ஆழி பெரிது!

16. வேதத்தில் பெண் தெய்வங்கள்

பெண் தெய்வங்கள் வேதங்களில் இல்லை. ஆண் தெய்வங்களே அதில் அதிகமாக உள்ளன என்கிற மேலைநாட்டு இந்தியவியலாளர்களின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் பிற்காலத்திய இந்தியவியலாளர்கள். மேற்கத்திய மனதிற்கு பொதுவாகவே இருமைப்படுத்தும் பார்வை இருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களும், பொதுவான மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களும், வெளியில் இருந்து வந்த ஆரியர்களின் பண்பாடே வேதப்பண்பாடு என்றும் இங்குள்ள பூர்விகவாசிகளின் பண்பாடு வேறானது என்றும் கூறினார்கள். பின்னாட்களில் பிஷப் கால்டுவெல் என்கிற கிறிஸ்தவ மத பிரச்சாரகர் திராவிட இனம் இங்கே ஆரியர்கள் வருவதற்கு முன்னதாக இருந்ததாகவும் அந்த திராவிடர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தாம் என்றும் கூறினார். இன்றைய மரபணு ஆராய்ச்சிகளும் அகழ்வாராய்ச்சிகளும் இந்த ஆரிய-திராவிட இனவாதங்களை பெருமளவில் பொய்யாக்கியுள்ளன. என்றாலும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது. அதாவது அவர்கள் இன்னும் ஆரிய-திராவிட இனவாதத்தை நம்புகிறார்கள். அதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் கூட அது அவர்களின் அறிதலில் ஒரு பாகமாகிவிட்டது.

இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மார்க்சிய வரலாற்று அறிஞரான கோசாம்பியைச் சுட்டிக்காட்டலாம். அவர் வேதங்களில் ஆரியர்கள் ஆரியரல்லாத அல்லது ஆரியருக்கு முந்தைய தாய் தெய்வ வழிபாடுகளைத் தம்முடையதாக்கிக் கொண்டதாகக் கூறுகிறார். எந்த தாய் தெய்வ வழிபாட்டையும் அல்லது தாய் தெய்வம் சார்ந்த தொன்மத்தையும் இனக்குழு வரலாற்றின் நினைவாகவே காண்கிறார். உதாரணமாக மகிஷாசுரமர்த்தினி தொன்மம் என்பது எருமையை இனக்குழு குறியீடாகக் கொண்ட ஒரு குழுவின் போராட்ட வரலாறு தொன்மமானதே என்கிறார். இத்தகைய மார்க்சிய புரிதல்கள் தொன்மங்களை வரலாற்று நினைவுகளாக அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் குறியீடுகளாக புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றன. மார்க்சிய அறிதல் முறையில் கோசாம்பி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கினார். ஆனால் இந்திய அறிதல் முறையில் இதை நாம் காண வேண்டியுள்ளது. தொன்மம் அல்லது ஒரு குறியீடு குறித்த ஒரு முழுமையான பார்வை தேவை. அதாவது அந்த குறியீட்டை யார் உருவாக்கினார்களோ எந்த காரணத்துக்காக அதனை உருவாக்கினார்களோ அவர்களின் பார்வையில் அதனை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வாழ்ந்த சூழலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்ன தேவைகள் –சமூக, பொருளாதார அரசியல் சூழல்கள் மற்றும் அகத்தேவைகள் இணைந்து இந்த குறியீட்டை உருவாக்க ஒரு கவியின் அதி-உணர்வுகளைத் தூண்டின? இதனை நாம் கேள்வியாகக் கொண்டால் அந்த தேடலில் துரதிர்ஷ்டவசமாக நாம் கோசாம்பியின் அணுகலை முழுமையான ஒரு பார்வையாக கொள்ள முடியாது. மேலும் மார்க்சியத்தில் இன்றியமையாத அடிப்படையான மோதலை மையப்படுத்தும் பார்வை நம்மை தவறான திசையிலும் இட்டுச்சென்றுவிடக் கூடும்.

