சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் டோங் லீ என்ற வில்லன், தெருநாய்க்கு ஒரு ஊசியை போட்டு, அதன் மூலம் தொற்று வியாதியை பரப்பி பல உயிர்களைப் பலி வாங்குவான். இந்தத் தொற்று வியாதியின் சிகிச்சைக்கான மருந்து சீனர்களிடம் இருக்கும். இந்தியாவில் இறந்து கொண்டிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு சீனாவின் உதவி தேவை. சீனா உதவி செய்யவேண்டும் என்றால், இந்தியா சீனாவுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இது போன்று நுண்ணுயிரிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி, ஒருவர் தனக்கு வேண்டியதை சாதித்து கொள்வதைத்தான் ஆங்கிலத்தில் Biological Warfare என்று அழைக்கிறார்கள்.
நுண்ணுயிரிகளைக் கொண்டு தாக்குதல் புரிவது இன்று நமக்கு பரிச்சயமான விஷயம். ஆனால் நுண்ணுயிரியைக் கொண்டு ஒருவர் இந்தியாவில் நிஜமாகவே கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் எப்போது தெரியுமா? சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர். என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?
பகூர் என்பது ஓர் ஊரின் பெயர். ஊர் என்று சொல்வதைவிட, அது ஒரு பெரிய ஜமீன் என்று சொல்வது சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் ஆட்சியில், வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது பகூர். இந்த ஜமீனை நிர்வகித்து வந்தவர்கள் பகூர் ராஜா வம்சத்தவர்கள். பகூர் ஒரு காலத்தில் முகலாயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்பொழுது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.
பகூரை நிர்வகித்து வந்த ராஜா 1929ஆம் ஆண்டு இறந்துபோனார். அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவன் பெயர் பினயேந்திரநாத் பாண்டே, வயது 29. இன்னொருவன் அமரேந்திரநாத் பாண்டே, 16 வயது. இவர்கள் இருவருக்கும் தந்தை ஒருவரே என்றாலும் தாய் வெவ்வேறானவர்கள். இந்நிலையில் தந்தை இறந்த பிறகு, ஜமீன் சொத்துக்கு இருவரும் அதிபதியாகி விட்டனர். ஆனால் அமரேந்திரா மைனராக இருந்ததால், பினயேந்திரா ஜமீனை நிர்வகித்து வந்தான்.
பினயேந்திராவின் போக்கு சரியில்லை. எப்பொழுதும் குடியும் கும்மாளமுமாக இருந்தான். அவனுக்கு நாட்டியக்காரி பாலிக்கபாலாவின் தொடர்பு வேறு இருந்தது. கேட்கவா வேண்டும்?பினயேந்திராவுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டது. அதனால் பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்டான். அமரேந்திராவுக்கு தெரியாமல் ஜமீன் சொத்துகளை விற்றான். இதனால் அமரேந்திராவுக்கும் பினயேந்திராவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. ஆனால் அமரேந்திராவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. காரணம் அவன் மைனர்.
1931 ஆம் ஆண்டு அமரேந்திரா மேஜர் ஆகிவிட்டான். குடும்பத்தார் அனைவரும் அமரேந்திராவுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக அமரேந்திராவின் அத்தை, ராணி சுரவதி. அவள் டியோகர் ராஜ்ஜியத்தின் ராணி. அவளுக்கும் நிறைய சொத்து இருந்தது. அவளுடைய சொத்திலும் சகோதரர்களுக்கு பின்னடை உரிமை (Reversionary Interest) இருந்தது. அதாவது சுரவதிக்குப் பிறகு அவளுடைய சொத்துகள் சகோதரர்கள் இருவருக்கும் வந்து சேரும்.
