கத்தோலிக்கம்: காதல், காமம், ஊழல்


ஆமென் (ஒரு கன்னிகாஸ்திரீயின் தன்வரலாறு),
சிஸ்டர் ஜெஸ்மி, மொழிபெயர்ப்பு: குளச்சல் மு. யூசுப்,
காலச்சுவடு, 2010, விலை ரூ. 150.

சிஸ்டர் ஜெஸ்மி எழுதி மலையாளத்திலும் பின் ஆங்கிலத்திலும் வெளியாகி பரபரப்பைத் தேடிக்கொண்ட புத்தகம் ‘ஆமென்’. ஜெஸ்மியின் தன்வரலாறு. பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு கன்யாஸ்திரீ ஆகவேண்டும் என்று முடிவெடுத்த ஓர் இளம்பெண், எப்படி தன் விருப்பத்தை அடைந்தார், ஆனால் ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக அவர் எவ்விதமான இன்னல்களை வாழ்வில் சந்திக்கவேண்டிவந்தது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைக்கிறது.

புத்தகத்தை நான் மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். சிலிர்க்கவைக்கும் ஜெஸ்மியின் இயேசு அனுபவங்கள். ஒரு கன்யாஸ்திரீயாக ஆகவேண்டும் என்று அவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை இயேசுவுடனான திருமணம், இயேசுவுடன் கூடுவதுபோன்ற உணர்வு என்று உருவகிக்கும்போது கிட்டத்தட்ட ஆண்டாளை நெருங்குகிறார். புத்தகத்தின் கவித்துவமான கணங்கள் இவை. தொடர்ந்து அவர் இயேசுவுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சுவையாக ரசிக்கத்தக்கவை. அடுத்து, அவரது கன்யாஸ்திரீ வாழ்க்கைமுழுவதும் மடத்தில் உள்ள பெண்களாலும் ஆண்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். இதுபற்றி அறிந்திராதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் எனக்கு அவ்வளவாக அதிர்ச்சியாக இல்லை. ஆனால் கொஞ்சம் அதீதமாகச் சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

கடைசியாக, தொடர்ந்து அவருக்குப் பிறருடன் ஏற்படும் தகராறுகள். அதில் பல ‘அவள் என்னோட முடியைப் பிடிச்சு இழுத்தா!’ ரக சில்லறை விஷயங்கள். ஒரு புத்தகத்தில் எழுதத்தக்கவையே அல்ல. சில நிர்வாகத்தின் ஊழலில் அவர் பங்குகொள்ளாமல் எதிர்த்தபோது ஏற்பட்ட தகராறுகள். இதனை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் இங்கும் அவர் தன் தரப்பு வாதத்தை மட்டுமே வைக்கிறார் என்பதுபோலத் தோன்றியது. மாற்றுத் தரப்புக்கும் இடம் இருக்கக்கூடும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இறுதியாக, சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் இவரது உயரதிகாரியான மதர் ஜெனரலுக்கும் இவருக்கும் நடக்கும் உரசல், அவர் ஜெஸ்மியை மனநல ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயற்சி செய்வது, அதிலிருந்து இவர் தப்பிப்பது, பின் ஒட்டுமொத்தமாக மடத்திலிருந்து எப்படியாவது வெளியேறிவிடுவது என்று முடிவுசெய்துவிட்டு ஏதோ வில்லன்கள் குகையிலிருந்து தப்பிவருவதுபோல ஓட்டம் எடுப்பது. இது கொஞ்சம்கூட ஒட்டவில்லை.

முதலில் (இயேசுவுடனான) காதலைப் பார்ப்போம்.

