ஆஷ் கொலை வழக்கு – 2

பகுதி 1

அரசு தரப்பு வழக்கறிஞர்களாக, அப்போதைய பப்ளிக் பிராஸிக்யூட்டராக இருந்த நேப்பியர், அவருக்கு துணையாக ரிச்மண்ட், சுந்தர சாஸ்திரி ஆகியோர் செயல்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்ததால் அவர்களுக்காக வாதாட நிறைய வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், ஜே.சி. ஆடம் என்ற பிரபல பாரிஸ்டர், ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் தங்குதூரி பிரகாசம் (1946 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார்), எம்.டி.தேவதாஸ் (பின்னாளில் நீதிபதியாக ஆனார்), ஜெ. எல். ரொஸாரியோ, பி. நரஸிம்ம ராவு, டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் (பின்னாளில் திருவாங்கூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்), எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர், எஸ்.டி.ஸ்ரீனிவாச கோபாலாச்சாரி மற்றும் வி.ரையுரு நம்பியார்.

அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகள், அப்ரூவர்களாக மாறிய ஆறுமுகப்பிள்ளை மற்றும் சோமசுந்தரப்பிள்ளை. இவர்கள் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட்டனர். எதிர் தரப்பு, இவர்களை குறுக்கு விசாரணை செய்தது. இரு தரப்பிலிருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது கடிதங்கள், டயரிகள் (நாட்குறிப்புகள்), பத்திரிக்கை வெளியீடுகள், அரசு ஆய்வறிக்கைகள் என நிறைய ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.

நீதிமன்ற விசாரணையின் போது சாட்சிகள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலும், மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட செய்திகளிலிருந்தும் திரட்டப்பட்ட விவரங்கள் பின்வருமாறு :

வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை ரகுபதி ஐயர், திருவாங்கூர் தேவஸ்தானத்தில் ஊழியராக இருந்து ஒய்வு பெற்றவர். வாஞ்சிநாதன் திருவாங்கூர் சமஸ்தானத்தின் வனத்துறையில், புனலூர் என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணமாகி பொன்னம்மாள் என்ற மனைவி இருந்தாள். வாஞ்சிநாதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. அவர் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு மூன்று மாத காலம் எங்கோ சென்றுவிட்டுத் திரும்பினார். வாஞ்சிநாதனுடைய தந்தைக்கு மகனின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை. வாஞ்சிநாதன் இறந்த பிறகு கூட ஈம காரியங்கள் செய்ய அவருடைய தந்தை வரவில்லை.

வாஞ்சிநாதனுக்கு வ.உ.சியின் (வ.உ.சிதம்பரம் பிள்ளை) மீது பக்தியும் பற்றுதலும் இருந்தது.

வ.உ.சிக்கு கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற வேறு பெயர்களும் உள்ளன. வ.உ.சி, அவர் தந்தையைப் போல சட்டம் பயின்று விட்டு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸில் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் (1903 -1905) காங்கிரஸ்காரர்களான பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதிராய் ஆகியோர் சுதேசி இயக்கத்தைத் தொடங்கி இருந்தனர். ஆங்கிலேயர்களின் பொருள்களை வாங்காமல் புறக்கணித்தால், அவர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று சுதேசி இயக்கம் நம்பியது. பலவீனமடைந்த நிலையில் ஆங்கிலேயரை நாட்டை விட்டே விரட்டி விடலாம் என்றும் அவர்கள் நம்பினர்.

சுதேசி இயக்கம் தோன்றியவுடன், நாட்டின் பல பகுதிகளில் சுதேசிப் பொருள்கள் தயாரிப்பும் விற்பனையும் அதிகரித்தன. யாரும் எதிர்பாராத வகையில் வ.உ.சி, ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாக கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்.  தமிழகத்தில், தூத்துக்குடி- கொழும்பு வழித்தடத்துக்கு, ஆங்கிலேயக் கப்பல் British Steam Navigation Company  ஏகபோக உரிமை கொண்டாடியது. கப்பல் வர்த்தகம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அதை முறியடிக்கும் பொருட்டு, வ.உ.சி ஏகப்பட்ட செலவில் S.S.Geneli, S.S.Lawoe ஆகிய இரண்டு கப்பல்களை வாங்கினார். Swadeshi Steam Navigation Company என்ற நிறுவனத்தைத் தொடங்கி தூத்துக்குடி – கொழும்பு மார்க்கத்தில் கப்பல்களை இயக்கினார்.

