கூக்கபூரா

முதன்முதலில் தோலால் ஆன கிரிக்கெட் பந்தைப் பார்த்தபோது நான் அடைந்த ஆச்சரியம் சொல்லி மாளாது. அப்படி ஒன்று இருக்கும் என்றுகூட நான் கற்பனை செய்து பார்த்திருந்ததில்லை.

தெருவில் விளையாடுவதெல்லாம் ரப்பர் பந்துதான். அப்போது டென்னிஸ் பந்துகூட இப்போது கிடைப்பதுபோலச் சுலபமாகக் கிடைக்காது. இல்லாவிட்டால் முன்னரே சொன்னதுபோல சைக்கிள் டயர் பந்து இருக்கவே இருக்கிறது.

சீரியஸ் கிரிக்கெட் மேட்ச் என்றால் நாங்கள் பயன்படுத்துவது கார்க் பந்து. கார்க் என்பது ஏதோ ஒரு மரத்தின் துருவலான பாகம். ஒயின் புட்டிகளின்மேல் செருகப்பட்டோ, கிளாச் புட்டிகளின் மேல் மூடிக்கு அடிப்பகுதியில் வைக்கப்பட்டோ பார்த்திருக்கிறேன். அதை ஏதோ விதத்தில் கெட்டியாக்கி கிரிக்கெட் பந்து அளவுக்குக் கொண்டுவந்து மேலே சீம் (தையல்) மாதிரி மோல்டிங்கும் செய்து, வெள்ளை வர்ணம் அடித்து விற்பார்கள். மூன்று ரூபாய் அல்லது நான்கு ரூபாய் ஒரு பந்து என்பதாக ஞாபகம் உள்ளது. அப்போதே (1980-களின் ஆரம்பத்தில்) கிரிக்கெட் பந்து ரூபாய் 20 என்பதாக ஞாபகம்.

இந்த கார்க் பந்தைக் கொண்டு விளையாடும்போதும் எங்களிடம் கால் காப்பு, ஹெல்மெட் என்றெல்லாம் ஏதும் கிடையாது. நாகப்பட்டினத்தில் உப்பனாறு என்று சொல்லப்படும் காயல் பகுதியில் உப்பு படர்ந்திருக்கும் சமதளத்தில்தான் அதிகமாக கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். கார்க் பந்து பொதுவாக முழங்கால் வரைதான் எழும்பி வரும். ஆனால் ஃபுல் டாஸாக நம் முழங்காலில் இறங்கிவிட்டால் கொடுமை. அதுவும் மர்மஸ்தானத்தில் எல்லாம் அடிபட்டால் சாவுதான்.

தோலால் தைக்கப்பட்ட நிஜமான கிரிக்கெட் பந்தை ஒரு சோகமான கட்டத்தில் சந்தித்தேன். என் வகுப்பு படித்த குமார் என்ற ஒரு மோசமான மாணவன் கையில் எப்படியோ ஒரு கிரிக்கெட் பந்து இருந்தது. அதைக் கடன்வாங்கி விளையாடவேண்டும் என்று கடும் ஆர்வம். நாகை பெருமாள் கோவில் வடக்கு மடவிளாகத்தில் நானும் என்னைவிட மூத்த ரெட்டை மண்டை என்ற செல்லப்பெயர் கொண்ட நன்பணும் விளையாடி பந்தை மதில் தாண்டி பெருமாள் கோவில் சொர்க்கவாசல் பகுதிக்கு அடித்துவிட்டோம். புதர் மண்டிய இடத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்கவேயில்லை. குமாரிடம் சொல்ல, அவன் ஒரேயடியாக அழ, நானும் ரெட்டை மண்டையும் எப்படியாவது காசைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாக வாக்கு கொடுத்தோம்.

பின்னர் எங்களுக்குத் தெரியாமல் குமார் கோவிலுக்குச் சென்று பந்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் என்று மற்றொரு நண்பன் சொன்னான். நான் ஒரு ரூபாயும் ரெட்டை மண்டை 19 ரூபாயும் சேர்த்து அந்த ஃபிராடுக்குக் கொடுத்தோம்! அவன் அதை கஞ்சா அடிப்பதில் செலவிட்டான் என்று கேள்வி.

பின்னர் கிரிக்கெட் பந்தைக் கொண்டு சில ஆட்டங்கள் ஆடியிருக்கிறேன்.

கிரிக்கெட் பந்தின் நடுவில் கார்க்கால் ஆன ஓர் உருண்டை இருக்கும். அதைச் சுற்றி மெல்லிய சணல் கட்டப்பட்டு, கட்டப்பட்டு தேவையான கொள்ளளவு வருமாறு செய்யப்படும். அதன்மேல் நான்கு தோல் துண்டுகள் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். இரண்டிரண்டு தோல் பட்டைகளைக் கொண்டு இரண்டு அரைக்கோளங்கள் செய்யப்படும். இந்தத் தையல் உள்பக்கமாக இருக்கும். Inseam என்போம். இந்த இரு அரைக்கோளங்களுக்கு இடையில்தான் சணல் சுற்றிய கார்க் பகுதி அழுந்த வைக்கப்படும். இந்த இரு தோல் அரைக்கோளங்களையும் தைக்கும் தையல் வெளிப்படையாகத் தெரியும். Outer seam எனப்படும்.

இந்த வரி வரியான வெளித் தையல் கிரிக்கெட் ஆட்டத்துக்கு மிக மிக முக்கியமானது. இதனைச் சிறு வயதில் என்னால் புரிந்துகொள்ள முடிந்திருக்காது. ஓரளவுக்கு இயல்பியல் ஞானம் வேண்டும்.

வழுவழுவென இருக்கும், அடர்த்தி சீராக விரவிய பந்து காற்றில் அங்குமிங்கும் அலையாது. ஸ்விங் பந்துவீச்சு என்பது சாத்தியமில்லை. சுழல்பந்து என்பதும் பெரும்பாலும் சாத்தியமில்லை. ஆனால் கிரிக்கெட் பந்து உண்மையில் தையலுக்கு இரு பக்கமும்தான் சிம்மெட்ரி கொண்டதாக உள்ளது. எனவே தையலை எப்படிப் பிடிக்கிறோம், பந்துக்கு எந்தவித சுழற்சியைக் கொடுக்கிறோம் என்பதைப் பொருத்து, காற்றில் அலைக்கழிந்து ஸ்விங் ஆகிறது. பெர்னோலியின் தேற்றம் காரணமாக பந்தைச் சுற்றி ஏற்படும் காற்றழுத்த மாற்றங்கள் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஆனால் இதுபற்றிய மாபெரும் அறிவியல் புரிதல் இல்லாமலேயே இம்ரான் கான், சிக்கந்தர் பக்த், சர்ஃபராஸ் நவாஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றோர் பாட்டில் மூடிகளைக் கொண்டு ரிவர்ஸ் ஸ்விங் செய்யக் கற்றுக்கொண்டனர். அதன் காரணமாக இங்கிலாந்துடன் மாபெரும் டிபள்மேடிக் பிரச்னைகள் உருவாகக் காரணமாக இருந்தனர்!

