ஜோதிடம் பொய்ப்பதில்லை!

நாள்காட்டியில் ஆரம்பித்து இணையத்தளங்கள் வரை, ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.

உடல் ரீதியாக வேதனை வந்தால், மருத்துவரைப் பார்ப்பதும், மன ரீதியாக சோதனை வந்தால், ஜோதிடரைப் பார்ப்பதும்தான் மக்களின் இயல்பு. ஆனால், எந்த ஒரு ஜோதிடனும், நடந்தவற்றை 99% மிகச் சரியாக கூறும் அளவுக்கு, நடக்கப் போவதை துல்லியமாக கூறுவதில்லை. அது மிகவும் கடினம். ஏனென்றால், படைத்த பிரம்மாவை தவிர, வேறு யாராலும் நமது எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல், குறைந்தது ஆயிரம் ஜாதகங்களுக்கு மேல் அலசி ஆராய்ந்தவரை நாம் ஜோதிடராகக் கொள்ளலாம்.

ஜோதிடம் என்பது ஒரு கரைகாண முடியாத கடல். அதை முழுமையாக பயிலாமல், ஒடிப் போனவனக்கு ஒன்பதில குரு, பத்தில் குரு வந்தால் பதவி பறிப் போகும், குருப் பார்க்க கோடி நன்மை, சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை; கெடுப்பவனும் இல்லை என்று சில பழமொழிகளை ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் அள்ளி விட்டு, தன் வசம் திருப்பி, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு வாழும் ஜோதிடர்களால்தான், ஜோதிடத்தையே குறைச் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. வயிற்று பிழைப்பிற்காக, பொய்களை கலந்து ஏடாகூடாமாகப் பலன்களை கூறி, மக்களை ஏமாற்றி வரும் அரைகுறை ஜோதிடர்களால்தான், ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது.

ஜோதிடத்தில் 9 கிரகங்களுக்கு 27 நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த 27 நட்சத்திரங்களின் குணாதிசயங்களை, பழமொழி என்ற பெயரில், இந்த அரைகுறை ஜோதிடர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

ஆனிமூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் : 

அதாவது ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பர். மூலம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள், எதிரிகளை நிர்மூலமாக்குவார்கள். இதுவே பழமொழியின் பொருள். ஆனால், இதை மூல நட்சத்திரத்தில் ஆண் பிறந்தால் அரசாள்வார்கள் பெண் பிறந்தால் அனைவருமே நிர்முலம் என்றும், ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்முலம் என்றும் பழமொழியைத் திரித்துக் கூறுகிறார்கள்.

சித்திரை அப்பன் தெருவிலே :

ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அவதிப்படும் என்றும், குழந்தைகளைக் காப்பாற்ற தந்தைமார்கள் தெருத் தெருவாக அலைய வேண்டிருக்கும் என்பதையும் சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், அப்பன் ஓட்டாண்டியாகி தெருவில் நிற்பான் என்று மாற்றி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை அவதிப்படும் என்ற காரணத்துக்காகவே, ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைக்கும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ரோகிணி நட்சத்திரம் மாமனுக்கு ஆகாது :

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த கண்ணனால், மாமன் கம்சன் கொல்லப்பட்டதை ஆதாரமாகக் கொண்டு, ரோகிணி நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது என்று முடிவு செய்து விட்டார்கள்.

மேலும், மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம், உத்திரத்து தாலி உறியிலே, பூராடம் கழுத்தில் நூலாடாது போன்ற பழமொழிகள், எதுகை மோனைக்காக சொல்லப்பட்டிருக்கலாமே தவிர, உண்மையாக இருக்கும் என்பதை யாரும் நிரூபிக்கவில்லை. இப்படிப்பட்ட திரிக்கப்பட்ட பழமொழிகளால், பயந்துபோன மக்களிடம், பரிகாரம் என்ற பெயரில், இவர்கள் அடிக்கும் கொள்ளைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. குழந்தைகள் நல்லபடியாக பிறப்பதைவிட நல்ல நட்சத்திரத்தில் பிறக்க வேண்டும் என்பதே இப்போது அனைவரின் குறிக்கோளாக உள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன், மருத்துவர்களைப் பார்ப்பதை விட ஜோதிடரை பார்ப்பதுதான் முக்கியமாக கருதப்படுகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால், ஜோதிடம் நம்மை காப்பாற்றினாலும், ஜோதிடர்கள் நம்மை கரை சேர விடமாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும், அவரவர் செய்த பூர்வ ஜென்ம பாவ புண்ணியத்தின் அடிப்படையில்தான் பலன்கள் அமையும்.

ஜோதிடர்கள் பொய்க்கலாம், ஜோதிடம் பொய்ப்பதில்லை. ஆனால், இத்தகைய அரைகுறை ஜோதிடர்களால், ஜோதிடமும் பொய்த்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

0

இந்திரஜித்

விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை


மரண தண்டனைக்கு எதிராக உரத்த குரலில் பேசும் படம்… தமிழகத்தின் தென் மாவட்ட வாழ்வைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். வழக்கம்போல் கமல்ஹாசன் தன் நடிப்பின் உச்சத்தை எட்டிய படம் என்று பலவிதங்களில் புகழப்படும் படம் விருமாண்டி.

பொதுவாகவே, தமிழ் படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் மிகவும் மேலோட்டமாகவேதான் சித்திரிக்கப்படும். ஏதாவது ஒரு சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதன் சாதகமான அம்சங்கள் மட்டுமே காட்டப்படும். மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் ஓர் அடையாளமாக இன்றும் சாதியே இருந்துவருவதனால் அந்த உணர்வுகள் சார்ந்து உண்மை நிலையைச் சித்திரிக்க யாருக்கும் தைரியம் இருப்பதில்லை. திரையுலகப் படைப்பாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் இந்தச் சுய தணிக்கையானது, என்னதான் வணிக மற்றும் சமூகக் காரணங்கள் சொல்லி நியாயப்படுத்தப்பட்டாலும், கண்டிக்கத்தக்க ஒன்றுதான்.

உண்மையைச் சொல்வதனால் நெருக்கடிகள் வரும் என்றால் அதை உரத்த குரலில் சொல்பவனே கலைஞன். நாங்கள் வெறும் கோமாளிகள்தான்… கலைஞர்கள் அல்ல என்று தமிழ் திரையுலகப் படைப்பாளிகள் சொல்லிக்கொண்டாலும் அவர்கள் கையில் இருப்பது கலை ஊடகமே. அதுவும்போக, சார்லி சாப்ளினும் கோமாளி நடிகர்தான். ஆனால், அதிகாரமையத்தை அவரும் கேள்விக்குட்படுத்தவே செய்திருக்கிறார். நாஜி கொடூரம் பற்றி வெளியான படங்களிலேயே மிகவும் முக்கியமான படமான லைஃப் ஈஸ் பியுட்டிஃபுல் சிரிக்க வைத்தபடியே சோகத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திய ஒன்றுதான். நமது பாரம்பரிய நாடகங்களில் கூட கட்டியங்காரன், விதூஷகன் என்ற வேடங்களில் வரும் நடிகர்கள் அதிகார மதிப்பீடுகளை எவ்வளவோ எள்ளி நகையாடவே செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், நகைச்சுவை என்பது மிகவும் பாதுகாப்பான, அதே நேரம் வலிமையான ஓர் ஆயுதமே. விஷயம் என்னவென்றால், அதிகாரமையத்தைக் கேள்விக்குட்படுத்த நீங்கள் தயாரா இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. அந்த அற உணர்ச்சி உங்களுக்கு இல்லையென்றால், உங்கள் கலைப் படைப்புகள் உங்கள் காலத்துக்கு முன்பாகவே செத்து மடிந்துவிடும்.

அந்தவகையில் கமலின் அடுத்த பலவீனமான படைப்பு விருமாண்டி. ஹே ராமை ஒப்பிடும்போது பலவகைகளில் நேர்த்தியான படம்தான் இது. என்றாலும் தன்னளவுக்குப் போதிய ஓட்டை உடைசல்களுடனே இதுவும் மிளிர்கிறது.

தென் மாவட்டங்கள் சாதி மோதல்களால் உருவான ஒரு போர்க்களம்.  நாயக்கர்கள் அங்கு செல்வந்தர்களாக இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் தேவர்களுடன் மோதுவதை அவர்கள் நினைத்தே பார்க்க முடியாத நிலையே இன்று நிலவுகிறது. தேவர்-தலித் மோதலைப் படமாக்கினால் பெரும் பிரச்னைகள் வரும் என்பதால், உண்மை நிலையை அப்படியே விட்டுவிட்டு குறைவாக நடக்கும் நாயக்க-தேவர் மோதலை படத்தின் கருவாக ஆக்கியிருக்கிறார். தேவர் மகன் படத்தில் அதையே இரண்டு தேவர்களுக்கு இடையிலான சண்டையாக்க் குறுக்கியிருப்பார். புலிகளுக்குள்ளும் சண்டை உண்டென்றாலும் மானின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்தானே புலியின் அசல் உலகம். பேசாப் பொருளைப் பேசுதல் என்பது உலகம் பொய்யைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடும்போது உண்மையைத் துணிந்து சொல்வதில் இருக்கிறது. அதாவது, எதைச் சொல்ல வேண்டுமே அதைச் சொல்வதில் இருக்கிறது. எதைச் சொல்ல முடியுமோ அதைச் சொல்வதில் அல்ல. எனவே, தென் மாவட்டத்தில் மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும்தான் எப்போதும் சண்டை ஏற்படும் என்று கமல் சொல்லும்போது அவர் மணலுக்குள் தலையை நுழைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியாகவே ஆகிறார்.

மரண தண்டனைக்கு எதிரான படம் என்கிற பம்மாத்து வேறு படத்தில் படு செயற்கையாக, எந்தவிதப் புரிதலும் இல்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மரண தண்டனை என்பது ஓர் அரசால் தரப்படும் தீர்ப்பு. நீதித்துறை, காவல்துறை, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொது மக்கள் என இன்றைய அரசின்/சமூகத்தின் அனைத்து முக்கிய துறைகளும் ஊழலில் திளைத்திருக்கின்றன. அப்படியான ஓர் அமைப்புக்கு ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கவேகூடாது. இது முதலாவது பார்வை.

இரண்டாவதாக, ஒருவேளை ஓர் அரசு எல்லா தளங்களிலும் நியாயமாகவே இருப்பதாக வைத்துக்கொண்டாலும், மிகப் பெரிய தவறுக்குக்கூட உயிர் பறிப்பு என்பதை தண்டனையாக வைக்கவேகூடாது. குற்றவாளியின் வயதுக்கு ஏற்ப ஒற்றை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை என்று வேண்டுமானால் வழங்கிக் கொள்ளலாம். அதுவே ஒருவகையில் ஒருவரை இல்லாமல் ஆக்குவதுதான். ஒரு நவீன அரசுக்கு அந்த அளவுக்காவது தார்மிக அக்கறையும் பொறுப்பும் இருந்தாக வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தாலும் மரண தண்டனை கூடவே கூடாது. அதுவும்போக மரண தண்டனை கூடாது என்று சொல்வதற்கு இணையாக அது தேவை என்ற குரலும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தரப்புகளின் மோதல் என்ற கோணத்தில்தான் மரண தண்டனை பற்றிய விவாதங்கள் எழவேண்டும்.

இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் மரண தண்டனை என்ற விஷயத்தின் கொடூரத்தையும் அபத்தத்தையும் புரியவைக்க வேண்டுமென்றால் அந்தப் படம் அரசின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாக இருந்தாகவேண்டும்.

ஓர் உதாரணம் சொல்வதானால், இன்று கூடங்குளத்தில் உதயகுமார் தலைமையில் ஒரு போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவரை அரசு நக்சலைட் என்றும் தேச விரோதி என்றும் சித்திரிக்கிறது. இதுபோன்ற ஒரு போராளியை அரசாங்கம் தூக்கு தண்டனை வரை கொண்டு செல்வதாகக் காட்டினால் அப்போது அந்த அரசின் கொடூரமும் அந்த தண்டனையை ஒழித்தே ஆக வேண்டியதன் அவசியமும் ஒருவருக்குப் புரியவரும். கறுமையின் அடர்த்தியை அதி வெண்மை ஒன்றைப் பக்கத்தில் வைப்பதன் மூலம் நன்கு புலப்படவைக்கும் யுக்தி இது.

இந்தப் படத்தில் கூட பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவனை யதேச்சையாக அடிக்க அவன் இறந்துவிடுவதால் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கை என்பது மரண தண்டனையைக் கேள்விக்குட்படுத்தும் அபாரமான கதையாக ஆகியிருக்க வாய்ப்பு உண்டு. பரிதாபத்தின் மூலம் கதாநாயக பிம்பத்தை விஸ்வரூபம் பெற வைப்பதும் வணிக வெற்றிகளைக் குவிக்கவே செய்யும்.

ஆட்டோ சங்கர் போன்ற ஒருவரின் கதையை மையமாக வைத்து, அவனுக்கு உடந்தையாக இருந்த எத்தனையோ காவல் துறையினரும் அரசியல்வாதிகளும் சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் வெளியில் உலவிக் கொண்டிருக்க பிடிபட்ட அவன் மட்டுமே தூக்கில் தொங்கவிடப்பட்டதன் அபத்தத்தை அநியாயத்தை படமாகக் காட்டியிருக்க முடியும். இவையெல்லாம் ஒரு எளிய ஃபார்முலா கதையாக ஆகிவிடும் என்று நினைத்தால் குறைந்தபட்சம் குற்றவாளியின் பின்னணிக்கு இணையாக அரசின் அநியாயமான செயல்பாடுகளையும் விவரித்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் படத்தில் காவல்துறையைச் சேர்ந்த பேய்க்காமன் என்ற ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே அரசின் அங்கமாக இடம்பெறுகிறது. அந்தக் கதாபாத்திரமும்கூடத் தெளிவான வில்லன் பிம்பத்துடன் படைக்கப்பட்டிருப்பதால் அரசமைப்பின் மீதான விமர்சனமாக அது கூர்மை பெறவில்லை. அதுபோல் பொய் சாட்சி சொல்லும் நபர்கள் அனைவருமே மக்களின் துல்லியமான பிரதிநிதிகளாக முழுவடிவம் பெறவில்லை. சமீபத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த மன நிலை குன்றிய ஒருவரை வங்கிக் கொள்ளையன் என்று நினைத்து மக்கள் கூட்டம் அடித்து உதைத்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு தூக்கு தண்டனைகளின் போது மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் அதை வரவேற்று ஆர்ப்பரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையே மக்கள் திரளின் தெளிவான சித்திரிப்பாக ஆக முடியும். அப்படி இல்லையென்றால் தனிப்பட்ட நபரின் குணாம்சமாக அது சுருங்கிவிட வாய்ப்பு உண்டு.

