வெடித்தது புரட்சி!

க – 26

உற்சாக வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தார் உறந்தை உலகப்பன். மணப்பாறையைச் சேர்ந்த வசந்தகலா நாடக மன்றத்தின் நிர்வாகி அவர். எளிமையான முறையில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த அவருக்கு பிரபலங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தும் ஆசை வந்தது. அதன்மூலம் தன்னுடைய நாடகத்துக்கு விளம்பரமும் கிடைக்கும்; கூடுதல் வசூலும் கிடைக்கும் என்று நினைத்தார்.

ஆசை வந்ததும் அவருடைய நினைவுக்கு வந்தவர்கள் இரண்டு பேர். கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். இருவருக்கும் முறைப்படி கடிதம் எழுதினார் உலகப்பன். இருவருமே தேதி கொடுத்தனர். 5 ஏப்ரல் 1952 அன்று நடந்த அரும்பு நாடகத்துக்குத் தலைமை தாங்கியவர் கருணாநிதி. முன்னிலை வகித்தவர் எம்.ஜி.ஆர்.

நாடகம் தொடங்கியது. சில நிமிடங்களில் கருணாநிதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தார் உறந்தை உலகப்பன். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை இந்த மேடையில் வைத்து நீங்கள் கொடுக்கவேண்டும். தலையசைத்துவிட்டு மேடையேறினார் கருணாநிதி.

அன்பு மூன்றெழுத்து. பாசம் மூன்றெழுத்து. காதல் மூன்றெழுத்து. வீரம் மூன்றெழுத்து. களம் மூன்றெழுத்து. வெற்றி மூன்றெழுத்து. அந்த வெற்றியை நோக்கி நம்மையெல்லாம் அழைத்துச் செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து. அதைப் போலவே மூன்றெழுத்துக்காரரான எம்.ஜி.ஆருக்கு இந்த மேடையில் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்.

பிறகு எம்.ஜி.ஆர் பேசினார். புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கிய கருணாநிதிக்கும் உலகப்பனுக்கும் நன்றி தெரிவித்தார். புரட்சி நடிகராகவே தன்னைக் கழகத்துக்கு அர்ப்பணித்துக் கொள்வதாகச் சொன்னவர், கலைஞருடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே தனக்கு இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு வந்தது; என் உடலில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும்வரை அண்ணாவுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் கடைசி வரை உழைப்பேன் என்றார். கழகத்தில் இணைகிறேன் என்று எம்.ஜி.ஆர் சொன்னதில் கருணாநிதிக்கு நெஞ்சு கொள்ளாத மகிழ்ச்சி.

நிற்க.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்தான் மேலே இருப்பது. காலம் எத்தனை வேகமாக சுழல்கிறது… அந்த வேகத்தில் எத்தனை முரண்பாடுகள் முளைக்கின்றன… தன்னுடன் ஏற்பட்ட நட்பு காரணமாகவே திமுகவில் இணைந்ததாகச் சொன்ன எம்.ஜி.ஆர் தற்போது தனக்கு எதிராகவே சண்டமாருதம் செய்யத் தயாராகி விட்டார் என்பதில் கருணாநிதிக்கு ஆச்சரியம் அதிகம். அதிர்ச்சி அதைவிட. ஆகட்டும் பார்த்துவிடலாம் என்று கருணாநிதியும் தயாராகிவிட்டார்.

எம்.ஜி.ஆரின் திருக்கழுக்குன்றம் மற்றும் ராயப்பேட்டை பேச்சுகள் திமுக தொண்டர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை எழுப்பியிருந்தன. தலைவருக்கு எதிராகப் போர்கொடி தூக்கத் தயாராகிவிட்ட எம்.ஜி.ஆரை இனியும் கழகத்தில் விட்டுவைக்கக்கூடாது என்று ஆவேசப்பட்டனர் சிலர். வாத்தியார் வரிந்துகட்டிவிட்டார், கருணாநிதியை ஒருகை பார்த்தே தீரவேண்டும் என்றனர் இன்னும் சிலர். தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல; கட்சியின் மூத்த மற்றும் முக்கியத் தலைவர்கள் மத்தியிலும் இதே ரீதியிலான விவாதங்கள்தான்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பற்றிய செய்திகள் எல்லாம் கருணாநிதியின் கவனத்துக்கு வந்துகொண்டே இருந்தன. ஆலோசனைகளும்தான். எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசுங்கள்; எல்லாம் சரியாகிவிடும் என்றார் ஒருவர். இல்லையில்லை, எல்லை மீறிப் பேசுபவர்கள் எவரும் திமுகவின் எல்லைக்குள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என்றார் இன்னொருவர்.

வெறுமனே வாய்வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருந்த சிலர் எழுத்து மூலமாகவே வற்புறுத்தத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட இருபத்தியாறு செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட முறையீட்டு மனு 10 அக்டோபர் 1972 அன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியனிடம் தரப்பட்டது.

கழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் அந்த மனுவின் சாரம். க. அன்பழகன், என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி, சாதிக் பாட்சா, சத்தியவாணி முத்து, ப. உ. சண்முகம், க. ராசாராம், மதுரை எஸ். முத்து, ஏ.வி.பி. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் அந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தனர்.

ஒழுங்கு நடவடிக்கை விஷயத்தில் அவசரம் வேண்டாம் என்றார் நாஞ்சில் மனோகரன். அதை முரசொலி மாறனும் வழிமொழிந்தார். பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக் கொள்ளமுடியும் என்றுதான் இருவருமே விரும்பினர். ஒழுங்கு நடவடிக்கை திமுகவை இரண்டாகப் பிளந்துவிடும் என்பதை மனோகரன், மாறன் இருவருமே அனுமானித்திருக்கக்கூடும்.

எனினும், தம்வசம் வந்த முறையீட்டு மனுவைப் பரிசீலித்தார் திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன். ‘இந்த விண்ணப்பத்தை ஏற்று எம்.ஜி.ஆர் அவர்களைக் கழகத்தின் எல்லா பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக விலக்கி வைத்து, விளக்கம் கேட்கலாம்’ என்று குறிப்பு எழுதினார். அந்தக் குறிப்புடன் கூடிய முறையிட்டு மனு திமுக தலைவர் கருணாநிதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

மக்களைச் சந்திப்பேன், மக்கள் முன்னால் நிறுத்துவோம், தூக்கி எறிவோம் என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களை கருணாநிதி துளியும் ரசிக்கவில்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளை எம்.ஜி.ஆரிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவும் இல்லை. விளைவு, எம்.ஜி.ஆர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்தார் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக துணைப் பொதுச்செயலாளர் என்.வி. நடராசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் மீது திமுக தலைமை எடுத்திருக்கும் நடவடிக்கையை வாசித்துக் காட்டினார்.

தலைமைக் கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர் அவர்கள், அண்மைக் காலத்தில் கழகக் கட்டுப்பாடுகளை மீறியும் கழகத்துக்குக் களங்கம் ஏற்படும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய நடவடிக்கைகளின்மூலம் செயல்பட்டு வருவதால் அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் தாற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார். அவர் பெயரில் விரைவில் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஊடகங்களுக்குச் சொல்லியாகிவிட்டது. அடுத்தது, உரியவருக்குச் சொல்லவேண்டும். திமுக பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பினார். எம்.ஜி.ஆர் மீது செயற்குழு உறுப்பினர்கள் கொடுத்த முறையீட்டு மனுவின் விவரம், அது தொடர்பாக திமுக தலைமை எடுத்த நடவடிக்கை போன்ற சங்கதிகள் அந்தக் கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்தன. எம்.ஜி.ஆர் தன்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கு பதினைந்து நாள்கள் அவகாசமும் தரப்பட்டது.

ஆபத்து சூழ்ந்துகொண்டிருக்கிறது; அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் தீவிரம் காட்டினர். எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்துப் பேசினர். ம்ஹூம். எதற்கும் எம்.ஜி.ஆர் அசைந்து கொடுக்கவில்லை. கருணாநிதியும் இறங்கிவருவதாக இல்லை. சமாதானம் ஏற்படுவதற்கான சூழல் எதுவுமே தட்டுப்படவில்லை.

12 அக்டோபர் 1972 அன்று திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் தொடங்கின. அதில் பேசிய நாஞ்சில் மனோகரன், ‘எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டங்களில் பேசிய கருத்துகள் தவறானவைதான். என்றாலும், அதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு யோசிக்க வேண்டும்’ என்றார். ஆகட்டும் என்றார் கருணாநிதி. அவகாசம் தரப்பட்டது.

திமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் பெரியாரின் கவனத்துக்குச் சென்றது. திமுக உடைவதையோ, திமுக அரசுக்கு ஆபத்து வருவதையோ பெரியார் விரும்பவில்லை. உடனடியாக எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசினார். ஆனால் எம்.ஜி.ஆரோ, ‘என் மீது தவறு இல்லை. திமுக தலைமைதான் சரியாக நடந்துகொள்ளவில்லை. இருப்பினும் நண்பர்களுடன் கலந்துபேசி முடிவு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

பிறகு முதலமைச்சர் கருணாநிதி, பெரியாரைச் சந்திக்கச் சென்றார். கூடவே, அமைச்சர்கள் நெடுஞ்செழியன், ராஜாராம் உள்ளிட்டோரும் சென்றனர். பெரியாருக்கு மத்திய அரசு வழங்கிய தாமிரப் பட்டய விருதை அவரிடம் கொடுப்பதற்காக வந்திருந்தனர். அப்போது, கட்சியின் ஒற்றுமை, ஆட்சி நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கட்சி பிளவுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கருணாநிதிக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பினார் பெரியார்.

நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் சென்று எம்.ஜி.ஆரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதிருப்தி. ஆதங்கம். வெறுப்பு. வேதனை. எல்லாவற்றையும் பற்றிப் பேசப்பட்டது. அவற்றுக்கான சமாதான நடவடிக்கைகள் பற்றியும் அலசப்பட்டன. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும். எம்.ஜி.ஆர் கரைந்துகொண்டிருந்தார். இருவரும் எம்.ஜி.ஆரின் மனத்தைக் கரைத்துக்கொண்டிருந்தனர்.

சரி, திமுக தலைமைக்கும் கடிதம் எழுதுகிறேன். கடிதத்தின் உள்ளடக்கம் பற்றி பிற்பகலில் விவாதிக்கலாம் என்றார் எம்.ஜி.ஆர். மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் மனோகரன். கூடவே, மாறன். ஆனால் திடீரென அந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. கடிதம் எழுதுவதாக முதலில் ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் திடீரென பின்வாங்கியதற்குக் காரணம் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு.

எதிர்முனையில் பேசியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்; எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியதால்தான் எம்.ஜி.ஆர் பின்வாங்கினார் என்றனர் கருணாநிதி ஆதரவாளர்கள். ஆனால் ரசிகர்களை திமுகவினர் தாக்குகிறார்கள் என்ற செய்தி எம்.ஜி.ஆருக்குத் தொலைபேசி மூலமாகக் கிடைத்தது. அதுதான் எம்.ஜி.ஆர் மனத்தை மாற்றிவிட்டது என்றார்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள்.

விளக்கங்கள் கொடுத்த குழப்பங்களுக்கு மத்தியில் திமுக செயற்குழு கூடியது. அதிரடி தீர்மானம் ஒன்று அங்கே நிறைவேறியது.

கழக நலனுக்காக எம்.ஜி.ஆர் அவர்கள் வருத்தம் தெரிவித்து, கழகப் பணியில் ஈடுபட வாய்ப்பு அளித்தும் கூட அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாதது வருந்தத்தக்கதாகும். எனவே, அவர் கழகத்தின் ஒழுங்கு முறைகள் குலையும் அளவுக்கு நடந்துகொண்டதற்காக பொதுச் செயலாளர் அவர்மீது கழகச் சட்டதிட்ட விதி 31-ன்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்தச் செயற்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, இந்தத் தீர்மானத்தைப் பொதுக்குழுவுக்குப் பரிந்துரை செய்கிறது.

செயற்குழு நிறைவேற்றிய தீர்மானம் பொதுக் குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் 310 பேர். அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் 277 பேர். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவுக்குள் உண்மையிலேயே புரட்சி வெடித்திருந்தது!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

மன்மோகன் சிங், உங்களை உத்தமர் என்று அழைக்கவேண்டுமா?

‘பிராமணர்கள் அறிவாளிகள்’.’ தலித் மக்கள் அசுத்தமானவர்கள்’. ‘சாமியார்களும் சாதுக்களும் கடவுள்கள்’. இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால் அவை ‘உண்மைகள்’ என்று பதில் வரும். இந்தியாவில் நம்பப்படும் இப்படிப்பட்ட உண்மைகளுக்கு அடிப்படைகள் எதுவும் இருப்பதில்லை. அப்படியான ஒரு மாயத்தோற்றம்தான் மன்மோகன் சிங் மீதும் விழுந்திருக்கிறது. மன்மோகன் சிங் யோக்கியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் உத்தமர் என்பதை நீங்கள் அறிவீர்களா?

எப்படிச் சொல்கிறீர்கள் என்று மட்டும் எதிர் கேள்வி கேட்டுவிடக்கூடாது. காரணம், அவரை உத்தமர் என்று அழைக்கும் யாருக்கும் அவர் எதனால் உத்தமர் என்பது தெரியாது. ஏனெனில் அவர் அயோக்கியர்களால் உத்தமர் என சான்றளிக்கப்பட்டு, ஏராளமான அப்பாவிகளாலும் அப்படியே நம்பப்படுபவர். ராகுல் காந்தி போன்ற தலைவர்களாகட்டும்; கலாம் போன்ற அறிவுஜீவிகளாகட்டும்; ரஜினி போன்ற ஆன்மிக அரசியல் பீஸாகட்டும்; எல்லோருமே அவரவர் தகுதிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பூதாகரமாக்கப்பட்டவர்கள், அசாதாரணமான வர்ணனைகளால் வளர்த்துவிடப்பட்டவர்கள். ஆனால் மன்மோகன் இவர்களிடம் இருந்து மாறுபடுகிறார். எப்படி என்று பார்ப்போம்.

அரசியலுக்கு அழைத்துவரப்பட்டபோது, படித்தவர் அதனால் அவர் யோக்கியராக இருப்பார் எனும் பிம்பம் மன்மோகன் பற்றி இருந்தது. உண்மையில், இந்த அடிப்படையே தவறானது. இந்தியாவின் மாபெரும் கொள்ளையர்களான அம்பானி முதல் லாலு பிரசாத் வரை எல்லோரும் படித்தவர்கள்தாம். மக்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்த சஞ்சய் காந்தி முதல் பாமரர்களுக்கு குறைந்தபட்ச மரியாதையைக்கூட தர மறுக்கும் காவல்துறை கடைநிலை அதிகாரிகள் வரை எல்லோரும் படித்தவர்களே. படிப்பு எனும் தகுதியால் குற்றத்தை இன்னும் ‘சிறப்பாக‘ செய்யும் வழக்கம்தான் இப்போது இங்கு இருக்கிறது. ஆகவே, கல்வி என்பது பேஜரைப்போல வழக்கொழிந்துபோன, மதிப்பிழந்துபோன ஒரு கருவியாக இன்று மாறிவிட்டது. மன்மோகனுக்கு இந்தக் கருவி ஆரம்பகாலங்களில் பேருதவி செய்ததை மறுப்பதற்கில்லை. மன்மோகன் மீதான யோக்கிய பிம்பம் முதலில் விழுவதற்குக் காரணம் அவரது படிப்பு.

கல்வியில் மட்டுமல்ல, இன்னொரு அம்சத்திலும் மன்மோகன் சிங் ஏனைய பிரதமர்களிடம் இருந்து மாறுபட்டவர். மற்றவர்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க அதிபரின் காலடியில் பதுங்குவார்கள் என்றால் மன்மோகன் அவ்வாறு பதுங்குவதற்காகவே பதவிக்கு வந்தவர். மற்றவர்களுக்கு அது ஒரு கடமை என்றால் மன்மோகனுக்கு அது ஒரு வழிபாடு. அவரவர் விருப்பம் அவரவருக்கு என்னும் வகையில் அமெரிக்க அடிமைத்தனம் மன்மோகனின் பிரத்தியேக விருப்பமாக மட்டுமே இருந்திருந்தால் நாம் இவ்வளவு தூரம் கவலைப்பட்டிருக்கவேண்டாம். ஒருவேளை அவர் ஒபாமா வீட்டு நாயை குளிப்பாட்டுவதையோ அல்லது மிஷலுக்கு பேன் பார்ப்பதையோ தன் வாழ்வின் பெரும் பேறாக எண்ணியிருந்தால், அவர்மீது பரிதாபப்பட்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருக்கலாம்.

