொள்கிறார். கல்யாணம் செய்துகொள்கிறார். எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுகின்றன.

பெரிய தேவரின் மொடாக்குடியரான மூத்த மகனை கதாநாயகன் ஒரே நாளில் ஒரே உத்தரவின் பேரில் திருத்திவிடுகிறார். பெரிய தேவர் இறந்தபோது கொள்ளி வைக்கக்கூட முடியாத நிலையில் குடித்துவிட்டு கீழே விழுந்து கிடந்த அவருக்கு நாயகன் உத்தரவிட்டதால் சாராயம் கொடுக்கமாட்டேன் என்று காய்ச்சுபவர்கள் சபதம் செய்துவிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர் திருந்த வேண்டியதாகிவிடுகிறது. இப்படியாக, மீட்பரின் இரண்டாம் வருகைக்காக உலகம் காத்திருப்பதுபோல் தேனி மாவட்டம் நாயகனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்து, அவர் வந்ததும் திருந்த ஆரம்பித்துவிடுகிறது. அதுபோல், கடைசியில் வன்முறையை நோக்கி நாயகன் தள்ளப்படுவதும் இயல்பாக இல்லை. அணை உடைக்கப்பட்டு ஊர் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு கலங்கி கிராமத்திலேயே தங்கிவிட முடிவெடுக்கும் நாயகன், தேர்த்திருவிழாவில் அதே ஊர் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டதும் அருவாளை எடுத்துக்கொண்டு வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கிவிடுகிறார்.

எனது திரைக்கதையைப் பெருமளவுக்கு மகாபாரதத்தின் அடிப்படையிலேயே அமைப்பேன். தருமராக சக்திவேல் (கமல்). துரியோதனனாக மாயத் தேவன் (நாஸர்). பாண்டுவாக சின்ன அய்யா (சிவாஜி). திருதிராஷ்டிரனாக பெரிய அய்யா (காகா ராதா கிருஷ்ணன்). திரௌபதியாக பஞ்சவர்ணம் (ரேவதி). இதுதான் என் தேவர்மகன்.

கதாநாயகன் சக்திவேல் லண்டனில் இருந்து தன் கிராமத்துக்கு நண்பர்களை அழைத்து வருவான். அவர்களில் அவனுடைய காதலியும் இருப்பாள். எனது திரைக்கதை அப்படித்தான் ஆரம்பிக்கும்.

இப்போதைய படத்தில் காதலியை மட்டும் அழைத்து வருவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அது தவறான காட்சி அமைப்பு. சக்திவேல் தன் அப்பா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் தூணுக்குப் பின்னால் இருந்து பவ்யமாகப் பேசுபவதாகவுமே காட்டியிருக்கிறார்கள். அது உண்மையென்றால் தான் காதலிக்கும் வேற்று மொழிப் பெண்ணை பழமையில் ஊறிய தந்தைக்கு முன்பாக அதுவும் திருமணத்துக்கு முன்பே தனியாக அழைத்துக் கொண்டுவர மாட்டான். என்னதான் அண்ணியிடம் கடிதத்தில் காதல் பற்றித் தெரிவித்திருந்தாலும் இப்படி முழங்கால் தெரிய, மாராப்பும் இல்லாமல் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டுவரமாட்டான். காதலியை மட்டும் அழைத்து வந்தால் அப்பா கோபித்துக்கொள்வார். நண்பர்கள் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டுவா. மெதுவாகப் பேசிப் பார்க்கலாம் என்றுதான் அண்ணியே கூடச் சொல்லியிருப்பார். மாடர்ன் டிரெஸ் அணிந்து வருவது, அதிலும் தொடை தெரிய உடை அணிந்தபடி ஊருக்குள் வலம் வருவது என்பதெல்லாம் பணிவான மகன் என்ற கதாபாத்திர வார்ப்புக்குப் பொருத்தமாக இல்லை. தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் கமல் அதற்கு வேறு வழிகளை நாடியிருக்க வேண்டும்.

என் கதையில் சக்திவேல் லண்டனில் இருந்து வந்ததும் அவனுடைய அப்பா சின்ன ஐயா, நேராக அவனை ஜெயிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கு பெரிய ஐயாவின் மூத்த மகன் பரமன் ஒரு கொலை கேஸில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருப்பான். சின்ன ஐயா தன் அண்ணனான பெரிய ஐயாவிடம் சக்திவேலைக் காட்டிப் பெருமிதமாகப் பேசுவார். பாரு எம் பையனை வெளிநாட்டுக்கு அனுப்பிப் பெரிய படிப்பு படிக்க வெச்சிருக்கேன். தேவனுக்கு அருவாள்தான் கை… வேல் கம்புதான் கால்ன்னு வெட்டிச் சவடால் விட்டு உன் புள்ளைகளை மிருகமா வளத்து வெச்சிருக்கியே. மூத்த பையன் ஜெயில்ல களி தின்னுட்டு இருக்கான். இளையவன் மாயத்தேவன் என்னிக்கு இங்க வரப்போறன்னு தெரியலை. பேரப் புள்ளைகளையாவது ஒழுங்கா வளக்கப்பாரு. இல்லைன்னா உன் வீட்டுக்காரங்களுக்கே தனி ஜெயில்தான் கட்ட வேண்டியிருக்கும் என்று அறிவுரை சொல்வார்.

அங்கு வரும் மாயத்தேவன், புள்ளையப் பெரிய படிப்பு படிக்க வெச்சிட்டோம்னு கர்வப்படாதீங்க. உம்ம புள்ளையையும் அருவாளை எடுக்க வெச்சு, இதே ஜெயில்ல கொண்டு வந்து அடைச்சுக் காட்டறேனா இல்லையா பாரு என்று சவால் விடுவான். நான் எம் புள்ளையை வெறும் மனுஷனா வளக்கலை… அந்த வானத்துல இருக்கற தேவர்களுக்கு சமமான தேவனா வளத்துருக்கேன். என் உடம்புல உசிரு இருக்கறவரை என் மகன் அருவாளைத் தூக்க மாட்டாண்டா என்று பதிலுக்கு சூளுரைப்பார்.

அப்படியாக என் திரைக்கதையில் கதாநாயகனை வன்முறையை நோக்கித் தள்ளுவதுதான் வில்லனின் லட்சியம் என்பதை முதலில் வலுவாக நிலைநிறுத்துவேன். பின்னால் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே அதில் நாயகன் எப்படி மீண்டுவருகிறான் என்பதை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்.

சக்திவேல் தன் அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடத் தீர்மானிப்பான். ஊரில் உள்ள பெரிய மனிதர்களில் ஆரம்பித்து அரசாங்க உயரதிகாரிகள், பிரபலங்கள் என பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள். பெரிய அய்யாவும் அவருடைய மகன் மாயத் தேவனும் இதைப் பார்த்து ஆத்திரப்படுவார்கள். அந்த விழாவுக்கு வந்து விருந்து சாப்பிடுபவனுகெல்லாம் வாயாலயும் வயத்தாலயும் போக என்று பெரிய ஐயா சபிப்பார். அவருடைய சாபத்துக்கு ஏற்ப அந்த விருந்தில் பரிமாறப்படும் மட்டன் பிரியாணியைச் சாப்பிட்டு பலருக்கு வாந்தி பேதி வந்துவிடும். சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். சின்ன அய்யாவுக்குப் பெரிய அவமானமாகப் போய்விடும். இதெல்லாம் மாயத்தேவனின் சதி என்று எல்லாரும் சொல்வார்கள். சக்திவேலோ, அப்படியெல்லாம் இருக்காது. கறி சரியாக வெந்திருக்காது. அல்லது வேறு ஏதாவது கிருமித் தொற்று இருந்திருக்கும் என்று சொல்லி சண்டையைத் தவிர்த்துவிடுவான்.

ஊரில் இருக்கும் நாட்களில் நண்பர்களுடன் வாழைத்தோப்பில் ஓடியாடி விளையாடுவான். அதைப் பார்க்கும் மாயத்தேவனுக்கு கோபம் தலைக்கு ஏறும். மறுநாள் பச்சைப் பசேல் என்று இலை விரித்துக் குலை தள்ளி இருந்த அந்த வாழைத் தோப்பு வெட்டிச் சாய்க்கப்பட்டு கிடக்கும். இதுவும் மாயனின் வேலைதான் என்று சிலர் சொல்வார்கள். சின்ன அய்யாவுக்குக் கோபம் வந்து அருவாளை எடுத்துக்கொண்டு சண்டைக்குப் புறப்படுவார். ஆனால், ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லக்கூடாது என்று சக்திவேல் அவரை சமாதானப்படுத்திவிடுவான். அதோடு வாழை மரம்தான் வெட்டப்பட்டிருக்கின்றன. வாழைக் குலைகள் சிதைக்கப்படவில்லை. நாம் குலையை வெட்டிவிட்டு மரத்தை வெட்டுவோம். இங்கு மரத்தை முதலில் வெட்டியிருக்கிறார்கள். நமக்கு ஒரு வேலை மிச்சம் என்று சொல்லி மாயத்தேவன் பார்வையில் படும்படி வாழைக்குலைகளை வண்டியில் ஏற்றி அனுப்புவான்.

காதலியுடன் ஆடுகளைப் பிடித்து பால் கறந்து விளையாடுவான். அடுத்த சில நாட்களில் சின்ன அய்யாவின் மந்தை ஆடுகள் எல்லாம் வயிறு வீங்கி நுரை தள்ளிச் செத்துக் கிடக்கும். மாயத்தேவனோ தனக்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோலவே நடந்துகொள்வான். சக்திவேலுக்கு அழகான கார் ஒன்றைப் பரிசாகக் கொடுப்பான். சக்திவேல் அதை ஓட்டிச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக அது தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிடும். ஒருவழியாக சக்திவேல் அதில் இருந்து தப்பித்துவிடுவான்.