அந்தவகையில் மரண தண்டனை எதிர்ப்பு என்பது இந்தத் திரைக்கதையில் பலவீனமான ஒட்டு போலவே இருக்கிறது. எஸ்.வி.சேகர் தன்னுடைய துணுக்கு டிராமாக்களில் சமூகத்துக்கு செய்தி எதுவும் சொல்லப்படுவதில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்வகையில் காபியில சர்க்கரை குறைவா போட்டுக்கணும், குழந்தைகள் ஸ்கூல ஒழுங்கா படிக்கணும், அப்பா அம்மாவை மதிக்கணும் என்பதுபோன்ற நற்செய்திகளை ஒரு கதாபாத்திரத்தை விட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச வைத்திருப்பார். கமல்ஹாசனும் தனது படத்தின் கனத்தைக் கூட்ட மரண தண்டனையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எஸ்.வி.சேகரை விட கொஞ்சம் மேலான கலைநயத்துடன் அது இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. அவ்வளவுதான்.

அதற்காக ரொம்பவே மெனக்கெட்டு டாக்குமெண்டரி, அதை எடுக்க வரும் பெண்மணிக்கு கீழ்வெண்மணி பின்னணி என்றெல்லாம் ஜல்லி அடித்திருக்கிறார். இந்தக் கீழ்வெண்மணி பின்னணி என்பது அதைவிட அபத்தம். காத்தமுத்துவின் மகளான அந்த டாக்குமெண்டரி இயக்குநர் ஜேம்ஸ் என்பவரைக் கல்யாணம் செய்துகொள்கிறாராம். ஜேம்ஸ் அவளைத் துன்புறுத்தவே அப்பாவே மருமகனைக் கொன்றுவிடுகிறாராம். அவருக்கு தூக்கு தண்டனை தரப்பட்டுவிடுகிறதாம். மகள் அந்த வேதனையால் தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறாராம்.

மருமகனைக் கொன்றதற்காக ஒருவருக்கு தூக்கு தண்டனை என்பது இன்றைய நடைமுறையில் இல்லாத ஒன்று. அதுதான் படத்தின் முக்கியமான துணைக் கதாபாத்திரத்தை மரண தண்டனைக்கு எதிராகப் போராடத் தூண்டிய விஷயமாம். அந்த அடிப்படையே மடத்தனமாக இருக்கிறதே. அது சரி… அந்தப் பெண்ணுக்கு எதற்காக கீழ்வெண்மணி என்ற பின்னணி. அது வேறு விஷயங்களை நினைவுபடுத்தும் ஒன்றல்லவா? தலித் ஒருவர் தன் மகளை நன்கு படிக்க வைத்து கடன் பட்டு கிறிஸ்தவருக்குத் திருமணம் செய்து கொடுத்த பிறகும் (அதிக வரதட்சணை?) அந்தப் பெண்ணுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. அவர் தானாக தன் வழியைத் தேடிக் கொள்கிறார் என்பதைச் சொல்ல வருகிறாரா? உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

மாபெரும் கலைப்படைப்பில் செய்யப்படும் ஒவ்வொரு நுட்பமான விஷயமும் வலுவான காரணத்தைக் கொண்டதாக இருக்கும். போலிகளில் இது நேரெதிராக புலியைப் பார்த்து போட்டுக்கொள்ளும் சூடுபோல் கேலிக்கூத்தாகவே முடியும்.

அதுபோல் படத்தின் க்ளைமாக்ஸ் என்பதும் சற்றும் பொருந்தாக ஒன்றாகவே இடம்பெற்றிருக்கிறது. அதிலும் ஜெயிலில் கலவரம் செய்யும் கைதிகள் ஏதோ நேர்த்திக்கடன் போல ஜெயிலைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்துகொண்டே இருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், அங்கு நடக்கும் கஞ்சா கடத்தல் விவகாரம் தலைமை காவலருக்குத் தெரிந்துவிடுகிறது. ஒரு கலவரம் போல் செட்டப் செய்து அவரைப் போட்டுத் தள்ள துணைக் காவலர் பேய்க்காமனுடன் கைதிகள் சேர்ந்து திட்டமிடுகிறார்கள். அதன்படியே செய்து கடத்தல் பொருட்களைக் கைப்பற்றுகிறார்கள். அதை வெளியேயிருக்கும் அவர்களுடைய ஆள் வசம் தூக்கி எறிந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். அல்லது ஜெயிலை விட்டுத் தப்பிக்க முயற்சி செய்யலாம். அதைவிட்டுவிட்டு ஏதோ பழங்குடி, மத்திய கால மேற்கத்திய படங்களில் வரும் போரைப்போல் மரத்தைக் கவண் போல் ஆக்கி அதில் டாய்லெட் பீங்கானில் ஆரம்பித்து சோபா செட்கள் வரை மாட்டி பீரங்கிபோல் எறிந்து என்னவெல்லாமோ செய்கிறார்கள். கிரில் கம்பிகளைப் பெயர்த்து எடுத்து சர் சர் என்று எறிகிறார்கள். கமல் சார் உலகப் படங்கள் நிறைய பார்த்திருக்கக்கூடும். ஜெயில் கைதிகளும் கூடவா? அதுவும்போக அவர்களுடைய நோக்கம் என்ன க்ளைமாக்ஸை விறுவிறுப்பாக ஆக்குவதா!?

மரண தண்டனை எதிர்ப்பில் ஆரம்பித்து, ஜல்லிக் கட்டுக்குப் போய், தமிழ் விவசாயம் என்று திரும்பி, நிலச் சண்டையாக மாறி, நாயக்கர்-தேவர் சண்டை என்று ஆகி, எஜமானன் பணியாள் சண்டையாகத் திரும்பி, ஜெயில் சண்டையாகி கடைசியில் மரண தண்டனை எதிர்ப்பில் வந்து முடிகிறது. நடு நடுவுல மானே தேனே என்று காதல் டிராக்கும் ஓடுகிறது. இரவு நேர யாசகரின் தூக்குப் பாத்திரத்தில் ஊசிப் போன சாம்பாரில் ஆரம்பித்து உளுத்துப் போன வடைவரை இருப்பதுபோல் ஒரு அசட்டுக் கலவை இது. கோடுகள் தேவையான வளைவு நெளிவுகளுடன் இருந்தால் அதற்குப் பெயர் ஓவியம். கண்டதையெல்லாம் தீட்டி வைத்தால் அதற்குப் பெயர் கிறுக்கல்.

படமானது கதாநாயகன், வில்லன் ஆகிய இருவரின் பார்வையில் சொல்லப்படும் கதையாக விரிகிறது. இந்த ரொஷோமான் யுக்தி படத்தில் மிகவும் மோசமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரொஷோமானில் உண்மை என்ன என்பது கடைசிவரை நமக்குப் புரியாமலேயே இருக்கும். அதுதான் உண்மையின் பன்முக சாத்தியக்கூறுகளையும் புதிர்த்தன்மையையும் வசீகரத்தையும் முழுவதுமாக எடுத்துக்காட்டும். இந்தப் படத்தில் வில்லனின் கதையானது முழுப் பொய் என்பது நாயகனின் கதையைக் கேட்டதும் தெரிந்துவிடுகிறது. எனவே, உண்மையின் பன்முகத்தன்மை இதில் இடம்பெறாமல் போய்விட்டது. ரொஷோமானைப் போல் எடுத்ததாக நான் சொல்லவில்லையே என்று கமல் சொல்லக்கூடும். ஆனால், அந்தப் பாணியைப் பலவீனமாகப் பயன்படுத்தியிருப்பதால் அந்த விமர்சனத்தையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும்.

கமல் ஹாசனின் அறிமுகக் காட்சியே அபத்தத்தின் உச்சமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும்போது கரண்ட் கம்பியின் மேல் நின்று கொண்டிருக்கிறார். ஏன் என்று கேட்டால், அவருடைய பாட்டி காளையை எல்லாம் அடக்கப் போகக்கூடாது. வெறுமனே வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாராம். பேரன் காளையை அடக்கக் களம் இறங்கினால் அடிபட்டுவிடுமே என்ற பயம் இருந்தால் கிழவி அதே கூட்டத்தில் நின்று அவனை இறங்கவிடாமல் தடுக்க வேண்டியதுதானே. அந்த ஊரில் அதிகபட்சம் ஆறேழு தெருக்கள் இருக்கக்கூடும். ஜல்லிக்கட்டு நடக்கும்போது ஊரே அந்த மைதானத்தில்தான் கூடியிருக்கும். கிழவி மட்டும் தன்னந்தனியாக வீட்டில் என்னதான் செய்துகொண்டிருந்தாள். நாயகன் காளையை அடக்கி முடித்ததும் கரெக்டாக வந்து அவனைத் திட்ட வேறு செய்கிறாள். பேரனின் மீது அக்கறை இருந்தால் முன்னாலேயே வந்திருக்க வேண்டியதுதானே.

அதுவும்போக அந்தக் காளையோ கமல் சார் மீது அவருடைய ஜால்ரா கூட்டத்தைவிட விசுவாசமானதாக இருக்கிறது. ஈட்டி போல் கூர் தீட்டப்பட்ட கொம்பு இருந்த பிறகும் அது கமல் சாரை செல்லமாகவே முட்டுகிறது. காளையை அடக்கிவிட்டு வெற்றிப் பெருமிதத்தில் நின்று கொண்டிருப்பவரை பின்னால் இருந்து தூக்கி எறிகிறது. கமல் சாரோ லேசான கொம்பு சிராய்ப்புடன் பேக் சம்மர் சால்ட் அடித்து எழுந்துவருகிறார். கொம்பு படாமல் குத்த அந்தக் காளை எங்குதான் படித்ததோ?

அதுவும்போக, சின்ன கோளாறுபட்டிக்காரன் காளையை அடக்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. ஏனென்றால், காளை அந்த ஊரைச் சேர்ந்தது. அந்த ஊர்க்காரர்களுக்கு முன்பே அதனுடன் பழக்கம் இருக்கும் என்பதாலோ என்னவோ அப்படி ஒரு நிபந்தனை சொல்லப்படுகிறது. அப்படியானால், அசலூரான் அடக்கலாமா என்று கூட்டம் கேட்கிறது. சரி என்று சொல்கிறார்கள். கேமரா நேராக தரையில் இருந்து மேலே எழுந்து கரண்ட் கம்பியை ஃபோகஸ் செய்கிறது. சிங்கப்பூர் மச்சான் அறிமுகப்படுத்தப்படும் கமல் காளையை அடக்க அங்கிருந்து குதிக்கிறார்.

ஆனால், உண்மை என்னவென்றால், அவர் அந்த சின்னக் கோளாறுபட்டியைச் சேர்ந்தவர்தான். அப்பாவுடன் சிங்கப்பூரில் சில காலம் வசித்தவர் அவ்வளவுதான். ஒருவர் எவ்வளவு காலம்தான் வெளியூரில் வசித்தாலும் சொந்த ஊர்க்காரராகத்தான் அடையாளப்படுத்தப்படுவார். இதுதான் கிராமப்புற யதார்த்தம். இங்கோ சில காலம் சிங்கப்பூரில் வசித்தவர் அசலூரான் ஆகிவிடுகிறார். அதோடு, அப்பா செத்த பிறகு பாட்டிதான் கிராமத்தில் வைத்துத் தன்னை வளர்த்ததாகச் சொல்கிறார். குபீர் ஜாலி பிரதர்ஸ் என்ற சங்கத்தை அமைத்து ஊரில் சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருப்பதாகவும் சொல்லவும்படுகிறது. காளையை அடக்க மட்டும் அசலூரானாக அரிதாரம் பூசிக் கொள்வதேன்? கரண்ட் கம்பி மேல இருந்து குதிக்கற மாதிரி சீன் யோசிச்சாச்சு. அப்ப எடுத்துத்தான ஆகணும்.

அப்பறம் காட்சிகள் எல்லாம் எந்தவொரு தர்க்கத்துக்கும் சிக்காமலே போய்க்கொண்டிருக்கின்றன.

சிறுநீர் கழிக்கப்போன விருமாண்டியை பின்னால் இருந்து ஒருவர் அருவாளால் வெட்டுகிறார். வெட்டுப்பட்டவர் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிவராமல், ஆளரவமற்ற தெருக்களினூடாக ஓடிப் போய் நேராகத் தன் காதலி அன்னலட்சுமியின் வீட்டுத் தொழுவத்தில் போய்விழுகிறார். அந்த அருவாளோ ஃபெவிகால் போட்டு ஒட்டியதுபோல் விருமாண்டியின் உடம்புடன் ஒட்டியே இருக்கிறது. ரஜினிகாந்த் என்றால்கூட இதை நம்பலாம். ஏனென்றால், அவர் பெயரிலேயே காந்தம் இருக்கிறது. கமல் சாரின் பெயரில் மென்மையான கமலப் பூ மட்டும்தானே இருக்கிறது. அந்த அருவாளில் கொ என்ற கொத்தாளத் தேவனின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை அன்னலட்சுமி பார்க்கிறாள் என்றொரு காட்சி பின்னால் வருகிறது. அதனால் அருவாள் கீழே விழவே இல்லை என்று காட்டப்பட்டிருக்கிறது. அதோடு விருமாண்டிக்கு அடுத்த இரண்டு மாதம் சிகிச்சை தர வேண்டிய அளவுக்கு அந்தக் காயம் பலமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், விருமாண்டியைத் தூக்கிச் செல்லும்போது, மல்லாந்து படுத்தபடியே இருக்கிறார். முதுகில் காயம்பட்டால் குப்புறப் படுக்க வைக்கவேண்டும் என்ற எளிய விஷயம்கூடப் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

தேன் கூடு கலைக்கப்பட்டு மாடு மிரண்டு ஓடுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. அன்னலட்சுமி தன் நவீன குதிரையான மொபெட்டை எடுத்துக்கொண்டு தலையில் சாக்கு ஒன்றைப் பின்பக்கமாகப் போத்திக்கொண்டு மாட்டைப் பிடித்துக் கொண்டுவர சர்ரென்று வெளியே கிளம்புகிறார். போகும் வழியில் ஒரு மரத்துண்டு ஒன்றில் அருவாள் சொருகி வைக்கப்பட்டிருக்கிறது. மொபெட்டில் விரைந்து செல்பவர் அந்த அருவாளை டக்கென்று எடுத்துச் செல்கிறார். இந்தக் காட்சி பார்க்க அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால், காளையை வீட்டுக்குக் கொண்டுவர விரும்புபவர் எதற்காக அருவாளை எடுத்துச் செல்கிறார். அந்தக் காளையோ செல்லப் பூனைக்குட்டி மாதிரி அவரைப் பார்த்தால் பம்மக்கூடியது. சாட்டையை எடுத்துச் சென்றாலாவது ஏதோ பயமுறுத்தப் போகிறார் என்று நினைக்கலாம். அதெல்லாம் தெரியாது… மொபெட்டில் வேகமாகப் போகும்போது இறங்காமலேயே சட்டென்று அருவாளை எடுத்துச் செல்லும் காட்சி பார்க்க அருமையாக இருக்கிறது. அதனால் அது படத்தில் இடம்பெற்றுவிட்டது. இதன் ஒரிஜினல் எது என்று எனக்குத் தெரியாது. ஆனால், கமல் சாருக்குத் தெரிந்திருக்கும். நைஸாகச் சொருகிவிட்டார். பின்னே நம்ம படம் எப்பத்தான் சர்வ தேசத் தரத்தை எட்டறது?