மேஜரானதும் அமரேந்திரா ஜமீன் சொத்து தொடர்பாக, பல நபர்களுக்கு பகர அதிகாரப் பத்திரத்தை (Power of Attorney) எழுதிக்கொடுத்தான். இதன் பொருட்டு மறுபடியும் சண்டை மூண்டது. அப்போது, சகோதரர்களுக்கிடையே சொத்தை பிரித்துக்கொள்வதற்கான பேச்சு முன்வைக்கப்பட்டது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
1932ஆம் ஆண்டு துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, அமரேந்திரா டியோகரில் உள்ள தன்னுடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தான். அப்போது அங்கு பினயேந்திரா ஒரு கம்பவுண்டருடன் (மருந்து கலந்து கொடுப்பவர்) வந்தான். பினயேந்திரா தன்னுடைய தம்பிக்கு ஆசையாக ஒரு மூக்கு கண்ணாடி வாங்கி வந்தது மட்டுமல்லாமல், அதை அவனே தன் தம்பிக்கு அணிவித்து விட்டான். என்ன ரொம்ப அழுத்தம் கொடுத்து மாட்டி விட்டான். அதனால் அமரேந்திராவிற்கு மூக்கில் இரத்தக் கசிவு ஏற்பட்டது. பின்னர் பினயேந்திரா சென்றுவிட்டான்.
சிறிது நாட்களில் அமரேந்திராவுக்கு கடும் ஜுரம் ஏற்பட்டது. டாக்டர் சவுரேந்திரநாத் முக்கர்ஜீ என்ற மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து அமரேந்திராவை பரிசோதித்துவிட்டு அவனுக்கு டெட்டனஸ் காய்ச்சல் கண்டிருப்பதாகத் தெரிவித்தார். கூடவே, ஆண்ட்டி டெட்டனஸ் (anti tetanus serum) ஊசி போடப்பட்டது.
சுரவதி பினயேந்திராவுக்கு தந்தி கொடுத்தார். பகூரிலிருந்து குடும்ப மருத்துவரை அழைத்துவரச் சொன்னார். ஆனால் குடும்ப மருத்துவரை அழைத்துவராமல், தாராநாத் பட்டாஜார்ஜி என்று கல்காத்தாவிலிருந்து ஒரு மருத்துவரை பினயேந்திரா அழைத்து வந்தான். அழைத்து வந்ததோடு அல்லாமல், தாராநாத்தை சவுரேந்திரநாத்தின் உதவியாளராக வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தினான். ஆனால் சவுரேந்திரநாத் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் அமரேந்திராவுக்கு ஆண்ட்டி டெட்டனஸ் ஊசி போடவேண்டாம் என்று சவுரேந்திரநாத் வலியுறுத்தப்பட்டார். ஆனால் சவுரேந்திரநாத் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
பினயேந்திரா விடவில்லை. இரண்டொரு நாள்களில் டாக்டர் துர்கா ரத்தன் தர் என்பவரை அழைத்து வந்து, சவுரேந்திரநாத் போடும் ஊசியுடன் ரத்தன் தர் கல்கத்தாவிலிருந்து கொண்டுவந்த ஊசியையும் அமரேந்திரநாத்துக்குப் போடும்படி வலியுறுத்தினான்.
டாக்டர் ரத்தன் தர் கொண்டுவந்த ஊசி அமரேந்திராவுக்கு போடப்பட்டது. இது போதாதென்று பினயேந்திரா, டாக்டர் சிவபாத பட்டாஜார்ஜி என்ற இன்னொரு மருத்துவரையும் அமரேந்திராவுக்கு மருத்துவம் அளிக்க அழைத்து வந்தான். ஆனால், சந்தேகம் அடைந்த குடும்பத்தார் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதற்கிடையில் டாக்டர் ரத்தன் தர் அமரேந்திராவுக்கு ஊசி போட்ட இடம் கட்டியாகி சீழ் பிடித்திருந்தது. அதற்கும் சேர்த்து அமரேந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியோ அமரேந்திரா 1933 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாத வாக்கில் உடல் நலம் தேரி உயிர் பிழைத்துக்கொண்டான். ஆனால் அமரேந்திராவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையால், அவனுடைய இதயம் பாதிக்கப்பட்டிருந்தது.
