நான் சாதி வெறியை வெறுக்கிறேன்!

இளவரசன் என்ற பறையர் சாதிப் பையனும் திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் மனம் விரும்பிச் செய்துகொண்ட திருமணம், அணைந்துவிட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருந்த ஒரு எரிமலையை வெடிக்கச் செய்திருக்கிறது. இந்தத் துயரமான நிகழ்வு பல விஷயங்களை மறுபரிசீலனைச் செய்யத்தூண்டியுள்ளது.

சாதி உணர்வானது நவீன உலகில் சாதி வெறியாக உருத்திரண்டு வருகிறது. கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லையென்றால் எதிர்காலம் நிச்சயம் மோசமாகவே ஆகும் என்பதற்கு இந்தக் கொடூரத் தாக்குதல் நல்ல உதாரணம். தென் மாவட்டங்களைவிட வட மாவட்டங்களில் சாதி சார்ந்த ஒடுக்குமுறையானது இதுவரையில் குறைவாகவே இருந்துவந்திருக்கிறது. அது காலப்போக்கில் மறைந்துவிடும் என்ற நம்பிக்கையின் இளம் துளிரை மிதித்து நாசமாக்கிவிட்டிருக்கிறது இந்த நிகழ்வு.

இத்தனைக்கும் வன்னியர்களின் தலைவரான ராமதாஸ், பறையர்களுடன் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக மனப்பூர்வமாக ஏராளமான களப்பணிகள் செய்திருக்கிறார். அவருடைய முயற்சிகள் சாதி வெறியின் நெருப்பை அணைத்துவிட்டிருக்கவில்லை. அதோடு, பாட்டாளி மக்கள் கட்சியும் சமீபகாலமாக கலப்புத் திருமணத்தை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறது. ராமதாஸ் முன்னிலையில் காடு வெட்டி குரு பேசியவையெல்லாம் வெறுமனே அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமாக நிச்சயமாக இருந்திருக்க முடியாது. எனவே, இது ராமதாஸின் திசைமாறலாகவே தோன்றுகிறது. ஒருவகையில் அவர் இதுவரை செய்த நல்லிணக்க முயற்சியின் நன்மையைவிட இந்த வன்முறைப் பாதையில் போவதால் ஏற்படப் போகும் இழப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.

தமது சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை விரும்பித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு அடைக்கலம் தந்ததற்காகப் பறையர் சமூகம் கொடுக்க நேர்ந்த விலை கொஞ்சநஞ்சமல்ல. அக்கம் பக்கத்தில் இருந்தபடி, தினம் தினம் சிரித்துப் பேசியபடி, ‘தாயா புள்ளையாக’ வாழ்ந்த வன்னியர்களின் மனத்தில் இத்தனை வன்மம் குடிகொண்டிருந்ததா என்று வெறுப்பிலும் வேதனையிலும் ஆழ்ந்திருக்கும் பறையர் சமூகத்தினருக்கு என்ன செய்து நம்பிக்கையை ஊட்ட முடியும்?

அடுத்ததாக, இந்த வன்முறை நிகழ்வுக்கு மூலகாரணமாக இருந்துவிட்டிருக்கும் அந்த காதலர்களை நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. திவ்யா, இளவரசன் என்ற அந்த இரு இளைஞர்களைப் பொறுத்தவரை மிகவும் துர்பாக்கியசாலிகள். காதலுக்கு யார் யாரோ எவ்வளவோ பெரிய விலைகளெல்லாம் கொடுக்க நேர்ந்திருக்கிறது. ஆனால், இவர்கள் அளவுக்குப் பெரும் இழப்பை யாரும் தர நேர்ந்திருக்காது. அந்த இளைஞனின் மனத்தில் இப்போது என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும்? நாம் ஒரு பெண்ணை நேசித்ததற்காக நம் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பெரிய துயரத்தை சந்திக்க நேர்ந்துவிட்டது? இப்படி நடந்திருக்கும் என்று தெரிந்திருந்தால், காதலித்திருக்கவே மாட்டேனே என்று அந்த மனம் தனிமையில் கதறி அழக்கூடும்.

அந்தப் பெண்ணும் மனதுக்குப் பிடித்த ஒருவருடன் வாழ முடிவெடுத்ததற்காக என் தந்தையை இழக்க நேர்ந்துவிட்டது. சொந்த சாதிக்காரர்களின் மனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மிருகத்தை என் காதல் சீண்டிவிட்டது… நான் திரும்பிச் செல்லாததால் என் கணவரின் சாதியினர் பட்ட துன்பங்களுக்கு இனி எப்படி ஈடுகட்டப்போகிறேன் என்று மனதுக்குள் மருகிக்கொண்டிருக்கலாம். குலத்தை அழிக்க வந்த மாபாதகி என மற்றவர்கள் தூற்றுவார்கள் என அவள் அஞ்சக்கூடும். இவர்கள் இருவரும் எந்தவகையிலும் இந்த வன்முறைக்குக் காரணம் இல்லையென்றாலும் அவர்களுடைய திருமணம்தானே அதற்கான முதல் விதை. திவ்யா, இளவரசனின் மனம் படும் வேதனையை நாம் எப்படிப் போக்கப் போகிறோம்?
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்கவேண்டும். இது ஒருவகையில் நமது சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையைப் போன்றது. நம்முடைய வலிமை மிகுந்த சகோதரர் ஒருவர் வலிமை குறைந்த சகோதரரை மூர்க்கமாகத் தாக்கியிருக்கிறார். எனவே, பாதிக்கப்பட்ட சகோதரரின் காயத்துக்கு மருந்திடவேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய சகோதரரைக் கண்டிக்க வேண்டும். ஆனால், இருவரும் ஒற்றுமையாக வாழ என்ன வழி என்பதே நம் முயற்சியாக இருக்கவேண்டும். திருமாவளவன் இந்தத் திசையில் சிந்தித்துச் செயல்படுவது நிச்சயம் வரவேற்கத் தகுந்தது.

இந்த வன்முறையைக் கண்டிக்கும் வன்னியர்களை முதலில் ஒருங்கிணைக்கவேண்டும். அவர்கள் மூலமாக இந்த நல்லெண்ண முயற்சியை முன்னெடுக்கவேண்டும். ஒட்டுமொத்த தமிழ் சமூகம் அவர்களுக்குப் பின்னால் நின்று இந்த நேரத்தில் நம் ஆதரவை அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.

இது தொடர்பாக, நம் சமூகத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன? வன்னியர்களின் கட்சி, தார்மிகப் பொறுப்பேற்று மூன்று கிராம மக்களுக்கு ஏற்பட்ட ஒட்டு மொத்த இழப்புக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் இந்த தாக்குதலின் ஆதார அச்சாக பா.ம.க. கட்சிப் பிரமுகர்களே இருந்திருக்கிறார்கள். காடுவெட்டி குருவும் (ராமதாஸ் முன்னிலையில்), கொங்கு வேளாளர் பேரவையும் கலப்பு திருமணத்துக்கு எதிராகப் பேசியவை அனைவருக்கும் தெரிந்தவைதான். எனவே, ஏதோ சில கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் ஈடுபட்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. அனைத்து கட்சியைச் சேர்ந்த வன்னியர்களும், பிற சாதியினர் சிலரும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்றாலும் பா.ம.க. கட்சியினரே கூடுதல் பொறுப்பு உள்ளவர்கள்).

தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்யவேண்டியது என்னவென்றால், விருப்பமுள்ள ஒரு வன்னியப் பெண்ணுக்கும் தலித் ஆணுக்கும் அரசு செலவில் பிரமாண்டமாக ஒரு திருமணத்தை நடத்தவேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் தமது பிறந்த நாளில் கலப்புத் திருமணத்தை மட்டுமே முன்னின்று நடத்தவேண்டும். வெறும் சடங்கு மறுப்புத் திருமணங்கள் போதாது.

தமிழ் சமூகம் இந்தத் துயர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பக்கத்தில் இருக்கிறோம் என்பதைக்காட்டும் வகையில் பொருளாதார உதவிகளை உடனே செய்து தரவேண்டும். அந்த மூன்று கிராம மக்களின் ஒரு தலைமுறை உழைப்பு கொள்ளை போயிருக்கிறது. அதில் சொற்பமேனும் நம்மால் அவர்களுக்குக் கிடைத்தாக வேண்டும். ஒருவகையில் இந்த வன்முறைத் தாக்குதலுக்கு நாமும் உடந்தையே. நாமும் பரிகாரம் செய்தாக வேண்டும்.
வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது சக மனிதர்களுக்கு நன்கொடை தந்து ஆதரவுக் கரம் நீட்டுவதுபோல் இந்த துயர நிகழ்வுக்கும் நாம் உதவ முன்வரவேண்டும். தீயை நீரால் அணைப்பதுபோல், அடிப்படைவாத, சாதி, மத வெறிகளை சமத்துவ, சகோதரத்துவ எண்ணம் கொண்டு விரட்டியடிக்கவேண்டும். அடிப்பதற்கே ஆயிரம் பேர் கூடுகிறார்கள் என்றால் அணைப்பதற்கு எவ்வளவு பேர் கூடவேண்டும்? தருமபுரி என்றால் இந்தக் கொடூரத் தாக்குதல் அல்ல… நாம் செய்யப் போகும் உதவிகளே நினைவில் வரவேண்டும். அந்த அளவுக்கு கூட்டுப் பொறுப்புடன் தமிழ் சமூகம் செயல்படவேண்டிய தருணம் இது.

அதற்கு முதலில் இந்தப் பிரச்னையின் ஆணிவேரை நாம் தேடிச் செல்லவேண்டும்.

