ரத்து ராணி

மரியம் பிச்சை

எம்.எல்.ஏ. பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திருச்சியிலிருந்து காரில் கிளம்பிய அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் பலியாகியிருக்கிறார். ஆழ்ந்த அனுதாபங்கள்.

போன கட்டுரையில் சொன்ன மாதிரி கட்சிக் கொடியை எடுத்து காரில் பறக்க விட்டாலே அது கார் இல்லை, ராக்கெட் என்ற நினைப்பு அனைவருக்கும் வந்து விடுகிறது. கார்களில் கட்சிக் கொடியோ, கட்சி சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்களோ இருக்கக்கூடாது என்ற சட்டத்தை உடனடியாகக் கொண்டுவர வேண்டும். அவர்கள் காரில் எப்படி வேண்டுமானாலும் பறக்கட்டும், எக்கேடு கெடட்டும். சாதாரண பொது ஜனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். வேண்டுமானால் ஆளுக்கொரு ஹெலிகாப்டர் வாங்கிக் கொண்டு அதில் ஆளுயரக் கொடியைக் கட்டிக் கொண்டு கடல் மார்க்கமாகப் பயணிக்கட்டுமே. யார் வேண்டாம் என்றது?!

O

ஓ. பன்னீர் செல்வத்தின் அண்ணன் மாதிரியான தோற்றத்தில் இருக்கும் புதுவை முதல்வர் ரங்கசாமி ‘அம்மா’வுக்காக சுண்டக் காய்ச்சிய பாண்டிச்சேரி சரக்கு ரெடி செய்து அதையும் கொடுக்காமல் அப்படியே தானே முழுங்கி விட்டார்.

இம்புட்டு வருஷமும் அம்மாதான் கூட்டணி தர்மங்களை சூப்பராகக் காப்பாற்றி வந்தார். அடல் பிஹாரி வாஜ்பாயியிலிருந்து அண்ணன் வைக்கோ வரை பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அம்மாவிடமே ஒருவர் ஆட்டம் காட்டியிருக்கிறார் என்றால் அவர் எப்படிப் பட்ட சூராதி சூரராக இருக்க வேண்டும்?!

பாண்டிச்சேரியில் (இருக்கிற ஆச்சரியங்கள் பத்தாது என்று) இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன!

தமிழகத்தில் சுழன்றடித்த சூறாவளியின் எஃபெக்டில்தான் ரங்கசாமிக்கு சான்ஸ் அடித்தது என்பது தான் உண்மை. ஜெ.வை அவமானப்படுத்தியதன் மூலம் ரங்கசாமிக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது என்று சொன்னால் சிரிப்பீர்கள். ஆனால் பொறுத்திருந்து பாருங்கள்!

O

தலைமைச் செயலக மாற்றத்திற்கு நிறுத்தி நிதானமாக முதல்வர் ஒரு பெரிய விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் ஏற்கெனவே கேட்ட நூலக நிலைமை குறித்து இது வரை தகவலில்லை! நூல்கள் பத்திரமாக இருந்தால் சரி! [எடைக்குப் போட்டால்கூட ஏழெட்டு லட்சங்களுக்குக் குறையாது.]

O

படம்-நன்றி: தினமலர்எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்திருக்கிறது அரசு. ‘தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது’ என்றும் அரசு அறிவித்துள்ளது. புதிதாக (பழைய) பாடப் புத்தகங்களை அச்சடிக்க வேண்டும் என்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் 15-ம் தேதி திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பசங்களுக்குக் கொண்டாட்டம்! இன்னும் ஒரு நாள் கழித்து ஜூன் 16-ம் தேதி திறந்தால் அம்மாவின் (சமீபத்திய) ராசிப்படி கூட்டுத் தொகை 7 கிட்டும்!

பாடப்புத்தகங்களில் அரசியல் தலைவர்களின் கருத்துகளைத் திணிப்பது உச்சக்கட்ட அநாகரிகம். தயவு தாட்சண்யமின்றி அது போன்ற எதையும் இப்போதும், எப்போதும் பாடப்புத்தகங்களில் திணிக்காமலிருக்க முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்.

