FDI – சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு  முடிவெடுத்துள்ளது. ஒற்றை பிராண்ட் வணிகத்தில் 100% அந்நிய முதலீடு இருக்கலாம். பல பிராண்டுகளை விற்பனை செய்யும்போது 51% வரை அந்நிய முதலீடு இருக்கலாம்.

போச்சு, போச்சு, எந்த வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்றோமோ, அவர்களுக்கே நாட்டைத் தூக்கிக்கொடுத்துவிடப் போகிறோம் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர் பலரும். இதில் கம்யூனிஸ்டுகளும் உண்டு, பாரதிய ஜனதாவும் உண்டு.

இந்திய உற்பத்தி, சேவை இரண்டுமே மூடிய துறைகளாக வெகுகாலம் இருந்துவந்தன. 1990-களில்தான் பெருமளவு அந்நிய முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன்தான் இந்தியாவின் பொருளாதாரத்திலும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அந்த மாற்றம் நல்ல மாற்றம் அல்ல என்று சொல்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். சில மாற்றங்கள் தேவலாம்; என், நாங்கள்தானே அவற்றைச் செய்தோம்; ஆனால் பிற மாற்றங்கள் கூடாது என்கிறார்கள் பாஜக. காங்கிரஸ் கட்சியினருக்கோ என்ன நடக்கிறது என்பது பற்றிக் கவலையில்லை. சோனியாவுக்கு ஓகே என்றால் அவர்களுக்கும் ஓகேதான்.

இந்த அந்நிய முதலீடு என்பதைக் கவனமாகப் பார்ப்போம். எந்தத் தொழில் நிறுவனம் என்றாலும் அதற்கு முதலீடு தேவை. தெருவோரத்தில் இட்லிக்கடை போடுவதாக இருந்தாலும் சரி, மாபெரும் அனல் மின்நிலையத்தை அமைத்து மின்சாரம் தயாரிப்பதாக இருந்தாலும் சரி. பெரிய பெரிய காரியங்களைச் செய்ய அதிக முதலீடு தேவை. கூடவே ரிஸ்க் எடுக்கும் குணம் தேவை. ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் தேவை.

இந்தியாவில் இப்படி ரிஸ்க் எடுக்கும் தொழிலதிபர்கள் 1990-களுக்குமுன் அதிகம் இல்லை. கொஞ்சம் பணத்தைப் போட்டு ஒரு தொழிலை ஆரம்பிப்பார்கள். அதற்குமேல் பணம் தேவைப்பட்டால் வங்கிகளிடம் கடன் வாங்கிக்கொள்வார்கள். அதன்பின் தொழில் நன்றாக நடக்கவில்லை என்றால் அது வங்கிகளின் பாடு! அவர்கள் பணம்தான் கோவிந்தா. தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும். தொழிலதிபர்கள் மற்றொரு தொழிலை ஆரம்பிக்கப் போய்விடுவார்கள்.

ஈக்விட்டி எனப்படும் ரிஸ்க் முதலீட்டை நிறுவனங்களுக்குக் கொண்டுவருவதைப் பெருமளவு முறைப்படுத்தியது 1990-களில்தான். இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியாவில் தாராளமயமாதல் அறிமுகமானது. இதன் காரணமாகவே பல புதிய நிறுவனங்கள் உருவாகின. இதன் தொடர்ச்சியாக பல பெரிய ஐ.பி.ஓக்கள் பங்குச்சந்தையில் நிகழ்ந்தன. இந்தியப் பங்குச்சந்தை ஓரளவு முதிர்ச்சி பெற ஆரம்பித்த்து. பல சிறு முதலீட்டாளர்களும் பங்குச்சந்தையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

சாதாரணப் பின்னணியில் உள்ளவர்களும் மிகப் பெரிய நிறுவனங்களை உருவாக்கமுடியும் என்ற நிலைமை உருவானதும் இதனால்தான். இப்படித்தான் இன்ஃபோசிஸ் உருவானது. இப்படித்தான் ரிலையன்ஸ் இவ்வளவு பெரிதானது.

இன்று இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமே 1990-களின் தாராளமயம்தான். ஆனால் எல்லாத் தனியார்மயமும் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே நடந்துள்ளது. முதலி, யாருமே பயப்படாத சில துறைகளில் இந்திய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. பின்னர் அவற்றில் சிறு அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்பட்டது. 26% என்று ஆரம்பிப்பார்கள். அடுத்து 49% வரை என்று நீட்டிப்பார்கள். அது அடுத்து 51% ஆகும். பின் 76% ஆகும். பின் 100% வரை என்பார்கள்.

இன்றும்கூட இந்தியாவில் வங்கிகள் முழுமையாகத் தனியார்மயம் ஆகிவிடவில்லை. 100% அந்நிய வங்கிகள் இந்தியாவில் தம் இஷ்ட்த்துக்கு பிராஞ்சுகளைத் தொடங்க முடியாது. ஐசிஐசிஐ போன்ற இந்திய வங்கிகளில் அதிகபட்சம் 74% பங்குகள் மட்டுமே அந்நியர்களிடம் இருக்கமுடியும். அதிலும் 20% மட்டுமே அந்நிய வங்கிகள் கையில் இருக்கலாம். மீதியெல்லாம் தனிப்பட்ட அந்நியர்கள் அல்லது அந்நிய நிதி நிறுவனங்கள் கையில்தான் இருக்கலாம். இன்று அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் சிறு நகரங்கள்வரை பரவி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இயங்குகின்றன.

வங்கிகளில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்வதும்தான் ஒரு காலத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்று அதுபற்றி யாருமே பேசுவதில்லை. ஏனெனில் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இருப்பதாக இன்று தெரியவில்லை. பாரத ஸ்டேட் வங்கி இன்றும்கூட நம்பர் ஒன் வங்கியாகத் திகழ்கிறது. அதே நேரம், ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் தொழில்நுட்பத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்தி, அதிவேகமாக வளர்ந்துள்ளன. இதனால் தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும்கூட அதே வேகத்துடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்றன.

அடுத்த சீர்திருத்தத்தில், எச்.எஸ்.பி.சி, சிடிபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற அந்நிய வங்கிகள் தம்மிஷ்டத்துக்கு இந்தியாவில் வங்கிக் கிளைகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற அனுமதி தரவேண்டும். என்ன இருந்தாலும் இந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியார்மயமாவதும் அவற்றில் அந்நிய முதலீடு வருவதும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஆனால் அரசு அதுபற்றிக் கவலைப்படாமல் செயல்பட்டதால்தான் இன்று இந்தியாவில் இந்த அளவுக்கு டெலி-டென்சிடி வளர்ந்துள்ளது. யாருக்காவது இன்று நஷ்டம் என்றால் அது அரசு நடத்தும் பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் போன்ற நிறுவன்ங்களுக்குத்தான். அவற்றையும் தனியாருக்கு விற்றுவிடலாம்.

இன்ஷூரன்ஸைத் தனியார்மயமாக்குவதற்கும் அவற்றில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவதற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அரசு அதை மீறி நடந்துகொண்டது. இன்று சுமார் 20 தனியார் நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. புதுப் புது இன்ஷூரன்ஸ் திட்டங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. யாரும் அழிந்துபோகவில்லை. எல்.ஐ.சியும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸும் பிற அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் வளர்கின்றன. தனியார் நிறுவனங்களும் வளர்கின்றன.

ஏர்லைன்ஸ் துறையில் அந்நிய முதலீடு கூடாது என்றார்கள். அரசு அதனை மீறியது. இன்று அதனால்தான் பல ஊர்களுக்கு கனெக்டிவிடி வந்துள்ளது. ஏர் இந்தியாவும் (அரசு), கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸும் (தனியார்) தடுமாறுகின்றன. தடுமாறட்டுமே? பிறர் (ஜெட் ஏர்வேய்ஸ், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட்…) நன்றாக வேலை செய்கிறார்கள். லாபம் சம்பாதிக்கிறார்கள். மக்களுக்கு எப்போது நஷ்டம் என்றால் அரசு தலையிட்டு தன் பணத்தை இதில் வீணடிக்கும்போதுதான். அது நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் வேலை.

இப்போது சில்லறை வியாபரத்தில் இதே பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. முதலில் இந்தத் துறை “ரெகுலேட்” செய்யப்படும் ஒரு துறையே அல்ல. தெருவோரம் கடை ஒன்றை ஆரம்பித்து மளிகை சாமான்கள் விற்க நாம் யாரிடமும் முன் அனுமதி பெறவேண்டியதில்லை. கடையை ஷாப்ஸ் அண்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட்ஸ் சட்டத்தின்படிப் பதிந்துகொண்டு வியாபாரத்தை ஆரம்பித்துவிடலாம்.

தெருவோரக் கடை, 1980-களிலேயே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆனது. அப்போதே புலம்பல் ஆரம்பித்தது. பின்னர் அது சூப்பர் மார்க்கெட் ஆனது. அப்போது புலம்பல் அதிகரித்தது. பின் சங்கிலிக் கடைகள் உருவாகின. புலம்பல் ஒருவழியாக நின்றுபோனது. பின் 2006-2007-ல் ரிலையன்ஸ் இந்தத் துறையில் நுழைவதாகச் சொன்னதும், மீண்டும் பெரும் புலம்பல் ஆரம்பித்தது. ரிலையன்ஸ் வந்தால் பெட்டிக் கடைகள் அழிந்துவிடும் என்றார்கள். அடுத்து பிர்லா ‘மோர்’ என்ற சங்கிலிக் கடைகளை உருவாக்கியது. யாரும் அழிந்துவிடவில்லை. இவர்களுக்கு முன்னாலேயே பாண்டலூன், ஸ்பென்சர்ஸ் ஆகியோர் சங்கிலிக் கடைகளை நடத்திவந்தார்கள்.

தமிழ்நாட்டில் பாமகவினர், ரிலையன்ஸ் கடைகள் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ரிலையன்ஸ் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். உமா பாரதி மத்தியப் பிரதேசத்தில் இந்தக் கைங்கர்யத்தைச் செய்தார். மமதா பானர்ஜியும் இடதுசாரிகளும் சேர்ந்து மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளை அனுமதிக்கமாட்டோம் என்றார்கள்.