கிரிக்கெட் பந்துக்குமேல் சிவப்பு வண்ண பெயிண்ட் அடித்திருப்பார்கள். வழுவழுவென இருக்கும். ஆனால் பந்தை ஆடுகளத்தில் குத்தக் குத்த, அதன் மேல் பெயிண்ட் உதிர ஆரம்பிக்கும். திறமையான பந்துவீச்சாளர்கள் பந்தின் ஒரு பக்கம் மட்டும் தரையில் படுமாறு எறிவார்கள். அப்போது அந்தப் பக்கம் மட்டும் பெயிண்ட் உதிரும். மற்றொரு அரைப்பக்கம் பளபளவென இருக்கும். இந்த மாற்றத்துடன் பெர்னோலி தியரம் சேர்ந்தால் ஏற்படும் அழுத்த மாறுதல் நேரடியான ஸ்விங் பந்துவீச்சுக்குக் காரணமாக இருக்கிறது. இது பந்து புதிதாக இருக்கும்போது நடப்பது. இதற்கு வெளித் தையல் எந்தக் கோணத்தில் உள்ளது என்பதும், பளபளப்புப் பகுதி எந்தப் பக்கத்தை நோக்கி உள்ளது என்பதும் முக்கியம். அதுதான் நிகழ்ப்போவது அவுட்ஸ்விங்கரா அல்லது இன்ஸ்விங்கரா என்பதை முடிவுசெய்கிறது.

பாகிஸ்தானிகள் கண்டுபிடித்த ரிவர்ஸ் ஸ்விங் ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது ஐம்பது ஓவர்களுக்குப் பின் ஆரம்பிப்பது. பந்து அதன் பளபளப்பை மொத்தமாக இழந்தபின், ஒரு பக்கத்தை மட்டும் ‘ரஃப்’ ஆக்குவார்கள். அந்தப் பகுதி தரையில் பட்டுப் பட்டு இப்படி ஆகும். அப்போது மறுபக்கத்தை எச்சில் கொண்டு கனமாக ஆக்குவார்கள். இப்போது முன் இல்லாதமாதிரி மாறு பக்கமாக ஸ்விங் ஆகும். இதைத்தான் ரிவர்ஸ் ஸ்விங் என்பார்கள். புரியாவிட்டால் லூஸில் விட்டுவிடுங்கள். பின்னொரு முறை விளக்குகிறேன்.

எல்லா கிரிக்கெட் பந்துகளும் ஒரே மாதிரி சீம், ஸ்விங், ஸ்பின் ஆகுமா என்றால் இல்லை. டெஸ்ட் போட்டிகளில் உலக அளவில் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் கூக்கபூரா பந்துகளைத்தான் பயன்படுத்துவார்கள். இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் எஸ்.ஜி நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்துவார்கள். எஸ்.ஜி பந்துகளில் சீம், தையல் அழுந்தி இருக்காது, எழும்பி இருக்கும். கூக்கபூரா பந்துகளில் தையல் சற்றே அழுந்தி பொதிந்து இருக்கும்.

இதனால் எஸ்.ஜி பந்துகள் ஸ்பின்னர்களுக்கு அதிக ஆதரவைக் கொடுக்கும். இந்திய ஆடுகளங்கள் எந்த அளவுக்கு உதவுகின்றனவோ அதே அளவுக்கு இந்திய எஸ்.ஜி பந்தும் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்க உதவுகின்றன.

டெஸ்ட் போட்டிகளில் எப்போதுமே சிவப்பு வண்ணப் பந்துகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. காலை வெய்யிலில், வெள்ளை ஆடைகளுக்கு இடையில் சிவப்புப் பந்தை எளிதாக அடையாளம் காணமுடியும். ஆனால் கலர் பைஜாமா கிரிக்கெட் வந்தபிறகு, பகலிரவு ஒளிவிளக்கு ஆட்டங்கள் வந்தபிறகு, சிவப்புப் பந்தை அடையாளம் காண்பது எளிதாக இல்லை. அதனால்தான் ஒரு நாள் போட்டிகளில் பந்துகளுக்கு வெள்ளை வண்ணம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை வெள்ளை வண்ணப் பந்துகள் தரமானவையாக இல்லை. பச்சைப் புல், தரை அழுக்கு என எல்லாம் பட்டு, நாற்பது ஓவர்களில் அழுக்குப் பந்தாக ஆகும் இதைக்கொண்டு மேலே விளையாடுவது சிரமமாக இருக்கிறது. எனவே பந்தில் ஒரு மாற்றம் கொண்டுவருகிறார்கள். இது ஆட்டத்தின் போக்கை வெகுவாக மாற்றவும் செய்கிறது.

இவற்றை அடுத்து ஆராய்வோம்.

இரவெல்லாம் அழுகிறார்கள்…

[பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இயற்கை எய்திவிட்டார்.  அவருக்கு தமிழ் பேப்பரின் மனமார்ந்த அஞ்சலிகள். தமது யாழ்ப்பாணப் பயணத்தின்போது பார்வதியம்மாளைச் சந்தித்துத் திரும்பிய பத்ரி, சூரியக் கதிர் பத்திரிகையில் எழுதிய கட்டுரை இது. சூரியக் கதிருக்கு நன்றியுடன் இங்கு மீள் பிரசுரம்.]

பார்வதி அம்மாள்

அது சிறிய கடற்கரை ஊர். மக்கள் தொகை ஐயாயிரம் இருந்தாலே அதிகம். மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தோம். கடல். கடலை ஒட்டிய சாலை. அதில் கடலைப் பார்த்தபடி இருக்கிறது பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை. அமைதியான சிறு கட்டடம். அங்குதான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரைப் பார்க்கத்தான் நாங்கள் சென்றிருந்தோம்.

யாழ்ப்பாணம் நகரில் கல்விக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற வாரம் நான் சென்றிருந்தேன். 2009-ல் போர் முடிந்தபின் வியாபார நிமித்தமாக இலங்கை சென்றுவந்துள்ளேன் என்றாலும் கொழும்பு தாண்டி வேறு எங்கும் செல்லவில்லை. இப்போதுதான் முதல்முறையாக யாழ்ப்பாணம் வருகிறேன். ஆனாலும் வல்வெட்டித்துறை செல்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் படித்துவிட்டு, காந்தளகம் மறவன்புலவு சச்சிதானந்தம் என்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். யாழ்ப்பாணத்துக்காரர். ஆனால் கடந்த பல வருடங்களாக அவர் வசிப்பது சென்னையில். யாழ்ப்பாணம் நகரை ஒட்டியுள்ள அவரது கிராமமான மறவன்புலவில் சுவிட்சர்லாந்து நாட்டின் உதவியுடன் வீடுகள் அனைத்தும் மீண்டும் கட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கவும், தான் ஈடுபட்டிருக்கும் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயல்களைக் கவனிக்கவும் சில நாள்களுக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கிறார். அங்கிருந்து வல்வெட்டித்துறை போகப்போவதாகவும், மருத்துவமனையில் பார்வதி அம்மாளைப் பார்க்கப்போவதாகவும் சொன்னார். உடனே வேலையை விட்டுவிட்டு நான் அவருடன் ஒட்டிக்கொண்டேன்.

யாழ் நகரத்தைச் சுற்றிக் காட்டினார். ‘இதோ, எரிக்கப்பட்ட நூலகம்’ என்று காண்பித்தார். இங்குதான் ஜனவரி 1974-ல் சர்வதேச தமிழ் ஆய்வு மாநாடு நடத்தப்பட்டது. அப்போதுதான் போலீஸ் தடியடியின்போது ஏழு பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னரே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் எங்கும், என் இலங்கையின் தமிழர் பகுதி எங்குமே வலி தரக்கூடிய வரலாற்று நிகழ்வுகள்தானே?

எதைப் பற்றியும் பேசமுடியாத ஒரு சோகத்தில், காரில் வல்வெட்டித்துறை செல்லும் வழியில் திடீரெனப் பெருமழை. எதிரே வருவோர் யாரும் கண்ணுக்குத் தெரியாத வகையில் கொட்டிக்கொண்டிருந்தது. புதிய சாலைகளைப் போடுகிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ராணுவ வீரர். மழை விடவும், நாங்கள் சாலையில் ஒரு டி-ஜங்ஷனை அடையவும் சரியாக இருந்தது. இடது பக்கம் திரும்பினால் வல்வெட்டித்துறை. வலப்பக்கம் பருத்தித்துறை.