அமெரிக்க அடிமைத்தனம் அவரது பிரத்தியேக விருப்பம் மட்டுமல்ல. அவர் தன் எஜமான விசுவாசத்தை ஒரு தேசத்தை விற்பதன் வாயிலாக காட்டுவதுதான் ஆபத்தாக இருக்கிறது. தமிழீழப் படுகொலைகள் குறித்து பிரிட்டன் பிரதமர் வரை கருத்து சொல்லியாயிற்று, இந்தக் கல்லுளிமங்கன் இன்னும் அதுகுறித்து மூச்சு காட்டக்கூட இல்லை. ஆனால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானபோது ஜி8 நாடுகளின் கூட்டத்தில் ‘அமெரிக்காவை காப்பாற்றவேண்டியது உலகத்தின் கடமை’ என்று மைக் போட்டு அலறி, உலகத்திடம் தன் எஜமானனுக்காக பிச்சை கேட்டார். ஈரானிடமிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டுவரும் திட்டம், அமெரிக்கா லேசாக முறைத்ததால், ஊற்றி மூடப்பட்டது. அதில் முனைப்பு காட்டிய மணி சங்கர் அய்யர் அந்த துறையில் இருந்தே தூக்கியெறியப்பட்டார். அமெரிக்க நலனுக்கு எதிராக இந்தியர்கள் செயல்படுவதை அல்ல, சிந்திப்பதைக்கூட நம் உத்தமரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. உண்மையில், மன்மோகனைப் போன்ற ஓர் அமெரிக்க விசுவாசியை அமெரிக்காவில்கூட காணமுடியாது. இவர் சிந்தனை, லட்சியம் யாவும் அமெரிக்க அரசின் நலன் குறித்தே இருப்பதால் ஏனைய அமெரிக்க அடிமைகளைவிட இவர் பேராபத்தானவர்.

சென்ற ஆட்சியின் தொடக்கத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. நாள் கணக்கில் நீடித்த அப்போராட்டத்தில், ஊழியர் சங்க நிர்வாகிகளைச் சந்திக்கக்கூட மறுத்தார் இந்த பொருளாதாரப் புலி. போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் கால்நடையாக டெல்லி சென்று ஏறத்தாழ மூன்றுவாரம் தலைநகர வீதிகளில் தங்கி காத்திருந்தார்கள், நோக்கம் ஒன்றுதான். இந்த தேசத்தின் பிரதமரை சந்தித்து முறையிடுவது. ஆனால், கடைசிவரை மன்மோகன் மனமிரங்கவில்லை.

சட்டீஸ்கரில் மூன்றரை லட்சம் ‘இந்திய’ மக்கள் அகதி முகாம்களில் வசிக்கிறார்கள், பத்தாயிரம் பெண்கள் ராணுவத்தால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஐந்நூறு தமிழக மீனவர்கள் இலங்கை அரசு ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனநோயாளி தீவிரவாதியாக ‘அப்கிரேட்’ செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார். எந்த ஒரு விவகாரம் குறித்தும் கருத்துகூட சொன்னதில்லை மன்மோகன். அரிதினும் அரிதாக அவர் அளித்த பத்திரிக்கைப் பேட்டியிலும்கூட இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு வாழ்வில் முன்னேறும் வழியைப் பார்க்கவேண்டும் என்றார். இந்திய மக்களின் நல்வாழ்வு குறித்த அவரது இலவச அறிவுரைகூட முதலாளிமார்களின் நலனை உள்ளடக்கியதாக இருக்கிறதென்றால், காசுக்கு செய்யும் வேலை எந்த லட்சணத்தில் இருக்கும்?

மன்மோகனின் தனிப்பட்ட சுபாவத்தை மதிப்பிடுவது சற்று சிரமமானது. அவர் முக்கியமான விவகாரங்கள் யாவற்றிலும் ஒரு கபடத்தனமான மௌனத்தை மட்டுமே முன்வைக்கிறார். ஆனால் அவரது நண்பர்களை வைத்து அவரது பர்சனாலிட்டியை தெரிந்துகொள்வது கொஞ்சம் எளிதானதே. மான்டெக் சிங் அலுவாலியா என்று ஓர் உயிர் நண்பன் அவருக்குண்டு. அவரைப்போலவே உலக அளவில் பொருளாதார தீவிரவாதம் செய்துவிட்டு இந்தியா வந்தவர். பேட்டியொன்றில் அவர் சொல்கிறார்: எனக்கு ஏழைமையைப் பற்றி அதிகம் தெரியாது! எழுபத்தேழு சதம் மக்கள் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பரம ஏழை தேசத்தின் திட்டக்குழு உறுப்பினருக்கு ஏழைமையைப் பற்றி அதிகம் தெரியாதாம். அசிங்கம் இல்லையா? நக்கத்தெரியாத நாய்க்கு தட்டு நிறைய பால் வைத்த மாதிரி இவரை எதற்கு திட்டக் கமிஷனின் துனைத் தலைவராக மன்மோகன் நியமனம் செய்தார்?

நாளொன்றுக்கு 32 ரூபாயில் எப்படி ஒருவர் வாழ இயலும் எனும் கேள்விக்கு மான்டெக் சிங்கின் பதில் என்ன தெரியுமா? உங்கள் அருகாமையில் மாதம் மூவாயிரம், நான்காயிரம் ரூபாயில் வாழ்க்கை நடத்தும் ஐந்து பேர் கொண்ட குடும்பம் எதையும் நீங்கள் பார்த்ததில்லையா என்பதுதான். அட இதுவும் சரிதானே என்றுகூட நமக்கு யோசிக்கத் தோன்றும். நிதானமாக பரிசீலிக்கையில் மான்டெக்கின் திமிரையும் திசைதிருப்புதலையும் நாம் உணர இயலும். உதாரணத்துக்கு, அரசின் வறுமைக் கோட்டு வரம்பு 32 ரூபாயில் பாலுக்கு என ஒதுக்கும் தொகை தோராயமாக இரண்டு ரூபாய், அல்லது அதற்கும் கீழே. ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒரு மனிதன் நாளொன்றுக்கு 300 மி.லி பால் அருந்த வேண்டும் என மருத்துவ அளவீடுகள் சொல்கின்றன. ஆனால், கால் லிட்டர் பால் ஏழு ரூபாய்க்கு விற்கிறது. எனில், திட்டக் கமிஷன் என்பது அடிமுட்டாள்களின் கூடாரம் என்றல்லவா அர்த்தமாகிறது? நான் பார்த்தவரையில் மான்டெக்கின் வார்த்தைகள் சொல்வது இதைத்தான் ‘மாதமொன்றுக்கு நாலாயிரம் சம்பாதிக்கும் குடும்பமெல்லாம் உயிரோடதானே இருக்கு, அப்புறமென்ன?’

இந்தியாவில் ஐந்து சதவிகிதம் மக்கள் விவசாயம் செய்தால் போதும். அறுபது சதவிகிதம் பேர் அதில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை. இப்படிச் சொல்லியிருப்பவர் சிகாகோ வர்தகப் பள்ளியின் பொருளாதாரப் பேராசிரியர் ரகுராம் ராஜன். இதை இங்கே குறிப்பிட ஒரு காரணமிருக்கிறது. இவர்தான் மன்மோகனின் பொருளாதார ஆலோசகர். அப்படியானால் மீதமிருக்கும் 55 சதவிகிதம் மக்கள் எங்கே போவார்கள் என அவரிடம் நாம் கேட்க முடியாது. அவர் கவலை வேறு. பெருநிறுவனங்கள் இந்திய விவசாயத்தை கைப்பற்றும்போது ஐந்து சதவிகித மக்களுக்கு பிச்சை போட்டுவிடலாம். அறுபது சதவிகிதத்துக்குப் போடுவது கட்டுப்படியாகாது. லாபக்கணக்கு உதைக்கும்!

மேற்படி இரண்டு நபர்கள் மட்டுமல்ல, மன்மோகனைச் சுற்றி பல மரண வியாபாரிகளும் மரண தரகர்களும் சூழ்ந்திருக்கிறார்கள். ஹிட்லர்தான் நினைவுக்கு வருகிறார். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அநாவசியமான சுமைகளாகக் கருதிய ஹிட்லர் அரசு, அவர்களை ஆராய்ச்சி செய்துபார்க்க பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பிவைத்தது. மன்மோகன் சிங்கின் நண்பர்களும்கூட ஒருவகையில் இப்படிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள்தாம். ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கும் குரூரமான சிந்தனை மட்டும் மன்மோகனுக்கு உரியது. வறுமைக் கோடு வரம்பு நிர்ணயத்தில்கூட நாம் மான்டெக்கையே குறை கூறுகிறோம். தேளை விட்டுவிட்டு கொடுக்கை மட்டும் குறை சொல்வது போல்.

சில மாதங்களுக்கு முன், ஒரு பயணத்தில் கிருட்டிணகிரி பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டியைப் பார்த்தேன். பனை வெல்லம் விற்றுக்கொண்டிருந்த அவர் என் முன்னிருக்கைப் பயணியிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வெல்லக்கட்டிகள் பதினைந்து ரூபாய் விலை. மூன்று என்றால் இருபது ரூபாய்க்கு இறங்கி வர அவர் தயாராக இருந்தார். ஒரு பயணி இரண்டை கையில் வாங்கிக்கொண்டு, பத்து ரூபாய்னா எடுத்துக்கிறேன் என்றார். உடனே அந்தப் பெண்மணி பனை வெல்லத்தைப் பயணியிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, ‘இதுக்கு உன்னால ஏழு ரூவாகூட தரமுடியாதா?’ என உரக்க கேட்டபடி நகர்ந்தார். ஒரு சாதாரண பெண்மணிக்கு தான் விற்கும் பொருள் குறைத்து மதிப்பிடப்படுவது கோபப்படுத்துகிறது. அப்படியானால், தன் கட்டுப்பாட்டில் உள்ள பொருளை அடிமாட்டுவிலையைவிட மட்டமான விலைக்கு விற்பனை செய்பவன் நிச்சயம் அதைத் திருடியவனாகத்தானே இருக்க முடியும்? ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நாம் சட்ட ரீதியாகவோ தொழில்நுட்ப ரீதியாவோ ஆராய்ந்து மன்மோகனின் யோக்யதையைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒரு சாதாரண தெருவோர வியாபாரியுடன் ஒப்பிட்டாலே போதும். தேசத்தின் மாபெரும் செல்வங்கள் கொள்ளை போவதை அமைதியாக அனுமதித்துவிட்டு, மாட்டிக்கொண்டபிறகு எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டன என கண்ணீர் வடிப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? திருடனைவிட கேவலமானவன் செய்யும் செயல் அல்லவா இது?

மன்மோகனின் பெயரை காப்பாற்றும் ஓரம்சம், ஆதாரமின்மை. அவர் லஞ்சம் வாங்கியதற்கும், சொத்து சேர்த்தற்கும் ஆதாரம் இல்லை. துரதிருஷ்டவசமாக நாம் பெரிதும் அச்சமடையவேண்டிய செய்தியும் இதுதான். கோடிக்கணக்கான பழங்குடி மக்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டுவதையும், திவாலாகப்போகும் அணுமின் நிறுவனங்களைக் காப்பாற்ற சொந்த நாட்டு மக்களுக்குத் தெரியாமல் ஒப்பந்தம் போட்டு ஏய்ப்பதையும், சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் பக்கவாத்தியமாக இந்தியாவை மாற்றியதையும் தன் சொந்த லாபத்துக்காக மன்மோகன் செய்யவில்லை என்றால் அது அவரது சுபாவம் என்றல்லவா நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும்? தேவைக்காக குற்றமிழைப்பதைவிட ஆபத்தானது குற்றத்தை ரசித்து செய்வதும், அதனை நியாயம் என நம்புவதும். அந்த வகையில் கார்பரேட் ஊழல்களை ஆதரிக்கும் மன்மோகன் பேராபத்தானவர்.

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மன்மோகன் சிங் தூக்கியெறியப்பட்டு, அவரிடத்தில் ராகுல் காந்தி உட்கார வைக்கப்படுவார். இந்நிலையில், எதற்கு அநாவசியமாக மன்மோகனை விமரிசனம் செய்யவேண்டும்? ஏனென்றால் ஓர் அரசு பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச நெறிகள் பலவற்றை மிகச் சாதாரணமாக தூக்கியெறிந்துவிட்டு நிர்வாகம் செய்யும் கலைக்கு மன்மோகனின் ஆட்சி ஒரு ரோல் மாடலாக மாறிவிட்டது. பெரும்பான்மை மக்களைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாமல் பத்து ஆண்டுகள் ஆளமுடியும் என அவர் நிரூபணம் செய்திருக்கிறார். இனி வரப்போகும் எல்லா ஆட்சியாளர்களும் அவரது பாதையில்தான் பயணம் செய்யப்போகிறார்கள். ஆக மன்மோகனை தெரிந்துகொள்வதன்மூலம் நம் சமகால வாழ்வியல் துன்பங்களுக்கும் எதிர்கால அவலங்களுக்குமான காரணங்களைப் புரிந்துகொள்ளமுடியும். இதற்கு தீர்வு மன்மோகனை அதிகாரத்தில் இருந்து நீக்கிவிடுவது மட்டுமல்ல. அவ்வாறு கருதுவது மன்மோகனை உத்தமர் என நம்புவதைவிட மோசமான நிலைப்பாடாகிவிடும்.

மன்மோகன் சிங் அவர்களே, இவ்வளவுக்குப் பிறகும் உங்களை உத்தமர் என்று நாங்கள் அழைக்கவேண்டுமானால், உங்கள் பெயரையே நீங்கள் அவ்வாறு மாற்றிக்கொண்டால்தான் உண்டு.

0

வில்லவன்

பரத்தை கூற்று: கவிதைகளும் சில கேள்விகளும்

 

புத்தகத்துக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்று கவலைப்படாமல், பரத்தையர் பற்றிய புரிதல் அடுத்த நிலைக்கு நகரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது போன்ற தலைப்பின் கீழ் ஒரு தொகுப்பை எழுதுவதென்பது கம்பிமேல் நடப்பது போன்ற வித்தை. சரியாகவே நடந்திருக்கிறார் சரவணகார்த்திகேயன். முதல் கவிதைத் தொகுப்பில் இது போன்ற ஒரு விஷயத்தைப் பாடுபொருளாக எடுத்துக்கொள்ள நிறைய துணிச்சல் வேண்டும். நிறைய தன்னம்பிக்கை வேண்டும். இம்மி பிசகினாலும் விரசமாகி விடும்.

சமீபத்தில் படித்த விஷயம் இது – “யாருடன் பேசப்பிடிக்கும்?” என்று கேட்கப்பட்ட வினாவிற்கு “வேசியுடன் பேசப்பிடிக்கும்” என்று பதில். பதில் சொன்னவர் கவிஞர் வைரமுத்து என்று நினைவு. ஊரில் இருப்போரின் அனைவரின் அறியாத முகங்களும் அவளுடன் பேசினால் தெரியவரும். இதை வேறொரு கோணத்தில் இருந்து பார்த்தோமானால் இன்னொரு உண்மையும் புரியும். வேசைத்தனம் சமூகத்திற்குத் தேவையாக இருக்கிறது, அது தவறு என்று நாம் எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தாலும்.

”மன்மத லீலை’ படத்தில் கமலின் பக்கத்து வீட்டுக்கு ஒரு பாலியல் தொழிலாளி குடிவருவார். ஒன்றும் அறியாதவர் போல கமல் அவர் மனைவியிடம் “பக்கத்து வீட்டிற்கு வந்திருப்பது யார்?” என்று வினவுவார். அதற்கு அவர் மனைவி, அவள் ஒரு வேசை என்றும் இதுவரை அவள் வீட்டிற்குப் போகாத ஆண்கள் நம் தெருவில் இருவர் மட்டுமே உண்டு என்றும் சொல்வார். கமல் அதற்கு “இவரா அது, அவரா அது” என்று மனைவியைக் கேட்பார் – “அந்த இருவரில் ஒருவர் ஏன் நீங்களாக இருக்க முடியாது?” என்று அவருடைய மனைவி அவரைக் கேட்பார். கமல் ஏதேதோ சொல்லிச் சமாளிப்பார்.

சரவணகார்த்திகேயனின் பரத்தை கூற்று கவிதைத் தொகுப்பு படித்ததும் எனக்கு நினைவிற்கு வந்தவை மேற்கூறிய இந்த இரண்டு விஷயங்களே. இவ்விரண்டும் ஏற்கெனவே ஒருவருக்குத் தெரிந்திருந்தால் பரத்தை கூற்றில் சொல்லப்படும் விஷயம் இன்னும் எளிதாகப் புரியும். பரத்தைமை என்பது நடைமுறை நிதர்சனம்.

