கடவுளின் குரல்

ஒரு ஜென் துறவி. காட்டில் தியானம் அமர்ந்திருந்தார்.

அந்தப் பக்கமாகச் சென்ற சில இளைஞர்கள் அவரை நெருங்கினார்கள். ‘யோவ் தாடிக்காரா, என்னய்யா கண்ணை மூடிகிட்டு ஃபிலிம் காட்டறே?’ என்றார்கள். ‘உன்னைமாதிரி எத்தனை போலிச் சாமியாரைப் பார்த்திருப்போம், இனிமேலும் எங்களை ஏமாத்தமுடியாது!’

இப்படி அவர்கள் எவ்வளவுதான் அவரை அவமானப்படுத்திப் பேசியபோதும் அவர் வாய் திறக்கவில்லை. அமைதியாகத் தியானத்தைத் தொடர்ந்தார்.

திடீரென்று வானில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. ‘நான்தான் கடவுள் பேசுகிறேன், என்னுடைய பரம பக்தராகிய உன்னைக் கேலி செய்யும் இந்த அற்பப் பதர்களை இந்த நிமிடமே அழித்து ஒழித்துவிடட்டுமா? ஒரு வார்த்தை சொல், செய்துவிடுகிறேன்!’

இதைக் கேட்ட அந்த இளைஞர்கள் பயந்து நடுங்கினார்கள். துறவியின் காலில் விழுந்து ‘ஐயா, எங்களைக் கொன்றுவிடாதீர்கள்’ என்று கெஞ்சினார்கள்.

இப்போது அந்தத் துறவி வாய் திறந்தார். ‘பயப்படாதீர்கள். பேசியது கடவுள் இல்லை!’

‘என்னது? பேசியது கடவுள் இல்லையா? எப்படிச் சொல்கிறீர்கள்?’

’ஒருவேளை பேசியவர் கடவுளாக இருந்தால் அவர் உங்களுடைய மனத்தை மாற்றதான் முயற்சி செய்திருப்பாரேதவிர கொல்லவேண்டும் என்று எண்ணியிருக்கமாட்டார்’ என்றார் துறவி. ‘கடவுளின் குரலையும் மற்ற குரல்களையும் பிரித்து அறிவதுதான் தியானத்தின் முக்கியமான உச்ச நிலை. அதை நோக்கிப் பயணம் செய்யுங்கள். தானாக அமைதியடைந்து திருந்திவிடுவீர்கள்.’

ராமலிங்க ராஜுவும் வியாசர்பாடி பாபுவும்

சந்திரமௌலி - தம் குடும்பத்தினருடன்

கடந்த முப்பது வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில் சந்தித்த பெரிய மனிதர்களைப் பற்றித்தான் நான் இதுவரை எழுதிவந்தேன். ஆனால் சுவாரசியம் என்பது பிரபலங்களின் பிரத்யேக சொத்து இல்லை. சாதாரணமான மனிதர்கள்கூட எனக்கு நல்ல மேட்டர்களையும், அனுபவங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இந்த அத்தியாயத்தில் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

லீப் வருடமான 2000ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதியை ஒட்டி வெளியான குங்குமம் இதழில் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பிறந்த நாள் கொண்டாடும் வாய்ப்பு பெற்ற பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்த சிறுவர்கள் சிலரை பேட்டி காண்டு எழுதித்தரும்படிச் சொன்னார், அப்போதைய குங்குமம் பொறுப்பாசிரியர் பாவை சந்திரன்.

பிப். 29ஆம் தேதி பிறந்தவர்களைத் தேடிக்கொண்டு போனது ஒரு சுவையான அனுபவம். பல பள்ளிகளுக்கும் போன் செய்து விசாரித்தபோது, ரொம்ப சுளுவாக “எங்க ஸ்கூல்ல பிப் 29 பிறந்த குழந்தைகள் யாரும் இல்லையே” என்று சொல்லிவிட்டார்கள். எனது அடுத்த டார்கெட் மருத்துவமனைகள். ரொம்ப நைசாகப் பேசி, அவர்களின் பழைய ரெக்கார்டுகளைத் தேடி முந்தைய லீப் ஆண்டுகளில் பிப்.29ல் பிறந்தவர்கள் பத்துப் பதினைந்து பேர்களின் வீட்டு முகவரிகளை தேடிப்பிடித்தோம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் பிறந்த குழந்தைகளின் அம்மா, அப்பாக்கள் பெயரும், முகவரியும் மட்டுமே கிடைத்தனவே தவிர, குழந்தைகளின் பெயர் விவரங்கள் கிடைக்கவில்லை.

