கண்றாவி பவுலிங்கும் கசுமால ஃபீல்டிங்கும்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் குறித்து சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதும் பத்தி இன்று ஆரம்பம். மார்க்கெடிங் மாயாஜாலம், விளம்பர மாயாஜாலம் நூல்களின் ஆசிரியரான சதீஷ், ஒரு கிரிக்கெட்டரும்கூட.  உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு என்னும் இவருடைய புத்தகம் இப்போது ரிலீஸ் ஆகிறது.

உலகக் கோப்பை ஒரு வழியாக ஆரம்பித்துவிட்டது. நமக்குத் தான் கை கால் கொள்ளவில்லை. இருக்காதா பின்னே? இந்திய மண்ணிலேயே உலகக் கோப்பை என்றால் சும்மாவா? நாள்தோறும் திருவிழா தான். பொழுதெல்லாம் கோலாகலம் தான். காணாததைக் கண்டது போல் குதிக்கிறோம். கண் மண் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த முறை இந்தியா கண்டிப்பாய், கட் அண்டு ரைட்டாய் வெற்றி பெற்றுவிடும் என்று நம்மில் பலரும் முடிவே கட்டிவிட்டோம். வெற்றி பெற்று கப்பை எங்கு வைப்பது என்று முடிவு செய்வது தான் பாக்கி. ம்ம்ம்ம்ம்ம்… ஆசை இருக்கு தாசில் பண்ண!

இது வரை ஐந்து மாட்சுகள் முடிவடைந்து விட்டன. இந்த மாட்சுகள் நடந்த லட்சணத்தை வைத்துப் பார்த்தால் ஒன்று நன்றாகப் புரிகிறது. மாட்சுகள் நடக்கும் பிட்சுகள் அநியாயத்துக்கு வெத்து வேட்டுகள். பிட்சில் லவலேசம் பவுன்ஸ் இல்லை. மருந்துக்குக் கூட ஸ்விங் இல்லை. ஸ்னானப் ப்ராப்த்திக்குக் கூட பிட்சில் புல்லோ, ஈரமோ இல்லாத கட்டாந்தரைகளை பிட்ச் என்று போர்டு போட்டு மாட்சுகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். பவுலர்களுக்கு வேலையே இல்லை. வந்து எப்படிப் போட்டாலும் ஒரு எழவும் ஆகப் போவதில்லை. பேசாமல் விக்கெட் கீப்பரையே போடச் சொல்லலாம். அது கூட வேண்டாம். சும்மா கையை கட்டிக் கொண்டிருக்கும் அம்பயரையே பந்து போடச் சொல்லலாம். தரித்திரம் பிடித்த பிட்சுகளில் யார் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது!

பாட்டிங் ப்ராப்ளமே இல்லை. எவன் வேண்டுமானாலும் வந்து ஆடலாம். காசி பட கண்ணில்லாத ‘சீயான் விக்ரம்’ வந்து ஆடினாலும் அரை சதம் காரண்டி. அப்பேற்பட்ட ஒரு பிட்சில் ஒரு சோப்ளாங்கி அணியான பங்களாதேஷுடன் 370 ரன்கள் அடித்து விட்டோமாம். ஊரெல்லாம் ஒரே பேச்சு. சேவாக் அடித்தார். கோலி அடித்தார் என்று ஏகத்துக்கும் இறுமாப்பு. என்னவோ போங்கள். எனக்குத் தான் ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது.