பினயேந்திரா தன்னுடைய பேரிலும், தன்னுடைய சகோதரன் பெயரிலும் வாரிசுரிமை சான்றிதழ் பெற்று, அதன் மூலம் அலகாபாத்தில் பகூர் ஜமீனுக்கு வரவேண்டிய 13,000 ரூபாய் பணத்தை தானே வசூல் செய்து கொண்டான். இந்தச் சம்பவம் நடந்தது 1933 ஆம் ஆண்டு ஜூன் மாதம். விவரம் அறிந்த அமரேந்திரா, ஜமீன் சொத்தில் தன்னுடைய உரிமையைப் பாதுகாத்துக்கொள்ள வழக்கறிஞர்களை ஆலோசித்தான். பினயேந்திராவின் மீது வழக்கு தொடர்ந்து, ஜமீன் சொத்தைப் பிரிக்கப்போவதாக அறிவித்தான். பினயேந்திரா, அமரேந்திராவிடம் வழக்கு வம்பெல்லாம் வேண்டாம், நாம் சமாதானமாக போய்விடலாம். ஜமீன் சொத்தை சரி சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தான். சொத்தை பிரித்துக்கொள்ளும் பொருட்டு, நீதிமன்றத்தில் சமரச தீர்ப்பாணை (Compromise Decree) பெறுவதற்காக சகோதரர்கள் 17,000 ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் கட்டினார்கள்.
இதற்கிடையில் பினயேந்திரா என்ன நினைத்தானோ, நீதிமன்றத்தில் செலுத்திய 17,000 ரூபாய் பணத்தைத் திரும்பிப் பெற, மனு தாக்கல் செய்தான். இதை அறிந்த அமரேந்திரா, நீதிமன்றம் பினயேந்திராவுக்கு பணத்தை திருப்பி கொடுக்கக் கூடாது என்று எதிர்மனு தாக்கல் செய்தான். சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு முற்றியது. பினயேந்திரா சுரவதியிடம், பகூரில் இருந்து அமரேந்திராவை கல்கத்தாவுக்கு வரவழைக்கும்படி வற்புறுத்தினான். ஆனால் சுரவதி அதற்கு மறுத்திடவே, சுரவதி அழைப்பது போல் தானே அமரேந்திராவுக்கு ஒரு தந்தி அனுப்பி, அவனை கல்கத்தாவுக்கு அழைத்தான்.
கல்கத்தாவுக்கு வந்த அமரேந்திராவிடம் சொத்தைப் பிரிக்கும் விவகாரத்தை எடுத்தான் பினயேந்திரா. ஆனால் அமரேந்திரா சொத்தைப் பிரிப்பதைப் பற்றி கல்கத்தாவில் பேசவேண்டாம், பகூரில் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்.
பின்னர் அமரேந்திரா தன்னுடைய சொந்தக்காரப் பெண்ணான ஜோதிர்மயி உடன், கல்கத்தாவில் உள்ள பூர்ணா தியேட்டரில் படம் பார்க்கக் சென்றான். அப்போது தியேட்டரின் வெளியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், உயரம் குறைவான மனிதன் ஒருவன் சுற்றிக்கொண்டிருந்தான். அவன் கருப்பான தோற்றத்துடன் இருந்தான். அவனுடைய முகம் அரைகுறையாக போர்வையால் மூடப்பட்டிருந்தது. அந்த மனிதனும் பினயேந்திராவும் ஒன்றாகவே காணப்பட்டனர்.
சுரவதியும் அமரேந்திராவும் கல்கத்தாவைவிட்டு புறப்படத் தயாராயினர். இந்த விவரத்தை அறிந்து கொண்ட பினயேந்திரா, அவர்களை வழியனுப்ப ஹவுரா ரயில் நிலையத்துக்கு வந்தான். அன்று நவம்பர் மாதம் 26 ஆம் தேதி, 1933 ஆம் வருடம். அமரேந்திராவையும் சுரவதியையும் வழியனுப்ப குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் நண்பர்களும் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். ஹவுரா ரயில் நிலையத்தில், பினயேந்திராவைப் பார்த்ததும் அனைவருக்கும் ஆச்சரியம். அமரேந்திரா ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்துக்குச் செல்வதற்காக உள்ளே நுழைந்தான். அப்போது அவனுடைய வலது கையில் சுரீர் என்று ஏதோ குத்தியதை உணர்ந்தான். அந்த சமயத்தில் அவனைத் தாண்டி ஒருவன் சென்றான். அவன் வேறு யாருமில்லை. பூர்ணா தியேட்டரில் சுற்றிக்கொண்டிருந்தவன்தான்.
