FDI – சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு  முடிவெடுத்துள்ளது. ஒற்றை பிராண்ட் வணிகத்தில் 100% அந்நிய முதலீடு இருக்கலாம். பல பிராண்டுகளை விற்பனை செய்யும்போது 51% வரை அந்நிய முதலீடு இருக்கலாம்.

போச்சு, போச்சு, எந்த வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றோமோ, அவர்களுக்கே நாட்டைத் தூக்கிக்கொடுத்துவிடப் போகிறோம் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர் பலரும். இதில் கம்யூனிஸ்டுகளும் உண்டு, பாரதிய ஜனதாவும் உண்டு.

இந்திய உற்பத்தி, சேவை இரண்டுமே மூடிய துறைகளாக வெகுகாலம் இருந்துவந்தன. 1990-களில்தான் பெருமளவு அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன்தான் இந்தியாவின் பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அந்த மாற்றம் நல்ல மாற்றம் அல்ல என்று சொல்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். சில மாற்றங்கள் தேவலாம்; என், நாங்கள்தானே அவற்றைச் செய்தோம்; ஆனால் பிற மாற்றங்கள் கூடாது என்கிறார்கள் பாஜக. காங்கிரஸ் கட்சியினருக்கோ என்ன நடக்கிறது என்பது பற்றிக் கவலையில்லை. சோனியாவுக்கு ஓகே என்றால் அவர்களுக்கும் ஓகேதான்.

இந்த அந்நிய முதலீடு என்பதைக் கவனமாகப் பார்ப்போம். எந்தத் தொழில் நிறுவனம் என்றாலும் அதற்கு முதலீடு தேவை. தெருவோரத்தில் இட்லிக்கடை போடுவதாக இருந்தாலும் சரி, மாபெரும் அனல் மின்நிலையத்தை அமைத்து மின்சாரம் தயாரிப்பதாக இருந்தாலும் சரி. பெரிய பெரிய காரியங்களைச் செய்ய அதிக முதலீடு தேவை. கூடவே ரிஸ்க் எடுக்கும் குணம் தேவை. ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் தேவை.

இந்தியாவில் இப்படி ரிஸ்க் எடுக்கும் தொழிலதிபர்கள் 1990-களுக்குமுன் அதிகம் இல்லை. கொஞ்சம் பணத்தைப் போட்டு ஒரு தொழிலை ஆரம்பிப்பார்கள். அதற்குமேல் பணம் தேவைப்பட்டால் வங்கிகளிடம் கடன் வாங்கிக்கொள்வார்கள். அதன்பின் தொழில் நன்றாக நடக்கவில்லை என்றால் அது வங்கிகளின் பாடு! அவர்கள் பணம்தான் கோவிந்தா. தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும். தொழிலதிபர்கள் மற்றொரு தொழிலை ஆரம்பிக்கப் போய்விடுவார்கள்.

ஈக்விட்டி எனப்படும் ரிஸ்க் முதலீட்டை நிறுவனங்களுக்குக் கொண்டுவருவதைப் பெருமளவு முறைப்படுத்தியது 1990-களில்தான். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவில் தாராளமயமாதல் அறிமுகமானது. இதன் காரணமாகவே பல புதிய நிறுவனங்கள் உருவாகின. இதன் தொடர்ச்சியாக பல பெரிய ஐ.பி.ஓக்கள் பங்குச்சந்தையில் நிகழ்ந்தன. இந்தியப் பங்குச்சந்தை ஓரளவு முதிர்ச்சி பெற ஆரம்பித்த்து. பல சிறு முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

சாதாரணப் பின்னணியில் உள்ளவர்களும் மிகப் பெரிய நிறுவனங்களை உருவாக்கமுடியும் என்ற நிலைமை உருவானதும் இதனால்தான். இப்படித்தான் இன்ஃபோசிஸ் உருவானது. இப்படித்தான் ரிலையன்ஸ் இவ்வளவு பெரிதானது.