அரசின் வரிப்பணம் மட்டுமின்றி சமச்சீர் கல்வியை எதிர்பார்த்து நோட்ஸுகள் அடித்து வைத்திருந்த பல தனியார் நிறுவனங்களுக்கும் பலத்த அடி! இந்த நோட்ஸ் சித்தாந்தத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும். புரியாத அளவில் பாடத் திட்டத்தை வைத்து அதை புரிய வைக்காத அளவிற்கு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அதற்கு தனியா(ரா)க நோட்ஸ் வேறு எதற்கு? இதற்குப் பேசாமல் நோட்ஸை மட்டும் பாடப் புத்தகமாக வைத்துப் பாடம் நடத்தி விட்டுப் போகலாமே!

சமச்சீர் கல்வி முறையே அள்ளித் தெளித்த அவசர கதியில் கொண்டு வரப்பட்டது தான்! எல்லாருக்கும் சமமாக எல்லாமே வழங்கி முடித்தாகி விட்டது. கல்வி ஒண்ணு தான் பாக்கி! அடிப்படை சாலை வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா? அடிப்படை மின்சார வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா? அடிப்படை குடிநீர் வசதிகளை தமிழகமெங்கும் சமச்சீராக வழங்கியாகி விட்டதா?

உண்மையிலேயே கல்வியின் மீது அக்கறையிருந்தால் மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்துக்கு இணையான கல்வியாக சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்திருக்க வேண்டும். செய்தார்களா முந்தைய ஆட்சியினர்?

10 மாடிக் கட்டடத்தில் 5 படி கூட ஏற முடியாதவனை 10 மாடியும் ஏற்றுவதற்கு முற்படுவதற்கு பதிலாக 10 படியையும் ஏற முடிந்தவனை, 5 படிகள் தான் ஏற வேண்டும் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். இதற்குக் கல்வியாளர்கள் ஒப்புகை அளித்தார்கள் என்று சப்பைக்கட்டு வேறு! ஏசி ரூமில் முந்திரி பக்கோடா கொறித்துக்கொண்டு நீட்டிய இடத்தில் கும்பிட்டுக் கையெழுத்துப் போடும் கல்வியாளர்களால்தான் தமிழ்நாட்டில் கல்வித்தரம் பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தக் கல்வியாளர்களுக்கெல்லாம் ஒரு பரீட்சை வைத்து யார் யார் நிஜமான கல்வியாளர் என்று கண்டுபிடிக்க ஏதாவது சட்டம் கொண்டுவந்தால்கூடத் தேவலை.

அனைத்து சமூகத்தினருக்கும், அனைத்து பொருளாதாரத் தளங்களிலிருந்து வருவோருக்கும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒரே மாதிரி தான் என்று கொண்டு வாருங்கள். வரவேற்கலாம்! அதை விட்டு விட்டு மெட்ரிகுலேஷன் கல்வி அளவிற்கு அரசுப் பள்ளிகளில் இல்லையாம், அதனால்தான் சமச்சீர் கல்வி என்பது கேலிக்குரிய விஷயம்!

ஐந்தாறு வகை ஆப்பிள் பழங்கள் கடையில் கிடைக்கின்றன. ஏழை மக்களால் விலை உயர்ந்த ஆப்பிளை வாங்கிச் சாப்பிட முடியவில்லை. எனவே இனிமேல் ஒரே விலையாக விலை குறைந்த ஆப்பிள்கள் மட்டும் தான் விற்பனை செய்யலாம் என்றால் எப்படி?!

திமுக ஆட்சியின் கொள்கை, கோட்பாடுகளைப் பிடிக்காமல்தான் மக்கள் ஒட்டு மொத்தமாக அவர்களை நிராகரித்தார்கள். எனவே புதிய தலைமைச் செயலகம், சமச்சீர் கல்வி போன்ற அவர்களின் திட்டங்களை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. முந்தைய திமுக அரசின் அனைத்துத் திட்டங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றில் மக்கள் நலனுக்கு உகந்தது என்பதை விருப்பு வெறுப்பின்றி செயல் படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் கடந்த அரசு செயல்படுத்திய திட்டம் எதையாவது மாற்றினால், ரத்து செய்தால் அந்த அறிவிப்பிலேயே அதற்கான முழு விளக்கத்தையும் கொடுத்தால் மக்கள் மத்தியில் வீணான குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

O

மணல் குவாரிகளில் மணல் அள்ளத் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாடெங்கும் கட்டுமானப் பணிகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. போன முறை ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதாதான் மணல் குவாரிகளை அரசுடமையாக்கினார். அப்படியும் கூட அளவுக்கு மீறி மணல் அள்ளுதல், அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்துதல் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். அம்மா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தடை அமுலுக்கு வந்து விட்டது! மணல் குவாரிகள் மீதான அரசின் தெளிவான பார்வையை உடனடியாக அறிவிக்க வேண்டும். தடை விலக்கப்பட வேண்டும்.

