கால்பந்து.
உலகின் மிக அதிகமாக பார்க்கப்படும், ஆடப்படும் விளையாட்டு. 2008 கணக்கில் 38 மில்லியன் வீரர்களும், 5 மில்லியன் ரெபரீகளும், டிவி வழியாக கிட்டத்திட்ட ஒரு பில்லியன் மக்களுக்கு மேல் பார்க்கப்படும் விளையாட்டு. பீபா (FIFA) உலகக் கோப்பை, இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் (English Premier League) போன்றவைகளும், ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு கோப்பை என்கிற அளவில் உலகளாவிய பார்வையாளர்களையும், வெறித்தனமான ரசிகர்களையும் கொண்ட விளையாட்டு. ஃபீஃபா – Fédération Internationale de Football Association (FIFA) ஃபீஃபா தான் தலைமையகம். கிட்டத்திட்ட 208 நாடு உறுப்பினர்களை கொண்ட உலகின் மிக சக்தி வாய்ந்த விளையாட்டினை நிர்வகிக்கும் குழுமம்.
2006-இன் டேட்டா உலகமெங்கும் 265 மில்லியன் கால்பந்து வீரர்கள் இருக்கிறார்கள். இது தொழில்ரீதியாக ஆடக்கூடியவர்கள் (Professional Players)+ உள்ளூர் அமெச்சூர் ஆட்கள். இதில் வெறும் 14.33% கிளப்புகளில், நாட்டுக்காக, தனி லீக்கில் ஆடக் கூடியவர்கள். மீதமிருக்கிற 85.67% ஆட்டக்காரர்களுக்கும் இந்த லீக், கிளப், தேசத்திற்காக ஆட வேண்டுமென்கிற கனவிருக்கிறது. அந்த கனவுக்காக எல்லாவற்றையும் ஒத்துக் கொள்வார்கள்.
முக்கியமாக பெரும்பாலான கால்பந்து கிளப்களுக்கு பணம் ஒரு தொடர்ச்சியான தேவை. பயிற்சி, அரங்கம், சாதனங்கள், வீரர்களை வாங்குதல், தக்கவைத்தல், சப்போர்ட் ஊழியர்களின் தேவை, ’கோச்’/ உடல்நல நிபுணர்கள், டோர்னமெண்டில் பங்கு பெறுதல் என பணம் ஒட்டைப் போட்ட தண்ணி லாரியாய் போய்க் கொண்டே இருக்கும். முக்கியமாக கால்பந்து கிளப்புகளை பயன்படுத்திக் கொண்டு அதில் பணத்தை உள் நுழைத்து, பின் அரங்க வசூல், டிவி உரிமப் பங்கு, கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் வழியாக வெள்ளையடிக்கப்பட்டு லாபத்துடன் வெளியேறும். இது பெரும்பாலும் நடப்பது ஐரோப்பாவில். அங்கு தான் லீக் மேட்சுகளும், கிளப்புகளும் அதிகம்.
கால்பந்து விளையாட்டு வணிகமயமாக்கப்பட்டதும், அதனுள்ளே மாபியாக்கள் நுழைந்து தங்களின் பணத்தினை வெள்ளையாக்குவதும் டெனிஸ் ராபர்ட் எழுதிய ”Le Milieu du Terrain”என்கிற பிரெஞ்ச் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இதன் மூலகாரணம் சுவாரசியமானது. சோவியத் யூனியனின் சிதறலுக்கு பிறகும், உலகம் சந்தைமயமாக்கத்தினை நோக்கி நகர்ந்த 90களின் பிற்பகுதியும் மூல காரணங்களாக இருக்கிறது. முக்கியமாக, ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மாபியா, போதைப் பொருள் கூட்டம் உலக கால்பந்தின் மேல் தன்னுடைய பிடியினை இறுக்கமாக வைத்திருக்கிறது.
கிரிக்கெட்டில் எப்படி பிசிசிஐ, ஐசிசியை மிரட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதோ, அதற்கு ஈடான அளவில் யுஈஎப்ஏ (Union of European Football Associations – UEFA), ஃபீஃபாவை தன் பிடிக்குள் வைத்திருக்கிறது என்பது தான் நிதர்சனம். யுஈஎப் ஏயின் கீழ் தான் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி & ஸ்பெயின் வரும். ஐரோப்பிய கால்பந்து கிளப்கள் தான் உலகின் பணக்கார கிளப்புகள்.