அமரேந்திரா சட்டைக் கையை விலக்கி தன்னுடைய வலது கையைப் பார்த்தான். குத்தப்பட்ட அடையாளம் இருந்தது. அதை தன்னை வழியனுப்ப வந்தவர்களிடம் காட்டினான். அமரேந்திராவின் சொந்தக்காரர்களில் ஒருவனான கமலா பிரசாத் பாண்டே, இதில் ஏதோ சதி இருக்கிறது, நீ பகூருக்கு போகவேண்டாம். கல்கத்தாவில் ரத்தப் பரிசோதனை செய்து விடலாம் என்று அமரேந்திராவிடம் தெரிவித்தான். ஆனால் அதற்குள் அங்கிருந்த பினயேந்திரா கமலா பிரசாத்தைப் பார்த்து ஒன்றுமில்லாத ஒரு சிறிய விஷயத்தை ஏன் பெரிது படுத்தவேண்டும், பூச்சி ஏதாவது கடித்திருக்கும் என்று கூறிவிட்டு, அமரேந்திரா நீ புறப்படு என்று வழியனுப்பி வைத்தான் (ஒரே அடியாக வழியனுப்பி வைத்தான் என்றும் சொல்லலாம்).
பகூருக்குச் சென்ற அமரேந்திராவின் உறவினர்களுக்கு ஒரே கவலையாக இருந்தது. அதே சமயத்தில் கமலா பிரசாத்திடமிருந்து ஒரு அவசரக் கடிதமும் வந்தது. அதில் அவர், ஹவுரா ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் தனக்கு தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை, இதில் சூழ்ச்சி ஏதோ இருப்பதாக தெரிகிறது. அதனால் அமரேந்திரா உடனே கல்கத்தா வந்து தன்னுடைய ரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மற்றவர்களும் அதே கருத்தை கொண்டிருந்தனர். அதனால் அமரேந்திரா, நவம்பர் 26 ஆம் தேதி மறுபடியும் கல்கத்தா வந்திறங்கினான்.
கல்கத்தா வந்த அமரேந்திராவை, டாக்டர் நளினி ராஜன் சென் குப்தா சோதனை செய்தார். அமரேந்திராவின் கையில், Hypodermic needle என்னும் தோலுக்கு அடியில் கீழ்ப்புறமாக மருந்துபோட பயன்படுத்தப்படும் ஊசி குத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். டாக்டர் நளினி ராஜன், அமரேந்திராவை உடனே ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். நவம்பர் 30 ஆம் தேதி, அமரேந்திராவிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, Blood culture பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக் கூடத்திலிருந்து பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்னரே, அமரேந்திரா டிசம்பர் 4 ஆம் தேதி மரணமடைந்தார்.
அமரேந்திராவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் எலிகளுக்கு போடப்பட்டது. எலிகளுக்கு பபூனிக் பிளேக் (Bubonic plague) என்ற நோய் தோன்றியது. பிளேக் ஒரு கொடிய நோய். உலகம் முழுக்க பலரைக் கொன்றிருக்கிறது. அந்த சமயத்தில், கல்கத்தாவில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை. அமரேந்திரா பிளேக் நோயால் இறந்ததற்கு சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பிளேக் நோயால் இறந்ததாக, அரசாங்கக் குறிப்பில் இருந்தது. அமரேந்திரா பிளேக் நோய் தாக்கி இறந்திருக்கிறார் என்ற தகவல், சுகாதார துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அமரேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஈமக் காரியங்கள் செய்து முடிக்கப்பட்டன.
