பால்கனி முத்தம்

கேட்டி என்றழைக்கப்படும் கேத்தரீன் மிட்டில்டன் என்ற அந்தப் பெண்ணின் கல்யாணம், உலகே உற்றுப் பார்த்த காஸ்ட்லியானதாக கல்யாணம். கல்யாண செலவுகளைக் கழித்து கல்யாணத்திற்கு லீவு எடு கொண்டாடு என்பதினால் மட்டுமே பிரிட்டனுக்கு ஐந்து பில்லியன் பவுண்டு பாழாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[கிட்டத்தட்ட 2 லட்சம் 2G]

மாமியாரைப் போலவே, ஒரு குடிமகள், கோமகளாவது, முப்பது வருடங்களுக்குப் பிறகு நடந்திருக்கிறது என்பதை விட இப்படி நடப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்பது இந்த கல்யாணத்தை  வரலாற்று சிறப்பு மிக்கதாக்கலாம். சர்வாதிகாரிகளை எல்லாம் சுவாஹா செய்யும் இந்தக் காலத்தில் மன்னராட்சி மகுடம் எல்லாவற்றையும் மண்ணாக்க வேண்டும் என குரல் வலுத்துக் கொண்டிருப்பது தான் காரணம்.

கோக்குமாக்கான இது போன்றவற்றை விட்டு விட்டு கோலோகலமான கல்யாண கொண்ட்டாட்டக் கதைகளை இனி பார்க்கலாம்.

டிவிட்டர், ப்ளிக்கர், ஃபேஸ்புக், யூடூப், தனி வெப்சைட்,5 டாலருக்கு கல்யாண அப்ளிகேஷன் என தனிமனிதர்கள் பலரைத் தொட்ட முதல் டிஜிட்டல் அரச கல்யாணம்.

இப்படி சோஷியல் நெட்வொர்க்களில் கல்யாணத்தைப் பற்றி பல விஷயங்கள் பரவலாக பரப்ப பட்டிருந்தாலும் பொத்தி பொத்தி மிகவும் இரகசியமாக வைக்கப்பட்ட சமாசாரம், மணப்பெண்ணின் கல்யாண உடை. அது எப்படி இருக்குமென  மாப்பிள்ளை வில்லியம்முக்கே தெரியாமல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜா படத்து வெள்ளை உடை தேவதை போல வந்திறங்கிய கேட்டியைப் பார்த்து வில்லியம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க என்று சொன்னதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனால் ஆ வென பல பெண்களை வாய் பிளக்க வைக்கும் சமாசாரம் ஒன்று உண்டென்றால் அது கேட்டியின் மேக்கப். பார்லருக்கு எங்கும் செல்லாமல் அவரே செய்து கொண்டது! இது தெரிந்த நமக்கு தெரியாத விஷயம், அவர் மேக்கப்பிற்கு எடுத்துக் கொண்ட நேரம்!

அதே போல், எதிர்கால மனைவியிடம் வழிந்த கையோடு, அவள் கைப்பிடித்து வந்த மாமனாரிடம், ”சின்ன பேமிலி பங்ஷன்” என இளவரசர் வில்லியம் சொன்னது மாப்பிள்ளை ஜோரில் சேர்த்தியா என்பதும் நமக்கு புரியாத ஒன்று.

கேட்டியின் கல்யாண உடைக்கு அடுத்தப் படி அனைவரின் கண்ணைப் பறித்த அயிட்டம், பெண் தோழியான கேட்டியின் தங்கை, பிப்பா. பிப்பாவை யப்பா எனப் பார்த்து வழிந்த ஜொள், பல லிட்டர் இருக்கும். அவருக்கும் மாப்பிள்ளைத் தோழரான வில்லியம்மின் தம்பி ஹாரிக்கும் பத்திக்கும் என பெட் கட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.!

லண்டனின் சொல்லாமல் கொள்ளாமல் மழை வந்து விடும். மழை வந்து கொண்டாட்டத்தைக் கெடுத்து விடுமோ என கல்யாணத்தைக் காண வந்திருந்த மில்லியன் மக்களும் ரெயின் ரெயின் கோ அவே பாடியிருப்பார்கள் போல. மழை எட்டிப்பார்க்கவில்லை.

எல்லாருக்கும் மேலாக வில்லியம் மிக சந்தோஷப்பட்டிருப்பார். கல்யாணத்திற்குப் பிறகு முதன் முறையாக தன் அதிகாரபூர்வ வீட்டிற்கு கமான் கேட்டி எனத் திறந்த காரில் கூட செக்யூரிட்டி யாருமில்லாமல் கூட்டிப் போனார். காரின் நம்பர் பிளேட் JU5T WED. சரியான சினிமாத்தனம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பைலட் மனைவியை முதல்முறையாய் காரில் கூட்டிப் போனார் என்ற அவச் சொல்லுக்கு ஆளாகி விடக் கூடாது என வில்லியம் வேலை செய்யும் விமானத் துறை நினைத்ததோ என்னமோ, காரை பின் தொடர்ந்து வானத்தில் விமானங்களைப் பறக்க விட்டனர்.

இந்த விமானங்களை விட வெயிட்டான மேட்டர் என்னவெனில், வானத்திலிருந்து வந்த வாழ்த்துச் செய்தி தான். வாழ்த்தியது வானத் தூதர்களல்ல. கல்யாணத்திற்கு முந்தைய நாள் இங்கிலாந்து மேல் பறந்த விண்வெளிக் கலத்திலிருந்த விண்வெளி வீர்ர்கள்.

கட்டிங், பிரியாணி, விருந்து என எதுவுமில்லையென்றாலும் பரவாயில்லை என கல்யாணத்திற்கு மில்லியன் மக்கள் வந்திருந்தாலும் அதிகாரபூர்வ அழைப்பு 1900 பேருக்கு மட்டும் தான். ஒரு மில்லியன் மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஸ்வாசிலாண்ட் என்ற ஊர், சாரி நாட்டின் மன்னரும் இந்த 1900 பேரில் ஒருவர். இது எங்கே இருக்கிறது என்பது திருமண தம்பதிகளுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. இவரை எல்லாம் கூப்பிட்ட அரச குடும்பம், அம்மாம்பெரிய அப்பாடக்கர் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வின்னர் ஒபாமாவைக் கூப்பிடவில்லை!

வில்லியம் பட்டத்து வாரிசு இல்லை ஆகையால் இது அரச கல்யாணமில்லை, அதனால் அவரைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை எனக் காரணம் சொல்கிறார்கள். இல்லை ஒரு வேளை, ஒபாமாவின் அமைச்சரவையில் இருக்கும் ஹில்லாரியே அவரின் மகள் கல்யாணத்திற்கு ஒபாமாவைக் கூப்பிடவில்லை நாம் ஏன் கூப்பிட வேண்டும் என நினைத்திருப்பார்கள் போல. ஓபாமாவைக் கல்யாணத்திற்கு கூப்பிடுவதில் எல்லாருக்கும் என்ன கஷ்டமோ! அங்கு அவருக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் கிப்ட் செலவு ஏன் வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்  கூடக் காரணமாயிருக்கலாம்.

ஒபாமாவைக் கூப்பிடாவிட்டாலும் பக்கத்து அயர்லாண்டில் ஒரு கத்தோலிக்க கார்டினலைக் கூப்பிட்டிருக்கிறார்கள். கத்தோலிக்கர்களுக்கு அரியணை ஏறும் உரிமையில்லை என சட்டம் இயற்றி வைத்திருக்கும் பிரிட்டன் அரச குடும்பத்து கல்யாணத்துக்கு ஒரு பெரிய ஐரிஷ் பிஷப் வருவது இதுவே முதல் முறை.

அன்று டயானா சார்லஸ் கல்யாணத்தைப் பார்க்க கூட்டத்தோடு கூட்டமாய்  இரவோடிரவாய் இலவு காத்த கிளியாய் காத்திருந்தவர்களில் ஒருவர் இன்று பிரிட்டனின் பிரதமர். அன்று கூட்டத்தில் தானே பார்த்தீர்கள், இன்றும் அப்படியே பாருங்கள் என சொல்லாமல்,நல்ல வேளை அவரைக் கூப்பிட்டிருந்தார்கள்.

கல்யாண வைபவங்களில் அனைவரும் ஆவலாய் எதிர் பார்த்துக் கொண்டிருந்த மிக முக்கியமான மேட்டர், முத்தம். கல்யாணம் முடிந்து அரண்மனை பால்கனியில் அரச குடும்பம் காட்சியளிக்கும் போது தம்பதியினர் கொடுத்துக் கொள்ளும் முத்தம்.

பால்கனியில் காட்சி தந்த போது, முத்தம் முத்தம் என மொத்த கூட்டமும் கத்த முத்தத்தை பரிமாறிக் கொண்டார்கள். அவர்களிருவரில் யார் மைண்ட்வாய்ஸ் யாருக்கு கேட்டதோ என்னமோ, கூட்டம் ஒன்ஸ் மோர் கேட்காமலே அவர்கள் வாயோடு வாய் கலந்தனர். அப்பொழுது அந்த சத்தத்தை [இது கூட்டத்தின் கூச்சல்] கேட்க விரும்பாமல் அங்கு இருந்த குட்டிக் குழந்தை, காதை மூடிக் கொண்டது. வில்லியம் அந்தக் குழந்தையின் காட்பாதர்.

