நான் எங்கே போவேன்?

அவர் ஒரு பெரிய ஜென் துறவி. தினமும் பொதுமக்களைச் சந்தித்து உபதேசங்கள் செய்வார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வார், பாடம் நடத்துவார், பிரார்த்தனை செய்வார்!

ஒருநாள், இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது ஒருவர் கேட்டார். ‘குருவே, நீங்கள் இறந்தபின் என்ன ஆவீர்கள்? சொர்க்கத்துக்குச் செல்வீர்களா? அல்லது நரகத்துக்கா?’

துறவி கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னார். ‘நிச்சயமாக நரகத்துக்குதான் செல்வேன்!’

கேள்வி கேட்டவன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நரகத்துக்கா?’ என்று அதிர்ச்சியோடு கேட்டான். ‘ஆனால் உங்களைமாதிரி புண்ணிய ஆத்மாக்கள் சொர்க்கத்துக்குதான் செல்வார்கள் என்று நான் படித்திருக்கிறேனே’ என்றான் தயக்கத்தோடு.

‘உண்மைதான். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை’ என்றார் துறவி. ‘சொர்க்கத்தில் எல்லோரும் ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என்னைப்போன்ற வழிகாட்டியின் துணை அவசியப்படாது. ஆனால் நரகத்தில் பலருக்கு நான் தேவைப்படுவேன். அவர்களுக்குச் சேவை செய்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி!’

‘லங்கர்’ ஆட்டம்

பார்த்திபன், கவுண்டமணி நடித்தப் படம். இரண்டு பேரும் சிறு திருடர்கள். ஏதோ ஒரு குற்றத்திற்காக போலீஸ் பிடித்துக் கொண்டுப் போய் அடித்து, இவர் மேல் நான்கு வழக்கு, அவர் மேல் நான்கு வழக்கு என்றுப் போடுவார்கள். அப்போது கவுண்டமணி கேட்பார் ‘ஹவாலான்னா என்னவே?’ அதற்கு அந்த காவலர் ‘லே அது அன்னியச் செலவாணி மோசடிலே’ எனப் பதில் கூற, அதற்கு கவுண்டமணியின் கவுண்டர் பஞ்ச் ‘ம்ஹ்ம், நாங்க உள்ளூர் செலவுக்கு வக்கிலாமதான் திருடறோம், இதுல அன்னிய செலவாணி வேறயா’ என்பார்.

அன்னிய செலாவணி, பெமா (FEMA), பெர்ரா (FERA) மாதிரியான வார்த்தைகளை நாம் 90களின் பிற்பகுதியில் இருந்துப் படித்து வருகிறோம். ஏற்றுமதியை முக்கியமாகக் கொண்ட நகரங்களில் திருப்பூரும் ஒன்று. வருடா வருடம் தீபாவளி, பொங்கல் போல, திருப்பூரில் ஏதாவது ஒரு டூபாக்கூர் பாரெக்ஸ் (Foreign Exchange சுருக்கமாய் ForEx)கம்பெனி ஏமாற்றி ஒடிப் போவார்கள். 2009ல் நடந்த கதையில் போனது ரூ.50 கோடி. முட்டாள் ஜனங்களுக்கும், பேராசைப் பிடித்துத் தொடர்ச்சியாக ஏமாறுவார்கள்.

திருப்பூர் மாதிரியான ஊர்களில் இந்தப் பாரெக்ஸ் நிறுவனங்கள் கடைப் பரப்பி, கல்லாக் கட்டி ஒடுவதற்கான முக்கியமான காரணம் Currency futures பற்றிய அடிப்படை அறிவு இல்லாதது தான். ஆனால், வெள்ளையன் மாதிரியான சங்கத் தலைவர்கள் யூகப் பேர வணிகம்தான் (Futures & Options) பொருட்களின் ஒட்டுமொத்த விலையேற்றத்துக்குக் காரணம் என்று கொடிப் பிடித்து, போராட்டம் நடத்தி, அரசியல் ரீதியாக பயமுறுத்தி அடிப்படையான விஷயத்தினை மறக்கடிப்பார்கள். மக்களும் ஆமாஞ்சாமிப் போட்டு, கடைசியில் ‘டாலர்லப் போட்ட ஒரே மாசத்துல 10000ரூபாய்க்கு ரூ.1000 தராங்களாம், வேற எவன் கொடுப்பான்’ என்று லட்சலட்சமாய் காசைக் கொட்டி, கமிஷனர் ஆபிஸில் புலம்பி, பனகல் பூங்காவில் சங்கம் அமைத்து காத்திருப்பார்கள்.

