ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 17
இசைப்பெட்டி
இசைப் பிரியரும் வெறியருமான ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு போர்ட்டபிள் மியூசிக் பிளேயர் தயாரிக்க வேண்டும் என ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் பலருக்கு அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
கம்ப்யூட்டர், டெக்னாலஜி என கொடி கட்டிப் பறந்த நிறுவனங்கள் பல கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் கோலோச்சியதில்லை. ஆப்பிள் ஐ-பாடுக்குத் திறப்பு விழா நடத்துவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், சிப் தயாரிக்கும் இன்டெல் நிறுவனம் கேமரா, பிளேயர் போன்றவற்றைத் தயாரிக்கும் பிரிவுக்கு மூடு விழா நடத்தியிருந்தது. சிஸ்கோ உட்பட பல நிறுவனங்களுக்கு இதுதான் கதி.
ஆப்பிள் ஆட்டம் காலி என அனைவரும் ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் அநாயசமாக அடுத்த அணுகுண்டை வீசினார் ஸ்டீவ் ஜாப்ஸ். இனி எங்கள் ஐ-பாட் 21-ம் நூற்றாண்டின் வாக்மேன் என்றார். ஓ அப்படியா சேதி என்று மற்றவர்கள் ஒப்புக்கு ஆச்சரியம் காட்டினார்கள். வழக்கம் போல் ஸ்டீவ் ஜாப்ஸ் அலட்டிக்கொள்கிறார் என்றுதான் அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.
ஆனால் ஐ-பாட் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. உலகம் ஐ பாடுக்கு அடிமையானது. மயிலாப்பூர் மாமி முதல் மகாராணி வரை அனைவரையும் வசீகரித்து மயக்கியது ஆப்பிள். உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஆப்பிளின் புகழ் பரவியது. உலகம் ஐ பாட் தேசமாக மாறிப்போனது. விளம்பர உத்திகள் மூலமாகவே வியாபார நுணுக்கங்கள் மூலமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை என்பது முக்கியம். ஐ பாட் ஜெயித்ததற்குக் காரணம் ஐ பாட் மட்டுமே.
பத்து மணி நேரம் தாங்கும் பேட்டரி. சுமார் ஆயிரம் பாடல்களைச் சேமிக்கலாம். பாக்கெட் நாவல் அளவுக்குக்கூட இல்லாமல் சிகரெட் டப்பா அளவுக்கு சிறியது. இப்படித்தான் முதல் ஐ-பாட் 2001-ம் ஆண்டு அறிமுகமானது. ஆனால் இன்று கையளவு வாமன கணிப்பொறி அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது.
ஐ-பாட் அறிமுகமான காலகட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த மற்ற பிளேயர்களோடு அதன் சிறப்பம்சங்களை ஒப்பிடுவது மலையை மடுவோடு ஒப்பிடுவது போன்றது. மற்றவை சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே பாடும். ஆனால் விலையோ 250 டாலர்கள். அந்த பிளேயர்களில் பாடல்களை ஏற்றுவதற்கு நிறைய பிரயத்தனப்படவேண்டும். முதலில் இசைத்தகடை வாங்க வேண்டும். பின்னர் கணிப்பொறியில் கேட்பதற்கு ஏற்றவாறு பாடல்களை மாற்றவேண்டும். பிறகே பிளேயரில் ஏற்றவேண்டும். டிவி தொகுப்பாளருக்குத் தமிழ் கற்றுக்கொடுப்பதற்குச் சமமான சவாலான காரியம்.
எப்படியோ பாடல்களை ஏற்றிவிட்டாலும், அவற்றை உடனடியாகக் கேட்கமுடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த பிளேயர்கள் பார்க்க சகிக்காத நிலையில் இருந்தன. அழகுணர்ச்சி இல்லை. வசீகரம் இல்லை. உபயோகமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
ஐ பாட் அப்படியா? இளமை. மேலதிகம், புதுமை. பார்த்தவுடன் அசரடிக்கும் வடிவமைப்பு. வேண்டிய பாடல் எதுவானாலும் மூன்று கிளிக்குகளில் கேட்டுவிடலாம். பார்த்தவுடன் காதல் கொள்ளும் அழகு. விரல்களுக்குள் பதுங்கிக்கொண்டுவிடும். பயன்படுத்த ஒற்றை விரல் போதும். பாடல்களை ஏற்றுவது எல்லாம் சப்பை மேட்டர் மாமு என்று கூறும் அளவுக்கு எளிமையோ எளிமை.
எளிமைக்கு காரணம், மேக்கில் இருந்த மென்பொருள். மேக்கில் அந்த மென்பொருள் இல்லாவிட்டால் பதறவேண்டாம். ஐ பாடை கணிப்பொறியோடு இணைத்தால் போதும். ஐ பாடே மென்பொருளை கணிப்பொறியில் ஏற்றிவிடும். கூடவே, கணிப்பொறியில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் ஏற்றி விடும். அடுத்த முறை ஐ பாடை சொருகும் போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாடல்களை மட்டும் தேடிப்பிடித்து ஏற்றுக்கொள்ளும். காரியம் மிச்சம். மேலும், தேவைப்படி, வசதிக்கேற்ப பாடல்களைத் தொகுத்துக்கொள்ளலாம். ரஜினி ஹிட்ஸ். விஜய் ஹிட்ஸ், டப்பாங்குத்து என்பதாக. ஐ டியூன்ஸ் என்னும் மென்பொருளை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
விலை? காசுக்கேத்த தோசை. அதாவது, 399 டாலர்கள். iPod என்பதை இப்படித்தான் நாம் அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. Idiots price our devices. (முட்டாள்கள் தான் இதற்கு விலையை நிர்ணயம் செய்தார்கள்). இப்படித்தான் எல்லோரும் கிண்டலடித்தார்கள். ஆனால் விற்பனை எதுவும் பாதித்தாகத் தெரியவில்லை. அறிமுகமான பத்து ஆண்டுகளில், நூறு மில்லியன் ஐ பாடுகள் விற்பனையாயின. பல மில்லியன் டாலர்களை ஆப்பிள் சம்பாதித்திருந்தது. அசுரத்தனமான பரிணாம வளர்ச்சியின் விளைவாக தனது முதல் மாடலைத் தயாரிப்பதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால், அந்த முதல் மாடலை ஒரு வருடத்துக்குள் தயாரித்தார்கள் என்பதுதான் உறைய வைக்கும் உண்மை.
