சரஸ்வதி : ஒரு நதியின் மறைவு

சிந்து சமவெளி நாகரிகம் பொது யுகத்துக்கு முன் மூன்றாம் ஆயிரமாண்டில் ஆரம்பித்தது. 2600-1900 வரையிலான காலகட்டத்தில் நகரமயமாகி உச்சத்தை எட்டியது. அதன் பிறகு வீழ்ந்தது. பொ.யு.மு. முதல் ஆயிரமாண்டில் கங்கைச் சமவெளியில் ஒரு புதிய நாகரிகம் உருவெடுக்கிறது. மூன்றாம் ஆயிரமாண்டுக்கும் முதலாம் ஆயிரமாண்டுக்கும் இடையிலான காலகட்டம் வேத இருண்ட காலம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது நடந்தது என்ன? அரசியலின் பெருவெளியில் உண்மையின் வேடம் பூண்டபடி முடிவற்று அலைகின்றன அபாயகரமான யூகங்கள். அந்த இரண்டாம் ஆயிரமாண்டு என்பது ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டமாகச் சொல்லப்படுகிறது. குதிரைகளில் ஏறி வந்த ஆரியர்கள் பூர்வகுடிகளான திராவிடர்களைக் கொன்று அவர்களுடைய நகரங்களை நிர்மூலமாக்கினர். வேத கலாசாரத்தை இந்தியாவில் புகுத்தினர். வேதகால நாகரிகம் எனப்படும் அந்த கங்கைச் சமவெளி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதுதான் பொதுவாக நம் பள்ளிப் புத்தகங்களில் இன்றும் சொல்லித் தரப்படும் வரலாறு.

இதுதான் மத நம்பிக்கையைவிட படு மூர்க்கமாகப் பரப்பப்பட்டு வந்திருக்கும் கோட்பாடு. சமீபகாலமாகக் கிடைத்துவரும் ஆதாரங்களின் அடிப்படையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஆரியர் என்பவர் அந்நியர் என்பதே இன்றும், குறிப்பாகத் தமிழகத்தில், பதிந்துகிடக்கிறது.  The Lost River  என்ற நூலில் ஆசிரியர் மிஷல் தனினோ இந்தக் கோட்பாட்டின் அஸ்திவாரத்தை நிதானமாகத் தகர்த்திருக்கிறார்.

ஆரியர் படையெடுப்பு என்ற கற்பிதக் கோட்பாட்டை முன்வைப்பவர்கள் சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்த நதியே அல்ல என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஒரு நதி இருந்திருக்கவே இல்லை. அது வேத கால ரிஷிகளின் கற்பனையில் உதித்த நதி மட்டுமே என்று சொல்கிறார்கள். ஏனென்றால், சிந்து சமவெளி நாகரிக குடியிருப்புகளில் பெரும்பாலானவை சரஸ்வதி நதிக்கரையில்தான் அமைந்திருக்கின்றன. ஒருவகையில் அந்த கலாசாரம் சிந்து -சரஸ்வதி கலாசாரம் என்றுதான் அழைக்கப்பட்டவேண்டும் என்று சொல்லும் அளவுக்கு சரஸ்வதி நதியால் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நதி வறண்டதைத் தொடர்ந்து அந்த மக்கள் கிழக்கு நோக்கி அதாவது கங்கைச் சமவெளி நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டால், ஆரியர்களால் அழிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் என்ற கோட்பாடு வலுவிழந்துவிடும் என்பதால், சரஸ்வதி நதி என்று ஒன்று இருந்திருக்கவே இல்லை என்கிறார்கள்.

இந்தக் காரணங்களால் மிஷல் தனினோ முதலில் சரஸ்வதி நதியின் முழு வரலாற்றை தனது நூலில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். சரஸ்வதி நதி தோன்றிய இடம், பாய்ந்து சென்ற வழித்தடங்கள், அது வறண்டவிதம், அதற்கான காரணங்கள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தையும் பழங்கால சமஸ்கிருத இலங்கியங்களில் ஆரம்பித்து சமகால விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் வரை கிடைத்திருக்கும் அனைத்து ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார். அடுத்ததாக, அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங் உட்பட பல்வேறு துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிகத்தின் பிரமாண்டமான, முழுமையான சித்திரத்தை நம் முன் வைக்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரமயமாக்க காலகட்டம் பொ.யு.மு. 1900 வாக்கில் மறைந்தது என்பது இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. சரஸ்வதியின் பிரதான நீரோட்டம் வறண்டு போனதும் அதே காலகட்டத்தில் என்பதை தட்ப வெப்பவியலில் ஆரம்பித்து ஆரம்பித்து கிணற்று நீரில் ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் ஐசோடோப்பு சோதனை வரையான ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார். மிக நேர்மையாக, கடந்த காலம் பற்றிய ஓர் அவதூறுக்கான விடையை நாமாகவே புரிந்துகொள்ளவைக்கிறார்.

*

ரிக்வேதத்தில் மிகவும் உயர்வாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியானது இன்றைய கக்கர்-ஹக்ரா நதிதான் என்பதை லூயி தெ செயிண்ட் மார்த்தான், சி.எஃப்.ஒல்தாம் என்ற சர்ஜன் மேஜர், அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் (இந்திய அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்), லூயி ரெனேயு என பலரும் தங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்த நதி இமய மலையில் ஷிவாலிக் தொடரில் கட்ச் ராண் பகுதியில் சென்று கலக்கிறது (ரிக் வேதத்தில் சரஸ்வதி நதி மலையில் ஆரம்பித்துக் கடலில் கலப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது). லூயி ரெனே சரஸ்வதி மறைந்ததாகச் சொல்லப்படும் விநாசனம் என்ற இடத்தையும் அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு ஒரு நதி ஓடியதாகவும் அது வறண்டதால் அந்தப் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது என்றும் சொல்லும் செவி வழிக் கதைகளையும் இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

20-ம் நூற்றாண்டில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் சரஸ்வதி நதியின் படுகை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இன்று முழுவதும் வறண்டு கிடக்கும் அந்தப் பாலை நிலத்தில் நதி ஓடிய தடத்தில் மட்டும் ஈரப்பதம் மிகுதியாக இருப்பது புகைப்படங்களில் தெரியவந்தது. அந்த வழித்தடத்தில் கிணறுகள் தோண்டப்பட்டபோது மிகவும் நல்ல தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதுவும் இந்தியாவின் பிற பகுதிகளில் 100-200 அடி தோண்டியும் நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் நிலையில் கக்கர் ஹக்ரா நதி ஓடிய படுகையில் 20-30 மீட்டர் ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. இவையெல்லாம் முன்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான நதி இங்கு பாய்ந்திருக்கிறது என்பதையே உணர்த்துகின்றன. சட்லெஜ் நதியை கக்கர் நதியுடன் இணைத்த ஏராளமான குறு நதிகளின் வலைப்பின்னலும் அந்த புகைப்படத்தில் தெரியவந்தது.

இதற்கு அடுத்ததாக மிஷல் தனினோ சரஸ்வதி நதியின் மறைவுக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஹரப்பா-மொஹஞ்ஜோதாரோ பகுதியில் ஏற்பட்ட வறட்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார். பொ.யு.மு. இரண்டாம் ஆயிரமாண்டு வாக்கில் உலகில் எகிப்து, துருக்கி, மெசபடோமியா (அக்காடிய சாம்ராஜ்ஜியத்தின் முடிவைக் கொண்டுவந்தது), ஆஃப்ரிக்காவில் பல இடங்கள், சீனா, வட அமெரிக்கா போன்ற பல இடங்களும் இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த வறட்சிதான் சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக்காரணம் என்று சொல்வது ‘எளியதொரு’ பதிலாக இருக்கலாம். ஆனால், அதை முழுவதாகப் புறக்கணிப்பது தவறாகவே இருக்கும் என்கிறார்.

அடுத்ததாக, வட மேற்கு இந்தியாவில் நடக்கும் பூகம்பங்களின் வரலாற்றைக் குறிப்பிட்டுவிட்டு சரஸ்வதி நதி வறண்டதற்கு பூகம்பத்தின் பின் விளைவுகள் காரணமாக இருக்கலாம் என்றொரு காரணத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி முழுவதும் கிட்டத்தட்ட சமதளமானது. சிறிய அளவுக்கு மேடு அல்லது பள்ளம் ஏற்பட்டாலும் நதியின் திசையானது முற்றிலும் மாறிவிடும். ஆரம்பத்தில் கக்கர் ஹக்ரா நதிக்கு அதாவது சரஸ்வதி நதிக்கு சட்லெஜ் மற்றும் யமுனை நதியில் இருந்து நீர் கிடைத்துவந்திருக்கிறது. பூகம்பத்தினால் யமுனையில் இருந்து வந்த நீர் திசை மாற்றப்பட்டுவிட்டது. இதனால் கக்கர்-ஹக்ரா நதியின் நீர் வரத்து குறைந்துவிட்டது.

அடுத்ததாக, சிந்து சமவெளி மக்களில் நகரங்கள், கோட்டைகள், தெருக்கள், இன்னபிற கட்டுமானங்களைப் பார்க்கும்போது அவர்கள் சுட்ட செங்கல்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதற்கான சூளைகளுக்குத் தேவைப்பட்டிருக்கும் மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுபார்க்கும்போது அந்தப் பகுதியின் மழை குறைவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கும்.
இப்படியான காரணங்களினால் கக்கர் ஹக்ரா நதி மெள்ள வறண்டு போய்விட்டிருக்கலாம் என்று ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக, சிந்து சமவெளி நாகரிகம் அடியோடு மறைந்துபோய்விட்டது என்பதுதான் ஆரிய ஆக்கிரமிப்பு கோட்பாட்டாளர்களின் முக்கியமான வாதம். கங்கைச் சமவெளியில் முதல் ஆயிரமாண்டில் ஆரம்பித்த நாகரிகத்தில் அதன் தடயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியே கங்கைச் சமவெளி நாகரிகம் என்பதை நிரூபித்திருக்கிறார். அதாவது சரஸ்வதியின் மறு அவதாரம் கங்கை. சிந்து சமவெளி நாகரிகத்தின் மறு அவதாரம் கங்கைச் சமவெளி வேத நாகரிகம்.

