திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி? (ஹாய் அட்வகேட்!)

ஹாய் அட்வகேட்!

நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். திருமணமாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. சட்டப்படி திருமணத்தை பதிவு செய்யாமல் விட்டுவிட்டேன். இதனால் ஏதேனும் சட்டச்சிக்கல் வருமா? ( திருமண அழைப்பிதழ் உள்ளது ).

சரவணன்

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச் சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு, நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம் தமிழ் நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்த மதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்ற சட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009  சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

எங்கே பதிவு செய்வது? உங்கள் திருமணம் எந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும்.

திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாள்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாதவர்கள், அடுத்த 60 நாள்களுக்குள் கூடுதல் கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்து கொள்ள வேண்டும்.

திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார் பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும். இணையத்தில் கூட கிடைக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்து, கூடவே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும். படிவத்தில் கணவன், மனைவி இருவரது புகைப்படங்களையும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப்படத்தையும் இணைக்கவேண்டும்.

மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக்கான அத்தாட்சி, அடையாள அத்தாட்சி (Identity Proof) ஆகியவற்றின் நகல்களையும் வைக்கவேண்டும். திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்கவேண்டும். திருமணத்தை நடத்தி வைத்த மத குருமாரும்/ஐயரும் மனுவில் கையொப்பம் இட வேண்டும்.

மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்களும் மனுவில் சாட்சி கையெழுத்து போடவேண்டும். மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை, வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம் படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்க வேண்டும்.

குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம். தண்டனையும் உண்டு. பயந்து விடாதீர்கள். தண்டனை 1000 ரூபாய் அபராதம்.

திருமணங்கள் நடைபெறும் குறிப்பிட்ட சில கோயில்களிலேயே கூட, திருமணங்களைப் பதிவு செய்வதற்கு வழி வகை செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு.

சரவணன் அவர்களே, மேற்குறிப்பிட்ட விவரங்களைக் கொண்டு சம்மந்தப்பட்ட சார் பதிவாளரைச் சந்தித்து, உங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

0

S.P. சொக்கலிங்கம்

காந்தி : ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும் – 2

பகுதி 1

எதிரியை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நீங்கள் பகத் சிங் உள்ளிட்ட தியாகிகளின் வாழ்வில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கையை வெள்ளை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அறிவிக்கவே அவர்கள் கைதானார்கள். ஒவ்வொரு விசாரணையையும் அவர்கள் தங்களுக்கான பிரச்சார களமாக மாற்றினார்கள்.

பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசிய வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அங்கு குண்டு வீசியதன் நோக்கம் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகிறார்கள். விசாரணையின்போது பகத் சிங் சொன்னது:-

நாம் நோக்கத்தை புறக்கணித்துவிட்டால், உலகின் மிகப்பெரிய தளபதிகள்கூட சாதாரண கொலைகாரர்களைப் போல தோன்றுவர். வருவாய்த்துறை அதிகாரிகள் திருடர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்சியளிப்பர். ஏன் நீதிபதிகளும் கொலைக் குற்றத்துக்கு ஆளாகலாம்.

குற்றத்தைக் காட்டிலும் அதற்குப் பின்னணியிலுள்ள நோக்கம் அதிகபட்ச தண்டனைக்குரியது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆயினும் அவர்கள் தங்கள் நோக்கம் பரிசீலிக்கப்படவேண்டும் என்று கடுமையாக வாதிடுகிறார்கள். நிராயுதபாணி மக்களைச் சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரின் அராஜகத்தைக் குறிப்பிடுகிறார்கள். தங்களது வாக்குமூலத்தில் இருந்து, இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக எனும் வாசகங்கள் நீக்கப்பட்டதைக் குறிப்பிடும் சாக்கில் நீதிமன்றத்தில் அதற்கான விளக்கங்களைச் சொல்கிறார் பகத்சிங்.

அவரது இந்த நிலைப்பாட்டை முழுதாக புரிந்துகொள்ள இன்னொரு சம்பவம் உதவிகரமாக இருக்கும். 1930 டிசம்பர் 23ல் லாகூர் பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் ஆளுநரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் ஹரி கிஷன் எனும் போராளி. ஆளுநர் லேசாக காயமடைய, இன்னொருவர் இறந்துபோனார். இவ்வழக்கு விசாரணையின்போது ஹரி கிஷனின் வழக்குரைஞர், தன் கட்சிக்காரர் கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை என்றும் ஒரு எச்சரிக்கையாகவே அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார் என வாதிடுகிறார். இதையறிந்த பகத் சிங், புரட்சியாளர்கள் தங்கள் வழக்குகளை எவ்வாறு கையாளவேண்டும் எனும் ஆலோசனையை தன் நண்பருக்கு ஒரு கடிதமாக எழுதுகிறார், (1931 ஜூன் பீப்பிள் இதழில் வெளிவந்தது).

அதில், ‘அரசுக்கு நாம் போதுமான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் செயல்பாட்டுக்கு வருகிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஆளுநர் தப்பித்துக்கொண்டதற்காக (அதிர்ஷ்டம் ஆளுநருக்கு, சுட்டவருக்கல்ல) அதனை நமக்கு சாதகமாக்கிக்கொண்டு வாதிடுவதால் நமக்கு (இயக்கம்) என்ன பலன் கிடைத்துவிடும்? இதுபோன்ற செயல்களால் இயக்கத்தின் அழகை சிதைக்கக்கூடாது!’ என்கிறார் பகத்சிங். (அடைப்புக்குறிகளுக்குள் உள்ள அழுத்தம் நம்முடையது). அந்த நீண்ட கடிதத்தில் அவர் சொல்வதன் சுருக்கம் இதுதான். ஆளுனரைக் கொல்வது எனும் நோக்கம் இரண்டாம் பட்சமே. கொலைமுயற்சி எனும் வழக்கையே நம்க்கான போராட்டக் களமாக்க வேண்டுமேயன்றி, அது ஒரு எச்சரிக்கை என்று வாதிட்டு, நம் போராட்டக் களத்தைச் சுருக்கிக்கொள்ளக்கூடாது.

0

காந்தி ஏரியாவுக்கு வரலாம், ரவுலட் கமிட்டி அறிக்கை வெளியானபோது அவர் முடிவெடுத்த போராட்ட முறையை கொஞ்சம் படியுங்கள்.

சாத்வீக சட்ட மறுப்பை செய்வது எப்படி என்று எனக்கு விளங்கவேயில்லை. சட்ட மறுப்பு செய்வதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தானே ஒருவன் சட்டத்தை மீற முடியும்?

(சத்திய சோதனை பக்கம் 552).  இது அவரது குழப்பம்.

நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்தாலை நடத்த வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்வதுதான் அது. நம்முடைய போராட்டமோ ஒரு புனிதமான போராட்டம். ஆகையால் அதை ஆன்ம தூய்மை செய்துகொள்வதோடு தொடங்கவேண்டும். இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். (சத்திய சோதனை பக்கம் 552). இது அவரது தீர்வு.

மக்கள் இந்த ஹர்தாலை அனுஷ்டித்தது ஓர் அற்புதக்காட்சி என்று விவரிக்கிறார் காந்தி (ஒரு அற்புதக்காட்சி என்றுதான் அந்த அத்தியாயத்துக்கும் பெயரிட்டிருக்கிறார்).

நான் விளக்க இதில் ஏதுமில்லை. போராட்டம் என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். அதற்கான முன்னோடியாக யாரை கருதவேண்டும் என்பதும் உங்கள் முடிவுக்கானதே.

பகத்சிங்கின் மீதான இன்னொரு குற்றச்சாட்டு, ஆங்கிலேய காவல் அதிகாரி (டெபுடி சூப்பிரெண்டென்ட்) சாண்டர்சைக் கொலை செய்தது. லாலா லஜபதிராயை தடியடி மூலம் கொன்றதற்குப் பதிலடி தருவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் அது. (அவர்கள் இலக்கு லஜபதிராயைத் தடியால் தாக்கிய ஸ்காட்டைக் கொல்வது. ஆனால் ஜெய்கோபால், சாண்டர்சைத் தவறுதலாக அடையாளம் காட்டிவிடுகிறார்) . கொல்லப்பட்ட லஜபதிராய் பகத்சிங்கின் இயக்க உறுப்பினரல்ல. இன்னும் சொல்வதானால் அவர் தம் கடைசி காலங்களில் புரட்சியாளர்களை வெறுக்கத்தொடங்கியவர். பகத்சிங் மற்றும் சுகதேவை அவர் தன் பங்களாவுக்குள்ளேயே விடவில்லை. புரட்சியாளர்கள் முற்றாக வெறுத்த மதச்சார்பை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார். இதனால் அவருக்கு மோதிலால் நேருவுடனும் கருத்துவேறுபாடும் தோன்றியிருந்தது.

இத்தகைய சூழலில், 1928 அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் லாகூர் வந்தது. அப்போது ஒரு மாபெரும் கூட்டம் அந்த அதிகாரிகளுக்கு கறுப்பு கொடி காட்டியது. அப்போது நடத்தப்பட்ட தடியடியில்தான் லாலா படுகாயமடைகிறார். நவம்பர் 19ல் அவர் மரணமடைய, லாலாவின் மரணத்தைத் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்கிறார்கள் பகத்சிங்கும் அவரது சகாக்களும். அப்போதுதான் ஸ்காட்டை கொலைசெய்யும் முடிவுக்கு வருகிறார்கள்.

கிட்டத்தட்ட ஒருமாத கண்காணிப்புக்குப் பிறகு, டிசம்பர் 17, 1928 அன்று திட்டம் நிறைவேறுகிறது. போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது ராஜகுருவும் பகத்சிங்கும் அவனை சுட்டுக்கொன்றார்கள் (வருகையை கண்காணித்து அறிவிக்க ஜெயகோபாலும்,  சுட்டவர்கள் பாதுகாப்பாக தப்பிப்போக உதவ ஆசாத்தும் உடன் இருந்தனர்).  மறுநாள், லாகூர் நகரெங்கும் அந்தக் கொலையின் காரணங்களை விளக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஏதோ இளமை வேகத்திலும் பழியுணர்ச்சியிலும் அவர்கள் கொலை செய்ததாக உள்ள கற்பிதங்களுக்கு முடிவு கட்டவே இந்தச் சம்பவத்தை நாம் குறிப்பிடவேண்டியிருக்கிறது. பகத் சிங் லாலாவின் மரணத்தைத் தங்களது எதிர் நிலைப்பாடு கொண்ட நபரின் கொலையாக பார்க்கவில்லை. அதை தம் தேசத்தின் மீதான தாக்குதலாகவே பார்த்தார். சொந்த மக்கள் கொல்லப்படுகையில் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ஆக்கிரமித்தவன் வீட்டு எழவுக்கு மட்டும் கடும் எதிர்வினை செய்த காந்தியைப்போல் பகத் சிங் அகிம்சாவாதியல்ல.

பகத்சிங் வெறும் விடுதலைப் போராளி மட்டுமல்ல. விடுதலைக்குப் பிந்தைய இந்தியா பற்றியும் பெரிய கனவுகள் அவருக்கு இருந்தன.

வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.

சமூக, பொருளாதார சுதந்தரமில்லாமல் கிடைக்கும் வெறும் அரசியல் சுதந்தரம், ஒரு சிலர் பலரைச் சுரண்டும் சுதந்தரமாகவே இருக்கும்.

(பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை).

வெறும் துப்பாக்கி மட்டுமே அவரது ஆயுதமல்ல. மக்களைச் சேர்த்துக்கொள்ளாத போராட்டம் வெற்றியடையாது என்பதை அவர் பலமுறை தம் நண்பர்களிடம் வலியுறுத்துகிறார். தொழிலாளர்களிடையே பணிபுரிவது, பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவது, சிலைட் மூலம் பிரசாரம் செய்வது, துண்டு பிரசுரம் ஆகிய எல்லா வழிகளையும் அவர் பயன்படுத்தினார். இளைஞர்களிடையே அவரது மேடைப்பேச்சுக்கள் அப்போது மிகவும் புகழ்பெற்றவை. அவரது சட்ட ஞானமும் வாதத்திறமையும் எந்த ஒரு உலகத்தலைவருக்கும் சளைத்ததல்ல. அவர் சிறையில் இருந்தபோது அரசுக்கு எழுதிய கடிதங்களையும் நீதிமன்ற வாதங்களையும் படித்தால் அவர் எத்தகைய அறிவுஜீவி என்பது புரியும்.

பகத் சிங்கின் தனிப்பட்ட வாழ்வும் சுபாவமும் ஏராளமான செய்திகளை நமக்குக் கற்றுத் தருகின்றன. அவர் ஐந்து மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். இளம் தோழர்களை ஒருங்கிணைப்பதில் அவரது ஆற்றல் மகத்தானது. அவரது தோழர் சிவவர்மா அவ்வளவாக உடல்வலு உள்ளவரல்ல. அதனால், தன்னால் இயக்கத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாதோ எனும் கவலை மேலோங்கியபோது பகத்சிங் அவரிடம் நடத்திய உரையாடல் சிவவர்மாவை மட்டுமல்ல நம் எல்லோரையும் கணக்கில் கொண்டு சொன்னதுபோலவே இருக்கும். தூக்கிலிடப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னால், அவரைக் கடைசியாகச் சந்தித்த நண்பர்களிடம் புன்சிரிப்போடு அவர் சொன்ன வார்த்தைகள் இவை.

உணர்ச்சி வசப்படும் நேரம் இன்னும் வரவில்லை பிரபாத். நான் இன்னும் சில நாள்களில் இந்த உலகத்தை விட்டுப் போய்விடுவேன். ஆனால், நீண்ட பயணம் ஒன்று காத்திருக்கிறது. கடமை எனும் பெருஞ்சுமை உன்னை அழுத்திக்கொண்டிருந்தாலும், அந்த நெடும் பயணத்தில் நீ களைத்துப் போய்விடமாட்டாயென்றும் தோல்வியடைந்து உட்கார்ந்துவிட மாட்டாயென்றும் நான் நம்புகிறேன்.