இப்போதைய படத்தில் இரும்புக் கம்பி ஏற்றிய லாரிக்கும் வேறோரு லாரிக்கும் இடையில் சக்திவேல் ஓட்டிவரும் காரைச் சிக்க வைத்துக் கொல்லத் திட்டமிடுவதாகக் காட்டியிருப்பார்கள். அது மிகவும் அருமையான காட்சிதான். என்றாலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட கார் எரிவதாகவே என் திரைக்கதையில் இடம்பெறச் செய்வேன்.
தங்கள் குலப் பெருமை காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்று ஊரில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்ட சக்திவேல் தீர்மானிப்பான். மாயத் தேவன் அதற்குப் பலவகைகளில் தொந்தரவு கொடுப்பான். தனது நிலத்தில் கொஞ்சத்தை பள்ளிக்குக் கொடுத்துவிட்டு தன் பெயரையும் பள்ளிக்குச் சூட்ட வேண்டும் என்று பிரச்னையைக் கிளப்புவான். அது முடியாதென்று சக்திவேல் சொல்லிவிடவே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அடுத்த அஸ்திரத்தை ஏவுவான். அனைத்து சாதியினரும் வந்து படிக்கும் இடம் என்பதால் எந்த தனிப்பட்ட அடையாளமும் வேண்டாம். பொதுவான பள்ளியாக இருக்கட்டும் என்று சக்திவேல் தீர்மானித்திருப்பான். மாயத்தேவன் கிளப்பிய புதிய பிரச்னை பெரிதாகிவிடவே, பள்ளிக்கு ஊர் பெயரை மட்டும் சூட்டிவிட்டு பள்ளி வளாகங்களுக்கு காந்தி, நேதாஜி, முத்துராம லிங்கத் தேவர், அயோத்தி தாஸ பண்டிதர் என பல தலைவர்களின் பெயரைச் சூட்டி சக்திவேல் பிரச்னையைச் சமாளிப்பான்.

இப்படிப் பல சம்பவங்கள் நடக்கும் நிலையில் பக்கத்து ஊரில் ஒரு பெரிய திருவிழா நடக்கும். அதில் சிலம்பாட்டப் போட்டியும் இருக்கும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குத் தன் பெண்ணையே பரிசாகக் கொடுக்கப்போவதாக ஒருவர் அறிவித்திருப்பார். போட்டி அறிவிப்பு முடிந்த பிறகுதான் சக்திவேல் தன் நண்பர்களுடன் அங்கு வந்து சேருவான். போட்டியில் அனைவரையும் வென்று வீழ்த்திய ஒருவன், என்னைத் தோக்கடிக்க மீசைமுளைச்ச ஆம்பளை யாருமே இல்லையா… என்று சவால் விடுவான். சக்திவேலுக்கு வீரம் பொத்துக்கொண்டுவரும். களத்தில் குதிப்பான். பரிசுப் பணமாக பொண்ணு தரப்போகிறார்கள் என்பதை பொன்னு தரப்போகிறார்கள் என்பதாக சக்திவேலும் நண்பர்களும் புரிந்துகொண்டுவிடுவார்கள். போட்டியில் சக்திவேல் ஜெயித்துவிடுவான்.

பரிசுப் பொருளாக ஒரு பெண்ணை அழைத்து வந்து தாலி கட்டும்படிச் சொல்வார்கள். சக்திவேலோ அதிர்ந்துபோய் இந்த விஷயம் தனக்குத் தெரியாது என்று சொல்லி மறுப்பான். ஆனால், தாலியை எடுத்துக் கொடுத்து உடனே கட்டச் சொல்வார்கள். அந்த சிக்கலைச் சமாளிக்க என் அப்பாவிடம் கேட்டுத்தான் எதுவும் செய்ய முடியும் என்று சக்திவேல் சொல்வான். அதன்படியே பெண்ணின் அப்பா பெண்ணை அழைத்துக்கொண்டு சின்ன ஐயாவின் வீட்டுக்கு வருவார். அங்கோ சின்ன ஐயா எதிர்பாராதவிதமாக நெஞ்சுவலி வந்து படுத்த படுக்கையாக இருப்பார். இந்தப் பொண்ணு இனிமே உனக்குத்தான் சொந்தம். நீ பொண்டாட்டியா வெச்சிப்பியோ வைப்பாட்டியா வெச்சிப்பியோ அது உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு பொண்ணின் அப்பா போய்விடுவார். உண்மையில் சின்ன ஐயா குடும்பம் தன் பொண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் அப்படிச் செய்துவிட்டுப் போவார்.

வேறு வழியில்லாமல் சக்திவேல் தன் அண்ணியிடம் விஷயத்தைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் தரும்படிச் சொல்வான். அப்பாவின் உடம்பு குணமான பிறகு அவர் மூலமாக அந்தப் பெண்ணை பெற்றவர்களிடம் அனுப்பிவிடலாம் என்று தீர்மானித்திருப்பான். நாலைந்து நாட்களில் சின்ன ஐயாவின் உடல் நிலை குணமாகும். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர், என் மகனுக்கு உன் மீது விருப்பம் இல்லை. உனக்கு வேறோருவனைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று அந்தப் பெண்ணிடம் சொல்வார். ஆனால், இத்தனை நாள் இன்னொருத்தர் வீட்டில் வாழ்ந்தவளை வேறு யாரும் இனிமேல் கல்யாணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்று சொல்லி அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் பார்ப்பாள். ஊரார் அவளைக் காப்பாற்றிவிடுவார்கள். அந்தப் பெண்ணும் அவளுடைய அப்பாவும் சின்ன ஐயாவின் காலில் விழுந்து கெஞ்சவே தன் மகனை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதாக வாக்குக் கொடுத்துவிடுவார். அப்பாவின் வாக்கை மீற முடியாமல் சக்திவேல் திருமணத்துக்கு சம்மதிப்பான். அப்படியாக அவனுக்கும் பஞ்சவர்ணத்துக்கும் அவன் காதலி முன்னிலையிலேயே திருமணம் நடக்கும்.

கன்னி கொண்டு வந்திருக்கிறேன் என்பதை கனி எனப் புரிந்துகொண்டு ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையான காரணம் மகாபாரதக் கதைகளின் பழங்குடி வேர்களில் பொதிந்திருக்கக்கூடும். அல்லது வருணனைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். எது காரணமாக இருந்தாலும் வார்த்தைப் பிழையால் அது நடந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதையே என் கதையிலும் இடம்பெற வைப்பேன். ஒருவேளை, இன்றைய நவீன யுகத்தில் இப்படியான ஒன்று சாத்தியமில்லை என்று கதை விவாதத்தின்போது மறுதலிக்கப்படும் என்றால் வேறொரு திரைக்கதையும் எழுதுவேன்.

விளை நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதாகச் சொல்லி மாயத்தேவன் தடை வாங்குவான். அது எடுபடாமல் போகும். அந்த நிலத்தில் ஒரு பகுதி மாயத்தேவனிடம் வேலை பார்க்கும் செல்லையா என்பவருக்குச் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தைக் கடந்துதான் பள்ளிக்கூடம் கட்டப்படவிருக்கும் நிலத்துக்குப் போகமுடியும். அதோடு அந்த இடமும் கிடைத்தால்தான் பள்ளியை கட்டவே முடியும் என்ற நிலை இருக்கும். செல்லையாவை மிரட்டி அந்தப் பகுதியை தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டுவிடும் மாயன் அதில் ஒரு வேலியைக் கட்டி எழுப்பிவிடுவான்.

வழக்கு நீதிமன்றத்துக்குப் போகும். செல்லையாவின் நிலத்தை அவருடைய அப்பா, பேத்தி பஞ்சவர்ணம் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்துவிடுவார். எனவே, செல்லையாவிடம் இருந்து மாயத்தேவன் எழுதி வாங்கியது செல்லாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகிவிடும். பஞ்சவர்ணம் அந்த நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட தைரியமாக எழுதிக் கொடுத்துவிடுவாள். இதனால் கோபப்படும் மாயத் தேவன் ஒருநாள் இரவில் பஞ்சவர்ணத்தைக் கடத்திக் கொண்டுசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான். மறுநாள் பஞ்சாயத்தில் யார் அந்தப் பாதகத்தைச் செய்தது என்று விசாரிப்பார்கள். இரவென்றதால் அடையாளம் தெரியவில்லை என்று பஞ்சவர்ணம் அழுதபடியே சொல்வாள். விரைவில் நல்ல வழி சொல்வதாக சின்ன ஐயா அவளை சமாதானப்படுத்தி அனுப்புவார்.

சக்திவேலை சம்பவம் நடந்த இடத்தில் அந்த நேரத்தில் பார்த்ததாக அப்போது தோப்புக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் சின்ன அய்யாவிடம் தனியாக வந்து சொல்லுவார். சக்திவேலின் அறுந்த செருப்புகள் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்து கிடைத்ததாகக் கொண்டுவந்து காட்டுவார். சந்தர்ப்ப சாட்சியங்கள் சக்திவேலுக்கு எதிராக இருக்கவே விஷயத்தை வெளியில் தெரியாமல் சுமுகமாக்த் தீர்த்துவைக்க முடிவு செய்வார்.

இதனிடையில் பஞ்சவர்ணம் கிணற்றில் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ள முயற்சி செய்வாள். ஊரார் காப்பாற்றிவிடுவார்கள். கெடுத்தவனைக் கண்டுபிடிச்சு கட்டிக் கொடுத்தா அதுக்குப் பிறகும் நான் நாண்டுக்கிட்டுத்தான் சாவேன். நல்லவனுக்கு வாக்கப்படத்தான் இந்த ஜென்மமே எடுத்திருக்கேன்.. என்னைக் கட்டிக்க இனி எந்த நல்லவனும் வரப்போறதில்லைன்னு ஆயிப்போச்சு. இனி நான் வாழறதுல அர்த்தமே இல்லை என்று பஞ்சவர்ணம் கதறி அழுவாள். கவலைப்படாத… நீ எந்தத் தப்பும் செய்யலை. உன்னை நான் மருமகளா ஏத்துக்கறேன். என் ரெண்டாவது மகன் நான் சொன்ன வாக்கை மீறமாட்டான் என்று சத்தியம் செய்து தருகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சக்திவேல் கடைசியில் அப்பாவின் உத்தரவை மீற முடியாமல் பஞ்சவர்ணத்தைத் திருமணம் செய்துகொள்வான்.

