அண்ணாவித்தனம் சில பேருக்கு சுபாவமாகவே வரும். இதுவே அரசாங்கம் என்றால் கேட்கவே வேண்டாம்.
லாடன் பிள்ளை ஒசாமாவை ஓசைப்படாமல் கொன்று விட்டுச் சடலத்தைக் கடலில் எறிந்து ஒரு மாதமாகிறது. பாகிஸ்தானில் ஒசாமா அபடாபாதில் வருடக் கணக்காக சுகஜீவனம் நடத்தி வந்தது அந்த நாட்டு மக்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்த சங்கதி என்றாலும் பாகிஸ்தான் அரசாங்கம் மட்டும் மெய்யாலுமா, தெரியாதே என்று ஒரேயடியாக ஆச்சரியப் பட்டது.
பாகிஸ்தானில் உலகத் தீவிரவாதிகள் கூட்டு மாநாடு நடத்தினால் என்ன? மாசாந்திரக் கணக்குக்கு காலையில் காப்பிக்கு எருமை மாட்டுப்பால், தள்ளு வண்டியில் புத்தம்புதுக் காய்கறி, மீன், சினிமா கிசுகிசுவோடு வாசலில் வந்து விழுகிற ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள் என்று வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களோடு சகல விதமான பயங்கரவாதிகளும் குடியும் குடித்தனமும் இருந்தால் என்ன? அடிக்கடி கவிழ்ந்து புதிதாக நிமிரும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். அதுவும் அமெரிக்க அண்ணாவி ‘விட்டுத் தள்ளுங்க’ என்று சிபாரிசு செய்து விட்டு அதையும் கடந்து அப்பால் போகும்போது.
தீவிரவாதத்தைக் களையெடுக்க பாகிஸ்தானுக்கு ஒரு நடை போய்விட்டு வரலாம் என்று அமெரிக்கா முடிவெடுத்து, போனோம் வந்தோம் என்று அங்கே விமானத் தாக்குதல் நடத்தியதும் லாடனை லாடம் கட்டியதும் நாம் எல்லோரும் கேள்வி கேட்காமல் காதில் போட்டுக் கொண்ட செய்தி. வேறு தீவிரவாதிகள் யாராவது அந்த அமைதிப் பூங்காவில் தட்டுப்பட்டால் நோகாமல் பிடிக்க அமெரிக்கா அவ்வப்போது ராவல்பிண்டிக்கு மேல் போர் விமானத்தில் ரவுண்ட் அடித்து ரோந்து சுற்றும் என்றும் பெரிய மனதோடு சொல்லியிருக்கிறது.
நாலு அமெரிக்கக் குடிமக்களில் மூணு பேர் பாகிஸ்தானுக்கு அவ்வப்போது நிதி உதவி என்று பணம் அழுவதை நிறுத்தித் தொலைக்கலாம் என்று சொன்னாலும், ஒபாமா பூடகமான புன்னகையோடு காசு தருவதை நிறுத்தவே இல்லை. போதாக்குறைக்கு அவருடைய பாரின் செக்ரட்டரி பாகிஸ்தானுக்கு வழங்கியது வழமையான க்ளீன் ஷீட் – ‘clean chit’ என்பது அப்படித்தான் உச்சரிக்கப்பட வேண்டுமாம். நன்னடத்தை சர்ட்டிபிகேட் கொடுத்து ‘நான் பார்த்துக்கறேன்.. போங்க’ என்ற நல்ல மனது அண்ணாவித்தனத்தோடு நிதி உதவி தொடர்கிறது.