ஒரு காட்சியில் நல்லம்ம நாயக்கர் பஞ்சாயத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த காட்சியில் அதே பஞ்சாயத்தை விருமாண்டி பிராது கொடுத்து கூட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதே பஞ்சாயத்தில் சம்பந்தமே இல்லாமல், விருமாண்டி தன் சொத்தில் ஒரு பங்கை ஊருக்கு எழுதுவதாக சவால் விடுகிறான். கொண்ட ராசு நாயக்கன் என்ற ஒருவர் தானும் எழுதி வைப்பதாக பந்தயம் கட்டுகிறார். கொத்தாளத் தேவனை வம்புக்கு இழுக்கிறார். கை கலப்பில் அந்தப் பஞ்சாயத்து முடிகிறது.

அன்று இரவு நல்லம்ம நாயக்கர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்கிறாள் அன்னலட்சுமி. மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்று பஞ்ச் டயலாக் சொல்கிறாள். உண்மையில் அதை ஏற்றுக் கொள்வதானால், ஒருவர் என்ன செய்ய வேண்டும்? நல்லம்ம நாயக்கர் மீதான புகாரை வாபஸ் பெறவேண்டும். அல்லது அவரிடம் போய் சமாதானம் பேச வேண்டும். அதைவிட்டுவிட்டு விருமாண்டி நேராக கொண்ட ராசு நாயக்கரைப் போய்ப் பார்த்து மன்னிப்பு கேட்கிறான். பிரச்னை நல்லம்ம நாயக்கருக்கும் விருமாண்டிக்கும்தான். கொண்ட ராசு நாயக்கருடன் அல்ல.

பஞ்சாயத்தில் அன்ன லட்சுமியின் சித்தியைப் பற்றி அவதுறாகப் பேசியதற்கு கொண்ட ராசு நாயக்கனை விருமாண்டி அடிக்கப்போனார் என்பது உண்மைதான். ஆனால், இரவில் அவனிடம் போய் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனை மன்னிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார். தவறு செய்தது கொண்ட ராசு நாயக்கன்தானே. ஆனால், 24 உயிர்களின் பலி என்ற ஒரு கதை முடிச்சு அடுத்ததாக விழ வேண்டும் என்பதற்காக விருமாண்டி தனியாக கொண்ட ராசு நாயக்கரைப் பார்க்கப் போகிறான். திரைக்கதையின் குழப்பமான இடம் இது.

அதோடு மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத் தெரிஞ்சவன் பெரிய மனுஷன் என்ற படத்தின் பஞ்ச் டயலாக் மிகவும் அசட்டுத்தனமானது. தப்பு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதில் எந்தப் பெருமையும் இல்லை. அது மிகவும் சாதாரண ஒரு செயல்தான். அந்தத் தவறினால் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கும் ஒருவர் தப்புச் செய்தவரை மன்னிக்கிறார் என்றால் அதுதான் பெரிய விஷயம். விருமாண்டி பலரைக் கொன்றுவிட்டு மன்னிப்புக் கேட்பதில் எந்தச் சிறப்பும் கிடையாது. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் வேதனையை மறந்துவிட்டு அல்லது விருமாண்டியைத் தூக்கில் போடுவதால் மட்டும் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் வரவா போகிறார்கள், அவனாவது திருந்தி வாழட்டும் என்று சொல்லி மன்னித்தால் அதுதான் பெரிய விஷயம். கொல்லப்பட்டவர்கள் துணை நடிகர்கள்தான் என்பதாலும் கொலைகளைச் செய்தது கமல் சார் என்பதாலும், மன்னிப்பதைவிட மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமாக ஆகிவிடுகிறது.

அடுத்ததாக, விருமாண்டிக்கும் நல்லம்ம நாயக்கருக்கும் இடையிலான சிறிய பகையைக் காரணமாக வைத்து கொத்தாளத் தேவன் கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் தன் ஆட்களுடன் போய்க் கொன்று குவிக்கிறான். தேவர்களில் ஒருவர் மீது ஒரு சிறு கீறல் கூட விழாதபடித்தான் அந்தச் சண்டை காட்சிப்படுத்தப்படுகிறது. பின்னே தென் மாவட்டத்தில் இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் தேவர் சாதியினர்தானே. அவர்கள்தானே கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யப் போகிறவர்கள். எனவே, கலவரத்தில் நாயக்கர் பிரிவினர் மட்டுமே சாகிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது.

அதில் ஒரு மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், சம்பவம் நடந்த நேரத்தில் கொத்தாளத் தேவருடன் இருந்ததாக விருமாண்டி சாட்சி சொல்கிறான். கோர்ட் அதைக் கேட்டு இருவரையும் விடுவித்துவிடுகிறது. உண்மையில் அந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே அவர்கள் இருவர்தான். ஒருவருக்கு ஒருவர் நல்லவர் என்ற சான்றிதழ் வழங்கியதும் நீதிமன்றம் அதைக் கேட்டு அவர்களை விடுவித்துவிடுகிறதாம். ஜெயா அக்கா நல்லவர் என்று சசி அக்காவும், சசி அக்கா அப்பாவி என்று ஜெயா அக்காவும் சொல்வதுபோல் கொத்தாளத் தேவரும் விருமாண்டியும் உடன் பிறவா சகோதர பாசத்தைக் காட்டியதும் நீதிமன்றம் நம்பி விடுதலை செய்துவிடுகிறது.

இது போதாதென்று அன்னலட்சுமி தூக்கில் தொங்கி இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கும் வழக்கறிஞர் இந்த 24 கொலைகளைச் செய்தது விருமாண்டிதான் என்று நிரூபிக்கப் போவதாகச் சொல்வார். ஆனால், அப்படி எதுவும் செய்யாமலேயே நீதிமன்றம் 24 பேரைக் கொன்றதற்காகவும் காதலியை கற்பழித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டதற்காகவும் விருமாண்டிக்கு தூக்கு தண்டனை தந்துவிடுகிறது. இத்தனைக்கும் 24 பேர் கொலை கேஸானது ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வழக்கு.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அன்ன லட்சுமி தூக்கு மாட்டித்தான் இறக்கிறாள். போஸ்மார்டம் ரிப்போர்ட்டில் அப்படித்தான் தெரிய வந்திருக்கும். கொன்றுவிட்டுத் தூக்கில் மாட்டியதாக வந்திருக்காது. ஆனால், கொலைப்பழியை விருமாண்டி மேல் சுமத்துவதற்காக அப்படி காட்டப்படுகிறது. விருமாண்டியின் விந்து அன்ன லட்சுமியின் உடலில் இருந்ததும் அன்னலட்சுமியின் நகக்கண்ணில் விருமாண்டியின் சதைத் துணுக்குகள் இருந்ததும் மட்டுமே போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் இருந்து தெரியவந்ததாக நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டதாக அல்ல. அதுவும் போக, விருமாண்டியும் அன்ன லட்சுமியும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். கற்பழித்ததாகச் சொல்வதில் எந்த ஆதாரமும் இல்லை. அந்த ஊர்க்கார்களும் விருமாண்டியின் நண்பர்களும் ஏன், நல்லம்ம நாயக்கரின் ஊரார்கூட அந்தக் காதலுக்கு சாட்சி சொல்ல முடியும்.

இருவரும் ஊரை விட்டு ஓடியபோது சென்னையில் தங்க இடம் கொடுத்த உறவுக்காரப் பெண்மணி விருமாண்டிக்கும் அன்ன லட்சுமிக்கும் திருமணம் நடந்துவிட்டதைச் சொல்லியிருந்தால் வழக்கு அப்போதே வலுவிழந்திருக்கும். இத்தனைக்கும் சிங்கப்பூரில் தன் மகன் செய்த ஒரு தப்புக்காக விருமாண்டிதான் பழியை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த வீடே அவனுடையதுதான் என்றும் அந்தப் பெண்மணி சொல்கிறாள். விருமாண்டியைத் தன் மகன் போலவே மதிக்கிறார். ஆனால், அவரை அந்த உண்மையைச் சொல்லாமல் ஊமையாக்குகிறார் வசனகர்த்தா. அது நியாயமே இல்லை.

இடையில் இடம்பெறும் ஒரு கமல் டச் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தேனி மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிப்போகும் காதல் ஜோடிகள் டி.வி.எஸ். மொபெட்டிலேயே சென்னைக்கு போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, போகும் வழியில் ஜலக்கிரீடை செய்கிறார்கள். ஊரை விட்டு ஓடும் பரபரப்பான நேரத்திலும் வேறு யாராவது பார்த்தால் பிரச்னை ஆகிவிடுமே என்ற பயமெல்லாம் இல்லாமல் ஜாலியாகப் புனலாடுகிறார்கள். விஷயம் என்னவென்றால், அடுத்த நாளே சென்னை வந்துவிடுகிறார்கள். சென்னையில் இதுபோல் புனலாட ஆறு, ஏரி எதுவும் கிடையாது. கிராமத்தில்தான் அது சாத்தியம். எனவே அந்த சம்பவம் அங்கு நடந்தேறுகிறது.

அப்படியானால், முன்பே கிராமத்தில் புனலாடியிருக்க வேண்டியதுதானே என்று கேள்வி உங்களுக்கு வரக்கூடும். ஆனால், தமிழ் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? தாலி கட்டிய பிறகுதானே முதலிரவு நடக்க முடியும். தாலி கட்டிய மறுநாளே சென்னைக்குப் போய்விடுகிறார்கள். புனலாட ஊரை விட்டு ஓடிப்போகும் அந்த இரவு மட்டுமேதான் அவகாசம் இருக்கிறது. எனவே, அந்தப் பரபரப்புக்கு இடையிலும் பேண்ட் சட்டை போட்ட விருமாண்டி வேட்டியைக் காய வைத்துவிட்டுப் புனலாடுகிறார்.

இறந்த அன்ன லட்சுமியின் உடலில் விருமாண்டியின் விந்து இருந்ததாக போஸ்ட்மார்டத்தில் தெரிய வந்து அதை வைத்துத்தான் கற்பழித்தாகப் பழி சுமத்தப்படுகிறது. அப்படியானால் முதலிரவு நடந்தே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது அல்லவா என்று கேட்பீர்கள். அது உண்மைதான் ஆனால், சென்னைக்குப் போன பிறகு ஏறு தழுவுவதாகக் காட்டப்படுகிறதே. அதுவே போதாதா என்ன? ஊரை விட்டு ஓடும்போதும் புனலாடத்தான் வேண்டுமா? அந்தக் காட்சியை நான் மிகவும் பயத்துடனேயேதான் பார்க்க வேண்டியிருந்தது. இரவு லைட்டிங்கில் வேறு எடுத்திருக்கிறார்கள். கேமரா எந்தப் பக்கம் திரும்பினாலும் கொத்தாளத் தேவனின் அருவாள் போலவே காட்சி அளித்தது. எந்த நிமிடமும் அது பாய்ந்து வந்து காதல் சிட்டுகளை வெட்டிவிடும் என்ற பயத்துடனேயே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கிளு கிளு காதல் காட்சியை இப்படிப் பார்க்க நேர்ந்தது எவ்வளவு பெரிய வேதனை என்பது அனுபவித்தால்தான் தெரியும். எதை மன்னித்தாலும் இதை மன்னிக்க முடியாது.

விருமாண்டிக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வைத்தியநாதய்யர் படு அம்மாஞ்சியாக இருக்கிறார். விருமாண்டி அன்னலட்சுமியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அன்னலட்சுமியின் உடல் கொத்தாளத் தேவனின் வீட்டு உத்தரத்தில்தான் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது. விருமாண்டி கொன்றிருந்தால் கொத்தாளத் தேவனின் வீட்டில் மாட்டிவிட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஒன்றைச் சொன்னாலே விருமாண்டி கொலைப்பழியில் இருந்து தப்பித்துவிட முடியும். ஆனால், அந்த அம்பி ஐய்யரோ, திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு சாதுவாக போய் உட்கார்ந்துவிடுகிறார்.

இதைவிட இன்னொரு அசட்டுத்தனம் என்னவென்றால், அன்னலட்சுமி இறந்தது தெரிந்ததும் விருமாண்டி அதற்குக் காரணமான பலரை வெட்டிக் கொல்கிறான். காவல் துறை அவனைத் துரத்துகிறது. அடைக்கலம் தரும் நல்லம்ம நாயக்கர் விருமாண்டியை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். அது தெரிய வந்ததும் விருமாண்டியை என்னிடம் ஒப்படைத்துவிடு என்று கொத்தாளத் தேவன் நல்லம்ம நாயக்கரிடம் கேட்கிறான். நல்லம்ம நாயக்கரும் அவனை மறைத்து வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதாக கொத்தாளத் தேவனையும் அவனுடைய ஆட்களையும் கூட்டிச் செல்கிறார். தன்னுடைய பரம விரோதியான கொத்தாளத் தேவனிடம் அப்படி தனியாக போய் அவர் மாட்டிக் கொள்ளவேமாட்டார். ஆனால், இங்கோ கமல் சாரின் திரைக்கதை சாதுரியத்தினால் அப்படி அசட்டுச் செயலை நல்லம்ம நாயகர் செய்கிறார்.

