மூன்றாவது அணி சாத்தியமா?

மூன்றாவது அணி.. மூன்றாவது அணி.. மூன்றாவது அணி. ஊடகங்கள் முழுக்க இந்த வார்த்தைகள்தான் ஆக்கிரமித்துள்ளன. பாதல் பதவியேற்பு விழாவுக்கு மமதா அழைக்கப்பட்டால்.. ஆஹா.. மூன்றாவது அணி. அகிலேஷ் யாதவுக்கு ஜெயலலிதா வாழ்த்து அனுப்பினால்… அதோ பார் மூன்றாவது அணி. அதிலும், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மாநிலக் கட்சிகளுக்குச் சாதகமாக வந்துசேரவே, மூன்றாவது அணி கோஷத்தைப் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன ஊடகங்கள்.

நியாயமாக ஊடகங்கள் சொல்லும் மாநிலக்கட்சிகள்தான் இந்தக் கோஷத்தை எழுப்பவேண்டும். ஆனால் அவர்கள் யாரும் அதைப்பற்றி அதிகம் பேசவில்லை. இப்போதுதான் லேசுபாசாகப் பேசத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் பூர்வாங்கமாகப் பேசியிருக்கிறார். மற்றபடி, பல கட்சிகளும் மூன்றாவது அணிக்குச் சாதகமாகவோ அல்லது எதிர்ப்பாகவோ எதுவும் பேசவில்லை.

சரி, மூன்றாவது அணி என்றால் என்ன? அதில் யார் யாரெல்லாம் அங்கம் வகிப்பார்கள்?

இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் விரவிக்கிடக்கின்றன. இடதுசாரிகள் ஓரிரு மாநிலங்களில் செல்வாக்குடன் இருக்கிறார்கள். மற்றபடி, பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தான் ஆட்சியிலும் இருக்கின்றன. செல்வாக்குடனும் இருக்கின்றன. நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸும் பாஜகவும் இருந்தபோதும் அங்கு நேரடிப்போட்டி என்பது சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என்ற இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் இருக்கிறது. ஆட்சி நாற்காலியும் அவர்களுக்கு இடையேதான் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். அதிமுகவுக்கு மாற்று திமுக. திமுகவுக்கு மாற்று அதிமுக.

பிகாரில் ஆட்சியில் இருப்பது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் என்ற மாநிலக்கட்சி. அங்கே லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முக்கியமான மாநிலக்கட்சி. பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்திருப்பது அகாலிதளம் என்ற மாநிலக்கட்சியே. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் என்ற மாநிலக் கட்சியின் ஆட்சிதான் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலும் தேசிய மாநாட்டுக்கட்சி என்ற மாநிலக் கட்சியின் ஆளுகையில்தான் இருக்கிறது. மேற்கு வங்கத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் என்கிற மாநிலக்கட்சியின் ஆட்சிதான். ஆக, இந்தியாவின் பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பது மாநிலக்கட்சிகளே.

மாநில அளவில் அரசியல் செய்துகொண்டிருக்கும் இத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்குத்தான் மத்திய அரசில் தங்கள் கட்சி அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்னமும் இருக்கிறது. அதேசமயம், அந்த ஆசை பலருக்கும் ஏறக்குறைய நிறைவேறிவிட்டது. தற்போது அவர்களுடைய இலக்கு, பிரதமர் பதவி. அதைப் பல சமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் மூன்றாவது அணியின் உறுப்பினர்களாக ஆகமுடியும்.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற மூன்றாவது அணி முயற்சிகள் நடந்துள்ளன. ஆட்சியையும் பிடித்துள்ளன. ஆனால் அவையெல்லாம் அற்ப ஆயுளாகவே முடிந்துவிட்டன. மூன்றாவது அணி என்றாலே கசப்பான ஒன்று என்ற அளவுக்கு கடந்த கால அனுபவங்கள் மோசமானதாக இருந்தன. அதன் காரணமாகவே, சம்பந்தப்பட்ட மூன்றாவது அணிக் கட்சிகள் காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ அணி அமைத்துக்கொண்டுவிட்டன.