இன்று இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமே 1990-களின் தாராளமயம்தான். ஆனால் எல்லாத் தனியார்மயமும் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே நடந்துள்ளது. முதலி, யாருமே பயப்படாத சில துறைகளில் இந்திய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. பின்னர் அவற்றில் சிறு அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்பட்டது. 26% என்று ஆரம்பிப்பார்கள். அடுத்து 49% வரை என்று நீட்டிப்பார்கள். அது அடுத்து 51% ஆகும். பின் 76% ஆகும். பின் 100% வரை என்பார்கள்.

இன்றும்கூட இந்தியாவில் வங்கிகள் முழுமையாகத் தனியார்மயம் ஆகிவிடவில்லை. 100% அந்நிய வங்கிகள் இந்தியாவில் தம் இஷ்ட்த்துக்கு பிராஞ்சுகளைத் தொடங்க முடியாது. ஐசிஐசிஐ போன்ற இந்திய வங்கிகளில் அதிகபட்சம் 74% பங்குகள் மட்டுமே அந்நியர்களிடம் இருக்கமுடியும். அதிலும் 20% மட்டுமே அந்நிய வங்கிகள் கையில் இருக்கலாம். மீதியெல்லாம் தனிப்பட்ட அந்நியர்கள் அல்லது அந்நிய நிதி நிறுவனங்கள் கையில்தான் இருக்கலாம். இன்று அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் சிறு நகரங்கள்வரை பரவி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இயங்குகின்றன.

வங்கிகளில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்வதும்தான் ஒரு காலத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்று அதுபற்றி யாருமே பேசுவதில்லை. ஏனெனில் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இருப்பதாக இன்று தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கி இன்றும்கூட நம்பர் ஒன் வங்கியாகத் திகழ்கிறது. அதே நேரம், ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் தொழில்நுட்பத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்தி, அதிவேகமாக வளர்ந்துள்ளன. இதனால் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும்கூட அதே வேகத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்றன.

அடுத்த சீர்திருத்தத்தில், எச்.எஸ்.பி.சி, சிடிபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற அந்நிய வங்கிகள் தம்மிஷ்டத்துக்கு இந்தியாவில் வங்கிக் கிளைகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற அனுமதி தரவேண்டும். என்ன இருந்தாலும் இந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியார்மயமாவதும் அவற்றில் அந்நிய முதலீடு வருவதும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஆனால் அரசு அதுபற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டதால்தான் இன்று இந்தியாவில் இந்த அளவுக்கு டெலி-டென்சிடி வளர்ந்துள்ளது. யாருக்காவது இன்று நஷ்டம் என்றால் அது அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற நிறுவன்ங்களுக்குத்தான். அவற்றையும் தனியாருக்கு விற்றுவிடலாம்.

இன்ஷூரன்ஸைத் தனியார்மயமாக்குவதற்கும் அவற்றில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவதற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அரசு அதை மீறி நடந்துகொண்டது. இன்று சுமார் 20 தனியார் நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. புதுப் புது இன்ஷூரன்ஸ் திட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. யாரும் அழிந்துபோகவில்லை. எல்.ஐ.சியும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸும் பிற அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் வளர்கின்றன. தனியார் நிறுவனங்களும் வளர்கின்றன.

ஏர்லைன்ஸ் துறையில் அந்நிய முதலீடு கூடாது என்றார்கள். அரசு அதனை மீறியது. இன்று அதனால்தான் பல ஊர்களுக்கு கனெக்டிவிடி வந்துள்ளது. ஏர் இந்தியாவும் (அரசு), கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸும் (தனியார்) தடுமாறுகின்றன. தடுமாறட்டுமே? பிறர் (ஜெட் ஏர்வேய்ஸ், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்…) நன்றாக வேலை செய்கிறார்கள். லாபம் சம்பாதிக்கிறார்கள். மக்களுக்கு எப்போது நஷ்டம் என்றால் அரசு தலையிட்டு தன் பணத்தை இதில் வீணடிக்கும்போதுதான். அது நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் வேலை.