இந்தத் தொகுப்பின் நோக்கத்தை (பரத்தையர் பற்றிய புரிதல்) நாம் எளிதாகப் புரிந்துகொள்ள உதவுவது சரவணகார்த்திகேயனின் முன்னுரை. பாலியல் தொழிலில் ஈடுபடுவது யார் யார்? எளிமையாகப் பார்த்தோமானால் ஒரு பாலியல் தொழிலாளியும் ஒரு பாலியல் தொழிலாளி அல்லாதவரும். ஆனால் அதைத் தொழிலாக செய்பவர் தீண்டத் தகாதவராக ஆகிவிடுகிறார். சமூகம் அவரை மதிப்பதில்லை. இதைத்தான் தீண்டப்படுவதாலேயே தீண்டாத நிலைக்குப் பாலியல் தொழிலாளிகள் ஆளாகின்றனர் என்று நூலாசிரியர் கூறுகிறார்.

பாலியல் தொழில் பரவலாக உள்ளது என்பதற்கு மேலும் ஆதாரங்களைத் தருகிறார். Human Rights Watch என்ற சர்வதேச அமைப்பின் அறிக்கைப்படி, நம்மைச் சுற்றியுள்ள நாம் நன்கறிந்த 36 பெண்களில் ஒருவர், பாலியலை ஏதேனும் ஒருவகைப் பொருளாதாரப் பண்டமாற்றில் விற்றுக் கொண்டிருக்கிறார்.

கால மாற்றங்களுக்கேற்ப முதலில் தேவரடியாளாக அறியப்பட்டு, நவீன காலத்தில் Street walkers, Brothels, Escorts என்று புதுப்பெயர்கள் தாங்கி வருகிறார் பாலியல் தொழிலாளி. மாற்றம் பெயரில் மட்டுமே. அடிப்படை ஒன்றுதான். உடலே இதன் முதலீடு.

நான் புரிந்துகொண்ட வரையில் கவிதைத்தொகுப்பு முன்வைக்கும் விவாதங்கள் இரண்டு:

1. நாம் தேவை ஏற்படும்போது மட்டும் செய்யும் விஷயத்தை பாலியல் தொழிலாளிகள் தொழிலாகவே செய்கிறார்கள் என்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கக்கூடிய பிரதான வித்தியாசம்

2. விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் ஒப்பீட்டளவில் சற்றதிக சமூக அந்தஸ்தையும் அளிக்க முடியும்

தொகுப்பின் முன்னுரை முடிந்த பிறகு பரத்தையர் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் படிப்பவருக்குப் பெரிய ஏமாற்றம் வந்துவிடும். முன்னுரையில் இருக்கும் காத்திரம், நேக்கு போக்கு, நாசூக்கு, இடக்கரடக்கல், சொல்ல வந்த கருத்தைத் திறம்பட சொல்லுதல் ஆகியவை காணாமல் போய்விடுகின்றன.. வார்தைகள் கொச்சையாக வந்து விழுகின்றன. சில இடங்களில் சொல்ல வேண்டியதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பேசுவது போலக்கூடத் தோன்றும்.

மேற்சொன்ன எல்லாம் உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் அந்த ஏமாற்றம் நிச்சயம் இருக்கும். கவிஞரால் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக, புள்ளி விவரங்களுடன், விவாதத்தின் மையம் குறித்துப் பேசமுடியும். அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். நேரடியாக ஒரு விஷயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மொழி அப்படி உணர்ச்சிவசப்பட்ட விதத்தில்தான் இருக்கும். அதைப் பட்டை (polish) தீட்டியிருந்தால் அது செயற்கையாகப் போயிருக்கும்.

பாலியல் தொழிலாளிகளின் நிலை குறித்து எழுத சமூக அக்கறை போதும். வேறேதும் தேவையில்லை. உய்த்துணர்தல் (கல்வி, கேள்வி) துய்த்துணர்தல் (நேரடியாக அனுபவிப்பது) என்ற ஏதேனும் ஒருவகையில் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ளலாம்.

சில கவிதைகள் நெஞ்சைத் தைக்கின்றன. சில வெறும் புலம்பல்கள். எதிர்பார்ப்புகள். சுய பச்சாதாபங்கள். சாடல்கள்… இன்னும் இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அவை அப்படித்தான் இருக்கும். இருக்கவேண்டும். அதுதான் இயல்பு. நீதிமன்றக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். வழக்கறிஞர் திறம்பட, உணர்ச்சிவயப்படாமல் வாதம் செய்வார். வாதி பிரதிவாதிகள் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே வாதம் செய்வர். அதுதான் இயல்பு. அவர்கள் நேரடியாக அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். இந்தத் தொகுப்பில் முக்கியமென்று நான் கருதுவது நாங்களும் பெண்கள்தான் என்று அவர்கள் சொல்லும் இடங்கள், விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைக்கும் இடங்கள் மட்டுமே.

இருபத்தாண்டு நெடிய
பரத்தைமைக்குப்பின்பும்
புடவையுடுத்துகையில்
மாராப்பைச் சரிசெய்யும்
விரல்களின் அனிச்சை

நானும் பெண்தான் என்று சொல்கிறாள். இருபது ஆண்டுகள் என்று சொல்வதை விட இரு பத்தாண்டு என்று சொல்வது சிறப்பு. சில சமயங்களில் சொல்லவரும் செய்தியின் தாக்கம் அதிகமாக இருக்கவேண்டுமென்றால், சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்வு செய்யவேண்டும். இந்த இடத்தில் இரு பத்தாண்டு என்பது மிகப் பொருத்தமாக அமைந்துவிடுகிறது.

தொலைவே ஊரிலிருக்கும்
தாய் தந்தை தம்பி தங்கை
எவருமறிந்திளர் – அவர்தம்
உணவென் உடம்பென.

யோசித்துப் பார்த்தால் வலிக்கிறது. பாலியல் தொழிலாளிகள் என்ன வேலை செய்கிறேன் என்று சொல்வார்கள், பிறந்த வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் போது?

ஊருக்கு ஓர் பெயர்
மாற்றிக்கொள்கிறோம்
எப்போதுமிவர்கட்கு
தேவைப்படுகிறது
மண்ணின் மணம்.

மும்பை போனால் இந்தியில் பேசுகிறோம். பெங்களூரில் நமஸ்காரா சொல்கிறோம். சென்னையில் வணக்கம் சொல்கிறோம். நாம் எந்தவிதத்தில் இவர்களிடமிருந்து மாறுபடுகிறோம்? இல்லை இல்லை நாம் வேறு, அவர்கள் வேறு என்பவர்கள் கீழே உள்ளதைப் படியுங்கள்.

மதிப்பெண் வாங்கப் பேராசிரியரிடத்தோ
பேரம் பேசுகையில் கடைக்காரனிடத்தோ
வட்டி வாங்கவரும் கடன்காரனிடத்தோ
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியிடத்தோ
நீண்ட வரிசையில் முன் நிற்பவனிடத்தோ
பல்லிளித்துக் குழைந்து நின்றிருக்கக்கூடும்
உம் வீட்டுப்பெண்டிர் – அதன் பெயர் என்ன?

இதுகுறித்து யாருக்கும் எந்தவித கருத்து பேதமும் இருக்க முடியாது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இன்றைய தேதியில் இங்கே
எவளுக்கும் சாத்தியமில்லை –
பெய்யெனப் பெய்யும் மழை

உண்மை சுடுகிறது.

இனிஷியல் பிரச்சனை
தீர்க்கும் கருணையுடன்
சிற்சில கருக்கொலைகள்.

சமூகத்தில் நல்ல பெயர் கிடையாது. ஒரு வட்டத்திற்குள் வாழும் வாழ்க்கை வாய்ப்பதில்லை. கூடுதலாக மேலே சொன்ன பாவமும் செய்ய வேண்டியுள்ளது.

அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை
ஒற்றைக் கணத்தில் எனைப் போலாக்கும்
வல்லமை வாய்ந்தது உன் அகால மரணம்.

இது எச்சரிக்கை மணி.

திரைக்கதாநாயகியாகும் கனவில் ரயிலேறிய சிலர்
வட்டி கட்ட வக்கில்லாது அசலுக்கு பதிலான சிலர்
நெடுஞ்சாலைக் கொடுஞ்சாவில் நாதியிழந்த சிலர்
கணவன் / காதலனால் களவாடி விற்கப்பட்ட சிலர்.

ஒரு பெண் பரத்தையாகும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கவிதை பட்டியலிடுகின்றது.

புத்தகத்தின் அட்டையில் பிக்காசோவின் ஓவியம். நல்ல யோசனை. ஆனால் நான்கு பெண்கள் முன்னட்டையில், ஒரு பெண் பின்னட்டையில். ஓவியத்தின் அழகை இது கெடுத்து விடுகிறது. கவிதைகளை ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். அவற்றுக்கு ஐந்திணைப் பெயர்களையும் வைத்திருக்கிறார். ஐந்திணைப் பகுப்பு சரிவரப் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. நூற்றைம்பது பாக்களில் ஒன்றிரண்டு (அல்லது அதற்கு மேலும்) ஒரு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

சில படைப்புகளை எடுத்தோம், வாசித்தோம் என்பது போல கடந்துவிட முடிவதில்லை. யோசிக்க வைக்கின்றன. சமீபத்தில் யோசிக்க வைத்தவை ஜி.நாகராஜனின் படைப்புகள், தஞ்சை பிரகாஷ் கதைகள், யு.ஆர்.ஆனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’, திலீப்குமார் கதைகள். ஜி நாகராஜனின் படைப்புகளைப் படித்த பின் பாலியல் தொழிலாளிகளின் மேல் ஒரு விதமான நல்ல அபிப்ராயம் மனதில் தோன்றியது. அதற்கு முன்புவரை அவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான் என் அபிப்ராயம்.

‘சம்ஸ்காரா’ நாவல் படித்து முடித்ததும் அதில் வரும் சந்திரி கதாபாத்திரம் என் மதிப்பில் உயர்ந்து நிற்கிறாள். சந்திரி, நாரணப்பாவின் (சந்திரி, நாரணப்பாவின் ஆசைநாயகி) ஈமச் சடங்கு செலவுக்காக நகையைக் கழற்றித் தருகிறாள் (ஒரு பாலியல் தொழிலாளியும் மனுஷியே, அவளிடம் போன பொருள் திரும்பாது என்று யார் சொல்வது?). சாப்பிடாமல் இருக்கிறாள். பிணமோ அழுகுகிறது. அக்ரஹாரவாசிகளோ ஒரு முடிவும் எடுக்கவில்லை. தன்னுடைய எஜமானனின் பிணம் எரியூட்டப்பட வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு அவளைப் பாடாய்ப்படுத்துகிறது.. நடைமுறைத் தீர்வு எரியூட்டுவதுதான். அதைத்தான் அந்த நாவலில் அவள் செய்வாள்.
இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் உடலால் எத்தனை பேருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவளுடைய பிற செய்கைகளை முன்னிறுத்திப் பார்க்கும்போது (intrinsic value) விகல்பமாகவே தெரிவதில்லை.

விபசாரத்தைச் சட்டபூர்வமாக்குவது குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. இப்போது இலைமறை காய்மறையாக நடைபெறும் விஷயத்தை அங்கீகரித்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா? ஏற்கெனவே சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தாய்லாந்து போன்ற நாடுகளின் சமூகச் சூழல் எவ்வாறு உள்ளது? ஆணுக்கு மட்டும்தான் இப்படிப்பட்ட பெண் தேவையா? பெண்ணுக்கு அது போன்ற தேவை இருக்காதா? இந்தக் கேள்விகளுக்கு முன் நாம் கேட்க வேண்டிய மற்றொரு முக்கியக் கேள்வி: பாலியல் தொழில் செய்யும் பெண்கள் தேவையா?

தெளிவான பதில் என்னிடம் இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் தொழிலாளர்களின் அவசியத்தை விளக்கினார். கை, கால் இல்லாத ஒருவர் திருமணம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால், அவருக்கு உடலுறவில் நாட்டம் உண்டு. அவர் யாரிடம் உடலுறவு கொள்வார்?

இந்தத் தொகுப்பின் நோக்கமாக ஆசிரியர் கூறுவது ‘பரத்தையர் பற்றிய புரிதல்’ என்கிறார்.

வேசிகளை யொழிக்குமொரு
கலாசாரத்தில் கணிசமாகும் –
கற்பழிப்பும் கள்ளத்தொடர்பும்.

இது ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமாகவே படுகிறது. Constant evolving process என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சமூகம் மாறிக்கொண்டே இருக்கிறது. பழைய மதிப்பீடுகள் மறுபரிசீலனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. முக்கியமான சமீபத்திய மாற்றங்கள் ஒன்றிரண்டை இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. திருநங்கைகள் குறித்த நம் பார்வை விசாலம் அடைந்திருக்கிறது. விண்ணப்பப் படிவங்களில் பாலினம் – ‘திருநங்கை’ என்று குறிப்பிடக்கூடிய அளவிற்கு நம் சமூகம் மாற்றம் அடைந்திருக்கிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர் திருமணம் செய்துகொள்ள நம் சட்டத்தில் இப்போது இடமுண்டு. வெகு அண்மையில், (மார்ச் ஏழாம் தேதி) அருணா ஷான்பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, கருணைக் கொலை குறித்து சட்ட திருத்தங்களைச் செய்ய பாராளுமன்றத்துக்கு சில பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

யுகங்கள் தோறும் தர்மங்கள் மாறுகின்றன. ஆனால், இரண்டு விஷயங்கள் மட்டும் மாறாமல் இருக்கின்றன. ஒன்று தர்மம் என்பது என்ன என்பதை யாரும் அறுதியிட்டுக் கூறிவிடமுடியாது. இன்னொன்று, பெரிய நன்மையைக் கருத்தில் கொள்ளும்போது ஒருசில நியாயங்கள் காற்றில் விடப்படலாம். ‘ஒரு ஊர் நன்றாக இருக்கவேண்டுமெனில் ஒரு குடும்பம் அழிவதில் தவறில்லை’ என்று கீதையில் கண்ணன் சொல்வது போல. விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பாலியல் வன்முறைகள், கள்ளத்தொடர்பு, கொலைகள் நடப்பது தவிர்க்கப்படுமாயின் (larger interest) அதை அனுமதித்தால் தவறென்ன?

என்றேனும் ஒருநாள் பரத்தையர் குறித்த ஒட்டுமொத்த சமூகத்தின் புரிதல் அடுத்த நிலைக்கு நகர்ந்து சில மாற்றங்கள் நடக்கலாம். அப்படி நடக்கப்போகும் மாற்றங்களுக்கு இந்த நூல் எந்தவிதத்தில் உதவப் போகிறது என்பதைவிட அது குறித்து தமிழில் ஒரு படைப்பு முன்பே வெளிவந்திருக்கிறது என்பதே எனக்கு முக்கியமாகப் படுகிறது. இந்நூல் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில். பரத்தையர் நிலை குறித்த புரிதலை முன் நகர்த்தினாலே போதும், அதுவே தொகுப்பிற்குக் கிடைத்த வெற்றி என்று கொள்ளலாம்.

பரத்தை கூற்று, சி.சரவணகார்த்திகேயன், வெளியீடு : அகநாழிகை, விலை : ரூ.50

0

R.கோபி

சட்டமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை

தமிழக மக்களின் அரசியல் மனமுதிர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதை ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த முடிவுகளை எந்தக் கட்சியுமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அவைகள் செயல்பட்ட விதத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. அதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் நிரூபித்துள்ளன.

மண்ணைக் கவ்விய பாட்டாளி மக்கள் கட்சி

சட்டசபை தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சி அமைத்த பின்னர், முதன்முதலில் முந்திரிக்கொட்டையாக முந்திக்கொண்டு வாயாடியது பா.ம.க.தான். கழகங்களுடன் இனி கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் தனித்தே இயங்கப் போவதாகவும் மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து ஒவ்வொரு கழகத்துடனும் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தயவால் பதவியும், பணமும் சுகமாய் அனுபவித்து வந்தவர்களுக்கு, தங்கள் குல மக்களே தங்களை உதாசீனம் செய்யத் தொடங்கிவிட்டனர் என்கிற உண்மையை உணரமுடியவில்லை.

தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ அரசியல் பதவிகள் தேவையில்லை என்று வீர வசனம் பேசிவிட்டு, பின்னர் பச்சோந்தி அரசியல் செய்துகொண்டு பதவி சுகங்களை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு ராஜ்ய சபை இடத்திற்காக வெட்கமில்லாமல் அலைந்து திரிந்ததைக் கண்ட வன்னியர் குல மக்கள் மருத்துவரையும் அவரின் அடிப்பொடிகளையும் புறந்தள்ள முடிவு செய்தது உண்மை. அவ்வுண்மை தெரியாமல் வன்னியர் குல மக்கள் அனைவரும் தம்முடனேயே இருப்பதாக ஒரு மாயையில் உழன்று கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸ் தம்முடைய ஜாதி பலத்தைக் காண்பிக்கலாம் என்கிற அசட்டு தைரியத்தில் தனியாக உள்ளாட்சித் தேர்தலையும் அதற்குப் பின்வரும் மற்ற தேர்தல்களையும் சந்திப்பதாகச் சவால் விட்டார்.