பப்ளிக்கில் முத்தமா? அங்கே கலாசாரக் காவலர்கள் இல்லையா என்ற கேள்வி எழலாம். முத்தமிட்டிருக்காவிட்டால் தான் அந்த ஊர் கலாசார காவலர்கள் கோதாவில் குதித்திருப்பார்கள். ஹும் அங்கே, முத்தமிடல் ஒரு பாரம்பரிய சம்பிரதாயம்

அந்த சம்பிரதாய முத்தக் காட்சி பலரை முப்பது வருடங்கள் பின்னோக்கித் தள்ளியிருக்கலாம். ஏனெனில் அதே பால்கனியில் தான் டயானாவும் சார்லஸூம் முத்தமிட்டுக் கொண்டனர். இரண்டு கல்யாணங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை இதோடு முடிந்து சரித்திரம் மறுபடி மற்ற விஷயங்களில் ரீப்பிட் ஆகாமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும் பிரார்த்தனையும்.

முத்தத்தை தாண்டி இப்பொழுது அனைவரின் அடுத்த எதிர்பார்ப்பு என்னவெனில், இப்பொழுது இருக்கும் இராணிக்கு பிறகு அரியணை ஏறுவதற்கு வாய்ப்பு கேட்டிக்குக் கிட்டுமா அல்லது கேட்டி கொடுக்கவிருக்கும் குலவிளக்குக்கா?

ஆழி பெரிது!

24. இந்திரனும் வருணனும் சாட்சியாக..

மேற்கேயிருந்து வெள்ளைத்தோலும் பொன்னிற முடியும் நீலக்கண்களும் கொண்ட ஆரிய இனத்தவர் குதிரை மேலேறியமர்ந்து இந்தியாவின் கறுப்பின மக்களை அடிமை கொண்டார்கள். மூன்று நூற்றாண்டுகளாக காலனியம் கட்டமைத்து தந்த  சித்திரம் இது.

ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டின் மற்றொரு முக்கிய பிரச்னை மித்தானி (Mitanni) எனப்படும் மக்கள். மித்தானிகள் கிமு 1500 களில் மெசபடோமியாவுக்கு வடக்கே ஒரு வலிமையான சாம்ராஜ்ஜியமாக திகழ்ந்தவர்கள் ஆவர். இந்த மிட்டானி சாம்ராஜ்ஜியம் அதன் வலிமையின் உச்சத்தில் –அதாவது கிமு 1400களில்- இன்றைய துருக்கியின் தெற்கு பிரதேசத்தில் தொடங்கி வடக்கு ஈராக் வரை திகழ்ந்தது. கிமு 17 ஆம் நூற்றாண்டில் இந்த சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டிருக்க வேண்டுமென சரித்திர ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இவர்களுக்கும் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டுக்கும் அதைவிட முக்கியமாக வேதத்துக்கு என்ன தொடர்பு?

டாக்டர் கொயின்ராட் எல்ஸ்த்

மித்தானி மன்னர்களில் ஒருவன் மதிவாஸா (மதிவாசன்?) என்பவன். இவனது சகோதரனின் பெயர் துஷ்ரதன். மதிவாஸா அரியணை ஏறிய போது குழப்பங்கள் ஏற்பட்டன. வாரிசு பிரச்சனைகள். ஷுதர்ணன் என்பவன் இவனைக் கொன்று அரியணையை கைப்பற்ற முயற்சி செய்தான். எனவே மதிவாஸா அப்போது மிகவும் வலிமையாக இருந்தவனும் எகிப்திய பேரரசின் விரிவாதிக்கத்தையே தடுத்து நிறுத்தியவனுமான (ஒன்றாம்) ஸுப்பிலுலியுமா என்கிற ஹிட்டைட் குல மன்னனுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து, அவன் மகளை மணந்து மண உறவும் ஏற்படுத்திக் கொண்டான்.

இந்த ஒப்பந்தம், மித்தானிகளின் குதிரை பயிற்சி ஏடுகள் ஆகியவை நமக்கு கிட்டியுள்ளன. இந்த பழங்கால ஒப்பந்தத்தில் வேதகால தெய்வங்கள் சொல்லப்படுகின்றன. கிமு 1380 இல் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தம் அது. இந்திரன், வருணன், மித்திரன் மற்றும் இரு நாசத்தியர் (அஸ்வின்கள்) ஆகிய தெய்வங்களை அந்த ஒப்பந்தம் சொல்கிறது. இந்த தெய்வங்கள் அனைத்துமே ரிக்வேதத்தில் ஒப்பந்தங்களில்ன் காவலர்களாக கருதப்படுபவை ஆகும் (ரிக். 10.125.1)

ஆரியர்கள் மேற்கிலிருந்து வந்த போது இங்கு பரவிய ஒரு கிளை என்பதற்கு ஆதாரமாக இதை எடுத்துக் கொள்ள முடியுமா? அதுதான் உடனடியாக ஆரிய படையெடுப்பாளர்கள் கொள்ளும் நிலைபாடு. ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஆரியர்கள் மேற்கிலிருந்து கிழக்காக வந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். என்றால் பாரசிகத்தின் ஜெராதுஷ்டிர தொன்மங்களில்  வருணன் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. மித்திரன் மட்டுமே உண்டு. வருணன் முழுக்க முழுக்க வேத இலக்கியத்தின் தெய்வம்.

ப்ரெண்ட்ஜெஸ் எனும் ஆய்வாளர் மயில் உருவத்தாக்கம், மயில் நடனம் ஆகியவை குறித்து இந்த ஒப்பந்தம் பேசுவதைச் சுட்டிக்காட்டி இது இந்திய தாக்கம் கொண்டதாக இருக்கவே வாய்ப்பு உண்டு என்கிறார். இந்தியாவிலிருந்து சுமேரியா சென்று சுமேரியாவிலிருந்து மத்திய ஆசியா சென்று இந்த மயில் உருவத்தாக்கம் மித்தானி ஒப்பந்தங்களில் வந்திருக்கலாம் என்று ஆரிய படையெடுப்பாளர்கள் இதற்கு பதில் சொல்கின்றனர்.

இந்த வேத தெய்வங்கள் எல்லாம் மித்தானி உடன்படிக்கை ஆவணத்தில் ஒருவித மெல்லிய நினைவாக ஊடோடுகின்றன. பெல்ஜிய இந்தியவியலாளர் கொயன்ராட் எல்ஸ்ட் கூறுகிறார்:

“மித்தானிகளில் வேத தெய்வங்கள் ஒரு பழைய ஞாபகமாக விளங்குகின்றனர். அவர்களது தெய்வங்களின் பெரும் பட்டியலில் நான்கு தெய்வங்களே வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள்….அவர்களது மொழி முதிர்ந்த இந்தோ-ஆரிய மொழி என வகைப்படுத்தப்படும் தன்மையில் அமைகிறதேயன்றி  தொல்-இந்தோ-ஈரானியம் என அழைக்கப்பட முடியாதது.”

ஆரிய படையெடுப்பு வாதத்தினை நிராகரித்து இந்த விஷயங்களை விளக்க முற்படுவோம் என்றால் பல சுவாரசியமான சாத்தியங்களை நாம் ஆராய முடியும். உதாரணமாக, கிமு 1500-1200 களில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதற்கு பதிலாக கிமு 1700-1600 களிலேயே வேதபண்பாடு இந்தியாவில் நன்கு தழைத்து அதிலிருந்து ஒரு கிளை மேற்கு நோக்கி நகர்ந்திருக்கிறது என்பதற்கு மித்தானி ஒரு ஆதாரமாக அமையக் கூடும் என்பதனை கொயன்ராட் எல்ஸ்ட் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவிலிருந்து கிமு இராண்டாயிரம் ஆண்டுகள் தொடங்கி பல காலமாக, இந்தியாவில் உருவாகிய வேத தொன்மங்கள், ஐதீகங்கள் மற்றும் சடங்குகள் மெல்ல மெல்ல வெளியே சென்றிருக்கின்றன. அதே விதமாக வெளித்தாக்கங்களும் இங்கு வந்திருக்கலாம். இவை எப்படிச் சென்றன? வர்த்தகரகள், சிறு படைக்குழுக்கள் போன்றவர்களால் இருக்கலாம். எதுவானாலும் வேத சிந்தனைகள் மற்றும் தொன்மங்களின் தாக்கம் நிச்சயமாக இந்திய எல்லைக்கு வெளியே மிகவும் பழமையான காலங்களிலேயே சென்றிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

கோ – விமரிசனம்

படத்தைப் பற்றி சொல்லும் முன் படத்தில் முதலில் போடும் டைட்டில் கார்டைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.பத்திரிக்கை போட்டோகிராபர் படக்கதை என்பதை உணர்த்தவோ என்னவோ, தெண்டுல்கர், த்ரிஷா, இரஜினி எனப் பலரையும், பலதையும் டைட்டில் கார்டின் பேக் கிரவுண்டில் கோலஜாகக் காட்டுவது கவிதை. சண்டைப் பயிற்சி, பீட்டர் ஹையின் எனக் காட்டும் போது இரண்டு நாய்கள் சண்டையிடும் படம், வசனம் சுபா எனக் காட்டும் போது ஜெயகாந்தன் படம் எனக் காட்டுவதென ஒவ்வொரு ப்ரேம்மையும் கவனம் காட்டி செதுக்கியிருப்பது கடைசிக் காட்சியில் குறளைக் காட்டுவது வரை தொடர்கிறது.

எதேச்சையாக சிக்னலில் நிற்கும் போது பேங்க் கொள்ளை நடக்கிறது என  சமயோசிதமாக யூகித்து போட்டோ எடுக்க துரத்தும் ஜீவா. எடுத்தப் பின், தன் பத்திரிக்கைக்குத் தான் எக்ஸ்கூளிசிவாய் தர வேண்டும் என்று சுயநலமாய் இல்லாமல் போட்டோவை முதலில் போலீசிடம் தரும் சமூகப் பிரக்ஞையுள்ள பத்திரிக்கை போட்டோகிராபர். இந்தப் படத்தில் மிக அழகாகவும் தெரிகிறார்.