ஐக்கிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகள் பாஜகவுடன் அணி அமைத்துக்கொண்டிருக்கின்றன. சரத்பவாரின் தேசியவாதி காங்கிரஸ் கட்சி தாய்க்கட்சியான காங்கிரஸுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது. மமதா பானர்ஜி இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ளார். மாயாவதியும் அப்படியே. அதிமுகவும் அப்படியே. திமுகவும் அப்படியே.

காங்கிரஸுடனோ அல்லது பாஜகவுடனோ அணி அமைத்து ருசிகண்ட பூனைகளாக மாறியிருக்கும் கட்சிகள் மூன்றாவது அணி என்ற விஷப்பரிட்சையை மீண்டும் எழுதுவார்கள் என்பது சந்தேகம்தான். தவிரவும், வெவ்வேறு மாநிலங்களில் விரவிக் கிடக்கும் இந்தக் கட்சிகள் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அணி அமைத்துப் போட்டியிடுவது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. காரணம், இந்தக் கட்சிகள் அனைத்துமே அவரவர் பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு கொண்டவை. ஆகவே, தேர்தலுக்கு முந்தைய மூன்றாவது அணி என்பது சாத்தியமானது அல்ல. கௌரவ விஷயமாகக் கருதி, தேர்தலுக்கு முன்பே மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில் அந்த அணிக்கு அதிக லாபம் இருக்காது.

அதேசமயம், தேர்தலுக்குப் பிந்தைய மூன்றாவது அணி என்பது சாத்தியப்படக்கூடிய ஒன்று. தேர்தல் முடிவுகள் வந்தபிறகு கணக்குகள் அனைத்தும் வெகுசுலபமாகிவிடும். காங்கிரஸுக்கோ அல்லது பாஜகவுக்கோ ஆட்சி அமைக்க எத்தனை இடங்கள் குறைகிறது என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும். அந்தக் குறையை இட்டுநிரப்பி, மத்திய அரசில் அங்கம் வகிக்க முயற்சி செய்வதுதான் மாநிலக் கட்சிகளின் பிரதான நோக்கமாக இருக்குமே தவிர ஊசலாட்டத்துடன் கூடிய மூன்றாவது அணியைக் கட்டமைத்து, ஆட்சியைப் பிடிப்பது நோக்கமாக இருக்காது. அமையவிருக்கும் ஆட்சியில் எந்தெந்த இலாக்காக்களைப் பெறுவதில்தான் கவனம் செலுத்துவார்கள். மூன்றாவது அணிக்கு விடைகொடுத்துவிடுவார்கள்.

ஒருவேளை, காங்கிரஸ், பாஜக இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை; பிற கட்சிகளின் ஆதரவைக்கூட மிகவும் சிரமப்பட்டுத்தான் திரட்டவேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் மட்டுமே மூன்றாவது அணி முயற்சிகள் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது இரண்டு தேசியக் கட்சிகளில் யாருடைய ஆதரவைப் பெறுவது என்பதில் சிக்கல்கள் முளைக்கும். இரண்டு கட்சித் தலைவர்களும் மூன்றாவது அணித்தலைவர்களை மிரட்டத் தொடங்குவார்கள். பொதுவேலைத் திட்டம் என்பார்கள். அதைச் செய் என்பார்கள். இதைச்செய் என்பார்கள். தங்கள் இஷ்டத்துக்கு ஆட்சி நடக்கவேண்டும் என்று வற்புறுத்துவார்கள்.

அதிலும், இடதுசாரிகள் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, அவர்களும் மூன்றாவது அணியில் இணையும் பட்சத்தில் மீண்டும் கூட்டணி மாற்றங்கள் கடகடவென அரங்கேறும். இடதுசாரிகள் சிலரை ஒதுக்குவார்கள். இடதுசாரிகளை சிலர் ஒதுக்குவார்கள். குழப்பங்கள் அதிகரிக்கும். ஆட்சி அமைப்பதற்கே இத்தனைக் குழப்பங்கள் என்றால் ஆட்சி அமைத்தபிறகு.. அடேயப்பா.. நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

நீதி: மூன்றாவது அணி அமைவது கடினம். அமைந்தால் ஆட்சி செய்வது அதைவிட கடினம்!

