என்கவுண்டர் அரசியல் – ஐந்து கொலைகள் போதுமா?

தேர்தலில் ஜெயித்த பிறகு ஆட்சி நடத்த போலீஸ் மட்டுமே போதும் எனும் எண்ணத்தில் இருக்கும் ஜெயலலிதா. எதிர்க்கும் துணிவில்லாத மனிதர்களை மட்டும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறை. செய்திகளில்கூட சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள். வெற்றிகரமான என்கவுண்டர், சுட்டு வீழ்த்தப்பட்ட கொள்ளையர்கள் என்பன போன்ற வர்ணனைகளை கொடுக்கும் பாக்கெட் நாவல் தரத்திலான ஊடகங்கள். இந்தக் கூட்டணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் தொடர்கதையாகவே இருக்கும்.

அரசாங்கத்தின் தேவைக்காக என்கவுண்டர் செய்யும் பழக்கத்தை வீரப்பன் கொலை மூலம் ஆரம்பித்து வைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகு இது ஒரு தொடர் நிகழ்வாகிவிட்டது. அதிகமாக ஜெய்சங்கர் படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா அல்லது அப்பிராமணர்கள் சொம்பு திருடியதற்காக கொல்லப்பட்டாலும் அதனை ஆதரிக்கும் சோ ராமசாமியை நண்பனாக கொண்டிருக்கும் பழக்கதோஷமா தெரியவில்லை, படுகொலைகள் வாயிலாகவே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இயலும் என நம்புபவர் ஜெயா. அவரது ஆட்சியில் என்கவுண்டர்கள் அதிகமாக நடக்கும்.  எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று அவர் பெருமிதம் கொள்வதும் நடக்கும்.

இந்தத் தருணத்தில் நாம் அச்சமடைய வேண்டியது ஜெயலலிதா பற்றியோ அல்லது போலீஸ் பற்றியோ அல்ல. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதிகாரமிருக்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் “இப்படி சுட்டாத்தான் அடுத்து கொள்ளையடிக்கனும்னு நினைக்கிறவனுக்கு பயம் வரும்” எனும் வாசகங்களோடு இதை ஆதரிக்கும் பொதுமக்கள்தான் அதி அபாயகரமானவர்களாக தெரிகிறார்கள். இவர்களில் பலர் எவன் தாலியறுந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கூடங்குளம் மின்சாரம் வேண்டும் என்று சொல்பவர்கள்.

வங்கிக் கொள்ளைக்கு பதிலடியாக ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலரது புரிதல் இத்தோடு முடிந்துவிடுகிறது. ஒருவன் குற்றவாளியா இல்லையா என்று உறுதியாகும் முன்பே, குற்றத்துக்கு கொலைதான் தண்டனையா எனும் பரிசீலனைகூட செய்ய விரும்பாது அவன் கொல்லப்படுவது இவர்களுக்கு சம்மதம் என்றால், ஒன்று இவர்கள் கொலையை ரசிக்க பழகியிருக்க வேண்டும். அல்லது தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒருவன் கொல்லப்படுவது பற்றி கவலையற்றவர்களாக இருக்கவேண்டும். சமூகத்தால் புறந்தள்ளப்படவேண்டிய இவர்களது கருத்து சமூகத்தின் பொதுக்கருத்தாக கட்டமைக்கப்படுகிறது. கருத்து ஏதுமில்லாதவர்கள் இதன் மூலம் இதனை தங்கள் கருத்தாக வரித்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

சென்னை வேளச்சேரி என்கவுண்டர் ஒரு போலி என்கவுண்டர் என்பதை தினமலரின் “சிறப்பு நிருபரே” கிட்டத்தட்ட ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் எழுப்பும் கேள்வி சுருக்கமானது. போலியா இருந்தாத்தான் என்ன? படம் நல்லாயிருக்கான்னு பாரு, டிவிடி போலியா இருந்தா உனக்கென்ன? மனித உரிமை ஆர்வலர்களைத் தேச விரோதிகளாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்துவரும் இந்த வகை பத்திரிகைகள் அதற்காக சாதாரண மக்களை ரத்த வெறியர்களாக மெல்ல மெல்ல மாற்றுகின்றன. அதன்படியே மக்களில் பலரும் போட்டு தள்ளுடா அவனை என கவுதம் மேனன் படத்து வில்லனைப் போல கூவி குதூகலிக்கிறார்கள்.

அவர்கள் பேசுவதற்கான பாயிண்டுகளையும் இந்த ஊடகங்களே வழங்குகின்றன. கொள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டால் அடுத்து கொள்ளையடிப்பவனுக்கு பயம் வரும். சட்டம் அதிகமான வாய்ப்புக்களை குற்றவாளிகளுக்கு வழங்கி அவர்களைச் சுதந்தரமாக உலவவிடுகிறது. ஆகவே மக்களை பாதுகாக்க இந்த வழியை போலீஸ் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் போலி என்கவுண்டர் ஆதரவாளர்களின் வாதங்கள். இந்த வேட்டுச் சத்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நம் கண்ணில்படாது மறைந்து போயிருக்கிறது. இதுவரை ரவுடிகள் மற்றும் கொடூரமான கொலைகாரர்கள் எனும் பட்டியலில் வந்தவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் இப்போது கொள்ளையர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

நல்லது, தமிழகத்தை கொள்ளையர்களிடமிருந்தும் காப்பாற்றும் வெறி காவல்துறைக்கு வந்து விட்டதாக வைத்துக்கொள்வோம். ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான எல்லா வழக்குகளும் நிரூபணம் இல்லாமல் தோற்றுவிட்டன. ஆகவே தங்கள் முயற்சிகள் வீணாகிவிட்டதாக பொங்கியெழுந்து ஒரு தோட்டாகூட காவல்துறையில் இருந்து புறப்படவில்லையே ஏன்? வங்கிக்கொள்ளையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மக்களை நேரடியாக கொள்ளையடித்த ஃபைனான்ஸ் நிறுவனங்களின் முதலாளிகளில் ஒருவனும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பணத்தை மீட்டுத்தா என்று சொல்லி வீதிக்கு வந்த மக்கள் மீது தடியடி நடந்திருக்குமேயன்றி அந்த நிறுவன முதலாளிகள் எவன்மீதேனும் போலீசின் லத்திக் கம்புகள் தொட்டுப்பார்த்திருக்குமா? இந்தக் கேள்விகள் எழ குற்றவாளிகள் மீதான இரக்கம் தேவையில்லை, குறைந்தபட்ச அறிவு போதும். அறிவு அதிகமாக இருந்தும் இந்த வினாக்கள் ஒருவனுக்கு வரவில்லை எனில் அவன் கொலைகளை நேசிக்கும் ஹிட்லர்தனத்துக்கு ஆட்பட்டிருக்கிறான் என்று பொருள் (உதாரணம் ரொம்ப பழசு என கருதினால் மோடித்தனம் என மாற்றிக்கொள்ளவும். நடுநடுவே இந்துத்வா, சர்வாதிகாரம் எல்லாம் போட்டுக்கொள்ளலாம்).

சமீபகால என்கவுண்டர்கள் அரசியல் காரணங்களுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன. கோவை மோகன்ராஜ் என்கவுண்டர் திமுக அரசின் மீது இருந்த கடுமையான அதிருப்தியை தண்ணீர் தெளித்து ஆற்றுவதற்காகச் செய்யப்பட்டது. இப்போது நடந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக காட்டுவதற்கு நட்த்தப்பட்டிருக்கிறது. இதில் மக்கள் நலன் என்று எதுவுமே இல்லை. மக்கள் சிலரை மகிழ்விக்க என்று வேண்டுமானால் சொல்லலாம். குற்றங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வளர்பவை. அதனை கட்டுப்படுத்த ஒருங்கினைந்த நடவடிக்கைகள் தேவையேயன்றி காவல்துறைக்கு கொலை செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது காவல்துறை மேலும் குற்றமிழைக்கவே வழிசெய்யும்.

சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பதால் காவல்துறைக்கு அதிகாரம் வழங்குவது சரியென்பது இந்திய சட்டங்களை அவமதிக்கிற செயல்தான். காவல்துறைக்கு அதீத சுதந்தரம் தருவது கொள்ளையர்களுக்கு சுதந்தரம் தருவதைவிட அபாயகரமானது. இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் சம்பந்தப்பட்ட போலீசாரை சம்பிரதாயமாகக் கூட கைது செய்யவில்லை. இதுவரை நடந்த லாக்அப் மரணங்கள் எதற்காவது தண்டனை தரப்பட்டிருக்கிறதா? குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள பிணைப்பு என்பது எல்லா என்கவுண்டர் ஆதரவாளர்களுக்கும் தெரியும். பிறகும் இவர்கள் என்கவுண்டரை ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களது கொலைரசனையன்றி வேறொன்று இருக்க இயலுமா?

கொலைகாரன் கொல்லப்படவேண்டும் என்று இதற்கு முன்பான என்கவுண்டர்களில் வசனம் பேசப்பட்டது. இப்போது கொள்ளையர்கள் சாகட்டும் என அது வளர்ந்திருக்கிறது. நாளை அந்த விதி எந்த எல்லைக்கும் செல்லலாம். ஒருவன் கொல்லப்பட்ட பிறகு அவனை குற்றவாளி என நிரூபணம் செய்தால் போதும் எனும் நிலை முழுமையான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு நம்மை இட்டுச்செல்லும். சன்மானத்துக்காக சாதாரண ஆடு மேய்க்கும் நபர்களை கொன்று அவர்களை தீவிரவாதிகள் என கணக்கு காட்டிய சம்பவங்கள் ஆந்திராவில் நடந்திருக்கின்றன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்த வேலையை ராணுவம் செய்கிறது. கொள்ளையனை கொல்வது சரி என்று அனுமதிக்கும் மனம் உங்களுக்கிருந்தால், கொல்லப்பட்டவனை கொள்ளையனாக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது.

துப்பாக்கி போலீசின் கையிலிருக்கு ஒரு கருவியென்றால், போலீஸ் அரசாங்கத்தின் கையிலிருக்கும் ஒரு கருவி. என்ன சிக்கலென்றால் அரசின் கருவிக்கு சொந்த விருப்புவெறுப்பு உண்டு. ஆயுதத்துக்கு அதிகாரம் தந்தால் அது எஜமானனின் இலக்குகளை மட்டுமே தாக்கும். இலக்கு எப்போதும் நமக்கு பிடிக்காதவர்களாகவோ அல்லது தேவையற்றவர்களாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நமக்கு ஒரு வங்கிக்கொளையன் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றினால் நம் மகனுக்கு மதிப்பெண் போடாத ஆசிரியர் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றலாம். நம் எண்ணத்தில் வன்மத்தை சுமந்துகொண்டு பிள்ளைகளிடம் நேர்மையாக நடக்கும் பழக்கத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. எல்லோரிடத்திலும் மனிதாபிமானம் இருக்கவேண்டும் என நினைப்பது பேராசையாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டும் என நினைப்பது நிச்சயம் பேராசையல்ல. கொலையை விரும்புவது மனிதத்தன்மையற்ற செயல், அதை அரசாங்கம் செய்தாலும் இந்த விதி பொருந்தும்.

0

வில்லவன்

என்கவுண்டர் மனோபாவம்

எந்தவொரு கிரிக்கெட் பந்து வீச்சாளரும் பொறாமைப்படும் வகையில் காவல் துறை தனது என்கவுண்டர் திறமைகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்தெடுத்து வருகிறது. இந்தப் புள்ளிவிவரத்தைப் பாருங்கள். 2008ம் ஆண்டு 5 முறை குண்டு வீசி ஆறு விக்கெட் எடுத்திருக்கிறார்கள். 2009ல் இரண்டுக்கு இரண்டு என்னும் செட் கணக்கில் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. 2010ல் நல்ல முன்னேற்றம். ஐந்து வாய்ப்புகள், ஏழு விக்கெட். 2011ல் மேட்ச் நடைபெறவில்லை. 2012 அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது. இரு மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில், ஒரே நாளில், ஐந்து விக்கெட்டுகள்.

‘சென்னை மக்கள் பலரும் இதனை சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளனர்.’ கொள்ளையர்கள் என்கவுண்டர்: மக்கள் பாராட்டு, மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் என்று தலைப்புச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.   தமிழகத்தின் மிகப் பெரிய என்கவுண்டர் இதுவே என்று கண்டறிந்து கொட்டை எழுத்தில் கொண்டாடியிருக்கிறார்கள். அதே சமயம், வங்கிக் கொள்ளையர் ஐவரையும் ‘மக்கள் பாதுகாப்புக்காகவும், தங்களது சுய பாதுகாப்புக்காகவுமே சுட நேரிட்டதாக’  சொல்லும் காவல்துறையின் வாதங்களில் உள்ள ஓட்டைகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் செய்திகளையும் அலசல்களையும் மென்று புசித்தபடி தன் வழியில்  சென்றுகொண்டிருக்கிறது படித்தவர்கள் அடங்கிய பெரும்கூட்டம். பிடித்திருக்கலாம், கொன்றிருக்கவேண்டியதில்லை என்னும் அதிகபட்ச முணுமுணுப்புடன் விவாதம் முடித்துக்கொள்ளப்பட்டுவிட்டது. மேலதிகம் விவாதம் தொடராததற்குக் காரணம், கொல்லப்பட்டவர்கள் கொள்ளையர்கள் என்று நமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் தர்க்க நியாயம்.

இந்த தர்க்கத்தை வைத்துதான் அப்சல் குருவைத் தூக்கில் போடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்தத் தர்க்கத்தை வைத்துதான் தீவிரவாதம் பற்றியும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் சில கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். எது சரி, எது தவறு என்று முடிவு செய்கிறோம். எதற்கு கேள்வி எழுப்பவேண்டும், எதை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கிறோம்.

செப்டெம்பர் 2011 பரமக்குடி சம்பவத்தை எப்படிப் பார்க்கிறோம்?  பட்டவர்த்தனமாகக் காவல் துறையினர் நடத்திய படுகொலை என்றா அல்லது ‘கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்றா? காஷ்மிர் பிரச்னையை எப்படி பார்க்கிறோம்? வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் பேராட்டங்களை? பெருகிவரும் விவசாயிகள் தற்கொலையை? பெருகிவரும் விலைவாசியை? அதிகரித்துவரும் ஏழை-பணக்காரன் இடைவெளியை? ஒவ்வொன்றிலும் இரு தரப்புகளின் வாதங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒரு தரப்பை ஏற்று, இன்னொன்றை நிராகரிக்கிறோம். எந்த அடிப்படையில்? சரி, தவறுகளுக்கான நம் அளவுகோல் என்ன?

சற்றே கண்களைத் திறந்து பார்த்தால் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தக் கேள்விகளைக் கடந்தே நாம் வந்திருக்கிறோம் என்பது தெரியவரும். பெரும்பாலான கேள்விகளுக்கு நாம் பதிலே அளிப்பதில்லை என்பதும் தெரியவரும். பதில் தெரியவில்லை என்பதைவிட தெரிந்துகொள்ள விருப்பமில்லை என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில் என்கவுண்டருக்குத் திரும்புவோம். குஜராத் 2002 கலவரத்தின்போது இப்படித்தான் பல என்கவுண்டர்கள் நடத்தப்பட்டன. மோடியைக் கொல்ல வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையின்போது, சோராபுதின், இஷ்ரத் ஜெகன் கொலை வழக்குகளுக்கும் அவர்கள்மீதான குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. நேர்மையான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் கிட்டத்தட்ட காவல் துறையினரின் அத்தனை என்கவுண்டர்களும் தடுமாற ஆரம்பித்துவிடும். வீரப்பனைத் தேடுகிறோம் என்னும் போர்வையில் நிகழ்த்தப்பட்ட அராஜகங்களை மறக்கமுடியுமா? வாச்சாத்தியில் நடைபெற்ற அத்துமீறல்களை மன்னிக்கமுடியுமா? சாதிக் கலவரம் என்று முத்திரை குத்தி தமிழகத்தின் தென் மாநிலங்களில் இன்று வரை தொடரும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திவிடமுடியுமா?

சர்வதேச அளவில் இந்த விவாதத்தை நகர்த்திச் சென்றால் ஓர் உண்மை புலப்படும். ஜனநாயக நாடு என்று நாம் அழைக்கும் அனைத்து நாடுகளும் Police-state ஆகத்தான் மாறியிருக்கின்றன. அரசு என்பது ஓர் ஒடுக்குமுறை கருவியாகவே நீடிக்கிறது. அது வன்முறையைப் பிரயோகித்தே ஆட்சி நடத்துகிறது. வீரப்பன் கொல்லப்பட்டதையும் சதாம் உசேன் கொல்லப்பட்டதையும் கடாபி கொல்லப்பட்டதையும் எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் பல ஒற்றுமைகளைக் காணமுடியும். காவல் துறைக்கும் ராணுவத்துக்கும் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கினால் மட்டுமே ஓர் அரசால் நிலைத்திருக்கமுடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ‘காந்தியின் இந்தியாவுக்கும்’ இதுதான் அடிப்படை.

