சொ.செ.சூ

ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கு முதல்வரும் ஜே சொல்லியாக வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதி மன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.  வரும் 2-ம் தேதிக்குள் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் வினியோகிக்க வேண்டும் என்று அது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் 26-ம் தேதிதான் என்றாலும் கிட்டத்தட்ட இந்தக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி விட வேண்டும் என்று தான் தீர்ப்பு இருக்கும் என்று தெரிகிறது!

பரவாயில்லை.. இதனை அரசுத் தரப்புக்கு ஏற்ற தோல்வியாகக் கருதாமல் சமச்சீர் பாடங்களை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்று அரசு யோசிக்க வேண்டும். ஏற்கனவே உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்டுள்ள மன பாதிப்பை சரி செய்வதற்கான நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தப் பட வேண்டும். விடுபட்ட இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய பாடங்களை இப்போது சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் திறந்து சமாளித்து விடலாம் என்று பள்ளி நிர்வாகிகள் யோசிக்காமல் இருப்பதற்கு வசதியாக இந்த ஆண்டு மட்டும் பாடத்திட்டத்தில் இரண்டு மாதங்களுக்குரிய பகுதிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களுக்கு இன்னமும் அதிக வெறுப்பு கல்வி மேல் வந்து விடும்!

சமச்சீர் கல்வித் திட்டத்தை வலியுறுத்தியவர்களும் இது ஏதோ தங்களுக்கு ஏற்பட்ட வெற்றி என்று சுய தம்பட்டம் அடித்து அரசின் கோபத்தை கிளறாமல் இருக்க வேண்டும்.

மொத்தத்தில் இரண்டு தரப்பினருமே இதில் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய தருணம் இது!

0

முந்தைய திமுக அரசின் போது நில மோசடிகள் செய்ததாக பரவலாக பலரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் முதல் மாவட்டம், வட்டம் என கட்சிப் பெருந்தலைகள் ஒருவர் விடாமல் அனைவரும் துண்டக் காணோம், துணியக் காணோம் என்று அலறுகிறார்கள். “எங்கள் கட்சியை அழிக்க நடக்கும் சதி” என்று (வழக்கமான) புலம்பல் பல்லவியைப் பாடினாலும், இது அவர்களாகவே தேடிக் கொண்டது தான். சொந்த செலவில் சூனியம்! அனுபவிக்கிறார்கள். தப்பித் தவறி இந்த தேர்தலின் போதும் அவர்களே ஜெயித்திருந்தால் தமிழ் நாட்டை அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்றியிருக்க முடியாது தான். அவர்கள் செய்த அதே தவறை தனது கட்சிக்காரர்கள் யாரும் செய்தால் நடவடிக்கையை இன்னமும் அதிகக் கடுமையாக எடுக்க வேண்டியது முதல்வரின் கடமை!

அதே போல நில மோசடிப் புகார் எழுந்துள்ள சில அதிமுக பிரமுகர்களை கட்சியை விட்டும் கட்டம் கட்டியுள்ளார் முதல்வர்! வரவேற்போம்!

0

விரைவில் அரசு கேபிள் செயல்பட ஆரம்பித்து விடும் போலிருக்கிறது.

“சில சேனல்கள் சென்னையில் இலவச சேனலாகவும் பிற மாவட்டங்களில் கட்டண சேனல்களாகவும் உள்ளன.வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையை தவிர்த்து மாநிலம் முழுவதும் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட வேண்டும். அரசு கேபிள் டி.வி.க்கு அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவையை வழங்க வேண்டும். நுகர்வோரிடம் இருந்து சந்தா எதுவும் வசூலிக்க கூடாது. அனைத்து சேனல்களுக்கும் இதுவே இறுதி கெடுவாகும்” என்று அரசு கேபிள் டிவி கார்பரேஷன் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வகையில் அதுவும் சரி தான். கட்டணச் சானல்கள் என்று மக்களிடம் காசு வாங்கி விட்டு எக்கச்சக்க விளம்பரங்களுக்கு இடையே கொசுறாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சானல்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்களிடமும் காசு, விளம்பரதாரர்களிடமும் காசு என்ற கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களிடம் காசு வாங்கினால் விளம்பரங்களின்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். விளம்பரதாரர்களிடம் காசு வாங்கினால் மக்களுக்கு இலவசமாகத் தர வேண்டும். பல வெளிநாடுகளில் இப்படித் தான் இருக்கிறது. நம்மூரில் தான் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!

0

மதுரையில் ‘முக்கியப் புள்ளி’யின் வலது, இடது கரங்கள் வளைக்கப்பட்டிருக்கின்றன. சன் டிவியின் நிர்வாகத் தலைவரும் வளைக்கப்பட்டிருக்கிறார். மாநில காவல்துறையின் சார்பில் இப்படி வளைத்துக் கொண்டிருக்கும் போது சி.பி.ஐ. சார்பில் பெருந்தலைகளை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். போன ஆட்சியின் போது வாக்கிங் போன போது கால் தடுக்கி கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டவர்கள், கழுத்தை தானே இறுக்கி தற்கொலை செய்து கொண்டவர்கள் பலருடைய கேஸ்கள் தூசி தட்டப் படுகின்றன. இன்னும் என்ன என்ன கேஸ்கள் வெளிவருமோ?!

0

சென்னைக்கு வந்துள்ள ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெ.வைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது எதிர்பார்த்தபடியே ‘ஈழத்தாய்’ ஜெ., இலங்கைப் பிரச்னை குறித்து ஹிலாரியிடம் பேசியிருக்கிறார். ‘ஜெ. பெற்ற மகத்தான வெற்றிக்கு அமெரிக்க அரசாங்கம் சார்பில் வாழ்த்துகள்’ என்று புளகாங்கிதப் பட வைத்திருக்கிறார் ஹிலாரி. இந்த மாதிரியெல்லாம் அகமகிழ வைக்க அமெரிக்கர்களுக்கு தனியே சொல்லியா தர வேண்டும்?!

0

மாயவரத்தான்