0

ஆர். முத்துக்குமார்

யோகி – சமுராய் – டிராவிட்

For someone who has played 164 Test matches and scored 13,200-plus runs, no tribute can be enough. All I can say is there was, and is, only one Rahul Dravid and there can be no other. I will miss him in the dressing room and out in the middle. – Sachin Tendulkar

22 கெஜம். இரண்டு பக்கமும் தலா  3 ஸ்டம்புகள். இந்தப் பரப்பின் நீளம் தான் ஒரு பேட்ஸ்மெனை கிரிக்கெட் விளையாட்டில் நிர்ணயிக்கிறது. கேட்பதற்கும், காண்பதற்கும் மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்த விஷயத்துக்குப்பின்தான் பல கனவுகளின் சரிவும், சில அசாதாரண நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. கிரிக்கெட் என்கிற விளையாட்டு ஆட ஆரம்பித்து இன்றோடு 135 வருடங்களாகிறது. இங்கிலாந்தில் கனவான்களின் விளையாட்டாக ஆட ஆரம்பித்து, பின்னர் இங்கிலாந்து ஆசியாவைக் காலனியாக்கி வைத்திருந்ததால், ஆசியாவில் பரவி, இன்றைக்கு ஆசிய அணிகள் பலம் பொருந்தியதாக மாறியிருக்கிறது.

இந்தியா கிரிக்கெட்டில் ஒரு தவிர்க்க முடியாத நாடு. லாலா அமர்நாத்திலிருந்து அந்தக் குடும்பத்திலேயே மூன்றாவது தலைமுறை ஆட தயாராக இருக்கிற இன்றைக்கு வரைக்கும் இந்தியாவில் உணவு, உடை, இருப்பிடம், செல்போனுக்கு பின் கிரிக்கெட் ஒரு அத்தியாவசியம். எல்லா தெருக்களிலும், ஏதேனும் நான்கு சிறுவர்கள் சுவரில் கரியில் கிறுக்கி ஆட ஆரம்பிக்கும் ஒரு எளிமையான ஆட்டம். இந்த எளிமையான, ஜனரஞ்சகமான ஆட்டத்துக்குப் பின்னான உழைப்பு யாருக்குமே தெரிவதில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்போதுதான் ஒரு சகாப்தம் முடிந்திருந்தது. சுனில் கவாஸ்கர் ஒரு இமயம். கபில்தேவ், விஸ்வநாத், ரோஜர் பின்னி, மதன்லால், சையது கிர்மானி, ஸ்ரீகாந்த், அமர்நாத், ரவி சாஸ்திரி, திலிப் வென்சர்கார், திலிப் தோஷி, மனீந்தர் சிங் பின்னாளில் மனோஜ் பிரபாகர், நவ்ஜோத்சிங் சிந்து, அசாருதீன், சஞ்சய் மஞ்ரேக்கர், அருண்லால், கெய்க்வாட் என நீண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் சுனில் கவாஸ்கருக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே நிலைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்திய டெஸ்ட் அணி என்பது சம்பிரதாயத்துக்கு இருந்து எல்லா நாடுகளுக்கும் போய் தோற்று வருவது என்பது வழமையாக இருந்தது. இதுதான் உலகக் கோப்பையை நாம் ஜெயித்த பிறகு நடந்தது.

நவீன இந்திய கிரிக்கெட் என்பது 1983 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, அசாரூதினில் ஆரம்பிக்கிறது. அசார் தான் இந்திய அணியில் ‘பீல்டிங்’ என்றொறு துறை இருக்கிறது என்பதை எடுத்து சொன்னவர். இந்திய அணியின் கேப்டன் பதவி பல்வேறு கைகள் மாறி, சச்சின் வேண்டாம் என மறுத்து சவுரவ் கங்குலியிடம் வந்து சேர்ந்தது.

