கேள்வியின் நாயகன்

அந்தக் கால சீனாவில் புகழ் பெற்ற ஜென் மாஸ்டர் ஒருவர், அவர் பெயர் பாஸோ.

ஒருமுறை டாய்ஜு என்ற மாணவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். ‘வணக்கம் குருவே!’

‘வணக்கம். என்னைப் பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாயே. ஏன்?’

’நான் ஞானம் பெறவேண்டும்!’

’உனக்கே உனக்கென்று ஒரு புதையல் இருக்கிறது. அதை ஏன் வெளியே தேடுகிறாய்?’ என்று கேட்டார் பாஸோ!

‘எனக்கே எனக்கென்று ஒரு புதையலா? அது எங்கே? நான் அதை எப்படிக் கண்டுபிடிப்பது?’

’இப்படிக் கேள்வி கேட்கிறாய் அல்லவா? அதுதான் உன்னுடைய புதையல்’ என்றார் பாஸோ. ‘தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இரு. ஞானம் பெறுவாய்!’

வரலாறை எப்படி அணுக வேண்டும்?

Circa 2006. துபாயில் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு, இந்தியாவின் வளர்ச்சி, பெங்களூரின் வாழ்நிலை, இன்னபிற லெளகீகங்களைச் சுற்றி வந்தது. பெங்களூர் மாதிரியான ஊர்களில் இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், விரிவாகும் பணரீதியான பிளவுகளும், கூடிய விரைவில் இந்தியாவில் மக்கள் போரினைக் கொண்டு வந்துவிடும் என்று பேசினோம். அப்போது யூகிக்காமலும் பேசாமலும் போனது, இதைவிட மோசமான ஏற்றத்தாழ்வுகளில்தான் மத்தியக் கிழக்கு நாடுகளும், வட ஆப்ரிக்காவும் இருக்கிறது என்பது.

வரலாறு ஒரு மோசமான ஆசான். அது கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்ள முற்படுவதும் கஷ்டமான விஷயம். நமக்கு மண்டையில் ஏறவே ஏறாது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என்பது ஏதோ ஒரு பகுதிக்கான பிரச்னை மட்டுமல்ல. இன்றைக்கும் மேற்கு ஜெர்மனியின் பெருசுகள், கிழக்கு ஜெர்மனி இணைந்ததே தங்களின் வீழ்ச்சியாகப் பார்த்து, உள்ளுக்குள் குமைகிறார்கள். வட கொரியா, தென் கொரியாவின் வளர்ச்சியினைப் பார்த்து எரிச்சல் பட்டு, எல்லையில் ராக்கெட் விட்டு சீண்டுகிறார்கள். உள்ளூரில், வளர்ச்சியின் விகிதம் கண்டுதான், பங்களாதேஷின் எல்லை தாண்டி, மேற்கு வங்கத்தில் ஆட்கள் வந்து இப்போதுப் பொதுத் தேர்தலில் தனித் தொகுதி கேட்கும் அளவிற்கு வீரியமாக இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றே ஒன்றுதான் – வளர்ச்சி.

இதனால்தான், தமிழகத்தின் தலைமைச் செயலகம் கட்ட பீகாரிலிருந்தும், உத்ராஞ்சலிலிருந்தும் ஆட்கள் வந்து வேலை செய்கிறார்கள். மூக்கடங்கிய வட இந்திய விடலைப் பையன்கள், செட்டிநாடு ஹோட்டல்களில் டேபிள் துடைக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு காலத்தில், தமிழகத்தின் தென் மூலையில் இருந்த ஆட்கள் சென்னைக்கு வந்து செய்துகொண்டிருந்தார்கள். இன்றைக்கு அவர்களைக் காணவில்லை. காரணம் – அவர்களின் பொருளாதார வளர்ச்சி.

1991லிருந்து இன்றைக்கு இரண்டு தசாப்தங்கள் பார்த்த பொருளாதார சீர்திருத்தத்தின் ரேகைகள், நாடெங்கிலும் பரவியிருக்கின்றன. 1969 இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல மக்கள் உள்ளடங்கிய போராட்டங்கள் இனி இந்தியாவில் வருவது சந்தேகம். இனி வந்தால், அது ஊடகங்களால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களாக மட்டுமே அமையும். மற்றெல்லாம் பிரியாணி-லாரி கூட்டங்கள். நம்முடைய வாழ்க்கை என்பதைக் கட்டமைப்பது யார் யாரோவாக இருந்தாலும், குறைந்தபட்ச சலுகைகள் நமக்கு உண்டு. அது இவர் ஒழிக, அவர் ஒழிக என்று கத்தலாம்; ப்ளடி பாலிடிஷியன்ஸ் என்று டிவிட்டரில் அலம்பலாம்; மாற்றம் வரும், புரட்சி வரும் என்று சிக்னலில் உண்டி ஏந்தலாம்; எல்லாம் முடித்து வீட்டுக்குப்போய் சன் டிவியில் புதுப் படம் பார்க்கலாம்.

சராசரி மனித வாழ்க்கை என்பது ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம். அது ப்ரோக்ராம் செய்யப்பட்டு சலிக்காமல் 24 மணி நேரமும் செக்குமாடு வாழ்க்கையினை வாழும் உத்தரவாதத்தை அளிப்பது. 21ஆம் நூற்றாண்டில் எங்கெல்லாம் இந்த செக்குமாடு ப்ரோக்ராம் இல்லையோ, அங்கெல்லாம் சத்தம் எழுவது வாடிக்கை. அந்த வகையில் துனிசியாவில் ஆரம்பித்து, இன்றைக்கு லிபியாவின் மீது அமெரிக்கக் கூட்டணிப்படைகள் விமானத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்தபடி ஒபாமா, ஹாலிவுட் திரை பிரசிடெண்டுகள் மாதிரியே டிவியில் பேசுவதுவரை நடந்த / நடந்துகொண்டிருக்கக்கூடிய சமாசாரங்களின் பின்னணியில் இருக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றியதுதான் பா. ராகவனின் ‘2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ என்ற இந்தப் புத்தகம்.