ஆக, கூடவே ஈஷிக்கொண்டு குழி பறித்தாலும் அமெரிக்காவுக்கு பாககிஸ்தான் செல்லப் பிள்ளை. இந்தியாவோடு பேசும்போது மட்டும் அமெரிக்க முகம் மாறிவிடும். குரலும் அதிகார பூர்வமான இயந்திரத்தனத்தோடு கேட்க ஆரம்பித்து விடும். பாகிஸ்தான் பற்றி அன்பான அண்ணாவித்தனம் வெளிப்படுத்துவது வாடிக்கை என்றால் இந்தியா பற்றி ‘எழவெடுத்த கோடிவீட்டுக்காரன்’ போல ஏனோ தானோ என்று அது வெளியாகும். ஆதிநாள் சோவியத் யுக குரோதம் இது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா போனால் முழு உடம்பும் தெரிய ஸ்கேன் செய்து அவரை விமானத்துக்குள் அனுப்பி, அந்தப் புகைப்படத்தை தாராளமாகப் பகிர்ந்து கொள்ளவும் தயங்க மாட்டார்கள். புடவையணிந்த இந்தியத் தூதர் மீரா சங்கர் மிசிசிப்பிக்கு விமானம் ஏறினாலும், பெண் காவலர்கள் உடம்பு முழுக்கத் தட்டித் தடவிப் பரிசோதித்துத்தான் ப்ளேன் ஏற அனுமதிப்பார்கள். நாளைக்கே பாதுகாப்பு கருதி மன்மோகன் சிங்கின் தலைப்பாகையைப் பிரித்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
இதையெல்லாம் நாலு இங்கிலீஷ் பத்திரிகையில் எழுதுவார்கள். இந்திய அரசு அமெரிக்க தூதரை வெளியுறவு அமைச்சரகத்துக்கு வரவழைக்கும். டீயும் பிஸ்கட்டும் கொடுத்து உபசரித்து ‘நீங்க பண்றது சரியில்லே’ என்று சொல்லி அனுப்புவார்கள் இங்கே இருக்கப்பட்ட வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் இன்ன பிறரும். மேம்போக்காக அமெரிக்க அரசு வருத்தப்பட்டு வைக்கும். இதனால் இந்தியா-அமெரிக்கா நட்புறவு பாதிக்கப்படாது என்று யாரும் கேட்காமலேயே திட்டவட்டமாக அறிவிப்பதோடு கருமாதிக் கடுதாசி முடியும். மோனிகா லெவின்ஸ்கி போல், ஒபாமா அலுவலகத்தில் பயிற்சிக்கு சேர்ந்த இளவட்டம் யாராவது வெளியிட்டதாக இருக்கும் அது. பயிற்சியின் ஒரு பகுதியாக இப்படியான ஒரு டெம்ப்ளேட் கடுதாசி எழுதி இந்தியாவுக்கு அனுப்புவதற்கு அவங்களுக்கு ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.
பிரபலங்களை எப்படி வேண்டுமானாலும் அவமதித்துக் கொள்ளட்டும். ஆயுசோடு இருக்கும் பட்சத்தில் அவர்கள் அரசாங்கம் மூலம் பேருக்காவது நீதி கிடைக்கப் போராடுவார்கள். வெற்றி கிடைக்காவிட்டால் என்ன. நாலுநாள் பத்திரிகையில் பெயர் வருமே. ஆனால் குடிமக்கள்? இந்த அண்ணாவித்தனத்தில் அதிகம் அவதிப் படுகிறது அவங்க தான். அவங்க நிலைமை என்ன?
ரிடையர் ஆகி அக்கடா என்று வீட்டோரு இருக்கப்பட்டவர்களை அமெரிக்காவில் இருக்கப்பட்ட பிள்ளையோ பெண்ணோ வருந்து வருந்தி கூப்பிட்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அமெரிக்கா வரவழைப்பார்கள். ரெண்டு பேரும் வேலைக்குப் போவதால் கட்டணம் இல்லாமல் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள முந்தின தலைமுறையின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. இல்லாவிட்டாலும் பிரதியுபகாரம் கருதாத அன்பு அழைப்புகளும் உண்டு. ஏற்றுக் கொண்டு ‘கனாட்டிகட்லே மாப்ளே வந்து கூட்டிண்டு போறேன்னு இருக்கார்.. புதுசா கார் வாங்கியிருக்காராம்; என்று பறந்து போய் இறங்கியதும், ஏர்போர்ட் இமிகிரேஷன் அலுவலர்களை இவர்கள் முதல் காரியமாக நம்ப வைக்க வேண்டும்.