அலுவலகம் போட்டு ஆசைக் காட்டி ஏமாற்றும் கும்பல் ஒரு பக்கமென்றால், இணையத்தில் இந்த பாரெக்ஸ் கும்பல் பண்ணும் அட்டகாசம் இன்னும் அதிகம். உதாரணம் – இந்த ஆஸ்திரேலிய நிறுவனம். அதன் முதல் பக்கத்தில் 400:1 leverage என்றுச் சொல்கிறது. இந்த மாதிரி லெவரேஜெல்லாம் பண்ணி சம்பாதிக்க முடியுமென்றால், முகேஷ் அம்பானி தன் வாழ்நாள் சம்பாத்தியத்தை பாரெக்ஸில்தான் போட்டிருப்பார். புதையலில் கூட இவ்வளவு ’மல்டிப்பிள்’கள் பார்க்கமுடியாது.

பிதாமகனில் லைலாவை ஏமாற்ற சூர்யா ’லங்கர்’ஆடுவார். லங்கர் ஆட்டம் பார்த்திருப்பீர்கள். முதலில் நடத்துபவர் ஆடுவார். நீங்கள் பந்தயம் வைப்பீர்கள். ஜெயிப்பீர்கள். பின் அவரே உங்களிடம் கொடுத்து உருட்டச் சொல்வார். நீங்கள் உருட்ட உருட்ட எதுவும் நீங்கள் எதிர்ப்பார்த்த மாதிரி வராது. படுநியாயவான்களாக உங்களை ஏமாற்றி, இடத்தை மாற்றிக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள். பாரெக்ஸ் சந்தைகள் என்று இணையத்தில் புழங்குவது எல்லாமே இந்த மாதிரியான லங்கர் ஆட்டம் தான். கொடுப்பதுப் போலக் கொடுத்து மொத்தத்தையும் பிடுங்கி நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டுத் தான் மறுவேலைப் பார்ப்பார்கள். 400 மடங்கு லெவரேஜ் எல்லாம் சாதாரணம். காசா, பணமா. நிஜத்தில் அவ்வளவு லெவரேஜ் சாத்தியமா?

இந்தியாவில், ரிசர்வ் வங்கி அனுமதித்திருப்பது 20 மடங்கு லெவரேஜ் தான். பெரும்பாலானவர்கள் இது அங்கீகாரம் பெற்றது என்று கதைவிடுவார்கள். ரிசர்வ் வங்கியே $200,000 (90 லட்சம்) வெளிநாடுகளில் முதலீடு செய்யலாமென்று சொல்லியிருக்கிறது என்று ஒரு பட்டியலைக் காட்டுவார்கள். சூட்சுமம் என்னவென்றால், ரிசர்வ் வங்கி அனுமதித்து இருப்பது முதலீடு செய்வதற்கு மட்டுமே (வீடு, பங்குச்சந்தை முதலியன). ஆனால் பாரெக்ஸ் வர்த்தகம் என்பது மார்ஜினை பயன்படுத்திச் செய்வது. இது அனுமதிக்கப்படவில்லை & கிரிமினல் குற்றம். இந்த மாதிரி படங்காட்டி போன மாதம் நொய்டாவில் ஒரு பாரெக்ஸ் நிறுவனம் மக்களைப் போண்டியாக்கி இருக்கிறது. எண்ட்மார்க்ஸ் பாரெக்ஸ் என்கிற நிறுவனத்தில் காசுப் போட்டவர்கள் இங்கே புலம்பித் தள்ளி, போட்டக் காசு திரும்ப வரவழிகிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள். இந்தியாவில் எல்லா இடங்களிலும் இவர்கள் கடை விரிப்பார்கள்; இனிக்க இனிக்கப் பேசுவார்கள்; மக்களும் ஏமாறுவார்கள்;கல்லா கட்டியதும்’எஸ்’ஸாவார்கள்.