பியா, ஜீவாவுடன் பணி செய்யும் “லூசுப் பெண்ணாய்”,  “அழகான இராட்சசியாய்” . என்ன தான் கதையின் திருப்புமுனையளவுக்கு வெயிட்டான கேரக்டர், மிகவும் பொருத்தமான கேரக்டர் என்றாலும் பியாவை பாதிப் படத்தில் பேக்கப் செய்ததை பொருத்துக் கொள்ள முடியவில்லை. கார்த்திகாவை கட் செய்து, பியாவையே கதாநாயகி ஆக்கி டூயட் பாட வைத்திருக்கலாம் என்றெல்லாம் பீர் போல பியாவின் மேல் பொங்கும் பாசம் எழுத வைக்கிறது.

கார்த்திகா, இலங்கை விவகாரமெல்லாம் கவர் செய்கிறவர், கதாநாயகனுக்கு காதல் பொங்கும் கதாநாயகி ஆகப் போகிறவர், என்பதாலே சேலை சுடிதார் என கட்டிவிடுகிறார்கள். கொடுத்த காசுக்கு கூவ வைக்க வேண்டுமென்று சோகம் பொங்கி கண்ணீரில் அழும் போதும் கூட தண்ணீரில் நனையும் டூயட் வைத்திருக்கிறார்கள். நூலைப் போல இல்லாத சேலை, ஆனால் கார்த்திகா தீபம் போக போக பிரகாசமாய் எரியும் என நம்புவோமாக.

கதாநாயகிகளை கவர் செய்வதை கட் செய்து மற்றவர்களைப் பார்த்தால், பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ், போஸ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒன்றையொன்று நடிப்பில் காலி செய்கிறார்கள். அஜ்மல் அபாரம்.

அந்த பப்ளிஷர், ஆசிரியர்.போட்டோ எடிட்டர், ஆன்மிக நிருபர் என பத்திரிக்கை ஆபிசில் ஒவ்வொரு கேரக்டரும் கலக்குகிறது.

தன்னால் அப்ரூவ் செய்யப்பட்ட செய்தியின் தவற்றுக்கு தான் தார்மீக பொறுப்பெற்றும் தான் தனக்கு கீழே இருக்கும் நிருபர் வேலையை விட்டு தூக்கப்படுவதால் அன்றைய இரவின் பேப்பரை புரூப் பார்த்து விட்டு பத்திரிக்கை ஆசிரியர் இராஜினாமா கடிதம் எழுதுவதை எல்லாம் விஷுவலாக மட்டுமே காட்டுவதில் கே. வி ஆனந்த, டைரக்ஷனில் கோவாகி விடுகிறார்.(கோ என்றால் கிங் என்று அர்த்தமாம்!)

வசனம் எழுதும் படங்களில் ஒரு கதாபாத்திரமாக வருவதை எழுத்தாள வசனகர்த்தாக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்ற மர்மம் எனக்குப் புரியவில்லை? பாலகுமாரன் வரிசையில் சுபாவின் சுரேஷ் இதில் நடித்திருக்கிறார். வசனம் எல்லாம் வாரே வாவ்!

நான் Fire party இல்லப்பா, அவனா நீ என்ற பியாவின் டயலாக் ஆகட்டும், ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொன்னா  பசங்க கிட்ட செருப்பு இல்லையா என இளமை கொஞ்சம் ஒவராக கொப்பளிக்கும் வசனம் ஒரு பக்கம். நாங்க மட்டும் தான் இலவசம் தர்றோமா, நீங்க கொடுக்கறதுல்ல சோப்பு எண்ணெய் என்று பத்திரிக்கையாளனிடம் அரசியல்வாதி கேக்கும் கேள்வி. குவார்ட்டர் இல்லாமல் வந்திருக்கும் கோமான்களே, யார்றா அரசியல பாத்துப்பாங்க என்ற கேள்விக்கு பன்ச் டயலாக் பேசும் நடிகர்கள் காப்பாற்றுவார்கள் என்று டரியலான டயலாக்குகளுக்கு மட்டுமே தனி பாராட்டுரை எழுதலாம்!

ஆனா இனி வரும் எல்லா வசனகர்த்தாக்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள், அமெரிக்க எம்பஸியில விசாக்காக காலைல மூணு மணிக்கு க்யூல நிக்கறாங்கன்னு க்ளிஷேவா எழுதறதை இன்னியோட நிப்பாட்டுங்க. ஆன்லைன்ல அப்பாயிண்ட்மெண்ட்டு வாங்கி அரை மணி  நேரத்துக்கு முன்னாடி போனா போதும்

நிஜ சம்பவங்கள் பலதை கண் முன் கொண்டு வரும் திரைக்கதைக்கு, Assistant editorஐ செல்லமாய் சுருக்கி முதல் மூன்றெழுத்தில் கூப்பிடுவது, சோனாவை “ஓட்டு” கேக்க வைப்பது, பக்கத்து வீட்டு பெருச்சாளிப் பையன்,காற்று பிரிய வைக்கும் கப்ப்பு கேமரா மேன் போன்ற சமாச்சாரங்கள் திருஷ்டி பொட்டாகி விடுகிறது.

அஜ்மல் அடி வாங்கிய பின் கூட்டம் கூடும் போது முதல்வன் படமும், அஜ்மல் கை கொடுக்கும் போது பிரகாஷ்ராஜ் விலகிச் செல்வதும் இனி மேல் தான் ஆரம்பம் எனச் சொல்லும் போது  ஆய்த எழுத்தும், போஸ் க்ளைமாக்ஸில் பேசும் போது குருதிப்புனலும் நினைவிற்கு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை.

அனைத்து பாடல் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தாலும், (லொகஷேன் மற்றும் கேமிராவைச் சொல்கிறேன்), ஹைஹையோ ஹைஹையோ எனக்கு பிடிச்சுருக்கு என பாடல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை . ஒரு பாடலில் ஹாரிஸ் ஜெயராஜ் வருகிறார். ஆனால் பாடல்களில் அவர் எனக்கு தென்படவில்லை. முதல் முறையாய் தியேட்டரில் கேட்டது காரணமாயிருக்கலாம். ரீலிஸான முதல் இப்பட பாடலை பைத்தியம் பிடித்ததுப் போலக் கேட்கிறேன், என் ரிங் டோன் அந்தப் பட பாடல் தான் என நண்பர்கள் சிலர் புகழ் பாடுகின்றனர். என்ன செய்ய  என் கற்பூர வாசனை அவ்வளவு தான்.

இவன் படத்தோட ஹீரோ திருடுவானாம் பின்னாடி கஸ்டம்ஸ் ஆபிசர் ஆயிடுவானாம். என்னாப் படம் எடுக்கிறான்? இந்த டைரக்டர் படத்திற்கு 1/2 ஸ்டார் போட்டதே பெரிசு என படத்தில் ஒரு டயலாக் வருகிறது. ஆனால் மேற்சொன்ன குட்டி குட்டி குறைகளுக்காக மட்டும் பைவ் ஸ்டாரில் ஒரு  அரை ஸ்டாரை மட்டுமே குறைக்க முடியும். மற்றபடி படம் ஒரு நாலரை ஸ்டார் தங்கம்.

ஸ்டார் எல்லாம் சரி கதையைக் காணோம் எனக் கேட்பவர்களுக்காக,
ஆட்சிக்கு வருவதற்காக பதிமூன்று வயதுப் பெண்ணையும் திருமணம் செய்யத் தயாராக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் கொ.ப.செ உங்களுக்கு மகள் போல என்றால் அம்மா யாரென கேட்கும் பத்திரிக்கையாளரை(ஆடிட்டரை அல்ல) பப்ளிக்காக செருப்பாலடிக்கும் முதல்வர்,
இவர்களை எதிர்த்து தேர்தலில் நிற்கும் படித்த இளைஞர்கள், பத்திரிக்கை தர்மத்தை மீறாமல் அவர்களுக்கு உதவி செய்யும்  பத்திரிக்கை போட்டோகிராபர். இளைஞர்கள் ஆட்சியைப் பிடித்தார்களா, தேர்தலுக்குப் பின் நடந்தது என்ன என்பது எல்லாம் திரையில் மட்டுமே த்ரில்லராய்ப் பார்க்க வேண்டிய ஒன்று!

பி.கு: படத்தை தேர்தலுக்குப் பின் தான் வெளியிட வேண்டும் என முடிவு செய்தது ரெட் ஜெயிண்ட்டா இல்லை தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்ததா ? ஒரு வேளை விஜய் நடித்திருந்தால் பல டயலாக்குகளையும் காட்சிகளையும் கட் செய்திருப்பார்களோ!

தோழர்

அத்தியாயம் 25

 

பாரிஸில் இருந்தபோது கார்ல் மார்க்ஸ் எழுதி வந்த Vorwarts பத்திரிகை 1845ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஹெகல், பாயர்பாக் ஆகியோரின் கருத்துகளை விவாதப்பொருளாக்கி மார்க்ஸ் தொடர் கட்டுரைகள் எழுதிவந்தார். சோஷலிசம் குறித்தும் பொருள்முதல்வாதம் குறித்தும் ஐரோப்பாவில் செய்படும் போலி சோஷலிஸ்டுகள் குறித்தும்கூட மார்க்ஸ் எழுதினார். இந்தப் பத்திரிகையைத் தடை செய்யவேண்டும் என்று பிரான்ஸைத் தொடர்பு கொண்டு வேண்டிக்கொண்டது பிரஷ்யா. பிரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரான்ஸ் ஙணிணூதீச்ணூtண் பத்திரிகைக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது. இது மட்டும் போதாது என்று நினைத்த பிரஷ்ய உள்துறை அமைச்சர் ஒருவர் ((François Guizot) கார்ல் மார்க்ஸை பாரிஸில் இருந்து நாடுகடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே ஆண்டு மார்க்ஸ் பாரிஸில் இருந்து வெளியேறினார்.