கனக்டிகட் மாப்பிள்ளை கார் பற்றி இல்லை, இவர்கள் பூர்வோத்திரத்தை.
அதாவது, அமெரிக்காவில் செட்டில் ஆகி, உயிரை விடும்வரை இருப்பது உத்தேசமில்லை என்றும், ஊரில் எண்ணூத்து சில்லறை சதுர அடி ப்ளாட், கும்பாபிஷேகக் கமிட்டி, பூங்காவில் காலாற காலை நேரத்தில் டிரவுசர் மாட்டிக்கொண்டு நடை, பக்கத்து ப்ளாட் வம்பு, டிவியில் வேளுக்குடி கிருஷ்ணன் தொடர் சொற்பொழிவு போன்ற சமாசாரங்களுக்காகத் திரும்பிப் போயே தீர வேண்டும் என்றும் அவர்களை நம்ப வைத்தால் தான் நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கலாம். குடைகுடை என்று குடைந்து தள்ளிவிடுவார்கள் சில அதிகாரிகள்.
அண்ணாவித்தனமான இந்த மாதிரி விசாரிப்புகளுக்கு ஈடு கொடுப்பதைப் பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். வெறுத்துப் போய், ‘ஏன் என்னை பயங்கரவாதி போல நடத்துறீங்க’ என்று இன்னொரு பிரபல சீனியர் எழுத்தாளர் சீறியபோது, பயங்கரவாதி என்ற ஒரே வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்கி அவரை மேலும் கஷ்டப்படுத்தி அனுப்பியதும் நடந்ததுதான்.
இந்த வாரம் நியூயார்க்கில் காட்டப்பட்டது இன்னொரு மாதிரியான அண்ணாவித்தனம். பள்ளிக்கூடத்தில் படிக்கிற இந்திய இளம்பெண் கிருத்திகா பிஸ்வாஸ். ஆசிரியருக்கு ஈ-மெயிலில் ஆபாச அஞ்சல் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு. எந்த விசாரணையும் இல்லாமல் பள்ளி நிர்வாகம் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணை போலீசில் ஒப்படைத்துவிட்டது. பெற்றவர்களுக்குக்கூட இது பற்றித் தகவல் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் பெண்ணின் அப்பா இந்திய தூதரக உயர் அதிகாரியாக நியூயார்க்கில் இருப்பவர்.
விசாரணைக்கு இட்டுப்போன இந்தப் பெண்ணை போலீஸ் கையில் காப்பு மாட்டி இருபது பேர் இருந்த நெரிசலான ஒரு அறையில் நாளெல்லாம் உட்கார வைத்தது.
டாய்லெட் வசதி கூட இல்லாத இடத்தில் அத்தனை பேரும் பார்க்க அவள் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம். குடிக்கத் தண்ணீர் கேட்டால் ஒரு தொட்டியைக் காட்டினார்கள். கைது செய்யப்பட்ட யாரோ அதில் வாந்தி எடுத்து வைத்திருந்தார்கள். சத்தியமாக இது அமெரிக்காதான். என்.ஒய்.பி.டி சீரியல் சுவாரசியமாகப் பார்க்கிறோமே, இதுவும் அதே நியூயார்க் போலீஸ் டிபார்ட்மெண்ட்டின் அவமானகரமான எபிசோடு தான்.
அந்தப் பெண் குற்றமற்றவள் என்று நிருபணம் ஆகி வெளியே வருவதற்குள் அவள் மனத்தளவிலும் உடலளவிலும் பட்ட துன்பத்தை ஒரு தந்தை என்ற முறையில் எண்ணிப் பார்க்க நெஞ்சு வலிக்கிறது. ‘தூதரக ஊழியர் குடும்ப உறுப்பினர் என்பதற்காக சலுகை காட்ட முடியாது’ என்று விஷயத்தை திசை திருப்ப நாலாந்தர அரசியல்வாதி போல் அமெரிக்க அதிகாரிகள் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல் இருக்கிறது.
