தாடியும் கவர்னரும்

படம் நன்றி: பிசினஸ்லைன்ஆகஸ்ட் 15..

சுதந்தர தினத்தின்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றியிருக்கிறார் முதல்வர் ஜெ.

”வன்முறைகளுக்கு இடம் கொடாமல், அஹிம்சை மூலமே அடிமை விலங்கைத் தகர்தெறிந்த தியாகச் செம்மல்கள் வலம் வந்த இடம் என்ற பெருமை பெற்றது நம் தமிழகம்” என்று தனது உரையில் குறிப்பிட்ட முதல்வர், வழக்கம் போல திமுகவையும் குட்டித் தீர்க்கத்தவறவில்லை. “ஐந்தாண்டு கால திமுகவின் கொடுங்கோல் ஆட்சி மறைந்து அதிமுக ஆட்சி வந்ததும் மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைத்த உணர்வு மக்களிடம் வந்துள்ளது” என்று புளகாங்கிதப்பட்டுள்ளார்.

நாட்டில் எங்கு எங்கெல்லாம் அரசியல் பேச வேண்டும் என்று ஒரு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். திருமணத்திற்கு தலைமையேற்பதில் ஆரம்பிக்கிறது அரசியல் ஒப்பாரி. எழவு வீடாக இருந்தாலும் மேடையும், மைக்கும் கிடைத்தால் விடுவதில்லை. இந்த அரசியல் ஒப்பாரிக் கலாசாரத்தை கண்டுபிடித்த ஆசாமி யார் என்று ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தி ஒரு பாராட்டு விழா நடத்தி ஒப்பாரி வைக்க வேண்டும்.

சுதந்திர தினத்தன்று நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்களைப் பற்றி நாலு வார்த்தைகள் நல்லதாகப் பேசாவிட்டாலும் பரவாயில்லை, இப்படியா கட்சிக் கூட்டம் மாதிரி அடுத்த கட்சியினரைக் காறித் துப்புவது?!

இதே போல, எப்போதும் இல்லாத புதுக் கதையாக அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வரை அவர்கள் பங்குக்கு திட்டித் தீர்த்திருக்கிறார்கள் திமுகவினர்.

“மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி ஏற்றலாம் என்ற திட்டத்தை அரும்பாடுபட்டு கொண்டு வந்தவரே கருணாநிதி தான். அவர் கட்டிய தலைமைச் செயலகத்தை புறக்கணித்த ஜெ., கொடி ஏற்றுவதையும் புறக்கணிப்பாரா?” என்று திமுக ‘பெருந்தலைகள்’ சிலர் அறிவுபூர்வமாக கேள்வி எழுப்புகின்றனர்.

ரொம்ப கஷ்டமப்பா!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கமாக ஆளுநர் தரும் வழக்கமான சம்பிரதாயமான தேநீர் விருந்தை வழக்கம் போல தவிர்த்து விட்டார் முதல்வர். “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவை இல்லை” என்ற கொள்கைப் பிரகடனத்தை ஜெ. தான் முழு மூச்சாக பின்பற்றி வருகிறார் போல!

****

சென்னை அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்,  “நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன்.பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது’ என்று உளறிக் கொட்டியிருக்கிறார்.

பலரும் கடும் கண்டனங்களை அந்த அம்மணிக்குத் தெரிவித்திருக்கிறார்கள். ‘அந்தம்மா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நம்மூரு ‘அம்மா’வும் கோரிக்கை வைத்துள்ளார். அமெரிக்க தூதரகம் தவறுக்கு வருந்தியுள்ளது.

அமெரிக்கர்களுக்கு  இயற்கையிலேயே தங்களுக்கு தலையில் ஒரு கொம்பு முளைத்திருக்கிறது என்ற எண்ணம் எப்போதும் உண்டு. ஹிலாரி க்ளிண்டனே தேடிப் போய் அம்மாவை சந்தித்து வந்த போது இந்தம்மாவை என்ன பாடு படுத்தினார்களோ. அந்தக் கடுப்பில் ஒட்டு மொத்த தமிழினத்தின் மீதும் சீறியிருக்கிறார் போல!

ஆனாலும் தமிழர்களின் தன்மானம் குறித்து அமெரிக்கா வரைக்கும் செய்தி போய் விட்டது போல! நம்மூரில் வந்து நம்மையே அவமானப்படுத்திப் பேசியதையும் கை தட்டி பாராட்டி அனுப்பி வைத்திருக்கிறோம்!

ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்கடா தமிழனுங்க!

***

போன கட்டுரையில் எழுதிய நேரம், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று திமுக அறிவித்திருக்கிறது. வரவேற்போம்! ‘இடிப்பாரை இல்லா ஏமறா மன்னி (?!)” குறளுக்கு எடுத்துக்காட்டாக நம் முதல்வர் ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்த நடவடிக்கை இருக்கும் என்று நம்புவோமாக!

மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டசபையில் கொட்டாவி கூட விடுவதில்லை என்று கொள்கை முடிவு எடுத்திருக்கிறார் போல. அதற்கு வாயைத் திறந்தாக வேண்டுமே!

இந்நிலையில் தங்களது சொந்தக் கதை சோகக்கதையை எல்லாம் சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தில் எழுப்ப முற்பட்டு வெளியேற்றப்படுவதை தவிர்த்து மக்களின் நலனுக்காக குரல் எழுப்ப திமுகவினர் முன்வர வேண்டும் என்று எல்லாம் வல்ல புட்டபர்த்தி சாய்பாபாவை பிரார்த்திப்போம்!

***

கடந்த வாரத்தில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் இளங்கோவன் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

சிகிச்சைக்கு பணம் கட்டக்கூட இயலாத நிலைமை. அங்கே இங்கே மிகவும் சிரமப்பட்டு பணம் ஏற்பாடு செய்து கட்டியிருக்கிறார்கள். மொத்தச் செலவு ஒரு லட்சத்திற்குள் தான் என்று கேள்வி. அதற்கே இத்தனை சிரமம்.

தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகள் பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை இளங்கோவனை!

முன்னாள் முதல்வரின் மனைவி மட்டும் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்த போது சென்று பார்த்து பத்தாயிரம் ரூபாய் கைச்செலவுக்கு கொடுத்து வந்திருக்கிறார் என்கிறார்கள்.

இளங்கோவன்…. முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரையின் வளர்ப்பு மகன்!

O

மாயவரத்தான்

தோழர்

அத்தியாயம் 39

1848-49 புரட்சியின் தோல்விக்குப் பிறகு ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தது பிரிட்டனில் மட்டும்தான். மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் இது நம்பிக்கையளிப்பதாக இருந்தது. சாசன இயக்கத்தில் பிளவு ஏற்பட்டிருந்ததை அவர்கள் கண்டனர். ஹார்னே, ஜோன்ஸ் ஆகிய இருவரின் தலைமையில் சாசன இயக்கத்தின் ஒரு பகுதி தனியே இயங்கிக்கொண்டிருந்தது. இவர்கள் இருவரும் கம்யூனிஸ்ட் லீகின் உறுப்பினர்கள். மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்தப் புதிய புரட்சிகர சாசன இயக்கத்தை ஆதரித்தனர். புதிய சாசன இயக்கத் தலைவர்களுடன் நட்பு உருவானது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரிட்டன் தொழிலாளர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருந்த சமயம் அது. சாசன இயக்கம் நடத்தி வந்த தி ரெட் ரிபப்ளிகன் என்னும் இதழில் அறிக்கை தொடராக வெளிவந்திருந்தது. இதில்தான் முதல் முறையாக அறிக்கையின் எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர். அதற்கு முன்புவரை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸின் பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கவில்லை.

சாசன இயக்கத்தின் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதில் நேரம் செலவிட்டார் எங்கெல்ஸ். எர்னஸ்ட் சார்லஸ் ஜோன்ஸ் என்பவர் புதிய இதழ் தொடங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை அறிந்த எங்கெல்ஸ் அவருக்குப் பக்கபலமாக இருந்தார். நோட்ஸ் டு தி பீப்பிள் என்னும் இதழ் வெளிவந்தது. ஜோன்ஸ் அதற்குப் பிறகு எங்கெல்ஸின் உதவியையும் வழிகாட்டுதலையும் அவ்வப்போது நாட ஆரம்பித்தார். எங்கெல்ஸின் கட்டுரைகளையும் உரிமையுடன் கேட்டு வாங்கி பிரசுரித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சிந்தனைகள் அனைவருக்கும் பரவவேண்டும் என்பதில் ஜோன்ஸ் ஆர்வத்துடன் இருந்தார். மார்க்ஸ், எங்கெல்ஸின் கட்டுரைகளில் இருந்து சாசன இயக்கம் பல வெளிச்சங்களைக் கண்டுகொண்டது. அதே சமயம், முற்றிலுமாக அவர்களை ஏற்றுக்கொண்டது என்றும் சொல்லமுடியாது.