வ.உ.சியின் போட்டியைத் தாங்கமுடியாத ஆங்கிலேய கம்பெனி நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டது. தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்வதற்கான பயணக் கட்டணத்தைத் தடாலடியாக 16 அனா (ஒரு ரூபாய்)  குறைத்தது. போட்டியைச் சமாளிக்க, வ.உ.சியும் தன்னுடைய கப்பல் கட்டணத்தை 8 அனாவாகக் (50 காசு) குறைத்தார். ஆங்கிலேய கம்பெனி இன்னும் ஒரு அடி மேலே போய், கப்பல் பயணத்துக்கான தன்னுடைய கட்டணத்தை மொத்தமாக ரத்து செய்தது. போதாக்குறைக்கு, தன் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு இலவசக் குடை எல்லாம் கொடுத்தது. கேட்கவா வேண்டும் நம் மக்களை? பயணிகள் அனைவரும் ஆங்கிலேய கப்பலிலேயே பயணம் செய்தனர். மேலும், அப்பொழுது தூத்துக்குடி சப்-கலெக்டராக இருந்த ஆஷ், அவ்வப்போது தன் பங்குக்கு வ.உ.சியின் கப்பல் கம்பெனியின் அலுவலகத்துக்குச் சென்று, கணக்கு வழக்கு சரியில்லை என்று சொல்லி, சோதனை செய்து வந்தான். ஒரு கட்டத்தில் வ.உ.சியின் கப்பல்கள் காலியாகத்தான் இலங்கைக்கு சென்றுவந்தன. விளைவு வ.உ.சியின் கப்பல் கம்பெனி விரைவிலேயே திவாலானது. இதனால் வ.உ.சிக்கு பெருத்த நஷ்டம். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஆங்கிலேய கம்பெனியே வ.உ.சியின் இரண்டு கப்பல்களையும் ஏலத்தில் எடுத்தது.

வ.உ.சி தன்னுடைய முயற்சியில் மனம் தளரவில்லை. தன்னுடைய போராட்டத்தின் ஒரு கட்டமாக, தூத்துக்குடியில் கோரல் மில்ஸ் கம்பெனியில் (ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஏஜென்டாக செயல்பட்டு வந்த ஏ அண்ட் எஃப் கம்பெனிதான் இந்த நூற்பாலையையும் நிர்வகித்து வந்தது) வேலை பார்த்த ஊழியர்களை ஒன்று திரட்டி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தீமைகளை விளக்கினார். வ.உ.சியுடன் சுப்பிரமணிய சிவாவும் போராட்டத்தில் தோள் கொடுத்தார்.

(சுப்ரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் பிறந்தவர். சிறந்த எழுத்தாளர். பேச்சளாரும் கூட. இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தியதற்காக, பல முறை சிறை சென்றிருக்கிறார். தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சிறைக்குச் சென்ற முதல் தமிழர் இவர்தான். சிறையில் இவருக்கு தொழுநோய் தொற்றிக்கொண்டது. தொழுநோயால் பாதிக்கப்பட்டதால் இவர் ரயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டார். மனம் தளராத சிவா, பல ஆயிரம் மைல்கள் கால் நடையாகவே சென்று ஆங்கிலேயருக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி மிகவும் வேதனைப்பட்டார்).

மில் ஊழியர்களும் ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராகப் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். ஆஷ் துரை தொழிலாளிகளையும் முதலாளிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தான். பேச்சுவார்த்தையின் போது, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு முதலாளிகள் தள்ளப்பட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் அடைந்த வெற்றி, ஆஷ் துரையை உறுத்திக்கொண்டே இருந்தது. இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த வ.உ.சி மீது கடும் கோபத்தில் இருந்தான்.  தகுந்த சமயத்துக்காக காத்திருந்தான். சமயமும் வந்தது. பிபின் சந்திர பால் சுதந்திர போராட்ட வீரர், சுதேசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தியவர். அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட முடிவெடுத்தது தூத்துக்குடி சுதேசி இயக்கம். ஆஷ் துரை வ.உ.சி யையும், சுப்பரமணிய சிவாவையும் கைது செய்தான். இதனால் திருநெல்வேலி ஜில்லா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கினான் ஆஷ் துரை. மற்ற மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

வ.உ.சி மீதும், சுப்பரமணிய சிவா மீதும் தேச துரோகம் செய்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவை அனைத்திற்கும் பின்புலத்திலிருந்து ஆஷ் துரை செயல்பட்டான். வழக்கு விசாரிக்கப்பட்டு, வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

வாஞ்சிநாதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் வாஞ்சிநாதனுக்கு, தன்னுடைய மைத்துனன் சங்கரகிருஷ்ணன் மூலமாக நீலகண்ட பிரம்மச்சாரியின் அறிமுகம் கிடைத்தது. 1910 ஆம் ஆண்டு வாக்கில், நீலகண்ட பிரம்மச்சாரி தென்தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இளைஞர்களை எல்லாம் சந்தித்தார். வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். போராளி குழுக்களைத் தயார்படுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரியால் உந்தப்பட்டு, தன்னையும் போராட்டக் குழுவில் இணைத்துக்கொண்டார் வாஞ்சிநாதன். குழுவில் இடம்பெற்றவர்கள் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர்.