காந்தி பற்றிய கட்டுரையில் இவ்வளவு அதிகமாக பகத்சிங் பற்றிய தகவல் தேவையில்லைதான். ஆனால், ‘காந்தி இல்லாமல் வேறு யாரைத்தான் சுதந்தரப்போராட்ட வீரர் என்று சொல்லுவீர்கள்?’ எனும் கேள்வி நம்மை எப்போதும் துரத்துகின்றன. போட்டிக்கு ஆளில்லாத மைதானத்தில் காந்தியை நிறுத்தி அவரே மாபெரும் வீரர் என கொண்டாடுவது போல இருக்கிறது நம் வரலாறு.

1950ல் உத்திரப் பிரதேச பாடநூல்கள் சந்திர சேகர ஆசாத்தை ரத்த வெறி கொண்டவர், கொள்ளைக்காரர் என்று குறிப்பிட்டன. நல்வாய்ப்பாக நாடு அவர்களது பாதையை தேர்ந்தெடுக்காது காந்திய வழியில் நின்றது என்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தின. இதை எழுதிய ஏ.எல்.ஸ்ரீவாஸ்தவா, பிரிட்டிஷ் அரசால் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் என்று கருதப்பட்டவர். இதே போன்ற பிரசாரங்கள் பகத்சிங்கின் மற்ற தோழர்களின்மீதும் மகாராஷ்டிர அரசு பாடநூல்களில் முன்வைக்கப்பட்டன. மற்ற இடங்களில் எப்படிப்பட்ட ‘பாடங்கள்’ நடத்தப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று. அவர்கள் தீவிரவாத வழியில் போராடினார்கள் எனும் வாசகம் எல்லா மாநில வரலாற்றிலும் இருக்கின்றன. கூடவே, பின்லேடன், முல்லா ஓமர் ஆகியோர் தீவிரவாதிகள் எனும் செய்தியும் அன்றாடம் அவர்களுக்குக் கிடைக்கிறது. இந்த நிலையில் பகத்சிங் உள்ளிட்ட போராளிகளின் மீதான மதிப்பீடு மாணவர்களுக்கு எப்படியிருக்கும்? இதைச் சரிசெய்ய வேண்டுமாயின் மேற்சொன்ன பகத் சிங்கின் வரலாறு இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும். அதனை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம்.

காந்தி மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட தலைவராகவும், புரட்சியாளர்கள் மக்கள் ஆதரவற்றவர்களாகவும் இருந்தார்களா என்று பார்க்கலாம். 1929 டிசம்பர் 23ல் வைஸ்ராய் சென்ற ரயில் ஒரு குண்டுவெடிப்பில் சிக்கியது. அதில் வைஸ்ராய் மயிரிழையில் தப்பினார். அதற்குக் கடவுளுக்கு நன்றி சொன்னார் காந்தி. காங்கிரசில் அச்செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானம் அவ்ரால் கொண்டுவரப்பட்டது. அதனை நிறைவேற்ற அவர் தன் செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தினார். அந்தத் தீர்மானம் 1713 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் வெறும் 81 வாக்குகள் முன்னிலையில் வென்றது.

அந்த பலூனையும் உடைக்கிறார் சரளாதேவி சௌதாராணி.  ‘நான் உரையாடிய மிகப் பெரும்பாலானாவர்கள் மகாத்மா மீதான விசுவாசம் காரணமாக தங்கள் தனிப்பட்ட கருத்தை மறைத்துக்கொண்டு காந்தியால் முன்மொழியப்படும் தீர்மானத்தை ஆதரித்தார்கள்‘ என்று குறிப்பிடுகிறார். (பகவதி சரண் வோரா தலைமறைவாக இருந்தபோது எழுதப்பட்ட கடிதமொன்றில் உள்ள தகவல். இக்கடிதம் காந்தியின் வெடிகுண்டின் வழிபாடு எனும் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது). காந்தியின் பல சென்டிமென்ட் பிட்டுகளுக்கு பிறகும் அவரது சீடர் பட்டாபி சீதாராமைய்யா சுபாஷிடம் தோற்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததே. காந்தி தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதை நேருவே ஆதரிக்கவில்லை.

சாண்டர்சைக் கொன்ற பிறகு, பல காங்கிரஸ்காரர்கள் பகத் சிங்கை ஆதரித்திருக்கிறார்கள். அவர்களது உதவியாலேயே போராளிகள் டெல்லிக்கு தப்பிச்செல்கிறார்கள். டெல்லி பாராளுமன்றத் தாக்குதலுக்காக ஒரு காங்கிரஸ் எம்.பிதான் அவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்திருக்கிறார்.  சுகதேவ், ராஜகுரு, பகத்சிங் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டுக்கு வந்த தலைவர்களை எதிர்த்து பெரிய போராட்டங்கள் அங்கு நடந்திருக்கின்றன. பகத்சிங்கை கொன்றவரே திருப்பிப்போ எனும் முழக்கங்கள் ஒலித்திருக்கின்றன. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த ஜஜீந்திரநாத் தாசின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழு லட்சம்.

0

இந்திய விடுதலைக்குப் பிறகும் இவ்வளவு மெனக்கெட்டு ஏன் காந்தியை உயர்த்திக்காட்ட வேண்டும் மற்றவர்களை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும் எனும் கேள்வி கடைசியாக எழலாம். அதற்கான பதில் அதிகாரவர்கத்துக்கு இன்னும் அவரது தேவை இருக்கிறது என்பதுதான்.

காந்தியின் மற்ற சிந்தனைகள் அவரது காலத்துக்கே பொருந்தாதவை. அவரது மண் சிகிச்சை மற்றும் நீர் சிகிச்சை ஆகியவற்றை இந்தக் காலத்தில் கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவுடைய பாமரனே ஏற்க மாட்டான். மனிதன் வாழ பழங்களும் கொட்டைகளும் போதும் எனும் கருத்தை எந்த உணவியல் நிபுணரும் ஏற்கமாட்டார்கள் (சூரிய ஒளியில் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவும் இருக்கக்கூடாது – சத்திய சோதனை, பக்:325). இந்திரியத்தை கட்டுப்படுத்தி பிரம்மச்சாரியாக வாழ்வதுதான் மனிதத்தன்மை எனும் வாதத்தை நவீன உளவியல் மட்டுமல்ல பழைய உளவியலே ஒத்துக்கொள்ளாது. (பிரம்மச்சர்யம் இல்லாத வாழ்க்கை சாரமற்றதாகவும் மிருகத்தனமானதாகவும் எனக்கு தோன்றுகிறது. சத்திய சோதனை, பக்:381).

அவரது கிராமச் சார்பு பொருளாதாரத்தை இன்று வற்புறுத்தினால், காந்தி கொடும்பாவியைத் தன் சகாக்களுடன் கொளுத்தும் முதல் ஆள் மன்மோகனாகத்தான் இருப்பார். சாராயமா காந்தியா எனும் நிலை வந்தால், தமிழக இன்னாள் முன்னாள் முதல்வர்கள் எதை தெரிவு செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும்! ஆக, சத்தியாகிரகம், அகிம்சாவாதம் ஆகியவற்றைத் தவிர அவரது எல்லா சிந்தனைகளும் இந்தியாவில் காலாவதியானது என்பதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அகிம்சை என்பது வரையறை துன்பங்களுக்குத் தானாகவே கீழ்படிதல் என்பதாகும். அகிம்சையிலிருந்து மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊடறுபடாத அகிம்சையோடு படுதோல்வியடைவதையே நான் வரவேற்பேன் என பேட்டியளித்திருக்கிறார் காந்தி. இதை வாசிக்கையில், இந்திய விடுதலையைக் காட்டிலும் காந்தி அகிம்சா தர்மத்தில் பிடிப்போடு இருந்ததாக கருதவேண்டியிருக்கும். ஆனால், இந்த தரர்மத்தை அவர் இந்திய மக்கள் மீது மட்டும்தான் வலியுறுத்தினார்.

போர் காலத்தில் அவரது பிரிட்டன் விசுவாசத்தை பார்த்தால், அவரது கடைசி ஆயுதமும் கேள்விக்குள்ளாகும்.

பிரிட்டிஷ் பிரஜை எனும் வகையில் நான் உரிமைகளைக் கோரினால், அந்தப் பிரஜை எனும் வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்க போரில் ஈடுபடவேண்டியது என் கடமை. 1899ல் நடந்த போயர் யுத்தத்தில் தமது பங்கு பற்றி காந்தி . (சத்திய சோதனை, பக் 258)

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்துக்குத் தங்களாலான உதவியைச் செய்ய வேண்டும் என நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ராணுவத்தில் சேவை செய்ய தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும். 1914ல் பிரிட்டனில் இருந்தபோது சொன்னவை (சத்திய சோதனை, பக்:416,417) (போரில் பங்கேற்க வைப்பதுதான் அவர் நோக்கம். சேவை என்பது சமரசம் மட்டுமே- இந்த அழுத்தம் நம்முடையது)

படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டுமென வைசிராய் விரும்பினார். நான் ஹிந்துஸ்தானியில் பேச அனுமதிக்கவேண்டுமென அவரிடம் கேட்டேன். என் கோரிக்கைக்கு அவர் அனுமதியளித்தார். ஆனால், நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என அவர் யோசனை கூறினார். ‘என் பொறுப்பை பூரணமாக உணர்ந்தே நான் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்’ என்ற ஒரே வாக்கியம்தான் நான் பேசியது. ஹிந்துஸ்தானியில் நான் பேசியதை பலரும் பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் முறை என அவர்கள் சொன்னார்கள். (சத்திய சோதனை: பக்:532. ஆண்டு குறிப்பிடப்படவில்லை). அந்த முடிவுக்கு எந்த காரணத்தையும் காந்தி குறிப்பிடவில்லை. ஹிந்துஸ்தானியில் பேசியதை வைத்து அதை திசை திருப்புகிறார். படைக்கு ஆள் திரட்ட தாம் மேற்கொண்ட பெரிய அளவிலான பிரசாரத்தையும் தொடக்கத்தில் அதற்கு கிடைத்த பெரிய அளவிலான எதிர்ப்பையும் அவர் அடுத்தடுத்த பக்கங்களில் குறிப்பிடுகிறார்.

கடைசி யுத்த ஆதரவு காலத்தில் அவர் சத்தியாகிரகத்தில் எல்லா ரிசர்ச் அண்ட் டெவலப்மென்டையும் முடித்திருந்தார். ஆகவே, அவர் உண்மையான அகிம்சாவாதியெனில் பிரிட்டனுக்கு ‘துன்பத்தை வலிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்’ என ஆலோசனை சொல்லியிருக்கவேண்டும். வெள்ளைக்காரனுக்குப் பிரச்சனை என்றால் அவன் துப்பாக்கி தூக்கலாம், அதற்கு நாம் உதவவேண்டும். இந்தியனுக்கு விடுதலை வேண்டுமானால், எதிரியின் கல்மனம் கரையும்வரை அவன் தாக்குதலுக்கு நாம் முதுகையும் அதற்கு கீழும் காட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?

உலகின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களிலேயே அகிம்சாவாதம்தான் எதிரிக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியது. அதனால்தான் வெள்ளையனின் இடத்தை நிரப்பி அவனைப்போலவே இந்தியாவின் செல்வத்தை கடல் கடந்து கொண்டுசெல்லும் சுதேசி ஆட்சியாளர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள். காந்தியின் தேசம் எனும் மறைமுக உருவகம் மக்களை ஒடுக்குமுறை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் கூட்டமாக வைத்திருக்கிறது. எப்படி பிராமணன் அசைவம் சாப்பிடக்கூடாது எனும் விதி அவனது பிறப்பினால் எழுதப்படுகிறதோ அப்படியேதான் இந்தியனுக்கு அகிம்சையும் மறைமுகமாக ஒரு விதியாக போதிக்கப்படுகிறது. கொஞ்சம் தீவிரத்தன்மை அடையும் போராட்டங்களின் போதெல்லாம் காந்தி பிறந்த நாட்டில் இப்படியா எனும் அங்கலாய்ப்புகள் கேட்கின்றன. போலீஸ் துப்பாக்கியால் சுட்டு எத்தனைபேர் செத்தாலும் ‘காந்தி பிறந்த நாட்டில்’ எனும் சுலோகம் கேட்காது. காந்திதான் அதற்கெதிராக எதையும் சொன்னதில்லையே!. அதற்காகத்தான் இந்திய விடுதலையின் ஒட்டுமொத்த பொறுப்பும் காந்திக்கே உரியது எடனற புகழ் பாடல்கள் இன்றும் தீவிரமாகத் தொடர்கிறது. அப்போதுதான் அகிம்சாவாதம் வெற்றிகரமானது என மக்கள் நம்புவார்கள்.

நிறைவாக, காந்திய வழிபாடு ஒரு மதமாக இருக்கும் நாட்டில் இந்த விவாதம் முடிவில்லாது போய்க்கொண்டே இருக்கும். காந்தி ஓர் அவதாரம் என்றோ, அகிம்சையே சர்வரோக நிவாரணி என்றோ அல்லது சப்ளா கட்டையே அதிசிறந்த ஆயுதம் என்றோ நம்புவோருக்கு இனியும் சொல்ல நம்மிடம் செய்தி ஏதுமில்லை. இந்தச் சூழலில் நாம் கேட்டுக்கொள்ள மட்டும் ஒரு செய்தியிருக்கிறது. காந்தி பக்தர்கள் துணிச்சலோடும் ஏனையவர்கள் ஆர்வத்தோடும் கவனிக்கப்படாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வரலாறைத் தேடிப் படியுங்கள். அதற்குப் பிறகு யோசிக்கலாம். நாட்டுக்கு அதிகம் சொல்லப்படவேண்டியது, சந்தேகத்தின் பலனைச் சாதகமாக்கி விடுதலைப் போராட்ட தியாகியாக இருக்கும் காந்தியையா அல்லது சந்தேகத்துக்கு இடமின்றி தியாகியாகத் திகழும் பகத் சிங்கையா?