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன். 370 அடித்தோம், இல்லை என்று சொல்லவில்லை. பங்களாதேஷ் என்ன அப்படி ஒரு பெரிய கொம்பா? சொல்லப் போனால் அது டீமே இல்லை! கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்னி சேனல் பார்க்கும் பாலகர்களின் தொகுப்பு. அந்த டீமுடன் 370 அடிக்கவில்லை என்றால்தான் அசிங்கம். சரி எதோ தெய்வ கடாட்சத்தில் அடித்துத் தொலைத்து விட்டோம். அதற்குப் பிற்கு ஒரு பவுலிங் போட்டோம் பாருங்கள். ஆஹா…ஆஹா….அதி அற்புதம். போட்ட பாதி பந்துகளுக்கும் மேல் பிட்சிலேயே படாமல் கிட்டத்தட்ட ஸ்கொயர் லெக் அம்பயர் காலின் அருகில் போய் பிட்ச் ஆகும் அளவுக்கு வைட் பந்துகள். ஓரிரு பந்துகள் அவர் காலை பதம் பார்த்ததாகக் கூடக் கேள்வி! ஸ்ரீசாந்த் போடும் அழகுக்கு நான்கு விக்கெட் கீப்பர்கள் வைத்தாலும் அவர்களையும் தாண்டி வைடாய் பவுண்ட்ரிக்கு போகும். எதோ பிட்சில் ஸ்பின் எடுப்பதால் கொஞ்சத்துக்கு கொஞ்சம் விக்கெட்டும் எடுத்துத் தொலைத்தோம். இல்லையேல் 370 பங்களாதேஷிற்கு முக்காமலேயே கிடைத்திருக்கும்.

அதோடு நம்மவர்களின் பீல்டிங்கைப் பார்த்தீர்களா? பீல்டிங் செய்ய வருவதற்கு முன் நம்மவர்கள் நாலு நெய் ரோஸ்டை வெண்ணெயை தொட்டுக் கொண்டு வெறும் கையில் சாப்பிட்டு கை அலம்பாமல் வந்ததைப் போல் அப்படி ஒரு தேவல். கையில் வரும் காட்சை கோட்டை விடுகிறோம். ரன் அவுட்டைத் தொலைக்கிறோம். கையில் பந்தைப் பிடிக்க முடிந்தால் தானேய்யா. அது சரி, பிடிக்க முடியவில்லை என்றால் நம்மவர்கள் தான் என்ன செய்வார்கள் பாவம்.

இந்த டீமை வைத்துக் கொண்டு ஜெயிப்போமா? பாட்டிங் ஏதோ தேறினாலும் தேறும். ஆனாலும் சொல்வதற்கில்லை. அடித்தால் அனைவரும் அடிப்பது. அவுட் ஆனால் அனைவரும் கோஷ்டி கானமாய் எதிர்க்கட்சி வெளிநடப்பு மாதிரி சேர்ந்து போவது என்று ஒரு வழக்கத்தை வைத்துத் தொலைத்திருக்கிறோம். அதையாவது விட்டுத் தள்ளுங்கள். நம்மவர்களின் பவுலிங்கை வைத்துக் கொண்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. மகா தண்டம். வேண்டுமானால் நாங்கள் ஐம்பது ஓவர்கள் பாட்டிங் செய்கிறோம், ஆனால் பவுலிங் போடும் போது முப்பது ஓவர்கள் தான் போடுவோம். நாங்கள் ஐம்பது ஓவர்களில் அடித்ததை எதிர் அணியினர் 30 ஓவர்களில் அடிக்க சொல்லுங்கள் என்று ஐசிசியிடம் கேட்டுப் பார்கலாம். இந்த தண்ட பவுலிங்கை வைத்துக் கொண்டு இது கூட கொஞ்சம் ரிஸ்கான சமாசாரம் தான்.

இல்லை, இன்னொன்று செய்யலாம். பீல்டிங் செய்யும் போது 14 பேர் பீல்டிங் செய்வோம் என்று கோரலாம். ஆனால் அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. நாம் தான் பாலை விட்டுவிட்டு புல்லை தேவும் ‘தேவாதி தேவர்’களை வைத்துக் கொண்டிருக்கிறோமே. என்னத்தை பீல்ட் செய்து என்னத்தை கிழிப்பது.

இந்த கன்றாவி பவுலிங்கையும் கேனத்தனமான பீல்டிங்கையும் வைத்துக் கொண்டு ஜெயிக்க வேண்டுமானால் நாம் முதலில் ஆடி ஒரு 400, 500 அடிக்க வேண்டும். ஒரு சான்ஸ் இருக்கலாம் வெற்றி பெற!