நீலகண்ட பிரம்மச்சாரியின் போராட்டக் குழுவில் இடம் பெற்றிருந்த ஆறுமுகப்பிள்ளை நீதிமன்றத்தில் பின்வருமாறு சாட்சி சொன்னார். ‘போராட்டக்காரர்கள் சந்தித்து கொள்ளும் இடத்தில் காளியின் படம் மாட்டப்பட்டிருக்கும். விபூதி, குங்குமம், பூ ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். குழுவில் இடம்பெற்றிருக்கும் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வரிசையாக உட்கார்ந்திருப்போம். நீலகண்ட பிரம்மச்சாரி சற்று தொலைவில் உட்கார்ந்து காகிதங்களில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். காகிதத்தின் தலைப்பில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டிருக்கும். நாங்கள் குங்குமத்தைத் தண்ணீரில் கரைப்போம். பின்னர் நீலகண்ட பிரம்மச்சாரி எழுதி வைத்திருந்த காகிதத்தில் நாங்கள் ஒவ்வொருவராக குங்குமத் தண்ணீரை தெளிப்போம். காகிதத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர்தான் ஆங்கிலேயர்களின் ரத்தம். குங்குமம் கலந்த தண்ணீரைப் பருகுவோம். வெள்ளைக்காரர்களின் ரத்தத்தை குடித்ததாக அர்ததம்… அனைத்து வெள்ளைக்காரர்களையும் கொல்வோம் என்று உறுதி எடுப்போம். இந்த காரியத்துக்காக எங்களுடைய உயிர், உடைமை அனைத்தையும் தியாகம் செய்வோம் என்று சத்தியப் பிரமானம் செய்வோம். குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொருவருக்கும் புனைப்பெயர்கள் உண்டு. புனைப்பெயர்களை வைத்துதான் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வது வழக்கம். வந்தே மாதரம் என்று எழுதப்பட்ட காகிதத்தில் நாங்கள் எங்களுடைய கைவிரல்களைக் கீரி, அதிலிருந்து வெளிப்படும் ரத்தத்தைக் கொண்டு எங்களுடைய புனைப்பெயருக்கு எதிராக கையொப்பம் இடுவோம்.’

வாஞ்சிநாதன் மூன்று மாதம் அலுவலகத்தில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு புதுச்சேரியில் வி.வி.எஸ்.ஐயரைச் சந்தித்தார். புதுச்சேரியில் பாரத மாதா என்ற அமைப்பைத் திறந்திருந்தார் வி.வி.எஸ் ஐயர். இந்த அமைப்பு சாவர்கர் ஆரம்பித்த அபினவ் பாரத் என்ற அமைப்பின் கிளையாகச் செயல்பட்டது. வாஞ்சிநாதன் பாரத மாதா அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். புதுச்சேரியிலும் பரோடாவிலும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார். பின்னர் ஊருக்குத் திரும்பினார்.

திருநெல்வேலிக்கு வந்த வாஞ்சிநாதன், தன்னுடைய நண்பரான சோமசுந்ததரப்பிள்ளையிடம் ஆஷ் துரையைக் கொல்ல வேண்டும் என்று சொன்னதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதை நிரூபிக்கும் பொருட்டு, சோமசுந்தரப்பிள்ளையின் சாட்சியம் நீதிமன்றத்தில் பின்வருமாறு பதிவாகியது.

‘ஆங்கிலேய ஆட்சி இந்திய நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலேய ஆட்சியை நீக்கவேண்டுமென்றால், இந்தியாவிலிருக்கும் அனைத்து ஆங்கிலேயர்களும் கொல்லப்படவேண்டும். அதற்கு முன்மாதிரியாக ஆஷ் கொல்லப்படவேண்டும். ஏனென்றால் அவன் தான் ஜில்லா கலெக்டராக இருந்து, சுதந்தரப் போராட்ட வீரரான வ.உ.சி தோற்றுவித்த சுதேசி கப்பல் கம்பெனியை மூடச்செய்தவன் என்று வாஞ்சிநாதன் என்னிடம் தெரிவித்தான்.’

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், நீலகண்ட பிரம்மச்சாரி சார்பாக அலிபி (Alibi) — வேறிட வாதத்தை முன்வைத்தனர். அதாவது வாஞ்சிநாதனை நீலகண்ட பிரம்மச்சாரி செங்கோட்டையில் சந்தித்தாக சொல்வது தவறு, நீலகண்ட பிரம்மச்சாரி அந்த சமயத்தில் அங்கு இல்லை, வேறு ஒரு ஊரில் இருந்தார் என்று சாட்சியம் அளிக்கப்பட்டது. மேலும் ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் காவல்துறையின் கட்டாயத்தின் பேரில்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சி சொல்கிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்தனர். குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களை வைத்து மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பது தவறு. குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியங்களைத் தவிர, அந்த சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தனிப்பட்ட சாட்சியங்கள் இருந்தால் ஒழிய, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் இழைத்தவர்களாக கருதப்படமாட்டார்கள் என்று இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114 ஐ காட்டி குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அதாவது ஆறுமுகப் பிள்ளையும் சோமசுந்தரப் பிள்ளையும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று காவல்துறை குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் தூண்டுதலாலும், கட்டாயத்தினாலுமே ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரப்பிள்ளையும் அப்ரூவராக மாறியிருக்கிறார்கள். அவர்களது சாட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை. எனவே அவர்களது சாட்சியங்களை நிராகரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் அரசு தரப்பில், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 133 மேற்கோள் காட்டப்பட்டது. இந்தப் பிரிவின் படி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்களின் சாட்சியின் பேரில் மட்டுமே (அந்தச் சாட்சியத்தை ஊர்ஜிதப்படுத்த வேறு சாட்சியங்கள் இல்லாத சமயத்தில்கூட) ஏனைய குற்றவாளிகளைத் தண்டித்தால், அந்தத் தண்டனை செல்லாது என்று சொல்லமுடியாது என்று வாதாடினார்கள். மேலும், அப்ரூவர் சாட்சியங்கள் இல்லாமலே மற்ற சாட்சியங்கள் மூலமாகவே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் வாதிடப்பட்டது.