சில பின்னிணைப்புக்கள்:

 • ஆயுதங்களை உபயோகிக்க விரும்பினால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு. அரசாங்கத்துக்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் மத்தியதர வர்கம் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள இருக்கும் தடையும் ரத்தாகிவிடும். பிரிட்டனின் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் பணியில் இருந்தபோது காந்தி தந்த பிரசாரத்தில் இருந்து. சத்திய சோதனை பக்: 537.
 • எனக்கு இருப்பதோ நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை ஒன்றுதான். இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை தரச்சொல்லுங்கள். அப்போது தினமும் நான் குளித்து துணிகளை சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதி அளிக்க முடியும். பிகார் கிராம்மொன்றில் காந்தி சுகாதாரம் போதிக்க சென்றபோது கஸ்தூரிபாவிடம் ஒரு கிராமத்துப்பெண் சொன்னது. (ச.சோதனை, பக்:507)
 • நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் சம்பராணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது. (ச.சோதனை பக்:511).
 • நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது ஆலை முதலாளிகள் செய்த தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் தங்கள் சத்தியத்தில் இருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதமிருந்தேன். (ச.சோதனை பக்:518).
 • வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்தகர்கள் எங்களுக்கு அவசியத்துக்கும் அதிகமாகப் பணம் அனுப்பினார்கள். சாம்பாரண் போராட்டத்திற்கான நிதி ஆதாரம் பற்றி காந்தி (ச.சோதனை பக்:524).
 • நம்மிடம் நிதி இல்லை என்று உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சை எடுத்து, அதைக்கொண்டு வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நடத்திக்கொள்ள நாம் விரும்பவில்லை. அகமதாபாத் வேலைநிறுத்த போராட்டத்தின் போது காந்தி. (ச.சோதனை பக் 516).
 • ஆங்கிலேயரிடம் ஒவ்வொரு இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டு பண்ண நான் விரும்புகிறேன். (காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் உள்ள கடைசி வாசகம்). படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடலை அனேகமாக நான் நாசப்படுத்திக்கொண்டேன்  (மரணத்தின் வாயிலருகில் எனும் அத்தியாயத்தில், ச.சோதனை பக்:540).
 • நாம் தொழிலாளர்களை (விடுதலைப் போராட்டத்தினுள்) திருப்பிவிடக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவது அபாயகரமானது. அகமதாபாத் போராட்டத்துக்குப் பிறகு காந்தி; தி டைம்ஸ் மே, 1921. (பகத்சிங் எழுதிய அறிக்கையொன்றிலிருந்து. இவ்வறிக்கை கல்கத்தாவைச் சேர்ந்த பாதுகாப்பு கைதி, திருமதி விமலா பிரதீபா தேவியின் வீட்டைச் சோதனையிட்டபோது 1931 அக் 3ல் கிடைத்தது).
 • செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல.  பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து.
 • சோசலிசத் தத்துவம், சுயசரிதை, இந்தியாவில் புரட்சி இயக்க வரலாறு, மரணத்தின் நுழைவாயில். பகத்சிங் எழுதிய நூல்கள். கையெழுத்துப் பிரதிகளாகவே அழிக்கப்பட்டன.
 • எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும். 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.
 • எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல. 1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதம் (சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங்கின் பதிலில் இருந்து).
 • இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படுவாராயின், ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்? (விமலா பிரதீபா தேவியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மேற்குறிப்பிட்ட அறிக்கையில் இருந்து..)
 • மனித குலத்துக்க்கு நான் செய்யவேண்டிய சில குறிக்கோள்களை நான் பேணிவளர்த்தேன். அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்குண்டான வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்ற எண்ணம் எப்போதேனும் என் மனதில் உண்டாகுமானால் அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும். 1931 மர்ச் 22. பகத்சிங்கின் கடைசி கடிதத்தில் இருந்து.
0
வில்லவன்

காந்தி : ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும் – 1

காந்தி பற்றிய வில்லவனின் இரண்டாவது கட்டுரை இது. முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியாகவும், அதற்கு வந்து குவிந்த எதிர்வினைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் இது அமைந்திருக்கிறது. வாசிப்பு வசதி கருதி இரு பகுதிகளாக வெளியிடப்படுகிறது. இரண்டாவது பகுதி நாளை வெளிவரும்.

காந்தி பற்றிய முந்தைய பதிவுக்கான எதிர்வினைகள் நான் எதிர்பார்த்ததே. ஆனால் அதற்கு இரண்டாவது பதிவு எழுதவேண்டியிருக்கும் என்பது எதிர்பாராதது. இடது, வலது, நடு சென்டரில் நிற்போர் என எல்லாத் தரப்பின் விமரிசனங்களும் வெவ்வேறாக இருப்பினும் அவை எல்லாமே முந்தைய பதிவு போதுமானதாக இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தின.

முந்தைய கட்டுரைக்கு எதிர்மறை விமரிசனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வந்திருந்தாலும் அதற்கு ஆதரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. எதிர்குரல்களில் பல, எங்கே ஆதாரத்தை காட்டு பார்க்கலாம் எனும் தொனியில் இருந்ததை நான் வெகுவாகவே ரசித்தேன். காந்தி ஒரு மகாத்மா, அவர்தான் விடுதலை வாங்கித்தந்தார் எனும் பழமொழிகளை ஆதாரம் கேட்காமல் நம்புபவர்களை ஆதாரம் கொடு என கேட்கவைப்பது எவ்வளவு சிரமமான பணி? அதை ஒரு பதிவின் வாயிலாக சுலபமாக செய்வது எத்தனை மகிழ்ச்சிக்குரியது!

காந்தி நல்லவரே எனும் அணியில் இருந்து வந்த பின்னூட்டங்களைப் பொதுவில் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 1. சொன்னவையெல்லாம் ஆதாரமற்றவை எனும் வாதம் (காழ்ப்புணர்ச்சி, விளம்பர நோக்கம் ஆகியனவும் இதில் அடங்கும்).
 2. அவர் சொன்னவற்றை வெட்டி, ஒட்டி அர்த்தத்தை மாற்றுகிறீர்கள் என்பது இரண்டாவது வாதம்.
 3. காந்தி வெளிப்படையாக வாழ்ந்தார், எதையும் மறைத்துவைக்கவில்லை. ஆகவே அவர் மகாத்மாவே எனும் வக்காலத்து மூன்றாவது வகை.

உண்மையில் பலரையும் கோபமுற வைத்திருப்பது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய விமரிசனங்கள்தான். அது காந்தியின் புனித பிம்பத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. காந்தியின் புனித பிம்பத்தை வைத்துதான் அவரது அரசியல் நிலைப்பாடுகள் பிரசாரம் செய்யப்படுகின்றன. காந்தியின் புனிதம் கெட்டுப்போனால் அவரது அரசியல் நிலைப்பாடு காலாவதியாகும். அவரது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் சேதாரமில்லாமல் கொண்டு சேர்க்க காந்தியின் பரிசுத்த உருவம் தேவைப்படுகிறது. எனவேதான், அவரை அம்பலப்படுத்த எங்களுக்கு காந்தியின் புனித முகத்தையும் சேர்த்து விமரிசனம் செய்யவேண்டிய அவசியம் வருகிறது.

காந்தியின் தனிப்பட்ட வாழ்வு குறித்த தகவல்கள் அவர் மீது பேரபிமானம் கொண்ட எழுத்தாளர்களிடம் இருந்து மட்டுமே எடுத்தாளப்பட்டது. (சாம்பிளுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும்). பெரியார், சட்டபூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்துகொண்ட இரண்டாம் திருமணம் இன்றளவும் விமரிசிக்கப்படுகிறது. அதற்கான பதிலை பெரியாரிஸ்டுகள் இன்றுவரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தலைவர்களின் தனிப்பட்ட முடிவுகள் பற்றி யார் வேண்டுமானாலும் பதில் சொல்ல முடியும், முடிவு நியாயமானதாக இருக்கும்பட்சத்தில். வெறுமனே கோபம் பொத்துக்கொண்டு வந்தால் அங்கே பதிலுக்கு வழியில்லாத நிலை இருக்கிறது என்று அர்த்தம். இதற்குமேல் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றி விளக்க ஏதுமில்லை.

ஒரு வாதத்துக்காக ‘வெட்டி ஒட்டுதல், அர்த்தத்தை மாற்றிச் சொல்லுதல்’ ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், காந்தி ஆதரவாளர்கள் சில கேள்விகளுக்குப் பதிலுரைக்க வேண்டியிருக்கும்.

 1. பகத்சிங் தூக்கு தொடர்பாக இர்வினுக்கும் காந்திக்கும் இடையேயான  கடித உரையாடல்கள் என்ன சொல்கின்றன? எங்கள் கேள்வி அவ்வளவுதான். மற்றபடி அவர் பகத்சிங்கின் தூக்குதண்டனையை விரும்பவில்லை எனும் கருத்தோ அவர் பகத்சிங்கின் விடுதலைக்கு கடிதம் எழுதினார் என்பதோ சொத்தை வாதங்கள். இந்த ஸ்டைல் ஏமாற்றுவேலைகளை கருணாநிதி புண்ணியத்தில் நாம் பல முறை பார்த்தாகிவிட்டது.
 2. காந்தி தன்னிச்சையாக முடிவெடுப்பவரா இல்லையா? எந்த விவாதமும் இல்லாமல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதும் சுபாஷ் சந்திரபோஸ் காங்.தலைவராக தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்ததும் ஜனநாயக விரோத செயல்கள் அல்லவா? உள்ளுணர்வை கேட்டு முடிவெடுத்தாலும் சரி மனைவி மச்சினனை (மட்டும்) கேட்டு முடிவெடுத்தாலும் சரி, அது ஜனநாயக விரோதம்தான்.
 3. காந்தி ஆன்ம பரிசோதனை செய்து கொண்டதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொள்வார்கள் (மனுவின் பெயர் மட்டும் மறைக்கப்படும்). இதை நியாயம் என்றோ பிரம்மச்சர்யத்தில் இருக்கும் பிடிவாதமான பிடிப்பு என்றோ எந்த அடிப்படையில் வரையறுப்பீர்கள்? இதில் மகாத்மாத்தனம் எங்கே இருக்கிறது? முன்னாள் இத்தாலி பிரதமர் பெர்லூஸ்கோனியும் இதே பரிசோதனையைத்தான் அடிக்கடி செய்கிறார். துரதிருஷ்டவசமாக அவரால் அவரது பிரம்மச்சர்யத்தை ஒருமுறைகூட நிரூபிக்கமுடியாமல் போய்விடுகிறது.

கட்டுரைக்குத் திரும்புவோம். பொதுவில் தலைவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம். தனது கொள்கைகளால் மட்டுமே அறியப்படுகிற தலைவர்கள் ஒருவகை. இதற்கு சரியான உதாரணம் பெரியார். அவரது சாதியாலோ அல்லது அவரது கட்சியாலோ அறியப்பட்டிருப்பாரேயானால், பெரியார் இன்றைக்கு கரைந்துபோயிருப்பார். அவரை நேரில் பார்த்திராத ஒரு தலைமுறையிலும் அவர் செல்வாக்கு நீடிப்பதற்கு அவரது கொள்கைகளே காரணம். நேரெதிராக, வேறொரு தலைவர்கள் குழாமுக்கு அந்தச் சிரமம் கிடையாது. அவர்கள் ஒரு குழுவின் குறியீடாக மட்டும் அறியப்படுவார்கள்.

மிக பரிச்சயமான ஓர் உதாரணம் பசும்பொன் முத்துராமலிங்கம். அவரைக் கொண்டாட கொள்கை, கோட்பாடு என ஒரு வெண்டைக்காயும் தேவையில்லை, ஒரே சாதிக்காரர்களாக இருந்தால் மட்டும் போதும். ஏறத்தாழ காந்தியும் இந்தப் பிரிவை சேர்ந்தவரே. ஆனால் அவர் ஒரு குறியீடாக இருக்கும் குழுவாக இந்தியா எனும் நாடு மாற்றப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியைப்போல, தேசிய கீதத்தைப்போல, காந்தியின் உருவம் ஒரு தேசிய அடையாளமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு தேசியக்கொடியின் மீது பக்தி கொள்ள எந்தப் புரிதலும் அவசியமில்லை, என் நாடு, எங்கள் கொடி எனும் ஒரு பந்தம் போதுமானது (துரதிருஷ்டவசமாக நம் தேசிய கீதத்துக்கு அந்த கொடுப்பினை இல்லை. அப்பாடல் 1911 ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்தி பாடப்பட்டது).

இந்தியாவின் விடுதலை எனும் வார்த்தை காந்தி எனும் வார்த்தையோடு பிணைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சுற்றத்தில் இருக்கும் மிகப் பலர் காந்தி எனும் ஒற்றை நபரால் மட்டுமே இந்திய விடுதலை சாத்தியமானதாகவும், முழு தேசமும் அவர் பின்னால் நின்றதாகவும் நம்பிக்கொண்டிருப்பார்கள். விடுதலை எனும் சம்பவத்தை காந்தியின் ஊடாக மட்டும் பார்த்து பழகிய இரண்டு தலைமுறையிடம் காந்தியைப் பற்றிய புரிதலை உண்டாக்குவது சிரமமானது. ஆனால் நமக்கு வேறுவழியில்லை, காந்தி ஆக்கிரமித்திருக்கும் இடத்தைக் காலி செய்தாலன்றி நாட்டு விடுதலைக்கு தீரத்துடனும் சமரசமின்றியும் போராடிய வீர்ர்களின் வரலாற்றை நாம் பரப்புரை செய்ய இயலாது.