அடையாளம் கேட்டுக்கொண்டு மருத்துவமனையை அடைந்தோம். ஒரு காவலரோ, ராணுவ வீரரோகூட காவலுக்கு இல்லை என்பது அதிசயமாக இருந்தது. உள்ளே நுழைந்து வழி கேட்டுக்கொண்டு பார்வதி அம்மாள் இருக்கும் வார்டுக்குச் சென்றோம்.

அவருக்கு என்று சிறப்பு அறை ஏதும் கிடையாது. சுமார் 12-15 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு அது. அதில் ஒரு படுக்கையில் அவர் படுத்திருந்தார். மூப்பாலும் நோயாலும் அலைக்கழிப்பாலும் சுருண்டு சிறியதாகியிருந்த உருவம். உடலின் வலப்பக்கம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயல் இழந்தவர். நர்ஸ்கள்தான் தூக்கி உட்காரவைக்கவேண்டும். உணவு கொடுக்கவேண்டும். உடலைத் துடைக்கவேண்டும். உடையை மாற்றவேண்டும். மீண்டும் படுக்கவைக்கவேண்டும்.

சச்சிதானந்தம் பார்வதி அம்மாளிடம் அறிமுகம் செய்துகொண்டு சில வார்த்தைகள் பேசினார். அந்த அம்மாளுக்கு தற்போது நினைவில் நிற்பவை வெகு சிலவே. கலங்கிய முகம். தன்னைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவர் இருப்பதாகத் தெரியவில்லை. அவரது இயலாமையும் பரிதவிப்பும் மனத்தைப் பிழிந்தன. அவரைப் பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் அருகில் இல்லை. யாரும் வருவதில்லை என்றார் செவிலிப்பெண்.

இந்த வயதான, நோய்வாய்ப்பட்ட அம்மாளா இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர் என்று சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்? அரசியலில் எந்தவிதத்திலும் ஈடுபடாத ஒரு வயதானவரை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முயற்சி செய்த தமிழக அரசியல்வாதிகள் வெட்கப்படவேண்டும். சென்னையில் பார்வதி அம்மாளின் மகள் ஒருவர் இருக்கிறார். தன் அன்னையை தன்னுடன் வைத்துக்கொள்வதில் அவருக்கு இஷ்டமில்லை என்பதாகச் செய்தி. மற்றொரு மகனும் மகளும் கனடாவில் இருக்கின்றனர்.

மருத்துவர் மயிலேறும்பெருமாள் அழைப்பதாகத் தகவல் சொன்னார்கள். உள்ளே நுழைந்தோம். எங்களைப் பார்த்த உடனேயே, ‘இந்தியாவால்தான் எல்லாப் பிரச்னையும்’ என்றார். தலையைக் குனிந்துகொண்டோம். ‘பார்வதி அம்மாளைப் பார்த்துக்கொள்ள எந்த நாட்டின் மருத்துவ உதவியும் எங்களுக்குத் தேவையில்லை. அனைத்து வசதிகளும் எங்களிடமே இருக்கின்றன’ என்று பெருமையுடன் சொன்னார். முந்தைய வாரம்தான் தன்னிடம் வந்திருந்த 25 லட்ச (இலங்கை) ரூபாய்க்கான காசோலையைக் காட்டினார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் அனுப்பியுள்ள பணம். ‘ஆனால், இந்த அம்மாவுக்கு, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் பாசம். இரவெல்லாம் அவர்களை நினைத்து அழுகிறார்கள். அதுதான் பிரச்னையே’ என்றார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற மயிலேறும்பெருமாளுக்கு இப்போது வயது 70. முண்டா பனியன்தான் அணிந்துள்ளார். நெற்றியில் சந்தனப்பொட்டு. கழுத்தில் இரண்டு சங்கிலிகள். அதில் ஒன்றில் அவரது தாயின் படம். அழுத்தம் திருத்தமாகப் பேசினார். 60 வயதில் ஓய்வுபெற்றவர், மருத்துவர்கள் பற்றாக்குறையால் ‘ரீ-எம்பிளாய்மெண்ட்’ என்று மறுபடியும் பணி செய்கிறார். பார்வதி அம்மாளின் கனடா மகன், மகள் தினமும் தொலைபேசியில் பேசுவார்களாம். நேரில் வந்து தாயை ஏன் அழைத்துச்செல்லக்கூடாது என்ற இவர் கேள்விக்கு, இலங்கை வந்தால் உயிர் பயம் என்ற பதில்தான் வருமாம்.

‘அப்படி என்ன உயிர்மீது பயம்? இதோ, வெளியே இதே தெருவில் ஐந்து முறை நான் கொல்லப்பட்டிருப்பேன். குண்டுகள் வீசப்பட்டபோதும் கவலை இன்றி, என் வேலையைச் செய்தேன். அன்று ஒரு நாள் மட்டுமே 29 உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்தேன். தாய்க்காக ஒருவரால் இதைக்கூடச் செய்யமுடியாதா’ என்று பொருமினார். அதற்கு முந்தைய நாள்தான் மஹிந்த ராஜபக்ஷேவின் ஒரு செயலர் அங்கு வந்திருந்தார் என்று அவரது அடையாளச் சீட்டை எடுத்துக் காண்பித்தார். என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னாராம். பலாலியிலிருந்து கனடாவரை விமானம்மூலம் பார்வதி அம்மாளை அனுப்பிவைக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால் இந்த அம்மாளை வைத்துக்கொள்ளத்தான் யாரும் தயாரில்லை போலும்.

நோயாளி ஒருவருக்கு வயிறு வீங்கியுள்ளது என்று செவிலிப்பெண் ஒருவர் எட்டிப்பார்த்துச் சொன்னார். அதற்குமேல் மருத்துவரது நேரத்தை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

வெளியே நல்ல வெயில். புழுக்கம் அதிகரித்திருந்தது.

பூங்காற்று திரும்புமா?

மலேசியாவில் இருந்து கலைவேட்கை கொண்டு ஓர் இளைஞன் சென்னையில் கால் பதிக்கின்றான்.  எந்தவிதமான செல்வாக்கும், கலைப்பின்னணியும் இல்லாத ஒரு புது இடத்தில்தான் அவன் பாடகனாகத் தன் சுற்றை ஆரம்பிக்க வேண்டிய சவால். அவனுக்குத் தேவை ஒரு நல்ல வாய்ப்பு. டெல்லி டூ மெட்ராஸ் என்ற படத்தில் அவனுக்குப் பாடவாய்ப்புக் கிடைக்கின்றது. அதுவும் கிணற்றில் போட்ட கல்லாய் வெளிவராத பாட்டாக அமைந்து விடுகின்றது.  ஒரு நல்ல திருப்பத்துக்காகக் காத்திருந்த அவனுக்கு “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற 16 வயதினிலே படப்பாடல் அமைந்து விடுகின்றது. ஒரு வெள்ளந்தித்தனமான அந்தக் குரலே பட்டிதொட்டியெங்கும் அந்தக் கலைஞன் யாரென்று திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றது.

அந்தப் பாட்டில் ஆரம்பித்த சுற்று, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அங்கீகரிக்கப்படுகின்றார். அவர் தான் மலேசியா வாசுதேவன்.

