விடுவித்த வேதம் (45. ஆழி பெரிது)
அன்று பெண்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே இனி சொல்லப் போகும் விஷயங்களின் முக்கியத்துவம் நமக்கு முகத்தில் அறைவது போலப் புரியும்.
இந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் எதுவும் முழுமையானவை எனச் சொல்லமுடியாது. அவை களத்தில் நடக்கும் விஷயங்களின் ஓரளவு மட்டுமேயான கணிப்பு மட்டுமே. ஆனால் அந்த மட்டிலும்கூட இந்தத் தகவல்கள் விவரிக்கும் சித்திரம் அதிர்ச்சி ஊட்டுவது. 1921ல் 612 பெண் குழந்தைகள் விதவைகள். அவர்களின் வயது ஒன்றிற்கும் கீழே. இந்தக் குழந்தைகள் அனைவருமே இந்துக்கள். 498 விதவைக் குழந்தைகளின் வயது ஒன்றிலிருந்து இரண்டு வரை. இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள்ளான விதவைக் குழந்தைகளின் எண்ணிக்கை: 1280. மூன்றிலிருந்து நான்கு: 2863. நான்கிலிருந்து ஐந்து: 6758. ஐந்திலிருந்து பத்து: 12,016. இவை மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள். உண்மைத் தொகை இதற்குப் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்பதை மிக எளிதாக ஊகிக்கலாம்.
இப்படிக் குழந்தை விதவைகளை உருவாக்குவதில், சொத்து அபகரிப்பு முதல் பெண்களை ’கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது’ என்பது வரை பல நோக்கங்கள், சமுதாயத்தின் தேக்கநிலை சக்திகளுக்கு இருந்தன. இதற்கு மத – ஆசார முலாமும் பூசப்பட்டது. இது எங்கள் மதம். மாட்சிமை தாங்கிய பேரரசி எங்கள் மத நம்பிக்கைகளில் அரசாங்கம் தலையிட முடியாது என 1857ல் சொல்லியிருக்கிறார்கள். எனவே இதை மாற்றக்கூடாது என்றார்கள். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பிரிட்டிஷ் அரசாங்கமும் இதில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான். குழந்தைத் திருமணங்களுடன் ஒப்பிடுகையில் மற்றொரு சமூக அநீதியான ‘சதி’ அல்லது உடன்கட்டை மிக அரிதாக நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆனால் அதை உலக அளவில் பெரிதாக்கி, பின்னர் அதைத் தடைசெய்ததில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. நாங்கள் இந்த இருண்ட தேசத்துக்குப் பண்பாட்டைக் கொண்டு வருகிறோம். ஆனால் குழந்தைகள் திருமணம் என்கிற அதைப்போன்ற ஒரு முக்கியமான சமூகக் கொடுமையை அழிக்க பிரிட்டிஷார் முன்வரவில்லை. காரணம் இருந்தது. உடல்நிலையும் மனநிலையும் சரியில்லாத அடிமைப்புத்தி கொண்ட ஒரு மக்கள்கூட்டம், ’எங்களை இப்படியே வைத்திருப்பதுதான் எங்கள் மதம்’ எனத் தாங்களாகவே விண்ணப்பிக்கும்போது அதை மாற்ற முயற்சி செய்யும் அளவுக்கு பிரிட்டிஷார் முட்டாள்கள் இல்லை. இன்னொரு விதத்திலும் இது பிரிட்டிஷுக்கு உதவியது. ’நாங்கள் ஆட்சி நடத்தும்போதே இந்த விஷயங்களில் தலையிட எங்களுக்கு முடியவில்லை. இனி நாங்களும் வெளியே போய்விட்டால் இந்தக் காட்டுமிராண்டிகள் என்ன நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டு வந்துவிடுவார்கள்! எனவே நாங்கள் இருப்பது அவசியம்.’ இந்த பிரசாரத்தையும் அவர்கள் செய்து வந்தார்கள்.
’குழந்தைத் திருமணம் நடக்காவிட்டால் மாதம் மும்மாரி பெய்யாது, ஏனென்றால் மழை பெய்வது கற்புக்கரசிகளுக்காகவே. ஒரு பெண் வயதுக்கு வரும் முன்னரே அவளுக்கு ’இதுதான் உன் கணவன்’ எனக் காட்டிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவள் மனம் மாசு பட்டுவிடும். அப்படி அலைபாயும் பெண், கற்புநிலை தவறிவிடுகிறாள். பெண் கற்புநிலை தவறிவிட்டால் மழை பெய்யாது.’ இப்படியெல்லாம் ‘ஆன்மிக விளக்கங்கள்’ அளிக்கப்பட்டன.