அடுத்து அந்த முகவரிக்கு போட்டோகிராபர் சகிதம் படை எடுத்தேன். சில முகவரிகளுக்குப் போனபோது, “நீங்க கரெக்ட் அட்ரசுக்குத் தான் வந்திருக்கீங்க! ஆனால், நாங்க வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது. இதுக்கு முன்னாடி இருந்தவங்க விவரம் எங்களுக்குத் தெரியாதே!” என்றார்கள். இன்னும் சில முகவரிகளில் “எஙக மகள் பிரவசத்துக்கு வந்திருந்தா! அப்ப இந்த அட்ரச கொடுத்திருக்கா. அவ இப்போ நாக்பூர்ல இருக்காளே” என்கிற ரீதியில் பதில் வந்தது. இதெல்லாம் பரவாயில்லை; ஒரு வீட்டில், தம்பதிக்கு டைவர்ஸே ஆகி இருந்தது. கடைசியில் தேறியது ஐந்தாறுதான்.

அந்தக் குழந்தைகளைக் கேட்டபோது, பிப்ரவர் 28ஆம் தேதியே என் பிறந்த நாளைக் கொண்டாடிவிடுவோம்; மார்ச் முதல் தேதிதான் என் பர்த் டே கொண்டாடுவேன்; தமிழ் தேதியில் கொண்டாடுவோம்; மூணு வருஷதத்துக்கு நட்சத்திரப் பிறந்த நாள்; லீப் வருடத்தில் ஆங்கிலப் பிறந்த நாள்; பிறந்த நாளெல்லாம் கொண்டாடறதில்லை” என்று பலவிதமான பதில்கள் வந்தன.

***

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை ரிசர்வ் வங்கி ஊழியர் ஒருவர் பெயரைக் கேள்விப்பட்டபோது, ரொம்ப வித்தியாசமாக இருந்ததால், ரிசர்வ் வங்கிக்குச் சென்று அவரை சந்தித்து பேட்டி கண்டேன். அவருடைய பேரைக் கேட்டால் சர்ப்பிரைஸ் ஷாக் அடிக்கும். ஆம், மின்சாரம்!

அவருக்கு இப்படிப் பெயர் வைத்த பின்னணியைக் கேட்டபோது அவர் சொன்னது: ” பகுத்தறிவுவாதியான என் தாத்தா, எந்த ஒரு ஜாதி, மதம் சாராத பெயராக எனக்கு வைக்க விரும்பி, நிறைய யோசித்து எனக்கு சூட்டிய பெயர்தான் மின்சாரம். என் பெயரை முதல் முறையாக் கேட்கும் பலர், “என்ன! மின்சாரமா?” என்று கேட்டுவிடுவார்கள். இல்லயெனில், கேட்க நினைத்து, ஆனால் கேட்கத் தயங்கி கேட்காமல் விட்டுவிடுவார்கள்” என்றார். வீட்டில் குழந்தைகள் குறும்பு செய்யும்போது, இவர் அடித்தால், உடனே ” மிஸ்டர் கரண்ட்! கொஞ்சம் பவர் ஆஃப் பண்ணிக்கறீங்களா?” என்று இவரைக் கலாய்ப்பார்களாம்.

***

98ல் குமுதத்தில் சாந்தி என்ற சிறுமியைப் பற்றி எழுதினேன். தி. நகர் குண்டூர் சுப்பையா பிள்ளை ஸ்கூல் எட்டாம் கிளாஸ் மாணவியான அவர் மாநில அளவில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான நடத்திய இரண்டு பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றார். அவரது பேச்சு அவ்வளவு சூப்பராக இருந்ததால் பரிசளிப்பு விழாவிலும் அவரைப் பேச வைத்தார்கள். அந்த மாணவியை பேட்டி காண அவளது வீட்டுக்குப் போனேன். தி. நகர் ஆலையம்மன் கோவில் பகுதியில் இருக்கும் ஒரு குடிசையில் வசித்த சாந்தியின் அம்மா வீட்டு வேலை செய்பவர். அப்பா பஞ்சர் ஒட்டுபவர். அந்தக் குடிசை, குடும்பத்தின் வறுமையை படம் பிடித்துக் காட்டியது.