இப்போதைய கதையில் பஞ்சவர்ணத்துக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது. மாயத் தேவனுக்கு பயந்து மாப்பிள்ளை திருமணத்தன்று கடிதம் எழுதிவைத்துவிட்டு ஓடிப் போய்விடுகிறான். ஊரில் இருக்கும் வேறு ஆளுக்குத் திருமணம் செய்து வைத்தால் அவனும் இப்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று பெண்ணின் அப்பா கலங்கி அழவே வேறு வழியில்லாமல் பஞ்சவர்ணத்தை சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. திருமணம் நின்று போவதென்பது எப்போதும் நடக்கும் விஷயம் இல்லைதான். என்றாலும் கதாநாயகன் தான் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ள அது வலுவான காரணமாக இருக்க முடியாது. அந்த ஊரில் இருப்பவர்கள் வேண்டுமானால் மாயனுக்கு பயப்படுபவர்களாக இருக்கலாம்.வேறு ஊரில் ஆண்களே இல்லையா என்ன? அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தால் அவர்களும் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிடுவார்களா என்ன? எனவே, பஞ்சவர்ணத்தை சக்தி வேல் மணக்க வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் டிரமாட்டிக்கான காட்சி அவசியம். எனவே, என் திரைக்கதையில் மேலே கூறிய இரண்டில் ஒன்றையே இடம்பெற வைப்பேன்.

சில மாதங்கள் கழித்து, மாயத்தேவன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்வான். அந்த விருந்துக்கு சின்ன அய்யா, சக்தி வேல், அவனுடைய அண்ணன் என எல்லாரும் போயிருப்பார்கள். அங்கு நடக்கும் சீட்டாட்டத்தில் பங்கெடுக்கும்படி மாயத்தேவன் சக்திவேலைச் சீண்டுவான். வீடு வாசல், தோட்டம் துரவு எல்லாத்தையும் வெச்சு ஆடத் தயாராக இருப்பதாக மாயத்தேவன் சொல்வான். இல்லாவன் கிட்ட போய் இதைச் சொல்லு என்று சக்திவேல் மறுத்துவிடுவான்.

எப்படியும் சக்திவேலை வலையில் விழவைக்க வேண்டும் என்று நினைக்கும் மாயத்தேவன், போட்டில நான் தோத்துட்டா நீ என்ன சொன்னாலும் கேட்கறேன். சண்டை சச்சரவு வேண்டாம்னு சொல்றியா அதையும் கேட்கறேன் என்று சொல்வான். இது சக்திவேலை யோசிக்க வைக்கும். போட்டியில தோத்துட்டா வீட்ல இருக்கற அருவாள், வேல் கம்பு எல்லாத்தையும் கொண்டுவந்து என் காலடில போட்டுட்டு இனிமே எக்காலத்துலயும் வம்பு தும்புக்குப் போகமாட்டேன்னு ஊர்க்காரங்க முன்னால வாக்குக் கொடுக்கணும் என்று சக்திவேல் சொல்வான். மாயத்தேவனும் அதற்கு சம்மதிப்பான்.

ஆனா நான் ஜெயிச்சா நான் கேக்கறதை எல்லாம் தந்துடணும் என்று சொல்வான். தான் தோற்கமாட்டோம் என்ற தைரியத்தில், பெரியப்பா பையனை தீய வழியில் இருந்து காப்பாற்ற கிடைத்த ஒருவழி என்று நினைத்து சக்திவேல் ஆட்டத்துக்கு ஒப்புக்கொள்வான். ஆனால், வீடு வாசல், தோட்டம், வயல் என சக்திவேல் ஒவ்வொன்றாகத் தோற்க ஆரம்பிப்பான். விட்டதைப் பிடிக்கிறேன் என தொடர்ந்து விளையாடி குடும்பத்தினரையும் பணையம் வைத்து கடைசியில் தன்னையும் வைத்து ஆடித் தோற்றுவிடுவான்.

மாயத்தேவன் முதல் வேலையாக பஞ்சவர்ணத்தை சபை நடுவில் அழைத்துவந்து மானபங்கப்படுத்துவான். சக்திவேலும், சின்ன ஐயாவும் ஊர் பெரிய மனிதர்களும் எதுவும் செய்ய முடியாமல் தலைகுனிந்து நிற்பார்கள்.

பள்ளிக்கூடம் கட்டும் பணியில் சக்திவேலுக்குத் துணையாக அந்த கிராமத்தில் தங்கியிருக்கும் பழைய காதலி பானுவுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் பெரும் கோபத்தை வரவைக்கும். நான் உடம்பு தெரிய டிரெஸ் போட்டதுனால உங்க மானமும் கலாசாரமும் போச்சுன்னு கத்தினீங்களே. இன்னிக்கு நீங்க என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க. பொண்ணை தாயா தெய்வமா மதிக்கறதா சொன்னீங்களே. இப்ப கேவலம் ஆடு மாடு மாதிரி அடுத்தவன் கிட்டப் பணயம் வெச்சுட்டு ஒருத்தன் ஆடியிருக்கான். எல்லாரும் வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்களே.. சூதாட்டத்துல ஆடு மாடை வைச்சு ஆடலாம். வீடு வாசலை வெச்சு ஆடலாம். ரத்தமும் சதையுமான மனுஷியை எப்படி வெச்சு ஆடமுடியும். அவ என்ன உயிரில்லாத ஜடமா என்று சீறுவாள்.

என்ன சக்தி… உங்க அப்பா வாக்குக் கொடுத்திட்டாருன்னு என் வாழ்க்கையை நாசமாக்கின. இப்ப உன்னை நம்பி வந்த இந்தப் பொண்ணையும் நட்டாத்துல விடறியே… நீயெல்லாம் ஒரு மனுஷனா… இந்தத் தாலிதான பஞ்சவர்ணத்தை உனக்கு மனைவியா அடிமையா ஆக்கிவெச்சிருக்கு என்று ஆக்ரோஷமாக பஞ்சவர்ணத்தின் கழுத்தில் கிடக்கும் தாலியை அறுக்கப் போவாள். பஞ்சவர்ணமோ கதறியபடியே பானுவின் காலில் விழுவாள். என் புருஷன் என்னை வெச்சு சூதாடினதுல எந்த தப்பும் இல்லை. இந்த வாழ்க்கையே எனக்கு அவர் கொடுத்ததுதான். அவருக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் கிடையாது. அவரைத் திட்டாதீங்க என்று அழுவாள். பானுவோ அதிர்ச்சியில் உறைந்துபோவாள்.

மாயத்தேவன் கைகளைத் தொடையில் தட்டியபடி பஞ்சவர்ணத்தின் புடவை முந்தானையில் கை வைத்து இழுக்கப் போவான். ஆத்திரமுறும் பானு அவனைத் தடுத்து நிறுத்தியபடி, அவ முந்தானையை அவுக்கறதுக்கு முன்னால என் முந்தானை அவு என்று குறுக்கே நிற்பாள். மாயத்தேவன், கரும்பு தின்னக் கூலி கொடுத்து போனஸும் கொடுத்தா விட்டுடுவேனா என்று சிரித்தபடியே அவளை நெருங்குவான். சட்டென்று இன்னொரு பெண், பானுவைத் தொடும் முன் என் முந்தானையை அவு என்று முன்வருவாள். மாயத்தேவன் மேலும் மகிழ்ந்து அவளை நெருங்கிப் போவான். வேறொரு பெண் என் முந்தானையை முதலில் அவு என்று முன்னால் வந்து நிற்பாள். இப்படியே மாயனை ஒவ்வொரு அடியாகப் பின்னால் போக வைத்தபடியே வரிசையாக ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராக வந்து பஞ்ச வர்ணத்துக்குக் காவல் அரணாக நிற்பார்கள். பஞ்சவர்ணம் ஆயிரத்தெட்டு கைகள் கொண்ட துர்காதேவி போல் விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டிருப்பாள். கடைசியாக மாயத் தேவனின் அம்மா முன்னால் வந்து நின்று, அவ கிட்ட இருக்கறதுதாண்டா என் கிட்டயும் இருக்கு… வா வந்து அவுடா என்று முந்தானையை மாயனின் முகத்தில் வீசி எறிவாள். மாயத்தேவன் வெட்கித் தலை குனிந்து அம்மாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பான்.

ஆனால், சின்ன ஐயா குடும்பத்தை அவர்களுடைய வீட்டில் இருந்து மூர்க்கத்தனமாக அடித்துத் துரத்திவிடுவான். நடுத்தெருவில் நிராதரவாக நிற்கும் சக்திவேல் குடும்பத்தினருக்கு அவர்களுடைய ஆட்கள் தங்கள் வீட்டை தருவதாகச் சொல்வார்கள்… சக்திவேலோ வேண்டாம் என்று சொல்லி மறுத்து ஊருக்கு வெளியே இருக்கும் பொட்டல் காட்டில் கூடாரம் அடித்து குடும்பத்தினருடன் தங்குவான். மாயத்தேவன் தன்னுடைய தோப்பில் அவர்களுக்கு கூலி வேலை செய்யும்படி தண்டனை கொடுப்பான். சின்ன ஐயாவையும் வேலை செய்யச் சொல்லி அவமானப்படுத்துவான். தன் குடும்பம் படும் துயரத்தைப் பார்க்க சகிக்காமல் சின்ன ஐயா நெஞ்சுவலி வந்து இறந்துவிடுவார். பூர்விக நிலத்தில் சிறு பகுதியை கெஞ்சிக் கேட்டு வாங்கி அதில் சின்ன ஐயாவை சக்திவேல் அடக்கம் செய்வான்.

மறுநாள் எழுந்து பார்க்கும்போது அந்த கல்லறை தோண்டிச் சிதைக்கப்பட்டு சின்ன ஐயாவின் உடலை நாய்கள் கடித்துத் தின்று கொண்டிருக்கும். இதைச் செய்தது மாயன்தான் என்று ஊரே திரண்டு போய் அவனை அடிக்கப் புறப்படும். மாயனின் ஆட்களும் அருவாள் வேல்கம்புடன் சண்டைக்கு இறங்குவார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் சக்திவேல், எங்களுக்காக ஊரார் சண்டை போடவேண்டாம் போய்விடுங்கள் என்று கெஞ்சுவான். தம்பி… இதுவரை நீங்க சொன்னதுக்காக பொறுத்துக்கிட்டு இருந்தோம். இனியும் அப்படி இருக்க முடியாது. சின்ன ஐயாவை உயிரோட இருக்கும்போதுதான் அவமானப்படுத்தினான்னு பார்த்தா செத்த பிறகும் இப்படி கேவலப்படுத்தியிருக்கான். அவரு உங்களுக்கு அப்பா மட்டும்தான். எங்களுக்கு அவரு தெய்வம் மாதிரி தம்பி… உங்களுக்கு சண்டை, ரத்தம் பிடிக்கலைன்னா ஒதுங்கிப் போயிருங்க என்று சீறுவார்கள்.