0

மருதன்

மாவோ-ஹூ ஜிண்டாவ் : நவீன சீனாவின் சித்தாந்த முரண்பாடு

1

நூற்றாண்டுகளாக சீனாவில் நிலவிவந்த முடியாட்சி முறை அக்டோபர் 1911ல் முடிவுக்கு வந்தது. கடைசியாக எஞ்சியிருந்த கிங் வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சன் யாட் ஸென் ஒரு முக்கிய உந்துசக்தியாக இருந்தார். புரட்சிகர அரசியல் நடவடிக்கைகள் மூலம் கொடுங்கோல் ஆட்சிமுறையை ஒழிக்கலாம் என்பதை சன் யாட் ஸென் சீனாவுக்கு உணர்த்தினார். ஜனவரி 1, 1912 அன்று சீனக் குடியரசு மலர்ந்தபோது, அதன் அரசுத் தலைவராக ஸென் பொறுப்பேற்றுக்கொண்டார். ஸென் தொடங்கி வைத்த கோமிண்டாங் கட்சி, அவர் மரணத்துக்குப் பிறகு சிதறுண்டது.

சன் யாட் ஸென் சந்தித்த அதே எதிர்ப்புகளை மாவோவும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. 1949ம் ஆண்டு மக்கள் சீனக் குடியரசு உதயமானது. உள்நாட்டு யுத்தங்களையும் ஜப்பான் ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டு வெற்றிபெற்றபிறகே இது சாத்தியமானது. புரட்சியில் வெல்வதை விடவும் சவாலானது புரட்சியை தக்கவைத்துக்கொள்வது. கலாசாரப் புரட்சி தொடங்கப்பட்டது இதற்காகத்தான். முன்னதாக, 1958ல் மாவோ மாபெரும் பாய்ச்சல் என்னும் திட்டத்தை முன்னெடுத்துச்சென்றார். விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்டிருந்த சீனாவை நவீனப்படுத்தி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான பொருளாதார, சமூக திட்டமாக மாபெரும் பாய்ச்சல் வளர்த்தெடுக்கப்பட்டது. தொழில்மயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளையும் உற்பத்தி கருவிகளையும் கட்டமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கலாசாரப் புரட்சியைப் போலவே மாபெரும் பாய்ச்சல் திட்டமும் எதிர்ப்புகளை சந்தித்தது. கட்சிக்குள் இருந்துகொண்டு திட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்த லியு ஷோகி (Liu Shaoqi), டெங்சியோபிங் இருவரும் நீக்கப்பட்டனர். மாபெரும் பாய்ச்சல் திட்டத்துக்கு மாற்றாக அவர்கள் முன்வைத்தது முதலாளித்துவ மாதிரி பொருளாதாரத்தை. மாவோ இதனை எதிர்த்தார். முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தை தொடரவேண்டிய சமயத்தில் இதுபோன்ற சிந்தனைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று மாவோ சுட்டிக்காட்டினார்.

சோவியத்தில் நிகிதா குருஷேவ் இழைத்துவரும் தவறுகளை அவர் ஆதாரமாகச் சுட்டிக்காட்டினார். லெனின், ஸ்டாலின் ஆகியோர் உருவாக்கி வைத்திருந்த சோஷலிச கட்டுமானத்தை உடைத்து தகர்த்து முதலாளித்துவத்தை வரவேற்றிருந்தார் குருஷேவ். சோவியத் யூனியன் சறுக்கியது போல் சீனா சறுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மாவோ. சீனாவை குருஷேவின் சோவியத்தாக மாற்ற முயன்ற அனைவரையும் மாவோ நிராகரித்தார்.

விவசாயிகள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள் என்று அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை ஆரம்பித்தார் மாவோ. அந்த வகையில், மாணவர்களையும் அவர்கள் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்கள். மே 1966ல் செம்படையின் முதல் மாணவர் பிரிவு சிங்குவா பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய சிங்குவா மத்திய பள்ளியில் தொடங்கப்பட்டது. ஹூ ஜிண்டாவ் தன் படிப்பை முடித்துக்கொண்டு அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். பிற்போக்குவாதிகளுக்கு எதிரான மாவோவின் முழக்கத்தால் உந்தப்பட்ட பல மாணவர்கள் கிளர்ச்சியிலும் கலகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர் முறை தவறி வன்முறையிலும் ஈடுபட நேர்ந்தது.

முதலாளித்துவத்தை ஆதரித்த டெங்சியோபிங் 1966ல் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அதே எண்ணம் கொண்ட லியு ஷோகி இரண்டு ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டார். அரசியல், கல்வி, தொழில் துறைகள் மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளிலும் உள்ள புரட்சி விரோத மனப்பான்மை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹூ ஜிண்டாவின் தந்தையும் இதில் அடங்கும்.

கலாசாரப் புரட்சியில் ஹூவின் பங்களிப்பு என்ன என்பது தெரியவில்லை. கலாசாரப் புரட்சியை அப்போது அவர் ஆதரித்தாரா? தன் தந்தையை கைது செய்தததால் கம்யூனிஸ்ட் கட்சி மீது சினம் கொண்டாரா? தனது எதிர்ப்பை யாரிடமாவது பதிவு செய்தாரா? அல்லது கலாசாரப் புரட்சியின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு அங்கீகரித்தாரா? இந்தக் கேள்விகளுக்கு விடையில்லை. சிங்குவா செம்படைப் பிரிவில் அப்போது பல மாணவர்களும் மாணவர் தலைவர்களும் ஆசிரியர்களும்கூட இணைந்திருந்தனர் என்பதால் ஹூவும் அதில் இணைந்திருக்கலாம் என்று யூகங்கள் உள்ளன. அவை யூகங்கள் மட்டுமே.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1968ல், கிராமப்புறத்துக்குச் செல்வோம் என்று அறைகூவல் விடுத்தார் மாவோ. ‘உங்கள் தந்தையர் நாடு உங்களை எங்கே அழைக்கிறதோ அங்கே செல்லுங்கள்!’ எல்லா நாடுகளைப் போல சீனாவும் அப்போது கிராமம், நகரம் என்று இருவேறாகப் பிரிந்துகிடந்தது. கிராம மக்களின் நலன் குறித்த அக்கறை நகரவாசிகளுக்கு இருக்காது. நம்மளவில் வசதியாக இருந்தால் போதுமானது என்னும் நடுத்தர வர்க்க மனோநிலை இயல்பாக நிலவிவந்தது.

முடியாட்சி சீனாவை, கம்யூனிச சீனாவாகவும் பிறகு சோஷலிச சீனாவாகவும் வளர்த்தெடுக்க விரும்பிய மாவோ, நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே நிலவிவந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியை ஆரம்பித்தார். கலாசாரப் புரட்சியோடு சேர்த்து அல்லது அதன் ஒரு பகுதியாக இதனை சாதிக்கலாம் என்று திட்டமிட்டார்.

அதற்கு முதலில் கிராமங்களை அறிந்துகொள்ளவேண்டும். கிராம மக்களின் சிரமங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை அறியவேண்டும். எனவே, கிராமத்துக்குச் செல்வோம் என்றார் மாவோ. சீனாவின் இன்னொரு பக்கத்தைக் காண மலைகள் மீது ஏறி கிராமப்புறங்களுக்கு இறங்கிச் செல்ல இளைஞர்களை வரவேற்றது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. நகரங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் இளைஞர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து கிராமங்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாடப்புத்தகங்களால் அளிக்கமுடியாத நேரடி அறிவை இந்த இடப்பெயர்ச்சி ஏற்படுத்தும் என்பது மாவோவின் நம்பிக்கை.

மாணவர்களோடு சேர்த்து அறிவுஜீவிகள் பலரும்கூட இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டனர். கிராமங்களில் அவர்களுக்குத் தனி சலுகைகள் அளிக்கப்படவில்லை. ஏழை விவசாயிகளோடு சேர்ந்து அவர்களும் ஒண்டிக்கொள்ளவேண்டியது. அவர்களுடன் தங்கி, உண்டு, உறங்கி அவர்கள் பணி கற்று, அவர்களுடன் சேற்றில் இறங்கி, களை அகற்றி, நெல் விதைத்து, அறுவடை செய்து வாழவேண்டியது. அப்போதுதான் உடலுழைப்பு அறிவுழைப்பைவிட தாழ்ந்தது என்னும் எண்ணம் மறையும். உடலுழைப்புக்குக் குறைந்த கூலியும் அறிவுழைப்புக்கு பன்மடங்கு அதிக கூலியும் அளிக்கும் வழக்கம் மாறும். மனிதர்களை அவர்கள் செய்யும் பணியை வைத்து தரம் பிரித்து அணுகும் முறையும் மாற்றமடையும். கற்றுக்கொள்வதோடு சேர்த்து, பிறருக்குக் கற்றுக்கொடுக்கவும் முடியும். நகர்புற மக்கள் கிராமங்களைப் புரிந்துகொள்வதைப் போல் கிராமப்புற மக்கள் நகரங்களைப் புரிந்துகொள்வார்கள்.

ஹூ கான்சு மாகாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு ஹைட்ரோ எலெக்ட்ரிக் எஞ்சினியராக, கட்டுமானப் பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. கலாசாரப் புரட்சி நீடித்த காலம் முழுவதும் ஹூ இங்கேதான் இருந்தார்.

2

மாவோ குறித்த இன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடு, அவர் நல்லதும் செய்தார், தீங்கும் செய்தார் என்பதுதான். எத்தனை விழுக்காடு நன்மைகள் செய்தார், எத்தனை விழுக்காடு தீமைகள் செய்தார் என்பதற்கான கணக்கும் அவர்களிடம் இருக்கிறது. பொதுவுடைமை என்பது பொதுவறுமை ஆகிவிடக்கூடாது என்றார் மாவோவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த டெங்சியோபிங். மாவோவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அவர் செயல்களை நிராகரிக்கலாம் என்றார் இவர். முதலாளித்துவம் அப்படியொன்றும் தீங்கான சொல் அல்ல என்னும் டெங்கின் கருத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டது.

டெங்சியோபிங்கின் வழிதான் ஹூ ஜிண்டாவின் வழியும். ஹூ ஜிண்டாவ் இரண்டாவது முறையாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (2007ல்) அதிபராகவும் (2008ல்) தேர்ந்தெடுக்கப்பட்டபோது சீனா அமெரிக்காவுக்குச் சவால்விடும் மாபெரும் சக்தியாக வளர்ந்திருந்தது. பொருளாதார ரீதியில், ஹூ ஆட்சிக் காலத்தில் சீனா தொட்டுள்ள உயரம் அசாத்தியமானது. வளர்ச்சியற்ற கிராமப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்புக் கவனம் குவித்து அவற்றை தொழில்மயமாக்கும் பணியில் ஆர்வம் காட்டினார். ஜிங்ஜியாங், கான்சு உள்ளிட்ட பகுதிகள் லாபமீட்டும் வர்த்தக கேந்திரங்களாக மாற்றியமைக்கப்பட்டன.

விசித்திரம் என்னவென்றால், சந்தைப் பொருளாதாரத்தை விரும்பி ஏற்றுக்கொண்டபிறகும்கூட அவ்வப்போது மாவோவை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி. ஹூ தான் பங்குபெறும் கூட்டங்களில் உரையாடும்போது சில சமயம் மார்க்சியத்தையும் உரையில் இழுத்து வருவார். ’உலகம் முழுவதும் பல துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சீனாவும் புதிய சவால்களை, புதிய பிரச்னைகளை, புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மார்க்சிய சித்தாந்தத்தை வாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கட்சி கருதுகிறது.’

ஹூ குறிப்பிடும் மார்க்சியர்களில் மார்க்ஸ், லெனின், மாவோ மட்டுமல்லாமல் டெங்கியோபிங்கும் அடங்குவார். மாவோவும் வேண்டும். டெங்சியோபிங்கும் வேண்டும். இதில் உள்ள முரண் ஹூவை பாதிக்கவில்லை. ’இவர்களது சித்தாந்தங்களை நாம் வளர்த்தெடுக்கவேண்டும். மாற்றங்களோடு சேர்ந்து நாமும் பயணம் செய்யவேண்டும். சீனாவில் கம்யூனிசம் வளர பாடுபடவேண்டும். வளமான ஒரு சமூகத்தை உருவாக்க முனையவேண்டும்.’

அதே சமயம், சீனர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கலாசாரமும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் ஊழல், மேலை நாட்டு கலாசாரத்தைப் பின்பற்றியதால் ஏற்பட்ட கலாசார தேக்கம், போதை மருந்துகளுக்கு அடிமையாதல், பாலியல் ஒழுக்கீனங்கள், துளிர் விடும் மதப் பிற்போக்குத்தனம் ஆகியவை பற்றிய புகார்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இளைஞர்களுக்கு அறம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் எடுத்துரைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உலகமயமாக்கலின் விளைவுதான் இது என்பது ஹூவுக்குத் தெரியாமல் இல்லை. சீனர்களின் நலனுக்காக ஹூ முன்வைத்த அறம் சார்ந்த முழக்கம், Eight Honours and Eight Shames என்று அழைக்கப்பட்டது. ஹூவின் எட்டு அம்சத் திட்டம் என்று இது அழைக்கப்பட்டது. ஒருவரது பணி, நடவடிக்கை மற்றும் நோக்கத்தை அளவிட இந்த எட்டு அம்சங்கள் ஒரு அளவீடாக இருக்கும் என்றார் ஹூ. குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இதனை கடைபிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த எட்டு அம்சங்கள். 1) நாட்டை, நேசி, நாட்டுக்கு பங்கம் விளைவிக்காதே. 2) மக்களுக்கு சேவை செய், அவர்களை ஏமாற்றாதே. 3) அறிவியலை பின்பற்று, அறியாமையை அகற்று. 4) சோம்பேறித்தனத்தை ஒழி, அக்கறையுடன் பணியாற்று. 5) ஒற்றுமையை வளர்த்துக்கொள், உதவி செய், அடுத்துவரை ஏமாற்றி லாபம் சம்பாதிக்காதே. 6) நேர்மையாகவும் உண்மையாகவும் இரு, லாபத்துக்காக அறத்தை விட்டுக்கொடுக்காதே. 7) சட்டத்தை மதி 8. கடினமான உழைப்பு, எளிமை இரண்டையும் கடைபிடி. ஆடம்பரங்கள் வேண்டாம்.

உலக அரங்கில் சீனா பொருளாதார ரீதியில் முதலிடம் வகிக்கவேண்டும் என்பதுதான் ஹூவின் நீண்ட கால கனவு. பிற கனவுகளைக் காட்டிலும் இதையே அவர் முதன்மைப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறார். இது சாத்தியமாகவேண்டுமானால் தற்போதைய முதலாளித்துவ, உலகமய சூழலுக்கு ஏற்ற தத்துவத்தை மட்டுமே உயர்த்திப்பிடிக்கவேண்டும். இதன் பொருள் மாவோவை முற்றிலுமாக கைவிடவேண்டும் என்பதுதான்.

மாவோவின் ஆன்மாவை அகற்றிவிட்டு அவர் நிழலை மட்டும் ஓர் அடையாளத்துக்காக வைத்துக்கொண்டார் டெங்சியோபிங். அந்த நிழலையும் ஹூ ஜிண்டாவ் இப்போது அகற்றவேண்டியிருக்கும். 2006ம் ஆண்டு வெளிவந்த வரலாற்று பாடப்புத்தகங்கள் இதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த காலங்களில் வெளிவந்த புத்தகங்களைக் காட்டிலும் இந்த முறை கம்யூனிசம், சோஷலிசம் குறித்த அறிமுகம் குறைவாகவே அளிக்கப்பட்டிருந்தது. வரலாற்றை பாடமாக படிக்கும் உயர் கல்வி மாணவர்களுக்கு சோஷலிச சித்தாந்தம் குறித்து மிக சுருக்கமான அறிமுகமே கிடைக்கும். 1979ல் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டதற்கு முந்தைய காலகட்டம் பற்றி ஒரே ஒரு வரி செய்திதான் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ பற்றியல்ல, முதலாளித்துவம், முதலாளித்துவப் பாணி உற்பத்தி முறை, நவீன பொருளாதாரம் பற்றித்தான் எதிர்கால மாணவர்கள் அதிகம் படிக்கப்போகிறார்கள். ஹூ ஜிண்டாவ் அரசாங்கமும் இதைத்தான் விரும்புகிறது.

கம்யூனிச, சோஷலிச சித்தாந்தத்துக்கு மாற்றாக முதலாளித்துவத்தையும் கட்டுப்பாடற்ற வர்த்தகத்தையும் தழுவிக்கொண்டதன் மூலம், சீனாவின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியிருப்பதாக எழுத்தாளர் வில்லியம் ஹிண்டன் கருதுகிறார்.

