ஆங்கிலேயர்கள் இந்தியத் துணை கண்டத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் பல சுதந்தர ராஜாக்களும் ராஜ்ஜியம் செய்து வந்தனர். சுதந்தரத்துக்கு முன்பாக சுமார் 554 சமஸ்தானங்கள் இந்தியத் துணை கண்டத்தில் இருந்தன. இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
பாவ்லா கொலை வழக்கு இந்தியா சுதந்தரம் அடைவதற்கு முன்னர் நடந்தது. வழக்குக்குக் காரணமாக இருந்தவர் இந்தூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்த ஹோல்கர் மகாராஜா – மூன்றாவது துக்கோஜி ராவ் ஹோல்கர். இவரது அந்தப்புரத்தில் ஒரு அழகான முஸ்லிம் நங்கை இருந்தாள். அவள் பெயர் மும்தாஜ் பேகம். மும்தாஜ் பிரமாதமான நாட்டியக்காரி. ஆனால் அவளுக்கு ஏனோ அந்தப்புரத்து வாழ்க்கை பிடிக்கவில்லை. தான் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதாக உணர்ந்தாள். பத்தாண்டுகளாக மகாராஜாவுக்குச் சேவை செய்து கொண்டிருந்த மும்தாஜுக்கு இந்தோர் அரண்மனையிலிருந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பு கிடைத்தது. தப்பித்து விட்டாள்.
தப்பித்த மும்தாஜ் பல இடங்களில் சுற்றித் திரிந்தாள். கடைசியில் அவளுக்கு பம்பாயைச் சேர்ந்த அப்துல் காதர் பாவ்லா என்ற பெரும் செல்வந்தர் அடைக்கலம் கொடுத்தார். மும்தாஜ் பாவ்லாவிடம் மிகவும் விசுவாசமாக இருந்தாள். பாவ்லாவும் மும்தாஜை தன்னுடைய மனைவி போல பாவித்து வந்தார்.
இந்தோர் ராஜ்ஜியத்தில் பெரும் கொந்தளிப்பு! ராஜா செய்து கொடுத்த அத்தனை வசதிகளையும் தூக்கியெறிந்துவிட்டு, ராஜாவை மதிக்காமல் தப்பித்துப் போக அவளுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும். இது ஒரு அவமரியாதை செயல் அல்லவா? இதைக் கண்டிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அரண்மனைக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைக்க முடியும். அரண்மனை முழுவதும் இதே பேச்சுதான். ராஜாவும் அதே மனநிலையில்தான் இருந்தார். ஒன்பது பேர் தயார் செய்யப்பட்டனர். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை இதுதான். மும்தாஜை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடியுங்கள். கண்டுபிடித்து அவளை அரண்மனைக்கு இழுத்து வாருங்கள். குறிக்கிடுபவர்கள் கொல்லப்படலாம்.
இந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் மும்தாஜ் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விட்டது. திட்டம் தீட்டப்பட்டது. 1925 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, மாலை சுமார் 7:30 மணி இருக்கும். அப்துல் காதர் பாவ்லாவும் மும்தாஜும் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் பாவ்லாவின் மேலாளர் மாத்திவ், கார் ஒட்டுனர், க்ளீனர் ஆகியோரும் இருந்தனர். கார் மலபார் ஹில்ஸ் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு கார் பின்னாலிருந்து வந்து மோதியது. காரில் இருந்து கொலைகாரக் கும்பலைச் சேர்ந்த 7 நபர்கள் கீழே இறங்கினர். பாவ்லாவின் காரைச் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் கத்தி, கபடா, துப்பாக்கி மற்றும் இன்ன பிற ஆயுதங்கள் இருந்தன. மும்தாஜை காரிலிருந்து தூக்க முயற்சி செய்தனர். பாவ்லா அதைத் தடுத்தார். துப்பாக்கி வெடித்தது. பாவ்லா கீழே சாய்ந்தார். மும்தாஜ் காரை விட்டு வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்டாள். வெளியே வர மறுத்த மும்தாஜின் அழகிய முகத்தில் நான்கு கத்தி வெட்டுகள் விழுந்தன. கும்பல் மும்தாஜை காரிலிருந்து தூக்கியது. அப்போது தான் ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