என்னுடைய இயேசுவானவர் என்னை மணமகளாக சுவீகரித்துக்கொண்ட அன்றைய பரிசுத்தத் திருப்பலியை மனதிற்கிசைந்த ஒரு திருவிருந்தாக நான் உணர்ந்தேன். திரு உட்கொண்டதன்பின் நடக்கும் ஒன்றுகூடலின் பரவசத்தின்போது, நான் உமக்கானவள் மட்டுமே என்று அறிவித்த எனது விரலில் இயேசு மோதிரம் அணிவித்தார். ஆன்மிக நிலையில் மோட்சத்தினை நோக்கி உயர்த்தப்பட்ட அந்நிமிடங்களில் அவருக்கானவளாக மட்டுமே என்னால் இருக்கமுடியும் என்பதைப் புரிந்துகொண்டேன். இனியொரு திருமணம் எனக்குத் தேவையில்லை, வாழ்க்கையில் எல்லா உலகியல் ஆசாபாசங்களும் தேவையில்லை, அவர்தான் எனது ஜீவன், ஏக அபயம், உறுதியான கற்பாறை, எனது கோட்டை, எனது வழி, உண்மை, எனது மோட்சம், எனது ஆனந்தம், என்னுடைய எல்லாமே… (பக்கம் 19)

இது மேமி எனப்படும் பின்னாளில் கன்னிகாஸ்திரீயாக ஆகும்போது ஜெஸ்மி என்று பெயர் மாற்றம் பெற்றவர் கல்லூரியில் பிரீ டிகிரி படிக்கும்போது கத்தோலிக்க மாணவர்கள் குளோஸ்ட் ரிட்ரீட் என்ற முறையில் மூன்று நாள்கள் ஜெபம் செய்யும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் பின்னர்தான் மேமி கன்யாஸ்த்ரீயாக முடிவெடுக்கிறார். ஒருவித ட்ரான்ஸ் நிலையில் இறைவனோடு பேசுவதான, கூடுவதான நிலைகளை அவர் கற்பித்துக்கொள்கிறார்.

பின்னர் திருச்சபை சட்டப்பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை எழுதுகிறார்.

அன்றிரவு எங்களுக்குச் சீக்கிரமாகப் படுத்துக்கொள்வதற்கான அனுமதி உண்டு. கடந்த நாட்களில் நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோம் அல்லவா? ஆனால், ஏதோ ஒரு ஆன்மிகத் தூண்டுதல் என்னை ஜெபக்கூடத்திற்கு அழைத்துச் சென்றது. மற்றொரு நோவீஷுடன் நான் பீடத்தின்முன் முழந்தாளிட்டு நின்றேன். படிப்படியாகப் பிரார்த்தனையில் மூழ்கி தன்னை மறந்துபோனேன். ஓசையில்லாமல், அசைவில்லாமல், வெளிச்சமில்லாமல், நேரம் போவதறியாமல்… காற்றில் மிதக்கிறேனா நான்? திடீரென்று அது நிகழ்ந்தது. இயேசுவானவர் என்னுடைய இருதயத்தினுள் குதித்தார்.

என்னுடைய உடல் பயங்கரமான இறுக்கத்தை அனுபவித்தது. இயேசுவே… என்னுடலினுள் உம்முடைய நுழைவின் உடல்ரீதியான அனுபவம்… இருதயம் தகர்ந்துபோகிறது. நானொரு புது சிருஷ்டியாக உருவாவதை என்னால் உணரமுடிகிறது. இயேசுவானவர் இப்போது என்னுடைய மனதிலும் உடலிலும் இணைந்திருக்கிறார். அவரது அசாதாரணமான ஐக்கியம், அவருடன் சேர்ந்தே இருப்பது – இதுதான் என்னுடைய ஒரே ஆசை. சொர்க்கம் வேறெங்குமில்லை என்பதை நான் இப்போது உணர்ந்துகொண்டேன். (பக்கம் 46, 47)

இதுபோன்ற இண்டென்ஸ் ஆன்மிக அனுபவங்களுக்குப் பிறகு சடங்குரீதியாக இயேசுவுக்கு மணவாட்டியாக இவரும் இவருடைய பேட்ச்சில் உள்ள பிற பெண்களும் கன்யாஸ்திரீ ஆகிறார்கள். கத்தோலிக்க அமைப்பின் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலை கிடைக்கிறது.