சண்டையே வேண்டாம்னு சொன்னவருக்காக சண்டை போடறது ரொம்பத் தப்பு… என்று அவர்களிடம் மன்றாடுவான். அப்படி நாங்க வெட்டிக்கிட்டுச் சாகக்கூடாதுன்னு நீ நினைச்சா, நீ போய் மாயனை வெட்டி அவன் தலையைக் கொண்டுட்டு வா என்று அவர்கள் சொல்வார்கள். ஊரார் ரத்தம் எங்க அப்பாவைப் புதைச்ச இந்த மண்ணுல விழ வேண்டாம். நானே சண்டைக்குப் போறேன் என்று சொல்லி அவர்களிடமிருந்து அருவாள் வேல் கம்பைப் பிடுங்கி கீழே போட்டுவிட்டு, அதில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மாயனுடன் மோதத் தயாராவான். அப்படி வாடா தேவன் மகனே… இதுக்குத்தாண்டா காத்திட்டுருந்தேன் என்று கொக்கரித்தபடியே மாயனும் களத்தில் குதிப்பான். பூமி நடு நடுங்க இரண்டு பேரும் சண்டையிடுவார்கள். கடைசியில் சக்திவேல் மாயனை வெட்டிச் சாய்ப்பான். சக்திவேல் ரத்தம் படிந்த தன் கையைப் பார்த்தபடியே கதறி அழுவான். சூரியனை மறைத்தபடி வானில் கழுகுக் கூட்டம் சூழத் தொடங்கும். புள்ள குட்டிகளைப் போய்ப் படிக்க வைய்யுங்க ஐயா என்று கதறி அழுதபடியே சக்திவேல் காவல் துறையிடம் சரணடைவான்.

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற ஆதிக்கக் கோணத்தில் ஆரம்பித்து பிற்படுத்தப்பட்ட யாதவ சாதியைச் சேர்ந்த கிருஷ்ணர் ஆதிக்க சாதியான சத்திரியர்களுக்கு இடையில் தூண்டிவிட்ட போர்தான் அது என்ற கலகக் குரல் வரை அனைத்து வாசிப்புகளுக்கும் இடம் கொடுக்க்க்கூடிய ஒரு படைப்பு மகாபாரதம். இன்னும் சொல்லப்போனால் ஆணாதிக்க சக்திகளின் பேரழிவைக் கொண்டுவந்த பெண் என்ற பெண்ணிய நோக்கிலான வாசிப்புகூட அதில் சுற்றி வளைத்து சாத்தியமே. ஆனால், இதில் எந்த ஒன்றும் கமல்ஹாசனின் குருவி மூளைக்கு எட்டாமல் போய்விட்டது.

நான் மேலே சொல்லியிருக்கும் கதையைக்கூட இடையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு தேவர் பிரிவுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு அழிப்பதாகக் காட்டலாம். விருந்தின்போது உணவில் நோய்வாய்பட்ட ஆட்டுக்கறியைக் கலத்தல், ஆடுகளை விஷம் வைத்துக் கொல்லுதல், வாழைத்தோப்பை நாசமாக்குதல், பஞ்சவர்ணத்தைக் கெடுத்தது சக்திவேல் என பொய் சொல்லியது என பெரிய அய்யாவுக்கும் சின்ன அய்யாவுக்கும் இடையிலான போட்டி பொறாமையை ஊதி ஊதிப் பெரிதாக்கி அவர்களை தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைத்ததாகக் காட்டலாம். அல்லது ஆணாதிக்கவாதிகளை அழிக்க பஞ்சவர்ணம் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகமாகக்கூட இந்தக் கதையைக் கொண்டு செல்லலாம்.

(தொடரும்)

மர்ம சந்நியாசி – 5

இறுதியாக, சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி ஒரு பட்டியல் தயாரித்தார். மேஜோகுமாருக்கும் சந்நியாசிக்குமான ஒற்றுமை/வேற்றுமை பட்டியல் அது.

இந்த வழக்கு நடந்த சமயத்தில் கை ரேகைவியல் நிபுணத்துவம் அடைந்திருந்த போதிலும், வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. காரணம் சந்நியாசியின் கைரேகையை ஒப்பிட்டுச் சொல்வதற்கு மேஜோ ராஜாவின் கைரேகை கிடைக்கவில்லை. இப்போது இருப்பது போன்று டிஎன்ஏ-வை வைத்து உண்மையை கண்டுபிடிக்கும் முறை அன்று இருந்திருந்தால், பாவல் சந்நியாசியின் வழக்கு எளிதாக முடிந்துபோயிருக்கும்.

சாட்சியங்கள் சந்நியாசிக்கு ஆதரவாக இருந்தாலும் பிபாவதியின் வழக்கறிஞரான சவுத்ரி விடுவதாக இல்லை. சரி, மேஜோ ராஜாதான் சந்நியாசி என்றால், அவர் எதற்கு பன்னிரண்டு ஆண்டுகள் சும்மாயிருக்கவேண்டும் என்ற கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பினார். அவர் உயிருடன் இருந்திருந்தால் எப்போதோ அரண்மனைக்கு திரும்பி இருக்கவேண்டும், அப்படி இல்லாமல் 12 ஆண்டுகாலம் கழித்து வருவது ஏன்? நல்ல கேள்விதான். அதற்கான பதிலாக, சந்நியாசியின் வழக்கறிஞர் சாட்டர்ஜி சொன்னது ‘அம்னீஷியா’. அம்னீஷியாவைப் பற்றி சந்நியாசி தன்னுடைய வாக்குமூலத்தில் சொன்னதாவது, ‘நான் காட்டில் மலைப்பகுதியில் ஏதோ ஒரு குடிலில் இருந்தேன். என்னை நான்கு சாதுக்கள் கவனித்துக் கொண்டார்கள். என்னால் அவர்களுடன் பேச முடியவில்லை. பல நாள்கள் கழித்து, என்னை அவர்களுடன் வரும்படி கூறினர்.  நான் எங்கு சென்றேன் என்று நினைவில்லை. ரயில் எங்கெங்கோ பல இடங்களுக்கு சென்றதாகத் தோன்றுகிறது. நாள்கள் மாதங்கள் ஆயின, மாதங்கள் வருடங்களாயின. எனக்கு என்னுடைய குரு ஒரு நாள் தீட்சை வழங்கினார். நான் அப்போது அவரிடம், நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என்றேன். அதற்கு அவர், தகுந்த காலம் வரும்போது நான் உன்னை உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். மேலும் என்னுடைய குரு, நான் மாயை கலைந்து திரும்பினால் என்னை சந்நியாசத்தில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார். அதற்குப் பிறகு நான் யோகி ஆக முடியும் என்றார். நான் டாக்காவுக்குச் சென்று, அங்கு சில மாதங்கள் தங்கினேன். பின்னர் அங்கிருந்து ஜெய்தேபூருக்குச் சென்றேன். பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியது’.

இது கட்டுக்கதை என்றார் பிபாவதியின் வழக்கறிஞர். சந்நியாசியின் கூற்றை நிரூபிக்க, நீதிமன்றத்தின் ஆதாரங்கள் கொண்டுவரப்பட்டன. பல மருத்துவர்களும் மனோதத்துவ அறிஞர்களும் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். வாதியின் சார்பில் லெஃப்டினண்ட் கர்னல் ஹில் என்பவர் விசாரிக்கப்பட்டார். இவர் ஒரு எம்.டி. மேலும் இவர் ராஞ்சியில் உள்ள ஐரோப்பிய மன நல காப்பகத்தில் சூப்பிரன்டண்டாக 30 வருடகாலம் பணியாற்றி இருக்கிறார். ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.

பிரதிவாதியின் தரப்பில் மேஜர் துன் ஜிபாய் எம்.பி.பி.எஸ் அவர்களும், மேஜர் தாமஸ் அவர்களும் விசாரிக்கப்பட்டனர். இவ்விரண்டு மருத்துவர்களுமே, திடீர் அதிர்ச்சிக்கு (Shell shock) உள்ளான நோயாளிகளுக்கு மருத்துவம் அளித்திருப்பதாக தெரிவித்தனர். மேஜர் துன் ஜிபாய், டாக்டர் டெய்லர் எழுதிய Readings in Abnormal Psychology and Mental Hygiene என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஒருவருக்கு விபத்தோ அல்லது உடம்பில் எந்தவிதக் கோளாறோ இல்லாத போதும், ‘அம்னீஷியா’  ஏற்படக் கூடும் என்றார். இந்த ஞாபக மறதியில் பல விதங்கள் உள்ளன என்றும், அவற்றுக்கு பல மருத்துவப் பெயர்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாதிரி ஞாபக மறதி, ரிக்ரஷனில் தொடங்கி டபுள் அல்லது மல்டிப்பிள் பெர்ஸினாலிட்டி டிஸ்ஆர்டராகவோ மாறும் என்றார்கள்.

0

இங்கிலாந்தில் ரிக்ரஷன் தொடர்பாக ஒரு பிரபல சம்பவம் நடைபெற்றது. ஹானா என்று ஒரு பாதிரியார் இருந்தார். அவர் திடீரென்று ஒரு நாள், காலையில் பிறந்த குழந்தை போன்று நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவருடைய அறிவாற்றல் மறைந்துபோனது. முந்தைய நினைவுகள் எதுவும் இல்லை. இது ஒரு குழந்தை நிலை என்று மனோதத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த ரிக்ரஷன் பற்றிய விவரங்கள் Sidis and Goodhart எழுதிய Multiple Personality என்ற புத்தகத்தில் இருக்கிறது.