அவர் அழைத்துச் சென்ற பாழடைந்த வீட்டில் ஒரு பீரோ இருக்கிறது. அதில் ஒரு பெரிய துப்பாக்கி இருக்கிறது. அதை எடுத்து பட்டென்று நல்லம்ம நாயக்கர் சுடுகிறார். உண்மையில் உங்கள் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எதிரி கையில் வெறும் அருவாள்தான் இருக்கிறது. உங்கள் துப்பாக்கியோ ஒவ்வொரு தோட்டாவாக போட்டுச் சுட வேண்டிய ஒன்று. அப்படியானால் என்ன செய்வீர்கள். பிரதான எதிரியைக் குறிவைத்து சுடப்போவதாக மிரட்டி மற்றவர்களை அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போட வைப்பீர்கள். இதுதானே புத்திசாலித்தனம். ஆனால், இங்கோ நல்லம்ம நாயக்கர் பட்டென்று யாரோ ஒருவரைப் பார்த்து சுடுகிறார். அடுத்த தோட்டாவை நிரப்புவதற்குள் கொத்தாளத் தேவன் அவரை அருவாளால் வெட்டிச் சாய்த்துவிடுகிறான். பாவம் கமலின் பலவீனமான திரைக்கதையால் நல்லம்ம நாயக்கர் கையில் துப்பாக்கி இருந்தும் இறந்துவிட்டார்.

இதாவது பரவாயில்லை. பதற்றத்தில் அப்படிச் செய்துவிட்டார் என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நல்லம்ம நாயக்கரைக் கொன்ற விஷயத்தை காவலர் பேய்க்காமனிடம் போய் கொத்தாளத் தேவன் சொன்னதும் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா… கொத்தாளா… மதுரை கோர்ட்ல சரண்டைஞ்சுடு. இப்படி யாராவது சொல்வார்களா? அந்தக் கொலையைப் பார்த்த சாட்சி என்று யாருமே கிடையாது. நல்லம்ம நாயகருக்கு வேறு பல எதிரிகள் இருக்கவும் கூடும். கொண்ட ராசு நாயக்கரையும் அவருடைய ஆட்கள் 24 பேரையும் கொன்றது கூட நல்லம்ம நாயக்கராக இருக்கக்கூடும் என்றுதான் இதற்கு முன் நீதிமன்றத்தில் வழக்காடவே செய்திருக்கிறார்கள். இப்போது கொண்ட ராசு நாயக்கரின் ஆட்கள்தான் நல்லம்ம நாயக்கரைக் கொன்றதாக பிளேட்டை எளிதில் மாற்றிவிட வழி உண்டு. இருந்தும் காவலர் பேய்க்காமன் கமல் சாரின் அசட்டு வசனத்தை அப்படியே பேசுகிறார்.

அதுவும் எப்படி? விருமாண்டி முதல்ல சாட்சி சொல்லிட்டா அவன் சொல்றதுதான் சரின்னு ஆயிடும். எனவே, நீ போய் நான் தான் கொன்னேன்னு சரண்டர் ஆகிடு என்கிறார். என்ன ஒரு முட்டாள்தனம். விருமாண்டி முதலில் சொல்வதற்குள் அவன்தான் கொலைகாரன் என்று வேண்டுமானால் கொத்தாளத் தேவன் சொல்லலாம். ஆனால், உண்மையில் இந்தக் கொலையில் இருந்து அவன் விலகி இருப்பதுதான் அவனுக்கு நல்லது. அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. ஆனால், அவனைப் போய் சரண்டையச் சொல்கிறார் காவலர் பேய்க்காமன். கொத்தாளத் தேவனுக்கு ஆயுள் தண்டனை தரப்படுகிறது. விருமாண்டியுடன் கடைசி ஜெயில் சண்டைல கொத்தாளத்தேவனும் இருந்தாகணுமே. அதுக்கு இப்படி சரண்டர் ஆனாத்தான முடியும். எனவே, சாட்சியே இல்லாத கொலைக்கு சரண்டர் ஆகிறார் கொத்தாளத் தேவர்.

அதுமட்டுமல்லாமல் அவர் அப்ரூவராகவும் ஆகிறாராம். விருமாண்டியைவிடப் பெரிய சண்டியர் அந்தக் கொத்தாளத் தேவன். செல்வச் செழிப்பிலும் அரசியல் செல்வாக்கிலும் விருமாண்டியைவிடப் பல மடங்கு உயர்ந்தவர். அதோடு விருமாண்டியே கொத்தாளத் தேவனின் அடியாள்தான். என்னதான் உயிர் பயம் இருந்தாலும் விருமாண்டிதான் என் எஜமானர். அவர் சொன்னதைக் கேட்டுத்தான் கொலைகளை எல்லாம் செய்தேன் என்று கொத்தாளத் தேவன் ஒருபோதும் சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அதன் பிறகு ஊருக்குள் அவனால் நடமாடவே முடியாது. தேவனுக்கு உயிரைவிட மானம்தான் பெரிசு. கமல் சார்தான் பசுபதிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பது சரிதான். அதற்கான விசுவாசத்தை பசுபதியிடம் கமல் எதிர்பார்க்கலாம். ஆனால், கொத்தாளத் தேவனைப்போய் விருமாண்டிக்கு அடியாளாக ஆக்குவது தவறு..

அதோடு, குற்றம் சாட்டப்பட்ட விருமாண்டியையும் கொத்தாளத் தேவனையும் சென்னை மத்திய சிறையில் அடைக்கிறார்கள். தேனி எஸ்.ஐ.யாக இருந்த பேய்க்காமனும் ”கூடவே நானும் வரேனப்பு’ என்று சொல்லி அதே சிறையில் துணை ஜெயிலராகிவிடுகிறார். க்ளைமாக்ஸ் சண்டை களைகட்ட வேண்டுமல்லவா?

க்ளைமாக்ஸில் காவலர் பேய்க்காமன் கைதிகளிடம் ரகசியமாக தணிந்த குரலில் ஒரு சதித்திட்டம் பற்றிப் பேசுகிறான். விருமாண்டி மீது பொய் வழக்குகள் போட்டு தூக்கு தண்டனை வரை கொண்டுவந்தது பற்றியும் பேசுகிறான். அதை டாக்குமெண்டரி எடுக்க வந்த கேமராமேன் தூரத்தில் இருந்து படமெடுத்துவிடுகிறான். ஆனால், பேய்க்காமனுக்கு மிக அருகில் கீழே உட்கார்ந்திருக்கும் விருமாண்டிக்கு மட்டும் இது கேட்கவே இல்லையாம். அந்த கேமராவையும் பொண்ணையும் கொண்டுவந்து என்னிடம் ஒப்படைத்துவிடு என்று விருமாண்டியிடம் பேய்க்காமன் டீல் பேசும்போது என் அன்னலட்சுமியை எனக்குத் தருவியா… தூக்கு தண்டனையில இருந்து விடுதலை வாங்கித் தருவியா என்று டயலாக் அடிக்கிறார். பேய்க்காமன் சதித்திட்டம் பற்றிப் பேசியது விருமாண்டியின் காதில் விழுந்ததோ இல்லையோ, பேய்க்காமன் கெட்டவன் என்பது விருமாண்டிக்கு நன்கு தெரியும். எனவே, அந்த கேஸட்டையும் டாக்குமெண்டரி இயக்குநரையும் பேய்க்காமன் பிடித்துத் தரச் சொன்னால் அதற்கு எதிரானதைச் செய்வதுதான் விருமாண்டிக்கு நல்லது. ஆனால், அவனோ முதலில் அவர்களைப் பிடித்துக் கொடுக்கவே முயற்சி செய்கிறான். டாக்குமெண்டரி டைரக்டரை தலையில் அடித்து தூக்கிக் கொண்டு செல்கிறான். கொத்தாளத் தேவன் வந்து விருமாண்டியைக் கத்தியால் குத்தி அந்த கேமராவைப் பறிக்க முயற்சி செய்யும்பொதுதான் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான்.

இப்படியாக கதையின் எந்தவொரு நகர்வை எடுத்தாலும் அதில் லாஜிக்கே கிடையாது. இதுபோன்ற தவறுகள் ஏன் நடக்கின்றன என்றால், கதை, திரைக்கதை வசனத்தை செப்பனிடுதல் என்ற சங்கதியே தமிழில் நடப்பதில்லை. ஒரு சாதாரண கட்டுரை, கதை எழுதுவதாக இருந்தாலும் அதை ஐந்தாறு தடவை அடித்துத் திருத்தி எழுதுவது உலக வழக்கம். இங்கோ கோடிகளைக் கொட்டி எடுக்கும் படத்தை எந்தவித முன் திட்டமிடலும் சரிபார்ப்பும் இல்லாமல் எடுத்துவருகிறார்கள். தப்பித்தவறி யாராவது இலக்கிய அல்லது எழுத்து ஊடகத்தில் பரிச்சயம் உள்ள ஒருவரை கதை திரைக்கதை வசனம் போன்றவற்றுக்கு உதவிக்காக வைத்துக்கொண்டால், அந்த பிரகஸ்பதிகளோ வாங்கற காசுக்கு மேல கூவ ஆரம்பித்துவிடுகிறார்கள். நீ நின்றால் சிலை… நடந்தால் கலை… பேசினால் காவியம்… தும்மினால் ஓவியம் என்று ஆஸ்தான வித்வானாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்தான விதூஷகராகவும் ஆகிவிடுகிறார்கள். இந்த நிலை மாறாதவரை, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகத்தான் தமிழ் சினிமா இருந்து கொண்டிருக்கும்.

இந்தப் படத்துக்கு கொரிய நாட்டில் விருது கிடைத்தது என்று வேறு சொன்னார்கள். வெள்ளைக்காரன் மேல் நமக்கு இருக்கும் அடிமை பக்தியினால் வெளிநாட்டுக்காரன் என்றாலே புத்திசாலி என்று ஒரு எண்ணம் நமக்கு. கேவலம் மனுஷ ஜென்மம் தானே நாம் எல்லோரும்.

இந்தப் படத்துக்கு மாற்று திரைக்கதை எழுதுவதென்றால், முதலில் மரண தண்டனை எபிசோடை எடுத்து தனியே வைத்துவிடுவேன். அது தனியாக எடுக்கப்படவேண்டிய வலுவான கதை. அதுபோல் க்ளைமாக்ஸ் சண்டையும் படத்துடன் பொருந்தாத ஒன்று. அப்படிப் பார்த்தால், உயிருக்கு உயிராகக் காதலித்த ஒரு பெண்ணை காதலனே கற்பழித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுதல் என்ற விஷயம்தான் கதையாக மிஞ்சும். அதை வைத்து மிக அற்புதமான படம் தமிழில் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டிருக்கிறது. அதைவிட மேலான ஒன்றை யோசிப்பது கடினமே. கமல் சார் 100 ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் படம் அது.

0

B.R. மகாதேவன்

 

கல்வி : கொலை, கொள்ளை மற்றும் அபத்தங்கள்

ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை ஒரு சிறுவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது குறித்து குற்றம்சாட்டினார். அன்றைய காலைநேர அணிவகுப்புக்கு அவரை கூட்டிவந்து கல்லால் அடித்த மாணவனை அடையாளம் காட்டச்சொன்னார்கள். டிராயர் போட்டிருந்த பையன் என்பதைத் தவிர அவரால் வேறு அடையாளம் சொல்ல முடியவில்லை, அந்த கூட்டத்தில் தேடவும் அவர் முன்வரவில்லை. அதன்பிறகு எங்கள் பள்ளியின் ஐந்தாம்வகுப்பு ஆசிரியர் ஒருவர். அவரைப் போல (மன வளர்ச்சி குன்றியோரிடம்) இருப்பவர்களிடம் சண்டைக்கு போக்க்கூடாது என அறிவுரை சொன்னார். வேறொரு ஆசிரியர் அவரை பள்ளி வாயிற்கதவு வரை கொண்டுவிட்டு வந்தார்.

நானூற்றுக்கு குறையாத மாணவர்கள், கிட்டத்தட்ட இருபது ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளி, மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞரின் குற்றச்சாட்டை செவிமடுத்து அதற்கு பத்து நிமிடத்தை செலவிட்டது. விவரம் தெரிந்த பிறகு என் பள்ளி குறித்து நான் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்வு இது. சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெறும் மாணவனாகவே அந்த பள்ளியிலிருந்து நான் வெளியே வந்தேன் (இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதற்கும் லாயக்கற்றவனாக வெளியே வந்தேன் என்று சொல்லலாம்). ஆனால் சக மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கும் அடிப்படை மனிதப்பண்பை நான் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் என் பள்ளியும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய பள்ளிகளின் சூழலை ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. தலையைச் சுற்றி கையால் காதைத் தொடும் ஒற்றை தேர்வு முறை மட்டும் இருந்த நிலை மாறி இப்போது பள்ளிகளின் அட்மிஷன் என்பது பெற்றோரின் வருமானம், படிப்பு மற்றும் அவர்களது முந்திச்செல்லும் திறமை (ஆறுமாதம் முன்பே இரவெல்லாம் கண்விழித்து விண்ணப்பம் வாங்குவது போன்ற முயற்சிகள்) என ஏராளமான விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு காரை சர்வீஸ் செய்யும் பணியைப்போல கற்பித்தலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பும் சேவையாக மாற்றியிருக்கின்றன நம் சமகாலப் பள்ளிகள்.

ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தரவேண்டிய பள்ளிகளே அரசு விதிகளை சர்வசாதாரணமாக புறந்தள்ளுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை காலி செய்ததில் பெரும் பங்கு தனியார் பள்ளிகளுக்கு உண்டு. அறுநூறு ரூபாய்க்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எனும் அரிய உண்மையை அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வீட்டில் சும்மாயிருப்பதற்கு பதிலாக ஏதேனும் நர்சரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கலாம் எனும் நிலை வந்த பிறகுதான் ஆசிரியர் பணியின் மரியாதை முற்றாக குறைந்தது.

இந்த வருடத்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே அடுத்த ஆண்டுக்கான வருவாய்க்கான ஆதாரம் என்பதால் தனியார் பள்ளிகள் எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் பெற வைக்க துடிக்கின்றன. சில சுமாரான தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 480 வாங்கிய மாணவர்களை பதினொன்றாம் வகுப்பில் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றன. அவர்கள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்வாங்கி பள்ளி ஊர் முக்கில் ஃப்ளெக்ஸ் பேனர் வைக்க உதவுவார்கள்.  தனியார் பள்ளிகள் புண்ணியத்தில். இப்போது மதிப்பெண் என்பது ஒரு சரக்காக உருமாற்றம் பெற்றிருக்கிறது. ஒரு இரும்பு பட்டறைக்கும் பள்ளிக்கும் ஒரேவிதமான வியாபார நியாயங்கள் வந்த காலகட்டம்தான் நமது சமூகத்தின் அபாயகரமான அத்தியாயத்தின் துவக்கம் என கருதுகிறேன்.

