வெறும் கை

சில நாள்களுக்கு முன்பு என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். அவரது ஒரு கண் மட்டும் பால்வெள்ளையாய் இருந்தது. கராத்தே பயிற்சியின்போது ஏற்பட்டது என்று புன்னகைத்தார். எனக்கு சற்றுச் சந்தேகமாக இருந்தது. அதைச் செய்தவன் என்று தனுஷ் மாதிரி ஒரு பையனைக் காட்டியபோது இன்னும் சந்தேகமாக இருந்தது. குறைந்தது சத்யராஜ் மாதிரியாவது எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கராத்தே பயில தனுஷ் மாதிரி இருந்தால்கூட போதும்தான்.

எல்லாருக்கும் அறிமுகமானது போல் எனக்கும் கராத்தே சினிமாவில்தான் அறிமுகமானது. பாளையம்கோட்டை கலைவாணி தியேட்டரில் ஜெயபாரதி முண்டுடுத்தியும் இல்லாமலும் குளிக்கும் ரதி நிர்வேதங்களுக்கு நடுவே அவ்வப்போது வெளியிடும் சாவலின் வெர்சஸ் லாமா வகைப் படங்களில் அறிமுகமானதுதான் கராத்தே மற்றும் அதைப் போன்ற போர்க் கலைகள். நான் காலையில் ரதி நிர்வேதம் பார்த்துவிட்டு மதியம் ரோட்டோரக் கடையில் காய்ந்த புரோட்டா சாப்பிட்டுவிட்டு புரூஸ் லீயையும் பார்ப்பேன்.

புரூஸ் லீ நடித்த என்டர் ட்ராகன், பிஸ்ட் ஒப் ப்யூரி போன்ற படங்கள்தான் உலகமெங்கும் போர்க் கலைகள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தின என்று தைரியமாகச் சொல்லலாம். ஆனால் 1930களிலேயே அதைப் பற்றி ஹாலிவுட்டில் படங்கள் வரத் துவங்கிவிட்டன என்றாலும், போர்க் கலைகள் என்று பொதுவாகச் சொன்னாலும் அவை பெரும்பாலும் சீனப் போர்க் கலைகளே. அதுவரை அவை பிரபலம் ஆகாததற்கு வேறு காரணங்களும் இருந்தன.

சீனப் போர்க் கலைகளை, ஆசியர்களைத் தவிர மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது தடுக்கப் பட்டிருந்தது. புரூஸ் லீக்கே அவர் அம்மா பாதி வெள்ளையர் என்பதால் சொல்லித் தரத் தயங்கினார்கள். புரூஸ் லீ அமெரிக்காவில் மற்ற வெள்ளையர்களுக்குச் சொல்லித் தந்ததையும் கடுமையாக எதிர்த்தார்கள். ஒரு சவால் போட்டியில் அவர் வென்ற பிறகே அவரை அனுமதித்தார்கள் என்பார்கள். இது தவிர சீனாவில் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் பழமையான எல்லா சீனக் கலைகளையும் அவர்கள் வெறுத்தார்கள். அதன் பிறகு மனதை மாற்றிக் கொண்டு அவற்றை வளர்க்கவும் பரப்பவும் முயற்சி எடுத்தார்கள்.

பிஸ்ட் ஒப் ப்யூரி 1971ல் வந்தது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ‘வாட்டர்கேட் புகழ்’ நிக்சன் சீனாவுக்கு விஜயம் செய்தார். அவருடன் பெரிய பத்திரிகையாளர் மற்றும் அறிஞர் கூட்டமும் சென்றது. அங்கு அவர்களுக்கு சீனத்தின் பாரம்பரியப் பெருமைகள் அணிவகுத்துக் காட்டப்பட்டன. எங்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் ஒன்றுமே இல்லை, இன்னும் துவங்கக்கூட இல்லை என்பது சூசகம் செய்யப்பட்டது. மயக்க மருந்தே இல்லாமல் அக்கு பங்க்சர் மூலமாக அறுவைச் சிகிச்சை செய்து காட்டப்பட்டது. நிக்சனின் ஒற்றைத் தலைவலியைக்கூட சரி பண்ணியதாகச் சொல்லப் படுகிறது.

நிக்சன் என்றால் நமக்கு ஊழல்தான் நினைவு வருகிறது. ஆனால் இந்த நபர்தான் வியட்நாம் யுத்தத்தை நிறுத்தியவர். சோவியத்துடன் நட்புறவுக்கு முயற்சி செய்தவர். சீனத்துக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி. ரொம்ப மோசமில்லை. ஆள் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார். அமெரிக்காவை சீனாவிற்குத் திறந்துவைத்தார். இந்த சீனப் பயணத்தின் மூலமாக சீனாவும் ஓரளவாவது மேற்கிற்கு திறக்கப்பட்டது. ஏற்கெனவே ஜப்பானியத் தொடர்புகள் மூலமாக சீனக் கலைகள்மேல் சற்று ஆர்வம் இருந்தது தீயைப் போல் பற்றிக் கொண்டுவிட்டது. இதற்கு நல்லதொரு வாசலாக இங்கிலாந்தின் கையில் அப்போது இருந்த ஹாங்காங்கில் மேற்கும் கிழக்கும் கைக் குலுக்கிக்கொண்டன. அங்கிருந்து அமெரிக்காவிற்கு சீன உணவிலிருந்து சீனப் படங்கள், சீனக் கலைகள், சீன மருத்துவம் என எல்லாம் ஏற்றுமதியாகின. அவை பெரும் வரவேற்பையும் பெற்றன.

1973 -புரூஸ் லீயின் என்டர் தி டிராகன் வந்தது அவ்வளவுதான் அமெரிக்காவே புரூஸ் லீ ஜுரத்தில் எரிந்தது. நாடெங்கும் போர்க் கலைகளைப் பயிற்றுவிப்பவர்கள் தோன்றி அமெரிக்க மக்களை பெண்டு நிமிர்த்தினார்கள். போர்க் கலைப் படங்கள் வரிசையாக வந்து வசூலை அள்ளிக் குவித்தன. அது இன்றைக்கு அங்கு மில்லியன்கள் புழங்கும் பெரியதொரு வணிகம்.. அங்கு புரூஸ் லீ ஒரு சிறிய தேவன் போல் ஆனார். அவரைப் பற்றி நிறைய புராணங்கள் புனையப்பட்டன. அவரது மரணம்கூட ஒரு பெரிய காவியத்தின் முடிவு போலவே விவரிக்கப் படுகிறது.

இந்தியாவுக்கும் இந்தப் படங்கள் வந்தன. ஏற்கெனவே கர்லாக் கட்டை தூக்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அவற்றைக் கடாசிவிட்டு பைஜாமா அணிந்து கராத்தே கற்றுக் கொல்லப் போனார்கள். எழுத்துப் பிழை இல்லை. கொல்லதான். அமெரிக்க ராணுவம்கூட இவற்றைப் பயின்றது. அமெரிக்காவில் எந்த அலை அடித்தாலும் இந்தியாவிலும் ஒரு பத்து வருடங்களுக்குப் பிறகுதான் அதே அலை அடிக்கும். இப்போது இணையம் சாட்டலைட் எல்லாம் வந்துவிட்டதால் இந்த இடைவெளி குறைந்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு போக்கையும் ஆரம்பிக்கிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் பிரான்சிலிருந்து இவற்றைக் கடன் வாங்குகிறார்கள் என்றொரு கிசுகிசுப்பு உண்டு. உண்மையா தெரியவில்லை.

இந்தியாவிலும் கராத்தே அலை புரூஸ் லீயோடு வந்தது. ஒரு தலைமுறையே கராத்தே கற்றுக் கொள்ள முயற்சித்தது – என்னையும் சேர்த்து. போர்க் கலைகளில் பல வகைகள் உண்டு. கராத்தே அதில் ஒரு வகைதான். ஆனால் எல்லாவற்றையுமே கராத்தே என்றே நாம் புரிந்துவைத்திருந்தோம். உண்மையில் ப்ரூஸ் லீ போட்டதே கராத்தே கிடையாது. அவர் அதன் பெயர் ஜி க்வண்டோ என்று சொல்லிக் கொண்டார். வூ சு, குங் பூ என்று பல வகைப் போர்க் கலைகளின் அவியல் இது.

போர்க் கலைகளில் அகிடோ, ஜூடோ, டேக் வண்டோ, குங் பூ, தை சி, சம்போ நிஞ்சா, கராத்தே கெஞ்சு, கெண்டோ எனப் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ஆயுதமற்ற சண்டை முறைகள். எனினும் நிஞ்சா, களரி போன்ற ஆயுதச் சண்டை முறைகளும் உண்டு. அதேபோல் சீனக் கலைகள் மட்டுமல்லாது ஜப்பானியக் கொரிய பிரசிலிய இந்திய மரபுக் கலைகள் எனத் தனித்தனியாக உண்டு. கராத்தே ஜப்பானியர்களின் கலை. களரி நம்முடையது.

உண்மையில் மொத்த சமாச்சாரமும் இந்தியாவிலிருந்து போனது என்றொரு கதை உண்டு. அதுவும் தமிழ் நாட்டிலிருந்து போனதாகச் சொல்கிறார்கள்.

போதி தர்மர் என்ற காஞ்சிபுரத் துறவி சீனத்துக்கு மதத்தைப் பரப்பப் போனபோது, அங்கிருந்த பௌத்தத் துறவிகள் எல்லாம் உட்கார்ந்தே தியானம் செய்து செய்து, வட காற்றில் அலையும் சருகுகள் போலிருப்பதைக் கண்டு, ஒரு உடற்பயிற்சியாகவும், அப்போது சீனா முழுக்க சுற்றிக் கொண்டிருந்த கொள்ளைக்கார பிரபுக்களிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கலையாகவும் இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தார் என்கிறார்கள். இதற்கு நம் பக்கமிருந்து ஓர் ஆதாரமும் கிடையாது. எல்லாம் சீனர்கள் எழுதியதே.

தமிழ்நாட்டில் பௌத்தம் எந்த அளவில் இருந்தது என்பதையே நாம் சரியாகப் பதிவு செய்யவில்லை. தலைவன் தலைவி ஊடல், களவு கற்பு பசலை உசிலை என்றிருந்துவிட்டோம். போதிதர்மர் ஒரு பல்லவ குல இளவரசன் என்றும் போர்க் கலைப் பிராமணர் என்றும் இரு வேறு அனுமானங்கள் உலவுகின்றன. அந்தச் சமயத்தில் சேர தேசத்துப் பிராமணர்கள், களரி வர்மம் போன்ற அடிமுறைகளில் சிறந்து விளங்கினார்கள். பொன்னியின் செல்வனில் ஆதித்திய கரிகாலனைக் கொன்றதாக வரும் ரவிதாசன் கிரமவித்தன் நினைவிருக்கிறதா? அவன் ஒரு கேரள நம்பூதிரியே. காந்தளூர்ச் சாலை என்று அவர்களது படைப் பயிற்சி நிலையத்தை, ராஜ ராஜ சோழன் பின்னாளில் அழித்தான். ஆகவே போதிதர்மர் பௌத்தத்துக்கு மாறிய ஒரு பிராமணனாக இருந்ததற்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த போதிதர்மர் மஞ்சள் ஆற்றை ஒரு மூங்கில் கீற்று மீது நின்றுகொண்டே கடந்து ஷாவலின் என்ற இடத்துக்குப் போய் ஒரு மடத்தை நிர்ணயித்து அங்கு காந்தளூர்ச் சாலை போலவே ஒரு பெரிய போர்க் கலைப் பயிற்சி நிலையத்தை நிறுவினார். அங்கு அவருக்கு இன்னமும் ஒரு கோயில் இருக்கிறது. அங்கு இன்னமும் அவரது வழியென்று சொல்லும் சீடப் பரம்பரை இருக்கிறது. அடிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.

அங்கு மட்டுமல்ல, ஜப்பானிலும் போதி தர்மர் உண்டு. அங்கு போதி தர்மர் தருமா என்றழைக்கப்படுகிறார். நம்மூர் செட்டியார் பொம்மைகளைப் போல் உருண்டையான அவரது சிகப்புப் பொம்மைகள் அங்கு லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றை வைத்திருப்பதும் பரிசளிப்பதும் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். வருடத்தில் ஒருநாள் இப்படி சேர்ந்த போதிதர்மர் பொம்மைகளை ஓர் இடத்தில் போகி போல் குவித்து எரித்துவிட்டு புது பொம்மைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.

வேறு அடிமுறைகளும் இந்தியாவில் இருந்தாலும் கராத்தேதான் இந்தியாவில் பிரபலம். அதற்கான தேசிய அளவு போட்டிகள் உண்டு. சிறு நகரங்களில்கூடப் பயிற்சி தருபவர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே வருடக் கணக்கில் பயில்பவர்கள் உண்டு. வெள்ளை பெல்ட், மஞ்சள் பெல்ட் என்று ஆரம்பித்து கருப்பு பெல்ட் வரை பல நிலைகள் உண்டு. பெண்களும் பயிலும் போர்க் கலை இது. தெளிவாக வரையறுக்கப்பட்ட பயிற்சி முறைகளும் மூச்சுப் பயிற்சிகளும் உணவு வரையறைகளும் மனப் பயிற்சிகளும் உண்டு.

கராத்தே என்றால் வெறும் கை என்று அர்த்தம். வெறும்கைப்போர் அது. வெறுமனே தாக்குவது மட்டுமல்ல. தாக்கும் முன்பு அவர்கள் செய்யும் கட்டாக்கள் எனப்படும் அசைவுகள் ஒரு நடனத்தைப் போலவே இருக்கும். என் நண்பர் -அவர் ஒரு கருப்பு பெல்ட் மாஸ்டர்-அதை ஒரு வாழ்க்கை முறை என்பார்.