ஒரு துனிசிய கறிகாய் வியாபாரியின் பெயர் இனி இந்த மக்கள் எழுச்சியினை ரீம் ரீம்களாக, டிஜிட்டல் பைட்டுகளாக எழுதித் தள்ளப்போகும் பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்கான ஆரம்பப் புள்ளி என்று ஆரம்பிப்பதில் நிமிர்ந்தெழுந்து, துனிசியா, எகிப்து என ஆரம்பித்து 19 மத்தியக் கிழக்கு & வட ஆப்ரிக்க தேசங்களின் மக்கள் எழுச்சியினைப் பற்றி முன்கதை சுருக்கம், பின் கதை நிகழ்வுகள் என நீளும் புத்தகத்தில், பக்கங்களின் வழியே வரலாறு நைல் நதியாகப் பிரவகிக்கிறது. மிகத் தெளிவாக, அதே சமயத்தில் சுருக்கமாக ஒவ்வொரு நாட்டிலும் என்ன பிரச்னை, வாழ்வாதாரம் எப்படி இருந்தது, ஏன் மக்கள் எழுச்சியடைந்தார்கள் என்பதை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். லிபியாவின் கடாபி பற்றி எழுதியிருப்பது தமிழில் பதியப்பட்ட மிக நேரடியான, நேர்த்தியான தகவல்.

மக்கள் எழுச்சியினை எழுதுவது கடினம். ஒவ்வொரு நாட்டிலும், சூழலுக்கு ஏற்ப காரணங்கள் வெவ்வேறாக இருக்கும். இஸ்லாமிய லிபரல் தேசமான துனிசியாவிற்கும், தீப்பெட்டி சைஸ் தேசங்களுக்கும் இருக்கக்கூடிய பிரச்னைகள் எஸ்கலேட்டர் வைத்தாலும் எட்டாது. இதை ஒட்டுமொத்தமாக ஒரே புத்தகத்தில் அடக்குவது எழுத்தாளனுக்கு இருக்கிற மிகப்பெரிய சவால். அது ரோட்டோரத்தில் அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வித்தைக்காரனுக்கு உள்ள சாமர்த்தியம். அதை பா.ராகவன் தெள்ளத் தெளிவாகச் செய்திருக்கிறார்.

நம் வாழ்நாளில், நம் கண்முன்னே நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கும் ஒரு சமூக மாற்றத்தினை, அதன் தீவிரம் குறையாமலும், வளவளவென்று இழுக்காமலும் குறும்பட ஷாட்களுக்கு இணையாகச் சொல்லியிருக்கிறது இந்தப் புத்தகம். மாற்றங்களினாலேயே நம்மினம் ஜீவிக்கிறது. அந்த மாற்றங்கள் எந்தச் சூழலில், நிகழ்வில், சிறு துளியில், குறுகிய பகர்வில் ஆரம்பித்து, விரிவடைந்து நம்மைவிடப் பெரியதாக மாறி, நம்மை ஆட்கொள்கிறது, நம் வருங்காலத்தைப் புரட்டிப் போடுகிறது என்பது அது ஆரம்பிக்கும்போது தெரியவே தெரியாது.

இந்த 19 நாடுகளுக்கும் இது பொருந்தும்.

ஆனால், உலகமெங்கும் புரட்சி என்று ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். புரட்சி என்பது ஒட்டு மொத்த தேசத்தினைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அதன் எதிர்காலத்தையும், ஆட்சியாளர்களையும், அமைப்பினையும் நிர்ணயிப்பது. இப்போது இந்த தேசங்களில் நடந்துவருவது புரட்சியின் கீழ் வருமா என்பது சந்தேகமே. எகிப்தில் ஹோஸ்னி முபாரக் போய், ராணுவ ஆட்சியின் கீழ் வந்து, அவர்கள் பொதுத் தேர்தலைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். துனிசியாவின் ஆட்சியாளர் ஓடிப் போய், இன்னொருவரை உட்கார வைத்தாகிவிட்டது.

அடிப்படையில் மாற்றங்கள் நிகழ்ந்து, சடாலென மக்களாட்சிக் கனவுகள் உயிர்பெறுகிறதா என்றால் அது இல்லை. எனக்கு நீ தேவையில்லை. உன்னுடைய ஆட்சி சகிக்கவில்லை. வெளியே போ. மிச்சத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற அளவில்தான் இப்போதைய எழுச்சிகள் நடந்திருக்கின்றன. இதிலும் இரண்டு தேசங்களைத் தவிர மற்ற எல்லா தேசங்களிலும் ஆட்சியாளர்கள், திமுக அரசின் இலவசத் திட்டங்களை மிஞ்சுவது போல திட்டங்களை அறிவித்து இப்போதைக்கான தற்காலிக நிம்மதியில் அரசணையினைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று சொல்லமுடியாது.

ஊர் ஊருக்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், அடிப்படையான காரணம் வேலை வாய்ப்பின்மையும், உலக மயமாக்கலும்தான். கோடிகள் கொட்டிக் கொழித்தாலும், சவுதி அரேபியாவில் ஒரு குவார்ட்டர் கூட வாங்கிக் குடிக்க முடியாது. எழுச்சி எழுந்த அத்தனை தேசங்களும் இஸ்லாமிய தேசங்களாக இருப்பதில் வியப்பில்லை. இஸ்லாமிய தேசங்களின் அரசர்கள், அவர்களுக்கு ஏற்றாற்போலத் திருமறையினை கஸ்டமைஸ் செய்து கொண்டதின் உச்சக்கட்ட வெறுப்புதான் இது.