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தரப்பு மிகவும் பரிதாபகரமானது. எப்படியாவது எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் வாங்கவைத்தால் போதும் எனும் ஒற்றை இலக்கு மட்டுமே ஒரு ஆசிரியருக்கு தரப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர் மாணவர் உறவென்பது ஒரு கஸ்டமர் கேர் ஊழியருக்கும் நுகர்வோருக்குமான உறவைப்போல ஆகியிருக்கிறது.. மிகக் குறைவான ஊதியம் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆகவே உள்ளூரை விட்டு போக விரும்பாதவர்கள், வேறு வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர் பணியை தெரிவுசெய்கிறார்கள். இவர்கள் வசம்தான் அனேக நடுத்தர வர்க குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் ஒரு வருடம் எங்கள் கிராமத்து பள்ளியில் படித்தபோது உடன் படித்தவர்கள் பலரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். அறுவடை மற்றும் நடவு காலங்களில் பதினைந்து இருபது நாட்கள் மாணவர்கள் விடுப்பு எடுப்பது சர்வ சாதாரணம். மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லா வகுப்பிலும் உண்டு (அடுத்து ஆசிரியர் சொல்லப்போகும் ஜோக்கைக்கூட சரியாக கணிக்கும் திறமைசாலிகள் அவர்கள்). அங்கே பல பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கலெக்டராக்கும் டாக்டராக்கும் கனவெல்லாம் இல்லை. மகனை மகனாக பார்க்கும் குணம் மட்டுமே உண்டு. நாலு எழுத்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.

இப்போது அதே கிராமத்தின் பல குடும்பங்கள் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன, முதன்மை காரணமாக குழந்தைகள் படிப்புதான் சொல்லப்படுகிறது. எனது சக ஊழியர்கள் பலர் தங்கள் வருமானத்தில் பெருந்தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு உயரதிகாரிகள் தங்கள் மகள்களது பொதுத்தேர்வுக்காக ஒரு மாத மற்றும் இரண்டு மாத விடுப்பிலிருக்கிறார்கள். கசப்பானதொரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்தான் தங்கள் எதிர்காலம் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் படிப்புதான் தமது எதிர்காலம் என முடிவு செய்து செயல்படுகிறார்கள். (ஒன்றுபோல தோன்றினாலும் இது முற்றிலும் வேறானது).

இப்படி மூன்று முக்கிய குழுவும் தங்கள் ஆசை, லட்சியம், கோபம் என சகலத்தையும் இறக்கிவைக்கும் தளமாக குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் மாணவர்களது வாழ்வு பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அவர்கள் எதிகொள்ளும் பிரச்னைகள் கண்டுகொள்ள நாதியற்று இருக்கின்றன. ஆனால் இந்த சூழலால் பாதிக்கப்படும் மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடும்போதோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்யும்போதோ நாமெல்லோரும் விழித்துக்கொள்கிறோம்.

சென்னையில் ஆசிரியரை கொலை செய்த மாணவர் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கொலைகாரனை விருந்தாளி மாதிரி உபசரிக்கிறார்களே என ஆசிரியர் சமூகம் அங்கலாய்க்கிறது, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அரசை வலியுறுத்துகிறது. ஒரு குற்றவாளிக்கும் குற்றமிழைத்த சிறுவனுக்குமான வேறுபாடு ஆசிரியர்களுக்கே புரியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கொலை என்பதன் நிஜமான அர்த்தம் தெரியாது. அது ஒரு நபரை காணாமல் போகவைக்கும் வழியாக மட்டுமே தெரியும். நாம் இவ்விடயத்தில் யோசிக்க வேண்டியது ஒரு மாணவன் ஏன் ஆசிரியை காணாமல் போக்ச்செய்ய விரும்பினான் என்பதையும் கொல்வதை கோபத்தின் வெளிப்பாடாக்கும் கற்றலையும்தான்.

ஒருவேளை அந்த மாணவன் வன்முறையில் ஈடுபடும் இயல்புடையவனாக இருந்திருப்பானேயானால் அதை கண்டறிந்து எச்சரித்திருக்க வேண்டியது பள்ளியின் பொறுப்பு. அப்படியெதுவும் நடந்திருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மாணவன் எனில் அவன் கையில் கத்தியை கொடுத்ததற்கான பொறுப்பு பள்ளிக்கும் பெற்றோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராயில்லை.

இன்றைய மாணவர்கள் தங்கள் வயது மற்றும் சக்திக்கு மீறி பணியாற்ற வைக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அது நல்லதற்கா கெட்டதற்கா என்பதில்தான் கருத்து முரண்பாடு வரும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் மதிப்பெண்னுக்காவே உழைக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களது வயதுக்கான விருப்பங்கள் பெரும்பாலும் புறந்தள்ளப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வே அவர்கள் வாங்கும் மதிப்பெண்னில்தான் இருக்கிறது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை செய்ய முடியாதபோதோ அல்லது செய்ய விரும்பாதபோதோ அவர்கள் கோபம் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அல்லது தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இது அனேக சந்தர்பங்களில் தற்கொலையில் முடிகிறது. இரண்டொரு சந்தர்பங்களில் கத்தி எதிர்புறமாகா திரும்பியிருக்கிறது.

இதற்கு நேரெதிரான சம்பவம் ஒரு மாணவனும் ஆசிரியரும் ஊரைவிட்டு ஓடியது. கோபப்படாமல் ஆராய்ந்தால் இதிலும் குற்றவாளிகளாக நாம்தான் இருப்போம். பெருநகரங்களில் வளரும் சிறார்கள் மிகக் குறைவான அளவு சமூக உறவுகளை கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட உறவுகள் மற்றும் நட்பினை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அன்பு என்பது பெற்றோரிடம் மட்டுமே கிடைப்பதாக இருக்கிறது. நல்லது கெட்டது மற்றும் நியாயம் ஆகியவை பெரும்பாலும் சுற்றத்தினை பார்ப்பதன் வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த கற்றல் இல்லாதபோது நியாயத்தை தேவைகள் தீர்மானிக்கத் துவங்குகின்றன.

இருபது வயது மூத்தவரை காதலிக்காதே எனும் பாடத்தை பெற்றோரால் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒருவனது சுற்றம் பரந்ததாக இருக்கையில் அந்த பாடம் அவனுக்கு தன்னியல்பாக கிடைக்கிறது. வெவ்வேறு துறைகளை தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களது சிற்றின்பத் தேடல்களுக்கான தேவையும் அவகாசமும் குறைகிறது. அந்த கதவு அடைக்கப்படுகையில் மனிதர்களின் இயல்பான உந்துதல்களில் ஒன்றான காமம் அவ்விடத்தை நிரப்புகிறது. தவறுகளை நாம் கற்றுத்தருவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கான சினிமாவும் டி.வியும் எதை சொல்லித்தருகிறது? டிசைன் டிசைனாக காதலிப்பதையும், சங்கை அறுப்பதையும்தானே?

குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் பெரிய மனுசத்தனமாக டிவியில் நடந்துகொண்டால் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீரோடு அதை ரசிக்கிறார்கள். அதே டிவியில், பெரியவர்கள் பைசாவுக்கு பிரயோசனமில்லாத விசயத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டு அழுது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பிறகு ஒரு சிறுவன் பெரிய ஆளைப்போலவும் மூத்த ஆசிரியர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்ளும்போதுமட்டும் குய்யோ முய்யோவென கத்துவது என்ன நியாயம்?

ஒரு சமூகத்தில் குழந்தைகள் அதிகமாக தவறு செய்கிறார்கள் எனில் அங்கு அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள் என பொருள். எனக்கு சொந்தக்காரர்களை பிடிக்காது, காரணம் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒரு பதின் வயது மாணவன் சொல்லக் கேட்டபோது எனக்கு அவனது பெற்றோர்கள் மீதுதான் ஆத்திரம் வந்தது. எதையும் தராத சொந்தக்காரன் கெட்டவன் என வேறு யார் அவனுக்கு கற்றுத்தந்திருக்க முடியும்? லஞ்சம் வாங்கி சுகபோகமாக இருக்கும் அப்பா இருக்கையில் மகனுக்கு எந்த நீதிபோதனை வகுப்பும் நேர்மையை கற்றுத்தர முடியாது. நம் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் மிகப்பெரிய பாடம் நம் வாழ்க்கைதான். அது மோசமானதாக இருக்கையில் மற்ற எந்த சிறப்பு பயிற்சிகளும் நீண்டகால அடிப்படையில் பலன் தராது.

உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை பெரிய பள்ளியில் படிக்க வை என எந்தக் குழந்தையும் கேட்பதில்லை. குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் எனும் வாக்கியத்தைப்போல ஒரு அபத்தமான வாசகம் ஒன்றிருக்க முடியாது. உங்களை எவன் குழந்தைகளுக்காவே வாழுங்கள் என கட்டாயப்படுத்தியது? அந்த முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தியாகம் செய்யவேண்டுமா? ஒழுங்காக நமக்காக வாழலாம், குழந்தைப் பருவ வாழ்வை அவர்கள் வாழட்டும் என விட்டுவிடலாம். இதுதான் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உருப்படியான சகாயம்.

ஒரு மாணவனை அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து மதிப்பிடுவதுதான் அவர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய வன்முறை. பள்ளி என்பது ஒருவன் தனக்கு எந்த துறை சரியாக இருக்கும் என முடிவு செய்வதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும் இடம் அவ்வளவுதான். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் நாம் மூர்கமாக கையாண்டதன் விளைவுதான் ஆங்காங்கே நடக்கும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள். நல்வாய்ப்பாக மாணவர்களால் நடக்கும் மோசமான சம்பவங்களின் எண்ணிக்கை அவர்கள் மீதான வன்முறையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஆனால் பெற்றோர் தரப்பு தங்களை இனியும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த ஆறுதலுக்கும் வழியில்லாது போய்விடும்.

கொத்தனார் சம்பளமே இப்போ அறுநூறு ரூபாயாயிடுச்சு, வீடு கட்டுறதெல்லாம் இனி சாமானியமில்லைங்க.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர். 25 டிகிரி வெப்பநிலையில் வேலைசெய்து வாரம் தவறாது சொந்த ஊர் செல்ல வாய்ப்பிருக்கும் அவருடைய வேலைக்கு என்பதாயிரம் கிடைக்கையில் உடலை வருத்தி வேலை செய்யும் கொத்தனாருக்கு கிடைக்கும் (அதிகபட்சம்)  பதினெட்டாயிரம் அநியாயமாகப்படுவதை வெறும் சுயநலம் என வரையறுக்க முடியாது. மனிதர்களிடையே பாரபட்சம் பார்க்கும் இழிவான பழக்கத்தின் நீட்சி இது. இன்றைய கல்வித்துறையை பீடித்திருக்கும் தரித்திரத்துக்கான கதவை இந்த பழக்கம்தான் திறந்துவைத்தது.

தனியார் பள்ளிகள் முளைத்தபோது அவர்கள் சிறப்பான கல்வியை தருவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருந்திருக்கவில்லை. மற்றவனைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள மட்டுமே இந்த பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு இந்த பழக்கம் உன்னைவிட நானொன்னும் குறைந்தவனில்லை எனக் காட்ட பயன்பட்டது. இதுதான் வாய்ப்பென்று தனியார் பள்ளிகள் ஊரெங்கும் முளைத்தன, வாய்ப்பை தவறவிடாது அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டது. அரசுப்பள்ளிகள் வக்கற்றவர்களுக்கு மட்டுமே என்றாகிப்போன இன்றைய சூழலை உருவாக்கியதில் நடுத்தர வர்கத்தின் வெற்று கௌரவம், முதலாளிகளின் லாபவெறி மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகிய மூன்றின் பங்கும் சமமாக இருக்கிறது.  இதில் இழக்கும் தரப்பு என்று என்று பார்த்தால் அது பெற்றோர் மட்டுமே.

ஒரு அடிமுட்டாள்தனமான நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தனியார்பள்ளிகள் நம் வருமானத்தை சுரண்டிக் கொழுக்கின்றன. நில அபகரிப்பு, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எனும் வரிசையில் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் செய்யும் பிரதான தொழிலாக கல்வி இருக்கிறது. பின்னாளில் பிள்ளைகள் நமக்கு நிறைய சம்பாதித்து கொடுக்கவேண்டும் எனும் ஆசையை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். கல்வி தொழிலாக நீடிக்கும்வரை குழந்தைகள் எந்திரங்களாகவே நடத்தப்படுவார்கள். எந்திரமாக நடத்தப்படும் குழந்தைகளிடம் குற்ற நடத்தையும் பிறழ்நடத்தைகளும் உருவாகியே தீரும்.

பெருகிவரும் சிறார் குற்றங்களுக்கு கல்வி வணிகமயமானது மட்டும் காரணமல்ல. ஆனால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு செய்யவேண்டிய முதல் நடவடிக்கை கல்வியை வணிகர்களிடமிருந்து பறிப்பதுதான். நம் அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துக்கு இது மட்டும் போதாது என்பது நிஜம்தான். ஆயினும் எல்லா நீண்ட பயணங்களும் முதல் அடியிலிருந்தே தொடங்குகின்றன.

0

வில்லவன்

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு

திராவிட இயக்கம் தொடர்பாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான புரிதல்களை ஏற்படுத்தி வருபவர்களில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் முக்கியமானவர். அவருடைய பல புத்தகங்களைப் படித்திருந்தபோதும் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற புத்தகம் என்னைக் கவர்ந்த ஒன்று.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சுப.வீ அவர்களை அவருடைய இல்லத்தில் வைத்து சந்தித்தேன். இரண்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். ஒன்று, நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு புத்தகங்களைக் கொடுப்பதற்காக. இரண்டு, கிழக்கு பதிப்பகத்தின் புதிய மாத இதழான ஆழம் இதழைக் கொடுத்து, கருத்து கேட்டு வருவதற்காக. மொபைலில் பேசியபோதே என்னுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகம் பற்றி விசாரித்தார்.

வீட்டுக்குள் நுழைந்தபோது சுப.வீ கட்டிலில் படுத்திருந்தார். முழங்காலில் கட்டு. மாடிப் படிக்கட்டுகளில் வழுக்கிவிழுந்ததன் காரணமாகக் காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார். எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுப்பது சவாலாக இருக்கிறது என்றார் சிரித்தபடியே. தினமும் பிசியோதெரபி செய்துவருவதால் விரைவில் குணமாகி, வெளியே புறப்படத் தொடங்கிவிடுவேன் என்றார்.