இப்படிப்பட்ட ஏழைக் குடும்பத்து சாந்திக்கு, அபாரமான பேச்சுத் திறமை எப்படி வந்தது? சாந்தி சொன்னார்: ” பள்ளியில் தலைமை ஆசிரியரும், தமிழ் ஆசிரியையும் கொடுத்த ஊக்கம்தான்” தினமும் தன் குடிசைக்குள்ளே பேசிப்பழகி தன்னைப் போட்டிக்குத் தயார்ப்படுத்திக் கொண்ட சாந்தி, ” எனக்கு விசுவின் அரட்டை அரங்கம் பார்க்கப் பிடிக்கும். ஆனால் எங்க வீட்டில் டீ.வி. கிடையாது” என்றார். (ஒரு வேளை இப்போது இலவச டீ.வி. கிடைத்திருக்கலாம்! )

***

மும்பைவாசியான விஸ்வனாதன் பற்றி நான் ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் ஒரு கட்டுரை படித்தேன். அதன் பின் மும்பை சென்றிருந்தபோது, டைஜஸ்ட் ஆபீசுக்கு போன் செய்து, விஸ்வனாதனின் விலாசம் கேட்டு வாங்கிக்கொண்டு, அவரை சந்தித்து பேட்டி கண்டேன். விஸ்வனாதனின் ஸ்பெஷாலிடி என்ன தெரியுமா? பெரும் செலவு பிடிக்கும் இதயம், சிறுநீரக அறுவை சிகிச்சைகளை செய்து கொள்ள வசதியில்லாத ஏழைகளுக்கு மருத்துவத்துக்கு பண உதவி செய்யும் அறக்கட்டளைகளின் விலாசங்களை சேகரித்து வைத்திருந்தார். உதவி தேவைப்படும் நோயாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் அவரைத் தொடர்பு கொண்டால், அகில இந்திய அளவிலான அறக்கட்டளைகளின் விலாசங்கள், விண்ணப்பங்கள், மற்றும் இதர முக்கிய தகவல்களை அவர் இலவசமாக வழங்குவார். சில அறக்கட்டளைகள், விஸ்வனாதன் சிபாரிசு செய்யும் நோயாளிகளுக்கு உடனடியாக உதவி செய்யும் அளவுக்கு அவருக்கு அறக்கட்டலைகள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. தள்ளாத வயதிலும், இப்படி ஒரு சேவை செய்துகொண்டிருந்த விஸ்வனாதன் ஒரு வித்தியாசமான மனிதர்தான்.

***

நேர்மையான, வித்தியாசமான ஆட்டோ காரர்கள் பற்றி ஒரு சில பேட்டிகள் எழுதியதுண்டு. ஒரு நாள் வள்ளுவர் கோட்டம் அருகில் “என் தாயின் நினைவாக, தினம் ஒருவருக்கு சவாரி இலவசம்” என்று எழுதப்பட்ட ஆட்டோவைப் பார்த்தேன். ஆட்டோவில் கஸ்டமர் யாருமில்லாததால், அப்படியே ஓரங்கட்டி, பேட்டியை ஆரம்பித்தேன். ” என் அம்மா மேல எனக்கு ரொம்ப பாசம்! அவங்க இறந்தவுடன், அவங்க நினைவா ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்ய நினைச்சேன். தினம் யாராவது ஒருவருக்கு இலவசமா சவாரி போறேன்” என்றார்.