அமெரிக்கா, ஒரு மாதிரியான – அதிமுக ரேஞ்ச் தேசம் என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. துனிசிய அதிபரை ஆதரித்ததும், பின்னால் எச்சரித்ததும், ஹோஸ்னி முபாரக்கைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதும், பின்னால் எகிப்து ராணுவம் செய்தது அற்பமான செயல் என்று ஒபாமா வாய் மலர்ந்ததும் என்று நீளும் வரலாற்றில், அமெரிக்காவின் இரட்டை நாக்கு அயோக்கியத்தனத்தையும், தங்களின் முதலாளித்துவ விஸ்தரிப்பையும், நுகர்வோர் கலாசார பலப்படுத்துதலையும் ஆழமாகச் சொல்லவில்லை. ஒட்டுமொத்த மக்களின் உச்சக் கடுப்புக்கு அடிப்படையான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும், பின் வெளிநாடுகளில் குடியேறி தன்னாட்டு மக்கள் அனுபவிக்கும் வசதிகளையும் கண்ட மத்திய தர வர்க்கத்தினரின் கோபமும், இயலாமையும், சகிப்புத்தன்மையின் உச்சமும்தான் இந்த வெடிப்புக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

‘அல்லாஹூ அக்பர்’ என்கிற கோஷத்தில்தான் எல்லா போராட்டங்களும் ஆரம்பித்தன. அல்லாஹ் மிகப் பெரியவன் என்பதுதான் அதன் அர்த்தம். இது திருமறையில் சொல்லப்பட்டதற்கான விளக்கம் – எதுவும் நம்மால் நடப்பதில்லை. எல்லா காரியத்திற்கும் அவனே காரணமாக இருக்கிறான். நம்மால் ஆவது என்பது உழைப்பைத் தவிர வேறெதுவுமில்லை. முடிவு அவன் கையில். அல்லாஹ் மிகப் பெரியவன். அவனடியில் தான் நாம் அனைவரும் என்பதே. இதை உணராத, புரிந்துகொள்ளாத அதிபர்களுக்கு, அனைத்தையும்விட மக்கள் சக்தி பெரிது என்பது இதன் மூலம் உணர்த்தப்பட்டிருக்கிறது.

சமகால வரலாற்றினை அதன் தீவிரத்தோடும், நேர்மையோடும், அதன் வெவ்வேறு பார்வைகளோடும் ஒரு சேரக் கொண்டு வருதல் மிக முக்கியமான காரியம். அந்த வகையில் இந்தப் புத்தகம் வரலாற்றினை அதன் நேர் / எதிர்மறைகளோடு அணுகுகிறது. 21ம் நூற்றாண்டின் மக்கள் எழுச்சியினைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், இந்தப் புத்தகம் ஓர் அற்புதமான தொடக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு… | பா. ராகவன் | விலை ரூ. 80

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லவும்.

மிச்சமிருக்கும் ஆயுதம்

ஓர் இளைஞன். காட்டில் தனியே நடந்துகொண்டிருந்தான்.

திடீரென்று அவன்முன்னால் ஒரு பிரம்மாண்டமான மிருகம் தோன்றியது. அவனைத் தூக்கிச் சாப்பிட முயன்றது.

அந்த இளைஞன் சுதாரித்துக்கொண்டான். தன்னிடம் இருந்த வில், அம்பை எடுத்து மிருகத்தின்மீது எய்தான்.

ம்ஹூம். பயன் இல்லை. அந்த மிருகத்தின் தோல் மிகத் தடிமனானது. அதில் அம்புகள் குத்திக் கீழே விழுந்தன.

அடுத்து, அவன் வேலைப் பறித்து எறிந்தான். கத்தியால் வெட்டினான். கோடாரியை வீசினான். எதுவும் எடுபடவில்லை.

கடைசியாக அந்த மிருகம் அவனைக் கையில் கிள்ளி எடுத்தது. அவன் அப்போதும் விடாமல் திமிறினான்.

மிருகம் சிரித்தது. ‘ஏன் இப்படி அலட்டிக்கறே? உன்னால என்னை எதுவும் செயமுடியாது. ஒழுங்கா எனக்கு இரையா மாறிடு. அதான் உனக்கு நல்லது!’

‘முடியாது’ என்றான் அவன். ‘என்கிட்ட எல்லா ஆயுதமும் தீர்ந்துட்டதா நினைக்கறியா? இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கு. அது இருக்கிறமட்டும் என்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது!’ என்றான்.

‘என்ன பெரிய ஆயுதம்? அது என் தோலைத் துளைச்சுடுமா?’ கேலியாகக் கேட்டது அந்த மிருகம்.

’உன் தோல் என்ன? இந்த உலகத்தையே துளைச்சு வரக்கூடிய ஆயுதம் அது’ என்றான் அந்த இளைஞன். ‘அதோட பேர், உண்மை!’

‘என்னது? உண்மையா?’

‘ஆமா! உண்மை மனசுல இருக்கும்வரை எந்தச் சூழ்நிலையிலும் பயம் தேவையில்லைன்னு என்னோட குருநாதர் எனக்குச் சொல்லியிருக்கார்!’

‘அப்படியா?’ ஆச்சர்யத்துடன் கேட்டது அந்த மிருகம். அவனைக் கீழே வைத்துவிட்டு வணங்கியது. ‘தயவுசெஞ்சு எனக்கும் அந்த உண்மையைச் சொல்லித்தருவியா?’

தம்மபதத்தில் வரும் சம்பவம் இது. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் மனத்தைத் தளரவிடக்கூடாது, உண்மையை வழிகாட்டியாகக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகச் சொல்லப்படும் கதை!

இன்னொரு கப் பாயசம்

ஒரு பணக்காரர். அவருடைய வீட்டுக்கு யார் வந்தாலும் வரவேற்று உபசரித்துச் சாப்பாடு போடுவார். கை நிறையப் பரிசுப் பொருள்களைக் கொடுத்து வழியனுப்பிவைப்பார்.