ஜாப்ஸ் மியூசிக் பிளேயர் வேண்டும் என விருப்பப்பட்ட நேரத்தில், டோனி பாடேல் என்று ஒருவன் ஆப்பிள் கதவைத் தட்டினான். பிளேயர் டிசைன் தயாராக இருக்கிறது செய்வோமா என்றான். ரோடில் போகிற சீதேவி வலிய வந்து கதவைத் தட்டி, இந்த வீடு மிகவும் பிடித்து இருக்கிறது தங்கிக்கொள்ளவா என்று கேட்டது போல் இருந்தது ஆப்பிளுக்கு. வரவேற்று மகிழ்ந்தார்கள். அந்த டோனியும் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று பல நிறுவனங்களை அணுகிப் பார்த்து முடியாமல் போன பிறகே ஆப்பிளுக்கு வந்திருந்தார்.
மளமளவென்று அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார்கள். போர்டல் பிளேயர் என்று ஒரு நிறுவனம் இதில் சில வேலைகள் செய்கிறது, போய் ஒரு நடை பார்ப்போம் என்று எட்டிப் பார்த்தார்கள். பார்த்தவுடன் பிடித்து விட்டது. உடனே தட்டை மாற்றி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். ஆப்பிளுக்கு ஒரு கெட்ட பழக்கம். கணக்கு வரவில்லை என்றால் ஒரு கணக்கு வாத்தியாரைக் கண்டறிந்து கணக்குப் பண்ணிவிடுவார்கள். ஒப்பந்தமும் போட்டுக்கொள்வார்கள். நீ எனக்கு மட்டும்தான் சொல்லித்தரவேண்டும், மற்றவர்களிடம் இருந்து விலகிவிடு. இனி நீ எனக்கு மட்டுமே சொந்தம்.
போர்டல் பிளேயருடன் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தைத்தான் போட்டுக்கொண்டது ஆப்பிள். ஆப்பிளின் நிபந்தனையை ஏற்ற போர்டல் பிளேயர், ஐபிஎம் மற்றும் சில ஆசிய நிறுவனங்களிடம் இருந்து விலகி, ஆப்பிளுடன் இணைந்துகொண்டது. அடுத்த ஒரு வருடத்துக்கு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்தவர்கள் ஐ பாடில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். ஆம் ஐ பாட் உருவாக்கத்தில் இந்தியாவுக்கும் மிக பெரிய முக்கியமான பங்கு உண்டு என்பதில் நாம் தாராளமாகப் பெருமைப்பட்டுக்கொள்ளளலாம்.
போர்டல் பிளேயர்,டோனி பாடேல், ஜான் ரூபின்ஸ்டியின், ஜோனதன் ஐவ் (வடிவமைப்பாளர்) ஆகியோர் ஒன்றுகூட இழுக்க, ஐ பாட் தேர் முன்னேற ஆரம்பித்தது. இந்த ஜோனதன் ஐவ் ஒரு பிரிட்டிஷ்காரர். ஐ பாடை வடிவமைத்த காரணத்துக்காக உச்சி குளிர்ந்த இங்கிலாந்து மகாராணி இவருக்கு சர் பட்டம் எல்லாம் கொடுத்தார்கள்.
இவர்கள் எல்லோரையும் சாட்டையால் அடிக்காத குறையாக வேலை வாங்கிகொண்டிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒழுங்காக உருவாகி வருமா, வராதா என்னும் குழப்பம் விடாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. எப்பொழுதும் ஆப்பிள் நிறுவனத்தில் 50 பேர் இதற்காக இடைவிடாமல் வேலை பார்த்தார்கள். ஆனால் அவர்களில் பலருக்கும் என்ன செய்கிறோம், எதற்குச் செய்கிறோம் எதுவும் தெரியாது.
சமயம் வரும் வரை மூச்சுவிடக்கூடாது என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் கொள்கை. என்ன, ஏது என்று எல்லாரும் திகைத்து நிற்கும் சமயம், இதோ என்று அறிமுகப்படுத்துவார். அப்போதுதான் ஒரு பிரமிப்பு இருக்கும், ஒரு துடிப்பு இருக்கும், ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். காக்கப்படாத ரகசியங்கள் கப்பலை கவிழ்க்கும் என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பிரபலமான பஞ்ச் டயலாக்களில் ஒன்று.
ஐ டியூன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்கள் கழிந்திருந்தன. ஒசாமா உலகை உலுக்கி சரியாக 42 தினங்கள் கழிந்திருந்தன. அக்டோபர் 23, 2001 அன்று ஸ்டீவ் ஜாப்ஸ் தன் பங்குக்கு உலகை மாற்றியமைத்தார். அவர் மாற்றியது இசை உலகை. இசையை மக்கள் கேட்கும் விதம் அடியோடு மாறிப்போனது. சந்தேகம் இல்லாமல், ஐ பாட் ஒரு மைல்கல்.
(தொடரும்)
- அப்பு