வாதப் பிரதிவாதங்கள் முடிந்த பிறகு, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. நீதிபதி சர் அர்னால்ட் வைட்டும் நீதிபதி அய்லிங்கும் சேர்ந்து ஒரு தீர்ப்பை வெளியிட்டனர். நீதிபதி சங்கரன் நாயர் தனியே தன் தீர்ப்பை வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயரின் தீர்ப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் தன்னுடைய தீர்ப்பில், இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றை பற்றி அலசி ஆராய்ந்திருந்தார். இவருடைய இந்த தீர்ப்பு, பின்னர் Role of Students in Freedom Movement with a Special Reference to Madras Presidency என்ற தலைப்பில் புத்தகமாகக்கூட வெளி வந்தது. மேலும் நீதிபதி, தன்னுடைய தீர்ப்பில், பாரதியாரின் ‘என்று தனியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். நீதிபதி சங்கரன் நாயர் தன்னுடைய தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொலைக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக நீலகண்ட பிரம்மச்சாரி மட்டும் செயல்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகளின் பெரும்பான்மையான தீர்ப்பின் படி, நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கர கிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய குற்றவாளிகளுக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் தரப்பில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் விசாரணை மூன்று நீதிபதிகள் முன்னர் நடைபெற்றதால், மறு ஆய்வு மனு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. ஐந்து நீதிபதிகள் பின்வருமாறு : 1) சர் ரால்ப் பென்சன், 2) ஜான் வாலஸ், 3) மில்லர், 4) அப்துல் ரஹிம் 5) பி.ஆர்.சுந்தர ஐயர். மறு ஆய்வு மனுவை விசாரித்த நீதிபதிகளில் சர் ரால்ஃப் பென்சன், ஜான் வாலஸ் மற்றும் மில்லர் ஆகிய மூவரும், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சரியான தீர்ப்பைத்தான் வெளியிட்டிருக்கிறார்கள், அதனால் அதில் மறு ஆய்வு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தனர். நீதிபதி அப்துல் ரஹிம் தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை, எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்தார். நீதிபதி சுந்தர ஐயரோ தன்னுடைய தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகுமா என்ற சந்தேகத்தை தெரிவித்தார். பெரும்பான்மையான தீர்ப்பின்படி, குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த முதல் மற்றும் கடைசி அரசியல் கொலை இதுவே. கொலை நடந்து சுமார் 100 வருடங்கள் ஓடிவிட்டன. கால ஓட்டத்தில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களெல்லாம் கரைந்து போய்விட்டனர்.

வ.உ.சி :

கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சியை செக்கு இழுக்க வைத்தனர் ஆங்கிலேயர்கள். கீழ் நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றம், வ.உ.சிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை குறைத்தது. வ.உ.சி 1912 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். கப்பல் கம்பெனியால் ஏற்பட்ட நஷ்டம் போக, அவர் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை நடத்துவதற்காக தன்னுடைய அனைத்து சொத்துகளையும் இழந்து மிகுந்த கடனுக்கு ஆட்பட்டார். தேச துரோக வழக்கில் தண்டிக்கப்பட்டதால், அவருடைய வழக்கறிஞர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, திருநெல்வேலியில் வ.உ.சியின் வழக்கை விசாரித்த நீதிபதி வாலஸ், பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன பிறகு, வ.உ.சியின் வழக்கறிஞர் உரிமத்தை, அவர் திரும்பப் பெறும்படி செய்தார். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வ.உ.சி தன்னுடைய மகன்களில் ஒருவருக்கு வல்லேஸ்வரன் என்று பெயரிட்டார். இறுதி காலத்தை கோவில்பட்டியில் மிகவும் கஷ்டத்தில் கழித்தார். வ.உ.சி ஆசைபட்டபடி, அவருடைய உயிர் தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில் 1936 ஆம் ஆண்டு பிரிந்தது. வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதினார், தொல்காப்பியர் இயற்றிய தமிழ் இலக்கணத்தை தொகுத்து பதிப்பித்தார். தன்னுடைய சுய சரிதையை எழுதினார். ஜேம்ஸ் ஆலனின் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். மெய்யறிவு, மெய்யாரம் என்று இவர் எழுதிய புத்தகங்கள் மிகவும் பிரசித்தம். பல நாவல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சுப்பிரமணிய சிவா

தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணிய சிவாவுக்கு உதவ பலர் மறுத்தனர். காரணம் அவர் ஆங்கிலேய அரசை பகைத்துக் கொண்டதுதான். தொழு நோயால் பாதிக்கப்பட்ட அவர், 1925ம் ஆண்டு தன்னுடைய 40வது வயதில் உயிரிழந்தார்.

சுப்ரமணிய பாரதி

புதுச்சேரியில் 10 ஆண்டுகள் இருந்த பிறகு, 1918 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட கடலூரில் நுழையும் போது கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஆங்கிலேய அரசு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கியதை அடுத்து, அவர் சென்னைக்கு வந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் யானைக்கு பாரதி உணவு வழங்கும் போது, அந்த யானை அவரைத் தாக்கியது. இதனால் காயம் அடைந்து, பின்னர் நோய்வாய்ப்பட்டு, 1921 ஆம் ஆண்டு தன்னுடைய 38வது வயதில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் வெறும் பதினான்கு பேர்தான் கலந்து கொண்டனர். பாரதியார் காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதி மக்கள் மனதில் இன்றளவும் மகாகவியாக வாழ்ந்து வருகிறார்.