இப்போது சில்லறை வியாபரத்தில் இதே பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. முதலில் இந்தத் துறை “ரெகுலேட்” செய்யப்படும் ஒரு துறையே அல்ல. தெருவோரம் கடை ஒன்றை ஆரம்பித்து மளிகை சாமான்கள் விற்க நாம் யாரிடமும் முன் அனுமதி பெறவேண்டியதில்லை. கடையை ஷாப்ஸ் அண்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட்ஸ் சட்டத்தின்படிப் பதிந்துகொண்டு வியாபாரத்தை ஆரம்பித்துவிடலாம்.

தெருவோரக் கடை, 1980-களிலேயே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆனது. அப்போதே புலம்பல் ஆரம்பித்தது. பின்னர் அது சூப்பர் மார்க்கெட் ஆனது. அப்போது புலம்பல் அதிகரித்தது. பின் சங்கிலிக் கடைகள் உருவாகின. புலம்பல் ஒருவழியாக நின்றுபோனது. பின் 2006-2007-ல் ரிலையன்ஸ் இந்தத் துறையில் நுழைவதாகச் சொன்னதும், மீண்டும் பெரும் புலம்பல் ஆரம்பித்தது. ரிலையன்ஸ் வந்தால் பெட்டிக் கடைகள் அழிந்துவிடும் என்றார்கள். அடுத்து பிர்லா ‘மோர்’ என்ற சங்கிலிக் கடைகளை உருவாக்கியது. யாரும் அழிந்துவிடவில்லை. இவர்களுக்கு முன்னாலேயே பாண்டலூன், ஸ்பென்சர்ஸ் ஆகியோர் சங்கிலிக் கடைகளை நடத்திவந்தார்கள்.

தமிழ்நாட்டில் பாமகவினர், ரிலையன்ஸ் கடைகள் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ரிலையன்ஸ் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். உமா பாரதி மத்தியப் பிரதேசத்தில் இந்தக் கைங்கர்யத்தைச் செய்தார். மமதா பானர்ஜியும் இடதுசாரிகளும் சேர்ந்து மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளை அனுமதிக்கமாட்டோம் என்றார்கள்.

ரிலையன்ஸ் வந்தால் சிறு வணிகர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. அப்படி ஏதும் ஆகவில்லை. போட்டி நன்றாகவே செல்கிறது. பலரும் புதுக் கடைகளைத் திறந்துகொண்டே இருக்கின்றனர். ரிலையன்ஸால்தான் நினைத்த அளவுக்கு வேகமாக வளரமுடியவில்லை. ஆனாலும் வளர்கிறார்கள். சில இடங்களில் இந்தச் சங்கிலிக் கடைகளால் சில டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் (சிறு முதலாளிகள்) பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை என்றால் அவர்கள் வேறு வேலையைப் பார்த்துக்கொண்டு செல்கிறார்கள். இந்தியாவில் இன்று இருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

இப்போது ரிலையன்ஸை நம் அரசியல் திலகங்கள் மறந்துவிட்டனர். அந்நிய முதலீடுதான் அவர்களுடைய குறி. மாயாவதி, மமதா பானர்ஜி, ஜெயலலிதா ஆகிய முதல்வர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். வால்மார்ட் கடைகள் வந்தால் கொளுத்துவேன் என்கிறார் உமா பாரதி. சில்லறை வணிகர்கள் எல்லாம் அழிந்துபோவார்கள் என்று இடதுசாரிகளும் ஸ்வதேஷியினரும் புலம்புகிறார்கள்.

இடதுசாரிகளைப் பொருத்தமட்டில், எந்தத் துறையிலும் அந்நிய முதலீடு கூடாது. என், எந்தத் துறையிலும் தனியார்மயமே கூடாது. எல்லாம் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். ஆனால், அதனால் யாருக்கும் உபயோகம் இல்லை என்பதை நாம் கடந்த 60 ஆண்டுகளில் பார்த்துவிட்டோம். எனவே அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதனைக் கண்டுகொள்ளவேண்டிய அவசியமே கிடையாது.