எனில், தேச விடுதலைக்குப் போராடியதில் அவரை விஞ்சிய நபர்கள் யாருமே இல்லையா? இந்தக் கேள்வியோடு இந்த விவாதத்தை தொடங்குவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். காந்தியின் வார்த்தைகளின்படியே பார்த்தாலும், அவர் 1930 வரை இந்திய விடுதலையை கோரியிருக்கவில்லை. அவர் தலைமையிலான காங்கிரஸ் 1930ல் கூட குடியேற்ற (டொமினியன்) அந்தஸ்தைத்தான் வலியுறுத்தியது. (12 மாதங்களுக்குள் அது கிடைக்காவிட்டால் பூரண சுயராஜ்யத்துக்காகப் போராட வேண்டியிருக்கும் என அறிவித்து விடுதலைப் போராட்டத்தை பகடி செய்தது காங்கிரஸ்). சரியாகச் சொல்வதானால், 1942ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு முன்னால் முழுமையான விடுதலை எனும் கோரிக்கையை காந்தி முன்னிலைப்படுத்தியதில்லை.

இப்போது நான் இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் போரில் (இரண்டாம் உலகப்போர்) இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்னாவது? என்றார் காந்தி 1939ல் (ஹரிஜன், செப் 9/1930). இன்னும் சரியாக வரலாற்றைக் கவனித்தால் 1945ல் கூட காந்தியும் காங்கிரசும் அந்த கோரிக்கையில் உறுதியாக இல்லை என்பது புலனாகும். மகாத்மா முடிவு செய்யும்வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.  இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். விழிப்போடு இருங்கள் ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்– 1942 ஆகஸ்ட் 7,8 ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றறிக்கை (ஆனால் தொண்டர்களுக்கு அனுப்பப்படவில்லை). இது 1943 ஜூலை 15ல் காந்தியால் மேற்கோள் காட்டப்பட்டது.

1942 ஆகஸ்ட் 9ல் காந்தியும் காங். தலைகளும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது. 1944ல் காந்தி சிறையில் இருந்து வெளியே வந்த போதும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடரவில்லை. ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது என அறிவித்தார். 1944 ஆம் ஆண்டில் 1942 க்கு திரும்பிச்செல்ல இயலாது என அதற்கு விளக்கமும் அளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாக துவங்கப்படவில்லை – நேரு, படேல் மற்றும் ந.பி.பந்த் ஆகியோரால் 1945 செப்டம்பர் 21ல் வெளியிடப்பட்ட காங்கிரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை.

ஆக, காங்கிரசின் வரலாறு கூறுவது போல் அவர்கள் இந்திய விடுதலைக்குப் போராடியது ஐந்து ஆண்டுகாலம்தான். உண்மையிலும் அதுவும்கூட அவர்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத நிர்பந்தம் என்றே சொல்லவேண்டும். அல்லது விடுதலைக்கு பிந்தைய புத்திசாலித்தனமான வரலாற்று பிற்சேர்க்கை என்றும் சொல்லலாம். மக்களிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரும் அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வால்வைப் போலத்தான் காங்கிரசும் காந்தியும் செயல்பட்டிருக்கிறார்கள். இனியும் பிரிட்டன் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது என மக்கள் முடிவெடுத்தார்கள். காந்தி (காங்கிரஸ்) அந்த முடிவை வேறுவழியில்லாமல் பின்பற்ற வேண்டியதாயிற்று. இந்தச் சூழல்தான், பிற்பாடு தேசமே காந்தியின் பின்னால் நின்றதாகக் காட்டப்பட்டது. காந்தியைப் பின்பற்றியவர்கள் மட்டுமே சுதந்தரப் போராட்ட வீர்ர்களாக பெருமளவு முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் மற்றவர்கள் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டால் காந்தியின் தலையில் உள்ள கிரீடம் அவருக்கு உரியதல்ல என்பது தெரிந்துபோகும்.

0

அஸ்ரத் மகல், சந்திரசேகர ஆசாத், ஜஜீந்திர நாத் தாஸ், பி.கே.தத், பகவதி சரண் வோரா, மாகாவீர் சிங்… இந்த பெயர்களில் நமக்கு யார் யாரெல்லாம் பரிச்சயம்? இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன், அனுசீலன் சமிதி, கதார் கட்சி, நவ்ஜவான் பாரத் சபா, பப்பார் அகாலிகள், யுகாந்தர் குழு, கத்தார் இயக்கம், சிட்டகாங் போராளிகள் இயக்கம், இந்துஸ்தான் ஜனநாயக சங்கம்…  இந்த வார்த்தைகள் எல்லாம் எத்தனை பேருக்கு அறிமுகம்?  காந்தி ஏன் அரை வேட்டியில் இருக்கிறார் என்பதும் ஏன் ஆட்டுப்பால் மட்டும் குடித்தார் என்பதும் வரலாறாக இருக்கும் நாட்டில், விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடமைகளையும் தொலைத்த போராளிகளும் இயக்கத்தவர்களும் மட்டும் இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன?

இதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம். அதை புரிந்துகொள்ள முதலில் பகத் சிங்குடன் காந்தியைக் கொஞ்சமாக ஒப்பிட்டு பார்ப்பது பேருதவியாக இருக்கும்.

மிஞ்சிப்போனால் நமக்கு பகத்சிங் பற்றி தரப்பட்ட செய்திகள் என்னென்ன? அவர் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசியவர். லாலா லஜபதிராயைக் கொன்ற பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்சை கொன்றவர். அவ்வளவுதானே? இருபத்து மூன்றாண்டுகள் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்த பகத் சிங், சிறையில் இருந்த சில மாதங்களில் மட்டும் 151 புத்தகங்களை வாசித்து, ஆறு சிறு நூல்களை எழுதிய சிந்தனாவாதி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சிறை என்றால் வெள்ளைக்காரர்களின் செல்லப்பிள்ளைகளுக்கு தரப்பட்ட சகல சௌபாக்கியங்களுடன் கூடிய சிறையல்ல. மிக மோசமான சித்திரவதைகளையும் வசதிக் குறைபாடுகளையும் கொண்ட கொலைக்கூடங்கள் அவை. அங்கே தன் இரண்டு சக போராளிகளை உண்ணாவிரதத்தில் பலிகொடுத்திருந்தார் பகத் சிங். இந்த மரணங்கள் ஏற்படுத்திய உளவியல் அழுத்தத்தையும் மீறி, அவர் படித்திருக்கிறார், எழுதியிருக்கிறார்.  (அப்போதைய போராளிகளில் சிறையில் மிக அதிகமாக அடி உதை வாங்கியவர்கள் பகத்சிங், ஜெயதேவ் கபூர், மகாவீர் சிங், டாக்டர் கயா பிரசாத் ஆகியோரே. அதிலும் பகத் சிங்கே முன்னணியில் இருந்திருக்கிறார். விசாரணையின் போது இது தினசரி நிகழ்வு என்று தன் நூலில் குறிப்பிடுகிறார் சிவ வர்மா).

இப்போது உண்ணாவிரதம் இருப்பவர்கள் பலரும் தவறாமல் சொல்லும் வாசகம் ‘நாங்கள் காந்திய வழியில் போராடுகிறோம்’ என்பதுதான். காந்திதான் உண்ணாவிரதத்தையே கண்டுபிடித்தார் எனும்படியான வலுவான பிரசாரத்தின் விளைவுதான் இந்தப் பொதுவான மனோநிலைக்கு அடிப்படை. பகத் சிங், தன் சிறை வாழ்வில் மட்டும் 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று கோரியும் கைதிகளுக்கு அடிப்படையான வசதிகள் கோரியும் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதங்கள் அவை. தற்கொலை தொடர்பாக தன் நண்பன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் ‘விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் சிறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட, அது குறித்து நேரடி அனுபவம் உள்ளவர்கள் தேவை இல்லையா?’ என்று கேட்கிறார். இரண்டாவது உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அரசுக்கு அறிவிக்கும் கடிதத்தில், தேவைப்பட்டால் அரசியல் கைதிகளை இரண்டு பிரிவாக பிரித்து (வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் வன்முறையில் ஈடுபடாதோர்) கையாள வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் பகத் சிங்.  தூக்குத் தண்டனை உறுதி என்பது தெரிந்திருந்தும் பகத் சிங் சிறையில் இருந்தபடியே போராட்டத்தை நடத்தினார்.

‘அவருடைய இரண்டாவது உண்ணாவிரதம், 64  நாள்கள் நீடித்தது. ஒரு மாத உண்ணாவிரதத்துக்குப் பிறகு, தன் வசீகரமான உருவத்தை இழந்து, குற்றுயிராக நீதிமன்றத்துக்குத் தூக்கிவரப்பட்டார் பகத்சிங்!’ என்று குறிப்பிடுகிறார் அவர் தோழர் சிவ வர்மா. பகத் சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிட வைக்க மிக மோசமான வன்முறையைக் கையாண்டது ஆங்கிலேய அரசு. அதிலொன்றாக, அவர்கள் அறையில் உள்ள தண்ணீர் பானையில் பாலை நிரப்பி போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதன் பொருள் பாலைக்குடி எனும் கருணையல்ல; போராடினால் தண்ணீர்கூட இல்லாமல் சாவாய் எனும் எச்சரிக்கை.

உடல் நல ஆராய்ச்சிக்காக உண்ணாவிரதம். தொழிலாளர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதிருக்க உண்ணாவிரதம். அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய இரட்டை வாக்குரிமையை ஒழித்துக்கட்ட உண்ணாவிரதம். கணக்கு போட்டு பார்த்தால் காந்தி இந்திய மக்களுக்கு எதிராக இருந்த உண்ணாவிரதம்தான் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தின் தன்மையை புரிந்துகொள்ள சத்திய சோதனை புத்தகத்தில் உண்ணாவிரதம் எனும் அத்தியாயத்தை (பக்கம் 516) படித்துப்பாருங்கள். அதில் தொழிலாளர்களுக்கான தன் உண்ணாவிரதம் ஆலை முதலாளிகளுக்கு நிர்பந்தம் தருவதற்காக இல்லை என மீண்டும் மீண்டும் சொல்கிறார் காந்தி. தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டு அது முதலாளிகளை நிர்பந்திப்பதற்காக இல்லை என சொன்ன ஒரே தலைவன் காந்தி மட்டுமே. (போராட்ட முடிவில் மிட்டாய்கள் சிதறியதைப் பற்றி விவரிக்கும் அளவுகூட அந்தப் போராட்டம் பற்றியோ அதன் முடிவு பற்றியோ அவர் விவரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).

ஆனாலும், பகத் சிங்கை நாம் எப்படிப் பார்க்கிறோம்? காந்தியை எப்படிப் பார்க்கிறோம்? பகத்சிங் இடுப்பில் குண்டை கட்டியபடியே அலைந்தவன் என்பது மாதிரியான வெகுஜன அபிப்பிராயம்தான் உருவாகியுள்ளது. யுத்தத்துக்கு ஆள் சேர்த்த காந்திக்கோ சாத்வீக பிம்பம்! இது திட்டமிடப்பட்ட பிரசார மோசடி அல்லவா?

புரட்சியாளர்கள் எப்போதுமே ஜனநாயகத்துக்கு எதிரானவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.  1928 ல் பகத்சிங் தலைமையில் கூடிய புரட்சியாளர்களின் கூட்டத்தில், இயக்கத்தை ஜனநாயகப்படுத்தவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. யாரோ ஒருவரை இயக்கத்துக்கு தலைவராக்கிவிட்டு, அவருடைய சித்தத்துக்கு இயக்கத்தை விட்டுவிடுவதை பகத் சிங் விரும்பவில்லை. அவரது யோசனையின்படி, இயக்கத்தை வழிநடத்த ஒரு மத்திய கமிட்டி அமைக்கப்பட்டது. கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை வகுக்க அதற்கு அதிகாரமும் வழங்கப்பட்டது. (விடுதலைப் பாதையில் பகத் சிங், பக்கம் 59).

பாராளுமன்றத்தின்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னால், இயக்கத்தின் மத்திய குழு கூடுகிறது. அதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தொழில் தகராறு மசோதா மற்றும் பாதுகாப்பு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க குண்டு வீசும் முடிவு எடுக்கப்படுகிறது. ஆட்கள் இல்லாத இடத்தில் குண்டுவீசிவிட்டு கைதாவது, அதன்வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் முடிவாகிறது. அதனை தானே செய்வதாகச் சொல்கிறார் பகத்சிங். மற்ற உறுப்பினர்கள் அவரை அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். (குண்டு வீச்சில் ஈடுபடுபவருக்கு தூக்கு உறுதி என உணர்ந்தே அவர்கள் அம்முடிவை எடுக்கிறார்கள். ஆகவே எதிர்கால இயக்க நடவடிக்கைகளுக்கு அவசியம் என்று கருதி பகத்சிங்கை இச்செயலில் ஈடுபடுத்த மற்ற தோழர்கள் விரும்பவில்லை). முடிவு, கமிட்டியின் பரிசீலனைக்கு வருகிறது. பெரும்பான்மை முடிவுப்படி பகத்சிங் இந்த செயலில் பங்கேற்கக்கூடாது என முடிவாகிறது.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, சுகதேவ் பஞ்சாபிலிருந்து வருகிறார். அவர் இம்முடிவைக்கேட்டு மற்ற தோழர்களை கடிந்துகொள்கிறார். மற்ற தோழர்கள் குண்டு வீசி கைதானால் அதனை பகத் சிங் அளவுக்குப் பிரசாரமாக்க முடியாது எனும் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.  நோக்கமும் நிறைவேறாமல், வீணே இருவரைப் பலியிட வேண்டுமா என்று வினவுகிறார். நீண்ட சமாதானங்களுக்குப் பிறகு மீண்டும் முடிவு ஓட்டெடுப்புக்கு வருகிறது. பகத்சிங் தாக்குதலில் கலந்துகொள்வது என முடிவாகிறது.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! வாழ்வின் இன்பங்களை நுகரும் பேரவாவில் இருக்கும் இளைஞர்கள், தங்கள் உயிரைக் கொடுக்க முன்வந்து தங்கள் தோழனின் உயிரை நீட்டிக்க முடிவெடுக்கிறார்கள். எதற்கு? இயக்கத்தின் எதிர்கால நலனுக்காக. அதே சமயம், தங்கள் லட்சியமும் தோழர்களின் லட்சியமும் வீணாகக்கூடாது என்பதற்காக, காப்பாற்றப்படவிருந்த நபர், தன் உயிரைக் கொடுக்க முன்வருகிறார். வீரம், தியாகம், ஜனநாயகம் ஆகியவற்றை நாம் இவர்களிடம் அல்லாமல் வேறு யாரிடமிருந்து கற்கமுடியும்?