இரண்டு உதாரணங்கள்
கொலம்பியா. உலகின் போதைப் பொருள் தலைநகரம். போதை தாதாக்கள் (Drug lords) ஒரு நாட்டின் நாடி நரம்பெல்லாம் ஊடுருவியிருக்கக்கூடிய தேசம். வெறும் போதைப் பொருளை உலகமெங்கும் கடத்தி விற்பதனால் மட்டுமே உங்களை ‘மேல்மட்ட’ அளவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அந்த லெவலில் சேர இன்னொரு தகுதியும் தேவை. அது நீங்கள் எத்தனை கால்பந்து கிளப்புகளில் பணம் போட்டிருக்கிறீர்கள் என்பது. கால்பந்து கிளப் என்பது வெறும் விளையாட்டோ, பொழுதுபோக்கோ அல்ல. எக்கச்சக்க பணத்தினை கிளப்புக்குள் கொண்டு வந்து வெள்ளையாக்குவது தான் வேலை. சாண்டா ப்பீ (Santa Fé) என்று கூகிளிட்டால் அந்த கிளப்புக்கும், போதை தாதாக்கள் அதை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் பணத்தினை மாற்றினார்கள் என்பதும் தெரியவரும்.
தக்ஷின் ஷினவத்ரா – தாய்லாந்தின் முன்னாள் பிரதமர். இந்நாளில் ஊழல், பதுக்கல் குற்றங்களுக்காக தாய்லாந்தின் குற்றப்பட்டியலில் இருப்பவர். பூர்வாசிரமத்தில் தாய்லாந்து அரசக் குடும்பத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். ஊடக பில்லியனர். 2007ல் இங்கிலாந்தின் மிகப் பிரபலமான மான்செஸ்டர் சிட்டி (Manchester City) கால்பந்து கிளப்பினை $133 மில்லியனுக்கு (ரூ.603,39,40,000) வாங்கினார். வாங்கிய பணம் அத்தனையும் வெளிநாடுகளில் அவர் பதுக்கி வைத்திருந்த பணம். வாங்கிய ஒரே வருடத்தில் இந்த கிளப்பினை அபு தாபி வளர்ச்சி & முதலீடு குழுமத்திற்கு (Abu Dhabi United Group Investment and Development) $329 மில்லியனுக்கு (ரூ.1492,45,00,000) விற்று போட்டப் பணத்திற்கு வெள்ளையடித்தாகிவிட்டது. இனி இந்த $329 மில்லியனை உலகின் எந்த வங்கியிலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் வைக்கலாம். இதில் ஒரே வருடத்தில் பணமும் வெளுப்பானது; கூடவே $67 மில்லியன் லாபம் போனஸ். இது தான் கால்பந்தின் மகிமை.
ஆசியாவில் கால்பந்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் மட்டும் இங்கிலிஷ் ப்ரீமியர் லீக் ஆடும் எல்லா கிளப்புகளுக்கும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. கிளப்போடு சேர்த்து கிளப்பின் ப்ராண்டினைப் பயன்படுத்தி எக்கச்சக்கமாய் வியாபார சாத்தியங்களை (Merchandise) விஸ்தரிக்கலாம். போரடித்தால், பெங்களூர் பண்ணார்கட்டா சாலையில், ஃபோரம் ‘மாலு’க்கு அருகில் இருக்கும் மேன்செஸ்டர் யுனெடட் பார் & பப்புக்கு போய் பாருங்கள். எல்லாம் யானை விலை விற்கும். ஆனால் வாங்குவது என்னமோ லோக்கல் சரக்கு. இந்த மாதிரியான வழிகளிலும் பணம் விஸ்தரிக்கப்படும்; வெள்ளையடிக்கப்படும்; கணக்கு காட்டப்படும்
1990களின் ஆரம்பத்தில் தான் கால்பந்து வணிகமயமாக ஆரம்பித்தது. இதே மாதிரியான வணிகமயமாக்கம் கிரிக்கெட்டில் கெர்ரி பேக்கர் ஆஸ்திரேலியாவில் முதலில் கொண்டுவந்தார். ஆனால் 20-20 யின் கண்டுபிடிப்பு, கிரிக்கெட் வணிகமயமாக்கலை எங்கோ கொண்டுப் போய்விட்டது. இந்தியாவில் இந்த 20-20 லீக் ஆரம்பித்தது பிசிசிஐ அல்ல. அந்த புண்ணியம் ஸீ டிவியின் சுபாஷ் சந்திராவை சாரும். அது இந்திய கிரிக்கெட் லீக் (Indian Cricket League – ICL).ஆனால் அதை சீர்படுத்தி, இந்திய ப்ரீமியர் லீக் (Indian Premier League -IPL) என்று பெயர் கொடுத்து, உலகளாவிய கோப்பையாக மாற்றிய பெருமை லலித் மோடியையும், பிசிசிஜயையும் சாரும். தற்போது ஐபில்லில் 10 அணிகள் இருக்கின்றன். இதில் ஏற்கனவே இரண்டு அணிகளின் மீது (ராஜஸ்தான் ராயல்ஸ் – ராஜ் குந்த்ரா+ஷில்பா ஷெட்டி & கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ப்ரீத்தி ஜிந்தா + நெஸ் வாடியா + இன்னபிற பங்குதாரர்கள்) வழக்கு இருக்கிறது. இதில் ராஜ் குந்த்ரா லண்டன் தொழிலதிபர் என்பது மட்டும் உப செய்தி.