சவுரவ் பெங்காலி. பெங்காலிகளுக்கே உரிய கோபக்கார இளைஞர்.  எதைச் செய்தாலும் வெறித்தனத்தோடு அணுகும் பார்வை. எல்லாவற்றிலும் முழுமூச்சாகப் போராடும் குணம். இந்திய கிரிக்கெட் “வயதுக்கு வந்தது” அப்போது தான். அங்கே தான் ஆரம்பித்தது இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம். சச்சின், சவுரவ், ட்ராவிட், லக்‌ஷ்மண், கும்ப்ளே என ஐவராக எழுந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முகத்தை ஒரேயடியாக மாற்றிய காலகட்டம். இதில் பின்னாளில் இணைந்தது சேவாக்கும், ஹர்பஜன் சிங்கும்.

90களின் ஆரம்பத்தில் அது நிகழ ஆரம்பித்தது. முதலில் ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தான் போன அணியில் தெண்டுல்கர். பின்னால் சவுரவ் கங்குலி, ராகுல் சரத் ட்ராவிட். அதன் பின்னால் லக்‌ஷ்மண். யாருமே நம்பவில்லை. ராகுல் ட்ராவிட். பதினாறு வருடங்களுக்குமுன், ஒல்லியாக, வெடவெடவென்று லார்ட்ஸில் 95 ரன்கள் அடிக்கும் போது யாருக்குமே நம்பிக்கையில்லை. இந்த மாதிரி நிறைய one match wonderகளை இந்தியா பார்த்திருக்கிறது. சச்சின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். child prodigy. ஆனால் ராகுல் ட்ராவிட் அந்த மாதிரி இல்லை. சச்சின் பம்பாய் கிளப்பிலிருந்து வந்த ஆள். ராகுல் ட்ராவிட்டுக்கு காட் பாதர்களே கிடையாது.

ஒரு காலத்தில் கிரிக்கெட் பம்பாயில் இருந்தது. சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ரேக்கர், ரவி சாஸ்திரி, திலிப் வென்சர்கார் எல்லாவற்றையும் தாண்டி, இந்தியா கொண்டாடும் சச்சின் தெண்டுல்கர். ஆனால் ஒவ்வொரு முறை பம்பாயிலிருந்து யாரோ இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக மாறும் போது, பெங்களூரிலிருந்து ஒருவர் அந்த ஸ்டாரின் பின்புலமாகவே இருந்திருக்கிறார். கவாஸ்கர் ஆடியபோது குண்டப்பா விஸ்வநாத். சச்சினுக்கு பின்னால் ட்ராவிட். பாம்பே பாய்ஸ் Vs. பெங்களூர் பாய்ஸ் என்று ஒரு பிரிவினை ஏற்படுத்தினால், ‘பம்பாய் பாய்ஸை’ விட ‘பெங்களூர் பாய்ஸ்’ முக்கியமானவர்கள். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட். இந்த மூவர் மீதும் நம்மால் ஒரு அவதூறும் சொல்ல முடியாது. அத்தனை நேர்மை, அர்ப்பணிப்பு. இதில் ராகுல் ட்ராவிட் வேறு தளம்.

கிரிக் இன்ஃபோவில் ராகுல் ட்ராவிட்டின் புள்ளி விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். இது ராகுல் ட்ராவிடின் புள்ளிவிவரங்கள் பற்றியதல்ல. டெஸ்டில் 13000 சொச்ச டெஸ்ட் ரன்கள். ஒரு நாள் போட்டியில் 10000 சொச்ச ரன்கள். 70 ஒரு நாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர். 300+ கேட்சுகள். டெஸ்டில் 30000 பந்துகளை சந்தித்த ஒரே வீரர். இன்ன பிற.

