கட்டற்ற வர்த்தக மண்டலங்கள்

சவரம் செய்யக் கூடிய ரேசர் எவ்வளவு இருக்கும்? $30 [ரூ.1320] இல்லை ஒரு டெலிபோன்? – $2,400 [ரூ.1,05,600] ஒரு பாட்டில் தேங்காய் எண்ணெய்? – $180 [ரூ.7,920] இதெல்லாம் பணவீக்கம் தறிகெட்டு ஒடிக் கொண்டிருக்கும் ஜிம்பாப்வேயில் இல்லை. சோற்றுக்கு அல்லாடும் சோமாலியாவில் இல்லை. இவை 1992லிருந்து இன்று வரைக்கும் உலகமெங்கும் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் மூலம் ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் இன்வாய்ஸ்கள்.

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள்.

135 நாடுகளில், கிட்டத்திட்ட 3,000 கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் (Free Trade Zone – FTZ) இருக்கிறது. 2007-இல் இதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வர்த்தகம் US $400 பில்லியன் ( ரூ. 17,60,000 கோடிகள்). பனாமாவிலுள்ள கொலான் தான் உலகின் இரண்டாவது பெரிய கட்டற்ற வர்த்தக மண்டலம். 2008ல்  கொலான் செய்த பரிவர்த்தனைகள் மட்டுமே US$8.6பில்லியன் (ரூ.37,840 கோடிகள்)

கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் என்றால் என்ன?

கடலுக்கு பக்கமாகவோ, விமான தளங்களுக்கு பக்கமாகவோ, ஒரு நாட்டின் நிறுவனம் நடத்தும் விதிகளிலிருந்து விலக்குகள் அளிக்கப்பட்டு வர்த்தகத்தினை ஊக்குவிக்க அமைக்கப்படும் பிராந்தியம் தான் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள். சுருக்கமாய் மண்டலங்கள். மண்டலங்களில் வரி குறைவாக இருக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பு சலுகைகள், விலக்குகள், வரி குறைப்பு, சுங்கத் தீர்வை குறைப்பு என சலுகைகள் நீளும்.

உதாரணத்திற்கு சீனாவின் ஷென்சென் ஒரு பெரிய சிறப்புப் பொருளாதார மையம் (Special Economic Zone). அங்கே 15 கட்டற்ற வர்த்தக மண்டலங்கள், 17 ஏற்றுமதி செயல்பாட்டு மையங்கள், 5 தொழில்நுட்பம், பொருளாதார மையங்கள், 53 அதிநவீன நுட்ப உருவாக்க கேந்திரங்கள் மற்றும் 15 எல்லையடங்கிய பொருளாதார கூட்டுறவு மையங்கள் இருக்கின்றன.

பெரும்பாலான மண்டலங்களில் ஒரு நிறுவனம் துவக்குவது என்பது பரம சுலபம். அந்த ஊர் கார்ப்பரேட், நிறுவன விதிகளிலிருந்து பல விலக்குகள் மண்டலங்களில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு துபாயில் நிறுவனம் தொடங்க ஒரு உள்ளூர் ஆள் கண்டிப்பாகத் தேவை. இதையே ரஸ்-அல்-கைமா, புஜைரா, ஜெபல் அலி மண்டலங்களில் தொடங்க உள்ளூர் ஆள் தேவையில்லை. இந்தியாவிலேயே அமீரகத்தின் வெவ்வேறு குடியரசின் பிரதிநிதிகள், அவர்கள் சார்ந்த மண்டலங்களில் நிறுவனத்தினை துவக்க எல்லா வேலைகளையும் செய்வார்கள். உதாரணத்திற்கு ரஸ்-அல்-கைமாவினுள் ஒரு நிறுவனம் தொடங்க ஆகும் மொத்த செலவு வெறும் ரூ.மூன்று இலட்சம்.

பிரச்சனை இந்த மண்டலங்கள் எதுவும் முழுமையான உள்ளூர் சட்டத்துக்குள் வராது. மண்டலங்கள் போடுவதே வரிகளுக்கு ‘கட்’ அடித்து விட்டு, வெளியே போவதற்கு தான். இது ஒரு இரு முனை கத்தி மாதிரியான பொருளாதார ‘மாடல்’. வரிகள், சுங்கத் தீர்வைகள் இருந்தாலே நம்மாட்கள் அதை ஏமாற்ற வழி கண்டுபிடிப்பார்கள். இல்லையென்றால் கேட்கவா வேண்டும்.

