தோழர்
அத்தியாயம் 37
மே 1849 வாக்கில் மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் எழுச்சி அதிகரித்தது. தொழிலாளர்கள் பெருமளவில் இந்த எழுச்சியில் பங்கேற்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இந்த எழுச்சியை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ள துடித்தனர். தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வு ஊட்டவும் அவர்களை அணி திரட்டவும் எங்கெல்ஸ் முன் வரிசையில் இருந்தார். மக்கள் எழுச்சி என்பது ஒரு கலை. புரட்சிகர கம்யூனிசம் இந்தக் கலையைத்தான் மக்களிடம் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறது. முஷ்டியை உயர்த்தியபடியும், ஆயுதம் ஏந்தியபடியும், உரக்கக் குரல் எழுப்பியபடியும் விதவிதமான தொழிலாளர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வீதியில் ஒன்று திரளும்போது காண கண்கள் இரண்டு போதுமா? ஆம், மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளை பாட்டாளி வர்க்கமே உருவாக்குகிறது. வீதிகளில்தான் இந்தப் படைப்புகள் உயிர் பெற்று எழுகின்றன.
ஆயுதம் தாங்கிய ஒரு எழுச்சிக்கு செயல்திட்டம் வகுத்து கொடுக்கும் பணியை முதல் முறையாக எங்கெல்ஸ் மேற்கொள்ளும்போது அவர் உள்ளம் பெருமிதத்தில் பூரித்தது. ‘பொதுமக்களின் புரட்சிகர ஆற்றலை மிக உயர்ந்த அளவுக்குப் பிரயோகிப்பது, எழுச்சியின் மையப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை, துணிச்சல், துரிதமான நடவடிக்கை – இவைதான் ஆயுதந்தாங்கிய எழுச்சிக்கான எங்கெல்ஸின் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.’ (பிரெடரிக் எங்கெல்ஸ், எவ்கேனியா ஸ்தெபானவா).
மே 10ம் தேதி ரைன் மாநிலத்தில் உள்ள ஒரு தொழிற்சாலை பகுதியில் (மார்க்கோ-பேர்கிஸ்க்) ஆயுதப் போராட்டம் வெடித்தது. தொழிலாளர்கள் ஆலை முதலாளிகளுக்கு எதிராகவும் உள்ளூர் நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதே சமயம், எல்பர்ஃபெல்ட், காகென், இசெர்லோன் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் பரவியது. ஒவ்வொரு பகுதியாகப் போராட்டம் பரவிக்கொண்டிருப்பதை எங்கெல்ஸ் கண்காணித்து வந்தார். ஒவ்வொரு பகுதிக்கும் உதவி தேவை. ஆலோசனை தேவை. மாறிக்கொண்டிருக்கும் சூழலுக்கு ஏற்ற நுணுக்கமான ராணுவத் திட்டம் தேவை. எங்கெல்ஸ் ஓரிடத்தில் நிலையாகத் தங்கியிருப்பது இனியும் சாத்தியமில்லை.
எங்கெல்ஸின் பிறப்பிடமான உப்பெர்தல் பகுதியில் கலவரப் புயல் மையம் கொண்டபோது, எங்கெல்ஸ் அங்கே விரைந்தார். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பயணம் செய்து, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்த எங்கெல்ஸ் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார். மிகவும் குழப்பமான நிலைமையில் போராட்டக்காரர்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தனர். அவர்களால் ஆயுதங்களைச் சரியாகக் கையாள முடியவில்லை. எதிர்த்து நின்ற அரசு ராணுவப் படையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தொடர்ந்து போரிடவும் முடியவில்லை. துணிச்சல் மிக்க போராட்ட யுக்தியைத்தான் எங்கெல்ஸ் அவர்களுக்கு வழங்கியிருந்தார். முழுப் போராட்டத்தையும் அவரால் மட்டுமே வழிநடத்தமுடியாது என்பதால்தான் நண்பர்கள் சிலரிடமும் கட்சி அலுவலர்கள் சிலரிடமும் அவர் பொறுப்புகளைப் பிரித்து அளித்திருந்தார். ஆனால் நேரில் வந்து களத்தைப் பார்த்தபோது, திட்டத்தின் செயல்வடிவம் பிழையாகப் பிரயோகிக்கப்பட்டது புலனானது.