வி.வி.எஸ் ஐயர்

உலக யுத்தமெல்லாம் முடிந்த பிறகு 1921 ஆம் ஆண்டில் சென்னைக்குத் திரும்பினார் வி.வி.எஸ் ஐயர். தேசபக்தன் என்ற பத்திரிக்கையில் பதிப்பாசிரியராக பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டு பாபநாச அருவியில் குளிக்கும் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 44. அவர் கம்பராமாயணத்தைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார்.  திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

நீலகண்ட பிரம்மச்சாரி 

ஆஷ் கொலை வழக்கில், நீதிமன்றம் தண்டனை விதித்த போது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919 ஆம் ஆண்டு விடுதலையானார். விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயருக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மிகத்தில் கவனம் செலுத்தினார்.  சத்குரு ஒம்கார் என்றும் அவர் அழைக்கப்பட்டார்.  தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.

ஆஷ் துரையின் மனைவி மேரி லில்லியன் பேட்டர்சன்

கணவன் இறந்த பிறகு, தன்னுடைய தாய்நாடான அயர்லாந்துக்கு சென்றுவிட்டார். மறுமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அரசாங்கம் கொடுத்த ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தார். 1954 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆஷின் மூத்த மகன், இந்தியாவில் ராணுவத்தில் கர்னலாக பணிபுரிந்து 1947 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றான். இரண்டாவது மகன், இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கு கொண்டு அதில் உயிரிழந்தான். மகள்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஆஷ் துரைக்கு நினைவுச்சின்னங்கள்

இந்தியாவில் ஆஷ் துரை சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்ட மிதவாதிகள் மற்றும் அரசாங்கத்துக்கு பயந்தவர்கள், நாங்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கிறோம் என்று வெளிக்காட்டிக்கொள்ளும்விதமாக இரண்டு ஞாபகச் சின்னங்களை எழுப்பினர். பாளையங்கோட்டையில் ஆஷ் துரை எங்கு அடக்கம் செய்யப்பட்டாரோ அங்கு ஒரு கல்லறைச் சிலையையும், தூத்துக்குடி நகராட்சி அலுவலகத்தில், எண்கோண வடிவம் கொண்ட ஒரு மணிமண்டபத்தையும் நிறுவினர். மணிமண்டபம் எழுப்ப அந்த காலத்திலேயே ரூபாய் 3,002 செலவாகியது. இந்தச் செலவை 38 இந்தியர்கள் ஏற்றுக்கொண்டனர். அதில் சில பேர் வ.உ.சிக்கு சாதகமாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தவர்கள்!

சரி வாஞ்சிநாதனுக்குச் சிலை? மணியாச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பு என்று அமைக்கப்பட்ட பெயர் பலகை ஒன்று இருக்கிறது. அவ்வளவுதான். வாஞ்சிநாதனின் மனைவி பொன்னம்மாள் 1967 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக ஒரு தகவல் உண்டு.

இன்று வாஞ்சிநாதனின் பெயர் பலருக்கு தெரிந்திருக்காது. தெரிந்தவர்களுக்கும் மறந்து போயிருக்கும். 100 வருடங்களுக்கு முன்னர் வாஞ்சிநாதன் செய்த செயலின் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியாது. வாஞ்சிநாதன் நிகழ்த்திக் காட்டிய அந்தச் செயலை, மேடம் காமா தன்னுடைய பத்திரிக்கையான வந்தே மாதிரத்தில் பின்வருமாறு நெகிழ்ச்சியூட்டும்படி தெரிவிக்கிறார். ‘அலங்கரிக்கப்பட்ட இந்திய அடிமைகள், லண்டன் நகரத்தின் தெருக்களில் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவில், சர்க்கஸ் நடனம் நடத்தி, தங்களுடைய அடிமைத்தனத்தை வெளிபடுத்திய வேளையில், நம் தேசத்தின் இரண்டு இளைஞர்கள் மட்டும் தங்களுடைய தீர செயலால், இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று உணர்த்தியிருக்கின்றனர். வாஞ்சிநாதனின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டு, நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் இந்த தேசத்தை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது.’

0

S.P. சொக்கலிங்கம்

ஆஷ் கொலை வழக்கு – 1

மணியாச்சி சந்திப்பில் ரயில் வந்து நின்றது. முதல் வகுப்புப் பெட்டி அந்த ரயிலிலிருந்து கழற்றப்பட்டது. அதில் ஆங்கிலேய துரை ஆஷ், அவருடைய மனைவி இருவரும் இருந்தனர். ஊர் மக்கள், ஆஷ் துரையைக் காண வந்திருந்தனர். அந்த ஊரில், ஏன் அந்த ஜில்லாவிலே ஏதாவது நடக்க வேண்டுமென்றால், அதற்கு துரை மனது வைத்தால்தான் முடியும்.

ஆஷ் துரை வந்த ரயிலின் பெட்டியை, போட் மெயில் ரயிலோடு இணைக்க வேண்டும். துரையும் அவரது மனைவியும் கொடைக்கானலில் இருந்த தங்களது நான்கு குழந்தைகளையும் பார்க்கப் புறப்பட்டிருந்தனர்.