எண்பதுகளிலே ரஜனி – கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் தமிழ்த் திரையுலகின் அடுத்த போக்கைத் தீர்மானிக்கும் நட்சத்திரங்களாக  உயர்ந்து நிற்கின்றார்கள். கமல்ஹாசனின் நகலாக அச்சொட்டாகப் பொருந்திப்போய் விடுகின்றது எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல். ஸ்டைலாக,  நடிப்பிலங்கணங்களைக் கடந்த எதார்த்தமான ரஜினிகாந்தின் குணாம்சத்துக்குப் பொருந்திப் போக ஒரு குரல் தேவைப்படுகின்றது. அந்த வேளை மலேசியா வாசுதேவனின் குரல் தான் சூப்பர் ஸ்டாராக மாறிக்கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு அணி செய்யும் விதத்தில் அமைந்து விடுகின்றது.

உதாரணமாக தர்மயுத்தம் படத்தில் வரும் தங்கை செண்டிமெண்ட் பாடல் “ஒரு தங்க ரதத்தில் என் மஞ்சள் நிலவு”, அதே படத்தில் வரும் “ஆகாய கங்கை” என்ற காதல் பாட்டு. இந்த இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் பாடியியிருக்கும் பாணியைக் கவனித்தாலே போதும், ரஜினிகாந்த் என்ற எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு இந்தக் குரல் எவ்வளவு தூரம் நெருங்கி ஒத்துழைத்திருக்கின்றது என்று.

ஒரு காலக்கட்டத்தில் டி.எம். செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது. எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படங்களிலே மலேசியா வாசுதேவன் குரல் தான் அவருக்கான குரலாகப் பொருந்தியிருக்கின்றது. குறிப்பாக, முதல் மரியாதை என்ற காவியத்திற்கு மலேசியா வாசுதேவனின் குரலின் பரிமாணம் அப்படத்தின் பாடல்களில் வெளிப்பட்டு படத்தின் உணர்வோட்டத்திற்கு உயிரூட்டியதொன்று. அந்தப் படத்திலேயே அவருக்குத் தேசியவிருது கிட்டியிருக்க வேண்டியது வேறெந்தப்படத்துக்கும் கூடக் கிடைக்காதது பெரும் துரதிஷ்டம்.

நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார்.  குறிப்பாக கைதியின் டயரி என்ற படத்தில் ஆரம்பித்து முதல் வசந்தம், ஊமை விழிகள் என்று மலேசியா வாசுதேவனுக்கான பாத்திரங்களைச் சிறப்பாகவே செய்து அதிலும் தன் முத்திரையைக் காட்டியவர்.

சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம். சாமந்திப்பூ படத்தில் தானே இசையமைத்துப் பாடிய “ஆகாயம் பூமி” பாட்டைத் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் , எஸ்.பி.சைலஜா பாடிய “மாலை நேரம்” பாடல் வந்த காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்பிச் சலிக்காத பாடலாக இருந்தது.

1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க “நீ சிரித்தால் தீபாவளி” படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் “ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே” பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமா ரமணனோடு பாடிய “இந்த அழகு தீபம்” பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார்.  “மாமனுக்கு மைலாப்பூரு தான்” (வேலைக்காரன்) பாட்டிலே வெளிப்படும் எள்ளல் குரல், “எங்கெங்கும் கண்டேனம்மா” (உல்லாசப்பறவைகள்) பாட்டில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தித்தனமாக இன்னொரு குரல், “கோடை காலக் காற்றே” (பன்னீர் புஷ்பங்கள்) பாட்டில் வரும் மென்மையாக ஒலிக்கும் குரல் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், இவரது குரலின் பரிமாணங்களை.

எண்பதுகளின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசும் போது மலேசியா வாசுதேவனுக்கான பக்கங்கள் தனியாக ஒதுக்கப்படவேண்டியவை. இது அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி செலுத்தப்படவேண்டிய தருணம்.

தோழர்

அத்தியாயம் 16

ஜெர்மன் புத்தகத்தின் அட்டை

மேரி பர்ன்ஸ், ஜார்ஜ் வீரத் இருவரையும் தொடர்ந்து ஜேம்ஸ் லீச் என்பவரும் எங்கெல்ஸின் ஆய்வுக்கு உதவிகரமாக இருந்தார். ஜேம்ஸ் லீச் சாசன இயக்கத்தில் இணைந்திருந்தார். ஒரு விவசாயத் தொழிலாளராக வாழ்வைத் தொடங்கி நாளடைவில் தொழிற்சாலைப் பணியாளராக மாறியவர். தொழிலாளர் வர்க்கத்தின் மீது பரிவு கொண்டவர். எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எங்கெல்ஸ் லீச்சிடம் ஆர்வத்துடன் உரையாடினார். சாசன இயக்கம் குறித்தும் மான்செஸ்டர் தொழிலாளர் வர்க்கம் குறித்தும் இவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொண்டார். மான்செஸ்டர் ஆலைத் தொழிலாளர்கள் குறித்து லீச் எழுதிய ஒரு பிரசுரத்தை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் வாசித்தார். தனது ஆய்வு அறிக்கையிலும் இந்தப் பிரசுரத்தைப் பலமுறை மேற்கோள் காட்டினார்.

இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை (The Condition of the Working Class in England) என்னும் தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய நூல் 1845ம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதலில் வெளிவந்தது. இந்தப் புத்தகம் எப்படி எழுதப்பட்டது என்பதை லெனின் விவரிக்கிறார். ‘தொழிலாளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களுடைய வறுமையையும், துன்ப துயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்று விடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றித் தமக்கு முன்பே வெளியாகியிருந்த விஷயங்களையெல்லாம் அவர் படித்தார். கைக்கு அகப்பட்ட அதிகாரபூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார். இப்படிப் பார்த்தறிந்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845ஆம் ஆண்டு வெளியான ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்ற நூல் ஆகும்’.

எங்கெல்ஸுக்கு முன்பே பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வருணித்து பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு உதவி புரியவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏழைமையை அகற்றுவது குறித்து பல கோட்பாடுகளையும் பலர் முன்வைத்துள்ளனர். பல திட்டங்களையும் வகுத்துள்ளனர். ஆனால்,  எங்கெல்ஸின் அணுகுமுறை அவர்களிடம் இருந்து பெரிதும் வேறுபட்டது. எப்படி என்பதை லெனின் விவரிக்கிறார்.

ஆங்கில மொழிபெயர்ப்பில்

‘பாட்டாளி வர்க்கம் துன்ப  துயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல. அந்த வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை, தடுக்க முடியாதபடி முன்னோக்கிச் செல்கிறது. தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ்தான் முதன்முதலாகச் சொன்னார்.’ உழைக்கும் மக்களை வாட்டி வதக்கும் அதே பொருளாதார நிலைமை, அவர்களுக்குப் போராடும் உத்வேகத்தையும் வழங்குகிறது என்பதை எங்கெல்ஸ் முதல் முறைõயக அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார். அந்த வகையில், இந்தப் புத்தகம் புரட்சிகரமானது.

முதலாளித்துவத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் நடத்தும் இந்தப் போராட்டத்தில், எப்படிப்பட்ட ஆயுதம் பயன்படுத்தப்படும்? லெனின் தொடர்கிறார். ‘போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்கு உவியாகக் கொள்ளும்.’ மேலும், ‘தங்களது விடுதலை சோசலிசத்தில் மட்டுமே உள்ளது’ என்பதை தொழிலாளர்கள் உணர்ந்துகொள்வார்கள். அவர்களுடைய அரசியல் இயக்கம் இந்த எண்ணத்தை வலுப்படுத்துவதாக இருக்கும் என்றார் லெனின்.