சம்பவம் நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு ராணுவக் கார் வந்தது. அந்தக் காரில் ராணுவ அதிகாரி லெப்டினண்ட் சேகர்ட் மற்றும் அவருடைய நண்பர்கள் லெப்டினண்ட் பாட்லி, லெப்டினண்ட் ஸ்டீபன் ஆகியோர் இருந்தனர். ஒரு பெண் அலறும் சத்தத்தை கேட்டு மூவரும் காரை விட்டு இறங்கினர். மும்தாஜைக் காப்பாற்ற முயன்றனர். இதைச் சற்றும் எதிர்பாராத கொலைகாரக் கும்பல் ராணுவ அதிகாரிகளைத் தாக்கினர். லெப்டினண்ட் சேகர்ட் சுடப்பட்டார். தான் தாக்கப்பட்டதை பொருட்படுத்தாமல் கொலைகாரக் கும்பலை சேர்ந்தவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளை பிடுங்கி விட்டார். மும்தாஜைக் காப்பாற்றி தன்னுடைய காரில் ஏற்ற முயன்றார். அப்போது அவருடைய தோள்பட்டையில் கத்தி குத்து விழுந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. மும்தாஜைக் காப்பாற்றிய பிறகு, லெப்டினண்ட் சேகர்ட் மற்ற ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கொலைகாரக் கும்பலைப் பிடிக்க முயன்றார். இத்தனைக்கும் லெப்டினண்ட் சேகர்ட்டிடம் இருந்தது கோல்ப் விளையாடப் பயன்படுத்தப்படும் மட்டை. அதையே அவர் தன்னுடைய தற்காப்புக்கும் பயன்படுத்தினார், தாக்குதலுக்கும் பயன்படுத்தினார்.
ராணுவத்தினர் கொலைகாரக் கும்பலுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குச் சாதகமாக, சம்பவம் நடந்த இடத்துக்கு மற்றுமொரு ராணுவக் கார் வந்தது. அதிலும் ஒரு ராணுவ அதிகாரி – கர்னல் விக்ரி இருந்தார். நான்கு ராணுவ அதிகாரிகளுடனும் சண்டையிட முடியாமல் கொலைகாரக் கும்பல் தப்பியோட முனைந்தது.
ராணுவ அதிகாரிகள் அக்கூட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களைப் பிடித்தனர். சினிமாவில் சண்டைக் காட்சிகள் முடிந்து கடைசியில் போலீசார் வருவது போல, சம்பவம் நடந்த இடத்துக்கும் போலீசார் வந்து சேர்ந்தனர். பிடிபட்டவர்களை ராணுவ அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், பொதுவாக ராணுவத்தினர் அந்த வழியாக வருவதில்லை. கோல்ப் விளையாடிவிட்டு தங்கள் முகாமுக்கு வேறு வழியில்தான் செல்வது வழக்கம். அன்று மட்டும் அந்த வழக்கம் மாறியதால் மும்தாஜின் உயிர் காப்பாற்றப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு மட்டும் ராணுவத்தினர் தகுந்த நேரத்தில் வரவில்லையென்றால், மும்தாஜ் கடத்தப்பட்டு இந்தோருக்கு தூக்கிச்செல்லப் பட்டிருப்பாள். கொலைகாரக் கும்பலும் ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கும். அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிறுத்தி இருக்கமுடியாது.
இது நடந்து சீக்கிரத்திலேயே சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் போலீசார் கைது செய்துவிட்டனர். சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், நீதிமன்றத்தில் 9 நபர்கள் மீது பாவ்லாவைக் கொன்றதற்காகவும், மும்தாஜைக் கடத்தக் கூட்டுச்சதி செய்ததற்காகவும், கடத்தலுக்குத் தூண்டுதலாக இருந்ததற்காகவும், மும்தாஜைக் கடத்தியதற்காகவும், ராணுவ அதிகாரிகளையும் மும்தாஜையும் தாக்கி பெரும் காயம் ஏற்படுத்தியதற்காகவும் குற்ற வழக்கு தொடர்ந்தனர்.
பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கு கிரிமினல் வழக்குகளை நடத்தி வந்தவர் நீதிபதி க்ரம்ப். அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் அட்வகேட் ஜெனரல் காங்கா மற்றும் அவருக்குத் துணையாக கென்னத் கெம்ப். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்தோர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்காக வாதாட இந்தோர் சமஸ்தானம், அப்போது பிரபலமாக இருந்த கல்கத்தாவைச் சேர்ந்த சென் குப்தா மற்றும் பம்பாயைச் சேர்ந்த வெலிங்கர் மற்றும் முகம்மது அலி ஜின்னா ஆகிய வழக்கறிஞர்களை நியமனம் செய்தது. வழக்கு விசாரணைக்காக 9 பேர் கொண்ட ஜூரி (நடுவர் குழு) அமைக்கப்பட்டது.
வழக்கு விசாரணை பல நாட்கள் நடைபெற்றது. அதைக் காண பெருந்திரளான கூட்டம் நீதிமன்றத்தில் திரண்டது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. நிறைய குற்றவாளிகள்; நிறைய சாட்சிகள்; பலதரப்பட்ட குற்றங்கள்; நடைபெற்ற குற்றத்தில் ஒவ்வொரு குற்றவாளியின் பங்கு என்ன; தங்கள் கண் முன்னே விரைவாக நடந்து முடிந்த, பலபேர் சம்மந்தப்பட்ட குற்றத்தை பல நோக்கில் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தில் உள்ள முரண்பாடுகள்; பல பேர் ஈடுபட்ட பெரிய குற்றத்தில் ஒரு குற்றவாளியின் பங்கு சிறிதாக இருந்தாலும், அவனுக்கு பெரிய குற்றம் விளைவித்ததற்கான தண்டனை வழங்கப்பட வேண்டுமா அல்லது குற்றத்தில் அவனுடைய பங்குக்கான தண்டனை மட்டுமே வழங்கப்படவேண்டுமா என பல சிக்கலான விவகாரங்கள் இருந்தன.
அரசு தரப்பின் முக்கிய சாட்சிகளாக மூன்று ராணுவ அதிகாரிகள் இருந்தனர். மற்ற சாட்சிகளை ஒப்பிடுகையில், ராணுவ அதிகாரிகள் தனித்தனியே விசாரிக்கப்பட்டாலும் அவர்களது சாட்சியங்களில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ராணுவத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சியின் காரணமாக, அவர்கள் எந்த சூழ்நிலையையும் பதற்றமில்லாமல் கையாளும் திறன் பெற்றிருந்தனர். அனைத்து விவகாரங்களையும் உன்னித்து கவனமாகப் பார்த்து பழகியவர்கள். தங்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அதை இலகுவாக கையாளும் திறன் படைத்தவர்கள். இவ்வளவு திறமைகளும் இருந்ததனால்தான் மும்தாஜை கடத்தல்காரர்களிடமிருந்து அவர்களால் காப்பாற்ற முடிந்தது. நடந்து முடிந்திருந்த சம்பவங்கள் அவர்கள் மனதில் தெள்ளத் தெளிவாக பதிந்திருந்தன. அதனால்தான் அவர்களால் நீதிமன்றத்தில், சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களாகியும் அவர்களால் சம்பவத்தைப் பற்றி தெளிவாக விவரிக்க முடிந்தது.