பொதுவாகவே இந்தக் கலைகளில் பௌத்தத்தின் செல்வாக்கு உண்டு. தத்துவ நோக்கு உண்டு. புரூஸ் லீக்கு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியின் தத்துவத்தில் எல்லாம் பரிச்சயம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என் நண்பர் ஒரு கராத்தே மாஸ்டர் எதற்கும் பதற்றப் படக் கூடாது என்பார். நான் இயல்பிலேயே அதிகம் படபடப்பவன். ஆகவே அதற்கு ஒரு சிகிச்சையாகவே அவர் என்னையும் கராத்தே கற்றுக் கொள்ளச் சொன்னார். ஆசை யாரை விட்டது? ஆனால் நான் முட்டைகூட சாப்பிட மாட்டேனே என்றேன். அது ஒரு விசயமில்லை என்றார் அவர். அவரும் ஒரு சைவ உணவாளர்தான் என்று தெரிந்ததும் எனக்குச் சற்று நம்பிக்கை வந்தது.

முதலில் ஒரு தயாரிப்பாக அவர் இரு சிறிய மணல் மூட்டைகளை என்னிடம் கொடுத்து கையில் கட்டிக் கொண்டு அலையும்படிச் சொன்னார். அது என் கைகளைப் பலப் படுத்த உதவும் என்று சொன்னார். நான் அன்று முழுவதும் அந்த மூட்டைகளோடு திரிந்தேன். அன்றிரவு அந்த மூட்டைகளோடுதான் தூங்கினேன். அன்றிரவு கனவில் சக் நாரிசை (chuck norris – புரூஸ் லீயின் சீடர், நடிகர்) மயிர்க் கூச்செறியும் அலறல்களோடு எகிறி எகிறி மிதித்தேன்.

மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது எனது இரண்டு தோள்பட்டைகளையும் தூக்க இயலவில்லை. கடுமையான வலி. இரண்டும் வீங்கி விட்டன. டாக்டரிடம் செல்லவேண்டியதாயிற்று. அதன்பிறகு நான் ஒருபோதும் கராத்தே கற்றுக் கொள்வது பற்றிச் சிந்திக்கவே இல்லை. ஜாக்கி சானின் கராத்தே கிட் படம் பார்த்தபோதுகூட.

தோழர்

அத்தியாயம் 45

பிரான்ஸைச் சேர்ந்த புகழ்பெற்ற பயண நூல் ஆசிரியரான பிரான்கோ பெர்னியர் இந்தியா பற்றிய எழுதிய நூல்களை மார்க்ஸ் வாசித்தார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றியும் பிற காலனி நாடுகளைப் பற்றியும் நடைபெற்ற விவாதங்களின் மூலம் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மார்க்ஸிடம் ஐரோப்பிய மையவாதக் கண்ணோட்டம் தென்பட்டதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்படும் என்றும் அதற்கு காலனி நாடுகள் பங்களிக்கும் என்றும் மார்க்ஸ் அப்போது நினைத்திருந்தார். ஆனால், இந்த எண்ணம் சிறிது சிறிதாக மாற்றம் கண்டது.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் வாழ்க்கையை, புலம்பெயர்ந்த வாழ்க்கை என்றுதான் இன்றைய சூழலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அயர்லாந்து, இந்தியா போன்ற பிரிட்டனுக்கு உட்பட்டிருந்த நாடுகளைப் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும் தெரிந்துகொண்டது பிரிட்டனில் இருந்தபோதுதான். ஒரு முதலாளித்துவ நாடு எப்படி வளம் பெற்று, பலம் பெற்று உருபெருகிறது என்பதையும் அதற்கு காலனி நாடுகளின் பங்களிப்பு என்ன என்பதையும் பிரிட்டனிடம் இருந்தே அவர்கள் கற்றுக்கொண்டனர்.

இந்தியாவின் பண்டைய வரலாற்று, சமூக நிலைகளை, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’, ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்’ ‘கிழக்கிந்திய கம்பெனி : வரலாறும் விளைவுகளும்’ஆகிய கட்டுரைகளில் மார்க்ஸ் ஆழமாக அலசினார். பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை மார்க்ஸ் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு விவாதித்தார். மார்க்ஸுக்கு முன்பு, ஹெகல் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதும்போது, இந்தியாவின் சமயங்கள் பற்றியே எழுதினர். மத இலக்கியங்கள் மூலமே அவர்கள் இந்தியாவையும் அதன் சிக்கல்களையும் புரிந்துகொண்டனர். நேர் எதிராக, மார்க்ஸின் சிந்தனைப் போக்கு, இந்தியாவின் கிராமப்புறங்களில் இருந்து தொடங்குகிறது. இந்தியாவைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் முதலில் அதன் கிராமங்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார் மார்க்ஸ்.

ஒரு கட்டுரையில், இந்தியாவின் புவியியல் பரப்பை இத்தாலியோடு ஒப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். இத்தாலிக்கு ஆல்ப்ஸ் இருப்பது போல் இந்தியாவுக்கு இமயமலை. இத்தாலிக்கு சிஸிலித் தீவு போல் இந்தியாவுக்கு இலங்கை. இத்தாலிக்கு அப்பினைன்கள் போல் இந்தியாவுக்கு தக்காணம். ‘இத்தாலியைப் போல் இந்தியாவின் பூமியும் பலவகைப்பட்ட பொருள்களை அளிக்கிறது. இத்தாலியைப் போல் இந்தியாவும் அரசியல் ரீதியில் துண்டாடப்பட்டிருக்கிறது.’

அரசியல் ரீதியில் இத்தாலியைப் போலவே இந்தியாவும், ‘முகலாயர் அல்லது பிரிட்டிஷார் நிர்பந்தத்துககு உட்பட்டிராத பொழுது, பலப்பல சுயேச்சையான ராஜ்யங்காளச் சிதறிக் கிடந்தது. எத்தனை நகரங்கள் உள்ளனவோ அத்தனை ராஜ்யங்களாக உடைந்தது. அல்லது எத்தனை கிராமங்கள் உள்ளனவோ அத்தனை ராஜ்யங்களாகக் கூடக் கரைந்தது. அவை சுயேச்சையாக இருந்தன. ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் நின்றன. எனினும் சமுதாயக் கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துஸ்தான் கீழ்த் திசையின் இத்தாலியல்ல. கீழ்த்திசையின் அயர்லாந்து ஆகும்.’

முகலாயர்கள் உள்பட பலர் இந்தியாவை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றாலும் ‘இதற்கு முன்னால் இந்துஸ்தானம் பட்ட துன்பத்திலிருந்து சாராம்சத்தில் மாறுபட்டதும், அதைவிட மிகமிக உக்கிரமானதுமான துன்பம் பிரிட்டிஷாரால் இந்துஸ்தானத்துக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதில் எத்தகைய சந்தேகமும் இருக்கமுடியாது.’

இந்தியாவை பிரிட்டன் இரண்டு வழிகளில் ஆக்கிரமிக்கிறது என்றார் எங்கெல்ஸ். நிதியைக் கொள்ளையடிப்பது வாயிலாக. போர் மூலமாக. ‘இந்தியாவில் வேளாண்மை நலிந்துவிட்டது. விவசாயம் சீரழிந்துவிட்டது.’ ஆனால், பிரிட்டன் எதுபற்றியும் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதில் மட்டுமே ஈடுபட்டு வந்தது என்றும் பொதுப் பணிகளிலும் முன்னேற்றத்திலும் அது கவனம் செலுத்தவில்லை என்றும் எங்கெல்ஸ் குறிப்பிட்டார். இந்தியா பற்றிய தன் எண்ணத்தை எங்கெல்ஸ் மார்க்ஸுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்தார். மார்க்ஸ் தன் கட்டுரைகளில் எங்கெல்ஸின் கருத்துகளை உபயோகித்துக்கொண்டார்.

1702ம் ஆண்டு தொடங்கி 1813 வரை, கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக இந்தியாவின் வளங்களை உறிஞ்சிகொண்டது. லட்சக்கணக்கான பவுண்டுளை இந்நிறுவனம் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று சேர்த்தது. மாபெரும் சந்தையாகவும் இந்தியாவைப் பாவித்து, தம் பண்டங்களைக் கொண்டு வந்து கடை பரப்பியது பிரிட்டன். எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல் விவசாயமும் கைத்தொழிலும் பாதிக்கப்பட்டதைக் கண்டு கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டனும் கவலைப்படவில்லை. இங்கிலாந்தின் இயந்திரமயமாக்கலால் இந்தியா அடைந்த துன்பத்துக்கு இணையாக வரலாற்றில் இன்னொன்றைக் காண்பது அரிது என்றார் மார்க்ஸ்.

விக் கட்சி மூலம் இங்கிலாந்தில் முதலாளித்துவம் பதவிக்கு வந்தது. 1813 தொடங்கி முதலாளிகள் இந்தியாவைப் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்தியா சீரழிய ஆரம்பித்தது அதற்குப் பிறகுதான். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கிய அதன் கிராமங்கள் சீரழிய ஆரம்பித்தன. 1850ல் இங்கிலாந்தின் ஏற்றுமதியில் எட்டில் ஒரு பங்கு இந்தியாவுக்குச் சென்றது. துணி ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.

நவீன இந்தியாவை இரண்டு காலகட்டமாகப் பிரித்துக்கொண்டார் மார்க்ஸ். கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இந்தியா. பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா. இந்த இரு காலகட்டங்களிலும் இந்தியா எத்தகைய மாற்றங்களைச் சந்தித்தது என்பதை மார்க்ஸ் விவரித்தார். தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் இந்தியச் சமூகம் நிச்சயம் ஒருநாள் கிளர்ந்து எழும் என்று மார்க்ஸ் நம்பினார்.

1857ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற புரட்சி, மார்க்ஸையும் எங்கெல்ஸையும் புதிய வழித்தடத்தில் சிந்திக்கவைத்தது. ‘புரட்சியில் ஈடுபட்ட சிப்பாய்களின் செயல் திகைக்க வைக்கிறது, சொல்லொணா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்று பூரித்துப்போனார் மார்க்ஸ். சிப்பாய் புரட்சி ‘மிக இயல்பான ஒரு நிகழ்வு’ என்றும் குறிப்பிட்டார். பிரிட்டன் இந்தியாவுக்கு என்ன செய்ததோ அதற்கு பதிலடிதான் இது என்றார். பிரெஞ்சு முடியரசுக்கு எதிராக அன்று பிரபுக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இன்று பிரிட்டனுக்கு எதிராக இந்தியப் பிரபுக்கள் அல்ல ராணுவத்தினரே திரண்டுள்ளனர். ‘பிரிட்டனால் பாராட்டி, சீராட்டி, கவனிக்கப்பட்டு வந்த அதே ராணுவம் இன்று புரட்சி மூலம் கிழக்கிந்திய நிறுவனத்தைத் தூக்கி அடித்துள்ளது’. மேலும், ‘ஐரோப்பியர்கள் அவர்களது வரலாற்றில் செய்யாத கொடூரங்கள், சித்திரவதைகள், அழிமானங்கள் எதையும் இந்தியச் சிப்பாய்கள் செய்துவிட்டார்களா, என்ன?’

நவம்பர் 1857 தொடங்கி செப்டெம்பர் 1858 வரை, இந்தியாவின் ராணுவப் போக்குகள் குறித்தும் செயல்திட்டங்கள் குறித்தும் ‘கைப்பற்றப்பட்ட டெல்லி’, ‘இந்தியாவில் புரட்சி’ உள்ளிட்ட தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதினார் எங்கெல்ஸ். அடக்குமுறைக்கு எதிராக சிப்பாய்கள் திரண்டு நின்று எதிர்த்ததை எங்கெல்ஸ் உளப்பூர்வமாக ஆதரித்தார். மார்க்ஸுக்கு எழுதிய கடிதங்களிலும் தொடர்ந்து இந்தியாவைப் பற்றி எழுதினார் எங்கெல்ஸ். எங்கெல்ஸின் ஆர்வத்தையும், துடிப்பான பார்வையையும், எழுத்து நடையையும் மார்க்ஸ் வெகுவாக சிலாகித்தார்.

சிப்பாய் புரட்சி அடக்கப்பட்டது பற்றி எங்கெல்ஸ் தெரிவித்த கருத்து முக்கியமானது. ‘இது இரண்டாவது ஆக்கிரமிப்பு. இதன்மூலம் இந்தியாமீதான தன் பிடியை இறுக்கிக்கொண்டதாக இங்கிலாந்து கருதமுடியாது. இந்தியர்களின் உள்ளத்தை இங்கிலாந்தால் ஆக்கிரமிக்கமுடியாது.’ பிரிட்டனின் காலனியாதிக்கத்தின் மீதான ‘இந்தியர்களின் வெறுப்பு இந்த இரண்டாவது ஆக்கிரமிப்பின்மூலம் இரட்டிப்பாகுமே ஒழிய குறையாது.’ பிரிட்டனின் ஆட்சி தீவிர விளைவுகளைச் சந்திக்கப்போகும் நேரம் நெருங்கிவிட்டது என்று எச்சரித்தார் எங்கெல்ஸ்.

இந்தியாவைப் போலவே சீனாவும் மார்க்ஸின் சிந்தனையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 1850ல் இருந்தே சீனாவை கவனிக்க ஆரம்பித்துவிட்டார் மார்க்ஸ். காரணம், தைபிங் புரட்சி. 1850 தொடங்கி 1864 வரை நீடித்த தைபிங் புரட்சி, சீனாவை உலுக்கியெடுத்தது. தெற்கு சீனாவில் தொடங்கிய விவசாயிகளின் எழுச்சி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஆயுதபாணியாக்கவும் செய்தது. அதன் விளைவாக உள்நாட்டு யுத்தம் மூண்டது. நிலத்தைப் பங்கீடு செய்யவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முடியாட்சிக்கு எதிரான நிலமற்ற விவசாயிகளின் போராட்டமாக இதனை சிலர் கண்டனர். தைபிங் போராட்டத்தில் கம்யூனிசக் கூறுகள் தென்பட்டதாகவும் சொல்லப்பட்டது. பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தின் உதவியுடன் சீனா இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மீண்டும் பிரெஞ்சுப் புரட்சியோடு இதனை ஒப்பிட்டார் மார்க்ஸ். இதோ கிழக்கில் ஒரு பிரான்ஸ் என்று ஆச்சரியக் குரல் எழுப்பினார். ‘ஐரோப்பாவின் புரட்சிகரப் போராட்டங்களுக்குப் பயந்து கிழக்கு நோக்கித் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடும் ஐரோப்பியப் பிற்போக்குவாதிகள், கிழக்கில் சீனப் பெருஞ்சுவரைச் சென்று சேரும்போது அச்சுவரில் சீனக் குடியரசு: சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் எனப் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண் பார்கள்!’ என்று எழுதினார் மார்க்ஸ். தைபிங் புரட்சியை, தேசிய யுத்தம் என்றும் அவர் வருணித்தார்.