நாம் எதிர்க்கவேண்டியது, கொள்கைப் பிடிப்பற்ற பிறரை. முக்கியமாக பாஜகவை. அவர்களைப் பொருத்தமட்டில், இன்ஷூரன்ஸ், தொலைத்தொடர்பு, வங்கி, ஆட்டோமொபைல் ஆகியவற்றில் தனியார்கள் இருக்கலாம், அந்நிய முதலீடும் இருக்கலாம். ஆனால் சில்லறை வணிகத்தில் கூடாது? இது என்ன அபத்தம்?

பூச்சாண்டி காட்டுகிறார்கள். வால்மார்ட் வருவான். சாக்லேட் தருவான். நீ அப்படியே சாப்பிட்டுவிட்டு, மயங்கி, அவன் பின்னாலேயே போய்விடுவாய். அவன் உன்னைக் கொன்று, உன் மண்டையோட்டை எடுத்து, மை செய்துவிடுவான்.

இதெல்லாம் முப்பதாண்டுகளுக்குமுன் வேண்டுமானால் நடந்திருக்கலாம். இன்று இந்திய கம்பெனிகள் உலகம் எல்லாம் சென்று பிற நிறுவனங்களை வாங்கிக் குவிக்கின்றன. இந்தியர்களுடைய செல்வம் அதிகரித்துள்ளது. இந்திய அரசின் பலமும் அதிகம். அந்நிய நாட்டு நிறுவனம் ஒன்று எளிதாக இந்தியா வந்து, நாட்டைச் சுருட்டி உலையில் போடமுடியாது. கிழக்கிந்திய கம்பெனியுடன் இதனை ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற அபத்தம் வேறு ஒன்றும் இல்லை.

வால்மார்ட்டே வந்தால் என்ன ஆகும்? இந்தத் துறையில் போட்டி அதிகரிக்கும். பொருள்கள் பல வந்து குவியும். யாருக்கும் வேலை போகாது. வால்மார்ட் கடையில் யாரை வேலைக்கு வைக்கப் போகிறார்கள்? சீனனையா அல்லது அமெரிக்கனையா? இந்தியனைத்தானே ஐயா வேலைக்கு வைக்கப்போகிறார்கள்?

இந்தக் கடைகளில் நுகர்பொருள்கள் பல விற்கப்படும். அதில் செண்ட் இருக்கும். சோப் இருக்கும். ஆனால் இஞ்சி, மஞ்சள், பச்சை மிளகாய், அப்பளம், ஊறுகாய் முதலியனவும் இருக்கும்தானே? அவற்றை யார் உற்பத்தி செய்யப்போகிறார்கள்? நம் நாட்டவர்தானே?

அந்நிய முதலீடு என்றால் என்னவோ நாளைக்கு அந்தக் கடைகளில் கிடைப்பவை எல்லாம் கோஸ்டா ரிகா வாழைப்பழங்கள், ஆஸ்திரேலியா திராட்சைகள், பிரான்ஸின் வைன் புட்டிகள் என்பதாக நம்மாட்கள் யோசிக்கிறார்கள். அவையும் கிடைக்கலாம். அவை கிடைக்கக்கூடாது என்றால் இந்திய அரசு அதனை எளிதாகக் கட்டுப்படுத்தமுடியும். இறக்குமதிக் கொள்கை போதும்.

இப்போது நாம் பேசுவது, அந்நிய ‘முதல்’ பற்றி மட்டும்தான். ஏன் அந்நிய முதல் தேவை என்று பார்ப்போம். இந்திய முதல், வேண்டிய அளவு இதில் போகவில்லை. அண்ணாச்சி கடைகளின் வளர்ச்சி விகிதம் போதாது. கிராமம் முதல் நகரம் வரையிலான வளரும் இந்திய மக்களின் பொருள் பசிக்குத் தீனி போடக் கடைகள் போதா. அவற்றை உருவாக்க, வேண்டிய அளவு முதலீடுகள் செய்யப்படவில்லை. இந்தியாவின் பணவீக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணம் இது. பணம் அதிகரிக்கும் அளவுக்கு பொருள்களின் உற்பத்தி அளவு அதிகரிக்கவில்லை என்பதால்தான் விலைகள் கடுமையாக ஏறுகின்றன. எங்கு இந்தப் பிரச்னை இல்லையோ, அங்கே விலைகள் கடுமையாக்க் குறைந்துள்ளன (உதாரணம்: கணினிகள், செல்பேசிகள்).