வழக்கில் ராணுவத்தினரின் சாட்சியங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தாலும், குற்றவாளிகளுக்கு ஆஜரான முகமது அலி ஜின்னா உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நன்றாகவே போராடினார்கள். ஜின்னாவைப் பற்றி இங்கு ஒரு செய்தி சொல்லியாக வேண்டும். ஜின்னா அன்றைய காலகட்டத்தில் அறியப்பட்ட பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவர். பால கங்காதர திலகர், தன் மீது ஆங்கிலேய அரசால் சுமத்தப்பட்ட ராஜ துரோக வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாட ஜின்னாவைத்தான் தன்னுடைய வழக்கறிஞராக நியமித்தார். திலகரே சட்டம் பயின்றவர்தான். இருப்பினும் அவருக்கு ஜின்னாவின் மீது அவ்வளவு நம்பிக்கை. திலகர் மட்டுமில்லை, அந்நாட்களில் பிரபல வழக்கறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான பிரோஷா மேத்தாவுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு பிரபல வழக்கை நடத்தி அதில் வெற்றியும் பெற்றார் ஜின்னா. ஜின்னா அன்றைய இளைஞர்களுக்கு ஒரு பெரிய முன்மாதிரி. முற்போக்குச் சிந்தனை உடையவர். சிறந்த பேச்சாளர். தேசியவாதியும் கூட. கல்லூரி மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில், அவரை தலைமை தாங்கிப் பேச அழைப்பார்கள். இப்படிப்பட்டவர்தான் பிற்காலத்தில் இந்தியா பிளவுபட கருவியாக இருந்தார். காலத்தின் கட்டாயம் அது. நாம் அனைவரும் நினைப்பது போல் இந்தியா பிளவுபட, அடிப்படைக் காரணமாக ஜின்னா இருக்கவில்லை. அது ஒரு பெரிய செய்தி. அதை பற்றிய விவரங்களை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்காது.
நாம் பாவ்லா கொலை வழக்குக்கு மீண்டும் வருவோம்.
குற்றாவாளிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்.
1. பாவ்லா துப்பாக்கி வைத்திருந்தார். கடத்தல்காரர்கள் மும்தாஜைக் கடத்த நினைத்த தருவாயில், பாவ்லா தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து கடத்தல்காரர்கள் மீது முதலில் சுட்டார். அதன் பின்னர், தற்காப்புக்காகத்தான் கடத்தல்காரர்கள் பாவ்லாவை சுட்டார்கள். ஆனால் இந்த வாதம் அரசு தரப்பினால் முறியடிக்கப்பட்டது. பாவ்லா துப்பாக்கி வைத்திருந்தது வாஸ்தவம்தான், ஆனால் அதை சம்பவம் நடந்த இடத்துக்கு பாவ்லா எடுத்து வரவில்லை. மேலும் பாவ்லாவின் மீது பாய்ந்த தோட்டாவும், லெப்டினண்ட் சேகர்ட் மீது பாய்ந்த தோட்டாவும், சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த தோட்டாக்களும், லெப்டினண்ட் சேகர்ட் சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகளிடமிருந்து பறித்த துப்பாக்கிகளிலிருந்து வெளியானவை என்று தகுந்த ஆதாரம் கொண்டு நிரூபித்தது அரசு தரப்பு. இதைத் தவிர மும்தாஜ் தன்னுடைய வாக்குமூலத்தில், கொலைகாரக் கும்பல் பாவ்லாவின் காரை வழிமறித்து முதலில் பாவ்லாவை சுட்டுவிட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.