இந்தியா, சீனா இரண்டும் மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் உணர்த்திய பாடம் இதுவே. காலனிகளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட மக்கள் எதிர்த்துப் போராடும்போது, அப்போராட்டங்களில் வெளிப்படும் வன்முறையில் வரலாற்றுரீதியான நியாயம் உள்ளது.  1858 ஜனவரி 16 அன்று மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெரும் ஒரு வரி இது. ‘இப்போது இந்தியாவே நமது மிகச் சிறந்த கூட்டாளி!’

(தொடரும்)

0

மருதன்

புத்தகங்களுடன், புத்தகங்களுக்காக…

பெங்களூரூ பிரிகேடியர் சாலையில் ஒரு சந்தில் என்னுடைய புத்தகக் கடை (Select) இயங்கி வருகிறது. என்னிடம் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை, புராதனமானவை. என் வாழ்நாளில் பெரும் பகுதியை நான் புத்தகங்களைச் சேகரிப்பதிலும் விற்பதிலும், புத்தகக் கண்காட்சிகளில் கலந்துகொள்வதிலும், புத்தகங்கள் குறித்து எழுதுவதிலும் பேசுவதிலும் செலவழித்து வருகிறேன். சில அனுபவங்களை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் உலகப் புத்தகக் கண்காட்சியில் 1992ம் ஆண்டிலிருந்து நான் கலந்துகொண்டு வருகிறேன். கல்கத்தா, ஹைதராபாத், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் பங்கேற்றிருக்கிறேன். கலந்துகொண்ட ஒவ்வொருமுறையும் நான் பல வகையில் பலனடைந்திருக்கிறேன். இங்கே நான் புத்தக விற்பனையை மட்டும் குறிப்பிடவில்லை. கடிதங்கள் வாயிலாக மட்டும் பரிச்சயமாகியுள்ள பல எழுத்துலக நண்பர்களை நேரில் காணும் வாய்ப்பு புத்தகக் கண்காட்சி மூலம் மட்டுமே கிடைக்கிறது.

நண்பர் ஒருவர் பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி பற்றி பெருமை பொங்க குறிப்பிட்டார். அங்குள்ள விசேஷமான ஏற்பாடுகள் குறித்தும் பிரமிப்பூட்டும் வசதிகள் குறித்தும் அவர் நிறைய சொன்னார். உலகம் முழுவதிலும் இருந்து பதிப்பாளர்கள் பங்குபெறும் இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சிலர் பஙகேற்கிறார்கள். ‘நீங்கள் ஸ்டால் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!’ என்று அந்த நண்பர் குறைபட்டுக்கொண்டார். தினம் தினம் புதிய புத்தகங்கள் பல உலகம் முழுவதிலும் இருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன என்றாலும் பழைய புத்தகங்களுக்கான தேவை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

பதிப்பாளர்களைப் பொறுத்தவரை நான் அவதானித்த ஒரு விஷயம் இது. சமீப காலமாக,சிறிய பதிப்பகங்களை பல பெரிய ராட்சஸ நிறுவனங்கள் விழுங்கிக்கொண்டு வருகின்றன. பல புராதன பதிப்பங்கள் நவீனமாக மாறிவருகின்றன. புத்தக வெளியீட்டு விழாக்கள், குறைந்தவிலை புத்தக விற்பனை என்று பலப்பல முறைகளை இவர்கள் கையாண்டு வருகிறார்கள். பல சமயங்களில், புத்தகம் என்பது விற்பனைக்குரிய பண்டமாக மாட்டுமே பார்க்கப்படுவதை இந்நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆம், அவர்களைப் பொறுத்தவரை நாற்காலிகளைப் போல், வாஷிங் மெஷினைப் போல் புத்தகமும் ஒரு பண்டம்தான். என்னுடைய புத்தகக் கடை சிறியது. இப்படிப்பட்ட விழாக்களை நாங்கள் நடத்துவதில்லை.

பொதுவாக, புத்தகம் வாங்குபவர்கள் வெவ்÷று பின்னணியைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ‘மாணவர்களுக்கு டிஸ்கவுண்ட் தருவீர்களா?’ ‘இன்னும் எவ்வளவு குறைத்துக்கொள்ளமுடியும்?’ என்று கேட்பவர்களை தினம் தினம் சந்திக்கிறேன். மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகள் இவை. அவர்களுக்கு நான் பொறுமையாகவே ஒவ்வொருமுறையும் பதிலளிப்பேன். இவ்வாறு கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அனுகூலமான விடைகளையும் நல்ல புத்தகங்களையும் பெற்றுச் செல்வது வழக்கம்.

பல வித்தியாசமான மனிதர்களை நான் புத்தகக் கடையில் சந்தித்ததுண்டு. கணவர் உள்ளே புத்தகம் தேடிக்கொண்டிருக்கும்போது, மனைவி கடை வாசலில் நின்றுகொண்டிருப்பார். அல்லது, பக்கத்தில் ஷாப்பிங் செய்ய போய்விடுவார். தன் காரியம் முடிந்ததும் கணவருக்கு மிஸ்ட் கால் கொடுப்பார். அதுவரை சேகரித்து வைத்திருந்த புத்தகங்களுக்கு அவசரமாக பில் போட்டுவிட்டு கணவர் வெளியேறிவிடுவார். சில சமயம் மனைவி மட்டும் புத்தகம் தேடுவார். கணவர் அமைதியின்றி வெளியில் நடை போட்டுக்கொண்டிருப்பார். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர், பல புத்தகங்களை ஒன்றாக வாங்கி, அவற்றை மூட்டைகட்டி கடையிலேயே வைத்துவிட்டு, சிறிது சிறிதாக வீட்டுக்குக் கொண்டு செல்வார்.

இடம் பெயரும்போது பலர் வருத்தத்துடன் தங்கள் புத்தகங்களை எங்களிடம் விற்றுவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்களுடைய வருத்தம் எங்களுடைய மகிழ்ச்சியாக மாறுவதை என்னவென்று சொல்வது! பலரால் தங்கள் சிறிய வீடுகளில் தங்களுக்கு விருப்பமான அத்தனை புத்தகங்களையும் சேகரித்துவைக்கமுடியாமல் போய்விடுகிறது. பழைய பத்திரிகைகள், கிளாஸிக்ஸ் ஆகியவற்றைச் சேகரிப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆர்வம் அதிகம். உதாரணத்துக்கு, கேதரின் மேயோவின் மதர் இண்டியா, ஆனி பிராங்கின் டைரி ஆகியவற்றின் ஆரம்பகாலப் பதிப்புகள் எங்களிடம் உள்ளன. இந்தப் புத்தகங்கள் தற்போது அச்சில் உள்ளன என்றாலும், பழைய பதிப்புகளையும் முதல் பதிப்புகளையும் தேடி எங்களிடம் வருகிறார்கள்.

சேகரிப்பதைக் காட்டிலும் புத்தகங்களைப் பாதுகாப்பது சவாலான காரியம். அழுக்கு, வெள்ளிப்பூச்சிகள், ஒட்டடை, தூசி என்று புத்தகத்தைப் பாழாக்க பல எதிரிகள் உள்ளனர். சில வகை புழுக்களும்கூட படையெடுத்து வருகின்றன. பல அரிய புத்தகங்களை இந்த எதிரிகளிடம் நான் இழந்திருக்கிறேன். கல்கத்தா, மும்பை, ஹதராபாத் என்று புத்தகங்களைத் தேடி பயணம் மேற்கொள்ளும்போது பல நல்ல புத்தகங்கள் அகப்படும். துள்ளியெழுந்து பிரித்தால் பூச்சிகள் பக்கங்களை அரித்துபோட்டிருக்கும்.

உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்துக்கொண்டிருந்த சமயம், என் பாட்டியின் கிராமத்துக்குச் செல்லும்போது என் அம்மா, தங்கைகள், தம்பிகள் அனைவரும் உடன் வருவார்கள். இருந்தும் இவர்கள் மட்டும் எனக்குப் போதாது என்பதால் ஒரு டிரங் பெட்டியையும் கையோடு கொண்டுபோய்விடுவேன். எப்படிப்பட்ட புத்தகங்களைக் கொண்டு செல்வேன் என்று இன்று யோசிக்கும்போது புதிராக இருக்கும். Havelock Ellis’ My Confession, William Saroyan’s Human Comedy,  Correspondence between H. Ellis & Olive Schreiner போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.  என்னால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளமுடியாது என்றபோதும் படித்துக்கொண்டிருப்பேன். பாட்டி வீட்டில் எலிகளும் தேள்களும் அதிகம். புத்தகங்களை அவற்றிடம் இருந்து மீட்க நிறைய போராடவேண்டியிருந்தது.

படிப்பைத் தொடர பெங்களூரூ திரும்பியபோது ஒரு சிறிய புத்தகம் என் கண்ணில் சிக்கியது. அதன் தலைப்பு, English Theatre. ஆசையுடன் திறந்தபோது பக்கங்கள் பொடிப்பொடியாக உதிர ஆரம்பித்தன. ஒரு பழுப்பு நிற எலி புத்தகத்தைக் குதறியிருந்ததைக் கண்டுகொண்டேன். எலிகள், உயிருடன் இருக்கும்போதும் சரி, இறந்தபிறகும்சரி தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகின்றன. என் அறை முழுவதும் புத்தகங்கள் நிரம்பியிருக்கும். சுவரோரங்களில் குவியல் குவியலாக அடுக்கியிருப்பேன். அந்தக் குவியலுக்குள் எலிகள் புகுந்துவிட்டால், கண்டறிவது மிக மிகக் கடினம். பல புத்தகங்கள், தொட்டாலே உதிர்ந்துவிடும் நிலையில் இருந்தன. பத்திரமாக வெண்ணைய் தாள் கொண்டு அவற்றை மூடிவைத்திருப்பேன். சிலவற்றுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டிருப்பேன். உதிரியாக இருக்கும் பக்கங்களை, வரைபடங்களை, போஸ்ட் கார்டுகளை, கத்தரித்த செய்தித்தாள் குறிப்புகளை அட்டைப் பெட்டிகளுக்குள் வைத்திருப்பேன்.

வாடிக்கையாளர்களுக்குக் காட்டுவதற்காக ஒவ்வொருமுறை அட்டைப் பெட்டியைத் திறக்கும்போதும், கவனத்துடன் இருக்கவேண்டும். புத்தகக் கண்காட்சிகளுக்கு அவற்றைத் தூக்கிச்செல்வது சவாலான பெரும்பணி. வண்டிகளில் ஏற்றி, இறக்குவது அதைவிடப் பெரிய சவால். இப்படிப்பட்ட பெட்டிகளைக் கையாள்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் என்பதால், சாதாரணப் பெட்டி, படுக்கைகளைப் போலவே இவற்றையும் அலட்சியமாகக் கையாள்வார்கள்.

புத்தகங்களை உயிருக்கு உயிராக நேசிக்கும் பலரை நான் அறிவேன். ஆஸ்டின் டோப்ஸன் என்னும் 18ம் நூற்றாண்டு எழுத்தாளரின் கட்டுரை ஒன்றில் சாமுவேல் ஜான்சனின் நூலகம் பற்றிய குறிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தகங்களைப் பார்த்து ஜான்சன் இவ்வாறு கூறுகிறார். ‘இவர்கள் என் நண்பர்கள். இவர்களிடம் இருந்து நான் இன்னும் விடைபெறவில்லை.’ லண்டனை எவ்வளவு நேசித்தாரோ அந்த அளவுக்குப் புத்தகங்களையும் ஜான்சன் நேசித்திருக்கிறார். தன் புத்தகங்களை ஜான்சன் பத்திரமாகப் பாதுகாத்தார். சாப்பிடும்போது அவர் புத்தகம் படிப்பதில்லை. பக்கங்களில் அழுக்கு படிந்துவிடும் என்பதால். ஒட்டிக்கொண்டிருக்கும் பக்கங்களை அவர் மிகவும் கவனமாகக் கையாண்டார்.

ஆரம்பத்தில் பனை ஓலைகளைக் கொண்டு எழுதினார்கள். பிறகு, மரப்பட்டைகளையும், ஈயம், மெழுகு போன்றவற்றையும் பயன்படுத்தினார்கள். ஆரம்பகால குறிப்புகளின்படி, ‘உண்மையான ஒரு புத்தகம் தோலில் மட்டுமே எழுதப்பட்டது’. யூதர்களும் பெர்ஷியர்களும் இந்த முறையைக் கடைபிடித்தனர். கல், களிமண், உலோகம், பானை, பனை ஆகியவும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டில் புகைப்பட அச்சுகள் உபயோகப்படுத்தப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஒருமுறை பேராசிரியர் எஸ்.கே. ராமச்சந்திர ராவ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதன் பட்டைகள் எழுதுவதற்காக முன்னர் பயன்படுத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

இன்று இண்டெர்நெட்டில் பல லட்சம் புத்தகங்கள் இலவசமாகக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ஆயிரம் வசதிகள் வந்தாலும், ஒரு புத்தகத்தை எடுத்து தொடையில் வைத்து, ஒவ்வொரு பக்கமாகத் திருப்பி படிக்கும் சுகம் வேறு வழிகளில் கிடைக்குமா?

0

K.K.S. மூர்த்தி

(1945ம் ஆண்டு K.B.K. ராவ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, பிறகு அவர் மகன் கே.கே.எஸ். மூர்த்தியாலும், மூர்த்தியின் மகன் சஞ்சய் என்பவராலும் நிர்வகிக்கப்பட்டு வரும் மூன்று தலைமுறை புத்தகக் கடை, Select. கட்டுரையாசிரியர் K.K.S. மூர்த்தி தி ஹிந்து லிட்ரரி ரிவ்யூவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலத்தில அவர் எழுதிய கட்டுரையின் தமிழ்வடிவம் இது. Select புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ள இங்கே செல்லவும்).

மனநோயும் விவாகரத்தும் (ஹாய் அட்வகேட்!)