போட் மெயில் வருவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்தச் சமயத்தில் இரண்டு வாலிபர்கள், துரை இருந்த ரயில் பெட்டிக்குள் நுழைந்தனர். ஒருவன் எடுப்பான தோற்றத்துடன் காணப்பட்டான். தன்னுடைய நீண்ட தலைமுடியை சீவி, கொண்டை போட்டிருந்தான். மற்றொருவன் வேட்டி, சட்டை உடுத்தியிருந்தான். துரை தன்னுடைய மனைவி மேரியுடன் ஆர்வமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். மேரியும் துரையும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். ரயில் பெட்டியினுள் இருவர் ஏறி வருவதை துரை கவனிக்கவில்லை. வந்தவர்களில் ஒருவன், துரைக்கு அருகாமையில் அவர் முன் நேராக நின்றான். பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட, பிரவுனிங் என்ற தானியங்கித் துப்பாக்கியை எடுத்தான். துரையின் நெஞ்சில் சுட்டான். அதுவரை அமைதியாக இருந்த ரயில் நிலையம் அதிர்ந்தது. துரை அவர் அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே சரிந்தார். அவருடைய மனைவி அதிர்ச்சியில் உறைந்தார்.

துரையைச் சுட்டவன், பிளாட்பாரத்தில் இறங்கி ஓடினான். ரயில் நிலையத்திலிருந்த வெகுஜன மக்கள் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். ஓடியவன் நேராக பிளாட்பாரத்திலிருந்த கழிவறையின் உள்ளே நுழைந்து தாழிட்டுக்கொண்டான். மற்றவன், பிளாட்பாரத்தின் இன்னொரு பக்கம் ஒடி மறைந்தான்.

கழிவறையில் மறைந்த அந்த வாலிபன், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டான். துரையை, அவருடைய சிப்பந்திகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே துரையின் உயிர் பிரிந்தது.

ஆஷ் துரையின் கொலை, மதராஸ் மாகாணம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது. இறந்தவர் சாதாரண ஆள் இல்லை. அவர் திருநெல்வேலி ஜில்லாவின் கலெக்டர். மேலும் ஆங்கிலேயர். சுட்டவன் ஓர் இந்தியன். கொலை நடந்த தேதி ஜூன் 17, 1910. இன்னும் 5 நாள்களில், இங்கிலாந்தில் 5 வது ஜார்ஜ் மன்னர் முடிசூடிக்கொள்ள இருந்தார்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சிகரமான செயல்கள் பல நாட்டில் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அனைத்து புரட்சிகர சம்பவங்களும், வட நாட்டில் அதுவும் குறிப்பாக வங்காளத்தில்தான் நடைபெற்றன. யாரும் தமிழகத்தில் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. யார் இதை செய்திருப்பார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? விசாரணையில் இறங்கியது ஆங்கிலேயக் காவல்துறை.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இளைஞன். அவனுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவனுடைய சட்டைப்பையில் காவல்துறை எதிர்பார்த்தது கிடைத்தது. அது ஒரு துண்டுக் காகிதம். அதில், ‘ஆங்கிலேய மிலேச்சர்கள் நம் நாட்டைப் பிடித்ததோடல்லாமல், நம்முடைய சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி அதை அழிக்க முற்படுகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் மிலேச்சர்களை விரட்டிவிட்டு , சுந்தரம் பெற்று, சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக்கொண்டிருக்கிறான். ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்த சிங், அர்ஜூனன் வாழ்ந்த இந்த பாரதத்தில் பசு மாமிசத்தை உண்ணும், 5 வது ஜார்ஜ் என்ற மிலேச்சனுக்கு மணிமகுடம் சூட்டுவதா? ஐந்தாவது ஜார்ஜ் மன்னன் இந்தியாவில் அடியெடுத்து வைத்தவுடனேயே, அவரைக் கொல்ல 3000 மதராசிகள் உறுதி மொழி எடுத்திருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், அக்குழுவின் கடைநிலைத் தொண்டனாக இந்த காரியத்தை இன்று செய்தேன். பாரதத்தில் உள்ள அனைவரும் இப்படிசெய்வதைத்தான் தங்களுடைய கடமையாக நினைக்க வேண்டும்!’ என்று குறிப்பிட்டிருந்தது.

காவல்துறையினர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்று விரைவிலேயே கண்டுபிடித்து விட்டனர். அவர் தான் வாஞ்சிநாத ஐயர்.

வாஞ்சிநாதனின் வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. அதில் அவர்களுக்கு சில கடிதங்கள் கிடைத்தன. கடிதங்களில் கண்ட விவரங்களின் மூலம், ஆஷ் துரையைக் கொல்ல ரகசியக்குழு ஒன்று கூட்டுச்சதி செய்திருப்பது தெரியவந்தது. அந்தக் கடிதங்களில் ஆறுமுகப்பிள்ளையின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல்துறை ஆறுமுகப்பிள்ளையின் வீட்டை இரவோடு இரவாக முற்றுகையிட்டது. ஆறுமுகப்பிள்ளை கைது செய்யப்பட்டார். அவர் வீட்டிலும் சில கடிதங்கள் கிடைத்தன. காவல்துறை அவரை மேலும் விசாரித்ததில், அவன் சோமசுந்தரப்பிள்ளை என்ற இன்னொருவரை காட்டிக் கொடுத்தார். காவல்துறை சோமசுந்தரத்தை சுற்றி வளைத்தது. சோமசுந்தரமும் கைது செய்யப்பட்டார். ஆறுமுகப்பிள்ளையும், சோமசுந்தரமும் அரசு தரப்பு சாட்சிகளாக (அப்ரூவர்) மாறினர்.