சிந்து சமவெளியில் கிடைத்திருக்கும் மண் பாண்டங்களில் காளை உருவம் பிரதானமாக பொறிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் அக்னி தேவனில் ஆரம்பித்து சூரியன் வரை அனைத்து கடவுள்களும் காளையுடனே ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள். அந்தவகையில் ஆரியர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புக்குரிய விலங்காக காளையே இருந்திருப்பது தெரியவருகிறது, குதிரை அல்ல.

அதுபோல் கட்டடங்களின் கட்டுமானத்திலும் இரண்டுக்கும் இடையில் மிகப் பெரிய ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டு கலாசாரங்களிலும் 5:4 என்ற விகிதம் பிரதானமாக இருக்கிறது. 1.9 மீட்டர் என்ற அலகின் மடங்கிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன. ‘குந்துமணி’ என்ற ஒரு மிகச் சிறிய விதையை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் அர்த்த சாஸ்திரக் காலத்தில் மற்ற எடைகளின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. இதே மதிப்புகள் ஹரப்பா காலத்தில் பின்பற்றப்பட்ட எடைகளோடு வெகுவாகப் பொருந்துகின்றன என்று அளவியல் நிபுணர் (Metrologist) வி.பி.மெய்ன்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மக்கள் தினமும் உபயோகிக்கும் பொருட்களும் பெரிதும் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வந்திருப்பதாக பி.பி.லால் சுட்டிக்காட்டியுள்ளார். குளியல் பொருட்கள், எண்ணெய் விளக்கு, கமண்டலம், மர விளிம்புகொண்ட சிலேட்டுகள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விளையாட்டுப் பொருட்களிலும் ஹரப்பா குழந்தைகள் உபயோகித்த கிலுகிலுப்பை, ஊதல், பம்பரம், தட்டையான மண் தட்டுகள் ஆகியவற்றை வைத்துத்தான் இன்றைய (அல்லது மிக சமீப காலம் வரையிலும்) வட இந்திய குழந்தைகளும் விளையாடுகின்றனர். ஹரப்பாவாசிகளால் தங்கள் குழந்தைகளை மகிழ்விக்க செய்து தரப்பட்ட பொம்மை வண்டிகள் கங்கை சமவெளிப்பிரதேசத்தில் பல இடங்களில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் பெண்கள் அணியும் வளையல்கள், நடு வகிட்டில் இட்டுக் கொள்ளும் குங்குமம் என பல விஷயங்களுக்கான வேர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுகின்றன. ஸ்வஸ்திக் சின்னம், முடிவில்லா முடிச்சு (ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் போன்ற வடிவம்), ஆதி சிவனை (பசுபதி) நினைவுபடுத்துவது போன்ற உருவம், யோக நிலையில் இருக்கும் உருவம் என சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படும் பல விஷயங்கள் வேத கலாசாரத்திலும் தொடர்ந்து காணப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்வதானால், சிந்து நதி நாகரிகத்துக்கும் பிந்தைய சரித்திரக் கால நாகரிகங்களுக்கும் இடையே நிறையத் தொடர்புகள் இருக்கின்றன. பழைய விவசாய முறைகள், மேய்ச்சல் வழிமுறைகள் தொடர்கின்றன; மண்பாண்டத் தயாரிப்பு முறைகள் பெரிய அளவுக்கு மாறவில்லை. நகைகள், வேறு விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஒரே மாதிரியான செயல்முறைகளும் வடிவமைப்புகளும்தான் பின்பற்றப்படுகின்றன… (ஆகவே) சரித்திரத்துக்கு முந்தைய காலத்தையும் சரித்திரக் காலத்தையும் பிரிக்கும் ‘இருண்ட காலம்’ என்று ஒன்று உண்மையில் இல்லை என்று அகழ்வாராய்ச்சியாளரும் மானுடவியலாளருமான ஜே.எம். கெனோயர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் மிஷல் தனினோ முன்வைத்திருக்கும் ஆய்வுமுடிவுகளை இப்படித் தொகுக்கலாம்: இன்று வறண்டு கிடக்கும் கக்கர்-ஹக்ராதான் வேத கால சரஸ்வதி நதி; அந்த சரஸ்வதி நதிக்கரையில்தான் சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%க்கு மேற்பட்ட இடங்கள் இருந்திருக்கின்றன; பொ.யு.மு. 1900 வாக்கில் சரஸ்வதி நதி வறண்டுவிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சிந்து சமவெளி நகரமயமாக்க காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. பிற்கால ஹரப்பாவினர் கிராமப் பகுதிகளுக்குத் திரும்பியிருக்கிறார்கள். மெள்ள தங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு கங்கைச் சமவெளியில் புதியதொரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். கலாசாரத்தில் ஆரம்பித்து லவுகீக அம்சங்கள் வரை அனைத்திலும் இரு சமவெளி நாகரிகங்களுக்கும் இடையில் தெளிவான ஒற்றுமைகள் இருக்கின்றன. தங்களை வாழ வைத்த சரஸ்வதியின் நினைவைப் போற்றும் வகையில் அதை கங்கை, யமுனை, நதிகளோடு சூட்சும வடிவில் கலந்ததாகச் சொல்லி திரிவேணி சங்கமம் என்ற ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்திருக்கிறார்கள். சரஸ்வதி நதியின் அனைத்து பெருமைகளையும் கங்கைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார்கள்.

மிஷல் தனினோ மேலே சொல்லப்பட்டிருக்கும் தீர்மானங்களை மிக விரிவாகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார். சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.

 

மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி வந்ததாகச் சொல்லப்படும் அந்த ஆரியர்கள் அகழ்வாராய்ச்சியின் எந்தவொரு வரையறைக்கும் சிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். ஆரியர்கள் இந்த வழியாக வந்தனர்; இது ஆரியர்கள் உபயோகித்த வாள் அல்லது கோப்பை என்று சொல்லுமளவுக்கு எந்தவொரு மண்பாண்டமோ வேறு பொருளோ இதுவரை கிடைக்கவில்லை. – Jean Casal

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுவது பொ.யு.மு. 1500-1000 காலகட்டத்தில்தான். சிந்து சமவெளி நாகரிகம் சிதைவுற்றதோ பொ.யு.மு. 1900 வாக்கில். அதாவது ஆரியர்கள் வருவதற்கு சுமார் 400 வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒரு நிகழ்வுக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது!

ஆரியப் படையெடுப்பு எனும் கொலை வெறி கொண்ட காளை வரலாற்றின் குறுக்குச் சட்டத்துக்கு அப்பால் உறுமியபடி அலை பாய்ந்துகொண்டிருக்கிறது. பிரிவினையின் போதை ஏற்றப்பட்ட அதன் கோரமான விழிகள் பேரழிவின் கிலியை நமக்குள் விதைக்கின்றன. குறுகிய அரசியலின் வாடி வாசல் மெள்ளத் திறக்கப்படும்போது,அந்த வெறுப்பின் காளை மூர்க்கத்தனமாகப் பாய்ந்து வருகிறது. உண்மையின் நிலத்தில் காலூன்றியபடி நேருக்கு நேராக நின்று ஒருவர், அதன் ஒற்றைச் சார்பு தகவல்களின் கொம்புகளைப் பிடித்து மடக்கி, ஆதாரபூர்வமான தரவுகளின் காலால் போலி வாதங்களின் கழுத்தில் ஓங்கி மிதித்து அடக்குகிறார். கழுத்து மடங்கிய காளை தோல்வியின் நுரை தள்ளியபடி கண்கள் மலங்கக் கீழே விழுகிறது.

போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. வெற்றி ஊர்ஜிதமாகிவிட்டது. தோல்வியை நேர்மையாக ஒப்புக் கொள்வதும் அடங்கா காளையை வளர்த்தவனுக்கு அழகுதான்.

0

B.R. மகாதேவன்

(மிஷல் தனினோ ஆங்கிலத்தில் எழுதி பெங்குவின் வெளியீடாக வந்திருந்த Saraswati: The Lost River என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது. மொழிபெயர்த்திருப்பவர், வை. கிருஷ்ணமூர்த்தி).

லோகாயுக்தாவும் மாநிலங்கள் உரிமையும்

லோக் ஆயுக்தாவைக் கொண்டு வருவதில் கட்சிகளின் சாயம் வெளுத்தது என்ற தலைப்பில் தினமலரில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான செய்திகள் எப்போதும் மக்களை உடனே கவர்ந்துவிடுகின்றன. எந்தெந்த கட்சிகள் லோகாயுக்தாவை எதிர்த்தன, ஏன் எதிர்த்தன என்று விளக்காமல்,  லோகாயுக்தா வந்தால் ஆபத்து என்று அவை அஞ்சியதாகவும் ஆகவே அதை வரவிடாமல் தடுத்துவிட்டதாகவும் இவர்கள் கதைக்கிறார்கள். ஒருவிதத்தில் அது சரிதான் என்றாலும், குறைந்தபட்சம் மாநிலக் கட்சிகள் எதிர்ப்பதில் உள்ள உள் அர்த்தங்களை அறியவேண்டியது அவசியமாகிறது.