ஹாய் அட்வகேட்!
என் நண்பருக்குத் திருமணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. அவருடைய மனைவிக்கு மனநோய் இருப்பது தெரியவந்துள்ளது. குணப்படுத்துவது கடினம் என்றும் சட்டப்படி பிரிவதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர் சொல்லியிருக்கிறார். இவர் விவாகரத்து செய்யவேண்டுமா அல்லது திருமணம் செல்லாது என்று சட்டப்படி உத்தரவு பெறவேண்டுமா?
வெங்கடேஷ், வந்தவாசி

உங்கள் நண்பர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று நீங்கள் குறிப்பிடவில்லை. ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவில் அவர்களுடைய திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சுவிகாரம், பரம்பரை சொத்துரிமை, இரட்சணை (Guardianship) போன்ற விவகாரங்களில் அவரவர்கள் சார்ந்த மதச் சட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44 வது ஷரத்தின்படி இந்திய அரசாங்கத்தின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code)அரசங்கம் கொண்டுவரவேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் தோன்றி 61 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பொதுவான உரிமையியல் சட்டம் கொண்டுவரப்படவில்லை.

பொது உரிமையியல் சட்டம் இல்லாத காரணத்தால் மேற்சொன்ன விவகாரங்களில் பாதிக்கப்பட்ட நபர் எந்த மதத்தைச் சார்ந்திருக்கிராறோ அந்த மதம் சம்மந்தப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் வழக்கு பரிசீலிக்கப்பட்டு பரிகாரம் வழங்கப்படும். ஒவ்வொரு மதச் சட்டத்திலும் மேற்சொன்ன விவகாரங்களை தீர்மானிக்க தனித்தனி சட்ட விதிகள் இருக்கின்றன. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் போன்றோர் சம்பந்தமான விவகாரங்களை வழிநடத்த அவர்களுடைய மதக் கோட்பாடுகள் (Personal laws) சட்டரீதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு வரையறை செய்யப்பட்ட சட்டங்கள் இந்தியாவில் கிடையாது. முஸ்லிம்களுக்கு அவர்களுடைய ஷரியா (முஸ்லீம் மத ஆச்சாரம்) சட்டமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

சம்மந்தப்பட்ட கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ளும் முன்னர் நாம் இங்கு மேலும் ஒரு விவரத்தை தெரிந்து கொள்வோம். மன அழுத்தம், மன உளைச்சல், பித்துநிலை, புத்தி பேதலித்தல் ஆகிய அனைத்தையும் நாம் மனநோய் என்று பொதுவாக அழைக்கிறோம். ஆனால் விவாகரத்து பெறுவதற்கும், செல்லா திருமணம் என்று அறிவிப்பு கோருவதற்கும் தீராத மன நோய் அல்லது குணப்படுத்த முடியாத மன நோயை மட்டுமே காரணமாகக் காட்டமுடியும்.

செல்லாத திருமணம் (Nullity of Marriage), விவாகரத்து இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். திருமணம் செய்துவைக்கும்பொழுது மணமகனோ மணமகளோ தீராத மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தை மறைத்து திருமணம் செய்து வைத்தால், அந்தத் திருமணம் செல்லாது. அப்படி பொய் சொல்லி நடத்தி வைத்த திருமணத்தைச் செல்லாத திருமணம் என்று அறிவிக்கச் சொல்லி நீதிமன்றத்தை அணுகலாம். திருமணமான பிறகு கணவனுக்கோ மனைவிக்கோ மன நோய் ஏற்பட்டு குணமாக்க முடியாத பட்சத்தில் அதை காரணம் காட்டி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். இந்து திருமணச் சட்டப்படி விவாகரத்து கோரினால், விவகாரத்து வேண்டுபவர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு, திருமணமாகி குறைந்தது ஒரு வருட காலமாவது காத்திருக்கவேண்டும். திருமணமான ஒரு வருடத்துக்குள் வழக்குத் தொடர வேண்டுமானால், தாங்க முடியாத சங்கடங்கள், கஷ்டங்கள் தனக்கு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நிரூப்பித்து விவாகரத்து வழக்கை தாக்கல் செய்யலாம்.

திருமணம் செல்லாது என்று பரிகாரம் வேண்டுவோருக்கு இந்த ஒரு வருட கால நிர்ணயம் தேவை இல்லை. மன நிலை பாதிக்கப்பட்டவர் என்ற விஷயத்தை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்கள் என்று கூறி நீதிமன்றதை உடனே அணுக முடியும்.
கிறிஸ்தவர்களின் விவாகரத்தை வரையறை செய்யும் பொருட்டு இந்திய விவாகரத்துச் சட்டம் (Indian Divorce Act, 1869) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி தீவிர மன நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்தால் அந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றத்தில் பரிகாரம் கேட்கமுடியும். திருமணம் ஆன பிறகு தம்பதிகளில் யாருக்கேனும் குணப்படுத்த முடியாத மனநோய் ஏற்பட்டால் விவாகரத்து கேட்க முடியாது. ஆனால், 2001 ஆம் ஆண்டு இந்திய விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கணவனுக்கோ மனைவிக்கோ மன நோய் ஏற்பட்டு அது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குணப்படுத்த முடியாமல் இருந்தால், சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெறமுடியும். சட்டத் திருத்தம் வருவதற்கு முன்னர் கணவனோ, மனைவியோ அடல்டிரியில் ஈடுபட்டால்தான் மற்றவர் நீதிமன்றம் அணுகி விவாகரத்து பெற முடிந்தது.

முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களில் ஷரியா செயல்படும். ஷரியத்தின்படி ஒரு கணவன் தன் மனைவியை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிடலாம். காரணமெல்லாம் தேவையில்லை. மனைவியாலும் ஷரியத்தின்படி விவாகரத்து வாங்கமுடியும். அதற்கு குலா என்று பெயர். ஆனால் பெண்கள் விவாகரத்து வாங்குவது கடினம். அதனால்தான் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில், 1939 ஆம் ஆண்டு Dissolution of Muslim Marriage Act என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி முஸ்லிம் பெண்களும் நீதிமன்றம் அணுகி தங்கள் கணவன்மார்களிடமிருந்து விவாகரத்து வாங்க வழிவகை செய்யப்பட்டது. மேற்சொன்ன சட்டத்தின்படி, ஒரு முஸ்லிம் பெண்மணி தன் கணவன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற காரணத்தை முன்வைத்து விவாகரத்து பெறமுடியும். ஆனால்அதே சட்டத்தின் கீழ் தன்னுடைய திருமணம் செல்லாது என்று அவரால் பரிகாரம் கேட்கமுடியாது.

இவை தவிர சிறப்பு திருமணச் சட்டம் Special Marriage Act, 1954) என்ற ஒரு சட்டமும் இந்தியாவில் இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி இரண்டு வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத, சடங்கு சம்பிரதாயங்களைக் கடந்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம். அப்படி செய்து கொண்ட திருமணத்தில் தம்பதியர் யாருக்கேனும் குணப்படுத்த முடியாத மன நோய் ஏற்பட்டால், மற்றவர் நீதிமன்றம் சென்று விவாகரத்து வாங்க முடியும். ஆனால், அப்படி விவாகரத்து பெறவேண்டுமென்றால் இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிட்டது போன்று இச்சட்டத்திலும் திருமணமாகி ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். மன நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்திருந்தால், அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகமுடியும்.

0

S.P. சொக்கலிங்கம்

தேர்தல் – ஓர் அரசு ஊழியனின் குறிப்புகள்

பொதுவாகவே அரசு ஊழியன் ஒருவனின் குரலை இந்த சமூகம் பொருட்படுத்துவதே இல்லை. சொகுசான வாழ்க்கை, வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம், சம்பளத்தோடு கிம்பளம் என்றெல்லாம் சொல்லிவிடுவார்கள். இப்படி சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையாளர்களாக இருந்திருக்கமாட்டார்கள் என்பதோடு, அவரவர்கள் அவரவர் அளவில் வாயில் மட்டும் வக்கனையாய் நேர்மை குறித்துப் பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள் என யூகிக்கிறேன். ஆனால் இந்த ‘நேர்மையாளர்கள்’ இந்த வசதியை ஒருபோதும் அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பதில்லை.

ஓர் அரசு ஊழியன் மனம் நொந்துபோய்ச் சொல்ல அவனது வாழ்க்கையில் பல செய்திகள் உள்ளன. இப்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருக்கிறது. எனவே அதிலிருந்தே தொடங்குகிறேன்.

ஒருவழியாக வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது உள்ளாட்சி தேர்தல். கட்சி பாகுபாடின்றியும் நேர்மையாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரிய அளவில் ஏதும் இல்லாமலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்திக்காட்டியுள்ளது தேர்தல் ஆணையம். பத்திரிகைகள், பொதுமக்கள் அனைவரும் பாராட்டியாகிவிட்டது. உண்மைதான். சந்தேகமே இல்லை, பெரிய சாதனைதான். ஆனால், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் பட்ட இன்னல்களையும் நாம்தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அரசுப் பணியாளர்கள் யாரோ அல்ல. உங்களில் ஒருவர்தான். நீங்களாகக்கூட இருக்கலாம்.

நகர்ப்புறங்களில் தேர்தலுக்கென அமைக்கப்படும் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 5 அலுவலர்கள் நியமிக்காப்படுவார்கள். பஞ்சாயத்துப் பகுதிகளில் 7 அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு 3 பயிற்சி வகுப்புகள் வெவ்வேறு நாள்களில் நடத்தப்படும். அந்தப் பயிற்சி வகுப்பு முறையாக நடத்தப்படமாட்டாது. பல இடங்களில் பயிற்சி வகுப்புக்கு முக்கியத் தேவையான படிவங்கள், புத்தகங்கள் இல்லாமலேயே பயிற்சி வகுப்பினை முடித்து விடுவார்கள். அலுவலர்களுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருக்கும். அந்தப் படிவஙளை தேர்தல் அன்றுதான் கண்ணால் பார்ப்பார்கள்.

ஒரு வங்கிக்குச் சென்று பணம் செலுத்தவோ கேட்பு வரைவோலை எடுக்கவோ உரிய படிவம் பூர்த்தி செய்ய திண்டாடும் நம்மவர்களுக்கு இந்தப் படிவங்களை பார்த்ததுமே தலை சுற்றும். அவர்களுடைய வாக்குச்சாவடிக்குரிய மண்டல அலுவலரிடம் கேட்டால், “ட்ரெய்னிங் கிளாஸ்ல என்னங்க பண்ணிக்கிட்டிருந்தீங்க” என்று மடக்குவார். மடக்குபவர்தான் ஆபிஸர் சார். ஆனால் சொல்லிக்கொடுக்க மாட்டார். அவருக்கு தெரிந்தால்தானே சொல்லிக்கொடுக்க என்று நாங்கள் சொல்லிச் சிரித்துக்கொள்வோம்.

அடுத்தது அந்த வாக்குச் சாவடியில் உள்ள அடிப்படை வசதிகள். வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததுமே ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மேலே அண்ணாந்து பார்ப்பார் மின்விசிறி இருக்கிறதா என்று. 90 சதவீதம் மின்விசிறியே இருக்காது. நம்மோட ராசி அப்படி என்று 99 சதவீத வாக்குச்சாவடி அலுவலர்களும் நொந்து கொள்வார்கள். குடிக்கத் தண்ணீர் இருக்காது. கழிவறை இருக்காது. இருந்தால் அது உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம். உடனே சந்தோஷப்பட்டு விடாதீர்கள். அப்படியே கழிவறை இருந்தாலும், கதவு இருக்காது. விசிலடிக்கத் தெரிந்திருக்கவேண்டும். கழிவறையும் இருந்து, கதவும் இருந்துவிட்டால் வாளி இருக்காது. வாளி இருந்தால் தண்ணீர் வராது. மின்விளக்கு எரியும்-ஆனால் எரியாது. இவை குறித்து மண்டல அலுவலரிடம் கேட்டால் வரும் ரெடிமேடான பதில் ஒன்றுதான், “சார்! இந்த ‘பூத்’திலேதான் காலம் காலமா தேர்தல் நடந்திருக்கு! ஒரு நாள்தானே அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க” என்பார்.சிலர் உணர்ச்சிவசப்பட்டு எகிறி கோபத்தோடு கேட்டால்,அவர்களிடம், “சார்! இது தேசியப் பணி. (ஆம், தேசியப்பணி, ஜெய்ஹிந்த்! சிறுநீர் முற்றுகிறது, ஜெய்ஹிந்த்! வேர்த்துக்கொட்டுகிறது, ஜெய்ஹிந்த்! போதுமா ஆபிஸர் சார்!)  நம்ம நாட்டுக்காக ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்காக்கூடாதா’ என்று பணிவாகப் பேசுவார்கள், ஏதோ அவர்கள்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் போன்று. இந்த தேசப்பற்றி எங்கள் சிலருக்குள்ளும் புகுந்துகொள்ள, நாங்களும் அமைதியாகிவிடுவோம்.

அப்படியும் அமைதியாகாத சிலருக்கு ஆபிஸர் சார்கள் இப்படிச் சொல்வார்கள்: இரவுக்குள் அனைத்தும் சரி செய்துவிடுவோம். இப்படிச் சொல்லித் தப்பித்து விடுவார்கள். இரவு வரும். கூடவே கொசுவும் வரும். ஆனால் பிரச்சினைக்கு விடிவு மட்டும் வரவே வராது. அதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கும்போதே விடிந்து விடும் என்பதுதான் இயற்கையின் கொடை! இடையில் மழை வந்ததோ வாக்குச்சாவடியில் நீரைத் தவிர ஒன்றுமே இருக்காது. ஒன்றிரண்டு தவளைகள் வந்து ஆபிஸர் சார்களையே அலற வைத்த சம்பங்கள் எல்லாம் உண்டு.

சில வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்படும் 5 அலுவலர்களில் ஒருவர் மட்டும் ஆண் அலுவலராக இருப்பார். மீதமுள்ள 4 பேரும் பெண்களாக இருப்பார்கள். நகர்ப்புறங்களில் அந்த 4 பெண்களும் இரவு 8 அல்லது 9 மணிக்கு ஆண் அலுவலரிடம் சோல்லிகொண்டு தன் கணவனுடன் சென்று விடுவார்கள். இதைப் பற்றி ஒன்றுமே சொல்லமுடியாது. மீறி எதாவது சொன்னால், நாங்களே சக பெண் அலுவலர்களின் துன்பங்களைப் புரிந்துகொள்ளவில்லை என்பதிலிருந்து பெண்ணியம் வரை பேசித் தீர்த்துவிடுவார்கள். இதற்கு அவர்களை அனுப்பி வைப்பதே நல்லது.