ரிலையன்ஸ் வந்தால் சிறு வணிகர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்று சொல்லப்பட்டது. அப்படி ஏதும் ஆகவில்லை. போட்டி நன்றாகவே செல்கிறது. பலரும் புதுக் கடைகளைத் திறந்துகொண்டே இருக்கின்றனர். ரிலையன்ஸால்தான் நினைத்த அளவுக்கு வேகமாக வளரமுடியவில்லை. ஆனாலும் வளர்கிறார்கள். சில இடங்களில் இந்தச் சங்கிலிக் கடைகளால் சில டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் (சிறு முதலாளிகள்) பாதிப்புக்கு உள்ளாகின்றன. அவர்களால் தாக்குப் பிடிக்கமுடியவில்லை என்றால் அவர்கள் வேறு வேலையைப் பார்த்துக்கொண்டு செல்கிறார்கள். இந்தியாவில் இன்று இருக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

இப்போது ரிலையன்ஸை நம் அரசியல் திலகங்கள் மறந்துவிட்டனர். அந்நிய முதலீடுதான் அவர்களுடைய குறி. மாயாவதி, மமதா பானர்ஜி, ஜெயலலிதா ஆகிய முதல்வர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். வால்மார்ட் கடைகள் வந்தால் கொளுத்துவேன் என்கிறார் உமா பாரதி. சில்லறை வணிகர்கள் எல்லாம் அழிந்துபோவார்கள் என்று இடதுசாரிகளும் ஸ்வதேஷியினரும் புலம்புகிறார்கள்.

இடதுசாரிகளைப் பொருத்தமட்டில், எந்தத் துறையிலும் அந்நிய முதலீடு கூடாது. என், எந்தத் துறையிலும் தனியார்மயமே கூடாது. எல்லாம் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். ஆனால், அதனால் யாருக்கும் உபயோகம் இல்லை என்பதை நாம் கடந்த 60 ஆண்டுகளில் பார்த்துவிட்டோம். எனவே அவர்கள் என்ன சொன்னாலும் நாம் அதனைக் கண்டுகொள்ளவேண்டிய அவசியமே கிடையாது.

நாம் எதிர்க்கவேண்டியது, கொள்கைப் பிடிப்பற்ற பிறரை. முக்கியமாக பாஜகவை. அவர்களைப் பொருத்தமட்டில், இன்ஷூரன்ஸ், தொலைத்தொடர்பு, வங்கி, ஆட்டோமொபைல் ஆகியவற்றில் தனியார்கள் இருக்கலாம், அந்நிய முதலீடும் இருக்கலாம். ஆனால் சில்லறை வணிகத்தில் கூடாது? இது என்ன அபத்தம்?

பூச்சாண்டி காட்டுகிறார்கள். வால்மார்ட் வருவான். சாக்லேட் தருவான். நீ அப்படியே சாப்பிட்டுவிட்டு, மயங்கி, அவன் பின்னாலேயே போய்விடுவாய். அவன் உன்னைக் கொன்று, உன் மண்டையோட்டை எடுத்து, மை செய்துவிடுவான்.

இதெல்லாம் முப்பதாண்டுகளுக்குமுன் வேண்டுமானால் நடந்திருக்கலாம். இன்று இந்திய கம்பெனிகள் உலகம் எல்லாம் சென்று பிற நிறுவனங்களை வாங்கிக் குவிக்கின்றன. இந்தியர்களுடைய செல்வம் அதிகரித்துள்ளது. இந்திய அரசின் பலமும் அதிகம். அந்நிய நாட்டு நிறுவனம் ஒன்று எளிதாக இந்தியா வந்து, நாட்டைச் சுருட்டி உலையில் போடமுடியாது. கிழக்கிந்திய கம்பெனியுடன் இதனை ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற அபத்தம் வேறு ஒன்றும் இல்லை.

வால்மார்ட்டே வந்தால் என்ன ஆகும்? இந்தத் துறையில் போட்டி அதிகரிக்கும். பொருள்கள் பல வந்து குவியும். யாருக்கும் வேலை போகாது. வால்மார்ட் கடையில் யாரை வேலைக்கு வைக்கப் போகிறார்கள்? சீனனையா அல்லது அமெரிக்கனையா? இந்தியனைத்தானே ஐயா வேலைக்கு வைக்கப்போகிறார்கள்?

இந்தக் கடைகளில் நுகர்பொருள்கள் பல விற்கப்படும். அதில் செண்ட் இருக்கும். சோப் இருக்கும். ஆனால் இஞ்சி, மஞ்சள், பச்சை மிளகாய், அப்பளம், ஊறுகாய் முதலியனவும் இருக்கும்தானே? அவற்றை யார் உற்பத்தி செய்யப்போகிறார்கள்? நம் நாட்டவர்தானே?

அந்நிய முதலீடு என்றால் என்னவோ நாளைக்கு அந்தக் கடைகளில் கிடைப்பவை எல்லாம் கோஸ்டா ரிகா வாழைப்பழங்கள், ஆஸ்திரேலியா திராட்சைகள், பிரான்ஸின் வைன் புட்டிகள் என்பதாக நம்மாட்கள் யோசிக்கிறார்கள். அவையும் கிடைக்கலாம். அவை கிடைக்கக்கூடாது என்றால் இந்திய அரசு அதனை எளிதாகக் கட்டுப்படுத்தமுடியும். இறக்குமதிக் கொள்கை போதும்.

இப்போது நாம் பேசுவது, அந்நிய ‘முதல்’ பற்றி மட்டும்தான். ஏன் அந்நிய முதல் தேவை என்று பார்ப்போம். இந்திய முதல், வேண்டிய அளவு இதில் போகவில்லை. அண்ணாச்சி கடைகளின் வளர்ச்சி விகிதம் போதாது. கிராமம் முதல் நகரம் வரையிலான வளரும் இந்திய மக்களின் பொருள் பசிக்குத் தீனி போடக் கடைகள் போதா. அவற்றை உருவாக்க, வேண்டிய அளவு முதலீடுகள் செய்யப்படவில்லை. இந்தியாவின் பணவீக்கத்துக்கு ஒரு முக்கியக் காரணம் இது. பணம் அதிகரிக்கும் அளவுக்கு பொருள்களின் உற்பத்தி அளவு அதிகரிக்கவில்லை என்பதால்தான் விலைகள் கடுமையாக ஏறுகின்றன. எங்கு இந்தப் பிரச்னை இல்லையோ, அங்கே விலைகள் கடுமையாக்க் குறைந்துள்ளன (உதாரணம்: கணினிகள், செல்பேசிகள்).

இந்தியாவில் சப்ளை செயின் என்று சொல்லப்படும் லாஜிஸ்டிக்ஸ் படு மோசம். பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நிறையப் பின்தங்கியுள்ளோம். அதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்யாமலேயே நிறுவனங்கள் ஜல்லி அடிக்கின்றன. அந்நிய முதலீடு நிகழும்போது இவையெல்லாம் கட்டாயம் கைகூடும். அப்போது உள்ளூர் நிறுவனங்களும் அவற்றைப் பயன்படுத்திப் பயன்பெறுவார்கள். (உதாரணமாக: கோல்ட் ஸ்டோரேஜ்.)

அந்நிய நிறுவனங்கள் வந்தால் அதன் காரணமாக வேலைகள் அதிகரிக்கவே செய்யும். குறையப் போவதில்லை. விவசாயிகள் எந்தவிதத்தில் பாதிக்கப்படுவார்கள்? வெள்ளைக்காரப் பெரு முதலாளி, சிறு விவசாயியின் விளைச்சலைக் காசு தராமல் பிடுங்கிக்கொண்டு போய்விடுவான் என்ற பிம்பம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? ரிலையன்ஸ் பற்றியும் இப்படித்தானே சொன்னார்கள்? அப்படியா நடந்தது?

2007-ல் ரிலையன்ஸ்தான் பூச்சாண்டி. இன்று ரிலையன்ஸை மறந்துவிட்டோம். இப்போது வால்மார்ட்தான் பூச்சாண்டி. இப்படி நம்மிடம் பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு முதலீடுகள் எப்படி நடக்கின்றன, வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் தெரியாது. நானும் நீங்களும் சேர்ந்து ஒரு நல்ல ரீடெய்ல் சங்கிலியை உருவாக்கி, அதைப் பெரிதாக்கத் தேவையான மூலதனத்தை ஓர் அந்நிய வென்ச்சர் கேபிடல் கம்பெனியிடம் கோரலாம். இன்றும்கூட இந்தியாவில் இயங்கும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பலவும் அந்நியப் பணத்தை வைத்துத்தான் இயங்குகின்றன. ஏனெனில் இந்தியப் பண முதலைகள் இன்றும்கூட புதையல் காக்கும் பூதம்போலவே தம் செல்வத்தைக் காபந்து செய்துவைத்துள்ளனர்.

அந்நிய முதலீடு வரும்போது அத்துடன் ஓரிரு பிரச்னைகளும் இருக்கலாம். அவை என்னென்ன என்பதை, கண்களை விரியத் திறந்துவைத்துக்கொண்டு, எதிர்கொள்ளவேண்டும்.

உதாரணமாக, இந்தியப் பொருளாதாரம் அந்நிய முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படவில்லை என்றால் கிடைத்த விலைக்கு அவர்கள் தம் பங்குகளை விற்றுவிட்டு, கிடைத்த ரூபாயை டாலர்களாக மாற்றி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அப்போது ரூபாயின் மதிப்பு கீழே இறங்கும். சமீபத்தில் ரூபாயின் மதிப்பு சடசடவெனக் கீழே இறங்கியதற்கு ஒரு காரணம், ஐரோப்பிய நாடுகள் பற்றிய பயத்தில் இருக்கும் பல அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தாம் வைத்திருந்த பங்குகளை விற்றுவிட்டு, அந்தப் பணத்தை டாலர்களாக மாற்றியதும்தான். இதனால் குறுகிய காலத்துக்குச் சிறிய பாதிப்புதான் இருக்குமே தவிர பெரும் பயம் ஏதும் இல்லை.

ஜெயலலிதா, தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டில் இயங்கும் சில்லறைக் கடைகளை அனுமதிக்கப்போவதில்லை என்கிறார். அவர் பி.எச்.பாண்டியன் போலத் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக்க் கற்பனை செய்துகொள்கிறார். மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டால் அந்த நிறுவனம் எந்த ஊரிலும் தன் கடைகளைத் திறக்கலாம். சட்டபூர்வமாக தமிழக அரசால் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. கட்சி குண்டர்களை வைத்துவேண்டுமானால் ஏதெனும் செய்யலாம். அவ்வளவுதான்.

