அரசியலுக்கும் நாட்டியத்துக்கும் என்ன தொடர்பு? தமிழக முதல்வர் ஜெயலலிதா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹேமமாலினி, ஜெயப்ரதா இவர்கள் எல்லாம் பரதக் கலைஞர்கள் என்பதைத் தவிரவும்?
ஆடுங் கால்கள் அரசவை ஏற, ஆடத் தெரியாத அரசியல்வாதி அரங்கத்தில் அடியெடுத்து ஆட ஆரம்பித்தால் என்ன ஆகும்?
பிரிட்டீஷ் அரசு தொலைக்காட்சியான பி.பி.சியில் அதிகம் பேரால் பார்க்கப் படுகிற ஒரு நிகழ்ச்சி, ‘ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங்’. பிரபலங்கள், ஆனால் நடனத்தோடு ஸ்நானப் பிராப்தி இல்லாதவர்கள். இப்படி ஆணும் பெண்ணுமாகப் பொறுமையாகத் தேர்வு செய்து அவர்களுக்கு வால்ட்ஸ்லிருந்து பாலே நடன அசைவுகள் வரை பயிற்சி கொடுத்து டி.வியில் ஆட விடுவது. ஒவ்வொரு ஜோடியிலும் ஆடத் தெரியாத ஒரு பிரபலமும் ஒரு நடனக் கலைஞரும் இடம்பெறுவது வழக்கம். ஆட்டக் கலைஞர்கள் தனியாக ஆடினால் ஆயிரம் பேர் தான் பார்ப்பார்கள். ஆனால் விஐபிக்கள் அவர்களோடு ஜோடி ஜோடியாக ஆடுவதைப் பார்க்க லட்சக் கணக்கில் டிவிக்கு முன் பார்வையாளர்கள் இன்னும் வாராவாரம் அமர்ந்திருக்கிறார்கள். பிரிட்டீஷ் ரசனை கொஞ்சம் வேறுபட்டது.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கிற பெரிய ஜனக்கூட்டத்தில் எலிசபெத் மகாராணியும் உண்டு என்று நம்பகமான தகவல் சொல்லுகிறது. நிகழ்ச்சியை நடத்தும் ப்ரூஸ் ஃபோர்சைத், எலிசபெத் மகாராணியை விட இரண்டே வயது சிறியவர். இந்த எண்பத்து மூணு வயதிலும் சுறுசுறுப்பாக, இருபத்தைந்து வயதுப் பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொண்டு டிவியில் உற்சாகமாக ஆட்டம் போடுகிறார். மற்றவர்களையும் போட வைக்கிறார். இந்தக் கைங்கர்யத்துக்காக, ராணியம்மா சிபாரிசில் இவருக்கு சர் பட்டமே வழங்கப்பட்டது. அரசி-யலும் ஆட்டமும் கை கோர்த்துப் பட்டம் பதவியில் வெற்றிகரமாக முடிந்த காட்சி அது.
ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உலகச் செய்தி படிக்கிற அறிவிப்பாளர்களில் இருந்து, டாக்டர், விளையாட்டு வீரர், புகழ்பெற்ற சமையல்காரர் இப்படி வந்து ஆடி பெயரைத் தட்டிக் கொண்டு போன மணியமாக இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து நாலு அல்லது ஐந்து வாரம் ஆடி, அப்புறம் பார்வையாளர்கள் எஸ்.எம்.எஸ்ஸில் வாக்கு அளிக்க மறுத்தபடியால் விடை வாங்கிப் போவதுண்டு.
ஆனால், பத்து வாரம் தொடர்ந்து ஆடி சாதனை படைத்திருக்கிறார் ஒரு பெண் பிரபலம். ஆன் விட்கோம்ப் என்ற இவர் ஒரு அரசியல்வாதி. போதாக்குறைக்கு தற்போது நாட்டை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சரவையில் அமைச்சராக வேறே இருந்தவர். எழுத்தாளரும் கூட.
கருத்தடை எதிர்ப்பு, போதை மருந்து சாப்பிட்டதாக குற்றம் சாற்றப்பட்டால் உடனடி அபராதமாக நூறு பவுண்ட் ஸ்டெர்லிங் விதிப்பது, எதாவது குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட பெண் குற்றவாளிகள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்களை ஆஸ்பத்திரி படுக்கையோடு கட்டி வைத்து பிரசவம் பார்க்கிற நடைமுறை, வழக்கமான ஓரினப் புணர்ச்சி எதிர்ப்பு – சகல விதத்திலும் இந்திய வலதுசாரி சிந்தனையோடு ஒத்துப் போகிற பெண்மணி. போதாக்குறைக்கு கிட்டத்தட்ட சாமியாரிணி. கல்யாணம் என்ற சிந்தனையே இல்லாமல் வாழ்க்கையைக் கழித்ததோடு பிரிட்டனின் அரசு மதமான பிராட்டஸ்டண்ட் கிறிஸ்துவத்திலிருந்து கத்தோலிக்க ஆச்சாரத்துக்கு மாறியவர் இவர்.