மறுபுறம், காந்தியின் செயல்பாடுகளை பாருங்கள். சௌரி சௌரா சம்பவத்துக்காக, தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்ததி,  சக காங்கிரஸ் தலைவர்களையே திகைப்பில் ஆழ்த்தினார். பட்டாபி சீதாராமையா தோல்வியடைந்தபோது, அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடிந்ததா காந்தியால்? தன் விருப்பத்துக்குக் குறுக்காக நிற்கும் எதிர் சிந்தனைகளைச் சவக்குழிக்கு அனுப்புவதன் பெயர் அடாவடித்தனம் அல்லவா?

(தொடரும்)

0

வில்லவன்

கருணாநிதி மீது நம்பிக்கை இல்லை!

க – 28

தனிக்கட்சி தொடங்கிவிட்டார் எம்.ஜி.ஆர். இனி பிரச்னை இல்லை என்றுதான் எல்லோருமே நினைத்தனர். ஆனால் கருணாநிதியால் அப்படி நினைக்கமுடியவில்லை. காரணம், எம்.ஜி.ஆரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர். ஒருவேளை அவர் அமைதியாக இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் அமைதியாக இருக்கவிட மாட்டார்கள். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம் இருக்கிறார். மோகன் குமாரமங்கலம் இருக்கிறார். ஈ.வெ.கி. சம்பத் வேறு அவ்வப்போது பேசிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். இதுதான் கருணாநிதியின் கணிப்பு.

அடுத்தது என்ன செய்யப்போகிறார் எம்.ஜி.ஆர் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. அப்போது தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்த கே.ஏ. மதியழகனும் எம்.ஜி.ஆரும் அடிக்கடி சந்தித்துப் பேசுவதாகக் காற்றுவாக்கில் காதில் விழுந்தது கருணாநிதிக்கு. ஏதோ தீய்ந்த வாடை அடிப்பது போல இருந்தது அவருக்கு. ஆம். எம்.ஜி.ஆர் வலைவிரிக்கத் தொடங்கிவிட்டார். உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டென்று கருணாநிதியின் நினைவுக்கு வந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.

திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக இருந்தவர். தஞ்சாவூர் பகுதியில் செல்வாக்கு நிறைந்தவர். திமுகவின் முக்கியப் பிரமுகர்களுள் ஒருவர். கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். முக்கியமாக, மதியழகனின் நெருங்கிய நண்பர். ஆகவே எஸ்.டி. சோமசுந்தரத்தை அழைத்தார். கே.ஏ. மதியழகனைச் சென்று பாருங்கள். அவருடைய மனநிலையைத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை முகாம் மாறும் முடிவுக்கு வந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். இதுதான் எஸ்.டி. சோமசுந்தரத்துக்கு கருணாநிதி கொடுத்த பணி.

சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் சேரப்போகிறார் மதியழகன் என்ற செய்தி அரசல் புரசலாகக் கசிந்துவிட்ட நிலையில் மதியழகனைச் சந்தித்துப் பேசுவது நேர விரயம் என்பது எஸ்.டி. சோமசுந்தரத்தின் கருத்து. ஆனாலும் கருணாநிதியின் வற்புறுத்தல் காரணமாக மதியழகனைச் சந்தித்துப் பேசினார். சிலபல வார்த்தைகள் வெளிப்பட்டபோதே தெரிந்துவிட்டது மதியழகன் முகாம் மாறப்போகிறார் என்பது. உடனடியாக கருணாநிதியைச் சந்தித்து விஷயத்தைக் கூறினார்.

ஆனாலும் மதியழகனை இழக்க மனம் வரவில்லை கருணாநிதிக்கு. எத்தனை ஆண்டுகால நட்பு. திமுகவின் முக்கியத் தூண்களுள் ஒருவர். செயல்வீரர். அதன் காரணமாகவே தன்னுடைய முதல் அமைச்சரவையில் மதியழகனுக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்திருந்தார் கருணாநிதி. ஆனால் மதியழகனின் சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி தொடர்பாக எழுந்த சொத்து முறைகேடு காரணமாக பெரிய அளவில் சர்ச்சைகள் எழுந்ததால் மதியழகனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது.

இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆனபோது மதியழகனுக்கு அமைச்சராக வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் சர்ச்சைகளையும் தவிர்க்கவேண்டும்; கௌரவத்தையும் கொடுக்கவேண்டும் என்பதால் சபாநாயகர் என்ற கௌரவம் நிறைந்த பொறுப்பைக் கொடுத்தார் கருணாநிதி. அந்தஸ்துதான் பெரியதே தவிர ஆஸ்திகள் பெருக வாய்ப்பில்லாத பதவி என்பது பொதுவான கணிப்பு. ஆகவே, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவையில் இணைவதற்கே அதிகம் விரும்பினார் மதியழகன். ஆனால் அதற்கு கருணாநிதி சம்மதிக்கவில்லை.

அதிருப்தியில் இருந்த மதியழகனை அழைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர் முயற்சி மேற்கொண்டார். அதைத் தடுக்கவே மீண்டும் ஒருமுறை எஸ்.டி. சோமசுந்தரத்தைத் தூது அனுப்பினார் கருணாநிதி. அப்போது அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துசேர்ந்தது. ஆம். மதியழகனுடன் எஸ்.டி.சோமசுந்தரமும் கைகுலுக்கிவிட்டார். அவரும் அதிமுகவில் இணையப் போகிறார். எஸ்.டி. சோமசுந்தரத்தைத் தூதராக அனுப்பியது எத்தனைப் பெரிய தவறு என்பது கருணாநிதிக்குப் புரிந்தது. அவருடைய கணிப்புகள் அடுத்தடுத்து பொய்த்துப் போகத் தொடங்கின.

அப்போது கருணாநிதி அரசுக்கு எதிராக அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பிரம்மாண்ட ஊர்வலம் ஒன்றை சென்னையில் நடத்தின. 10 நவம்பர் 1972 அன்று நடந்த ஊர்வலத்தை அண்ணா சாலையில் இருந்து பார்வையிட்டார் சபாநாயகர் மதியழகன். தார்மீக அடிப்படையில் அது சரியா என்ற சர்ச்சை எழுந்தபோதும் மதியழகன் முகாம் மாறிவிட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. அதேசமயம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யாமல் சட்டமன்றத்தில் நடக்கப் போகும் குழப்பங்களுக்குத் தலைமையேற்கப் போகிறார் என்பது பிறகுதான் தெரியவந்தது.

13 நவம்பர் 1972 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் கூடியது. கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே. தங்கமணி ஒழுங்குப் பிரச்னை ஒன்ø எழுப்பினார். கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்னால் ஒழுங்குப் பிரச்னையை எதையும் கிளப்பக்கூடாது என்பது சட்டமன்ற விதி. ஆனாலும் அந்த ஒழுங்குப் பிரச்னைக்கு அனுமதி கொடுத்தார் சபாநாயகர் மதியழகன். அதுதான் சபாநாயகர் முகாம் மாறிவிட்டார் என்பதற்கான நேரடி சாட்சி. அப்போது சமீபத்தில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் ராஜினாமா செய்தது பற்றியும் பிறகு அமைச்சரவையில் இணைந்தது பற்றியும் ஒழுங்குப் பிரச்னை எழுப்பப்பட்டது. ஆனால் அமைச்சரவையை மாற்றியமைப்பது முதலமைச்சரின் தனி உரிமை என்றது ஆளுங்கட்சித் தரப்பு.

அடுத்ததாக, எம்.ஜி.ஆர் எழுந்து இன்னொரு பிரச்னையைக் கிளப்பினார். மாநில அமைச்சரவை ஆளுங்கட்சியின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது; மக்களின் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. ஆகவே, இந்த அமைச்சரவை தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டவிதி ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதா? என்பதுதான் எம்.ஜி.ஆர் எழுப்பிய ஒழுங்குப் பிரச்னையின் சாரம்.

எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிவிட்டார் என்பது உண்மை. அவருடன் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களும் திமுகவில் இருந்து விலகிவிட்டார்கள் என்பதும் உண்மை. அதன்மூலம் ஒட்டுமொத்த திமுகவும் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டது என்பது எம்.ஜி.ஆரின் வாதம். அதேசமயம், மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டது என்பதை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியத்தையும் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில் வைக்கவில்லை. இருந்தாலும் ஒழுங்குப் பிரச்னை எழுந்துவிட்டது.

பதில் சொல்லியே தீரவேண்டும் என்ற நிலை. எழுந்தார் கருணாநிதி. சபையில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு வேறு விவாதத்தை எடுத்துக் கொள்ள நாங்கள் தயார். அமைச்சரவை மீது கொண்டுவரப்படும் கண்டனத் தீர்மானத்தை விவாதிக்கவும் தயார்!

எம்.ஜி.ஆரும் சபாநாயகரும் விரும்பியது விவாதங்களை அல்ல; சட்டமன்றக் கலைப்பை. சபாநாயகர் பேசினார்.

‘இன்று கிளப்பப்பட்டுள்ள பிரச்னை அசாதாரணமான பிரச்னை. இதற்கு ஓர் அசாதாரண தீர்வு கண்டுதான் சமாளிக்க முடியும்… இன்று மாநிலத்தில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்குத் தீர்வு காண சட்டசபையைக் கலைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் சிபாரிசு செய்யவேண்டும் என்ற என்னுடைய யோசனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்… சபாநாயகர் என்ற முறையில் அல்ல; ஒரு நண்பர் என்ற முறையில் சொல்கிறேன். மக்களை இன்றைக்கே சந்திக்கிறீர்களா என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார். அதற்கு முதலமைச்சர் ஏதேனும் பதில் சொல்ல விரும்புகிறாரா?’

சட்டமன்றத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் பொதுவாகச் செயல்படவேண்டிய சபாநாயகர், திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டது கருணாநிதியை கவலைகொள்ளச் செய்தது. சபாநாயகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்பதை சைகை மூலம் காட்டிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது அவையின் மூத்த உறுப்பினர்கள் தங்கமணி போன்றோரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப, 5 டிசம்பர் 1972க்கு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் மதியழகன்.

சபாநாயகரின் மனமாற்றம் கருணாநிதியைக் கவலைக்குள்ளாக்கவில்லை. ஆனால் அவருடைய அதிரடியான செயல்பாடுகள் ஆத்திரத்தை வரவழைத்தன. அப்போது சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது பற்றிப் பேச்சுகள் எழுந்தன. தயாரானார் நாவலர் நெடுஞ்செழியன்.

நாங்கள் எல்லாம் தங்களிடம் முழு நம்பிக்கை வைத்து ஏகமனதாகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் நம்பிக்கை வீணாகும் வண்ணம் அண்மைக் காலத்தில் ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு விரோதமாகத் தாங்கள் நடந்துகொண்டது கண்டு வருந்துகிறோம். தங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். ஆகவே தாங்கள் சட்டப் பேரவைத் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம் என்று தீர்மானம் எழுதப்பட்டது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் 185 பேர் அதில் கையெழுத்திட்டனர்.

தீர்மானம் தயார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சட்டசபையைக் கூட்டுவதில் சிக்கல். காரணம், சபாநாயகர் மதியழகன் கூட்டத்தொடரை ஒத்திவைத்துவிட்டுச் சென்றிருந்தார். பிறகு நிபுணர்களின் ஆலோசனையின்படி சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கையில் கவர்னர் இறங்கினார். 2 டிசம்பர் 1972 அன்று சட்டமன்றம் மீண்டும் கூடியது.

மொத்தம் இரண்டு திட்டங்கள் தயாராக இருந்தன. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது ஆளுங்கட்சியின் திட்டம். அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பது அதிமுக, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் திட்டம்.

2 டிசம்பர் 1972 அன்று சட்டமன்றம் கூடியது. கேள்வி நேரம் முடிந்ததும் எழுந்த திமுக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி எழுந்தார். தற்போதைய சபாநாயகர் மீது 185 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின் 179 ஆவது விதியின்படி அதைத்தான் முதலில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து எழுந்த அவை முன்னவரான நெடுஞ்செழியன், அரசியல் சட்ட 181 ஆவது பிரிவின்படி சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் வருமானால் அப்போது சபாநாயகர் அவையில் இருந்தாலும் அவர் அவைக்குத் தலைமை தாங்கக்கூடாது என்று உள்ளது. ஆகவே, துணை சபாநாயகர் இந்த அவைக்குத் தலைமை தாங்கிட வேண்டும் என்றார்.

சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் பக்கம். துணை சபாநாயகர் ஆளுங்கட்சியின் பக்கம். அடுத்தது என்ன நடக்கும்? இடியாப்பச் சிக்கல்தான்!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

முந்தைய அத்தியாயங்கள்

சிங்கம்பட்டி கொலை வழக்கு

‘தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்ன அந்த துரைய கொன்னுடணும் என்று கடம்பூர் சொன்னான். என்னையும் கட்டாயப்படுத்தி ஒரு துப்பாக்கி எடுத்துக்கச் சொன்னான். நான் சுட்டு குறி தப்பிடுச்சுனா நீ துரைய சுடணும். நாம துரைய சுடறதுக்குள்ள, துரையோட மனைவி முழிச்சுட்டாங்கன்னாஅவங்களையும் சுட்டுக் கொன்னுடணும். நம்மள தடுக்க யாராவது வந்தா அவங்களையும் சுட்டுறனும். இதை நீ செய்ய மறுத்தால் உன்னையும் கொன்னுடுவேன் என்று என்னை கடம்பூர் மிரட்டினான். இவ்வாறு என்னிடம் சொல்லி விட்டு, துரை தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அருகே சென்றான் கடம்பூர். தூங்கிக் கொண்டிருந்த துரையின் தலையில் சுட்டான். பிறகு நாங்கள் இருவரும் கொலை நடந்த இடத்தை விட்டு ஒடி விட்டோம். ஓடும் வழியில் ஜன்னலின் வெளியே துப்பாக்கியை தூக்கி எறிந்தோம். அது கீழே விழுந்தது.’ இவ்வாறாக நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி சாட்சியம் அளித்தான்.