‘டெங்கின் தலைமையில் சீனா சுதந்தரச் சந்தையை நோக்கி முன்னேறும்போது, வெளிநாட்டு மூலதனத்துக்கு கதவு திறக்கப்படும்போது, உலகப் பொருளாதாரத்துடன் மேலும் நெருக்கமாகப் பின்னிப் பிணையும்போது, அது தவிர்க்கவியலாதபடி துன்புறும்.’ ‘புதிய சந்தைப் பொருளாதாரத்தால் உந்தப்பட்டு லட்சக்கணக்கானோர் தனது பக்கத்திலிருப்பவரைக் கொண்டு தாம் முன்னேற முனைகையில் ஊழல் நோய் பரவும். மேற்கத்தியக் கலாசாரம் ஒவ்வொன்றிலும் ஊடுறுவி ஆதிக்கம் செலுத்துகையில் கலாசாரப் பின்னடைவும், தார்மீகச் சீரழிவும் ஏற்படும்.’

‘பணக்காரர்களும், சக்திமிக்கவர்களும் மேலும் பணக்காரர்களாகவும், மேலும் சக்திமிக்கவர்களாகவும் ஆகும்போது முந்தைய பங்குதாரர்களான விவசாயிகள் அனைத்து நிகர மதிப்பையும் இழந்து சந்தையில் விற்பதற்கு தமது உழைப்புச் சக்தியைத் தவிர வேறு எதுவுமின்றி நுழைவர்.’ ‘போட்டி அதிகமாகி, மந்த நிலை ஆழமாகி, ஒரு நாட்டைத் தொடர்ந்து மற்றொரு நாட்டை தாழ்வு நிலை ஆக்கிரமித்து, உலக மோதல்கள் கூர்மையடையும்.’

‘1949ல் சீனா புரட்சியில் வெற்றி பெறுமுன் அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனிய பிரபுத்துவ முதலாளித்துவ நாடாக இருந்தது. தற்போது, சீனா விரைவான திருப்பத்துடன் அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனிய, பிரபுத்துவ முதலாளித்துவ தகுதியுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது. இது துயரமானது.’

0

மருதன்

வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

0

ஹரன் பிரசன்னா

நானாவதி கொலை வழக்கு

பெண்களால் தான் உலகில் பாதி பிரச்சனை! பொதுவாக கொலைக்கான காரணங்களைப் பார்த்தால் அது ஒரு பெண் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும். சில்வியாவால் ஒருவன் கொலை செய்யப்பட்டான், மற்றொருவன் சிறைக்குச் சென்றான். கொலை செய்தவன் கவாஸ் மெனக்ஷா நானாவதி (சுருக்கமாக நானாவதி). கொலை செய்யப்பட்டவன் பிரேம் பகவான்தாஸ் அகுஜா (சுருக்கமாக அகுஜா). இந்தக் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது 1959 ஆம் ஆண்டு. அந்த சமயத்தில் நானாவதி மற்றும் அகுஜா என்ற பெயர்கள் நாடு முழுவதும் பிரபலம். எந்த அளவுக்கு என்றால், அகுஜா டவல் துண்டுகளும், நானாவதி விளையாட்டு கைத் துப்பாக்கிகளும் சந்தையில் அமோகமாக அன்று விற்பனையாயின.

இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகுதான் இந்திய அரசாங்கம் ஜூரி முறையை (நடுவர் குழு முறையை) ரத்து செய்தது. கொலையுண்ட அகுஜா சிந்தி சமுதாயத்தை சேர்ந்தவன். கொலை செய்த நானாவதி பார்சி சமுதாயத்தை சேர்ந்தவன். வழக்கு விசாரணையின் போதும் சரி, அதற்கு பிறகும் சரி உயர் மட்ட அரசியல் தலையீடுகள் இருந்தன. அன்றைய பாரதப் பிரதமர் நேரு, பாம்பே ஆளுநர் விஜயலட்சுமி பண்டிட் (இவர் நேருவின் சகோதரி) போன்றவர்கள்கூட தலையிட வேண்டிய அவசியம் நேரிட்டது. போதாக்குறைக்கு பாம்பே உயர் நீதிமன்றத்துக்கும் மும்பை மாகாண சட்டசபைக்கும் மோதல் நடக்காத குறை.

யார் இந்த சில்வியா? அவள் ஒரு வெள்ளைக்காரப் பெண். அழகானவள். நானாவதி கப்பல் படைத் தளபதி. அவனும் பார்ப்பதற்கு மன்மதன் மாதிரி தான் இருப்பான். அதுவும் அந்த ராணுவ சீருடையில் நானாவதி ரொம்பவும் கம்பீரமாக இருப்பான். கப்பல் படையில் முக்கியமான பொறுப்பில் இருந்தான். அதனால் இந்திய ராணுவ அமைச்சகத்தின் உயர் மட்டக் குழுவில் இடம் பெற்றிருந்தான். ராணுவ அமைச்சர் கிருஷ்ண மேனன் லண்டன் சென்ற போது நானாவதியும் சென்றான். நானாவதி வகித்திருந்த உயர் பதவியின் காரணமாக நேரு குடும்பத்தாரிடம் பழக்கம் ஏற்பட்டது. பின்பு அது நட்பாக மாறியது.

இப்படியிருந்த சூழ்நிலையில் தான் உத்தியோக நிமித்தமாக லண்டனுக்கு சென்ற நானாவதிக்கு சில்வியாவின் அறிமுகம் கிடைத்தது. 18 வயதான சில்வியா, 24 வயதான நானாவதியை சந்தித்தார். சினிமாவில் வருவது போல் சந்திப்பு காதலாக மாறியது. நானாவதி தன்னுடைய ராணுவப் பணியின் போது கடல் பிரயாணத்தில், தான் சந்தித்த வீர தீர சாகசங்களையெல்லாம் சொல்லக் கேட்ட சில்வியா சிலிர்ப்புற்றாள். நானாவதி இந்தியா திரும்பும் முன்னர், சில்வியாவிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்று கேட்டான். சம்மதம் தெரிவித்த சில்வியாவுக்கும் நானாவதிக்கும் இங்கிலாந்தில் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் நடைபெற்றது.

நானாவதி, சில்வியா திருமணம் 1949 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணம் நடந்த கையோடு புது மணத் தம்பதியினர் இந்தியாவுக்குத் திரும்பினர். பம்பாயில் குடி புகுந்தனர். நானாவதி, சில்வியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்ததன. இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு பெண் குழந்தை. இந்நிலையில், நானாவதி-சில்வியா தம்பதியரின் அமைதியான வாழ்க்கையில் அகுஜா என்ற புயல் வீச ஆரம்பித்தது.

அகுஜா! இவன் ஒரு பணக்காரன். யுனிவர்சல் மோட்டார் நிறுவனத்தின் மேலாளர். அந்நாளைய ரோமியோ. மிடுக்கான தோற்றம், பெண்களைக் கவரும் வசீகரப் பேச்சு. பெண்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் இவனுக்குத் தாங்காது. பெண்களுடைய கஷ்டத்தைக் காதுகொடுத்து கேட்பான். இதைத்தான் பல ஆண்கள் தங்கள் மனைவியுடன் செய்ய தவறி விடுகின்றனர். இவனுடைய கரிசனத்தை பார்த்த பெண்கள் கரைந்து போய் உருகி விடுவர் அல்லது உருகிப் போய் கரைந்து விடுவர்.

அகுஜாவின் முக்கிய வேலையே பார்ட்டிக்கு போவதுதான். அதுவும் பெரிய இடத்துப் பார்ட்டிகள். முக்கியமாக ராணுவத்தினருக்காக நடக்கும் விருந்துகள். அங்கு தான் அகுஜாவுக்கு பல ராணுவ அதிகாரிகளின் மனைவிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில பேரிடம் அவனுக்கு நெருங்கிய தொடர்பும் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அப்படித்தான் அகுஜாவுக்கு சில்வியாவுடனான சந்திப்பு ஏற்பட்டது. அகுஜாவும் நானாவதியும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நண்பர்கள். நானாவதி, சில்வியா, அகுஜா, அகுஜாவின் சகோதரி மாமேயி அனைவரும் ஒன்றாகச் சுற்றித் திரிந்தனர். உல்லாசமாக காலத்தை கழித்தனர்.

நானாவதியின் துரதிர்ஷ்டம் அவனால் தொடர்ந்து குடும்பத்துடன் இருக்க முடியாது. அவனுடைய உத்தியோகம் அப்படி. வருடத்தில் பாதி மாதங்கள் அவன் ராணுவக் கப்பலில் இருந்தாக வேண்டும். விடுமுறை நாட்களில் தான் அவன் குடும்பத்தாருடன் இருக்க முடியும். சில்வியாவோ தன்னுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு தனக்கு பரிச்சயம் இல்லாத வேறொரு நாட்டில் குடி புகுந்திருக்கிறார். கணவன் தான் தனக்கு சொந்தம், கணவன் இல்லாத சமயத்தில் தன்னுடைய சுற்றம் வெறிச்சோடியிருக்கும். அவரச ஆபத்துக்குக் கூட ஆறுதல் சொல்ல சொந்தம் கிடையாது. இந்தச் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட அகுஜா சந்தர்ப்பத்தை தனக்கு சாதமாக பயன் படுத்திக் கொண்டான். சில்வியாவுடன் நட்பாகப் பழகினான். நட்பு சில நாட்களில் காதலாக மாறியாது. இருவரும் நானாவதி இல்லாத சமயத்தில் கணவன் மனைவி போல் வாழ்ந்தனர். அகுஜா இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்ற நிலைக்கு ஆளானாள் சில்வியா. அகுஜாவிடம் நானாவதியை விவாகரத்து செய்துவிட்டு அவனுடன் வந்துவிடுவதாக சொன்னாள். தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வேண்டிக் கொண்டாள், வற்புறுத்தினாள்.

அகுஜா இப்பொழுது பின் வாங்கினான். சில்வியாவை சமாதானப் படுத்தினான். நாம் ஒரு மாத காலம் சந்திக்காமல் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் நம்முடைய உண்மையான காதல் வெளிப்படும் என்று ஏதோ சாக்கு போக்கு கூறினான். அப்பொழுதுதான் சில்வியாவுக்கு உண்மை புரிந்தது. தான் ஏமாந்து விட்டோம் என்று உணர்ந்தாள்.

சிறிது நாட்களில் தன்னுடைய விடுமுறை நாட்களை குடும்பத்தாருடன் செலவிட வீடு திரும்பினான் நானாவதி. வீட்டுக்கு வந்த நானாவதிக்கு சில்வியாவின் செயல்பாடும் பேச்சும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. சில்வியாவிடம் பெரும் மாறுதல். அவள் பட்டும் படாமல் இருந்தாள். நானாவதி, விஷயம் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள சில்வியாவை தோண்டித் துருவினான். இறுதியாக சில்வியா நடந்த விவரத்தை நானாவதியிடம் தெரிவித்தாள்.

நானாவதி நடந்ததைக் கேட்டு மிகவும் வருந்தினான். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சில்வியாவிடம் தெரிவித்தான். நீ தப்பு எதுவும் செய்யாத போது எதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி நானாவதியை ஆசுவாசப்படுத்தினாள் சில்வியா. நிலைமையை உணர்ந்து கொண்ட நானாவதி நடைமுறைக்கு சாத்தியமான ஒரு முடிவை தீர்மானித்தான்.

சில்வியாவையும், குழந்தைகளையும் சினிமா தியேட்டருக்கு அழைத்து சென்றான். அவர்களை அங்கு படம் பார்க்கச் சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் எங்கே செல்கிறான் என்று சில்வியா கேட்டதற்கு, நீங்கள் படம் பார்த்து முடியுங்கள் நான் திரும்பி வந்து கூட்டிச் செல்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு தியேட்டரை விட்டுச் சென்றான்.

நானாவதி தன்னுடைய கப்பலுக்கு சென்றான். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கப்பலின் ஆயுத கிடங்குக்குள் சென்றான். அங்கிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். மேலும் தேவையான அளவு தோட்டாக்களை எடுத்துக் கொண்டான். பின்னர் அவன் அகுஜாவின் அலுவலகத்துக்குச் சென்றான். நானாவதி சென்ற நேரம் மதிய வேளை. அகுஜா அங்கு இல்லை. அகுஜா வீட்டுக்குச் சென்றுவிட்டதாக அவனுடைய சிப்பந்தி தெரிவித்தான். நானாவதி அகுஜா வீட்டிற்குச் சென்றான். அகுஜா அப்போதுதான் குளித்து விட்டு, டவலுடன் குளியலறையிலிருந்து வெளியே வந்தான்.

நீ சில்வியாவை திருமணம் செய்து கொண்டு அவளது குழந்தைகளை பார்த்துக் கொள்வாயா என்று நானாவதி அகுஜாவைப் பார்த்துக் கேட்டான். என் கூட படுத்திருந்த ஒவ்வொரு பெண்ணையும் நான் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா என்று பதிலுக்கு கேட்டான் அகுஜா. அங்கு உடனே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இரண்டு நொடிகளுக்குள்ளாக மூன்று தோட்டாக்கள் அகுஜாவின் உடலில் பாய்ந்தது. அகுஜா உயிரிழந்தான். அகுஜா கொலை சம்பவத்தின் போது நானாவதி, அகுஜாவைத் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை.

நானாவதி கப்பல் படையில் தன்னுடைய தலைமை அதிகாரியைச் சந்தித்து தான் ஒரு கொலை செய்து விட்டதாக தெரிவித்தான். அந்த அதிகாரி காவல் துறையினரிடம் சரண் அடையுமாறு கூறினார். நானாவதி மும்பை காவல் துறை துணை ஆணையரிடம் நடந்த விவரத்தை தெரிவித்து சரண் அடைந்தான். காவல் துறை வழக்குப் பதிவு செய்து, மும்பை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

நீதிமன்றத்தில் நீதிபதி ரதிலால் பாய்சந்த் மேத்தா, நானாவதியைப் பார்த்து நீ உன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா என்று கேட்டதற்கு, நானாவதி நான் குற்றம் இழைக்கவில்லை என்று கூறினான். விசாரணை ஆரம்பமானது. நானாவதி கொலை வழக்கில், 9 நபர் கொண்ட ஜூரி (நடுவர் குழு) அமைக்கப்பட்டது. நானாவதி கோபம் தூண்டப்பட்டு ஆத்திரத்தால் அறிவை இழந்து சந்தர்ப்ப வசத்தால் அகுஜாவை கொலை செய்தானா (Culpable homicide not amounting to murder) அல்லது அகுஜாவை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு கொலை (Preplanned murder) செய்தானா என்று ஜூரி முடிவு செய்ய வேண்டும். நானாவதி சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்தான் என்று முடிவு செய்யப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் (இ.பி.கோ 304 ஆம் பிரிவு). திட்டமிட்டு கொலை செய்தான் என்று முடிவானால் நானாவதிக்கு தூக்குஙம தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் (இ.பி.கோ 302 ஆம் பிரிவு).

அரசுத் தரப்பில் நானாவதி திட்டமிட்டுதான் அகுஜாவை கொலை செய்தான் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இல்லை நானாவதி சந்தர்ப்பவசத்தால் தான் அகுஜாவை கொலை செய்தான் என்று அவனுக்கு ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். கரல் கண்டல்வாலா என்ற பார்சி வழக்கறிஞர் நானாவதிக்காக ஆஜரானார். பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அரசு தரப்புக்கு ஆதரவாக வாதாடினார். விசாரணை முடிந்த பிறகு ஜூரி 8:1 என்ற விகிதத்தில் நானாவதி குற்றமற்றவர், நிரபராதி என்ற அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.
அமர்வு நீதிபதி ஜுரியின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவ்வழக்கை பாம்பே உயர் நீதிமன்றத்தின் ஆலோசனை வேண்டி அனுப்பி வைத்தார்.

பாம்பே உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அமர்வு நீதிபதி, ஜூரிக்கு வழக்கு விசாரணையில் தகுந்த முறையில் வழிகாட்டவில்லை.

1. குறிப்பாக அகுஜாவை சுட்டது தற்செயலான விஷயம்தான், அது திட்டமிட்டு செய்யப்படவிலை என்று நிரூபிக்க வேண்டியவன் நானாவதி. ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.

2. அகுஜாவை கொல்வதற்கு, நானாவதிக்கு சந்தர்ப்பவச தூண்டுதல் எப்பொழுது ஏற்பட்டது? சில்வியா நானாவதியிடம் உண்மையை சொன்ன போதா அல்லது நானாவதி அகுஜாவை அவனுடைய இல்லத்தில் சந்தித்தப் போதா?

3. அமர்வு நீதிபதி, ஜூரிக்கு வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் தருவாயில் தூண்டுதல் (Provocation) என்பது சந்தர்ப்பவசத்தால் குற்றம் இழைக்கத் தூண்டும் காரணி கொலை செய்தவரிடமோ அல்லது கொலை செய்யப்பட்டவரிடமோ தான் வரவேண்டிய அவசியம் இல்லை மூன்றாவது நபரிடமிருந்து கூட வரலாம் என்று தவறாக வழிகாட்டியுள்ளார்.