என்னுடைய புத்தகங்களைக் கொடுத்தேன். ஆர்வத்துடன் வாங்கியவர் நிதானமாகப் புரட்டத் தொடங்கினார். எந்த அடிப்படையில் பாகங்கள் பிரித்திருக்கிறீர்கள், எங்கிருந்து வரலாறு தொடங்குகிறது என்பன போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்டார். திராவிட இயக்கத்தின் தொடக்கமாக நான் குறிப்பிட்டிருப்பது 1912 அல்ல; பிராமணர் அல்லாதார் சங்கம் உருவான 1909 ஆம் ஆண்டைத்தான் குறிப்பிட்டுள்ளேன் என்றேன். ஆம். திராவிட இயக்க சித்தாந்தத்தின் விதை விழுந்த ஆண்டு அது என்றார் சுப.வீ. நூற்றாண்டு கொண்டாடப்பட்டுவரும் சூழலில் இப்படியான பதிவுகள் வருவது ஆரோக்யமானது என்றார்.

பிறகு ஆழம் இதழைக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர், ‘ஓ, இது உங்களுடைய இதழ்தானா? இந்த இதழை நான் ஏற்கெனவே படித்து விட்டேனே.. அஞ்சல் மூலமாக எனக்கு வந்தது. இதழ் நன்றாக இருக்கிறது’ என்றார். நன்றி கூறிவிட்டு, ஆழம் இதழில் என்னென்ன மாதிரியான செய்திகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது என்பது பற்றிச் சொன்னேன். உங்களுடைய பங்களிப்பும் அவ்வப்போது இருக்கவேண்டும் என்றேன். சிரித்துக் கொண்டே தலையசைத்தார்.

பிறகு கிழக்கு பதிப்பகம் பற்றிப் பேச்சு வந்தது. கிழக்கு பதிப்பகத்தின் மீதும் கிழக்கு வெளியிடும் புத்தகங்கள் மீதும் அவருக்குள்ள விமரிசனங்களை என்னிடம் கூறினார். விடுதலைப் புலிகள், பிரபாகரன், ஆங் சான் சூ கி உள்ளிட்ட சில புத்தகங்களைப் படித்திருப்பதாகச் சொன்னார். அவர் வைத்த விமரிசனங்களுக்கான விளக்கங்களை எடுத்துச் சொன்னேன். சிலவற்றைக் ஏற்றுக்கொண்டார். சிலவற்றைக் கேட்டுக்கொண்டார். கிழக்கு வெளியிட்டுள்ள முக்கியப் புத்தகங்கள் பற்றியும் அவை உருவான விதம் பற்றியும் பேசினேன். குறிப்பாக, இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு புத்தகம் பற்றி. ‘முதல் பாகம் படித்துவிட்டேன்; இரண்டாவது பாகம் வாங்கவேண்டும்’ என்றார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு முக்கியமான புத்தகங்களில் சிலவற்றைத் தருகிறேன். அவசியம் நீங்கள் படிக்கவேண்டும் என்றேன். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

அவர் அமர்ந்திருந்த கட்டிலில் நிறைய புத்தகங்கள், எழுதப்பட்ட காகிதங்கள். என்னவென்று விசாரித்தேன். தனக்கு அறுபது வயது நிறைவடைவதை ஒட்டி வாழ்க்கைக்குறிப்புப் புத்தகம் ஒன்றை எழுதிவருவதாகச் சொன்னார். பால்ய காலத்தில் இருந்தே நாட்குறிப்பு எழுதிவரும் அவர், அவற்றில் இருக்கும் தகவல்களைக் கொண்டு புத்தககம் எழுதிவருவதாகச் சொன்னார். புத்தகத்துக்கு அவர் வைத்த தலைப்பு: வந்ததும் போவதும்.

அந்தத் தலைப்பை கலைஞரிடம் கூறியிருக்கிறார் சுப.வீ. அந்தத் தலைப்பை, ‘வந்ததும் வாழ்வதும்’ என்று திருத்திக் கொடுத்திருக்கிறார் கலைஞர். அந்தத் தலைப்பிலேயே தற்போது புத்தகம் வெளிவரவிருக்கிறது என்றார் சுப.வீ. புத்தகத்தை வெளியிடுபவர் கலைஞர். அந்தப் புத்தகத்தோடு சேர்த்து சுப.வீ எழுதிய திராவிடத்தால் எழுந்தோம் (32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு) வேறு சில புத்தகங்களையும் கலைஞர் வெளியிட இருப்பதாகச் சொன்னார். விழாவுக்கு நீங்கள் வரவேண்டும் என்றார். அப்போது என்னுடைய கவனத்தை ஈர்த்தது அங்கிருந்த புத்தம் புதிய புத்தகம் ஒன்று. பெரியார் என் நண்பர் என்று தலைப்பு. டாக்டர். பி. வரதராஜுலு நாயுடுவின் வாழ்க்கை வரலாறு. அதைப்பற்றிக் கேட்பதற்குள் பிசியோதெரபிஸ்ட் வந்துவிட்டதால் விடைபெற்றுக் கொண்டேன்.

சந்திப்பு முடிந்த சில தினங்களில் சுப.வீ அவர்களிடம் இருந்து அழைப்பு. திராவிட இயக்க வரலாறு புத்தகத்தின் முதல் பாகத்தைப் படித்துமுடித்துவிட்டேன். சிறப்பான பணியைச் செய்திருக்கிறீர்கள். ஏராளமான செய்திகளைத் தகுந்த ஆதாரங்களோடு பதிவுசெய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் என்றார். நன்றி தெரிவித்தேன். இரண்டாவது பாகத்தை விரைவில் படித்துமுடித்துவேன். முடித்ததும் அழைக்கிறேன் என்றார்.

பிறகு இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலை ஒன்பது மணிக்கு “ஒன்றே சொல் நன்றே சொல்’ என்ற நிகழ்ச்சியில் நான் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். வரும் புதன் கிழமை காலை உங்களுடைய திராவிட இயக்க வரலாறு புத்தகத்தைப் பற்றிப் பேசவிருக்கிறேன். குறிப்பாக, டி.எம். நாயர் என்ற அத்தியாயம் பற்றி என்றார்.

புதன் கிழமையன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில் பேசினார் சுப.வீ. ‘திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வரும் சூழ்நிலையில் அதைப் பற்றி வந்திருக்கும் புதிய புத்தகம் ஆர். முத்துக்குமார் எழுதிய திராவிட இயக்க வரலாறு.. இரண்டு பாகங்களாக வந்திருக்கிறது. அண்ணாவின் காலம் வரைக்குமானது முதல் பாகம், அண்ணாவுக்குப் பிறகான வரலாறு இரண்டாம் பாகம்.. கிழக்கு பதிப்பக வெளியீடு’ என்று அறிமுகம் செய்துவிட்டு, டி.எம். நாயர் பற்றிப் பேசினார்.

மாண்டேகு – செம்ஸ்போர்டு குழுவினருடன் பேசுவதற்கு டி.எம். நாயர் மேற்கொண்ட முயற்சிகள், அளித்த சாட்சியங்கள், லண்டன் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை, லண்டனில் அரசியல் பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடை, அவற்றை நாயர் முறியடித்த விதம், எதிர்பாராத சமயத்தில் நடந்த நாயரின் மரணம் என்று டி.எம். நாயர் என்ற அத்தியாயத்தில் இடம்பெற்ற செய்திகளைப் பற்றிப் பேசினார் சுப.வீ. என்னுடைய புத்தகத்துக்குக் கிடைத்த முக்கியமான மதிப்புரையாக சுப.வீயின் பேச்சு அமைந்தது. நன்றிகள் பல!

0

ஆர். முத்துக்குமார்

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா?

இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது.

மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கிவிட்டது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983இல் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாகப் புலம்பெயர்ந்தோரால் படைக்கப்படும் இலக்கியங்களே புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றன.

அவர்களுடைய படைப்புகளில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கியப் புனைவுகள் முதன்மையாகக் கருதப்பட்டபோதிலும், கலைகள் சார்ந்த வெளிப்பாடுகள், சிற்றிதழ்கள், ஓவியம், குறும்படம், கூத்துக்கலை, தெருநாடகம், ஒலி மற்றும் ஒளிச் செயல்பாடுகள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவை போக, இந்தப் படைப்பாளிகள் பல்வேறுபட்ட இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தி இலக்கிய அரங்குகளை நடத்துவதும் படைப்புகள்மீது விவாதத்தை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கன. மொழி, நிறம், பண்பாட்டுச் சிக்கல் பற்றியதாக இப் படைப்புகளின் மையங்களை அமைத்துக் கொள்கின்றனர். படைப்புகளை இதழ்கள், இணையதளம், வலைப்பூக்கள், நூல்கள், தொகுப்பு நூல்கள் வழியாக உடனுக்குடன் வெளிப்படுத்துகின்றனர்.

புலம்பெயர்ந்தோர் படைப்புகள் அவர்களின் தாய்நாடு குறித்த ஏக்கத்தையும், குடியேறிய நாடு அவர்களுக்கு அளித்துள்ள புதுவாழ்வில் சந்திக்கும் இடர்பாடுகளையும் விளக்கமாகக் கூறுகின்றன. இப்படைப்புகள் தாயகத்தின் உறவுகள், நினைவுகள் சார்ந்தும் புலம்பெயர்ந்தோர் பயணம், புகலிட அனுபவம், புகலிட மனிதனின் வாழ்வு குறித்த தேடலையும் முன்வைக்கின்றன. புனைகதையில் குறிப்பாகச் சிறுகதைகளில் புகலிடவாழ்வுதரும் துயர் கணிசமாகப் பதிவாகியுள்ளது. அப்புனைகதைகளின் பெரும்பகுதி நிஜமும் சிறுபகுதி புனைவுமாக அமைந்துள்ளன. புனைவினை நீக்கிவிட்டால் அவை உண்மைச் சம்பவக் கட்டுரைகளாக அமையக்கூடும்.

ஷோபா சக்தியின் ‘தேவதை சொன்ன கதை’ சடங்கு, சம்பிரதாயங்களோடு ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த திருமணத்தைப் போரும் அதனால் நிகழ்ந்த புலம்பெயர்வும் எவ்வாறு சர்வதேச அளவுக்குக் கொண்டு சென்றன என்பதைக் காட்டியுள்ளது. “பாரிசில் தான் உண்டு, தன் வேலை உண்டு, தங்கையின் லண்டன் மாப்பிள்ளைக்குக் கொடுத்த சீதனத்துக்குட்பட்ட கடனுக்கு வட்டியுண்டு என்று எட்டடிக்குப் பத்தடி அறையில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு லண்டன் தங்கைதான் முதல் வெடி வைத்தாள். பாரிஸ் அண்ணைக்கும் முப்பது வயசாப் போச்சுது. நான் லண்டனில், பெரிய அண்ணை ஜொர்மனியில், தம்பி சுவிஸில், பாரிஸ் அண்ணை தனியாளா கிடந்து போறதுக்குக்கான ‘சான்று’ வெளிநாடுகளில் கூடுதலா இருக்கு. அதால பாரிஸ் அண்ணைக்குக் கெதியா ஒரு கலியாணம் செய்து வைக்க வேணும் என்று தங்கை தொலைபேசியில் ஜெர்மனிக்கு வெடிக்க ஜெர்மனி ஊடாக கொழும்பு என்று இவனது திருமணம் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்தது.” புலம்பெயர்வு, மனிதனை எவ்வாறு நாலா திசைகளிலும் வீசி எறிந்துள்ளது என்பதையும், திருமணம் குறித்த தமிழர்களின் மனநிலையினையும், அவை மனிதனிடம் ஏற்படுத்துகின்ற சிக்கல்களையும் இயல்பாக, எள்ளலோடு பதிவு செய்துள்ளது.

பொ. கருணாமூர்த்தியின் ‘போதிமரம்’ என்ற கதை புலம்பெயர் வாழ்வு தமிழர் மீது திணித்துள்ள பண்பாட்டுச் சிதைவினைக் குறிப்பிட்டுள்ளது. “ஒருமுறை சில நண்பர்களுடன் ஹம்போக்கில் வெளிநாட்டவர் குடியிருப்பு ஒன்றிற்கு இலங்கைத் தமிழர்களும் நிறையபோர் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போனோம். எதேச்சையாக அவர்கள் குசினிக்குள் நுழைந்த எனக்குப் பேரதிர்ச்சி. எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னைவிட 2 வகுப்புகள் ஜூனியராகப் படித்த ஐயர் பொடியன் ஒருவன் பெரிய கோழியொன்றை மல்லாக்கப் போட்டு வகிர்ந்து கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் அசடு வழிந்து கொண்டே சொன்னான் ‘என்ன செய்யிறது இங்க வந்து எல்லாத்தையும் மாத்த வேண்டியதாய்ப் போச்சு’” என்ற பகுதி அந்தணர்குலத்துப் பையன் கோழி சமைப்பது, முட்டை சாப்பிடுவது எனப் புலம்பெயர்வு அவனை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளமையைச் சுட்டிக்காட்டுகின்றது.

புகல்சூழலில் யாசித்துப் பிழைக்கும் காளிமுத்து என்ற தமிழரைச் சை. பீர்முகம்மது ‘சிவப்பு விளக்கு’ என்ற சிறுகதையில் “காலையில் பெரிய மார்க்கெட்டில் கையேந்திக் கொண்டு நிற்பான். மத்தியான வேளையில் ஏதாவதொரு கடையின் பின்புறமாக இருக்கும் குப்பைத் தொட்டியில் தலையை நுழைத்துக் கொண்டு எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பான். எது எப்படி இருந்தாலும் மாலை நாலரை மணிக்கு சௌக்கிட்ரோட் வெள்ளை மாளிகையில் ஒரு பயிண்ட் அடிக்க வந்துவிடுவான். பிறகு நேரே மேம்பால மாளிகைக்குத் தூங்க வந்துவிடுவான். மீண்டும் மறுநாள் காலையில் பெரிய மார்க்கெட, குப்பைத்தொட்டி, கள்ளுக்கடை” என்று அடையாளப்படுத்தியுள்ளார். புலம்பெயர்ந்த மக்களுள் உடல் வலிமையோடு இருக்கும் ஒருவன் உழைத்து முன்னேற விருப்பமில்லாமல் சோம்பேறியாய், பிச்சையெடுத்து உண்பதைப் பெரிதாக எண்ணி வாழ்ந்து அழியும் விதத்தினைக் காட்டியுள்ளார்.