புள்ளிவிவரங்களோ, ட்ராவிட்டின் 2003 அடிலெய்டில் முதல் இன்னிங்க்ஸில் 200+, இரண்டாம் இன்னிங்ஸில் 70+ அடித்து ஜெயித்த இன்னிங்ஸோ, 2001 லக்‌ஷ்மனோடு கொல்கத்தாவில் அடித்த 180, ராவல் பிண்டியில் அடித்த 270, ஹெட்டிங்லியில் அடித்த 148, 2011 இங்கிலாந்து தொடரில் மொத்த இந்திய அணியும் ஊத்தி மூட, ஒரு முனையில் ட்ராவிட் மட்டும் அடித்த மூன்று சதங்களோ, முதலில் இறங்கி கடைசி வரை நின்று, நாம் பாலோ ஆன் வாங்கி, வெறும் பத்து நிமிட இடைவெளியில் மீண்டும் களத்துக்கு வந்து ஆடிய தீரமோ இன்னபிற புள்ளிவிவரங்களோ ட்ராவிடை முழுமையாக காட்டவேயில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது உடல் உழைப்பையும், கூர்மையான கவனிப்பையும், தொடர்ச்சியான “க்ரீஸ்” இருப்பையும், கடுமையான மனோ பலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சரியான ‘டொக்கு பேட்ஸ்மென்யா’ என்று சர்வசாதாரணமாக உதாசீனப் படுத்தப்படும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது கிரிக்கெட்டின் உச்சக்கட்டம். வெறுமனே சிக்ஸரும் பவுண்டரியுமாகப் பறக்கும் 20-20 களிப்பாட்டமல்ல அது. எப்படி வேண்டுமானாலும் ஆடலாம், ஆனால் ரன்கள் வந்தால் போதும் என்கிற மனப்பாங்கினை கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆடமுடியாது. டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது இமயமலையில் ஏறி எவரெஸ்ட் தொடுவதற்கு இணை. 20-20 என்பது பொழுதுப் போக்குக்காக ’ட்ரெக்கிங்’ போவது. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. இன்றைக்கு instant gratification தான் நிஜமென்று நம்பும், அதை நாடும் ஒரு தலைமுறைக்கு இதன் வேர்கள் புரிவது கடினம்.

ட்ராவிட் 16 வருடங்கள் இந்தியாவுக்காக எல்லா களங்களிலும் ஆடியது வெறும் ஆட்டமல்ல. அது ஒரு யோகியின் தவம். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகங்கள் என்று எடுத்தால் இன்றைக்கு ஒரு 800 பெயர்கள் தேறும். ஆனால் நினைவில் நிற்பது வெகு சில பெயர்களே. அதற்கு காரணம், டெஸ்ட் கிரிக்கெட்டின் தேவைகள் மிக அதிகம். இந்த உழைப்பு, அர்ப்பணிப்பு, கவனம், தேர்ச்சி, இருப்பு, மனோபலம், உடல்தகுதி, பயிற்சி, சோர்வுறாமல் கூர்ந்து ஒவ்வொரு பந்தையும் கவனிப்பது என்பது சாமானியர்களுக்கு கைக்கூடிவராத ஒன்று.  அதை ட்ராவிட் தன்னுடைய அடையாளமாக மாற்றியிருக்கிறார். இதை சாத்தியப்படுத்த அவர் கொடுத்திருக்கும் உழைப்பு இந்திய அணியில் எவராலும் தரப்படாத உழைப்பு.

இதெல்லாம் சாத்தியமாவதற்கு இரண்டே வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று சின்ன வயதிலிருந்து உங்கள் நாடி நரம்பு ரத்தத்தில் கிரிக்கெட் ஊறி, பள்ளிப் போட்டிகளிலேயே நீங்கள் ஜீனியஸாக கருதப்பட்டாலேயொழிய இது சாத்தியமில்லை. இது சச்சின், சுனில் கவாஸ்கர், டான் ப்ராட்மேன் வழி. இன்னொன்று கிரிக்கெட் என்கிற விளையாட்டின் மீது பெருங்காதலாய் வசீகரித்து, ஒரு யோகமாகக் கொண்டு, அதை தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்று அதிலிருந்து சாதனைகளை நிகழ்த்தத் தொடங்குதல். இது இன்றைக்கு ட்ராவிட்டின் வழி. இதுவே ஸ்டீவ் வாஹ் (ஆஸ்திரேலியா), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஜாக்கஸ் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) போன்றவர்களின் வழி.