சுமார் 90 வருடங்களுக்கு முன்னர், 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பிரபல கொலை வழக்கு அது. கொலை நடந்தது சென்னையில். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, வழக்கு விசாரணை பம்பாய் நீதிமன்றத்தில் நடைபெற்றது. காரணம் சென்னையில் வழக்கு நடத்த முடியாத சூழ்நிலை. இந்தக் கொலையைப் பற்றிதான் ஊரெங்கும் பேச்சு. கொலைக்கான காரணங்களும், புனைவுகளும் மக்களிடையே வெவ்வேறாக பேசப்பட்டன. ஊடகங்களில் பல விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மக்கள், சார்பு நிலையைக் கொண்டிருந்தனர். சாட்சிகளின் அடிப்படையிலும், வாதப் பிரதிவாதங்களைக் கேட்டும் ஜூரி நடுநிலையான தீர்ப்பை வழங்க முடியுமா என்று சந்தேகித்த பிரிட்டிஷ் அரசு, வழக்கை சென்னையிலிருந்து பம்பாய்க்கு மாற்ற உத்தரவிட்டது.

சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசுதான் மேலே குறிப்பிடப்பட்ட சாட்சியத்தை அளித்த சிங்கம்பட்டி. இன்று சிங்கம்பட்டி ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன்.  தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கு 900 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார்.

இந்த வனப்பகுதியிலிருந்து 8374 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன், மேற் சொன்ன வழக்கின் செலவுக்காக, 1919 ஆண்டு வாடியா குடும்ப நிறுவனமான பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி (பாம்பே டையிங் நிறுவனத்தை தோற்றுவித்து நடத்தி வருபவர்கள்) கைமாற்றம் செய்தார். கைமாற்றம் செய்யப்பட்ட இடம் பின்னாளில் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. இந்த மாஞ்சோலை எஸ்டேட்டில் கூலி வேலை செய்தவர்கள்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய போது, காவல் துறையின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாம் மறுபடியும் வழக்குக்கு வருவோம். ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த அதே சமயத்தில், சுதந்தரமான 554 சமஸ்தானங்களும் இந்தியாவில் இருந்தன. இந்த சமஸ்தானங்களில், ராணுவம், தொலைத்தொடர்பு துறை மற்றும் வெளி உறவுத் துறை ஆகியவை மட்டும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இவற்றைத் தவிர, சமஸ்தான ராஜாக்களின் ஏனைய அதிகாரங்களில் ஆங்கிலேயர்கள் மூக்கை நுழைக்க முடியாது. முக்கியமான மூன்று துறைகளையும் ஆங்கிலேயர்களுக்கு இழந்துவிட்டு அப்புறம் என்ன சுதந்தரம் வேண்டிக்கிடக்கு என்று நீங்கள் புன்முறுவல் செய்யலாம்.

நிற்க. சமஸ்தான ராஜாக்களும் ஜமீந்தார்களும் தங்கள் வாரிசுகளுக்கு ஆங்கில அறிவு, கலாசாரம் ஆகியவற்றைப் புகட்டப்பட வேண்டும் என்ற மோகத்தால், ஆங்கிலேயர்கள் இவர்களுக்கென ஆரம்பித்த பிரத்தியேக பள்ளிக்கூடங்களில் சேர்த்தனர். இந்தச் சிறப்பு பள்ளிக்கூடங்களில், பொது அறிவை ஊட்டும் பாடங்களைத் தவிர, குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், பில்லியர்ட்ஸ் என அனைத்து வகையராக்களும் கற்றுக்கொடுக்கப்படும். பெரிய இடத்துப் பிள்ளைகள் தங்களுடைய அந்தஸ்துகளை எப்படித் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது உயர்த்திக்கொள்ள வேண்டும், ஆங்கிலேய துரைகளுக்கு ஈடு இணையாக விளங்க வேண்டும் என்பதுதான் இந்தச் சிறப்பு பள்ளிக்கூடத்தின் நோக்கம்.

அப்படி ஒரு பள்ளிதான் சென்னையில் செயல்பட்டு வந்த நியூயிங்டன் பள்ளி. தென் இந்தியாவிலேயே பெரிய இடத்துப் பிள்ளைகளுக்காக செயல்பட்டு வந்த ஒரே பள்ளி. இந்தப் பள்ளி எங்கே இருக்கிறது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். இப்பொழுது அது இல்லை.  இந்த வழக்கு முடிவுற்ற நிலையில், ஆங்கிலேய அரசு இந்தப் பள்ளியை இழுத்து மூடி விட்டது. அதற்கு முன்னர், இப்பொழுது தேனாம்பேட்டையில் செயல்படும் DMS – Directorate Medical Service அமைந்துள்ள இடத்தில் இயங்கி வந்தது.

இப்பள்ளிக்கு அந்த காலத்தில் மைனர் பங்களா என்ற பெயரும் இருந்தது. சட்டப்படி வயதாகாத இளையவர்களைத்தான் மைனர்கள் என்று அழைப்பார்கள். 18 வயது அடைந்தால்தான் ஒருவர் சட்டப்படி மேஜர். அதுவரை அவர் மைனர்தான். மைனர்களையும் அவரது சொத்துகளையும் பாதுகாக்கும் பொருட்டு, ஆங்கிலேய அரசாங்கம் பல சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்த சட்டங்கள் ஜமீந்தார்கள், பெரிய நில சுவான்தார்களுடைய வாரிசுகளின் நலனுக்காகவே அதிக அளவில் பயன்பட்டு வந்தது. அதனால்தான் பெரிய இடத்து வாரிசுகளை மைனர் என்று அழைக்கும் பழக்கம் வந்ததோ என்னவோ?

சிங்கம்பட்டி, கடம்பூர் மற்றும் ஏனைய பெரிய இடத்துப் பிள்ளைகளும் மைனர் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சமயத்தில், அந்தப் பள்ளியின் துணை முதல்வராக செயல்பட்டு வந்த ஆங்கிலேயர் டே லா ஹே (De La Haye). இந்த டே லா ஹே துரையின் சகோதரி தான், இந்தியாவில் அந்தக் காலத்தில் பெண்களின் கல்விக்காக பாடுபட்ட மிஸ் டார்த்தி டே லா ஹே. மிஸ் டார்த்தி டே லா ஹேவின் முயற்சியில்தான் சென்னையில் ராணி மேரி கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.

சகோதரி போல அவ்வளவு நல்லவர் இல்லை இந்த துரை. குணங்கெட்டவர். இனவாதி. அவமரியாதையான வார்த்தைகளையெல்லம் பயன்படுத்துவார். இவர் தன் வயதுக்குப் பொருந்தாத சிறிய வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவள் ஓர் ஆங்கிலேயப் பெண். அனைவரிடமும் நட்பாகப் பழகுவாள். அதற்கு மேலும் கூட. அவளுக்கு ஏகப்பட்ட மைனர்கள். இந்தச் சமயத்தில்தான் ஹே துரை, நடு இரவில் தூக்கத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு பரலோகம் அனுப்பப்பட்டார்.

துரை மைனர்களைப் பார்த்து எப்பொழுதோ ஒரு முறை, தமிழர்கள் காட்டு மிராண்டிகள் என்று சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அதுதான் துரை கொலைக்குக் காரணம் என்று போலீசாருக்குத் தோன்றவில்லை. இருப்பினும் கொலைக்கான வலுவான காரணம் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. குற்றம் நடந்த இடத்தில் ஹேவின் மனைவி இருந்திருக்கிறாள். துப்பாக்கிச் சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த அவள் அலறியிருக்கிறாள். யாரோ ஒரு மாணவன் (மைனர்) மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். அரசு மருத்துவரும் பத்து நிமிடத்தில் சம்பவம் நடந்த இடத்துக்குகு ஆஜராகி விட்டார். துரை இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். துரையின் மனைவி பித்துப் பிடித்தவள் போல் இருந்தாள். கொலைக்குப் பிறகு துரையின் மனைவியை அரசாங்கம் இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டது.

பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது இந்தச் சம்பவம். காரணம், கொலை நடந்த இடத்திலிருந்த ஒரே சாட்சி துரையின் மனைவிதான். அவளை போலீசார் விசாரிக்காமல், ஏன் வெளிநாடு செல்ல அனுமதித்தனர்? எது எப்படியோ போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிங்கம்பட்டியின் மீதும் கடம்பூரின் மீதும் சந்தேகம் விழுந்தது.

துருவித் துருவி விசாரித்ததில், சிங்கம்பட்டி அப்ரூவர் ஆனான் என்று சொல்லி ,அவனை சாட்சியாக்கி, கடம்பூரின் மீது கொலை செய்ததற்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை சென்னையிலிருந்து பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
பொதுவாக கிரிமினல் வழக்குகளைத் தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இந்த வழக்கை பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நார்மன் மெக்லாய்டே விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் செஷன்ஸில் கிரிமினல் வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் நீதிபதி கரம்ப். அந்தக் காலத்தில், கிரிமினல் வழக்கை விசாரிக்கும் தருவாயில், நீதிபதிகள் பழைய திரைப்படங்களில் பார்ப்பது போன்று பிரத்தியேக உடை, விக் (டோப்பா – தலை அங்கி), சிவப்பு நிற கவுன் (மேல் அங்கி), அரைக்கால் சட்டை, பட்டு காலுறை, பம்ப் காலணிகள் என்று தடல்புடலாக அணிந்து கொண்டு காட்சியளிப்பார்கள். தலைமை நீதிபதியும் வழக்கத்துக்கு மாறாக அவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.

சென்னை மாகாணத்தின் பப்ளிக் பிராஸிக்யூட்டர் சிட்னி சிமித் மற்றும் பாம்பேயைச் சேர்ந்த வெல்டன் இருவரும் அரசு தரப்பில் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட கடம்பூரின் சார்பாக பாம்பேயைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் வாடியாவும், அவருக்குத் துணையாக சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்கள் டாக்டர் சுவாமிநாதன், எத்திராஜ் ஆகியோரரும்ஆஜரானார்கள். முக்கிய சாட்சியான சிங்கம்பட்டியின் சார்பாக, தாவர் என்ற வழக்கறிஞர் வாதாடினார். வழக்கு விசாரணைக்காக சிறப்பான நடுவர் குழு (ஜூரி) அமைக்கப்பட்டது.

வழக்கு விசாரணை தொடங்கியது. அரசுத் தரப்பினரால் கூண்டில் ஏற்றப்பட்டு சாட்சியம் சொல்ல வைக்கப்பட்டான் சிங்கம்பட்டி. சாட்சிக் கூண்டில் சிங்கம்பட்டி சொன்னதைத்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம். சிங்கம்பட்டியை அடுத்து மற்ற மைனர்களும் சாட்சியம் அளித்தனர். அரசுத் தரப்பில் கீழ்கண்ட வாதம் முன்வைக்கப்பட்டது. துரையைக் கொல்ல வேண்டும் என்று மைனர்கள் கூட்டு சதி செய்திருக்கின்றனர். அதன் விளைவாகத்தான் சிங்கம்பட்டியும், கடம்பூரும் துரையை கொலை செய்திருக்கிறார்கள்.

தலைமை நீதிபதி, மைனர்கள் அளித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையை ஏற்க மறுத்தார். அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகளில் ஒருவனான தலவான்கோட்டை பெரிய பொய் புழுகி என்று மற்ற மைனர்கள் தங்களது சாட்சியத்தில் கூறியிருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும், மைனர்களிடையே யார் பிரமாதமாக பொய் சொல்வார்கள் என்ற போட்டியெல்லாம் நடந்திருப்பது சாட்சியத்தில் பதிவாகியிருப்பதை ஜூரிக்கு மேற்கோள் காட்டினார். சப்தூர் என்ற மைனர் அளித்த சாட்சியம் நம்பக்கூடியதாக இருந்தாலும், அவன் தன்னுடைய சாட்சியத்தில் மைனர்களுக்கு இடையே துரையைக் கொல்ல கூட்டு சதி நடந்ததாகவோ அல்லது சிங்கம்பட்டியும் கடம்பூரும் தான் துரையைக் கொன்றார்கள் என்றோ அவன் குறிப்பிடவில்லை என்ற விவரத்தையும் தலைமை நீதிபதி ஜூரிக்கு எடுத்துக்கூறினார்.

சிங்கம்பட்டியின் சாட்சி, சந்தேகத்துக்கு இடமளிப்பதாகவும், உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றும் தலைமை நீதிபதி வாதிட்டார். சிங்கம்பட்டியின் கூற்று பொய் என்று நிரூபிக்க, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அவர் பயன்படுத்திக்கொண்டார். துப்பாக்கி உற்பத்தி செய்யும் பம்பாயைச் சேர்ந்த ஒரு பிரபல நிறுவனத்திலிருந்து ஒரு வல்லுனரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அவரிடம் காட்டி, அந்த வல்லுனரின் சாட்சியத்தைப் பதிவு செய்தார். தன் வாதத்தை ஜூரியின் முன் சமர்ப்பித்தார்.