O

சென்னை உட்பட பல இடங்களில் கோடை மழை இரண்டு நாட்களுக்கு முன் பொழிந்தது. ‘அம்மா ஆட்சிக்கு வந்தால் மழை நிச்சயம்’ என்று புளகாங்கிதம் அடைந்தார்கள் அடிப்பொடிகள். தொடர்ந்து புளகாங்கிதம் அடைந்து கொண்டேயிருக்க எல்லாம் வல்ல மழை பகவானை இறைஞ்சுவோம்!

O

மாயவரத்தான்

கனிமொழி, காங்கிரஸ், கருணாநிதி!

க – 4

காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு நீடிக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியே வந்து, திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவில் புயலைக் கிளப்பியபோது கருணாநிதி சொன்ன வார்த்தைகள் இவை. விவகாரம் மெல்ல அடங்கிவிடும் என்றுதான் திமுக தரப்பு நினைத்தது. ஆனால் நிலைமை அத்தனை சுமுகமானதாக இருக்கவில்லை. மேன்மேலும் வலுக்கத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ. ராசா ராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. நாடாளுமன்றம் கொந்தளித்தது. இனி வேறு வழியில்லை என்ற சூழல் வந்தபோது ஆ. ராசா ராஜினாமா செய்தார். பிறகு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதும் அதே வார்த்தைகளைத்தான் திரும்பவும் சொன்னார் கருணாநிதி. சுமூக உறவு.

ஒரு பக்கம், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் வந்தது தொடர்பாக திமுகவின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்துக்குள் சிபிஐ அதிகாரிகள் நுழைந்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர். இன்னொருபக்கம், திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். தர்மசங்கடத்தின் உச்சத்தில் இருந்தபோதும் கருணாநிதியின் வார்த்தைகளில் மாற்றம் இல்லை. சுமூக உறவு.

கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது அதிக தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் கட்சி மிரட்டியது; திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிந்தன; இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சி பட்ட மரம் அல்ல; பச்சை மரம்! ஒரு இலை உதிர்ந்தால் இரட்டை இலை துளிர்க்கும் என்று வெடித்தார் ப. சிதம்பரம். அப்போதும் கருணாநிதி ஆத்திரப்படவில்லை. சுமூக உறவு.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கான முக்கியக் காரணம், காங்கிரஸ் கட்சி தனது சக்திக்கு மீறிய எண்ணிக்கையில் தொகுதிகளை வாங்கிக்கொண்டதும், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதும்தான் என்பது அரசியல் அரிச்சுவடி தெரிந்த அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் மனச்சாட்சி அதை ஒப்புக்கொண்டாலும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை. சுமூக உறவு.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் மகள் கனிமொழி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் திமுகவுக்கு பலத்த நெருக்கடி உருவாகியிருக்கும் இந்தச் சூழலிலும் கருணாநிதியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. சுமுக உறவு.

சுமூக உறவு என்று கருணாநிதி தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்க, “காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை உருவாக்கவும் தெரியும்; சிக்கலைத் தீர்க்க வழிகளும் தெரியும்’ என்று பேசினார் காங்கிரஸ் மூத்த தலைவரான மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதுவும், தொகுதிப்பங்கீட்டுச் சிக்கல் உச்சத்தில் இருந்தபோது. மாநிலக் கட்சிகளை தேசியக் கட்சி எப்படி அணுகும் என்பதற்கு திமுக – காங்கிரஸ் உறவும் அதில் உருவான சிக்கல்களும் பொருத்தமான உதாரணங்கள்.

ஆட்சி பறிபோய்விட்டது; கட்சியின் மீதான நன்மதிப்பு சரிந்துகொண்டிருக்கிறது; தொண்டர்கள் அதிருப்தியில் கிடக்கிறார்கள். இனியும் கருணாநிதியால் சுமூக உறவு என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியுடன் உறவு வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுத்தே தீரவேண்டிய நிர்பந்தம் உருவாகியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான உறவு குறித்து கருணாநிதியின் மனத்தில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எண்பத்தியேழு வயதில் கருணாநிதிக்கு உருவாகியிருக்கும் இதே நிர்பந்தம்தான் பள்ளி மாணவனாக இருந்தபோதும் ஒருமுறை உருவாகியிருக்கிறது. அதுவும் காங்கிரஸ் உறவு தொடர்பானதுதான்.