மால்கம் க்ளாட்வெல் எழுதிய Outliers என்கிறப் புத்தகத்தில் ஒரு துறையில் நீங்கள் ஜீனியஸாக 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்று ஒரு கணக்கு சொல்லியிருப்பார். 30,000 பந்துகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய ஒரே பேட்ஸ்மென் ராகுல் ட்ராவிட். சரியாக 5,000 ஒவர்கள். ஒரு ஒவர் 5 நிமிடங்கள் என்று கொண்டால் ஒவர் கணக்கில் மட்டுமே 500 மணி நேரங்கள். இது டெஸ்டில் ஆடிய ஒவர் கணக்கு மட்டுமே. ஒரு நாள் போட்டிகள், 20-20 போட்டிகள், கவுண்டி கிரிக்கெட், பயிற்சி நேரங்கள், ரஞ்சி கிரிக்கெட், முதல் தர கிரிக்கெட், அதற்கு முன் பள்ளியில் ஆடியது என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டால் 10,000 மணி நேரங்கள் சர்வசாதாரணம். ஜீனியஸ் என்பது எடிசன் சொன்னதுப் போல 1% Inspiration. 99% perspiration.

ட்ராவிட் பற்றிய புகழாரங்களில் குண்டப்பா விஸ்வநாத் சொன்னது “ஒரு உள்ளூர் போட்டியில் ட்ராவிட் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆகிவிட்டார். ட்ரெஸ்ஸிங் ரூம் வந்து பொறுக்க முடியாமல், மாலையில் பந்தினை கட்டித் தொங்க விட்டு, சுமார் 1000 முறை அந்த குறிப்பிட்ட திசையில் ஆடி பயிற்சி எடுத்தார்.” இதுதான் ட்ராவிட். எதுவுமே ட்ராவிட்டுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து தரப்படவில்லை. விடாத பயிற்சி. தொடர்ச்சியாக தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டே வருதல். தன்னுடைய ஆட்டத்தினை மேம்படுத்திக் கொள்வதில் இருந்த ஆர்வம். அர்ஜுனனுக்கு பறவையின் கண் தெரிந்ததைப் போல ட்ராவிட்டுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான் – தன்னுடைய விக்கெட்டினை காப்பாற்றுதல். ரன் சேர்த்தல். இந்தியாவை வெற்றிக்குக் கொண்டு செல்லுதல். இதுதான் + இதுமட்டுமே.

F1 டிரைவர் அர்டன் சென்னா ஒரு முறை சொன்னார் “I don’t compete with others. I just constantly wanted to compete with myself”

இது தான் ட்ராவிட்டின் முகம். இந்தியாவில் புகழ்பெற்றிருக்கும் எல்லா வீரர்களுக்கும் ஒரு முகம் இருக்கிறது. சேவாக் – எதிரணியை துவம்சம் செய்வது. சச்சின் – எந்தக் களமாக இருந்தாலும் எதிரணியைத் திண்டாட வைப்பது. கங்குலி – ஸ்பின்னர்களை ஆடுவதில் ஜித்தன். லக்‌ஷ்மண் – லெக் சைட்டில் 200 பேர் நின்றாலும், அனாசியமாய் ரன் குவிப்பது. ஆனால், இது எல்லாம் இருந்தும், அது எதையுமே முன் வைக்காமல் ஒரு முனையில் ஒரு யோகியைப் போல தன்னுடைய வேலையினை எவ்வித ஆர்ப்பாட்டங்களுமில்லாமல் தொடர்ச்சியாக ஒரு well oiled machine போல செய்துக் கொண்டே, பின்புலத்தில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்ததுதான் ட்ராவிடின் முகம். ஹெல்மெட்டிலிருந்து வியர்வை கொட்ட, முகமெல்லாம் வியர்த்து ஊற்ற, ஒரு பக்கம் ட்ராவிட் நிற்கிறார் என்றால், கமெண்ட்ரியில் சர்வ சாதாரணமாக as long as Dravid is at one end, India is in safe hands என்பதை ஆட்டம் தவறாமல் கேட்கலாம்.