0

உண்மையில் பிரச்னை கலப்புத் திருமணம் சம்பந்தப்பட்டது அல்ல. ஏனென்றால், இது போன்ற கலப்புத் திருமணங்கள் அந்தப் பகுதியில் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. அதோடு அவர்கள் தூய்மையான காதலர்களும் அல்ல. பறையருக்கும் பள்ளருக்கும் தேவர் சாதிப் பெண் மீதும் வன்னியர், கவுண்டர் போன்ற மேல் சாதிப் பெண் மீது மட்டுமே பொங்கிப் பிரவகிக்கும் இந்தக் காதல்கள் அப்படி ஒன்றும் இயல்பானவை அல்ல. பறையர் சாதி ஆணோ பள்ளர் சாதி ஆணோ சக்கிலியர், தோட்டி, வெட்டியார் சாதிப் பெண்களை உருகி உருகிக் காதலித்ததாகப் பெரிதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஆக, அவர்கள் மனத்திலும் கீழ் சாதியினர் என்று அவர்கள் நினைக்கும் பிரிவினர் மீது ஒவ்வாமை இருக்கத்தான் செய்கிறது. எனவே, இடைநிலைச் சாதியினர் தமது சாதிப் பெண்ணை, கீழ்சாதி என்று அவர்கள் நினைக்கும் பிரிவினர் திருமணம் செய்துகொள்ளும்போது எதிர்ப்புக் காட்டுவதை நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். மேலும் இந்தக் காதல் திருமணங்கள் வேறு வகையான கணக்குத் தீர்த்தலுக்குப் பயன்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

என்னதான் சொன்னாலும் ஒரு திருமணம் என்பது சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் மட்டுமே தீர்மானித்துவிட வேண்டிய ஒன்று அல்ல. பிற பல விஷயங்கள் அதில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவையெல்லாம் எந்தவகையிலும் இன்று நடந்திருக்கும் வன்முறையை நியாயப்படுத்திவிட முடியாது. பிரச்னை வெறும் கலப்புத் திருமணம் மட்டுமே அல்ல என்பதுதான் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

பறையர்/பள்ளர்களின் பொருளாதார வளர்ச்சியானது இடைநிலைச் சாதியினரால் மிகுந்த அதிருப்தியுடனே பார்க்கப்படுகிறது. இதுதான் பிரச்னையின் முக்கிய காரணம். இப்படியான ஒரு நிலை ஏற்பட்டதற்கு நம் நாட்டில் தோன்றிய சமூக சீர்திருத்தப் போராளிகளே ஒருவகையில் காரணம். சமத்துவம் என்ற கருத்தால் வசீகரிக்கப்பட்ட அவர்கள் அதை அடிப்படை உரிமையாக முன்வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் இது அதிகப்படியான ஓர் எதிர்பார்ப்பு. உண்மையில் சமத்துவ சமூகம் என்பது நம்முடைய இறுதி இலக்கு. பந்தயத்தின் ஆரம்பப் புள்ளி அல்ல.

காந்தியும் அம்பேத்கரும் சொல்லிவிட்டார்கள்… இந்திய அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுவிட்டது என்பதால் எல்லாரும் எல்லாரையும் சமமாக மதிக்க ஆரம்பித்துவிடமாட்டார்கள். இது ஏதோ இந்து மதத்தின் காபிரைட் பிரச்னையும் அல்ல. நேற்றுவரை புராட்டஸ்டண்டுகளும் ரோமன் கத்தோலிக்கர்களும் ஒருவரை ஒருவர் வெட்டியும் குத்தியும்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் ஷியா முஸ்லிம்களும் சன்னி முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தபடிதான் வருகிறார்கள். உலகில் இருக்கும் அனைவருமே நம்மவர்கள் என்று ஒரு குழுவையும் பிறர் என மற்றவர்களையும் அவர்களில் ஏதாவது ஒரு பிரிவுடன் மிக மோசமான பகைமை உணர்வையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இது மனித இனத்தின் சாபக்கேடு. எந்தக்குழு மனப்பான்மை வளமான வாழ்வுக்கு காரணமாக இருக்கிறதோ அதுவே ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல், குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் வீழ்ச்சிக்கும் காரணமாக அமையும். அந்த எல்லை எது என்பதை எந்தக் குழு புரிந்துகொள்கிறதோ அதுவே சமூக படிகளில் முன்னேறிச் செல்லும்.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் குழு மனப்பான்மை பல வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. நவீன கால உதாரணமாகப் பார்த்தால், தமிழகத்தில் நாடார்கள் பொருளாதார அடுக்கில் மேலே வந்ததற்கு சாதி எண்ணம் மிக முக்கிய பங்காற்றியிருப்பதைச் சொலலாம். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற உணர்வுடன் அணி திரள்வது நல்லது என்ற எண்ணம் மிக சமீபமாக அதாவது ஓரிரு நூற்றாண்டுகளாக உருவாகிவந்திருக்கிறது. மனித இனம் கடந்து வந்திருக்கும் காலகட்டத்தை ஒப்பிடும்போது இது மிகவும் குறுகிய காலகட்டமே. எனவே, இத்தகைய வன்முறை நிகழ்வுகளை பழகிய பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறுவதில் உள்ள சிக்கலாகவே பார்க்கவேண்டும்.

இந்து என்ற அடையாளமோ தமிழர் என்ற அடையாளமோ ஆழமாக வேரூன்றியிருக்கவில்லை. சாதிதான் ஆழமாக ஊன்றியிருக்கிறது. எனவே, இது பற்றிப் பேசும்போது ஒவ்வொரு சாதியும் தம்மை சுயவிமர்சனமும் செய்து கொண்டே ஆகவேண்டும். தம்மைவிடத் தாழ்ந்த சாதியாக, தான் கருதும் நபர்களுக்கு, தம்மைவிட வளமான வாழ்க்கை எளிதில் கிடைத்துவிடும்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக ஒருவர் நினைப்பதில் இருக்கும் நியாயத்தை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
ஒரு அலுவலகத்தில் 10 கிளார்க்குகள் இருக்கிறார்கள். ஐந்து ப்யூன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சீனியர் கிளார்க் பதவிக்கு ஐந்து ஆட்களை நியமிக்கவேண்டுமென்றால் என்ன செய்வார்கள்? கிளார்க்களில் இருந்து ஐந்து பேரை நியமிப்பதுதான் அலுவலக நடைமுறை. கூடவே, ஐந்து பியூன்களை கிளார்குகளாக ஆக்குவார்கள். இதுதான் பொதுவாக நடக்கும் விஷயம். ஒருவேளை மூன்று கிளார்குகளை சீனியர் கிளார்க் ஆகவும் இரண்டு பியூன்களை நேரடியாக சீனியர் கிளார்க் ஆகவும் ஆக்கினால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பதவி உயர்வு கிடைக்காத கிளார்க்குகள் கொதித்து எழுவார்கள். பதவி உயர்வு கிடைத்த கிளார்க்குகள் கூட ஒரு பியூன் எனக்கு சமமாக நியமிக்கப்படுவதா என்று ஆவேசப்படுவார்கள். ஒரு அலுவலகத்தில் ஒரு தலைமுறைக் காலம் செய்த பணிக்கே இந்த தாக்கம் என்றால் பல தலைமுறைகளாக நிலவி வந்த சாதி அடுக்கில் இருக்கும் ஏற்றத்தாழ்வைப் போக்க என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும்? சமத்துவம் நல்ல கொள்கைதான். ஆனால், அதை எப்படி அமல்படுத்துவது என்பதில்தான் ஒரு தெளிவு நமக்கு இல்லை.

இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவருக்கு தனக்குப் பக்கத்தில் சரிக்கு சமமாக கடைநிலைச் சாதியைச் சேர்ந்த ஒருவரை உட்காரவைக்க மனம் இல்லையென்றால் என்ன செய்யவேண்டும்? அனைவரும் சமம் என்ற எண்ணத்தை இடைநிலைச் சாதியினரின் மனத்தில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் கடைநிலைச் சாதியினரை அவருக்கு அருகில் உட்காரவைக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு கடைநிலை சாதியைச் சேர்ந்தவரை வலுக்கட்டாயமாக இடைநிலைச் சாதியினருக்குப் பக்கத்தில் உட்கார வைத்து அதன் மூலம் இடைநிலைச் சாதியினரின் மனத்தில் கடைநிலைச் சாதியினர் மீதான சமத்துவ உணர்வை உருவாக்க ஒருபோதும் முடியாது. கலைஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், சமூக நல்லிணக்கப் போராளிகள் இது தொடர்பாக ஊர் ஊராகச் சென்று சமத்துவ எண்ணத்தை மேல், இடைநிலை சாதியினரின் மனத்தில் விதைத்திருக்கவேண்டும். விஷமானது சிறுகச் சிறுக சேகரமாகும்போதே அதை அகற்றியிருக்கவேண்டும். இந்த இடத்தில்தான் நமது திரைப்படங்கள் காதல் பிரச்னையை வெறும் பண்ணையார், அடியாள் பிரச்னையாக வர்க்கம் சார்ந்த ஒன்றாக சாதி நீக்கம் செய்து காட்டியதில் இருக்கும் அவலத்தை யோசித்துப் பார்க்கவேண்டும்.

சமூக சீர்திருத்தப் போராளிகள் பிராம்ண/இந்துமத வெறுப்பு சார்ந்த செயல்பாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்கையாவது இடை, கடை நிலை சாதிகளிடையே சமத்துவம் ஏற்படப் போராடியிருக்க வேண்டும். வைக்கத்தில் ஆலய நுழைவுக்கு எதிராக போராடியதுபோல் தமிழக கிராமங்களில் எங்கெல்லாம் இடை நிலை சாதியினரின் கோயில்களில் கடைநிலை சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததோ அங்கும் போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். தமிழகக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இதைத் தமது சமூகக் கடமையாக எடுத்துக்கொண்டு செயல்பட்டிருக்கவேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் இரு சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்க வேண்டும். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை.