சில வாக்குச்சாவடிகளில் 5 பேருமே பெண்களாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் செல்ல விடாமல் தடுத்து அனைவருமே சாவடியில் தங்கிவிடுவார்கள். அந்த மாதிரியான சாவடிகளில் பெண்களின் பாதுகாப்பு கொஞ்சம் கேள்விக்குறிதான்.

தேர்தல் நாளன்று 6 மணிக்கு கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்திக் காட்ட வேண்டும். பின்பு 7 மணிக்குள் வாக்குப்பதிவிற்குத் தயாராக வேண்டும். இதற்காக அவர்கள் காலை 4 மணிக்கே எழுந்தாக வேண்டும். இரவு கொசுக் கடியில் தூக்கம் வந்திருக்காது என்பதால் 4 மணிக்கு சுலபமாக எழுந்து, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காகவே கிடைத்த நீரில் குளித்து அல்லது குளித்தது போல் நடித்து, இதர காலைக்கடன்களையும் கடனே என்று முடித்து 5-30க்கெல்லாம் தயாராகி விடுவார்கள். 6 அல்லது 6-30க்கு மாதிரி வாக்குப்பதிவு முடித்து, ஒரிஜினல் வாக்குப்பதிவிற்குத் தயாராகி நிமிரும்போது, வெளியே வாக்குச்சாவடியில் ஒரு நீண்ட வரிசை நின்றிருக்கும், பாழாய்ப் போன வயிறும் சுறுசுறுவென கடிக்கத் தொடங்கியிருக்கும்.

அந்த நீண்டவரிசை வாக்காளிக்கத் தொடங்கும். அப்போது ஆரம்பிக்கும் வேலை இடைவிடாது நடந்து கொண்டிருக்கும். இரவு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்து மட்டும் சென்ற மண்டல அலுவலர் சார்,  ஒன்றுமே தெரியாத மாதிரி, பதிவான வாக்கு பற்றிய மற்ற விவரங்களைச் சேகரித்துக்கொண்டு போவார். இவ்வளவு அவசரமாக வேலை நடந்து கொண்டிருக்கிறதே, இன்று ஒருநாளாவது பசிக்காமல் இருக்கலாம் இந்த வயிறு. சொல்லி வைத்தாற் போல், மற்ற நாள்களைவிட அன்றுதான் கூடுதலாக பசி எடுக்கும். பெரும்பாலும் அருகில் கடை ஏதும் இருக்காது. இருந்தாலும் நாங்கள் வெளியே செல்லக்கூடாது. செல்லவும் முடியாது. வேறு யாரையாவது வாங்கி வரச் சொல்லலாம் என்றால் அந்த நபர் எந்தக் கட்சியையாவது சேர்ந்தவராக இருந்து தொலைத்தால், சோ. அய்யர் சார் கோபித்துக்கொள்வார். என்ன செய்வது?

சரி! அந்தக் காலத்தை போன்று அந்தப் பகுதி தலையாரியையோ அல்லது பில் கலெக்டரையோ உதவி கோரலாம் என்றாலும் முடியாது. அவர்கள் தேர்தல் பணியில் வாக்காளர்களை அடையாளம் காட்டுவதற்காக அதே பகுதியில் வேறு ஏதாவது பூத்-தில் இருப்பார்கள். என்னதான் செய்வது? பட்டினி ஒன்றுதான் வழி. முன்யோசனையோடு பிஸ்கட் ஏதும் எடுத்து வந்திருந்தால் கொஞ்சம் பிழைத்தார்.

தேர்தல் முடிந்து அனைத்துப் படிவங்களையும் தெரிந்தும் தெரியாமலும் பூர்த்தி செய்து இரவு சுமார் 7 மணிக்குத் தயாராக இருப்போம். 9 மணிக்கு ரிலீவ் ஆகிவிட்டால், வீட்டுக்குப் போய் தென்றல் பார்த்துவிட்டு, தோசை சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம் என்றெல்லாம் எமது சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் எண்ணம் ஓடும்! நினைப்பது என்று நடந்திருக்கிறது! எப்படியும் குறைந்த பட்சம் 9 மணிக்கும் அதிக பட்சம் மறுநாள் காலை 2 அல்லது 3 மணிக்கும் வந்து வாக்குப்பெட்டியைச் சேகரித்துக்கொண்டு போவார்கள். அந்த  இரவும் அவர்களுக்கு அந்த பூத்தான் கதி.

இவர்கள் பணி இப்படி என்றால் பூத் பூத்தாக போய் வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து செல்கிறார்களே, அவர்களின் பணி இன்னும் சிரமமானது. ஓட்டுப்பெட்டிகளை சேகரித்து முடிக்கவே மறுநாள் காலை 2 அல்லது 3 மணியாகிவிடும். அதன்பிறகு காவல்துறை பந்தோபஸ்த்துடன் பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டுசேர்க்க வேண்டும்.ஒரு மண்டல அலுவலர் குறைந்த பட்சம் 10 லிருந்து 15 பூத்களில் பெட்டிகளைச் சேகரிக்க வேண்டுமாதலால் இடையில் சாப்பிடக்கூட நேரமிருக்காது. நேரம் கிடைத்தாலும் மிக முக்கிய ஆவணம் என்பதால் சாப்பாட்டிற்கென்று ஹோட்டலுக்குச் செல்ல ரிஸ்க் எடுக்க மாட்டார்கள் .மண்டல அலுவலர்கள் கொண்டுசெல்லும் வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களைப் பெறுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பணியார்களுக்கு எப்படி சரிபார்த்து அவற்றைப் பெற வெண்டும் என்று தெரியாது. அந்த அதிகாலைப் பொழுதில் ஒவ்வொன்றாக சரிபார்த்து வரவு வைத்துக்கொண்டிருப்பார். ஏற்கெனவே 2 நாட்களாகத் தூக்கம் இல்லாமல் ஜீப்பில் ஊர் முழுவதும் வளைய வந்த மண்டல அலுவலர், பசி மயக்கத்திலும் தூக்கக் கலக்கத்திலும் ஒப்படைத்துக்கொண்டிருப்பார். அங்கு மட்டும் சுமார் 3 மணிநேரமாகும். எல்லாம் முடிந்து வீட்டிற்குச் செல்ல காலை மணி 5 அல்லது 6 ஆகி விடும்.

இந்தத் தேர்தலில் இன்னுமொரு கொடுமை நடந்தது. தேர்தல் அக்.17 மற்றும் அக்.19 என இரண்டு தேதிகளில் நடைபெற்றதால், 17 ஆம் தேதி ஒரு பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் பணியாற்றிய பணியாள்ர்களை 19 ஆம் தேதியும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தியதுதான். 17ம் தேதி ஓர் இடத்தில் தேர்தல் பணி முடித்து, 18ம் தேதி காலை வாக்குப்பெட்டியை ஒப்படைத்துவிட்டு, காலை சுமார் 5 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்து, கோபத்துடன் இருக்கும் மனைவி கணவன் குழந்தைகளை அவசரகதியில் கொஞ்சிவிட்டு (பெண்கள் என்றால் வீட்டில் சமைக்கவும் வேண்டும்!) மறுநாள் நடக்க இருக்கும் தேர்தல் பணிக்காக அன்றைய தினம் மதியமே 12 மணிக்குள் அடுத்த பூத்துக்குப் போயாகவேண்டும். எழுதவே மூச்சு முட்டுகிறதே! 19ம் தேதி நடந்த தேர்தல் பெரும்பாலும் கிராமப்புறங்களுக்கு நடைபெற்றதால் பஸ் வசதிகூட இல்லாத வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்கள் போய் சேருவதற்குள் பட்டபாடு அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

நகர்ப்புறங்களில் இருந்த வாக்குச்சாவடிகளைவிட கிராமப்புறங்களில் இருக்கும் வாக்குச்சாவடிகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இத்தனை கஷ்டத்திற்குத்தான் அவர்களுக்கு தேர்தல் பணிக்கு தனியாக ஊதியம் கொடுக்கப்படுகிறதே என நினைக்கலாம். 3 நாட்கள் பயிற்சி வகுப்பு, 2 நாட்கள் தேர்தல்பணி, அவற்றிற்கான போக்குவரத்துச் செலவு உணவு ஆகிய அனைத்திற்கும் சேர்த்து அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கு ரூ. 1450; இதர 3 அலுவலர்களுக்கு ரூ.1075; மை வைப்பவருக்கு ரூ. 400. ஒரு சில வாக்குச் சாவடிகளில் சில அலுவலர்கள் ‘இந்தத் தொகை எனக்கு தேவையில்லை’ என எழுதி கையொப்பமிட்டுச் சென்றுவிட்டார்கள்.

மண்டல அலுவலர்களுக்கு ஜீப் ஓட்டும் ஓட்டுநர்களைப் பற்றியும் சொல்லவேண்டும். 17ம்தேதி வாக்குப்பதிவு முடித்து சேகரித்த பெட்டிகளை வாக்கு எண்ணும் மையத்திற்கு விடிய விடிய முழித்திருந்து கோண்டுபோய் 18ம் அதிகாலை ஒப்படைத்து, 19ம் தேதி பணிக்காகச் சிறிதுகூடத் தூக்கமின்றி, உடனே புறப்பட்டுச் சென்றது மிகக் கொடுமையான விஷயம். அவர்கள் நிம்மதியாகத் தூங்கியது 20ம் தேதிதான். இதே போல் booth level officer என்ற பணி ஒன்று உள்ளது. இவர்கள் இன்னும் பரிதாபத்துக்குரியவர்கள். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் தேர்தல் பணி உண்டு. தங்களின் வழக்கமான பணிகளோடு சேர்த்து இப்பணியைப் பார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலை வீடு வீடாக கொண்டு சென்று, சரிபார்த்து, விடுதல் இருப்பின் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து வாங்கி, வீடு மாறிச் சென்றிருப்பின், நீக்கம் செய்ய அறிக்கை செய்து, புகைப்படம் எடுக்க மக்களை வீடுவீடாகச் சென்று வரச்சொல்லி, தேர்த்லுக்குச் சரியாக 2 நாள்கள் முன்னர் குறைந்தபட்சம் 1000 முதல் அதிகபட்சம் 2500 வரைவழங்கப்படும் voter’s slip களை, வேறு யாரையும் உதவிக்கு அழைக்காமல், தாங்களே வீடு வீடாகத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்து, தேர்தல் நாளில் வாக்காளர்களை அடையாளம் காட்டும் பணி பார்த்து… இவ்வளவு கஷ்டப்பட்டும் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு இப்பணிக்கு கிடைக்கும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? ரூ. 1300 மட்டுமே. இதில் voter’s slip ஐ வேறு ஒருநபர் மூலம் கொடுத்தார் என்பதற்காகச் சிலர் சஸ்பெண்டு வேறு செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்குப் பின்னர் டிவிக்கள் கேமராவுடன் அலறிக்கொண்டிருக்கும், சரியாக வோட்டர்ஸ் ஸ்லிப் கொடுக்கப்படவில்லை என்று.

ஒருநாள் அல்லது இரண்டு நாள் நடக்கும் ஒரு தேர்தலில் ஏன் இத்தனை குறைகள்? அல்லது ஏன் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்களா? விஷயம் அட்ஜஸ்ட் செய்துகொள்வதில் இல்லை. உண்மையில் அரசு ஊழியர்கள் காம்ப்ரமைஸுக்காகவும் அட்ஜஸ் செய்துகொள்வதற்குமாகவுமே பிறந்தவர்கள். முன்பு வாக்குச் சீட்டில் ஓட்டுப்பதிவு இருந்தபோது, கட்சி ஏஜெண்டுகள் வகை வகையாக எதாவது வாங்கித் தருவார்கள். ஜெயிக்கும் கட்சி ராஜ உபசாரம் செய்யும். இதில் அரசுப் பணியாளர்களுக்கு மனச்சாய்வு ஏற்படலாம் என்று தேர்தல் ஆணையம் நினைத்ததில் பிழையில்லை. ஆனால் இதற்கான மாற்று என்ன என்பதை தேர்தல் ஆணையம் ஆராயாததில்தான் பிரச்சினை உள்ளது. ஒருவர் ஒரு வேலை செய்கிறார், சாப்பிட வசதி உள்ளது, ஆனாலும் வேலை ஆர்வத்தில் சாப்பிடாமல் வேலை செய்கிறார். இது தவறில்லை. ஏனென்றால் வேலை செய்பவரின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ளாதது அவரது தேர்வு. ஆனால் தேர்தலில் அரசு ஊழியர்களுக்கு இந்த அடிப்படை உரிமையே நிறைவேற்றப்படவில்லை. அட்ஜஸ்ட் செய்துகொள்ளட்டும் என்று எப்படி ஒரு திட்டம் தீட்ட முடியும்? சாப்பிடவேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கவேண்டியது உழைப்பவர்கள்தானே?

கழிப்பறை பற்றிச் சொன்னேன். பொதுவாகவே இந்தக் கழிப்பறை விஷயங்களில் இந்தியர்களுக்கு தேவையான விழிப்புணர்வு இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. லட்சம் பேர் கூடும் இடத்தில் இரண்டே இரண்டு கழிப்பறை வைத்திருப்பார்கள். அங்கே தண்ணீர் வராது. உள்ளே செல்லமுடியாமல் நாற்றம் அடிக்கும். இப்படியே பழகியாகிவிட்டது. இதையே தேர்தல் ஆணையமும் கிராண்டாடாக எடுத்துக்கொண்டுவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இத்தனையையும் மீறி தேர்தல் வெற்றிகரமாக நடக்கிறது என்றால் அது அரசு ஊழியர்களால் மட்டுமே. ஒரே ஒரு தேர்தலில் அரசு ஊழியர்கள் பங்கே இல்லாமல் தேர்தல் ஆணையம் செயல்பட்டுப் பார்க்கவும். தாவு தீர்ந்துவிடும். இப்போதும் அரசு ஊழியர்கள் எல்லாவித ஆர்வத்தோடும்தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். ஏதோ கொஞ்சமே கொஞ்சம் சாப்பாடு, சரியான கழிப்பறை, காற்றுக்கு மின்விசிறி, கொசுக்கடி அகற்ற முன்னேற்பாடு, இரண்டு நாள்கள் இடையில் இருக்குமாறு அடுத்தகட்ட தேர்தலும் வாக்குப் பதிவும். இதைக் கேட்பதில் என்ன பிழை இருக்கிறது? இதைச் செய்துவிடுவதல்தான் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பெரிய பிரச்சினை இருந்துவிடப் போகிறது?