இப்பேர்ப்பட்ட சரித்திர தரித்திரங்களை வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டிய தலையெழுத்து நமக்கு. பேசமால் தலையில் அடித்துக் கொண்டு தலை ஸ்நானம் செய்து கை கழுவி வேறு வேலை பார்க்கப் போகலாம். ஆனால் என்ன, இந்த பாழாய்ப் போன மனசு தான் கேட்டுத் தொலைக்க மாட்டேன் என்கிறது. மதியம் 2.30 மணி ஆனால் புத்தி தானாய் டீவி முன் தான் போவேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறது. அந்த மாட்சு முடியும் வரை ஏதோ நேர்த்திக் கடன் போல் எண்சாண் உடம்பும் தொலைக்காட்சியே சரணம் என்று விழுந்து தோப்புக் கரணம் போடுகிறது.

இதற்காகவாவது நம்மவர்கள் கோப்பையை வென்று தொலைத்தால் தேவலை…

[ஒரு மாதம் தொடரும்]

சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் உலகக் கோப்பை வரலாறு இங்கே.

காதல் புராணம் 9

9. வானம் வசப்படும்

அரிவை [வயது : 20-25]

81

உன்னிடம் அடிக்கடி

சொல்ல நேரிடுகிறது –

ஏன்டா என்னை

இப்படிப் படுத்தறே?

82

நீ தான் தொலைபேசுகிறாய் என‌

கண்டுபிடித்து விடுகிறாள் அம்மா –

எனத‌சட்டுச்சிரிப்பினைக்கொண்டு.

83

இம்மாசம் ஆச்சு என உன்னிடம்

வெட்கத்துடன் சொல்கையில்

சானிடரி நாப்கின் களைப்புகள்

குறைவதாய்ப்படுகிறதெனக்கு.

84

உன் முத்தங்களும்

ஐ லவ் யூக்களும்

போட்டியிடுகின்றன‌ –

எண்ணிக்கையில்

முதலெதுவென்று.

85

பொய்களெனத்தெரிந்தும்

இனித்து இம்சிக்கின்றன‌

நீ சொல்லும் பொய்கள்.

86

“…”

“ம்…”

“அப்புறம்…”

“வேற என்ன…”

இவற்றால் நிரம்பி வழிகிறதெம்

தொலைபேசிக்கட்டண ரசீதுகள்.

87

கனவிலுமென் மென்மை

பாதித்துத்தடம் பதிக்குமுன்

நாற்பத்தெட்டு மணி முட்தாடி.

88

நீ நீயாக

இல்லையென்றால்

நான் நானாகவே

இருந்திருப்பேன்.

89

சொல்ல நினைத்து மறந்தவையவை

நினைவுக்கு வந்து இம்சை செய்யும்

நீயற்றவொரு தனிமைப்பொழுதினில்.

90

நிதமொரு முறையேனுமுன்

கோபத்தின் கொடுஞ்சூட்டில்

குளிர்காய வேண்டுமெனக்கு.

யார் தவறு?

”இந்த நாட்களில் கிலோ எத்தனை நிற்கிறது?” என்ற கேள்விக்கு கோயம்பேட்டில் தான் உண்மையான விடை கிடைக்கும். இரண்டு வருடத்திற்கு முன் அங்கே ஒரு கிலோ 800 கிராம்களாக நின்றது, தற்போது 700 கிராம்களாக. இது உள்குத்து விவகாரம் தான் ஆனால் நிஜமாகவே ஒரு கிலோ என்பது 69 கிராம்கள் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை. இது தான் ஒரு கிலோ என்றெல்லாம் யார்
சொன்னார்கள். ஒரு செகண்ட் என்பது இது தான் என்றது எப்படி வந்தது போன்ற விக்கிபீடியா கேள்விகளுக்கு சரியான விஞ்ஞான காரணங்கள் இருக்கின்றன.