2. மும்தாஜ் இந்தோருக்குச் செல்ல ஆயத்தமாகத்தான் இருந்தார், ஆனால் அவரைப் போகவிடமால் பாவ்லா தடுத்தார் என்ற வாதத்தை முன்வைத்தது எதிர் தரப்பு. இந்த வாதமும் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. காரணம் கடத்தல்காரர்கள் மும்தாஜைத் தூக்கி செல்ல வந்தபோது, அவர்களிடமிருந்து தப்பிக்க மும்தாஜ் போராடியிருக்கிறாள். அதனால் அவளுக்கு முகத்தில் காயங்கள் கூட ஏற்பட்டிருக்கிறது. மேலும் கடத்தல்காரர்களிடமிருந்து தன்னை காப்பற்றும்படி மும்தாஜ் அலறியிருக்கிறாள். மும்தாஜின் அலறலை கேட்டுத்தான் ராணுவ அதிகாரிகள் அவளைக் காப்பாற்ற சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இவற்றைத் தவிர அரசு தரப்பில் நரிமன் என்ற பிரபல கிரிமினல் வழக்கறிஞர் சாட்சியம் அளித்தார். அவர் அளித்த சாட்சியத்தில் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், மும்தாஜ் தன்னிடம் ஆலோசனை கேட்க வந்ததாகவும், அப்போது மும்தாஜ் நரிமனிடம் நான் கடலில் விழுந்து தற்கொலை வேண்டுமானாலும் செய்துகொள்வேனே தவிர ஒருபோதும் இந்தோருக்குப் போகமாட்டேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
ஜின்னாவும் பிற வழக்கறிஞர்களும் எவ்வளவு சிரமப்பட்டு போராடியபோதும், சாட்சிகள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தன. விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி க்ரம்ப் வழக்கின் சாராம்சங்களைத் தொகுத்து வழங்கினார். ஜூரி முறை இருந்த சமயத்தில், பொதுமக்களில் பலதரப்பட்டவர்களிலிருந்து 9 பேரை அழைத்து அவர்களை வழக்கு விசாரணையில் ஜூரியாக அரசாங்கம் நியமிக்கும். ஜூரி பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. ஜூரியில் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அனைத்து சட்டங்களும் தெரிந்திருக்காது. தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் ஜூரி, வழக்கு விசாரணை முடிந்து சரியான தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு ஏதுவாக நீதிபதி வழக்கின் சாராம்சம், சம்மந்தப்பட்ட வழக்கில் எந்த விதமான சட்டம் எப்படி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது, சட்டத்தின் விதிவிலக்குகள் என்னென்ன போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பை ஜூரிக்கு வழங்குவார். ஜூரி வழக்கைப் பற்றிய முடிவுக்கு வருவதற்கு நீதிபதி வழங்கும் தொகுப்பு மிகவும் உபயோகமாக இருக்கும்.
நீதிபதி க்ரம்ப், பாவ்லா வழக்கில் ஜுரி சரியான முடிவை எடுக்கும் பொருட்டு ஒரு தொகுப்பை வெளியிட்டார். 145 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுப்பு (Summing Up) மிகவும் பிரபலமானது. நீதிபதி க்ரம்ப் அளித்தத் தொகுப்பின் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு.
1) குற்றவியல் விசாரணையின் தன்மை
2) குற்றவியல் விசாரணையில் நீதிபதி மற்றும் ஜூரியின் பங்கு
3) விசாரணையின் போது கருத்தில் கொள்ள வேண்டிய விவகாரங்கள், விவரங்கள்
4) பாவ்லா வழக்கில், எந்தெந்த குற்றப் பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்னும் விவரம்
5) ஒவ்வொரு குற்றவாளியின் மீதும் என்னென்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, அந்த குற்றங்களை நிரூப்பிக்க என்னென்ன காரணிகள், சாட்சிகள் தேவைப்படுகின்றன?
6) ஏராளமான சாட்சிகள் கொண்ட வழக்குகளில், ஒவ்வொரு சாட்சியின் சாட்சியங்களுக்கு இடையில் முரண்பாடுகள் இருப்பது சகஜம்தான். ஒவ்வொரு சாட்சியும் தன்னுடைய கண்ணோட்டத்தில் தான் பார்த்தவற்றை சொல்லும் சாட்சியத்திலிருந்து அதே சம்பவத்தைப் பார்த்த மற்றொரு சாட்சியின் கண்ணோட்டத்திலிருந்து சொல்லப்படும் சாட்சியிலிருந்து மாறுபட்டு இருப்பது இயல்புதான். இம்மாதிரி வழக்குகளில் சாட்சியங்களில் சிறு சிறு முரண்பாடுகள் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல் அனைத்து சம்பவங்களையும் ஒருங்கிணைத்துப் பார்த்து குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
7) சாட்சியங்களில், நிகழ்விக்கப்பட்ட குற்றத்தின் சந்தர்ப்ப சூழ்நிலையில் வேறுபாடுகள் தெரிந்தாலும் குற்றம் சம்மந்தமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்து கொண்டால் போதும்.