ஞாபக மறதியில் இன்னொரு வகை டபுள் பெர்சினாலட்டி அல்லது டிஸ்அஸோஸியேசன். அதாவது ஒருவர் சாதரணமானவராகத்தான் இருப்பார். ஆனால் அவருக்கு தான் யார் என்ற உணர்வு இருக்காது. இது போன்ற நபர்களைப் பற்றி பேராசிரியர் ஜேனட் (Pierre Janet) என்பவர் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ஒரு விசித்திரமான குறிப்பு அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இங்கேயும் மறதிக்கு ஆளானவர் ஒரு பாதிரிதான். அவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் ஆன்சல் பவுர்னி. அவர் திடீரென்று ஒரு நாள் வீட்டை விட்டு எங்கோ சென்றுவிட்டார். பின்னர் நூறு மைல்களுக்கு அப்பால் பென்ஸில்வேனியா மாநகரத்தில் ‘பிரவுன்’ என்ற பெயரில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

ஜேனட் எழுதிய Major symptoms of Hysteria என்ற புத்தகத்திலிருந்து மேலும் ஒரு எடுத்துக்காட்டு கொடுக்கப்பட்டது. ஒரு மனிதன் தான் யார் என்பதை மறந்துவிட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிலை செய்து வந்தான். பின்னர் நான்கு மாதங்கள் கழிந்து அவன் பழைய நிலைக்குத் திரும்பினான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் தான் என்ன செய்து வந்தோம் என்ற எந்த ஞாபகமும் அவனுக்கு இல்லை.

0

இந்தக் கதைகளை விவரித்து சந்நியாசியை நியாயப்படுத்த முயன்றபோது, பிபாவதி சார்பில் சாட்சியம் அளித்த மருத்துவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சந்நியாசி தன்னுடைய சுற்றுப் பயணத்தின் முதல் ஆண்டில் டார்ஜிலிங்கிலிருந்து காசிக்கு சென்ற சமயத்தில் ரிக்ரஷனில் இருந்தது உண்மையானால்,  அது டிஸ்அசோசியேஷன் இல்லாமல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றனர். இரண்டாவதாக சந்நியாசி தன்னுடைய இரண்டாவது பர்சனாலிட்டியை இழந்து முதல் பர்சனாலிட்டியைப் பெற்றார் என்றால், அவருக்கு இரண்டாவது பர்சினாலிட்டியின் நினைவு இருக்காது.  மூன்றாவதாக டிஸ்அசோசியேஷன் எல்லோருக்கும் சாதாரணமாக வராது. நரம்பு வியாதி, இழுப்பு /வலிப்பு இருப்பவர்கள் அல்லது ஹிஸ்டீரியா நோயாளிகளுக்குத்தான் வரும் என்று மேஜர் தாமஸும் மேஜர் தன்ஜிபாயும் தெரிவித்தனர்.

லெப்டினண்ட் கர்னல் ஹில், மேஜர் தாமஸ் மற்றும் மேஜர் துன் ஜிபாய் சொன்ன கருத்துகளை எதிர்த்தார். மற்ற மருத்துவர்களைவிட டாக்டர் ஹில்ஸுக்குத்தான் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் அதிகம் இருக்கிறது. அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், சந்நியாசி குழந்தை நிலையில் இருந்ததாக எங்கேயும் குறிப்பிடவில்லை என்றார். அவருக்கு மரம், மலை, சாதுக்கள், ரயில் ……. போன்ற விவரங்கள் தெரிந்திருக்கிறதே தவிர, டார்ஜிலிங்கிலிருந்து காசி வரை என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார் ஹில்ஸ்.

இந்த சாட்சியத்தைப் பற்றி நீதிபதி தன் தீர்ப்பில் கீழ்வருமாறு கூறினார்.

பாவல் சந்நியாசி வழக்கில் சொல்லப்பட்ட சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. ஆனால் அதற்காக அந்த சம்பவங்கள் நடைபெறவில்லை என்று சொல்லமுடியாது. இப்படியெல்லாம் நடக்குமா என்று பலர் கேட்கலாம். நடக்காது என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. இம்மாதிரி சம்பவங்கள் பல உலகளவில் நடைபெற்றிருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டன. இரு தரப்பும் அதை ஒப்புக் கொண்டிருக்கின்றன. இது சம்பந்தமாக பல மனோ தத்துவவியல் புத்தகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக டாக்டர் டெய்லரின் அப்னார்மல் சைக்காலஜி பல ஆதாரங்களை அளிக்கிறது.

ஆக, ஒருவர் இம்மாதிரி மனநிலைக்கு ஆட்படமுடியாது என்று எந்த காரணத்தையும் முன்வைக்க முடியாது. மேஜர் தாமஸ் அல்லது மேஜர் துன்ஜிபாய் சொல்வது போல அம்னீஷியா ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவுகோளுக்கு உட்பட்டுதான் வரும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. சில நோயாளிகள், தாங்கள் இருக்கும் சூழ்நிலையோடு தங்களை இணைத்துக்கொள்வர். வேறு சிலர், தங்களுடைய குழப்பமான மனநிலையில், தாங்கள் இருக்கும் சூழ்நிலையோடு ஒட்டாமல் வாழ்வர். இவ்விரு வேறுபாட்டு நிலைகளுக்கு நடுவில், பலதரப்பட்ட மனநிலை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு Disassociation, Regression போன்ற மன நோய்களால் பல போர் வீரர்கள் அவதிப்பட்டனர். போர் வீரர்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு War neuroses என்று அழைக்கப்பட்டது. இவர்களை குணப்படுத்துவதற்கென்றே சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட போர் வீரர்களுக்கு அவர்களுடைய பெயர், ஊர், அவர்களுடைய ரெஜிமண்ட்/ பட்டாலியன் எதுவும் நினைவில் இல்லை. போருக்கு முன்பு அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா எதுவும் சொல்லமுடியவில்லை. இருப்பினும் தாங்கள் சார்ந்திருந்த சூழ்நிலையைப் புரிந்து அவர்களால் வாழமுடிந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியிருந்தவர்களிடம் சகஜமாகப் பேசினார்கள். மற்றவர்களைப் போல எல்லாப் பொருள்களையும் பயன்படுத்தினர். புதிதாக யாராவது இவர்களைப் பார்த்தால், அவர்களால் இந்த போர்வீரர்கள் அம்னீஷியா நோயாளிகள் என்று அடையாளம் கண்டுகொள்ளமுடியாது.

மேற்சொன்ன சம்பவங்கள் பற்றி தெரிந்துகொள்ளும் போது நமக்கு வியப்பாக இருக்கிறது. அம்னீஷியா நோயாளிகளை வகைப்படுத்தமுடியும். அம்னீசியா நோயாளிகலெல்லாம் ஒரே மாதிரியானவர்கள் என்று சொல்ல முனைவது ஏற்புடையது ஆகாது. இவர்களை சட்டத்துக்கு ஆட்படுத்தமுடியாது. சில அம்னீஷியா நோயாளிகளுக்கு நினைவு திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகும். சிலருக்கு வருடக்கணக்கில் ஆகும்.  சிலருக்கு நினைவு திரும்பவே திரும்பாது. இந்த வழக்கில் சந்நியாசிக்கு நினைவு திரும்புவதற்கு 12 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

இந்த வழக்கில், பிபாவதி தரப்பில் நிரூபணம் செய்யவேண்டிய விஷயம் என்னவென்றால், டார்ஜிலிங்கில் தொடங்கி இந்த வழக்கு விசாரணை நடக்கும் வரை உள்ள காலத்தில் சந்நியாசிதான் மேஜோ குமார் என்பதை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, சந்நியாசி மேஜோ குமாராக இருக்கமுடியாது என்பதை நிரூபிக்கவேண்டும். அப்படி முடியவில்லையென்றால், டார்ஜிலிங்கிலிருந்து டாக்காவரை நடந்த சம்பவங்களில் காட்டப்படும் சிறு சிறு முரண்பாடுகள் வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.

வாதி தரப்பில் கொடுக்கப்பட்ட சாட்சியங்களை சந்தேகிப்பதற்கில்லை. சந்நியாசிக்கு 12 ஆண்டு காலம் அம்னீஷியா இருந்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால்தான் மேஜோ குமார் உயிரோடு இருந்தும், அவரால் அரண்மனைக்கு திரும்பமுடியவில்லை.’

0

சந்நியாசிக்கு அம்னீஷியா இருந்தது என்று முடிவாகிவிட்டது. பிறகென்ன வழக்கை முடித்துவிட்டு தீர்ப்பு சொல்லவேண்டியதுதானே என்கிறீர்களா?

ஆனால் தீர்ப்பு சொல்வதற்கு முன்னர், நீதிமன்றம் மற்ற சில விவகாரங்களை அலச வேண்டியிருந்தது. சந்தேகத்தின் பேரில் தீர்ப்பு கூறுவது ஏற்புடையதாகாது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்று பத்தாம்பசலித்தனமாக தீர்ப்பு சொல்ல முடியாது. ஐயமின்றி நிரூபித்தாகவேண்டும். வக்கீல் சவுத்ரி, சந்நியாசி மேஜோ குமாராக இருக்கமுடியாது, அவர் போலி என்பதை நிரூபிக்கும் விதத்தில் சில சாட்சியங்களையும் வாதங்களையும் முன் வைத்தார். அவற்றையும் பார்த்து விடுவோம். அப்போதுதான் வழக்கு முழுமை பெறும்.

பிபாவதி தரப்பில் சொல்லப்பட்ட விஷயம் இது. மே மாதம் 8 ஆம் தேதி 1909ம் வருடம் டார்ஜிலிங்கில் மழை பெய்தது என்று சந்நியாசியும் அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த சாதுக்களும் சொன்னது பொய். அன்று மழையே பெய்யவில்லை. இந்த வாதம் எதிர்கொள்ளப்பட்து. மழை பெய்ததற்கான ஆதாரம் வானிலை ஆய்வு மையத்தின் மழைப் பதிவேடுகளில் இருக்கிறது என்றார் பிபாவதியின் வழக்கறிஞர் சவுத்ரி. ஒரு ஊரில் இரண்டு மூன்று இடங்களில் எவ்வளவு மழை பெய்திருக்கிறது என்று அங்குள்ள மழைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்படும். நீதிபதி டார்ஜிலிங்கில் மழையைப் பதிவு செய்யும் அனைத்து இடங்களுக்கும் சம்மன் அனுப்பி 1909ம் ஆண்டு, மே மாதம் 8 அல்லது 9 ஆம் தேதியில் எவ்வளவு மழை பதிவாகியிருக்கிறது என்ற அறிக்கையை அவர்களுடைய கோப்புகளிலிருந்து நீதீமன்றத்துக்குகு அனுப்பி வைக்குமாறு சம்மனில் கேட்டுக்கொண்டார்.