1850 இறுதியில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் பொருளாதார பலம் கொண்ட நாடுகளாக வளர்ச்சியடைந்திருந்தன. மார்க்ஸும் எங்கெல்ஸும் இந்த மாற்றங்களைக் கவனத்துடன் கணக்கில் எடுத்துக்கொண்டனர். குறிப்பாக, ஜெர்மனி ஒரு தொழில்நகரமாக வளர்ச்சிபெற்றிருந்தது. ஒப்பீட்டளவில் இது துரிதமான முன்னேற்றம். முதலாளித்துவ நாடுகளின் வழியைக் கண்டு ஜெர்மனியும் அதனை வெற்றிகரமாக பின்பற்றியிருக்கிறது. மொத்தத்தில், முதலாளித்துவ நாடுகள் மினுமினுப்பில் இருக்கும் காலகட்டம் இது. இந்நாடுகளின் பண பலம், ஆயுத பலமாகவும் இப்போது உருவெடுத்திருந்தது. முன்பைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் பலத்துடன் அவர்களால் இப்போது திகழமுடியும்.

தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் எதிர்பார்த்தனர். சென்ற ஆண்டின் தவறுகள் இனி நடைபெறக்கூடாது. இப்போதைக்கு புரட்சிகரப் போராட்டங்களை நடத்துவது உசிதமல்ல. தற்போதைய சூழல் மாறும்வரை, அதாவது இந்நாடுகளின் பொருளாதார பலம் தேக்கமடையும்வரை காத்திருக்கவேண்டியது அவசியம்.

ஆனால், இந்த வாதத்தை கம்யூனிஸ்ட் லீக் நண்பர்களில் சிலர் ஏற்க மறுத்தனர். நிலைமை மாறும்வரை காத்திருப்பது வீண் செயல் என்று வாதிட்டனர். மார்க்ஸ் அவர்களுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயனுள்ள முறையில் கழிக்கவேண்டும். நாம் நிறைய கற்கவேண்டியிருக்கிறது. குறிப்பாக, புரட்சிகரச் சித்தாந்தம். நடைமுறையை எதிர்கொள்ளவும் நம்மைக் கூர்தீட்டிக்கொள்ளவும் இந்த வாசிப்பு நமக்குப் பயன்படும். மேலும், சென்ற ஆண்டின் தவறுகளை நாம் ஆய்வு செய்யவேண்டும். அவற்றில் இருந்து என்னென்ன பாடங்களைக் கிரகித்துக்கொள்ளமுடியும்என்று பார்க்கவேண்டும். பிறகு, சாசன இயக்கத்தைப் பலப்படுத்தவேண்டும். கூடுதல் பலம் பெற்றிருக்கும் முதலாளித்துவ நாடுகளைப் பாட்டாளி வர்க்கம் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுக்கலாம்.

மார்க்ஸின் ஆலோசனைகள் வில்லிச்-ஷாப்பர் என்பவர்கள் தலைமையேற்ற குழுவினரால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. இவர்கள் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் விரோதத்துடன் அணுகினர். லீகில் வளர்ந்துவரும் அவர்களுடைய செல்வாக்கைக் குறைக்கவும் தடுக்கவும் விரும்பினர். அதனால் வேண்டுமென்றே மார்க்ஸ் எங்கெல்ஸின் ஆலோசனைகளில் இருந்து விலகிச் சென்றர். கூடுமானவரை அவர்களுடைய திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தவிர்த்தார்கள்.