இப்போதும்கூட எங்கெல்ஸ் நம்பிக்கையைத் தளரவிடவில்லை. பயந்துகொண்டும் பின்வாங்கிக்கொண்டும் இருந்த தொழிலாளர்களிடம் அவர் பேசினார். தடையரண்களை ஏற்படுத்தும் பணியைத் தொடங்கினார். பன்மடங்கு பலம் வாய்ந்த ஆதிக்கப் பிரிவினரை ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வற்கு முன் வலுவான தடையரண்களை உருவாக்கவேண்டும் என்னும் அடிப்படை பாடம்கூட கோட்டைவிடப்பட்டிருந்தது. கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டு வந்த ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு முக்கிய இடங்களில் தடையரண்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொண்டார்.
மற்றொரு பக்கம், ஆயுதந்தாங்கிய சில நூறு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டினார். அவர்களுக்குப் போதுமான ஆயுதங்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். கட்சியுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். உப்பெர்தல் பகுதியில் போராடுபவர்களுக்கு இடைவிடாமல் உதவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் கட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டன. தடையரண்கள் மீது வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். பீரங்கிகளும் நிறுத்தப்பட்டன. போராட்டம் மற்ற பகுதிகளுக்கும் பரவுவதற்கான பணிகளில் அடுத்து இறங்கினார் எங்கெல்ஸ். மார்க்கோ-பேர்கிஸ்க் தொழிற்சாலைப் பகுதி உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களும் பலப்படுத்தப்படவேண்டும் என்பது அவர் திட்டம்.
புதிய ரைன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்து ஒருவர் ஜெர்மனிக்கு நேரில் வந்து புரட்சியை ஒருங்கிணைத்துக்கொண்டிருக்கிறார் என்னும் தகவல் உப்பெர்தல் தாண்டி பிற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. முதலாளித்துவவாதிகள் கடும் கோபம் கொண்டனர். வெறுமனே தொழிலாளர் போராட்டமாக அது இருந்திருந்தால் உடனடியாக நசுக்கி அழித்திருப்பார்கள். ஆனால், இது ஓர் அரசியல் போராட்டமாக உருப்பெற்றிருந்ததை அவர்களால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. இந்த வகை போராட்டங்கள் ஆபத்தானவை. புதிய ரைன் பத்திரிகை போன்ற பத்திரிகைகளின் தூண்டுதலும் வழிகாட்டுதலும் இவற்றுக்கு அமைவது ஆபத்தானது. தவறான முன்னுதாரணங்களை இவை ஏற்படுத்திவிடும்.
எங்கெல்ஸ் உடனடியாக உப்பெர்தலைவிட்டு வெளியேறவேண்டும் என்று முதலாளித்துவ வர்க்கம் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தது. பின்னிருந்துகொண்டு கலவரத்தைத் தூண்டிவிடும் செயலை மேற்கொள்வதால் எங்கெல்ஸ் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் ஆவேசம் கொண்டனர். எங்கெல்ஸை வெளியேற்றுவது என்பது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒப்பானது. எனவே, உயிரே போனாலும் எங்கள் தலைவர் வெளியேற்றப்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.
இது சிக்கலான சூழல் என்பதை எங்கெல்ஸ் புரிந்துகொண்டார். முதலாளிகளுக்கு பிரஷ்யப் படைகளின் முழுமையான ஆதரவு இருக்கிறது. ஏற்கெனவே தொழிலாளர்கள் துவண்டு கிடக்கிறார்கள். அவர்களால் பிரஷ்யப் படைகளையும் முதலாளித்துவ வர்க்கத்தின் சதிவேலைகளையும் முறியடிக்கமுடியாது. போராட்டம் பிசுபிசுத்துவிட்டது வெளிப்படையாகத் தெரிகிறது. இது நிச்சயமான தோல்வி. பார்த்துப் பார்த்து தயாரித்த திட்டம். மிகவும் தீவிரமாக, உலகச் சூழலை ஆராய்ந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட திட்டம். இருந்தாலும் வெற்றிபெறமுடியவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து உப்பெர்தலில் தங்கியிருப்பது பாதுகாப்பானது அல்ல என்று முடிவு செய்தார் எங்கெல்ஸ். எங்கெல்ஸ் கொலோன் நகருக்குத் திரும்பி வந்தார். எல்பர்ஃபெல்ட் போராட்டம் பற்றியும், அதன் தோல்வி பற்றியும் ஒரு கட்டுரையை எழுதினார். ரைன் பத்திரிகையின் ஆசியர் குழுவின் பெயர் தாங்கி வெளியான அந்தக் கட்டுரை கீழ்கண்ட விஷயங்களைத் தெளிவுபடுத்தியது.