உண்மையில், லோக்பால், லோகாயுக்தா ஆகியவற்றால் பெரிய அளவில் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இந்த நாட்டில் தேர்தல் ஆணையமும் நீதி மன்றங்களும் சில நேரங்களில் மட்டுமே விழிப்புடன் உள்ளன. அண்ணா ஹசாரேவின் போராட்டத்திலும் ஜனநாயக மறுப்புத்தன்மை உள்ளது. மேலும் அவர்கள் கோருகிற லோக்பால் அதிகார மையத்துக்கு வழி வகுக்கும். ஊழல் என்பதே எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கிருந்து ஆரம்பிக்கிறது. அப்படி இருக்கையில், லோக்பாலுக்கு ஹசாரே அணியினர் சொல்லும் வழிவகைகள் அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்கச் செய்யும் முயற்சியே. அது மேலும் மேலும் ஊழலை வளர்க்கும். ஒழிக்க உதவாது.

இட ஒதுக்கீடு உள்பட பல விடயங்களில் ஹசாரே குழுவினர் ஒதுங்கி வேடிக்கை பார்த்ததை நாடறியும். ஹசாரே குழுவினர் கோருகிற லோகாயுக்தாவுக்கும், மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்யும் லோகாயுக்தாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலையில் எங்களுடைய லோக்பாலை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்கிற ஹசாரே குழுவினரின் கருத்து விமர்சனத்துக்கு உரியது.

லோக் ஆயுக்தா என்ற விவகாரத்தை வைத்தே திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக மற்றும் இன்ன பிற மாநிலக் கட்சிகள், ஏன் பாஜக உட்பட பல கட்சிகள் ராஜ்ய சபாவில், லோக்பால் தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்தது நினைவிருக்கலாம். இரு தினங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப் பட்டது. அதில் மாநிலக் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தீவிரமாகவே காட்டியது.அது வரவேற்கப் படவேண்டியதே!.

லோகாயுக்தா என்பது மாநில அரசின் நிர்வாகத்தில் லஞ்சத்தைத் தடுப்பதற்கான விதிமுறைகளைக் கொண்டது. ஆனால் அதை அமல்படுத்தினால் மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக மாறிவிடும் என்று மாநிலக் கட்சிகள் கூச்சலிடுகின்றன. ஆனால், அரசியல் சட்டப் பிரிவு 253 விதிப்படி, அவ்வாறு செய்வதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் சட்டப் பிரிவு 252 விதிப்படி, லோகாயுக்தாவை நிறைவேற்றலாம் என்று பாஜக உள்ளிட்ட சில எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன.

சட்டப் பிரிவு 253 ன் கீழ், சர்வதேச சட்டங்களை நாடு முழுவதும் நிறைவேற்றலாம் என்கிறது மத்திய அரசு. அதற்கு மத்திய அரசு சொல்கிற காரணம் என்னவென்றால், லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வேண்டிய சட்டத்தை, ஐ. நா. வில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்ததத்தின் அடிப்படையில் கொண்டுவரலாம் என்பதே. ஆனால், ஐ. நாவில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கும் லோக் ஆயுக்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சட்டப் பிரிவு 252 விதிப்படி, இரண்டுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அரசு சில பொதுவான சட்டங்களை மாநில அரசுகளுக்காக நிறைவேற்றலாம் என்கிறது. அவ்வாறு உருவாக்கப்படுகிற சட்டங்களை, அம்மாநில அரசுகள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறது.

சட்ட விதி 253 உடன் ஒப்பிடும் போது 252 பரவாயில்லை. சட்ட விதி 253 மற்றும் 252 இரண்டையுமே எந்த மாநிலக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. சட்ட விதி 253 ஐ நாம் இப்போது அனுமதித்தால், இன்னும் பல சட்டங்களை மத்திய அரசு கையாள முற்படும். யார் சட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன என்ற கேள்வியே பெரும்பாலும் எல்லோராலும் முன்வைக்கப்படும். அதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளலாகாது. ஏனெனில், 356 சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசுகளைக் கலைப்பது, பஞ்சாயத்து ராஜ் என பல விடயங்களை தன் கைக்குள் வைத்திருந்த மத்திய அரசு இன்னும் பல சட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கும். அது மாநிலக் கல்வி திட்டத்தில் இருக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் நுட்பக் கல்லூரிகள் மத்திய அரசு ஒப்புதலோடு திறக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படலாம். காவல் துறை, மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று புதுப்புது சட்டங்களை உருவாக்கலாம்.

சட்ட விதி 252 சரி என்றால் மாநில அரசுகள் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவரவோ, நிராகரிக்கவோ முடியாமல் போகலாம். சில நேரங்களில் ஒருவேளை மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லாதபோது, எந்த மாற்றத்தையும் மாநில அரசால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டுமானால் மீண்டும் மத்திய அரசின் ஒப்புதலோடுதான் கொண்டு வர இயலும். ஒருவேளை இரு அரசுகளும் எதிரெதிர் அணியில் இருந்தால், மாநில அரசால் எதுவும் செய்ய இயலாத ஒரு சூழ்நிலை உருவாகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் மாநில அரசின் உரிமைகளைத் தன் கையில் வைத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவ்வாறிருந்தால் மட்டுமே, பல மாநில அரசுகள் எதிர்காலத்தில் தன் கட்டுக்குள் வரும் என்று கணக்குப் போடுகிறது. பாஜக, காங்கிரஸ் போல அரசாணையில் அமர்வதில் பல சிக்கல்கள் இருப்பதால், அது சற்று நழுவி சட்ட விதி 252 ஐ கையில் எடுக்கிறது. இவ்விடயத்தில் மாநில அரசுகள் ஒருபோதும் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. தங்களுக்குத் தேவையான சட்டங்களைத் தாங்களே உருவாக்க முயல்வதில் தவறேதும் இல்லை.

கூட்டாட்சி தத்துவம் இருப்பதால் காங்கிரஸ் இன்று சற்றேனும் அடக்கி வாசிக்கிறது. ஹசாரே அணியினர் தங்களுடைய முக்கியக் கோரிக்கையாக லோகாயுக்தாவை லோக்பால் சட்டத்தோடு கொண்டு வர வேண்டும் என்று அர்த்தமில்லாமல் கோருவது வேடிக்கையே! ஹசாரே குழுவினரும் தங்கள் பங்குக்கு மற்ற கட்சிகளை அதிகம் பழிக்காமல் எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ் என்று தங்கள் அரசியலை செவ்வனே நகர்த்தும்.

எது எப்படியோ, மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் இன்று எந்த தேசியக் கட்சியும் ஆட்சி செய்ய இயலாது என்பதால், லோகாயுக்தாவைக் கொண்டு வருவது எளிதல்ல. மத்திய அரசு சட்டங்களின் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற முற்படுமேயானால், ஒருநாள் அது இந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்பதில் ஐயமில்லை. பாரதத்தின் நலனுக்கும் அது உகந்தது அல்ல.

0

லஷ்மண பெருமாள்

சமூகவியல் : ஜெயமோகனும் மக்கள் பங்கேற்பு முறைகளும்

‘ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாகவும் பூச்சி, புழுக்களை இரையாக உண்டுவாழும் பொத்தை என்ற நன்னீர்மீன் பறவைகளாலோ பிற ஜீவராசிகளாலோ தனக்கான இரை பறிபோய்விடும் என்று தெரிந்தால், அந்நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டு எதையும் பார்க்கவியலாமல் செய்துவிடுமாம். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளை ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயரால் கூப்பிடுவதையும், கலக்குவது என்பது சிலருக்கு, குறிப்பாக அரசதிகார வர்க்கத்திற்கு ராஜதந்திர உத்தியெனவும், கலங்கலிலேயே வாழும் உயிரினங்கள் அக்கலங்கிய சூழலில் எப்படி நிலைத்திருக்க கற்றுக்கொண்டிருக்கின்றன…’ என்ற முன்னுரையுடன், கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றிய தனது மதிப்புரையைத் தொடங்குகிறார்  ஜெயமோகன்.

தமிழ் மற்றும் இந்திய இலக்கியங்களில், அதிகார வர்க்கத்தின்  மனோபாவம் எப்படியெல்லாம் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற சுருக்கமான இலக்கிய  வரலாற்றுடன் நின்றுவிடாமல், அதிகாரவர்க்கத்தைப் பற்றி இதுவரை எழுதப்படாமல் விட்டதையெல்லாம் ஈடுகட்டியும், இனிமேல் எழுதப்படுபவற்றை புரிந்து கொள்ளும்படியும், அதிகாரவர்க்கத்தின் ஆளுமை, ஆணவம், அசட்டுத்தனத்தையெல்லாம் ‘பொத்தைக்கலக்கி’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளடக்கியிருந்தார் ஜெயமோகன். அதிகாரவர்க்கதைப் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கும் எதையும் நான் படித்திருக்கவில்லையெனினும், ஜெயமோகனின் எழுத்திலிருந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தமைக்கு  என்னுடைய கள அனுபவமே கைகொடுத்தது.

பொத்தைக்கலக்கி என்ற ஒரு வார்த்தை, என்னுடைய வாசிப்பனுபவங்களையும் களப்பணி அனுபவங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மீண்டும் கண்டடைய  உதவியது. பொத்தைக்கலக்கிகளின் கலக்கல் விதிமுறைகளை, அதன் விளைவுகளை என் மனம் தன்னிச்சையாகத் தொகுக்க ஆரம்பித்தது. களப்பணியில் நாங்கள் கையாண்ட பங்கேற்புத் திறனாய்வு (Participatory Appraisals) முறைகளெல்லாம், பொத்தைக் கலக்கிகளுக்கெதிரான எதிர்வினையாக்கமே என்றுகூடப் பட்டது.