ஏ.பி.எம்.சி சட்டம் என்று ஒரு சட்டம் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் இருக்கிறது. விவசாய விளைபொருள்களை யார் தயாரிக்கலாம், யாருக்கு விற்கலாம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு மோசமான சட்டம். இதனைக் கொண்டுதான் அரசுகள் தம் விவசாயிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குகிறது. இன்று ஒரு விவசாயி தான் விளைவித்த நெல்லை அதிக விலைக்கு ஒரு தனியார் நிறுவனத்துக்கு விற்க விரும்பினால், மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்துகொண்டு, ஏ.பி.எம்.சி சட்டத்தைக் கொண்டு, குறிப்பிட்ட தினங்கள்வரை நெல்லை அரசுமட்டுமே கொள்முதல் செய்யும் என்பார்கள். அந்தக் கட்டத்தில், பைச இல்லாத ஏழை விவசாயிகள் அரசு சொல்லும் விலைக்கு அரசிடம் தன் நெல்லைக் கொடுத்துவிட்டு பல மாதங்கள் காத்திருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

அந்தச் சட்டத்தைக் கொண்டு, காய்கறிகளை அந்நிய முதலீட்டில் உருவான ரீடெய்ல் கடைகளில் விற்கமுடியாது என்று தமிழக அரசால் சொல்லமுடியும். இப்படித்தான், இதனைக் கொண்டுதான் ரிலையன்ஸ் ரீடெய்லை சில மாநிலங்களில் பயமுறுத்தினார்கள். அந்தக் கடைகளில் காய்கறிகள் இல்லாமல் பிற மளிகை சாமான்களை விற்பதையோ, புத்தகங்கள் விற்பதையோ, சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்பதையோ தடை செய்ய முடியாது. அதேதான் ஜெயலலிதாவின் வானளாவிய அதிகாரத்தின் எல்லையும்.

எஃப்.டி.ஐ. நல்லது. நுகர்வோராகிய நம் எல்லோருக்கும். எப்படி, ஏர்லைன்ஸ், வங்கி, இன்ஷூரன்ஸ், தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல் ஆகிய துறைகளில் எஃப்.டி.ஐ நமக்கு உதவியுள்ளதோ, அதேபோல ரீடெய்லிலும் நமக்கு உதவும். நம்புங்கள்.

– பத்ரி சேஷாத்ரி

திண்டுக்கல் தோல்வி!

க – 29

சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.

பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது அந்த நடவடிக்கையில் அப்பட்டமாகத் தெரிந்தது.

சட்டென்று சுதாரித்த எம்.ஜி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைச்சரவை மீது நாங்கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சபாநாயகர் மதியழகனிடம் கோரினர். கோரிக்கை ஏற்கப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று எம்.ஜி.ஆரை அழைத்தார். உடனே எம்.ஜி.ஆர் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய பேச்சு எதுவும் வெளியே கேட்கவில்லை.

விஷயம் இதுதான். சபாநாயகர், எம்.ஜி.ஆர் இருவருடைய மைக்குகளுக்கும் இணைப்பு தரப்படவில்லை. துணை சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே மைக் இணைப்புகள் தரப்பட்டிருந்தன. நுணுக்கமாகச் செயல்பட்டிருந்தனர் ஆளுங்கட்சியினர். இணைப்பு இல்லாததைப் பற்றி எம்.ஜி.ஆர் கவலைப்படவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

புதிய நாற்காலியில் அமர்ந்த துணை சபாநாயகர் சீனிவாசன் முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். விவாதம் தொடங்கியது. உடனடியாகத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆருடன் சேர்ந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுசொற்பம். மாறாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம். தீர்மானம் வெகு எளிதாக நிறைவேறியது. சபாநாயகர் பதவியில் இருந்து மதியழகன் நீக்கப்பட்டதாக அறிவித்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

அந்த அறிவிப்பு வெளியானபோதும் சபாநாயகர் இருக்கையில் மதியழகனே இருந்தார். இன்னொரு பக்கம் இணைப்பு இல்லாத மைக்கில் பேசிக்கொண்டே இருந்தார் எம்.ஜி.ஆர். சட்டென்று சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். ஆனாலும் சபை தொடர்ந்து நடந்தது. உடனடியாக எம்.ஜி.ஆரும் அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்களும் சபையைவிட்டு வெளியேறினர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு சபையை நடத்திவிட்டு சபையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் சீனிவாசன்.

ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் நினைத்தனர். ஆனால் கருணாநிதி அத்துடன் நிறுத்தவில்லை. அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் தயாரானார். எம்.ஜி.ஆர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பதில் கொடுக்கவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அமைச்சரவைக்கு ஆதரவாக 172 வாக்குகள் விழுந்தன. எதிர்த்து விழுந்த வாக்குகள் பூஜ்ஜியம். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று தன்னுடைய பலத்தை உணர்த்தியிருந்தார் கருணாநிதி.

லஞ்சம் , ஊழல் என்று எம்.ஜி.ஆர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அதே ரீதியிலான நடவடிக்கை ஒன்றை எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. தமிழக சட்டமன்றத்தில் புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு மசோதா என்பது அதன்பெயர். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்;  தேவைப்பட்டால், மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய மசோதாவின்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் பட்டியலில் முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர், சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் – இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர், நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து யூனியனின் முன்னாள் – இந்நாள் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டியவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

மத்திய அரசின் லோக்பால், லோக் அயுக்த் மசோதாக்களில்கூட பிரதமர் போன்றவர்கள் வராத சமயத்தில் மாநில அரசு கொண்டுவந்திருக்கும் மசோதாவில் முதலமைச்சரும் கொண்டுவந்தது நேர்மையான விஷயம் என்று பாராட்டப்பட்டது இந்த மசோதா. பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். 5 ஏப்ரல் 1973 அன்று இந்த மசோதா சட்டமன்றம் மற்றும் சட்டமேலவையில் நிறைவேறியது.

புதிய மசோதவை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் இருந்தபோது கருணாநிதிக்கு ஒரு சவால் காத்திருந்தது. இடைத்தேர்தல். திண்டுக்கல் மக்களவை திமுக உறுப்பினர் ராஜாங்கம் மரணம் அடைந்திருந்தார். ஆகவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் வலிமையை எடை போட்டுப் பார்க்கும் தேர்தல் என்பது பொதுவான கருத்து. அதிலும், கட்சி பிளவுபட்டிருந்த சூழலில் அந்த இடைத் தேர்தல் முடிவைத் தனக்கான கௌரவ விஷயமாகப் பார்த்தார் கருணாநிதி. செல்வாக்கு மிக்க வேட்பாளரைக் களமிறக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக அவர் களமிறக்கிய வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம். சுறுசுறுப்புக்குப் பஞ்சமில்லை. செல்வாக்குக்கும் குறைவில்லை. உற்சாகமாகக் களமிறங்கினர் திமுக தொண்டர்கள்.

புதிய கட்சியைத் தொடங்கிய சமயம் என்பதால் இடைத்தேர்தல் சரியான வெள்ளோட்டமாக இருக்கும் என்பது எம்.ஜி.ஆரின் கணிப்பு. மாயத்தேவர் என்ற வழக்கறிஞரை வேட்பாளராக்கினார். திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரசுக்கு. அந்தக் கட்சியின் சார்பில் என்.எஸ்.வி. சித்தன் நிறுத்தப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்கரய்யாவை வேட்பாளராக்கியது. இந்திரா காங்கிரஸும் நின்றது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்துவிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாகத் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டது.

கௌரவத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கருணாநிதி இறங்கினார். புதிய கௌரவத்தை அடையும் நோக்கத்தில் எம்.ஜி.ஆர் களத்தில் இறங்கினார். அப்போது தேர்தலுக்குத் தொடர்பில்லாத புதிய பிரச்னை ஒன்று வந்தது. அது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. 1964ல் திடீரென மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது திமுகவினர் பலத்த அதிருப்தி அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியான என் கடமை படம் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, உலகம் சுற்றும் வாலிபன் படமும் தோல்வியடையும் என்று நினைத்தனர். முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.

இடைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது. திண்டுக்கல் தோல்வி குறித்து பின்னாளில் கருணாநிதி இப்படித்தான் எழுதினார்.

‘திமுகழகத்தின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இந்தத் திண்டுக்கல்தான் கழகத்தின் பல்வேறு வெற்றிகளுக்கெல்லாம் தடைக்கல்லாகவும் இருந்தது.’

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்

கனிமொழி – ஜாமீன் – பிழைப்புவாதம்

கனிமொழி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆம், அவர் ஜாமீனில் வெளிவரவில்லை. இப்படித்தான் திமுக கம்பெனி மகிழ்ச்சியில் பேயாட்டம் ஆடுகிறது. ஊழல்வாதி கனிமொழி தியாகியாவது திராவிட வரலாற்றில் புதியதல்ல. திராவிட வரலாறு என்பதே ஊழல் வரலாறும் பொய்ப் பித்தலாட்ட வரலாறும்தான்.

நாயாய் பேயாய் அலைந்தான் என்பார்களே, அப்படி அலைந்தது இந்த கம்பெனி. நீதிபதியின் காலில் கம்பெனிக்காரர்கள் யாராவது விழுந்தார்களா என்பதை அலசவேண்டும்! தன் தலைவரின் மகளின் தாயார் ராசாத்தி அம்மாள் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டிகளெல்லாம் நினைவுக்கு வருகின்றன. இனி இந்த கம்பெனியின் தலைவர் தனது மகளின் தாயாரிடம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்பதுதான் திமுக கம்பெனியின் தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. நல்ல கம்பெனி, நல்ல தொண்டர்கள்.

இந்தியாவின் முதல்நிலை வழக்கறிஞர்கள் எல்லாம் வாதிட்டார்கள். எப்படியாவது கனிமொழிக்கு ஜாமீன் வாங்கவேண்டும் என்பதுதான் கம்பெனி எம்டியின் ஒரே லட்சியமாக இருந்தது. கம்பெனியின் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் வானத்தில் டெல்லிக்கும் சென்னைக்குமாகப் பறந்துகொண்டிருந்தார்கள். அத்தனைபேரும் திராவிட வரலாற்றின் புதல்வர்களே என்பது முக்கியமான தகுதி.

எப்படி ஒரு பெண்ணால் தன் மகனைக் கவனித்துக் கொள்ளாமல் ஜெயிலில் இருக்கமுடியும் என்றெல்லாம் சோக காவியம் தீட்டி அனுப்பினார்கள். 60களாக இருந்தால் மனோகரி ரேஞ்சுக்கு கம்பெனி எம்டி பெரிய வசன காவியமே தீட்டி அனுப்பியிருப்பார். நீதிபதியும் பயந்துபோய் ஜாமீன் கொடுத்தாலும் கொடுத்திருப்பார். ஆனால் 60கள் அல்ல. நாடகம் நடப்பது தமிழ்நாட்டிலும் அல்ல.