ஏற்கனவே ஆரிய-திராவிட அல்லது ஆரியரல்லாத ஒரு பண்பாட்டு இருமை அவற்றுக்கிடையிலேயான மோதல் ஆகிய கோட்பாடுகள் நம் சமூக ஆராய்ச்சிகளுக்கு ஒரு பெரும் சுமையை அளித்துவிட்டன. இந்த இருமைத்தன்மையின் மேல் மேலும் மேலும் இரட்டை நிலைபாடுகள் சுமத்தப்படுவது நமது அறிதலை மேலும் மேலும் குழப்பங்களிலும் தெளிவான பார்வையின்மையிலும் ஆழ்த்திவிடுகின்றன.

ஆரிய-திராவிட இரட்டை நிலைபாடுகள் தவறானது என்பதே அறிஞர்களின் ஆன்ற முடிவு. இந்த தொடரும் அந்த நிலைப்பாட்டுடன்தான் வேதங்களை அணுகுகிறது. இந்த அணுகலுடன் வேத பெண் தெய்வங்களை இந்திய பண்பாட்டின் மிக முக்கிய அம்சமான பெண் தெய்வ வழிபாட்டுடன் இணைக்க முடியுமா என பரிசீலிக்கிறது. ஆண் தெய்வங்களே வேதங்களில் அதிகமாகச் சொல்லப்பட்டுள்ள போது எப்படி இன்றைய சூழலில் தனிப்பெரும் பிரதான வழிபாட்டு முறையாக விளங்கும் பெண் தெய்வ வழிபாட்டை (சாக்தம்) வேதத்துடன் இணைக்கமுடியும்?

இன்று பரந்து விரிந்து செழித்திருக்கும் பாரத பெண் தெய்வ வழிபாட்டுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகில் இந்த அளவு செழுமையும் பன்மைத்தன்மையும் கொண்ட பெண் தெய்வ வழிபாட்டை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். இந்த தனித்தன்மையின் பரிணாம வேர்களை நாம் தேடினால் அவற்றை வேத இலக்கியத்தில் கண்டடைய முடிகிறதா என்பதையே நாம் காண வேண்டியுள்ளது. வேதத்தின் மொழிப் பிரவாகமே அன்னையாக –வாக் எனும் பெண் தெய்வமாக- உருவகிக்கப்பட்டுள்ளது. ஆக வேதமே வாக் எனும் பெண் தெய்வத்துக்குள்ளாக இருப்பது என உருவகிக்கமுடியும். வேதத்தின் ஆதி தாய் தெய்வம் அதிதி. தெய்வங்களின் தாய். நன்மாந்தர்களின் தாய். ரிதமெனும் பிரபஞ்ச ஒழுங்கின் என்றென்றைக்குமான அரசி அவளே. அரசர்களின் அறமெனும் பாதுகாப்பு அவளே. என்றென்றும் அழியாமல் என்றென்றைக்கும் விரிவாகும் தாய் தெய்வம். காப்பதில் அதி-உயர் சான்றாண்மை கொண்டவள் அவள். சான்றாண்மையின் பாதையில் மாந்தரை வழிநடத்துபவள் அவள். இவ்வாறு யஜுர் வேதம் (21.5) அவளைப் போற்றுகிறது. ஒரு தாய் தனக்கு மிகவும் செல்லமான ஒரு குழந்தை அளிக்கும் மலர் மாலையை எப்படி ஆனந்தத்துடன் அணிந்து கொள்வாளோ அதே போல நான் அளிக்கும் இந்த பாடலை ஏற்றுக்கொள் என அதிதியிடம் வேண்டுகிறார் ரிக்வேத கவி.(5.42.2)