அதன்பின் அவருக்கு ஏற்படுவதெல்லாம் மோசமான அனுபவங்களே என்பதாகவே புத்தகம் சொல்கிறது. பெண் துறவிகள் ஒருபால் சேர்க்கை நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சிஸ்டர் விமி என் பின்னால் திரிகிறாள் என்பதை நான் மெதுவாகவே புரிந்துகொண்டேன். … விடுதியில் உள்ளவர்கள் என்னைத் தேடி வரும்போது அவர்களிடம் கோபப்படுவதும் அலமாரியில் வைப்பதற்காக அவர்கள் கொண்டுவருகிற டேப் ரிக்கார்டரை இழுத்து வெளியே எறிவதுமாக என்னைப் பழி தீர்க்க ஆரம்பித்தாள். அவளுடைய இச்சைகளுக்கு நான் இணங்கவில்லை என்பதுதான் கோபத்திற்குக் காரணம் எனும் விஷயத்தை மற்ற கன்யாஸ்திரீகள் புரிந்துகொண்டார்கள். கடைசியில், அவளுடன் ஒத்துப்போகும்படி அவர்கள் எனக்கு ஜாடைமாடையாக அறிவுறுத்த ஆரம்பித்தார்கள்.

என்னுடைய பாதுகாப்புக்கு வேறு யாரும் இல்லை என்ற நிலையில் கொஞ்ச நாட்கள் அவளுடைய விருப்பங்களுக்கு நான் ஒத்துழைத்தேன். இரவு நேரங்களில் எல்லோரும் தூங்கியபிறகு அவள் மெதுவாக வந்து என் படுக்கையில் நுழைவாள். பிறகு அவள் என்மீது காட்டுகிற அசிங்கங்களை எல்லாம் என்னால் தடுக்க முடியாமல் போய்விடும். தனித் தனிக் கதவுகள் இல்லாத அறைகள், விரிப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தன. எனவே வாசலை அடைக்க இயலாது. கர்ப்பம் தரிக்காமல் இருக்கவே தான் சுயபாலின்பத்தை விரும்புவதாகச் சொல்வாள். (பக்கம் 58, 59)

ஆண் துறவிகள் அவரவர் மடங்களில் இப்படியே வாழ்வதாக எடுத்துக்கொள்ளலாம். இடையிடையே ஆண் துறவிகள் வாய்ப்பு கிடைக்கும்போது பெண் துறவிகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிஸ்டர் ஜெஸ்மி பெங்களூரு செல்லும்போது இப்படி நடக்கிறது.

அதிகாலையில் நான் பெங்களூரு ஸ்டேஷனுக்கு வந்து சேரும்போது அருட்தந்தை, பொறுமையிழந்தவராக, என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பதை ரயிலிலிருந்து இறங்கும்போதே கவனித்தேன். அவருடைய அடக்கமான இயல்புக்கு மாறாக, என்னைக் கண்டதுமே மிகுந்த ஆவேசத்துடன் ஆலிங்கனம் செய்து, ஏற்கெனவே உறுதியளித்திருந்தது போன்ற ராஜ உபச்சாரத்துடன் அவரது தங்குமிடத்துக்கு அழைத்துக்கொண்டு போனார். …

… நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்துகொண்ட அருட்தந்தை, மூச்சடைக்கவைப்பதுபோல் என்னைப் பலமாகக் கட்டிப்பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித்தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்காரவைத்துவிட்டுக் கேட்டார்:

‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’

இல்லயென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார். (பக்கம் 102, 103)

இப்படியான சில பல காமப் பிரச்னைகளை புத்தகம் நெடுகிலும் காணலாம். காமக்கொடூரன்கள் எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் உண்டு என்றாலும் வழிபாடு, கல்வி என்று கத்தோலிக்க மத அமைப்பில், மக்களின் நம்பிக்கைக்கு உகந்த இடங்களில் இருப்போர் சிறுவர், சிறுமிகளை, ஆதரவற்ற கன்யாஸ்திரீகளை சீரழிப்பது உலகம் முழுதும் நடக்கும் ஒன்று. இந்தியா போன்ற நாடுகளில் இத்தகைய பிரச்னைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல அவ்வளவாக இடம் இருப்பதில்லை என்பது சோகம். மேலிடத்தால் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதும் இழுத்து மூடப்படுகிறது.