அம்மையாருக்கு உடம்பு கொஞ்சம், கொஞ்சம் என்ன தாராளமாகவே பூசினாற்போல் இருக்கும். இந்த உடம்போடு நடக்கவே கஷ்டம். ஆனால் அசராமல் பயிற்சி எடுத்து மாஜி அமைச்சர் ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண கண் கிட்டத்தட்ட நாற்பது லட்சம். ‘படகு நகர்கிறது போல் நகர்கிரார்’, ‘அலைக்கழிந்து ஆடி எல்லாப் பக்கமும் தள்ளித் தடவி தட்டுத்தடுமாறி தத்தக்கா பித்தக்கா என்று குதிக்கிறார்’ இப்படி எல்லாம் பத்திரிகைகள் கிண்டல் செய்ய, சிரித்தபடியே பத்து வாரம் தாக்குப் பிடித்து இவர் பரிசுத் தொகையாக கிட்டத்தட்ட எண்பது லட்சம் ருபாய் மதிப்புக்கு வாங்கித்தான் விடைபெற்றார்.
பத்து வருடம் முன்பு கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அமைச்சராக இருந்த ஆன் விட்கோம்ப் அம்மையார் போன வருடம் மீண்டும் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அரசியலில் இருந்து ரிடையர் ஆனதாக அறிவித்ததே அவரை வித்தியாசமான அரசியல்வாதியாக்கி விட்டது. கிரிக்கெட் விளையாட்டு வீரர், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், வங்கி ஊழியர் இன்னோரன்ன தொழில்களில் இருக்கக் கூடியவர்களும் அவ்வப்போது சினிமாக் காரர்களும் ரிடையர் ஆவது உலகம் முழுக்க நடக்கிறதே தவிர, அரசியலில் புகுந்தவர்கள் உடம்பிலிருந்து உயிர் ரிடையர் ஆனபிற்பாடும் கட்சிக் கொடியோடு தான் பயணமாவார்கள். அவர்கள் ரிடையர் ஆவதில்லை. அந்த விதத்தில் ஆன் விட்கோம்ப் தனிவழிதான்.
இங்கே அரசியல்வாதி நாட்டியம் ஆடினால் என்ன ஆகும்? ஒரு சுக்கும் ஆகாது. சமீபத்தில் தான் கண்கூடாகப் பார்த்தோமே. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் ஊழல் ஒழிப்பை முன்னிட்டு தில்லியில் தன்னை மறந்த அனுபூதியோடு நடனம் ஆடி டிவி சானல்களில் இடம் பெற்றதை மறக்க முடியுமா? அவருடைய ஆனந்த நடனத்தைக் கண்டு களித்தவர்கள் ‘ஊழல் ஒட்டு மொத்தமாக ஒழிந்து விட்டதால் ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று இந்தியில் அந்தம்மா களிதுள்ளுகிறார் என்று தப்பாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆளும் காங்கிரஸ் கட்சியை ஆப்பு அசைத்த குரங்காக அண்ணா ஹசாரே, யோகி ராமதேவர் போன்ற தனிநபர் போராட்டங்களை சமாளிக்க முடியாமல் திணற வைத்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.
ஆட அவர் தேர்ந்தெடுத்த இடம் தான் கோளாறாகி விட்டது, தில்லியில் பஹாட் கஞ்ச், ஜங்புரா, ஜனக்புரி,லோதி கார்டன் என்று ஏகப்பட்ட இடம் இருக்க, காந்தி சமாதி அமைந்திருக்கும் ராஜ்கட்டில் சுஷ்மா அம்மையார் நடனம் ஆடினார்.
மகாத்மா காந்தியை எரித்த இடத்தில் எழுப்பிய சமாதி ராஜ்கட். வெளிநாட்டில் இருந்து யாராவது தலைவர் வந்தால் அரசுக்கு உடனடியாக நினைவு வரும் வண்ணம், இந்த விருந்தாளிகள் மலர் வளையத்தோடு முதலில் போய் அஞ்சலி செலுத்துவது ராஜ்கட்டில் தான். அக்டோபர் ரெண்டாம் தேதி ராட்டையைத் தூசி தட்டி எடுத்து பிரதமரும் மற்ற அமைச்சர்களும் ரகுபதி ராகவ ராஜாராம் பாட்டு பின்னணியில் ஒலிக்க நூல் நூற்க உட்காருவது இங்கேதான். சகலமான டோக்கனிச, அடையாள ஆர்ப்பாட்டங்களும் அரங்கேறும் ராஜ்கட்டில் காந்தி ஆவி அமைதியின்றி அலைந்து கொண்டிருக்க்கும் என்று இத்தனை நாள் சொல்லி வந்தார்கள். சுஷ்மா அம்மையாரின் ஆட்ட வேகத்தில் மிச்ச மீதி இருந்த காந்தி நினைவுகளும் ராஜ்கட்டை விட்டு ஓடியே போயிருக்கும்.