மகாத்மா காந்தி குழந்தைத் திருமணம், விதவைக் குழந்தைகளின் நிலை ஆகியவை குறித்து மனம் வெதும்பி எழுதினார்: “நான் ஒவ்வொரு முறையும் கடவுளிடம் கேட்கிறேன்… என்னை ஏன் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சாட்சியாக உயிர்வாழ வைக்கிறாய் இறைவா!” (7-செப்டம்பர்-1927)
இத்தகைய இக்கட்டான சூழலில் வேத தர்மத்தின் குரல் ஒலித்தது. ஆரிய சமாஜ தலைவர்களின் மூலமாக. குழந்தைத் திருமணத்துக்கு வேத ஒப்புதல் கிடையாது என மூலை முடுக்கெல்லாம் ஆரிய சமாஜிகள் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். பிரிட்டிஷார் உருவாக்கிய ஆசாரப் பூனைகள் அதிர்ந்தார்கள். வேதங்களிலிருந்து ஆரிய சமாஜிகள் மேற்கோள்களைக் காட்டினர். இதோ வேத தொன்மம், ’சூரிய தேவனே தன் மகளை அவள் விருப்பப்படி தேர்ந்தெடுத்த கணவனுக்கு அளிக்கிறான்.’ (ரிக் 1:157:1) பெண்கள் தங்கள் கணவனை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமையும் அறிவும் பெற வேண்டும். அந்த வயதுக்கு வந்த பிறகே அவர்கள் திருமணம் செய்ய வேண்டும். ஆசாரவாதிகள் வெகுண்டெழுந்தார்கள். ஆனால் அறிஞர்களும் மக்களும் சிந்திக்க ஆரம்பித்தார்கள். வேதத்தில் இருக்கும் திருமண மந்திரங்கள், ’மனைவி அவள் புகும் வீட்டின் இல்லத்தரசி’ என்றே தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆம். நாம் எளிதாக இன்று பயன்படுத்தும் இந்த ‘இல்லத்தரசி’ என்கிற வார்த்தையே வேதத்தில் நாம் காணும் கருத்தாக்கம்தான்.
உன் புகுந்த வீட்டில் மாமியாருக்கும் மாமனாருக்கும் அன்பு கொண்ட அரசாட்சி செய்பவளாக இருப்பாய். உன் கணவனின் சகோதர சகோதரிகளின் மீது உனது ஆட்சி முழுமையாக அமையட்டும். (ரிக் 10:85:46)
ஒரு வயது கூட நிரம்பாத பெண் குழந்தை எப்படி இல்லத்தரசி ஆக முடியும்? எப்படி அன்பான அரசாட்சி செய்யமுடியும்? அதுவும் வயது முதிர்ந்த மாமியார் மாமனார் மீது? மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது நீங்கள் வேதம் சொல்வதை எதிர்க்கிறீர்கள் அல்லவா? வேதத்தை எதிர்க்கிற நீங்கள் எப்படி உங்களை சனாதன தர்மிகள் எனச் சொல்லமுடியும்?
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர் ஹர் பிலாஸ் சாரதா. வேத அறிஞர். ஹிந்து தேசியவாதி. ஒவ்வொரு மாகாணத்திலும் சென்று பேசினார். அங்கே உள்ள சமூக சீர்திருத்தவாதிகளை முடுக்கிவிட்டார். விடுதலை கிடைக்கவேண்டுமென்றால் முதலில் நாம் பண்பட வேண்டும். நம் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அவர்களுக்குக் கல்வி வேண்டும். அதுதான் முக்கியம். இல்லாவிட்டால் விடுதலை கிடைக்காது. நாம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். வேதம் என்ன சொல்கிறது பாருங்கள். சாரதாவின் உழைப்பு பலன் கொடுக்க ஆரம்பித்தது. பிரிட்டிஷ் கலெக்டர்கள் தங்கள் அறிக்கைகளில் சொன்னார்கள்: ’பெண்களின் திருமண வயதை உயர்த்த மக்கள் விரும்புகிறார்கள்.’