மற்றபடி கேரள கத்தோலிக்கக் கல்வி நிலையங்களில் ஊழல் பலவிதங்களில் தலைவிரித்தாடுவதை ஜெஸ்மியின் புத்தகம் விவரிக்கிறது. தனிநபர் ஊழல், புறஞ்சொல்லுதல், பொறாமை, பணம் கையாடல், நன்கொடை வசூலித்தல், ஏமாற்றுதல், வஞ்சம் தீர்த்தல், ஆட்களைக் கருவி அழித்தல்… மாறி மாறி, பக்கத்துக்குப் பக்கம் இப்படிச் செல்லும்போது மிகுந்த அலுப்பையே தருகிறது.

ஆனால் தனி நபராக ஒருவருக்கு இந்த அளவுக்குத் தொல்லைகள், அதுவும் பாலியல் தொல்லைகளும் சேர்த்து என்று வரும்போது ஜெஸ்மிமீது பரிதாபமும் வருகிறது. ஏன் இவர் இந்தக் கேடுகெட்ட ஸ்தாபனத்தில் இன்னமும் தொடரவேண்டும், ஏன் அறுத்துக்கொண்டு ஓடியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான ஒரு செயல் அல்ல என்று கோடிட்டுக் காட்டுகிறார் ஜெஸ்மி.

என்ன செய்வார்கள்? திரும்பப் பிடித்துக்கொண்டுபோய்த் துன்புறுத்த அது என்ன ஜெயிலா? கத்தோலிக்க அமைப்பிலிருந்து வெளியேறினால் ஆள்வைத்துக் கொல்வார்களா என்ன? புரியவில்லை. அவர் கடைசியாக வெளியேற முடிவுசெய்து ரயிலில் போகும்போது அவர் படும் பதைபதைப்பு புத்தகத்தில் வெளியாகிறது. அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

இன்று அவர் வெளியில் இருக்கிறார். தன் பிரச்னைகளைப் புத்தகமாகவும் எழுதி அது பல இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையும் ஆகியுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பின் ஏன் அந்த அளவுக்குப் பயந்தார்?

தீவிர கத்தோலிக்கர்கள் பதில் சொல்ல இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கிறது. இந்தப் புத்தகம் அவர்கள் மத்தியில் சுய பரிசோதனைக்கு இட்டுச் சென்றதா? அல்லது கேடுகெட்ட, மூளை பிசகிய, பைத்தியக்காரி ஒருத்தியின் உளறல்கள் என்று சொல்லி, அவரை உதாசீனப்படுத்திவிட்டார்களா? தெரியவில்லை.

-பத்ரி சேஷாத்ரி

ஹெல்த் மினிஸ்டர் எம்.ஜி.ஆர்?

க – 23

வெற்றிச்செய்திகள் கொடுத்த மகிழ்ச்சி கருணாநிதியை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்திருந்தது. விடாமல் சிணுங்கிக் கொண்டிருந்த தொலைபேசியை எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியவர் எம்.ஜி.ஆர். கருணாநிதிக்கு வாழ்த்துக்களைச் சொன்னார். சில நிமிடங்கள் இருவரும் பேசினர். பிறகு, ‘நேரில் வாருங்கள்.. பேசிக்கொள்ளலாம்’ என்று கருணாநிதி சொல்ல, உரையாடல் முடிந்தது. இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. புதிய அமைச்சரவையில் தனக்கு ஹெல்த் மினிஸ்ட்ரி தரவேண்டும் என்று அப்போது சூசகமாகக் கேட்டதாகப் பின்னாளில் சொன்னார் கருணாநிதி.