ஆன் விட்கோம்ப் இப்போது ஓய்வாகத்தான் இருக்கிறார். அவரை வரவழைத்து சுஷ்மாவோடு போட்டி நடனம் ஆடவைத்து ‘சபாஷ் சரியான போட்டி’ என்று புனித எத்தியூரப்பாவைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி தூர்தர்ஷன் நிகழ்ச்சி நடத்தலாம். பி.பி.சி ரசிகர் பட்டாளம் போல் இல்லாமல் போனாலும், ராமதேவர் கூட்ட நினைத்த ஊருக்கு முப்பது பேராவது யோகாசனா போஸில் நேராகவோ தலைகீழாகவோ டி.வி முன் இருந்து பார்க்க மாட்டார்களா என்ன?
O
தமிழ் சினிமா எப்போவாவது பயமுறுத்தும். எனக்கு இன்னும் முதுகுத் தண்டைச் சிலிர்க்க வைப்பது ‘தங்கமலை ரகசியம்’. பௌர்ணமிச் சந்திரன் குளிர்ந்த வெளிச்சத்ததப் பொழியும் அமைதியான ராத்திரியில் நதிக்கரையில் உட்கார்ந்து ஜமுனா ‘அமுதைப் பொழியும் நிலவே’ என்று பி.சுசீலா குரலில் பாடிக் கொண்டிருப்பார். பாட்டு முடியும் நேரம், காட்டுவாசி மேக்கப்போடு சிவாஜி பின்னால் இருந்து எட்டிப் பார்க்க கதாநாயகி ஒரு கூச்சல் போடுவாரே பார்க்க, கேட்க வேண்டும்.
யாரோ சொன்ன யோசனைப்படி பாடலை இசைத்தட்டாக வெளியிட்டபோது அந்தக் கூச்சலையும் முடிவில் மறக்காமல் சேர்த்தார்கள். இத்தனை வருடமாக அந்தப் பாட்டை பாதி ரசித்தபடி, கடைசியில் வரப்போகும் அலறலுக்காக நெஞ்சு நடுங்கக் காத்திருக்கிறேன். படம் இல்லாமல் பாட்டு மட்டும் கேட்கும்போது பயம் இன்னும் அதிகரிக்கும்.
அமுதைப் பொழியும் நிலவே போல் பயத்தோடு கையாள வேண்டியவை இங்கே சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்கள். செர்ஜி ஐசென்ஸ்டின், பெலினி, அண்டோனியோனி, தெ சிக்கா, ரொமன் பொலன்ஸ்கி, குரசோவா, தாகோஷி கிட்டானோ, ஜாபர் பனாஹி, மணி கவுல் என்று பக்கம் பக்கமாக கனமான உரைநடையில் எழுதித் தள்ளி விடுவார்கள். முதல் வரியிலேயே புரியாத பயம் மனதைக் கவ்வும். அல்லது சினேக பாவத்தோடு தொடங்கி, அடர்த்தியாக அப்புறம் மேலே மேலே கனத்தை அப்பி அலைபாய விடுவார்கள். அன்னிய மொழிப் படத்தைப் பார்த்தால் சுலபமாகப் புரியும். ரசிக்க முடியும். அதைப் பற்றி எழுதின தமிழ்ப் புத்தகத்துக்குத்தான் புரிந்த மொழியில் சப்-டைட்டில் தேவைப்படும்.
இத்தனை ஏன், ஹிட்லரின் கேமிராக் கண்ணான திரையுலக மேதை லெனி ரைபென்ஸ்தால் அம்மையாரைப் பற்றி நான் எட்டு வருடம் முன்னால் எழுதிய கட்டுரையை இப்போது படிக்கும்போது மனதில் அமுதைப் பொழியும் நிலவே ரிக்கார்ட் சுழல்கிறது. இப்போது எழுதியிருந்தால் ரீடர் பிரண்ட்லியாக எழுதியிருக்கக் கூடிய முக்கியமான கட்டுரை அது. அதுக்கு விதிச்சது அவ்வளவே
கோவை நண்பர் ஜீவா வித்தியாசமானவர். அவர் முதலில் ஓவியர். அப்புறம் தான் எழுத்தாளர். அதன் காரணமாக அவரிடம் அலட்டல் எதுவும் கிடையாது. இயல்பிலேயே அடக்கமானவர். அவர் வரைந்த கண்ணதாசன் ஓவியத்தில் கீழே ‘ஜீவா’ என்று போட்டிருந்த கையெழுத்தை மட்டும் சுரண்டி விட்டு தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தபோதும் அவர் அமைதி காத்தார். அரசாங்கம் நடத்தும் தூர்தர்ஷனிலும் இந்தப் படத்தை ஓவியர் அனுமதியின்றி, அவர் பெயரும் இல்லாமல் காட்டி இண்டெலெக்சுவல் பிராப்பர்டி ரைட் மீறுதல் நடந்திருக்கிறது.