நீதிபதி க்ரம்ப்பின் ஜூரிக்கான தொகுப்பு,அனைத்து நீதிபதிகளுக்கும் நகல் எடுத்துக் கொடுக்கப்பட்டது.
வழக்கு முடிந்து இறுதியில் ஜூரி தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். தீர்ப்பின் படி குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர்களில் 1) ஷாபி அகமது நாபி அகமது, 2) புஷ்பஷீல் பல்வந்தராவ் போண்டே, 3) பகதூர் ஷா முகமது ஷா, 4) அக்பர் ஷா முகமது ஷா, 5) ஷாம்ராவ் ரேவ்ஜி டிக்ஹே, 6) அப்துல் லதீப் மொய்தீன், 7) சர்தர் ஆனந்தராவ் கங்காராம் பான்சே ஆகியோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். மற்ற இருவர் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
குற்றம் நிரூபனம் ஆனவர்களுக்கு நீதிபதி க்ரம்ப் தண்டனை வழங்கினார். அதன்படி ஷாபி அகமது நாபி அகமது, புஷ்பஷீல் பல்வந்தராவ் போண்டே மற்றும் ஷாம்ராவ் ரேவ்ஜி டிக்ஹே ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பகதூர் ஷா முகமது ஷா, அக்பர் ஷா முகமது ஷா மற்றும் அப்துல் லதீப் மொய்தீன் ஆகிய மூவருக்கு ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது.
குற்றவாளிகளில் இன்னும் மீதி இருப்பவர் சர்தர் ஆனந்தராவ் கங்கராம் பான்சே. இவர் பாவ்லாவின் கொலையில் ஈடுபடவில்லை, ஆனால் மும்தாஜை கடத்தும் கூட்டு சதியில் ஈடுபட்டார். மும்தாஜை கடத்தும் சம்பவத்துக்குத் தூண்டுதலாகவும் இருந்தார்.
குற்றம் செய்ய தூண்டுதல் புரிவதும் குற்றம்தான் அதை ஆங்கிலத்தில் abetment என்று சொல்வர். ஒருவர் ஏதோ ஒரு குற்றம் நடக்கத் தூண்டுதலாக இருந்து, இழைக்கப்பட்ட குற்றம் கொலையில் முடிந்தால் குற்றம் செய்ய தூண்டியவருக்கு கொலைக்கான தண்டனை வழங்கப்படும் (இந்திய தண்டனை சட்டம் 111 வது பிரிவு). எனவே பான்சேவுக்கு கொலைக்குற்றம் செய்ய தூண்டுதல் செய்ததற்கான தண்டனைதான் வழங்கப்படும். கொலை செய்ய தூண்டியதற்கான தண்டனை, மரணம் அல்லது ஆயுள் முழுதும் நாடு கடத்தப்பட வேண்டியது. நீதிபதி க்ரம்ப், பான்சேவுக்கு கொலை செய்ய தூண்டியதற்கான தண்டனையை வழங்க மனமில்லை. இருந்தாலும் ஜுரியின் முடிவை அவரால் மாற்ற முடியாது. மேலும் பான்சேவின் வழக்கறிஞர் ஜின்னாவின் விடாப்பிடியான வலியுறுத்தலால், நீதிபதி க்ரம்ப் பான்சேவுக்கு தூக்கு தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனை விதித்தார். அரசு தரப்பிலும் அதை எதிர்க்கவில்லை.
தண்டிக்கப்பட்டவர்கள் ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்தனர். ப்ரிவி கவுன்சிலில் குற்றவாளிகளுக்காக ஆஜரனாவர் சர் ஜான் சைமன். இவர் நமக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். பின்னாட்களில் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த சைமன் கமிஷனின் தலைவர்தான் இவர். சைமனும் அவரால் முடிந்த வரை ப்ரிவி கவுன்சிலில் போராடிப் பார்த்துவிட்டார். பலனில்லை.
ப்ரிவி கவுன்சிலில் சைமன் பின்வரும் வாதங்களை முன்வைத்தார்.