லெவரேஜின் அடிப்படைப் புரியாமல் இது புரியாது. 2008 அமெரிக்க சப்-ப்ரைம் பிரச்சனையும் இந்த மாதிரி லெவரேஜ் சமாச்சாரத்தில்தான் ஆரம்பித்தது. ஆனால், அங்கேக் கூட 400 மடங்கு லெவரேஜ் எல்லாம் சாத்தியமில்லை. அடிப்படையில் லெவரேஜ் என்பதே ஒரு மோசமான விஷயம். உங்கள் கையில் வெறும் ரூ.100 இருக்கிறது. நீங்கள் எப்படி ரூ.1000 மதிப்புள்ள (10 மடங்கு லெவரேஜ்) பொருளை வாங்க முடியும்? இதுதான் அடிப்படை. வங்கிகள் கடன் கொடுப்பது இதில் சேராது. அது நீண்டகால ரிஸ்க் லெவரேஜ் சமாச்சாரம். ஆனால் குறுகியக் காலத்தில் 400 மடங்கு லெவரேஜ் என்பதெல்லாம், குட்டிச்சுவராகி காணாமல் போவதின் உடனடிக் குறுக்குவழி.

இந்த எத்தர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியவேண்டுமானால், உண்மையில் பாரெக்ஸில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்கிற அடிப்படைத் தெரிய வேண்டும்.

இந்தியாவில் 4 இணைகள் (pair) தான் இப்போதைக்கு பாரெக்ஸில், கரன்சி ப்யூச்சரில் செய்ய முடியும்.

 1. அமெரிக்க டாலர் / இந்தியரூபாய் (Dollar/Rupee)
 2. இந்தியரூபாய்/யூரோ/இந்தியரூபாய் (Euro/Rupee)
 3. பவுண்ட்/இந்தியரூபாய் (Pound/Rupee)
 4. ஜப்பானிய யென்/இந்தியரூபாய்

இது தவிர வேறெந்த நாட்டின் பணத்தையும் இந்தியாவில் பண்ணமுடியாது. குறைந்தப் பட்சமாக $1000, Euro 1000, £1000 மற்றும் ¥100,000 காண்ட்ராக்ட் இருக்க வேண்டும். அதிகப் பட்சமாக 12 மாதங்கள் ஒப்பந்தம் போடலாம். குறைந்தப் பட்ச விலை ஏற்ற இறக்கங்கள் (Tick Size) 0.25 பைசாவாக இருக்க வேண்டும். இதுவும் அரசு அங்கீகாரம் பெற்ற தரகு நிறுவனங்கள் வழியே மட்டுமே செய்ய இயலும். நாளைக்கு Narain & CO என்று யாராவதுப் பெயரைப் போட்டு திர்ஹம், சிங்கப்பூர் டாலர்கள், ரஷ்ய ரூபிள்கள், சீன ரென்பிகள் என்று படங்காட்டினால் நம்பாதீர்கள். அது டூபாக்கூர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

உலகில் எந்த வணிகத்திலும் வாரத்துக்கு 3%வும், மாதத்துக்கு 10% வளர்ச்சியும் நடக்காது. அது நடந்தால், உலகமுழுவதும் அந்த வணிகத்தில் ஒரே நாளில் இறங்கி அந்த வணிகத்தின் லாப விகிதத்தினைக் குறைத்துவிடுவார்கள். இப்போதைக்கு இந்த சாத்தியங்கள் ஒரே ஒருத் துறையில் மட்டுமே உண்டு – ஹை ப்ரீக்வென்சி ட்ரேடிங் (High Frequency Trading – HFT). இதை வைத்துக் கொண்டுதான், ’கோல்ட்மென் சேக்ஸ்’மாதிரியான நிறுவனங்கள், மண்டியிட்டு அரசுப் பணத்தை வாங்கிக் கொண்டு, சடாலென ஒரே வருடத்தில், ஒவ்வொரு காலாண்டிலும் பில்லியன் டாலர்களில் லாபம் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜர்னலிலும், ப்ளூம்பெர்க்கிலும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுகிறார்கள். அதுவே ஒரு நுட்ப சூதாட்டம் என்று விவாதம் ஒடிக் கொண்டிருக்கிறது. அது வேறு கதை. இப்போதைக்கு, அது மாதிரி யாராவது சொன்னால், மொன்னையாய் சிரித்து விட்டு இடத்தை காலிப் பண்ணுங்கள். அந்த நபர்/நிறுவனம் இருக்கும் திசைக்கு ஒரே கும்பிடாய் போட்டு, சன் டிவியில் சீரியல் பாருங்கள்.