அமைதியான ஓவியர் என்பது தவிர ஆழ்ந்த ரசனையும் படிப்புமுள்ளவர் ஜீவா. முக்கியமாக சினிமா பற்றிய தீவிரமான வாசிப்பு, அனுபவப் பகிர்வில் ஈடுபாடு.
எந்தக் கஷ்டமும் இல்லாமல், பக்கத்தில் உட்கார்ந்து அரட்டை அடிக்கிற லாகவத்தோடு நண்பர் ஜீவா உலக சினிமாவைப் பற்றி எழுதிய ‘திரைச்சீலை’ புத்தகத்தைப் படித்தபோது திரைப்படக் கலை பற்றிய புத்தகங்கள் குறித்த என் கருத்து கொஞ்சம் மாறியது. , ‘வாங்க உக்காந்து பேசுவோம்’ என்று நாற்காலியை இழுத்துப் போட்டு விட்டு வேட்டியும் வெள்ளை பனியனுமாக எதிரே அமர்கிற சிநேகிதரைப் போல் ஜீவா அறிமுகப்படுத்துகிற படங்களில் ராஷமோனில் இருந்து, இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் வரை உண்டு. கே.சி.ஜியார்ஜின் யவனிகாவில் தொடங்கி, செ குவேராவின் வாழ்க்கையைச் சொல்லும் ‘மோட்டார் சைக்கிள் குறிப்புகள்’, குரசோவாவின் ‘கனவுகள்’, சீனுவாசனின் ‘வடக்கு நோக்கி யந்திரம்’, ஈழத் திரைப்படம் ‘மண்’ – ஜீவா எதையும் விட்டுவைக்கவில்லை.
நல்ல வேளை, நல்ல சினிமா ரசிகரான ஜீவா ‘ரசனை’ பத்திரிகையில் எழுதிய இந்தக் கட்டுரைகளை புத்தகமாகத் தொகுத்து விட்டார். இல்லாவிட்டால் அங்கே இங்கே பிராண்டி எடுத்து அவர் எழுத்தும் நெட்டில் களவு போயிருக்கும். அத்தனைக்கு ரசனையும், ஆராய்ச்சியும், உழைப்பும் கலந்த படைப்பு இது.
ரிஷிமூலம் நதிமூலம் கூடக் கண்டுபிடித்து விடலாம். பெரும்பாலும் சினிமா மூலம் டைட்டில் கார்டில் பெயர் போடாவிட்டால் கண்டவரும் இலர் விண்டவரும் இலர் கேஸ் தான். பல படங்களில், சிகரெட் புகை சூழ்ந்த ஓட்டல் அறைகளில் மூட்டைப் பூச்சிகள் ஒட்டுக் கேட்க, மடியில் தலையணையை வைத்துக் கொண்டு மணிக்கணக்காக பியரோ காப்பியோ குடித்தபடி ‘டிஸ்கஷன்’ மூலம் அமையும் கதைகள் தான் பெரும்பாலும் சினிமாவுக்குப் போகின்றன. இலக்கிய, சினிமா ரசிகர்களான உதவி இயக்குனர்கள் பங்கு பெற்றால் இவர்கள் புண்ணியத்தில் சிறுகதை, நாவல், இரானிய சினிமா இப்படி பல இடத்தில் இருந்தும் கிள்ளி எடுத்துப் பெருங்கதையில் பெருங்காயமாகக் கலக்கி விடுகிறார்கள்.
பிற மொழி சினிமா, நாடகம், இலக்கியம் என்று தேடித் தேடி ரசித்த ஜீவா அங்கங்கே மிகச் சுத்தமாக சினிமா மூலம் கண்டுபிடிக்கும் நேர்த்தி அவரது எழுத்தின் சுவாரசியத்துக்கு ஓர் உதாரணம். அவர் ‘தப்புத் தாளங்கள்’ படத்தை விஜய் டெண்டுல்கரின் மராத்தியப் படைப்பான ‘சஹாராம் பைண்டர்’ நாடகத்தோடு தொடர்பு படுத்தப்படுவதைக் கண்டு சந்தோஷப்படுகிற ஆத்மாக்களில் நானும் உண்டு. அதே போல் மணி ரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் ஷியாம் பெனகல் படமான மராத்திய நடிகை ஹன்சா வாட்கரின் வாழ்க்கையைச் சொல்லும் ‘பூமிகா’வின் கூறுகளை ஒரு வரியில் காட்டி விட்டு சட்டென்று அடுத்த தகவலுக்குப் போய்விடுகிறார் ஜீவா.