‘சிங்கம்பட்டி தன்னுடைய சாட்சியத்தில், கொலை நடந்த பிறகு துப்பாக்கி தோட்டாக்களுடன் மாடியிலிருந்து ஜன்னலின் வழியே தூக்கி எறியப்பட்டதாகத் தெரிவித்திருந்தான். ஆனால் சம்மந்தப்பட்ட துப்பாக்கியை ஆய்வு செய்த வல்லுனர், தான் ஆய்வு செய்த துப்பாக்கியில்  சிராய்ப்புகளோ கோடுகளோ இல்லை என்று சொல்லியிருக்கிறார். 40 அடி உயரத்திலிருந்து துப்பாக்கியைத் தூக்கிப் போட்டிருந்தால், துப்பாக்கி துண்டு துண்டாக உடைந்து போயிருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல் தோட்டாக்களை மாடியிலிருந்து வீசியிருந்தால் அவை சிதறுண்டு போயிருக்குமே தவிர மொத்தமாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டிருக்காது என்ற செய்தியையும் தெரிவித்தார்.எனவே நம்பகத்தன்மையில்லாத சாட்சிகளை வைத்து ஒருவர் குற்றவாளி என்று உறுதிபடுத்தமுடியாது.’

வாத பிரதிவாதம் முடிந்த பிறகு, ஜூரி ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தது. தீர்ப்பு கூறும் நாளன்று நீதிமன்றத்தில் பெரும் திரளான கூட்டம் கூடி இருந்தது. தலைமை நீதிபதியின் மனைவியும் வந்திருந்தார். கடம்பூர் குற்றவாளி இல்லை என்று ஜூரி முடிவெடுத்திருந்தது.  நீதிமன்றத்தில் பெரிய கரகோஷம் எழுந்தது. தலைமை நீதிபதியின் மனைவிதான் முதன் முதலில் தன் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். கடம்பூர் விடுதலை செய்யப்பட்டான். காவல் துறை இந்த வழக்கில் தன்னுடைய விசாரணையை சரியாக நடத்தவில்லை என்ற கருத்தை நீதிபதி வெளிப்படுத்தினார். யாரோ ஒருவன் பின் புலத்தில் இருந்து கொண்டு இந்தப் படுகொலையை செய்திருக்கக்கூடும். கொலை செய்தவன் சிங்கம்பட்டியையும் கடம்பூரையும் பகடைக் காயாக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது.

போலீசார் போட்ட பொய் வழக்கிலிருந்து மைனர்கள் தப்பித்ததற்கு முக்கிய முதல் காரணம் சென்னையின் அப்போதைய ஆளுநர் வில்லிங்டன் பிரபு. இவர் இந்த வழக்கை சென்னையிலிருந்து பம்பாய்க்கு மாற்றாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருக்கக்கூடுமா என்பது சந்தேகம்தான். காரணம் மைனர்கள்தான் குற்றம் இழைத்திருப்பார்கள் என்ற பரவலான கருத்து சென்னையில் நிலவியிருந்தது. இரண்டாவதாக, பம்பாய் நீதிமன்றத் தலைமை நீதிபதி நார்மன் மெக்லாய்ட் பாரபட்சமின்றி நல்ல முறையில் விசாரணையை நடத்தியிருந்தார். விசாரணையும் வழக்கும் முடிவாகிவிட்டது என்றாலும், தமிழர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொன்ன துரையை யார் கொன்றார்கள் என்ற விவரம் இன்றளவும் மர்மாகவே உள்ளது.

மைனர்கள் கல்லூரி வடநாட்டில் உள்ளது போல, ராஜ்குமார் கல்லூரி என்று பெரிய அளவில் மாற்றப்படும் என்று நினைத்த மைனர்களின் தகப்பனார்களுக்கு (சமஸ்தான ராஜாக்களுக்கு) பெருத்த ஏமாற்றம். அந்தக் கல்லூரி, எதிர்பார்த்த அளவுக்கு மைனர்களிடம் படிப்பையோ, பண்பாட்டையோ வளர்க்கவில்லை. இப்படியொரு கல்லூரி வேண்டாம் என்று முடிவு செய்த ஆங்கிலேய அரசு மைனர் கல்லூரியை மூடிவிட்டது.

0

S.P. சொக்கலிங்கம்

விலை உயர்வு : வருத்தப்பட்டு பாரம் சுமக்கப்போவது யார்?

ஆவின் பால் விலை உயர்வும், பேருந்து கட்டண உயர்வும், மின்கட்டண உயர்வு பற்றிய முன்னறிவிப்பும் ஏற்படுத்தாத பேரதிர்ச்சியை, இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில தேசாபிமானிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் அபிமானிகளாக மட்டும் இருந்திருந்தால் இவர்களுடைய நியாயவாதத்தைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களை கட்சி சார்பற்றவர்களாகவும், நடுநிலைமையாளர்களாகவும், தேச நலனில் ஆர்வம் உள்ளவர்களாகவும், பொருளாதாரம் அறிந்தவர்களாகவும், பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களாகவும், படித்தவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதால், இவர்களுடைய வாதங்களை நாம் பொதுவில் வைத்து ஆராயவேண்டியிருக்கிறது.

கட்டண அதிகரிப்புக்கு இவர்கள் அனைவரும் முன்வைக்கும் காரணங்கள் என்ன? ‘ஆவின், அரசு போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் மூன்றும் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றன. முந்தைய ஆட்சியாளர்கள், கஜானாவைக் காலி செய்துவிட்டார்கள்.
மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதியுதவி அளிக்கவில்லை. இந்தச் சூழலில், கட்டணத்தை உயர்த்தாவிட்டால் இத்துறைகளை மீட்டெடுக்கமுடியாது. விலைவாசி ஏறிக்கொண்டிருக்கும் போது, மத்திய அரசும் கைவிரித்துவிட்ட நிலையில், மாநில அரசு என்னதான் செய்யும்?’

எனவே, கட்டண உயர்வு ‘தவிர்க்கவியலாததாகிவிட்டது’. ஆவின் பால், ஒரு லிட்டர் ரூபாய் 17.75 ல் இருந்து, ரூ. 24 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது லாபத்துக்கான கட்டண அதிகரிப்பு அல்ல, நஷ்டத்தைக் குறைப்பதற்கான கட்டண அறிவிப்புதான் என்று ஆவின் சொல்லியிருக்கிறது. பால் கொள்முதல் விலை ரூ.18ல் இருந்து ரூ.20ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. 35 சதவீத உயர்வு.

அரசுப் போக்குவரத்து கழகம் 6,150 கோடி நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட, சென்னையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 முதல் 3 ரூபாய் வரையும், மாநிலத்தில் நகர்ப்புற பேருந்துகளில் கி.மீட்டருக்கு 28 பைசாவில் இருந்து 42 பைசாவும், வெளியூர் பேருந்துகளில் கி.மீட்டருக்கு 32 பைசாவில் இருந்து 56 பைசாவாகவும், சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 38 பைசாவில் இருந்து 60 பைசாவாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவில் இருந்து 70 பைசாவாவும் உயர்த்தப்பட்டுள்ளது. நகரப் பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாயாகவும், அதிக பட்சம் 13 லிருந்து 16 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மொத்தக் கடன் தொகை ஒரு லட்சம் கோடியைக் கடந்துவிட்டதையும், கடன் சுமையைச் சமாளிக்க, ‘உங்களிடம் இல்லாமல் வேறு யாரிடம் செல்வேன்?’ என்று ஜெயலலிதா டிவியில் உருகியதையும் மேற்படி நண்பர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நஷ்டம் ஏற்பட்டுள்ளதை யாராவது மறுக்கமுடியுமா? அல்லது அந்த நஷ்டத்தை தமிழக மக்களாகிய நாம்தான் ஈடுசெய்யவேண்டும் என்பதையாவது யாராவது மறுக்கமுடியுமா?

எதற்காக அரசின் நஷ்டத்தை நாம் சுமக்கவேண்டும் என்று வெகுளித்தனமாகக் கேட்பவர்களிடம் இவர்கள் இப்படிச் சீறுவார்கள். இலவசங்களை அள்ளிக்கொடுக்கும்போது வாங்கிக்கொண்டாய் அல்லவா? மானியங்களை அள்ளிக் கொடுத்தபோது இருகரம் கூப்பினாய் அல்லவா? கொடுத்த அரசு கஷ்டம் வந்து தவிக்கும்போது, வாங்கிக்கொண்ட நீ மட்டும் சுகித்திருக்கலாமா?

நீங்கள் சொல்வது நியாயம்தான் என்று பேச்சுக்கு ஒப்புக்கொண்டு இவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். ‘இந்தக் கட்டண உயர்வுக்குப் பிறகும் மேற்படி அரசுத் துறைகள் நஷ்டத்தில்தான் இயங்கும் என்று சொல்கிறீர்களே. எதிர்காலத்தில் இந்த நஷ்டம் வராமல் இருக்க என்னதான் செய்வது? நஷ்டம் ஏற்பட ஏற்பட, கட்டணத்தை அதிகரித்துக்கொண்ட இருக்கவேண்டியதுதானா? என்னதான் தீர்வு?’ நெற்றிப்பொட்டில் அடித்தது போல் ஒரே வார்த்தையில் பதில் வந்து விழும். ‘தனியார்மயம்.’

கருணாநிதி எதிர்ப்பு, ஜெயலலிதா ஆதரவு இரண்டையும் கடந்து; கட்சி, அரசியல் பேதங்கள் கடந்து; சாதி, மத வேறுபாடுகள் கடந்து; படித்தவர்களையும், சிந்திப்பவர்களையும், பொருளாதாரம் பேசுபவர்களையும், மக்கள் ஆர்வலர்களையும், அறிவுஜீவிகளையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக தனியார்மயம் திகழ்கிறது.

கட்டண உயர்வை முன்வைத்த ஜெயலலிதா அரசும் அதனை ஆதரிக்கும் கூட்டமும், தனியார்மயத்தையே தனது இறுதி கொள்கையாக வரித்துக்கொண்டுள்ளது. எனவேதான், ஜெயலலிதா ஆதரவாளர்களோடு சேர்த்து தனியார்மய ஆதரவாளர்களும் ஒன்று கலந்து, கட்டண அதிகரிப்புக்கு நியாயம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அரசுத் துறைகள் நஷ்டத்தில் இயங்கவேண்டும் என்பதுதான் இவர்களுடைய உண்மையான விருப்பம். கல்வி, மருத்துவம் உள்பட எந்தவொரு அரசுத் துறையும் சரிவர இயங்கவில்லை என்று பொதுமக்களோடு சேர்ந்து இவர்களும் அங்கலாய்ப்பார்கள். அரசுத் துறைகளின் நஷ்ட கணக்குகளை, புள்ளிவிவரங்களோடு அக்கறையுடன் முன்வைப்பார்கள். ஆனால், பொதுமக்களிடம் இருந்து இவர்கள் வேறுபடும் இடம், தனியார்மயம்.

கவனித்துப் பார்த்தால் தெரியும். சமச்சீர் கல்வி கூடாது என்று ஜெயலலிதா முன்பு உத்தரவிட்டபோது, அரசுப் பள்ளிகள் சீரழிந்த நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதாவின் வாதத்துக்கு இவர்கள் வலுவூட்டினார்கள். அரசுப் பள்ளிகளால் என்றென்றும் வெற்றிகரமாக இயங்கமுடியாது என்பதே இவர்கள் வாதம். அரசுப் பள்ளிகளால் தரமான கல்வியை வழங்கமுடியாது என்பதால் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்று இவர்கள் வாதிட்டதை யாரும் மறந்திருக்கமுடியாது. தனியார் பள்ளிக் கட்டணம் அதிகமாக இருந்தபோதும், அவர்கள் வழங்கும் கல்வி தரமானது என்று இவர்களே முன்னர் புள்ளிவிவரங்களை அளித்தனர். கல்வி வழங்கும் பணியை அரசு எடுத்துக்கொண்டால் இப்படித்தான் ஆகும் என்று இடித்துக்காட்டியவர்களும் இவர்களே.

தனியார் கல்வி நிறுவனங்களை வரவேற்றது போலவே தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களையும், தனியார் போக்குவரத்து அமைப்புகளையும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களுடைய இன்னொரு முகத்தையும் நாம் பார்த்திருக்கிறோம். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை இவர்கள் எதிர்ப்பார்கள். இலவச மின்சாரத்தை எதிர்ப்பார்கள். இலவச அரிசியை எதிர்ப்பார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பார்கள். தொழில் முனைவோரை ஆதரிக்கவேண்டும் என்று வாதிடுவார்கள். அரசுத் துறைகளையும் தனியார் துறைகளையும் ஒப்பிட்டுக் காட்டி, அரசுத் துறைகள் அழிந்துபடவேண்டும் என்று இவர்கள் சாதுரியமாக தர்க்கம் செய்வார்கள். எதிர்கால இந்தியாவை அரசால் உருவாக்கமுடியாது, தனியார் நிறுவனங்களாலேயே உருவாக்கமுடியும் என்று ஆருடம் சொல்வார்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உள்பட உலகம் முழுவதிலும் இவர்கள் பரவியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் கரத்தை வலுவிழக்கச் செய்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் கரத்தை வலுப்படுத்துவதே இவர்கள் லட்சியம். இவர்களுடைய இலக்கு,‘வளர்ந்து வரும் மிடில் கிளாஸ்.’ அடித்தட்டு மக்களின் நலன்கள்மீது இவர்களுக்கு அக்கறையில்லை. அவர்களை அரசு பராமரிப்பது வீண் செலவு என்பது இவர்கள் வாதம். ஏழைகள் சோம்பேறிகள் என்றும், அவர்கள் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் அவர்கள்தாம் என்றும் இவர்கள் வாதிடுவார்கள். லாபமே இவர்களுக்கு இறுதி இலக்கு. லாபமளிக்காத எதுவொன்றும் செயல்படுவதற்கு அருகதையற்றது. அந்த வகையில், அடித்தட்டு மக்களின் துன்பங்களும் எதிர்பார்ப்புகளும் இவர்களைப் பொறுத்தவரை பொருட்படுத்தக்கூடியவை அல்ல.

பெருமுதலாளி ஒருவர் நஷ்டப்பட்டால், அரசு முன்வந்து கைகொடுக்கவேண்டும். ஓர் அரசுத் துறை நஷ்டப்பட்டால், தனியாருக்குக் கொடுத்துவிடவேண்டும். இதுதான் அவர்களது நீதி. என்ரானையும் மெரில் லிஞ்சையும் கிங்பிஷரையும் எடுத்துக்காட்டி, தனியார் நிறுவனங்களின் நிர்வாக யோக்கியதையை இவர்களால் விமரிசக்கமுடியுமா?