4. நானாவதி குற்றவாளி இல்லை என்று நியாயத்துக்குட்பட்ட ஒரு சாதரண மனிதனுக்குக் கூட ஐயம் திரிபுர நிரூபிக்கப்பட வேண்டும்.

இவை நான்கும் ஜூரியின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த உயர் நீதிமன்றம், ஜூரியின் முடிவைத் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் வழக்கை மறுவிசாரணை செய்ய, தானே முன் வந்தது. ஊடகத்தில் வரும் செய்திகளுக்கும் பொது மக்களின் கருத்துக்கும் ஆட்பட்டு ஜூரி முடிவெடுப்பதால் வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைப்பதில்லை என்று முடிவு செய்த இந்திய அரசு நானாவதி வழக்குக்குப் பிறகு ஜூரி முறையை ரத்து செய்தது.

பாம்பே உயர் நீதிமன்றத்தில் நானாவதி தரப்பிலிருந்து, சந்தர்ப்பவசத்தால்தான் கொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கு பின் வரும் வாதம் முன்வைக்கப்பட்டது. நானாவதி அகுஜாவை அவனது இல்லத்தில் சந்தித்து, சில்வியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான். அதற்கு அவன் தன் கூட படுத்திருந்த பெண்களை எல்லாம் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியபடியே,  காக்கி கவரில் வைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுக்க எத்தனித்தான். அதை யூகித்துக்கொண்ட நானாவதி அகுஜாவை தடுப்பதற்காக முயன்றபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நிகழ்ந்து விட்டது. அகுஜா உயிரிழந்தான்.

அரசுத் தரப்பு மறுத்தது. நானாவதிக்கும் அகுஜாவுக்கும் துப்பாக்கியைப் பிடுங்குவதில் சண்டை ஏற்பட்டிருந்தால், அகுஜா இடுப்பில் கட்டியிருந்த துண்டு கீழே அவிழ்ந்து விழுந்திருக்கும். ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை. சில்வியா தனக்கும் அகுஜாவுக்கும் ஏற்பட்ட உறவை பற்றி சொல்லிய பிறகும் எந்த வித சலனுமும் இல்லாமல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை சினிமா தியேட்டரில் கொண்டு விட்டு, தன்னுடைய கப்பலுக்குச் சென்று ஆயுத கிடங்கிலிருந்து போலியான காரணத்தை சொல்லி அங்கிருந்து கைதுப்பாக்கியையும் தேவையான தோட்டாக்களையும் எடுத்துக் கொண்டு நிதானமாக அகுஜாவின் வீட்டுக்கு நானாவதி சென்றுள்ளான். மேலும் அகுஜாவின் வேலைக்காரர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து மூன்று தோட்டாக்கள் காலதாமதமின்றி அடுத்தடுத்து சுடப்படும் சத்தம் கேட்டதாகவும் தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளான். அகுஜா சுடப்பட்ட பிறகு நானாவதி அகுஜா வீட்டிலிருந்து செல்லும்போதுகூட, அங்கிருந்த அகுஜாவின் சகோதரியிடம் நடந்தது விபத்து என்று கூட தெரிவிக்காமல் சென்றுவிட்டிருக்கிறான். கப்பல் படை தலைமை அதிகாரியிடமும், காவல் துறை துணை ஆணையரிடமும் நான் தான் அகுஜாவைக் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறான். இந்தச் செயல்களை வைத்து பார்க்கும்பொழுது நானாவதி சந்தர்ப்பவசத்தால் அகுஜாவைக் கொன்றிருக்கிறான் என்று எப்படி சொல்லமுடியும்?

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் நானாவதியை குற்றவாளி என்று அறிவித்து, ஆயுள் தண்டனை அளித்தது. நானாவதி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். இதற்கிடையில் பாம்பே மாகாண ஆளுநரான விஜயலட்சுமி பண்டிட், நீதிமன்றத் தீர்ப்பை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவனை கப்பல் படையின் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இச்செயல் நீதிமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஒரு பூசலை ஏற்படுத்தியது. இறுதியில் மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. நானாவதி சிறையில் அடைக்கப்பட்டான்.

நானாவதிக்கு மக்கள் ஆதரவு இருந்தது. மக்கள் நானாவதி செய்தது சரியே என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். கூடவே நானாவதிக்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது. இதன் காரணமாக நானாவதிக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க எத்தனித்தது இந்திய அரசு. ஆனால் அப்படி விடுதலை செய்தால் சிந்தி சமுதாயத்தைப் (அகுஜா சிந்தி சமுதாயத்தை சேர்ந்தவன்) பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது. முடிவாக அரசாங்கத்துக்கு ஒரு யோசனை தோன்றியது.

பாய் பிரதாப் ஒரு சிந்திக்காரர். இவர் ஒரு வியாபாரி. முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் கூட. இவர் தன்னுடைய வர்த்தகத்துக்காக அரசாங்கத்தில் கொடுக்கப்பட்ட ஏற்றுமதி உரிமத்தை துஷ்பிரரோயகம் செய்திருக்கிறார். அதன் காரணமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பாய் பிரதாப்பை தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்வதன் மூலம், நானாவதியை விடுதலை செய்வதில் ஏற்படும் சிந்தி சமுதாயத்தினரின் எதிர்ப்பை சமாளித்துவிடலாம் என்று இந்திய அரசாங்கம் முடிவெடுத்தது.

நானாவதி சிறைக்குச் சென்று மூன்றாண்டுகள் தான் ஆகியிருக்கும். நானவதியும், பாய் பிரதாப்பும் ஒரு சேர 1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலையான பிறகு நானாவதி, மனைவி சில்வியா மற்றும் 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை விட்டு விட்டு கனடா நாட்டில் குடி புகுந்தான்.

நானாவதியின் கொலை வழக்கை மையமாக வைத்து, மக்கள் அதை மறக்காமல் இருக்க அவ்வப்பொழுது திரைப்படங்களும், புத்தகங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

0

S.P. சொக்கலிங்கம்

விருதுநகர் – ஒரு பேராசிரியரின் வித்தியாசமான அனுபவம்

1

ஒரு நண்பர் மூலம் விருதுநகர் எம்.எல்.ஏ. திரு. மாஃபாய் பாண்டியராஜன் அவர்களுடன் அறிமுகம் இருந்தாலும், நேரில் சந்திக்க அவ்வளவாக வாய்ப்புகள் இருந்ததில்லை. எம்.எல்.ஏ என்னைப் பார்க்க விரும்புவதாக அவர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட, அதையொட்டி விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டேன்.  ஓர் அரசியல்வாதி போல் அவர் இல்லை.  இந்தியாவின் மிகப்பெரிய மனிதவளத் தேடல் மற்றும் மேம்பாடு நிறுவனத்தைக் கட்டமைத்து, அதை வெற்றிகரமாக நடத்திவரும் ஒரு மனிதராகவே அவர் தோன்றினார். எம்.எல்.ஏ அலுவலகங்களுக்கே உரிய சில சாமுத்திரிகா லட்சணங்களை அங்கே பார்க்க முடியவில்லை. கரை வேட்டிக்காரர்களைவிட,  இளைஞர் கூட்டமே அதிகம். கணினிகளின் முன் உட்கார்ந்து பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, அவரைப் பொறுத்தவரை வருமானமீட்டும் வாய்ப்பல்ல. மாஸ்லோவின் மானுடத் தேவைப் படிநிலைகளின் உயர்நிலையான “ஆத்ம மேன்மைக்காக” அவர் தனது காலத்தையும், காசையும் விருதுநகரில் செலவழித்துக் கொண்டிருப்பதாகப்பட்டது.

என்னை அவர் அழைத்ததற்குக் காரணம் இருக்கிறது. தனது தொகுதியையும், தனது தொகுதி மக்களையும், அவர்களது வாழ்வையும் சரியான கோணத்தில், அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள அவர் விரும்பினார். தொகுதி முழுதிலும், சமூகப் பொருளாதாரப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நடத்தவும் விரும்பினார். தன்னுடைய தேவையை, விருப்பத்தை, சுற்றி வளைக்காமல் மிக ரத்தினச் சுருக்கமாக திரு. பாண்டியராஜன் எடுத்துச் சொன்னார். “நான் போட்டியிடும் போதே என் தொகுதியைப் பற்றி, அரசியல் கடந்த புரிதல் இருந்திருக்கவேண்டும். கடந்த ஒன்பது மாதத்தில் தொகுதியில் அலைந்து, அலைந்து அனுபவம் மூலமாக பலவற்றை அறிந்துகொண்டேன். அதில் காலமும் பொருளும் விரயமாவது போல் தெரிகின்றது. என்னுடைய புரிதல் அறிவார்ந்ததாக இருக்கவேண்டும். நான் எங்கிருந்தாலும் விழித்தெழும் போது என் தொகுதியில் விழிக்கும் மாதிரி என் தொகுதியைப் பற்றிய வரைபடமும், தகவல்களும் என் கணினியிலும் செல்போனிலும் இருக்கவேண்டும். தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும், யாருடைய உதவியும் இல்லாமல் தெரிந்துகொள்ளும் முறை எனக்கு வேண்டும். ஒரு நபரிடமிருந்தோ, கிராமத்திலிருந்தோ கோரிக்கை ஒன்று வந்துவிட்டால் அக்கிராமம் பற்றிய தகவல்கள் என் மனபிம்பத்தில் தன்னிசையாக ஓட வேண்டும். ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்ற முறையில் எனக்கு சில வரையறைகள் உண்டு. அதையும் தாண்டி என்தொகுதி மக்கள் என்னையும், நான் அவர்களையும் சென்றடைய வேண்டும். I need a methodology to achieve this”.

பங்கேற்பு முறைகளில் (Participatory Methods-PRA) பரிச்சயமும், நம்பிக்கையும் கொண்டிருந்த எனக்கு, இது மாதிரியான பணிகளில், அதுவும் எண்ணிக்கை (Head Counting) சார்ந்த புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளின் வரையறை புரிந்திருந்தது. எனவே, மையப்படுத்திய, பொருட்செலவில்லாத, அதே நேரத்தில் நம்பகத்தன்மை மிக்க மாற்றுத் தகவல் சேகரிப்பு முறைகளை திரு. பாண்டியராஜன் அவர்களிடம் பரிந்துரைத்தேன்.

நான் பரிந்துரைத்த செயல்முறைகளின் அடிப்படைகள் இவை.

  • தகவல் சேகரிப்பு முறைகள் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கத்தக்க அணுகுமுறை கொண்டதாக இருக்க வேண்டும்.
  • தேவைப்படும் பட்சத்தில் சில வேலைகளுக்கு satellite images கூட பயன்படுத்த வேண்டியிருக்கும். கணினி பயன்பாடு அதிகமிருக்கும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
  • சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஏதாவதொரு வடிவில், உள்ளடக்கத்துடன் இணையத்தைப் பயன்படுத்தி பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும். தகவல்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற உணர்வு ஆரம்பத்திலே உருவானால்தான் தகவல் சேகரிப்பில் சிரத்தை உருவாகும். நம்பகத்தன்மை மேம்படும்.
  • பணி முடிவடையும் போது இதை வெளியிலிருந்து வந்த ஒரு ஆலோசகர்/ நிபுணர் குழு செய்து கொடுத்தது என்றில்லாமல், அனைவரும் உடனிருந்து செய்தோம் என்ற குழு உணர்வு எம்.எல்.ஏ. அலுவலகப் பணியாளர்களிடமும், அவரைச் சார்ந்தவர்களிடமும்  ஏற்படவேண்டும்.

திரு. பாண்டியராஜன் அவர்கள் விரும்பிய சட்டமன்ற தொகுதி தகவல் தொகுப்பு (Constituency Profile) எப்படிச் செய்யப்படவேண்டுமென்பதற்கு முன்மாதிரிகள் அதிகம் இல்லாததால், எங்களுக்கான முன்மாதிரிகளை நாங்கள்தான் உருவாக்கவேண்டியிருந்தது. ஒன்றிரண்டு கிராமப் பஞ்சாயத்துகளில் எல்லாக் குடும்பங்களையும் உள்ளடக்கிய குடும்பத் தகவல் (Household Information) தொகுப்புகளையும், தொகுதி உள்ளடக்கிய கிராமத் தகவல் (Village Profiles) தொகுப்புகளையும், இதில் அரசுத்துறைகள் தரும் தகவல்களை ஒருங்கிணைத்து, அரசுத் தகவல்களுக்கு எப்படி மதிப்புக் கூட்டுவது என்பது பற்றியும் சிந்திக்கப்பட்டது. எங்கள் செயல்முறைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், அணுகுமுறைகளை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாங்கள் எப்படிச் செய்ய ஆரம்பித்தோம் என்ற செயல்முறை விளக்கம் இங்கே தேவையில்லை. நாங்கள் பணியை ஆரம்பித்தவுடன் எங்களுக்கு கிடைத்த ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் எங்களுக்குப் பாடங்கள். ஆச்சரியம் என்னவென்றால் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையும், தாக்குப் பிடிக்கும் திறமும் தான். அதிர்ச்சி என்னவென்றால் மக்களை புரிந்து கொள்ளமுடியாத அல்லது புரிந்து கொள்கின்ற மறுக்கின்ற நமது மட்டித்தனம். நமது என்பதில் அரசு அதிகாரவர்க்கத்திற்கே அதிகப் பங்கு.

ஒரு முயற்சியில் இறங்கும் முன் அதைப் பற்றிய பின்புலத் தகவல்கள் இருந்தால் களப் பணியில் தெளிவு உண்டாகுமே என்ற ஆதங்கத்தில் விருதுநகர் தொகுதிக்குட்பட்ட பஞ்சாயத்துக்கள், அதன் உட்கடை கிராமங்கள் பற்றிய தகவல்கள் கேட்டபோது, எம்.எல்.ஏ அலுவலகத்தில் மாட்டிவைக்கப்பட்டிருந்த தொகுதி வரைபடம் உதவியாய் இருந்தது. நமது நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் என்ற பெயரில் சமுதாய முன்னேற்றத்துக்கான உலகின் மிகப் பெரிய நிர்வாகக் கட்டமைப்பை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருந்தும், அதில் தொழில்நுட்பக் கல்விமுடித்த, துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்டவர்கள் பணியிலமர்த்தப்பட்டிருந்தும், அவர்களால் இதுவரைக்கும் முழுமையான ஒன்றிய வரைபடத்தை உருவாக்கித் தரமுடியவில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தங்கள் பணிகளுக்கென்று உருவாக்கிக் கொண்ட வரைபடங்கள்தாம், பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் பயன்படுகின்றது. வேறு துறையினர் தங்கள் தேவைகளுக்கு உருவாக்கிய ஒரு limited purpose map மாற்றுருவாக்கமே செய்யப்படாமல் பயன்படுத்தப்படுவதற்கு எம்.எல். ஏ அலுவலகத்தில் இருந்த, அரசிடமிருந்து பெறப்பட்ட அந்த வரைபடமே அத்தாட்சி.

விரிவான தகவல் சேகரிப்புக்கு ராம்கோ சிமெண்ட் ஆலையின் பின்புறம் அமைந்துள்ள, விருதுநகர் ஒன்றியத்தைச் சேர்ந்த, தம்பநாயக்கன்பட்டி கிராமப் பஞ்சாயத்து  பரிந்துரைக்கப்பட்டது. தம்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து, அதனுடன் சேர்த்து, 1.எதிலப்பன்பட்டி, 2.காமராஜர்புரம், 3.சேடபட்டி, 4.அம்மாபட்டி மற்றும் 5.துருசுபட்டி@துரைராஜபுரம் (தற்போது யாரும் குடியிருக்கவில்லை) என்று ஆறு கிராமங்களை உள்ளடக்கியது. 667 வீடுகளும், 3461 மக்களும் கொண்டிருப்பதாக அரசுத் தரப்பிலிருந்து பெறப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகப் புள்ளிவிவரம் தெரிவித்தது. இந்தப் புள்ளிவிவரம் எப்பொழுது எடுக்கப்பட்டது என்று தெரியாது. ஆனால் நாங்கள் கேட்டபொழுது, இதைத்தான் அரசிடமிருந்து பெறமுடிந்தது என்று எம்.எல்.ஏ அலுவலகப் பணியாளர்கள் சொல்லிவிட்டார்கள். புள்ளிவிவரம் உண்மையா பொய்யா என்பது முக்கியமல்ல. அது குறிப்பிட்ட ஒரு போக்கைப் புரிந்து கொள்ள உதவினாலே போதும். ஆனால் அதைக்கூட அந்த அரசுப் புள்ளிவிவரத்தால் செய்ய முடியவில்லை.