அமரேந்திராவின் உறவினர்களுக்கு, அமரேந்திராவின் சாவில் ஏதோ மர்மம் இருப்பதாகவே தோன்றியது. பல யோசனைகளுக்குப் பிறகு, அமரேந்திராவின் உறவினர் கமலா பிரசாத் பாண்டே, ஜனவரி 22 ஆம் தேதி, 1934 ஆம் ஆண்டு, காவல் துறை துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
வழக்கு, கல்கத்தா காவல் துறையின் துப்பறியும் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போது துப்பறியும் அதிகாரியாக இருந்தவர் லெ பிராக் என்ற ஆங்கிலேயர். அவர் நன்கு அனுபவமுள்ள, கை தேர்ந்த துப்பறியும் நிபுணர். லெ பிராக்கின் விசாரணையில், ஆச்சிரியமூட்டும் பல புதிய தகவல்கள் கிடைத்தன.
அமரேந்திராவின் அண்ணனான பினயேந்திராவும் டாக்டர் தாராநாத்தும் நெருங்கிய நண்பர்கள். டாக்டர் தாராநாத்தின் மூலமாகத்தான் பினயேந்திராவுக்கு நாட்டியக்காரி பாலிகாம்பாவின் தொடர்பு ஏற்பட்டது. டாக்டர் தாராநாத் நுண்ணுயிரிகள் ஆராய்ச்சியில் நிபுணர்.
அமரேந்திரா பகூர் ஜமீன் சொத்து தொடர்பாக, பல பேருக்கு பவர் அதிகாரம் எழுதிக் கொடுத்த அதே நாளில், தாராநாத் மும்பையில் உள்ள Haffkine Institute-க்கு (இதை நிறுவியவர் ஒரு ரஷ்ய யூதர். இவரைப் பற்றியும், இவர் இந்த ஸ்தாபனத்தில் ஆற்றிய தொண்டைப் பற்றியும் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன!) ஓர் அவசர தந்தியை அனுப்பி, தன்னுடைய ஆராய்ச்சிக்கு, ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்ட உக்கிரமான பிளேக் கிருமி (virulent plague culture) வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அந்த இன்ஸ்டிட்யூட், வங்காளத்தின் ஜெனரல் சர்ஜனின் அனுமதி இருந்தால் மட்டுமே, பிளேக் கல்ச்சரைத் தருவோம் என்று பதிலளித்தது.
தாராநாத், கல்கத்தாவில் டாக்டர் உகில் என்பவரை சந்தித்து, தான் பிளேக் நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதை பிளேக் கல்ச்சர் கொண்டு சோதனை செய்யவிருப்பதாகவும், அதை டாக்டர் உகிலின் கீழ் அவருடைய ஆய்வுக் கூடத்திலே செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். டாக்டர் உகிலும் தாராநாத்தை, தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் தனக்குக் கீழ் ஆராய்ச்சி செய்ய அனுமதித்தார். ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடிலிருந்து பிளேக் கல்ச்சர் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதை தாராநாத் தனியே பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. உகிலின் ஆய்வுக் கூடத்தில், ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடிலிருந்து தருவிக்கப்பட்ட கல்ச்சரிலிருந்து மேலும் சில கல்ச்சர்கள் உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஒன்றும் ஒப்பேரவில்லை. அதனால் ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்ச்சர் அழிக்கப்பட்டது.
தாரநாத் உகிலிடம் மீண்டும் ஒருமுறை பிளேக் கல்ச்சரை வைத்து ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அதற்கு உகில் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக உகில் தாரநாத்துக்காக, ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூட்டுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து, டாக்டர் தாராநாத் தன்னுடைய கண்டுபிடிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூட் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பினயேந்திரா பம்பாய்க்கு கிளம்பிச் சென்றான். அங்கு ரத்தான் சலாரியா என்ற ஒரு கைடை (வழிகாட்டுபவர்) நியமித்துக் கொண்டான் (பின்னர் இந்த ரத்தான் சலாரியாதான் நீதிமன்றத்தில் பினயேந்திராவும் தாராநாத்தும் எங்கெங்கெல்லாம் சென்றார்கள் என்று சாட்சியம் அளித்தான்). ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடில் வேலை பார்த்த டாக்டர் நாயுடுவை தொடர்பு கொண்டான். தாராநாத்துக்கு வழங்கப்பட்ட சிபாரிசு கடிதத்தைக் காட்டினான். பினயேந்திரா, நாயுடுவிடம் தான் தன்னுடைய நண்பர் ஒருவரின் ஆராய்ச்சிக்கு ஒத்துழைக்கும் நோக்கில் பம்பாய்க்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தான். டாக்டர் நாயுடு, ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடின் இயக்குனரின் அனுமதி இல்லாமல் எந்த உதவியும் செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்.