இந்தியாவில் சப்ளை செயின் என்று சொல்லப்படும் லாஜிஸ்டிக்ஸ் படு மோசம். பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நிறையப் பின்தங்கியுள்ளோம். அதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்யாமலேயே நிறுவனங்கள் ஜல்லி அடிக்கின்றன. அந்நிய முதலீடு நிகழும்போது இவையெல்லாம் கட்டாயம் கைகூடும். அப்போது உள்ளூர் நிறுவனங்களும் அவற்றைப் பயன்படுத்திப் பயன்பெறுவார்கள். (உதாரணமாக: கோல்ட் ஸ்டோரேஜ்.)

அந்நிய நிறுவனங்கள் வந்தால் அதன் காரணமாக வேலைகள் அதிகரிக்கவே செய்யும். குறையப் போவதில்லை. விவசாயிகள் எந்தவிதத்தில் பாதிக்கப்படுவார்கள்? வெள்ளைக்காரப் பெரு முதலாளி, சிறு விவசாயியின் விளைச்சலைக் காசு தராமல் பிடுங்கிக்கொண்டு போய்விடுவான் என்ற பிம்பம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? ரிலையன்ஸ் பற்றியும் இப்படித்தானே சொன்னார்கள்? அப்படியா நடந்தது?

2007-ல் ரிலையன்ஸ்தான் பூச்சாண்டி. இன்று ரிலையன்ஸை மறந்துவிட்டோம். இப்போது வால்மார்ட்தான் பூச்சாண்டி. இப்படி நம்மிடம் பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு முதலீடுகள் எப்படி நடக்கின்றன, வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் தெரியாது. நானும் நீங்களும் சேர்ந்து ஒரு நல்ல ரீடெய்ல் சங்கிலியை உருவாக்கி, அதைப் பெரிதாக்கத் தேவையான மூலதனத்தை ஓர் அந்நிய வென்ச்சர் கேபிடல் கம்பெனியிடம் கோரலாம். இன்றும்கூட இந்தியாவில் இயங்கும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பலவும் அந்நியப் பணத்தை வைத்துத்தான் இயங்குகின்றன. ஏனெனில் இந்தியப் பண முதலைகள் இன்றும்கூட புதையல் காக்கும் பூதம்போலவே தம் செல்வத்தைக் காபந்து செய்துவைத்துள்ளனர்.

அந்நிய முதலீடு வரும்போது அத்துடன் ஓரிரு பிரச்னைகளும் இருக்கலாம். அவை என்னென்ன என்பதை, கண்களை விரியத் திறந்துவைத்துக்கொண்டு, எதிர்கொள்ளவேண்டும்.

உதாரணமாக, இந்தியப் பொருளாதாரம் அந்நிய முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படவில்லை என்றால் கிடைத்த விலைக்கு அவர்கள் தம் பங்குகளை விற்றுவிட்டு, கிடைத்த ரூபாயை டாலர்களாக மாற்றி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அப்போது ரூபாயின் மதிப்பு கீழே இறங்கும். சமீபத்தில் ரூபாயின் மதிப்பு சடசடவெனக் கீழே இறங்கியதற்கு ஒரு காரணம், ஐரோப்பிய நாடுகள் பற்றிய பயத்தில் இருக்கும் பல அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தாம் வைத்திருந்த பங்குகளை விற்றுவிட்டு, அந்தப் பணத்தை டாலர்களாக மாற்றியதும்தான். இதனால் குறுகிய காலத்துக்குச் சிறிய பாதிப்புதான் இருக்குமே தவிர பெரும் பயம் ஏதும் இல்லை.

ஜெயலலிதா, தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டில் இயங்கும் சில்லறைக் கடைகளை அனுமதிக்கப்போவதில்லை என்கிறார். அவர் பி.எச்.பாண்டியன் போலத் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக்க் கற்பனை செய்துகொள்கிறார். மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டால் அந்த நிறுவனம் எந்த ஊரிலும் தன் கடைகளைத் திறக்கலாம். சட்டபூர்வமாக தமிழக அரசால் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. கட்சி குண்டர்களை வைத்துவேண்டுமானால் ஏதெனும் செய்யலாம். அவ்வளவுதான்.