சிங்கத்தின் வாயைத் திறந்து தலையைத் தானே வைத்துக்கொண்டது போல, காங்கிரஸ் வாயைத் திறந்து தலையை வைத்த திமுக கம்பெனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலரின் தலையை ஆட்டையைப் போடுவதையே வேலையாகக் கொண்ட காங்கிரஸ் வெஞ்சினம் தீர்த்தது. சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்துக்கொண்டே இருந்தார் எம்.டி கருணாநிதி. ஆனால் அவர் ஜாமீன் விஷயம் குறித்து மட்டும் சோனியாவிடம் கேட்டிருக்கவே மாட்டார். கம்பெனி அறிக்கை அப்படித்தான் சொல்லுகிறது. 67ல் காங்கிரஸை அழித்தீர்கள், 2011ல் திமுகவை அழிக்கிறோம் என்றுதான் காங்கிரஸ் செயல்பட்டது. கண்ணைக் குத்திவிட்டானே என்று கதறுவதற்குப் பதிலாக, தங்க ஊசியில்தானே குத்தியிருக்கிறான் என்று பாராட்டும் நிலையில் இருக்கிறது திமுக. மறக்காமல் திமுக செய்யும் ஒரே வேலை, இன்னும் கூட்டணி இருக்கிறது என்பதுதான்! கூட்டணியும் இல்லாவிட்டால் எம்டி தனது மகள் கனிமொழியின் தாயாருக்கு என்னதான் பதில் சொல்வார் பாவம். நமக்கே பாவம் தோன்றியதல்லவா, இதுவே இச்சோக நவீனத்தின் வெற்றி எனலாம்.

தன் மகனை ஒருநாள் விடாமல் பார்த்துக்கொள்ள நினைக்கும் ஒரு தாய் முதலில் ஊழல் செய்யாமல் இருந்திருக்கவேண்டும். நேர்மையே தன் இலக்கு என்றிருந்திருக்கவேண்டும். சங்கமத்துக்காகவும், எம்பி என்று டெல்லிக்கும் சென்னைக்கும் அலைந்த நாள்களில் இந்தத் தனயன் பாசம் எப்படி இருந்தது என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்தத் தனையனை யார் கவனித்துக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன். பாட்டிகள் வளர்க்கும் பேரன்களின் எண்ணிக்கை நம் கலாசாரத்தில் எத்தனை எத்தனை இருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் ஊழலில் மாட்டவும் தனயன் பாசம் முன்னுக்கு வந்துவிட்டது.

பெண் என்பதால் கருணை காட்டுங்கள் என்று அடுத்த சோகக் கட்டம். பெண் என்றிருந்தும் ஊழல் செய்யலாம். பெண் என்றிருந்தும் உள்கட்சி அரசியலில் ஆட்டிப் படைக்கலாம். கலைஞர் டிவியில் தன் பங்கு இல்லாவிட்டால் என்னாகுமோ என்று அஞ்சி, பெண் என்றிருந்தும் இயக்குநராகலாம். ஆனால் வயதைக் காரணம் காட்டி தயாளு என்கிற பெண்ணுக்கும், என்ன இருந்தாலும் பெண் என்று காரணம் காட்டி கனிமொழிக்கும் ஜாமீன் கேட்கவேண்டியிருக்கிறது. தயாளுவை உள்ளே வைக்காதது நீதிமன்றம் செய்த தவறு. எல்லாவற்றையும் கேள்வி கேட்ட நீதிமன்றம் வயதைக் காரணம் காட்டி தயாளுவை உள்ளே வைக்காமல் விட்டது தவறான முன்னுதாரணம்.

இதுபோல பல கட்சிகளில் பல வழக்குகளில் பல தனிமனிதர்கள் ஜாமீன் கிடைக்காமல் உள்ளே கிடக்கிறார்கள். அப்போதெல்லாம் நம் அறிவுஜீவிகள் வாயே திறக்கவில்லை. கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு என்றதும், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியதென்ன, நீதிமன்றத்துக்கு அறிவுரைகள் சொல்லித் தள்ளியதென்ன, ஒருநாள்கூட ஒருவர் ஜெயிலில் இருக்கக்கூடாது என்ற தார்மீக நெறிகளைத் தூக்கிப் பிடித்ததென்ன, இன்னும் என்ன என்னவோ என்ன-கள், சொன்னால் ஔவையார் தோற்றுவிடுவார்!

இன்று இந்த வழக்கில் இப்படி கனிமொழி ஜாமீன் தரப்படாமல் உள்ளே இருந்தால் மட்டும் ஏன் இவர்களுக்கு இத்தனை அக்கறை? கேட்டால், இந்த வழக்கில்தான் ஊடக வெளிச்சம் கிடைத்திருக்கிறது, இதை வைத்துப் பேசி மற்ற எல்லா வழக்குகளுக்கும் இதுவே முன்மாதிரியாக அமையவேண்டும் என்றுதான் பேசுகிறோம் என்கிறார்கள். ஏன், இதைப் போல ஒரு நீதிமன்றமும், இந்த வழக்கில்தான் ஊடக வெளிச்சம் இருக்கிறது, எனவே இதனையே ஒரு முன்மாதிரியாக ஆக்கி, தேவையற்ற ஜாமீன்களை தரவேண்டாம் என்று முடிவெடுத்தால் என்ன தவறு? முதலில் கனிமொழிக்கு ஏன் ஜாமீன் தரவேண்டும் என்பதற்கான சரியான காரணங்களையே இவர்கள் முன்வைக்கவில்லை. சொன்னதெல்லாம் இழுவை மெகா சீரியல் காரணங்கள் மட்டுமே.

அவர் சாட்சிகளைக் கலைக்கமாட்டார் என்கிறார்கள். என்ன உத்திரவாதம்? தெரியாது. ஆனால் கலைக்கமாட்டார், அவ்வளவுதான். சொன்னா நம்பணும் மனோபாவம். கோர்ட்டில் எத்தனை அமைதியாக நடந்துகொண்டார் என்று ஒரு வாதம்! இப்படி எப்படி வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்? கோர்ட்டில் அமைதியாக நடந்துகொள்ளும் கொலைகாரர்களுக்கெல்லாம், ஊழல்வாதிகளுக்கெல்லாம் ஜாமீனா? இது ஒரு தகுதியா? கசாப்பை போல நீதிமன்றத்தில் அமைதியாக நடந்துகொண்ட இன்னொரு ஜீவன் உண்டா?

வேறெங்கும் ஓடிவிடமாட்டார் என்று ஒரு வாதம். எங்கேயும் ஓடாதவர் உள்ளேயே இருந்துவிடலாம்! இவர் வெளியில் வந்து எதையும் சாதிக்கப்போவதில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைச் சொன்னால் இது தார்மிகம் இல்லை என்பார்கள். என்னவோ கனிமொழி ஜாமீனில் வர இவர்கள் வைக்கும் வாதமெல்லாம் தார்மிகம் கொண்டது போலப் பேசுவார்கள்.

மகனைப் பார்த்துக்கொள்ள என்று ஒரு வாதம். இதுபோன்ற ஊழல்வாதிகளின் அரவணைப்பில் இல்லாமல் அப்பிஞ்சு வளர்வதே நியாயம் என்றால் ஏற்பார்களா என்ன? அம்மா பையன் செண்டியைப் போட்டு கதையை ஓட்டுவார்கள்.

இத்தனை தூரம் பேசுகிறார்களே… சாதிக் பாட்சாவைக் காப்பாற்றமுடிந்ததா இவர்களால்? அதைப்போல இன்னொரு அசம்பாவிதம் இந்த வழக்கில் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்படி நடந்தால் இந்த அறிவுஜீவிகள் அதற்குப் பொறுப்பேர்களா? அசம்பாவிதம் நிகழலாம் அல்லது நிகழ்த்தப்படலாம். இதையெல்லாம் நினைத்துதானே நீதிமன்றம் ஜாமீன் மறுக்கிறது. ஆனால் அறிவுஜீவிகளுக்குத் தேவையெல்லாம் கனிமொழியின் ஜாமீன் மட்டுமே.

சரி, கனிமொழியின் ஜாமீன் வாதங்களை மற்ற கைதிகளுக்கும் விரிவுபடுத்தப் போகிறோமா? பெண் என்றால், பெண்ணுக்குக் குழந்தை இருக்கிறது என்றால், நீதிமன்றத்தில் அமைதியாக நடந்துகொண்டால், ஓடிவிடமாட்டார் என்றால், சாட்சிகளைக் கலைக்கமாட்டார் என்ற உறுதிமொழி தரப்பட்டால்… கட்டப்பஞ்சாயத்தில்கூட இதை நம்பமாட்டார்கள். ஆனால் நீதிமன்றம் இதனை நம்பிவிடவேண்டும். அறிவுஜீவிகள் உடனே இப்போது வழக்கை சிவில் என்றும் கிரிமினல் என்றும் பிரிப்பார்கள். தெரியாததா என்ன!

கனிமொழி ஜாமீனில் வெளிவந்ததையே என்னவோ வழக்கில் விடுதலையாகிவிட்டது போல கொண்டாடும் திமுக கம்பெனி, இவரைத் தியாகியாக்கி அமைச்சராக்கினாலும் ஆக்கலாம். எனவே நாம் உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. அம்மையார் வெளிவந்தது தியாக வழக்கில் அல்ல, திருட்டு வழக்கில் இருந்து. அதுவும் ஜாமீனில் மட்டுமே.

நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருக்கிறது. முக்கியமான நிபந்தனை, சாட்சிகளைக் கலைக்கப் பார்த்தால் ஜாமீன் ரத்தாகும் என்பது. இப்படி ஒரு மிரட்டலோடு வெளியே வருவதற்கு உள்ளேயே இருக்கலாம். இந்த ஊடக வெளிச்சம் விழுந்த வழக்கை வைத்து சில நெறிமுறைகளை முன்வைக்கப் பார்க்கும் அறிவுஜீவிகளில் ஒருவர்கூட, கனிமொழி ஜாமீன் கேட்காமல் தார்மிக நெறியை அரசியலில் ஏற்படுத்தவேண்டும் என்று கேட்கவில்லை. ஏனென்றால் இவர்கள் அறிவுஜீவிகள்.

இந்த அறிவுஜீவிகளுக்கும் கம்பெனி எம்டி கருணாநிதிக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. ராசா இதுவரை ஜாமீன் கோரவில்லையே என்று கேள்வி கேட்டால், அவர் கேட்டால் நான் சொல்வேன் என்கிறார். ஆனால் கனிமொழிக்கு அலைந்தது என்ன ஒரு அலைச்சல்! பாசம் என்ற ஒரு வஸ்து பகுத்தறிவுக்குள் வராது போல.