‘சென்ற இருபதாண்டு காலத்தில் தான் சார்ந்த துறையின், அத்துறை ஆளும் மக்களின் அடித்தளம் பற்றிய புரிதல்கொண்ட ஓர் உயரதிகாரியைக்கூட நான் சந்தித்ததில்லை’ என்ற ஜெயமோகனின் அதிர்ச்சியே நம்மனைவரின் அதிர்ச்சியுமாகும். ‘உயரதிகாரிகள் அனைவருமே ஒரே வார்ப்புதான். தாங்கள் கொண்டுள்ள அதிகாரம் பற்றிய உள்ளார்ந்த குதூகலமும், தனக்கு மேலே உள்ள அதிகாரம் பற்றிய பதற்றமும் ஒரேசமயம் கொண்டவர்கள். தான் ஏறி அமர்ந்துள்ள யானை என்பது பெருங்காட்டைத் தன்னுள் கொண்டுள்ள மிருகராஜன் என அறியாமல் தன் துரட்டிக்கம்பிலும் கட்டளையிலும் இயங்கும் இயந்திரம் எனக் கற்பனை செய்துகொள்ளும் அசட்டுப் பாகன்களைப் போன்றவர்கள் அவர்கள்’ என்று ஜெயமோகன் சொல்லும்போது, நம்முடைய அனுபவங்களையெல்லாம் அவர் வார்த்தை வடிவில் கட்டமைக்கும்போது, நமக்கான வார்த்தைகளைத் தந்தமைக்காக, அவரை நன்றியுடன் பார்க்கப், படிக்கத் தோன்றுகிறது.

பெரும்பாலும் நம் உயரதிகாரிகள் முற்றிலும் செவியற்றவர்களாகவோ, கேட்கும் திறன் குறைந்தவர்களாகவோ, Selective Amnesia என்பதுமாதிரி Selective Hearing Loss என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால், ‘ஒரு எளிய நிதர்சனத்தைக்கூட அவர்களிடம் புரியச்செய்துவிட முடியாது. ஆனால் நம்பவேமுடியாத அளவுக்குத் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தங்களை அறிவுஜீவிகள் என்றும் ராஜதந்திரிகள் என்றும் கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள்’ என்று ஜெயமோகன் தொடரும்போது, அது ஜெயமோகனின் வார்த்தைகளாக  நின்றுவிடாமல், ஒட்டுமொத்த சமூக அனுபவத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்து விடுகிறது.

‘அதிகார அமைப்பில் உள்ள எவருக்கும் பிரச்னையின் விளைநிலம் பற்றியோ, அதன் உள்ளோட்டங்கள் பற்றியோ எதுவுமே தெரியாவிட்டாலும், கலக்குவதை மட்டும் தொடர்ந்து செய்கின்றார்கள். எந்த நிபுணராலும் ஊகித்துவிட முடியாத அவர்களின் கலக்கல் முறைகள் சிக்கலானவை. ஒன்றில் இருந்து ஒன்றாக பிரிந்து பெரிய வலையாகி நம்மைச் சூழ்ந்துகொண்டு முற்றிலும் செயலற்றதாக ஆக்கிவிடக்கூடியவை’ என்று ஜெயமோகன் இரண்டே வரிகளில் நம்மில் பலரின் பல்லாண்டு அனுபவங்களை வடித்தெடுத்து விடுகின்றார்.

செயலற்றதாக ஆகிவிட்ட குடிமைச் சமூகத்தை, செயலூக்கம் பெற்றதாக ஆக்க, அதிகாரிகளின் கண்ணோட்டத்தில் அல்ல, இரையின் கண்ணோட்டத்தில் பார்க்க எத்தனையோ முறைகள் உருவாகி வடிவெடுத்துள்ளன. எப்படித்தான் கலக்கியெடுத்தாலும், அந்தக் கலங்கலிலும் தெளிவாகப் பார்க்க அம்முறைகள் (பங்கேற்பு ஊரகத் திறனாய்வு, மற்றும் அதைச் சார்ந்த பலப்பல நுண் உத்திகள்) நடைமுறையில் உதவினாலும், இன்னும் வேகமாகக் கலக்கி எல்லோரையும் மூச்சுத் திணற வைப்பதில் அதிகார வர்க்கத்துக்கு இருக்கும் திறமையே அலாதியானதுதான்.

அவர்கள் விதவிதமாகக் கலக்குகிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் ‘ராஜகலக்கல்’. இருந்தாலும் அவர்கள் ஒரு வகையில் பாவம்தான். யாராலும் புரிந்து கொள்ளப்படாது என்று நினைத்து அவர்கள் கலக்கும்போது, அந்தக் கலங்கல்களில் அவர்களே மறைந்தும், கரைந்தும், மூச்சுத்திணறிப் போவதும் மிகப்பெரிய  துரதிருஷ்டம்தானே!

பங்கேற்பு ஊரகத் திறனாய்வில், சப்பாத்தி வரைபடம் (Venn Diagram) என்று ஒரு முறையுள்ளது. ஓர் ஊரோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவை செய்யும் பணிகள், அதன் முக்கியத்துவம் பற்றி, மக்களின் மதிப்பீடுகளை அவர்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையில் அறிய உதவும் ஓர் உத்தி. தங்கள் ஊர் சம்பந்தப்பட்டதென அவர்கள் பல அரசு நிறுவனங்களை அடையாளப்படுத்தினாலும், 90 சதவீத கிராமங்களில், ‘கவர்ன்மெண்ட் மசுரு எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு: ஒன்னுங் கிடையாது’ என்றுதான் ஆரம்பிப்பார்கள். அவர்களிடம் மேலும் மேலும் உரையாடும் போதுதான் தெரியவரும் ‘கவர்ன்மெண்ட் மசுரு’ அவர்களுக்கு என்னென்னமோ செய்திருந்தாலும், அதிகாரவர்க்கம்  கலக்கிய கலக்கலில், அரசே கரைந்தும், மறைந்தும் போய்விட்டதென்பதை. ஓர் அரசு கரைவதும், மறைவதும் தவறுகளை, திறமையின்மையை மறைக்க வேண்டுமானால் உதவியாயிருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமான சமூக மாற்றுருவாக்கத்திற்கு உதவாது.

ஒரு சின்ன உதாரணத்திலிருந்து ஆரம்பிப்போம். 200 வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம். ஐம்பத்தைந்து மாணவர்களைக்கொண்ட ஈராசிரியர் பள்ளி. ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் 45-50 ஆயிரம் ரூபாய் வரை, வருடத்துக்கு ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சம் வரை ஆகலாம். அப்பள்ளிகளை கண்காணிக்க ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் அதிகார அடுக்குகள். அதற்காக ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கு மேல் ஆகலாம். பள்ளிக் கட்டடங்கள், அதன் பராமரிப்பு, இலவச பாடப் புத்தகங்கள் என்று ஆகும் செலவுகள். ஈராசிரியர் பள்ளி நடத்தவே எட்டு லட்சத்துக்கு மேலாகலாம். இது தவிர, மதிய உணவு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், இலவச பஸ் பாஸ், விதவிதமான கல்வி உதவித்தொகை…. என்று நீள்கிறது பட்டியல். இவ்வளவு செய்தும் உள்ளூர்ப் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பாமல் கடன் வாங்கி, நன்கொடை அழுது,  வேன் ஏற்றி வெளியூர் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் என்றால், அது பெற்றோர்களின் அறியமையா, அல்லது கலங்கலின் அடையாளமாக அவர்கள் காணும் ஆரம்பப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளை மூச்சுத்திணற வைத்து விடுவார்களென்ற எச்சரிக்கை உணர்வா? பயமா?

அதே ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, இன்று வரை பல்வேறு பெயர்களில் கட்டப்பட்டு வரும் காலனி மற்றும் பிற வீட்டுவசதித் திட்டங்கள், இலவச மின்சாரம் – வீடுகளுக்கும், விவசாயத்துக்கும் வகை வகையான மானியங்கள், நலத் திட்டங்கள். ஊருக்கு மாதம் நான்கு லட்சத்துக்கு மேல், வருடத்துக்கு 50 லட்சம் வரை வரும் முதியோர் உதவித்தொகை, பொது வினியோகம், கூட்டுக்குடிநீர் திட்டம், பஞ்சாயத்து, தாலுகா, வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, ஆரம்ப சுகாதாரம்,  கால்நடைத்துறை பொதுப்பணித்துறை, காவல் என்று உள்ளடக்கிய 23 க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் – ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியாக இல்லாவிட்டாலும், பகுதி/வட்டார அளவில் செய்யப்படும் செலவில் அக்கிராமத்துக்கான பங்கு – உத்தேசமாகக் கணக்கிட்டாலும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வருடமும் கோடிகளைத் தாண்டும். இவ்வளவு செலவு செய்தும், ‘கவர்ன்மெண்ட் மசுரு’ எங்க ஊருக்கு என்ன செஞ்சிருக்கு என்று அவர்கள் கேட்டால், அரசாங்கம், அதிகார வர்க்கம் அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்? இதை எப்படி எடுத்துக் கொள்வது? வலது கையினால் கொடுப்பது இடது கைக்குக் தெரியலாகாது என்ற அதிகார வர்க்கத்தின் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்வதா? இல்லை, அவர்கள் கலக்கிய கலக்கலில் அவர்களே கரைந்து போய்விட்டார்கள் என்று எடுத்துக்கொள்வதா?

3000-5000 ரூபாய் சம்பளத்தில், நான்கைந்து கிராமங்களுக்குப் பொதுவாக ஓர் ஊழியரை மட்டும் பணியிலமர்த்தி, சில சில்லறைப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஓர் உப்புமா தொண்டுநிறுவனத்தைக் குறிப்பிட்டு, “அவர்கள் தாம் எங்களுக்கு எல்லாமும்” என்று சொல்லும்போது, பேரதிகாரமும், பெரும்பொருளுமிக்க அரசையே மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் அதிகார வர்க்கத்தின் கலக்கல் சாமர்த்தியத்தை யாரிடம் சொல்லி முட்டிக்கொள்ள?