ஆறுமுகப்பிள்ளையும் சோமசுந்தரமும் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து, காவல்துறை தென்னிந்தியா முழுவதும் தேடுதல் வேட்டையை நடத்தியது. பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு.

 1. நீலகண்ட பிரம்மச்சாரி (முக்கியக் குற்றவாளி) – தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். பத்திரிக்கையாளர். சூர்யோதையம் என்ற பத்திரிகையை நடத்திவந்தார். ஆங்கிலேய அரசாங்கம் அப்பத்திரிக்கையைத் தடை செய்தது. அதன் பின்னர் பல பத்திரிகைகளைத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேய அரசாங்கம் அனைத்தையும் முடக்கியது. ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுடையவர். அரவிந்த கோஷைப் பின்பற்றியவர். (அரவிந்த கோஷ் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆங்கிலேயர்களை ஆயுதம் கொண்டு விரட்டமுடியும் என்று நம்பியவர். அலிப்பூர் குண்டு வெடிப்பில், குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான பிறகு அரசியலை விட்டு விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் குடிபுகுந்தார்.)
 2. சங்கரகிருஷ்ண ஐயர் (வாஞ்சிநாதனின் மைத்துனன்) – விவசாயம் செய்துவந்தார்.
 3. மாடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை – காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.
 4. முத்துகுமாரசாமி பிள்ளை – பானை வியாபாரம் செய்துவந்தார்.
 5. சுப்பையா பிள்ளை – வக்கீல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தவர்.
 6. ஜகனாதா அய்யங்கார் – சமையல் செய்யும் உத்தியோகம்
 7. ஹரிஹர ஐயர் – வியாபாரி
 8. பாபு பிள்ளை – விவசாயி
 9. தேசிகாச்சாரி – வியாபாரி
 10.  வேம்பு ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்
 11. சாவடி அருணாச்சல பிள்ளை – விவசாயம்
 12. அழகப்பா பிள்ளை – விவசாயம்
 13. வந்தே மாதரம் சுப்பிரமணிய ஐயர் – பள்ளிக்கூட வாத்தியார்
 14. பிச்சுமணி ஐயர் – சமையல் செய்யும் உத்தியோகம்

கைது செய்யப்பட்டவர்களில் பல பேர், இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட இருவர், தற்கொலை செய்து கொண்டனர்.  தர்மராஜா ஐயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கடேச ஐயர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கிலேய அரசு, ஆஷ் கொலை வழக்கு மற்றும் தேச துரோக நடவடிக்கைகளில், மேலும் சிலருக்கு பங்கு இருக்கக்கூடும் என்று சந்தேகித்தது. அவர்கள் :

1) வி.வி.எஸ். ஐயர்

திருச்சியில் பிறந்த வரஹனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், சட்டம் படித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு வினாயக் தாமோதர் சாவகர்க்கரின் தொடர்பு ஏற்பட்டது. (சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர். ஹிந்துத்துவா கொள்கையை முன்மொழிந்தவர். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னாளில் மகாத்மா காந்தியைச் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்). ஆங்கிலேயர்களுக்கு எதிராக வி.வி.எஸ்.ஐயர் செயல்பட்டதால், அவரைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் வாரண்ட் பிறப்பித்தனர். இதையடுத்து இங்கிலாந்திலிருந்து தப்பித்த ஐயர், பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். புதுச்சேரியில் அவருக்கு பாரதியாருடனும், அரவிந்த கோஷுடனும் நட்பு ஏற்பட்டது. பின்னாளில், முதல் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம்டன், சென்னையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் வி.வி.எஸ் என்று கருதிய ஆங்கிலேய அரசாங்கம், அவரையும் அவரது சகாக்களையும், ஆப்பிரிக்காவுக்கு நாடு கடத்தும்படி பிரெஞ்சு அரசிடம் வலியுறுத்தியதுதான். பிரெஞ்சு அரசு, வி.வி.எஸ் ஐயரின் மீது நிறைய குற்றங்களை சுமத்தி விசாரணை நடத்தியது. ஆனால் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது பிரெஞ்சு அரசு.
2) சுப்பரமணிய பாரதி

பாரதியார் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தவர். கவிஞர், பெண் விடுதலைக்காகப் போராடியவர், சமூக சீர்திருத்தவாதி, சிறந்த கட்டுரையாளரும் கூட. சுதேசமித்திரன் என்னும் பத்திரிக்கையை இவர் பதிப்பித்து வந்தார். ஆங்கிலேயருக்கு எதிராக அப்போது போராடி வந்த காங்கிரஸ் கட்சியில் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன. கோபால கிருஷ்ண கோகலேவும் அவரைச் சார்ந்தவர்களும், அறவழியில்தான் ஆங்கிலேயர்களிடம் சுதந்தரம் பெற வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தனர். பால கங்காதர திலகரும் அவரைச் சார்ந்தவர்களும் புரட்சிகரமான போராட்டங்களை நடத்தித்தான் சுதந்தரம் பெற வேண்டும் என்று கருதி வந்தனர். பாரதி பால கங்காதர திலகரைப் ஆதரித்துவந்தார்.  வ.உ. சிதம்பரம் பிள்ளையின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் நீதிமன்றத்துக்கு சென்று சாட்சியம் அளித்தார். மேலும்ஆங்கிலேயருக்கு எதிராக, தன்னுடைய பத்திரிக்கையில் எழுதி வந்ததால் ஆங்கிலேய அரசாங்கம் அவரைக் கைது செய்ய முற்பட்டது. அதனால் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்தார். புதுச்சேரியிலிருந்தபடி இதழ் பணிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் அவருக்கு அரவிந்த கோஷ், வி.வி.எஸ் மற்றும் பல சுதந்தரப் போராளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.