பாரீஸில் இருக்கும் இண்டர்நேஷனல் ப்யூரோ ஆப் வெயிட்ஸில் 90%பிளாட்டினம் + 10% இரிடியத்தால் செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை இருக்கிறது. இது தான் உலகின் உண்மையான ஒரு கிலோ எடை(the actual kilogram). இதை மூன்று பூட்டுக்கள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள். இப்படி இருந்தும் விஷயம் என்னவென்றால், சில வருடங்களுக்கு முன் இதை எடையிட்டு பார்க்கும் போது, அதிகமில்லை, 69 கிராம்கள் குறைந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்கு காரணம் பழனி முருகனைச் செய்த மாதிரி யாரும் சுரண்டிக் கொண்டு போய்விடுவதில்லை. அவ்வப்போது எடுத்து துடைத்து சுத்தம் செய்து வைக்கும் போது இப்படி ஆகிவிடுகிறது.

பேஜாராகிப் போன விஞ்ஞானிகள், இந்த உருளையை தூக்கி எறிந்து விட்டு Planck’s Constant(h) அளக்கும் முறையான Watt balanceக்கு மாறிவிடலாம் என்று யோசித்திருக்கிறார்கள். இம்மாதிரி பாரத்தை கரெண்டாக மாற்றி அளவிடும் முறை தான். இந்த முறையில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் இம்முறை நிருபணம் ஆகிவிடும் என்கிறார்கள். அதற்கு பிறகு ஒரு கிலோ என்பது, வாட் பாலன்ஸில் இன்றிருக்கும் ஒரு கிலோ வஸ்துவை வைத்தால் அதற்கு ஈடாகும் Plank’s constant தான். அதுவரை அவர்கள் ‘அளந்து’ கொண்டிருப்பார்கள். காய்கறிக்காரனிடம் சொல்லி, உடைத்துப் பார்த்து இன்னும் ரெண்டு வெண்டக்காயை எடுத்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

0000

தமிழில் புத்தகம் வாசிப்பதை அதிகரிக்கிறேன் என்று யாராவது சொன்னால் கூட, டிவி சானல் ப்ரோக்ராம் உட்பட அவர் என்ன செய்தாலும் சந்தா கட்ட தயாராய் இருக்கிறேன். சமீபத்திய விஜய்யில் ‘நீயா? நானா?’ நிகழ்ச்சியில் வாசிப்பைப் பற்றி பேசியதை கேட்டுப்/பார்த்தேன். இதன் விளம்பரத்தில் பெண் புத்தகம் படிப்பது சரியா என்றெல்லாம் பேசுவதை காட்டி கொஞ்சம் சென்சேஷனலைஸ் செய்து விட்டார்கள். மன்னிக்கலாம். புத்தகம் படிக்கக் கூடாதது ஏன் என்று பேசியவர்களின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு போய் விட்டேன். எதேதோ காரணம் சொன்னார்கள், உண்மையாய் அதிகம் ஒன்றும் அகப்படவில்லை. இவர்கள் எல்லாம் படிக்காமல் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று படிக்காமல் நேற்று முழுவதும் யோசித்தேன். ஹூ..ஹும்.

இட்லி வியாபாரம் செய்யும் ஒரு ஒரு பெண் தனக்கு படிப்பதற்கெல்லாம் வசதி இல்லை என்று சொன்னதை கேட்ட போது உண்மை புரிந்தது. இந்தப் பெண்ணுக்கு கூட படிக்கிற ரசனையை எதாவது ஒரு ஆசிரியராவது வளர்த்திருந்தால், அவரும் அப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. மற்றபடி இரண்டு பக்கம் பேசியவர்களும் குறைப்பட்ட வாதங்களையே முன் வைத்தார்கள். பேச்சு சுவாரசியத்தில் திடிரென்று ஆளாளுக்கு கத்த யார் படிப்பவர்கள் மற்றவர் யார் என்று புரியாமல் போய் விட்டது. எஸ்.ரா மிகவும் தெளிவாக கதை சொல்லுதலைப் பற்றி விளக்கினார். ஆனால் இவர் கூட சிறு பத்திரிக்கைகளில் சிக்கலாக எழுதுகிறார். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் பத்துப் பக்கம் படிக்கும் தமிழ் வாசகனான எனக்கு சி.பத்திரிக்கைகளில் எஸ்.ரா எழுதுவதை புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கிறது. விகடனில் இவர் எழுதினால் இவரா அவர் என்று புரியாமல் அவதிப்படுகிறேன். யார் தவறு?