‘அரசியல், தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் லட்சியமாக ஆகும்போதுதான், சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கும் பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாக இருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சி உண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன.’

லெனின் தொடர்கிறார். ‘இந்த நூல் முதலாளித்துவத்தின் மீதும் முதலாளி வர்க்கத்தினர் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் பசுமரத்தாணி போல் அது பதிந்தது. எங்கெல்ஸின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது. பலரும் இதிலிருந்து மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையில் பார்த்தால், 1845ம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.’

அடிப்படை பிரச்னை பொருளாதாரத்தில் அடங்கியிருக்கிறது என்பதால் தனிச்சொத்து பற்றி எங்கெல்ஸ் விவாதித்ததை லெனின் சுட்டிக்காட்டினார். ‘மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய பொருள்களை உற்பத்தி செய்வதில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் சகல தோற்றங்களுக்கும், மனித விருப்பங்களுக்கும், கருத்துகளுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச் சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கின்றது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம்.

‘சோஷலிஸ்டுகள் செய்ய வேண்டியதெல்லாம் சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் இடத்தின் காரணமாக, சோஷலிஷத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்றுப்பூர்வமான கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம். அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக கேந்திரமாயிருந்த மான்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார்.’

இங்கிலாந்து, எங்கெல்ஸை ஒரு சோஷலிஸ்டாக மாற்றியமைத்தது. அதன் அடையாளமே எங்கெல்ஸ் எழுதிய மேற்கூறிய புத்தகம். ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’, ஜெர்மன் மொழியில் வெளிவந்து நாற்பது ஆண்டுகள் கழித்து, 1887ம் ஆண்டு, நியூ யார்க்கில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இங்கிலாந்தில் 1891ம் ஆண்டு வெளிவந்தது. அதன் முன்னுரையில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘இந்தப் புத்தகத்தின் நூலாசிரியர் அப்போது இருபத்து நான்கு வயது இளைஞராக இருந்தார். அவரது படைப்பில் இந்த இளமையின் நல்ல மற்றும் கெட்ட சாயல் படிந்திருப்பதைக் காணலாம்… அன்றைய இங்கிலாந்தை மட்டுமல்ல இன்றைய இங்கிலாந்தையும் இந்தப் புத்தகம் பிரதிபலிக்கிறது.’ மான்செஸ்டர் குறித்து எங்கெல்ஸ் பதிவு செய்திருந்த சில விஷயங்கள், புத்தகம் வெளியானபிறகு சிறிதளவு மாற்றம் கண்டது உண்மைதான் என்றாலும் பெரும்பாலும் நிலைமை அப்படியேதான் நீடித்தது. இதனை எங்கெல்ஸும் சுட்டிக்காட்டினார்.

காலரா, அம்மை உள்ளிட்ட தொற்று நோய்கள் பல இடங்களில் மலிந்து வருவதைப் பற்றி எங்கெல்ஸ் தன் நூலில் எழுதியிருந்தார். கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் தொற்றுநோய் மிக அதிகம் பரவியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். மான்செஸ்டர், லிவர்பூல் ஆகிய பெரும் தொழில் நகரங்களில் கடுமையான காய்ச்சல், காலரா, இடைவிடாத இருமல் ஆகிய நோய்களால் தொழிலாளர்கள் அவதிப்படுவது ஏன்? நோய்களால் இறப்பவர்களின் சதவீதம் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் நான்கு மடங்கு அதிகம் இருப்பது ஏன்?

தொழில் புரட்சிதான் காரணம் என்றார் எங்கெல்ஸ். கார்லிஸ்லே என்னும் தொழில் நகரத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டார். ஆலைகள் அமைக்கப்படுவதற்கு முன்பு, 10,000 குழந்தைகளில் 4,408 குழந்தைகள் ஐந்து வயதைத் தொடும் முன்னர் இறந்துபோயினர். 1779 முதல் 1787 வரையிலான கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட எண்ணிக்கை இது. ஆலைகள் அமைக்கப்பட்டபிறகு இந்த எண்ணிக்கை 4,738 ஆக உயர்ந்தது. வயதானவர்களில், 10,000 பேரில் 1,006 பேர் 39 வயதைத் தொடும் முன்னர் இறந்துபோயினர். ஆலைகள் அமைக்கப்பட்ட பிறகு, இறப்பு எண்ணிக்கை 1,261 ஆக உயர்ந்தது.

ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்குள் இங்கிலாந்தின் நிலைமை சற்றே மாறிப்போனது உண்மை. தொழிலாளர் மத்தியில் தொற்றுக்கிருமிகள்  பரவுவது தங்களுக்கும் ஆபத்தானதே என்பதை உணர்ந்த இங்கிலாந்து பூர்ஷ்வாக்கள், சுகாதாரம் குறித்த பிரசாரத்தைத் தொடங்கினர். குப்பைக்கூளங்களாலும் சாக்கடைகளாலும் நிரம்பியிருந்த தொழிலாளர் குடியிருப்புகள், தூய்மையின் அவசியத்தைப் பின்னர் உணர்ந்துகொண்டன.

ஆரம்பகட்ட முதலாளித்துவச் சுரண்டலில் இருந்து வளர்ந்து இன்னொரு கட்டத்தை இங்கிலாந்து அடைந்துவிட்டது. ஆனால், அந்த இடத்துக்கு ஜெர்மனியும் பிரான்ஸும் அமெரிக்காவும் போட்டியிடுகின்றன என்றார் எங்கெல்ஸ். இங்கிலாந்தின் யதேச்சதிகாரத்தை இந்நாடுகள் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் நிலவிவந்த சமூகச் சூழல் தற்போது இந்த நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் நிலவிவருவதைக் காணலாம். வேலை நேரத்தைக் குறைக்கச் சொல்லி முன்னர் இங்கிலாந்தில் தொழிலாளர்கள் போராடியதைப் போலவே அமெரிக்காவில் இப்போது தொழிலாளர்கள் போராடிவருகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார் எங்கெல்ஸ்.

மான்செஸ்டர் நகரின் முரண்பாடுகளைப் படம் பிடிக்கும் அற்புதமான ஆவணமாக எங்கெல்ஸின் புத்தகம் பல்வேறு பிரிவினராலும் கொண்டாடப்பட்டது. ஒரு நகரையும் அதில் வசிக்கும் இரு முரண்பட்ட மக்கள் வர்க்கத்தையும் எங்கெல்ஸ் ஆதாரப்பூர்வமாகத் தன் நூலில் கண்முன்  நிறுத்தினார். நோயும் நொடியும் செழிப்பும் செல்வமும் அருகருகே வாழ முடியும் என்று அவர் அறிவித்தார். மான்செஸ்டரை வேறு பல விக்டோரிய நகரங்களுடன் ஒப்பிட்டு அலசியதன் மூலம், இங்கிலாந்து சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை எங்கெல்ஸால் அளிக்கமுடிந்தது. அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறிய தொழிலாளர்கள் பற்றிய அலசல்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

ஒரு வர்க்கம் இன்னொன்றை எப்படி அடக்கியாள்கிறது என்பதையும், பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் உழைக்கும் மக்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர் என்பதையும் எங்கெல்ஸின் இப்புத்தகம் திட்டவட்டமாக விவரித்தது. தொழிலாளர்களின் கையடக்க அரசியல் வழிகாட்டியாகவும் இந்நூல் விரைவில் மாறிப்போனது.

