வெறும் கை
சில நாள்களுக்கு முன்பு என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரது ஒரு கண் மட்டும் பால்வெள்ளையாய் இருந்தது. கராத்தே பயிற்சியின்போது ஏற்பட்டது என்று புன்னகைத்தார். எனக்கு சற்றுச் சந்தேகமாக இருந்தது. அதைச் செய்தவன் என்று தனுஷ் மாதிரி ஒரு பையனைக் காட்டியபோது இன்னும் சந்தேகமாக இருந்தது. குறைந்தது சத்யராஜ் மாதிரியாவது எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கராத்தே பயில தனுஷ் மாதிரி இருந்தால்கூட போதும்தான்.
எல்லாருக்கும் அறிமுகமானது போல் எனக்கும் கராத்தே சினிமாவில்தான் அறிமுகமானது. பாளையம்கோட்டை கலைவாணி தியேட்டரில் ஜெயபாரதி முண்டுடுத்தியும் இல்லாமலும் குளிக்கும் ரதி நிர்வேதங்களுக்கு நடுவே அவ்வப்போது வெளியிடும் சாவலின் வெர்சஸ் லாமா வகைப் படங்களில் அறிமுகமானதுதான் கராத்தே மற்றும் அதைப் போன்ற போர்க் கலைகள். நான் காலையில் ரதி நிர்வேதம் பார்த்துவிட்டு மதியம் ரோட்டோரக் கடையில் காய்ந்த புரோட்டா சாப்பிட்டுவிட்டு புரூஸ் லீயையும் பார்ப்பேன்.
புரூஸ் லீ நடித்த என்டர் த ட்ராகன், பிஸ்ட் ஒப் ப்யூரி போன்ற படங்கள்தான் உலகமெங்கும் போர்க் கலைகள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தின என்று தைரியமாகச் சொல்லலாம். ஆனால் 1930களிலேயே அதைப் பற்றி ஹாலிவுட்டில் படங்கள் வரத் துவங்கிவிட்டன என்றாலும், போர்க் கலைகள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவை பெரும்பாலும் சீனப் போர்க் கலைகளே. அதுவரை அவை பிரபலம் ஆகாததற்கு வேறு காரணங்களும் இருந்தன.
சீனப் போர்க் கலைகளை, ஆசியர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது தடுக்கப் பட்டிருந்தது. புரூஸ் லீக்கே அவர் அம்மா பாதி வெள்ளையர் என்பதால் சொல்லித் தரத் தயங்கினார்கள். புரூஸ் லீ அமெரிக்காவில் மற்ற வெள்ளையர்களுக்குச் சொல்லித் தந்ததையும் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு சவால் போட்டியில் அவர் வென்ற பிறகே அவரை அனுமதித்தார்கள் என்பார்கள். இது தவிர சீனாவில் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் பழமையான எல்லா சீனக் கலைகளையும் அவர்கள் வெறுத்தார்கள். அதன் பிறகு மனதை மாற்றிக் கொண்டு அவற்றை வளர்க்கவும் பரப்பவும் முயற்சி எடுத்தார்கள்.
பிஸ்ட் ஒப் ப்யூரி 1971ல் வந்தது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ‘வாட்டர்கேட் புகழ்’ நிக்சன் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவருடன் பெரிய பத்திரிகையாளர் மற்றும் அறிஞர் கூட்டமும் சென்றது. அங்கு அவர்களுக்கு சீனத்தின் பாரம்பரியப் பெருமைகள் அணிவகுத்துக் காட்டப்பட்டன. எங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒன்றுமே இல்லை, இன்னும் துவங்கக்கூட இல்லை என்பது சூசகம் செய்யப்பட்டது. மயக்க மருந்தே இல்லாமல் அக்கு பங்க்சர் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து காட்டப்பட்டது. நிக்சனின் ஒற்றைத் தலைவலியைக்கூட சரி பண்ணியதாகச் சொல்லப் படுகிறது.