புத்தகம் படித்தல் வேண்டும் என்று பேசியவர்கள், இலக்கியம் படியுங்கள், நியுஸ் ப்ரிண்ட் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அல்பாயுசு வார நாவல்களை படிக்காதீர்கள் என்று சொல்ல எத்தனித்து என்ன என்னவோ பேசி முடித்தார்கள். நிழச்சியின் முடிவில் எல்லோர் கையிலும் ’ஒரு புளியமரத்தின் கதை’யையாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம். அட்லீஸ்ட் கோபல்ல கிராமம். பிடித்த எழுத்தாளர், பிடித்த பாத்திரம் பற்றிச் சொன்ன இவர்களின் பேச்சில் அசோகமித்திரன் அடிபடவில்லை. இந்தப் பகுதியின் முதல் வாக்கியத்தை திரும்பப் படிக்கலாம்.

0000

3டி ப்ரிண்டிங் வந்து விட்டது. ஜேம்ஸ் காமரூனின் அவதார் போல காதில் பூச்சுற்றல் எல்லாம் இல்லை. நிஜமான 3டி அதிரடி. Additive Manufacturing என்னும் முறைப்படி செய்யபடும் இந்த ப்ரிண்டிங்கில், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு பந்தை மாடலிங் செய்து ப்ரிண்ட் கொடுத்து விட்டீர்களென்றால், பக்கதில் இருக்கும் ப்ரிண்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ரசாயணம் வெளிப்பட்டு கொஞ்ச நேரத்தில் பந்து வந்து நிற்கும். இன்னும் ஓரிரு வருடங்களில். அதெப்படி முடியும் என்று நீங்கள் நினைப்பது மனிதத்தனம். வாக்மேன் வந்த போதும், மொபைலைப் பார்த்த போதும் இண்டர்நெட்டைக் கேள்விப்பட்ட போதும் இப்படித்தான் குழம்பினீர்கள்.

இந்த ப்ரிண்டிங் உலகை மாற்றப் போகிறது என்று நம்புகிறார்கள். எப்படி 18ம் நூற்றாண்டின் போது பாக்டரிகள் தயாரித்து தள்ளினவோ அதே போல் அதற்கு மாற்றாகத் தான் இது. யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தேவையான புத்தகத்தையோ, கிடாரையோ நீங்கள் அமெசானில் தேடிப் போக வேண்டாம். அமெசானில் இருந்து அதன் மாடல் விஷயங்களை இறக்கிக் கொண்டால் போது அடுத்த அரை மணியில் கிடாரோ, சைக்கிலோ ரெடி. இந்த டெக்னாலஜி வழக்கம் போல் ஆர்வமுடையோர் மற்றும் பணமுடையோரின் கைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடங்களில் இவ்வித 3டி ப்ரிண்டர்கள் எல்லோர் வீட்டிலும் வந்து விடும் என்கிறார்கள்.

3டி ப்ரிண்டிங் தயாரிப்பு செலவுகளை குறைப்பதால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்கள் கிரிக்கெட் குழாமிற்காக மட்டும் செய்யப்பட்ட புதுவித பேட்டுகளை செய்யலாம், உங்கள் குழந்தைக்காக ஸ்பெஷல் பொம்மையை வடிவமைக்கலாம். இன்னும் இரண்டு வருடங்களில் 3டி என்ஜினியரிங் கோர்ஸ் வந்து விடும். உங்கள் வீட்டருகில் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் எ.காலேஜில் ஒரு சீட்டு 33.5 லட்சம். பையனும் பணமும் ரெடியா?