ஊடக நிர்ப்பந்தத்தினால்தான் நீதிமன்றம் இந்தத் தேவையற்ற ஜாமீனைத் தந்துவிட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அறிவுஜீவிகள் தங்கள் தான்தோன்றிக் கருத்துகளால் நீதிமன்றத்தை தன்வயப்படுத்த முடியுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவிக்கிறது இந்த ஜாமீன். மேலும் ஜாமீனில் வெளிவந்தவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதில் நீதிமன்றத்துக்கும் பங்கிருப்பதாகவே கருதமுடியும். அதுமட்டுமல்ல, ஜாமீனுக்குச் சொல்லப்பட்ட குழந்தைத்தனமான காரணங்கள், முற்றிலும் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். இத்தனை தவறுகளை முன்னிறுத்தி ஒரு ஜாமீன். இப்படி ஜாமீனில் வெளிவருவதற்கு உள்ளேயே இருந்திருக்கலாம் என்று ஓர் அரசியல்வாதி நினைப்பவராயிருந்தால், அவர் இதுபோன்ற ஓர் ஊழலைச் செய்திருக்கவே மாட்டார் என்பதும் உண்மையாக இருந்திருக்கும்.

நினைப்புக்கேற்ற பிழைப்பு, பிழைப்புக்கேற்ற பேச்சு. பிழைப்புவாதம்.

(அரவம் தொடரும்)

0

அரவு

கலைஞருக்கே விடுதலை!

கடந்த ஆறு மாதங்களாக கலைஞரின் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருஞ்சி முள் இன்று அகன்றது. அவ்வகையில் திமுக சார்பு சிந்தனைகள் கொண்டவன் என்கிற வகையில் கனிமொழிக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன் எனக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஜெயலலிதாவின் ஆட்சி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கொடுங்கோல் ஆட்சியாக தற்போது மலர்ந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு எதிரான கலைஞரின் குரல் வலுவற்றதாகவே இருந்து வருகிறது. இது கலைஞரின் வழக்கமில்லை. மிக வலுவான எதிரியாக இருந்த எம்.ஜி.ஆருக்கே ‘தண்ணி’ காட்டிக் கொண்டிருந்தவர், இப்போது ஏன் ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்?

புதிய தலைமைச் செயலக இடமாற்றம், சமச்சீர்க் கல்வி குழப்பம், காவல்துறையினரின் பரமக்குடி தலித் படுகொலை, நூலக இடமாற்றம், பஸ்-பால்-மின்சார விலையேற்றம் என்று அடுத்தடுத்து அராஜக பிரம்மாஸ்திரங்களை ஜெ. ஏவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய படுமோசமான சூழலில், அரசியல் சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய கலைஞரோ, அவரது வழக்கமான சீற்றத்தை காண்பிக்கவில்லை.

அவருக்கு வயதாகிவிட்டது என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலரோ, அதிமுகவுக்கு மாநிலத்திலும் உள்ளாட்சியிலும் கிடைத்த அசுரபலம்தான் கலைஞரின் சாவகாசப் போக்குக்கு காரணம் என்று கருதுகிறார்கள்.

கலைஞரின் வாழ்க்கையை நன்கு அறிந்த யாரும் இத்தகைய காரணங்களை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். 1991ல் திமுக இரண்டே இரண்டு இடங்களில் வென்றபோதுகூட கலைஞர் இத்தகைய அச்சமூட்டும் அமைதியை காண்பித்ததில்லை. மிசா காலத்தில் கழகத்தவர் மொத்தமும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அண்ணாசாலையில் நின்று தனிமனிதராக முரசொலியைத் துண்டு பிரசுரமாக வினியோகித்தவர் அவர். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல் நெருக்கடிகளை அனாயயசமாகத் துடைத்தெறிந்தவர். இருமுறை கழகம் நேர்பிளவு கண்டபோதும், தன்னுடைய சாதுரியத்தால் கழகத்தைக் காத்தார். ‘உடன்பிறப்பே!’ என்கிற அவரது கரகரப்பான குரல் ஒன்றுக்கே கன்றுக்குட்டியாக கழகத்தவர் ஓடிவருவார்கள். பொதுவாழ்க்கையில் அவர் சம்பாதித்த பெரிய சொத்து இது.

அப்படிப்பட்டவர், தேர்தலுக்குப் பிறகு பதுங்குவது மாதிரியான தோற்றம் ஏன் ஏற்பட்டது?

கனிமொழி.

புத்திரி சோகம்தான் கடந்த ஆறு மாதமாக கலைஞரை செயல்பட விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இது யூகமல்ல. உறுதிப்படுத்திக் கொண்ட உண்மை.

முன்பெல்லாம் கழகத் தலைவர்கள் கலைஞரை சந்திக்கும் போதெல்லாம், ‘ஊர்லே கட்சி எப்படிய்யா நடக்குது?’ என்று ஆரம்பித்து, பேச்சைத் தொடங்குவாராம். ‘அமைச்சரே, மாதம் மும்மாரி பொழிகிறதா?’ என்று அரசர் மந்திரியைப் பார்த்து கேட்பது போன்ற தொனி இருக்குமென்று என்னிடம் சொன்னார், கலைஞரோடு பேசிப்பழகும் வாய்ப்புப் பெற்ற கழக முன்னணித் தலைவர் ஒருவர். கட்சிதான் கலைஞருக்கு உயிர். மற்றதெல்லாம் கழகத்துக்குப் பிறகுதான்.

ஆனால், சமீபமாக அவரை யார் சந்திக்கச் சென்றாலும், ‘கனியைப் போய் பார்த்துவிட்டு வந்தாயா?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிக்கிறார் என்கிறார்கள். உரையாடல் முடியும் வரை கனி, கனி, கனிதான். ‘கனிமொழியைச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளவைத்ததே கலைஞரை கட்டிப்போடத்தான்’ என்று திமுகவினர் கொதிப்பதன் ரகசியமும் இதுதான்.

சொந்த வாழ்க்கை, இலக்கியமென்று தன்னுடைய விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்த கனிமொழியை, அரசியலுக்குக் கொண்டுவந்து சிறையில் தள்ளிவிட்டோமோ என்னும் குற்றவுணர்ச்சி கலைஞருக்கு இருந்திருக்கலாம். எனவேதான் உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல், இந்த வயதான காலத்திலும் இருமுறை டெல்லிக்குச் சென்று, மகளைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். தன்னைச் சந்திக்க வருபவர்களை, ‘திகாருக்குப் போய் கனியைப் பார்த்துட்டு வாய்யா’ என்று பணித்திருக்கிறார்.

திருமணமான சில நாள்களிலேயே மிசாவில் ஸ்டாலின் சிறையில் அடைபட,  உயிர் போகுமளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டபோதுகூட கலைஞர் இந்தளவுக்கு துன்பப்படவில்லையே? ஏன்?

‘செண்டிமெண்ட்’ காரணம் இருக்கலாம். கனிமொழி பிறந்தபோது கலைஞர், அண்ணா அமைச்சரவையில் அமைச்சர். அவர் பிறந்த ஓராண்டிலேயே முதலமைச்சர். உலகின் எந்தவொரு தந்தைக்குமே அதிர்ஷ்ட மகள் செண்டிமெண்ட் உண்டு. எந்த மகள் பிறந்த பிறகு, வாழ்க்கையில் லட்சியங்களை அடைகிறார்களோ, உயரங்களைத் தொடுகிறார்களோ, அந்த மகள் மீது மற்றக் குழந்தைகளைக் காட்டிலும் அபரிதமான பாசம் வைத்து விடுவார்கள். கனிமொழி மீதும் அத்தகைய கூடுதலான பாசம் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அதுவுமின்றி, தன்னுடைய துணைவியார் ராசாத்தி அம்மாளின் ஒரே மகள் கனிமொழி. உடன்பிறந்த சகோதர, சகோதரி இல்லாதவர். கலைஞரின் பிரியத்துக்குரிய எழுத்துத் துறையில், அவரது வாரிசுகளில் கனிமொழி ஒருவர்தான் அபாரமாகப் பளிச்சிட்டார். கலைஞரின் இலக்கியத்துறை வாரிசு எனுமளவுக்கு வளர்ந்தார்.

இதெல்லாம்தான், கனிமொழி சிறையில் இருந்த நாள்களைக் கலைஞருக்கு நரகமாக்கியிருக்க வேண்டும். அவரது வழக்கமான போர்க்குணத்தை மட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தானே சிறையில் வாடுவதற்கு ஒப்பான உணர்வை அவர் அடைந்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக உணர்ச்சி அலையில் தாறுமாறாக அவர் அலைக்கழிக்கப்பட்டார். அவரையே சிறைப்படுத்தியிருந்தாலும்கூட இவ்வளவு துன்பப்பட்டிருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது.

குடும்பத் தலைவர், கட்சித் தலைவர் என்கிற இருபொறுப்புகளையும் கலைஞர் கடந்த நாற்பதாண்டுகளாக ஓய்வின்றி சுமந்தபோதும், இரண்டும் ஒன்றை ஒன்று பாதித்ததில்லை. முதன்முறையாக கனிமொழி விஷயத்தில்தான் கலைஞர் தடுமாறியிருக்கிறார். கலைஞருக்கு ஏற்பட்ட இந்த மனத்தடை, மாபெரும் இயக்கமான திமுகவையே கொஞ்சம் சோர்வடையச் செய்திருக்கிறது.

அவ்வகையில் கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் கிடைத்திருப்பது, கலைஞரை முன்பிலும் சுறுசுறுப்பாக்கும். இதுவரை கட்டப்பட்டிருந்த அவரது கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக உணர்வார். இனி அரசியலில் அவரது வழக்கமான அதிரடி பாணியில் அடித்து விளையாடத் தடையேதுமில்லை. கனிமொழியின் விடுதலை, கலைஞருக்கே விடுதலை கிடைத்ததற்கு ஒப்பானதாகும். எனவே, கனிமொழி திகாரில் இருந்து வெளியே வருவது எனக்கு முக்கியமானதாகப்படுகிறது. தமிழக அரசியலில் ஆளுங்கட்சியின் அராஜகங்களுக்கு எதிராக இனி நிலவப் போகும் திமுகவின் தீவிர செயல்பாடுகளை, கனிமொழியின் இந்த விடுதலை தீர்மானித்திருக்கிறது என்கிற அடிப்படையில், இது தமிழக மக்களுக்கும் அவசியமானதொரு நிகழ்வாகும்.