புகழ்பெற்ற இந்தியவியலாளர் ஆனந்த குமாரசாமி இந்தியாவின் மிகப்பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் அதிதியையே காட்டுவனவாக இருக்கலாம் என ஊகிக்கிறார்.வேதத்தின் பெண் தெய்வ சொற்சித்திரங்களே பின்னர் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள பெண் தேவதை வடிவங்களின் படிம ஆதாரமாயிற்று என்கிறார் ஸ்டெல்லா க்ராம்ரிஷ் என்கிற இந்தியவியலாளர். இதிலிருந்து மேலும் பரிணமித்து மக்களிடையே பரவிய பெண் தெய்வ வடிவம் இப்போது லஜ்ஜா கௌரி என அழைக்கப்படுகிறது. பொதுவாக மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் வளமைக்கான பெண் தெய்வம் (fertility goddess) என்பார்களே அத்தகைய பெண் தெய்வத்துக்கான அனைத்து தன்மைகளும் கொண்ட தெய்வம் இது. இதன் மிகப் பழமையான வடிவத்தை ஹரப்பா பண்பாட்டுக் காலங்கள் கொண்டே காணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதே தன்மை கொண்ட படிமம் சந்திரகேதுதுர்க்கத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சுதை வடிவமாகக் கிடைக்கிறது. லஜ்ஜா கௌரி என அறியப்படுபவள் தலையற்ற பெண் தெய்வம். பத்மத்தை தலையாகக் கொண்டு இருகால்கள் விரித்து குத்த வைத்திருக்கும் பெண் தெய்வம். இவளது மிகத் தொன்மையான கவிப்படிமம் ரிக்வேதத்தில் கிடைக்கிறது. அவள் களங்கமற்றவள்; புவியைத் தன் மடியில் கொண்டவள்; அனைத்து வளங்களையும் அள்ள அள்ள குறையாமல் தருபவள்; புவியின் மையம்; அனைத்து தேவர்களின் அன்னை. ஆம். லஜ்ஜா கௌரியின் ஆதார வடிவம் வேதங்களில் அதிதி என அறியப்படும் பெண் தெய்வமே. அதிதி எனும் வேத இலக்கிய வடிவத்தை அவள் ஏற்பதற்கு முன்னால் பல மக்கட் சமுதாயங்களால் அவள் என்னென்னவோ பெயர்களில் வணங்கப்பட்டிருக்கலாம். ரிக் வேதத்தின் ஒரு பாடல் அவ்வாறு அதிதி வணங்கப்பட்ட அனைத்து வகைகளையும் அறிவிப்பது போலவே சொல்கிறது:

அதிதியே வான்; அவளே காற்று; அவளே அனைத்து தெய்வங்களும். அவளே அரசனும் மகவும்; அவளே அனைத்து மக்களும். அவளே இதுவரை பிறந்த அனைத்து வடிவங்களும். அவளே இனி தோன்றப்போகும் அனைத்து வடிவங்களும். (1.89.10)

லஜ்ஜா கௌரி என்கிற தெய்வமாக அவள் வழிபடப்பட்ட தெய்வமே வேதங்களில் அதிதி எனும் வடிவெடுத்தாள். அதிதி எனும் வேத பெண் தெய்வமே லஜ்ஜா கௌரி என்றும் வடிவெடுத்தாள். வடிவங்கள் அனைத்திலும் அவள் தனிப்பெரும் தாய் தெய்வமாகவே இருந்தாள்.  வேதத்தின் ஒரு முக்கியமான தன்மை இது அதில் காணப்படும் தெய்வ வடிவங்கள் ஆன்மீகக் குறியீடுகள் மெல்ல மெல்ல கனிந்து உள்ளேறியவை. மேலும் மேலும் வளர்பவை. வேதங்கள் முடிந்துவிட்ட இறை அறிவிப்புகளோ உறைந்துவிட்ட இறை வாக்குகளோ அல்ல. அவை உயிர்துடிப்பும் பரிணாம சாத்தியமும் கொண்ட ஆன்மிக வித்துக்களின் களஞ்சியம்.

மேலதிக விவரங்களுக்கு:

சமம்

அது ஒரு ஜென் பள்ளி. இரண்டு தலைமுறைகளாகப் பல ஆயிரம் துறவிகள் அங்கே முறைப்படி பயிற்சி பெற்றுத் தேர்ந்திருந்தார்கள்.

இன்றோடு அந்த ஜென் பள்ளி தொடங்கிக் கால் நூற்றாண்டு காலம் நிறைவடைகிறது. வெள்ளி விழாவைக் கொண்டாடப் பள்ளியின் நிறுவனர், தலைமை குருநாதர் எல்லோரும் வந்திருந்தார்கள்.

அந்த விழாவில் பள்ளியின் முன்னேற்றத்துக்குப் பங்களித்த கொடையாளர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதன் அடையாளமாக அவர்களுக்கு அழகிய பதக்கங்களும் வழங்கப்பட்டன.