0000

1960களில் உருவான ஐரோப்பிய இசைப் புரட்சியில் தோன்றிய மற்றொரு நால்வர் குழு தான், The Who. பீட்டில்ஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், தி ஹூ என்ற மூன்று பெரிய இங்கிலாந்துக் குழுக்களில் ஒருவர்கள்(!). பல வருடங்களுக்கு பிறகு சமீபத்தில், பயணங்களின் நடுவே, இவர்களின் இசையை ரசித்துக் கேட்க முடிந்தது. என்ன வகையான இசை என்று வகைப்படுத்த முடியாத மாதிரியான இசை. அவ்வப்போது reggae போல தோன்றி hard metal இசையாக மாறி rock-n-rollலில் அவசியம் முடியும் ஒரு ecstasy அனுபவம்.

இவர்கள் எங்கே போனார்கள் என்று தேடியபோது, அவ்வப்போது பிரிந்து போய் மீண்டும் ஒன்று சேர்ந்து 45 வருடங்களுக்கு பின் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று. இதையெல்லம் கேட்ட பிறகு இன்றைய பாப் இசை கேட்டால் தமாஷாயிருக்கிறது.

பசுவா? பன்றியா?

’என் சொத்துகளையெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்துவிடப்போகிறேன்!’ என்றான் ஒரு பெரிய பணக்காரன்.

‘எப்போது?’ என்று கேட்டார் அவனுடைய குருநாதர்.

‘இதென்ன கேள்வி? என் காலத்துக்குப்பிறகுதான்!’ என்றான் அந்தப் பணக்காரன். ‘ஏற்கெனவே உயிலெல்லாம் எழுதிவைத்துவிட்டேன். எனக்குப்பின் இந்தச் சொத்துகள் எல்லாம் ஏழை எளிய மக்களின் நன்மைக்குப் பயன்படும்.’

‘ஓஹோ! சரி!’

’வெறும் சரிதானா? இவ்வளவு பெரிய தர்மம் செய்கிறேன். என்னை இன்னும் நாலு வார்த்தை பாராட்டக்கூடாதா?’

‘நீ பசுவாக இருந்தால் பாராட்டலாம். பன்றியாக இருக்கிறாயே!’

‘என்னது? பன்றியா? அது எப்படி?’

‘பசு உயிரோடு இருக்கும்போதே நிறையப் பாலை அள்ளித்தருகிறது. ஆனால் பன்றி, இறந்தபிறகுதான் தன்னுடைய மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறது. பசு தரும் பாலின் மதிப்பைவிடப் பன்றி இறைச்சியின் மதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரோடு இருக்கும்போதே தருவதற்கு ஒரு மனம் வேண்டுமல்லவா?’

‘உண்மைதான். எனக்கு அந்த மனம் வரவில்லையே. என்ன செய்ய?’

’நமக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை என்று நினைக்கச் சொல்கிறது ஜென். என் வீடு, என் குடும்பம், என் பணம், என் கார், என் கம்ப்யூட்டர், என் புத்தகம் என்று நாம் நினைப்பது எல்லாமே உண்மையில் வேறு யாருடையதோ. நாம் அவற்றுக்கு நிஜமான சொந்தக்காரர்கள் இல்லை, வெறும் வாடகைக்காரர்கள்தான். அவற்றைத் தாற்காலிகமாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். எந்த விநாடியிலும் அது நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிடலாம் என்பது புரிந்தால், அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கிடக்கமாட்டோம்!’

‘ஏன் இப்படிப் பயமுறுத்தறீங்க?’

‘பயமுறுத்துவது என் நோக்கம் இல்லை. சாதாரணப் பொருள்களின்மீது அளவுக்கு அதிகமான ஒட்டுதல் ஏற்படுத்திக்கொள்ளாமல் மனிதர்களோடு செலவிடும் நேரத்தை மதிக்கப் பழகு. உன்னுடைய வாழ்க்கைக் கண்ணோட்டமே மாறிவிடும்!’