ஒருநாள், ஜென் மாஸ்டர் ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அவரை இந்தப் பணக்காரர் வரவேற்றுத் தன் இல்லத்துக்கு அழைத்துவந்தார்.

விருந்து பரிமாறப்பட்டது. பாயசம், பச்சடி, பொறியல், கூட்டு, அவியல், சாம்பார், ரசம், அப்பளம், வடை, தயிர், ஊறுகாய் என்று சகலத்தையும் சுற்றி வளைத்து ஒரு கட்டு கட்டிவிட்டார் அவர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர் அசந்துபோனார். ‘இந்த ஆளைப் பெரிய துறவின்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா இவர் ஏழு பேர் சாப்பாட்டை ஒரே ஆளாச் சாப்பிடறாரே. இதென்ன அதிசயம்! சாதாரணமா வாயைக் கட்டக்கூடமுடியாத இந்த ஆளா மனசைக் கட்டிப்போடறார்?’

அவருடைய குழப்பத்தை அந்த ஜென் மாஸ்டர் கவனித்துவிட்டார். ‘என்னப்பா விஷயம்?’ என்றார்.

‘சாமி, நான் கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது!’

‘இல்லை. நினைச்சுக்கமாட்டேன், தயங்காம கேளு!’

‘இந்தச் சாப்பாட்டை இப்படி ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடறீங்களே, உங்களைத் துறவின்னு எப்படி ஒத்துக்கறது? உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?’

துறவி மெல்லச் சிரித்தார். ‘இன்னிக்கு அறுசுவை உணவு சாப்பிட்டாலும், நாளைக்கு உப்பில்லாத பழைய சோறு சாப்பிட்டாலும், என் நாக்கு அதை அப்படியே ஏத்துக்கும். உன் நாக்கால முடியுமா?’

பணக்காரர் யோசித்து ‘ம்ஹூம், முடியாது’ என்றார். ‘பிரமாதமா இல்லாட்டியும் ஓரளவு சுமாராவாவாது சாப்பிடணும். இல்லைன்னா எனக்கு ஒத்துவராது!’

‘அதான் உனக்கும் எனக்கும் வித்தியாசம்’ என்றபடி விரலை நக்கிச் சுவைத்தார் ஜென் மாஸ்டர். ‘இன்னொரு கப் பாயசம் கிடைக்குமா?!’

தோழர்

அத்தியாயம் 21

 

புரட்சிகரமான ஜனநாயகத்தில் இருந்து கம்யூனிசத்துக்கு மார்க்ஸின் பாதை திட்டவட்டமாகத் திரும்பியிருந்த சமயம் அது. தன் கருத்துகளை அவர் கட்டுரைகளில் அழுத்தமாகப் பதிவு செய்து வந்தார். ‘ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொறுக்காமல் உண்மையான மனிதகுல விடுதலை என்பது சாத்தியமில்லை’. ‘சமூகத்தின் எல்லாத் துறைகளையும் விடுதலை செய்யாமல் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்து கொள்ள முடியாது’. ‘மனித குல விடுதலையின் தலை தத்துவஞானம் என்றால் அதன் இதயம் பாட்டாளி வர்க்கம்’.

அப்போதைய மார்க்ஸ் பற்றி அர்னால்ட் ரூகே என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘அவர் ஏராளமாகப் படிக்கிறார். அசாதாரணமான தீவிரத்துடன் பாடுகிறார். அவரிடம் விமரிசனத் திறமை இருக்கிறது. ஆனால்… அவர் எதையும் முடிப்பதில்லை. ஒன்றைவிட்டு இன்னொன்றுக்குத் தாவி விடுகிறார். மறுபடியும் முடிவில்லாத புத்தகக் கடலில் மூழ்கிவிடுகிறார்.’

மார்க்ஸ் தனது ‘பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள்’  நூலை எழுதியது இந்தப் பின்னணியில்தான். இந்தப் புத்தகத்தில் முதல் முறையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக- அரசியல் ணு அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. ஆராய்ச்சியின் மையமாக மனிதன் இருந்தான். இயற்கை, சமூகம் இரண்டோடும் அவன் கொண்டிருந்த சிக்கலான உறவுகளை மார்க்ஸ் இதில் ஆராய்ந்திருந்தார். முதலாளித்துவ சமூகத்திலுள்ள மனிதத்தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை தத்ரூபமாக மார்க்ஸ் இந்நூலில் அலசியிருந்தார்.

மார்க்ஸ் தன் புத்தகத்தை இப்படி ஆரம்பிக்கிறார். ‘மனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் (Material relations) தேடவேண்டும்’. மனிதனின் உற்பத்தி வாழ்க்கையும் அவனுடைய உழைப்பும் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசையாக செயல்படுகின்றன. மனித உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. இறுதியில், ‘இரண்டு வர்க்கங்கள் மட்டுமே எஞ்சுகின்றன. தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம்.’ ஒரு தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவு என்பது உழைப்புக்கும் திரட்டப்பட்ட உழைப்புக்கும் உள்ள உறவாகும் என்றார் மார்க்ஸ்.

எல்லாமே விற்பனை செய்யப்படுகிறது. எதையும் யாரிடம் இருந்தும் வாங்கிவிடமுடியும். அந்த அளவுக்குப் பணம் தலையான சக்தி கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த உலகத்தில், தொழிலாளியும் ஒரு பண்டமாகத்தான் மாறியிருக்கிறான். அனைத்து செல்வத்தையும் உற்பத்தி செய்யும் உழைப்பு ஒரு பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

தொழிலாளி அனைத்தையும் படைக்கிறான். ஆனால், அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. தொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்றபோது, அவனால் படைக்கப்படும் செல்வங்களின் உலகமும் அதிகரிக்கின்றது. அதே சமயம், இந்த செல்வம் தொழிலாளியை ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறது. செல்வம் அதிகமாக அதிகமாக தொழிலாளி மீதான அதன் ஆதிக்கமும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அந்த செல்வத்தை உற்பத்தி செய்த தொழிலாளி பலமிழந்தவனாகிறான். அந்த செல்வத்தின் உடைமையாளராக இருக்கும் முதலாளி பலம் கூடியவனாக மாறிப்போகிறான். தொழிலாளியின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முதலாளியின் உரிமைகள் கூடிவிடுகின்றன.