மாதம் நூறிலிருந்து நூற்றைம்பது வரை சளைக்காமல் கேபிள்காரனுக்கு தரும் சாதாரண பொதுஜனங்கள், வீட்டு வரி தண்ணீர் வரியைக்கூட கட்டுவதற்கு சலிப்படைவது எதனால்? அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களை எடுத்துக்கொள்வோம். எம்எஸ், எம்டி போன்ற உயர்கல்வி படித்த மருத்துவர்களும் முறையாகப் பயிற்சி பெற்ற செவிலியர்களும் அங்கே இருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் சட்டென்று மக்களின் கவனத்துக்கு அவர்களால் வரமுடியவில்லை. “உடம்புக்கு முடியலேன்னா, மருந்துக் கடையில் போய் மருந்து வாங்கிச் சாப்பிடுவோம். ஒருக்க வாங்கிச் சாப்பிட்டாலே சரியாயிடும்”  என்று சொல்லும்போது, முறையாகப் படிக்காமலே மருந்துகளைக் கையாளும் ஒரு மருந்துக் கடைக்காரனின் செல்வாக்குக்கு முன்னால், அதிகார வர்க்கம் மட்டுமல்ல நாமனைவரும் மண்டியிடத்தான் வேண்டியுள்ளது.

இதையெல்லாம் அதிகார வர்க்கம் தனது அறியாமையால் செய்கிறதா என்றால் இல்லை. ஜெயமோகன்  சொல்வது மாதிரி அவர்கள் செவியற்றவர்களாகிவிட்டார்கள். கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்கள்.  அவர்கள் மட்டுமல்ல, நம் எல்லோருடைய கேட்கும் திறனையும் சற்று அதிகப்படுத்த உருவான செவுட்டு மிஷன்தான் பங்கேற்பு முறைகள். அதன் வலிமையே எந்த முன் அனுமானமும் இன்றி மக்கள் சொல்வதைக் கேட்பதுதான். பிரச்னைகளையும், தீர்வுகளையும் அவ்வாறுதான் கண்டறியமுடியும். மக்களைப் பேசவைக்கவேண்டும். அவர்கள் பேசுவதை அவர்களை வைத்தே தொகுக்க வைக்கவும் வேண்டும். அதற்கு சுவாரஸ்யமான முறைகளைக் கையாளவேண்டும்.

மக்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டிருந்தால், பல பிரச்னைகளுக்கு எளிமையான, சிக்கனமான தீர்வுகளைக் கையாண்டிருக்கமுடியும். பங்கேற்பு முறைகள் வலியுறுத்துவதும் அதைத்தான். பங்கேற்பு முறைகள் ஆய்வு முறைகள் மட்டுமல்ல. சிக்கல்களைப் புரிந்து கொள்ள உதவும் ஞானத் திறவுகோலும்கூட.

0

பேரா. எஸ்.ரெங்கசாமி

அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான்.

பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாளர்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே இலக்காக வைத்து விளையாடுகிறார் கோஹ்லி. இப்படியான வீரர்கள் அமைவது  எப்போதாவது நடக்கும் விஷயம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்தியாவுக்கு நடந்திருக்கிறது.

ஓரிரு போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது அல்லது முக்கியமான போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது என்றில்லாமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் நம்முடைய பெரிய வீரர்கள் அத்தனைபேரும் சொல்லிவைத்தது போல சொதப்பிய சமயத்தில், கோஹ்லி மட்டும் தன்னுடைய பங்களிப்பைக் கணிசமான அளவுக்குச் செய்தார். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று, அவர் அடித்த சதம். நெருக்கடியான நிரம்பிய சமயத்தில் அடித்த சதம் அது.

அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் அந்த இமாலய ரன் குவிப்பைச் சொல்லவேண்டும்.  அதற்குரிய அங்கீகாரமாகவே அவருக்குத் துணை கேப்டன் பதவியைக்க் கொடுத்துக் கௌரவப்படுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பைப் போட்டியின்போது மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி, துணை கேப்டன் பதவிக்குத் தான் பொருத்தமானவனே என்று நிரூபித்திருக்கிறார் விராத் கோஹ்லி. வாழ்த்துகள்.

கோஹ்லியின் சாதனைகளை முன்னணி வீரர்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை அத்தனை பேரும் பாராட்டுகிறார்கள். புகழ்கிறார்கள். கோஹ்லியைப் புகழ்வதில் ஊடகங்களுக்கு இடையே போட்டாபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. எல்லா ஊடகங்களும் இப்போது கோஹ்லி புராணத்தைத்தான் விடாமல் பாடிக்கொண்டிருக்கின்றன.

ஊடகங்கள் கோஹ்லியைக் கொண்டாடும் விதத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் மனத்துக்குள் மகிழ்ச்சிக்குப் பதிலாக அச்சமே உருவெடுக்கிறது. ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுவிட்ட சூழ்நிலையில் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை கோஹ்லியே இந்தியாவின் அடுத்த டிராவிட் என்ற தலைப்பில் ஒரு சேனல் நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் கருத்து சொல்வதற்கென்று பல முன்னாள் வீரர்கள் முன்னால் வந்து நிற்கின்றனர்.

அதற்குப் போட்டியாக இன்னொரு சேனல், ஒருநாள் போட்டிகளில் சச்சினின் இடத்தை கோஹ்லியால் மட்டுமே நிரப்பமுடியும் என்று அடித்துச் சொல்கிறது. அந்தக் கருத்தை வலியுறுத்த இன்னொரு முன்னாள் வீரர்கள் குழு ஆவேசமாக இயங்குகிறது. இன்னும் இன்னும் பல கருத்துகள். பல ஆசைகள். பல விருப்பங்கள்.

புதிய வீரர் ஒருவர் இப்படியான அதிரடிகளை நிகழ்த்திக்காட்டுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, பல காலகட்டங்களில் பல வீரர்கள் பல அதிரடிகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சாகசங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அசாரூதீன்,சச்சின் என்று பலரைச் சொல்லலாம்.

விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் ஊடகங்கள் அவர்களுடைய ஆட்டத்திறனையோ, சாதனைகளையோ, சாகசங்களையோ இந்த அளவுக்குத் தூக்கிப்பிடிக்கவில்லை. அந்த வீரர்கள் மீது அளவுக்கு அதிகமான விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை. அதேசமயம், அந்த வீரர்களைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாமலும் விட்டுவிடவில்லை. பேசினர். பாராட்டினர். அளவோடு நிறுத்திக் கொண்டனர்.

ஆனால் கோஹ்லி விஷயத்தில் ஊடகங்கள் எல்லை மீறிப் போகின்றன. செய்தி சானல்கள், விளையாட்டு சானல்கள், பொதுவான சானல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என்று எல்லாவற்றிலும் கோஹ்லியைப் பற்றியே பேசுகின்றன. ஊடகங்கள் கொடுக்கும் கூடுதல் முக்கியத்துவம் காரணமாக கோஹ்லி புராணம் இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே போகும்.

அது எங்கே சென்று முடியும்?

வர்த்தக நிறுவனத்தினர் அவருடைய வீட்டுவாசலில் அணிவகுக்கத் தொடங்குவர். என்னுடைய  நிறுவனத்து விளம்பரத்தில் நடி என்பார்கள். திடீரென கோஹ்லிக்கு ரெஸ்ட் கொடுப்பார்கள். ஆமாம்.. இத்தனை அடிக்கிற அவருக்கு ஓய்வு தேவைதான் என்பார்கள். ஓய்வு நேரத்தில் விளம்பரப் படப்பிடிப்பில் பிஸியாகிவிடுவார்.

விளம்பரங்கள் காரணமாகப் பணம் சேர்கிறது என்றால் அந்த இடத்தில் அரசியல் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் என்று இங்கே நான் சொல்லவருவது பெட்டிங், மேட்ச் பிக்சிங் போன்ற அம்சங்களை. மிகச்சிறப்பான முறையில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அசாருதீன், ஜடேஜா, ஹன்ஸி குரோனே போன்ற வீரர்கள் புக்கிகளின் பிடியில் சிக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. மிக இளம் வயது கொண்ட, சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்துள்ள கோஹ்லி போன்ற வீரர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற அதிகபட்ச ஊடக வெளிச்சம் நல்லதல்ல.

கோஹ்லி இப்போது சிறப்பாக ஆடுகிறார். வாழ்த்துகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.  ஒருவேளை, வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளிலோ அல்லது அடுத்துவரும் போட்டிகளிலோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் என்ன ஆகும்? இப்போது ஊதிவிடும் அத்தனை ஊடகங்களும் ஓவர்நைட்டில்  அவருக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த உதாரணம் சச்சின். அவருடைய தொண்ணூற்றி ஒன்பது சதங்களையும் கொண்டாடியவர்கள், நூறாவது சதத்தை அடிப்பதற்குக் கால அவகாசம் எடுத்துக்கொண்டபோது என்ன பேசினார்கள்? எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்ட்து ஒரு சேனல். ஒழுங்காக ஆடாத சச்சினை நீக்கும் அளவுக்கு தேர்வுக்குழுவின் முதுகெலும்பு வலுவாக இல்லையோ என்று கேலி செய்தது ஊடகம். நரம்பில்லா நாக்குகள் நாலும் பேசின. நூறாவது சதத்தை அடிப்பதற்குள் தனக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் பற்றி சமீபத்தில் சச்சினே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ஆகவே, ஊடகங்கள் இப்போது அளவுக்கு மீறி கோஹ்லியைப் பாராட்டுவதையும் புகழ்வதையும்  ஊக்கமருந்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது.  அவை அனைத்தும் அவர் மீது திணிக்கப்படும் நெருக்கடிகள். கொடுக்கப்படும் அழுத்தங்கள். அவை கோஹ்லியின் இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும். எல்லா போட்டிகளிலும்  அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  எழும்பும். இது எல்லோருக்கும், எப்போதும் சாத்தியமான விஷயமல்ல. இதன் காரணமாக, கோஹ்லிக்கு மெல்ல மெல்லப் பிரச்னைகள் ஏற்படும்.