போபாலில் ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையோடு விளையாடிய யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவரான அமெரிக்க கோடீசுவரர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவில் கைதான போது அந்தக் கொலைகாரனை சகல அரசு மரியாதைகளோடும் தனி விமானத்தில் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தவர்கள் நாம். அண்ணாவித்தனமாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் தொலைபேச, இந்திய அரசு நடுநடுங்கி செய்த ஈனத்தனமான காரியம் அது.
இந்த முறை இந்திய அரசு என்ன செய்யப் போகிறது? கண்டனம் தெரிவித்துக் கதையை முடித்து விடும். அதுக்கு மேல் செய்ய நாம் என்ன அண்ணாவிகளா?
O
பாதல் சர்க்கார் இறந்து போய்விட்டார். ஆறு வருடம் முன் லண்டன் வால்த்தம்ஸ்டோவில் நண்பர் அம்ஷன்குமார் பாதல் சர்க்கார் பற்றி எழுதி இயக்கிய ஆவணப் படம் பார்த்த கதையை ஆர்வமுள்ளவர்கள் பழைய ‘திண்ணை’யில் பொறுமையாகத் தேடிப் படித்துக் கொள்ளவும்.
பாதலுக்காக நினைவுக் கூட்டம் நடத்தி அந்தப் படத்தைத் திரையிடலாமே என்றேன் அம்ஷனிடம். பிரளயன் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னதோடு கரிசனமாக அழைப்பும் அனுப்பி வைத்திருந்தார்.
சர்க்கார் எனக்கு முதலில் கோ.ராஜாராம் மொழிபெயர்த்து என் ஆசிரியர் கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடாக வந்த ‘மற்றொரு இந்திரஜித்’ மூலமாகத்தான் அறிமுகமானவர். அவருடைய நாடகங்களை ஜெயந்தனின் நாடகங்கள் போல் படிப்பது எனக்கு ரசனைக்குரியதாகத் தெரிகிறது. நாடகமாக நடத்தும்போது அறிவுஜீவிதச் செயற்கை தெரிகிறதாகச் சொன்னால் ஞாநி ஆட்சேபிப்பார்.
மூன்று பக்கம் திரை வைத்து மூடி நான்காம் பக்கம் பார்வையாளர்களைப் பார்த்துத் திறந்து அவர்களிடமிருந்து கொஞ்சம் போல் விலகி எல்லோரும் பார்க்கிற உயரத்தில் அமைந்திருக்கிற மரபு சார்ந்த ப்ரொசீனியம் அரங்கை பாதல் சர்க்கார் ஒதுக்கி வீதிக்கு வந்ததுக்குக் காரணம் அவர் நாடகத்தை மக்களுக்கு நெருக்கமாக எடுத்துப் போக மரபு அரங்கம் போதாமல் இருந்தது என்கிறார்கள்.
பாதலின் உடல்மொழி அரங்கம் (பாடி தியேட்டர்) ஏகமாக சிலாகிக்கப்படுகிறது. அதீத உடல்மொழிதான் இந்த உடல்மொழி அரங்கத்தின் உச்சமாக எனக்கு மனதில், கண்ணில் பட்டது. ஆவணப் படம் மூலம் நாடகக் காட்சிகளைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்ச்சியாகவும் அது இருக்கலாம். பாதலின் நிறுவன எதிர்ப்புக்கு இந்த அதீதம் எந்த விதத்தில் துணை போனதோ தெரியாது.
ஆட்டத்தோடு கூடிய நாட்டுப் பாடல், கால் இடுக்கில் கொட்டு வைத்து வாசித்துக்கொண்டு பிரவேசம், கைக்குட்டையை சுழற்றி ஊய் ஊய் என்று சத்தம் போட்டு ஹெலிகாப்டரை உருவகப்படுத்துவதான (கிட்டத்தட்ட) டம்ப் ஷாரட், ஒரே வசனத்தை ஏழெட்டு தடவை எல்லோரும் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல் உச்சரிப்பது, பைஜாமா ஜிப்பாவோடு நாடக ஆசிரியர் திடீரென்று குறுக்கே புகுந்து, ஊர்வலம் வந்துட்டு இருக்கு என்று சொல்லிவிட்டுப் போவது என்று இந்த பாடி தியேட்டரும் நாடக ரசிகனை நாடக வெளிக்கு உள்ளே வர ஒட்டாமல் தடுத்துவிடும் அபாயம் இருக்கிறது.