சட்டமன்றத் தேர்தலில் தாம் தோற்றுப் போனதற்குத் திமுகதான் காரணம் என்று நினைத்தாரே தவிர, தம்குல மக்களின் மனப்போக்கை சரியாகப் படிக்கவில்லை அவர். அவருடைய சந்தர்ப்பவாத அரசியலை வன்னியர்கள் என்றோ புறக்கணித்து விட்டனர் என்பதே உண்மை. கூட்டணி சுகத்தில் அவ்வுண்மை ராமதாஸ் கண்களுக்குப் புலப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் விழுந்தது மரண அடி.

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு 5.23% வாக்குகள் பெற்ற பா.ம.க., தற்போது மொத்தம் 3.55% வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டே இரண்டு பேரூராட்சிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. மாநகராட்சிகளில் 2 கவுன்சிலர் இடங்களும், நகராட்சியில் 60 கவின்சிலர் இடங்களும், பேரூராட்சியில் 108 வார்டுகளும், 3 ஊராட்சிகளும், 227 ஊராட்சி ஒன்றியங்களுமாக மொத்தம் 402 இடங்கள் மட்டுமே வென்றுள்ளது. ஜாதி அரசியலும் சந்தர்ப்பவாத அரசியலும் செய்துகொண்டு தமிழகத்தையும் இரண்டாகத் துண்டாட வேண்டும் என்று பிரசாரம் செய்துகொண்டிருந்த பாமகவைப் புறந்தள்ளி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். நுணலும் தன் வாயால் கெடும் என்கிற பழமொழிக்கு உதாரணமாக, ‘தனியாக தேர்தலை சந்திப்போம்’ என்று முழங்கிய பா.ம.க. மண்ணைக் கவ்வியிருப்பது தமிழகத்திற்கு நல்லது. மக்கள் புகட்டிய பாடத்தைப் புரிந்துகொள்வது பா.ம.கவுக்கு நல்லது.

தலைகுப்புற விழுந்த காங்கிரஸ்

அடுத்ததாகத் தலைகுப்புற விழுந்திருப்பது காங்கிரஸ். 1967ல் ஆரம்பித்த இறங்குமுகம், தற்போது இனி எழுந்திருக்கவே முடியாது என்கிற அளவிற்கு ஆகிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்ததற்கு தி.மு.க.தான் காரணம் என்று, தான் ஏதோ ஊழலே செய்யத் தெரியாத கட்சி போலப் புனிதப்பசு வேடம் போட்டது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் என்பது வாழ்க்கை முறை என்பதை மக்கள் அறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்து வரும் லட்சணத்தைக் கண்டு வெறுத்துப் போயிருந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல் உள்ளாட்சித் தேர்தலிலும் சரியான தண்டனை கொடுத்துள்ளனர். வரலாறு காணாத ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்குப் பங்கில்லை என்பதாக வேடம்போட்ட காங்கிரசின் பொய் முகத்தைக் கிழித்துள்ளனர் தமிழக மக்கள்.

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு கழகத்தின் முதுகிலும் மாற்றி மாற்றி சவாரி செய்து வந்து, பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஊழல் மற்றும் சுயநல அரசியலில் காலம் தள்ளிக் கொண்டிருந்த, எவ்விதத்திலும் மக்களுக்குப் பிரயோசனம் இல்லாதவர்கள் என்று பெயரெடுத்த மாநிலத் தலைவர்கள், ஒரே குடும்பத்தின் காலடியில் தன்மானமும் சுயமரியாதையும் இன்றி, முதுகெலும்பில்லாத பூச்சிகளாக ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மக்கள் வெறுத்துப் போயிருந்தனர் என்பது உண்மை. உண்மை இவ்வாறிருக்க, எந்த தைரியத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தனரென்று அக்கட்சித் தலைவர்களுக்கே தெரியாது. சட்டமன்றத் தேர்தலிலேயே தமிழகத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை கட்சி மேலிடம். தமிழகத்தில் கட்சியின் நிலைமை, கட்சியின் மேலிடத்திற்குத் தெரிந்த அந்த உண்மை, மாநிலத் தலைகளுக்குத் தெரியாததுதான் நகைமுரண்.

மக்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், ஒரு தகுதியும் இல்லாத வெளிநாட்டுப் பெண்மணியை “அன்னை” என்று முன்னிலைப் படுத்தி மனமுதிர்ச்சியற்ற அவர் மகனின் முகத்தைக் காண்பித்துவிட்டால் மக்கள் வாக்களித்து விடுவர் என்றுத் தப்புக் கணக்குப் போட்டதன் பயன், இன்று தலைகுப்புற விழுந்து கிடக்கிறது ராஜாஜியும், காமராஜரும், சத்தியமூர்த்தியும் மற்றும் பல உன்னத தலைவர்களும் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சி.

ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக்கூட வெல்ல முடியவில்லை இந்த தேசியக் கட்சியால். மாநகராட்சி கவுன்சிலில் வெறும் 17 இடங்களே பெற்றுள்ளது இந்தத் தேசியக் கட்சி. 24 பேரூராட்சிகளை வென்றதுகூட எப்படி என்று கேட்டால் அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. அது அவர்களுக்கே தெரியாமல் நடந்த நிகழ்ச்சி. சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு 9.3% வாக்குகள் பெற்ற காங்கிரஸ், தற்போது மிகவும் குறைந்து 5.7% வாக்குகளுடன் 749 இடங்கள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தை இழந்து நான்காவது இட்த்திற்குத் தள்ளப் பட்டுள்ளது. சுயேச்சைகளைக் கணக்கில் கொண்டால் ஐந்தாவது இடம்தான்.

கழகங்கள் தமிழகத்தின் தீமைகள் என்றால், அந்தத் தீமைகளை வளர்த்த பெருமை காங்கிரஸையே சாரும். ஆகவே தீமையை அகற்றுவதை விட தீமையை வளர்த்தவர்களை அகற்றுவதே தலையாய கடமை. அக்கடமையை சிரமேற் கொண்டு தமிழ் மக்கள் செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மறைவது தமிழகத்திற்கு நல்லது. நேரு குடும்பத்தை வெளியே தள்ளுவது காங்கிரஸுக்கு நல்லது.

மதியிழந்த தேமுதிக.

1996ல் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சரியான வாய்ப்பிருந்தபோது அரசியல் பேருந்தைத் தவறவிட்டார் ரஜினிகாந்த். அதன் பிறகு சும்மா சினிமாவில் பஞ்ச் டையலாக் பேசியதோடு சரி. தனி அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும் துணிவில்லாமல், ஏதாவதொரு கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை ஆரம்பிக்கவும் தைரியம் இல்லாமல், ஒரு கோழையாகத் தன்னை அவர் நிலைப்படுத்திக் கொண்டது துரதிர்ஷ்டம்.

ஏழைகளின் ஊட்டி என்று ஏற்காட்டை சொல்வது வழக்கம். அதுபோல ஏழைகளின் ரஜினிகாந்த் என்று விஜய்காந்தை ஆரம்ப நாட்களில் சொல்வார்கள். ரஜினியின் தயக்கத்தைப் பார்த்தார் விஜயகாந்த். தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் பெரிது என்பதாலும் ரஜினி உருவாக்கியிருந்த வெற்றிடத்தை நிரப்பலாம் என்கிற எண்ணத்திலும் அதிரடியாக தே.மு.தி.க வை ஆரம்பித்தார். எப்போ வருவார், எப்படி வருவார் என்று தெரியாதபோதும் வருவார்… வருவார்… என்று நம்பி கடைசியில் ஏமாந்துபோய் வெறுத்துப்போன ரஜினி ரசிகர்கள் பெரும்பான்மையானோர் அப்படியே விஜயகாந்தின் கட்சிக்குத் தாவினர்.

விஜயகாந்த் செய்த புத்திசாலித்தனமான காரியம் இரண்டு கழகங்களுக்கும் ஒரு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தியதுதான். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியின்றி தனியாக தேர்தலை சந்தித்து, அதுவும் கட்சி ஆரம்பித்து ஒரே வருடத்தில், 8% வாக்குகள் பெற்றது ஒரு சாதனைதான். பின்னர் 2009 மக்களவைத் தேர்தலிலும் தனியாகவே நின்று தன் வாக்கு வங்கியை 10% ஆக அதிகரித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். அதன் பலன் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது. எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்துடன் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கின்ற காரணத்தால், இணக்கமான சூழ்நிலையில் முதல்வருடன் சேர்ந்து பணிசெய்து ஆளும் கட்சியிடம் மட்டுமில்லாமல் மக்களிடமும் நற்பெயர் வாங்கும் வாய்ப்பும் கிட்டியது.

கிடைத்த அந்தஸ்தையும்ம் வாய்ப்பையும் தக்க முறையில் பயன்படுத்தி ஒரு செயல்திறன் மிக்கத் தலைவராகத் திகழ வேண்டிய தருணத்தில், அ.தி.மு.க.வின் வெற்றிக்குத் தன்னுடைய கூட்டும் முக்கியமான காரணம் என்கிற மமதை தலைக்கேறியதா என்று தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான பேச்சு வார்த்தையில் சற்று விட்டுக் கொடுத்துப் போயிருந்தால் இன்று பல இடங்களுடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். வாக்கு வங்கியையும் அதிகரித்திருக்கலாம்.

இரண்டாவது இடத்தைத் தி.மு.கவிடம் தாரை வார்த்துக் கொடுத்த்தோடு மட்டுமல்லாமல் வாக்கு வங்கியையும் அதிகரிக்க முடியாமல் போனது. கிடைத்த இடங்களும் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகள் மட்டுமே. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்திருந்தால் சுயேச்சைகளையும் தனக்குப் பின்னே தள்ளியிருக்கலாம். இப்போது, இந்தக் கட்சியினால் 10% க்கு மேல் முன்னேற முடியாது என்கிற பிம்பம் மக்களிடையே உருவாகும் வாய்ப்பும் அதிகம். உள்ளாட்சித் தேர்தலில் செய்த தவறின் விளைவுகளை அடுத்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தே.மு.தி.க உணரப்போவது நிச்சயம்.

காணாமல் போன கம்யூனிஸ்டுகள்

பா.ம.க. மண்ணைக் கவ்வியதும், காங்கிரஸ் தலைகுப்புற விழுந்ததும் தமிழகத்திற்கு நல்லது என்றால் கம்யூனிஸ்டுகள் காணாமல் போனது அதைவிட நல்லது. உலக அளவில் பொய்த்துப்போன, இந்தியாவிற்கு சம்பந்தமில்லாத ஒரு அன்னிய சித்தாந்தத்தைக் கட்டிக்கொண்டு மாரடிக்கும் கும்பலினால் நாட்டிற்கு என்ன பயன்? இவர்கள் 35 வருடங்கள் கோலோச்சிய பிறகும் மேற்கு வங்கம் பல துறைகளிலும் பின்தங்கியிருப்பது எதனால்? என்ன பதில் தரமுடிந்தது இவர்களால்? இன்று மாவோயிஸத் தீவிரவாதம் பிரும்மாண்டமாக வளர்ந்து நாட்டின் 16 மாநிலங்களில் படர்ந்திருப்பது யாருடைய ஆதரவினால்?

காங்கிரஸ் போலவும், பா.ம.க. போலவும் இரு கழகங்களுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டதைத் தவிர்த்து உருப்படியாக இவர்கள் சாதித்தது ஒன்றுமில்லை. அதே சமயத்தில் தமிழகத்தில் திராவிட இனவெறியாளர்களுடன் சேர்ந்துகொண்டு தேசப்பற்றை அழித்ததிலும், பிரிவினை வாதத்தை பெருக்கியதிலும் இவர்களுக்குப் பங்கு உண்டு.

இடது என்றாலே இடர் ஏற்படுத்துவது, இன்னல் விளைவிப்பது, இடுக்கண் உண்டாக்குவது என்று பொருள் என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும். இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து சென்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 4.38% வாக்குகள் பெற்றன. ஆனால் இபோதோ 1.7% வாக்குகளே பெற்றுள்ளன. 2 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும், 5 ஊராட்சிகளும் கிடைத்தது ஆச்சரியம்தான். பின்வரும் தேர்தல்களில் முழுவதுமாக காணாமல் போவது நிச்சயம் என்றே தோன்றுகிறது.

மறுமலர்ச்சியின்றி மங்கிப்போகும் ம.தி.மு.க

மற்றவர்களுக்கு உழைப்பதே வைகோவின் ஜாதகம் போலும். தி.மு.கவிற்காக கலைஞரின் போர்வாளாக உழைத்தார். பின்னர் அதிமுகவிற்காக ஜெயலலிதாவின் சகோதரனாக பக்கபலமாக இருந்தார். இரண்டுபேருமே இவரைச் சமயம் பார்த்து கழற்றி விட்டனர். அவ்விரு இடங்களிலும் இருந்தபோதிலும் சரி, அதற்குப் பின்னரும் சரி, விடுதலைப் புலிகளுக்காகவும், கிறுத்துவ சர்ச்சுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆங்காங்கே உள்ள ஒரு சில தொகுதிகளிலும், பகுதிகளிலும் உள்ள ஆதரவினால் சில இடங்களைப் பெற்றுள்ளது ம.தி.மு.க. சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த இக்கட்சி, தற்போது 1.7% வாக்குகளோடு 1 நகராட்சியையும் 7 பேரூராட்சிகளையும் 2 ஊராட்சிகளையும் பெற்று மொத்தம் 197 இடங்களைப் பெற்றுள்ளது. இதை அக்கட்சியே எதிர்பார்த்திருக்காது என்பது நிச்சயம்.

இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அக்கறை கொண்டிருந்தாலும், ஈழப் பிரச்சனையை ஒரு தேர்தல் பிரச்சனையாக தமிழ்கத்து மக்கள் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம். இதை வைகோ போன்றவர்கள் புரிந்திருந்தாலும் அவர்கள் சார்ந்து இருக்கின்ற இடங்களுக்காக ஈழ அரசியலையும் விடுதலைப் புலி ஆதரவையும் விட்டுவிட முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான அரசியல் அழிந்துபோவது தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் நல்லது.

தங்கள் வேடதாரித் தலைவர்களை புறந்தள்ளிய தலித் மக்கள்

இதைப்போல ஒரு நல்ல விஷயம் தமிழகத்திற்கு நடந்திருக்க முடியாது. தங்களைத் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகக் காட்டிக்கொண்டு, தங்கள் சமுதாயத்தினருக்கு உருப்படியாக எதையும் செய்யாமல், தங்களின் சுயநலனை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு, திராவிடக் கட்சித் தலைவர்களுடனும் சிறுபான்மை நிறுவனங்களுடனும் கூடிக் குலாவிக்கொண்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை பெரும்பான்மையான ஹிந்து சமுதாயத்திலிருந்து பிரிக்கவேண்டி அத்தனை காரியங்களையும் செய்து கொண்டிருந்த தலைவர்களுக்கு அந்தச் சமுதாயத்தினரே சரியான பாடம் கற்பித்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவும் சரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சரி, தங்கள் சமுதாயத்தினருக்கு உருப்படியாக ஏதாவது செய்துள்ளனரா என்று பார்த்தால் எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை. ஒரு மூலையில் ஆதரவின்றி இருந்த இவர்கள் இருவருக்கும் அரசியல் அங்கீகாரம் கொடுத்து ‘தலைவர்கள்’ ஆக்கிய ‘பெருமை’ காலம் சென்ற மூப்பனார், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத்தான் சேரும். அன்றிலிருந்து இன்றுவரை இருவரும் ஏதோ தங்களுக்கு பெருத்த ஆதரவு இருப்பது போல ஒரு மாயையை உருவாக்கி திராவிட கட்சிகளிடம் பேரம் பேசியே வளர்ந்து விட்டனர். தாங்கள் வளர்ந்தனரே ஒழிய கட்சியை வளர்க்கவில்லை என்பது இந்தத் தேர்தலில் தெரிந்துவிட்டது.

இவர்கள் இருவரை நம்பி நாங்கள் இல்லை; இவர்களை எங்கள் தலைவர்களாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெளிவாகவே தலித் மக்கள் முடிவு கூறியுள்ளார்கள். புதிய தமிழகத்திற்கு 16 வார்டுகளும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 36 வார்டுகளும் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த இரு தலைவர்களும் அவர்கள் சமுதாயத்தினராலேயே முழுவதுமாக நிராகரிக்கப் பட்டுள்ளனர். இனி இவர்களின் மிரட்டல்கள் பெரிய கட்சித் தலைவர்களிடம் செல்லாது என்பது நிதர்சனம்.

திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப்போல், தமிழக மக்கள் அ.தி.மு.க.விற்குக் கற்றுக் கொடுத்த பாடத்தை தானும் கவனிக்காமல் விட்டது தி.மு.க செய்த பெருந்தவறு. 2006-ல் பெற்ற வெற்றி சுமாரான வெற்றிதான். 5 வருடங்களும் ஜெயலலிதா மீண்டும் மீண்டும் எள்ளி நகையாடி குத்திக் காண்பித்துக் கொண்டிருந்த்து போல ஒரு ‘சிறுபான்மை’ அரசைத்தான் கருணாநிதி நடத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் தி.மு.க. ஆடிய ஆட்டமோ ஏதோ வரலாறு காணாத வெற்றி பெற்றது போலத்தான் இருந்தது. குடும்ப அரசியல் கொடி கட்டிப் பறந்தது. ஊடகத்துறை, திரைத்துறை, கனிமவளத்துறை, ரியல் எஸ்டேட் என்று அனைத்துத் துறைகளிலும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரின் அராஜகப் போக்கு பயங்கரமாக இருந்தது. இது போதாதென்று சங்கமம், செம்மொழி மாநாடு என்கிற பெயர்களில் நட்த்தப்பட்ட குடும்ப மற்றும் கட்சிக் கூத்துக்கள் மக்கள் சகிக்க முடியாத அளவிற்கு இருந்தது. அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் லட்சக் கணக்கான கோடி ரூபாய்களை ஏப்பம் விட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல்!

தமிழகம் முழுவதும் கடுங்கோபத்தில் குமுறிக்கொண்டிருந்தது உண்மை. அந்தக் குமுறல் சட்ட மன்றத் தேர்தலில் எரிமலையாக வெடித்ததுதான் வரலாறு காணாத தோல்வியில் முடிவடைந்தது. ஆட்சியில் இருந்த ஐந்து வருடங்களிலும் குடும்ப அளவிலும் சரி, கட்சி அளவிலும் சரி, கலைஞர் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. அந்தப் பிரச்சினைகளை சரி செய்த சமயம் போக மற்ற சமயங்களில் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதிலும், பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வதிலும் செலவழித்தார் கலைஞர்.

மக்கள் பிரச்சனைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. வெறும் இலவசங்களைக் கொடுத்தால் போதும்; அவ்வப்போது குறிப்பிட்ட சில சமுதாயத்தினருக்கு சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீடுகளுக்கு ஏற்பாடு செய்து, பின்னர் தேர்தல் சமயத்தில் இனாம் கொடுத்தால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போட்டார் போலும். இனாம், இலவசம், இட ஒதுக்கீடு ஆகியவை முக்கியமில்லை; இன்னலற்ற ஆட்சிதான் முக்கியம் என்று மக்கள் தீர்ப்பளித்தனர்.

அப்போது இருந்த மக்கள் மனநிலை சிறிதளவுகூட மாறவில்லை என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவு படுத்துகின்றன. ஒரு மன ஆறுதலுக்காக இரண்டாவது இடம் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர மற்றபடி பெரிதாக ஒன்றுமில்லை. மற்றொரு ஆறுதல் திமுகவின் பாரம்பரிய வங்கியான 25% – 26% வாக்குகள் அப்படியே கட்சியிடம் உள்ளது. மேலும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 22.39% வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தனை வருடங்கள் கட்டிக்காத்த சென்னை மாநகராட்சியை முதல் முறை அதிமுகவிடம் இழந்ததும் ஒரு பெரிய அடிதான்.

தேர்தல் தோல்வியும் கட்சி நிலைமையும் ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்தால், குடும்பச் சூழ்நிலை மறுபக்கம் அழுத்துகிறது. மகள் சிறையில்; ஜாமீன் கிடைக்குமா தெரியவில்லை; மருமகன் வழிப் பேரனுக்கு எப்போது வேண்டுமானாலும் சிறைவாசம் ஏற்படபலாம்; மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் சுமுகமான போக்கு இருக்குமா தெரியாது; காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் தொடருவதா வேண்டாமா; மாநில அரசின் நடவடிக்கைகளை எப்படி சமாளிப்பது; கதி கலங்கிப் போயிருக்கும் கட்சித் தொண்டர்களை கட்டி நிறுத்துவது எப்படி என்று பல கேள்விகளை தன்னுடைய வயதான காலத்தில் தாங்கிகொண்டு சமாளிக்க முயன்று வருகிறார் கலைஞர்.

தி.மு.க எதிர்காலம் எங்கிருக்கிறது என்று தெரியாமல், வெளிச்சம் கண்ணுக்குத் தெரியாத சூழலில், அடர்ந்த வனாந்திரத்தில் தவிப்பதை போன்று உள்ளது. குடும்பங்கள், கட்சியின் இரண்டாம் தளத் தலைவர்கள், தொண்டர்கள், அன்று அனைவரையும் இணைக்கும் ஒரே சக்தியாகக் கலைஞர் விளங்குகிறார். அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்னவாகும் என்பது அவருக்கும், குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் மட்டுமல்ல; தமிழகத்திற்கே புரியாத, விடை தெரியாத, புதிராகத்தான் இருக்கிறது.

ஆதரவைக் கட்டிக்காக்க வேண்டிய நிலையில் அ.தி.மு.க.

அ.தி.மு.க தலைவர் ஜெயல்லிதா 2006 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நொறுங்கிப் போனது உண்மை. சிறுபான்மை அரசை நிர்வகித்தாலும் கூட்டணி பலத்தினால் பிரச்சனை எதுவுமின்றி நிம்மதியாகக் கருணாநிதி காலம் தள்ளுவதைப் பார்க்கப் பொறுக்காமல் அடிக்கடி கொடநாட்டுக்கும் சிறுதாவூருக்கும்  ஓய்வெடுக்கச் சென்றுகொண்டிருந்தார். வரிசையாக அனைத்து இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்று வந்ததும் அவருடைய தளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. 2006 உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, 2009 பாராளுமன்றத் தேர்தலிலும் சரி, அவருக்குப் பெரிதாக ஊக்கமளிக்கும் வகையில் எதுவும் நடந்துவிடவில்லை. பொதுத் தேர்தலில் 9 எம்.பி. இடங்கள் கிடைத்த்து மட்டுமே ஓர் ஆறுதல். ஆயினும் மத்தியில் ஆளும் கட்சி கூட்டணியிலும் தி.மு.க. இடம் பெற்றதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

கட்சித் தொண்டர்களையும் மற்ற தலைவர்களையும் ஊக்கப்படுத்தித் தானும் சுறுசுறுப்பாக நடவடிக்கையில் இறங்குமாறு, ஸ்பெக்ட்ரம் ஊழல் அவருக்கு ஒரு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். மற்ற எதிர் கட்சிகளுடன் இணைந்து, இருக்கின்ற 9 எம்பிக்கள் மூலம் மக்களவையில் மத்திய அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகளினால் திமுக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரிசையாக சி.பி.ஐ. ரெய்டுகள், பின்னர் ராஜாவின் பதவி பறிபோனது, கலைஞர் டிவியில் ரெய்டு, ராஜாவுக்குச் சிறை, கனிமொழியையும் தயாளு அம்மாவையும் சி.பி.ஐ விசாரணை செய்த்து என்று தொடர்ந்து பல சவால்களை திமுக சந்திக்கத் தொடங்கிய போது மக்களைச் சந்திக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.

மதுரையில் ஆரம்பித்து தொடர்ந்து கோவை திருச்சி என்று அவர் கட்சி நடத்திய பொதுக்கூட்டங்களுக்கு லட்சக் கணக்கில் மக்கள் கூடினர். சுப்பிரமணியன் சுவாமியின் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தைத் தன்னுடைய ஜெயா டிவியின் மூலம் பெரிதும் உபயோகப்படுத்திக் கொண்டார். சுவாமியின் பிரசாரப் பலன் அனைத்தும் அதிமுகவுக்குப் போனது என்றால் அது மிகையாகாது.

இடையே, ஒரு சிக்கலான சமயத்தில், திமுகவை கூட்டணியிலிருந்து விலக்கும் பட்சத்தில் தானும் தன்னுடைய தோழமைக் கட்சிகளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்கும் என்று ஒரு நட்பான கோரிக்கையையும் காங்கிரஸுக்கு வைத்து திமுகவைக் கதிகலங்கச்செய்தார்.

மேலும் 2006ல் கூட்டணி பலத்தினால்தான் திமுக சாதிக்க முடிந்தது என்று நம்பிய காரணத்தால், தானே முன்னின்று பல கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை பலமாக்கினார். மதிமுக வெளியேறியபோதும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற கட்சிகளைக் கட்டிக் காப்பாற்றினார். சிறுபான்மை மத நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவையும் பெற்றார். இத்தனையும் இருந்தும் தமது கூட்டணிக்கு இப்படி ஒரு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவரே தேர்தல் முடிந்தவுடன் ஒத்துக்கொண்டார்.

அதன் பிறகு ஐந்தே மாதங்களில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளின்படி இலவசத்திட்டங்களை செயல்படுத்தத் துவங்கிய சுறுசுறுப்புடன் கூட்டணிக் கட்சிகளைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிகளுக்கு தன்னுடைய கட்சியினரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டார். கூட்டணிக் கட்சிகள் வெளியேறியபோதும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் முடிவுகளும் அவர் எதிர்பார்த்தது போலவே வந்தது. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து இருந்தபோது கிடைத்த 39% வாக்குகள், உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான கட்சிகள் விலகிய பின்பும் அதே 39% கிடைத்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இப்படி கிடைத்துள்ள ஏகோபித்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு சவாலான விஷயம்தான். இந்த மாபெரும் வெற்றி தலைக்கனமாக மாறி அகம்பாவத்தில் கொண்டுவிட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த இருமுறையும் (96-லும் சரி, 2006-லும் சரி) தான் சந்தித்த பிரச்சினைகளை நினைத்துப் பார்த்து அப்போது செய்த தவறுகளைச் செய்யாமல் இருந்தாலே ஜெயலலிதா தன்னுடைய வாக்கு வங்கியை ஓரளவிற்கு பாதுகாக்க முடியும். இது ஜெயலலிதா என்கிற ஒரே ஒரு ஆளுமையின் கையில்தான் இருக்கிறது. தமிழக மக்களால் இரண்டுமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மூன்றாவது முறையாகக் கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதில்தான் அவருடைய எதிர்காலமும் கட்சியின் எதிர்காலமும் இருக்கிறது.

பாதையறியாத நிலையில் பா.ஜ.க.

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது (199-2004) 4 எம்.பி.க்களும், 2001 சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏக்களுமாக இருந்த பா.ஜ.க தற்போது எம்.பி. தொகுதியுமில்லாமல், எம்.எல்.ஏ. தொகுதியுமில்லாமல் வீழ்ச்சி கண்டிருக்கிறது. கூட்டணி மூலம் கிடைத்த இடங்கள் என்றாலும் அவற்றைப் பாடுபட்டுத் தக்க வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அந்த அளவிற்குக் களப்பணிகளில் ஈடுபடாதது பெருந்தவறு. 2004 லோகசபா தேர்தலிலிருந்து தமிழகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வந்து தற்போது வெறும் 1.35 % மட்டுமே உள்ளது.

சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்குப் போட்டியிடாதது மன்னிக்க முடியாத குற்றம். இதைவிட ஒரு தற்கொலை முயற்சி வேறு இல்லை. கோஷ்டிப் பூசல்கள், கழகங்களின் முதுகில் சவாரி என்று காங்கிரஸின் பாதையில் பயணம் செய்வதை முதலில் நிறுத்தவேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்று அணியாக வளர்ந்து வரவேண்டுமென்றால் கழகங்களின் பாதையிலும் பயணிக்கக்கூடாது; காங்கிரசின் பாதையிலும் பயணிக்கக் கூடாது. தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒரு பாதையை ஏற்படுத்த பா.ஜ.க. இனியாவது முயற்சி செய்யும் என்று நம்பலாமா என்பதை அக்கட்சியினர்தான் மக்களிடம் சொல்ல வேண்டும்.

நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. ஜாதிக் கட்சிகள் மற்றும் உதிரிக் கட்சிகளின் ‘பலம்’ வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திமுகவும் சரி, அதிமுகவும் சரி, கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறியபோது அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டது புத்திசாலித்தனம். தனித்து தேர்தலை சந்தித்து தன்னுடைய பாரம்பரிய வாக்கு வங்கி பாதிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், வெளியேறியக் கட்சிகளின் உண்மையான பலம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்துள்ளது.

இந்தத் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டியுள்ளது நிலையான வாக்கு வங்கி உள்ள கட்சிகளான திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமல்லாது, திருந்த வேண்டிய மற்றும் வளரவேண்டிய கட்சிகளுக்கும் கூடத்தான். தமிழக மக்களின் அரசியல் அறிவும் மனமுதிர்ச்சியும் நன்றாக முன்னேற்றம் கண்டுவருகிறது. அதுவே நமக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை கூட்டுகிறது.

– B.R. ஹரன்

வாரண்ட் இல்லாமல் கைது (ஹாய் அட்வகேட்!)

ஹாய் அட்வகேட்!

வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்யமுடியுமா? வாரண்ட், ரிமாண்ட் இரண்டையும் கொஞ்சம் விளக்கமுடியுமா?

சுப்பிரமணியன், மாயவரம்

ஆம், வாரண்ட் இல்லாமல் ஒருவரைக் கைது செய்ய முடியும்.

ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன.  ஒன்று காவலில் வை, சிறைப்படுத்து. மற்றொன்று ஒரு வழக்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி மறு விசாரணைக்கு உத்தரவிடு என்பது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு தான் வாரண்ட்.

குற்றமிழைத்தவர்களை விசாரித்து தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல் துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களை கலைத்து விடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.

அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.அவர் தப்பித்து ஓடி விடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்தர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்து விடமுடியாது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right under Article 19(1)(d) of the Constitution of India). ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக்கூடாது.

காவல் துறையினரேகூட எல்லா விதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable offence அதாவது புலன் கொள் குற்றம்/பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல் துறையால் சம்மந்தப்பட்ட குற்றாவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்யமுடியாது. இதுவே Non-cognizable offence, அதாவது புலன் கொள்ளா குற்றம்/பிடி ஆணை தேவைப்படும் குற்றம் நடைபெற்றால் காவல்துறை அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Jurisdictional Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்யமுடியும்.

எதுவெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது, அவற்றில் எது புலன் கொள் குற்றம், எது புலன் கொள்ளா குற்றம் என்பதும், எது ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் அல்லது எது ஜாமீனில் விட முடியாத குற்றம் என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறை தண்டனை வழங்கப்படக்கூடிய (மரண தண்டனை உட்பட) குற்றங்கள் எல்லாம் cognizable offence என்று வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் non-cognizable offence என்று அழைக்கப்படுகிறது.

மேற்சொன்ன விதிமுறையில் விதிவிலக்குகளும் உண்டு. உதாரணத்துக்கு, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்துக்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவாகத்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள், அடல்ட்ரி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கும் மேலான சிறை தண்டனை வழங்கப்படும். ஆனால் இது போன்ற குற்றங்களை Non- cognizable  குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.

இன்னொன்று தெரியுமா? காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் என்பதில்லை.பொதுமக்களில் யாரேனும் ஒருவரோஅல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆக,  கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திரமாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதே ஆகும்.

குற்றவாளியைக் கைது செய்கிறேன் பேர்வழி என்று குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இது பொது மக்களுக்கு மட்டுமல்ல, காவல் துறைக்கும் பொருந்தும். ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைதான் பிரயோகிக்கவேண்டும்.  யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்லாமல் பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். ஜாக்கிரதை!

காவல் துறையினர் வாரண்ட்டை நிறைவேற்றும் போது (குற்றவாளியைக் கைது செய்யும் பொழுது) குற்றம் சாட்டப்பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல் துறையினருக்கு ஒத்தழைப்பு வழங்கவேண்டும். வாரண்டை நிறைவேற்ற விடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகும்.