பெரும்பாலானவர்கள் இடைநிலைச் சாதியினரின் மனத்தில் இருக்கும் சமத்துவ மறுப்பு எண்ணத்தை மேல் சாதியினரின் குற்றமாகப் பார்க்கிறார்கள். இந்து மதம், மனுஸ்மிருதி… இவைதான் இடைநிலை சாதியினர் இப்படி நடந்துகொள்ளக் காரணம் என்று நினைக்கிறார்கள். உலகில் எல்லா சமூகங்களிலும் இப்படியான சமத்துவ மறுப்பு இருந்துவந்திருக்கும் நிலையிலும் இந்துமதத்தின் குறையாகவே இதைப் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள். அதுவே, இந்த சமத்துவ மறுப்பு என்ற மனித இனத்தின் இயல்பான ஒரு மனநிலையைப் புரிந்துகொள்ளவோ அதை எப்படி மட்டுப்படுத்துவது என்று நிதானமாக யோசிக்கவோ விடாமல் தடுத்துவிடுகிறது. இந்தவகைப் போராட்ட நடவடிக்கைதான் மேல், இடை, கடை என அனைத்து சாதிகளில் இருக்கும் சாதி எதிர்ப்புப் போராளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. இதனால்தான் இப்படி அப்பட்டமாக இடைநிலை சாதியினரால் ஒரு வன்முறை நிகழ்த்தப்படும்போது சாதி எதிர்ப்புப் போராளிகள் என்ன சொல்ல என்று தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். இந்த வன்முறையே ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்டிருந்தால் முற்போக்குப் போராளிகள் தங்களுடைய ரெடிமேட் முழக்கங்களை நரம்பு புடைக்கக் கத்திக்கொண்டு வீதிக்கு வந்துவிட்டிருப்பார்கள். உலகமே ஒன்றுகூடி இந்து மதத்தைக் கட்டம் கட்டித் தாக்கியிருக்கும். ஆனால், இங்கோ நிலைமை மிகவும் தர்மசங்கடமாகிவிட்டிருக்கிறது. மனுவோடு இந்த நிகழ்வை எப்படி முடிச்சுப்போடுவது என்ற குழப்பத்தில், ஏற்கெனவே துருப்பிடித்துக் கிடக்கும் திராவிடப் போர்வாள்கள் மேலும் முனை மழுங்கிக்கிடக்கின்றன.

ஆனால், கடைநிலை சாதியினருக்கு எந்த உரிமையை வழங்குவதாக இருந்தாலும் இடைநிலைச் சாதியினரின் சம்மதத்தோடுதான் செய்யவேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமா? அதை எப்படி அமல்படுத்துவது? இதுதான் நம் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.

இப்போதைய சாதிய அணித் திரளல்கள் எல்லாம் மாறிவரும் புதிய உலகில் ஒவ்வொரு சமூகத்தினரும் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பானது. தமது உரிமை என்று எதிர்பார்ப்பது தொடர்பானது.

அரசு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் நல்லெண்ணத்தில் இட ஒதுக்கீட்டை ஒரு வழிமுறையாக முன்வைத்திருக்கிறது. ஆனால், அது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டிருக்கிறது. இன்றைய இட ஒதுக்கீடு என்பது ஆளெண்ணி அளந்து போடும் ஒன்றாக இருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட சாதியினர் இத்தனை சதவிகிதம் இருக்கிறார்களா… அப்படியானால் அவர்களுக்கு அத்தனை சதவிகித வாய்ப்புகள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது நியாயமான பங்கீடுதான். ஆனால், நடைமுறையில் இது பெரும் பிரச்னைகளையே உருவாக்கி வந்திருக்கிறது.

இதற்கான முக்கிய காரணம், அரசு வேலைகள் என்பது போதுமான அளவில் இல்லை. எனவே, இட ஒதுக்கீட்டை மிகவும் கறாராக முழுமையாக அமல்படுத்தினாலும் பிரச்னை தீராது. இதைக் கொஞ்சம் விளக்குகிறேன். அதாவது, நாட்டில் 1000 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். தலித்கள் 18-20 சதவிகிதம் அதாவது 180-200 பேர் இருக்கிறார்கள். உயர் சாதியினர், பிற மதத்தினர் சுமார் 20 சதவிகிதம் இருக்கிறார்கள். இடைநிலை சாதியினர் 60 சதவிகிதம் அதாவது 600 பேர் இருக்கிறார்கள். இப்போது அரசு வேலைகள் என்பது ஒட்டுமொத்த மக்கள்திரளில் அதிகபட்சம் 10-15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இருக்கிறது. அதாவது 100-150 பேருக்கு மட்டுமே அரசு வேலை இருக்கிறது. அதில் இடைநிலைச் சாதியினருக்கு 60% என்றால் சுமார் 60லிருந்து 80 வரை கிடைக்கும். அப்போதும் எஞ்சிய 500 இடைநிலைச் சாதியினர் அரசு வேலை கிடைக்காமல் விடப்பட்டிருப்பார்கள். இதைக்கூட அவர்கள் பொறுத்துக்கொண்டுவிடமுடியும். ஆனால், இந்த இட ஒதுக்கீட்டு முறையில் தலித்கள் 30-40 பேருக்கு அரசு வேலை கிடைத்துவிடுகிறது. இதைத்தான் இடைநிலை சாதியினரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஆக, சமூக வளங்களை விகிதாசாரத்துக்கு ஏற்ப பங்கிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடானது இடை நிலை, கடைநிலை சாதிகளை எதிரெதிர் அணிகளில் நிறுத்திவிட்டிருக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு?

அரசாங்க வேலைகளை அனைவருக்கும் கிடைப்பதுபோல் அதிகரிக்க வேண்டும். அல்லது தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கவேண்டும். அப்போதுதான், வளங்கள் ஓரளவுக்கு முறையாகப் பங்கிடப்படும். இல்லையென்றால், சாதாரணமாக ஏற்படும் அதிருப்தியானது வெகு எளிதில் வெறுப்பாகவும் வன்முறையாகவுமே போய்முடியும்.
அரசாங்க வேலைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது நீண்ட காலத் திட்டம்தான். முதற்கட்டமாக, இப்போது அரசு வேலை என்பது ஒருவருக்கு சுமார் 25 வயதில் இருந்து 58 வயது வரையானதாக இருக்கிறது. இதை பாதியாகக் குறைத்து ஒரே வேலையை இரண்டு பேருக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். அதாவது, ஒருவருக்கு அரசு வேலை என்பது 15 வருடங்கள் மட்டுமே என்று கொண்டுவரவேண்டும். அதுவே ஒரு நபருக்கு வளமான குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானது. இதன் மூலம் இப்போதைய நிலையிலேயே இன்னும் இரண்டு மடங்கு நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி பிறக்கும். அது கடை, இடை சாதி மக்களிடையேயான அதிருப்தியைக் குறைக்கும்.

பொருளாதார நிலையில் மேம்பாடு ஏற்பட்டால் கீழ் சாதியினரை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் குறைந்துவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உண்மையில் அது கீழ்சாதியினர் மேல் வெறுப்பையும் கோபத்தையும் அதிகரிக்கவே செய்திருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான் ஆனால், விஷயம் என்னவென்றால், பொருளாதார மேம்பாடு சமூகத்தின் 10-15 சதவிகிதத்தினருக்கு மட்டுமே கிடைத்திருப்பதால்தான் இந்தப் பிரச்னை. ஒருவேளை ஐம்பது சதவிகிதத்தினருக்கு பொருளாதார மேம்பாடு கிடைத்திருந்தால் நிச்சயம் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக ஆகியிருக்காது. எனவே, அதற்கான முயற்சிகளையே நாம் எடுக்கவேண்டும்.

நேற்றைய நிலப்பிரபுத்துவ சாதி அமைப்பில் இருந்து முதலாளித்துவ நவீன சமூகம் உருவாகி வந்ததில் யார் யாருக்கு என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அலசிப் பார்த்தால் உண்மை புரியும். மேல் சாதியில் இருந்த பிராமண, சத்திரிய, வைசிய சாதிகள் தங்கள் மேலாதிக்கத்தை சிறிதும் இழக்காமல் தம்மை மறு உருவாக்கம் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றில் சத்திரியர்களின் வம்சம் ஓரளவுக்கு பின்தங்கிவிட்டது உண்மைதான். என்றாலும் அவர்களின் என்ணிக்கை மிக மிக குறைவு என்பதால் அவர்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. நவீன சமத்துவ சமுதாயத்தின் உருவாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது இடை நிலை, கடை நிலை சாதியினருடைய உறவுதான். ஏனென்றால், இரு பிரிவினரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். பகிர்ந்துகொள்ளக் கிடைத்த வளங்கள் மிகவும் குறைவு. அதிலும் பறையர், பள்ளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்ததால் அது இடை நிலை சாதியினரின் வெறுப்புக்கு எளிதில் இலக்காகிவிட்டது. ஆக, பறையர் பள்ளர்களுக்கு இடை நிலை சாதியினரை எதிர்க்கும் அளவுக்கு போதிய வலு கிடைத்திருக்கவில்லை. அதே நேரம் அவர்களுடைய கண்ணை உறுத்தாதவகையிலும் அந்த வளர்ச்சி இருக்கவில்லை. அவர்களுடைய போரானது தங்களுடைய கோட்டையைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே போர் முரசை முழங்கச் செய்ததுபோலாகிவிட்டது.

தோட்டியோ, வெட்டியாரோ அரசு வேலைக்கு வந்து முன்னேறுவதை இடை நிலை சாதிகள் இந்த அளவுக்கு எதிர்க்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒருவகையில் தலித் என்ற பிரிவில் விவசாயத்தோடு நேரடித் தொடர்பில் இல்லாத சக்கிலியர், தோட்டி, வெட்டியார், போன்ற சாதியினர்தான் சாதி அடுக்கில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஆனால், சாதி விடுதலைப் போராட்டத்தின் மூலம் கிடைத்த வசதி வாய்ப்புகளைப் பெருமளவில் அனுபவிப்பதோ அவர்களைவிட பல நிலைகளில் மேலாக இருந்த பறையர்-பள்ளர் போன்ற விவசாய கூலி-குத்தகைத் தொழிலாளர்கள்தான். இது தனியாகப் பார்க்கப்படவேண்டிய விஷயம். இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, இட ஒதுக்கீடு என்பது அதிக மக்களுக்குப் பலன் தரும் ஒன்றாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதிருப்திகள் இப்படியான வன்முறை வடிவில் வெளிப்படாமல் இருக்கும்.