போகிற போக்கில் விஷய கனத்தோடு, ஆனால் படிக்கும்போது எந்த சிரமமும் இல்லாத படிக்கு ‘பதேர் பாஞ்சலி’ சத்யஜித் ராய் முதல் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ஸ்ரீதர் வரை அறிமுகப் படுத்துகிறார். நாலே பத்தியில் ஒரு முக்கியமான படத்தை ஷாட் பை ஷாட் ஆகப் பிரித்துப் போட்டு விளக்கி திரும்பக் கோர்க்கிற ஜீவாவின் உத்தி புத்தகத்தை ஒற்றை இருப்பில் கவர் டு கவர் சுளுவாக படிக்க வைக்கிறது.
ஆமா, ஜீவா, சிம்புதேவனின் ‘புலிகேசி’யைச் சொன்னீர்களே. அதன் மூலமான கிரேசி மோகனின் ‘சிரிப்பு ராஜ சோழன்’ பற்றிச் சொல்லவில்லையே. ஜூனியர் விகடனில் சிரிப்பு ராஜ சோழன் தொடராக வெளியானது. விகடனில் சிம்புதேவன் வேலை பார்த்த நேரம் அதுவாக இருக்கக் கூடும்.
படிக்க சுவையாக இருந்தாலும் நீளமான பத்திகளைச் சின்னச் சின்னதாகப் பிரித்து அடுத்த பதிப்பில் போடலாம். அப்புறம், ரித்விக் கதக்கை ரியலிச இயக்குனர் என்பதை விட மெலோ டிராமாவை நயமாகச் சொன்ன இயக்குனர் என்று நான் சொன்னால் நிச்சயம் திட்ட மாட்டார் நம்ம ஓவியர். மேக தாக்கே தாராவில் தட்டுப்படுகிறது மெலோ டிராமாவா, நியோ-ரியலிசமா என்று கோவையில் கூட்டம் நடத்தினால் வரிந்து கட்டிக் கொண்டு வந்து பேசத் தயார்.
திரைச்சீலை புத்தகம் (திரிசக்தி பதிப்பகம், சென்னை வெளியீடு) தேசிய விருது பெற்று அடுத்த வாரம், பிறந்த மண் கோவையில் அவருக்குப் பாராட்டு விழா எடுக்கிறார்கள். திரைச்சீலை உயர ஜீவா வெளிச்சத்துக்கு வரட்டும்.
O
பேஸ்புக்கும் ட்விட்டரும் இல்லாத உலகத்தில் எப்படி வாழ்க்கையின் பெரும்பகுதி இருந்தேன் என்று ஆச்சரியப்படுகிறவர்களில் நானும் உண்டு. குழுமம், ப்ளாக், சொந்த வெப்சைட் இதெல்லாம் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போக, சமூகத் தொடர்பு என்றால் இந்த இரண்டும் தான் என்று விரசாக ஆகிவரும் சூழல்.
முப்பது வருடத்துக்கு முன் கூட வேலை பார்த்த நண்பர், அதற்கும் முன்னால், கல்லூரியில் படிக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்த தோழி, வெளிநாட்டுப் பயணமாகி வருடக் கணக்கில் சுயம்பாகம் செய்து ஒப்பேத்திக் கொண்டு நாவல், பத்தி எழுதி, ஆபீஸ் வேலையும் நடுநடுவே பார்த்து வந்த காலத்தில் கிடைத்த வெள்ளை, சயாமிய நண்பர்கள்.. எத்தனையோ பேரை பேஸ்புக்கில் தேடிப் பிடித்து திரும்ப உறவு புதுப்பித்துக் கொண்டிருக்கிறேன் இந்த நாலு வருடத்தில்.
இந்த வசதி மட்டும் பதினைந்து வருடம் முன்னால் இருந்திருந்தால், என் அப்பா அவருடைய எழுபது சில்லறை வயசு நிறைந்தவர்களான திருச்சி நேஷனல் காலேஜ், மாயவரம் காளியாகுடி ஓட்டல், ஆலப்புழை உதயா ஸ்டூடியோ, கல்கத்தா பாலிகஞ்ச் சிநேகிதர்களில் பத்து பேரையாவது திரும்ப சந்தித்து குசலம் விசாரித்த சந்தோஷத்தோடு விடைபெற்றுப் போயிருப்பார்.
வங்கியில் கம்ப்யூட்டர் துறையை ஏற்படுத்தி, அத்தனை சாப்ட்வேரையும் மாங்கு மாங்கு என்று எழுதி, கிளைதோறும் பெட்டி தட்டி அதையெல்லாம் சரிப்படுத்தி வேலை செய்ய வைத்து, திட்டும் பாராட்டுமாக நாங்கள் இருந்த பரபரப்பான காலம் ஒரு வெள்ளிவிழாவே கொண்டாடி விட்டது. அந்த நண்பர்களை விடாப்பிடியாகத் தேடிப் பிடித்து பேஸ்புக்கில் ஒரு குழு அமைத்தபோது இரண்டு பேர் இறந்தது தெரிய வந்தது. இப்போது எடுத்த புகைப்படங்களில் அந்தக்கால கமல், ரஜனி ஸ்டைல் மன்னர்கள் கிழடு தட்டி நிற்பதை (என்னையும் சேர்த்துத்தான்) ஒரு புன்னகையோடு பார்த்து ரசித்தபடி, பிள்ளை, பெண் கல்யாண ஆல்பங்களை அப்லோட் செய்து உலக வழக்கப்படி பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.