தொழிலாளி, தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாக மாறிப்போகிறான். அவனுடைய உழைப்பு, முதலாளியின் மூலதனமாக உருமாறுகிறது. அதே மூலதனம் அந்தத் தொழிலாளியை வேலைக்கு அமர்த்துகிறது. கூலி கொடுக்கிறது. தேவையில்லை என்றால் பணி நீக்கம் செய்கிறது. உயிர் வாழ்வதற்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே தொழிலாளிக்கு அந்த மூலதனம் கூலி தருகிறது. மற்றபடி, அவன் உழைப்பை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது.

தொழிலாளி தன் உழைப்பு மூலமாக அற்புதமான பல பொருள்களை உருவாக்குகிறான். ஆனால், அது வறுமையையே அவனுக்குப் பரிசாக அளிக்கிறது. தொழிலாளி அரண்மனைகளையும் மாளிகைகளையும் உருவாக்குகிறான். அவனுக்குச்  சேரிகளும் ஒதுக்குப்புறங்களுமே கிடைக்கின்றன. உழைப்பு வண்ணமயமான, அழகிய ஆடைகளை உருவாக்குகிறது. உழைப்பாளி கந்தல்களில் தன் மானத்தை மறைத்துக்கொள்கிறான். உழைப்பு அழகைப் படைக்கிறது. ஆனால், உழைப்பாளி அவலட்சணமாக மாற்றப்படுகிறான்.

மனிதனின் உழைப்புக்கு மாற்றாக இயந்திரம் கண்டுபிடிக்கப்படுகிறது. தொழிலாளி இன்னொரு இயந்திரமாக மாற்றப்படுகிறான். செலுத்தும் உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் மூளை அழிகிறது. தலைகீழான உலகம் இது. முதலாளித்துவம் இப்படிப்பட்ட சமமற்ற, ஒழுங்கற்ற, தலைகீழ் உலகங்களை மட்டுமே படைக்கும் என்பது தெளிவாகிறது. பொருள்களை படைத்தவனை அந்தப் பொருள்கள் அடிமையாக்குகின்றன. அந்த வகையில், தான் உற்பத்தி செய்த சல்வத்திடம் இருந்தும் பொருள்களிடம் இருந்தும் தொழிலாளி அந்நியமாகிறான்.

ஒரு தொழிலாளியிடம் இருந்து அவன் உழைப்பின் பலன்கள் அந்நியமாக்கப்படுகின்றன. ‘பிரச்னையின் ஒரு அம்சம் இது. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது. அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.’ (மார்க்ஸ் பிறந்தார், ஹென்ரி வோல்கவ்).

‘ஒரு தொழிலாளி தன்னுடைய சுதந்தரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை. அவன் உழைப்பு சுயநடவடிக்கை அல்ல. அது பலந்தப்படுத்தப்படும் கட்டாய உழைப்பு. அந்த நிகழ்வுப் போக்கின்போது, தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான். இந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியைச் சுதந்தரமாக வளர்க்கவில்லை. அவன் உடல் ஓடாகத் தேய்கிறது. அவன் தன் உடாலைக் கொடுத்து அறிவை அழித்துக்கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஓர் உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனால் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சாதனமாக இருக்கிறது’.

உழைப்பு அந்நியமாகியிருப்பதை எப்படி உணர்வது? தொழிலாளி அருவருப்புடன் அதனை செய்கிறான். பிளேக் நோயைக் கண்டு ஓடுவது போல் உழைப்பைக் கண்டு ஓடுகிறான். தப்பியோட முயல்கிறான். உழைப்பது ஒரு சாபக்கேடு என்பதாக நினைத்து தன்னைத் தானே வருத்திக்கொள்கிறான். பொருளையும் செல்வத்தையும் உற்பத்தி செய்யும் உழைப்பு, அந்த உழைப்பாளியிடம் இருந்து அந்நியப்பட்டுப்போனதால், உழைப்பாளி உழைப்பிடம் இருந்தும் அந்நியப்பட்டுப்போகிறான்.

உழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால், அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. ஒரு பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக இயங்குகிறான். உழைப்புக்கு வெளியில்தான் அவனுக்குச் சுதந்தரம் கிடைக்கிறது. சாதாரணமான, இயல்பான ஒரு வாழ்க்கை உழைப்புக்கு வெளியேதான் அல்லது உழைப்புக்குப் பிறகுதான் அவனுக்குக் கிடைக்கிறது. உணவருந்தும்போதும், மது அருந்தும்போதும், உறங்கும்போதும் அவன் சுதந்தரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.  ‘உழைப்பின் நிகழ்வுப் போக்கில், தொழிலாளியின் தொழிலாளியின் சுயஅந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடம் இருந்து அந்நியமாதல்.’

மார்க்ஸின் அந்நியமாதல் கோட்பாட்டை மான்செஸ்டர் நகர வீதிகளோடு பொருதிப் பார்த்துக்கொண்டார் எங்கெல்ஸ்.  அந்நியமாதல், மார்க்சியத்தின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக மாறிப்போனது. மார்க்ஸும் எங்கெல்ஸும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தபோது, இந்த அந்நியமாதல் கோட்பாடு அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சிபெற்றது. உண்மையான மனித உழைப்பும் மனித உறவுகளும் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றியும் ஒரு கம்யூனிஸ்ட் சமூகம் எப்படி இயங்கவேண்டும் என்பது பற்றியும் இருவரும் ஆழமாகச் சிந்திப்பதற்கு இந்தக் கோட்பாடு உதவியது.