ஜெர்மனிக்குத் திரும்பமுடியாது, பாரிஸும் இல்லை என்றாகிவிட்ட நிலையில், மார்க்ஸ் பெல்ஜியத்துக்குக் குடிபெயர முடிவு செய்தார். பிரஸ்ஸல்ஸ் மார்க்ஸின் வருகையை அங்கீகரித்தது என்றாலும் கறாரான ஒரு முன்நிபந்தனையை விதித்தது. சமகால அரசியல் குறித்து எந்தவிதமான கட்டுரைகளையும் மார்க்ஸ் எழுதக்கூடாது, பதிப்பிக்கக்கூடாது. இதற்கு உடன்பட்டு நடந்துகொண்டால்தான் வருகை சாத்தியம். மார்க்ஸ் ஒப்புக்கொண்டு பிரஸ்ஸல்ஸுக்குக் குடிபெயர்ந்தார். எழுதுவதற்குத்தானே தடை, வாசிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் தடையில்லையே! பிரஸ்ஸல்ஸுக்குச் சென்ற பிறகு, தன்னைப் போல் ஐரோப்பாவில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்தமோசஸ் ஹெஸ் (Moses Hess), கார்ல் ஹீன்ஸென் (Karl Heinzen), ஜோசப் வேடிமர் (Joseph Weydemeyer) போன்ற சோஷலிஸ்டுகளை மார்க்ஸ் சந்தித்து நட்பு கொண்டார்.

 

எங்கெல்ஸ் அமைதியின்றி தவித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் தனக்கும் வந்து சேரும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். மற்றொரு பக்கம், வீட்டிலும் அவருக்கு எந்தவித ஆதரவும் புரிதலும் கிடைக்கவில்லை. அவ்வப்போது குடும்பத்தினருடன் வாக்குவாதங்களும் உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பூமியே பிளந்தாலும் தொழிலைக் கைவிடக்கூடாது என்னும் தந்தையின் பிடிவாதம் எங்கெல்ஸை அதிருப்தி கொள்ளச்செய்தது. அவர் மனம் வேலையில் ஒட்டவில்லை.  இப்போதைக்கு அவர் முன் இருந்த ஒரே மாற்று பாதை, பிரஸ்ஸல்ஸ். ஒரே எதிர்காலம் தோழர் கார்ல் மார்க்ஸ்!

ஆனாலும் உடனடியாக அவரால் வெளியேற முடியவில்லை. பார்மெனில் மேலும் சில காலம் தங்கியிருந்தார். முணுமுணுத்துக்கொண்டிருந்தாலும், தந்தையின் ஆலையைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டார். மார்ச் 1845 தொடக்கத்தில் போன், கொலோன் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்து நண்பர்களைச் சந்தித்தார்.

எங்கெல்ஸ் எதிர்பார்த்ததைப் போலவே, பிரஷ்ய காவல்படை புரட்சிகர எழுத்தாளர்கள் மீதும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பரப்புவர்கள் மீதும் கண்காணிப்பைத் தொடங்கியது. தவிர்க்கவியலாதபடி, எங்கெல்ஸின் பெயரும் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. கம்யூனிச சிந்தனைகளையும் அரசு எதிர்ப்பு சிந்தனைகளையும் மக்களிடையே பரப்புவதில் எங்கெல்ஸ் வகித்த பாத்திரம் எத்தகையது என்பதை காவல்படை ரகசிய விசாரணைகள் நடத்தி தெரிந்துகொண்டது. எங்கெல்ஸ் பற்றி ஒரு பெரிய கோப்பு உருவாக ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட அதே சமயம், எங்கெல்ஸ் பார்மெனில் இருந்து வெளியேறினார். ஏப்ரல் 1845ல் பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்தார். ஒரு ஹோட்டலில் (26/27, Ste-Gudule) அறை எடுத்துக்கொண்டார். பிரஸ்ஸல்ஸ் வந்த புதிதில் இதே இடத்தில் மார்க்ஸ் சிறிது காலம் தங்கியிருந்தார். 5, Rue de l’Alliance என்னும் முகவரிக்கு மே 1845ல் மார்க்ஸ் குடிபெயர்ந்தார். மார்க்ஸைத் தொடர்ந்து எங்கெல்ஸும் இதே பகுதிக்குக் குடிபெயர்ந்தார். மார்க்ஸின் வீட்டுக்கு நெருக்கமான வீடு. எண், 7. கார்ல் மார்க்ஸ், ஜென்னி மார்க்ஸ் இருவரும் எங்கெல்ஸை அன்புடன் வரவேற்றனர்.

பிரஸ்ஸல்ஸ் வருவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 19, 1843ல் மார்க்ஸ் ஜென்னியைத் (முழுப்பெயர், Jenny von Westphalen) திருமணம் செய்துகொண்டார். பிரஷ்ய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தரின் மகள் ஜென்னி. மார்க்ஸைவிட மூன்று வயது மூத்தவர். ஒன்றாகக் கல்வி பயின்ற காலத்தில் காதலிக்கத் தொடங்கி, எதிர்ப்புகளையும் மாற்று திருமண ஏற்பாடுகளையும் முறியடித்து இருவரும் ஒன்றிணைந்தனர். மார்க்ஸுக்கும் ஜென்னியின் தந்தை பாரனுக்கும் நல்ல நட்பு இருந்ததால் திருமணம் சாத்தியமானது.

‘நாங்கள் (எங்கெல்ஸும் மார்க்ஸும்) பிரஸ்ஸல்ஸில் சந்தித்துக்கொண்டபோது மார்க்ஸ் தனது வரலாற்றுப் பொருள்முதல்வாத சித்தாந்தத்தை முழுவதுமாக வளர்த்தெடுத்திருந்தார்!’ என்று நினைவுகூர்ந்தார் எங்கெல்ஸ். பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் இரண்டையும் பற்றி எங்கெல்ஸிடம் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார் மார்க்ஸ். இணைந்து பணியாற்றுவது குறித்து இருவரும் விவாதித்தனர். ஹெகலுக்குப் பிறகான தத்துவம் குறித்து ஒரு நூல் எழுத முடிவு செய்தார்கள்.

பிற்காலத்தில் வெளியான பாயர்பாக் பற்றிய ஓர் ஆய்வு (Theses on Feuerbach) என்னும் நூலின் பகுதிகளை மார்க்ஸ் அப்போதே எழுத ஆரம்பித்திருந்தார். அதுபற்றி எங்கெல்ஸிடம் அவர் விவாதித்தார். ஆனால், அவரது கையெழுத்துப் பிரதியை எங்கெல்ஸ் படித்துப் பார்த்தாரா என்பது தெரியவில்லை. மார்க்ஸின் மரணத்துக்குப் பிறகே இந்தப் புத்தகம் எங்கெல்ஸால் வெளியிடப்பட்டது.

இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு நூலை எழுதுவதற்கு முன்னால் ஏற்கெனவே தொடங்கியிருந்த ஒரு பணியை முடித்துவிட விரும்பினார் மார்க்ஸ்.  அரசியல் மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றிய விரிவான விமரிசனங்கள்  (Critics of Politics and Political Economy) அடங்கிய ஒரு புத்தகத்தை எழுதும் பணியை ஏற்றிருந்தார் மார்க்ஸ். இரண்டு பாகங்களில் இந்தப் புத்தகத்தை எழுதித் தருவதாக ஒரு பதிப்பாசிரியரிடம் அவர் ஒப்பந்தம் போட்டிருந்தார். ஹெகலுக்குப் பிந்தைய தத்துவ உலகம் பற்றிய நூலை எங்கெல்ஸுடன் இணைந்து எழுதுவதற்கு முன்னால் ஒப்பந்தப் புத்தகத்தை முடிக்கவேண்டியிருந்தது.

அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மார்க்ஸ் ஆரம்பித்திருந்தார் என்றாலும் அவரால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. தொழில்துறையின் தலைநகரமாக விளங்கிய இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் அறிந்துகொள்ளாமல் இந்தப் புத்தகத்தை எழுத முடியாது. எனவே இங்கிலாந்து பயணம் அவசியம் என்று கருதினார் மார்க்ஸ். மார்க்ஸ் தன் பிரச்னையை பகிர்ந்துகொண்டபோது எங்கெல்ஸ் பரவசமடைந்தார். காரணம் அவருக்கும் இங்கிலாந்து செல்லவேண்டியிருந்தது. இங்கிலாந்தின் சமூக வரலாற்றை எழுத அவர் திட்டமிட்டிருந்தார். அதற்காக இங்கிலாந்து செல்வது குறித்தும் அவர் யோசித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸுக்கும் அதே நோக்கம் இருப்பதைக் கண்டதும் எங்கெல்ஸ் அவருடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார்.

அப்போது கார்ல் மார்க்ஸுக்குப் போதிய அளவு ஆங்கிலம் தெரியாது. இங்கிலாந்து செல்வதை அவர் ஒத்திப்போட்டதற்கு அவரது இந்தத் தயக்கமும் ஒரு காரணம். ஆனால் எங்கெல்ஸ் வருவதாகச் சொன்னதும் மார்க்ஸ் உடனே ஒப்புக்கொண்டார். எங்கெல்ஸின் இங்கிலாந்து உழைக்கும் வர்க்கம் பற்றிய புத்தகம் மார்க்ஸை ஏற்கெனவே கவர்ந்திருந்தது. மட்டுமல்லாமல், எங்கெல்ஸுடன் இங்கிலாந்து சமூக வாழ்க்கை குறித்தும் ஆலைகள் குறித்தும் சாசன இயக்கம் குறித்தும் மார்க்ஸ் விரிவாக விவாதித்திருக்கிறார். இங்கிலாந்தை நன்கு அறிந்திருந்த எங்கெல்ஸுடன் இணைந்து செல்வதுதான் சரியாக இருக்கும் என்று மார்க்ஸ் நினைத்தார்.