டார்ஜிலிங்கில் சுமார் ஆறு இடங்களில் மழை கணக்கிடப்படுகிறது. அவை பின்வருமாறு :

1) புனித ஜோசப் கல்லூரி
2) புனித பால் பள்ளிக்கூடம்
3) தாவரவியல் பூங்கா
4) டார்ஜிலிங் நகராட்சி அலுவலகம்
5) பிளண்டர்ஸ் கிளப்
6) Observatory Hill

புனித பால் பள்ளிக்கூடத்தில் பதிவாகும் மழையின் அளவை அரசாங்கம் அவ்வப்போது தன்னுடைய அரசிதழில் வெளியிட்டது. அரசிதழ் குறிப்பின் படி 1909ம் வருடம், மே 4 ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து – மே 12 ஆம் தேதி மாலை 4 மணி வரைக்கும் டார்ஜிலிங்கில் மழை எதுவும் பெய்யவில்லை. புனித ஜோசப் கல்லூரியின் குறிப்பின் படி மே மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதியன்று மழை பெய்ததாக குறிப்பு இருந்தது. அதுவும் அந்தக் குறிப்பில் மே மாதம் 12 ஆம் தேதி சுமார் 300 mm மழை பெய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

புனித ஜோசப் கல்லூரியில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை, அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பாதிரியார் பீல் என்பவர் நிர்வகித்து வந்தார். அவர் பாவல் சந்நியாசி வழக்கில் சாட்சியம் அளித்தார். டார்ஜிலிங்கில் மார்க்கெட் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 500 அடி தாழ்வான பகுதியில் புனித ஜோசப் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் டார்ஜிலிங்கில் முக்கியமான இடமாக கருதப்படும் நார்த் பாயிண்டிலிருந்து சுமார் ஒன்றரை மயில் தொலைவில் கல்லூரி உள்ளது. புனித ஜோசப் கல்லூரியிலோ அல்லது புனித பால் பள்ளிக்கூடத்திலோ மழை பெய்யவில்லை என்றால் டார்ஜிலிங் மார்க்கெட்டிலும், நார்த் பாயின்டிலும் மழை பெய்யாது என்று பேராசிரியர் பீல் திட்டவட்டமாக கூறினார்.

ஆனால் ஜல்பைகுரி மாவட்டதில் (டார்ஜிலிங் ஜல்பைகுரி மாவட்டத்தில் இருக்கிறது) உள்ள அரசாங்க பதிவேட்டின் படி குறிப்பிட்ட தேதிகளில், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அளவுக்கு மழை பெய்திருந்தது.

மே மாதம் 5 ஆம் தேதி 2.41 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 6 ஆம் தேதி 4.98 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 7 ஆம் தேதி 5.77 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 8 ஆம் தேதி 3.36 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 9 ஆம் தேதி 1.15 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 10 ஆம் தேதி 0.21 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 11ஆம் தேதி 0.79 அங்குல மழை பெய்திருக்கிறது
மே மாதம் 12 ஆம் தேதி 2.10 அங்குல மழை பெய்திருக்கிறது

வாதி தரப்பில் டார்ஜிலிங் நகராட்சியிலிருந்து 1909ம் வருடத்திற்கான மழைக்கான பதிவேடு வரவழைக்கப்பட்டது. பிரதிவாதி தரப்பில் தாவரவியல் பூங்காவில் பதியப்பட்ட மழைக்கான விவரங்கள் அடங்கிய கோப்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. தாவரவியல் பூங்கா, டார்ஜிலிங் மார்க்கெட் இருக்கும் இடத்திலிருந்து கீழே தாழ்வான பகுதியில் விக்டோரியா சாலையில் அமைந்துள்ளது.
வானிலை ஆய்வாளர்கள் உள்பட அனைத்து சாட்சிகளும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், டார்ஜிலிங் போன்ற மலைப்பாங்கான பிரதேசங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யும். மலைப்பிரதேசங்களில், சமதரையில் உள்ளது போல் பருவக்காற்று அடித்தால்தான் மழை பெய்யும் என்ற கணக்கெல்லாம் இல்லை. மேலும் அனைவரும் ஒப்புக்கொண்ட இன்னொரு விஷயம், மலைப்பகுதிகளிலேயே ஒரு பகுதியில் மழை பெய்யும், ஆனால் சற்றே தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் மழைத் தூரல் கூட விழுந்திருக்காது. இதற்கு ஒரு உதாரணம், மே 12 ஆம் தேதி டார்ஜிலிங்கில் உள்ள புனித ஜோசப் கல்லூரியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் மழை பெய்திருந்தது. ஆனால் புனித பால் பள்ளிக்கூடத்திலும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் மழை இல்லை. பெரும்பாலான மழைப் பதிவேடுகளில் பார்க்கும்போது மே மாதம் 8 ஆம் தேதியன்று கார்டு ரோடு ஏரியாவில் மழை பெய்திருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் கார்டு ரோடு ஏரியாவுக்கு அருகாமையில் சரிசமமான உயரத்தில் அமைந்துள்ள பாசார் ஏரியாவிலோ அல்லது தாவிரவியல் பூங்காவிலோ மழை பெய்ததாக நகராட்சி மழைப் பதிவேட்டில் எந்த குறிப்பும் இல்லை.

ஆனால் நகராட்சி மழைப் பதிவேட்டை பார்க்கும்போது, அதில் சில தில்லுமுல்லுக்கள் நடைப்பெற்றிருப்பது தெரியவந்தது. பதிவேட்டில் தேதிகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தன.

அதேபோல் தாவிரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மழைப் பதிவேடும் நம்பத் தகுந்தாற் போல் இல்லை. தாவிரவியல் பூங்காவில் உள்ள மழைப் பதிவேட்டை பராமரித்துவந்த குமாஸ்தாவை நீதிமன்றம் சம்மன் செய்தது. அந்த குமாஸ்தா 1908ம் ஆண்டு தான் வேலைக்கு சேர்ந்ததாகவும், 1908ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல், தான் மழைப் பதிவேட்டை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தார். பதிவேட்டில் ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. 1903 ஆம் ஆண்டிலிருந்து மழைக்கான பதிவுகள் முதல் பக்கத்திலும், தட்ப வெட்ப நிலைக்கான பதிவுகள் மறு பக்கத்திலும் குறிக்கப்பட்டிருந்தன. 1909ம் ஆண்டு வரை இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. திடீரென்று தட்ப வெட்பநிலைப் பதிவுகள் முதல் பக்கத்திலும், மழைக்கான பதிவுகள் மறுபக்கத்திலும் மாற்றி பதியப்பட்டிருந்தன. ஏன் பதிவேடு திடீர் என்று மாற்றப்பட்டது என்று கேட்டதற்கு, அந்த குமாஸ்தா நான் மழை, தட்ப வெட்பம் என்ற தலைப்பை முன்னாடியே எழுதிவிடுவேன் என்றும் அதற்கான பதிவுகளை பின்னர் பதிவு செய்வேன் என்றும் பதிலளித்தான். நீதிபதி குமாஸ்தாவைப் பார்த்து பதிவேட்டை காண்பித்து, பதிவுகளில் குறியீடு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பேனா மையும் மாறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் பதிவேட்டில் பயன்படுத்தப்பட்ட மையையும் எழுதப்பட்ட எழுத்துகளையும் பார்க்கும் பொழுது அது சமீபத்தில் எழுதப்பட்டதாக தெரியவந்தது.

பதிவேட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் தாவிரவியல் பூங்காவின் க்யுரேட்டர் – மேற்பார்வையாளர் தன் கையொப்பத்தை இட்டு முத்திரையிட  வேண்டும். ஆனால் பதிவேட்டில் க்யுரேட்டர் கையெழுத்து இல்லை. 1908ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இன்று வரை, தானே திவேட்டில் குறிப்பு எழுதி வருவதாக குமாஸ்தா சாட்சியம் அளித்தான். ஆனால் அவனுடைய பணிப் பதிவேட்டை பார்த்தால் அவன் 1922 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை விடுப்பில் சென்றிருந்தது தெரியவந்தது. இருப்பினும் குமாஸ்தா விடுப்பில் சென்ற நாட்களில் கூட அவனுடைய கையெழுத்து பதிவேட்டில் காணப்பட்டது. எனவே குமாஸ்தாவின் சாட்சியம் நம்பும்படியாக இல்லை. மேலும் மழைப் பதிவேடு உண்மையானதாக இல்லை. அதில் காணப்படும் பதிவுகள் எல்லாம் உட்புகுத்தப்பட்டிருக்கிறன. 1909 ஆம் ஆண்டு, அதற்குப் பிறகு உள்ள வருடங்களுக்கான பதிவேடுகள் ஜோடிக்கப்பட்டவை, அது உண்மையானதாக இல்லை என்று நீதிபதி முடிவுக்கு வந்தார்.

பிரதிவாதி தரப்பில், 1908ம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அன்று மழை பெய்யவில்லை என்று ஆணித்தனமாக நிரூபிக்கமுடியவில்லை.
சரி, மேஜோ குமார் சாகவில்லை என்றால் இறந்தது யார்? அல்லது யாருடைய பிணம் எரிக்கப்பட்டது? என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.
இது ஒன்றும் கொலை வழக்கோ அல்லது கொலை முயற்சி வழக்கோ இல்லை. இருந்தாலும் இந்த வழக்குக்கு மேஜோ குமார் இறக்கவில்லை, அவர் உடல் தீயூட்டப்படவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும்.

(தொடரும்)

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல், கட்டுரை, சிறுகதை என்று பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துகள் வெளிப்படுவது சிறுகதையில்தான் என பலரும் கருதுவதுண்டு. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புன்னகைக்கமுடியும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நம் இளமை காலத்தை தரிசிக்கமுடியும்.

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (” சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்”) நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. கதையின் இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற போது மனம் கனத்து போகிறது.

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்… இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை “பாம்பு”. சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். “அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்” என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. “என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்” என்கிறார் சுஜாதா.

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் “வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா!

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன் எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாக உள்ளது.

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும் சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர் எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த போது கிடைத்த சந்தோஷம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா!

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல் சுஜாதா !

ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்கத் தவறாதீர்கள் !

0

மோகன் குமார்

 

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

ஜூலை 19 அன்று இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இரு தினங்களுக்கு முன்னால், மமதாவும் முலாயம் சிங்கும் இணைந்து அப்துல் கலாமைத் தங்களின் முதல் விருப்ப வேட்பாளாராக அறிவித்தனர். காங்கிரசுக்கு மமதா பாணர்ஜி வைத்த செக் என்று ஊடகங்கள் அதனைக் குறிப்பிட்டன. இந்த ஆண்டே தேர்தல் நடைபெறலாம் என்றும் ஆருடம் கூறின.
பதிலுக்கு பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தியிருக்கிறது சோனியா. சோனியாவின் விருப்ப வேட்பாளர் அல்ல அவர் என்றாலும், அப்துல் கலாமுக்கு மாற்றாக பிரணாப் அமைவார் என்பது சோனியாவின் நம்பிக்கை. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது நிஜமே, என்றாலும் முலாயம் சிங், பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக அடித்த அந்தர் பல்டி, மமதா தனக்குத் தானே செக் வைத்துக் கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பிஜேபி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது. இனி ஆட்டம் சூடு பிடிக்க வேண்டுமானால் மாயாவதியும் கம்யூனிஸ்டுகளும் பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறவேண்டும். அப்போதுதான் பிஜேபியால் தெளிந்த நிலைப்பாட்டை எடுக்க இயலும்.  சங்மாவைப் பொறுத்தவரையில் அதிமுகவும் பிஜூ ஜனதாதளமும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் வேட்பாளராக அவர் நிற்கப் போவது உறுதி.

அலங்காரப் பதவி என்று வருணிக்கப்பட்டாலும், தற்போது சிக்கலான சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது குடியரசுத் தலைவர் பதவி. இந்தப் பின்னணியில், ஒரு குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பார்க்கலாம்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை யாருக்கு இருக்கிறது? 

  1. மாநில சட்டசபை உறுப்பினர்கள்
  2. மக்களவை லோக்சபா உறுப்பினர்கள்
  3. மாநிலங்களவை ராஜ்யசபா உறுப்பினர்கள்.  
ஒரு எம்ல்ஏவின் ஓட்டு  மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒரு எம்எல்ஏவின் ஓட்டு என்பது அவரது மாநில மக்கள் தொகைக்கு ஏற்றவாறு எண்ணிக்கை அளவில் வேறுபடும். அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒரு எம்எல்ஏ வின் ஓட்டின் மதிப்பும் மணிப்பூரில் உள்ள ஒரு எம்எல்ஏவின் ஓட்டின் மதிப்பும் வேறு.

(குறிப்பு: இந்திய அரசின் சட்டப் பிரிவு 52 -2 ன் கீழ் , 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதால் , அதையே இங்கு கணக்கீட்டுக்காக எடுத்துள்ளேன்.)

எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை (1971 ஆம் ஆண்டின் கணக்கின்படி) / மாநிலத்தின் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை * 1000

உதாரணம் :

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 4,11,99,168/234*1000=176.06 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

தமிழ்நாட்டில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 7,21,38,958/234*1000=308 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 2,09,843/32*1000 = 7 (1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

சிக்கிமில் ஒரு எம் எல் ஏ வின் ஓட்டு மதிப்பு = 6,07,688/32*1000=18 (2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு)

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, இந்தியாவைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள 30 மாநிலங்களில், ஒரு எம் எல் ஏ வுக்கான அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ள மாநிலம், உத்தரப் பிரதேசம். மதிப்பு, 495. குறைந்த ஓட்டுகளை சிக்கிம் மாநிலம் பெற்றுள்ளது. மதிப்பு, 18. தமிழ்நாடு 308 எம் எல் ஏக்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மொத்த மாநில சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4120 ஆகும். எம் எல் ஏ க்களின் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை மதிப்பு  5,49,474 .(2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி).

எல்லா மாநிலங்களின் , எம் எல் ஏ வின் எண்ணிக்கை மதிப்பை அறிய இங்கே செல்லவும்.

எம்.பிக்களின் ஓட்டு மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது ?

மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் = லோக்சபா உறுப்பினர்கள் (543 ) + ராஜ்ய சபா உறுப்பினர்கள் (233 ) = 776.

ஒரு எம்.பியின் ஓட்டு மதிப்பு = மாநில சட்டசபை உறுப்பினர்களின் மொத்த ஓட்டு மதிப்பு / மொத்த எம் பிக்களின் எண்ணிக்கை (லோக்சபா + ராஜ்யசபா)

ஒரு எம் பியின் ஓட்டு மதிப்பு = 5,49,474/776=708

மொத்த எம் பிக்களின் ஓட்டு எண்ணிக்கையின் மதிப்பு = 776 * 708 = 5,49,408

ஆதலால், குடியரசுத் தலைவருக்கு விழும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை = 50% (எம் எல் ஏ ) + 50 % (எம் பி )

அந்த அடிப்படையில் மொத்த ஓட்டுகளின் மதிப்பு = 5,49,474+5,49,408=10,98,882 .

குடியரசுத் தலைவராக தகுதி பெற வேண்டிய ஓட்டு மதிப்பு என்ன?

குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர் வெற்றி பெற தேவைப்படும் ஓட்டுகள் = (மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை/2 )+1

அதாவது, 10,98,882/2+1= 5,49,441+1=5,49,442

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்நதெடுக்கப்படுகிறார்?

இரண்டே இரண்டு பேர் தேர்தல் களத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில், முதல் விருப்ப வேட்பாளர் 50 % க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றிருப்பார். அவர் வெற்றி பெற்றவர் என எளிதாக அறிவித்து விடலாம். ஆனால், நான்கு பேர் நிற்கும் பட்சத்தில் எவ்வாறு தேர்ந்தடுக்கப்படுவார்? கீழே கொடுக்கப்பட்ட பெயர்கள் தங்களின் கற்பனைக்கு மட்டுமே.

உதாரணமாக ,

அப்துல் கலாம், பி ஏ சங்மா, பிரணாப் முகர்ஜி, ராம்ஜெத்மலானி என நான்கு பேர் நிற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  விழுந்த மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 15௦௦௦ எனக் கணக்கில் கொள்வோம். ஒவ்வொரு வாக்காளரும் தனது விருப்ப அடிப்படையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு  என வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டும்.

தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?

அப்துல்கலாம் = 5,250

பிரணாப் முகர்ஜி=4,800

ராம்ஜெத்மலானி = 2,700

பி ஏ சங்மா =2,250

7501 ஓட்டுகள் வாங்கியவர் தான் வெற்றி பெற்றவர் என அறிவிக்கப்பட வேண்டும். முடிவுகள் மேற்கூறிய நால்வருக்கும் வராத பட்சத்தில்,  நான்காம் இடத்தில் இருப்பவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப  ஓட்டுகள் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதாவது, அவருடைய ஓட்டு சீட்டில், இரண்டாம் விருப்ப ஓட்டுகள் யாருக்கு என்பதைப் பொறுத்து அந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்.

இந்த நிலையில் பி ஏ சங்மா போட்டியிலிருந்து விலக்கப்பட்டு, அவருக்கு விழுந்த இரண்டாம் விருப்ப ஓட்டுகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் பட்சத்தில் அந்த ஓட்டுகள் அந்தந்த வேட்பாளருக்குப் போய்ச்சேரும்.

பி ஏ சங்மாவின் ஓட்டு சீட்டில் இரண்டாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :

அப்துல் கலாம் = 600

பிரணாப் முகர்ஜி=750

ராம் ஜெத்மலானி = 900

இப்போது வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

அப்துல்கலாம்= 5,250+600= 5,850

பிரணாப் முகர்ஜி= 4800+ 750 = 5,550

ராம் ஜெத்மலானி = 2,700+900=3,600

இந்நிலையிலும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கான 7501 ஓட்டுகளைப் பெறாத காரணத்தினால் , மூன்றாம் நிலையில் உள்ளவர் போட்டியில் இருந்து விலக்கப்படுவார் . மூன்றாவது முறையும் வாக்குகள் எண்ணப்பட்டு, மூன்றாம்  நிலையில் உள்ளவரின் மூன்றாம்  விருப்ப ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும்.

ராம் ஜெத்மலானி ஓட்டு சீட்டில்  மூன்றாம் விருப்ப ஓட்டுகளாக பதிவானவை  :

அப்துல்கலாம் = 1,450
பிரணாப் முகர்ஜி = 2 ,150
இந்த ஓட்டுகள் பகிர்ந்தளிக்கப் படும் பட்சத்தில் அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகள்:
அப்துல் கலாம் = 5,850+1,450=7,300
பிரணாப் முகர்ஜி = 5,550 + 2,150= 7,700
இறுதி சுற்றில் பிரணாப் முகர்ஜி 7 ,501 ஓட்டுகளை விட அதிகமாக பெற்று விட்டதால் அவரே இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆட்டத்தின் போக்கு எந்த சுற்றில் வேண்டுமானாலும் மாறலாம். ஆகையால் அதிக வேட்பாளர்கள் நிற்கிற பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது மிகச் சிறந்த சதுரங்க ஆட்டமாகவே இருக்கும்.
இன்னும் சில தினங்களில் வேட்பாளர்கள் எத்தனை பேர் , எதிர் கட்சிகள் சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள், ஆளுங்கட்சி சார்பில் எத்தனை பேர் நிற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இந்த ஆட்டம் சூடு பிடிக்கும்.  தற்போதைய நிலையில் வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சராக இருமுறையும், வெளியுறவு அமைச்சராக ஏற்கெனவே ஒரு முறையும் பணியாற்றிய தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது. இது என் தனிப்பட்ட முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
0
லஷ்மண பெருமாள்

மமதா : நான் ஆணையிட்டால்…

காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னையை உருவாக்கவும் தெரியும்; அதைத் தீர்க்கவும் தெரியும்! – கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் எழுந்தபோது மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உதிர்த்த வாசகம் இது. ஆட்சியைப் பிடித்தபிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய கூட்டணிக் கட்சிகளிடம் எப்படியெல்லாம் அலட்சியத்துடனும் திமிர்த்தனத்துடனும் நடந்துகொள்ளும் என்பதற்கு சத்திய சாட்சியமாக அமைந்த வாசகம் இது.