நேரடியாக மார்க்ஸையும் எங்கெல்ஸையும் தாக்க இவர்களுக்குத் தகுந்த வாய்ப்பு கிடைத்து. முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார நிலைமை மாறும்வரை காத்திருப்போம் என்னும் மார்க்ஸின் வாதத்தை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். தாக்கவும் தொடங்கினார்கள். மார்க்ஸின் வாதத்தை மறுப்பது மட்டுமே அவர்களுடைய நோக்கம் அல்ல என்பதால் ஒரு கட்டத்தில் மார்க்ஸைக் கடுமையாகவும் பட்டவர்த்தனமாகவும் இவர்கள் விமரிசிக்கத் தொடங்கினர். பழைய வழிமுறைகளை மார்க்ஸ் வேண்டுமென்றே திருத்துகிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். சித்தாந்த ரீதியாக அவர்கள் மாற்று கருத்துகளை முன்வைத்திருந்தால் வாதிட்டிருக்கலாம். அவர்கள் மார்க்ஸைக் கொச்சைப்படுத்தும் முறையில் ஏசினார்கள். எங்கெல்ஸின் நோக்கங்களும் கொச்சைப்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 1850ல் மத்திய கமிட்டி கூடியபோது, கம்யூனிஸ்ட் லீக் மேலும் ஒரு பிளவைச் சந்திக்கத் தயாராகயிருந்தது. எங்கெல்ஸ் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் சார்பாகவும் மார்க்ஸே பேசினார். தனிநபர் தாக்குதல்களில் இறங்கியிருக்கும் வில்லிச்-ஷாப்பர் குழுவுக்கும் தங்கள் குழுவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசங்களைப் பட்டியலிடுவதன் மூலம் இரு குழுக்களின் நோக்கங்களையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது உலகம் தழுவிய அளவில் பொதுவானது. ஆனால், அதை ஜெர்மனிக்கு மட்டுமேயான செயல்திட்டமாக (வில்லிச்-ஷாப்பர் குழுவினர்) மாற்றிவிட்டார்கள். ஜெர்மானியக் கைவினைஞர்களைக் கவரும் நோக்கில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அறிக்கை முன்வைத்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை கருத்துமுதல்வாதமாக மாற்றிவிட்டார்கள்.’

அடிப்படையிலேயே வில்லிச்-ஷாப்பர் குழுவுக்கும் தனக்கும் கடுமையான வேறுபாடுகள் உள்ளன என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இந்த வேறுபாடுகளை வளர்த்துக்கொண்டு இணைந்து பணிபுரிவது இயலாத காரியம் என்பதை நிரூபித்தார். ‘நாம் எப்போது தயாராக இருக்கிறோமோ, எப்போது விரும்புகிறோமோ அப்போது புரட்சியை ஏற்று நடத்தலாம் என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. நாங்கள் தொழிலாளர்களுக்கு அப்படிச் சொல்லித்தருவதில்லை. 15,20,50 ஆண்டுகால போராட்டமும் போரும் உங்களுக்கு முன்னால் காத்துகிடக்கின்றன. தற்போதைய உறவுமுறைகளை மாற்றவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் இந்த அவகாசம் தேவைப்படும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், அதிகாரத்தை உடனே, இப்போதே கைப்பற்றிவிடவேண்டும் என்று அவர்கள் தொழிலாளர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.’

‘மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். புதிய நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே புதிய புரட்சி சாத்தியமாகும். அதற்கு முன்பு நிச்சயம் சாத்தியமில்லை. வார்த்தை ஜாலங்ளைக் கொண்டு தொழிலாளர்களைப் போருக்கு இழுத்துவிடமுடியாது.’ மார்க்ஸின் வாதங்களை வில்லிச்-ஷாப்பர் குழு எதிர்கொண்டு பதிலளிக்கவில்லை. மாறாக, இத்தனை வேறுபாடுகள் கொண்டிருக்கும் மார்க்ஸ் குழுவுடன் இனியும் நாம் இணைந்திருக்கக்கூடாது, அவர்களை அகற்றுங்கள் என்று கோஷமிட்டனர். மார்க்ஸுக்கும் இதில் சம்மதமே. ஒத்துவராதவர்களுடனும் அவசரப்புத்தி உள்ளவர்களுடனும் இணைந்து பணியாற்றுவது தொழிலாளர்களையே பாதிக்கும் என்று அவர் அஞ்சினார்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் தலைமையில் சில உறுப்பினர்கள் தனியாகப் பிரிந்துசென்றனர். இவர்கள் Sonderbund என்று அழைக்கப்பட்டனர். இதன் பொருள் லீகில் இருந்து வெளியேறிய குழு. வில்லிச்-ஷாப்பர் குழுவுக்கும் தங்களுக்கும் இனி தொடர்பு ஏதுமில்லை என்று ஜெர்மன் நண்பர்களுக்கும் மார்க்ஸ் தெரியப்படுத்தினார். செப்டம்பர் மாதம் மத்திய கமிட்டி மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் உறுப்பினர்களை நீக்கியது.