(தொடரும்)

காதல் புராணம் 8

8. வெந்து தணிந்த காடுகள்

மடந்தை [வயது : 14-19]

71

முதன்முறை தாவணியணிந்து

உன் முன் நின்ற போழ்தினில் நீ

தொட்ட இடம் நினைக்கையில்

நரம்புகள் மெல்லச் சில்லிட்டு

நாள‌ங்கள் எல்லாம் விரிந்து

முதுகுத்தண்டு உஷ்ணமாகி

தாவணியணியக்கேட்கிறது

மனசு மீண்டுமொரு முறை.

72

திமிறும் கணங்கள் அனைத்திலும்

அடங்கிவிடவே ஆசைப்படுகிறேன்

என்பதையெப்படியறிகிறாய் நீ?

73

யாரோ தூரக்குரல‌ழைக்க

நமைத்தனியே விடுத்து

உனதன்னை விலகிய‌

சிறு இடைவெளியில்

எனைக்கதவடைத்துக்

கலைத்தவன் தானே நீ.

74

மெல்லப் படர்ந்து நீ தொடத்தொட

தொடரவிடாது தடுப்பதெல்லாம்

எல்லைமீறி விடுவாய் என்றன்று

எல்லைமீறி விடுவேன் என பயம்.

75

அங்கே இங்கே தொடுவதில்

ஆதார அவஸ்தையே

அங்கே இங்கேயுடன்

நிறுத்தி விடுவது தான்.

76

சில்மிஷங்கள் செய்

சில்லெனச் சூடாக்கு

உடலைப்பதற வை

உயிரைச்சிதற வை

எந்தன் திமிரடக்கு.

77

ப‌னிபெய்யும் மார்கழி ராக்களில்

போர்வை தாண்டியூடுருவிடும்

குளிருக்கிதமாய் இளஞ்சூட்டில்

நெஞ்சுக்குள் வருமுன் நினைவு –

விடியும் வரை விழித்திருப்பேன்.

78

திரையரங்க மெல்லிருட்டின்

தித்திக்கும் சில்மிஷங்களில்

திட்டித் தீர்க்கின்றேனுன்னை

அடுத்தடுத்த‌ கட்டங்களுக்கு

அழகாய் அனுமதித்தவாறே.

79

பேசிய வார்த்தைகளும்

வீசிய புன்னகையும்

ஊசிப் பார்வைகளும்

கூசிக் குறுகுறுத்தபடி

படுக்கையறை நுழைந்தென்

முத்தானை பிடித்திழுக்கிறது.

80

லட்சம் சொற்களிருந்தும்

நீ ரசித்துச் சொல்லுமந்த‌

ஒற்றை ஐ லவ் யூவிற்கு

இணையில்லையெதுவும்.

அல்வா

அத்தியாயம் 21

சாம்சங் 14”எல் ஈ டி என்றிருந்த பெட்டிக்குள் கடைசி பேட்டரியை வைத்தான் ரெனே. “சீல் செய்துவிடலாம்”

“ரெனே.. நீ செய்வது எனக்குத் துளிக்கூடப் பிடிக்கவில்லை” டெரி மூலையில் சுழல்நாற்காலியில் அமர்ந்திருந்தார். “உனக்குத் தெரியுமா நீ செய்யும் வேலையின் தீவிரம்? 150 பேட்டரிகள் இல்லை அவை. 150 பாம்கள். கற்பனை செய்து பார்க்கமுடியாத சக்தி கொண்ட பாம் ஒவ்வொன்றும்.. நினைத்துப்பார். நீ இருக்கும் பில்டிங்கிலேயே இவர்கள் இதை வைத்தால்?”

டேனியும் பயத்துடனேதான் பார்த்துக்கொண்டிருந்தான். வெடித்துக் கிடித்து வைத்துவிட்டால்?

“வேறு வழி இருக்கிறதா டெரி? நாளை என்ன நடக்கும் என்பதை நினைத்து இன்றைய வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது.”

அமீர் வந்துவிட்டிருந்தான். “புத்திசாலித்தனம் என்பது பேட்டரி தயாரிப்பதில் இல்லை டெரி. சமயத்துக்குத் தகுந்தது போல நடந்துகொள்வதில் இருக்கிறது. அது இந்தப்பையனிடம் நிறையவே இருக்கிறது”

டெரி கோபமாகப் பார்த்தார். “என் ஆராய்ச்சி எத்தனை பேரை அழிக்கப்போகிறதோ? நல்ல எண்ணத்துடன் செய்தது. எவ்வளவு பெரிய ப்ரேக்த்ரூ! கேவலம் வெடிகுண்டாகவா ஆகவேண்டும்” குரல் தழுதழுத்தது. அழுகிறாரா என்ன?

”சொல்ல மறந்துவிட்டேன். இன்று எல்லாருமே கிளம்புகிறோம். ஒரு பாட்டரிக்கு மட்டும் வேல்யூ ப்ரோகிராம் செய் ரெனே”

”ஏன்? ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து கண்டுபிடிப்பதற்காகவா? அது ஒன்றுதான் எங்கள் உயிருக்கு உத்தரவாதம்” ரெனே பதட்டமானான்.

“கவலைப்படாதே. வேல்யூ ப்ரோகிராம் செய்த பாட்டரியை நீயே கையில் வைத்துக்கொள். அதை வைத்து நீங்கள் ஒரு டெமோ காட்டப்போகிறீர்கள்”

“டெமோ? வெடிக்க வேண்டுமா?”

“ஆமாம். கடையில் கிடைக்கும் சாதாரண பேட்டரிகளை வைத்து எங்களை ஏமாற்றிவிட்டால்? எங்கள் கஸ்டமரை நாங்கள் ஏமாற்ற முடியாது. குவாலிட்டி கண்ட்ரோல்.. ரேண்டம் சேம்ப்ளிங்” என்ற அமீர் பெட்டிக்குள் கையைவிட்டுக் குலுக்கி ஒரு பேட்டரியை எடுத்தான். “இதற்குப் ப்ரோகிராம் செய்”

ரெனே பேட்டரியைக் கையில் வாங்கி யோசித்தான்.

“டேனி, மிச்சம் பாக்ஸை சீல் செய்துவிடு”

டேனி இன்னும் சீல் செய்த அட்டைப்பெட்டியைக் கலவரத்துடன் பார்த்தான். “எப்படி எடுத்துச் செல்லப்போகிறீர்கள் பாஸ்?”

அமீர் சிரித்தான். “இதையா? ஒரு பயமும் இல்லை டேனி. மேலே ஏறி மிதிக்கலாம், கல்லைத் தூக்கிப் போடலாம்.. ஒன்றுமே ஆகாது.. சர்க்யூட்டில் பொருத்தி, ரேடியோ சிக்னல் கொடுத்தால்தான் இது எமன்”

சர்க்யூட்கள் இன்னொரு அதேபோன்ற பெட்டியில் சீலடிக்கத் தயாராக இருந்தன. அதில் இருந்தும் ஒன்றை உருவி ரெனேவிடம் எறிந்தான் அமீர்.

“ஓக்கே.. என் சேஃப்டிக்காக, இதற்கு ஒரு தனி ப்ரோகிராம் வேல்யூ தருகிறேன். அதையும் உங்களிடம் சொல்ல மாட்டேன்” என்றான் ரெனே.

“எனக்கு அதைப்பற்றி எல்லாம் இப்போதைக்கு கவலை இல்லை. என் கண்முன் இந்த பேட்டரி, நான் சொல்லும் இடத்தில் வெடிக்கவேண்டும்”

“மனிதர்கள் இல்லாத இடமாக இருக்கவேண்டும். என் கையால் யாரும் சாவதை என்னால் பார்க்க முடியாது”

“முட்டாளே, நீ செய்திருக்கும் வேலை எதற்குப் பயன்படும் என்று யோசித்தாயா? இவர்கள் கையால் செத்தாலும் பொறுப்பு என்னவோ நீதான்” டெரியின் கோபம் ரெனேமேல் பாய்ந்தது.