திரும்பக் கிடைத்த நண்பர்களில் சில பல பெயர்கள் நினைவுக்கு வந்தாலும் முகம் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. ஒரு தெலுங்கு நண்பர் பெயரைச் சொன்னார். அட நம்ம ஏ டு இசட் ராவ். சிவ சங்கர வீர வெங்கட துர்க்கா பிரகாச வர பிரசாத். பெயருக்கு முன்னால் ஏ.எம் என்று இரண்டு இனிஷியலும் உண்டு. இத்தனை பெரிய பெயரைச் சொல்லி வாய் சுளுக்கிக் கொள்ளாமல் இருக்க, நாங்கள் வைத்த ஏ டு இசட் ராவ் நிலைத்து விட்டதாக அவரே ஒப்புக் கொண்டார்.
வங்கியை விட்டு வெளியே போய், பல நாட்டில் பணியெடுக்க வேண்டி வந்தபோது நண்பர்களில் ஒருவரான கருப்பையா கார்ப் ஆனார். கார்ப் என்றால் ஒரு வகை மீன் என்று தெரிந்தாலும், கிளையண்டுக்கு மீன் பிடிக்கும் என்பதால் பெயர் மாறியது. பழனியப்பன் எங்கே தன் பெயரைச் சொன்னாலும் பலானியப்பன் என்று தான் சொல்லி, பி பார் பாரீஸ், ஏ பார் ஏதென்ஸ் என்று ரெண்டு நிமிஷம் ராகம் பாடுவார். ஆஞ்சநேயன் அஞ்சான் ஆகிய போது, என்னையும் மார்கன் ஆக்க நடந்த ஏற்பாடுகளை நான் கடுமையாக எதிர்க்க, பெயர் அப்படியே விடப்பட்டது.
பெயருக்கு முன்னால் போட்ட அப்பா பெயரை என் பெயராக நினைத்து ராமசாமி என்று நீட்டி முழக்கி வெள்ளைக்கார மேடம்கள் ஈ-மெயில் அனுப்ப, அப்பா பெயர் இறுதிப்பெயர் என்ற சர்நேம் ஆகி சகல தகவல் தொடர்புக்கும் அப்பா எனக்கு இனிஷியலாகக் கூட வராமல், பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்.
பெயர்களைப் பற்றிச் சிந்திக்க வெகு ரசமாக இருக்கிறது.
சாங்கோபாங்கமாக முதல் பெயர், நடுவாந்திரப் பெயர், இறுதிப் பெயர் என்று மூன்று கம்பார்ட்மெண்டாகப் பெயர் வைப்பது போன நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட மரபு. இதில் நடுவாந்திரப் பெயர் கழண்டு விழுந்து முதலும் கடைசியுமாக ரெண்டே பெட்டிகளோடு பெயர் சூட்டிக் கொள்ளத் தொடங்கினர்.
மரியாதை விளி மிஸ்டர் அல்லது மிஸஸ், மிஸ் என்று அடைமொழியோடு இறுதிப் பெயரைச் சொல்வதுதான். பிரிட்டனில் அரை மரியாதையும் உண்டு. அடைமொழி இல்லாமல் சர்நேமை வைத்து ஒருத்தரைக் கூப்பிட்டால் அவர் நெருக்கமும் இல்லை, ரொம்ப அந்நியமானவரும் இல்லை. பிரிட்டீஷ் வழக்கம் இது.
இதுவே ஒருவரை அரசு சர் பட்டம் வழங்கி கௌரவிக்கும்போது தலைகீழாக மாறிவிடும். ப்ரூஸ் ஃபோர்சைத்துக்கு சர் பட்டம் வழங்கியதும் அவரை மரியாதையாகக் கூப்பிடுவது சர் மிஸ்டர் ஃபோர்சைத் என்று இல்லை. சர் ப்ரூஸ் தான். முதல் பெயரை மட்டும் சர் பட்டத்தோடு சேர்த்தால் போதும். சர் பட்டத்துக்கு இணையாகப் பெண்களுக்கு வழங்கப்படும் டேம் பட்டத்துக்கும் இதே விளிப்பு மரியாதைதான். டேம் மேகி அல்லது டேம் மார்கரெட் என்று பழைய பிரதமரைக் கொஞ்சம் சத்தம் போட்டுக் கூப்பிட வேண்டும். வயது அதிகம். காது கேட்பதும் கேட்காததும் மனநிலையைப் பொறுத்தது. நம்ம பெரிசுகள் போலதான்.