கடைசியாக, அந்தப் பள்ளியிலேயே தங்கியிருக்கும் சமையல்காரர், அவருக்கு உதவி செய்யும் ஊழியர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள், பணியாள்கள் எல்லோரும் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன் கையாலேயே பதக்கங்களை வழங்கிக் கௌரவித்தார் தலைமை குருநாதர்.

இதைப் பார்த்த மற்ற சில துறவிகள் சிடுசிடுத்தார்கள். ‘அவங்களையும் எங்களோட ஒண்ணா மேடையில நிறுத்தி அசிங்கப்படுத்திட்டீங்களே. நாங்களும் அவங்களும் சமமா?’ என்றார்கள்.

‘சமம்தான்!’ என்றார் தலைமை குருநாதர்.

‘என்ன சொல்றீங்க? நாங்கல்லாம் பெரிய பண்டிதர்கள், மெத்தப் படிச்சவங்க, நூற்றுக்கணக்கானவங்களுக்குப் பாடம் சொல்லித்தந்து கரைசேர்த்திருக்கோம். ஆனா அவங்க? சாதாரணக் கூலியாளுங்க! நாங்களும் அவங்களும் எப்படி ஒண்ணாகமுடியும்?’

‘தம்மபதத்தில புத்தர் என்ன சொல்றார் தெரியுமா?’ புன்னகையோடு விளக்கினார் தலைமை குருநாதர். ‘இந்த ஆசிரமத்தில, இந்த ஊர்ல, இந்த நாட்டிலே, இந்தச் சமூகத்திலே எங்கே பார்த்தாலும் ரெண்டுவிதமான உறுப்பினர்கள் இருப்பாங்க. முதல் வகை, பாடம் சொல்லித்தர்றவங்க, அடுத்த வகை, படிக்கறவங்களுக்கும் பாடம் சொல்லித்தர்றவங்களுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்யறவங்க, இந்த ரெண்டு வகை உறுப்பினர்களும் சரிசமமாச் சேர்ந்து வேலை செய்யாட்டி, அந்தச் சமுதாயம் புத்தியளவில முன்னேறமுடியாம தேங்கிப்போயிடும்! புரிஞ்சதா?’

காதல் புராணம் 12

12. தீ

தெரிவை [வயது : 26-31]

111

உன் பற்களின் கூர்மையை

நான் உணர நேர்கையிலென்

வெட்கம் மழுங்கியிருந்தது.

112

உன் காமம் பிடிக்கும்;

அதைவிடப்பிடிக்கும்

அத‌ற்கும் முந்தைய…

113

ஒளிர்விளக்கணத்தவுடன்

வெளிச்சத்தின் பின்னாலே

காணாமல் போகிறதென்

உடன்பிறவா வெட்கம்.

114

நட்சரத்திரங்களுதிரும் பின்னிரவில்

இன்னொருமுறை துல்லியமாயுன்

தூக்கங்கலைத்திட‌ அனுமதிப்பாயா?

115

என்னையெரித்து

உயிர்ப்பித்ததுன்

காமக்கொடுந்தீ.

116

உன் வேர்வைத்துளியில்

முறித்து விடுகிறாயென்

வெட்கத்தின் விஷ‌த்தை.

117

பல் படக் காதுமடல் கடிக்கையில்

உடலெங்கும் மெலிதாய்ப் பரவும்

சொற்பவோல்ட் மின்சாரத்தின்

ஒட்டுமொத்தச்சுகமறிவாயா நீ?

118

காதோரம்

கழுத்தோரம்

உதட்டோரம்

உயிரோரம்

பரவும் தீ – நீ.

119

நமது காதலின் ஆழம் சொல்லும்

ஒவ்வொரு உறவின் முடிவிலும்

நுண்மையாய்ச்சந்தித்திணையும்

பரஸ்பர உச்சமெய்தல் நிகழ்வுகள்.

120

நிதமுனைத்திட்டுகிறேன் மிகச்செல்லமாய்

நிர்வாணப்பொன்ன‌கைசூடி சுடுநீராடுகையில்

தேகமெங்குமெரியுமுன் நகக்கீறல்களுக்காக.