ஸ்பெக்ட்ரம் தொடங்கி தேர்தல் வரை திமுகவிடம் காட்டிய துரைத்தனத்துக்கு இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. உபயம்: மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியிடம் இருந்தே பாலபாடம் கற்றுக்கொண்டு, தற்போது அதே கட்சிக்கு விஷப்பரீட்சை வைத்துக்கொண்டிருக்கிறார் மமதா பானர்ஜி. மமதாவின் அதிரடி காய் நகர்த்தல்களால் பேயறைந்துபோல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

கூட்டணி அரசு அமைந்தது முதலே காங்கிரஸ் கட்சியைத் தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் மமதா. கூட்டணியின் ஆகப்பெரிய கட்சி என்பதால் மமதா சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்தது காங்கிரஸ் தலைமை. மற்ற நேரங்களில் பொங்கியெழும் மமதா, சட்டமன்றத் தேர்தலின்போது அடக்கி வாசிப்பார் என்று எதிர்பார்த்தது காங்கிரஸ். ஆனால் அது நடக்கவில்லை. வழக்கம்போல அதிரடி அரசியலையே கடைப்பிடித்தார் மமதா.

ரயில்வே பட்ஜெட் விஷயத்தில் எதிர்ப்புக்குரலை வலுவாக எழுப்பியபோது காங்கிரஸ் தலைமைக்கு தர்மசங்கடம் அதிகரித்தது. தினேஷ் திரிவேதிக்குப் பதிலாக முகுல் ராயை வலுக்கட்டாயமாக அமைச்சராக்கியதில் காங்கிரஸ் தலைமைக்கு வருத்தம்தான். அதை எப்படி வெளிப்படுத்துவது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் உத்தரபிரதேசத்தில் பிரும்மாண்ட வெற்றியைப் பெற்று தேசிய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருமாற்றம் அடைந்தார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்.

திரிணாமுல் காங்கிரஸைக் காட்டிலும் அதிக எம்.பிக்களை வைத்திருக்கும் முலாயம் சிங் யாதவைக் கொண்டு மமதாவுக்கு செக் வைக்கலாம் என்று முடிவுசெய்தது காங்கிரஸ் தலைமை. தேர்தலின்போது இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்காவிட்டாலும்கூட, காங்கிரஸுக்கும் முலாயமுக்கும் நட்பு உண்டு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை முலாயம் கொடுத்துவருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில்தான் ஐ.மு.கூ அரசின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாடியது காங்கிரஸ். அந்த விழாவில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டவர் முலாயம் சிங் யாதவ். மற்ற விருந்தினர்களைக் காட்டிலும் முலாயமுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது காங்கிரஸ். அப்போது அதை மௌனமாக ரசித்துக்கொண்டிருந்தார் மமதா.

இப்படியொரு பரபரப்பான சூழ்நிலையில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற பேச்சு எழுந்தது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி மௌனம் சாதித்தது. ஆகவே, மமதாவும் அமைதியாகவே இருந்தார். திடீரென காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் நிறுத்தக்கூடும் என்ற செய்தி கசியத் தொடங்கியது. அந்த நொடியில் இருந்தே களத்தில் இறங்கிவிட்டார் மமதா.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியை மமதா பானர்ஜி ஆதரிப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றுதான் காங்கிரஸ் தலைமை நினைத்தது. ஆனால் அந்த இடத்தில்தான் மமதா தனது அதிரடி காய் நகர்த்தல்களைத் தொடங்கினார். மண்ணின் மைந்தர்தான். அதில் சந்தேகமில்லை. அதற்காக அவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டார் மமதா.

கூட்டணி விஷயத்திலாகட்டும், ஆட்சி விஷயத்திலாகட்டும், மமதா பானர்ஜி கோபம் கொள்ளும் சமயங்களில் எல்லாம் அவரை சமாதானம் செய்ய சோனியா காந்தி அனுப்புவது பிரணாப் முகர்ஜியைத்தான். பிறகு மமதா சமாதானம் அடைவார். அந்த அளவுக்கு பிரணாப் முகர்ஜிபை மதித்தவர் மமதா. ஆனாலும் அவரைக் குடியரசுத் தலைவராக மமதா விரும்பவில்லை என்பது காங்கிரஸ் கட்சிக்கு முதல் அதிர்ச்சி.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் பற்றிப் பேசுவதற்காக டெல்லி வந்த மமதா பானர்ஜி. உடனடியாக சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவைச் சந்தித்துப் பேசினார். இது காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாவது அதிர்ச்சி. அதுதான் மமதாவின் விருப்பமும்கூட.

கூட்டணியின் ஆகப்பெரிய கட்சியாக திரிணாமுல் இருக்கும்போது, கூட்டணியில் இல்லாத முலாயம் சிங்கை முன்னிலைப்படுத்தியது தன்னை வெறுப்பேற்றவே என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாதவரா என்ன மமதா? பார்த்தார். சாட்சிக்காரனுடன் சமாதானம் ஆவதைவிட சண்டைக்காரனோடு கைகோத்துவிடுவது என்று முடிவுசெய்தார். அப்படிச்செய்வதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார். அதன்மூலம் பல அதிரடிகளை நிகழ்த்தலாம் என்று கணக்கு போட்டார். அதன் ஒருபகுதியாகவே முலாயம் சிங் யாதவைச் சந்தித்துப் பேசினார் மமதா.

பேச்சுவார்த்தை முடிந்தபிறகு மறுநாள் சோனியாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல் வாய்ப்பு பிரணாப் முகர்ஜிக்கு என்றும் இரண்டாவது வாய்ப்பு ஹமீத் அன்சாரிக்கு என்றும் சோனியா சொன்னதாகப் பத்திரிகையாளர்களிடம் கூறினார் மமதா. அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சோனியா சொன்ன வேட்பாளர்கள் பற்றி முலாயமிடம் பேசியபிறகுதான் சொல்லமுடியும் என்றார். இது காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது அதிர்ச்சி.

சொன்னபடியே முலாயம் சிங் வீட்டுக்குச் சென்று விவாதித்தார். பிறகு நேராக சோனியாவைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சந்தித்தது பத்திரிகையாளர்கள். அதுவும், முலாயம் சிங் யாதவையும் கூடவே வைத்துக்கொண்டு. சோனியா காந்தி முன்வைத்த வேட்பாளர்களைப் பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை என்று ஒரேபோடாகப் போட்டார் மமதா. அடுத்து, தங்களுடைய வேட்பாளர் வரிசையை விவரித்தார். ஆம். சோனியா இரண்டு வாய்ப்புகளைச் சொன்னார். ஆனால், மமதாவோ அதைவிட ஒருபடி மேலே சென்றார். மூன்று வேட்பாளர்களைச் சொன்னார். அவருடைய முதல் வாய்ப்பு, அப்துல் கலாம். மூன்றாவது வாய்ப்பு, சோம்நாத் சாட்டர்ஜி. இரண்டாவது வாய்ப்பு யாருக்கு என்பதைப் பிறகு பேசலாம். இப்போது மற்ற இரண்டு வாய்ப்புகள் பற்றிப் பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் பிரணாப் முகர்ஜி. அவரை என்னவென்று சொல்லி மமதாவிடம் ஆதரவு கோருகிறது காங்கிரஸ்? வங்கத்தின் மைந்தன் என்று. அந்தப் பாட்டையே திரும்பிப் படித்திருக்கிறார் மமதா. ‘உங்களுக்கு வங்கத்தின் மைந்தந்தானே வேண்டும்.. இதோ நான் அறிமுகம் செய்கிறேன்.. சோம்நாத் சாட்டர்ஜி.. அவரை நிறுத்துங்கள். இது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நான்காவது அதிர்ச்சி.

காங்கிரஸ் கட்சியின் இன்னொரு சாய்ஸ், ஹமீத் அன்சாரி. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நிறுத்துகிறோம் என்பது காங்கிரஸின் வாதம். அதுதானே விஷயம். இதோ.. என்னுடைய சிறுபான்மை சமூக வேட்பாளர் அப்துல் கலாம். அவரை நிறுத்துங்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் மமதா. இது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த ஐந்தாவது அதிர்ச்சி.

யாரை வைத்து மமதாவை மட்டம் தட்ட நினைத்ததோ அவருடனேயே கைகோத்துக்கொண்டு மமதா ஆடும் அரசியல் சதுரங்கத்தை காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி கலையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. சரி.. மமதா கொடுத்த இன்னொரு முக்கிய அதிர்ச்சியைப் பார்த்துவிடலாம். மமதாவும் முலாயமும் முன்னிறுத்தும் இரண்டாவது வேட்பாளர், பிரதமர் மன்மோகன் சிங். இப்படியொரு குண்டைத் தூக்கிக் காங்கிரஸ் மைதானத்தில் போடுவதன்மூலம் பல மாற்றங்களை நிகழ்த்தலாம் என்பதுதான் மமதாவின் கணக்கு.

பிரதமர் மன்மோகன் குடியரசுத் தலைவர் ஆகும் பட்சத்தில் அவருடைய இடத்துக்கு யாரைக் கொண்டுவருவது? பிரணாப் முகர்ஜியையா, ராகுல் காந்தியையா? பிரணாப்பைக் கொண்டுவந்தால் ராகுல் ஆதரவாளர்கள் அதிருப்தியடைவார்கள். ராகுலைக் கொண்டுவந்தால் பிரணாப்புக்கு தர்மசங்கடம். எப்படிப் பார்த்தாலும்
காங்கிரஸ் பாடு திண்டாட்டமாகிவிடும். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு மமதாவின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. ஆகவே, மமதாவைப் பகைத்துக்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு அத்தனை லாபகரமான சங்கதியல்ல.

ஆக, குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் பலத்த நெருக்கடியில் சிக்கியிருக்கிறது காங்கிரஸ். அதிலிருந்து மீள்வதில்தான் கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலம் இருக்கிறது. கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்தோம். காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்னையை உருவாக்கவும் தெரியும்; தீர்க்கவும் தெரியும் என்று. பார்க்கலாம். தீர்க்கிறார்களா அல்லது ….. என்று!!

0

ஆர். முத்துக்குமார்