0

யுவகிருஷ்ணா

கனிமொழி ‘வாங்கிய’ ஜாமீன்

கிட்டத்தட்ட 192 நாட்களாக இதோ ரிலீஸாகும், அதோ ரிலீஸாகும் என்று திமுக குடும்பத்தினர் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் ஒரு வழியாக வெளியாகிவிட்டது!

‘கனிமொழி உள்ளே இருக்கும் வரையில் சோனியாவை சென்று சந்திப்பது சரியாக இருக்காது!’ என்று சொன்னவர், இதற்கு மேல் முரண்டு பிடித்தால் தனக்குதான் ஆபத்து என்று உணர்ந்து, ‘உடல் நலம் சரியில்லாத சோனியாவை’ சந்திக்க எப்போது ஓடோடிச் சென்றாரோ அப்போதே இந்த ரிலீஸை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

60 சதவிகிதம் வைத்திருந்தவரை வயதான பெண்மணி என்று காரணம் காட்டி வெளியே வைத்திருக்கும் போது, 20 சதவிகிதம் மட்டுமே வைத்திருந்தவரை உள்ளே தள்ளியது தவறுதான். இதை ஒரு தவறான முன்னுதாரணமாகக் கொண்டு, இனிமேல் மோசடி செய்ய விழைவோர் வயதான பெண்மணிகளை இயக்குநராக வைத்து நிறுவனங்களை ஆரம்பிக்கலாம். ஒருவேளை கையும் களவுமாக மாட்டிக் கொண்டாலும் சிபிஐயும் கைது செய்யாது. ஐயோ பாவம் என்று பரிதாபப்பட்டு விட்டுவிடும்.

60 சதவிகித பங்குதாரர் வயதானவர் என்பதால் சாட்சிகளையெல்லாம் அவரால் கலைக்க முடியாது என்று எந்த மருத்துவர் சான்றளித்தாரோ தெரியவில்லை. அதையெல்லாம் கணக்கில் கொண்டால், இவரை உள்ளே தள்ளியதே மாபெரும் குற்றம். ஆனால் என்ன செய்வது, நம்மூர் அரசியலில் எப்போதுமே ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் நூற்றி பதினொன்று தான் – மக்களுக்கு!

சில நாள்களுக்கு முன்னர், ‘வெளியில் விட்டால் இவர் சாட்சிகளைக் கலைத்து விடுவார்’ என்று சொல்லி ஜாமீனை நிராகரித்தது நீதிமன்றம். இப்போது மேற்படி வழக்கில் ஏனைய சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு கனிமொழிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அப்படியெனில், இந்த சில நாள்களில் அவர் சாட்சிகளைக் கலைத்து விடமாட்டார் என்று எந்த முகாந்திரத்தில் நீதிமன்றம் நம்பியது?எனில், ஏற்கெனவே ஜாமீனில் விட மறுத்தபோது அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று கருணாநிதி சொன்னதை அப்படியே நம்பலாமா?

குறிப்பிட்ட நாள்களுக்கும் மேலாக ஒருவர் சிறையில் இருந்துவிட்டார் என்பதற்காக அவரை ஜாமீனில் விட வேண்டும் என்பது சரியல்ல. அவர் ஒரு பெண்மணி, வயதானவர், ஒரு குழந்தைக்குத் தாயார் போன்ற காரணங்களெல்லாம் எந்த அளவுக்கு மொக்கையானதோ அந்த அளவுக்கு மொக்கையானது ‘ரொம்ப நாளாக உள்ளே இருந்துவிட்டார்’ என்னும் வாதமும்.

நீதிமன்றங்களால் வழக்கை விரைந்து முடிக்க முடியவில்லை என்றால் அதை சரி செய்யவேண்டுமே ஒழிய, அதையே காரணமாகக் கொண்டு ஜாமீனில் விடமுடியாது. அவ்வாறு செய்தால், அதையே காரணமாகக் காட்டி விடுதலையும் செய்யச்சொல்லி கேட்கலாம்!

‘உள்ளே கொசுக்கடி. குளிர் தாங்கலை. அப்படியும் உற்சாகமாக இருந்தார்!’ என்றெல்லாம் கொடுக்கப்பட்ட பில்டப்புகளைத் தாண்டி, ‘எதையும் தாங்கும் இதயத்துடன் இருந்தார்’ என்று வாரமிருமுறை இதழில் எழுதப்பட்ட புலனாய்வு கட்டுரைகள்,  கனிமொழியைத் தமிழக அரசியலின் மூன்றாவது பெரிய கட்சியின் எதிர்காலத் தலைமை பதவிக்கு நகர்த்திச் செல்ல முயன்றன என்பது வெளிப்படை.

எப்படியோ, நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜாமீனை ஒரு வழியாக ‘வாங்கியாகிவிட்டது’. இதையே அவர் வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டதாக கருதி பலமான வரவேற்பெல்லாம் சென்னையில் காத்திருக்கிறதாம்! அது மட்டுமா? இன்னும் நிறைய கூத்துகள் காத்திருக்கின்றன. ரசித்து சிரிக்க நாமும் காத்திருப்போம்!

0

மாயவரத்தான்

லண்டன் ரங்கநாதன் தெருவில் இருந்து…

சென்னை ரங்கநாதன் தெரு வெறிச்சோடி கிடக்கும் இந்த நேரத்தில், லண்டனுக்கு அருகிலுள்ள ரங்கநாதன் தெருவை ஒருமுறை சற்றி வரலாம், வாருங்கள்!

லண்டனிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒரு சிறிய நகரம், நியூகாஸில். முழுப்பெயர் Newcastle Upon Tyne & Wear.  ஊரைச் சுற்றி ஆறு; ஆற்றின் மேல் அமைந்திருக்கும் நகரம் என்று பொருள். வருடத்தில் முக்கால் வாசி நேரம் குளு குளுதான். சூரியன் வருவதும் தெரியாதும், விலகுவதும் தெரியாது.

நகரத்தின் மையப்பகுதியை சிட்டி செண்டர் என்று அழைக்கிறார்கள். இங்குதான் நியூகாஸிலின் ரங்கநாதன் தெரு, Northumberland Street உள்ளது. குட்டி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை ஒரு சேர இங்கே அணிவகுத்து நிற்கின்றன. பேருந்து மற்றும் ரயில் மூலமாக இந்தத் தெருவை அடையலாம். பேருந்தில் வருபவர்கள் Pilgrim Street என்று கேட்டு இறங்க வேண்டும். ரயிலென்றால் Monument என்ற நிலையத்தில் இறங்கவேண்டும்.

நடைபாதையில் ஆக்கிரமிப்பு இல்லை. திடீரென்று சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டும் வழக்கம் இல்லை. மின்சார வெட்டில்லை. குளிரும் இளம் தூறலும் சர்வ சாதாரணம் என்றாலும் சாலைகளில் குட்டைகளோ குளங்களோ இல்லை. எறும்புக் கூட்டம் போல் மக்கள் வரிசை வரிசையாக குவிந்துகொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம்.

அனைத்து வயதினருக்கும், அனைத்து விருப்பங்களுக்கும் தீனிபோடும் இடம் இது. சாப்பாட்டுப் பிரியர்களுக்கு மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங், க்ரெக்ஸ் போன்ற ஜாம்பவான்களும், சுவையான சிற்றுண்டிகளும் கிடைக்கும். ஜவுளிக்கு ப்ரைமார்க், மார்க் & ஸ்பென்சர், பீகாக். வீட்டு உபயோகப் பொருள்களுக்கு க்லாஸ்ஹோல்ஸன், W.H ஸ்மித், பிசி கர்ரி வோல்ட், அர்கோஸ், ஃபென்விக், பூட்ஸ் மருந்தகம் என்று பல கடைகள். எல்டன் ஸ்கொயர் என்னும் மிகப்பிரிய வணிக வளாகம் இந்தத் தெருவுக்கு மிக அருகில் இருக்கிறது.

குழந்தைகளை யாரும் தோளில் தூக்கி வருவதில்லை. அதற்கென்றே இருக்கும் வண்டிகளில்தான் (ப்ராம் / ஸ்ட்ராலர்) அழைத்து வருகிறார்கள். என்றாலும், சாலைகள் அகலாமாக இருப்பதால், இடிபடாமல் வண்டிகளை உருட்டிக்கொண்டு செல்லலாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகளுக்கும் நல்ல வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் இவர்களுக்கென்றே தனியாக லிஃப்ட் வசதி உள்ளது.

நம் ஊரைப்போல வீதிகளில் படம் வரைவது, நடனமாடுவது, வேடிக்கை பார்த்துவிட்டு காசு போடாமல் போவது ஆகிய நிகழ்ச்சிகள் வார இறுதியில் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு நாள், தெருமுனையில் அழகான மாடி பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தால் ஜாப் ஃபேர். இங்கும் வேலை தேடுவோர் கணிசமாக இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

நான் மிகவும் வியந்துப் பார்தத ஒரு கடை, Argos. ஏனெனில் இங்கு விற்பனையே மிக வித்தியாசமாகயிருக்கும். கடையில் நுழைந்தவுடன் அங்கிருக்கும் மானிட்டரின் அருகில் செல்லவேண்டும் (கடையின் அளவைப் பொறுத்து சில இடத்தில் 5 அல்லது 10 மானிடர்கள் இருக்கின்றன). தொடுதிரை மூலம் ஷாப்பிங் செய்யவேண்டும். என்னென்ன வாங்கலாம்? விலை என்ன? ஸ்டாக் இருக்கிறதா? இதே பொருள் வேறு எந்த கிளையிலுள்ளது? அனைத்துக்கும் ஒரு சில விநாடிகளில் பதில் கிடைத்துவிடுகிறது.  மானிடருக்கு அருகில் இருக்கும் பென்சில், பேப்பரை எடுத்து நமக்கு தேவையான பொருள்களின் விவரத்தை எழுதி எடுத்துக்கொண்டு (பென்சிலை அங்கேயே வைத்துவிட்டு) பணம் செலுத்தும் இயந்திரத்தில் விவரங்களைத் தட்டச்சு செய்யவேண்டும். கூட்டிப் பார்த்து எவ்வளவு என்று மெஷின் சொல்லும். செலுத்திவிட்டு, அது கொடுக்கும் ரசீதை வாங்கிக்கொள்ளவேண்டும். உங்கள் சரக்கு எந்த கவுண்டரில் கிடைக்கும் என்பதை அறிவிக்க ஒரு பெரிய எலெக்ட்ரிக் டிஸ்ப்ளே உள்ளது. ரசீதைக் காண்பித்து பையை வாங்கிக்கொண்டு கிளம்பலாம். மற்ற கடைகளைவிட இங்கு விலையும் கூட்டமும் ஓரளவு குறைவு.