பிரிட்டீஷ் சட்டம் பெயர் விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடி அதிகம் காட்டுவது. கடைசிப் பெயரான சர்நேம் கோர்ட்டில் முப்பது பவுண்ட் கட்டி பெயர் மாற்றப் பத்திரம் முத்திரை குத்தி வாங்கி வாழ்க்கையில் ரெண்டு தடவை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஃபர்ட்ஸ்ட் நேம் ஆன ஹென்றி, ராபர்ட், ஜான் போன்ற எளிமையான முதல் பெயர்கள்? நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தாலேயன்றி இந்தப் பெயர்களைப் படைத்தவனே வந்தாலும் மாற்றமுடியாது என்று 1946-ல் நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனாலும் முதல் பெயரை மாற்ற மனுக்கள் வந்தபடிதான் உள்ளன. அவற்றை அனுமதிக்காமல் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இருக்க முடியாது. பழைய கோர்ட் தீர்ப்பையும் அதே நேரம் அவமதிக்க முடியாது. யோசித்தார்கள் சட்ட வல்லுனர்கள். வழி பிறந்தது.
‘1946 பாரட் வெர்சஸ் பாரட் வழக்கில் மேதகு நீதியரசர் ஹேரி வைசே முதற்பெயரை மாற்ற முடியாது என்று தீர்ப்பளித்திருந்த போதும்’ என்று ‘நாட் வித்ஸ்டாண்டிங்க்’ முஸ்தீபோடு ஆரம்பித்து மனுவைப் போட்டால் கோர்ட் அவமதிப்பும் ஆகாது, பெயர் மாற்றமும் சுளுவாக நடந்து கஜானாவுக்குப் பணம் கிடைக்கும் என்று ஏற்பட்ட இந்த வளமுறை இன்னும் நடப்பில் இருக்கிறது.
பெயரை மாற்றலாம். ஆனால் வெறும் நம்பராக மாற்ற முடியாது. அதாவது 201 என்று யாரும் பெயர் வைத்துக் கொள்ள முடியாது. அதையே எழுத்தில் டூநாட் ஒன் என்று பழைய தமிழ்ப் படத்தில் காக்கி டிரவுசர் போட்ட கான்ஸ்டபிளைக் கூப்பிடுகிற மாதிரி பெயர் வைத்தால் ஓகே தான். அதே போல் கடவுள், சாத்தான், ஸ்பைடர்மேன், கொல்லுவேன், குத்துவேன் என்றெல்லாம் புனித, விவகாரமான அர்த்தம் தரும் பெயர்களை வைத்துக் கொள்ளவும் முடியாது.
அரசியல், மதம், கொள்கை அடிப்படையில் அல்லது காத்திரமாகக் காதில் விழவேண்டி ஒரு நடுவாந்திரப் பெயரான மிடில் நேம் சேர்த்துச் சூட்டிக் கொள்வது திரும்ப வந்து அவ்வப்போது வழங்குகிற ஒன்று. பழைய பீடில்ஸ் பாடகர் பால் மக்கார்டினியின் முதற்பெயர் பால் இல்லை, நடுப்பெயர் அது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? முதல் பெயரையும் அரண்மனை கவுரவத்தையும் வைத்துப் பார்த்தால் அவர் சர் பால் இல்லை, சர் ஜேம்ஸ். அதுதான் அவர் முதல் பெயராம்.
பெயர்களுக்கு போலந்து செய்யும் மரியாதையை வேறு எந்த நாடும் செய்வதில்லை. ஒவ்வொரு நாளுக்கும் ஏழெட்டு முதல் பெயர்கள். வருடம் முழுக்க 365 நாளும் இப்படிப் பெயர் நாள் தான். இன்றைக்கு பீட்டர் தினம் என்றால் இன்னும் இருபது நாள் கழித்து ஜான் தினம், அதற்கு முப்பது நாள் சென்று காதரின் தினம் இப்படி ஆண், பெண் பெயர்களுக்கான தினங்களை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள் அங்கே. ஆகவே ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று, பெயர் தினக் கொண்டாட்டம் ஒன்று என்று இங்கே பழைய அரசாங்கம் வருடம் பூரா பாராட்டு விழா எடுத்த மாதிரி வீட்டுக்கு வீடு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியப் பெயர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சாதிய அமைப்பில் இருந்த இறுதிப் பெயர்களை கிட்டத்தட்ட ஒழித்ததற்கு திராவிட இயக்கத்துக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். அய்யரும், அய்யங்காரும், நம்பூதிரிபாடும், பாசுவும் ஜாதிப் பெயர் என்பதை விட குலமுறை சொல்லும் பெயர் என்று பொதுவுடைமை இயக்கங்கள் இந்தப் பெயர்களைப் பார்த்தது தான் வேதனையான வேடிக்கை.