இருப்பினும் தனி விமானத்தில் சென்னை வந்தார் எம்.ஜி.ஆர். வந்ததும் நேராகக் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதற்குள் நெடுஞ்செழியன், மாதவன் போன்ற பல தலைவர்களும் கருணாநிதியிடம் பேசியிருந்தனர். குறிப்பாக, எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி தரவேண்டாம் என்று வலியுறுத்தினர். எல்லாவற்றையும் உள்வாங்கி வைத்திருந்தார் கருணாநிதி. தவிரவும், யார், யாருக்கு அமைச்சரவையில் இடமளிப்பது என்பது பற்றியும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் வந்ததும், ‘உங்களை அமைச்சராக்குவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். சட்டச் சிக்கல்கள் வரக்கூடும்’ என்றார் கருணாநிதி. அதிர்ச்சியாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.

‘நடித்துக்கொண்டே அமைச்சராகப் பணியாற்றும் வகையில் அமைச்சருக்கான கோட்பாடுகளில் திருத்தம் கொண்டுவர இந்திரா காந்தியிடம் பேசலாமே’ என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் சட்டரீதியாக எதையும் செய்யமுடியாது என்று சட்டநிபுணர்களின் கருத்தை மேற்கோள் காட்டி மாதவன் கருத்து தெரிவிக்கவே, வேறு வழியில்லாமல் அமைச்சர் பதவிக் கனவைத் தாற்காலிகமாக ஒத்திவைத்தார் எம்.ஜி.ஆர். உண்மையில் எம்.ஜி.ஆருக்கு அமைச்சராகும் தகுதி நிறையவே இருந்தது; மக்கள் சக்தி நிரம்பியவர்; வள்ளல் என்று பெயர் எடுத்தவர்; வசீகரம் நிறைந்த பிரசார பீரங்கி; தொடர்ந்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பவர்; கருணாநிதியின் அமைச்சரவையில் இணைந்தவர்களில் சிலரைக் காட்டிலும் சிறப்பானவர்; எனினும், அந்த வாய்ப்பு அவருக்குத் தரப்படவில்லை.

உண்மையில் எம்.ஜி.ஆர் – கருணாநிதி இடையே இது முக்கிய விரிசல். கடந்த முறை தினத்தந்தி அதிபர் ஆதித்தனாரை அமைச்சராக்கியபோதே எம்.ஜி.ஆரின் முகத்தில் அதிருப்தி ரேகைகள். இப்போது, தனக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது விரிசலை விரிவடையச் செய்தது. இத்தனைக்கும் கடந்த ஆண்டுதான் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் தங்கம் படத்தைத் தயாரித்திருந்தது. கருணாநிதி எழுதிய கதைக்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா இணைந்து நடித்த அந்தப் படம் அபாரவெற்றியைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.

எங்கள் தங்கத்தின்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் கடனில் மூழ்கிய கோபாலபுரம் வீட்டை மீட்டதாக ஒரு செய்தி பரவியிருந்தது. எனினும், திரைப்படத் தொழிலில் இணைந்து செயல்பட்டுவிட்டு, அமைச்சர் பதவி என்றதும் கருணாநிதி பின்வாங்கியதை எம்.ஜி.ஆரால் ஜீரணிக்க முடியவில்லை. பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். அந்த ஆண்டு வெளியான என் அண்ணன் என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவது போல ஒரு பாடல் இடம்பெற்றது.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!

திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. திமுக சட்டமன்றக் குழுவின் தலைவர் பதவிக்கு கருணாநிதியின் பெயரை நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். க. அன்பழகன், எம்.ஜி.ஆர், மதுரை எஸ். முத்து ஆகியோர் வழிமொழிந்தனர். சட்டமன்றக் கட்சித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, இரண்டாவது முறையாக முதலமைச்சரானார்.

கருணாநிதியின் அமைச்சரவையில் நெடுஞ்செழியனுக்குக் கல்வி, என்.வி.நடராசனுக்கு மக்கள் நல்வாழ்வு, சத்தியவாணி முத்துவுக்கு தாழ்த்தப்பட்டோர் நலன், ப.உ. சண்முகத்துக்கு உணவு, மாதவனுக்குத் தொழில், சாதிக் பாட்சாவுக்கு பொதுப்பணி, சி.பா. ஆதித்தனாருக்குக் கூட்டுறவு, அன்பில் தர்மலிங்கத்துக்கு விவசாயம், க. ராஜாராமுக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலன், ஓ.பி. ராமனுக்கு மின்சாரம், மு. கண்ணப்பனுக்கு அறநிலையம், பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனுக்குப் போக்குவரத்து ஆகியன வழங்கப்பட்டன.