நிக்சன் என்றால் நமக்கு ஊழல்தான் நினைவு வருகிறது. ஆனால் இந்த நபர்தான் வியட்நாம் யுத்தத்தை நிறுத்தியவர். சோவியத்துடன் நட்புறவுக்கு முயற்சி செய்தவர். சீனத்துக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி. ரொம்ப மோசமில்லை. ஆள் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அமெரிக்காவை சீனாவிற்குத் திறந்துவைத்தார். இந்த சீனப் பயணத்தின் மூலமாக சீனாவும் ஓரளவாவது மேற்கிற்கு திறக்கப்பட்டது. ஏற்கெனவே ஜப்பானியத் தொடர்புகள் மூலமாக சீனக் கலைகள்மேல் சற்று ஆர்வம் இருந்தது தீயைப் போல் பற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு நல்லதொரு வாசலாக இங்கிலாந்தின் கையில் அப்போது இருந்த ஹாங்காங்கில் மேற்கும் கிழக்கும் கைக் குலுக்கிக்கொண்டன. அங்கிருந்து அமெரிக்காவிற்கு சீன உணவிலிருந்து சீனப் படங்கள், சீனக் கலைகள், சீன மருத்துவம் என எல்லாம் ஏற்றுமதியாகின. அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.
1973 -புரூஸ் லீயின் என்டர் தி டிராகன் வந்தது அவ்வளவுதான் அமெரிக்காவே புரூஸ் லீ ஜுரத்தில் எரிந்தது. நாடெங்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவிப்பவர்கள் தோன்றி அமெரிக்க மக்களை பெண்டு நிமிர்த்தினார்கள். போர்க் கலைப் படங்கள் வரிசையாக வந்து வசூலை அள்ளிக் குவித்தன. அது இன்றைக்கு அங்கு மில்லியன்கள் புழங்கும் பெரியதொரு வணிகம்.. அங்கு புரூஸ் லீ ஒரு சிறிய தேவன் போல் ஆனார். அவரைப் பற்றி நிறைய புராணங்கள் புனையப்பட்டன. அவரது மரணம்கூட ஒரு பெரிய காவியத்தின் முடிவு போலவே விவரிக்கப் படுகிறது.
இந்தியாவுக்கும் இந்தப் படங்கள் வந்தன. ஏற்கெனவே கர்லாக் கட்டை தூக்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அவற்றைக் கடாசிவிட்டு பைஜாமா அணிந்து கராத்தே கற்றுக் கொல்லப் போனார்கள். எழுத்துப் பிழை இல்லை. கொல்லதான். அமெரிக்க ராணுவம்கூட இவற்றைப் பயின்றது. அமெரிக்காவில் எந்த அலை அடித்தாலும் இந்தியாவிலும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அதே அலை அடிக்கும். இப்போது இணையம் சாட்டலைட் எல்லாம் வந்துவிட்டதால் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு போக்கையும் ஆரம்பிக்கிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் பிரான்சிலிருந்து இவற்றைக் கடன் வாங்குகிறார்கள் என்றொரு கிசுகிசுப்பு உண்டு. உண்மையா தெரியவில்லை.
இந்தியாவிலும் கராத்தே அலை புரூஸ் லீயோடு வந்தது. ஒரு தலைமுறையே கராத்தே கற்றுக் கொள்ள முயற்சித்தது – என்னையும் சேர்த்து. போர்க் கலைகளில் பல வகைகள் உண்டு. கராத்தே அதில் ஒரு வகைதான். ஆனால் எல்லாவற்றையுமே கராத்தே என்றே நாம் புரிந்துவைத்திருந்தோம். உண்மையில் ப்ரூஸ் லீ போட்டதே கராத்தே கிடையாது. அவர் அதன் பெயர் ஜி க்வண்டோ என்று சொல்லிக் கொண்டார். வூ சு, குங் பூ என்று பல வகைப் போர்க் கலைகளின் அவியல் இது.