இந்திய சமூகமானது சாதி சார்ந்து இயங்கிய சமூகம். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து நவீன சமூகமாக மாறியபோது அதே நேர்கோட்டில் நகர்ந்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு அதிகரித்திருக்காது. உதாரணமாக, ஒவ்வொரு தொழிலில் ஈடுபட்டுவந்தவர்களும் அந்தத் தொழிலில் நவீன யுகத்தில் என்னென்ன வளர்ச்சிகள் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறதோ அதைப் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்திருந்தால் ஒட்டுமொத்த சமூகமும் இயல்பாக வளமடைந்திருக்கும். அதாவது, ஒருவர் தன் வீட்டில் ஆடு, மாடு, கோழி, பன்றி எனப் பல உயிரினங்களை வளர்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அரைக் கிலோ தீவனம் சாப்பிட்டு வந்த ஆடுக்கு ஒரு கிலோ இழை தழைகள் தரப்படுவதுதான் வளர்ச்சியின் அறிகுறி. 100 கிராம் தானியங்களை உண்டுவந்த கோழிக்கு 200 கிராம் தீவனம் தருவதுதான் முன்னேற்றத்தின் அறிகுறி. அதைவிட்டுவிட்டு அனைத்து விலங்குகளையும் சமமாக நடத்துகிறேன் என்ற போர்வையில் அனைத்துக்கும் ஐந்து லிட்டர் கழனித்தண்ணி தரவேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தால் அது சரியாக இருக்குமா? பிறப்பின் அடிப்படையில் வேலைகள் தீர்மானிக்கப்பட்டதில் தவறில்லை. அந்த வேலைகளை ஒவ்வொரு பிரிவினரும் சமூக அந்தஸ்து மிக்கதாக ஆதாயம் மிகுந்ததாக ஆக்கிக் கொண்டிருந்தால் பிறப்பின் அடிப்படையில் வேலை நிச்சயிக்கப்படுவது என்பது சாதகமான விஷயமாகவே இருந்திருக்கும். ஒரு மான் தலைமுறை தலைமுறையாக மானாகவே வாழ நேர்வது என்பது இழிவான செயல் அல்ல. அது எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வது உட்படத் தேவையான வசதி வாய்ப்புகளைப் பெற்றுவிட்டால் அதைப் போல் முன்னேற்றம் என்பது வேறு எதுவும் இருக்க முடியாது.

நேற்று விவசாயத்தில் தொழிலாளியாக, குத்தகைதாரராக இருந்தவர் இன்று விவசாயப் பல்கலையின் பேராசிரியராக ஆகியிருக்கவேண்டும். நேற்று தச்சு வேலைச் செய்தவர் இன்று கட்டுமானப் பொறியாளராக ஆகியிருக்கவேண்டும். நவீன சமூகத்தில் புதிதாக உருவாகும் பல வேலைகளுக்கு இதுபோல் பாரம்பரிய முன்னுரிமை தருவது சாத்தியமில்லை என்பது உண்மைதான். ஆனால், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அதை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சயம் பிரச்னை இந்த அளவுக்கு வந்திருக்காது. செருப்பு தைக்கும் தொழில் கடினமானதாக, சமூக அந்தஸ்து பெறாததாக இருந்த காலகட்டத்தில் சக்கிலியர்கள் அதில் ஈடுபட்டுவர, அந்தத் தொழிலில் இயந்திரங்களின் அமலாக்கத்தால் பாட்டா கம்பெனியாக விரிவடையும் நேரத்தில் மேல் சாதியினர் அதைக் கைப்பற்றிக் கொண்டதைவிட நிச்சயம் ஒரு சக்கிலியரே பேட்டா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ஆகியிருக்கவேண்டும் என்பது சமூக நீதிசார்ந்த ஒரு செயல்தான்.

ஆனால், அப்படியான ஒரு சிந்தனையை மாடு மேய்ப்பவர் மாடேதான் மேய்த்துக் கொண்டிருக்கவேண்டுமா என்ற செண்டிமெண்ட் கேள்வியால் புறந்தள்ளிவிட்டிருக்கிறோம். அதனால் ஏற்பட்ட மோதல்களைத்தான் இன்று நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்யலாம் என்பது பின் தங்கிய பிரிவினர்களுக்குச் செய்திருக்கும் நன்மையைவிடத் தீமையே அதிகம். அதாவது பலவீனமான ஒருவர் பலம் பொருந்தியவருடன் போட்டி போடவேண்டியதாக அது ஆகிவிட்டது. பலவீனமானவர்களின் தொழில்களில் ஏற்பட்ட நவீன வசதி வாய்ப்புகள் அனைத்தையுமே அவர்களே அனுபவிக்கும் வகையில் ஒருவித பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். அனைத்து சமூகத்துக்கும் அரசுப் பணிகளில் சம வாய்ப்புகள் தந்திருக்கவேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் எம்.எல்.ஏ., எம்.பி. ஐ.ஏ.எஸ்., காவல்துறை அதிகாரி என சம விகிதத்தில் நியமனம் பெற்றிருக்கவேண்டும். ஒரு கிராமத்துக்கு ஒரு காவலர் என்ற நிலை மாறி ஒவ்வொரு சாதியினரில் இருந்தும் ஒருவரைக் கொண்ட காவலர் குழு உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

பெரும்பாலான வேலைகளைத் தனி நபர் பதவிகளாக அல்லாமல் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றினால் இயங்க வைத்திருக்க வேண்டும். இப்படியான எதுவும் நடந்திருக்கவில்லை. இவையெல்லாம் நடக்காதவரையில் நாம் மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் நோயைக் குணப்படுத்தாமல் நோயின் விளைவுகளைக் குணப்படுத்தும் ஒன்றாகவே இருந்துவரும்.

0

 

சட்டப்பூர்வமான சுரண்டல்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 18

பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டலானது மூன்று கட்டமாக நடந்தேறியது. 1757-1813 வரையிலான முதல் கட்டத்தில் வர்த்தக செயல்பாடுகளே நேரடிக் கொள்ளையடிப்பாக நடந்தன. அதில் இந்தியாவின் வருவாயின் உபரியைக் கொண்டு இந்திய உற்பத்திப் பொருட்களை வாங்கி அவை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1813-1858 வரையிலான இரண்டாவது கட்டத்தில் சுதந்தர வர்த்தக நாடாக இருந்த இந்தியா கச்சாப்பொருள் மையமாகவும் பிரிட்டிஷ் பொருட்களுக்கான சந்தையாகவும் ஆக்கப்பட்டது. 1858-க்குப் பிந்தைய மூன்றாவது கட்டத்தில் பொருளாதார ஏகாதிபத்தியம் அமலாக்கப்பட்டது. வங்கிகள், அயல் நாட்டு வர்த்தகம், நிர்வாக அமைப்புகள் அனைத்தையும் பிரிட்டிஷ் முதலீடுகளே கட்டுப்படுத்தின.

1765-ல் வங்காளம், பிஹார், ஒரிஸ்ஸா பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்திய கம்பெனிக்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் முன்னால் ஒரே ஒரு குறிக்கோள்தான் இருந்தது. வருவாயை எப்படி அதிகப்படுத்துவது?

விவசாய வரிதான் அதற்கான எளிய வழி என்று முடிவு செய்யப்பட்டது. விவசாய நாட்டில் வேறு எது வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுக்க முடியும்? எனவே, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்தார்கள். பல ஆயிரம் ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஒரு தேசம் கேவலம் இரண்டாந்தர ராணுவ கிளார்க்குகளின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் ரெவின்யூ ஃபார்மிங் என்ற ஒரு வழிமுறையை அமல்படுத்தினார். இந்த வழிமுறையில் வரி வசூலிக்கும் உரிமையை ஏலத்தில் விடுவார்கள். ஏலத்தில் எடுப்பவர்கள் குறிப்பிட்ட தொகையை கம்பெனிக்குக் கொடுத்துவிடவேண்டும். தங்கள் சாமர்த்தியம்போல் வரியை வசூலித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

அதனால், காரன் வாலிஸ் பிரபு வேறொரு திட்டத்தை 1793-ல் கொண்டுவந்தார். பெர்மனெண்ட் செட்டில்மெண்ட் என்ற அந்த திட்டத்தின்படி முன்பு வரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள் அந்த நிலங்களின் உரிமையாளர்களாக ஜமீந்தார்களாக ஆக்கப்பட்டனர். கம்பெனிக்குத் தரவேண்டிய வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஜமீந்தார்களால் அந்த வரியைச் செலுத்த முடியாமல் போனால், நில உரிமை அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு வேறொருவருக்குத் தரப்படும். இந்த சட்டத்தின் மூலம் பிரிட்டிஷ் அரசு இதியாவில் அதற்கு முன்புவரை இருந்திராத ஒரு புதிய பெரு நிலக்கிழார் பிரிவை உருவாக்கியது. இப்படியான வழிமுறை மூலம் கம்பெனிக்கு ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் வரியை தனித்தனியாக வசூலிக்க வேண்டிய சுமை இல்லாமல் போனது. சொற்ப அளவிலான ஜமீந்தார்களிடமிருந்து நேரடியாக வரியை வசூலிப்பது எளிதாக இருந்தது. அதோடு ஒரு வலிமை வாய்ந்த ஒரு பிரிவை தனது விசுவாசிகளாக உருவாக்கிக் கொள்ளவும் முடிந்தது.