இத்தனைக்கும் புள்ளிவிவரச் சேகரிப்புக்கு கோடிக்கணக்கில் செலவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதை அவர்களும் பயன்படுத்துவதில்லை, பிறருக்கும் தருவதில்லை. அப்படியென்ன சொல்லமுடியாத ரகசியங்கள் அதில் புதைந்துள்ளனவோ தெரியவில்லை. கேட்டால் ஏதோ ஆப்பிரிக்கா கண்டத்ததிலிருந்து இடமாற்றம் பெற்றுவந்தவர் மாதிரி “இங்கேவந்து  நாலைந்து மாதங்கள் தாம் ஆகின்றது” என்பார்கள். சரியான தகவல் சேகரிப்பு தொகுப்பு முறைகளை உருவாக்கி இருந்தால், ஒருமணி நேரம்கூட ஆகாது ஒரு பஞ்சாயத்து யூனியனைப் புரிந்துகொள்ள. சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல எம்.எல்.ஏ.  /எம்.பி. எல்லோருக்கும் பட்டைநாமம்தான் சாத்தபடுகின்றது என்பதற்கு, அங்கிருந்த அரசுப் புள்ளிவிவரங்கேளே சாட்சி.

2

GPS tracking பொருட்டு முதலில் நாங்கள் சென்ற கிராமம் எதிலப்பன்பட்டி. அந்தக் கிராமத்துக்குச் செல்லும் பாதையும், அக்கிராமமும் ராம்கோ சிமெண்ட் ஆலையின் பின்புறச் சுற்றுச் சுவரையொட்டி அமைந்துள்ளது. ஆலையின் உயர்ந்த புகைபோக்கிகளும், சுற்றுச்சுவரும் நிச்சயமாக அவ்வூராரின் மனபிம்பத்தில், மரபணுக்களில் பதிந்துவிட்டிருக்கும். ஆலைக்கும், அவ்வூருக்குமான தொடர்புகளை அறிந்துகொள்வது அன்றைக்கு எங்கள் நோக்கமாக இல்லாவிட்டாலும், இந்திய கட்டுமானத் துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிய ஒரு ஆலைக்கும், அதன் புறக்கடையில் அமைந்த ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கும் ஆக்கபூர்வமான தொடர்புகள் இல்லாமலிருப்பதைக் கண்டபோது கஷ்டமாக இருந்தது. எத்தனை எத்தனையோ வழிகளில் அறம் வளர்க்கும் ராம்கோ நிறுவனம், தன் காம்பவுண்டு சுவரருகில் இருக்கும் ஒரு கிராமத்தின் மீது கரிசனத்தைக் காட்ட மறுத்திருக்காது. அதற்கான வாய்ப்புக்களை உருவாக்க அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது. Corporate Language தெரிந்த திரு.பாண்டியராஜன், அந்த ஆலையின் புகையுனூடே கொஞ்சம் கரிசனத்தையும் இனிமேல் கசியவிட ஆவண செய்யலாம்.

ஐந்து கிராமங்களின் சாலைகளையும், தெருக்களையும் GPS Track எடுத்துமுடிக்க, இருநாட்களில் 12 மணிநேரம் செலவிட்டோம். எங்களைவிட அதிகத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் satellite images ஐப் பயன்படுத்தி இன்னும் குறைவான நேரத்தில் இதைச் செய்திருக்கமுடியும்தான். பங்கேற்பு முறைகளில் Transect Walk என்ற செய்முறை மிக முக்கியமானது. தெருத்தெருவாக நடக்கும் போது கிடைக்கும் ஞானம் ஒப்பற்றது. எங்களுடன் வந்த உள்ளூர்க்காரர்களோடு மட்டும் பேசிக்கொண்டே நடந்தோம். கிராமத் தெருக்களில் நடந்து செல்வது ஞானம் பெறுவதற்கான நல்ல வழி.

கிராமம் என்பது பொதுவான ஒரு சொல்லாடல். வார்த்தை. மனிதர்கள் தோற்றத்திலும், குணத்திலும் வேறுபட்டிருப்பதைப் போன்று கிராமங்களும் வேறுபட்டது என்பது அனுபவம். தெருத்தெருவாக நாங்கள் நடந்தது எங்களின் அனுபவத்தை மேலும் நம்பத்தூண்டியது.

விவசாயத்தை நம்பிய ஜீவனோபாய முறைகள் முற்றிலும் கைவிடப்பட்டு, வேளாண்மை சாராத மாற்று ஜீவனோபாய முறைகளுக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள். இந்த மாற்று ஜீவனோபாய முறைகள் அரசின் மதியூகத்தால் உருவானதல்ல. அரசின் கட்டமைப்பு வசதிகள் மக்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்கமுடியாது. உதாரணமாக சாலைகள், மின்சாரம்  போன்ற கட்டமைப்பு வசதிகளை அரசால் மட்டுமே தரமுடியும். இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தி தூக்கம் கலைவதும், எழுந்து நடப்பதும், குதிரைப் பாய்ச்சலில் ஓடுவதும் அந்தந்த சமூகங்களின் (கிராமங்களின்) உள்வலிமையைப் பொறுத்தும், உள்ளொளியைப் பொறுத்தும் அமைகின்றது. அதை அந்த கிராமங்கள் காட்டியது. கிராமத்துச் சாலைகள், மின்சாரம், நிலத்தடிநீர், பள்ளி, போக்குவரத்து போன்ற கட்டமைப்பு வசதிகள் மீது மக்கள் ஓராயிரம் விதமாக தியானிக்கின்றார்கள். அவர்கள் தியானத்திலிருந்து பெறப்படும் ஞானமும் ஓராயிரம் விதமாக வெளிப்படுகின்றது. அதிலெல்லாம் அழகும், அர்த்தமும் மிளிர்கின்றது, அந்த ஞானமே அவர்களின் ஜீவனோபாயம்.

காமராஜர்புரம் என்ற உட்கடை கிராமத்தைப் பற்றி அரசுப் புள்ளிவிவரம் சொன்னதற்கும் நாங்கள் நேரில் பார்த்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்! மிகச் சமீபகாலத்தில் அங்கே கோடிகோடிகளில் கட்டுமானத்துறையில், நூற்றுக்கணக்கில் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பலவீடுகளின் வடிவமைப்பும், கட்டுமானச் செலவுகளும் எங்களை ஆச்சர்யப்படவைத்தன. கட்டுமானத் துறையில் இம்மாதிரி வெளியிட முதலீடுகளைக் கவர, காமராஜர்புரத்திலோ, அந்தப் பஞ்சாயத்திலோ எந்தத் தலைமையும் திட்டமிட்டு வியூகம் அமைக்கவில்லை. அங்கே கிடைக்கும் நிலத்தடிநீரும், RR நகரில் நடந்து வரும் CBSE பள்ளியும்தான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது. அங்கே புதிய வீடுகளைக் கட்டியவர்கள் தவறான முறையில் பொருளீட்டி அதைச் செய்தமாதிரி தெரியவில்லை. பழங்களைப் பதப்படுத்த, பினாயீல் தயாரிக்கக்கூட இந்த நாட்டில் வரிந்துகட்டி பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால் ஒரு குடும்பத்தின் வாழ்நாள் கனவான, வீடு கட்டுவதைப் பற்றி எந்தவொரு ஆலோசனையும் முறையாகச் சொல்ல ஏற்பாடுகள் நாம் செய்துவைக்கவில்லை. வீடு கட்டும் சாதாரண மக்கள் ஏமாற்றப்படுவதற்கும், அவர்கள் படும் துயரங்களுக்கும் அளவே இல்லை. இலவச வீடுகளைக் கொடுப்பது இருக்கட்டும். இலவசங்களை எதிர்பார்க்காமல் வீடு கட்டுபவருக்கு நாம் என்ன கொடுக்க உத்தேசித்திருக்கின்றோம்? மற்றெல்லா துறைகளிலும், வேளாண்மை, கால்நடை, ஊட்டச்சத்து, ஏன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட விரிவாக்கக் கல்வியும், கவுன்சிலிங்கும் கொடுப்பது நடைமுறை வழக்கமாகிவிட்ட இந்த நாட்டில் சிவில் வொர்க்ஸ்க்கு விரிவாக்கக் கல்வி இல்லாதது மிகப் பெரிய குறையே. வீடு கட்டுவதில் வாஸ்து என்ற ஒன்றைத் தவிர வேறு உருப்படியான கல்விமுறைகள் இல்லைதானே?

சுமாரான சாலைகள், குடிப்பதற்கு ஏற்ற நிலத்தடி நீர், தரமான கல்வி/ மருத்துவ வசதி மின்சாரம் போன்றவை, குறிப்பாக அது இது என்றில்லாமல் ஒரு ஏதுவான சூழ்நிலை (Enabling Environment) அரசு மூலமாகவோ, தனியார் மூலமாகவோ உருவானால், அது மக்களை  நம்பிக்கையுடன் செயல்படத் தூண்டும் என்பதற்கு காமராஜர்புரம் விரிவாக்கமே நல்ல உதாரணம்.

தம்பநாயக்கன்பட்டி என்ற தாய்க் கிராமம். நெருக்கமான சிறுசிறு வீடுகள். அனைத்து ஜாதிக்கும் சொந்தமுடையது என்று கல்வெட்டில் பெருமிதமாக் பதித்துக் கொண்ட இந்துக் கோயில். பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் சர்ச். பள்ளி. சமத்துவத்தைப் பறைசாற்றும் பாங்கு. ஊருக்கான பொது விநியோகக் கடையே காலனியில் அமைந்துள்ளது. சமத்துவ மயானம். மக்கள் தொகை அதிகமுள்ள இந்தக் கிராமம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சமத்துவமான ஒரு வாழ்வியலை உணர வழி காட்டியிருக்குமோ?

பெரிய, பெரிய வீடுகளைக் கொண்ட அம்மாபட்டி என்ற உட்கடை கிராமத்தில் அதிக ஆள் நடமாட்டமில்லை. இளைஞர்களையோ, இளம் பெண்களையோ பார்க்க முடியவில்லை. ஆனால் வீடுகளெல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றது. அந்த ஊரில் மனித நடமாட்டம் அதிகமில்லை. பலர் இடம் பெயர்ந்து விட்டார்கள். ஆனால் வீடுகளை அவர்கள் பராமரிக்கும் பாங்கைப் பார்த்தால், அந்த மண்மீது தங்கள் பிறப்பிடத்தின் மீது அம்மக்கள் வைத்திருக்கும் ஈடுபாடு புலப்படுகின்றது. அந்த ஊரின் செழுமை ஒரு காலத்தில் வேளாண்மையால் வந்திருக்கிறது. ஆனால் இப்போது வேறுவகையில் தக்க வைக்கப்பட்டு வருகின்றது. தாங்கள் பிறந்த மண் மீது, ஊர்மீது தீராக் காதல் கொண்ட அவர்கள் வேறு எங்கோ வாழ்கின்றார்கள். அவர்களிடம் உள்ள அந்த இடம் சார்ந்த பெருமித உணர்வு. அதைத் தூண்டி விட்டால், அது கொழுந்துவிட்டு எரியும். அந்த வெளிச்சம் அப்பகுதிக்கே புது வாய்ப்புகளைத் தரும்

அடுத்து 13 குடும்பங்களே வாழ்ந்த, இன்று யாருமே குடியிருக்காத (uninhabited settlement) துரைராஜபுரம் என்ற துருசுபட்டி. அங்கிருந்த 13 வீடுகளையும் அரசு சென்றடைந்திருப்பதைப் பார்க்கும் போது (மின்சாரம், குடிநீர்)  பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஏகாந்தப் பெருவெளியில் அமைந்துள்ள எளிமையான ஓட்டுவீடுகள். சுற்றி, ஒரு காலத்தில் வாழ்வளித்து, இன்று கருவேலம் காடாய், தரிசாக மாறிப் போன நிலங்கள். அந்த மண்ணில் ஜீவனிருக்கிறது என்பதைக் காட்டும் முகமாக 150 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கொக்காடி, குருவாடி கிராமங்களிலிருந்து மேய்ச்சலுக்காக ஆடுகளைக் கொண்டு வந்து மாதக்கணக்கில் தங்கியிருக்கும் இடையர் குடும்பங்கள் அமைந்துள்ளன. ஜீவனுள்ள ஏகாந்தப் பெருவெளி. சரியாகத் திட்டமிட்டால் அந்த ஏகாந்தப் பெருவெளியை மையப்படுத்தி அதை ஒரு Eco Village ஆக மாற்றலாம்.

பிரதான சாலைக்கு ஒருபுறம் சேடபட்டி (தம்பநாயக்கன்பட்டி ஊராட்சி), மறுபுறம் கன்னிசேரி புதூர் ஊராட்சி. தீர்க்க தரிசனமற்ற எல்லைப் பிரிப்பு. குடியிருப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத அரசு ஊழியர்களின் அரைவேக்காட்டுத்தனமான ஊராட்சி எல்லைப் பிரிப்புக்கு சேடபட்டி சரியான உதாரணம்.

வீடுகளின் நெருக்கமும் அமைப்பும் எதையோ சொல்லவருகிறது. வீடுகள் நெருக்கமாக அமைந்திருந்தாலும், வீட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த மக்கள் தயங்கிய விதம். அதில் அவர்கள் பட்ட சிரமங்கள். அந்த கிராமத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கொஞ்சம் அதிகம்தான். அதைத் தவிர லைன் வீடுகள் என்று சொல்லத்தக்க 10க்கும் மேலான குடியிருப்புகள். 100 குடும்பங்கள் அந்த மாதிரியான வீடுகளில் குடியிருக்கிறார்கள். சில நகரங்கள் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களை கவர்ந்திழுப்பது மாதிரி, fire works வேலைவாய்ப்பு நிறைய ஏழைகளை சேடபட்டியை நோக்கி இழுப்பதைப் பார்க்கமுடிந்தது.

நெசவுத் தொழில் செய்த தேவாங்கச் செட்டியார்கள் அதிகம். அதற்கு அத்தாட்சி ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கதர் குடியிருப்பு லயன் வீடுகள். அவை இப்போதுள்ள தொகுப்பு வீடுகள் மாதிரிதான். ஆனால் அந்த வீடுகள் கட்டப்பட்ட பாங்கைப் பார்த்தால், தொகுப்பு வீடுகள் கட்டப்படுவதில் தென்படும் பொறுப்பின்மை மாதிரியில்லாமல், “இந்த வீடுகளில் மனிதர்கள் வாழப் போகின்றார்கள்” என்ற எண்ணம் வெளிப்படுகிறது. ஆண்டுகள் பலவாகியும் அந்த வீடுகள் உறுதியான கட்டமைப்புடன் இருப்பதைப் பார்க்கும் போது, அரசுத் துறைகள் அக்காலத்தில் நன்முறையில் செயல்பட்டது தெரிகிறது. யார் முயற்சியில் அந்த வீடுகள் அங்கு வந்திருக்கும்?. அதை முன்னின்று கட்டிய அந்தப் புண்ணியவான் யார்? என்றெல்லாம் அறிந்தால், எந்தெந்தத் துறைகளில் அரசு (Policy) ஜெயித்தது-எதில் தோற்றது?- அவ்வூர் மக்களின் அடிப்படை ஜீவனோபாயமான நெசவுத் தொழில் எப்பொழுதிருந்து பலவீனமடைய ஆரம்பித்தது? எப்படி fireworks அவர்களுக்கு மாற்று ஜீவன வழிகளை உருவாக்கியது? ஆகியவை தெரியவரும்.

ஃபயர் ஆபீசை நம்பிய பிழைப்பு. அவ்வூருக்குள் நாங்கள் நடமாடியதே மக்களை பயப்படவைத்தது. காரணம் ஃபயர் வொர்க்ஸ் பற்றிய அரசு கண்ணோட்டம். கெடுபிடிகள். தெருக்கள் போக்குவரத்துக்கு மட்டும் அல்ல. குறிப்பாக, சிமெண்ட் பாவப்பட்ட தெருக்கள் அம்மக்களின் ஜீவனமுறைகளுடன் சம்பந்தப்பட்டது. அகலமான சிமெண்ட் தெருக்கள் இருந்தால் இன்னும் அதிகமான workspace (திரிகளைக் காயவைக்க) அவர்களுக்கு கிடைக்கின்றது. அதிக வருமானமீட்ட முடிகின்றது. இதைத் தனியாகக் கட்டப்பட்ட ஒரு காலனியில் கண்டோம். நல்ல தெருக்கள் நல்ல ஜீவனத்தை/ பிழைப்பை உறுதி செய்கின்றது. அந்த ஊருக்கான நல்ல திட்டங்களில் ஒன்று தெருக்களில்  சிமெண்ட் பாவுவதுதான். சிமெண்ட் தெருவாக இருந்தால் அவர்கள் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்.