பயணம் தொடங்கியது. ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 211, 1845 வரை இருவரும் இங்கிலாந்தில் தங்கியிருந்தனர். பெரும்பாலான நேரத்தை அவர்கள் மான்செஸ்டரில் செலவிட்டனர். எங்கெல்ஸ் தனது நண்பர்களை மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மான்செஸ்டர் குடியிருப்புகளுக்கு மார்க்ஸை அழைத்துச் சென்று காண்பித்தார். ஆலைத் தொழிலாளர்களின் இருப்பிடங்களுக்கு அழைத்துச் சென்றார். மான்செஸ்டரில் உள்ள செத்தாம் நூலகம் (Chetham’s Library) மார்க்ஸை மிகவும் கவர்ந்தது. இங்கிலாந்தின் பழைமையான நூலகங்களுள் ஒன்று இது.

காலை நூலகத்தில் நுழைந்தவுடன் அடுக்குகளில் இருந்து புத்தகங்களை வாரி அணைத்துக் கொண்டு வந்து வாசிக்கவும் குறிப்பெடுக்கவும் தொடங்குவார்கள். எங்கெல்ஸ் தன் குறிப்புகளை அவ்வப்போது மார்க்ஸிடம் காண்பித்து அவர் அறிவுரைக்குச் செவிகொடுப்பார். மார்க்ஸ் சில குறிப்புகளை எழுதி எங்கெல்ஸுக்குக் கொடுப்பார். மேற்கொண்டு தேடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் அந்தக் குறிப்புகள் எங்கெல்ஸுக்குப் பயன்படும். மார்க்ஸ் எழுதத் தொடங்கிய பிரதியில் எங்கெல்ஸின் நூல் பற்றிய குறிப்புகள் அவ்வப்போது இடம்பெற்றன. இருவரும் தனித்தனி புத்தகங்களுக்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தனர் என்றாலும் ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதரவாக இருந்தனர்.

நூலகத்தில் எங்கெல்ஸ் வாசித்த சில முக்கிய நூல்கள் இவை. ஜார்ஜ் போர்ட்டரின் The Progress of the Nation, தாமஸ் டூகேயின் A History of Prices, பிரெட்ரிக் ஈடனின் The State of the Poor, வில்லியம் காட்வினின் History of the Commonwealth of England, ஜேம்ஸ் கில்பார்ட்டின் The History and Principles of Banking. இந்தப் புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுக்க எங்கெல்ஸுக்கு மூன்று குறிப்பேடுகள் தேவைப்பட்டன. அத்தியாவசியமான புத்தகங்களை அப்படியே சுருக்கி எழுதிக்கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எந்தவித பரபரப்புமின்றி அமைதியாக ஒரு நூலகத்தில் நேரம் செலவிட்டதை நினைத்து மகிழ்ந்தார் எங்கெல்ஸ். மார்க்ஸின் அருகாமை அவர் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது. மார்க்ஸின் கூர்மையான அறிவுத் திறனும் நுணுக்கமான முறையில் அவர் எழுப்பும் கேள்விகளும் எங்கெல்ஸை வியப்பிலாழ்த்தின. தான் இணைந்து பணியாற்றுவது ஒரு மேதையுடன் என்பதை அவர் எப்போதும் நினைவில் வைத்திருந்தார். சிறிய ஜன்னலுக்கு அருகே இருவரும் அமர்ந்திருந்தனர். அந்த ஜன்னல்களில் தீட்டப்பட்ட வண்ணங்கள் காரணமாக சூரிய வெளிச்சமும் வண்ணமயமாக இருந்தது. வெள்ளைத் தாள்களில் படரும் வண்ணங்களை எங்கெல்ஸ் ரசித்தார்.  மார்க்ஸின் கவனம் புத்தகத்தைத் தாண்டி வேறு எங்கும் படரவில்லை.

(தொடரும்)

ஆழி பெரிது!

23. குதிரை மோசடிகள் [தொடர்ச்சி]

ஐரோப்பிய பேரறிஞர்கள் கண்டுபிடித்த கோட்பாட்டை இந்திய ’மண் தோண்டி அகழ்வாராய்ச்சியாளர்கள்’ (அப்படித்தான் அகழ்வாராய்ச்சியாளர்களை விட்ஸல் தன் தனிப்பட்ட மெயில்களில் கூறுகிறார்.) பொய் என நிரூபிப்பதா? இந்த ஒரே காரணத்துக்காக குதிரை குறித்த இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளன.

ஓர்  எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்,  கர்நாடாக புதிய கற்கால அகழ்வாராய்ச்சி தளங்களில் குதிரை எலும்புகளைக் கண்டெடுத்த கே.ஆர்.ஆலூர் எனும் அகழ்வாராய்ச்சியாளரின் வார்த்தைகளிலேயே அந்த கதையை கேளுங்கள்.

 

“நான் இந்த (குதிரை எலும்புகள் குறித்த) அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பை வெளியிட்ட போது சரித்திரவியலாளர்களின் நீதி மன்றக்கூண்டில் குற்றவாளியாக நிற்க வேண்டிவரும் என கனவிலும் எண்ணவில்லை. இந்த கண்டுபிடிப்பை நான் வெளியிட்டதுமே…இவ்விஷயத்தின் முக்கியத்துவத்தை தெரிவித்து எனக்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. ஆரியப்படையெடுப்பின் போது தான் குதிரை எனும் பிராணி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அந்த சரித்திர நம்பிக்கைக்கு எதிராக என் கண்டுபிடிப்புகள் இருப்பதால் அதை நான் தெளிவுப்படுத்துமாறும் விளக்கங்கள் கேட்டு எனக்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. …என் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்திட நான் கட்டுரையை எழுதினேன். …

வரலாற்றாசிரியர்களுக்கு என்னதான் நம்பிக்கை இருந்தாலும் ஆரியர்கள் படையெடுத்ததாக (நம்பப்படும்) காலகட்டத்திற்கு முன்னதாகவே ஹல்லூரில் குதிரை எலும்புகள் காணப்படுவது ஒரு அறிவியல் தரவாகும். …ஹல்லூரில் அகழ்வெடுக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகளில் குதிரையும் இருக்கிறதென உறுதிப்படுத்துவதுடன் எனது பொறுப்பு முடிந்தது.”

 

மேலே கதையை எட்வின் பைரண்ட் தொடர்கிறார்:

“1931 இலேயே ஸெவெல் மற்றும் குகா எனும் அகழ்வாராய்ச்சியாளர்கள், மொகஞ்சதாரோவிலேயே குதிரை இருந்திருக்க வேண்டுமென உறுதி செய்கிறார்கள். 1963 இல் போலோநாத் எனும் அகழ்வாராய்ச்சியாளர், சிந்து பண்பாட்டு மையங்களான  ஹரப்பா, ரோபார் மற்றும் லோத்தாலில் குதிரை இருந்திருக்க வேண்டுமென உறுதி செய்கிறார். ஏன் (ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டினை நம்பிய) மார்ட்டிமெர் வீலரே 1953 இல் ஒரு குதிரை உருவத்தினை உறுதி செய்து, “குதிரை, ஒட்டகம் மற்றும் கழுதை ஆகியவை சிந்து சமவெளி பயணக்குழுக்களுக்கு மிகவும் பழகிய பிராணிகளாக இருந்திருக்க வேண்டும்.” என கூறுகிறார். மொகஞ்சதாரோவில் மெக்கே எனும் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சியாளரால் குதிரையின் களிமண் உருவம் 1938 இல் கண்டெடுக்கப்பட்டது. சிந்து சமவெளியிலுள்ள பெரியானோ, குண்டாய் எனுமிடத்தில் பிக்கோட் எனும் அகழ்வாராய்ச்சியாளர் குதிரை பதுமையை 1952 இல் கண்டெடுத்தார். இதன் காலகட்டம் கிமு 2300 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. முன்னர் கழுதை எலும்புகள் என ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டவை தற்போது மீள்-பரிசோதனைகளின் பின்னர் குதிரை எலும்புகள் என கருதப்படுகின்றன.(சர்மா 1992-93). குதிரை இருந்ததற்கான (எலும்புகள், பற்கள் மற்றும் பதுமைகள் ஆகியவை மூலமாக அறியப்படும்) ஆதாரங்கள் ஹரப்பா பண்பாட்டு நகரங்கள் இருந்த இடங்களான கலிபங்கன் (சர்மா 1992-93), லோத்தால் (ராவ், 1979), சுர்கோதடா (சர்மா, 1974) மற்றும் மல்வான் (சர்மா 1992-93) ஆகியவற்றில் கிடைத்துள்ளன…பொதுவாக இந்த சீரான கண்டுபிடிப்புகளுக்கு (ஆரியப் படையெடுப்புக்கோட்பாட்டின் நம்பிக்கையாளர்களான) வரலாற்றறிஞர்களின் எதிர்வினையை சர்மா பின்வருமாறு விவரிக்கிறார்:

“இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் இந்த முக்கியமான கண்டுபிடிப்புகள் இவர்களால் கவனிக்கவேப்படவில்லை. ‘ஹரப்பா பண்பாட்டில் வளர்ப்பு பிராணியான குதிரை இருக்கவே இல்லை” என்ற வழக்கமான நிலைப்பாடே தொடர்ந்து கூறப்பட்டு வந்ததுடன் சர்வ சாதாரணமாக இந்த நிலைப்பாட்டுக்கு எதிரான கண்டுபிடிப்புகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இப்புறக்கணிப்பு வீலரின் தலைமுறை ஆராய்ச்சியாளர்களின் ‘குதிரை மீதமர்ந்த ஆரியப்படையெடுப்புக்’ கோட்பாட்டுக்கு உதவுவதற்காகவே ஆகும்.”