ஏ.பி.எம்.சி சட்டம் என்று ஒரு சட்டம் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் இருக்கிறது. விவசாய விளைபொருள்களை யார் தயாரிக்கலாம், யாருக்கு விற்கலாம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு மோசமான சட்டம். இதனைக் கொண்டுதான் அரசுகள் தம் விவசாயிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது. இன்று ஒரு விவசாயி தான் விளைவித்த நெல்லை அதிக விலைக்கு ஒரு தனியார் நிறுவனத்துக்கு விற்க விரும்பினால், மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்துகொண்டு, ஏ.பி.எம்.சி சட்டத்தைக் கொண்டு, குறிப்பிட்ட தினங்கள்வரை நெல்லை அரசுமட்டுமே கொள்முதல் செய்யும் என்பார்கள். அந்தக் கட்டத்தில், பைச இல்லாத ஏழை விவசாயிகள் அரசு சொல்லும் விலைக்கு அரசிடம் தன் நெல்லைக் கொடுத்துவிட்டு பல மாதங்கள் காத்திருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அந்தச் சட்டத்தைக் கொண்டு, காய்கறிகளை அந்நிய முதலீட்டில் உருவான ரீடெய்ல் கடைகளில் விற்கமுடியாது என்று தமிழக அரசால் சொல்லமுடியும். இப்படித்தான், இதனைக் கொண்டுதான் ரிலையன்ஸ் ரீடெய்லை சில மாநிலங்களில் பயமுறுத்தினார்கள். அந்தக் கடைகளில் காய்கறிகள் இல்லாமல் பிற மளிகை சாமான்களை விற்பதையோ, புத்தகங்கள் விற்பதையோ, சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்பதையோ தடை செய்ய முடியாது. அதேதான் ஜெயலலிதாவின் வானளாவிய அதிகாரத்தின் எல்லையும்.

எஃப்.டி.ஐ. நல்லது. நுகர்வோராகிய நம் எல்லோருக்கும். எப்படி, ஏர்லைன்ஸ், வங்கி, இன்ஷூரன்ஸ், தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் எஃப்.டி.ஐ நமக்கு உதவியுள்ளதோ, அதேபோல ரீடெய்லிலும் நமக்கு உதவும். நம்புங்கள்.

- பத்ரி சேஷாத்ரி

திண்டுக்கல் தோல்வி!

க – 29

சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.

பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.

விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.

லஞ்சம் , ஊழல் என்று எம்.ஜி.ஆர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அதே ரீதியிலான நடவடிக்கை ஒன்றை எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத்தில் புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதா என்பது அதன்பெயர். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்;  தேவைப்பட்டால், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய மசோதாவின்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் பட்டியலில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் – இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர், நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து யூனியனின் முன்னாள் – இந்நாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டியவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மத்திய அரசின் லோக்பால், லோக் அயுக்த் மசோதாக்களில்கூட பிரதமர் போன்றவர்கள் வராத சமயத்தில் மாநில அரசு கொண்டுவந்திருக்கும் மசோதாவில் முதலமைச்சரும் கொண்டுவந்தது நேர்மையான விஷயம் என்று பாராட்டப்பட்டது இந்த மசோதா. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். 5 ஏப்ரல் 1973 அன்று இந்த மசோதா சட்டமன்றம் மற்றும் சட்டமேலவையில் நிறைவேறியது.

புதிய மசோதவை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோது கருணாநிதிக்கு ஒரு சவால் காத்திருந்தது. இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.

புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.

கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. 1964ல் திடீரென மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது திமுகவினர் பலத்த அதிருப்தி அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியான என் கடமை படம் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, உலகம் சுற்றும் வாலிபன் படமும் தோல்வியடையும் என்று நினைத்தனர். முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.

இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.

‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்