உடனே செய்

ஒரு ஜென் மாஸ்டர். மேடையேறிச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பேச்சைக் கேட்கக் கூடியிருந்தார்கள்.

முதல் வரிசையில் ஓர் இளைஞர். கோட், சூட், டை, ஷூ என்று மேற்கத்திய பாணியில் உடுத்தியிருந்தார். கால்மேல் கால் போட்டபடி ஜென் மாஸ்டரின் பேச்சை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த இளைஞரின் முகம் சுருங்கியது. சட்டென்று தன்னுடைய வலது கால் ஷூவைக் கழற்றினார். உள்ளே இருந்த சாக்ஸையும் கழற்றினார்.

சுற்றியிருந்தவர்கள் அவரை அருவருப்போடு பார்த்தார்கள். ‘நம்ம மாஸ்டர் எப்பேர்ப்பட்ட தத்துவங்களையெல்லாம் விளக்கிச் சொல்லிகிட்டிருக்கார்! ஆனா இந்தப் பையன் கொஞ்சம்கூட மரியாதை இல்லாம ஷூவைக் கழற்றி விளையாடறானே, இந்தக் காலத்து ‘யூத்’துங்க எல்லாமே இப்படிதான், பணிவும் கிடையாது, அக்கறையும் கிடையாது’ என்று உச்சுக்கொட்டினார்கள்.

அந்த இளைஞனின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் அவனிடமே நேரடியாகக் கேட்டுவிட்டார். ‘என்னப்பா செய்றே?’

‘என்னோட ஒரு சாக்ஸை உள்பக்கம் வெளிப்புறமா வர்றமாதிரி மாத்திப் போட்டுகிட்டிருக்கேன். அதைத்தான் சரி செய்யறேன்’ என்றான் அந்த இளைஞன்.

’ஏன்ப்பா, இதுக்கு இப்போ என்ன அவசரம்? கூட்டம் முடிஞ்சப்புறம் நிதானமாச் செய்யக்கூடாதா? உன் கால் சாக்ஸ் மாறிப்போயிருக்குன்னு யாருக்குத் தெரியப்போகுது?’

‘வேற யாருக்குத் தெரியணும்? அது தப்புன்னு என் புத்திக்குத் தெரியுமே, அது போதாதா?’ என்றான் அந்த இளைஞன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி இதே ஜென் மாஸ்டர்தான் சொன்னார், ஒரு விஷயம் தப்புன்னு தெரிஞ்சா உடனே திருத்த ஆரம்பிச்சுடணும், கொஞ்சம் தயங்கினாலும் தள்ளிப்போட்டாலும் மனசு மாறிடும்-ன்னு. நீங்க அதைக்  கவனிக்கலையா?’