இந்தப் பிரிவு ஏற்படுவதற்கு முன்பே மார்க்ஸுக்கும் எங்கெல்ஸுக்கும் வேறு ஒரு பிரச்னை முளைத்திருந்தது. காவல்துறை கண்காணிப்பு. பிரிட்டிஷ் மற்றும் பிரஷ்ய காவல்துறை ஏஜெண்டுகள் தொடர்ச்சியாக இருவரையும் பின்தொடர்ந்தனர், கண்காணித்தனர். இங்கிலாந்து பாதுகாப்பான பகுதியாக இருக்கும் என்னும் நம்பிக்கையும் கேள்விக்குள்ளானது.

அடுத்து என்ன? இங்கிலாந்து மட்டுமல்ல பிரான்ஸ், ஜெர்மனி என்று ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இந்தப் பிரச்னை இருக்கவே செய்யும். எனவே வெளியேறுவது சாத்தியமல்ல. பொறுமையாகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், பிரச்னை காத்திருப்பது அல்ல. காத்திருக்கும் அவகாசத்தில் என்ன செய்வது என்பதே. மார்க்ஸ் முன்பே சொன்னது போல், உறுப்பினர்களுக்குச் சிந்தாந்த கல்வி போதிக்கலாம். தொழிலாளர்களிடையே பிரசாரம் செய்யலாம்.

செய்திருப்பார்கள். ஆனால் அதிலும் முட்டுக்கட்டைகள் இருந்தன. முன்போல் உறுப்பினர்ளைக் கூட்டி வைத்து உரையாடமுடியாது. கூட்டம் கூட்டினால் காவல்துறை சும்மா இருக்காது. பிரசாரம் செய்யலாம் என்றால் பத்திரிகை இல்லை. கம்யூனிஸ்ட் லீகுடன் உறவு இல்லை என்னும்போது அவர்களுடைய பத்திரிகைகளைப் பயன்படுத்தமுடியாது அல்லவா?

(தொடரும்)

மொழிப்போர் தொடங்கியது!

க – 16

இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்துக்கொண்டிருந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாற்றம் ஒன்று நடந்தது. ஆட்சி மற்றும் அரசுப் பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவற்றில் இருந்து விலகி, கட்சிப்பணிக்குத் திரும்பவேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்தத் திட்டத்தின் பெயர் காமராஜர் திட்டம் (K Plan). அதன்படி நாற்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சிப்பணிக்குச் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பதவி விலகினார். அந்தப் பதவிக்கு பக்தவத்சலம் வந்தார். காமராஜரின் ராஜினாமாவுக்குப் பரிசாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஆகப்பெரிய திருப்பம் நடந்தபோதும் திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தது. சேலம், தஞ்சை, நெல்லையில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியாகச் சென்னை மாநாடு. 13 அக்டோபர் 1963 அன்று நுங்கம்பாக்கத்தில் கூடியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஆட்சிமொழி பற்றிய 17-வது பிரிவின் நகலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அங்கே அறிவித்தார் அண்ணா. இது வெறும் அடையாளப்போராட்டம் அல்ல, ஓரிரு நாளில் முடிந்துவிடுவதற்கு. 26 ஜனவரி 1965 வரை தொடர்ச்சியாக நடக்கும் போராட்டம் என்று அறிவித்தார் அண்ணா.

எந்தெந்த ஊரில் யார்யார் போராட்டத்தை நடத்துவது என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஐந்து பேர் கொண்ட அணி. சென்னையில் அண்ணா தலைமையில் ஒரு ஐவர் அணி. கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது தஞ்சாவூர். அவருடைய அணியில் மன்னை நாராயணசாமி, மாயவரம் கிட்டப்பா, எஸ். நடராசன், அ. நடராசன் ஆகியோர் இருந்தனர். போராட்டத்துக்கு மக்களைத் திரட்டும் வகையில் நேரே தஞ்சாவூர் சென்று அந்தப் பகுதிகளில் பிரசாரம் செய்தார் கருணாநிதி.

போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே அண்ணா உள்ளிட்ட சிலரைக் கைது செய்திருந்தது அரசு. எனினும், நாடு தழுவிய அளவில் சட்ட நகல் கொளுத்தும் போராட்டம் நடந்தது. மற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் கருணாநிதி கைது செய்யப்படவில்லை. ஆனால் போராட்டம் எல்லாம் முடிந்தபிறகு 19 டிசம்பர் 1963 அன்று கருணாநிதியைக் கைது செய்தது அரசு. ஆறுநாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

திமுக நடத்திய போராட்டங்கள், மாநாடுகள் இளைஞர்களின் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தன. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது சின்னச்சாமி
என்ற இளைஞரின் மரணம்.

திருச்சி மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த இளைஞர் சின்னச்சாமி. திமுக தொண்டர். திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்திறங்கிய அந்த இளைஞருக்கு அதே ரயிலில் வந்திறங்கிய முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் பேசவேண்டும் என்ற ஆர்வம். இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா என்ற கேள்வியை முதல்வரிடம் எழுப்பினார். மறுநொடி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் திருச்சி சென்ற அந்த இளைஞர், தமிழுக்காகத் தன் உயிரைப் பலிகொடுப்பதாகக் கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தீக்குளித்தார். நான்காவது மொழிப்போரின் முதல் களப்பலி. சிங்கத்தமிழன் சின்னச்சாமி.

மொழிப்போராட்டம் அணையாமல் நடந்துகொண்டிருந்தபோது தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு. பிரதமர் ஜவாஹர்லால் நேரு 27 மே 1964 அன்று மரணம் அடைந்தார். அவருக்குப் பதிலாக லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். ஆட்சி மொழி மசோதாவைக் கொண்டுவந்த சாஸ்திரியே தற்போது பிரதமர் ஆகிவிட்டதால் மொழிப்போராட்டம் முன்னைக் காட்டிலும் தீவிரமடைந்தது.

அப்போது இலங்கையில் இருந்து கருணாநிதிக்கு அழைப்பு ஒன்று வந்த்து. அனுப்பியவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைத்திருந்தனர். விஷயம் இலங்கை அரசுக்குச் சென்றது. உடனடியாகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கருணாநிதியின் வருகை தடுக்கப்பட்டது. இதுவிஷயமாக இலங்கை நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. அதற்கு ஆளுங்கட்சித் தலைவர் சி.பி. டிசில்வா விளக்கம் கொடுத்தார்.

’திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் இலங்கையில் அனுமதிக்கமுடியாது. ஆகவே, கருணாநிதிக்குத் தடை விதிக்கப்பட்டது.’

உடனடியாக எழுந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் நவரத்தினம், ‘திமுக ஒருபோதும் தடைசெய்யப்படவில்லை. அது இந்தியாவில் இருக்கும் ஜனநாயகக் கட்சிகளுள் முக்கியமானது. அந்தக் கட்சிக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிரிவினை, சட்ட விரோத செயல்கள் ஆகியவற்றும் திமுகவுக்கும் தொடர்பில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.

இடைப்பட்ட காலத்தில் கருணாநிதிக்கு திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தன. குறவஞ்சி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், அரசிளங்குமரி, தாயில்லாப் பிள்ளை, இருவர் உள்ளம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக, காஞ்சித்தலைவன். பல்லவ மன்னரின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தின் வசனகர்த்தா கருணாநிதி. படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். இன்னொரு நாயகன் எஸ்.எஸ்.ராஜேந்திரன். படத்தின் தலைப்பு அண்ணாவைக் குறித்தது. போதாது? படம் நல்ல வெற்றி.

அதன்பிறகு, பூம்புகார். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். இத்தனைக்கும் பி.யூ. சின்னப்பா நடித்த கண்ணகி என்ற படம் அதே பாணியில் வெளியாகி இருந்தது. ஆனாலும் தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப திரைக்கதை – வசனம் அமைத்து புதிதாக, புதுமையாக படம் எடுக்க விரும்பினார் கருணாநிதி. அவர் பங்குதாரராக இருக்கும் மேகலா பிக்சர்ஸ் சார்பில் படத்தை எடுக்க முடிவானது.

எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடித்த பூம்புகார் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரம் கவுந்தி அடிகள். அதில் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கவேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார் கே.பி.எஸ். அவருக்கென்றே சில சிறப்பான வசனங்களை எழுதிக்கொடுத்தார் கருணாநிதி. மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது என்ற வசனம் இன்றும் பிரபலம்.