ஊர் விரிவாகிக் கொண்டு வருகின்றது. விரிவாக்கப் பகுதிகளில் சாலை மற்றும் சில வசதிகளைச் செய்துகொடுத்தால், மக்கள் வீடுகளில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள். சேமிப்புப் பழக்கம் உயரும். அந்த ஊரில் வாடகை வீடுகளுக்கான தேவை (rental housing) / மார்க்கெட் உள்ளது. சிக்கனமான, சுலபத் தவனைகளில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தையோ, அதற்கான வங்கிக் கடனுதவியோ பெற்றுத் தந்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தரமான வீடுகளில் வசிக்க அவர்களுக்குத் தகுதியுள்ளது. இலவச வீடுகள், தொகுப்பு வீடுகள், பசுமைக் குடியிருப்பு என்ற பெயரில் அவர்களைக் காத்திருக்க வைக்காமல், இப்பொழுது அவர்கள் செலுத்தும் வாடகையான 400 லிருந்து 600 ரூபாய் மாதத்தவணை கட்டத்தோதாக நீண்டகால வீட்டுக் கடனுதவி செய்தாலே போதும்.

3

கிராமங்கள் மாறிவருகிறது என்று சொல்லாதே, மாறிவிட்டன என்று சொல் என்று முகத்திலடித்தாற்போல் சொன்னது இந்தக் களப்பணியின் மூலம் பெற்ற அனுபவம். விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்டு, வேளாண்மை சாராத (Non-Farm Activities) ஜீவனோபாய முறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு காலத்தில், ஒரு வட்டாரத்தில் அதிகமாகப் பயிரிடப்படும் பயிர்தான் அவ்வட்டாரக் கலாசாரத்தை தீர்மானித்தது. நெல், பருத்தி, கடலை, மிளகாய், காய்கறி விவசாயம், கால்நடைவளர்ப்பு என்று ஒவ்வொரு தொழில்முறையும் தனக்குரிய கலாசாரத்தை வடிவமைத்தது. ஆனால் நாங்கள் பார்த்த கிராமங்களில் தீக்குச்சி ஆலைகளும் ஃபயர் வொர்க்ஸும் தங்களுக்குரிய கலாசாரத்தை வடிவமைத்துள்ளன. இதைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் அரசு அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ இருப்பதாகத் தெரியவில்லை. விருதுநகர் எம்.எல்.ஏ. திரு. பாண்டியராஜன் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்.

கிராமத்திலே வாழ்ந்தாலும், அடிக்கடி கிராமங்களுக்குச் சென்றாலும், நேற்று நாம் பார்த்த கிராமங்களை இன்று பார்க்கமுடியவில்லை. விவசாயம் பிரதானமாக இருந்த கடந்த காலத்தில் கிராமங்களில், கிராமங்களிடையே பொதுத்தன்மையைக் காணமுடிந்தது. வேளாண்மை தவிர்த்த பிற பிழைப்பு முறைகள், விதவிதமான சமூகப் பொருளாதாரக் கலாசார உறவுகளை உருவாக்குகிறது. மிகவும் சிக்கலான மாற்றங்கள் கிராமங்களில் ஏற்பட்டு வருகின்றன. அவற்றைப் புரிந்து கொள்ளவும், சிக்கலின்றி சமூக மாற்றுருவாக்கத்திற்கு கையாளவும் புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது. நாம் பலவற்றை எளிமைப்படுத்தி புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். இலவசங்கள் என்ற ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, அதை மக்களிடம் சேர்பிக்க, சரியான முகவரிகளைத் தேடும் “கொரியர் பையன்கள்” மாதிரி அரசுத் துறைகளும் அரசியல்வாதிகளும் மாறிவிட்டார்கள்.

4

எங்கள் செயல்முறையின் முதல்நிலையான சாலைகளையும் தெருக்களையும் GPS Tracking செய்யும் பணிதான் முடிவடைந்துள்ளது. தெருத் தெருவாக நடக்கும்போது (Transect Walk) ஞானம் பிறக்குமென்பது பங்கேற்பு  முறையின் நம்பிக்கை. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தனக்கு எவ்வளவு ஒதுக்கிக்கொள்ளலாம் என்றென்னாத சட்டமன்ற உறுப்பினர் நம் பின்னால் இருக்கிறார், தன்னுடைய உலகளாவிய பார்வையாலும், தேசியப் பார்வையாலும் வாய்ப்புகளைக் கண்டறிந்து தான் தொடங்கிய தொழிலில் வெற்றி பெற்ற பாண்டியராஜன் என்ற ஒரு தொழில் முனைவரின் ஆளுமை நம் பின்னால் இருக்கின்றது என்ற எண்ணமே எங்களை நம்பிக்கையுடன் இப்பணியில் ஈடுபட வைத்தது.

இந்தப் பணியில் இன்னும் நாங்கள் பல கட்டங்களைத் தாண்டவேண்டியுள்ளது. அதைச் செய்து முடிக்கும் போது, ஒரு பாராளுமன்றத் தொகுதியையோ, சட்டமன்றத் தொகுதியையோ எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கான ஒரு முன்மாதிரி உருவாக்கப்பட்டிருக்கும். ஒருவரிடமுள்ள பணபலத்தை வைத்து, அவரால் தேர்தலில் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதை வைத்து வேட்பாளர் தேர்வு நடைபெறும் முறையை, சற்றே மாற்றி, பணம் மட்டுமல்ல, தொகுதியைப் பற்றி அவருக்கு என்ன தெரியும், அத் தொகுதியிலுள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைச் சரியாகக் கையாளும் பட்சத்தில், கட்சியை, அதன் செல்வாக்கை அத்தொகுதியில் எப்படியெல்லாம் ஸ்திரப்படுத்தலாம் என்பதில் தெளிவுள்ளவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்கின்ற நிலை உருவாகவேண்டும். வேட்பாளர் தேர்வுக்கான நேர்முகக் காணலில், போதுமான ஆதாரங்களுடன் தொகுதி பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது, தகவல்களை தொகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். இப்போதைக்கு நம்முடைய அரசியல் கலாசாரத்தில் இது பகல் கனவாகத் தோன்றினாலும், இதை ஒருசில அரசியல் இயக்கங்களாவது முன்னெடுப்பார்கள். அதற்கான முன்மாதிரியை விருதுநகர் தொகுதி உருவாக்கும். அதற்கு திரு. பாண்டியராஜன் அவர்கள் அடித்தளமிட்டிருக்கின்றார்.

5

தகுதியற்றவர்களோடு கூட்டு சேர்ந்தமைக்காக வேதனைப்படுவதாக, தே.மு.தி.க. கூட்டணியைப் பற்றி முதல்வர் கருத்து தெரிவித்த நாள் அது. திரு. பாண்டியராஜனின் விருதுநகர் தொகுதியில் ஒரு தன்னார்வக் குழு கையில் GPS கருவியை வைத்துக்கொண்டு காலை பத்து மணியிலிருந்து சூரியன் மறையும் வரை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. தனது தொகுதியையும், தனது மக்களையும், அவர்களது வாழ்வையும் சரியான கோணத்தில், அறிவியல்பூர்வமாக அறிந்து கொள்ள விரும்பிய அவருடைய ஆசைக்கு வடிவம் கொடுக்க, அவர் மீது அபிமானம் கொண்ட என்னைப் போன்ற தன்னார்வலர்கள் களத்தில் இறங்கியிருந்தோம்.

நமது சட்டமன்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் மாண்புமிக்கதுதான். அதிலுள்ள உறுப்பினர்களும் கூட மாண்புமிக்கவர்கள்தாம். அந்த உறுப்பினர்களில் பலர் அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். கட்சி அரசியலோடு சம்பந்தப்படாத என்னை அழைத்து அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்கமுடியாது.  ‘ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தவன் என்ற முறையில் எனக்கு சில வரையறைகள் உண்டு. அதையும் தாண்டி என்தொகுதி மக்கள் என்னையும், நான் அவர்களையும் சென்றடைய வேண்டும். I need a methodology to achieve this!’ இந்த உத்வேகத்தை வேறு யாரிடமாவது நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

திரு. பாண்டியராஜன் தமிழகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜனரஞ்சகமான அரசியல்வாதியல்ல. ஆனால் தகுதியானவர்களைக் கண்டுபிடித்து தன் பக்கம் வைத்துக் கொள்வதில்தான் ஒரு தலைவனின் தகுதி அறியப்படும். அந்த வகையில் எதிர்க் கட்சித் தலைவரான திரு. விஜயகாந்த் அவர்கள், அறிவியல்பூர்வமான அணுகுமுறையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட திரு. பாண்டியராஜன் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைத்திருப்பதால், மற்றெந்த தலைவரைவிடவும் மிக அதிகத் தகுதி வாய்ந்தவராகவே உயர்ந்து நிற்கிறார்.

0

பேரா. எஸ். ரெங்கசாமி

ஏக் துஜே கேலியே – மாற்றவேண்டிய கதை

ஒரு தமிழ் இளைஞன். ஹிந்தி இளைஞி. அக்கம்பக்கத்து வீடுகளில் வசிக்கிறார்கள். காலா காலத்தில் காதலில் விழவும் செய்கிறார்கள். சுற்றுலா மையமான கோவாவில்தான் கதை நடப்பதாகச் சொல்லப்படுகிறது என்றாலும், காதலர்கள் சந்தித்துக் கொள்ளும்போது மட்டும் சாலைகள் ஊரடங்கு போடப்பட்டதுபோல் வெறிச்சோடிவிடுகின்றன. கடற்கரைகூட ஜிலோ என்று இருக்கிறது. புல்வெளிகள், தோப்புகள், துரவுகள் ஆகிய இடங்களில் பாடல்கள்… ஆடல்கள்…

வழக்கம்போலவே இருவருடைய பெற்றோர்களும் காதலை எதிர்க்கிறார்கள். வழக்கம்போலவே காதலர்கள் தங்கள் பெற்றோர்களை எதிர்க்கிறார்கள். ஆனால், அதன்பிறகுதான் வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடக்கிறது. உலக சினிமா வரலாற்றிலேயே அதுவரை இல்லாத புதுமையாக, நாயகனின் பெற்றோர் காதலர்களை ஒருவருட காலம் பிரிந்திருந்து காதலின் வலிமையை நிரூபிக்கும்படிக் கேட்டுகொள்கிறார்கள்! காதலர்களும் சிறிது தயக்கத்துக்குப் பிறகு சம்மதிக்கிறார்கள். காதலன் வேறு ஊருக்கு அனுப்பிவைக்கப்படுகிறான்.

காதல் புறாக்கள் கடிதத் தொடர்போ, தொலைப்பேசிப் பேச்சோ இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனிடையில், காதலனுக்கு ஒரு கைம்பெண்ணுடன் நட்பு ஏற்படுகிறது. ஏற்கெனவே ஹிந்தி நன்கு பேசவும் லிஃப்டுக்குள் ஹிந்தி கவிதை பாடவும் தெரிந்திருந்தாலும் நாயகன் அந்தக் கைம்பெண்ணிடம் மீண்டும் முதலிலிருந்து ஹிந்தி கற்றுக்கொள்கிறான். அவள் நாட்டியத் தாரகையும்கூட என்பதால் நடனமும் கற்றுக் கொள்கிறான் (நல்லவேளை அவளுக்கு ஆய கலைகளில் அதைத்தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை).

ஒருநாள், காதலன் வேலை விஷயமாக மங்களூருக்குச் செல்கிறான். அந்த நேரம் பார்த்து காதலி தன் கல்லூரிச் சுற்றுலாவுக்கு அதே மங்களூர் வந்து சேர்கிறாள். சக மாணவர்களுடன்தான் வந்திருக்கிறாள் என்றாலும், தனியாகவே எல்லா இடங்களுக்கும் போகிறாள்; வருகிறாள். அப்படிப் போகும் வழியில், தன்னுடைய முறைப்பையனின் காரைப் பார்ப்பவள் அவன் தங்கியிருக்கும் அறைக்குச் செல்கிறாள். காதலியின் அம்மா, அவளை உளவு பார்ப்பதற்காக முறைப்பையனை அனுப்பி வைத்திருக்கிறார். அது தெரிந்த காதலி அவனைத் திட்டுகிறாள். அவன் மன்னிப்பு கோருகிறான்.

அந்த அறைக்கு பக்கத்து அறையில்தான் நம் காதலனும் தங்கியிருக்கிறான். காதலி படியில் இறங்கிச் செல்வதை யதேச்சையாகப் பார்த்தும் ஒப்பந்தத்தின்படி அவளிடம் பேசாமல் இருந்துவிடுகிறான். தன் வேதனையை மறக்க ஒரு பாட்டை எடுத்துவிடுகிறான். பக்கத்து அறையில் இருந்து கதாநாயகி அதைக் கேட்கிறாள். இருவரும் இரண்டு அறைகளைப் பிரிக்கும் கதவுக்கு இரு பக்கமுமிருந்து சத்தியம் தவறாமல் கண்ணீர் வடிக்கிறார்கள். பாட்டு முடிவதுவரை பொறுமையாக இருந்த நாயகி, அது முடிந்ததும் முறைப் பையனின் அறையிலிருந்து எங்கோ போய்விடுகிறாள். பாடல் நடக்கும் நேரம் முழுவதும் குளித்துக்கொண்டிருந்த முறைப்பையன், வெளியே வந்து பார்த்து நாயகி எங்கே போய்விட்டாள் என்று அறை முழுக்கத் தேடிப் பார்க்கிறான். அவளைக் காணவில்லை என்றதும் கொண்டுவந்த பொருள்களை பையில் அடைக்க ஆரம்பிக்கிறான் (அவனுடைய பையில் பிராவையும் புடைவையையும் எடுத்து வைக்கிறான். அவன் பிராவெல்லாம் போடுவதுண்டா என்று கிண்டல் செய்யாதீர்கள். ஏதோவொருவிதமாக யோசித்து வேறு ஏதோவொருவிதமாக எடுக்கப்பட்ட காட்சி இது).

அதுவரை பாடல் பாடி மனத்தைத் தேற்றிக் கொண்டிருந்த நாயகன், பொறுத்ததுபோதும்… மனோகரா… பொங்கி எழு என்று தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டு முறைப்பையனின் அறைக்குள் புயல்போல் நுழைகிறான். அங்கு முறைப்பையனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைகிறான். அவன் யார் என்று நாயகன் கேட்கவே, அந்த முறைப்பையனோ தனக்கும் நாயகிக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாகச் சொல்கிறான். அதை நாயகன் அப்படியே நம்பிவிடுகிறான். கல்லூரி மாணவர்கள் சுற்றுலாவுக்குப் போகும் வண்டியை வழியில் மறித்து நாயகி எங்கே என்று தேடுகிறான். அவர்களும் அவள் தன் வருங்காலக் கணவருடன் காரில் ஊருக்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். சற்றுமுன்தான் என்னை ஏன் பின் தொடர்ந்து வருகிறாய் என்று நாயகி முறைப்பையனைத் திட்டியிருந்தாள். இருந்தும், கல்லூரி நண்பர்களைவிட்டுவிட்டு முறைப்பையனுடன் போய்விடுகிறாள் (கதை அப்பத்தான சூடு பிடிக்கும் பாஸ்).

நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நாயகனுக்கு ஆவேசம் வந்துவிடுகிறது. தனக்கு நாட்டியமும் ஹிந்தியும் கற்றுக்கொடுத்த கைம்பெண்ணைப் பார்த்து, வா, நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறான். அவளுக்கும் அந்த ஆசை மனதில் இருந்திருக்கவே உடனே சம்மதித்துவிடுகிறாள். திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் அடித்துவிடுகிறார்கள்.

இன்னும் சில நாள்களில் திருமணம் என்ற நிலையில் ஒருநாள் அந்தக் கைம்பெண், நாயகனின் அறைக்குப் போகிறாள். அங்கு, அவன் நாயகிக்கு எழுதி, போஸ்ட் செய்யாமல் வைத்திருக்கும் கட்டுக்கட்டான காதல் கடிதங்களைப் பார்க்கிறாள். மனம் சுக்கு நூறாக உடையும் அவள், தன்னைத் தேற்றிக்கொண்டு நேராக நாயகியைப் போய் சந்திக்கிறாள். நாயகனின் வருகைக்காக நாயகி வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பதையும் அவளுடைய காதல் தெய்வீகமானது என்பதையும் தெரிந்துகொள்ளும் அந்தக் கைம்பெண், திரும்பி வந்து நாயகனிடம் விஷயத்தைச் சொல்கிறாள்.

அவளுக்கு வேறொரு நபருடன் திருமணம் என்று யாரோ சொன்னதை ஏன் நம்பினாய்… ’அவளுடைய காதல்மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? உன் வீட்டுக்காரர்களிடமோ அவர்கள் வீட்டுக்காரர்களிடமோ ஒரு போன் போட்டாவது கேட்டிருக்கலாமே… ஏன் இப்படி என்னைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தாய்’ என்று திட்டுகிறாள். நாயகன் தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறான். இதனிடையில் ஒரு வருட காலம் முடிந்திருக்கவே நாயகியைச் சந்திக்க விரைந்து ஓடுகிறான்.

