புழு அரித்த மட்டை

டென்னிஸ் லில்லி

வெறும் வில்லோ மரத்தினால்தான் மட்டை செய்யவேண்டுமா?

கிரிக்கெட் விதிகளின்படி, கிரிக்கெட் மட்டை ‘மரத்தால்’ மட்டுமே செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் எந்த மரம் என்பதைப் பற்றி கிரிக்கெட் விதிகள் ஒன்றும் சொல்வதில்லை.

ஆனால் இந்த விதி இப்படியே இருந்தது கிடையாது. ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு பிரச்னைதான் இந்த விதியை உருவாக்கியது.

பாரம்பரியமாக மரத்தால், அதுவும் வில்லோ மரத்தால்தான் கிரிக்கெட் மட்டைகள் செய்யப்பட்டுவந்தன. 1979-ல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஒரு டெஸ்ட் மேட்ச் நடந்தது. முதல் நாள் இறுதியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி பேட்டிங் செய்துகொண்டிருந்தார். இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கும்போது அவர் மரத்தால் ஆன பேட்டுக்கு பதில் அலுமினியத்தால் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு விளையாட வந்துவிட்டார்.

இங்கிலாந்து கிரிக்கெட்டர்கள் இதனைக் கவனிக்கவில்லை. பிரச்னையை ஆரம்பித்துவைத்தவர் ஆஸ்திரேலிய கேப்டனாக அப்போது இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கோச் கிரெக் சாப்பல்தான்! லில்லி அடித்த ஒரு ஷாட் எல்லைக்கோட்டைக் கடக்கவில்லை; முன்னதாகவே நின்றுவிட்டது. இதனால் சாப்பல், மரத்தாலான மட்டையை அனுப்பி அதை வைத்துக்கொண்டு விளையாடுமாறு லில்லியிடம் சொல்லி அனுப்பினார். அப்போதுதான் இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி அலுமினியம் பேட்டைக் கவனித்துவிட்டு சண்டை போட ஆரம்பித்தார்.

டென்னிஸ் லில்லி இதுதான் சாக்கு என்று ரகளை செய்ய ஆரம்பித்தார். அலுமினியம் பேட்டைத்தான் வைத்துக்கொண்டு விளையாடுவேன் என்றார். சாப்பல் கடுப்பாகி தானே கிரவுண்டுக்கு வந்து, லில்லியை மிரட்டி மர பேட்டை வைத்துக்கொண்டு ஆடச் சொன்னார். டென்ஷனில் டென்னிஸ் லில்லி தன் கையிலிருந்து அலுமினிய பேட்டைத் தூக்கி எறிந்துவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

அதன் பின்னரே எம்.சி.சி, கிரிக்கெட் விதிகளில் மாற்றத்தைக் கொண்டுவந்து, இனி மட்டைகள் எல்லாம் மரத்தால்தான் இருக்கவேண்டும் என்றது. அதாவது பந்து நியாயமாகப் படவேண்டிய பகுதி. ஹேண்டில் மரத்தால் ஆனதாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை.

இதில் மற்றொரு கதையும் உள்ளது. அலுமினிய பேட், ஒரு விளம்பர யுக்தி. டென்னிஸ் லில்லியின் நண்பர் ஒருவர்தான் இந்த பேட்டை உற்பத்தி செய்துவந்தார். இந்தப் பிரச்னையால் ஆஸ்திரேலியா முழுவதும் அலுமினிய பேட் நன்கு தெரிந்துபோய் அதன் விற்பனை அதிகரித்தது. அதன் லாபத்தில் ஒரு பங்கு லில்லிக்குச் சென்றது!

ஆஸ்திரேலியர்கள் அத்துடன் விட்டார்களா என்றால் இல்லை. இம்முறை பிரச்னையை உருவாக்கியது ஆஸ்திரேலியாவின் கேப்டன் ரிக்கி பாண்டிங். 2006-ல் மீண்டும் இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடரில், பாண்டிங் கூக்கபூரா என்ற கம்பெனி உருவாக்கிய ஒரு கிரிக்கெட் மட்டையைக் கொண்டு விளையாடினார். இந்த மட்டையின் பின்புறத்தில் கிராபைட்டால் ஆன ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கிராபைட் என்பது கரியின் ஒரு வடிவம்.

இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால் கிரிக்கெட் மட்டைகள் வெகு காலம் நீடிக்கும் என்பது கம்பெனியின் வாதம். ஆனால் இதனால் மட்டையின் திறம் அதிகமாகி, பந்து பாதிக்கப்படும் என்பது இங்கிலாந்தின் வாதம். இந்த மட்டையைத் தடை செய்யவேண்டும் என்று இங்கிலாந்து கோர, ஐசிசி இந்தப் பிரச்னையை ஆராய்ந்தது. இறுதியில் இந்த மட்டையைக் கொண்டு சர்வதேச ஆட்டங்களில் விளையாடக்கூடாது என்று தீர்ப்பளித்தது. கூக்கபூரா நிறுவனம் இந்த மட்டையைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டது.