போர்க் கலைகளில் அகிடோ, ஜூடோ, டேக் வண்டோ, குங் பூ, தை சி, சம்போ நிஞ்சா, கராத்தே கெஞ்சு, கெண்டோ எனப் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ஆயுதமற்ற சண்டை முறைகள். எனினும் நிஞ்சா, களரி போன்ற ஆயுதச் சண்டை முறைகளும் உண்டு. அதேபோல் சீனக் கலைகள் மட்டுமல்லாது ஜப்பானியக் கொரிய பிரசிலிய இந்திய மரபுக் கலைகள் எனத் தனித்தனியாக உண்டு. கராத்தே ஜப்பானியர்களின் கலை. களரி நம்முடையது.
உண்மையில் மொத்த சமாச்சாரமும் இந்தியாவிலிருந்து போனது என்றொரு கதை உண்டு. அதுவும் தமிழ் நாட்டிலிருந்து போனதாகச் சொல்கிறார்கள்.
போதி தர்மர் என்ற காஞ்சிபுரத் துறவி சீனத்துக்கு மதத்தைப் பரப்பப் போனபோது, அங்கிருந்த பௌத்தத் துறவிகள் எல்லாம் உட்கார்ந்தே தியானம் செய்து செய்து, வட காற்றில் அலையும் சருகுகள் போலிருப்பதைக் கண்டு, ஒரு உடற்பயிற்சியாகவும், அப்போது சீனா முழுக்க சுற்றிக் கொண்டிருந்த கொள்ளைக்கார பிரபுக்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கலையாகவும் இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கு நம் பக்கமிருந்து ஓர் ஆதாரமும் கிடையாது. எல்லாம் சீனர்கள் எழுதியதே.
தமிழ்நாட்டில் பௌத்தம் எந்த அளவில் இருந்தது என்பதையே நாம் சரியாகப் பதிவு செய்யவில்லை. தலைவன் தலைவி ஊடல், களவு கற்பு பசலை உசிலை என்றிருந்துவிட்டோம். போதிதர்மர் ஒரு பல்லவ குல இளவரசன் என்றும் போர்க் கலைப் பிராமணர் என்றும் இரு வேறு அனுமானங்கள் உலவுகின்றன. அந்தச் சமயத்தில் சேர தேசத்துப் பிராமணர்கள், களரி வர்மம் போன்ற அடிமுறைகளில் சிறந்து விளங்கினார்கள். பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலனைக் கொன்றதாக வரும் ரவிதாசன் கிரமவித்தன் நினைவிருக்கிறதா? அவன் ஒரு கேரள நம்பூதிரியே. காந்தளூர்ச் சாலை என்று அவர்களது படைப் பயிற்சி நிலையத்தை, ராஜ ராஜ சோழன் பின்னாளில் அழித்தான். ஆகவே போதிதர்மர் பௌத்தத்துக்கு மாறிய ஒரு பிராமணனாக இருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு.
இந்த போதிதர்மர் மஞ்சள் ஆற்றை ஒரு மூங்கில் கீற்று மீது நின்றுகொண்டே கடந்து ஷாவலின் என்ற இடத்துக்குப் போய் ஒரு மடத்தை நிர்ணயித்து அங்கு காந்தளூர்ச் சாலை போலவே ஒரு பெரிய போர்க் கலைப் பயிற்சி நிலையத்தை நிறுவினார். அங்கு அவருக்கு இன்னமும் ஒரு கோயில் இருக்கிறது. அங்கு இன்னமும் அவரது வழியென்று சொல்லும் சீடப் பரம்பரை இருக்கிறது. அடிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.