உழைப்பு எப்படி இருக்கவேண்டும்? தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல் சுய உறுதிப்படுத்துதலாக இருக்கவேண்டும். அது வாழ்க்கையை நடத்தும் சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக இருக்கவேண்டும். மனிதன் தன் திறமைகளை முழுமையாக வளர்த்துக்கொள்ளக்கூடிய நிகழ்வுப் போக்காக இருக்கவேண்டும். வெளியில் இருந்து வரும் நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக்கூடாது. படைக்கவேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பே உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கவேண்டும்.

பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்னும் நூலில் மார்க்ஸ் இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறார். ‘என்னுடைய உழைப்பு, வாழ்க்கையின் சுதந்தரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கின்றேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.’

அந்நியமாதல் குறித்த தெளிவான பார்வையோடு மார்க்ஸ் தன் அடுத்தப் பணியைத் தொடங்கினார். தனது அடுத்த நூலை எங்கெல்ஸுடன் இணைந்து எழுத அவர் முடிவு செய்தார். எங்கெல்ஸின் விருப்பமும் அதுவேதான். ஒத்த சிந்தனையோட்டம் கொண்ட இரு தோழர்களும் தங்கள் முதல் புத்தகம் குறித்து உரையாட ஆரம்பித்தனர்.

(தொடரும்)

லஞ்சக் கலாசாரம்

23. ராபர்ட் கிளைவ்

 

ராபர்ட் க்ளைவ்

உலகத்தில் அத்தனைபேர் எண்ணமும் ஒரே போல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு விசயம் பிடித்தால் பலருக்கு அது பிடிக்காது. வில்லத்தனமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சாரருக்கு வில்லனாகப் படும் ஒரு ஆள் இன்னொரு சாரருக்கு நாயகனாகத் தென்படுவார்.  ஒரு நாட்டையே கொள்ளையடித்துக் கைப்பற்றியவரை,  அவரது நாட்டுக்காரர்கள் தேசத்தொண்டனாகப் பார்ப்பதும், கைப்பற்றப்பட்ட நாட்டுக்காரர்கள் பக்கா வில்லனாகப் பார்ப்பதும் சகஜம்.  இந்தியாவையே எடுத்துக் கொண்டால் இங்கு படையெடுத்து வந்து நமது வரலாற்றுப் புத்தகங்களில் கொள்ளைக்காரர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் நாம் படித்துக் கொண்டிருக்கும் பலர், அவரவர் நாடுகளில் தேசநாயகன்களாக போற்றப்படுகின்றனர்.  இவ்வரிசையில் நடுநாயகமாக வீற்றிருப்பவர் ராபர்ட் கிளைவ். இந்தியத் துணைக்கண்டம் ஆங்கிலேயர் வசமாவதற்கு முக்கிய காரணகர்த்தாவாகக் கருதப்படுபவர். அவரே இந்த வாரம் (நமக்கு) வில்லன்.

பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பின்னால் முகலாயர் ஆட்சி வலுவிழக்கத் தோன்றியது.  முகலாய அரசின் சிற்றரசர்களும் பிராந்திய ஆளுனர்களும், ஆளுக்கொரு மாநிலத்தை பிரித்தெடுத்துக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்தலாயினர். முகலாயர்களின் இந்த வீழ்ச்சியால் இந்தியாவில் ஒரு அதிகார வெற்றிடச்சூழல் உருவாகியது.  இக்காலத்தில் தலைதூக்கிய மராத்தியப் பேரரசும் இதை நீக்க முயன்று தோற்றது. யார் அடுத்து இந்தியாவை ஆளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த இக்காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவை வணிக நோக்குடன் பார்த்துவந்தனர். வர்த்தகமும் லாபமுமே பல்வேறு ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகளின் குறிக்கோள்களாக இருந்து வந்தன.  அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று முதலில் அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் முகலாயர்களுக்குப் பின்னால் இந்தியாவில் பலமான ஒரு  அரசு அமையாதது ஆட்சியைக் கைப்பற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட பேரரசை அமைப்பது அவர்களது குறிக்கோளாக இல்லை, அதிகாரத்தால் அதிகமாக சம்பாதிப்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசிய, டானிய என பல கிழக்கிந்தியக் கம்பனிகள் அப்போது இந்தியாவில் இருந்தாலும், இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை வளைத்துப் போடும் ரேசில் ஜெயித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி தான். இதற்கு முதற் காரணம் ராபர்ட் கிளைவ்.

கிளைவ் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். இங்கிலாந்து நடுத்தர இளைஞர்கள் பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டுமென்றால் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து இந்தியாவில் சில காலம் பணிபுரிவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கப்படி கிளைவும் தனது பதினெட்டாவது வயதில் கம்பனியில் ஒரு எழுத்தராகச் சேர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார். அவர் இந்தியா வந்த காலத்தில், பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கும் தென்னிந்தியாவில் யார் தாதா ஆவதென்று பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. இந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் இரு நாடுகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு போர் மூளும்போதெல்லாம், அதைக் காரணம் காட்டி இந்தியாவிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிந்தியாவில் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை தான் பிரிட்டிஷாரின் தலைமையிடமாக இருந்தது.  கிளைவ் சென்னைக்கு வந்து எழுத்தராக வேலை பார்க்கத் தொடங்கி சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைத் தாக்கினர். பாண்டிச்சேரி ஆளுனர் டூப்ளே தலைமையிலான பிரெஞ்சுப் படை சென்னையைக் கைப்பற்றி கிளைவ் உட்பட பல கம்பனி ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டது.  சென்னையை மீட்க கம்பனிகாரர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே கிளைவ் தன் சக ஊழியர்களோடு சென்னையிலிருந்து தப்பினார்.  சாதாராண குமாஸ்தாவான இளைஞன் ஒருவன் தந்திரமாக பிரெஞ்சுப் பிடியிலிருந்து தப்பியது கம்பனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அவர்கள் கம்பனி படையில் அதிகாரியாக கிளைவை நியமித்தார்கள்.