இந்நிலையில் ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டாளர்களின் எதிர்வினை விசித்திரமான ஒரு நழுவலாகத்தான் அமைந்துள்ளது. அதாவது குதிரையே இல்லை என்கிற நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டார்கள். மாறாக, உண்மைக்குதிரை என அறியப்படும் ‘ஈக்வஸ் கபாலஸ்’ (Equs caballus) குதிரையே ஆரியப்படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட குதிரை என்றும் ஆனால் கண்டெடுக்கப்பட்ட குதிரை எலும்புகள் ஈக்வஸ் ஆஸினஸ் அல்லது ஈக்வஸ் ஹெமியோனஸ் ஆகிய இனங்களை சார்ந்தவையாக இருக்கலாமெனவும் கூற ஆரம்பித்தனர். வேறு சிலரோ (உதாரணமாக, ரிச்சர்ட் மீடோ-1987) இக்கண்டுபிடிப்புகள் குதிரைதான் என உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை எனவும் கூறமுற்பட்டனர்.

இந்த சூழலில் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களான ஏ.கே.சர்மா மற்றும் ஜகத்பதி ஜோஷி  சுர்கோதடாவில் கண்டெடுக்கப்பட்ட குதிரை எலும்புகள் ஈக்வஸ் கபாலஸ் என நிரூபணமாகியதாக தம் ஆய்வறிக்கையில் கூறினர்.  தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட சிந்து சமவெளி பண்பாட்டு மையங்களின் அனைத்து தளங்களிலிருந்தும் குதிரை எலும்புகள் கிடைத்துள்ளதை ஆய்வறிக்கைகளில் கூறினார். இவையெல்லாம் ஏறத்தாழ கிமு 2100-1700 வரையிலுமான காலகட்டத்தை சார்ந்தவை. அதாவது ஆரியர்கள் குதிரைகள் மீதமர்ந்து இங்கு படையெடுத்ததாகக் கூறப்படும் காலகட்டத்துக்கு முந்தையவை.

என்றபோதிலும் இக்கண்டுபிடிப்புகளுக்கு உரிய கவனிப்பு அளிக்கப்படவில்லை. ரிச்சர்ட் மீடோ சுர்கோதடாவில் கண்டெடுக்கப்பட்டது ‘வழக்கத்தை விட பெரிய அளவில் கிடைத்த கழுதையாக இருக்கலாம்’ என கருத்து தெரிவித்தார்.

1990களில் புதுடெல்லியில் இந்திய அகழ்வாராய்ச்சி கழகத்தின் கூட்டம் நடந்த போது ஹங்கேரியைச் சார்ந்த சாண்டோர் போகோன்யி எனும் அகழ்வாராய்ச்சி விலங்கியலாளர் டெல்லியில் இருந்தார். அவரிடம் இந்த சர்ச்சை கொண்டு செல்லப்பட்ட போது அவர் அந்த எலும்புகளை ஆராய்ந்த பின்ன கூறினார்: “அவை உண்மை குதிரையுடையவை என்பது தெளிவு….(பிளிஸ்டோஸீன் காலகட்டத்தை தொடர்ந்த) தொல்-பழங்காலங்களில் இந்தியாவில் குதிரை காட்டுயிராக வாழவில்லை என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும் போது சுர்கோதடாவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பயன்படுத்தப்படும் பிராணியாக வளர்க்கப்பட்ட குதிரையின் (domesticated horse) எலும்புகளே.”

தமது ஆய்வறிக்கைக்கு கிடைத்த இந்த ஆதாரமான வெற்றியைக் குறித்து சர்மா கூறியது குறிப்பிடத்தக்கதாகும்:

“இதுவே என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாளாகும். ஏனெனில் எனது கண்டுபிடிப்பு அதற்குரிய மதிப்பினை பெற்றிட மற்றொரு கண்டத்திலிருந்து ஒரு மனிதர் வந்து ‘சர்மா கண்டுபிடித்தது சரிதான்’ என சொல்லும் வரை இருபதாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது எனும் எண்ணம் என்னுள் எழுந்தது. நாம் என்றைக்கு நம் நாட்டு எல்லைகளுக்கு வெளியிலிருந்து வரும் ஆமோதிப்புகளுக்காக காத்திருக்க தேவையில்லாத அறிவுபூர்வ உள வலிமை கொண்டவர்களாக மாறப்போகிறோம்? வரலாற்றறிஞர்களோ இன்னமும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கோ இதெல்லாம் ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என நிரூபிக்கும் வலதுசாரி முயற்சியாக தெரிகிறது.”

மேலும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்கள் மற்றொரு முக்கிய அம்சத்தை மறந்திருப்பதையும் எட்வின் ப்ரையண்ட் ரிஸா எனும் இண்டர்நெட் விவாத தளத்தில் நினைவுப்படுத்துகிறார்:

“…எதுவானாலும் ஆரியப்படையெடுப்பு/புலப்பெயர்வு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தின் போதும், மேற்கிலிருந்து கிழக்காக குதிரை எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆரியப்படையெடுப்பினை எதிர்ப்பவர்கள் குதிரைகளை அடையாளம் காட்டிடமுடியவில்லை என கூறுவோர் (அதாவது ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டினை ஆதரிப்பவர்கள்) அதைப் போலவே தங்களுக்கும் ஆரியப்படையெடுப்பினை உறுதிப்படுத்தும் அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் ஏதும் கிட்டவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.”

மேலதிக விவரங்களுக்கு:

இக்கட்டுரைக்கான தரவுகள் எட்வின் பைரண்டின் ‘The Quest for the Origins of Vedic Culture’ (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வெளியீடு, 2001) நூலிலிருந்து பெறப்பட்டவை (பக்கங்கள்: 169-172)

தோழர்

அத்தியாயம் 24

 

அரசியல் பொருளாதாரத் துறையில் எங்கெல்ஸ் ஆர்வம் செலுத்தியதற்கு பிரிட்டனில் அவர் கண்ட சமூகச் சூழலும் தொழில் புரட்சியின் விளைவுகளும் காரணமாக அமைந்தன. இத்துறையின் தத்துவார்த்த அடிப்படைகளை ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ, ஜேம்ஸ் மில் ஆகியோர் உருவாக்கியிருந்தனர். பொருளாதாரத்தில் எங்கெல்ஸின் தொடக்கப் புள்ளி இவர்களே. நேர் எதிராக, கார்ல் மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்துக்கான தனது அடித்தளத்தை ஹெகலிடம் இருந்து பெற்றிருந்தார். ஹெகலின் Philosophy of Right என்னும் நூல் அரசு மற்றும் தனிச் சொத்து பற்றி விரிவாக ஆராய்ந்தது. மார்க்ஸ் இதனை வாசித்திருந்ததோடு மட்டுமல்லாமல், ஹெகலின் வாதங்களை மறுக்கவும் துணிந்தார்.

ஆடம் ஸ்மித் முதலாளித்துவத்தின் தந்தையாகவும் பொருளியல் துறையின் தந்தையாகவும் கருதப்படுகிறார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். செல்வாக்கு மிகுந்தவர். இவரது முதல் நூல், Theory of Moral Sentiments. பொருளாதாரத் துறைக்கு ஆடம் ஸ்மித்தின் முக்கியப் பங்களிப்பாக இன்றளவும் கருதப்படுவது, 1776ல் வெளிவந்த An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations. அல்லது சுருக்கமாக, வெல்த் ஆஃப் நேஷன்ஸ்.

செல்வம் என்பது என்ன? பணம் என்றுதான் ஆடம் ஸ்மித்துக்கு முன்பு வரை பலர் சொல்லி வந்தனர். ஒரு நாட்டை ஆள்வதற்குச் செல்வம்தான் அடிப்படை என்பதால் நாட்டை நிர்வகிப்பவர் பெருமளவிலான தங்கத்தை எப்போதும் சேமித்து வைத்திருக்கவேண்டும் என்னும் கருத்து நிலவிவந்தது. தங்கம் அல்ல, நிலமே நிலையான செல்வம் என்றும் சிலர் சொல்லி வந்தனர். ஆடம் ஸ்மித் தங்கத்தையும் நிலத்தையும் நிராகரித்துவிட்டு உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார். உழைப்பு பகிர்வின் மூலம் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்றார்.

அந்த வகையில், அரசாங்கத்தைப் போலவே தொழில்துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களும் முக்கியானவர்களே என்றார். செல்வத்தைக் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் உற்பத்தியாளர்கள் என்பதால் அவர்களுக்கு சுதந்தரமும் சலுகைககளும் அளிக்கப்படவேண்டும் என்றார் ஸ்மித். என்õறல், உற்பத்தியாளர்களின் வழியில் அரசு குறுக்கிடக்கூடாது. அவர்களை எந்தச் சூழலிலும் கட்டுப்படுத்தக்கூடாது. கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு, ஸ்மித்தைப் பொறுத்தவரை பிற்போக்குத்தனமானது, காட்டுமிராண்டித்தனமானது.

இன்றைக்குக் கடைபிடிக்கப்படும் உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளின் அடித்தளத்தை நிறுவியவர் ஆடம் ஸ்மித். சுதந்தரச் சந்தை என்று அழைக்கப்படும் Free Market வர்த்தக முறையை ஸ்மித் வழிமொழிந்து ஆதரித்தார். தடையற்ற வணிகம். கட்டுப்பாடற்ற வணிகம். சுதந்தரமான வணிகம். சமுதாயம் மேன்மையடையவேண்டுமானால் சுதந்தரச் சந்தை தழைக்கவேண்டும்.