லெ. முருகபூபதி ‘மழை’ என்ற சிறுகதையில் மனைவி, பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒருவர். அந்நியநாட்டுப் பெண்ணுடன் நட்புக்கொண்டு பாலியல் உறவுவரை செல்வதனைக் குறிப்பிட்டுள்ளார். “வாயை மூடு அங்ஜோலா, நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி எனது உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல்அடிகளுக்கும் பயந்துகொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் வேண்டுகோள் நியாயமாகப் பட்டால் என் மனைவியும் அங்கே இந்த சுகத்திற்காக உன்னைப் போல் ஒருவனைத் தேடி போயிருக்கலாம்” என்ற குறிப்பு, புலம்பெயர்ந்த மண்ணில் வாய்க்கும் பாலியல் தவறுகளைச் சுயநேர்மையுடன் வெளிப்படுத்தியுள்ளது.

‘அன்னையும் பிதாவும்’ என்ற கதையில், ரோகிணி வழியாகத் தம் மொழி, இனம், பண்பாடு போன்றவற்றை மறந்து அயல்நாட்டவர்களாக வாழத்துடிக்கும் தமிழ்ப்பெண்ணின் மனநிலையை மாத்தளை சோமு காட்டியுள்ளார். ரோகிணியின் தோற்ற வர்ணனை “தோள்பட்டை வரை தொங்குகிற முடியைக் குலுக்கிக் கொண்டு போனாள். அவள் இங்கு வருவதற்குமுன் இடுப்புவரை தொங்கியும் குறுகிவிட்டது. வெள்ளைக்காரர்களைப் போல் முடி வெட்டியதற்குச் சொன்ன காரணம், குளித்துவிட்டுத் தலைமுடி காய டைம் எடுக்குது. அடிக்கடி தலைவலி வருது என்பதுதான். ஆனால், வெள்ளைக்காரிகளின் ஹெர்ஸ்டைலில் அவள் மயங்கியதே உண்மையான காரணம்” என்று உண்மையோடு குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. முத்துலிங்கம் ‘கடன்’ என்ற கதையில் தன் தந்தையின் வயோதிக காலத்தில் அவரை முறையாகப் பராமரிக்காமல், மரணமடைய விட்டுவிடும் ஒரு மகனின் மனிதநேயமற்ற, சுயநலப்போக்கினைக் காட்டியுள்ளார். மகனும் மருமகளும் பணிக்குச்செல்வதால் பெரியவரைச் சரிவர கவனித்துக்கொள்ள இயலவில்லை. அவருக்கு அன்றாடம் உணவுப் பரிமாற நேரமில்லாத காரணத்தால் தனித்தனிப் பாத்திரத்தில் உணவினை வைத்து அப்பாத்திரத்தின் மேல்பகுதியில் கிழமைகளின் பெயர்களை எழுதிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகின்றனர். அப்பொரியவா; கிழமைகளின் அடிப்படையில் உணவுப் பாத்திரத்தைத் தானே தனக்குப் பரிமாறிக்கொண்டு உண்கிறார். அவசர உலகத்தில் முதியவர்கள் தனிமைப் படுத்தப்படுவதனை இக்கதை சுட்டிக்காட்டுகின்றது. அது மட்டும் இக்கதையின் மையம் அல்ல. அப்பொரியவரின் மகன், கிழமையின் பெயர் குறித்து வைக்கப்பட்ட உணவுப் பாத்திரங்கள் இரண்டு பயன்படுத்தப்படாததைக் கண்டு குழப்பமடைகிறார்.  தனிமையிலேயே வசித்த தன் தந்தையைப் பார்க்க அவரது நிலவறைக்குச் செல்கிறார். இரண்டு நாட்களாக உடல் விறைத்த நிலையில் உள்ள தன் தந்தையின் சடலத்தை மகன் காண்கிறார்.  பெற்றோரைக் கூடப் பேணிக்காக்க இயலாத அளவுக்கு நேரமின்மையும் பணிச்சுமையும் புலம்பெயர்ந்த மக்களின் தலைமுறைக்கு நேர்ந்துவிட்ட கொடுமையை அ. முத்துலிங்கம் காட்டியுள்ளார்.

புலம்பெயந்தோர் இலக்கியத்தைப் ‘புலம்பல் இலக்கியம்’ என்று எள்ளிநகையாடும் போக்கு தமிழ்ச்சூழலில் உள்ளது. புலம்பல் அற்ற வாழ்க்கை எத்தமிழனுக்கு வாய்த்தது? சங்கத்தமிழனின் வறுமை குறித்தப் புலம்பல்தானே பெரும்பான்மையான செவ்விலக்கியங்களின் மையமாக உள்ளன! புலம்பல்களில் புனைவின் வண்ணம் கலந்து புலம்பெயர்ந்தோரர் இலக்கியம் உருக்கொள்கின்றது. துயருராத மனிதனுக்கு இவை ‘புலம்பல் இலக்கியம்’. சராசரி மனிதனுக்கு இவை தீவிர இலக்கியம்தான். தன்வாழ்விலிருந்து இலக்கியம் படைக்கும் எப்படைப்பாளரும் வணங்கத்தக்கவரே. இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள புலம்பெயர்ந்த படைப்பாளர்கள் அறுவரையும் நான் வணங்குகின்றேன்.

0

முனைவர் ப. சரவணன்

விடுதலை ராஜேந்திரனுடன் ஒரு சந்திப்பு

தி சண்டே இண்டியன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் நண்பர் அசோகனின் அழைப்பின்பேரில் அவர்களுடைய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் திடீரென சில இயக்கங்கள் திராவிட மாயை என்றும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் அல்லவா? அதைப்பற்றிய ஒரு கருத்து யுத்தத்தில் கலந்துகொள்ள விடுதலை ராஜேந்திரனையும் மக்கள் மாநாட்டுக் கட்சியின் (?) தலைவர் க. சக்திவேலுவையும் அழைத்திருந்தனர். அவர்களுடைய கருத்து மோதலைக் கண்டுகளிக்க வாருங்கள் என்று அழைத்திருந்தார் அசோகன்.

பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள் உள்ளிட்ட சில புத்தகங்களையும் படித்திருக்கிறேன். நேரில் அறிமுகமில்லை. சக்திவேலுவை எனக்கு வழக்கறிஞராக, காங்கிரஸ்காரராகத் தெரியும். புதிதாகக் கட்சி ஆரம்பித்து, அதற்கு அவரே தலைவராகவும் இருக்கிறார் என்பதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன்.

நான்கு மணிக்கு யுத்தம் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். நான் கொஞ்சம் முன்கூட்டியே சென்றுவிட்டேன். முதலில் விடுதலை ராஜேந்திரன் வந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார் அசோகன். நான் எழுதிய திராவிட இயக்க வரலாறு (ஒன்று | இரண்டு) புத்தகம் பற்றி அவரிடம் சொன்னார் அசோகன். பிறகு தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுதிவரும் ஆடு.. புலி.. அரசியல் தொடர் பற்றியும் சொன்னார். தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார். பிறகு உங்கள் ஊர்க்காரர்தான் என்று சொன்னதும் ராஜேந்திரனின் முகத்தில் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை பற்றிப் பேசினோம். எங்கள் ஊர்.. எங்கள் ஊர்ச்சூழல்.. இன்னபிற விஷயங்கள். பிறகு திராவிட இயக்க வரலாறு பற்றி. அது தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள புத்தகங்கள் பற்றி. என்னுடைய புத்தகத்தின் கால எல்லை பற்றி. நூற்றாண்டு கொண்டாடப்படுவது பற்றிப் பேசினார். உங்கள் புத்தகம் இதுவரை என்னுடைய கவனத்துக்கு வரவில்லை. நாளையே வாங்கிப் படிக்கிறேன் என்றார். நானே உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி முகவரி வாங்கிக்கொண்டேன். சொன்னபடியே மறுநாள் அனுப்பிவைத்தேன்.

வழக்கறிஞர் சக்திவேலு வந்ததும் கருத்து யுத்தம் தொடங்கியது. யுத்தம் என்ற பதத்தை அழுத்தமாகவும் அடிக்கடியும் பயன்படுத்தக் காரணம் இருக்கிறது. சக்திவேலுவின் குரல் தொடக்கத்தில் இருந்தே உரத்து இருந்தது. சாதாரண விஷயத்தைக்கூட உரத்த குரலில் பேசினார். வாதத்துக்கு வலுசேர்க்க உரத்த குரல் உதவும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருக்கலாம்.

திராவிடர், திராவிடம் என்பதெல்லாம் மாயை; நீதிக்கட்சி என்பதே தெலுங்கர்களின் முன்னேற்றத்துக்கான இயக்கம்தான். அதன்மூலம் தமிழர்கள் அதிகாரமின்றி அழுத்தப்பட்டனர் என்றார் சக்திவேலு. அதை மறுக்கும் வகையில் பேசிய விடுதலை ராஜேந்திரன், ‘இங்கே பார்ப்பனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். ஏற்றத்தாழ்வுகளை அவர்கள்தான் உருவாக்கினர். ஒடுக்குமுறைகளை அவர்கள்தான் உருவாக்கினர். அந்த ஆதிக்கத்துக்கு எதிராகவே திராவிட இயக்கம் தோன்றியது. நீங்கள் சொல்வதுபோல தெலுங்கர்களை முன்னேற்றவோ, தமிழனை அழுத்தவோ திராவிட இயக்கம் தோன்றவில்லை’ என்றார்.

தமிழர்களைத் தமிழ்நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக அழுத்திவைத்திருக்கும் மூளைச் சலவையைத்தான் திராவிடம் செய்துவருகிறது என்றார் சக்திவேல். மொழி அடிப்படையில் இங்கே இருப்பவர்களை எல்லாம் துரத்தியடித்துவிட்டு, குறிப்பிட்ட சில சாதியினர் ஆதிக்கம் செலுத்தி, தமிழ்ச்சமுதாயத்தைப் பலவீனமாக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கியிருக்கிறீர்கள் என்று பதில் கொடுத்தார் விடுதலை ராஜேந்திரன்.

விவாதம் பல கட்டங்களில் அனல் பறந்தது. விமரிசனம் என்ற பெயரில் நிறைய ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களை வெளியிட்டார் சக்திவேலு. அவற்றைத் தமக்கே உரிய நிதானத்துடன் எதிர்கொண்டார் ராஜேந்திரன். இடையிடையே நானும் விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்டேன். குறிப்பாக, விவாதத்தில் வெப்பம் அதிகரிக்கும் சூழலில். அந்த விவாதத்தின் முக்கியப்பகுதிகள் தற்போது வெளியாகியுள்ள சண்டே இந்தியன் இதழில் இடம்பெற்றுள்ளன.

தொடக்கத்திலேயே விவாதம் காரசாரமாகிவிட்டதால் முக்கிய விருந்தினர்களான ராஜேந்திரனும் சக்திவேலுவும் என்னைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ முகபாவனையை வைத்துக்கொள்ளமுடியாமல் திணறியது புதிய அனுபவம்.

விவாதங்கள் முடிந்தபிறகு விடுதலை ராஜேந்திரனுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆடு.. புலி. அரசியல் தொடர் பற்றிக் கேட்டார். இதுவரை எழுபது அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் இருந்த தமிழக அரசியல் பத்திரிகையை அவரிடம் கொடுத்தேன். பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். ஏற்றுக்கொண்டேன்.

0

ஆர். முத்துக்குமார்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகள் : வானியலும் ஜோதிடமும்

தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளையும் விவாதங்களையும் அரசியல் சண்டைகளையும் காணும்போது மலைப்பாக இருக்கிறது. இந்த விவாதங்களை எப்படி அணுகுவது? உண்மையில், தமிழ்ப் புத்தாண்டாக எந்த நாளை எடுத்துக்கொள்வது?

முதலில் தமிழ் மாதக் கணக்கீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். சூரியன் ஒரு ராசியில் இருக்கும் நாள்கள் எல்லாம் ஒரு மாதம் என்று கொள்ளப்படுகிறது. ஒரு ராசியைக் கடந்த பிறகே மறு மாதம் தொடங்கும். இதனால்தான் பொங்கல் அன்று மாதம் எப்போது பிறக்கிறது என்ற கேள்வி எழும். சில சமயம், மாலை 5 மணிக்குக் கூட மாதம் பிறக்கலாம். அன்று பொங்கல் பானை 5 மணிக்குதான் ஏற்றுவார்கள்.

இந்தியாவில் பல விதமான மாதக் கணக்கீடுகள் இருக்கின்றன. சௌரமான மாதம். இது சூரியன், ஒரு ராசியில் இருக்கும் காலத்தை, ஒரு மாதமாகக் கொள்வது. தமிழ்நாடு, இலங்கை, ஒரிசா, கேரளா, வங்காளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் இது கடைபிடிக்கப்படுகிறது. சாந்த்ரமான மாதம்: இதிலும் இரு முறைகள் உள்ளன. அமாவாசையின் மறுநாள் முதல் மாதம் தொடங்கும். ஆந்திரா, கர்னாடகா உள்பட பெரும்பான்மையான இந்திய மாநிலங்களில் இது பின்பற்றப்படுகிறது. பௌர்ணமியில் இருந்து தொடங்கும் மாதம் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது.

இப்போது பலரும் கூறும் குற்றச்சாட்டுகளைக் காண்போம்.

1. வடநாட்டு @ ஆரிய @ பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு:

வடநாட்டவர்கள், வைதீகர்கள் சௌரவமான மாதங்களைப் பயன்படுத்துவதே இல்லை. அவர்கள் சந்திர மாதங்களையே பயன்படுத்துகிறார்கள். பண்டிகைகள் ஆஷாட, ஸ்ராவனம், பாத்ரபத,ஆஸ்வின மாதங்களில் வருவது. நவராத்திரி பாத்ரபத மாதத்திலும் தீபாவளி ஆச்வினத்திலும் வருகிறது. சில நேரங்களில் சூரிய மாதத்துக்கும் சந்திர மாதத்துக்கும் ஒரு மாத வித்தியாசம் வரும். அப்போது தீபாவளி புரட்டாசியிலும், ஆயுத பூஜை ஆவணியிலும் வரும். நாம்தான் இந்த வருஷம் எல்லா பண்டிகையும் சீக்கிரம் வருது என்று சொல்லிக்கொண்டிருப்போம். ஆக இந்த குறிப்பிட்ட வைதீகர்களுக்கும் சூரிய மாதத்துக்கும் தொடர்பே இல்லை

2. மாதம்

தமிழில் மாதம் என்பதற்கு கூறப்படும் சொல் திங்கள்.ஆனால் ஆச்சரியகரமாக சூரியனின் மாதமே பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர, கர்நாடகத்திலும் வட பாரதத்திலும் சந்திர மாதக் கணக்கு வழக்கில் உள்ளது.