0

S.P. சொக்கலிங்கம்

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 2)

முதல் பகுதி

பொதுவாக ஆர்.எஸ்.எஸ். குறித்து உருவாக்கப்பட்டுள்ள எதிரிடையான பிம்பத்துக்கும், அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நெருங்கும்போது ஏற்படும் அனுபவங்களுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். அல்ல; அதன் எதிர்ப்பாளர்கள்தான். எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், தூஷிப்பவர்கள் பற்றிய கவலையின்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆற்றும் அரும்பணிகளால்தான் அதன் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பணிகள் பலவற்றை மழுப்பலின்றி இந்நூலில் காட்டி இருக்கிறார் பா.ராகவன். அதற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எனினும் இதிலுள்ள சிறு தகவல் பிழைகளை சுட்டிக் காட்டுவது அடுத்த பதிப்பில் சரிசெய்ய உதவக்கூடும்.

அரிய செயலில் எளிய தொண்டர்கள்

இந்தப் புத்தகத்தில், கோவா விடுதலைப் போராட்டம், போர்களின்போது அரசுக்கு உதவி, நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை மீட்க நடந்த யுத்தம், ஆர்.எஸ்.எஸ்.சின் ஷாகா நடைமுறை, வனவாசி மக்களிடையே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சேவைகள், விவேகானந்த கேந்திரா உருவாக்கம் – போன்ற அம்சங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக தேசம் எங்கள் உயிர்மூச்சு என்ற 7வது அத்தியாயம் அற்புதம்.

இதனை ஏற்கெனவே பல ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் படித்திருந்தாலும்கூட, இந்த நூலின் நடையழகு அருமை. வேகமான பதிவுகள், எளிய வார்த்தைப் பிரயோகங்கள், விறுவிறுப்பான நடை, ஆங்காங்கே பொருத்தமான ஒப்பீடுகள். (உதாரணம்- பி.ஆர்.தீரஜ்-பக்:64.) ஆகியவை, புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க விடுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ். ஷாகா குறித்த அறிமுகம் (பக்: 62, 63), இயக்கத் தொடர்பில்லாதவர்களும் புரிந்துகொள்ளும்படி இருப்பது சிறப்பு. ஆயினும் நெருக்கடி நிலையை எதிர்த்து தலைமறைவுப் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். குறித்த விரிவான தகவல்கள் இல்லாதது பெரும் குறை. ஏனெனில் அந்தப் போராட்டம் காரணமாகவே ஜெ.பி. ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருங்கிவந்தார். நாடு முழுவதும் அறப்போராட்டங்களை ஒருங்கிணைத்த ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் பின்னாளில் ஜனதா கட்சி உருவாக வியூகம் வகுக்க முடிந்தது. அதனை ஜெ.பி., தலைமையில் நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்.தான்.

அந்நாளில் போராளிகளாக இருந்த இரா.செழியன், தமிழருவி மணியன் போன்ற பலர் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்‘ என்ற நூலை அன்றைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளரும் தற்போதைய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளருமான ராம.கோபாலன் (*1) எழுதி இருக்கிறார். அதில் தமிழகத்தில் கைதான சத்யாகிரகிகள் பட்டியலும் இருக்கிறது. ‘ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்’ நூலில் இதற்கென தனியொரு அத்தியாயமே இருக்கிறது. (*2)

1975ல் எதிர்பாராத கணத்தில் நாட்டின் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டமின்றி அரசியல் கட்சிகளைத் தொடர்புகொண்டு ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்டவர்கள் ஸ்வயம்சேவகர்கள். இதற்கென உருவான மக்கள் போராட்டக் குழுவின் (லோக் சங்கர்ஷ சமிதி) நிர்வாகியாக இருந்தவர் நானாஜி தேஷ்முக். (*3) இவர் ஓர் அற்புதமான ஆர்.எஸ்.எஸ். தலைவர். இவரைப் பற்றி இந்நூலிலேயே (பக்: 45) சரஸ்வதி சிசு மந்திர் அமைத்தவர் என்று தகவல் வருகிறது. அது மட்டுமல்ல, இவரே சித்திரகூடத்தில் தீனதயாள் ஆராய்சிக் கழகத்தை நிறுவியவர். கோண்டா என்ற மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக (*4) வளர்த்தெடுத்தவர்.

”அறுபது வயதுக்கு மேல் அரசு வேலையில் இருப்பவர் ஓய்வு பெற வேண்டும் என்றால், அரசியலிலும் அதுதானே சரியாக இருக்கும்?” என்று கூறி, அரசியலில் முத்திரை பதித்துவந்த காலத்திலேயே (1978) ஓய்வை அறிவித்தவர் இவர். நானாஜியின் தலைமைப் பண்பே ஜனதா உருவாகவும் இந்திரா ஆட்சி வாழவும் காரணமாயின. பாஜக தலைவர் அத்வானியின் எனது தேசம்; எனது வாழ்க்கை‘ நூலிலும் இதற்கான தகவல்கள் (*5) உள்ளன.

விவேகானந்த கேந்திரா உருவாக்கத்தில் ஏகநாத் ரானடேவின் பங்களிப்பு குறித்து இந்தப் புத்தகத்தில் வெளியான செய்திகள் பலர் அறியாதவை. அந்த அமைப்பு செய்யும் சேவைகளையும் (*6) குறிப்பிட்டிருக்கலாம். அதேசமயம் அங்கும் ஒரு கரசேவை நடந்தது பா.ராகவன் அறியாதது. குமரி முனையில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்த பாறையை ஆக்கிரமிக்க அங்கு கிறிஸ்தவ அமைப்பினர் நாட்டிய சிலுவையை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய பாலன் உள்ளிட்ட ஐந்து ஸ்வயம்சேவகர்களால்தான் அந்த இடம் மீட்கப்பட்டது என்பது முக்கியமான தகவல். உண்மையில், 1992 அயோத்தி கரசேவைக்கு முன்னதாகவே குமரியில் (1964) கரசேவை நடந்துவிட்டது.

சங்க குடும்பம் என்பது என்ன?

‘சங் பரிவார்’ என்பது ஏதோ புதுமையான வார்த்தை என்பது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் உருவாக்கிவரும் நிலையில், சங்க பரிவாரம் என்பதை அழகாக விளக்கி உள்ளார் பா.ராகவன். அதாவது சங்க குடும்பம். ஆர்.எஸ்.எஸ்.சால் உந்துசக்தி பெற்ற ஸ்வயம்சேவகர்கள் ஆங்காங்கே துவங்கிய புதிய இயக்கங்களின் கதை சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ‘வாசுதேவ குடும்பகம்’ என்ற சொல்லாட்சி தவறுதலாக (பக்: 42) வந்துள்ளது. அது ‘வசுதைவ குடும்பகம்’ என்பது ஹிதோபதேச வாக்கு. (*7) உலகமே ஒரு குடும்பம் என்பதே அதன் பொருள். அதாவது தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்கிறோமே, அதுதான் அதன் பொருள். இதை சங்கக் குடும்பத்துக்கு தொடர்புபடுத்தி இருப்பது பொருத்தமே.

சங்கக் குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல இருபத்துக்கு மேற்பட்டவை அல்ல; நூற்றுக்கு மேற்பட்டவை. இவற்றில் தேசிய அளவில் செயல்படும் இயக்கங்களின் எண்ணிக்கையே நாற்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் சில இதோ..

1.ராஷ்ட்ர சேவிகா சமிதி- பெண்களுக்கான அமைப்பு

2.ராஷ்ட்ரீய சிக் சங்கடன்- சீக்கியர்களுக்கான அமைப்பு

3.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் – இஸ்லாமியர்களுக்கான அமைப்பு

4.ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் – வெளிநாடு வாழ் இந்தியர்க்கான அமைப்பு

5.விஸ்வ விபாக் – உலக அளவிலான ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பது

6.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – மாணவர் அமைப்பு.

7.பாரதீய மஸ்தூர் சங்கம்- தொழிலாளர் அமைப்பு.

8.பாரதீய கிசான் சங்கம் – விவசாயிகளுக்கான அமைப்பு.

9.பாரதீய ஜனதா – அரசியலுக்கான அமைப்பு

10.வனவாசி கல்யாண் ஆசிரமம்- மலைவாழ் மக்களுக்கான சேவை அமைப்பு

11.பாரதீய இதிகாச சங்கலன யோஜனா- வரலாறு தொகுக்கும் அமைப்பு

12.ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்- சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

13.வித்யாபாரதி- பள்ளிகளின் கூட்டமைப்பு

14.சம்ஸ்கார் பாரதி- கலை, பண்பாட்டுக்கான அமைப்பு

15.சம்ஸ்கிருத பாரதி- சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக பாடுபடும் அமைப்பு.

16.ஆரோக்கியபாரதி – மருத்துவர்களுக்கான அமைப்பு

17.சஹகார் பாரதி – கூட்டுறவு அமைப்பு

18.சிக்ஷா பாரதி – வேலைவாய்ப்புக்கான அமைப்பு

19.பிரக்ஞா பாரதி – சிந்தனையாளர்களுக்கான அமைப்பு

20.சேவாபாரதி- சேவைகளுக்கேன்றே பிரத்யேகமான அமைப்பு

21.சேவா இன்டர்நேஷனல் – உலக அளவிலான சேவை அமைப்பு

22.விஸ்வ ஹிந்து பரிஷத் – உலக அளவிலான சமயம் சார்பான அமைப்பு

23.பஜ்ரங் தளம்- இளைஞருக்கான அமைப்பு- அனுமன் சேனை

24.துர்கா வாகினி- பெண்களுக்கான அமைப்பு

25.அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு

26.அகில பாரதீய ஆதிவக்த பரிஷத் – வழக்கறிஞர்களுக்கான அமைப்பு

27.கிராம விகாஸ் பரிஷத் – கிராம முன்னேற்றத்துக்கான அமைப்பு.

28.பாரத் விகாஸ் பரிஷத் – சமுதாயப் பெரியவர்களுக்கான (Elites) அமைப்பு

29.பூர்வ சைனிக் சேவா பரிஷத் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைப்பு

30.விவேகானந்த கேந்திரா- சமூக சேவைக்கான அமைப்பு

31.பாரதீய விசார் கேந்திரா – தேசிய சிந்தனைகளை பரப்பும் அமைப்பு.

32.விஸ்வ சம்வாத் கேந்திரா- ஊடகத் துறைக்கான அமைப்பு

33.ஏகல் வித்யா கேந்திரா – ஓராசிரியர் பள்ளிகள் நடத்தும் அமைப்பு

34.அகில பாரதீய சிக்ஷண மண்டல் – ஆசிரியர்களுக்கான அமைப்பு

35.அகில பாரத திருஸ்டிஹீன கல்யாண் சங்கம்- பார்வையற்றவர்களுக்கான அமைப்பு

36.தீன தயாள் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி கழகம்)- ஊரக மேம்பாட்டுக்கான அமைப்பு

37.சரஸ்வதி சிசு மந்திர் – கல்வி வளர்ச்சிக்கான அமைப்பு

38.தர்ம ரக்ஷண சமிதி – சமயம் சார்ந்த அமைப்பு

39.ஐ.டி.மிலன் – தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோருக்கான அமைப்பு

40.ஹிந்து ஐக்கிய வேதிகா – கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு

41.பால கோகுலம் – குழந்தைகளுக்கான அமைப்பு

42.இந்து முன்னணி- தமிழகத்திலுள்ள சமய எழுச்சி அமைப்பு

43.விஜில்- பொது விழிப்புணர்வுக்கான பொதுமேடை

44.தேசிய சிந்தனைக் கழகம்- தமிழில் தேசிய சிந்தனை வளர்க்கும் அமைப்பு

– இவை தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற்போல, தேவைக்கேற்ற இயக்கங்களும் அமைப்புகளும் சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன. மீனவர் கூட்டுறவு அமைப்புகள், மருத்துவ சேவை அமைப்புகள், ரத்த தான அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான சேவை அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் பல உள்ளன. மேலும், மாநிலந்தோறும், ராஷ்டிர தர்ம பிரகாஷன் போன்ற புத்தக, பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இயங்குவது ஒத்தகருத்துணர்வால்தான்.

மேற்குறிப்பிட்ட பட்டியலை இங்குக் குறிப்பிடக் காரணம், ஆர்.எஸ்.எஸ்.சின் மாபெரும் வடிவத்தை சூட்சுமமாக உணர்த்தவே. முதல் இரண்டு முறை (1948,1975) ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது போல மூன்றாவது தடை (1992) விதிக்கப்பட்ட தடை சங்கத்தைப் பாதிக்காமல் போனதற்கு இந்த சங்க குடும்பமே காரணம்.

இந்த மூன்றாவது தடை குறித்து இந்த புத்தகத்தில் ஒரு வரியாவது எழுதி இருந்திருக்கலாம். சுதந்திரம் பெறுவதற்குமுன் லாகூர் மாகாணத்தில் விதிக்கப்பட்ட தடை குறித்து விவரமாகப் பதிவு செய்த (பக்: 15) பா.ராகவன், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த அயோத்தி சம்பவத்தை அடுத்த தடையை விட்டிருக்கக் கூடாது.

பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

மேற்படி இயக்கங்கள் எதற்கும் ஆர்.எஸ்.எஸ். எந்தக் கட்டளையும் இடுவதில்லை. அந்தந்தத் துறையில் தங்களுக்கென தனித்த லட்சியங்களுடன் தனிப்பாதையில் இவை இயங்குகின்றன. ஆனால். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் நடத்தப்படுவதால், மேற்படி இயக்கங்கள் குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்ட அங்கத்தினர்களாக இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் அந்தத் துறைகளில் முன்னணி வகிப்பவை என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சியையும் காண வேண்டும்.

பாரதிய ஜனசங்கம் துவங்கியது பற்றிய குறிப்பு இந்நூலில் வருகிறது. ஆனால். மிக முக்கியமான ஒரு விஷயம் அதில் விடுபட்டுள்ளது. ஷ்யாம பிரசாத் முகர்ஜி தலைமையில் புதிய அரசியல் கட்சியை காங்கிரசுக்கு மாற்றாக துவங்குவது என்ற திட்டம் தீட்டப்பட்டவுடன், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வல்கர், சங்கத்தில் இருந்த பயிற்சி பெற்ற தொண்டர்கள் பலரை முழுநேர ஊழியர்களாக அனுப்பி வைத்தார். அவர்களே, தீன தயாள் உபாத்யாய, நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், ஜகன்நாதராவ் ஜோஷி, லால் கிருஷ்ண அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி போன்றவர்கள். இவர்களது கடும் உழைப்பால் தான் ஜனசங்கம் மாற்றுக் கட்சியாக உருவெடுத்தது.

செல்லப்பிள்ளைகள் ஒருபோதும் எதிர்த்துப் பேசுவதில்லை என்ற (பக்:132) ஆசிரியரின் கருத்தை இந்தக் கோணத்தில் அணுகினால் சில விஷயங்கள் தெளிவாகும். அரசியலில் ஒரு மாற்று உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஆர்.எஸ்.எஸ்.சால் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். என்றும் தலையிடுவதில்லை. நாகபுரிக்குத்தான் பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் சென்றார்களே தவிர, நார்த் பிளாக்கிற்கோ, நாடாளுமன்றத்துக்கோ, பிரதமரின் அலுவலகத்துக்கோ என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சென்றதில்லை. அது அவர்களது வேலையுமில்லை. கிட்டத்தட்ட சத்ரபதி சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் சமர்த்த ராமதாசரின் செல்வாக்குடன் இதை ஒப்பிடலாம்.

ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் நடத்தும் ‘சமன்வய பைடக்’ எனப்படும் துணை அமைப்புகளின் கூட்டத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்க வாய்ப்பு உண்டு. அதில் பலத்த வாத பிரதிவாதங்கள் ஏற்படுவதுண்டு. குஜராத் குறித்து இந்த சமன்வய பைடக்கில் கடும் விவாதம் எழுந்தது, வெளியில் உள்ளோருக்குத் தெரியாது. நூலாசிரியர் ‘செல்லப்பிள்ளைகள்’ கருத்தை குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக ஸ்வயம்சேவகன் கவலைப்படமாட்டான். ஏனெனில் உண்மை என்றாவது வெல்லும் என்பது அவனுக்குத் தெரியும்.

சங்கம் ஸ்வயம்சேவகனிடம், குறிப்பாக பொதுநலப் பணியில் ஈடுபடும் தனது தொண்டனிடம் நேர்மையை வெகுவாக எதிர்பார்க்கிறது. சங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்துக்கு இதுவும் ஒரு காரணம். எனவேதான், ஊழல், லஞ்சப் புகார்கள் தொடர்பாக, பங்காரு லட்சுமணன், திலீப் சிங் ஜூதேவ், எடியூரப்பா ஆகியோரைப் பதவியிலிருந்து விளக்குமாறு பாஜகவுக்கு சங்கம் அறிவுறுத்தியது.

வேறெந்த அரசியல் கட்சிகளிலும் இத்தகைய வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. கட்சியினரை கட்டுப்படுத்தவும் வழியில்லை என்பது இந்திய அரசியலை கவனிக்கும் எவருக்கும் தெரியும்.