உற்பத்தியாளர்கள் செழிப்புடன் வாழும் ஒரு சமூகத்தில்தான் அரசும் செழிப்புடன் இருக்கும். மக்களும் செழிப்புடன் வாழ்வார்கள். இதற்கு ஆடம் ஸ்மித் முன்வைக்கும் உதாரணம், புகழ்பெற்றது. சந்தையில் ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும்போது என்ன ஆகும்? அதன் விலை உயரும். குறிப்பிட்ட அந்தப் பொருளின் உற்பத்தியாளருக்கு அதன் மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த இடத்தில்தான் சுதந்தரச் சந்தையின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. குறிப்பிட்ட ஓர் உற்பத்தியாளருக்கு மட்டும் வருவாய் குவிவதைக் கண்டு பிற உற்பத்தியாளர்களுமே அதே பொருளைத் தயாரித்து சந்தையில் விற்பனைக்குக் கொண்டுவருகிறார்கள். ஆரோக்கியமான ஒரு போட்டிச் சூழல் உருவாகிறது. விளைவாக, குறிப்பிட்ட பொருளின் விலை குறைகிறது.

மாயக்கரம் (Invisible Hand) என்னும் கோட்பாட்டை ஆடம் ஸ்மித் இந்த இடத்தில் புகுத்தினார். அதாவது, சமூகத்தில் நிகழும் பற்றாக்குறையைப் போக்கவேண்டும் என்னும் எண்ணம் போட்டியிடும் உற்பத்தியாளர்களுக்கு இல்லை. அவர்கள் தங்கள் சுயலாபத்துக்காகவே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஒரு பொருளுக்குத் தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தியும் அதற்கேற்ப அதிகரிக்கிறது. இருந்தாலும், மாயக்கரம் ஒன்றின் வழிகாட்டுதலின்படி ஓர் உற்பத்தியாளர் தம்மை அறியாமலேயே பொது நலனுக்கு ஏற்றபடி இயங்குகிறான். அதாவது, இயக்கப்படுகிறான். ஓர் உற்பத்தியாளரின் சுயநலன் சார்ந்த உற்பத்தி பொது நலன் சார்ந்ததாக மாறுவதற்குக் (அதாவது, பற்றாக்குறை அகல்வது) காரணம் சுதந்தரச் சந்தையும் மாயக்கரமும்தான்.

ஒருவேளை உற்பத்தியாளர்களுக்குச் சுதந்தரம் மறுக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? போட்டி இருந்திருக்காது. உற்பத்தி பெருகியிருக்காது. பற்றாக்குறை அப்படியே நீடித்திருக்கும். பண்டங்களின் விலை அதிகரிப்பு கட்டுப்படுத்த இயலாதபடி நீடிக்கும். அரசும் அரசு விதிக்கும் கெடுபிடிகளும் பற்றாக்குறை சூழலைத்தான் உருவாக்கும் என்றார் ஆடம் ஸ்மித். சுதந்தரச் சந்தை கொள்கை அல்லது அரசு தலையிடாக் கொள்கை (Laissez Faire) ஆடம் ஸ்மித்தின் முக்கியப் பங்களிப்பு. கட்டற்ற சுதந்தர வணிகமே ஒரு நாட்டுக்குச் செல்வத்தைக் கொண்டு வரும் என்றார் ஆடம் ஸ்மித்.

ஆடம் ஸ்மித்தின் சுதந்தர வணிகத்தை டேவிட் ரிகார்டோ ஆதரித்தார். ஒரு வணிகராகவும், அரசு மந்திரியாகவும், நிதியாளராகவும் இருந்தவர். உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையிலும்கூட சுதந்தர வர்த்தகம் லாபகரமானதே என்றார் ரிகார்டோ. ஒரே பண்டத்தை இரு நாடுகள் உற்பத்தி செய்கின்றன என்று வைத்துக்கொள்வோம். எந்த நாடு குறைவான முதலீட்டில் சிறப்பாக அதனை உற்பத்தி செய்கிறதோ அந்த நாட்டிடம் இருந்து மற்ற நாடு அப்பொருளை இறக்குமதி செய்து கொள்ளலாம். இது இரு நாடுகளுக்கும் லாபமளிக்கக்கூடியது. சில நாடுகள் ஆடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும். சில நாடுகளுக்கு உணவு உற்பத்தி பிரதானமானதாக இருக்கும். யாருக்கு எது சரியாக வருகிறதோ, யாருக்கு எதில் திறமை இருக்கிறதோ அதை அவர்கள் செய்யவேண்டும். உணவு உற்பத்தியில் பின்தங்கியுள்ள ஒரு நாடு, ஆடைகளை ஏற்றுமதி செய்து உணவை இறக்குமதி செய்துகொள்ளலாம். இது இரு தரப்பினருக்கும் லாபகரமானதாக இருக்கும். ரிகார்டோவின் பார்வை இது.

ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ இருவருடனும் இணைத்துப் பேசப்படுபவர் ஜான் ஸ்டூவர்ட் மில். சமூகம், தத்துவம், அரசியல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. ரிகார்டோவைப் போலவே ஆடம் ஸ்மித்தின் சிந்தனைகளால் கவரப்பட்டவர் மில். இவர் அரசாங்கத்தின் குறுக்கீடுகளை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை என்றாலும் சுதந்தரச் சந்தையின் அவசியத்தை உணர்ந்திருந்தார். 1848ல் மில் வெளியிட்ட Principles of Political Economy பொருளாதாரத் துறையின் மைல் கல்லாகக் கருதப்படுகிறது. பொருளாதார ஜனநாயகம் என்னும் கோட்பாட்டை மில் முன்வைத்தார். இதன்படி, தொழிலாளர்கள் ஒன்றுகூடி தங்கள் தலைமையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க இந்த வழிமுறை உதவும் என்று மில் நம்பினார். முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு உட்பட்ட சுதந்தரத்தைத் தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தருவதே இவரது நோக்கமாக இருந்தது.

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகளை வகுத்தவர்கள் ஸ்மித், ரிகார்டோ மற்றும் மில். மூவரும் சுதந்தரச் சந்தையை ஆதரித்தனர். தனிச்சொத்துடைமையை ஆதரித்தனர். அதற்கான உரிமையை ஆதரித்தனர். அரசின் குறுக்கீடுகளைப் பெரும்பாலும் எதிர்த்தனர். முதலாளித்துவத்தை ஆதரித்தனர். சந்தைப் போட்டியை ஆதரித்தனர்.

எங்கெல்ஸ் மேற்கண்ட கோட்பாடுகளை நிராகரித்தார். தனிச்சொத்துடைமை, முதலாளித்துவம், சந்தைப் போட்டி, குறுக்கீடற்ற உற்பத்தி சூழல், முதலாளித்துவ உற்பத்தி மாதிரி ஆகிய அனைத்தையும் அவர் நிராகரித்தார்.  அரசியல் பொருளாதாரம் என்பது வாணிப  விரிவாக்கத்தின் விளைவாக தோன்றிய ஒரு புதிய துறை. சுதந்தரச் சந்தையின் மூலம் பலன் பெருபவர்கள் உற்பத்தியாளர்களே தவிர மக்கள் அல்ல. மேலும், சந்தைப் போட்டி என்பது உற்பத்தியாளர்களுக்கு இடையில் மட்டுமே நிகழ்கிறது. இதன் மூலம் அவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. அதனால்தான் அரசின் குறுக்கீடுகளை அகற்றவேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். கட்டுப்பாடற்ற முறையில் இயங்கினால்தான் ஒரு நாட்டில் தொழில் வளம் பெருகும் என்று பிரசாரம் செய்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தை அரசிடம் இருந்து கைப்பற்றிக் கொள்கிறது. வர்த்தகம் என்பது தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் மட்டுமல்ல நாடுகளுக்கு இடையிலும் நட்பை மலரச் செய்யும் என்று வாதிடுவது பாசாங்கானது என்றார் எங்கெல்ஸ்.

தனிச்சொத்துடைமையின் விளைவு, வர்த்தகம். ஒரு பொருளை வாங்குவோர், விற்பவர் இருவருடைய இலக்கும் வெவ்வேறானவை, எதிரும் புதிருமானவை. வாங்குபவர் குறைவான விலை கொடுக்க விரும்புவார். விற்பவர் அதிக விலைக்கு விற்க விரும்புவார். ஒவ்வொரு முறை விற்பனை நிகழும்போதும் இந்த எதிரெதிர் விருப்பங்கள் மோதிக்கொள்கின்றன. ஒருவருடைய நோக்கம் என்ன என்பது இன்னொருவருக்குத் தெரியும். எனவே இருவருக்கும் இடையில் அடிப்படையில் நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. பரிவர்த்தனை நிகழும்வரை அது நீடிக்கிறது. எனவே வர்த்தகத்தின் முதல் விதி, ரகசியம் காப்பது. விற்பனை செய்பவர் தன் பண்டத்தின் மதிப்பை மறைத்துக் காட்டுகிறார். பண்டத்தின் மதிப்பைக் குறைக்கும் அனைத்து தகவல்களையும் அவர் மூடி மறைக்கிறார். ஆக, எதிராளியின் தகவல் போதாமையே விற்பனையாளரின் பலமாக மாறிப்போகிறது. அறியாமையை அடிப்படையாக வைத்து ஒரு பொருள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வர்த்தகம் இந்த இயல்பை அங்கீகரிக்கிறது.  ஒரே வரியில் சொல்லவேண்டுமானால், ‘வர்த்தகம் என்பது ஏமாற்றுவேலை!’  என்றார் எங்கெல்ஸ்.