சரவணா ஸ்டோர்ஸ் மாதிரியான ஒரு கடைதான் Primark. இங்கு அதிக அளவில் இந்தியர்களைப் பார்க்கலாம். வாங்குபவர்களாகவும் விற்பவர்களாவும் அவர்கள் இருக்கிறார்கள். மற்ற கடைகளைப் பார்க்கும்போது இங்கு துணி மணிகளின் விலை கணிசமாக குறைவு என்பதால் கூட்டம் அலைமோதும். இவ்வளவு குறைவாக தருகிறார்கள் என்றால் மட்டமான பொருளாகத்தான் இருக்கும் என்று சந்தேகிப்பவர்களும், அப்பப்பா இந்தக்கூட்டத்தோடு யார் மல்லுகட்டுவார்கள் என்று அஞ்சுபவர்களும் ஒதுங்கியே இருப்பார்கள். நான் பார்த்தவரை, ஆங்கிலேயர்கள் கணிசமான அளவில் இங்கு வருகிறார்கள். எனில், அங்கலாய்த்து ஒதுங்குபவர்கள் யார் என்று பார்த்தால், அட இந்தியர்கள்!

இன்னொரு ஆச்சரியம், இங்கு அடுக்குமாடி கட்டடங்கள் எதுவும் கிடையாது என்பது. பெரும்பாலும் தரைத்தளம். மிஞ்சி மிஞ்சிப் போனால், முதல் தளம். அவ்வளவுதான். ஆனால், ஒவ்வொரு கட்டடமும் பரந்து விரிந்து பிரமாண்டமாகப் பயமுறுத்தும். குறிப்பாக, தரைத்தளம் பெண்களுக்கான பிரிவாக இருக்கும். முதல் தளத்தில் ஆண்களுக்கும் குழந்தைகளுக்குமான பண்டங்கள் அணிவகுக்கும்.

துணிக்கடை இயங்கும் விதமும் அலாதியானது. கடையின் முகப்பில், நூற்றுக்கணக்கான பெரிய பைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  உள்ளே நுழையும்போதே அவரவர் தேவைக்கேற்ப பைகளை எடுத்துக்கொண்டு, பிடித்த துணிகளை அள்ள ஆரம்பிக்கலாம். பிறகு,  உடை சரியாகப் பொருந்துகிறதா என்பதை டிரைலர் ரூமில் சோதித்துக்கொள்ளலாம்.  இங்கு அழகான பெண்மணி ஒருவர் நின்றுகொண்டிருப்பார் (ஆண்கள் பகுதியிலும்). வரிசையில்தான் செல்ல வேண்டும்; அவரிடம் சென்று, மொத்தம் எத்தனை துணிகளைப் பரிசோதிக்கவேண்டும் என்பதைச் சொல்லவேண்டும். உடனே ஒரு அட்டையை எடுத்து இயந்திரத்தில் செருகி, நாம் குறிப்பிடும் எண்ணை அழுத்திக்கொடுப்பார்கள்.  டிரைலர் ரூமில் உடையைப் போட்டுப் பார்த்துவிட்டு, திரும்ப வரும்போது அந்த அட்டையையும், தேர்ந்தெடுக்காத உடைகளையும் அவரிடம் கொடுத்துவிட வேண்டும்.  மிச்சத்தை எடுததுக்கொண்டு நேராக பில்லிங் பகுதிக்கு செல்லவேண்டும். அங்கு மறுபடியும் வரிசை. காத்திருந்து பணம் கட்டிவிட்டு நடையைக் கட்டிவிடலாம். பிடிக்காத, ஒத்துவராத உடைகளை இரண்டு வாரங்களுக்குள் ரசீதுகொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

பொதுவாக ஆங்கிலேயர்கள் சரியான நேரத்தில் கடையைத் திறக்கிறார்கள், மூடுகிறார்கள். வார நாட்களில் இந்தத் தெருவில் இரவு ஏழு மணிக்கு மேல் கூட்டமிருக்காது. வெறிச்சோடியிருக்கும். வாரயிறுதியில் அதிக நேரம் திறந்துவைத்திருப்பார்கள் என்று நினைத்தால் தவறு. ஒரு சனிக்கிழமை 5 மணிக்குச் சென்று பார்த்து, ஏமாந்து வீடு திரும்பினோம். பிறகுதான் தெரிந்தது. மாலை 4 மணிக்கு மேல் ஒரு கடைகூட இங்கே திறந்திருக்காது.

ப்ரைமார்க்குக்கு எதிரிலேயே, போட்டியாளரான Mark & Spencer அமைந்துள்ளது. ஒருவகையில் இக்கடை எல்லா வணிகர்களுக்குமே போட்டிதான். ஏனெனில் இங்கு துணிகள் மட்டுமின்றி ஏராளமான தின்பண்டங்களும் கிடைக்கும். நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு ஒரு பிரிவு. கேக், பஃப், ரொட்டி என்று ஒரு பேக்கரி பிரிவு. காய்கறிகளுக்கும் கனிகளுக்கும் ஒரு பிரிவு. வீட்டு மளிகைக்கு ஒரு பிரிவு. பூனை, நாய் உணவுகள் ஒரு பக்கம். பூங்கொத்துகளுக்கும் நாளிதழ்களுக்கும் ஒரு பிரிவு. இப்படிப் பல பிரிவுகள் அமைந்துள்ளன. காலை கடை திறந்தவுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியதை வாங்கிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, இன்னபிற விஷயங்களையும் முடித்துவிட்டு சாவகாசமாக வீடு திரும்பலாம். இக்கடைக்கு மொத்தம் மூன்று வித நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சாலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். முதலில் சென்றபோது நான் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.

ஒரு நாள் ப்ரைமார்க்கில் ஷாப்பிங் முடித்துக்கொண்டு Burger King சென்றோம். சைவம் சாப்பிடுபவர்களுக்கென்றே இப்பொழுது எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு ஐட்டமிருக்கிறது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, நான்கைந்து முறை கேட்டுவிட்டு, வெஜ் மீல் டீல் ஆர்டர் செய்தோம். இதில் வெஜ் பர்கர், பிரெஞ்ச் ஃப்ரை, ஜஹாங்கீர் க்ளாஸில் கோக், பெப்ஸி அல்லது ஸ்ப்ரைட் இருக்கும். விலை 3.99 பவுண்ட்ஸ். இதை நம் ஊர் பணத்துக்கு மாற்ற முயன்றால் தலைச்சுற்றல் வரும் என்பதால் விட்டுவிடுங்கள். இங்கு ஐம்பது பேர் அமர்ந்து சாப்பிடலாம். இருபது பேர் நின்றுகொண்டு கொரிக்கலாம். சாப்பிட்டு முடித்து, குப்பைகளைக் கொட்டிவிட்டு, ப்ளாஸ்டிக் தட்டை அதற்குரிய இடத்தில் சேர்க்கவேண்டும். மேஜைகளை மட்டும் அவர்களே துடைத்துக்கொள்கிறார்கள்.

புத்தகப் பிரியர்களுக்கு, W H Smith நல்ல இடம். இங்கு ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன. புத்தக ஆர்வம் இல்லாதவர்களும் இங்கே நுழைவார்கள். காரணம், கடைகளில் வெப்பமூட்டப்பட்டிருக்கும். நானும்கூட குளிரில இருந்து தப்புவதற்காகவே இங்கே சென்றேன். புத்தகங்களுக்கு இணையாக மாத, நாளிதழ்கள் கொட்டிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக முதல் தளம். பொடிசுகள் முதல் டீனேஜ் வரை ரகவாரியாக புத்தகங்கள் அடுக்குகள். வாழ்த்து அட்டைகளும் ஏராளம் குவிந்திருக்கிறது. பல வண்ணங்களில், அழகான குறுஞ்செய்திகளுடன்.  ஸ்டேஷனரி, சாக்லெட், பிஸ்கட், குளிர் பானம் ஆகியவையும் கிடைக்கின்றன. வெறும் கை வீசிக்கொண்டு வந்தால் ஒருமாதிரியாகப் பார்ப்பார்களோ என்று நினைத்து, சாக்லெட்டும் பெப்ஸியும் வாங்கிக்கொண்டு நகர்ந்தேன்.

அநேகமாக ஒவ்வொரு வாரமும் இங்கு சென்றுகொண்டிருக்கிறேன். சென்ற வாரம் சென்றபோது, வண்ண விளக்குகளும், மயக்கும் அலங்காரங்களும் கண்களைக் கொள்ளை கொண்டன.  இன்னும் நேரமிருக்கிறது என்றாலும் எல்லோரும் தயாராகிவிட்டார்கள். Merry Christmas!

0

R. விஜய்

தோழர்

அத்தியாயம் 46

உலகெங்கும் நடைபெற்றுவரும் தேசியப் போராட்டங்கள் குறித்து ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வரலாற்று நூல்களைத் தேடிப்பிடித்து படித்துக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். துருக்கியிலும் ஆஸ்திரியாவிலும் உள்ள ஸ்லாவ் மக்கள் குறித்து 1853-56 காலகட்டத்தில் விரிவாகப் படித்து தெரிந்துகொண்டார் எங்கெல்ஸ். ஸ்லாவ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், வரலாற்றில் அவர்கள் வகித்த பாத்திரம் பற்றியும், அவர்களுக்கு எதிரான ஜார் அரசாட்சி பற்றியும் அவர் ஆழமாக வாசித்தார்.

பிரிட்டிஷ் நூலகத்துக்கு அவ்வப்போது சென்றுவந்த மார்க்ஸ், எங்கெல்ஸுக்குத் தேவைப்பட்ட நூல்களையும் அவருக்கான குறிப்புகளையும் தந்து உதவினார். ரஷ்ய வரலாறு பற்றி எங்கெல்ஸ் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்பதை மார்க்ஸ் ஒரு நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கிழக்குலக நாடுகள் பற்றிய அவர் ஆர்வம் அதிகாரித்துக்கொண்டிருந்தது. அதே சமயம், தனக்கு அணுக்கமான துறையான, மதக் கோட்பாடுகளின் வரலாறு பற்றியும் அவர் வாசித்துக்கொண்டுதான் இருந்தார்.

கடவுள்மீதான பிடிப்பு விலகியிருந்தாலும் பைபிள்மீதான அவர் ஆர்வம் விலகிவிடவில்லை. உதாரணத்துக்கு, வேதாகமத்தை அணுகும்போது, அதை ஒரு புனித நூலாக அல்லாமல், தொன்மம் பற்றியும் வரலாறு பற்றியும் பண்டைய மக்கள் பற்றியும் தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாகவே கருதினார். அரபு மக்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் தொல் பழங்குடியின மக்கள் பற்றியும் தகவல்களை அவர் திரட்டிக்கொண்டிருந்தார்.