டூபாக்கூர் பாரெக்ஸ் நிறுவனங்களை கண்டறிவது எப்படி?

 1. இவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு வெளியில் இருப்பார்கள். இந்தியாவில் அலுவலகம் என்கிற ஒரு விஷயமிருக்காது. இவர்கள் பரிவர்த்தனை செய்வதாகச் சொல்லும் வழிமுறைகள் எல்லாமே இணையவழி wire transferகளாக இருக்கும்.
 2. உங்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் உங்களின் டெபிட்/கிரெடிட் கார்டுகள் வழியே நடக்கும். இந்தியாவில் எந்த வங்கிகளோடும் தொடர்பு இருக்காது. செக், டிடி, இந்திய இணையப் பரிவர்த்தனை எல்லாம் நடக்காது. இரண்டு மூன்று வாரங்கள் காசு வருவதுப்போல வந்து, உங்களை அதிகமாக முதலீடு செய்ய சொல்லி, வழித்து நக்கிவிடுவார்கள்
 3. இந்தியரூபாயில் எவ்விதமான இணைகளும் இருக்காது. காரணம் கேட்டால், உலக அரசியல் பேசுவார்கள். நாளைக்கான ’டிப்’பில் ஹோஸ்னி முபாரக் ஒடிப் போனதால் எகிப்திய குறையும், அதனால் அமெரிக்க டாலர்களாக வாங்கிப் போடுங்கள் என்று குருட்டாம்போக்கில் வழிக் காட்டுவார்கள்.
 4. இவர் $1000 போட்டு ஒரே மாதத்தில் $5000 சம்பாதித்தார் என்று சொல்வார்கள். ஆனால் போட்டோப் போட்டு, கீழே இருக்கும் பெயரைத் தவிர வேறெதுவுமிருக்காது. இதெல்லாம் தமிழ் சினிமாவின் சிவாஜி கால டெக்னிக்.
 5. ரிசர்வ் வங்கி என்றைக்கும் காசைக் கொண்டுப் போய் இணைய வழி பாரெக்ஸ் டூபாக்கூர்களில் போடச் சொல்லவில்லை. $200,000 வெளிநாடுகளில் முதலீடுச் செய்யலாம் என்பது பாரெக்ஸுக்கு பொருந்தாது.
 6. இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து உங்களின் வங்கியினைத் தவிர வேறு வழிகளில் வரும் பணம் எதுவும், அரசுக்கு ஒப்புதல் இல்லை. கொஞ்சம் காட்டமாகச் சொன்னால், தேசத் துரோகக் குற்றம். உலகமெங்கிலும் பெரும் பேர் பெற்றாலும், ’பேபால்’ இந்தியாவில் சிங்கியடிக்கிறது. நம்முடைய ரிசர்வ் வங்கி விதிமுறைகள் அப்படி.
 7. கொஞ்சம் ‘பீட்டர்’த்தனமாய் யாராவது எதையாவது சொல்லி, கூகுள் தரவு எல்லாம் கொடுத்தால் உடனே நம்பிவிடாதீர்கள். இணையம் அரிச்சந்திரனின் அரண்மனையல்ல. நிஜத்தினை விட நிஜம் போலிருக்கும் பொய்கள் தான் அதிகம். கூகுளை கடவுளாய் மாற்றி, சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள். நான் கூட கூகுள் AdWordsல்,‘சச்சின் தெண்டுல்கர்’ இந்திய சித்தர் பரம்பரையில் ஒருவர் என்று சொன்னால் காசு வாங்கிக் கொண்டு அதையும் போடுவார்கள். இணையத்தில் இருப்பதனாலேயே ஒரு விஷயம் உண்மையல்ல.