இன்றைய நிலையில் கோஹ்லிக்கு உருவாகும் பிரச்னை இந்திய அணிக்கான பிரச்னை. ஆகவே, ஊடகங்கள் கோஹ்லியைத் துரத்தும் காரியத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க வேண்டும். அவருடைய ஆட்டத்தை, அவருடைய போக்கைக் கொஞ்சம் தள்ளியிருந்து அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டும். அதுதான் கோஹ்லிக்கு நல்லது. அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது. முக்கியமாக, இந்திய அணிக்கு!

0

தமிழ்

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி

மார்ச் 19, 2012 தேதியிட்ட அவுட்லுக் இதழில் I Singe The Body Electric என்ற தலைப்பில் மீனா கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முறைப்படி அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், சி.சரவணகார்த்திகேயன்.

அன்பின் விடுமுறை தினங்கள்

நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன்.

திருமணமான இரு மாதங்களில், மயக்கிப் பேசி என் கடவுச்சொற்களிடமிருந்து என்னைப் பிரித்திருந்தான். விரைவில் என் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே சுதந்தரத்துடன் எனது மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான். என்னுடைய கடவுச்சொல் உனக்கு எதற்கு எனக் கேட்டேன். என்னுடையது உன்னிடம் இருக்கிறதே என்றான். நான் அதைக் கேட்கவே இல்லையே என்றேன். நீ என்னை உண்மையாக‌க் காதலிக்கவில்லை என்றான். என்னை வைத்துக் கொள், என்னை வைத்துக் கொண்டிருப்பதற்காக‌ நான் உன்னை வைத்துக் கொள்வேன்: உடைமையாக்குதல் என்ற ஒற்றைக் கருத்து வெறியேறிய,‌ தனக்கு மட்டும் உரியதென‌ எண்ணும்‌ பித்துநிலை மனிதனின் சிந்தனைகள்.

காதல் என்பது அடிமை சகாப்த அதிகாரமாகி விடும் போது எந்த ரகசியமும் சாத்தியமில்லை. ஒரு வாரம் பொது மின்னஞ்சல் முகவரி என்ற எண்ணத்தை முன்வைத்தான், அடுத்த வாரம் அது செயல்படுத்தப்பட்டது. அவன் அந்தரங்க எல்லைகளை மறையச் செய்தான். நான் என் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். சுத்திகரிக்கும் பணியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் 25,000 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டன. நான் வரலாறற்ற பெண்ணானேன்.

விரைவில் என் காதலற்ற கல்யாணத்தில் கலவியானது சந்தைப் பொருளாதார மாதிரியைப் படியெடுக்கத் தொடங்கியது: கேட்பு அவனது, அளிப்பு எனது. என் எதிர்வினை என்ன என்பது பற்றி நினைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கு ஏற்பட்டது குறித்து யோசித்ததில்லை. என் வலியிலிருந்து தான் அவன் சந்தோஷத்தை எடுத்துக் கொள்கிறான் என்பது பற்றி எண்ணியதில்லை. சிதறிய இதயத்தோடும், இச்சையற்ற மனதோடும் எனக்குள்ளிருந்த பெண் மேற்கூரையோடு உரையாடிக் கொண்டிருந்தாள், திரைச்சீலைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அத்தனை சேதாரங்களுடன் அவள் சந்தோஷத்தைத் தேடியது இயற்கையின் சுடர்மிகு சக்திகளில்: சுரீர் சூரியஒளி, திடீர் மழைத்துளி. ரகசியமாய், அவள் அடங்க மறுத்தாள்.

முதன்முறை அவன் என்னை அடித்த போது, நான் திருப்பி அடித்தது நினைவிருக்கிறது. பதிலடி என்பது சரிசமமான போட்டியாளர்களுக்குத்தான் பொருந்தும், ஆனால் நாற்பத்தைந்து கிலோ குறைந்த எடை கொண்ட பெண் வேறு மார்க்கங்கள் சிந்திக்க வேண்டும் என அனுபவம் கற்றுத் தந்தது. அது வேறு விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. எது வேண்டுமானாலும் தண்டனைக் கருவியாக மாறலாம் என்பதை உணர்ந்தேன்: கணிப்பொறியின் மின்கம்பிகள், தோலினாலான பெல்ட்டுகள், ஒருகாலத்தில் நான் உலகின் அத்தனை காதலுடனும் பற்றியிருந்த அவனது வெறும் கைகள். அவனது சொற்கள் அந்த‌ அடிகளை மேலும் கூர்மையாக்கின‌. நான் வேகமாக அடித்தால் உன் மூளை சிதறி விடும் என்பான். அவனது ஒவ்வோர் அடியும் என்னைத் தகர்த்தன‌. ஒருமுறை அவன் என் கழுத்தை நெரித்த போது அடைத்த தொண்டையின் மௌனத்தை உள்ளீர்த்துக் கொண்டேன்.

நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான். அவன் எப்போதும் தன்னை ஒழுக்கத்தின் உயர்நிலையில் இருத்திக் கொண்டு அதீத பொதுமைப்படுத்தல்களை அடுக்குவான்: இலக்கிய விழாக்கள் விபச்சார விடுதிகள், பெண் எழுத்தாளர்கள் வேசிகள், என் கவிதைகள் பாலியலைத் தூண்டுபவை. அவனது கம்யூனிச அடையாளங்கள் கலைந்தன. நான் பெண்ணியவாதியாக இருப்பதைக் குற்றமென்றான். வர்க்க எதிரிகளுக்கென நிர்ணயிக்கப்படுகிற‌ வெறுப்போடு அவன் என்னை நடத்தினான்.

சலிப்படைந்த‌ இல்லாளாக, வீட்டு வன்முறைக்கு வண்ணக் குறியீடுகள் இட்டேன்: என் தேகத்தில் விழும் அடிகளின் புதுச்சிவப்பு, உறைந்த ரத்தத்தின் கறுப்பு நிறம், குணமான காயங்களின் மங்கிய ஊதா… வதை, வருத்தம் நிரம்பிய மன்னிப்பு, மேலும் நிறைய வதை என்ற இந்த‌ முடிவில்லா சுழற்சியிலிருந்து விடுதலையே கிடையாது என்று தோன்றியது. ஒரு நாள் நான் பெல்ட்டால் அடி வாங்கிய போது அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றியது. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவேன் என அவனை மிரட்டினேன். என் கவிதையிலிருந்து ஒரு வரியைப் படித்த பின் சீருடை அணிந்த எவனும் என்னை மதிக்க மாட்டான் என்று பதிலளித்தான். யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் போகச் சொல்லி சவால் விட்டான். அந்தச் சின்ன உலகத்தில் எனக்கு நண்பர்களே இல்லை – அவன் உலகத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவன் பணிச் சகாக்கள், அவன் நடந்த பூமியை வழிபடும் அவன் மாணவர்கள்… எனக்கு யாரை நம்புவது எனத் தெரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்னை அவனிடம் மறுபடி ஒப்படைக்கக் கூடியவர்கள் தாம். நடு இரவில் அருகிலிருந்த கன்னி மடத்துக்கு ஓடிப் போய் தங்கிக் கொள்ள விரும்பினேன். நான் புரிந்து கொள்ளப் படுவேனா? இது சரியாக வருமா? என் மொழி பேசாத ஒரு நகரத்தில், மதுக்கூடங்க‌ளில் இளம்பெண்கள் அடிக்கப்படும் ஒரு நகரத்தில் நான் எவ்வளவு தூரம் ஓடி விட முடியும்?

இனிமேல் அவனுடன் வாழ முடியாது என்பதை அவனிடம் சொன்னேன். நான் அவனுக்குக் கொடுத்த கடைசி வாய்ப்புகளின் எண்ணிக்கையே மறந்து போயிற்று என்பதை அவனிடம் சொன்னேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்த போது அவன் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் தன் தசையைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டதைக் கண்டேன். திருகலான மூளை மற்றும் அதன் திருகலான காதல். அவன் தன் தரப்பை விளக்க விரும்பினான்: நான் என் தவறை உணர்ந்ததால் என் மீதே இந்த தண்டனையை சுமத்திக் கொள்கிறேன். அதன் உள்ளர்த்தம்: தயை கூர்ந்து பழியை நீ ஏற்றுக் கொள், தயவு செய்து அடிகளையும் நீயே பெற்றுக் கொள். நான் உணர்ச்சி வயத்தின் பணையக்கைதியாக ஆக்கப்பட்டேன். என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சுதந்தரத்தை நான் யாசித்தேன். என் கதையை நானே பேச உதவும் சொற்களைத் தேடித் தடுமாறினேன். அடைக்கப்ப‌ட்ட கதவுகளும் உடைக்கப்பட்ட கனவுகளும் கொண்ட ஒரு வீட்டில் நான் வாழ்ந்தேன். நான் நானாக இல்லை. வேறொருவரின் துன்பியல் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பதாக‌ என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நான் மரணத்தை எதிர்நோக்கி இருந்தேன். மரணம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் என நினைத்தேன்.

அச்சம் கசிந்தொழுகும் என் உடலில் கலவி என்பது சமர்ப்பிக்கும் செயலானது. நான் மனைவியாக நடித்த இந்த நாடகத்தில் விட்டுச்செல்வதன் ஆறுதலும், உபயோகித்தபின் விலகுதலும் தவிர வேறெதுவும் நினவில் இல்லை. வதையினாலான திருமணத்தில் முத்தங்கள் மறைந்து போகிறது.