சிறிது நாள்கள் கழித்து பினயேந்திரா மறுபடியும் பம்பாய்க்குச் சென்றான். இம்முறை லஞ்சம் கொடுத்தாவது, எப்படியாவது பிளேக் கல்ச்சரை வாங்கிவிட வேண்டும் என்று பிரயத்தனப்பட்டான். ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூடில் வேலை பார்த்த டாக்டர் நாகராஜன் மற்றும் டாக்டர் சாத்தேவைச் சந்தித்தான். ஆனால் அவனால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. இறுதியாக டாக்டர் நாகராஜன் மூலமாக, பாம்பே அர்தர் ரோடில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் பிளேக் கல்ச்சர் கிடைக்கும் என்று தகவல் கிடைத்தது. பினயேந்திரா, பாம்பே அர்தர் ரோடில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு மருத்துவமனை மேலதிகாரி டாக்டர் பாட்டேலைப் பார்த்து தன்னுடைய நண்பன் தாராநாத் தொற்று நோய் மருத்துவமனையின் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் அனுமதியை எப்படியோ பெற்றுவிட்டான். டாக்டர் பாட்டேல் தன்னுடைய உதவியாளரான டாக்டர் மேத்தாவிடம், கல்கத்தாவிலிருந்து வரும் டாக்டர் தாராநாத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார்.
தாராநாத் பாம்பே வந்து இறங்கினான். தாராநாத் கேட்டுக்கொண்டதன் பேரில் டாக்டர் மேத்தா, டாக்டர் பாட்டேலின் மூலம் ஹாஃப்கைன் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து பிளேக் கல்ச்சரை வரவழைத்தார். டாக்டர் மேத்தா, வரவழைக்கப்பட்ட பிளேக் கல்ச்சரிலிருந்து மாதிரிகளை எடுத்து தாரநாத்துக்கு கொடுத்தார். தாராநாத், அர்தர் ரோடு தொற்று நோய் மருத்துவமனை ஆய்வுக் கூடத்தை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டார். தாராநாத் தனக்கு கிடைத்த பிளேக் கல்ச்சரை வைத்து எலிகளுக்கு ஊசி போட்டார். எலிகள் செத்து மடிந்தன. பிறகென்ன! பினயேந்திராவும், தாராநாத்தும் எதற்காக பம்பாய் வந்தார்களோ, அந்த லட்சியம் ஈடேறிவிட்டது.
1933 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 12 ஆம் தேதி தாராநாத்தும் பினயேந்திராவும், தங்களுக்கு தேவைப்பட்ட பிளேக் கல்ச்சரை எடுத்துக்கொண்டு கிளம்பினர். கிளம்பும் முன் டாக்டர் மேத்தாவிடம் ஏதாவது சொல்லியாக வேண்டுமே? தனக்கு கல்கத்தாவில் முக்கியமான அலுவல் வந்திருக்கிறது, அதை முடித்து விட்டு திரும்புவதாக தாராநாத் சொன்னான். கட்டாயமாக டாக்டர் பாட்டேலுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும்படி தாராநாத், டாக்டர் மேத்தாவை கேட்டுக்கொண்டான்.