3. வடமொழிப் பெயர் ஆண்டுகள்

இந்த பிரபவ, விபவ வருடங்களெல்லாம் வடமொழி, ஆகவே நீக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளவேண்டும். நம் சித்திரை, வைகாசி எல்லாம் கூட வடமொழிதான். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஒரு மாதத்தின் பெயர், அந்த மாதத்தில் பௌர்ணமியுடன் சேரும் நட்சத்திரத்தின் பெயரால் வழங்கப்படும்.

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தின் பெயர். வைகாசி விசாக நட்சத்திரத்தின் பெயரால் வருகிறது. ஆனி – அனுஷம் – வடமொழியில் அனுஷி – ஆனி. ஆடி – பூராடம் அல்லது உத்திராடம் – வடமொழியில் பூர்வ ஆஷாடம் மற்றும் உத்திர ஆஷாடம் – ஆஷாடிதான் ஆடி. ஆவணி – திருவோணம் – வடமொழியில் ஸ்ராவனம் – ஸ்ராவணி தான் ஆவணி.

புரட்டாசி – பூரட்டாதி அல்லது உத்திரட்டாதி – வடமொழியில் பூர்வ ப்ரோஷ்டபடம் அல்லது உத்திர ப்ரோஷ்டபடம்- ப்ரோஷ்டபடி தான் புரட்டாசி.
ஐப்பசி – அஸ்வினி – வடமொழியில் ஆச்யுவஜி – ஐப்பசி.

கார்த்திகை – கார்த்திகை. மார்கழி – மிருகசீரிடம் – வடமொழியில் மிருகசீர்ஷம் – மிருகசீர்ஷிதான் மார்கழி. தை -புனர்பூசம்/ பூசம் – வடமொழியில் புஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வரும். – திஷ்யதில் இருந்து தை. மாசி – மகம் – வடமொழியில் மாக் – மாகிதான் மாசி.

பங்குனி – பூரம் அல்லது உத்திரம் – வட மொழியில் பூர்வ பல்குனி அல்லது உத்திர பல்குனி – பல்குனியில் இருந்து பங்குனி. (1)

சிலர் கேட்கலாம். இந்த முறை மார்கழிப் பௌர்ணமி புனர்பூசத்திலும், பங்குனி பௌர்ணமி சித்திரையிலும் வந்ததே என்று. தற்போது சந்திரமான மாதம் சூரிய மாதத்தைவிட 30 நாட்கள் முன்பு செல்கிறது. .நம் மார்கழியில் சந்திரமான தை. நம் பங்குனியில் சந்திரமான சித்திரை. இதற்குக் காரணம் சந்திர ஆண்டு 360 நாட்களும், சூரிய ஆண்டு துல்லியமாக 365 /366 நாட்களும் கொண்டிருப்பதுதான்.

இந்த வித்தியாசம் தகுந்த இடைவெளியில் அதிக மாதம் என்று ஒரு மாதத்தை சந்திரமான மாதத்தில் சேர்த்து சரி செய்யப்படும்.

நாம் சூரிய மாதங்களுக்கும், சந்திர மாதப் பெயரையே வைத்துள்ளதால் இந்தக் குழப்பம். தை,பங்குனி,கார்த்திகை மாதங்களின் பெயர் எல்லாம் சங்க இலக்கியங்களிலேயே வருகிறது. அவற்றையெல்லாம் இடைச் செருகல் என்று கூற முடியாது.

பிங்கள நிகண்டு அஸ்வினியின் பெயர் ஐப்பசி , பூசத்தின் பெயர் புணர்தை, மகத்தின் பெயர் மாசி, உத்திரத்தின் பெயர் பங்குனி, விசாகத்தின் பெயர் வைகாசி, உதிராடத்தின் பெயர் ஆடி, அவிட்டத்தின் பெயர் ஆவணி ( இங்கேதான் சிறு வேறுபாடு), பூரட்டாதியின் பெயர் புரட்டாசி என்றே குறிப்பிடுகிறது. பிங்கள நிகண்டு 10 ஆம் நூற்றாண்டில் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

கேரளாவில் சூரிய மாதப் பெயர்களை மேடம், இடபம் என்றே வைத்துவிட்டார்கள்.எனவே குழப்பம் இல்லை.

4. சித்திரை முதல் நாளை வைதீகர்கள்தான் கொண்டு வந்து விட்டார்கள். என்று கூறுபவர்களுக்கும்

4a. ஆங்கிலேயர்களின் ஜனவரி 1 க்கு நெருக்கமாக தமிழ்ப் புத்தாண்டை தை 1 க்கு கொண்டுவரும் ஐரோப்பிய சதி என்று கூறுபவர்களுக்கும்…

இதுவும் சரி இல்லை. தினமும் தீ வழிபாடு செய்யும் அந்தணர்கள் மார்கழி மாதம் பௌர்ணமி அன்று ஆக்ராஹயணி என்று ஒரு சடங்கு செய்வார்கள். அக்ரா என்றால் முதல் என்று அர்த்தம். ஹயணம் என்றால் ஆண்டு என்று அர்த்தம். இதன் பொருள் முதல் மாதம். அதாவது மார்கழிப் பௌர்ணமி கிட்டத்தட்ட ஜனவரி ஒன்றுக்கு அருகில் வரும். கிட்டத் தட்ட வேதத்து வருடப் பிறப்புதான் ஜனவரி ஒன்று. (முத்தீ வழிபாடு சங்க காலத்திலும் இருந்தது).

காஞ்சி மஹா சுவாமி இதை விளக்கமாகக் கூறி நம் புத்தாண்டுதான் அங்கே சென்றுவிட்டது என்று கூறுகிறார் (2)

5. அறுபது வருடங்கள் என்ன கணக்கு?

இந்த 60 ஆண்டுக் கணக்கு தனி மனிதர்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் கணக்கிடும் ஜ்யோதிட முறைக்குத்தான். சூரியன் 12 ராசிகளைச் சுற்ற 1 ஆண்டும், சந்திரன் 1 மாதமும், செவ்வாய் ஒன்னறை ஆண்டும், குரு 12 ஆண்டும், சனி 30 ஆண்டும் எடுத்துக்கொள்கின்றன. ஒரு மனிதன் பிறந்த 60 ஆண்டுகள் கழித்து அவன் பிறந்த அதே மாதம் (அதாவது சூரியன் அதே ராசியில்), அதே நட்சத்திரத்தில் (அதாவது சந்திரன் அதே ராசியில்) இருக்கும்போது செவ்வாய், சனி,குரு ஆகியவையும் அதே ராசியில் இருக்கும். (வக்கிர அதிச்சர நிலை இல்லாவிடில். வக்கிரம் என்றால் பின்னோக்கிச் செல்வது, அதிச்சாரம் முன்னோக்கிச் செல்வது ).

பெரும்பாலும் புதனும், சுக்கிரனும் கூட சூரியனை ஒட்டியே செல்வார்கள். ஆகவே சரியாக உங்கள் அறுபதாவது பிறந்த நாளில், ராஹு, கேது தவிர்த்த மற்ற ஏழு கிரகங்களும் பெரும்பாலும் அதே ராசியில் இருப்பார்கள். இதுதான் தனி மனிதனின் அறுபது ஆண்டுக் கணக்கு.

இது முக்கியமாக ஜாதகக் கணக்குகளுக்குதான். அதுவும் திருமணங்கள் பல்வேறு அரச குடும்பக்களுக்கு இடையில் நடக்கையில், அல்லது ஒரு அரசன் பெரும் நிலப்பகுதியை ஆளும்போது இந்தப் பொதுக்கணக்கு தேவையாய் இருந்தது.

6. இந்த வருடங்கள் எல்லாம் அறுபது வருடக் கணக்கு.தொடர் ஆண்டு வேண்டும் என்று கூறுபவர்களுக்கு… தொடர் ஆண்டுகள் எத்தனை உள்ளன தெரியுமா?

சக ஆண்டு (78 AD) , கலியுக ஆண்டு ( 3101 BC, அதாவது கலியுகம் தொடங்கிய முதல்), கேரளத்தில் கொல்லம் ஆண்டு (825 AD) போன்ற கணக்குகளும் பின்பற்றப்படுகின்றன.

தமிழ் நாட்டிலே என்ன கணக்கு என்று கேட்பவர்களுக்கு…

பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. சக ஆண்டு முறையில் கிபி 270 ஆம் ஆண்டுக் கல்வெட்டு. ஆக சங்ககாலத்தின் இறுதியிலேயே சக ஆண்டு முறை இருந்திருக்கிறது. (3)

மதுரை ஆனைமலைக் கல்வெட்டு கலியுக ஆண்டிலும், அய்யம்பாளையம் கல்வெட்டு சக ஆண்டிலும் குறிக்கப்பட்டுள்ளது. ஆகத் தமிழ் நாடு இந்த இரண்டு தொடர் ஆண்டுகளையும் பின்பற்றி வந்துள்ளது. (4)

ஆகக் கூடி இந்த வைதீகர்கள் சந்திரமான மாதத்தையும், மார்கழிப் புது வருடத்தையும் பின்பற்றுகிறார்கள். தமிழ் மாதங்களின் பெயரும் வடமொழிதான். தமிழர்கள் சக ஆண்டுக் கணக்கையும் சங்க கால இறுதிக் கட்டத்திலேயே பின்பற்றி இருக்கிறார்கள்.

7. மற்றுமொரு கேள்வி: ஆண்டுப் பிறப்புக்கும் ஜோதிடத்துக்கும் என்ன தொடர்பு? அதை ஏன் சோதிடத்துடன் தொடர்புப்படுத்த வேண்டும்?
இதை ஜோதிடக் கணக்கு என்பதை விட வானியல் கணக்கு என்று சொல்வதே சரியாகும். இந்தக் கணக்கை ஜோதிடத்திலும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உலகம் எங்கும் வானியலும், ஜ்யோதிடமும் பிண்ணிப் பிணைந்தே உள்ளன. உலகெங்கிலும் – இந்திய, அராபிய, பாரசீக, ஐரோப்பிய – நாடுகளில் எல்லாமே பல ஜ்யோதிட அறிஞர்களே வானியல் கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறார்கள்.

8. சரி, ஆனால் ஏன் மேஷத்தைக் கொண்டு தொடங்க வேண்டும்? ஜோதிடர்களே வானியல் அறிஞர்களாகவும் இருந்ததால் இரண்டும் பிணைந்தே உள்ளன.எத்தனை மணிக்கு க்ரஹனம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிடும் அளவுக்கு திறமை படைத்த நம் அறிஞர்கள் இந்த ஆண்டுக் கணக்கையும் ராசி மண்டலத்தோடு பிணைத்தே வைத்து விட்டார்கள்.

9. அப்ப இந்த தை நீராடல் என்றெல்லாம் வருகிறதே? அப்ப தை முக்கியம் இல்லையா?

இந்த தை நீராடல் வரும் பரிபாடல்தான் ஒரு முக்கியமான தகவலை நமக்கு தருகிறது. அதாவது திருவாதிரையில் சிவனுக்கு விழா எடுக்கையில், சூரியன் பூராட நட்சத்திரத்தில் இருக்கும்போது (அதாவது சூரியன் தனுர் ராசியில் இருக்கும்போது) பெண்கள் அம்பா ஆடல் என்னும் அம்பிகையை வழிபாட்டு தை நீராடல் ஆடுவார்கள். சூரியன் தனுர் ராசியில் இருப்பது சூரிய மாதத்தில் மார்கழி. திருவாதிரை விழா நடப்பதும் மார்கழி. ஆனால் சொல்லப்படுவதோ தை நீராடல். இது மறைமுகமாகக் உணர்த்துவது அப்போது வழக்கத்தில் இருந்தது சந்திரமான மாதம். பரிபாடலின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு. (5)

அம்பிகையை பாவையர் நீராடி வணங்கும் இதே வழிபாடு ஆண்டாள் காலத்தில் ” மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் – நீராடப் போதுவீர் – ஆக இந்த மாதம் இப்போது மார்கழி ஆகி விட்டது. அதாவது சூரிய மாதம். ஆண்டாள் காலம் ஒன்பதாம் ஆம் நூற்றாண்டு (6)

ஆக இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சந்திர மாதம் சூரிய மாதமாகி இருக்கிறது.

அப்ப வருட ஆரம்பம் தையா? இல்லை சித்திரையா?

தமிழ் மாதக் கணக்கீட்டு முறை மிகத் துல்லியமாக சூரியனின் சுழற்சியைக் கணக்கிடும் முறை. 12 ராசிகள் மேஷத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே மேஷமே இந்தக் கணக்கீட்டின் துவக்கம்.

மேஷம்தான் சூரியனின் ராசித் தொடக்கம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? நக்கீரரின் நெடுநல்வாடை (7)

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி

திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு2திரியாமனின்ற,உரோகிணியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலேமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து (8)

பிங்கள நிகண்டு ராசியின் பெயர்களை மேடமு மிடபமு மிதுனமுங் கடகமும் சிங்கமும் கன்னியுன் துலாமு தேளும் தனுவும் மகரமும் கும்பமும் மீனும் என்றே வரிசைப்படுத்துகிறது.

கல்வெட்டுகள் நான்கு சூரிய சம்பந்தமான விழாக்களைச் சொல்கின்றன. அயன சங்கராந்தி இரண்டு, சித்திரை – ஐப்பசி விஷு இரண்டு.
ஆக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விழா. ஆடியும் தையும் முறையே தக்ஷிணாயன – உத்தராயண சங்கராந்திகள். சூரியன் உச்சம் அடைவது மேஷத்தில், அதாவது சித்திரையில். சூரியன் நீச்சம் அடைவது துலாத்தில் – அதாவது ஐப்பசியில். ஆக இந்த நான்கு மாதத் தொடக்கத்திலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே இந்தச் சூரியனைக் கொண்டு கணக்கிடப்படும் மாதக் கணக்கானது தமிழ் நாட்டுக்கே உள்ள ஒரு தனிப்பட்ட கணக்கு என்பதும், சூரியனின் மேஷ ராசிப் பிரவேசமே இதன் தொடக்கம் என்பதும் தெளிவு.

ஆதாரம் :

(1) http://www.kamakoti.org/tamil/Kurall89.htm

(2) http://www.kamakoti.org/tamil/2dk59.htm

(3) http://www.tamilartsacademy.com/articles/article24.xml

(4) http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/introduction.html

(5) http://www.tamilvu.org/slet/l1250/l1250pag.jsp?bookid=25&auth_pub_id=104&page=127

(6) http://www.tamilartsacademy.com/articles/article08.xml

(7) http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0070.html

(8) http://www.tamilvu.org/library/libindex.htm

0

சங்கரநாராயணன்