இப்படிக்கு,

இத்தனை இன்னல்களுக்கிடையேயும்
தேர்தல் பணியை விரும்பிச் செய்யும்
பெயர் சொல்ல விரும்பாத ஓர் அரசு ஊழியன்
அ.அ.அனாமதேயன்

(ஒ-ம்.) (அரசு அலுவலர் அனாமதேயன்)

தரம்பால் – நேர்காணல்

காந்தியவாதி. வரலாற்றாய்வாளர். பியூட்டிஃபுல் ட்ரீ (18-ம் நூற்றண்டில் இந்திய கல்வி), பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் போன்ற நூல்களை எழுதியவர். உத்தரபிரதேசத்தில் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் காந்தளா கிராமத்தில் 1922-ல் பிறந்தவர்.

இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் நமக்குப் பிழையாக உருவாக்கித் தந்த பல்வேறு கருத்தாக்கங்களை பிரிட்டிஷாரின் ஆவணங்களை வைத்தே தகர்த்தவர். டெக்கான் ஹெரால்டு இதழில் 1983-ல் வெளியான பேட்டியின் ஒரு பகுதி அவருடைய நினைவுநாளை ஒட்டி (அக், 24) இங்கு மறு பிரசுரம் செய்யப்படுகிறது. பேட்டி எடுத்தவர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்.

ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்: நீங்கள் பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்திய சமூகம் குறித்து, குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்திய சமூக வாழ்க்கை சம்பந்தமாக, அதிக ஆர்வத்துடன் இருக்கிறீர்களேஏன் என்று சொல்ல முடியுமா? எதற்காகக் கேட்கிறேன் என்றால் நீங்கள், ஆய்வுப் பணிகளை தன்னார்வத்தின் அடிப்படையில் மேற்கொண்டவர்தான். நீங்கள் ஓர் அதிகாரபூர்வ கல்விப்புலம் சார்ந்த பண்டிதரோ ஆய்வாளரோ கிடையாது.

தரம்பால்: நான் அதிகாரபூர்வ ஆய்வுப் பணியாளன் அல்லதான். ஆனால், நான் ஒரு களப்பணியாளன். கிராமப்புற மேம்பாடு தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பில் நீண்ட காலம் பணிபுரிந்திருக்கிறேன். (AVARD- Associaion of Volountary Agencies for Rural Development.) 1958-ல் இருந்து 1964 வரை அதன் செகரட்டரியாக இருந்திருக்கிறேன். நம் தேசத்தில் பஞ்சாயத்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்த அமைப்பு அது.

அந்த நிறுவனத்தில் பணி புரிந்தபோது எனக்கு ஓர் எளிய உண்மை தெரியவந்தது. அதாவது நமது இந்திய சமூகம் பெரும்பாலும் பாரம்பரிய மதிப்பீடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் பெரும்பாலான ‘வெளிப்புற பார்வை’ கொண்ட  இந்தியர்களைப் போலவே எனக்கும் நம் மண் சார்ந்த வாழ்க்கை முறை பற்றி எதுவும் தெரியாமல்தான் இருந்தது.

ஓர் உதாரணம் சொல்கிறேன். பஞ்சாயத்துகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க ராஜஸ்தானில் இருந்த ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அந்த பஞ்சாயத்தின் அதிகாரபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்துப் பார்த்தபோது அந்தக் கட்டடம் பற்றி எந்தக் குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை. என்ன விஷயம் என்று அவர்களைக் கேட்டேன். பீஸ் பிஸ்வ பஞ்சாயத் (இருபது அங்க பஞ்சாயத்து) என்ற பாரம்பரிய அமைப்பின் சார்பில் அதைக் கட்டியதாகச் சொன்னார்கள். அது ஓர் அதிகாரபூர்வமற்ற அமைப்பு. கால காலமாக அந்த கிராமங்களில் அப்படியான ஓர் அமைப்பின் மூலம்தான் பணிகள் நடந்து வந்திருக்கின்றன. அது அதிகாரபூர்வ பஞ்சாயத்தைவிட செயல் ஊக்கம் மிகுந்ததாகவும் மக்களின் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றதாகவும் இருந்தது.

ஆந்திரா, தமிழகம் போன்ற பிற பல இடங்களிலும் இது போன்ற அனுபவமே எனக்குக் கிடைத்தது. 1963-65 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை விரிவாக ஆராய்ச்சி செய்தோம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குப் போனேன். பஞ்சாயத்துத் தலைவர்களிடம் கலந்துரையாடினேன். வேறு பலரிடம் பேசினேன். தஞ்சாவூரில் பாரத சேவக் சமாஜ் என்ற அமைப்பின் சேர்மனைப் பார்த்துப் பேசினேன். 100-க்கு மேற்பட்ட கிராம சமுதாயங்கள் 1937 வாக்கில் தஞ்சைப் பகுதியில் இருந்ததாக அவர் சொன்னார். அதாவது கிராம சமுதாயம் என்றால், ஒட்டு மொத்த நிலமும் கிராம சமுதாயத்துக்கே சொந்தமாக இருக்கும். கிராமத்து உறுப்பினர்கள் அவரவருக்கான குறிப்பிட்ட பங்கு நிலத்தில் பயிர் செய்து விளைச்சலை எடுத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் நிலமானது கிராமத்தினர் அனைவருக்கும் இடையில் பரிமாற்றம் செய்துகொள்ளப்படும். ஏனென்றால், காலப்போக்கில் நிலத்தின் வளத்தில் மாற்றம் ஏற்படுவது இயற்கைதானே. ஒருவருக்கு மட்டுமே நல்ல நிலம் கிடைத்து மற்றவருக்கு வளம் குறைந்த நிலம் கிடைத்துவிட்டால் ஒருவித ஏற்றத் தாழ்வும் நியாயமின்மையும் உருவாகிவிடுமென்பதால் அப்படி அவ்வப்போது நிலத்தைப் பரிமாற்றிக் கொள்வார்களாம்.

பிரிட்டிஷாரின் வருவாய்த்துறை மற்றும் பிற துறை ஆவணங்களைப் பார்த்தபோது 1807 வாக்கில் தஞ்சையில் இருந்த நிலத்தில் 30 சதவிகிதம் கிராம சமுதாய நிலங்களாக இருந்தது தெரியவந்தது. 18-ம் நூற்றாண்டு, 19-ம் நூற்றாண்டு ஆவணங்களை நான் தீவிரமாக ஆராயத் தொடங்கியபோது இன்று நாம் நமது இந்திய சமுதாயம் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கும் சித்திரம் தவறு என்பது தெரியவந்தது. யாராவது ஒருவர் 18-ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் ஆவணங்களை விரிவாகப் பார்த்தாக வேண்டியிருந்தது. எனவே, என்னால் முடிந்தவற்றைச் செய்ய ஆரம்பித்தேன்.

வேறொரு கேள்வி கேட்கிறேன். நம் தேசத்தை ஆங்கிலேயர்களால் எப்படி எளிதில் அடிமைப்படுத்த முடிந்தது? இந்தியாவில் இருந்த எந்த அம்சங்கள் இதற்குக் காரணமாக இருந்தன?

ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரிட்டிஷ் காலத்துக்கு முந்தைய இந்திய சமூகத்தின் பலம், பலவீனம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 18-ம் நூற்றாண்டின் பிந்தைய பகுதி இந்தியா பற்றி, அதுவும் பிரிட்டிஷாரின் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்ட  தகவல்கள், மட்டுமே எனக்குத் தெரியும். பிரிட்டிஷாருக்கு முந்தைய இந்தியா பற்றி பதில் சொல்ல ஒருவருக்கு வேறு பல விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 1700 வாக்கில் முகலாயர்களின் மைய அரசு பலவீனமடைய ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் அரசர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட ஆரம்பித்திருந்தனர். இந்த அரசியல் மாற்றம் மிகவும் மெதுவாகவும் பலவீனமாகவும் இருந்தது. பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு முன்னால் இந்திய சிற்றரசர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிரிட்டிஷார் படிப்படியாக ஒவ்வொரு பகுதியாகக் கைப்பற்றி இந்த தேசத்தை வென்றெடுத்தபோது அதற்கு எதிராக ஒற்றுமையாகப் போராட வழியில்லாமல் போய்விட்டது.

இந்திய நிலப்பிரபுத்துவத்தால் புதிதாகப் பிறந்திருந்த மேற்கத்திய முதலாளித்துவ சமூக அமைப்பை எதிர்க்க முடியாமல் போய்விட்டது என்று சொல்லலாமா?

நம்மிடம் நிலபிரபுத்துவம் இருந்தாதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இது போன்ற முத்திரை குத்தல்களுக்குப் பின்னால் பல்வேறு அர்த்தங்கள், அனுமானங்கள் மறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக, முகலாயர்களின் மையப்படுத்தப்பட்ட அரசு என்று நாம் சொல்லும்போது அது மிகவும் வலுவான மையப்படுத்தப்பட்ட அரசு என்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்படும். ஆனால், அது உண்மை அல்ல. அவுரங்கஸீப் தன் பேரனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதம் இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது: ஜஹாங்கீரின் காலகட்டத்தில் அரசு வருவாய் 60 லட்சம். செலவோ ஒன்றரைக் கோடி. அந்தப் பற்றாக்குறையை அக்பர் சேர்த்து வைத்திருந்த செல்வத்தில் இருந்து எடுத்து சரிக்கட்டியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக, ஜஹாங்கீருக்கு அடுத்ததாக வந்த ஷாஜஹான் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்தினார். செலவினத்தை ஒரு கோடியாகக் குறைத்தார். ஆனால், மொகலாயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் மொத்த வருமானம் 10-20 கோடிவரை இருந்திருக்கலாமென்று கணிக்கப்பட்டுள்ளது.அதில் சொற்ப அளவே மன்னருக்கு வரியாகக் கிடைத்திருக்கிறதென்றால், எஞ்சிய பணம் எங்கே போனது? அவுரங்கஸீப்பின் காலகட்டத்தில்கூட மன்னரின் வரி வருவாய் 20%த்தைக்கூடத் தாண்டவில்லை என்பதை அனைத்து சரித்திர ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஞ்சிய 80 சதவிகிதம் அந்தந்தப் பகுதிக்குள்ளாகவே செலவிடப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பணியாளர்களுக்கான சம்பளம் போக எஞ்சிய பணமானது சத்திரங்கள் நடத்துதல், பள்ளிகள், குளங்கள், ஏரிகளை நிர்வகித்தல், கோயில் போன்ற நிறுவனங்களுக்கான நன்கொடை, அறிஞர்கள், கவிஞர்கள், மருத்துவர்கள், ஜோதிடர்கள், மந்திரவாதிகள்போன்றோருக்கான சன்மானங்கள் என காலகாலமாக பின்பற்றுவந்த விஷயங்களுக்காகச் செலவிடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். மொகலாயர்கள் காலகட்டத்திலும் பின்பற்றப்பட்டு வந்த இந்த விஷயம் பிரிட்டிஷாரின் வருகையைத் தொடர்ந்து மாறியது. பிரிட்டிஷார் 50-60% வரி வசூலிக்க ஆரம்பித்தனர். இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும். கிராமத்தினரிடமிருந்து பெரும்பகுதி இப்படி அரசால் பிடுங்கப்பட்டதால் சத்திரங்கள், பள்ளிகள், குளங்கள் இவற்றின் நிர்வாகத்துக்கு பெரும் இடைஞ்சல் வந்தது.

பிரிட்டிஷார் இதைத் திட்டமிட்டு செய்ததாகச் சொல்கிறீர்களா?

பிரிட்டிஷார் தங்களுக்குப் பழக்கமான ஒரு செயலைச் செய்தார்கள். இங்கிலாந்தில் விவசாயிகளிடமிருந்து 50%க்கு மேலாக வரி வசூலிக்கப்பட்டது. இந்தியாவை அடிமைப்படுத்திய பிறகு அதுபோலவே இங்கும் வசூலித்தார்கள். இந்தியாவுக்கு என்று தனியாக எதையும் புகுத்தியிருக்கவில்லை. எங்கெல்லாம் போனார்களோ அங்கெல்லாம் இதையேதான் செய்தார்கள். ஏனென்றால், மையப்படுத்தப்பட்டு வலுவான அரசு என்பதுதான் அவர்களுடைய கோட்பாடு. இதற்கான வேர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருக்கிறது. முதலாளித்துவத்தின் வருகைதான் காரணம் என்று சொல்ல முடியாது. உதாரணமாக, பொது சகாப்தம் 1100-ல் நார்மன் வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்தின் 95% வளங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வெற்றியாளர்களால் அதாவது அரசராலும் தேவாலயங்களாலும் புதிய நிலப்பிரபுக்களாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

1750 அல்லது அதற்கு முந்தைய இந்தியாவானது இங்கிலாந்தைவிட மேலானதாக இருந்திருக்கிறதா? இந்தியாவில் சாதாரண மனிதரின் நிலை என்னவாக இருந்திருக்கிறது?

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களை மட்டுமே வைத்து இரண்டு சமூகங்களையும் முழுமையாக ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்திய சமூகம் பற்றிய மாறுபட்ட சித்திரத்தை அவற்றின் மூலம் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, 1804 ஜூலை மாதத்தில் எடின்பர்க் ரிவ்யூவில் இந்தியாவில் விவசாய உற்பத்தி பற்றியும் சம்பளங்கள் பற்றியும் கலந்துரையாடியிருக்கிறார்கள். இங்கிலாந்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்தியாவின் விவசாய உற்பத்தி பல மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரை மேலும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், இந்திய விவசாயத் தொழிலாளர்களின் சம்பளம் பிரிட்டிஷ் தொழிலாளரின் சம்பளத்தைவிட கணிசமாக அதிகமாகவே இருந்திருக்கிறது.