ராபர்ட் ஆலன் ஸ்டான்பார்டு – கரீபியன் தீவுகளில் முக்கியமாய் பர்புடா & ஆண்டிகுவாவில் முளை விட்ட ஆள். சரியான பந்தா பேர்வழி. 1980களில் ஹூஸ்டனில் நிலத்தினை வாங்கி பின் விற்று கல்லா கட்டி, அந்த காசில் மேற்கிந்திய தீவுகளில் செட்டிலாகி, வங்கி ஆரம்பித்து, காசு வாங்கி, பிரதமர் வரைக்கும் பேசிய செல்வாக்கான ஆள். 2006-இல் ஸ்டான்போர்ட் 20/20 என்றொரு பந்தயத்தினை ஆரம்பித்தார். இரண்டாவது பந்தயம் 2008-இல் நடந்தது. டிரினிடாட் & டொபோகோ தான் முதல் பந்தய வெற்றியாளர்கள். பரிசுத் தொகை $280,000. அதே வருடத்தில் இதன் வெற்றியை பார்த்த இங்கிலிஷ் & வேல்ஸ் கிரிக்கெட் அமைப்பு (English & Wales Cricket Board – ECB) அவரோடு ஒரு ஒப்பந்தம் போட்டு மேற்கிந்திய அணியும், பிரிட்டிஷ் அணியும் ஆடும் ஒரு பந்தயத்தையும், பரிசுத்தொகையாக $20 மில்லியனையும் அறிவித்தது.
2009-இல் ஆலன் ஸ்டான்போர்டு, ஊழல், கறுப்புப் பணம் வரி ஏய்ப்பு மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவரின் பல்வேறு நிறுவனங்களின் வழியே போண்டியான பணம் கிட்டத்திட்ட $8 பில்லியன் டாலர்கள். அவருக்கும் மெக்சிகோவின் 13 மாகாணங்களில் போதைப் பொருள் விற்ற நெட்வொர்கான கல்ப் கார்டெலுக்கும் (Gulf Cartel) சம்பந்தம் உண்டென்று கண்டறியப்பட்டது. இப்போது அவர் அமெரிக்க சிறையில்.
கிரிக்கெட்டில் இதே மாதிரியான சம்பவங்கள் மேட்ச் பிக்ஸிங், பெட்டிங் மாதிரியான விஷயங்களில் நடந்திருக்கிறது. இன்றைக்கும் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் உலகத்தில் எங்கு நடந்தாலும், துபாயில் பில்லியன் டாலர் அளவுக்கு ஒடும். அத்தனையும் கள்ளப் பணம். கருப்புப் பணம். கணக்கில் காட்டாதப் பணம். மேட்ச் பிக்சிங், பெட்டிங் மாதிரியான சமாச்சாரங்களில் விளையாடப்படும் பணம் பெரும்பணம். உலகக் கோப்பை 2011ல் இந்தியா – பாகிஸ்தான் மேட்சில் சச்சினின் 50க்கு கட்டப்பட்ட பெட்டிங் பணம் 1:7.5 அதாவது நீங்கள் 10,000 கட்டி, சச்சின் 50 அடித்தால் உங்களுக்கு 75,000 கிடைக்கும். தெளிவாக இதுப் பற்றிய அறிவு வேண்டுமானால், மேட்ச் நடக்கும் நாளில் ஒரு எட்டு சென்னை செளகார்பேட்டை போய் வாருங்கள். மேலே டிவியும், டேபிளின் மீது 500,1000 ரூபாய் கட்டுகளுமாய் ஜெகஜோதியாய் இருக்கும்.
ஏன் இவை நடக்கிறது ? எப்படி நடக்கிறது ? எவ்வாறு பணம் வெள்ளையாகிறது ? எப்படி மாபியாக்கள் விளையாட்டில் உள்நுழைகிறார்கள் ? வேறென்ன விளையாட்டுகளில் இது நடக்கிறது ? இது அத்தனையும் அடுத்த வாரம்.
கல்லா நிரம்பும்……
O
நரேன்