ஆந்திரப் பிரதேசத்தில் எல்லோருக்கும் பெய்யும் மழையாக ராவ் என்று இறுதிப் பெயரை ஏனோ அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாடு போல் நாத்திகம் தழைக்காத அந்த பூமியிலும் ஒரே ஒரு நாத்திகர் (அந்தக் காலத்தில் அவர் மட்டும்தான் இருந்தார் போல்) கோ.ரா என்ற கவிஞர் கோகவரபு ராமசந்திர ராவ். காந்தியவாதியும் கூட. கோ.ரா மட்டும் இல்லை, அவருடைய மகன் டாக்டர் லவணம் (உப்பு என்று பொருள்) கூட காந்திய நாத்திகர் தான்.
காந்தியவாதி எப்படி நாத்திகராக இருக்க முடியும்? பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. வேறே எங்கே? எங்கள் ‘வருத்தப்படாமல் சாப்ட்வேர் எழுதி வருத்தப்படுத்தாமல் இயக்கிய வாலிபர் சங்க’ பேஸ்புக் பக்கத்தில் தான்.
நமக்குப் பிடிக்காத யாருக்காவது கௌரவம் வந்து சேரும்போது போனால் போகிறது என்ற தோரணையில் வாழ்த்தித் தொலைப்பவர்கள் நாமெல்லாம். இப்படி வாழ்த்து பெறும் லிஸ்டில் உப்புமா சேரும் என்று யாரும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை போல் உப்புமாவுக்கும் சர்வதேச அளவில் அங்கீகாரம். உலகம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை.
ஹோட்டல் சாம்பார் மாதிரி, வீட்டுப் பதார்த்தங்களில் பெரும்பாலோருக்கு லவ்-ஹேட் ரிலேஷன் இருப்பது உப்புமாவோடு தான். வெங்கலப் பானையில் கிண்டிய அரிசிக் குருணைப் பொங்கல், அதைப் பிடிப்பிடியாக திரட்டிப் பிடித்து, சிரமத்தைப் பாராமல் திரும்ப வேகவைத்து எடுத்த உப்புமாக் கொழுக்கட்டை என்றெல்லாம் பெயரிலும் தன்மையிலும் வேறுபாடு காட்டி வந்தாலும், ரவையைக் கொட்டிக் கிளறி சுடச்சுட எடுத்துப் பரிமாறும் ரவா உப்புமா தான் சகலரின் கரித்துக் கொட்டலுக்கும், சரி போட்டுத் தொலை என்ற அங்கலாய்ப்போடு தின்னலுக்கும், இன்னும் ஒரு கரண்டி போடு இந்த எழவை என்று சாபத்தோடு ஒன்ஸ் மோர் கேட்கவும் வைப்பது. அரிசி உப்புமா வெங்கலப் பானையின் அடிப்பிடித்து உண்டாக்குகிற நொறுநொறுவென்ற தீசலைச் சாப்பிடுவதற்காக அந்த அவதாரத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ரவா உப்புமா?
உப்புமாவைக் கொண்டாட உலகில் கன்னட சகோதரர்கள் தவிர வேறே யாரும் இல்லை என்றே சொல்லலாம். விடிந்து எழுந்ததும் கடமையாற்றுகிற சிரத்தையோடு பெங்களூர் ஹோட்டல்களில் காராபாத், உப்பிடு என்ற செல்லப் பெயர்களோடு வலம் வரும் உப்புமாவுக்கும், கூடவே அதன் இனிப்புப் பதிப்பான கேசரிபாத் என்ற எண்ணெய் வடியும் செயற்கை காவிக் கலர் ரவாகேசரிக்கும் காத்திருக்கிற கூட்டத்துக்கு அமெரிக்காவில் ஆதரவு கிடைத்திருக்கிறது.
மலரும் நினைவுச் சமையல் குறிப்புகளில் இருந்து உத்வேகம் பெற்று உடனடியாகச் செய்து தரும் பதார்த்தத்துக்கான உலக சமையல் கலைஞர்களுக்கிடையேயான போட்டி. உப்புமா கிண்டி முதலிடம் பிடித்து நூறாயிரம் டாலர் முதல் பரிசும் வாங்கிய ஷெப் ப்ளாயிட் கார்டோஷ் மும்பையில் பிறந்தவர்.மணக்க மணக்க மஷ்ரூம் உப்புமாவாம். இது ஏதுடா கஷ்டம் கிருஷ்ணா.
தள்ளிப்போ என்றாலும் துள்ளிவரும் தட்டின்றி
அள்ளியுண்ண வாயில் அடுபசையாய்ப் – பள்ளிகொள்ளும்
அப்புறமும் கிச்சடியாய் வேடமிடும் கண்றாவி
உப்மாவுக் குண்டோ இணை
0
இரா. முருகன்