போனவர்கள் போனவர்கள்தான். அப்புறம் பம்பாய் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. பிளேக் நோய்க்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பம்பாயைவிட்டு கிளம்புவதற்கு முன் பினயேந்திரா, தன்னுடைய ஆசைத் தம்பி அமரேந்திராவுக்காக 51,000 ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிஸி ஒன்றை எடுக்க முயன்றான். ஆனால் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பினயேந்திரா கேட்ட பாலிஸியை கொடுக்க முடியாது என்று தெரிவித்தது. காரணம் பினயேந்திரா முன்வைத்த நிபந்தனைதான். அப்படி என்ன நிபந்தனை? அமரேந்திரா இறந்த பிறகு, எந்த காரணத்தைக் கொண்டும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாலிஸி செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது. எப்படி இருக்கிறது பாருங்கள்!
அப்பறம் என்ன நடந்தது என்பதைத்தான் நாம் முன்பே பார்த்தோம்.
காவல் துறை பினயேந்திராவையும் டாக்டர் தாராநாத்தையும் கைது செய்தது. கூடவே டாக்டர் துர்கா ரத்தன் தர் மற்றும் டாக்டர் சிவபாத பட்டாஜார்ஜியை கைது செய்தது. முன்னொரு சமயம் பினயேந்திரா சொன்னதின் பேரில், அமரேந்திராவிற்கு ஏதோ ஒரு ஊசியைப் போட்டு, அமரேந்திராவின் உடலை நலிவடையச் செய்தவர்கள் என்பதால். ஆனால் முக்கியமான ஒரு ஆளைக் கைது செய்யமுடியவில்லை. முகத்தை அரைகுறையாகப் போர்த்திக்கொண்டு திரிந்த, அந்தக் கருத்த குள்ள உருவம். அமரேந்திராவிற்கு ஊசி போட்டவன்.
நீதி மன்றத்தில் காவல்துறை, மேற்சொன்ன நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எந்த குற்றவாளிதான், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வான். கிரிமினல் வழக்குகளில் அரசு தரப்புதான், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றத்தை நிரூபிக்கவேண்டும்.
அரசு தரப்பில் நடந்த குற்றத்தை நிரூபிக்க நிறைய ஆதாரங்களைத் திரட்டியிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சில முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.
1. ஹவுரா ரயில் நிலையத்தில், அமரேந்திராவுக்கு பிளேக் ஊசி போட்டதாகச் சொல்லப்படும் நபரை காவல் துறையால் கைது செய்யமுடியவில்லை. பினயேந்திராவின் தூண்டுதலின் பேரில் தான், அந்த மர்ம நபர் அமரேந்திராவுக்கு ஊசி போட்டார் என்று நிரூபிக்க ஆதாரம் எதுவுமில்லை.
2. அமரேந்திரா பூச்சி கடித்து கூட இறந்திருக்கலாம். மரணமடைந்த அமரேந்திராவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.
3. சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான், அமரேந்திராவின் சகோதரி கண்ணன்பாலா என்பவர் mumps எனப்படும் கழுத்தில் ஏற்படும் ஒரு வீக்க வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்துபோயிருக்கிறார். கண்ணன்பாலாவின் மூலமாகக் கூட அமரேந்திராவுக்கு நோய் தொற்றி, அதன் தாக்குதலால் இறந்திருக்கக்கூடும்.
4. பினயேந்திராவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம். அதன் பொருட்டு தான், அவர் அடிக்கடி பம்பாய் சென்றிருக்கிறார்.
5. தாராநாத் நுண்ணுயிரிகள் ஆராய்ச்சியில் நிபுணர். அவர் பிளேக் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காகத்தான் பிளேக் கல்ச்சரைத் தேடி அலைந்திருக்கிறார். அந்த சமயத்தில் பம்பாய்க்கு அடிக்கடி சென்று வந்த பினயேந்திரா, தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசுத் தரப்பு பின்வரும் வாதத்தை முன்வைத்தது.
1. அமரேந்திராவுக்கும் பினயேந்திராவுக்கும் பகூர் ஜமீன் சொத்து சம்மந்தமாக அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. இது தொடர்பாக இவர்களது உறவினர்கள் சாட்சியம் அளித்திருக்கின்றனர்.
2. பினயேந்திரா, பம்பாயில் எந்த சினிமா கம்பெனிக்கும் அல்லது ஸ்டுடியோவுக்கும் செல்லவில்லை என்று அவனுக்கு பம்பாயில் வழிகாட்டியாக செயல்பட்ட ரத்தன் சார்லியா சாட்சியம் தெரிவித்திருக்கிறான்.