நாங்கள் தனித்தனி அறைகளில் உறங்கினோம். ஒவ்வோர் இரவும் என் மனம் ஒரு சோககீதம் இசைத்தது. நான் மிருதுத்தன்மைக்கு ஏங்கினேன். துக்கமானது ஒரு கிராமத்துப் பெண் தெய்வம் போலவும், நான் என் காயமுற்ற தசையை அதற்கு உணவாக அளிப்பது போலவும் அதைச் சுற்றி உழன்றேன். வந்து என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேன். யாரும் அதைக் கேட்கவில்லை, நானே என் தலைக்குள் அலறிக் கொண்டிருந்தேன். என்னை நானே சேர்த்து இழுத்துக் கட்டி வைக்க‌ முடிந்தது. நான் ஒருபோதும் உடைந்துவிடலாகாது என சபதமிட்டிருந்தேன்.

நான் தூரப் போனேன். நாங்கள் விலகிப் போனோம்.

பிற்பாடு அவனது இரட்டை வாழ்க்கை வெளிப்பட்டது: அவன் ஏற்கனவே திருமணமானவன், அவனது குடும்பத்தினரே மறைத்த ஓர் உண்மை அது. அவன் தன் முதல் மனைவியிடமிருந்து இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. நான் அவனை எதிர்கொண்ட போது, எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக விளக்க முயற்சித்தான், அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்து நின்றது. இன்னும் நிறைய பெயரிடுதல்கள், சிகையிழுத்தல்கள், கெட்டவார்த்தைகள், மிரட்டல்கள். அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். என்னை சிறுக்கி என்று முத்திரை குத்தினான். உயிருடன் என் தோலை உரித்து விடுவேன் என்றான். உன் தந்தையைக் கூப்பிட்டு வந்து உன்னை அழைத்துப் போகுமாறு சொல்லுவேன் என்றான். நான் உணர்வற்றுப் போயிருந்தேன், எதிர்வினை புரிய முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த இரவில் நான் ஒரு குப்பை போல் வெளியே எறியப்பட்டேன்.

கைப்பையுடனும், மோசமானவள் என்ற பட்டையுடனும் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். விமான நினையத்திலிருந்த துணை ராணுவ அதிகாரிகளை அங்கே உறங்க‌ அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அவர்கள் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள், ஆனால் தங்க அனுமதித்தார்கள். அதில் ஒருவர் எனக்கு இரவு உணவு வாங்கித் தந்தார். அடுத்த நாள் காலையில் நான் சென்னைக்குத் திரும்பினேன். என் பெற்றோர்களுக்குச் சொல்ல எனக்கு யாதொரு வார்த்தையும் கைவசமிருக்கவில்லை. அவர்கள் என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் அம்மா ஒரு பெண்ணின் சுகந்தத்துடன் என்னைக் கட்டிக் கொண்டார், இனிமேல் என்னைப் போக விடமாட்டேன் என்பது போல. என் சகோதரி ஏன் அவளை விட்டுப் போனேன் என்பதற்கே கோபித்துக் கொண்டாள்.

சில வாரங்கள் கழித்து நான் வக்கீல்களுடன் பேசினேன். என் திருமணமே செல்லுபடியாகாது, அதனால் விவாகரத்து என்பது அர்த்தமில்லாத முயற்சி என்று அவர்கள் சொன்னார்கள். கருணையின் செயலாக சட்டம் கூட என்னை விடுவித்து விட்டது. அவனது தண்டனைக்காக நான் அழுத்தம் தந்த போது காவல்துறையினர் நீதிமன்ற சிக்கல்களைப் பேசினர். நீங்கள் வேறெங்கோ வசிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நீதி தேவதை இடம்பெயர்ந்த பெண்களுக்கு சேவை செய்வதில்லை.

என் பெற்றோரின் இடத்துக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. நான் என் நலம் விரும்பிகளுடன் பேசுகிறேன், என் சகோதரியின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன். இரவில் தனிமையில் அழுகிறேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்க்கிறேன், நான் வாழ்ந்தது “என் வாழ்க்கை”யே அல்ல, வேறொருவர் எனக்கு வரையறுத்து அளித்தது என்பது புரிகிறது. மனைவியை அடிக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, என் கதையைச் சொல்ல நான் உயிரோடிருப்பேன் என்றே நான் நம்பவில்லை. கொடூரத்தன்மையின் முதல் தர அனுபவம் எனக்குண்டு என்று என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்: மோசமான நாட்களில் பகிர்ந்து கொள்ளவென்று இருக்கும் போராட்டம் மற்றும் ஜீவித்திருத்தலின் கதை. அந்த வெற்று ஆறுதல்கள் வன்முறைக்குள்ளான உடல்களை அமைதிப்படுத்தும். நான் குடும்பத்தின் அரவணைப்பில் சுகங்காணும், நண்பர்களின் கதகதப்பில் ஆறுதல் கொள்ளும், அறிமுகமற்ற அன்புள்ளங்களின் சொற்களால் காயங்கள் குணம் பெறும் வன்முறைக்குள்ளான பெண்களின் அதிர்ஷ்டக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன்.

இந்தக் கல்யாணம் எனும் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா? என்னிடம் நேரடியான பதில்கள் இல்லை. நான் எனக்கான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நான் தனியாள் என்பதும் பாதுகாப்பானவள் என்பதும் எனக்குத் தெரியும். துயருற்ற பெண்ணின் கண்களுடனும் ஆத்மார்த்தமான புன்னகையுடனும் நான் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம் பெற்று விட்டேன். என் வலிகளை மறந்து விடுவதற்கு போகும் வழியில் ஒருவேளை என் கவிதைகள் உதவக்கூடும்.

*

குறிப்பு: ‘அன்பின் விடுமுறை தினங்கள்’ என்னும் தலைப்பு மனுஷ்ய புத்திரனின் ‘ஆதீதத்தின் ருசி’ தொகுப்பிலிருக்கும் கவிதையின் தலைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

 

கருணாநிதியின் தீக்குளிப்புப் பேச்சு!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா தெலுங்கு மொழியில் பேசி, வாக்குகளை வசீகரிக்கும் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். அவர் விட்ட பணியை அவருடைய அமைச்சர்கள் செய்துவருகின்றனர்.

அவரைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி சங்கரன்கோவில் சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடை தொடர்பாக பிரச்னை எழுந்தது. பிறகு அமைச்சர் அழகிரி, தேர்தல் ஆணையர் பிரவீண் குமாரைச் சந்தித்துப் பேசியபிறகு பிரச்னை தீர்ந்தது. சொன்னபடியே சங்கரன்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்டார் கருணாநிதி.  வழக்கம்போல பிரும்மாண்டமான கூட்டம். கூட்டணிக்கட்சித்தலைவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.

எல்லோரும் பேசியபிறகு கருணாநிதி பேசினார். அப்போது இடைத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று பேசினார். இது இடைத்தேர்தல் மட்டுமல்ல; எடைத்தேர்தல் என்று தமக்கேயுரிய பன்ச் ஒன்றையும் வைத்தார். சங்கரன்கோவில் குறித்த தனது நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார். இப்போதைய டாபிகல் விவகாரமான திராவிட இயக்கம் நூற்றாண்டு, திராவிட – ஆரிய விவகாரம் பற்றியும் பேசினார்.  மின்வெட்டு பற்றி ஆவேசமாகப் பேசினார்.

எல்லாம் சரிதான். பேசவேண்டிய விஷயம்தான். ஆனால் அதன்பிறகு அவர் பேசியதுதான் சர்ச்சைக்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கு தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்துப் பேசத் தொடங்கினார் கருணாநிதி.

‘நான் முதல்வராக இருந்தபோது அண்ணா பெயரால் அமைத்த நூற்றாண்டு நூலகத்தில் நான்கு  லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என்று பிரிட்டிஷ், ரஷிய நாட்டினர்களும் கூறுகிறார்கள்.

அண்ணா வாழ்ந்ததை எதிர்காலத்தினர் மத்தியில் பதிவு செய்வதற்காகதான் இந்த நூலகத்தை அமைத்தேன். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றுவேன் என்று கூறுபவர்கள், அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொள்ள அருகதை இருக்கிறதா? மருத்துவமனை கூடாது என்று கூறுபவன் அல்ல நான்.

ஆனால், வேண்டும் என்றே அதை மருத்துவமனையாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போகலாம். நீதிமன்ற தீர்ப்புகள் வந்தாலும், அண்ணா நூலகத்தை எடுத்தே தீருவேன் என்கிற நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.’

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. சிலர் மாற்றவே கூடாது என்று கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் தங்களுடைய வாதங்களையும் எடுத்துவைக்கிறார்கள். அதைப்போலவே, நூலகத்தைக் காட்டிலும் மருத்துவமனை அமைவது எந்த அளவுக்கு அத்தியாவசியமான ஒன்று என்பதைப் பற்றியும் சில கருத்துகள் எழுந்துவருகின்றன. நூலக மாற்றம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் தொடர்ச்சியான விவாதங்கள்  நடந்துவருகின்றன. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது.