1. ஊடகங்களில் இந்த வழக்கைப்பற்றி அதிகப்படியான விளம்பரம் செய்யப்பட்டதால் ஜூரிக்கு தவறான அபிப்பிராயம் ஏற்பட்டது. இந்த வழக்கை பம்பாய் நீதிமன்றத்தில் நடத்தி இருக்கக்கூடாது. இந்த வழக்கை பாம்பே மாகாண ஆளுநர், நாட்டின் வேறு பகுதியில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றி அங்கு விசாரணைக்கு ஆட்படுத்தியிருக்க வேண்டும். மேலும் நீதிபதி க்ரம்ப் ஜூரிக்கு சரியாக வழிகாட்டவில்லை.
2. வெறும் ஆளை கடத்துவதற்கு ஒருவர் தூண்டுதல் செய்கிறார், ஆனால் ஆளைக் கடந்தச் சென்றவர் கடத்தலில் ஈடுபடும் போது கொலையையும் செய்துவிடுகிறார் என்றால் தூண்டுதல் செய்தவரை கொலை குற்றத்திற்காக தண்டிக்க முடியாது.
ஆனால் ப்ரிவி கவுன்சில் சைமனின் வாதத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது. குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்தது.
சைமன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, பாம்பே வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நீதிபதி க்ரம்ப்பும் கலந்து கொண்டார். நீதிபதி க்ரம்ப்பை சந்தித்த சைமன், அவர் பாவ்லா வழக்கில் ஜுரிக்கு வழங்கிய தொகுப்பை நினைவு கூர்ந்தார். ப்ரிவி கவுன்சிலில் தான் பாவ்லா வழக்கின் மேல்முறையீட்டை வாதிடும்போது, நீதிபதி க்ரம்ப் ஜூரிக்கு வழங்கிய தொகுப்பில் ஏதாவது ஓட்டை கண்டுபிடித்து வழக்கில் ஜெயித்துவிடவேண்டும் என்று பார்த்தேன், ஆனால் என்னால் முடியவில்லை என்றார். அவ்வளவு பிரமாதமாக க்ரம்ப் ஜூரிக்கான தொகுப்பை தயார் செய்திருந்தார் என்று தன்னுடைய பாராட்டை க்ரம்ப்பிற்கு தெரிவித்தார் சைமன்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஷாபி அகமது நாபி அகமது மற்றும் ஷாம்ராவ் ரேவ்ஜி டிக்ஹே தூக்கில் இடப்பட்டனர். புஷ்பஷீல் பல்வந்தராவ் போண்டே தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பைக் கேட்டு பைத்தியமாகிப் போனான். அதனால் அவனைத் தூக்கிலிடாமல் காவலிலேயே வைத்திருந்தது அரசாங்கம்.
பாவ்லா கொலையையும், அதன் வழக்கு விசாரணையையும் மக்களால் சில ஆண்டுகள் வரை மறக்கவே முடியவில்லை. பத்திரிக்கைகளும் பாவ்லாவின் கொலைக்கு காரணமான மும்தாஜைப் பற்றி அடிக்கடி தகவல்களை மக்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தன. மக்களும், மும்தாஜ் பேகம் பாவ்லா கொலைக்குப் பிறகு எங்கிருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்ற தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இவ்வளவு தைரியமாக குற்றம் செய்ய முனைந்த இந்தோர் சமஸ்தான ராஜா மூன்றாவது துக்கோஜி ராவ் ஹோல்கரை, ராஜ்ஜியப் பதவியை துறக்கச் செய்தது ஆங்கிலேய அரசு. மூன்றாவது துக்கோஜி ராவ் ஹோல்கர் அரசைத் துறக்க நேரிட்டதால், அவருடைய மகன் எஷ்வந்த்ராவ் ஹோல்கர் புதிய அரசராக பதிவியேற்றார். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்த பிறகு தன்னுடைய ராஜ்ஜியத்தை இந்தியாவுடன் சேர்த்தார் இந்த மகராசன்.
மும்தாஜ் பேகத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரே பாணியில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன.
0
S.P. சொக்கலிங்கம்