அதற்கு முன்னால் வரை ஏகதேசம் உழுதவர்களுக்கே நிலம் சொந்தமானதாக இருந்துவந்திருக்கிறது. கிராம பஞ்சாயத்து சபைக்குத்தான் வரிகள் தரப்பட்டன. அவையும் ஏரி குளங்களை உருவாக்குதல், பராமரித்தல் என முழுக்க முழுக்க அந்தந்த கிராம நிர்வாகத்துக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்திய நிர்வாக அமைப்பு என்பது பெரிதும் கிராமப்புற நிர்வாக மையமாகவே இருந்திருக்கின்றன. இந்தக் குட்டிக் குடியரசுகளின் அமைப்பைத்தான் காந்தியடிகள் கிராம சுயராஜ்ஜியம் என்று சொன்னார்.

ஒவ்வொரு கிராம மக்களும் தமக்குத் தேவையானதை தமது கிராமத்திலேயே உருவாக்கிக்கொண்டு அனைவருக்கும் பலன் தரும் வகையில் பகிர்ந்துகொண்டு தன்னிறைவுடன் சுயசார்புடன் வாழ வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. காந்தி புதிதாகக் கண்டு சொன்ன வழிமுறை அல்ல. அது பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியாவில் நிலவிய அமைப்புதான். அந்த முந்தைய அமைப்பில் சாதி சார்ந்து இருந்த ஏற்றத் தாழ்வை நவீன உலகுக்கு ஏற்ப சீரமைக்க வேண்டும் என்பதுதான் காந்தியின் கூடுதல் பங்களிப்பாக இருந்தது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் கணக்குப்பிள்ளை, காவல்காரர், புரோகிதர், கொல்லர், தச்சர், நாசுவர், குயவர் போன்ற பலர் இருந்தனர். விவசாயத்தில் ஈடுபட்ட பிரிவினரைச் சார்ந்தே அனைவரும் இயங்கினர். ஒரு உடம்பில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணியைச் செய்வதுபோல் சமூகத்தின் இயக்கத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒவ்வொரு பணியைச் செய்து வந்தனர். கிராமத்துக்கான வருவாய் சேகரிக்கப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எந்த மன்னர் ஆண்டாலும், எந்த ஆக்கிரமிப்பாளர் ஊடுருவினாலும் இந்த கிராம அலகுகள் பெருமளவுக்குக் கவலையின்றி அனைத்துக்கும் ஈடுகொடுத்தே வந்திருந்தன.

நெருக்கடி நேரங்களில் மக்கள் கோட்டைகளுக்குள் அடைந்துகொள்வார்கள். பகைவர்களின் படை புழுதியைக் கிளப்பியபடி கடந்து செல்லும். கிராம மக்கள் தமது கால்நடைகளை கோட்டைக்குள் அடைத்துப் பாதுகாத்துக் கொள்வார்கள். எதிரியை அப்படியே கடந்து செல்ல அனுமதித்துவிடுவார்கள். எதிரி தாக்க முற்பட்டால் ஒரளவுக்கு போராடிப் பார்ப்பார்கள். எதிரியின் வலிமை அதிகமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் கிராமங்கள், மலை அல்லது காடுகளுக்குத் தப்பித்துச் சென்றுவிடுவார்கள். புயல் கரையைக் கடந்ததும் மீண்டும் பழைய கிராமத்துக்குத் திரும்பிவிடுவார்கள். சில நேரங்களில் ஊர் திரும்ப பல வருடங்கள் கூட ஆகும். பல தலைமுறைகள் கூட கழிந்துவிடலாம். ஆனால், நிலைமை சுமுகமானதும் அடுத்த தலைமுறை ஊர் திரும்பிவிடும். மகன்கள் தந்தையின் இடத்தைப் பிடிப்பார்கள். அதே வீடு, அதே நிலம் வாரிசுகள் வசம் ஒப்படைக்கப்படும். இந்தியாவின் ஒற்றுமைக்கு வேறு எந்த அம்சத்தைவிடவும் கிராமங்களின் இந்த அமைப்பே பெரும் பங்காற்றியிருக்கிறது.

பிரிட்டிஷாரால் ஜமீந்தார் முறை அமலாக்கப்பட்டதும் இந்தப் பழைய சமன்பாடுகள் சீர்குலைந்தன. நில உடமை ஓரிடத்தில் குவிக்கப்பட்டது. முன்பு நிலத்தின் உரிமையாளராக இருந்தவர்கள் குத்தகைதாரராகவும், கூலிகளாகவும் கீழிறக்கப்பட்டனர்.

பிரிட்டிஷார் வரி வசூலிக்க ரயத்வாரி எனும் இன்னொரு வழியையும் பின்பற்றினர். இதன்படி வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக வசூலிக்கப்பட்டது. ஜமீந்தார்களுக்கு பதிலாக விவசாயியே நில உரிமையாளராக இதில் இருந்தார். ஆனால், விதிக்கப்பட்ட வரியோ மிக மிக அதிகமாக இருந்தது. அதைச் சமாளிக்கப் பலர் விவசாயத்தில் இருந்தே விலகி ஓட வேண்டிவந்தது. வேறு சிலரோ அதிக வரியைக் கொடுப்பதற்காக பணப்பயிர்களை பயிரிட ஆரம்பித்தனர். அது வரிச்சுமையில் இருந்து ஓரளவுக்கு பாதுகாப்பு அளித்தது. ஆனால், பஞ்ச காலங்களில் உணவுப் பயிர்கள் போதுமான இருப்பு இல்லாமல் கொத்துகொத்தாக மக்கள் மடிய அதுவே காரணமாக ஆனது. பிரிட்டிஷாரின் இத்தகைய வரி விதிப்பு முறைகள் பாரம்பரிய இந்திய விவசாயத்தை கழுத்தை நெரித்துக் கொன்றன. ஜமீந்தார்களையும் லேவாதேவிகளையும் உருவாக்கி முன்னால் இருந்த சமநிலையை கலைத்துப் போட்டன.

இத்தகைய செயல்களால் கிழக்கிந்திய கம்பெனியின் வருவாய் அபரிமிதமாகப் பெருக ஆரம்பித்ததும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கண்களில் ஏகாதிபத்திய நெருப்பைப் பற்ற வைத்தன. ஏற்கெனவே, தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிய பொருளாதார கோட்பாடுகள் உருவாக ஆரம்பித்திருந்தன. கம்பெனிகளின் ஏகாதிபத்தியம் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு ”சுதந்தர வர்த்தகம்’ நடக்க அரசு வழி வகுக்க வேண்டும் என்ற கொள்கை உருவானது. கம்பெனியின் மீதான கட்டுப்பாட்டை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் பல நிர்வாகிகள் ”துர் நடத்தை’ காரணமாக விசாரிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ”சுதந்தர வர்த்தக’த்தின் ஊதுகுழல்களாக இருந்தவர்கள் 1813-ல் புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்தனர். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் அனுபவித்துவந்த ஏகபோக அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

பிரிட்டிஷார் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள இன்னொரு திருப்பணியையும் செய்தனர். தேசம் முழுவதையும் ரயில் பாதைகளால் இணைத்தனர். வருவாய்க்கான எந்தவொரு மூலத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைத்தனர். ரயில்தடங்கள் எல்லாம் ஏற்றுமதிக்குத் தோதாக துறைமுக நகரங்களுடன் இணைக்கப்பட்டன. ராணுவ தளவாடங்களை எளிதில் கொண்டு செல்லவேண்டும் என்பதும் ரயில்பாதை அமைத்தததற்கான காரணங்களில் ஒன்று. ஆனால், இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த நற்காரியங்களில் ஒன்றாக, இந்தியாவை நவீன யுகத்துக்குள் கொண்டுவர மாண்புமிகு ராணியார் கனிவுடன் மேற்கொண்ட சாதனையாக வரலாற்றாசிரியர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் அவர்கள் செய்த எந்த காரியமும் இந்திய நலனுக்காகச் செய்யப்பட்டதில்லை. பிரிட்டிஷாரால் இந்தியாவுக்குக் கிடத்தவை என்று எதையும் சொல்ல முடியாது. பிரிட்டிஷாரை மீறிக் கிடைத்தவை என்றுதான் அவற்றைச் சொல்லவேண்டும்.

0

உங்கள் டார்கெட் என்ன?

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 19

கடந்த காலங்களில் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு அதிக அளவு சாதகமாக இருந்தது. இந்திய வங்கிகளின் கண்ணோட்டம் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இருந்தது. இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொழில் கடன்களை கொடுப்பதில் நடுத்தரமான ஒரு கொள்கையைக் கையாண்டு வந்தது. அதாவது கடன் கொடுக்கும்போது மீடியம் ரிஸ்க் உள்ள தொழில்களையே தேர்ந்தெடுத்தனர். இதன் பொருள், தொழில் தொய்வடைந்தாலும், வங்கிக்கு வர வேண்டிய நிலுவைகளைப் பிணையாக அசையாச் சொத்துக்களிலிருந்து பெற்றுக்கொண்டுவிடலாம்.

ஒரு தொழிலைத் தொடங்க நினைப்பவர் எதிர்காலத்தில் வங்கிக் கடனை ஒழுங்காகச் செலுத்துவார் என்ற நம்பிக்கையிலும் அவரது கடந்த கால வங்கிக்கணக்குகளை வைத்தும் ஒரு வங்கி முடிவு செய்கிறது. ஒரு நல்ல கடந்தகாலத்தை உருவாக்கத் தெரியாத தொழிலதிபர்களால் எப்படி ஒரு நல்ல வளமான வருங்காலத்தை உருவாக்கமுடியும்? வங்கி அதிகாரிகள் வங்கிக் கடன் கொடுக்கும்போது பெரும்பாலும் நமது அதிகபட்ச பொறுமையைச் சோதிப்பது வழக்கமாகும். இது தொழிலதிபர்களுக்கு பெரும் சுமையாக இருந்தாலும், ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால், உங்கள் தொழிலை நடத்தக்கூடிய அளவு பணத்தை உங்களை வைத்தே புரட்டச் செய்ய வேண்டுமென்பதால், இதை சரியாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.