அரசாங்கத்திடம் இருந்து இவர்கள் கோரும் உதவி ஒன்றுதான்.பெயில் அவுட்! டெக்கான் ஏர்வேஸும் கிங்பிஷர் ஏர்லைன்ஸும் இழப்பைச் சந்திக்கும்போது, அரசு கைகொடுக்கவேண்டும். அமெரிக்காவில், நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, மக்களை அல்ல தனியார் நிதி நிறுவனங்களைத்தான் அமெரிக்க அரசு ஓடோடிவந்து கரை சேர்த்தது. இந்த மக்கள் விரோத கொள்கையை எதிர்த்துதான் வால்ஸ்ட்ரீட்டிலும் அமெரிக்காவுக்கு வெளியிலும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 99 சதவீத மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு 1 சதவீதம் பேரை அரசு பாதுகாப்பது சரியா என்னும் கேள்வியோடு அரசு எதிர்ப்பு முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

எனில், என்ன பொருள்? மக்கள் நலன் அல்ல, பெரும் முதலாளிகளின் நலனே ஓர் அரசுக்கு முக்கியம் என்பதுதானே? சேவை அல்ல, லாபமே ஓர் அரசுக்கு முக்கியம் என்பதுதானே? 99 சதவீதம் பேர் அல்ல, 1 சதவீதம் பேர்தான் முக்கியம் என்பதுதானே? 99 சதவீம் பேருக்குச் சேவை செய்யும் அரசுத் துறைகள் செயலிழந்தாலும் பரவாயில்லை, 1 சதவீதம் பேருக்கு நன்மை செய்யும் தனியார் நிறுவனங்கள் செழிக்கவேண்டும் என்பதுதானே?

ஆவின் பால் விலையேற்றத்தையும், பேருந்து கட்டண விலையேற்றத்தையும், மின்சார கட்டண விலையேற்றத்தையும் ஜெயலலிதா அரசு முன்வைத்ததற்குக் காரணம், அந்தத் துறைகள் லாபகரமாக இயங்கவேண்டும் என்பதல்ல. இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு வேட்டை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதும் பணமில்லை என்று சொல்லி அடிப்படை வாழ்வாதாரக் கட்டணங்களை உயர்த்தும் ஜெயலலிதாவா, அரசுத் துறைகளின் லாபத்துக்காக வருத்தப்படப்போகிறார்? உண்மை நோக்கம், மேற்படி அரசுத் துறைகளோடு நேரடியாகப் போட்டியிடும் தனியார் நிறுவனங்களை வளர்த்துவிடவேண்டும் என்பதுதான். தனது பொறுப்புகளில் இருந்தும் கடமைகளில் இருந்தும் சிறிது சிறிதாக விலகி, தனியார்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கவேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் திட்டம். இவருக்கு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள முதலாளித்துவ அரசுகளின் இலட்சியமும் கனவும் இதுதான்.

மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் இருந்து பெறும் பணத்தைக் கொண்டுதான் அரசுத் துறைகளை உயிர்வாழ வைக்கமுடியுமா? அரசின் தவறான கொள்கைகளுக்கு மக்களைத்தான் பொறுப்பாளியாக்கவேண்டுமா? அரசுத் துறைகளில் மலிந்துள்ள ஊழல்களுக்கு மக்கள்தான் இழப்பீடு அளிக்கவேண்டுமா? நஷ்டத்துக்கான காரணங்களைக் கண்டறிந்த களைவதற்குப் பதிலாக, அந்த நஷ்டத்தை மக்கள் தலையில்தான் கட்டவேண்டுமா? இதைச் செய்வதற்கு ஓர் அரசு தேவையா?

சோவியத் யூனியனிலும் சீனாவிலும் இதைக் காட்டிலும் பலமடங்கு சோதனைகளை மக்கள் தாங்களாகவே முன்வந்து அனுபவித்திருக்கிறார்கள். உயிரைக் கொடுத்து நாட்டுக்காகப் போராடியிருக்கிறார்கள். தங்கள் சொந்தங்களையும் சுகங்களையும் இழந்திருக்கிறார்கள். பட்டினி கிடந்திருக்கிறார்கள். ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக, தங்கள் உடைமைகள் அனைத்தையும் துறந்திருக்கிறார்கள். அரசுத் துறைகளின் இழப்பைத் தங்கள் உழைப்பால் சரிகட்டியிருக்கிறார்கள். போரில் உருகுலைந்திருந்த தங்கள் தேசத்தை, பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி நிர்மாணித்திருக்கிறார்கள். நீண்ட, நெடிய போராட்டங்களை அவர்கள் அரசுக்காக நிகழ்த்தியிருக்கிறார்கள். ஏனென்றால், சோவியத் யூனியன் மக்களுக்கான அரசாக இருந்தது. மாவோவின் சீனா, மக்களுக்கான அரசாக இருந்தது. மட்டுமல்லாமல், அவை மக்களால் நடத்தப்படும் அரசாகவும் இருந்தது. அவ்ர்களுடைய தலைவர்கள், மெய்யான அக்கறையுடன் செயல்படுபவர்களாக இருந்தார்கள்.

இதன் பொருள், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஓர் அரசுக்காக மட்டுமே தியாகங்கள் செய்யமுடியும் என்பதுதான். ஒரு பாசிஸ அரசுக்காக வருத்தப்பட்டு பாரம் சுமப்பது எந்தவகையிலும் பயனற்றது!

0

நந்தன்

ஒரு மொழிபெயர்ப்பாளரின் சவால்கள்

மொழியாக்கத்தில் உள்ள முதலும் பெரியதுமான சவால், ஒரு மொழியிலுள்ள ஒரு படைப்பைத் திருப்திகரமான முறையில் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வது.

சுனில் கில்நானியின் Idea of India புத்தகத்தை மொழிபெயர்த்தபிறகு முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். முந்தைய நூல்களோடு ஒப்பிடும்போது இதை நன்றாகச் செய்திருப்பதாகவே தோன்றியது என்றாலும், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்னும் தவிப்பும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.  முழு நேரத்தையும் மொழிபெயர்ப்புக்காக அர்ப்பணிப்பவர்களே திணறும்போது, ஆர்வத்தால் நேரம் ஒதுக்கி செய்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

அந்த வகையில், ஒரு மொழிபெயர்ப்பளர் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கியமான சவால், மொழிநடை. ஒரு மொழிபெயர்ப்பாளன், மூல ஆசிரியனைச் சார்ந்து, அவன் பார்வையிலேயே அந்த மொழியாக்கத்தைச் செய்ய வேண்டுமா; அல்லது அந்த நூலை விலை கொடுத்து வாங்கி படிக்கப்போகும் வாசகன் சலிப்படையாமல் படிக்கும் (புரிந்து கொள்ளும்) வகையில்,  எளிமையாக அம்மொழியாக்கம் இருக்க வேண்டுமா?

மூல ஆசிரியனின் மொழிநடையில், அவன் பார்வையில் ஒரு படைப்பு அமைவதுதான் சிறப்பு என்றாலும், வாசகனைக் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு தேக்கமடைந்துவிடும் என்பதே யதார்த்தம். ஒரு நூல் அதிகம் விற்பனையானால்தான் அந்நூலின் பதிப்பாளர் ஊக்கம் அடைவார்.  நன்றாக விற்பனையாகவேண்டுமானால், எளிமையான நடையில் ஒரு மொழிபெயர்ப்பு அமைவது முக்கியம்.

படிப்போர்க்குச் சலிப்பேற்படுத்தாத, எளிமையான மொழிபெயர்ப்புக்கு, அதிகமான கால அவகாசம் தேவைப்படும். இந்தக் காலஅவகாசம் எப்போதும் கிடைப்பதில்லை. மிக விரைவாக முடித்துக்கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் உள்ளாவதுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், முழுமையாகவும் திருப்திகரமாகவும் அந்த மொழிபெயர்ப்பு அமைவது அரிது.

பெரும்பாலும் ஆங்கில மூல நூல்களில், கலவை வாக்கியங்கள் மிக அதிகம் இருக்கும். ஒரு பத்தி முழுவதுமே ஒரே வாக்கியம் நிறைந்திருக்கும். ஒரு பாணியாகவே எழுத்தாளர்கள் பலர் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். மிகச்சிறந்த எழுத்துகளாக இவையே கருதப்படுகின்றன. அவ்வளவு ஏன், தமிழிலேயே, ‘இலக்கிய நயத்தோடும்’ ‘சித்தாந்த அடிப்படையிலும்’ எழுதப்படும் கட்டுரைகளை ஒருமுறைக்கு இருமுறை படித்தால்தான் விளங்குகிறது. இப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்க்கும்போது மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பில் ஆழ்ந்த அனுபவமும், விரிவான வாசிப்பனுபவமும் கைகூடியிருந்தால்தான், இப்படிப்பட்ட கடினமான சொற்றொடர்களை மொழிபெயர்க்கமுடியும்.  நீண்ட வாக்கியங்களை நீண்டதாகவே மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை. ஆனால், சொற்றொடர்களை உடைத்து எழுதும்போது, மூல ஆசிரியன் வெளிப்படுத்த விரும்பும் கருத்து மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கற்பனை படைப்பாக இருந்தாலும் சரி, கற்பனை சாராத படைப்பாக இருந்தாலும் சரி.  மூல ஆசிரியரின் பார்வையில், அவரது முதன்மை  நோக்கம் சிதைவுறாத வகையிலும் மொழியாக்கம் செய்ய வேண்டும்.  படைப்பாளிக்கும் மொழிபெயர்ப்பாளனுக்கும் இருக்கும் இந்த  இடைவெளி சரியாக நிரப்பப்பட வேண்டும். எழுத்தாளன் அந்த நூலை எந்தத் தருணத்தில் எழுதினான்? அவனது நோக்கம் என்ன? படைப்பு, அரசியல் சார்ந்ததா அல்லது சமூகம் சார்ந்ததா? அவனது நோக்கத்தைத திசை திருப்பாமல் மொழிபெயர்க்கமுடியுமா? உதாரணத்துக்கு, மூல நூலாசிரியர் ஒரு வலதுசாரியாகவும், மொழிபெயர்ப்பாளர் இடதுசாரியாகவும் இருக்கும் பட்ச்ததில், மொழிபெயர்ப்பாளர், சிந்தனை சிதைவின்றி மொழிப்பெயர்க்கமுடியுமா?

மூல ஆசிரியர் உருவகமாகப் பயன்படுத்தும் சொற்களை, பிரதேச அடிப்படையிலான சிறப்புச் சொற்களை, பிரத்தியேகமான உருவகங்களை, மூல ஆசியரின் வாழ்க்கைச் சூழலை, சமூகச் சூழலை, அரசியல் சூழலை, படைப்பின் பின்னனியை நம்மால் உணரமுடிகிறதா? இந்தப் புரிதல் மிகவும் அத்தியாவசியமானது. அப்படி ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது, பல சொற்கள், சொற்றொடர்கள் மொழிபெயர்ப்பாளருக்குப் புதியவையாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில், ஒரு மொழிபெயர்ப்பாளர் விரிவான தேடலில் ஈடுபடவேண்டியது அவசியம். இணையத்தின் மூலமாகவோ புத்தகங்களின் மூலமாகவோ அப்படிப்பட்ட தேடலை அவர் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

சில இடங்களில், ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தனிச்சொலைத் தமிழில் கொண்டுவருவது கடினமாக இருக்கலாம். ஆகவே விரித்து எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.  ஆங்கிலத்தில் 100 பக்க அளவு கொண்ட ஒரு படைப்பைத் தமிழ்படுத்தும்போது, 150 பக்கங்களுக்கு நீண்டுவிடுவது இதனால்தான்.  முடிந்தவரை குறைவான பக்கங்களில், எளிமையாக செய்யப்படும் மொழிபெயர்ப்புகளே வெற்றி பெறுகின்றன.

எவ்வளவுதான் கவனமாக செய்தாலும், இத்துறையில் அனுபவம் உள்ளவர்களைக் கலந்தாலோசித்து கொண்டாலும்,  சில இடங்களில் கவனச் சிதைவினால் தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இந்த இடத்தில், காபி எடிட்டிங் செய்வோரின் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு எழுத்தாளர் தனக்குப் பிடித்தமான தளத்தில் மட்டுமே இயங்குகிறார். பிடித்தமான விஷயத்தை மட்டுமே எழுதுகிறார். அரசியல், பொருளாதாரம்,  கதை, கவிதை, கட்டுரை, நாவல் என்று தனக்கான ஒரு தளத்தைத் தேர்ந்தடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்துவது ஒரு படைப்பாளிக்குச் சாத்தியமாகிறது. ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அப்படிப்பட்ட நிலை அமைவதில்லை.  சுய முன்னேற்றம், சுயசரிதை, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகள் சார்ந்த நூல்களை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, ஒரு மொழிபெயர்ப்பாளர் தொடர்ந்து தன் திறமையையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.  ஒவ்வொரு மொழிபெயர்ப்பும், அறிவையும் அனுபவத்தையும் விரிவடையச் செய்யும் பாடமாகவே அமைகிறது.  ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு பிரதியையும் புதிதாக எடுத்துக்கொள்கிறார். ஒவ்வொன்றில் இருந்தும் பாடங்கள் படித்துக்கொள்கிறார். ஒவ்வொன்றிலும் இருந்து அனுபவம் பெற்றுக்கொள்கிறார்.

எனவே, ஒரு படைப்பாளரைவிடவும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அதிக சவால்களைச் சந்திக்க நேர்கிறது. மூல ஆசிரியரின் இடத்தில் தன்னைப் பொறுத்திக்கொண்டு, மூல நூலின் சிறப்பை மீண்டும் உருவாக்குவது சாமானியமான செயல் அல்ல. கூடுவிட்டு கூடு பாய்வதைப் போன்ற அற்புதம் அது.

0

அக்களூர் இரவி