ஆனால், அந்தக் கைம்பெண்ணின் சகோதரன், தன் சகோதரியின் திருமணம் நின்றுபோனது பற்றித் தெரிந்ததும் அதற்குக் காரணமான நாயகனைக் கொல்லும்படித் தன் ரவுடி நண்பனிடம் குடிபோதையில் சொல்லிவிடுகிறான். இன்னொரு கிளைக்கதையாக நாயகியின் குடும்ப நண்பரான ஒருவன் ஆரம்பத்திலிருந்தே அவளை அடைய ஆசைப்பட்டிருப்பான். அதுவரை மிகவும் பொறுமையாக இருந்த அவன், படம் முடிய வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதால் தனது திட்டத்தை அமல்படுத்திவிடுகிறான். யாருமே இல்லாத சாலையில் போய், யாருமே இல்லாத கோயிலில் தொழுதுவிட்டு வெளியே வரும் நாயகியை அவன் மடக்கிப் பிடிக்கிறான். வேறு வழியில்லை என்பதால் நாயகியும் யாருமே இல்லாத பாழடைந்த மண்படம் ஒன்றில் அடைக்கலம் தேடி ஒளிகிறாள். அங்கு துரத்திக்கொண்டு வரும் வில்லன் சிலபல துரத்தல்களுக்குப் பிறகு அவளைப் பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறான்.

இதனிடையில், நாயகனையும் ரவுடிகள் சுற்றி வளைத்து அடித்துக் கத்தியால் குத்திவிடுகிறார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் நாயகனும் நாயகியும் கடற்கரை ஓரத்தில் இருக்கும் மலை உச்சியில் சந்தித்துக் கொள்கிறார்கள். நாயகன் இறக்கப் போவது உறுதி என்பது தெரிந்ததும், நாயகி தன்னையும் அவனுடன் அழைத்துச் செல்லும்படி அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். இந்த உலகமே காதலுக்கு எதிராக இருப்பதைத் தெரிந்துகொள்ளும் அந்த இளம் காதலர்கள் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அப்படியாக காதலில் தோற்று, ஒருவருக்கொருவர் உயிரைத் தியாகம் செய்து அமர காவியம் படைத்துவிடுகிறார்கள்.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் வெளியாகி தாங்க முடியாத வெற்றியை எட்டிய காவியத்தின் கதைச்சுருக்கம்தான் மேலே சொல்லப்பட்டிருப்பது. இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், நாயகன் நாயகியின் காதல் விளையாட்டுகள் இடம்பெறும் முதல் பாதியும் உயிரை உருக்கும் பாடல்களும்தான். பொதுஅறிவில் சிறந்து விளங்கும் இன்றைய தலைமுறைக்  குழந்தையிடம், தொப்புளில் பம்பரம் விட்டது யார் என்று கேட்டால் சின்னக் கவுண்டர்தான் என்று தெளிவாகச் சொல்லிவிடும். ஆனால், காதல் மன்னன் 1978லேயே இதைச் செய்துவிட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவேதான் இருக்கிறது. இன்று, நம் தமிழ் திரையுலகில் நடந்துவரும் பல்வேறு சாகசங்களின் மூலமுதல்வன் நம் காலத்து நாயகன்தான் என்று சிலர் சொல்வது பொய்யுரை அல்ல என்பது அந்த நிமிடத்தில் எனக்குப் புரிந்தது.

இந்தப் படத்துக்கான எனது திரைக்கதையைப் பார்ப்பதற்கு முன், படத்தில் இருக்கும் சில  குறைகளைப் பட்டியலிட்டுவிடுகிறேன்.

முதலாவதாக, நாயகன் நாயகியின் வீடானது பாடல் காட்சியில் நடிகர்கள் காஸ்ட்யூம் மாற்றிக் கொள்வதுபோல் சகட்டுமேனிக்கு மாறுகிறது.

அடுத்ததாக, ஒரு வருட காலம் காதலர்கள் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இரண்டு காதலர்களும் தங்கள் காதல்மீது இருக்கும் நம்பிக்கையினால் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நாயகனோ அற்ப விஷயத்தை நம்பி அந்த அமர காதலையே தூக்கி எறிந்துவிடுகிறான். அதோடு நிற்காமல், அடுத்த நிமிடமே இன்னொரு திருமணத்துக்கும் தயாராகிவிடுகிறான். இது, கதையின் அடிப்படை உணர்வையே சிதைத்துவிடுகிறது. துணை-நாயகியான கைம்பெண், நாயகனைப் பார்த்து இது தொடர்பான கேள்விகளைக் கேட்கிறாள். ஆனால், உண்மையில் கதை டிஸ்கஷன்போது கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் அவை. அதோடு, அப்படியே நாயகனும் கைம்பெண்ணும் திருமணத்துக்குத் தயாராகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதை நாயகனின் பெற்றோருக்குத் தெரிவிக்கவே மாட்டார்களா… அதன் மூலம் அது நாயகிக்குத் தெரியவந்துவிடாதா என்ன?

ஓர் அருமையான கதை முடிச்சு கிடைத்திருக்கிறது. ஆனால், அதை சரியாக இறுக்கவோ நளினமாக அவிழ்க்கவோ இயக்குநருக்குத் தெரியவில்லை. வழக்கமான வில்லன், கற்பழிப்பு, கொலை என்று வீணடித்துவிட்டிருக்கிறார். இது ஒருவகையில் அரைக்கிணறு தாண்டியது போன்ற சாகசம்.

உண்மையில், ஒரு வருட காலம் சந்திக்கக்கூடாது என்று பெற்றோர் சொல்வதுதான் இந்தப் படத்தைப் பொறுத்தவரை வில்லன். அந்தத் தடையை அவர்கள் எப்படித் தாண்டுகிறார்கள். அதில் என்னென்ன சிக்கல்கள் வரக்கூடும் என்றுதான் திரைக்கதை ஆசிரியர் யோசித்திருக்க வேண்டும். இரண்டு வழக்கமான வில்லன்களைச் செயற்கையாக உருவாக்கி, அதன் அடிப்படையில் கதையை நகர்த்தியதால் படம் தேர்ந்த பார்வையாளர்களுக்கு உகந்ததாக ஆகாமல் போய்விட்டிருக்கிறது.

ஒரு கலைஞன் தன்னைவிட புத்திசாலியாக தன் வாசகர்களை நினைக்க வேண்டும். அப்போதுதான் அவனால் அற்புதமான படைப்பைச் சிருஷ்டி செய்ய முடியும். இது, எழுத்துத் துறைக்கு மட்டுமேயானது அல்ல. திரைத்துறையிலும் அதுவே இலக்காக இருக்கவேண்டும்.

அதிலும், கமல்ஹாசனும் பாலசந்தரும் பச்சைத் தமிழர்களாக இருந்த பிறகும், இந்தப் படம் தமிழில் இன்னும் வராமல் இருப்பது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒருவேளை, யாராவது இதைத் தமிழில் எடுக்க முன்வந்தால் ஒரிஜினலை அப்படியேதான் எடுப்பார்கள். அது, நிச்சயம் பெரிய வெற்றியை ஈட்டித் தரவும்கூடும். ஆனால், அதன் திரைக்கதை பலவீனமானது என்பதை அந்த வெற்றி ஒருபோதும் மாற்றி அமைத்துவிடமுடியாது. அதனால், இந்த காதலர் தினத்தின் சிறப்புப் பரிசாக, உலகில் இருக்கும் உண்மையான காதலர்களுக்கு எனது இந்தத் திரைக்கதையை சமர்ப்பிக்கிறேன்.

எனது திரைக்கதையில் ஏக் துஜே கேலியேவின் முதல் பாதி காதல் காட்சிகளை அப்படியே வைத்துக்கொள்வேன். ஒருவருட காலம் பிரிந்திருக்க வேண்டும் என்ற அந்த முடிச்சையும் அப்படியே வைத்துக்கொள்வேன். ஆனால், அதன் பிறகு, அந்த அற்புதமான முடிச்சையே மையமாக வைத்துக் கதையைக் கொண்டுசெல்வேன்.

உண்மையில், பெற்றோர்கள் அதை மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு செய்வதாகவே காட்டுவேன். படத்தில் மூன்றாவது நபர் ஒருவர் அந்த யோசனையைச் சொல்வதாக இடம்பெற்றிருக்கிறது. அது தேவையே இல்லை. காதலர்களின் பெற்றோருக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. எனவே, பிரிக்கத் திட்டமிடுகிறார்கள். கேக்காத கடன் கிடைக்காது. பாக்காத காதல் ஜெயிக்காது என்று அவர்கள் யோசித்து காதலர்களை ஒரு வருட காலம் பிரிந்திருக்கச் செய்கிறார்கள்.

நாயகனின் நினைவுகளை அழிக்க நாயகியின் அம்மா பல முயற்சிகளைச் செய்கிறாள். எதுவும் பலன் தராமல் போகிறது. ஏழெட்டு மாதங்கள் கழிந்துவிடுகிறது. இருவருடைய காதலும் ஃபெவிக்காலின் பிணைப்பைப்போல் படு உறுதியாக இருக்கிறது. அப்போது, நாயகனின் அப்பா அவனைச் சந்தித்து பேசுகிறார். ’ஒரு வருஷம் பாக்காம இருந்துட்டா மட்டும் உண்மையான காதல்னு ஆகிடாது. நாளைக்கே கல்யாணம் ஆகி நாலைஞ்சு வருஷம் ஆனதும் இப்ப இருக்கற காதல் எல்லாம் காணாமப் போயிடும். பிரிஞ்சு இருங்கன்னு சொன்னதுக்கு பதிலா உங்களை ஒரு வருஷம் தனியா சேர்ந்து இருங்கன்னு சொல்லியிருக்கணும். ச்சீ… இம்புட்டுத்தானான்னு சலிச்சிப் போயி பிரிஞ்சிருப்பீங்க. நாங்க தப்பு பண்ணிட்டோம். உண்மையான காதல் அப்படிங்கறது இது இல்ல. தன்னோட துணைக்கு என்ன துயரம், சோகம் வந்தாலும் தாங்கிக்கறதுதான் உண்மையான காதல். அது உங்களால முடியாது. வெறும் உடம்பைப் பார்த்து வர்ற வாலிபக் கிறுக்கு இது’ என்று திட்டுகிறார்.

நாயகனோ, ’மொதல்ல நாங்க பிரிஞ்சி இருந்தா காதல் காணாமப் போயிடும்னு சொன்னீங்க. இப்ப அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் வேற புது கதையை ஆரம்பிக்கறீங்களா?’ என்று சீறுகிறான். ’உண்மையான காதல்ன்னா எல்லாத்தையும் தாங்கிக்கணும். உனக்கு அல்லது அவளுக்கு ஒரு பெரிய வியாதி இருக்குன்னு வெச்சிப்போம். அதுக்குப் பிறகும் நீங்க இப்படி காதல், கத்திரிக்கான்னு சொல்லிக்கொண்டிருப்பீர்களா என்ன…! உனக்குப் புற்று நோய்ன்னு சொன்னா, ஒரு வாரம் அல்லது ஒரு மாசம் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுவாள். அதன் பிறகு, வேறொருவனை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவாள்’ என்று சீண்டுகிறார் அப்பா. இதைக் கேட்டதும் நாயகனுக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது. ’இப்ப என்ன சொல்றீங்க… எங்க காதல் உண்மையானதுன்னு நிரூபிக்க இந்தச் சோதனையையும் செய்யணும் அவ்வளவுதான… நீங்க போயி அவ கிட்ட எனக்குப் புற்றுநோய் இருக்கு… இன்னும் ஐஞ்சாறு மாசத்துல செத்துப் போயிடுவேன்னு சொல்லுங்க. அவ என்ன சொல்லுவா தெரியுமா…? இருந்துட்டுப் போகட்டுமே… எத்தனை வருஷம் உயிர் வாழறோங்கறது முக்கியம் இல்லை. எப்படி வாழறோம் அப்படிங்கறதுதான் முக்கியம்… மனசுக்குப் பிடிக்காதவனோட ஆயுள் முழுக்க வாழ்றதைவிட பிடிச்சவனோட ஆறு மாசம் வாழ்ந்தாலும் போதும் அப்படின்னுதான் சொல்லுவா. நான் செத்ததும் உடன் கட்டை ஏறி உயிரை விடறேன்னுதான் சொல்லுவா’ என்று நாயகன் சவால் விடுகிறான். நாயகனின் அப்பா அந்தச் சவாலை ஏற்றுக் கொள்கிறார். நாயகியின் அம்மாவோ, எதுக்கு இப்படி ஒரு விஷப் பரீட்சை என்று கடிந்துகொள்கிறார். ஆனால், அந்த உண்மையை நாயகியிடம் சொல்லக்கூடாது என்று நாயகனின் அம்மாவிடம் அப்பா சத்தியம் வாங்கிக்கொண்டுவிடுகிறார்.

நாயகியிடம் போய் அதைச் சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் நாயகி, நாயகன் தன் கைப்பட எழுதிய கடிதத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறாள். போதாத குறையாக, போன் செய்தும் கேட்கிறாள். நாயகன் தன் தந்தையிடம் செய்த சவாலின்படி தனக்குப் புற்றுநோய் இருப்பதாகப் பொய் சொல்கிறான். நாயகி அதன் பிறகு நாயகன் என்ன சொன்னானோ அதையே நாயகனின் தந்தையிடம் சொல்கிறாள். எங்களை எமனாலும் பிரிக்க் முடியாது என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

மேலும், ஓரிரு மாதங்கள் இப்படியே கழிகின்றன. இன்னும் பத்து நாள்களுக்குள் ஒப்பந்தம் முடியப் போகிறது என்ற நிலை வருகிறது. இத்தனை நாள்கள் மாறாத மனம் இந்தப் பத்து நாட்களிலா மாறப்போகிறது என்று காதலர்களின் பெற்றோர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்கள். ’தீர்க்க சுமங்கலியா இரு’ என்று நாயகனின் அம்மா நாயகியை உச்சிமோந்து ஆசிர்வதிக்கிறார். ’தீர்க்க ஆயுசா இருக்கணும்னு ஆசீர்வதியுங்கோ’ என்று நாயகியின் அம்மா கேட்டுக்கொள்கிறார். நாயகி பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு, ’அவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க. நான் தீர்க்க சுமங்கலியாதான் இருப்பேன். தீர்க்க ஆயுசு எனக்கு கிடையாது’ என்று சிரித்தபடியே சொல்கிறாள். ’ஏண்டி அசட்டுப் பெண்ணே… தீர்க்க ஆயுசும் உனக்கு உண்டுடி’ என்று நாயகனின் அம்மா கடிந்துகொள்கிறாள். ’உங்கள் மகனுக்கு தீர்க்க ஆயுசு இல்லாதபோது நான் எப்படி தீர்க்க ஆயுசு வாழ முடியும்?’ என்று கேட்பாள் நாயகி. ’நீ என்னடி சொல்றே’ என்று நாயகியின் அம்மா திடுக்கிடுவார். நாயகனுக்குப் புற்றுநோய் இருக்கிறது. இன்னும் ஆறேழு மாதத்தில் இறந்துவிடுவார் என்று நாயகி சொல்வாள்.

நாயகனின் அப்பா அதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரிப்பார். ’அடி அசடே… உன்னோட காதல் வலுவானதான்னு டெஸ்ட் பண்றதுக்காக நான் அப்படி ஒரு பொய் சொன்னேன். அதைப் போய் இன்னும் நம்பிண்டிருக்கியா’ என்று சொல்வார். இதைக் கேட்டதும் நாயகிக்குத் தூக்கிவாரிப்போடும். ஓவென்று அழுதபடியே மாடிக்குப் போய் அறைக்கதைவை தாழிட்டுக்கொள்வாள். நாயகனுக்கு நோய் இல்லை என்பது சந்தோஷத்தைத்தானே தரவேண்டும்… இவள் ஏன் அழுகிறாள் என்று எல்லாரும் குழம்பிப் போய் நிற்பார்கள். அதன் பிறகுதான் அவர்களுக்கு ஓர் உண்மை தெரியவரும்.

மருத்துவப் படிப்பு படித்து வந்த நாயகி, புற்றுநோயால் நாயகன் என்னவெல்லாம் துன்பத்தைப்படுகிறானோ அதையெல்லாம் தானும் படவேண்டும் என்று தீர்மானித்து புற்றுநோய்க்கு ஆளான நோயாளி ஒருவரின் ரத்தத்தை தனக்குள் செலுத்திக்கொண்டுவிட்டிருக்கிறாள். இது தெரிந்ததும் நாயகனின் அப்பா தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிடுகிறார். தாங்கள் செய்த ஒரு சோதனை இப்படிப் போய் முடிந்துவிட்டதே என்று பெற்றோர்கள் கதறி அழுகிறார்கள்.