இந்த அபத்தம் முழுமையாய் புரியவேண்டுமானால், சேப்பாக்கம் மைதானத்தில் பின்புறக் கேட்டுக்கு எதிரே சி.என்.கே சாலை என்று ஒரு தெரு இருக்கிறது. வெறும் மேன்ஷன்களாக இருக்கும் பிரதேசமது. அங்கே இந்தமாதிரி 100 பேர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். மெயின் ரோட்டில் இருக்கும் கடையில் உட்கார்ந்துக் கொண்டு, டீ வாங்க காசில்லாமல், வெறும் ஜெராக்ஸ் பிரதிகளாக கையில் $100 மில்லியனிலிருந்து சில பில்லியன் வரைக்கும் வைத்துக் கொண்டு, காற்றிலே கணக்குப் போட்டுக் கொண்டு ‘நீங்க மட்டும் ரெடின்னு சொல்லுங்க சார், ஆளை நான் மொரிஷியஸ்ல இருந்து நாளைக்கேக் கொண்டு வந்து நிப்பாட்டறேன்’ என்பார்கள். ஒரு தடவை அந்த திருத்தலத்துக்கு தீர்த்தயாத்திரைப் போனால், கலக்கம் தெளிந்து, காசை வைப்பு நிதியில் போட்டு வேர்ல்ட் கப் பார்ப்பீர்கள்.

காதல் புராணம் 11

11. சுந்தர காண்டம்

அரிவை [வயது : 20-25]

100

உன‌க்குக் காத்திருக்கையில்

தான் நாட்களை, மணிகளை,

நிமிஷங்களை, வினாடிகளை

அதற்குள்ளிருக்கும் பிரிவுகளை

எண்ணக்கற்றுக்கொண்டேன்.

101

கன்னிமை கழியாமலே

தாய்மையடைந்தேன் –

நீ மடி சாய்ந்தழுத கணம்.

102

நீ ஸாரி சொல்ல‌ நேரும்

ஒவ்வொரு தடவையும்

பெருங்குற்றவுணர்வில்

கிழிகிறதென் இருதயம்.

103

சொன்ன நேரத்துக்கு சற்று

முன்பே வந்து விடுகிறாய் –

என்ன, காத்திருக்கும் சுகத்தை

நீ மட்டுமே அனுபவிப்பாயா?

104

பொறாமையாய்த்தான் இருக்கிறது –

சிலசம‌யம் நீ உச்சிமுகர்ந்தணைத்து

குழந்தைகளைக் கொஞ்சுகையிலும்.

105

எனக்காக அசைவம் கைவிட்ட

உனக்காக அசைவம் சமைப்பது

தியாகமில்லை; காதலென்பேன்.

106

எனது நினைவுச்சலனங்களுடன்

தூரத்திலெங்கோ நீயிருக்கிக்கும்‌

ஒற்றைநம்பிக்கையின் வழிதான்

நிற்காமல் துடிக்கிறதென் இதயம்.

107

நிம்மதிச்சுகத்தோடு மறந்துறங்கிக்கிறங்கிட‌‌

இலவம் பஞ்சடைத்த தலையணையை விட‌

காதல் குருதி பாயும் உன் மார்புச்சூடு தோது.‌

108

நரையோடித் திரையோடிப்

புரையோடிய பருவத்தே

உயிரோடு உரையாடி

உடலோடு உறவாடி

கடலாடிக் கரையேற‌

காதலா நீ வேண்டும்.

109

பதினெட்டாம் முறையாக‌ நான்

வேண்டாமென முனகிய போது

என் தேகத்தில் மிச்சமிருந்தவை

ஒரு ஜோடிக்கொலுசுகள் மட்டும்.

110

உடைந்த என் வளையல் துகள்கள்

சொல்லுமுன் மயிரடர்ந்த மார்பு

கிழித்துச்சுவைத்த குருதிச்சிவப்பு.‌

பதில் சொல்லுங்கள் ரஜினிகாந்த்!

நம் நாட்டில் மக்களின் வாழ்க்கையோடு கலந்திருக்கிறது சினிமா. பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு சினிமாவைத் தவிர வேறில்லை.. 1989-ம் ஆண்டில் இந்தியாவில் யார் பிரதமர் யார் என்று கேட்டால் சற்று யோசிப்போம். ஆனால் ’அண்ணாமலை’ எந்த வருடம் ரிலீஸானது என்றால் சட்டென்று சொல்லிவிடுவோம். பார்த்த படங்கள் மட்டுமில்லை, இனி வரப் போகும் படங்கள், யார் நடிகர்கள், யார் டைரக்டர், எவ்வளவு செலவானது என்பது வரை எல்லாமே நமக்கு அத்துப்படி.