ஆனால் வெகு சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்களோடு அமைதி உடன்பாடு கையெழுத்தானதால், கிளைவ் மீண்டும் பழைய எழுத்தர் வேலைக்கே போக நேரிட்டது. ஆனால் சென்னையிலிருந்து தப்பியபோது கிடைத்த சந்தோஷத்தை கிளைவ் மறக்கவே இல்லை. அவருக்கு எழுத்தர் வாழ்க்கை சலித்துப் போனது. பிரெஞ்சுக்காரர்களோடு நிகழ்ந்த அடுத்த கட்ட மோதலில் தானாக முன்வந்து படைகளில் மீண்டும் சேர்ந்தார்.  டூப்ளேவும், கம்பனியும் கர்னாடகப் பகுதியை (தற்கால ஆந்திரா, தமிழகம்)  யார் கட்டுப்படுத்துவது என்று பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர். கம்பனி முகமது வாலாஜாவையும்,  டூப்ளே சந்தா சாகிபையும் ஆதரித்தனர். 1751ல் சந்தா சாகிபின் பெரும்படையொன்று பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஆற்காட்டை முற்றுகையிட்ட போது, ஆற்காட்டுப் படைகளுக்குத் தலைமையேற்ற கிளைவ் திறமையாகச் செயல்பட்டு முற்றுகையைத் தோற்கடித்தார். இதனால் அவரது புகழ் கம்பனி வட்டாரங்களில் பரவத்தொடங்கியது.  சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்த கிளைவ், இம்முறை வங்காளத்துக்கு அனுப்பப்பட்டார்.

தென்னாட்டைப் போலவே வங்காளத்திலும் கடும் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கும் உள்ளூர் அரசியலில் கம்பனிக்காரர்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இது பிடிக்காத வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தாலா கம்பனித் தலைமையிடமான கல்கத்தா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். கல்கத்தாவை சிராஜ் உத்-தாலாவிடமிருந்து மீட்க ஒரு திறமையான ஆள் கம்பனிக்குத் தேவைப்பட்டது. ஆற்காடு முற்றுகையை திறம்பட சமாளித்த கிளைவின் தலைமையில் ஒரு சிறுபடையை  கல்கத்தாவுக்கு அனுப்பினர்.  நவாபின் பலமோ அளப்பரியது, படைபலமும் பணபலமும் பெரியது. கிளைவிடம் இருந்ததோ சிறு படை. நேரடியாக நவாபுடன் மோதினால் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த கிளைவ் அதிரடித் தாக்குதல் உத்திகளைக் கையாண்டார். விரைவில் கல்கத்தாவை நவாபிடமிருந்து மீட்டார். அடுத்து நவாபை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினார். நவாபின் ஆட்களுள் அவர் மீது அதிருப்தியடைந்த சிலர் நவாப் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வந்தனர். இந்த செய்தி கிளைவின் காதுகளை எட்டியவுடன் உடனடியாக சதிகாரர்களை சந்தித்தார்.  நவாபின் படைத்தளபதி மீர் ஜாஃபர் தான் இந்த சதிகாரர்களின் தலைவர்.  மீர் ஜாஃபரின் பதவி ஆசையைப் பயன்படுத்திக் கொண்ட கிளைவ், சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுத்தால் ஜாஃபரை அடுத்த நவாபாக்கி விடுவதாக ஆசைகாட்டி தன் கைக்குள் போட்டுக் கொண்டார்.

ஜாஃபருக்கும் கிளைவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் உமிச்சந்த் என்ற வங்காள வர்த்தகர்.  சதிகார கும்பலுக்கும் கம்பனிக்குமிடையே தூதராக செயல்பட்டு வந்தார். தனது சேவைகளுக்கு பதிலாக அதிக பணம் வேண்டுமென்று கிளைவை நச்சரித்து வந்தார். நவாபுக்கு துரோகமிழைக்க ஜாஃபரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த அதே சமயம் உமிச்சந்துக்கு ஒரு துரோகத்தைச் செய்தார் கிளைவ்.  சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுக்க உதவினால் மூன்று லடசம் பவுண்டுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கேற்றார் போல ஒரு போலிப் பத்திரத்தைத் தயார் செய்து உமிச்சந்திடம் காட்டினார். அதனை நம்பி ஏமாந்த உமிச்சந்தும் மீர் ஜாஃபர்-கிளைவிடையே தூது போய் வந்தார். ஜாஃபரைக் கைக்குள் போட்டுக் கொண்டவுடன் சிராஜ் உத்-தாலாவை சண்டைக்கு இழுத்தார்.  1757ல் வங்காளத்தில் பலாஷி என்ற இடத்தில் (ஆங்கிலத்தில் பிளாசி என்றானது) இரு தரப்பும் மோதிக்கொண்டன. பிளாசி சண்டை (Battle of Plassey) என்று தற்போது வரலாற்றாளர்களால் அறியப்படும் இந்த சண்டை தான் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்தது.  சிராஜ் உத்-தாலாவின் படைகள் கம்பனிப் படைகளை விட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகம். ஆனால் அவற்றில் ஒரு பகுதி மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டில் இருந்தது.  சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மீர் ஜாஃபாரின் படைப்பிரிவு போரிலிருந்து விலகிக் கொண்டது. ஜாஃபரின் துரோகம் தந்த அதிர்ச்சியிலிருந்து சிராஜ் உத்-தாலா மீள்வதற்குள் கிளைவின் படைகள் அவரது படைகளைத் தோற்கடித்துவிட்டன. சிராஜ் உத்-தாலா உயிர் பிழைக்க போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார். ஆனால் ஜாஃபரின் சக சதிகாரர்கள் அவரைக் கைதுசெய்து கொலை செய்துவிட்டனர்.  ஜாஃபர் வங்காளத்தின் புதிய நவாப் ஆனார், இந்தியாவில் பிரிட்டிஷ ஆதிக்க காலம் தொடங்கியது. (கிளைவ் ஆரம்பித்து வைத்த துரோக சூழ்ச்சி உத்திகளை சில ஆண்டுகளில் ஜாஃபர் மீதே பிரயோகித்தனர் பிரிடிஷ்காரர்கள் – அவரை நவாப் பதவியில் இருந்து தூக்கி விட்டு அவரது மருமகன் மீர் காசிமை நவாப் ஆக்கிவிட்டனர்.)