இன்னும் சில விடுபடல்கள்:

இந்தப் புத்தகம் அவசரமாக எழுதப்பட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது. அதன் காரணமாக இந்த விடுபடல்கள் நிகழ்ந்திருக்கலாம்.

உதாரணமாக, பாரதீய ஜனசங்கத்தின் முன்னோடி தீன தயாள் உபாத்யாய, சங்கத்தின் நான்காவது தலைவர் ராஜேந்திர சிங் (இவர் பிராமணர் அல்ல), முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், தமிழகத்தின் சிவராம்ஜி ஜோக்லேகர் (இவரது பெயரில் ரத்தவங்கி செயல்படுகிறது), தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரது குறிப்புகளை இதில் சேர்த்திருக்க வேண்டும்.

சென்னையிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் வெடிகுண்டுகளால் சிதைக்கப்பட்டது (1993), அதில் 11 பேர் பலியானது. (*8) தமிழகத்தில் ஹிந்து உரிமைகளுக்காக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது (*9), 1984 இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த சீக்கியர் படுகொலைகளைத் தடுப்பதில் சங்கத்தின் பிரதானப் பாத்திரம், சுதேசி விழிப்புணர்வு இயக்கப் பணிகள், அயோத்தி இயக்கத்தின் நிகழ்வுகள் (சிலான்யாஸ், ராம்ஜோதி யாத்திரை, நீதிமன்ற நிகழ்வுகள்) போன்றவற்றை இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் இவை அனைத்தும் நமது சமகாலத்துடன் தொடர்புடையவை.

மேற்படி நிகழ்வுகள் குறித்த நடுநிலையான பார்வையை பா.ராகவன் அடுத்த பதிப்பிலோ, புத்தகத்தின் அடுத்த பாகத்திலோ பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல, புத்தகத்தின் பெயர்ச்சொற்களில் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணங்கள்: அனுசிலான் சமிதி (அனுசீலன் சமிதி), ஜுகாந்தர் (யுகாந்தர்- விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் நடத்தியது), திகம்பர் பாட்ஜே (திகம்பர் பாட்கே), யஸ்வந்த்ரோ கேல்கர் (யஷ்வந்த் ராவ் கேல்கர்), கோல்வால்கர் (கோல்வல்கர்), டி,பி. தெங்காடி (டி,பி.தெங்கடி), பிரிவுத் (ப்ரௌட- முதியோர்), மோப்லாஸ்தான் (மாப்ளாஸ்தான்- மாப்பிள்ளைமார் முஸ்லிம்கள் தொடர்பான பதம்)- போன்ற வார்த்தைகளை சொல்லலாம். பெயர்ச்சொற்களை எழுதும்போது, ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவற்றையே பயன்படுத்துவது பொதுவான மரபு.

இப்போது யாரும் ஜவாஹர்லால் நேரு என்று எழுதுவதில்லை. ‘ஜவஹர்லால்’ என்றே குறிப்பிடுகிறோம். rao – ராவ் ஆகுமே தவிர ‘ரோ’ ஆகாது (நினைவுக்கு: நரசிம்ம ராவ்).

sangh – என்பது ஹிந்தியில் சங்கத்தைக் குறிப்பது. அதை தாரளமாக ‘சங்கம்’ என்று எழுதலாம். ஆனால், இந்தப் புத்தகத்தில் RSS ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்று பெயர் (பக்: 22) சிதைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் BMS , BKS ஆகியவை முறையே பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் என்று சரியாகவே (பக்: 52) எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் இந்தக் குழப்பம்?

கிழக்கு பதிப்பகம் போன்ற பெரிய நூல் வெளியீட்டாளர்கள் பெயர்ச்சொற்களை குறிப்பிடுவதில் ஒரு தர நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். இதற்காகவே COPY EDITOR போன்றவர்கள் உள்ளனர். ஏனெனில், கிழக்குப் பதிப்பக புத்தகங்கள் வெறுமனே நேரம் போக்க (TIME PASSING) பயன்படுபவையாக அல்லாமல், எதிர்காலத் தலைமுறைக்கான ஆவணங்களாகத் திகழவும் வாய்ப்புள்ளவை. எனவே தான் கிழக்குப் பதிப்பகத்தின் பொறுப்பு கூடுதலாகிறது.

மொத்தத்தில், பா.ராகவன் தனது எழுத்துப் பணியில் ஓர் அரிய பணியாகக் கருதக்கூடியதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுத்து மேலும் பல தகவல்களைத் திரட்டினால் இந்த நூல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். தற்போதைக்கு இந்நூலை ‘ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஓர் அறிமுக நூல்’ என்று சொல்லலாம்.

இக்கட்டுரையின் தலைப்பில் ‘அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே’ பா.ராகவன் திணறி இருப்பதாக குறைகூறி இருந்தேன். ஏனெனில் சாதகமான பல தகவல்களுடன் பாதகமான தகவல்களைக் கொடுப்பதுதான் நடுநிலை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.

எந்த ஒரு மனிதருக்கும் இரு முகங்கள் இருப்பது போல எந்த ஓர் அமைப்புக்கும் இரு முகங்கள் இருக்கவே செய்யும். அவற்றை பதிவு செய்யும்போது பிறரது கருத்துகளுக்காக எழுத்தாளர் கவலைப்படக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.சை பகடி செய்வதைவிட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுதான், அந்த அமைப்பு தன்னைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

பொதுவில் பரப்பப்படும் அதே குற்றச்சாட்டுகளை ‘நடுநிலை’ என்ற பெயரில் மேலும் பதிவு செய்வது தேவையில்லை என்பதே எனது கருத்து. மற்றபடி பா.ராகவன் தனது ஒவ்வொரு கருத்தையும் வெளியிட உரிமை உள்ளவரே. அவருக்கு குறைந்தபட்சம் சிவராம்ஜியின் நல்லோர் வட்டம் (*10) குறித்த அறிமுகம் இருந்திருக்குமானால், அவரது நடுநிலை ‘நடுநிலை’யாகவே இருந்திருக்கும்.

மற்ற பதிப்பகங்கள் பதிப்பித்த ஆர்.எஸ்.எஸ். குறித்த புத்தகம் உள்ளது. அதை யாரும் தேடிச் சென்று வாங்குவதில்லை. ஏனெனில் அதை வெளியிட்டவர்களின் உள்நோக்கங்கள் அனைவரும் அறிந்தவை. கிழக்கு பதிப்பகம் அப்படியல்ல. அனைவருக்கும் பொதுவான ஒரு பதிப்பகம், நடுநிலையானது என்று கருதக் கூடிய பதிப்பகம் கிழக்குப் பதிப்பகம்.

எனவே அதனிடம் மேலும் நடுநிலையுடன், கூடுதலான தகல்களுடன், உறுதியான ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ். குறித்த இதைவிட சிறப்பான புத்தகத்தை எதிர்பார்க்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

– சேக்கிழான்

அடிக்குறிப்புகள்:

1 . நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்- ராம.கோபாலன், ஜனசேவா பதிப்பகம், சென்னை, 1980

2 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள் – ஹொ.வெ.சேஷாத்ரி, கேசவர் பதிப்பகம், சென்னை, 1989 , பக்: 405

3 . நானாஜி தேஷ்முக்: http://en.wikipedia.org/wiki/Nanaji_Deshmukh

4 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 257 – 260

5 . எனது தேசம், எனது வாழ்க்கை- லால் கிருஷ்ண அத்வானி- அல்லையன்ஸ் பிரசுரம், சென்னை, 2010

6 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 260 – 262

7. http://en.wikipedia.org/wiki/Vasudhaiva_Kutumbakam

8 . http://en.wikipedia.org/wiki/1993_Chennai_bombing

9 . தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் – ஏ.பி.விபி. ஆய்வறிக்கை- 1999

10 . http://www.samanvaya.com/main/contentframes/work/fl-4th-2006.html

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 1)

ஹிந்துக்களின் மிகப் பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள். இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள். எது உண்மை? நடுநிலையுடன் ஆராய்கிறது இந்நூல்” என்று புத்தகத்தின் அட்டையிலேயே கொட்டை எழுத்தில் பிரகடனம் செய்துவிட்டுத்தான் நூல் துவங்குகிறது. அதாவது இந்தியாவின் மிக முக்கியமான சமூக இயக்கமான ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒருபக்கச் சார்பின்மையுடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பது இது சொல்லவரும் கருத்து.

ஆனால், நூலின் துவக்கத்திலேயே நூலாசிரியர் பா.ராகவனின் நடுநிலை தெரியத் துவங்கிவிடுகிறது. “ஆதியிலே அந்த ஊருக்கு லவபுரி என்று பெயர்… அதற்கு ஆதாரம் தேடத் தொடங்கினால் இன்னோர் அயோத்தி அபாயம் ஏற்படும்…” – இதுதான் லாகூர் குறித்த ஆசிரியரின் அறிமுகம். (பக். 9) அதாவது நடுநிலை என்ற பெயரில், வரப்போகும் அத்தியாயங்களில் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் இங்கேயே கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.

உண்மையில் நடுநிலை என்பது என்ன? எந்த ஒரு பொருளைப் பற்றி எழுதப் புகுகிறோமோ, அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் – சாதகமானவை, பாதகமானவை உள்பட- கிரகித்து, நெஞ்சுக்கு நீதியுடன், ஆய்வுத் தெளிவுடன் எழுதப்பட்டால்தான் அது நடுநிலைப் பார்வை. அதில், லாகூர் குறித்த அறிமுகம் போன்ற பகடிகள் இருக்காது. இந்த நூலில் அத்தகைய பல பகடிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வந்து செல்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்…

காந்தி கொலையும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

 அத்தியாயம்: 4, பக்: 40. காந்திகொலையானபோது ஆர்.எஸ்.எஸ். ஒன்று செய்திருக்கலாம். கோட்சேவைக் கண்டித்து ஓர் அறிக்கை. போதும். செய்யவில்லை என்று கூறுகிறார் ராகவன். இதற்கு என்ன அடிப்படை? எந்த அடிப்படையுமே இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும் காந்தி படுகொலையின்போது தலைவராக இருந்தவருமான குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் பத்திரிகைகளுக்கு அசோசியேட் பிரஸ் மூலமாக அனுப்பிய செய்தியறிக்கையில் கோட்சேவின் செயலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னதாக பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல், காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களில் காந்தியின் மறைவுக்கு கவலை தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. கோல்வல்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம் 12 பாகங்களாக *1 தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்தக் களஞ்சியத்தில், 10வது தொகுதியில் முதலிலுள்ள நூறு பக்கங்கள், மகாத்மா காந்தி கொலையை அடுத்து அரசுக்கும் கோல்வல்கருக்கும் நடந்த கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அம்சங்களே உள்ளன.

குறிப்பாக பக்கம்: 6 ,7 , 8 -ல் இக்கடிதங்கள் உள்ளன. பக்கம்: 9 , 10-ல் அசோசியேட் பிரஸ்சுக்கு அனுப்பிய அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோல்வல்கர் கூறுகிறார்: ”…அந்தச் செயலைச் செய்த தீயவன் நம் நாட்டவனாகவும் ஹிந்துவாகவும் இருப்பதால் அதன் தன்மை மேலும் கொடியதாக இருக்கிறது…. இதனால் உண்மையுள்ள நம் நாட்டவன் ஒவ்வொருவனும் வெட்கமுறுகிறான்…

1948 , பிப். 1 தேதியிட்ட இந்த அறிக்கை பல பத்திரிகைகளில் அரைகுறையாகவே வெளியிடப்பட்டது என்ற தகவலும் அதில் காணப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான அரசியல் சூழலில் பத்திரிகைகளின் போக்கு புரிந்துகொள்ளக் கூடியதே. பத்திரிகைகள் இதனை முழுமையாக வெளியிடாததற்கு ஆர்.எஸ்.எஸ். எப்படி பொறுப்பாக முடியும்?

இதே தொகுதியில், அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரசில் இணைக்குமாறு படேல் கூறியது, நேருவின் முரட்டுப் பிடிவாதம், நடுநிலையாளர்களின் சமரச முயற்சிகள், அரசின் நிபந்தனைகள், அதனை கோல்வல்கர் ஏற்க மறுத்தது (பக்கம்: 87 , 88 ) – அனைத்தும் இதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகராஷ்டிரா சட்டமன்றத்தில் நடந்த விவாதமும் அதில் அமைச்சர் மொரார்ஜி தேசாய் அளித்த பதிலும் (பக்கம்: 104 ) முக்கியமானவை. அதில் எந்த நிபந்தனையும் இன்றி ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கிக் கொள்ளப்பட்டதை மொரார்ஜி உறுதி செய்கிறார்.

அரசிடம் மண்டியிட்டதா ஆர்.எஸ்.எஸ்?

 ஆனால், பா.ராகவன் தனது புத்தகத்தில் (பக்: 39 ) ‘நேருவின் நிபந்தனைகளை கோல்வல்கர் ஒப்புக்கொண்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு. இதனை குருஜி சிந்தனைக் களஞ்சியத்தின் தொகுதி 10ல் , பக்கம்: 102ல் உள்ள கோல்வல்கரின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இந்த அறிவிப்பு ‘ஹிதவாத’ ஆங்கில நாளிதழில் 1949 , ஆகஸ்ட் 1ல் வெளியானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மீது புழுதி வாரித் தூற்றுபவர்கள் பல்லாண்டு காலமாக, அரசுக்கு அடிபணிந்து தடையை விளக்கிக் கொண்டதாகவே எழுதி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் பின்னணி உள்ளதால் அதுகுறித்த சங்கடம் ஏதும் எழவில்லை. ஆனால், நடுநிலை நோக்குடன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நூலில் அத்தகைய கருத்து எழ அனுமதித்திருக்கலாமா?

உதாரணமாக, அரசு நிபந்தனைகள் காரணமாகவே சில நிர்வாக அடுக்குமுறைகளை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றவேண்டி இருந்தது (பக்: 58) என்று குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு சர்கார்யவாஹ் பொறுப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். உண்மையில், இந்தப் பொறுப்பு மட்டுமல்ல, இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்.சில் நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான நிர்வாக அடுக்குமுறைகள் அனைத்தையும் 1940க்கு முன்னதாகவே அதன் நிறுவனர் ஹெட்கேவார் உருவாக்கிவிட்டார். சங்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்த கோல்வல்கர் 1938லேயே சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுசெயலாளர்) ஆகிவிட்டார். *2 பொதுவாக ஆர்.எஸ்.எஸ்.சின் பொதுச் செயலாளராக இருப்பவரே அதன் அடுத்த தலைவராவது மரபாக இருந்து வருகிறது. அதாவது தலைவர் பொறுப்புக்கு தயார்நிலையில் உள்ளவராகவே ஒருவர் அங்கு உருவாக்கப்படுகிறார். எனவே, முந்தைய தலைவரின் பரிந்துரைதான் அடுத்த தலைவரின் நியமனமாகிறது என்ற கருத்தை சற்றே ஆராய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த பிரசாரகர்கள், மாநிலங்களின் நிர்வாகிகள் கொண்ட குழுவே (அகில பாரத கார்யகாரி மண்டல் – இதுவும் 1940 -க்கு முன்னமே உருவாகிவிட்டது) சங்கத்தின் பொதுsசெயலாளரைத் தேர்வு செய்கிறது. அவரே சங்கத்தின் நிர்வாகிகளை அறிவிக்கிறார். இந்த உரசலற்ற ஏற்பாடு ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு. இந்த பொதுசெயலாளரே பிற்பாடு முந்தையth தலைவரால் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். அதை அகில பாரத கார்யகாரி மண்டல் ஏற்பது நடைமுறை. இதில் எங்கும் ஜனநாயக நெறிமுறையே ஊடுபாவி இருப்பதைக் காண முடியும். ஆனால், பா.ராகவன் போகிற போக்கில், எந்த ஒரு அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் முறையைப் பின்பற்றுவது இந்திய வழக்கம்… இந்த இலக்கணம் பொது. ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் இயக்கமாகத்தான் கருதப்படுகிறது. ஆனாலும், தலைமைத் தேர்வு என்பது முந்தைய தலைவரின் தேர்வுதான்” என்று (பக்: 58) கூறிச் செல்கிறார். இந்தக் கருத்தில் உள்ள நுண்ணிய தாக்குதல், அவரது நடுநிலையை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

ஒரு இயக்கம் குறித்த படைப்பின் ஆக்கத்தில் நடுநிலையை உறுதிப்படுத்த வேண்டுமானால், அந்த இயக்கம் குறித்த நடுநிலையாளரின் கருத்தையே மேற்கோளாகக் காட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். குறித்த மேற்கோள்களை இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குறித்து நூல் எழுதிய ஒருவரது – தேஷ் ராஜ் கோயல் – கருத்தையே ஒரு சோறு என்ற தலைப்பில் பிரசுரித்திருப்பது பொருத்தமில்லை. அப்படியானால், ஆர்.எஸ்.எஸ்.சை அற்புதமாக வழிநடத்திய கோல்வல்கரின் கருத்து ஏதாவது ஒன்றை மேற்கோளாக வெளியிட்டிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி அதில் பா.ராகவனின் கருத்து ஒன்றை மேற்கோளாகக் காட்டினால் எப்படி இருக்கும்? இந்த ஒருசோறு பதம் – புத்தகத்துக்குப் பதமாக இல்லை.