முன்னரே பரிச்சயமாகியிருந்த பெர்ஷியனையும் அரபியையும் மீண்டும் படிக்கத் தொடங்கியிருந்தார் எங்கெல்ஸ். பெர்ஷியன் குழந்தை விளையாட்டு போல உள்ளது என்று மார்க்ஸுக்கு எழுதினார். ‘முழுவதும் கற்றுத் தேற மூன்று வாரங்கள் ஒதுக்கியிருக்கிறேன்.’ கோதிக், நார்டிக் உள்ளிட்ட பண்டை ஜெர்மானிய மொழிகளைக் கற்பதற்கும் நேரம் ஒதுக்கினார். பிறகு, இயற்கை அறிவியல். இயற்பியல், உயிரியில், ஒப்பீட்டு உடற்கூறியல் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள முயன்றார். வரலாறையும் அறிவியலையும் ஒன்றாக அவர் அணுகியதன் காரணம், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இயற்கை அறிவியலில் பொருத்திப் பார்க்கமுடியுமா என்பதைத் தெரிந்துகொள்ளவே. உயிரணு பற்றி புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த சமயம் அது என்பதால் எங்கெல்ஸும் அதில் ஆர்வம் காட்டினார்.

சார்லஸ் டார்வின் எழுதி வெளிவந்திருந்த On the Origin of Species புத்தகத்தை 1850களின் இறுதியில் எங்கெல்ஸ் வாசித்தார். டார்வினின் புத்தகம் நவம்பர் 24, 1859 அன்று வெளிவந்தது. தன் கண்டுபிடிப்புகளைத் தன்னுடன் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பிய டார்வின் தன் முடிவை அவசரமாக மாற்றிக்கொண்டு புத்தகத்தை வெளியிட ஒப்புக்கொண்டார். அதற்குக் காரணமாக இருந்தது அதே ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்னும் சக இயற்கையியலரிடம் இருந்து வந்து சேர்ந்த கடிதம். டார்வினைப் போலவே வாலஸும் உயிர்களின் தோற்றம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். இருபது ஆண்டு கால ஆய்வின் முடிவுகளைச் சுருக்கமாக எழுதி வெளியிட வாலஸ் முடிவு செய்திருந்தார். தன் முடிவை அவர் டார்வினுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். சார்லஸ் டார்வின் வாலஸை ஒரு போட்டியாளராகக் கருதியிருக்கவேண்டும். தனது ஆய்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், எதற்காக ரகசியமாக அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும். வாலஸின் நூல் வெளிவருவதற்குள் தன்னுடையது வெளியாகவேண்டும் என்று விரும்பிய டார்வின், நேரத்தைக் கடத்தாமல் ஒரு பதிப்பாளரை அணுகி, தன் பிரதியை ஒப்படைத்தார்.

டார்வினின் புத்தகம் வெளிவருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் கார்ல் மார்க்ஸ் எழுதிய A Contribution to the Critique of Political Economy வெளியானது. ஒரு வகையில், இரண்டு நூல்களும் சமூகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் விருப்பத்தின் விழைவோடு கொண்டுவரப்பட்டவை. முதலாளித்துவத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை உடைத்து நொறுக்கும் நோக்கத்துடன் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த ஆய்வுக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயங்களையே மார்க்ஸ் வெளியிட்டிருந்தார். அதே பொருளில், அவர் மேற்கொண்டு பின்னர் எழுதவிருந்தார்.

கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியான இரு நூல்களுள் ஒன்று மட்டுமே தன் நோக்கத்தில் துரித வெற்றியை அடைந்தது. மார்க்ஸின் நூல் பின்தங்கியது. ‘என்னை விமரிசிப்பார்கள் என்றும் ஏசுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன். நிச்சயமாக, உதாசீனப்படுத்தப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.’ தன் புத்தகம் வெளிவந்துவிட்டதா இல்லையா என்பதையே தன் பதிப்பாளருக்கு எழுதிக் கேட்கவேண்டிய நிலையில் இருந்தார் மார்க்ஸ். டார்வினின் புத்தகம் 1250 பிரதிகள் அச்சிட்டிருந்தார்கள். இருபத்து நான்கு மணி நேரத்தில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்கிறார்கள்.

டார்வினின் நூலை வாசித்து, உள்வாங்கி முதலில் வினையாற்றியவர் எங்கெல்ஸ். தன் கருததை டிசம்பர் 12ம் தேதி மார்க்ஸுடன் அவர் பகிர்ந்துகொண்டார். ‘நான் இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் டார்வின் மிகச் சிறந்தவர்… வரலாற்று வளர்ச்சியை இதுவரை யாரும் இயற்கையில் இவ்வளவு அற்புதமாகப் பொருத்திப் பார்க்கவில்லை. அதுவும், இந்த அளவுக்கு வெற்றிகரமாக.’

அதற்கு அடுத்த மாதம், மார்க்ஸ் டார்வினின் நூலை வாசித்தார். எங்கெல்ஸின் கருத்தையே அவரும் பிரதிபலித்திருந்தார். ‘(உடல்நலக் குறைவு ஏற்பட்ட சமயத்தில)நான் வாசித்த நூல்களில் இயற்கை தேர்வு குறித்து டார்வின் எழுதிய நூலே சிறந்தது…மிக முக்கியமானது; என் நோக்கத்தோடு ஒத்துப்போவது. வர்க்கப் போராட்ட வரலாற்றுக்கு இயற்கை அறிவியலில் ஓர் அடிப்படையை உருவாக்கிக்கொடுக்கிறது.’

பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துக்கும் டார்வினின் கொள்கைக்கும் உள்ள உறவையும் பிணைப்பையும் முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மார்க்ஸ். Karl Marx: Biographical Memoirs என்னும் நூலில் ஜெர்மானிய எழுத்தாளரான Wilhelm Liebknecht குறிப்பிடும் விஷயங்கள் முக்கியமானவை. ‘டார்வினின் கண்டுபிடிப்புகளில் உள்ள முக்கியத்துவத்தை முதல் முதலாகப் புரிந்துகொண்டவர் மார்க்ஸ். 1859ம் ஆண்டுக்கு முன்னரே, டார்வினின் முக்கியத்துவத்தை அவர் அறிந்துவைத்திருந்தார். டார்வின் தன் கொள்கையை பொதுவெளியில் சமர்ப்பித்தபோது, மாதக்கணக்கில் மக்கள் அவர் அளித்த புரட்சிகர அறிவியல் சக்தியைப் பற்றியே விவாதித்தார்கள். மார்க்ஸ், டார்வினின் படைப்பை அறைமனத்துடன்தான் ஏற்றார் என்றும் அதன் மீது பொறாமை கொண்டிருந்தார் என்றும் பேசுபவர்களுக்கு நான் அழுத்தமான மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’

எங்கெல்ஸ், டார்வினை வேறு திசையில் இருந்து அணுகினார். இறைவாதிகளையும் கடவுள் நம்பிக்கையாளர்களையும் தகர்க்கவல்ல ஓர் ஆயுதமாக டார்வினின் படைப்பை அவர் கண்டார். இயற்கையின் அதிசயங்களை கடவுளே உருவாக்கினார் என்னும் வாதத்தை உடைக்க டார்வினின் இயற்கை தேர்வை அவர் முன்வைக்க விரும்பினார்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் டார்வினின் கண்டுபிடிப்பைக் கருத்துமுதல்வாதத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகவே கருதினார்கள். உலகம் பற்றியும் உயிர்கள் பற்றியும் இதுவரை மனிதகுலம் சிந்தித்து வந்ததற்கு மாறாக புதிய திசையில் சிந்திப்பதற்கு டார்வின் உதவுவார் என்று அவர்கள் நம்பினார்கள். இயற்கையை, அதிசயங்களை கடவுள் படைக்கவில்லை. உலகம் என்பது கடவுளின் திட்டம் அல்ல. இயற்கையையும் மனிதர்களையும் கடவுளைக் கொண்டு விளங்கிக்கொள்ளமுடியாது. மனித குல முன்னேற்றத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இயற்கையின் வளர்ச்சிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த இரண்டையும் கடவுள் எழுதவில்லை.

ராணுவ அறிவியல் என்னும் துறைமீதும் எங்கெல்ஸுக்குத் தீராக் காதல் இருந்தது. பாட்டாளி வர்க்கத்தைத் திரட்டி அவர்களைப் போர்க்குணம் மிக்க ஒரு சக்தியாகத் திரட்ட, ராணுவ வழிமுறைகளையும் சூட்சுமங்களையும் கற்றுத்தேறவேண்டும் என்று எங்கெல்ஸ் நினைத்தார். ஜெர்மனி, பவேரியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் போன்ற பல நாடுகளின் வரைபடங்களை ஆழமாக வாசித்து கிட்டத்தட்ட மனனம் செய்துகொண்டார் எங்கெல்ஸ். ‘அடுத்த தாக்குதலின்போது தேவைப்படும்’ என்று சொல்லிக்கொண்டார்.

ஒரு முழுமையான உலகப் பார்வையை உருவாக்கிக்கொள்ளவே அறிவியல், அரசியல், போர் தந்திரம், தத்துவம், மதம், மொழியியல் போன்ற துறைகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் கற்று வந்தனர். ஒவ்வொரு சிறு வாசிப்பையும் சமூகத்தின்மீது பொருத்திப் பார்க்க அவர்கள் முயன்றனர். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின்போது, ஒரு பெருளாதார வீழ்ச்சியின் நிழலை அவர்கள் 1856ல் கண்டறிந்தனர். அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன.

செப்டெம்பர் இறுதியில் எங்கெல்ஸ் எழுதினார். ‘இந்த முறை இதற்கு முன் கண்டிராத அளவுக்கு தீர்ப்பு நாள் தீவிரமாக இருக்கப்போகிறது. அனைத்து ஐரோப்பிய தொழிற்சாலைகளும் பொடிப் பொடியாகச் சிதறப்போகின்றன. சந்தைகளில் பண்டங்கள் பிதுங்கப்போகின்றன. சொத்துள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படவிருக்கிறார்கள். பூர்ஷ்வா வர்க்கம் திவாலாகப்போகிறது. யுத்தமும் அழிவும் நெருங்கிவிட்டது. 1857ல் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.’ எங்கெல்ஸின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

(தொடரும்)

0

மருதன்