தன்னை நவாப் ஆக்கியதற்கு நன்றிக்கடனாக கிளைவுக்கு பணத்தை அள்ளி வீசினார் மீர் ஜாஃபர். கம்பனி கணக்கிலும், படை வீரர்கள் கணக்கிலும் எழுதியது போக லட்சக்கணக்கில் சொந்த செலவுக்காகவும் வங்காள அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார் கிளைவ்.  இப்படி உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து நேரடியாக கையூட்டு வாங்கும் பழக்கத்தைக் கிழக்கிந்திய கம்பனிக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை கிளைவையே சேரும். சம்பாதிக்க நினைத்ததை விட பல மடங்கு ஈட்டியபின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் மூன்றாவது முறையாக 1765ல் மீண்டும் இந்தியா திரும்பினார். இம்முறை சூழ்ச்சிகளில் ஈடுபடாமல் நேரடியாக முகலாயப் பேரரசரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தியாவின் பல பகுதிகளை கம்பனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதன் மூலம் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியாளராகிவிட்டது. அடுத்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் கம்பனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.

நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பின்னால் கிளைவ் கம்பனியின் நிருவாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த லஞ்சக் கலாசாரம் கம்பனியின் கீழ்மட்டம் வரை பரவியதால் அவரது சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்பனி பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்று  இங்கிலாந்து திரும்பிய கிளைவ் சில வருடங்களுக்குப் பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்தியாவில் செய்த காரியங்களால் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு கருத்தும்,  தீராத நோயினால் அவதிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்னொரு கருத்தும் நிலவுகின்றன. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லையென்றாலும்,  பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஆரம்பித்து வைத்த வேலையை, வாரன் ஹாஸ்டிங்க்ஸ், ஆர்தர் வெல்லஸ்லி,  தல்ஹாய்சி ஆகியோர் முடித்து வைத்தனர். இந்தியத் துணைக்கணடம் முழுவதும் அடுத்த நூற்றைம்பதாண்டுகளுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது.  இப்போது இந்தியர்களால் நாட்டைக் கொள்ளையடித்த வில்லனாகவும், பிரிட்டிஷ்காரர்களால் சிலைவைத்துப் போற்றப்படும் நாயகனாகவும் விளங்குகிறார் கிளைவ்.

மலையும் மணலும்

ஜென் துறவி ஒருவர். ஆற்றங்கரையில் காற்று வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு விவசாயி வந்தார். துறவியைப் பார்த்ததும் வணக்கம் சொன்னார். ‘ஐயா, எனக்கு ஏதாச்சும் ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்க!’

‘உனக்கு என்னப்பா பிரச்னை? நான் என்ன அறிவுரை சொல்வது?’

விவசாயி கொஞ்சம் தயங்கினார். ‘என் சிநேகிதங்கல்லாம் பெரிய பணக்காரங்க, நிறைய நிலம் வெச்சிருக்காங்க, ஏகப்பட்ட பயிர் விளைவிச்சு, அறுவடை செஞ்சு, லட்சம் லட்சமாச் சம்பாதிக்கறாங்க’ என்றார். ‘ஆனா நான் ரொம்ப ஏழை. வெறும் அரை ஏக்கர் நிலத்தில முக்கி முனகிப் பயிர் செய்யறேன். அவங்களுக்கு நடுவில நான் ரொம்பச் சின்னவனா உணர்றேன். அவங்க அவ்ளோ உயரத்தில இருக்காங்க, நாம இப்படிக் கீழே பாதாளத்தில இருக்கோமே-ன்னு யோசிச்சா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!’

புரிந்ததுபோல் தலையாட்டினார் துறவி. ’வா, என் பக்கத்தில உட்காரு!’ என்றார்.

‘பரவாயில்லை சாமி. நான் இங்கேயே நிக்கறேன்!’

‘அட வாப்பா!’ என்று அவரை இழுத்து அருகே உட்காரவைத்தார் துறவி. ‘இப்ப நாம உட்கார்ந்திருக்கிறது பெரிய பாறை. இல்லையா?’

‘ஆமா சாமி!’

‘அதோ அங்கே கீழே கிடக்கறது?’

‘அதெல்லாம் சின்னக் கூழாங்கல்லுங்க.’

‘கொஞ்சம் தொலைவுல ஆத்தங்கரையில?’

‘அங்கே கண்ணுகெட்டின தூரம் வரைக்கும் மண்ணுதான் இருக்கு சாமி!’

‘ஆக, பெரிய பாறைகள் இருக்கிற இதே உலகத்திலதான், சின்னக் கூழாங்கற்களும் இருக்கு, அதைவிடச் சின்ன மணல் துகள்களும் இருக்கு’ என்றார்.

அந்த விநாடியில், விவசாயிக்கு ஞானம் கிடைத்துவிட்டது. அவர் எப்போதும் தன்னுடைய உயரத்தை நினைத்துக் கவலைப்படாமல் நிம்மதியாக வாழப் பழகிக்கொண்டார்.