ஒரு ஜப்பானிய சமுராய் வீரன் தன் தலைமைக்கு கட்டுப்பட்டு போர்க்களத்தில் சண்டையிடுவான். வேண்டுமானால் உயிர் துறப்பான். ட்ராவிட்டும் சமுராய்தான். டெஸ்ட்டில் ஏழாவது இடத்திலிருந்து, முதல் இடத்தில் ஒபனிங் வரை அணிக்கு என்ன தேவையோ, அதற்காக ஆடியவர். உலகில் டான் பிராட்மேனுக்கு பிறகு சிறப்பான No.3 பேட்ஸ்மென் ட்ராவிட் என்று புள்ளி விவரங்கள் சொல்லும். ஆனால் ஆட்டத்தில் எந்த வரிசை என்பது ட்ராவிட்டுக்கு முக்கியமே இல்லை. எங்கு இறங்கினாலும், அணிக்கான பங்களிப்பையும், ஆட்டத்தினை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றுவது மட்டுமே ட்ராவிட் என்கிற சமுராயின் குறிக்கோள்.

இன்றைக்கு ஜாகிர் கானோ, பிரவீண் குமாரோ, இஷாந்த் சர்மாவோ, ரோஹித் சர்மமோ, உத்தப்பாவோ தொடர்ச்சியாக மூன்று தொடர்கள் ஆடுவது கடினம். பிசிசிஐ அரசியல் ஒரு புறம் இருக்க, யாருமே முழுமையான உடல் தகுதியோடு இல்லை. ஆனால் ஒரு சீசனில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, கவுன்டி கிரிக்கெட் என்று ட்ராவிட் ஆடியிருக்கிறார். இந்த அர்ப்பணிப்பு, உடல்தகுதி, அணிக்கான பங்களிப்பு, உழைப்பு, சீன் போடாமல் இருத்தல், முக்கியமாக,  தொடர்ச்சியாக வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்காகவே அயராது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்ட தன்மை என நீளும் குணநலன்களில், ட்ராவிட் வெறும் விளையாட்டு வீரர் இல்லை என்பது தெளிவாகும்.

மூன்று வருடங்கள் ப்ரோக்ராமர், இரண்டு வருடங்கள் டீம் லீட், அடுத்த வருடம் ப்ராஜெக்ட் லீட், அதற்கடுத்து ப்ராஜெக்ட் மேனேஜர், நடுவில் சில வருடங்கள் வெளிநாட்டு வேலை என டைம் டேபிள் போட்டு தன்னுடைய படிகளை நிர்ணயிக்கும் இன்றைய இளைஞர் சமுகத்துக்கு முன்னால் ட்ராவிட் ஒரு வேறு மாதிரியான ஆதர்சம். ரோல் மாடல். உண்மையான உழைப்பு, கடுமையான முயற்சி, வெற்றியைப் பற்றியே சிந்தனை, பிரபல்யத்துக்கான எந்த தடங்களும் இல்லாமல் தன்னுடைய துறையில் உச்சத்தினை அடைவதற்கான தொடர்ச்சியான மேம்படுத்தல், தன்னடக்கம், அமைதி, பிரபல்யத்தைத் தலைக்குக் கொண்டு போகாத குணம் என நீளும் தகுதிகள் old world virtues ஆக இருந்தாலும், அது தான் உலகின் நம்பர்.1 இல்லாமல் போனாலும், நம்பகமான ஒரு சாதனையாளனை முன்னிறுத்தியிருக்கிறது. இது தான் நிஜமான, கர்வப்படக்கூடிய வெற்றி. வாழ்நாள் சாதனை என்பதை வெறும் 39 வயதில் நிகழ்த்தி விட்டு இன்னமும் அமைதியாக இருக்கும் ஒரு மனிதனின், யோகியின், சமுராயின் வாழ்வனுபம்.