பாதல் நாடகத்தில் பாட்டு இருக்கிறது. உண்மைதான். ஆனால் அவரே சொல்கிறார் – எங்கள் நாடகங்களை விரும்பிக் கூப்பிட்ட கிராம மக்கள் பாட்டுகள் அமைந்த நாடகங்களோடு வரச் சொன்னார்கள். பாட்டுக்காக நாடகம் என்பது எழுதியவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால் பார்வையாளரை அதுதான் இழுக்கிறது. சோதனை நாடகம் பழகிய பாதைக்குத் திரும்பப் பயணிக்க பார்வையாளர்களின் பிரதியாக்கம் காரணமாகிறது என்று இண்டலெக்சுவல் கல்குவாரி உடைத்து ஒரு லோடு அடிக்க நான் தயார்.
உத்தியில் இல்லை நாடகம், மனதில் இருக்கிறது என்று தோன்றுகிறது. மக்கள் கலைஞர் கத்தாரின் இசை நிகழ்ச்சிகளுக்கும் பாதல் சர்க்காரின் பாட்டோடு கூடிய பரீட்சார்த்த நாடகங்களுக்கும் என்ன வேற்றுமை? கத்தார் இப்படி அறிவு ஜீவிதத் தன்மையோடு அரங்கில் நடித்தது இல்லை என்பது தவிர. சண்டை பிடிக்க வருகிறவர்கள் கத்தாரின் ‘பத்ரம் கொடுகோ’ பாடலைக் கேட்டுவிட்டு வரலாம்.
உடல்மொழி அரங்கத்தோடு எனக்கு எந்த விரோதமும் இல்லை. ப்ரோசினியம் தியேட்டரின் சாத்தியக்கூறுகளை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது அதை விட அல்லது அதே தரத்தில் முக்கியமானதாகத் தோன்றுகிறது. சாம்யுவெல் பெக்கட்டின் ‘கோடாவுக்காக காத்திருந்தல்’. டென்னசி வில்லியம்ஸின் ‘பல்லி ராத்திரி – நைட் ஆப் தி இகுவானா’, ஹெரால்ட் பிண்டரின் ‘பிறந்த நாள்’ போன்ற ஆங்கில நாடகங்களைத் தொடர்ந்து பார்க்கக் கிடைத்த அனுபவம் என்னை ப்ரோசீனியம் தியேட்டர் பக்கமாகத்தான் மேலும் நகர்த்துகிறது.
பாதலுக்கு அஞ்சலி செலுத்த இந்தச் சிந்தனைகள் எதுவும் குறுக்கே நிற்காது.
O
ஸ்காட்லாந்தில் நாடக மேடையில் மொட்டைக் கட்டையாக ஒரு காட்சியிலோ நாடகம் முழுவதுமோ வந்தால் தப்பே இல்லை. நியூட் தியேட்டர் ரசனையைப் பொறுத்த ஒன்று. ஆனால் மேடையில் விண்ஸ்டன் சர்ச்சிலாகத் தோன்றி சுருட்டுப் பற்ற வைத்தால் ஓரமாகக் காத்திருக்கும் போலீஸ்காரர்கள் பிடித்துப் போய் வழக்குப் போட்டு விடுவார்கள். மேடையில் புகைபிடிப்பது மாபெரும் குற்றம்.