அதெல்லாம் இருக்கட்டும், சினிமாவில் பெண்களைப் பற்றி எப்படிச் சித்தரிக்கிறார்கள், நடிகைகளை எவ்வளவு மோசமாக நடத்துகிறார்கள் என்பது தனியாகவும் விரிவாகவும் பேசப்பட வேண்டியவை. பொதுவாக சினிமாவில் காட்டப்படும் விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டிருந்தாலும் சில சம்பவங்கள் நின்று யோசிக்க வைத்துவிடுகின்றன.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், ’எந்திரன்’ படம் மூலம் இன்று இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்கிறார்கள். அவர் பல் தேய்ப்பதிலிருந்து படுக்கப் போவது வரை இங்கு செய்திகள். குழந்தை முதல் பெரியவர் வரை அவருக்குத் தீவிர ரசிகர்கள். ரஜினிக்கு சினிமாவிலும் வெளியுலகிலும் இருக்கும் செல்வாக்கு எல்லோரும் அறிந்ததே.

ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகள் எல்லாம் அந்தந்த காலகட்டங்களில் பரவலாக வரவேற்பு பெற்றிருக்கின்றன. மேனேஜ்மெண்ட்டுக்கு உதவக்கூடிய வகையில் பஞ்ச் டயலாக்குகள் இருக்கின்றன என்று கொண்டாடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில்தான், ‘ரஜினி என்றால் பெண்களை உயர்வாக மதிப்பவர்’ என்ற கருத்து இருக்கிறதே, அவர் பெண்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று ஆராயத் தோன்றியது.

பொம்பள, அரசியல்வாதி ரெண்டு பேரும் நினைக்கறதை அடையறதுக்கு எதுவும் செய்வாங்க. ஆனா என்ன நினைக்கிறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது.

இந்த வசனத்தை ஏதோ ஒரு படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்குச் சொல்லியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ‘பொம்பள’ என்று பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறார். பொம்பளை – அரசியல்வாதி என்ன விதமான ஒப்பீடு என்றே தெரியவில்லை. நினைக்கிறதை அடைவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், ஆனால் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. முதலில் சொன்ன வரியை, அடுத்த வரியிலேயே காலி செய்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது போலிருக்கிறது!

‘பொம்பளைங்க வீட்டு நிலமையை புருஷன்கிட்ட சொல்றதோட நிறுத்திக்கணும். அத தீர்க்குறது புருஷனோட கடமை.

பெண்கள் என்றால் கணவனுக்கு அடங்கி நடப்பவள். வீட்டைப் பார்த்துக்கொள்பவள். வாரிசைப் பெற்றுத் தருபவள். அவள் எந்த விஷயத்தையும் கணவனிடம் சொல்வதோடு நிறுத்த வேண்டுமே தவிர, அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கக்கூடாது. ’அடிமையின் பிரச்னையைத் தீர்ப்பது ஆள்பவரின் கடமை’ என்ற மனோபாவத்தில் புருஷனின் கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தாண்டி அவள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை, உரிமையும் இல்லை.

‘ஒரு பொண்ணு வீட்டைவிட்டு வெளிய போனா புருஷன் கூட போகணும். இல்லேன்னா நாலுபேரு தூக்கிட்டுப் போகணும்.

ஒரு கணவன் எவ்வளவு கொடுமை செய்தாலும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடாது. கணவனின் கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டும். முடியாவிட்டால்? செத்துப் போய்விட வேண்டும். அதைத் தாண்டி வெளியே வந்து, தனியாக வாழக்கூடாது.

‘பொம்பளைய அடிக்கறவனுக்கும் ஊனமுற்றவங்களை அடிக்கிறவனுக்கும் என் அகராதியில் பொட்டைன்னு அர்த்தம்.

கோழையாகச் செய்யும் எந்தச் செயலும் இங்கு ‘பொட்டை’ என்ற அடைமொழியில் கேவலப்படுத்தப்படுகிறது. பெண்களை அடிக்கிறவனைக் கண்டிக்கும் தொனியில், பெண்களையே கேவலப்படுத்தி ‘பொட்டை’யாக்கி விடுகிறார்.

‘பொண்டாட்டிய புருஷன் மதிக்கலேன்னா நரகம். புருஷனை பொண்டாட்டி மதிக்கலேன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நரகம்.