பயணிகள் ஆட்டோவில் தவறவிட்டுச் சென்ற பணம், நகைகளை போலிசில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர்கள் பற்றி சில பேட்டிக் கட்டுரைகள் எழுதி இருந்தாலும், புதிய தலைமுறை பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை குறிப்பிடத்தக்கது. செய்தித்தாள்கள் படிப்பவர்கள் அத்தனை பேரும் ராமலிங்க ராஜுவைப் பற்றிப் படித்திருப்பீர்கள். ஆனால் எத்தனை பேர் வியாசர்பாடி பாபுவைப் பற்றிப் படித்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. இரண்டையும் படித்த எனக்கு ஒன்றுக்கொன்று துளியும் சம்மந்தமில்லாத இந்த இரண்டு பேர்களையும் ஒப்பிட்டு ஒரு சிறு கட்டுரை எழுதவேண்டும் என்று தோன்றியது. கட்டுரையின் தலைப்பு: ராமலிங்க ராஜுவும்  வியாசர்பாடி பாபுவும். அதன் முக்கியமான பகுதிகள் இதோ:

ஆந்திரப்பிரதேசம் பீமாவரத்தில் பிறந்த ராமலிங்க ராஜு விஜயவாடாவில் உள்ல லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கா சென்று ஒஹையோ பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்தார். அடுத்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்தார். வியாசர்பாடி பாபு பிறந்து, வளர்ந்தது வடசென்னையின் வியாசர்பாடியில்தான். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கினதில்லை.

கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, டெக்ஸ்டைல் என்று பிசினஸ் நடத்திவிட்டு, 1987ல் இருபது ஊழியர்களுடன் சத்யம் கம்ப்யூட்டர் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தார் ராஜு. அமெரிக்க நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்ப காண்டிராக்ட்கள் அபரிமிதமாகக் கிடைக்க சத்யம் நிறுவனம் மடமடவென்று வளர்ந்தது, தகவல் தொழில்நுட்பத் துறையின் மாமனிதர் விருது, ஆசியாவின் பிசினஸ் லீடர் விருது, என்று ஏராளமான விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டவர் ராமலிங்க ராஜு.

இப்போது 48 வயதாகும் வியாசர்பாடி பாபு, 25 வருடங்களுக்கு முன்னால் வாடகைக்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். இப்போதும் ஆட்டோதான் ஓட்டிக் கொண்டிருக்கிறார். காலையில் எட்டுமணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டால், மீண்டும் வீடு திரும்ப இரவு எட்டுமணியாகிவிடும். தினசரி பெட்ரோல் மற்றும் இதர செலவுகள் போக 150 ரூபாய் வரை நிற்கும். மாதத்தில் அதிகபட்ச வருமானம் ஐந்தாயிரம் ரூபாய்.

வியாசர்பாடி பாபுவின் சாதனை என்ன தெரியுமா? தன் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் மறதியாக தவறவிட்டுச் சென்ற துணிபையில் இருந்த மூணரை லட்சம் ரூபாயுடன் மறுபடியும் அந்தப் பயணி தேடிக்கொண்டுவருவார் என்று அவரை இறக்கி விட்ட இடத்திலேயே காத்திருந்தார். இரண்டு மணிநேரமாகியும் அவர் வராததால், நேரே போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்தார். மறுநாள் செய்தித்தாளில் வெளியான “நேர்மையான ஆட்டோ டிரைவர்” பற்றிய செய்தியைப் படித்துவிட்டு, பணத்தைப் பறிகொடுத்தவர் போலிஸ் ஸ்டேஷனுக்கு வர, ஆட்டோ டிரைவர் வியாசர்பாடி பாபு அந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. சென்னை மாநகர கமிஷனர் பாபுவின் நேர்மையைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசளித்தார். வியாசர்பாடி பள்ளி ஒன்றில், பள்ளிக்கூடமே போகாத பாபுவை சுதந்தர தினத்தன்று சிறப்பு விருந்தினராக அழைத்து, தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் கௌரவத்தை அளித்தார்கள்.

அமெரிக்கா சென்று எம்.பி.ஏ. படித்த ராமலிங்க ராஜு என்ன செய்தார் என்பதை உலகமே அறியும்.

இந்தத் தொடரை ஆர்வத்துடன் படித்து, கருத்து சொன்ன, சொல்ல நினைத்த, சொல்லாத எல்லோருக்கும் என் நன்றி. ஒரு தாற்காலிக இடைவேளை இப்போது. மீண்டும் சந்திப்போம்.