கதைப்படி பொற்கொல்லர்கள் சிறுமைப்படுத்தப்பட்டபோதும் தன்னுடைய திரைக்கதையில் அதனை மாற்றியிருந்தார் கருணாநிதி. பொற்கொல்லர்களின் மதிப்பை உயர்த்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன. முக்கியமாக, கண்ணகி மதுரையை தீயிட்டு அழித்தாள் என்பது கதை. ஆனால் படத்தில் பூகம்பத்தால் மதுரை மாநகர் அழிவதாகத் திரைக்கதை அமைத்திருந்தார் கருணாநிதி. எல்லாம் கூடிவந்தது. 1964 ஆம் ஆண்டு இறுதியில் படம் வெளியானது. அபார வெற்றி.

படத்தின் வெற்றிச்செய்தி வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் 26 ஜனவரி 1965 நெருங்கிக் கொண்டிருந்தது. ஆம். இந்தி மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக மாறும் நாள். அந்த நாளை துக்கநாளாக அனுசரிக்க திமுக முடிவுசெய்தது. கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கறுப்புக்கொடிகள் ஏற்றப்படும் என்றும் கறுப்புச்சின்னம் அணிவது என்றும் முடிவானது. இவை அனைத்தும் திமுக செயற்குழுவில் தீர்மானமாக நிறைவேறி, கூட்டறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. அதில் கையெழுத்திட்டவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

குடியரசுத் தினத்தன்று துக்கநாள் அனுசரிப்பது துரோகச்செயல். அதைச் செய்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். போராட்டத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க அரசு தயாராகிவிட்டதை உணர்த்தியது அந்த அறிவிப்பு. ஆனால் குடியரசு நாளை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி.

குடியரசு நாள் என்பது குழந்தை. அதன் தலையில் இருக்கும் நச்சுப்பழம் இந்தி. திமுக குறிபார்ப்பதில் கெட்டிக்காரக்கட்சி. குடியரசு நாளுக்கும் அவமதிப்பு வராமல் இந்தி ஏகாதிபத்தியத்தையும் பிளந்திடத் தவறாமல் திமுக அம்பு எய்து வெற்றிபெறும் திறமைபெற்றது.

போராட்டத்துக்காக அண்ணா குறித்திருந்த தேதி 26 ஜனவரி 1965. ஆனால் அதற்கு முன்பே அண்ணா கைது செய்யப்பட்டார். பிறகு நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், அன்பழகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த இளைஞர்கள் தயாராகினர். வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு மாணவர்கள் சாலைக்கு வந்தனர். இந்த இட்த்தில்தான் மொழிப்போராட்டம் மாணவர் போராட்டமாக உருவெடுத்தது.

மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாயவரம் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகலுக்குத் தீவைத்தனர். இந்திப் புத்தகங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. முதல்வரைச் சந்திக்கச் சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

தமிழ் உணர்வால் உந்தப்பட்ட கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி, அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று பல இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். போராட்டம் வலுத்துக்கொண்டிருந்தபோதும் இந்தித் திணிப்பை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டார் பிரதமர் சாஸ்திரி. ரயில் மறியல், உண்ணாவிரதம் என்று மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பதிலடியாக, மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பக்தவத்சலம் அரசு.

அடக்குமுறைகள் தொடர்ந்தபோதும் மாணவர்கள் போராட்டம் ஓயவில்லை. நிலைமையை சீராக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும். ஆகவே, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் மத்திய அமைச்சர் குல்சாரி லால் நந்தா.

ஆனாலும் மாணவர்கள் அமைதிகொள்ளவில்லை. காரணம், மத்திய அரசை அவர்கள் நம்பவில்லை. இந்நிலையில் திடீரென அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மாணவர் தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்துப் பேசினர். ‘இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. ஆகவே, மாணவர்கள் தங்கள் நேரடி நடவடிக்கையை நிறுத்திவையுங்கள்’ என்றார் அண்ணா. விளைவு, போராட்டம் முடிவுக்கு வந்தது.

அமைதி திரும்பியது என்று நினைத்தபோது அடக்குமுறை பாய்ந்தது, கருணாநிதி மீது!

0

(தொடரும்)