ட்ராவிடும் அப்படி தான். கிரிக்கெட் என்கிற விளையாட்டினை ரசிக்கிற, சுவாசிக்கிற, அணுஅணுவாய் வாசிக்கிற, சிலாக்கிக்கிற எல்லோருக்கும் ட்ராவிடின் ஆட்டம் பிடித்திருக்கும். ஏனெனில் இது வெறும் ஆட்டமல்ல. கொண்டாட்டம்.  ட்ராவிட்டின் கவர் டிரைவ் களை அப்படியே படம்பிடித்து கிரிக்கெட் பாடப் புத்தகத்தில் போடலாம். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கரின் கவர் ட்ரைவ்களில் அந்த perfection தெரியும். இடது கை ஆட்டக்காரர்களில் இங்கிலாந்தின் டேவிட் கோவர், மேற்கத்திய தீவின் கேரி சோபர்ஸ் போன்றவர்கள் ஆடும்போது அது தெரியும்.

கனக்கச்சிதம், ஸ்பஷ்டம் என்ற இந்த இரண்டு சொற்கள் இல்லாமல்  ட்ராவிடின் ஆட்டம்  முற்றுப் பெறாது. ஒரு கலையோ, வணிகமோ, விளையாட்டோ எப்போது ஆனந்தமாக, கொண்டாட்டமாக, முடிவுறா அனுபவமாக இருக்குமென்றால் அதுவே கதியாக, அதுவே ஒன்றாக உள்ளும் புறமுமாய் கலந்து அதை வெளிக்கொணரும்போது தான் அந்த கலைஞனின், விளையாட்டு வீரனின் ஆளுமை தெரிய வரும். இந்த ஆளுமை தான் ட்ராவிட். “Greatness was not handed to him; he pursued it diligently, single-mindedly ”

ஸ்டார் வார்ஸ் (Star Wars) ஜார்ஜ் லூகாஸ் இயக்கி உலகின் மிக பிரசித்திப் பெற்ற படம். ஸ்டார் வார்ஸில் எல்லா விதமான வீர, தீர சாகசங்களும், ’ஜெடாய்’(Jedi) க்களும், ஜந்துக்களும் வரும். ஆனால், ஸ்டார் வார்ஸ் கதாப்பாத்திரங்களிலேயே அமைதியும், தீர்க்கமும், அறிவும், மேன்மையும் கொண்டது ‘யோடா’(Yoda) என்கிற ’ஜெடாய்’களின் குரு. எவ்விதமான அலட்டல்களும் இல்லாமல், ஆனால் தீர்க்கமாக தன்னுடைய பார்வையினை முன்வைக்கும் ‘யோடா’ தான் ‘ஜெடாய்’களின் வழிகாட்டி.ஒய்வுக்குபின் ராகுல் ட்ராவிட் என்ன செய்யப் போகிறார் என்று தெரியாது. ஆனால் ஒரு ரசிகனாய், ஆர்வலனாய், கிரிக்கெட்டின் வாழ்நாள் உபாசகனாய் ராகுல் ட்ராவிட் இந்தியாவின் ‘யோடா’ வாக மாற வேண்டும். அவருக்கு தெரியாத நுணுக்கங்கள், ஆட்டத்திற்கு முன் எப்படி தயார் செய்தல், எப்படி அணுகுதல், எப்படி எதிர்கொள்ளல் என்று எதுவுமே இல்லை. நாளைய நட்சத்திரங்களுக்கு ஆர்வமிருக்கிறது; வெறியிருக்கிறது; ரன்கள் குவிக்கவேண்டுமென்கிற ஆசையிருக்கிறது. ஆனால் வழிகாட்ட தான் யாருமேயில்லை. ட்ராவிட் அந்தப் பணியை செய்ய வேண்டும்.

– நரேன்

You may not get anyone who will be able to replace Rahul Dravid but again you can not continue forever because it took 16 years and 13,000 runs in Test cricket to make a Rahul Dravid. – Sourav Ganguly