அதிலும் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த அந்தக் காலகட்டத்திலேயே சம்பளம் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்றால் அது நல்ல நிலையில் இருந்தபோது இன்னும் எவ்வளவு அதிகமாக இருந்திருக்கும் என்று ஆச்சரியப்பட்டுக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1806 வாக்கில் பெல்லாரி மாவட்டத்தில் உணவு உட்கொள்ளும் விகிதம் (கன்சம்ஷன்) பற்றி ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். தேசத்தின் ஒட்டு மொத்த உட்கொள்ளலை அளவிட்டதோடு மக்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி ஆராய்ந்திருக்கிறார்கள். இந்த வகைப்பாடு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டதுதான். மூன்று தரப்பு மக்களும் உட்கொண்ட உணவின் அளவு கிட்டத்தட்ட சமமாகவே இருந்திருக்கிறது. அதாவது ஒரு நபருக்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு கிலோ உணவு. பயறு வகைகள், நெய், எண்ணெய், தேங்காய், காய் கனிகள், வெத்தலை என மொத்தம் 23 வகைகள் பரவலான பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. மொத்த வருடாந்திர தனி நபர் உட்கொள்ளல் (பெர் கேப்பிடா கன்சம்ஷன்) முதல் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 17 ரூபாயாகவும் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 9 ரூபாயாகவும் மூன்றாம் பிரிவினருக்கு 7 ரூபாயாகவும் இருந்திருக்கிறது.

தஞ்சாவூரில் 1805-ல் மிராசுதார்களின் (நில உடமையாளர்களின்) எண்ணிக்கை 62,000. அதில் 42,000 பேர் சூத்ரர்கள் மற்றும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜாதியினராக இருந்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில், நில உடமையாளர்களாக இருந்த பறையர்களின் எண்ணிக்கை 32,474 ஆக இருந்திருக்கிறது. 1799-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த மொத்த மிராசுதார்களின் எண்ணிக்கை 8300 என்று கலெக்டர் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். 18-ம் நூற்றாண்டின் பிந்தைய காலகட்டத்து பிரிட்டிஷாரின் ஆவணங்களை இன்னும் ஆழமாக ஒருவர் ஆராய்ந்து பார்த்தால் இந்திய சமூகம் பற்றிய விரிவான முற்றிலும் மாறுபட்ட சித்திரம் நமக்குக் கிடைக்கும்.

உதாரணமாக, மதராஸ் வருவாய் திட்டத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் ரீட் சொல்கிறார்: 1780 வாக்கில் ஹைதராபாத்தில் இருந்த பிரபுக்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் இருந்த வேறுபாடு என்று பார்த்தால் முன்னவருடைய ஆடை கொஞ்சம் கூடுதல் தூய்மையாக இருந்தது… அவ்வளவுதான்.

பிரிட்டிஷாருக்கு முன்னால் இந்தியாவில் கல்வி பற்றிய உங்களுடைய அடுத்த புத்தகத்தில் பல சுவாரசியமான அம்சங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆமாம். உதாரணமாக 1922-25 வாக்கில் மதராஸ் பிரஸிடென்ஸியில் இந்திய பாரம்பரியக் கல்விமுறை பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 11,575 பள்ளிகளும் 1094 உயர் கல்வி மையங்களும் மதராஸ் பிரஸிடென்ஸியில் நடைபெற்றுவந்தது தெரியவந்தது. இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்த இன்னொரு முக்கியமான அம்சம் ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவம் பற்றியதுதான்.

தமிழ்நாட்டில் மொத்த மாணவர்களில் 70-80 சதவிகிதம் பேர் சூத்ர மற்றும் அதற்கு அடுத்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரிஸ்ஸாவில் இவர்களின் எண்ணிக்கை 62 சதவிகிதமாகவும் கேரளாவில் 54 சதவிகிதமாகவும் தெலுங்கு மொழி பேசப்படும் இடங்களில் 35-40 சதவிகிதமாகவும் இருந்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் கல்வி கற்றவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை 3,196. மாணவிகளின் எண்ணிக்கை 1,122 யாக இருந்திருக்கிறது. எனது பியூட்டிஃபுல் ட்ரீ புத்தகத்தில் பிரிட்டிஷாரின் விரிவான ஆவணங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறேன். அதை படித்துப் பார்க்கும் ஒருவர் பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்து இந்தியாவில் கல்வி எப்படி இருந்தது என்பது பற்றிய தன் எண்ணங்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயாக வேண்டியிருக்கும்.

இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் எந்த நிலையில் இருந்தது?

வான சாஸ்திரம், கணிதம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் வங்காளத்தின் கமாண்டர் இன் சீஃப் ஆகவும் இருந்த சர் ராபர்ட் பார்கர், காசியில் இருந்த புகழ் பெற்ற கோளரங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில்கூட 1823 வரையில் உலகிலேமிகச் சிறந்த ஐந்து கோளரங்கங்களில் ஒன்றாக காசியில் இருந்ததும் குறிப்பிட்டிருக்கிறது. பிரபல ஃப்ரெஞ்சு வான சாஸ்திர நிபுணரான பெய்லி இந்திய வான சாஸ்திரத்தைப் பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார். அதை விரிவாக ஆராய்ந்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிளேஃபெயர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அதே ஆண்டில் ரூபன் பரொ இந்திய பைனாமியல் கோட்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இன்றைய விஞ்ஞான வழிமுறைகள், கருவிகள் எதுவும் இல்லாமலே தமிழர்கள் கிரஹணத்தைத் துல்லியமாகக் கணிக்கிறார்கள் என்பது பற்றி கேஸினியின் உதவியாளரான லே ஜெண்டில் வியந்து எழுதியிருக்கிறார். இந்திய விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.

1820 வாக்கில் கர்னல் அலெக்ஸாண்டர் வாக்கர் கேரளத்திலும் குஜராத்திலும் இருந்த விவசாய முறை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அம்மை நோய்க்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பற்றி மருத்துவரும் வங்காளத்துக்கு சிறிது காலம் கவர்னருமாக இருந்த ஹோல்வெல் எழுதியிருக்கிறார். வங்காளத்திலும் பிற பகுதிகளிலும் அந்த சிகிச்சை பரவலாக நடைமுறையில் இருந்ததை விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். 1802-03 வாக்கில் இந்திய சிகிச்சை முறையை பிரிட்டிஷார் தடை செய்தனர்.

கேப்டன் ஹால்காட் தென்னிந்தியாவில் நடைமுறையில் இருந்த விதை – கலப்பை உழவு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஐரோப்பிய கண்டுபிடிப்பாகவும் மிகவும் நவீனமான ஒன்றாகவும் கருதப்பட்ட அந்த வகை உழவு இந்தியாவில் குக்கிராமங்களில்கூட பயன்பாட்டில் இருந்ததை அவரால் கற்பனைகூட செய்து பார்க்க முடிந்திருக்கவில்லை. இந்திய விதை-கலப்பையின் வடிவமைப்பு மிகவும் எளிதாகவும் செயல் திறம் மிகுந்ததாகவும் இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

எஃகு தயாரிப்பது தொடர்பான இந்திய வழிமுறை பற்றிய குறிப்புகளும் பிரிட்டிஷ் ஆவணங்களில் காணப்படுகின்றன. டாக்டர் ஹெலெனஸ் ஸ்காட் என்பவர் இந்திய எஃகின் சில மாதிரிகளை பிரிட்டிஷ் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவர்கள் பார்த்த எஃகுகளிலேயே இந்திய எஃகு மிகவும் உயர்ந்ததாக வலிமையானதாக இருப்பதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஐஸ் தயாரிப்பது, காகிதம் செய்தல், நெசவு என பல தொழில்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. சிற்ப, கட்டடக் கலையின் மேன்மை பற்றியெல்லாம் அவர்கள் தனியாக எதுவும் சொல்லத் தேவையே இல்லை.

ஆனால், இந்தியர்களை வேதனையில் உழல்பவர்களாகவும் அறியாமை நிறைந்தவர்களாகவும் பிரிட்டிஷார்கள் குறிப்பிட்டிருக்கிறார்களே

அறியாமை, துன்பம் என்று அவர்கள் சொன்னதெல்லாம் சமுதாய அல்லது பொருளாதார அர்த்தத்திலோ தொழில்நுட்பம், கலை, ரசனை இல்லாதவர்கள் என்ற அர்த்தத்திலோ அல்ல. 1813-ல் பிரிட்டிஷ் கீழ் சபையில் ஒரு விவாதம் நடந்தது. அதில் பெரும்பாலானோருக்கு, இந்தியா அப்போது குழப்பத்திலும் ஒழுங்கீனத்திலும் இருந்த போதிலும், அதன் சகிப்புத் தன்மை, ஒத்திசைவான சமூக கட்டமைப்பு, வளமை போன்ற பல்வேறு அம்சங்களில் பொறாமைப்படத் தகுந்த அளவுக்கு விழிப்பு உணர்வு பெற்றதாகவே தெரிந்திருக்கிறது. இந்திய மக்களின் ஆன்மாவை ரட்சிப்பது பற்றியே அந்த விவாதம் பெரிதும் அக்கறை கொண்டிருந்தது. அந்தக் கோணத்தை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ்.

கிரேக்கமும் ரோமும் கிறிஸ்தவத்தைத் தழுவுவது வரை இழிவான நிலையிலேயே இருந்தன. எனவே கிறிஸ்துவத்தை அறியாத நிலையில் இந்தியர்களால் எப்படி விழிப்பு உணர்வு பெற்றவர்களாக மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதுவரை அவர்களை ஒடுக்க வேண்டும். அறியாமையில் தள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.

அவர்களுடைய கணிப்பின்படி கிறிஸ்தவத்தைப் பற்றித் தெரியாதென்பதால், சாக்ரடீஸ், பிளேட்டோ போன்றோருமே அறியாமையில் மூழ்கியவர்களே! எனவே, அறியாமை, துன்பம் என்று பிரிட்டிஷார் இந்தியாவைப் பற்றிச் சொன்னதெல்லாம் அதன் மத அம்சத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த அபிப்ராயத்தைத்தான் சுட்டுகிறது. உண்மையில் பார்த்தால் இந்தியாவின் சமூக, பொருளாதாரப் பின்னடைவு என்பது 1800-க்குப் பிறகு ஏற்பட்ட ஒரு நிலையே. மையப்படுத்தப்பட்ட இறுக்கமான ஓர் அரசின் உருவாக்கமும் பிரிட்டிஷாரின் சுரண்டலுமே அப்படியான ஒரு நிலைக்குக் காரணம்.

இப்படியான ஒரு அதிகாரமும் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருந்த சுரண்டலும் மேலும் மேலும் ஆக்கிரமிப்புகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டன. புதிய பெரு நகரங்கள் உருவாக்கப்பட்டன. ராணுவ குடியிருப்புகள் அதிகரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும் வகையில் எல்லா வளங்களும் சூறையாடப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த சீர்குலைத்தலும் வறுமைக்குள் தள்ளுதலும் அடிமைப்படுத்தலும் தங்களுடைய வருவாயைப் பாதிக்காத அளவிலேயே பிரிட்டிஷார் செயல்பட்டனர். இந்திய சமுதாயத்தை முடங்கிய நிலையில் கொண்டுபோய் நிறுத்திய பிறகு பிரிட்டிஷ் அறிஞர் பெருமக்களின் திருப்பணிகள் ஆரம்பித்தன. இந்தியாவின் வறுமையும் சீர்குலைவும் காலகாலமாகவே இருந்துவரும் ஒன்று என்று நிறுவ ஆரம்பித்தனர்.

ஜாதி அமைப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதுவும் 1800-க்குப் பின் வந்த பிரச்சினை என்று சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நம் பாரம்பரியத்தை நாம் நியாயப்படுத்திப் பேசும்போது இந்த ஜாதி விஷயம் நமக்கு நிறைய பிரச்சினைகளை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரிதான். இந்தியாவின் இன்றைய பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக ஜாதியே சொல்லப்படுகிறது. ஆனால், இந்த முடிவுக்கு எப்படி வந்து சேருகிறோம்? கிராமங்களைப் போலவே ஜாதியும் இந்திய வரலாறு முழுவதும் இந்திய சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத அங்கமாகவே இருந்துவந்திருக்கிறது. மனுஸ்மிருதி போன்றவை இந்திய சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தியது உண்மைதான். ஆனால், அதற்கு முன்பிருந்தே பழங்குடிகளும் ஜாதிகளும் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் இருந்து வருகின்றன. ஆனால், இந்திய வரலாற்றில் இப்போது இருப்பதுபோல் ஜாதியானது என்றைக்குமே பெரிய பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை.

பல்வேறு ஜாதிகள் அருகருகே வசித்து வந்திருக்கின்றன. தமக்குள் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியான, பெருமைக்குரிய சடங்கு சம்பிரதாயங்கள் இருந்திருக்கின்றன. ஒன்றுக்கொன்று சண்டையும் இட்டும் வந்திருக்கின்றன. பொதுவாக நம்பப்படுவதற்கு முற்றிலும் மாறாக, அதாவது மனு ஸ்மிருதிக்கு முற்றிலும் எதிராக, பிரிட்டிஷார் இந்தியாவை வென்றபோது ஆட்சியில் இருந்த பெரும்பான்மையான அரசர்கள் எல்லாம் சூத்ர ஜாதியைச் சேர்ந்தவர்களே.

இந்தியாவில் தனித்தனியான ஜாதிகள் இருந்தது இந்திய அதிகாரவர்க்கத்தின் பலவீனமான நிலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அதேநேரத்தில் அந்த ஜாதி அமைப்பே இந்திய சமூகம் நீடித்து நிலைக்கவும் காரணமாக இருந்திருக்கிறது. அதன் தாக்குபிடித்தலுக்கும் மீண்டும் எழுந்து நிற்கும் வலிமைக்கும் காரணமாக இருந்திருக்கிறது. ஜாதி அமைப்பு இந்தியாவைப் பிரித்திருக்கிறதா… ஒத்திசைவுடன் இயங்க வைத்திருக்கிறதா என்பது விரிவான விவாதத்துக்கு உரியது. இன்றுவரை அதற்கு எந்த உறுதியான பதிலும் கிடைக்கவில்லை.