1971 தேர்தல் வெற்றிக்குப் பிறகு கருணாநிதி எடுத்த மூன்று முடிவுகள் அவருக்கு எதிர்காலத்தில் பலத்த பின்னடைவுகளைக் கொடுத்தன. எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி தராமல் விட்டது. ஒருவேளை தந்திருக்கும் பட்சத்தில் பிள்ளையோ பிள்ளையை ஏற்றுக்கொண்டிருக்கலாம்; கருணாநிதியிடம் கணக்கு கேட்காமல் இருந்திருக்கலாம்; அதிருப்தி அடைந்து வெளியேறாமல் இருந்திருக்கலாம்; திமுக பிளவுபடாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அன்று கருணாநிதி எடுத்த முடிவு, பல திருப்பங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்துவிட்டது.

கருணாநிதி எடுத்த இரண்டாவது முடிவு, கே.ஏ. மதியழகனை சபாநாயகராக ஆக்கியது. கடந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மதியழகனுக்கு இந்த அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. காரணம், சில மாதங்களுக்கு முன்புதான் அவருடைய சகோதரர் கே.ஏ. கிருஷ்ணசாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்து விவகாரம் காரணமாக மதியழகனை முந்தைய அமைச்சரவையில் இருந்து விடுவித்திருந்தார் கருணாநிதி. ஆனாலும் அவருக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டது. எனினும், அமைச்சர் பதவி தராத ஆத்திரத்தில் இருந்த மதியழகன், கருணாநிதி – எம்.ஜி.ஆர் மோதல் விஸ்வரூபம் எடுத்தபோது எம்.ஜி.ஆர் பக்கம் சாய்ந்து, சட்டமன்றத்தில் திமுகவுக்கு பலத்த நெருக்கடிகளைக் கொடுத்தார்.

மூன்றாவது முடிவு, மூத்த தலைவர்களுள் ஒருவரான ஏ. கோவிந்தசாமியின் இடத்தில் இளைஞரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு தந்தது. 1952 தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு, திமுக ஆதரவுடன் வெற்றிபெற்றவர் ஏ. கோவிந்தசாமி. ராஜாஜி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது உழைப்பாளர் கட்சியைக் காங்கிரஸுக்குள் இணைத்துவிட்டார் ராஜாஜி. அப்போது காங்கிரஸுடன் இணையாமல் திமுகவுடன் நெருக்கமாகிவிட்டவர் கோவிந்தசாமி. திமுக மும்முனைப் போராட்டத்தை நடத்தியபோது கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதாகிவிட்டனர். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் திமுகவை நிர்வகித்த கோவிந்தசாமியை அண்ணா அமைச்சராக்கினார். பிறகு கருணாநிதியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார்.
அப்படிப்பட்ட ஏ. கோவிந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறக்கும் தறுவாயில் இருக்கும்போது தன்னைப் பார்க்கவந்த முதலமைச்சர் கருணாநிதியிடம் சில வார்த்தைகளைச் சொன்னார்.

எனது வேண்டுகோள் ஒன்றைத் தயவுசெய்து கேளுங்கள். நான் இறந்துவிட்டால் அந்த இடத்தில் அமைச்சராக யாரை நியமித்தாலும் நியமியுங்கள். ஏன், என் நண்பர் இளம்வழுதியையேகூட நியமியுங்கள். காரணம், அவர் கட்சிக்குத் துரோகம் செய்யமாட்டார். என் வகுப்பார் ஒருவரை மந்திரியாக்கவேண்டுமே என்பதற்காகத் தயவுசெய்து பண்ருட்டி ராமச்சந்திரனை மட்டும் நியமித்து விடாதீர்கள். அது கட்சிக்குப் பெரிய துரோகமாகிவிடும். அந்தக் கெடுதியை வலிய வரவழைத்துக்கொள்ளாதீர்கள். என் வார்த்தையை நான் இறந்தபிறகு தட்டிவிடாதீர்கள்.