வர்த்தகம் சார்ந்த கருப்புப் பணப் பரிமாற்றம் என்பது கப்பலோட்ட துவங்கிய காலத்தில் ஆரம்பித்தது. எல்லா நாடுகளிலும் கடலுக்கு ஒட்டிய இடம் தான் பின்னாளில் மண்டலங்களாக மாறத் தொடங்கியது. இவைதான் சிங்கப்பூராகவும், துபாயாகவும், ஜிப்ரால்டராகவும், கபானாகவும், அயர்லாந்தாகவும், பனாமாவாகவும் மாறி உலக வர்த்தகத்தின் பெரும்பான்மை வர்த்தகத்தை தங்களுடைய மண்டலங்கள் வழியே ரூட் செய்ய ஆரம்பித்தன.

விலை குறைத்து/அதிகரித்து போடுதல்(under/over invoicing) என்பது உலகின் புராதனத் தொழிலுக்கு அடுத்ததாக நடந்து வரும் தொழில். மண்டலங்களில் இது இன்னமும் அதிகம். ஏனெனில் அங்கே கட்டுப்பாடுகள் குறைவு. நிறுவனம் நடத்துபவர்கள் பற்றி குறைவான தகவல்களே இருக்கும். பெரிய அளவிற்கு செக்கிங் நடக்காது. வெறும் பேப்பர்கள். இன்வாய்ஸ்கள் எல்லாம் வெற்றுப் பேப்பர்கள். அதில் இருப்பதை யாரும் பெரும் கவனமெடுத்து பார்க்க மாட்டார்கள்.

ஒரு வருடம் முன்பு வரை, உபயோகப் படுத்திய பெரிய க்ரேன்களை இந்தியாவில் உபயோகமற்றது (scrap) என்று சொல்லி இலட்சத்தில் வாங்கி கோடிகளில் விற்று, ஒட்டுமொத்த தூத்துக்குடி, திருநெல்வேலி ஏரியாக்களில் மண் அள்ளுகிறார்கள். இது எல்லாமே இப்படி மெனக்கெடாமல்,மண்டலங்களில் சுலபம்.

ரீ-பேக்கேஜிங், ரீ-லேபிலிங் மாதிரியான சமாச்சாரங்களில் தான் பெரும்பணம் கைமாறும். உதாரணத்திற்கு நானொரு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளன். எனக்கு வரும் ஆர்டர் – ஜெபல் அலியில் சரக்கு இறக்கிவிட்டு காசு வாங்கிக் கொள்ளுங்கள். நானும் சரக்கினை அனுப்பி காசு வாங்கிவிடுவேன். ஆட்டம் ஜெபல் அலியில் ஆரம்பிக்கும்.

ஜெபல் அலியில் இறங்கிய சரக்கின் லேபிள்கள் மாற்றப்படும். பேக்கேஜிங் மாறும். நான் உதாரணத்திற்கு ஒரு சட்டை $10 என்று விற்றிருந்தால், விலை வெறும் லேபிள், பேக்கேஜிங் மாற்றியதால் சடாலென $40 என்று மாறும். உண்மையில் என்னிடமிருந்து வாங்கிய அமீரகத்தில் வாங்கிய ஆளின் குறிக்கோள் ஆயத்த ஆடைகள் அல்ல. சிரியா / லெபனானில் இவர் யாருக்காவது ‘வேலைகள்’ செய்திருப்பார். அதற்கான கூலி தான் இது. நான் ஒரு லட்சம் சட்டைகள் அனுப்பியிருந்தால், அது என்னைப் பொறுத்தவரை $1 மில்லியன். ஆனால், வெறும் லேபிள்/பேக்கேஜிங் மாற்றி, விலை அதிகரித்து மாற்றி, அதுவே சிரியா / லெபனானில் $4 மில்லியனுக்கு போகும். எனக்கு சேர வேண்டிய ஒரு மில்லியன் போக, மீதம் இருக்கிற $3 மில்லியன் வெள்ளையாகிவிட்டது. ஏனெனில் இது ஏற்றுமதியில் சம்பாதித்தப் பணம்.

துபாயில் வரிகள் கிடையாது. நேரடியாக அதை வங்கியிலிருந்து காசாய் மாற்றி யாருக்கு வேண்டுமானாலும் தரலாம். $3 மில்லியன், முப்பது வழிகளில், முன்னூறு பேர்களுக்கு வெறும் 30 நிமிஷத்தில் போய்விடும். மேலே சொன்னது ஒரு சின்ன சாம்பிள். ஒரு வருடத்தில் துபாய் மண்டலங்கள் மட்டும் குறைந்தப் பட்சம் பல பில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யும். அதில் 10-20% இந்த மாதிரி வெளுப்பாக்கி, இஸ்திரி போடும் வேலை என்று கொண்டால், அதுவே குறைந்தப்பட்சம் $200 மில்லியன் டாலர்கள் ஒரு பில்லியனுக்கு. கிட்டத்திட்ட ரூ.880 கோடிகள். போதாதா.