சுயதொழிலுக்கு வருபவர்கள் சவால்களைச் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். அதனால் புதிதாக வரும் தொழில்முனைவோர் தங்கள் கனவுகளை எண்களோடு அதாவது டார்கெட்டோடு தொடர்புப்படுத்தி தொழில் செய்யப் பழகுங்கள். மாதாந்திரத் தொழிலுக்கான குறியீடுகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

இப்படி நிர்ணயித்துக்கொண்டு பணிபுரியும்போது வியாபாரம் நிச்சயமாக விரிவடையும். விரிவடைந்து வரும் தொழில் மூலதனத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக சேமிப்பது அவசியம். இது நிறுவனத்தின் பலமாக உருமாறும்.

உங்கள் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கடன்கள் என்பது (குறுந்தொழில்களைப் பொருத்தவரை) தனிநபர் கடன்களே. ஆகவே தனிநபர்களின் Networth எனப்படும் சுயமதிப்பீட்டை முடிந்தவரை உயர்த்திக்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் DARE எனப்படும் நாளிதழ் குறுந்தொழிலுக்கான சமூக அறிவை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதிக்கும் இரு பெரும் அங்கங்களாக கடனுதவியும் தொழில்நுட்ப அறிவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கிய நகரங்களின் போக்கைப்பற்றி விரிவாக அலசப்பட்டது. அதன் ஒரு சில துளிகளை கீழே பார்ப்போம்.

கோவையைப் பொருத்தவரை பெரும் என்ஜினியரிங் சார்ந்த யூனிட்களின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிலரங்கில் பேசிய பலரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுதல் தொழிலதிபர்களுக்கு மிக அவசியமானது என்பதையும், இதனால் தொழிலுக்கு ஏதுவாகும் என்றும், பணமும் நேரமும் மிச்சப்படுத்த தொழிலதிபர்களால் இயலும் என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.

சென்னையைப் பொருத்தவரை கணினிச் சார்ந்த துறைகள் (ஹார்ட்வேர், சாஃப்ட்வேர்) மிக அதிக அளவில் பொருளீட்டும் வாய்ப்புகள் பெற்றுள்ளன என்று கணிக்கப்பட்டது. திருவனந்தபுரமும் இத்துறைகளில் மிக அதிக அளவில் பேசப்படும் ஒரு வர்த்தக இடமாக மாறிக்கொண்டு வருகிறது.

0

இந்தியாவில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதைப் பதிவு செய்வதற்கு குறைந்தது 20 முதல் 40 நாள்கள் தேவைப்படுகின்றன. தொழில் என்று வரும்பொழுது நிறுவனங்களின் தன்மையையும் அதை பதிவு செய்வதற்கு வேண்டிய சட்டத்தேவைகளையும் அடிப்படையாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

தனி நபர்கள் மட்டும் அங்கத்தினராக இருந்து தொடங்குவதை நிறுவனம் என்று அழைப்பர். இத்தகைய நிறுவனங்களை நடத்துபவர், அதாவது தொழில்முனைவோர் Current Account எனப்படும் வியாபாரக் கணக்கை வங்கியில் தொடங்க வேண்டும். நான் முன்பே சொல்லியது போல் இத்தகைய தனிநபர் நிறுவனங்களுக்கு வருமான வரிக்கான பதிவுகள் மற்றும் சேவை வரிக்கான பதிவுகள் அவசியம். மின்சாரம் வணிகத்துக்குத் தேவையான மறுமதிப்பீடு செய்து, செலுத்த தொடங்கியிருக்க வேண்டும் (Commercial E.B).

அடுத்து பிரைவேட் லிமிடெட் எனப்படும் கூட்டு நிறுவன அமைப்பைப் பற்றி பார்ப்போம். இத்தகைய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்களும் இரண்டு பங்குதாரர்களும் தேவை. அதிகபட்சமாக 50 பங்குதாரர்கள் வரை இருக்கலாம். இயக்குனர்களின் அளவுக்கு உச்சவரம்பு கிடையாது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென்று Articles of Association என்பதை உருவாக்கி, அதாவது நிறுவனத்துக்குரிய சட்டவிதிகளை ஏற்படுத்தி அதிகபட்ச இயக்குநர்களின் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இத்தகைய பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச முதலீடு ஒரு லட்சம். பொதுமக்களிடமிருந்து முதலீடு வாங்க முடியாது. எனினும் இயக்குனர்களிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் deposit எனப்படும் வைப்புத் தொகைகளை முதலீடாகப் பெற்றுக் கொள்ள முடியும். பங்குதாரர்கள் தங்களுடைய பங்குகளை அந்நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்.

பப்ளிக் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படை விதிகளைப் பார்ப்போம். இந்த நிறுவனங்களின் குறைந்தபட்ச முதலீடு 5 லட்சமாகும். இயக்குனர்களின் எண்ணிக்கை மூன்றாக இருத்தல் அவசியம். பங்குதாரர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஏழு, அதிக பட்ச உச்சவரம்பு இல்லை. பொதுமக்களிடமிருந்து முதலீட்டுக்கு பணத்தை வசூலிக்கலாம்.

0

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்

இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.
எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?

சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. ’இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா? பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா? ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.’

இந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

மேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

அதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A  பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.

சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?

யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :

  1. விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
  2.  தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
  3. யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ

அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.

இங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.

மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.

அது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.

ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா? குற்றமாகாதா?

தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.

கணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.

மேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.

அனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.

அதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.

மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்.

தாக்கரேவுக்கு ஏன் அஞ்சலி செலுத்தமுடியாது?

இன்றைய தி ஹிந்துவில் (நவம்பர் 19, 2012) வெளியான ஜஸ்டிஸ் மார்கண்டேய கட்ஜுவின் கட்டுரை Why I can’t pay tribute to Thackarey, அவர் அனுமதியுடன் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் : மருதன்.

அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் முண்டியடித்து மறைந்த பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களிடம் இருந்து புகழஞ்சலிகளும் நினைவஞ்சலிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எனது மாறுபட்ட கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாக மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இத்தகைய விதிகளைக் காட்டிலும் என் நாட்டின் நலன் எனக்கு முக்கியம்.

பால் தாக்கரேவின் பண்பு என்று எதைச் சொல்லலாம்? எனக்குத் தெரிந்து மண்ணின் மைந்தன் (பூமிபுத்ரா) என்னும் அவருடைய தேச விரோதக் கோட்பாடுதான்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1(1) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களின் யூனியனாக இருக்கும்.’ அதாவது, இந்தியா என்பது கூட்டுக்குழு அல்ல, யூனியன்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 19(1)(e) இவ்வாறு கூறுகிறது. ‘இந்தியாவில் எந்தப் பகுதியிலும் தங்கவும், குடியமரவும் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை இருக்கிறது.’

ஒரு குஜராத்தியோ, தென் இந்தியனோ, பிகாரியோ, உத்தரப் பிரதேசத்துக்காரரோ அல்லது இந்தியாவில் எந்தப் பகுதியில் இருப்பவராக இருந்தாலும் சரி, மகாராஷ்டிராவுக்குக் குடிபெயரலாம். இது அனைவருக்குமான அடிப்படை உரிமை. (சில வரலாற்றுக் காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அவ்வாறு குடியேறுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.)

ஆனால், பூமிபுத்ரா கோட்பாட்டின்படி, மகாராஷ்டிரா மராத்தியர்களுக்கு மட்டுமே உரியது. குஜராத்திகள், தென் இந்தியர்கள், வட இந்தியர்கள் ஆகியோர் ‘வெளியில் இருப்பவர்கள்’. நாம் மேலே கண்ட அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு நேர் எதிரான கோட்பாடு அல்லவா இது! இந்தியா என்பது ஒரு தேசம். மராத்தியர் அல்லாதாரை அயல்நாட்டினரைப் போல் மகாராஷ்டிராவில் நடத்தமுடியாது.

தாக்கரே தோற்றுவித்த சிவ சேனா, அறுபதுகள் மற்றும் எழுபதுகளில் தென் இந்தியர்களைத் தாக்கி, அவர்களுடைய வீடுகளையும் உணவிடங்களையும் அழித்தொழித்தது. மும்பையில் செய்தித்தாள்கள் விற்பவர்களாகவும் டாக்ஸி ஓட்டுநர்களாகவும் இருந்த பிகாரிகளையும் உத்தரப் பிரசேத்துக்காரர்களையும் 2008ல் தாக்கினார்கள். அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டன. ஊடுருவல்காரர்கள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் தாக்கப்பட்டார்கள். இஸ்லாமியர்கள் வில்லன்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள்.

இவையனைத்தும் ஓட்டு வங்கிகள் உருவாக தாக்கரேவுக்கு உதவி செய்தன. வெறுப்புணர்வின் அடிப்படையில் திரண்ட வங்கிகள் இவை. ஹிட்லரும் இப்படித்தான் செய்தார் என்பதையும் தாக்கரே ஹிட்லரை நேசித்தவர் என்பதையும் இங்கே நினைவுபடுததிக்கொள்ளவேண்டும்.

தாக்கரோவை நான் விமரிசிப்பதற்குக் அவருடைய தேச விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கோட்பாடு மட்டும் காரணமல்ல. இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

What is India? என்னும் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா என்பது வட அமெரிக்காவைப் போல குடியேறிகளால் உருவான ஒரு நாடு. இன்று இங்கு வசிக்கும் 92 முதல் 93 சதவிகித மக்கள் இந்தியாவின் பூர்வக்குடிகள் அல்லர். அவர்கள் குடியேறிகளின் வழிவந்தவர்கள். நல்ல வாழ்வு தேடி வட மேற்குப் பகுதியில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்தவர்கள் அவர்கள். இதுபற்றி மேலும் விரிவாக அறிய என் வலைப்பதிவுக்குச் செல்லுங்கள்.  இந்தியாவின் அசலான பூர்வகுடிகள் (பூமிபுத்ராக்கள்) ஆதிவாசிகள் என்று அழைக்கப்பட்ட திராவிட பழங்குடிகளுக்கு முந்தையவர்கள். (கோண்டுகள், சாந்தல்கள், தோடாக்கள் போன்றவர்கள்.) இப்போது அவர்களுடைய மக்கள்தொகை 7 அல்லது 8 சதவிகிதம் மட்டுமே.