மாணவர் சம்மேளனம் என்ற அமைப்பில் கருணாநிதி தீவிரமாக இருந்தார் என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் உறுப்பினராக இருந்தபோதுதான் மொழிப்போராட்டத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். அப்போது கருணாநிதியின் மனத்தில் ஒரு சந்தேகம் அல்லது உறுத்தல். சம்மேளனத்தில் காங்கிரஸ்காரர்கள்
அதிகம் இருக்கிறார்கள். ஏற்கெனவே அவர்களுடைய கொள்கையும் நம்முடைய சிந்தனையும் ஒத்துப்போகவில்லை. இந்தித் திணிப்பு கூடவே கூடாது என்று நாம் விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாணவர் சம்மேளனத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்களோ, “தமிழ் வாழ்க! இந்தி வளர்க!’ என்று சொல்கிறார்கள். இது சாத்தியமில்லை. இனியும் காங்கிரஸ்காரர்களுடன் ஒத்துப்போவதில் அர்த்தமில்லை; பலனும் இல்லை. விலகிக்கொள்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று முடிவெடுத்தார் கருணாநிதி. விளைவு, தமிழ் மாணவர் மன்றம் உருவானது. தலைமை, கருணாநிதி. இதன்மூலம் காங்கிரஸ்காரர்களிடம் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக்கொண்டார் கருணாநிதி.

கிட்டத்தட்ட இதே சமயத்தில்தான் சேலத்தில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று உருவாகியிருந்தது. கொள்கை, சிந்தனை, நோக்கம், இலக்கு எல்லாம் கருணாநிதி தலைமையிலான மன்றத்துடன் ஒத்திருந்தது. உடனடியாக அந்த மன்றத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டார் கருணாநிதி. விளைவு, தமிழ் மாணவர் மன்றம், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஓர் அங்கமாக இணைந்துகொண்டது.

1941ல் உருவான தமிழ்நாடு தமிழ் மாணவர்மன்றத்துக்கு அடுத்தடுத்து கிளைகள் உருவாக்கப்பட்டன. திராவிடச் சிந்தனையும் தமிழ் ஆர்வமும் கொண்ட இளைஞர்களின் சங்கமமாக தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் வலுப்பெறத் தொடங்கியது. வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கும் பணியிலும் மன்றத்தைப் பிரபலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டபோதும் தன்னுடைய தனிப்பட்ட எழுத்துப்பணியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை. பகுத்தறிவு, வர்ணாசிரம எதிர்ப்பு என்ற இரண்டையும் மையப்படுத்தியே கருணாநிதியின் எழுத்துகள் இருந்தன. அந்த எழுத்தின் தீவிரம் எப்படிப்பட்டது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரிவாகவே பார்க்கலாம்.

சொந்தப் பத்திரிகைகளில் ஆசைதீர எழுதினாலும் அண்ணா உருவாக்கி, நடத்திவரும் திராவிட நாடு இதழில் தன்னுடைய எழுத்து பிரசுரமாகவேண்டும் என்ற விருப்பம் அவரை உந்தித்தள்ளியது. பெரிய கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டுக் காத்திருந்தார். இளமைப்பலி என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை பிரசுரம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் கருணாநிதிக்கு அளவற்ற மகிழ்ச்சி. அதே உற்சாகத்துடன் அடுத்த கட்டுரை அனுப்பினர். ஏமாற்றம். கட்டுரை பிரசுரம் ஆகவில்லை.

திடீரென வந்துசேர்ந்தது அந்தச் செய்தி. அண்ணா, திருவாரூக்கு வருகிறார்! எப்படியும் இந்தமுறை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் கருணாநிதி. எதிர்பாராத வகையில் அண்ணாவிடம் இருந்தே கருணாநிதிக்கு அழைப்பு வந்தது.இதேபோன்றுதான் முன்பு ஒருமுறை புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடம் இருந்து கருணாநிதிக்கு அழைப்பு வந்தது. தற்போது அண்ணாவிடம் இருந்து அழைப்பு. போய்ப்பார்த்தார். சம்பிரதாயமாக சில கேள்விகளைக் கேட்டார் அண்ணா. முக்கியமான கேள்வி, படிக்கிறாயா?. ஆம் என்றார் கருணாநிதி. எனில், முதலில் படி, பிறகு எழுது என்று சொன்னார் அண்ணா.