போன வாரம் எழுதிய மென்பொருளுக்கும், மண்டலங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. மென்பொருளில் ஒரளவிற்கு மேல் கை வைக்க முடியாது. ஆனால் மண்டலங்களில் அதை செய்ய முடியும். வருடத்திற்கு $400 பில்லியன் பரிவர்த்தனை நடக்கும் இடத்தில் சில பல பில்லியன் டாலர்கள் வெளுக்கப்பட்டால் யார் கவலைப்படப் போகிறார்கள்?

இந்தியாவில் பொருளாதார சுதந்திரம் என்று வலதுசாரி அறிவுஜீவிகள் கோஷம் போட்டு, கட்டற்ற வர்த்தக மண்டலங்களையும், சிறப்புப் பொருளாதார மையங்களையும் வளர்க்க நினைக்கிறார்கள். இதன் முழுமையான ஆழம தெரியாமல் காலைவிட்டால், பின்னாளில் தொப்பலாய் கரை ஒதுங்குவோம். ஒரே மகிழ்ச்சி, போன பட்ஜெட்டில் பிரணாப் முகர்ஜி சிறப்புப் பொருளாதார மையங்களுக்கும் வரி உண்டு என்று சொன்னது தான்.

மண்டலங்கள், மையங்கள், சிறப்பு சலுகை இடங்கள் என நாட்டின் பொருளாதாரத்தினைப் பெருக்க செய்யும் எல்லா விஷயங்களிலும் உள்ளூர ஒரு அபாயமிருக்கிறது என்பதை உணர வேண்டும். கராச்சி, பாகிஸ்தான் ஒரு முக்கியமான இடம். அமெரிக்காவில் இதை ஹார்வேர்டில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணிய ஆட்கள் பனாமா வழியாக விளையாடிய கதை கூகிளிட்டால் ஊர் சிரிக்கும்.

அடிப்படையில் கட்டற்றது என்று சொல்லும் எல்லா விஷயங்களின் உள்ளிருக்கும், கட்டற்ற சுதந்திரமும், எல்லைகளற்ற செளகர்யங்களும் பெரும்பாலான சமயங்களில் தவறாகவே பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலான உலகளாவிய மண்டலங்களில் கருப்புப் பண கண்டறிதல், தணிக்கை, செயல்முறைகள், விதிகள் என எதுவும் தெளிவாக செய்யப்படுவதில்லை.

இன்னொரு அடிப்படைப் பிரச்சனை, ஒரு மண்டலம் தங்களின் தணிக்கையினை கடுமையாக்கினால், நிறுவனங்கள் உடனடியாக அடுத்த மண்டலத்துக்கு தாவி விடும். மண்டலங்களுக்கு இது பெரிய வாடிக்கையாளன், லாபம், சர்வைவல் பிரச்சனை. ஆக, எந்த மண்டலமும் வெளியே தாங்கள் எல்லாம் கடுமையாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னாலும், உள்ளுக்குள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

கரன்சிகள் இன்னொரு பிரச்சனை. பெரும்பாலான மண்டலங்களில் நடக்கும் பரிவர்த்தனைகள் உள்ளூர் கரன்சிகளில் நடப்பதில்லை. அது அமெரிக்க டாலர், யூரோ, சீன ரென்பி, ஜப்பானிய யென், ஸ்விஸ் ப்ராங்க் என நீளும். இது பல்வேறு வங்கிகளுக்கு அல்வா. ஒவ்வொரு கரன்சி மாற்றத்திற்கும் வரும் கமிஷனில் தான் பல டெஸ்குகளில் மேனேஜர்கள், தரகர்கள் தங்களின் சொத்தினை பெருக்குகிறார்கள். அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது, போகிறது என்கிற கவலையில்லை. பரிவர்த்தனைகள் தான் முக்கியம். இந்த கரன்சிகளை அடிக்கும் நாடுகளுக்கும் இது முக்கியம். ஆக உலக வர்த்தகத்தினூடே கருப்புப் பணப் பரிமாற்றம், வர்த்தகமும் நடக்கும். இதை தடுத்தாட்கொள்வது கடினம்.

கட்டற்ற வர்த்தகமே தவறு என்று சொல்லுதல் முட்டாள்தனம். ஆனால் கட்டற்ற வர்த்தக மண்டலங்கள் தெரிந்தும், தெரியாமலும் உலகின் மிகப்பெரிய கருப்புப் பண வாய்க்காலாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

கல்லா நிரம்பும்……….