புருஷனைப் பொண்டாட்டி மதித்து நடக்க வேண்டும் என்பதை வேறு விதமாக தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்காவிட்டால் நரகம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பொண்டாட்டி மதிக்காவிட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் நரகமாம்! என்ன கொடுமை இது!

‘பொம்பள எவ்ளோ படிச்சிருந்தாலும் எவ்ளோ பெரிய வேலையில இருந்தாலும் வீட்டு வேலை செய்யாதவ பொம்பள இல்ல.

ஆமாம், நாட்டுக்கே பிரதமராக இருந்தாலும் எனக்கு நீ அடிமைதான். பெண்களுக்கு என்று இருக்கும் இலக்கணங்களில் முக்கியமாக இருப்பது வீட்டு வேலை செய்வதுதான். எவ்வளவு படித்திருந்தாலும் எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் அவளை எப்படிப் பொம்பளை என்று ஏற்றுக்கொள்வது? அடடா!

ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்.’

மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல பஞ்ச் போலவே தோன்றும். ஆனால் இந்த வசனத்தை, தன் தம்பியால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் பேசுகிறார். சிறையில் இருக்கும் அவர் தம்பியைக் காப்பாற்றும் விதத்தில்…

கெடுத்தவனுக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வைக்கும் அபூர்வ நீதியை  சினிமா இன்னமும் பாதுகாக்கவே செய்கிறது. தவறு செய்தவன் தண்டனையில் இருந்து தப்ப வேண்டும், அவனுக்கு அந்தப் பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, பாதிக்கப்பட்டவளுக்கே போனஸ் தண்டனை அளிக்கிறார்கள்.

‘புருஷன் வீட்டுல நடக்குறதை பிறந்த வீட்ல சொல்றவ பொம்பளை இல்லை.

புருஷன் வீட்டில் பிரச்னை இல்லையென்றால் பிறந்த வீட்டில் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? கஷ்டமோ, நஷ்டமோ கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் வெளியில் சொல்லக்கூடாது. எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, கணவனின் பெருமையைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் அவள் பொம்பளையே இல்லை.

‘ஒருத்தனை காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது.

பெண்கள் காதலிப்பது தவறு.

‘பொம்பளைக்கு பொறுமை வேண்டும், அவசரப்படக்கூடாது. அடக்கம் வேணும், ஆத்திரப்படக்கூடாது. அமைதி வேணும், அதிகாரம் பண்ணக்கூடாது. கட்டுப்பாடு வேணும், கத்தக்கூடாது. பயபக்தி வேணும், பஜாரித்தனம் கூடாது. மொத்தத்துல பொம்பள பொம்பளயா இருக்கணும்.

இதில் பொம்பளை என்று வரும் இடங்களில் எல்லாம் ஆம்பிளை என்று போட்டாலும் ஒன்றும் வித்தியாசம் வந்துவிடப் போவதில்லை. ஆனால் பொறுமை, அடக்கம், அமைதி, கட்டுப்பாடு, பயபக்தி எல்லாம் இருந்தால்தான் அவள் பொம்பளை. இதில் எந்த ஓர் இலக்கணத்தை மீறினாலும் அவள் பெண்ணே இல்லை.

‘அதிகமா ஆசைப்படற ஆம்பளையும் அதிகமா கோபப்படுற பொம்பளயும் நல்லா வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

அப்படி என்றால் பொம்பளை அதிகமா ஆசைப்படலாம், ஆண்கள் அதிகமாகக் கோபப்படலாமா? அதிகமா ஆசைப்படுகிற மனிதர்களும் அதிகமா கோபப்படுகிற மனிதர்களும் நல்லா வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று சொன்னால் என்ன?

‘பொம்பள புள்ளைங்க ஊர் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பள புள்ளைங்க வீட்டைச் சுத்தினா கெட்டுப் போயிடுவாங்க.

அதாவது ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும். பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு இருக்க வேண்டும். ஆண்கள் வீட்டில் இருந்தாலோ, பெண்கள் வெளியில் சென்றாலோ கெட்டுப் போய்விடுவார்கள். இந்தக் காலத்திலும் எவ்வளவு தைரியமாக இதுபோன்ற வசனங்களை அவரால் பேச முடிகிறது?