பிரிட்டிஷார் இந்திய ஜாதி அமைப்பைத் தீமையானது என்று சொன்னதற்கு அவர்கள் ஜாதி (குழு) அற்றதன்மையை நம்பியவர்கள் என்பதோ மேல் கீழ் கட்டுமானத்தை வெறுப்பவர்கள் என்பதோ காரணமல்ல. இந்திய சமூகத்தை அவர்கள் விரும்பியதுபோல் உடைப்பதற்கு ஜாதி தடையாக இருந்தது என்பதுதான் காரணம். இந்திய சமூகத்தை பலவீனப்படுத்தி ஒரே குடையின் கீழ்கொண்டு வந்து நிர்வாகம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜாதி என்ன பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது வேறு விஷயம். ஆனால், நேற்றைய இந்திய சமூகத்துக்கு அது கெடுதலாக இருந்தது என்ற கருத்தாக்கம் பிரிட்டிஷாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றுதான். அது உண்மை அல்ல என்பதற்கான ஆதாரங்கள் பிரிட்டிஷாரின் ஆவணங்களிலேயே ஏராளம் இருக்கின்றன.

 மொழியாக்கம்: மகாதேவன்

அம்பேத்கரா காந்தியா

‘ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் ஒரு காந்தியும் அம்பேத்கரும் மேலாதிக்கத்துக்காகப் போட்டியிடுகிறார்கள்.’ ராமச்சந்திர குஹாவின் இந்த வாக்கியம் உண்மையானது. ஆனால், தன் கட்டுரையை  நிறைவு செய்யும்போது அவர் முற்றிலும் எதிரான திசையில் நகர்ந்து செல்கிறார். அம்பேத்கரும் காந்தியும் ‘அவர்கள் வாழ்ந்த காலத்தில், அரசியல் ரீதியில் ஒருவருக்கொருவர் எதிரானவராக இருந்தனர். பல பத்தாண்டுகள் கழிந்த நிலையில், இன்று நாம் அவர்கள் பங்களிப்பை ஒன்றை நிறைவு செய்ய இன்னொன்று என்ற வகையில் அணுகமுடியும்.’ ராமாயணத்துக்கு ஒரு கதாநாயகன் இருந்தால் போதும். ‘வரலாற்றுக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இல்லை. தலித் விடுதலையின் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. அதில் எழுதப்படாத பாகங்கள் பல உள்ளன. பல கதாநாயகர்களுக்கு அங்கே இடம் இருக்கிறது.’

அதாவது, தலித் விடுதலை வரலாற்றில் அம்பேத்கருக்கு உரிய இடம் இருப்பது போல், காந்திக்கும் ஓரிடம் உண்டு என்கிறார் ராமச்சந்திர குஹா. அல்லது கொடுக்கப்படவேண்டும் என்கிறார். இடம் கொடுப்பதைப் பற்றிப் பின்னர் யோசிப்போம். அதற்கு முன்னால், காந்தியையும் அம்பேத்கரையும் ஒரு புள்ளியில் குவிப்பது சாத்தியமா என்பதைப் பார்க்கலாம். ராமச்சந்திர குஹா மட்டுமல்ல, பல காந்தியவாதிகள் இந்த இணைப்பைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். எதிரெதிரான கருத்துகளும் கொள்கைகளும் கொண்டிருந்தாலும் அடிப்படையில் இருவரும் ‘தேச நலனுக்காக’ உழைத்தவர்களே என்றும் ‘தீண்டாமைக்கு’ எதிராகப் போராடியவர்களே என்றும் ‘தலித் விடுதலைக்காகக்’ கனவு கண்டவர்களே என்றும் நிரூபிக்க இவர்கள் முயன்று வருகிறார்கள்.

காந்திக்கு நிகரானவராக அம்பேத்கரை நிறுத்துவதில் இவர்களுக்குச் சிக்கல்கள் எதுவுமில்லை. ஆனால், அம்பேத்கருக்கு நிகராக காந்தியைக் கட்டி எழுப்புவதில் பல சங்கடங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ‘தலித் விடுதலை வரலாற்றில் இடம் கொடுப்பது’ சம்பந்தமான விஷயம். தீண்டப்படாதவர்களின் விடுதலைக்கான அம்பேத்கரின் முனைப்பும் காந்தியின் முனைப்பும் ஒன்றா? தீண்டப்படாதவர்கள் குறித்த அம்பேத்கரின் பார்வையும் காந்தியின் பார்வையும் ஒன்றா? அவர்கள் இந்நிலைக்கு ஆளானதற்கான காரணங்களை அம்பேத்கரும் காந்தியும் ஒன்றுபோல் புரிந்துகொண்டார்களா? இந்த நிலை மாறவேண்டும் என்று இருவரும் ஒன்றுபோல் சிந்தித்தார்களா? என்ன மாற்று என்பது குறித்து இருவரிடையே கருத்து ஒற்றுமை நிலவியதா?

ஆம் என்று திட்டவட்டமாக காந்தியவாதிகளால் சொல்லமுடியாது என்பதால் அவர்கள் ஒரு மாற்று உபாயத்தைக் கையாள்கின்றனர். காந்தியை அம்பேத்கர் அளவுக்கு உயர்த்தமுடியாது என்பதால் அம்பேத்கரை காந்தி உயரத்துக்குக் குறுக்கிவிடுகிறார்கள். அம்பேத்கரின் உயரம் இதுதான் என்று நிர்ணயிப்பது. பிறகு காந்தியை அருகில் நிற்க வைத்து, பாருங்கள் இருவரும் ஒன்றுதான் என்று முழங்குவது. முடிந்தால் இன்னும் சில படிகள் முன்னேறி, அம்பேத்கர் தலித்துகளுக்காக மட்டுமே பாடுபட்டார், ஆனால் காந்தி ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் உழைத்தார் என்று அறைகூவல் விடுப்பது. அம்பேத்கரை தலித் குழுவின் தலைவராக மட்டும் குறுக்கிக் காட்டுவது. அதன்மூலம், தலித் வரலாற்றின் எழுதப்படாத பக்கங்களில் காந்தியைப் போட்டு நிரப்புவது.

அம்பேத்கர் ஓரிடத்தில் (The Annihilation of Caste) தனக்கும் காந்திக்கும் இடையில் உள்ள ஓர் அடிப்படை வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார். ‘நான் சாதி அமைப்பைத் தகர்த்தெறிய விரும்பினேன். காந்தி அந்த அமைப்பைச் சீர்திருத்த விரும்பினார்.’ கடவுளின் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களை ஒதுக்கிவைக்காதீர்கள் என்று சாதி இந்துக்களிடம் இறைஞ்சுவதைத் தாண்டி வேறு எதுவும் செய்யமுடியவில்லை காந்தியால். அம்பேத்கர் அவர்களை இந்துக்களின் பிடியில் இருந்தும் சாதியின் பிடியில் இருந்தும் விடுவிக்கத் துடித்தார். காந்தி தனது குழந்தைகளைக் கடைசிவரை குழந்தைகளாகவே வைத்துக்கொள்ள விரும்பினார். அம்பேத்கர் அவர்களுடைய அறியாமையையும் பிற்போக்குத்தனத்தையும் களைய விரும்பினார். இறந்த விலங்குககளை உண்ணாதீர்கள், இந்துக்களின் கடவுள்களை வணங்காதீர்கள், இந்துக்களின் வலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று எச்சரித்தார்.

இந்தியர்களை மீட்டெடுக்க ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதிநிதியாக காந்தி பிரிட்டிஷிடம் போராடிக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியான அம்பேத்கர், சாதி இந்துக்களிடம் இருந்து தலித் மக்களை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியல் உரிமை வழங்காமல், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்காமல், சுயமரியாதை உணர்வைத் தட்டியெழுப்பாமல் அவர்களை இழிநிலையில் இருந்து மீட்கமுடியாது என்று அம்பேத்கர் உணர்ந்திருந்தார். தனி வாக்குரிமையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் வேண்டும் என்னும் முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார். அதெல்லாம் தேவையில்லை, கடவுளின் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் இணைந்திருக்கட்டும் என்றார் காந்தி. அவர்களைத் தனியே பிரிக்கவேண்டாம் என்றார். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லர் என்று சொல்வது தன்னைக் காயப்படுத்துகிறது என்றார். தன் உயிரைக் கொடுத்தேனும் அவர்கள் வெளியேற்றத்தைத் தடுப்பேன் என்றார்.

நான் ஒட்டுமொத்த இந்தியர்களின் விடுதலையை லட்சியமாகக் கொண்டிருக்கிறேன் என்றார் காந்தி. ஒட்டுமொத்த இந்தியர்களின் பிடியில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களை மீட்பதே என் லட்சியம் என்றார் அம்பேத்கர். தீண்டாமை ஒரு நோய், எப்பாடுபட்டாவது அதை அகற்றவேண்டும் என்றார் காந்தி. இந்த எளிய ஒப்புதலுக்கே அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். அதெப்படி சாதி இந்துக்களை நீங்கள் குற்றவாளியாக்கலாம் என்று எதிர் கேள்விகள். இந்து மதத்தை அழிக்காமல் சாதியை ஒழிக்கமுடியாது. சாதி ஒழியாதவரை தீண்டாமை ஒழியாது என்றார் அம்பேத்கர். நீங்கள் நோயைக் குணப்படுத்த விரும்பவில்லை, அதன் அறிகுறிகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்கிறீர்கள் என்று பதிலளித்தார் அம்பேத்கர்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்றென்றைக்கும் சாதி இந்துக்களின் கருணையை எதிர்நோக்கியே வாழவேண்டும் என்பது காந்தியின் கோட்பாடு. இந்து மதத்தை நீங்கள் துறக்கக்கூடாது என்று நெகிழ்ச்சியுடன் காந்தி வேண்டிக்கொண்டபோது அவருடைய பக்கச் சார்பு பளிச்சிட்டது. அம்பேத்கர் காந்திக்குப் பொருத்தமாகவே விடையளித்தார். ‘இரண்டாயிரம் ஆண்டுகளாக நாங்கள் துன்புற்றுகிடக்கிறோம். எத்தனையோ மகான்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், இந்து மதத்தின் அடிப்படைகள் மாறவில்லை.’ இந்நிலையில் எந்த நம்பிக்கையில், யாருக்காக நாங்கள் காத்திருப்பது?

நான்கு வர்ண சாதி அமைப்பை இறுதிவரை காந்தி விட்டுக்கொடுக்கவில்லை. தீண்டாமை என்பது இந்து மதக் கட்டமைப்போடு இணைந்திருக்கும் சமாசாரமல்ல, தனியாகத் துருத்திக்கொண்டு நிற்கும் ஓர் அருவருப்பான பாகம் என்று காந்தி கருதினார். இந்து மதத்தின் ஓரங்கமாக இருந்துகொண்டு, இந்து மதக் கடவுள்களைத் தொழுதுகொண்டு, இந்து மதக் கோட்பாடுகளைப் புகழ்ந்துகொண்டு அப்படியே தீண்டாமையையும் அகற்றிவிடலாம் என்று காந்தி நம்பினார். தீண்டாமை இந்து மதத்தின் பிரிக்கமுடியாத ஓரங்கம் என்பது அம்பேத்கரின் பார்வை.

இந்து மதத்தின் கேடுகளை அம்பேத்கர் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். 1) அறம் சார்ந்த சுதந்தரத்தை அது (இந்து மதம்) மறுதலிக்கிறது. 2) கீழ்படிதலை மட்டுமே முன்மொழிகிறது. 3) அதன் சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுபோல் இல்லை. 4) அதன் கோட்பாடுகள் இறுதியானவை, கேள்விக்கு அப்பாற்பட்டவை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ‘இந்துக்கள் மதம் என்று சொல்லிக்கொள்வது எண்ணற்ற கட்டளைகளையும் தடையுத்தரவுகளையும்கொண்ட ஓர் அமைப்பேயாகும்.’ (புத்தரும் அவர் தம்மமும்.)

காந்திய வழியில் தீண்டாமையை அகற்றமுடியாது என்று தெளிவாகவே குறிப்பிட்டார் அம்பேத்கர். ‘இந்தியாவில் பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள். தீண்டாமையை ஒழிப்பதையும் ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி அவர்களை உள்இழுத்துக்கொள்வதையும் தங்கள் நோக்கமாக அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். மகாத்மாக்கள் வந்தார்கள், சென்றார்கள் ஆனால் தீண்டத்தகாதவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நீடிக்கிறார்கள்.’

இந்து மதத்தை ஒரு மதமாக மட்டும் கருதாமல், அதை அனைவருக்கும் பொதுவான ஓர் அரசியல் கருத்தாக்கமாகவும் உருமாற்ற காந்தி முயன்றார். காந்தியின் ‘ஹிந்து சுவராஜ்’ ராமர் ஆட்சியை மீண்டும் அமைக்க விரும்பியது. நேர் எதிராக, அம்பேத்கர், ‘சமூக வாழ்வில் புரட்சிகர மாற்றங்களை’ ஏற்படுத்தும் ஜனநாயகத்தைக் கொண்டுவர விரும்பினார்.

அரசியலில் மதத்தையும் மதத்தில் அரசியலையும் இணைத்ததில் காந்திக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. மதத்தின் அரசியலையும் அரசியலில் உள்ள மதவாதத்தையும் வெளிப்படுத்தியதில் அம்பேத்கர் முதன்மையானவராகத் திகழ்கிறார்.

எப்படிப் பார்த்தாலும், எந்த அம்சத்தை எடுத்துக்கொண்டாலும் அம்பேத்கரும் காந்தியும் எதிரெதிரான திசையில்தான் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது. இந்நிலையில், எந்த அடிப்படையில் இருவரையும் ஒன்றிணைப்பது? ஏன் ஒன்றிணைக்கவேண்டும்? அவ்வாறு செய்வதை இந்த இருவரும் ஏற்பார்களா?

காந்தியும் அம்பேத்கரும் அல்ல. காந்தியா அம்பேத்கரா என்பதுதான் கேள்வி. நீங்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

-நந்தன்