ஜோதிடம் பொய்ப்பதில்லை!

நாள்காட்டியில் ஆரம்பித்து இணையத்தளங்கள் வரை, ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.

உடல் ரீதியாக வேதனை வந்தால், மருத்துவரைப் பார்ப்பதும், மன ரீதியாக சோதனை வந்தால், ஜோதிடரைப் பார்ப்பதும்தான் மக்களின் இயல்பு. ஆனால், எந்த ஒரு ஜோதிடனும், நடந்தவற்றை 99% மிகச் சரியாக கூறும் அளவுக்கு, நடக்கப் போவதை துல்லியமாக கூறுவதில்லை. அது மிகவும் கடினம். ஏனென்றால், படைத்த பிரம்மாவை தவிர, வேறு யாராலும் நமது எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல், குறைந்தது ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் அலசி ஆராய்ந்தவரை நாம் ஜோதிடராகக் கொள்ளலாம்.

ஜோதிடம் என்பது ஒரு கரைகாண முடியாத கடல். அதை முழுமையாக பயிலாமல், ஒடிப் போனவனக்கு ஒன்பதில குரு, பத்தில் குரு வந்தால் பதவி பறிப் போகும், குருப் பார்க்க கோடி நன்மை, சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை; கெடுப்பவனும் இல்லை என்று சில பழமொழிகளை ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் அள்ளி விட்டு, தன் வசம் திருப்பி, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு வாழும் ஜோதிடர்களால்தான், ஜோதிடத்தையே குறைச் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. வயிற்று பிழைப்பிற்காக, பொய்களை கலந்து ஏடாகூடாமாகப் பலன்களை கூறி, மக்களை ஏமாற்றி வரும் அரைகுறை ஜோதிடர்களால்தான், ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது.

ஜோதிடத்தில் 9 கிரகங்களுக்கு 27 நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த 27 நட்சத்திரங்களின் குணாதிசயங்களை, பழமொழி என்ற பெயரில், இந்த அரைகுறை ஜோதிடர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

ஆனிமூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் : 

அதாவது ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பர். மூலம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள், எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள். இதுவே பழமொழியின் பொருள். ஆனால், இதை மூல நட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் அரசாள்வார்கள் பெண் பிறந்தால் அனைவருமே நிர்முலம் என்றும், ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்முலம் என்றும் பழமொழியைத் திரித்துக் கூறுகிறார்கள்.

சித்திரை அப்பன் தெருவிலே :

ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அவதிப்படும் என்றும், குழந்தைகளைக் காப்பாற்ற தந்தைமார்கள் தெருத் தெருவாக அலைய வேண்டிருக்கும் என்பதையும் சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், அப்பன் ஓட்டாண்டியாகி தெருவில் நிற்பான் என்று மாற்றி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை அவதிப்படும் என்ற காரணத்துக்காகவே, ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைக்கும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ரோகிணி நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது :

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணனால், மாமன் கம்சன் கொல்லப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு, ரோகிணி நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது என்று முடிவு செய்து விட்டார்கள்.

மேலும், மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம், உத்திரத்து தாலி உறியிலே, பூராடம் கழுத்தில் நூலாடாது போன்ற பழமொழிகள், எதுகை மோனைக்காக சொல்லப்பட்டிருக்கலாமே தவிர, உண்மையாக இருக்கும் என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. இப்படிப்பட்ட திரிக்கப்பட்ட பழமொழிகளால், பயந்துபோன மக்களிடம், பரிகாரம் என்ற பெயரில், இவர்கள் அடிக்கும் கொள்ளைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. குழந்தைகள் நல்லபடியாக பிறப்பதைவிட நல்ல நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்பதே இப்போது அனைவரின் குறிக்கோளாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன், மருத்துவர்களைப் பார்ப்பதை விட ஜோதிடரை பார்ப்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால், ஜோதிடம் நம்மை காப்பாற்றினாலும், ஜோதிடர்கள் நம்மை கரை சேர விடமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும்.

ஜோதிடர்கள் பொய்க்கலாம், ஜோதிடம் பொய்ப்பதில்லை. ஆனால், இத்தகைய அரைகுறை ஜோதிடர்களால், ஜோதிடமும் பொய்த்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

0

இந்திரஜித்