ஏ. கோவிந்தசாமியின் வார்த்தைகளைப் புறக்கணித்தார் கருணாநிதி. பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார். பின்னாளில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்துகொண்டு கருணாநிதிக்குக் கொடுத்த குடைச்சல்கள் அநேகம். தற்போது அதிமுகவுக்கு அடுத்தபடியாக திமுகவுக்குப் பெரிய சவாலாக இருப்பது நடிகர் விஜயகாந்தின் தேமுதிக. அந்தக் கட்சியின் அவைத்தலைவராக இருப்பவர் பண்ருட்டி ராமச்சந்திரனே.

புதிய அமைச்சரவைக்கு பெரியார் தலைமையில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய கருணாநிதி, பகுத்தறிவுப் பிரசாரத்தைத் தொடருவோம்; பக்திப் பிரசாரத்தைத் தடுக்கமாட்டோம்! என்றார்.

அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருக்கிறது. இரண்டாவது முறையாக முதலமைச்சரானதும் திமுக அரசு செய்த காரியங்களுள் ஒன்று, திருவாரூரில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தேரைச் செப்பனிட்டு ஓடச் செய்தது. பகுத்தறிவுத் தந்தைக்கு திமுக ஆட்சி காணிக்கை என்று சொல்லிவிட்டு, வாக்குவங்கிக்காக ஆன்மிகக் காரியங்களைச் செய்கிறது என்ற விமரிசனம் திமுக அரசின் மீது வைக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் கொடுத்தார்.

‘தேர் நான்கு நாள்களுக்குத்தான் ஓடுகிறது. ஆனால் அதற்காக நான்கு லட்சம் ரூபாயில் போடப்பட்ட சாலைகளை அந்தப் பகுதி மக்கள்தான் பயன்படுத்தப் போகிறார்கள்.’

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம். சாலையில் திரியும் பிச்சைக்காரர்களுக்கென திமுக அரசு சார்பில் விடுதிகள் உருவாக்கப்பட்டன. அங்கேயே அவர்கள் தங்கவைக்கப்பட்டு, உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழுநோய் உள்ளிட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த பிச்சைக்காரர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் தரப்பட்டது. கண்பார்வை இழந்த ஏழை, எளிய முதியவர்களுக்குக் கண்ணொளி வழங்கும் திட்டம் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுள் குறிப்பிடத்தக்கது. ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம், ஆதரவற்ற சிறுவர் – சிறுமிகளுக்கான கருணை இல்லங்களை உருவாக்கும் திட்டம், விதவைகள் உதவித் திட்டம் என்று பல திட்டங்களை அறிவித்து, அமல்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென தமிழக அரசுக்கு ஒரு நெருக்கடி. நிதி நெருக்கடி.

அண்ணா காலத்தில் அமலாகியிருந்த மதுவிலக்கை, நிதி நெருக்கடி காரணமாக ஒத்திவைக்க முடிவு செய்தது திமுக அரசு. அரசின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு. குறிப்பாக, மூத்த அரசியல் தலைவர்களான ராஜாஜி, காயிதே மில்லத் போன்ற பலரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டனர். இருப்பினும், மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்தார் முதலமைச்சர் கருணாநிதி. மதுப்பழக்கத்தின் கொடுமைகளை விளக்கி நாடு தழுவிய அளவில் பிரசாரம் செய்வதற்காக திமுக சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு எம்.ஜி.ஆர் தலைவர். முன்னாள் மேயர் சா. கணேசன் செயலாளர்.

மதுவிலக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் கலவரம் ஒன்றில் பலியாகியிருந்தார். கலவரத்தின் பின்னணியில் இருந்தது கருணாநிதிக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்!

(தொடரும்)

0

ஆர். முத்துக்குமார்