‘நமது பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் மீது மார்க்கோ-பேர்கிஸ்க் தொழிலாளர்கள் வியக்கத்தக்க வகையில் பாசத்தையும் நேசத்தையும் வெளிக்காட்டினார்கள். அவர்களுடைய ஜீவாதார நலன்களுக்காகவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதனினும் ஆயிரம் மடங்கு கடுமையான ஒரு போராட்டம் வெடித்துக் கிளம்பப்போவது உறுதி. அதற்கான முன்னுரைதான் நடந்து முடிந்துள்ள போராட்டம். இதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். மீண்டும் ஒரு புரட்சி மலரும்போது, எங்கெல்ஸும் ஆசிரியர் குழுவில் உள்ள பிறரும் களத்தில் இறங்கிப் போராடுவார்கள். அப்போது, இப்பூவுலகின் எந்தச் சக்தியும் அவரை அப்பணியில் இருந்து வெளியேற்றமுடியாது என்பது உறுதி.’
உப்பெர்தலில் மட்டுமல்ல, ஜெர்மனியின் பிற பகுதிகளில் பரவிக்கொண்டிருந்த எழுச்சிகளும்கூட தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தன. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இந்த மாற்றங்களால் ஏமாற்றமடைந்தனர். என்றாலும் அவர்கள் துவண்டுவிடவில்லை. நடைபெற்றுக்கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான மாபெரும் போர். தொழிலாளி வர்க்கம் தம்மைக் காட்டிலும் பல நூறு மடங்கு சக்தி வாய்ந்த எதிரி வர்க்கத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. முதல் தாக்குதலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. போர்க்களத்தில் இப்படிப்பட்ட தோல்விகள் இருக்கத்தான் செய்யும். ஏமாற்றங்களும் சதிகளும் இருக்கத்தான் செய்யும். கசப்புணர்வும் அச்சவுணர்வும் விரக்தியுணர்வும் ஏற்படத்தான் செய்யும். மென்று, விழுங்கி, ஜீரணம் செய்து, பாடம் பயின்று நடைபோடுவதுதான் ஒரு நல்ல போர் வீரனுக்கு அழகு.
சட்ட ரீதியாக புதிய ரைன் பத்திரிகைக்கு மிரட்டல்கள் குவிந்தபோது மார்க்ஸும் எங்கெல்ஸும் இப்படித்தான் நினைத்துக்கொண்டனர். மே 19, 1849 அன்று பத்திரிகையின் இறுதி இதழ் வெளிவந்தது. கீழ்கண்ட வரிகள் அதில் அச்சிடப்பட்டிருந்தன.
‘எங்கள் ஆசிரியர்கள் பால் அனுதாபம் காட்டிய உங்களுக்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களிடம் இருந்து விடைபெறவேண்டிய தருணம் வந்துவிட்டது. தொழிலாளி வர்க்கத்துக்கு விடுதலை! எங்களுடைய இறுதி முழக்கம் எப்போதும் இதுவாகத்தான் இருக்கும்.’ சிவப்பு மையில் இந்த வாசங்கள் அச்சிடப்பட்டிருநதன.
எங்கெல்ஸ் இந்தச் சம்பவத்தை 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி குறிப்பிடுகிறார். ‘எங்கள் கோட்டையை விட்டுவிடவேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் ஆளானோம். ஆனால், துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தூக்கிக்கொண்டு, இசை தவழ, பத்திரிகையின் கடைசிச் சிவப்பு இதழை பதாகையாகப் பறக்கவிட்டபடி நாங்கள் பின்வாங்கினோம்.’
(தொடரும்)