அமீர் அவரை மதிக்கவில்லை. ரெனேவிடம் “டோண்ட் வொர்ரி. பாலைவனத்தின் நடுவே ஒரு மலைப்பகுதி. ஈ காக்காய்கூட இருக்காது. இப்போது ஹெலிகாப்டர் ஏறி நேராக அங்கேதான் செல்லப்போகிறோம்”

“அங்கிருந்து?”

“அங்கிருந்து உங்களை வேறு இடம் கொண்டு செல்லப்போகிறோம். இந்த பேட்டரிகள் கைமாறும் வரை உங்களை ஹோட்டலுக்கு அனுப்ப மாட்டோம். நீங்கள் ஹோட்டலுக்குச் சென்றபின் சேஃப் ஆனபின் வேல்யூஸ் கொடுத்தால் போதும். அதை எங்கள் கஸ்டமருக்கு அனுப்பிவிடுவோம்.”

டேனி இரண்டு பெட்டிகளையும் தூக்கிக் கொண்டான். “பெரியவரை வீல்சேரில்?”

“அதெல்லாம் வரும்போதுதான். இப்போது சொன்னால் சாதாரணமாக நடந்தே வருவார்.”

கல்மோஷின் குரல் வாக்கி டாக்கியில் கேட்டது. “ஆல் செட்? நேரடியாக ஹெலிபேட் வந்துவிடுங்கள். அவர்கள் என்னையும் பார்க்காமல் ஏறிவிடட்டும்.”

அமீர் வாக்கி டாக்கியின் பட்டனை அழுத்தி “யெஸ். அண்ட், எல்லாவற்றுக்கும் தாங்க்ஸ். வித்தியாசமாக இருந்தது இந்த ஆபரேஷனின் களம்”

ஹெலிகாப்டர் பறக்க ஆரம்பித்தபோதுதான் ரெனே ரிக்52 என்ற எழுத்துகளைப் பார்த்தான். இரும்புக் கிராதிகள் நடுவே தெரிந்த ஒற்றைச் சுடர்.

உயரம் ஏற ஏறக் குளிர ஆரம்பித்தது. கடலின் ஆங்காங்கே வெள்ளைத் தீற்றல்களைக் க்ண்ணைக் கூர்மைப்படுத்திப் பார்த்தான் ரெனே. ம்ஹூம். எந்தக் கப்பலின் பெயரையும் படிக்கமுடியவில்லை.

அரைமணிநேரப் பயணத்துக்குப் பிறகு நிலம் தெரிந்தது. நிலத்திலும் எந்த இடமும் ஞாபகம் வைத்துக்கொள்வது போல இல்லை. பாலை மணல்மேடுகள், அதே மணல்மேடுகள் உறுதியானது போலத் தெரிந்த மலைகள். மரங்களோ, கடல் படுகையில் திடீர் வளைவுகளோ எதுவும் இல்லை. மேப்பை வைத்துப் பார்த்தால்கூட இடத்தைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம்.

மலையின் முகட்டில் சிறு சமதளத்தைத் தேடிக் கண்டுபிடித்து தரையில் இருந்து நான்கடி உயரத்தில் நின்றது ஹெலிகாப்டர்.

”பேட்டரியைக் கொடு” என்றான் அமீர். சர்க்யூட்டில் பேட்டரியை இணைத்து ரெனே தர, இறங்காமலேயே அதைத் தரையில் போட்டான் அமீர்.

”சேஃப் டிஸ்டன்ஸ் எவ்வளவு தூரம்?” அமீர் கேட்க, ரெனே மனதுக்குள் கணக்குப்போட ஆரம்பித்தான்.

“12000 அடி உயரத்தில் 4 நாட் சென்றால் சேஃப்” என்றார் டெரி. அவருக்குத்தெரியாததா?

அமீர் பைலட்டைப்பார்க்க, ஹெலிகாப்டர் உயரம் ஏறத் தொடங்கியது.

“இப்போது எப்படி இது வெடிக்கும்” டேனி கேட்டான்.

“சிம்பிள். இது சாதாரண டெக்னாலஜிதான். அந்த சர்க்யூட்டில் ஒரு சிறு ட்ரான்ஸ்பாண்டர் இருக்கிறது. அந்த ட்ரான்ஸ்பாண்டருக்கு ரேடியோ சிக்னல் வந்தால் சர்க்யூட்டுக்கு லோட் கிடைக்கும். லோட் கிடைத்தால் பேட்டரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.” ரெனே ஆசிரியர் தொனியில் சொன்னான்.

“ரேடியோ சிக்னல்?”

“ஏதாவது ஒரு சாட்டிலைட் போனில் இருந்து குறிப்பிட்ட நம்பரை டயல் செய்தால் போதும்”

“என்ன நம்பர்? வேறு யாராவது அந்த நம்பரை அழைத்துவிட்டால் என்ன ஆகும்?”

“அது அவ்வளவு சுலபம் இல்லை. இது ஒரு 21 டிஜிட் நம்பர். அல்காரிதம்.கஷ்டமான கால்குலேஷன். சாட்டிலைட் ஃபோனால் மட்டும்தான் இந்த சிக்னல் தரமுடியும். அதைத்தான் உங்களுக்கு நான் தரப்போவதில்லை”

“அப்போது நீயே அந்த நம்பரை அழுத்து”

”கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் வேண்டும். இன்று என்ன தேதி?” அமீர் சொல்ல ரெனே அதை ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டான்.அமீருக்கும் டேனிக்கும் முதுகைக்காட்டி அமர்ந்துகொண்டான்.

“க்ரீன்விச் டைம் என்ன இப்போது?”

“12:42” என்றான் வாட்சை அழுத்தி.

”ஐந்து நிமிடம் கூட்டிக்கொள்கிறேன்” என்று அதயும் பேப்பரில் எழுதி வேகமாக சில கணக்குகள் போட்டான். வந்த நம்பரை ஃபோனில் அழுத்தி, கால் பட்டனை அழுத்துவதற்கு முன் காகிதத்தைக் கிழித்துக் கீழே போட்டான்.

பைலட்டைப்பார்த்து “4 நாட் கடந்துவிட்டோமா?”

“நான்கரை”

கால் பட்டனை அழுத்தினான். ”இன்னும் 4 நிமிடங்கள் ஆகும். இதே டிஸ்டன்ஸில் சுற்றிக்கொண்டிரு.”

நான்கு நிமிடங்கள் யாருமே பேசவில்லை.

மலை வெடித்தது.

மாலை நேரம், வெளிச்சமாக இருந்த வானம் ஒரு நொடி கும்மிருட்டானது. சூரிய ஒளிக்குப் போட்டியாக மலை மீதிருந்து வந்த வெளிச்சம் கண்களைக் குருடாக்கியது. மலையின் கற்கள் பறப்பது சூரிய ஒளியில் தூசி பறப்பது போலத் தெரிந்தது. ஹெலிகாப்டர் சத்தத்தை மழுப்புவதற்காகப் போட்டிருந்த இயர்மஃப்களை மீறிச் சத்தம் கேட்டது.

இரண்டு நிமிடங்கள் கழித்துதான் அந்த இடம் ஓரளவு அடங்கியது போல இருந்தது.

“இப்போது அந்த இடத்துக்குத் திரும்பவும் போகலாமா?”