அங்கு மட்டுமல்ல, ஜப்பானிலும் போதி தர்மர் உண்டு. அங்கு போதி தர்மர் தருமா என்றழைக்கப்படுகிறார். நம்மூர் செட்டியார் பொம்மைகளைப் போல் உருண்டையான அவரது சிகப்புப் பொம்மைகள் அங்கு லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். வருடத்தில் ஒருநாள் இப்படி சேர்ந்த போதிதர்மர் பொம்மைகளை ஓர் இடத்தில் போகி போல் குவித்து எரித்துவிட்டு புது பொம்மைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.
வேறு அடிமுறைகளும் இந்தியாவில் இருந்தாலும் கராத்தேதான் இந்தியாவில் பிரபலம். அதற்கான தேசிய அளவு போட்டிகள் உண்டு. சிறு நகரங்களில்கூடப் பயிற்சி தருபவர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே வருடக் கணக்கில் பயில்பவர்கள் உண்டு. வெள்ளை பெல்ட், மஞ்சள் பெல்ட் என்று ஆரம்பித்து கருப்பு பெல்ட் வரை பல நிலைகள் உண்டு. பெண்களும் பயிலும் போர்க் கலை இது. தெளிவாக வரையறுக்கப்பட்ட பயிற்சி முறைகளும் மூச்சுப் பயிற்சிகளும் உணவு வரையறைகளும் மனப் பயிற்சிகளும் உண்டு.
கராத்தே என்றால் வெறும் கை என்று அர்த்தம். வெறும்கைப்போர் அது. வெறுமனே தாக்குவது மட்டுமல்ல. தாக்கும் முன்பு அவர்கள் செய்யும் கட்டாக்கள் எனப்படும் அசைவுகள் ஒரு நடனத்தைப் போலவே இருக்கும். என் நண்பர் -அவர் ஒரு கருப்பு பெல்ட் மாஸ்டர்-அதை ஒரு வாழ்க்கை முறை என்பார்.
பொதுவாகவே இந்தக் கலைகளில் பௌத்தத்தின் செல்வாக்கு உண்டு. தத்துவ நோக்கு உண்டு. புரூஸ் லீக்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் தத்துவத்தில் எல்லாம் பரிச்சயம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என் நண்பர் ஒரு கராத்தே மாஸ்டர் எதற்கும் பதற்றப் படக் கூடாது என்பார். நான் இயல்பிலேயே அதிகம் படபடப்பவன். ஆகவே அதற்கு ஒரு சிகிச்சையாகவே அவர் என்னையும் கராத்தே கற்றுக் கொள்ளச் சொன்னார். ஆசை யாரை விட்டது? ஆனால் நான் முட்டைகூட சாப்பிட மாட்டேனே என்றேன். அது ஒரு விசயமில்லை என்றார் அவர். அவரும் ஒரு சைவ உணவாளர்தான் என்று தெரிந்ததும் எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது.
முதலில் ஒரு தயாரிப்பாக அவர் இரு சிறிய மணல் மூட்டைகளை என்னிடம் கொடுத்து கையில் கட்டிக் கொண்டு அலையும்படிச் சொன்னார். அது என் கைகளைப் பலப் படுத்த உதவும் என்று சொன்னார். நான் அன்று முழுவதும் அந்த மூட்டைகளோடு திரிந்தேன். அன்றிரவு அந்த மூட்டைகளோடுதான் தூங்கினேன். அன்றிரவு கனவில் சக் நாரிசை (chuck norris – புரூஸ் லீயின் சீடர், நடிகர்) மயிர்க் கூச்செறியும் அலறல்களோடு எகிறி எகிறி மிதித்தேன்.
மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது எனது இரண்டு தோள்பட்டைகளையும் தூக்க இயலவில்லை. கடுமையான வலி. இரண்டும் வீங்கி விட்டன. டாக்டரிடம் செல்லவேண்டியதாயிற்று. அதன்பிறகு நான் ஒருபோதும் கராத்தே கற்றுக் கொள்வது பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஜாக்கி சானின் கராத்தே கிட் படம் பார்த்தபோதுகூட.