அன்றைய ஆச்சாரவாதத்தின் தென்னகத் தலைநகராக இருந்த கும்பகோணத்தில் பெண்கள் கூடி எதிர்ப்பில்லா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். சாரதா கொண்டு வரும் பெண்கள் விவாக வயதை அதிகரிக்கும் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். தூத்துக்குடியிலிருந்து லஷ்மி ஏகாம்பரம், கஞ்சம் ஊரிலிருந்து ஹிந்து பதித பாவன மிஷன், சென்னையிலிருந்து ஹிந்து தர்ம பரிபாலன சபா, வீரராகவ புரத்திலிருந்து பாரத ஸ்திரிகள் மண்டலியை சேர்ந்த கோமதி அம்மள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் சமூக போராளிகள் இணைந்து குரல் கொடுத்தனர். சாரதா கொண்டு வரும் சட்டம் அவசியம் இந்தச் சமுதாயத்துக்கு வேண்டும். (இது 1929ல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பெண்கள் விடுதலைக்குக் குரல் கொடுத்தவர் ஒரே ஒருவர்தான் என்பது போல பிரசாரம் செய்யப்படுகிறதே, அவர் இதையெல்லாம் குறித்து மேடை மேடையாகப் பேச்சளவில் முழங்கியதற்கு முன்னால் களத்தில் போராடியவர்கள், சத்தியமான வேதநெறி தழைத்தோங்க குரல்கொடுத்தவர்கள், உழைத்தவர்கள்.) செப்டம்பர் 28, 1929ல் சாரதா சட்டம் அமலுக்கு வந்தது. ஏப்ரல் 1, 1930ல் அது அனைத்து இந்தியர்களுக்கும் சட்டமானது. நவீன இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு இது. பெண் விடுதலைக்கான மிக முக்கியத் தாவல் இது.
ஹர் பிலாஸ் சாரதா இல்லையென்றால் இந்தியாவில் பெண் விடுதலை பல பத்தாண்டுகள் ஏன் ஒரு நூற்றாண்டு கூட பின் தள்ளப்பட்டிருக்கும். இந்த மகாமனிதர் இதற்காக செய்த உழைப்பு தியாகங்கள் அவர் பெற்ற சொல்லடிகள், எதிர்ப்புகள், அவமானங்கள் இவை எதுவுமே இன்று நம் நினைவில் இல்லை. ஆனால் அவர் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அதை செய்யவில்லை. அவரை இயக்கியது அவர் மூலமாக வெளிப்பட்டது வேத ரிஷிகளின் ஞான ஒளி, அந்த ரிஷிகளின் சமுதாய சிந்தனை. வேத ரிஷிகளுக்கும் ஹர் பிலாஸ் சாரதாவுக்கும் இதற்காக உழைத்த நவீன வேத போராளிகளான ஆரிய சமாஜிகளுக்கும் ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டிருக்கிறான்.
சாரதா அத்துடன் நின்றுவிடவில்லை. அடுத்ததாக ஏற்கெனவே விதவைகளாக வாழ்வோருக்கு சொத்துரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தார் சாரதா. ’வேதங்கள் மனைவி கணவனின் சரி பாதி என கூறுகின்றன. எனவே கணவன் இறந்துவிட்டாலும், மனைவியின் மூலம் சரி பாதியாக அவன் வாழ்கிறான். அப்படி அவன் வாழும்போது அவனது சொத்துக்கள் எப்படி அவனுக்குப் (அதாவது மனைவிக்கு) போகாமல் இருக்க முடியும்?’ பிரகஸ்பதி இந்த வாதங்களை முன்வைத்துச் சொல்கிறார், ‘எனவே கணவனுக்கு முன் மனைவி இறந்தால் அவன் கையிலிருந்து நெருப்பு அவளுக்குச் செல்ல வேண்டும். மனைவிக்கு முன் கணவன் இறந்தால் அவன் சொத்து அவளுக்கு செல்ல வேண்டும்.’ பண்டைய இந்தியாவில் இந்த நிலை இருந்ததா என்றால் அது முழுமையாக இருந்திருக்க முடியாது. அன்றைய சமுதாயச் சூழலில் ஒரு பெண் எந்த அளவு தனியாகச் சொத்து நிர்வாகம் செய்திருக்க முடியும்? இருப்பினும் இன்னொரு விஷயத்தையும் நாம் காண்கிறோம். பல விதவை ராணிகள் அரசாண்டிருக்கிறார்கள். மிகத்திறமையாகவே அரசாட்சி செய்திருக்கிறார்கள். ராணி மங்கம்மாள், அகல்யாபாய் கேல்கர் ஆகியோரை உதாரணமாகச் சொல்லலாம். எனவே பிரகஸ்பதி தர்ம சாஸ்திரத்தின் சிந்தனை, சமூகத் தளத்தில் ஏற்பு உடையதாக அமைந்திருக்கிறது.
- அரவிந்தன் நீலகண்டன்