தொண்டனா? தலைமையா?

பக். 56 ல் கட்சிகள் தொண்டர்களால் வாழ்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதன் தலைமையால் வாழ்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இக்கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் சரியானது போலத் தெரியும். உண்மையில் கட்சிகள்தான் இந்தியாவில் தலைவர்களால் தலைவர்களுக்காக வாழ்கின்றன. காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம்… என பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சியும் தலைமையால்தான் (இந்தப் பாசாங்கை நூலாசிரியர் முந்தைய பக்கங்களிலேயே குறிப்பிட்டும் விடுகிறார்) வாழ்கின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படியல்ல.

ஆர்.எஸ்.எஸ்.சைப் பொருத்தவரை, அதன் அடிமட்டத் தொண்டனும் ஸ்வயம்சேவகனே; அகில பாரதத் தலைவரும் ஸ்வயம்சேவகனே. ஸ்வயம்சேவகத் தன்மையே இவர்களிடையிலான பிணைப்பு. யாரும் வலியுறுத்தாமல், எந்த ஒரு இயக்க உறுப்பினர் படிவமும்கூட நிரப்பாமல், தானாக முன்வந்து செயல்படுபவரே ஸ்வயம்சேவகர். சிறு கிராமத்தில் ஷாகா நடத்தும் ஸ்வயம்சேவகன், அதே கண்ணோட்டத்துடன் தேசிய அளவில் சங்கப் பணிகளை வழிநடத்தும் ஸ்வயம்சேவகனை மரியாதையுடன் தலைவராகக் கொள்கிறான். முழுவதும் உளப்பூர்வமான முறையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்ள இணையதளக் கட்டுரைகள் உதவாது. சர்க்கரை இனிப்பானது என்பதை உணர அதை சுவைத்துப் பார்ப்பது எப்படி முக்கியமோ அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்வது அதில் இணைந்தால்தான் சாத்தியம். அல்லாதவரை, குருடர்கள் யானையை கற்பனை செய்தது போன்ற நிலைமையே ஏற்படும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஸ்வயம்சேவகனே மேலானவன். “நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வார் இரண்டாவது தலைவர் கோல்வல்கர். இந்தத் தலைப்பில் ஒரு நூலே கிடைக்கிறது*3. ஒவ்வொருவரும் சங்கத்தில் இணைந்து அதற்கு தன்னால் இயன்ற அளவில் நேரம் ஒதுக்கிப் பணி புரிகிறார். அப்போது அவரது ஆர்வம், சிரத்தை, முயற்சி, திறமை, தன்னலமின்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் அவரே சங்கப் பொறுப்புகளை ஏற்கிறார். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இங்கு கிடையாது. இன்னொருவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் (கவனிக்கவும்: பதவியல்ல) யாரும் பொறாமை கொள்வதும் இங்கு கிடையாது.

ஒரு ஸ்வயம்சேவகன் தனது கடுமையான உழைப்பால் மாநிலத் தலைவரும் ஆகலாம்; அகில பாரதத் தலைவரும் ஆகலாம். அதற்கு அவன் தியாகங்கள் செய்யத் துவங்க வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து பிரசாரக் ஆக வேண்டும்; எந்த அறிமுகமும் இல்லாத ஊரில் சங்கவேலை செய்ய வேண்டும்; அடக்குமுறைகள், கல்லடிகளைத் தாங்கி சங்கத்தை வளர்க்க வேண்டும்; தனது தகுதிகளைக் கூடவே உயர்த்திக் கொள்ளவேண்டும். அதாவது சங்கத்தின் வளர்ச்சியும் தனிப்பட்ட ஸ்வயம்சேவகனின் வளர்ச்சியும் தியாகத்தின் அடிப்படையிலானது. வேறெந்த அளவுகோலும் இங்கு கிடையாது. அதனால் தான் 85 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ் உடைக்க முடியாத இயக்கமாகவும், மேலும் மேலும் வளரும் குடும்பமாகவும் இருக்கிறது.

இங்கு புத்தக ஆசிரியர் குறிப்பிடுவது போல (பக்: 59) பிரசாரகர்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; தானாக முன்வந்து, குடும்பவாழ்வை மறுத்து பிரசாரக் ஆகும் ஸ்வயம்சேவகனே மாற்றங்களை உருவாக்குகிறான். இங்கு யாரும் பிரசாரகர்களுக்கு (பக்: 60) மனதை ஊடுருவும் பயிற்சிகளும் அளிப்பதில்லை; பிரமச்சரியமும் தேசபக்தியும் உள்ள உறுதியுமே பிரசாரகர்களின் வலிமை. இங்கு எந்த திரைமறைவுப் பயிற்சிகளும் (பக்: 62) இல்லவே இல்லை. ஆண்டுதோறும் திறந்தவெளியில் நடக்கும் ஆளுமைப் பண்பு பயிற்சி முகாம்களே (சிக்ஷண வர்க) ஸ்வயம்சேவகர்களையும் பிரசாரகர்களையும், சங்க நிர்வாகிகளையும் பட்டை தீட்டுகின்றன. இந்த முகாம்களை யாரும் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

யாருக்கும் எதிரியல்ல

புத்தகத்தின் 69 –வது பக்கத்தில் இடதுசாரிகளின் புகழைக் குறைப்பது, வீச்சைக் கட்டுப்படுத்துவது என்னும் அடங்காப் பேரவாவைத் தீர்த்துக் கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கிடைத்தது” என்று கூறுகிறார் ஆசிரியர். இதுவும் தவறான கருத்து. சங்கத்தின் மூத்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டவருமான பண்டித தீனதயாள் உபாத்யாய, ஏகாத்மா மானவவாதம் (Integral Humanism) என்ற கருத்தை*4 உருவாக்கியவர். இவர் குறித்த சிறு குறிப்பும்கூட இந்தப் புத்தகத்தில் இல்லாதது குறையே. இவரே இன்றைய பாஜகவின் அடிப்படையான சித்தாந்தங்களை வடிவமைத்தவர். இவர் தனது நூலில்*5 இடதுசாரிகள் எங்கே வழி தவறுகிறார்கள், அவர்களது சித்தாந்தத்தின் சாதகம், பாதகம் என்ன என்றெல்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறார். இடதுசாரிகள் நமது நாட்டிற்கு இயைந்த வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இன்று பாரதத்தின் பிரதான கட்சியாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள் அந்த வாய்ப்பை தவற விட்டதற்கு இந்த மறுபரிசீலனை இல்லாததே காரணம் எனில் மிகையில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துகளை முற்றிலும் வலதுசாரியாகக் கருதிக்கொண்டு அதை எதிர்ப்பது இடதுசாரிகளின் அடிப்படையாகவே மாறிவிட்டிருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பில்லை. அடிப்படையில் இந்தியாவை ஒரு நாடாகக் கருதாமல் பல குறுந்தேசியங்களின் கூட்டமைப்பாக அணுகுவதே இடதுசாரிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான அடிப்படை வேற்றுமை. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது. அதற்காக இடதுசாரிகளின் புகழைக் கெடுக்க, மெனக்கெட்டு வேலை செய்ய அதற்கு நேரமும் கிடையாது.

இதே அடிப்படைதான் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான மோதலுக்கும் வழி வகுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் ஹிந்துத்துவம் மத எல்லைகளைத் தாண்டியது. இதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 99) ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் மத விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மத அடிப்படையில் எந்தப் பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகின்றனரோ அப்பகுதியில் தேசவிரோதக் கருத்துக்கள் வேகமாகப் பரவுகின்றன. அப்பகுதிகளில் பிரிவினை கோஷங்கள், சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு சவாலான நடவடிக்கைகள் எழுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், பஞ்சாப், கேரளாவின் மலப்புர மாவட்டம், தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டம், கோவை நகரின் கோட்டைமேடு பகுதி போன்றவை உதாரணம். எனவேதான் ஹிந்துப் பெரும்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இன்று காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துக்களாக வாழ்ந்தவர்கள்தானே? மதம் மாறியதால் அவர்களது வேர்கள் மாறிவிடுமா? இதையே ராமாயணம் படிக்கும் இந்தோனேசிய முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். சுட்டிக் காட்டுகிறது. நம்மைப் பிரிக்கும் மதங்களைவிட நம்மை இணைக்கு ஹிந்துத்துவப் பண்பாடு இனிமையானது என்றே ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இக்கருத்து இன்னும் சிறுபான்மையினரால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. அதற்கு ஊடகங்களும் காரணமாக உள்ளன. இந்தப் புத்தகத்தின் தலைப்பும் (ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்) அதையே நிரூபிக்கிறது.

”தேசத்தில் இரண்டே விதமான ஸ்வயம்சேவகர்கள்தான் இருக்கிறார்கள் – முதல் பிரிவினர் இன்றைய ஸ்வயம்சேவகர்கள்; பிறர் நாளைய ஸ்வயம்சேவகர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கூறப்படுவதுண்டு. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் சங்கம் இயங்கி வருகிறது. சங்கம் எக்காலத்திலும் யாருக்கும் எதிரியல்ல; ஒன்றுபடுத்துவதே அதன் மார்க்கம். இதனை ‘சிவனை அறிய வேண்டுமானால் சிவமாகவே ஆக வேண்டும்’ என்ற தத்துவப்படி அணுகினால்தான் புரியும்.

மோடியும் மண்டைக்காடும்

புத்தகத்தின் 14வது அத்தியாயம், பக். 134 ல் குஜராத் கலவரங்களுக்கும் அதன் அனைத்துக் கோர விளைவுகளுக்கும் முதல்வர் நரேந்திர மோடி பின்னணியில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக காங்கிரஸ் ஆதரவு ஊடகமான தெகல்கா சுட்டப்பட்டுள்ளது. உண்மையில் குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து மோடி ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்டு வருகிறார். மோடிக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தருணம் இது. தவிர, மோடி தொடர்பான சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளவை. இந்நிலையில், முன்யூக முடிவுகளுடன் கூடியதாக எதையும் எழுதுவது தவறு. நமது ஊடகங்கள் இதைத்தான் செய்து வருகின்றன.

குஜராத் கலவரம் கண்டிப்பாக வெறுக்கப்பட வேண்டியது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை, மோடியின் அரசு எடுத்த நடவடிக்கையால், துப்பாக்கிச்சூட்டால் நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள் (இதில் மதத்தைக் குறிப்பிட வேண்டாமே!) கொல்லப்பட்டதும் உண்மை*6. இதனை மூடிமறைக்கும் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாகக் கூச்சலிட்டு ஒரு கருத்தை உருவாக்க முயன்றதே மோடி மீதான அவதூறுகளுக்குக் காரணம். நானாவதி கமிஷன் அறிக்கை குஜராத் அரசுக்கு சாதகமாகவே வெளியானதை யாரும் மறக்கக்கூடாது.

அதே சமயம், இதேபோன்ற கலவரங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படும்போது ஊடகங்கள் பட்டும் படாமல் நடந்துகொள்வது ஏன்? உதாரணமாக, பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த ஹிந்துப் பெண்கள் கடலில் குளிக்கச் சென்றபோது கிறிஸ்தவ மீனவர்களால் மானபங்கப்படுத்தப்பட்டதே மண்டைக்காடு கலவரத்துக்குக் காரணம். இதற்கு அடிப்படைக் காரணம் மதமாற்றம். இதை அரசே புரிந்துகொண்டதால்தான் அங்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால், இந்த காரணத்தை குமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லும் காரணம்‘ என்று அடிக்குறிப்பாக தருகிறார் இதே புத்தகத்தில் (பக்: 93) பா.ராகவன். அதாவது ஆர்.எஸ்.எஸ்.மீது குற்றம் சுமத்தும்போது தானே முன்வந்து குற்றம் சுமத்துபவர், சிறுபான்மையினர் மீதான புகார் வரும்போது தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டுகொண்டு எதிர்த்தரப்பையே புகார்தாரர் ஆக்குகிறார். இது தற்கால ஊடக மனநிலையின் பிரதிபலிப்பே. யாரைக் குற்றம் கூறினால் யாரும் கேள்விகேட்க மாட்டார்களோ அவர்கள் முதுகில் கும்மாங்குத்து குத்துவது; எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைக் கண்டால் அடக்கி வாசிப்பது. இந்த மனநிலைக்கு பா.ராகவனும் விதிவிலக்கில்லை.

இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தேசப்பிரிவினைக் காலக் காட்சிகளில் பலவும் ‘நேரடி நடவடிக்கை’யில் இறங்கிய முஸ்லிம் லீக்காரர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவற்றைக் குறிப்பிடும்போதுகூட, இரு சமூகத்தினரையும் சமமாக வைப்பதாக நினைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை வன்முறையாளராக சித்தரிப்பதைக் காண (பக்: 14) முடிகிறது. தற்காப்பு நடவடிக்கைக்கும் கலவர நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லையா? ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராக இருந்த ஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய தேசப்பிரிவினையின் சோக வரலாறு*7, இப்புத்தகத்தின் ஆசிரியர் படிக்க வேண்டிய முக்கியமான நூல் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

பிழைகள் சரித்திரம் ஆகலாமா?

மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். குறித்து புத்தகம் எழுதினால் அதன் எதிர்ப்பாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துடேயே, அதனை சமண் செய்யும் உத்திகளுடன் இந்தப் புத்தகத்தை பா.ராகவன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம், அவரது அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையிலான போராட்டம்.

இருந்தபோதும், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை ஹிந்து இயக்க நண்பர்கள் பலர் ஆர்வமாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. அவர்களது சங்கம் பற்றி சங்கமல்லாத நிறுவனம் ஒன்று வெளியிடும் நூல் இது என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, இதில் குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகளை அவர்கள் சான்றிதழாகவேகூட நினைத்திருக்கலாம். உண்மையில் சிறுபான்மையினரின் அட்டகாசங்கள் அத்துமீறும்போதுதான் பெரும்பான்மை மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைகிறார்கள். இதற்கு கோவை (1998 கலவரங்கள்) உதாரணம். பெரும்பாலான மக்கள் ஆர்.எஸ்.எஸ். மீது கூறப்படும் புகார்களை நற்சான்றிதழாகக் கருதுவதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 97) குறிப்பிடுகிறார்.

ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. கிழக்கு பதிப்பகம் போன்ற நல்ல நம்பகத்தன்மை கொண்ட நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிடும் புத்தகத்தில் உள்ள தவறுகள் நாளை சரித்திரமாக பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கமே எனது விமர்சனத்தின் நோக்கம். மக்களை மதரீதியாக பாகுபடுத்திக் குளிர்காயும் வாக்குவங்கி அரசியல் கட்சிகளைவிட, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் மோசமானதில்லை; சிறுபான்மையினரை தாக்குவது (பக்: 132) அதன் நோக்கமுமில்லை. அதற்கென, ‘அகண்ட பாரதம்; உலகின் குருவாக பாரதம் ஆக வேண்டும்’ என்பது போன்ற மாபெரும் லட்சியங்கள் உள்ளன.

மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பிறர் எழுதாத நல்ல பல கருத்துக்களும் உள்ளன. எழுதியிருக்க வேண்டிய – விடுபட்ட பல முக்கியமான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

–          தொடரும்

(ஆர்.எஸ்.எஸ்., கிழக்கு பதிப்பகம், பா.ராகவன், விலை 75 ரூ.)

அடிக்குறிப்புகள்:

1 . குருஜி சிந்தனைக் களஞ்சியம்- டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை, 2006 ,

2. ஸ்ரீ குருஜி- வாழ்வே வேள்வி- பி.ஜி.சஹஸ்ரபுத்தே, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1998 , பக்: 58

3. நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்- சக்தி புத்தக நிலையம், சென்னை, 1997

4 . INTEGRAL HUMANISM – http://en.wikipedia.org/wiki/Integral_humanism_(India)

5 . ஏகாத்ம மானவ வாதம்- பண்டித தீனதயாள் உபாத்யாய, பாரதீய ஜனசங்கம், சென்னை, 1970

6. http://www.gujaratriots.com/24/myth-5-gujarat-police-was-anti-muslim/

7. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – ஹொ.வெ.சேஷாத்ரி, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1996.