**

பெண்மை போற்றும் ரஜினியின் இந்த பஞ்ச் டயலாக்குகள், அவருடைய படங்களின் கால வரிசைப்படிதான் இங்கு அமைந்துள்ளன. ஆரம்ப காலங்களில் ரஜினி நடித்த படங்களில், இதுபோன்ற வசனங்களை அவரால் மறுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் விரைவிலேயே பெயரும் புகழும் கிடைக்கத் தொடங்கிவிட்டது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வந்துவிட்டது. அவருக்கு எந்த விஷயத்தையும் தீர்மானிக்கக்கூடிய சக்தி கிடைத்துவிட்டது. இதுபோன்ற வசனங்களைப் பேச மாட்டேன் என்று சொல்ல முடியும். கண்ணியமாக வசனங்களை எழுதச் சொல்லிக் கேட்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. (வசனம் என்னுடையதல்ல, வசனகர்த்தாவின் பொறுப்பு என்று சொல்லிவிட்டு, இமயமலைக்கு ஓடி விட முடியாது. மற்ற வசனங்களின் புகழ் எல்லாம் எப்படி அவரைச் சேருகிறதோ அதே போலத்தான் இந்த வசனங்களுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.)

சாதா ரஜினியாக இருந்து இன்று விஸ்வரூப வெற்றியாளராக வலம் வரும் ரஜினியிடம் தொழில்முறையில் பிரமாதமான பரிணாம வளர்ச்சி தெரிகிறது. அப்படி இருக்கும்போது அவருடைய பாபா, படையப்பா போன்ற சமீபகால படங்களில் கூட பெண்களைப் பற்றி இப்படி வசனம் பேசுவது எந்தவிதத்தில் நியாயம்?

ரஜினியிடம் சில கேள்விகள்…

* உங்கள் வீட்டிலும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இந்தக் கொள்கைகளின் படியா வைத்திருக்கிறீர்கள்?
* உங்கள் மனைவியோ, மகள்களோ வீட்டுப் பிரச்னைகளைச் சொல்லிவிட்டு, கணவர்கள்தான் தீர்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்களா? எந்த முடிவும் அவர்களாக எடுப்பது இல்லையா?

* பள்ளி, பிஸினஸ் என்று கொடிகட்டி பறப்பவர்கள், வீட்டு வேலைகளையும் செய்கிறார்களா?

* ’காதலிச்சிட்டு புருஷனாக்குறதை விட, புருஷனாக்கிட்டு காதலிக்கிறது நல்லது’ என்று சொன்ன உங்கள் வீட்டில் மனைவி, மகள்கள் அத்தனைபேரும் காதலித்துதானே திருமணம் செய்துகொண்டார்கள். ‘நல்லது’ என்றால் அதை உங்கள் வீட்டிலேயே பின்பற்றலாமே?

* பெண் என்றால் புடைவை கட்டி, கையெடுத்துக் கும்பிடத் தோன்ற வேண்டும் (சாத்வீகம்) என்று சொல்லும் நீங்கள், உங்கள் வீட்டில் அப்படித்தான் இருக்கிறார்களா என்று சொல்ல வேண்டும்.

ரஜினி பேசிய இந்த வசனங்களுக்கு உண்மையில் அவருடைய வீட்டில் இருந்தே எதிர்ப்பு வந்திருக்க வேண்டும்.

**

ரஜினி நிற்பது, பேசுவது, நடப்பது என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசிப்பதோடு, கடைபிடிக்கவும் செய்கிறார்கள். டயலாக்குகளை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். காவடி எடுக்கிறார்கள். கற்பூரம் காண்பிக்கிறார்கள். எதைச் சொன்னாலும் நம்புகிறார்கள். படித்தவர், படிக்காதவர், கிராமம், நகரம் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் பஞ்ச் வசனங்களைக் கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பெண்களைப் பற்றிய இதுபோன்ற வசனங்கள் அவர்கள் மனத்தில் எவ்வளவு மோசமான பிம்பங்களை ஏற்படுத்தியிருக்கும்!

’ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.’ ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்.’ –  இதுபோன்ற பஞ்ச் வசனங்களைப் பேசினால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் இல்லை. புகழின் உச்சியில் இருந்துகொண்டு நல்ல விஷயங்களைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நச்சு விதைக்காமல் இருக்கலாம்.