3. தாராநாத், பிளேக் நோய்க்கு மருந்து கண்டிபிடித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தாராநாத்தின் ஆராய்ச்சிக்கு உதவிய டாக்டர் உகில் மற்றும் டாகடர் மேத்தா இருவரும் தாராநாத் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று சாட்சியமளித்துள்ளனர்.
4. அமரேந்திரா பிளேக் நோயால் இறந்த தருவாயில், வங்காள மாகாணத்தில் வேறு யாரும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. அந்த சமயத்தில் பிளேக் நோய் தொற்று நோயாக பரவவில்லை.
5. பினயேந்திராவுக்கு அமரேந்திராவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருக்கிறது. பினயேந்திராவின் நோக்கம் நிறைவேற, தாராநாத் உதவியிருக்கிறார். இதன் பொருட்டு தான், இருவரும் பம்பாய் சென்று பிளேக் கிருமியை கல்கத்தாவுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.
6. ஜூலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட பிளேக் கிருமியை நவம்பர் மாதம் வரை அழிந்து விடாமல் பாதுகாக்க முடியும் என்று சாட்சியம் அளிக்கப்பட்டிருக்கிறது.
7. சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்கள் எல்லாம், குற்றம் சாட்டப்பட்ட பினயேந்திராவுக்கும் தாராநாத்துக்கும் எதிராகவே இருக்கிறது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்தக் கொலையை செய்திருக்க முடியும்.
அரசுத் தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட ஜூரி பினயேந்திராவையும், தாராநாத்தையும் குற்றவாளிகளாக அறிவித்தது. ஆனால் மற்ற இருவரையும், அதாவது துர்கா ரத்தன் தர்ரையும், சிவபாத பட்டாஜார்ஜியையும் நிரபராதி என்று அறிவித்தது. அதற்கு காரணம், மருத்துவ நிபுணர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கையில், டெட்டனஸ் நோய் தாக்கியவர்களுக்கு இழுப்பு வரும்; அந்த சமயத்தில் வலிப்பையையும், வலியையும் குறைப்பதற்காக மார்பைன் கொடுக்கப்படுவது சகஜம்தான், அதில் ஒன்றும் தவறில்லை என்று கூறினர். அதைத்தான் துர்கா ரத்தன் தர்ரும், சிவபாத பட்டாஜார்ஜியும் செய்திருக்கிறார்கள். இதை குற்றம் என்று சொல்லமுடியாது. அதனால் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் ஏற்புடையதல்ல என்று ஜூரி முடிவெடுத்தது.
ஜூரியின் முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, துர்கா ரத்தன் தர்ரையும், சிவபாத பட்டாஜார்ஜியையும் விடுதலை செய்தார். பினயேந்திராவுக்கும் தாராநாத்துக்கும் அமரேந்திராவைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. மே மாதம் 1934 ஆம் ஆண்டு தொடங்கிய விசாரணை , பிப்ரவரி மாதம் 1935 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதாவது 10 மாதத்திற்குள்ளாக, விசாரணை முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டது.
ஒரு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அதை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட பென்ச் உறுதி செய்ய வேண்டும். பகூர் கொலை வழக்கிலும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யும் பொருட்டு, கல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு அனுப்பப்பட்டது. அதே சமயத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான பினயேந்திராவும் தாராநாத்தும் தங்கள் மீது விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
தூக்கு தண்டனையை உறுதி செய்ய அனுப்பப்பட்ட வழக்கையும், குற்றவாளிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்மூறையீட்டு வழக்கையும் ஒரு சேர விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம், சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான், குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டிருக்கிறது, இவர்கள் குற்றம் இழைத்தற்கான நேரடி சாட்சிகள் இல்லாத காரணத்தால், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று தண்டனையை விதித்தது. இவ்வாறாக பகூர் கொலை வழக்கு முடிவடைந்தது.
0
S.P. சொக்கலிங்கம்