மற்ற மூவர்,  3) ஸ்ரீனிவாச ஆச்சாரி 4) நாகசாமி ஐயர் மற்றும் 5) மாடசாமி பிள்ளை.

மேற்சொன்ன ஐவரையும் கைது செய்யுமாறு, ஆங்கிலேய அரசு வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் வாரண்டை காவல் துறையால் நிறைவேற்ற முடியவில்லை. காரணம் முதல் நால்வர் புதுச்சேரியில் இருந்தனர். ஐந்தாமவரான மாடசாமி பிள்ளை எங்கே இருந்தார் என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மாடசாமி பிள்ளைதான் ஆஷ் துரை சுடப்பட்ட போது வாஞ்சிநாதனுடன் இருந்தவர்.

அன்றைய தேதிகளில் பல சுதந்தரப் போராளிகள், அரசியல் குற்றவாளிகள், ஆங்கிலேயர்கள் கெடுபிடியில் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் புதுச்சேரியில்தான் தஞ்சம் புகுந்தனர். காரணம், புதுச்சேரி ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பிரெஞ்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆங்கிலேய காவல் துறை, பிரெஞ்சு ஆதிக்கம் உள்ள பகுதிக்குள் நுழைந்து ஒருவரை கைது செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மற்ற நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவித்தாக ஆகும்.

ஆங்கிலேய அரசால் தேடப்படும் குற்றவாளி, பிரெஞ்சு பகுதியில் இருந்தால் அவரை Extradite செய்ய முயற்சி செய்யவேண்டும். அதாவது எங்கள் நாட்டில் தேடப்படும் குற்றவாளி உங்கள் நாட்டில் ஒளிந்திருக்கிறான். அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கவேண்டும். சரி என்று அந்த நாடு உடனே ஒப்புக்கொள்ளாது. சம்மந்தப்பட்ட குற்றவாளி, அந்நிய நாட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா,  வேண்டாமா என்று அந்நாட்டின் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒப்படைப்பதில், நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. எந்த விதமான குற்றம் இழைத்தவரை ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒப்படைக்கக் கூடாது என்பதற்கான விதிகள் ஏராளம். பொதுவாக அரசியல் குற்றங்கள் புரிந்தவர்களை, ஒரு நாடு மற்ற நாட்டிடம் ஒப்படைக்காது. அதனால் மேற்சொன்ன நபர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆனால் மற்ற விதத்தில் குடைச்சல் கொடுத்தார்கள். புதுச்சேரி எல்லையில், ஆங்கிலேய காவலர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எப்போது தங்கள் நாட்டு எல்லையில் காலடி எடுத்து வைக்கின்றனரோ, அப்பொழுது அவர்களைக் கைது செய்வதற்கு தயாராக இருந்தனர். நிறைய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வரும் கடிதங்கள், மனிஆர்டர்கள் ஆகியவை தடுக்கப்பட்டன. புதுச்சேரியில் அச்சிடப்பட்டு வெளியான புத்தகங்கள், பத்திரிக்கைகள் ஆகியவற்றை ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வினியோகிக்க முடியாமல் தடை செய்தது.

புதுச்சேரியில் இருந்த குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட ஏனைய குற்றவாளிகள் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பொதுவாக குற்றம் எந்த இடத்தில் விளைவிக்கப்பட்டதோ, அந்த இடத்தின் மீது அதிகார வரம்புள்ள (Jurisdiction) நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணை நடைபெறும். ஆஷ் துரை கொலை வழக்கு, திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தில்தான் நடந்திருக்கவேண்டும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சென்னை உயர் நீதிமன்றம், ஆஷ் கொலை வழக்கை தானே விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கு காரணம், கொலை செய்யப்பட்டவன் ஒரு ஆங்கிலேயன், அதுவும் ஒரு ஜில்லா கலெக்டர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே (சர் ஆர்னால்ட் வைட்) விசாரணையில் பங்கு கொண்டார். அவருடன் விசாரணையில் பங்கு கொண்ட மற்ற நீதிபதிகள், நீதிபதி அய்லிங் மற்றும் நீதிபதி சங்கரன் நாயர்.

பொதுவாக கொலை வழக்குகளில் ஜூரி (நடுவர் குழு) நியமிக்கப்படும். ஆனால் ஆஷ் கொலை வழக்கில் ஜூரி அமைக்கப்படவில்லை. ஆஷ் கொலை, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையாகத்தான் பார்க்கப்பட்டது. அதனால் ஜூரியில் இந்தியர்கள் இடம் பெற்றால் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லலாம் என்றும், அதேபோல் ஜூரியில் ஆங்கிலேயர்கள் இடம்பெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு கூறலாம் என்றும், அதனால் நடுநிலையாக வழக்கு விசாரணை நடக்காது என்றும் கருதிய நீதிமன்றம் ஜூரியை நியமிக்காமல், தன்னுடைய தீர்ப்புக்கு வழக்கை விட்டுவிட்டது.

(தொடரும்)

0

S.P. சொக்கலிங்கம்