இந்நிலையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எத்தனயோ வழிகள் இருக்கின்றன. நூலகத்தை மாற்றக்கூடாது என்று கோரிக்கை விடுக்கலாம். கோஷம் எழுப்பலாம்.  தனது கட்சியின்  பத்திரிகையில் எழுதலாம். கட்சித் தொண்டர்களையும் மக்களையும் ஓரணியில் திரட்டிப் போராட்டம் நடத்தலாம். ஊர்வலம் போகலாம். இப்படி, தனது எதிர்ப்பை ஜனநாயக ரீதியாகப் பதிவுசெய்வதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

அவற்றில் பல வாய்ப்புகளை திமுக பயன்படுத்தியும் வந்துள்ளது. இருந்தும், ‘நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்’ என்று பேசுவது எந்தவகையில் சரியான பேச்சு என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

தீக்குளிப்பு என்பது தமிழகத்துக்குப் புதிய விஷயமல்ல. மொழிப்போர் நடந்த காலகட்டங்களில் தமிழுக்கு ஆதரவாகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் மாணவர்கள், இளைஞர்கள் உணர்ச்சிவேகத்தில் தீக்குளித்துள்ளனர். அப்படித் தீக்குளித்தவர்களை, மொழிப்போர் தியாகிகள் என்று திராவிட இயக்கங்கள் என்று கொண்டாடுகின்றன. மொழிப்போருக்குப் பிறகும் வெவ்வேறு காலகட்டங்களில் பலரும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தீக்குளித்துள்ளனர். குறிப்பாக, ஈழப்பிரச்னையை முன்வைத்து.

இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆர் காலத்தில் திமுக தலைவருடைய கைதைக் கண்டித்து சிலர் தீக்குளித்துள்ளனர். வைகோவைத் திமுகவில் இருந்து நீக்குவது தொடர்பாகவும் தீக்குளிப்புகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், தீக்குளிப்பு வேண்டாம்; தங்கள் இன்னுயிரை அவசரப்பட்டு இழக்கவேண்டாம் என்று உணர்ச்சிப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தவர் கருணாநிதி.

தீக்குளிப்பு என்பது காட்டுமிராண்டித்தனமான செயல்; நாகரிக முதிர்ச்சி நிலையில் இருக்கும் நாம் தீக்குளிப்பு போன்ற விஷயங்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்; எக்காரணம் கொண்டும் தீக்குளிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடாது என்று பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் தீக்குளிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியான செயலாக இருக்கமுடியாது.

வேண்டுமானால், ‘நான் தானே தீக்குளிப்பேன் என்று சொன்னேன். அடுத்தவரையா தீக்குளிக்கச் சொன்னேன்’ என்று கருணாநிதி கேட்கலாம். தலைவர் அப்படிச்சொன்னால் அதைத் தொண்டர்கள் தங்களுக்கு விடுத்த அழைப்பாகவே எடுத்துக் கொள்வார்கள் என்பது கருணாநிதி உள்ளிட்ட அத்தனைபேருக்குமே தெரிந்த சங்கதிதான்.

தொண்டர்களை உசுப்பேற்றுவதற்கு, உற்சாகப்படுத்துவதற்கு எத்தனையோ வாய்ப்பு வசதிகள் இருக்கின்றன. கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க கருணாநிதிக்கு இருக்கும் வாய்ப்புகள் அநேகம். ஆனால் இன்னமும் தீக்குளிப்பேன், உயிர் கொடுப்பேன் என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் முதிர்ச்சி அடைந்த கருணாநிதிக்கு அழகல்ல!

அருட்செல்வன்

மமதா, கருணாநிதி, மிரட்டல்!

எது நடக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்ததோ அதுவே நடந்துவிட்டது. ஆம். மமதா பானர்ஜியும் கருணாநிதியும் மத்திய அரசுக்கு எதிராக ஒரே சமயத்தில் களத்தில் குதித்துள்ளனர். இருவருடைய நோக்கமும் வெவ்வேறானவை. ஆனால் செய்யும் காரியம் ஒன்றுதான். மிரட்டல்.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வைத் தன்னால் ஏற்கமுடியவில்லை. உடனடியாக அவற்றை வாபஸ் பெறவேண்டும் என்றார் மமதா பானர்ஜி. இதில் முரண்நகை என்னவென்றால் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதுதான். கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது என்ற  மமதா பானர்ஜியின் கோரிக்கையை மீறிவிட்டார் திரிவேதி. அதற்குக் காரணம் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் திட்டக்குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும்தான் என்பது திரிணாமுல் காங்கிரஸின் முக்கியக் குற்றச்சாட்டு.

ஆனால் ரயில்வே அமைச்சர் திரிவேதியோ திட்டவட்டமாகப் பேசுகிறார். ரயில்வே பட்ஜெட் தொடர்பாக மமதா பானர்ஜியுடன் எவ்வித ஆலோசனையையும் நான் நடத்தவில்லை. என்னுடைய மனச்சாட்சிக்கு உட்பட்ட வகையில் பட்ஜெட்டைத் தயாரித்திருக்கிறேன். ரயில்வே துறையில் நடக்கும் விபத்துகளைத் தடுக்கவேண்டும் என்றால் துறையை நவீனப்படுத்தவேண்டும். அதற்கு நிதி வேண்டும். அதற்காகவே இந்தக் கட்டண உயர்வு. தவிரவும், ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இந்திய ரயில்வே துறைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாட்டு நலனுக்குத்தான் முன்னுரிமை. கட்சி, கட்சித்தலைமை எல்லாம் அதற்குப்பிறகுதான். போதாது? பொங்கி எழுந்துவிட்டார் மமதா பானர்ஜி.

தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுடன் மோதும் தன்னை அடக்கிவைக்கும் நோக்கத்துடனேயே தினேஷ் திரிவேதியைக் கொண்டு காங்கிரஸ் கட்சி காய் நகர்த்துகிறதோ என்ற சந்தேகம் மமதாவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை தினேஷ் திரிவேதி சந்தித்துப் பேசியதும் மமதாவை யோசிக்கவைத்தது. போதாக்குறைக்கு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டு நேராக தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேட்டி கொடுக்கத் தொடங்கியதும் மமதாவின் சந்தேகம் உச்சத்துக்குச் சென்றுவிட்டது.

எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தபிறகு பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார் மமதா பானர்ஜி. ரயில்வே அமைச்சர் திவிவேதியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யுங்கள். அவருக்குப் பதிலான முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்குங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டார் மமதா பானர்ஜி. கிட்டத்தட்ட இதே முடிவைத்தான்  தயாநிதி மாறன் விஷயத்தில் கருணாநிதி எடுத்தார். அதனை பிரதமர் மன்மோகன் சிங் அப்படியே ஏற்றுக்கொண்டார். தற்போது மமதாவின் முறை.

என்ன செய்வது என்பது பற்றிப்பேச அவசரமாகக் கூடிப் பேசினர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்கள். இருப்பினும், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிவிட்டார் என்றொரு செய்தி வெளியானது. அவருக்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸின் முகுல் ராயை ரயில்வே அமைச்சராக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார் மமதா என்றும் தகவல் வெளியானது.

ஆனால், நான் இன்னமும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை; ரயில்வே பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இருக்கிறேன். அதேசமயம், மமதா பானர்ஜியோ அல்லது பிரதமரோ என்னைக் கேட்டுக் கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லியிருக்கிறார் திரிவேதி.

அநேகமாக மமதாவின் சொல்லுக்கு மத்திய அரசு கட்டுப்படும் என்றே தெரிகிறது. அதற்காக.  கட்டண உயர்வு திரும்பப்பெறப்படுமா என்பது சந்தேகம்தான். அதைச் சாதிக்கவேண்டும் என்றால் மமதா இன்னொரு அஸ்திரத்தை வீசவேண்டியிருக்கும்.

இன்னொரு பக்கம், திமுகவும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை. திமுக மட்டுமல்ல; பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் கோரிக்கையும் அதுதான். ஆனால், மத்திய அரசின் சார்பில் எந்தவொரு உறுதிமொழியும் தரப்படவில்லை.

இலங்கை அரசை எதிர்க்காமல் இருப்பது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என்று விமரிசித்த கருணாநிதி, ஒருவேளை மத்திய அரசு உரிய நிலைப்பாட்டை எடுக்காதபட்சத்தில் திமுகவின் செயற்குழு கூடிய உரிய முடிவெடுக்கும் என்று கூறியிருக்கிறார். திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சமீபகாலங்களில் மோதல் ஏற்படும் சமயங்களில் எல்லாம் உயர்நிலை செயல் திட்டக்குழுவைக் கூட்டி முடிவெடுப்பதாக அறிவிப்பது திமுகவின் வழக்கம். சொன்னபடியே கூடுவார்கள். பேசுவார்கள். ஆனால், எந்தவொரு முடிவையும் திட்டவட்டமாக எடுக்காமலேயே விட்டுவிடுவார்கள்.

ஆகவே, திமுகவின் மிரட்டலை இம்முறையும் காங்கிரஸ் கட்சி அலட்சியம் செய்துவிடும் என்றே தெரிகிறது. அதேசமயம், இலங்கை விவகாரத்தில் திமுகவின் இமேஜ் மீது விழுந்திருக்கும் கறையைத் துடைக்கக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ஆக, கூட்டணியின் முக்கியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸும் திமுகவும் போர்க்கொடி உயர்த்தியிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசைக் காப்பாற்ற இரண்டு திசைகளில் செயல்பட்டுவருகிறது காங்கிரஸ் கட்சி. ஒன்று, கூட்டணிக்கட்சிகளை சமாதானம் செய்வது. மற்றொன்று, இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக மேலும் சில கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது.

திரிணாமுல் காங்கிரஸ், திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கும் சேர்ந்து மொத்தம் முப்பத்தியேழு எம்.பிக்கள் இருக்கின்றனர். இவர்களை இழந்துவிட்டு, புதிய கட்சிகளைத் திரட்டுவது என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமற்ற காரியம். ஆக, இப்போதைக்கு வெள்ளைக் கொடியைத் தூக்கவே காங்கிரஸ் விரும்பும் என்றே தெரிகிறது. பார்க்கலாம்!

– தமிழ்