பூமிபுத்ரா கோட்பாட்டை நிர்தாட்சண்யமாக அமல்படுத்தவேண்டுமானால், 92 முதல் 93 சதவிகிதி மகாராஷ்டிரியர்களை நாம் அந்நியர்களாக மதிப்பிடவேண்டியிருக்கும். இவர்களுள் தாக்கரே குடும்பத்தினரும் அடக்கம். மகாராஷ்டிராவைப் பொருத்தவரை உண்மையான பூமிபுத்ராக்கள் எனப்படுவோர் பழங்குடிகள் (Bhils போன்றவர்கள்). இவர்கள் தற்போது 7 முதல் சதவிகிதம் வரையிலேயே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பல பிரிவினைவாத சக்திகள் இன்று இந்தியாவில் இருக்கிறார்கள். இந்தியாவைத் துண்டுகளாக உடைப்பதே இவர்கள் குறிக்கோள். நாட்டுப்பற்று உள்ள அனைவரும் இவர்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.

நாம் எதற்காக ஒன்றாக இருக்கவேண்டும்? ஏனென்றால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் மிகப் பெரிய அளவில் செல்வம் சேர்த்தாகவேண்டும். விவசாயத்தால் மட்டும் இதனை நம்மால் சாதிக்கமுடியாது. நமக்கு நவீனத் தொழிற்சாலைகள் தேவை. நவீனத் தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய சந்தை தேவைப்படுகிறது. ஒன்றுபட்ட இந்தியாவால்தான் இப்படிப்பட்ட மிகப் பெரிய சந்தையை அளிக்கமுடியும். வறுமையை ஒழிக்கவேண்டுமானால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டுமானால், பிற சமூக அவலங்களை ஒழிக்கவேண்டுமானால் நவீன தொழிற்சாலைகள் தேவை. நவீன கல்விமுறையையும், நல்ல மருத்துவ வசதிகளையும் நாம் உருவாக்கவேண்டும். அதற்கு நாம் ஒன்றாக இருக்கவேண்டியது அவசியம். உலகின் முன்னேறிய நவீன நாடுகளில் ஒன்றாக இந்தியா வளரவேண்டும்.

எனவே, திரு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தமுடியாததற்கு நான் வருந்துகிறேன்.

0

(கட்டுரையாளர், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இருந்தவர். தற்சமயம், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருக்கிறார்).

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 18

பன்னாட்டு நிறுவனங்களின் சவாலை எதிர்கொள்ள சில மாற்றங்களை நாம் செய்யவேண்டியது அவசியமாகிறது.

  1. விற்கும் பொருள் சாதாரணமாக இருந்தாலும் கடைகள் நல்ல உள் அலங்காரத்தோடு இருக்க வேண்டியது அவசியம். இதனால் இத்தொழிலில் இறங்க விரும்புவோர் தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
  2. ஒரு கடையை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடத்தைச் சுற்றி வாழும் பொது மக்களை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
  3. பொருள்களின் அளவை அதிகப்படுத்தும் திறமையும் வசதியும் இருக்க வேண்டும்.
  4. பணப்புழக்கத்துக்குத் தேவையான பின்புலம் இருக்க வேண்டும்.
  5. கொள்முதல் செய்த பொருள்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டால், நவீன முறையில் மறுசுழற்சி செய்ய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இருக்க வேண்டும்.

ஐந்தாவது அம்சம் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தாது எனினும், ஒரு சில உணவுப் பொருள்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும். உதாரணத்துக்கு பழங்களை கண்ணாடி அலமாரிகளில் அலங்காரமாக வைத்து விற்க நினைக்கும், குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய முன் வரும் தொழிலதிபர்கள், விற்பனைக்கு வைத்த பழங்கள் விற்கவில்லையென்றால், அருகிலேயே பழச்சாறு செய்வதற்கான இயந்திரங்களை நிறுவி, விற்பனையைச் சீர்செய்யலாம்.

இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் நூதனமான முறையில் இந்தியச் சந்தையில் நுழைந்து தன்னம்பிக்கையுள்ள பல தொழிலதிபர்களுக்கு பெரும் சவால் விடுக்கின்றன. இவர்களோடு போராட நாம் தயாராக இருக்கவேண்டும்.

கொடுக்கும் பொருள் அல்லது சேவை எதுவாக இருந்தாலும் உங்களுக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக்கொள்வது அவசியம். பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் இலக்காக வைத்து முன்னேறும் தன்மை கொண்டவை.சிறுதொழில் மேற்கொள்ள நினைப்பவர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், சுற்றியுள்ள சமுதாயச் சூழலுக்கு தீர்வு காணும் விதமாகவும் தொழிலை நகர்த்திச் சென்றால் மக்களிடையே இன்னமும் கூடுதலாக நெருங்க முடியும்.

0

சுயதொழிலில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. தனி நபராக இயங்குவது ஒரு வகை. நிறுவனமாக நடத்த விரும்புவது இன்னொரு வகை. பெரும் நிறுவனங்கள் குறுந்தொழில்களை விழுங்கி வரும் தற்காலச் சூழலில், தனி நபர்களாக நிறுவனங்களை ஏற்படுத்தி நடத்திச் செல்வது கடுமையான சவாலாகவே இருக்கும். போராட்ட குணமுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும்.

இன்று இந்தியாவில் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் வளங்கள் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர். இல்லாதவர்கள் மேலும் மேலும் இல்லாமையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தொழிலை சமுதாய நோக்கோடு நடத்திச் செல்ல முன்வருவது மட்டுமே நீங்கள் இந்தச் சமூகத்துக்குச் செய்யும் நன்மையாகும். இன்று உலகளவில் நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு (Corporate Social Responsibility) என்பதைப் பற்றிய வாதங்கள் முழு மூச்சாக நடந்து கொண்டிருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒரு சில நிறுவனங்கள், தங்கள் லாபத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூகப் பணிகளுக்காகச் செலவிடுகின்றன. இது இன்னும் இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவில்லை. ஆனால் இனி வருங்காலத்தில் இது கட்டாயமாக்கப்படலாம். வருங்காலத்தில் தொழிலதிபர்களாக மாறும் எண்ணம் உடையவர்கள் சமூகப் பணிக்கென தங்கள் வருவாயின் ஒரு பகுதியை முதலிலிருந்தே ஒதுக்கத் தொடங்குவது அவசியம்.

சமீபத்தில் மருத்துவத் துறையில் போலி மருந்துகள் விற்பனையால் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய பலர் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது போலி மருந்து உற்பத்தியில் பல குறு மற்றும் சிறு தொழிலதிபர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தனிநபர்களின் பணப் பேராசை தொழிலின் தன்மையை, அதன் நோக்கத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றது. ஒருபோதும் இவ்வாறு சமூக அவலங்களுக்குக் காரணமாகக்கூடாது. லாபம் நம் கண்களை மறைக்கக்கூடாது.

அடிப்படை சுகாதாரம், கல்வி, உணவு ஆகிய அடிப்படைத் தேவைகளை ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் இருந்து பெற வேண்டியது அவசியம். இதற்கு மாறாக, விரக்தியையும் ஏமாற்றத்தையும் வறுமையையும் நம்மைச் சுற்றி ஏற்படுத்திக்கொண்டே போனால் நம்மால் அமைதியாக வாழ முடியாது. இன்று உயிர்வாழ தேவையான அத்தியாவசிய பொருள்கள் எட்டாத உயரத்திலும், கேளிக்கை களியாட்டங்களுக்கு தேவையான உபகரணங்கள் மலிவாகவும் விற்கப்படுகின்றன.

0

சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்னைகளை எடுத்துக்கொள்வோம்.

பெண்களுக்கு இயல்பாகவே பல திறமைகள் இருந்தும் அச்சம் அவர்களை முடக்கிவிடுகிறது. உள்ளுணர்வில், பெண்கள் மிக அதிகமாக எதிர்காலம் குறித்து சிந்திக்கிறார்கள். பொதுவாக பெண்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தக் குணத்தை நாம் பலமாக மாற்ற முயற்சித்து வெற்றி பெற வேண்டுமேயன்றி அதை நம் பலவீனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

குடும்பத்தைக் கவனிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு பெண்ணும், தனக்குரிய அறிவைப் பயன்படுத்தி, தன் திறமைகள் வெளிப்படுத்துவதும் சமூகத்துக்குத் தேவையானதே. உங்கள் அறிவு மற்றும் திறமையைப் பற்றிய சுயமதிப்பீட்டை குறைத்துக் கொள்ளாமல், மனமுதிர்ச்சியோடு பணியாற்ற பழகிக் கொள்ளவேண்டும்.

பொதுவாக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நடுத்தர வர்க்கப் பெண்கள் தொழில் செய்ய அணுகும்போது கடன் கொடுக்க எளிதாக முன்வருவதில்லை. அதே சமயம், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவிகள் கிடைப்பது அத்தனை சிரமமில்லை. அவர்கள் பெயரில் அசையாச் சொத்துகள் இருக்கும் நிலையில் கடன் பெறுவது சுலபமே. மேல்தட்டு வர்க்கத்துக்கு உதவி செய்ய வங்கிகள் மறுப்பதில்லை. அடித்தட்டு பெண்களுக்கோ மைக்ரோ கிரெடிட், சுயஉதவிக் குழுக்கள் தொடங்கி கடன் வசதி செய்து கொடுக்க பலர் இருக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்தரமும் கிடையாது, முதலீடு செய்வதற்குப் பணமும் இருக்காது. மணமாகாத பெண்களாக இருந்தால், இன்னும் சிரமம். கேட்பது குறைந்தபட்ச கடன்தான் என்றபோதும் வங்கிகள் உதவுவதில்லை. அவர்கள் பிரச்னை, பணத்தை யாரிடம் இருந்து வசூலிப்பது, பிறந்த வீட்டிலா, புகுந்த வீட்டிலா? ஆக, திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஒரு இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. திருமணம் ஆன பெண்களுக்கோ, வீட்டுப் பொறுப்புகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இன்றும் சமூகத்தில் ஆண்களை மட்டுமே பொருளீட்டும் நபர்களாகப் பார்க்கிறார்கள். எதிர்பாராத விதமாக தந்தை அல்லது கணவருக்கு மரணம் சம்பவிக்கும்போது பெண்கள் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப் போலவே உணர்கிறார்கள்.