இந்தியாவில் சுருட்டோ சிகரெட்டோ மேடையில் பிடிக்கத் தடை ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. முப்பது வருடம் முன்னால் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள் நடுவே ஒரு இடைவேளை அறிவித்து விட்டு, வடக்கே இருந்து வரும் உஸ்தாத்கள் நடுமேடையில் ஹூக்கா பற்ற வைத்து லயத்தோடு புகை வலிப்பார்கள். நம் வித்வான்கள் லாகிரி வஸ்து பக்கமே – மேடையில் இருக்கும்போது மட்டுமாவது- போவதில்லை என்று பொதுவான கருத்து. அதிலும் சம்பிரதாயமாகப் பாடுகிற சிலர் வெள்ளி கூஜாவில் நாலு மடக்கு விஸ்கியோ பிராந்தியோ எடுத்துப் போய் தம்புரா போடுகிற சிஷ்யன் எவர்சில்வர் டம்ளரில் வார்த்துக் கொடுக்க, அங்கவஸ்திரத்தால் முகத்தை மூடி ஒரே கல்பில் குடித்து முடித்துவிட்டு நிதிசால சுகமா கீர்த்தனை பாட ஆரம்பிப்பார்கள் என்று இன்னும் சுழன்று கொண்டிருக்கும் வதந்திகள் உண்டு. நம்ப முடியாவிட்டாலும் ரசமானவையே அவையெல்லாம்.
நாடக மேடையில் புகைவலி, லாகிரி வஸ்து உபயோகிப்பது, நக்னம் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பார்வையாளர்களைப் பற்றி யாராவது யோசித்ததுண்டா?
போன மாதம் கனடா றொறொண்றோவில் (என்ன செய்ய, இப்படி எழுதினால் தான் எனக்கே புரிகிறது) ‘இஷ்டப்பட்டால் உடுத்தி வரலாம்’ சலுகையோடு மோண்ட்பார்ன்ஸே என்ற பிரஞ்சு நாடகம் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. முக்கிய பாத்திரங்கள் கிட்டத்தட்ட நாடகம் முழுக்க பிறந்த வண்ணம் தோன்றி ஓவிய மேதைகளான பிக்காசோவாகவும், பாஸ்கினாகவும், மார்க் சகால் ஆகவும் நடித்த நாடகம் இது. இவங்க எப்போ பிறந்த மேனிக்கு இருந்தாங்க என்று கேட்க வேணாம் – ஸ்பெயின், பிரஞ்சுக்காரர்களாக இருந்தாலும், வாழ்க்கையில் ஒரு தடவையாவது குளித்திருக்க மாட்டார்களா என்ன?
கதாபாத்திரங்களே காற்றோட்டமாக வரும்போது பார்வையாளர்களும் அப்படியே வந்தால் என்ன என்று யோசித்து பேஸ்புக்கில் குழு ஆரம்பித்து ஆதரவு திரட்டினார்கள். ‘பிரிட்டீஷ் புது மணப்பெண் இளவரசி கேட் மிடில்டனின் தங்கை பிப்பா மிடில்டன் பிருஷ்ட ரசிகர் சங்கம்’ போன்ற அமைப்புகள் நிறைந்த பேஸ்புக்கில் இவர்களுக்கு ஆதரவுக்கு என்ன பஞ்சம்?
நாடகம் அவை நிறைந்து பாஸ் முராலே அரங்கில் நடத்தப்பட்டதாகத் தகவல். நாடகம் பார்க்க வந்தவர்கள் தவறாமல் ஆளுக்கொரு துண்டோடு வந்தார்களாம். உடுத்துக் கொண்டு இல்லை. ஆசனத்தில், சரி, இருக்கையில் விரித்து அதன் மேல் இருந்து நாடகம் பார்த்து ரசிக்க. நாடகம் முடிந்ததும் எல்லா இருக்கையையும் சுத்தமாக அலம்பி விட எவ்வளவு தண்ணீர் செலவழித்தார்களோ தெரியவில்லை. ப்ரோசீனியம் தியேட்டரில் இதுவும் ஒரு நன்மை பாருங்கள்.
ஆடலும் பாடலும் அன்றே முடிந்தது
கூடலும் சீக்கிரம் காணலாம் – மேடையில்
தேடல் தொடரும் திரையுயர நக்னமாய்
நாடகம் பார்க்கநீ வா
O
இரா.முருகன்