சுதந்தரச் சந்தை தற்காலச் சூழலை எப்படியெல்லாம் மாற்றியமைத்திருக்கிறது என்பதை எங்கெல்ஸ் அறிந்திருந்தார். சொத்துடைமை சமூகத்தில் பிளவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது. மனிதன் ஒரு சந்தைப் பொருளாக, வணிகத்துக்கான பண்டமாக மாற்றப்பட்டிருக்கிறான். மேற்படி பொருளியில் ஆய்வாளர்கள் முன்வைத்த சந்தைப் போட்டி அனைத்து மனிதர்களின் வாழ்வையும் ஊடுருவிச் சென்று அவர்களை அலைகழித்துக்கொண்டிருக்கிறது. பலமற்றவர்கள் இந்தப் போட்டியில் தூக்கியடிக்கப்படுகிறார்கள். பலம் பெற்றவர்கள் மேலும் பலம் பெற்றவர்களாக மாறுகிறார்கள். எனவே, ‘மனிதகுலத்தைச் சீர்குலைக்கும் சொத்துரிமையையும் போட்டியையும் எதிரெதிரான நலன்களையும் ஒழிக்கவேண்டும்.’

அரசியல் பொருளாதாரத்தில் எங்கெல்ஸ் செலுத்த ஆரம்பித்த ஆர்வம் அவர் சித்தாந்த வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய மூன்றையும் ஒரு புள்ளியில் ஒன்றிணைத்து தன் ஆய்வைத் தொடர்ந்தார் எங்கெல்ஸ்.

(தொடரும்)

ஆழி பெரிது!

22. குதிரை மோசடிகள்

 

நாமெல்லாம் சிறுவர்-சிறுமிகளாக இருந்த போது வரலாற்று பாடநூல்களில் இப்படி ஒரு கேள்வியைப் படித்திருப்போம். “சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் ஆரியர்களின் நாகரிகத்துக்கும் வேறுபாடுகள் என்ன?”  இந்த கேள்விக்கான பதிலை அட்டவணை போட்டு எழுத வேண்டியிருக்கும். அதில் மறக்காமல் எழுதுவோம். “சிந்து சமவெளிப் பண்பாட்டில் குதிரைகள் கிடையாது. ஆரியர்கள் குதிரைகளைப் பயன்படுத்தினர்.”

சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் இருந்து வரும் ‘ப்ரண்ட்லைன்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியாகியது. ஹரப்பா முத்திரைகளில் குதிரை வடிவம் இருப்பதாக ஒரு இந்திய அறிஞர் மோசடி செய்துவிட்டதாக அது கூறியது. பின்னர் அது குறித்து தீவிர சர்ச்சைகள் எழுந்தன. ஆரிய படையெடுப்பு கோட்பாட்டாளர்களுக்கு இது முக்கியமானது. வேத இலக்கியங்களில் குதிரைகள் குறித்து ஏராளமாகக் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் ஹரப்பா-மொகஞ்சதாரோ பண்பாட்டில் குதிரைகளே இல்லை. எனவே வேத பண்பாடும் சிந்து சமவெளி பண்பாடும் ஒரே சமுதாயத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்கமுடியாது என்று இவர்கள் கூறுகின்றனர்.

ஹரப்பா-மொகஞ்சதாரோ பண்பாட்டையும் வேதப்பண்பாட்டையும் ஒன்று என்று சொல்பவர்களுக்கு சிந்து சமவெளியில் குதிரைகள் இருந்ததற்கான ஆதாரங்களே கிடைக்கவில்லை என்பதே பெரிய பிரச்சனை என இவர்கள் கூறினர். ஆகவே இதனை சமாளிப்பதற்காக செய்யப்பட்ட மோசடி வேலையாக சிந்து சமவெளி பண்பாட்டின் ஒற்றைக் கொம்பு காளை சின்னத்தில் குதிரை உருவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியதாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் விட்ஸல் என்கிற பேராசிரியரும் அவரது உதவியாளர் ஸ்டீவ் பார்மரும் கூறினர்.

என்.எஸ்.ராஜாராம் என்கிற ஹிந்துத்துவர் எழுதிய அந்த நூலில் வெளியான அந்த படம் உண்மையில் ஒரு மோசமான தவறே ஆகும். ஆனால் அது வேண்டுமென்றே செய்யப்பட்ட மோசடி அல்ல. இதை பலர் ஐயமற நிறுவிய பின்னரும் இந்த ‘மோசடி’ ஆரிய படையெடுப்பை கேள்விக்குள்ளாக்கும் அனைவரையும், குறிப்பாக இந்திய அறிஞர்களை, மோசமாக சித்தரிக்க மேற்கத்திய இந்தியவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது.

இது ஒரு சாதாரணமான மோசடி-காழ்ப்புணர்ச்சி ஆகியவறால் ஏற்பட்ட சர்ச்சை என ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் ஆரிய படையெடுப்புக் கோட்பாட்டாளர்களின் வாதங்களில் குதிரை சிந்து-சரஸ்வதி நாகரிக மையங்களில் இல்லை என்பது முக்கியமான ஒரு அம்சம். வேத நாகரிகத்தில் குதிரை பண்பாட்டின் முக்கிய மைய அம்சமாக இருந்தது. அதற்கு காரணம் குதிரை அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கும் வகித்தது என இவர்கள் கருதுகின்றனர். அத்துடன் சிந்து சமவெளி நாகரிகம் குதிரையை அறியாத ஒரு பண்பாடு என்பது இவர்கள் நிலைபாடு. குதிரைகளை இந்தியாவுக்குள் ஆரியர்களே அவர்கள் வரும் போது (அதாவது கிமு 1500-1200) கொண்டு வந்தார்களாம்.

உதாரணமாக சர். ஜான் மார்ஷல் எழுதுகிறார்: “வேதகால ஆரியர்களின் வாழ்க்கையில் குதிரை ஒரு முக்கிய இடத்தை வகித்தது ஆனால் ஹரப்பா மொகஞ்சதாரோ பண்பாட்டிலோ மக்கள் குதிரையை அறிந்திருக்கவே இல்லை.”

எனவேதான் குதிரை சிந்து சரஸ்வதி பண்பாட்டில் இருந்தது என்பதை நிறுவுவது ஒரு முக்கியமான பிரச்சனையாகிவிட்டது. அங்கே குதிரை –அதுவும் மக்களால் பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட குதிரை- இருந்தால் அதுவே ஆரிய-படையெடுப்பு வாதத்துக்கு கொடுக்கப்படும் சரியான அடி. மேலும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டுக்கும் வேத பண்பாட்டுக்கும் தொடர்பில்லை என நம் பாட புத்தகங்களிலெல்லாம் சொல்லிக் கொடுக்கப்படுவதை அது தகர்த்துவிடும்.

உண்மை என்னவென்றால் அதைத்தான் இன்று வரை நடந்த அகழ்வாராய்ச்சிகள் நிறுவியுள்ளன.

கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்தியவியலாளரான முனைவர் எட்வின் பைரண்ட் எழுதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்  அண்மையில் வெளியிட்ட “வேதகால நாகரித்தின் தொடக்கம் குறித்த தேடல்” (The Quest for the Origins of Vedic Culture)எனும் நூலில் அவர் இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குதிரை எலும்புகள் குறித்த தரவுகளை தொகுத்து அளித்துள்ளார்.

அவை எல்லாம் ‘ஆரியர்’ குதிரைகளில் படையெடுத்து வந்ததாகக் கூறப்படும் காலத்துக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்தவை.

  • இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்பு பிராணியாக குதிரை (domesticated horse) கிமு 4500 இலிருந்தே அறியப்படுகிறது. ஆராவலி மலைத்தொடரின் அடிவாரத்தில் இராஜஸ்தானில் பகூர் எனும் இடத்தில் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது (கோஷ் 1989).
  • பலுசிஸ்தானில் ரானா குண்டாய் எனுமிடத்தில் ஹரப்பா காலகட்டத்துக்கும் முற்பட்ட தளங்களில் குதிரை பல் கண்டெடுக்கப்பட்டுள்ளது (குகா சாட்டர்ஜி 1949)
  • குஜராத்தில் அலகாபாத்துக்கு அருகில் மகாக்ரா எனும் இடத்தில் குதிரை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் நடத்தப்பட்ட கார்பன் 14 ஆய்வுகள் அவற்றின் காலகட்டத்தை கிமு 2265 முதல் 1480 வரை என வரையறுத்துள்ளன.  (ஷர்மா 1980)
  • தென்னகத்திலும் கே.ஆர். அலூர் எனும் அகழ்வாராய்ச்சியாளரால் கர்நாடகத்தில் புதிய கற்கால மையங்களிலிருந்து குதிரை எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன. பாரதத்தின் உட்கிழக்குப் பகுதியான மகாக்ரா என்னும் இடத்திலும், தெற்கில் கர்நாடகத்திலும் இவ்வாறு குதிரை எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவையெல்லாம் ஆரியர்கள் கிமு 1500-1200 காலகட்டத்தில் வடமேற்குப்பகுதியிலிருந்து படையெடுத்து வந்த போதுதான் குதிரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன என கூறுவதனை அகழாராய்ச்சியின் யதார்த்தத்துடன் பொருத்தமில்லாததாக ஆக்குகிறது.

ஆனால் ஐரோப்பிய பேரறிஞர்கள் கண்டுபிடித்த கோட்பாட்டை இந்திய ’மண் தோண்டி அகழ்வாராய்ச்சியாளர்கள்’ (அப்படித்தான் அகழ்வாராய்ச்சியாளர்களை விட்ஸல் தன் தனிப்பட்ட மெயில்களில் கூறுகிறார்.) பொய் என நிரூபிப்பதா? இந்த ஒரே காரணத்துக்காக குதிரை குறித்த இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் சர்ச்சைக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளன.

– தொடரும்