ஒரு வாரம் கழிகிறது. நாயகனின் அம்மா நாயகியைத் தனியே சந்தித்துப் பேசுகிறார். ’உன்னோட காதலை நான் புரிஞ்சுக்கறேன். மதிக்கறேன். ஆனால், எனக்கு என் பையனை திருப்பிக் கொடுத்துடு. நீ நல்லபடியா இருந்தப்போ உங்க காதல் ஜெயிக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். ஆறேழு மாதத்துல சாகப்போற உன்னைக் கல்யாணம் பண்ணிண்டு என் பையம் காலம்பூரா அழறதை என்னால தாங்கிக்க முடியாது. நீ அவனை வெறுக்கற மாதிரி நடி… கொஞ்ச நாள் சோகத்துல அழுவான். அப்பறம், அவனை வேற எங்கயாவது கூட்டிண்டு போய் யாருக்காவது கல்யாணம் செஞ்சு வெச்சுடறோம். உன் காதலனோட நல்ல வாழ்க்கைக்காக உன் காதலை நீ தியாகம் செய்’ என்று கெஞ்சுகிறாள்.

‘நான் சாகற வரை அவர் கூட வாழ்ந்துக்கறேனே… அதுக்கு அப்பறம் நீங்க வேற கல்யாணம் பண்ணி வெசுக்கோங்களேன்’ என்று நாயகி அழுகிறாள். ’அது நடக்காதும்மா… நீ அவன் மனசுல காதலியா இருக்கறவரை அவனால உன்னை மறக்க முடியாது. நீ அவனை வெறுக்கணும். உன்னைப் போய் காதலிச்சோமேன்னு அவன் நினைக்கணும். அப்பத்தான் அவன் உன்னை மற்ந்துட்டு வேற ஒரு வாழ்க்கையை வாழ முடியும். அதுக்கு நீ அவனை வெறுக்கறமாதிரி நடிச்சுத்தான் ஆகணும். என் உயிர் போறதுக்குள்ள உன் தியாகத்தை என் பையன் கிட்ட நான் கட்டாயம் சொல்லுவேன். சொர்க்கத்துல உன்னைப் பார்க்க வரும்போது உன் மேல நல்ல எண்ணத்தோடதான் வருவான். இந்த பூமில அவனுக்கு இருக்கற வாழ்க்கையை நரகமா நீ ஆக்கிடாதே’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார். அதன்படியே, நாயகியும் நாயகனை வெறுப்பதுபோல் நடிக்கச் சம்மதிக்கிறாள்.

மறுநாள் பொழுது புலர்கிறது. நாயகன் படு உற்சாகத்துடன் நாயகியைப் பார்க்க வருகிறான். நாயகி அவனுக்கு ஒரு திருமண அழைப்பிதழைக் கொடுக்கிறாள். அதைக் கையில் வாங்கும் நாயகன், ஓ… அதற்குள் அழைப்பிதழே அச்சடித்தாயிற்றா என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறான். மெளனமாக அவனை உற்றுப் பார்க்கும் நாயகி, ’அழைப்பிதழில் என்ன பெயர் போட்டிருக்கிறது’ என்று பார்க்கும்படிச் சொல்கிறாள். நாயகன், ’அது தெரியாதா என்ன… என் பெயரும் உன் பெயரும்தானே இருக்கப்போகிறது’ என்று அலட்சியமாகப் பார்க்கிறான். மணமகள் பெயராக நாயகியின் பெயர் இருக்கிறது. மணமகன் பெயராக அவளுடைய முறைப் பையனின் பெயர் இருக்கிறது. அதைப் பார்த்ததும் முதலில் திடுக்கிடும் நாயகன், பிறகு சிரித்தபடியே கேட்கிறான்: ’இது என்ன விளையாட்டு… உன் பேருக்குப் பக்கத்துல வேற எந்தப் பெயரும் இருக்கக்கூடாது’ என்று சொல்லி அந்த அழைப்பிதழைக் கிழிக்கப் போகிறான்.

‘என் பெயருக்குப் பக்கத்துல எந்தப் பெயர் வரணும்னு தீர்மானிக்க வேண்டியது நான். நீ இல்ல’ என்று நாயகி அந்த அழைப்பிதழை அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறாள். முறைப்பையனின் பெயரை மென்மையாக முத்தமிடுகிறாள்.

நாயகனுக்குக் கோபம் வர ஆரம்பிக்கிறது. ’ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற’ என்று சீறுகிறான்.

‘இன்னும் கொஞ்ச நாள்ல சாகப்போற உன்னைக் கட்டிக்கிட்டு காலம்பூரா விதவையா இருக்க நான் தயாரில்லை.’

‘ஓ… இதுதான் சங்கதியா… நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன். எனக்குப் புற்றுநோய் இருக்குன்னு சொன்னது எங்க அப்பாவுக்கு நம்ம காதலோட பலம் என்னன்னு காட்டறதுக்காகத்தான். அது வெறும் ஒரு பொய்தான்.’

‘என்ன தைரியத்துல அதை நீ சொன்ன?’

‘நம்ம காதல் மேல் இருந்த தைரியத்துல சொன்னேன். உன் மேல் இருந்த நம்பிக்கைல சொன்னேன்.’

‘ஒருவேளை நான் அதைக் கேட்டு தற்கொலை பண்ணிட்டிருந்தா?’

‘நீ அப்படி செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும். ஒரு நாள்ன்னாலும் நீ என் கூட வாழத்தான் விரும்புவ. அது எனக்குத் தெரியும்.’

‘இல்லை… உனக்கு நோய்ன்னதும் நான் செத்திடுவேன். இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா வாழலாம்னு நீ நினைச்சிருப்ப. அதனால்தான் அப்படி சொல்லியிருக்க.’

‘ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமா பேசற?’

‘அப்போ என் உயிரைப் பணயம் வெச்சு நீ செஞ்சது பைத்தியக்காரத்தனம் இல்லையா?’

‘நான் அப்படி என்ன செஞ்சிட்டேன். நம்ம காதலை நிரூபிக்க நாம ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்கறதா முடிவெடுத்தோமே. அதுமாதிரிதான் இந்த முடிவை எடுத்தேன்.’

‘அது நாம ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு. இது நீயாவே எடுத்த முடிவு…’

‘நானாவே எடுத்த முடிவாவே அது இருக்கட்டும். நாம ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு எடுத்த முடிவுகூட நீதான் முதல்ல எடுத்த. நான் வேண்டாம்னுதான் சொன்னேன். கடைசில உனக்காக நான் விட்டுக்கொடுக்கலையா?’

‘அதுலகூட எனக்கு சந்தேகம் இருக்கு. ஒரு வருஷம் பாக்காதேன்னு சொன்னதும் ஏதோ கொஞ்சம் டிராமா போட்டுட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே… உண்மையான காதல் இருந்தா யாராவது இப்படி செய்வாங்களா?’

‘என்ன பேசற நீ… நம்ம காதலை நிரூபிக்கத்தான அதைச் செஞ்சேன். அதையும் நீ சொல்லித்தான செஞ்சேன்.’

‘அப்படியா… சாப்பிடும்போது நீ வேண்டாம்னு சொன்னா இன்னும் கொஞ்சம் சாப்பிடுன்னு போடத்தான செய்வாங்க உங்க அம்மா… அதுதான் உண்மையான பாசம். எப்படா போதும்ன்னு சொல்வாங்கன்னு பாத்திரத்தை எடுத்துட்டு உள்ள போனா என்ன அர்த்தம்?’

‘எதை எதோட முடிச்சுபோடறதுன்னு தெரிஞ்சுதான் சொல்றியா?’

‘ஆமாம், தெரிஞ்சுதான் சொல்றேன். நான் பிரிஞ்சு இருப்போம்னு சொன்னா நீ என்ன செஞ்சிருக்கணும்… உன்னைப் பாக்காம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது… இவங்களுக்கு நாம எதுக்காக நம்ம காதலோட பலத்தை நிரூபிக்கணும் அப்படின்னு பேசி எதிர்த்திருக்கவேண்டாமா?’

‘நான் அப்படித்தான செஞ்சேன். நீதான் போயிடுன்னு சொன்ன?’

‘ஓ… நான் சொன்னதுனால போனியா… அப்ப சரி இப்பவும் அதையே சொல்றேன் போயிடு… திரும்பிப் பாக்காம போயிடு.’

‘ஐயோ சப்னா… என்னைக் கொல்லாத. உன்னைப் பாக்கணுங்கறதுக்காக ஓடோடி வந்திருக்கேன். இனியும் இந்தப் பிரிவை என்னால தாங்கிக்க முடியாது. என்னைச் சித்ரவதை செய்யாத.’

‘புற்றுநோய்ன்னு சொல்லி நீ என்னை சித்ரவதை செஞ்சியே அது மட்டும் நியாயமா…’

‘சரி… பழிக்கு பழி வாங்கியாச்சுல்ல… என்னை மன்னிசுடு… ஆனா மறந்துடுன்னு மட்டும் சொல்லாத சப்னா.’

‘உன்னை மன்னிக்க நான் யாரு… என்னை நினைச்சிட்டிருக்க நீ யாரு?’

‘ஏன் சப்னா இப்படிப் பேசற’

‘நான் பேசலை மிஸ்டர் வாசு… நீங்கதான் என்னைப் பேச வெச்சிட்டீங்க. குட்பை ஃபார் ஆல்’ – என்று சொல்லி கதவை முகத்துக்கு நேராக அறைந்து சாத்திவிட்டு உள்ளே போகிறாள்.  சத்தம் வெளியே கேட்காமல் அழுகிறாள்.

நாயகனுக்குக் கோபம் தலைக்கேறுகிறது. ஆத்திரத்தில் குடிக்கிறான். உடனே விமானம் பிடித்து பறந்து சென்று அந்த கைம்பெண்ணை அழைத்துவருகிறான். நாயகிக்குத் திருமணம் நிச்சயித்திருந்த அதே நாளில் ஒரு மணி நேரம் முன்னதாக தனது திருமணத்தை நடத்தத் தீர்மானிக்கிறான். அதன்படியே திருமணத்தை செய்துகொண்டு நாயகியின் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்துக்கு மணக்கோலத்துடன் போகிறான். அந்த மண்டபமோ வெறிச்சோடிக் கிடக்கிறது. நேராக நாயகியின் வீட்டுக்கு பைக்கில் விரைகிறான். அங்கும் யாரும் இல்லாமல் இருக்கவே, அருகில் இருக்கும் வீட்டில் விசாரிக்கிறான். நாயகி ரத்த வாந்தி எடுத்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் சொல்கிறார்கள். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடையும் நாயகன் நேராக மருத்துவமனைக்கு விரைகிறான். அங்கு அவனுக்கு நடந்த உண்மை தெரியவருகிறது. இடிந்துபோய் உட்கார்ந்துவிடுகிறான்.

சிறிது நேரம் கழித்து கண்களைத் துடைத்துக்கொண்டு சந்தியாவின் கையைப் பிடித்துக்கொண்டு சப்னா படுத்திருக்கும் வார்டுக்குச் செல்கிறான். சப்னா மணக்கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக வாழ்த்துகிறாள். ’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். வரும்போது எதைக் கொண்டுவந்தோம். போகும்போதுதான் எதைக் கொண்டு போகப் போகிறோம்’ என்று சொல்லிச் சிரிக்கிறாள்.

வாசு எதுவும் பேசாமல் அவளுக்கு அருகில் உட்காருகிறான். பிளாஸ்கில் இருக்கும் பாலை ஊற்றி அவளுக்குக் கொடுக்கிறான். மெள்ள அவளுடைய நெற்றியை வருடியபடியே புன்முறுவல் பூக்கிறான். அப்போது ஒரு நர்ஸ் சப்னாவுக்கு ஊசி போட வருகிறார். வாசு டிரேயில் இருக்கும் சிரிஞ்சை எடுத்துக்கொடுக்கிறான். மருந்து பாட்டிலை எடுத்து நர்ஸ் அதை நிரப்பிக் கொள்கிறாள். ’நான் போட்டுவிடட்டுமா?’ என்று நாயகியிடம் கேட்கிறான் நாயகன். ’ஐய்யோ… வேண்டாம்பா… நீ ஓங்கி குத்திடுவ. நர்ஸே போடட்டும்’ என்று சொல்கிறாள். ’இல்லை வலிக்காம போடறேன். நீ கண்ணை நல்லா மூடிட்டு முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கோ’ என்று சொல்கிறான். அதன்படியே அவள் செய்கிறாள். நாயகன் கைக்கு அருகில் கொண்டு சென்றதும் ஊசியில் இருக்கும் மருந்தை கீழே கொட்டிவிட்டு, வெறும் ஊசியை நாயகியின் நரம்பில் குத்தி ரத்தத்தை உறிஞ்சுகிறான். நாயகிக்கு எதுவும் தெரியவில்லை. நர்ஸுக்கு ஏதோ அசம்பாவிதம் நடப்பதுபோல் தோன்றவே என்ன என்று நெருங்கிப் பார்க்கிறார். ஊசி முழுவதும் ரத்தம் இருப்பது தெரிகிறது. அவர் அதிர்ச்சி அடைந்து கத்துவதற்குள் சட்டென்று அதை எடுத்து நாயகன் தன் உடம்பில் செலுத்திக்கொண்டுவிடுகிறான். நர்ஸ் அதைப் பார்த்ததும் அலறுகிறாள்.

நாயகியும் கண்ணைத் திறந்து என்ன நடந்ததென்று பதறியபடியே கேட்கிறாள். நாயகன் ரத்தச் சொட்டுகள் இருக்கும் ஊசியை முத்தமிட்டபடியே, ’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். வரும்போதுதான் எதையும் கொண்டு வரவில்லை… போகும்போதாவது எதையாவது கொண்டு செல்வோமே’ என்று சொல்லியபடியே சப்னாவை நெருங்கி அணைத்து முத்தமிடுகிறான். சப்னா அவன் செய்ததைப் பார்த்து அழுதபடியே அவனைக் கட்டித் தழுவுகிறாள். இருவரும் சட்டென்று ஏதோ நினைவு வந்தவர்களாக திரும்பிப் பார்க்கிறார்கள். சந்தியா இதழோரம் புன்னகையும் கண்களில் கண்ணீருமாக நின்றுகொண்டிருக்கிறாள். பிறகு நிதானமாக, எனக்கு இது பழகிப் போனதுதான் என்று சொல்லி தன் கழுத்தில் இருந்த தாலியை அறுத்து நாயகனிடம் கொடுக்கிறாள். அதை அவன் நாயகியின் கழுத்தில் கட்டுகிறான். சந்தியா தன் கழுத்தில் கிடக்கும் மாலையை நாயகியின் கழுத்தில் போடுகிறாள். காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள். இருவருடைய பெற்றோர்களும் அவர்களுடைய நிலையைப் பார்த்து அழுகிறார்கள். நாயகன் தன்னுடைய அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு எல்லாரையும் சிரிக்கவைக்க முயற்சி செய்கிறான். முடியாமல் கடைசியில் அவனும் அழுகிறான்.

மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், என்ன பலனும் இல்லாமல் நோய் முற்றத் தொடங்குகிறது. இதனிடையில், சந்தியாவுக்கும் அந்த முறைப்பையனுக்கும் திருமணம் நடக்கிறது. நாயகனும் நாயகியும் அவர்களை வாழ்த்துகிறார்கள். இன்னும் சில நாள்களில் நாயகி இறந்துவிடுவாள் என்பது தெரியவருகிறது. நீ இறந்த பிறகு நான் இந்த உலகில் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டேன் என்று நாயகன் சொல்கிறேன். இருவரும் ஒன்றாக இறக்க முடிவெடுக்கிறார்கள்.

மருத்துவர்களின் அனுமதி பெற்று ஒரு நாள் வெளியில் செல்கிறார்கள். காதலித்தபோது போன  இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். சந்தோஷமாகப் பாடப்பட்ட பாடல்கள் இப்போது சோகமாகப் பாடப்படுகிறது. கடற்கரையில் ஓடி விளையாடுகிறார்கள். பாழடைந்த மண்டபத்தில் விளையாடுகிறார்கள். மலைக் கோயிலுக்குப் போய் தொழுகிறார்கள். கடைசியில் மலை உச்சிக்குப் போகிறார்கள். காலா வா.. உன்னைக் காலால் எட்டி உதைப்பேன் என்ற பாரதியின் பாடலை நாயகன் வீராவேசமாகப் பாடுகிறான். நீ யார் எங்கள் உயிரை எடுக்க… எங்கள் வாழ்க்கையை நாங்கள்தான் தீர்மானித்தோம். எங்கள் மரணத்தையும் நாங்களே தீர்மானிப்போம் என்று சொல்லியபடி மேலிருந்து குதிக்கிறார்கள். அலைகள் உரசும் கடல் கரையை வந்து சேர்கின்றன அவர்களுடைய உடல்கள். அலை என்னதான் அடித்தாலும் இணைந்த அந்தக் கைகளை பிரிக்கவே முடியவில்லை.

காதல் பலரை வாழ வைத்திருக்கிறது. ஒரு சிலரே காதலை வாழ வைக்கிறார்கள். 

அன்று அம்பிகாவதி – அமராவதி

நேற்று ரோமியோ – ஜூலியட்

இன்று வாசு – சப்னா 

காதலர்கள் இறக்கலாம்… காதல் ஒருபோதும் இறக்காது 

A Film By Maha Balachandra Devan

 0

B.R. மகாதேவன்