“நியூக்ளியர் ரேடியேஷன் பற்றிக் கேட்கிறாயா? அந்த பயம் இந்த பாமில் சுத்தமாக இல்லை. சாதாரண டிடிடி சக்திதான். என்ன, குறைந்த இடத்தில் அளவுகடந்த சக்தி”

பைலட்டுக்கு அந்த இடத்தை மீண்டும் கண்டுபிடிப்பதில் கஷ்டம் இருந்தது. மலை முகடாக இருந்த இடம் தரைமட்டமாக மாறிவிட்டிருந்தது.

அமீர் ஆச்சரியப்பட்டான். முதல் டெமோவுக்குள்ளேயே இது தயாராக இருந்திருந்தால் அனாவசியமாக ஏமாற்ற வேண்டி இருந்திருக்காது. இதன் சக்தி அவன் ஏமாற்ற வைத்த பாம் போலப் பல மடங்காக இருக்கிறது..

***

மோனிகா ஹோட்டல் லிஃப்டில் ஏறும்போது இடுப்பில் எதோ வைப்ரேஷனை உணர்ந்தாள். செல்ஃபோன் அடிக்கிறது.

கடவுளே ரெனேவாக இருக்கவேண்டும். அவசரமாகக் கையில் இருந்த ஷாப்பிங் பேக்குகளைத் தரையில் வைத்துவிட்டு ஃபோனை எடுத்தாள்.

கால் இல்லை. மெசேஜ். அன்நோன் செண்டர் என்று எழுதி இருந்தது. ஓப்பன் செய்தால் H790KA IRY9NA EWFIU8 என்று ஒன்றும் புரியாத மொழியில் இருந்தது. அடச்சே.

பேகை எடுத்துக்கொள்ளும் முன் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த மெசேஜை ரெனேவின் அமெரிக்க எண்ணுக்கு ஃபார்வார்ட் செய்தாள்.

எங்கே இருக்கிறானோ.. நான் எப்போது கிளம்புவதோ..

***

ஃபோன் அடிக்கும்போது லிஸா கழுத்துவரை கருப்புப் போர்வையை இழுத்துக்கட்டி இருந்தாள். முகம் முழுக்க எதோ வெள்ளைப்பூச்சு. கண்களில் வெள்ளரித் துண்டு.

சலூனில் ஃபேஷியல் செய்யும் பெண் லிஸாவின் ஃபோனைக் கண்ணாடி முன்னிருந்து பார்த்தாள்.

“அதை எடுத்துப்பார்.. யார் கூப்பிடுகிறார்கள்?”

“டிர் என்றிருக்கிறது” ஃபோன் விடாமல் அடித்தது. டிர்? ஓ.. டைரக்டரைச் சுருக்கமாக எழுதி இருந்தேன். ரவி.

”பச்சை பட்டனை அழுத்தி என் காதில் வை”

சலூன் பெண் முகத்தில் இருந்த வெள்ளை பட்டுவிடாத தூரத்தில் பத்திரமாக காதில் வைத்தாள்.

“சொல்லு ரவி”

“ஹலோ.. லிஸ்?” இது ரவி குரல் இல்லையே

“ஹூ இஸ் திஸ்?”

“கேல்க்கர். மும்பை போலீஸ்.  இந்த ஃபோன் யாருடையது?”

“எந்த ஃபோனைக் கேட்கிறீர்கள்?”

”இப்போது நான் பேசும் ஃபோன். ஃபோன் தெருவில் கிடந்ததாக ஒரு ஆள் கொண்டுவந்து கொடுத்தார். லாஸ்ட் டயல்ட் எண்ணில் இருந்து உங்களை அழைக்கிறோம். லிஸ் என்ற பெயரில் உங்கள் என் சேமிக்கப்பட்டிருந்தது” ஆங்கிலம்தான். மராத்தி வாடையை மீறிப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது.

“இந்த ஃபோன் ரவி என்னும் டைரக்டர் உடையது. நான் அவருடைய விளம்பரத்தின் ப்ரொட்யூஸர்”

“ஓ.. ஐ அம் ஸாரி மிஸ் லிஸ். ஃபோன் தரையில் இருந்து எடுக்கவில்லை. ரவி இறந்துவிட்டார்.. மர்டர்டு”

லிஸா அதிர்ந்தாள்.

புல்டோஸர் வேலையைக் காட்டிவிட்டான்.

-தொடரும்

லேட்டாச்சு

‘லேட்டாச்சு, லேட்டாச்சு!’ செல்வகணபதி பதற்றத்துடன் குதித்தார். ‘சீக்கிரமாக் கிளம்பு-ன்னு எத்தனைவாட்டி சொன்னேன்? இப்படிக் கடைசி நேரத்தில கழுத்தை அறுக்கறியே!’

’கிளம்பிகிட்டுதாங்க இருக்கேன்!’ என்றார் அவருடைய மனைவி. ‘இதோ, எல்லாரும் ரெடியாகிட்டோம். பஸ் ஏறவேண்டியதுதான் பாக்கி!’

ஆனாலும் செல்வகணபதி புலம்பிக்கொண்டேதான் வந்தார். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும் கடிகாரத்தைப் பார்த்தார் ’ஆறு மணிக்குப் ப்ரொக்ராம். இங்கயே அஞ்சரை ஆகிடுச்சு. இனிமே இந்த பஸ்காரன் நிதானமா வண்டியை ஓட்டி நாம அங்கே போய்ச் சேருறதுக்குள்ள ஆறரை ஆகிடும்!’ என்றார்.

எதிர் சீட்டில் அவருடைய எட்டு வயது மகன் ரமேஷ் ஒரு லாலிபாப்பைச் சுவைத்துத் தின்றுகொண்டிருந்தான். ‘சூப்பர் டேஸ்ட்ப்பா’ என்றான்.

‘நீ வேற நேரம் காலம் தெரியாம கடுப்பேத்தாதேடா!’ என்று கத்தினார் செல்வகணபதி. ‘ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சேன்னு நான் டென்ஷன்ல குதிச்சுகிட்டிருக்கேன். நீ கொஞ்சம்கூட கவலைப்படாமல் சாக்லேட் மென்னுகிட்டிருக்கியே. உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா?’

ரமேஷ் லாலிபாப்பை இன்னொருமுறை சுவைத்துவிட்டுக் கூலாகச் சொன்னான். ‘அப்பா, நீங்க டென்ஷனாகிக் கத்தறதாலமட்டும் இந்த பஸ் வேகமாப் போகப்போகுதா என்ன?’

அவ்வளவுதான். செல்வகணபதி திகைத்துப்போய் உறைந்துவிட்டார். தன் மகனையே ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு வாயடைத்து நின்றார் அவர்.

ஜென் இரண்டுவிதமான வாழ்க்கைமுறைகளைப்பற்றிப் பேசுகிறது. ஒன்று, எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு வாழ்வது, ஒரு சின்னக் குறை நேர்ந்துவிட்டால்கூடப் பதற்றப்பட்டுக் கத்துவது, அதைச் சரிசெய்தே தீரவேண்டும் என்று துடிப்பது!

இரண்டாவது, எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்துகொள்வது, நாம் இங்கே இல்லாவிட்டாலும்கூட இந்தப் பூமி அதன்போக்கில் சுற்றிக்கொண்டுதான் இருக்கும் என்கிற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வது, நாம் டென்ஷனாகிப் பிரயோஜனமே இல்லை என்பதை உணர்வது! அதன்பிறகு, நமக்கு எதைப்பற்றியும் கவலையோ, கோபமோ, பதற்றமோ வராது, நம்முடைய பொறுப்பில் இருக்கும் வேலையைமட்டும் ஒழுங்காகச் செய்துவிட்டு மிச்சத்தை ஒரு பார்வையாளரைப்போல் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கமுடியும்!

இதில் செல்வகணபதி முதல் வகை. அவர் மகன் இரண்டாம் வகை. நீங்கள்?