தன்னுடைய எழுத்தை மெச்சுவார்; மேலும் எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துவார் என்று நினைத்துக்கொண்டு சென்றிருந்த கருணாநிதிக்கு அண்ணாவின் அறிவுரை அதிர்ச்சியைக் கொடுத்தது. பதில் சொல்ல முடியாமல் விடைபெற்றார். உண்மையில், கதையும் கட்டுரையும் எழுதிக்கொண்டிருந்த கருணாநிதி, நாடகம் என்ற அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது அதன்பிறகுதான். சொல்பேச்சு கேளாத அண்ணாவின் தம்பி.

எழுத்து, பேச்சு, கருத்தரங்கு, பட்டிமன்றம், விவாதம், நாடகம் என்று தமிழ் மாணவர் மன்றம் தொடர்ந்து செயல்பட்டபோதும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அந்த வருத்தம் கருணாநிதியை யோசிக்கச் செய்தது. மன்றத்தைப் பிரபலப்படுத்த வேண்டும் என்றால் இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று, பிரபலமானவர்கள் சங்கத்தில் நுழையவேண்டும். இரண்டு, பிரபலமானவர்கள் சங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும். இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தார் கருணாநிதி.

மன்றத்தின் முதல் ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடவேண்டும்; பிரபலமான மனிதர்களை விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கவேண்டும்; அவர்கள் பேசவேண்டும்; அதன்மூலம் மன்றத்தைப் பற்றி எல்லோரும் பேசவேண்டும். இதுதான் திட்டம்.

பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் அப்போது பல பேச்சாளர்களை உருவாக்கியிருந்தது. பள்ளி – கல்லூரிகளில் இருக்கும் இலக்கிய மன்றங்களில் அவர்களுடைய உரைவீச்சுக்கள்தான். மாணவர் மன்றங்கள் அனைத்திலும் திராவிட இயக்கப் பேச்சாளர்களின் ஆதிக்கம்தான். அதன்மூலம் மாணவர்கள் மத்தியில் திராவிட இயக்கம் மெல்ல மெல்ல ஊடுருவிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட பேச்சாளர்களுள் இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், க. அன்பழகன் போன்றோர் முக்கியமானவர்கள்.

திருவாரூரில் வைத்து நடத்த இருக்கும் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள கே.ஏ. மதியழகன், க. அன்பழகன் உள்ளிட்ட பிரபல பேச்சாளர்களுக்கு அழைப்புவிடுத்தார் கருணாநிதி. வந்தவர்கள் மதியழகனும் அன்பழகனும் மட்டும்தான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துப்பா அனுப்பியிருந்தார். இருவருடைய தமிழ் உரைவீச்சுகளால் மேடை மெருகேறியது. விழா இனிதே நிறைவுற்றது. மறுநொடியே
பிரச்னையும் தொடங்கிவிட்டது. பணம்.

விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை ஊருக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதற்குப் பணம் வேண்டும். பற்றாக்குறை. கண்ணில் அகப்பட்டவர்களிடம் எல்லாம் கேட்டார். ம்ஹூம். ஒன்றும் தேறவில்லை. சட்டென்று நினைவுக்கு வந்தது அந்தச் சங்கிலி. சில மாதங்களுக்கு முன்புவரை கருணாநிதி கழுத்தில் போட்டிருந்த சங்கிலி. வளையம் ஒடிந்துவிட்டதன் காரணமாக, கழுத்தில் இருந்து நகைப்பெட்டிக்குத் தாற்காலிகமாகக் குடியேறியிருந்தது. அங்கிருந்த சங்கிலியை அடகுக்கடைக்கு இடமாற்றம் செய்தார் கருணாநிதி. கிடைத்த பணத்தைக் கொண்டு விழாவுக்கு வந்தவர்களை ஊருக்கு அனுப்பிவைத்தார்.

நாள் முழுக்க எழுத்தையும் மன்றத்தையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கருணாநிதி, பள்ளிப்படிப்பை விட்டு வெகுதூரம் சென்றிருந்தார். படிப்பு என்றால் கருணாநிதிக்கு குடி அரசுவும் திராவிட நாடும் மட்டும்தான். அதில் வெளியாகும் கட்டுரைகள். செய்திகள். தலையங்கங்கள். இவைமட்டும்தான். விளைவு, தேர்வுகளைச் சரியாக எழுதமுடியவில்லை. தோல்வி. அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று நினைத்தார். முடியவில்லை. மீண்டும் தோல்வி. மூன்றாவது வாய்ப்பு. அதுதான் இறுதிவாய்ப்பும்கூட. நிச்சயம் வெற்றிபெற்றே தீரவேண்டும்; இல்லாவிட்டால் பள்ளிப்படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்துவிடும். கருணாநிதியைத் தோல்விகள் துரத்தின. பள்ளிப்படிப்புக்கு இனி வாய்ப்பில்லை என்ற நிலை உருவானபோதுதான் அண்ணா கொடுத்த முதலில் பஐ, பிறகு எழுது என்ற அறிவுரை கருணாநிதியின் நினைவுக்கு வந்தது. இனி வருந்திப் பலனில்லை என்பதால் பத்திரிகைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் கருணாநிதி.

மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார் அல்லவா. அது காலஓட்டத்தில் அச்சுப்பத்திரிகையாக மாறியது. ஆனாலும் அதைத் தொடர்ந்து நடத்தமுடியாத சூழல். இடைவெளி விழுந்துவிட்டது. கொஞ்சம் பணத்தைத் திரட்டி மீண்டும் அந்தப் பத்திரிகைக்கு உயிர் கொடுத்தார். புதிய பெயரையும் கொடுத்தார்.

முரசொலி!

(தொடரும்)

O

ஆர். முத்துக்குமார்

லூஸ்ல விடு!

கல்லூரியில் ஜென் வகுப்பு. ப்ரொஃபஸர் சுவாரஸ்யமாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். ‘பு ஜி-ன்னா என்ன தெரியுமா?’

‘புஜ்ஜி-ன்னா தெரியும் சார்’ என்றான் ஒரு குறும்புப் பையன். ‘எங்கம்மா என்னை அப்படிதான் கொஞ்சுவாங்க!’

ப்ரொஃபஸர் கோபப்படவில்லை. ‘புஜ்ஜி இல்லை, பு ஜி’ என்றார். ‘ஜென் மாஸ்டர் ரின்ஜாய் அடிக்கடி சொல்லிப் பிரபலப்படுத்தின வார்த்தை இது, அப்டீன்னா, செயல் எதுவும் இல்லாத வெற்றிடம்-ன்னு அர்த்தம்!’

‘வெட்டியா உட்கார்ந்திருக்கறது, அப்படிதானே சார்?’ யாரோ பின் வரிசையிலிருந்து இப்படிக் கேட்டதும் வகுப்பில் சிரிப்பலை.

’இல்லை’ என்றார் ப்ரொஃபஸர். ‘ஜென் தத்துவம் சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கறதில்லை, இயற்கையோட போக்குல நம்மோட செயலைக் கலந்துடச் சொல்லுது, அப்போ அந்தச் செயல் தனியாத் துருத்திகிட்டுத் தெரியாது. அதான் பு ஜி!’

‘அது எப்படி சார் முடியும்?’ என்றான் ஒரு பையன். ‘மத்த ஜென் தத்துவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது, ஆனா இந்த பு ஜி எதார்த்தத்தில சாத்தியமே இல்லை-ன்னு நினைக்கறேன். நாம எதைச் செஞ்சாலும் அதைச் செய்யறோம்-ங்கற உணர்வு நமக்குள்ள இருந்துகிட்டுதானே இருக்கும், அதை மறக்கடிக்கறது எப்படி?’

‘நாமே வலிய உட்கார்ந்து அதை மறக்க முயற்சி பண்ணினா சிரமம், ஆனா அந்த எண்ணமே நமக்கு வராதபடி தடுத்துட்டா சுலபம்’ என்றார் ப்ரொஃபஸர்.

’அதான் எப்படி?’

‘நீ எப்படி நடக்கறே? எப்படி மூச்சு விடறே? அதைப்பத்தியெல்லாம் என்னிக்காவது யோசிச்சதுண்டா? அதுபாட்டுக்குத் தானா ஆட்டோபைலட்ல நடக்குது. இல்லையா?’

‘அ-ஆமா!’

’அதைத்தான் பு ஜி-ன்னு சொல்றார் ரின்ஜாய்’ என்று முடித்தார் ப்ரொஃபஸர். ‘சுவாசம்மாதிரி, நடைமாதிரி, கை அசைவுகள் மாதிரி நம்மோட ஒவ்வொரு செயலும் இயற்கையோட ஒன்றிப்போயிடணும், அதைச் செஞ்சுகிட்டிருக்கோம்-ங்கற நினைப்பே எழக்கூடாது. அதுதான் பர்ஃபெக்ட் ஜென் வாழ்க்கை!’