என்னாலும் பொருளீட்டமுடியும், சுயதொழில் முயற்சியில் வெற்றிபெற முடியும் என்று நிரூபிக்க பெண்கள் சிரமப்படவேண்டியிருக்கிறது. உண்மையில் பெண்களால் எளிதாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ள அவர்களால் முடியும்.

சுயதொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பெண்களிடம் பேசும்போது, அவர்களிடையே சில பொதுவான குணாதிசயங்கள் இருந்ததை உணரமுடிந்தது. அவை: 1. தொழிலைப்பற்றிய தெளிவான நிலைப்பாடு, 2. எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் 3. சூழலுக்கேற்பத் தன்னை பொருத்திக் கொள்ளும் திறன். 4. விடாமுயற்சி, 5. தன்னம்பிக்கை.

0

எளிதில் கடக்க முடியாத கடந்தகாலம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 17

பிரிட்டிஷாரின் வருகை பலமுனைத் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. அவர்கள் அறிமுகப்படுத்திய நவீனத் தொழில்கள், உள்நோக்கம் கொண்ட அரசியல் முடிவுகள், சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அணுகுமுறை, கலாசாரக் குறுக்கீடு, சமூக அமைப்பை நுனிப்புல் மேய்ந்து ‘தீர்வு’களை முன்வைத்தது என எல்லாமே ஆயிரம் கரங்கள் கொண்ட, ஆயிரத்திலும் வெவ்வேறு ஆயுதங்களைக் கொண்ட, அரக்கனின் தாக்குதலாகவே இருந்திருக்கிறது. குடியேற்ற நாடுகளுக்கு உலகை ஆளப்பிறந்தவர்களின் அன்புப் பரிசாக அதுவே எல்லா இடங்களிலும் இருந்தும் வந்திருக்கிறது.

இந்தியாவின் பல்வேறு தொழில்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில் அழிந்துவிட்டன. அல்லது அழிவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்தன. புதிய தொழில்களும் தேவையான அளவுக்கு வளரவில்லை. இதனால், விவசாயம் மீதான சார்பு பெருமளவுக்கு அதிகரித்தது. சுமார் 80 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பிரிட்டிஷார் அதையும் விட்டுவைக்கவில்லை. கொழுத்த ஆடுகளை வெட்டு என்பதுதான் அவர்களுடைய அணுகுமுறை.

பிரிட்டிஷார் வருவதற்கு முன்புவரை தன்னிறைவு பெற்றிருந்த இந்திய விவசாயத்துறை பெரும் சரிவைச் சந்தித்தது. உணவுப் பயிர்களுக்குப் பதிலாக பணப்பயிர்களை நடும்படி விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டனர். உற்பத்தித்திறனும் வெகுவாகக் குறைந்தது. உதாரணமாக செங்கப்பட்டுப் பகுதியில் 1788 வாக்கில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் விளைச்சல் இருந்துவந்தது. ஒரு தலைமுறைக்குள் அது வெறும் 0.63 டன் ஆகக் குறைந்துவிட்டது.

அதோடு, விவசாயத்துக்கான வரியும் கண்மூடித்தனமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸில் முதன்முறையாக விதித்த நிலவரி நில உற்பத்தியில் 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. காலப்போக்கில் இது தாறுமாறாக அதிகரிக்கவும் செய்தது.

இங்கிலாந்தில் நிலவரி ஐந்து முதல் 20 சதவிகிதமாக இருந்தது. 1793-க்கும் 1822-க்கும் இடையில் வங்காளத்தில் 90%மாகவும் வட இந்தியாவில் 80%க்கு மேலாகவும் இருந்தது.

வங்காளத்தின் கடைசி முகலாய ஆட்சியாளர் 1764-ல் 8,17,833 பவுண்ட் தொகையை நிலவருவாயாக ஈட்டினார். அதே பகுதியில் அடுத்த முப்பது வருடங்களுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 26,80,000 பவுண்ட் தொகையை அதாவது மூன்று மடங்கு அதிகமான வரியை வசூலித்தனர்.

அதிக வரி விதிப்பால் மூன்றில் ஒரு பங்கு நிலம் விவசாயத்தில் இருந்து முடங்கிப்போனது. வங்காளத்தில் ஏற்பட்ட செயற்கைப் பஞ்சத்தில் ஏராளமானவர்கள் மடிந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் கம்பெனியின் இயக்குநர் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்து விளைச்சல் குறைந்த பிறகும் 1768-ஐ விட 1771-ல் வரி வருவாய் அதிகமாக இருந்திருக்கிறது. அதற்கு தாங்கள் வரி வசூலிப்பதில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளே காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் காலத்தில் வகுக்கப்பட்ட வர்த்தகக் கொள்கை முழுக்க முழுக்க அவர்களுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தது. 1815-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்திப் பொருட்களின் மதிப்பு 1,00,000 பவுண்டாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்திப் பொருட்களின் மதிப்பு 26,300 பவுண்டாக இருந்தது.  ஆனால், 1832-ல் இறக்குமதி 4,00,000 பவுண்ட்களைத் தாண்டியது. இதனால், இந்திய உற்பத்தித் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. 1813-ல் கல்கத்தா துறைமுகத்தில் இருந்து பிரிட்டனுக்கு 20,00,000 பவுண்ட் பருத்தி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த நிலைமை தலைகீழாக மாறி 1830-ல் பிரிட்டனில் இருந்து அதே அளவு ஜவுளிப் பொருட்கள் கல்கத்தாவுக்கு பிரிட்டனின் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

இந்திய-பிரிட்டிஷ் வர்த்தகம் மட்டுமல்லாமல் இந்தியா பிறநாடுகளுடன் செய்துவந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. 1800-க்கும் பிறகு அமெரிக்கா, டென்மார்க், போர்ர்சுகல், அரபு நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது.

இந்தியாவின் நிகர வருவாயில் பாதிக்கு மேல் பிரிட்டனுக்குக் கடத்தப்பட்டன. கோஹினூர் வைரம் மட்டுமல்லாமல் வேறு பல விலை மதிப்பில்லா கற்களும் கொண்டுசெல்லப்பட்டன. மொகலாய சக்ரவர்த்திக்குச் சொந்தமான கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து எடுத்த 410 காரட் எடையுள்ள ஒரு வைரத்தை அப்போது சென்னையின் கவர்னராக இருந்த தாமஸ் பிட் வாங்கிக்கொண்டார். அவர் அதை சொந்தமாக்கிக்கொண்டதால் அதன் பிறகு அது பிட் வைரம் என்றே பெயரிடப்பட்டது. அந்தக் காலத்திலேயே 1,25,000 பவுண்டுக்கு மதிப்பிடப்பட்டது.

இந்தியாவில் கொள்ளையடித்ததை எல்லாம் இங்கிலாந்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரவேண்டி, தன் சொத்துகளையெல்லாம் வைரங்களாக மாற்றினார் ராபர்ட் கிளைவ். இதுபோல விலையுயர்ந்த கற்களையெல்லாம் எடுத்துச் சென்றதாலும், இந்தியாவிலிருந்து மூலப் பொருட்களை பிரிட்டனுக்கு எடுத்துச் சென்று, அவற்றிலிருந்து பொருள்களைத் தயாரித்து, இந்தியாவில் அதிக விலைக்கு விற்று சுதேசி தொழிற்சாலைகளை அழித்ததாலும் 1747ல் இருந்து 1947க்குள் பிரிட்டனின் தனி நபர் வருமானம் 347 விழுக்காடு அதிகரித்தது. அதே காலத்தில், இந்தியாவின் தனி நபர் வருமானம் கேவலம் 14 விழுக்காடுதான் அதிகரித்தது.

வருடா வருடம் இந்தியாவில் இருந்து ஒன்றரை மில்லியன் பவுண்டுக்கு அதிகமான தொகை பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்தத்தொகை கிழக்கிந்திய கம்பெனி இருந்தவரை அதன் லாபமாக அதன் பங்குதாரர்களுக்குச் சென்றது. அதன் பிறகு பிரிட்டிஷ் அரச நிர்வாகம், அதிகாரிகள், ராணுவ படைக்கான செலவு, தொழில் புரட்சிக்கான மூலதனம் என பலவகைகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்தச் சுரண்டல்கள் பிரிட்டிஷ் மக்களுக்கே பெரும் அவமானமாகப்பட்டதால்தான் சரித்திர சின்னங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தரும் பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமைக் கட்டடத்தையோ ராபர் கிளைவ் போன்றவர்களின் மாளிகைகளையோ தங்களுடைய பெருமைக்குரிய சின்னங்களாக மதித்துப் போற்றுவதில்லை. அடியாழத்தில் தாம் செய்த கொடூரச்செயல்களின் அடையாளமாகவே அவை தோன்றுவதால் ஒருவித விலகலையே கடைப்பிடித்துவருகின்றனர். நவீன உலகில் ஒப்பீட்டளவில் மேலான ஜனநாயகச் சிந்தனைகளுடன் வாழ்ந்துவரும் அவர்களுக்கு அந்தக் கடந்த காலம் தவிர்த்திருக்க வேண்டிய பெரும் பிழையாக, ஒரு கொடுங்கனவாகவே தோன்றுகிறது போலும். நம்மவர்களுக்குத்தான் அது இன்னும் வேண்டிய அளவுக்கு உரைத்திருக்கவில்லை.

0