இந்தியாவில் நடந்த ஐபிஎல் ஆட்டங்களில் மற்றுமொரு ஆஸ்திரேலியர் மேத்தியூ ஹெய்டன் மங்கூஸ் பேட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதில் அலுமினியமும் கிடையாது, கிராபைட்டும் கிடையாது. மரம்தான். வில்லோ மரம்தான். ஆனால் சாதாரண பேட் போன்ற நீளம் கிடையாது. கொஞ்சம் குட்டையான பேட். இதனால் என்ன உபயோகம் என்று சுத்தமாக எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்த ஆஸ்திரேலியப் புதுமைகள் ஒரு பக்கம் இருக்க, மிக உபயோகமான ஒரு மட்டையை இங்கிலாந்தின் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியது. அதனை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது நான்தான். அப்போது நான் கிரிக்கின்ஃபோவை நிர்வகித்துவந்தேன்.

வுட்வேர்ம் என்ற இந்த பிராண்ட் இங்கிலாந்தில் உருவானது. பெரும்பாலான ஆட்டக்காரர்கள் தடுத்தாடும்போது மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பிலோ விக்கெட்கீப்பரிடமோ கேட்ச் கொடுத்து அவுட் ஆவார்கள். விளிம்பைக் குறைக்கமுடியுமா என்று யோசித்ததில் உருவானதுதான் இந்த மட்டை. இந்த மட்டையை ஐசிசி அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதில் பிரச்னை ஏதும் இல்லை என்று ஐசிசி சொல்லிவிட்டது. ஆனால் யார் இதனைக் கொண்டு விளையாடப்போகிறார்கள்?

எந்த சர்வதேச கிரிக்கெட் வீரரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. கிரிக்கின்ஃபோவின் நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியால் இலங்கையின் ரஸ்ஸல் ஆர்னால்ட் முதலில் இந்த மட்டையைக் கொண்டு டெஸ்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட ஆரம்பித்தார். பின்னர் இங்கிலாந்தின் ஆண்டிரூ ஃபிளிண்டாஃப் இதனைக் கொண்டு விளையாட ஆரம்பித்தார். இன்றும் இந்த பேட் புழக்கத்தில் உள்ளது என்றாலும் அதிகமாக டிவியில் கண்ணுக்குத் தெரிவதில்லை.

கிரிக்கெட் மட்டைகளைப் பற்றிப் பேசும்போது, தெண்டுல்கர் விளையாடும் பேட்டைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். 2003 உலகக் கோப்பைக்குமுன் நான் கிரிக்கின்ஃபோ சார்பாக எம்.ஆர்.எஃப் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்தேன். முதன்மை கிரிக்கெட் வீரர்கள், தங்களுக்கென பிரத்யேகமாக கிரிக்கெட் மட்டைகளைத் தயாரித்துக்கொள்வார்கள். சும்மா கடைக்குப் போய் கிடைத்த மட்டையை வாங்கமாட்டார்கள். எந்த மரத்துண்டு, அதன் எடை என்ன, அதன் நீள, அகல பரிமாணங்கள், தயாரிக்கப்படும் விதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் செய்வார்கள்.

தெண்டுல்கருக்கான மட்டைகளை எம்.ஆர்.எஃப் தயாரித்துவந்தது. அவர் பயன்படுத்தும் கிரிக்கெட் மட்டைகள் மிகவும் கனமானவை. அவருக்காகத் தயாரித்துக்கொண்டதுபோக, அதே மர ஸ்டாக்கைக் கொண்டு அதே மாதிரியான அச்சு அசலாக மட்டைகளைத் தயாரித்து விற்றால் என்ன என்று தோன்றியது. எம்.ஆர்.எஃப் ஒப்புக்கொண்டார்கள். மொத்தமே அப்படி 200 மட்டைகள்தான் தயாரித்தோம். ஒரு கிரிக்கெட் மட்டை $200 என்று விற்க ஆரம்பித்தோம். உருவாக்கி மின்வணிகத் தளத்தில் ஏற்றியதுதான்… படுவேகமாக விற்றுத் தீர்ந்தன.

காதல் புராணம் 7

7. நித்யகன்னி

மடந்தை [வயது : 14-19]

61

உன் முத்தத்திட்டுக்களில்

ருதுவாகிக் கனிந்த‌தென்

புதுப்பாவாடை தாவணி.

62

உன் மிகச்சமீப

முத்தச்சூட்டில்

எரிந்தடங்கும்

உதடுமுயிரும்.

63

கோடி முத்தங்கள் நினைவிலிருந்தும்

உயிரில் நிரந்தரமாய் ஊறியினிப்பது

முதன்முதலாய் பயத்தில் பதட்டத்தில்

நானுனக்குத்தந்த அந்த அரைமுத்தம்.

64

உன் தொலைபேசி முத்தங்களில்

சுவாசித்துக்கொண்டிருக்கிறதென்

அடங்காப்பெருங்காதலினுயிர்.

65

உன் முத்தமிடப்ப‌டும்

ஸ்தங்கலனைத்திலும்

சிறுதிட்டுத்திட்டாய்ப்

பற்றும் பாஸ்பரஸ்.

66

என் துப்பட்டாவின் மேல்

அப்படியென்ன பகையோ?

எப்போதெங்கு கண்டாலும்

அதையே முறைக்கிறாய்.

67

எந்தன் ஹார்மோன்களை

நிரந்தரக்கொத்தடிமையாய்

24X7 வேலைவாங்குமுன்

முதலாளித்துவ ஆண்மை.

68

உன்னுடனிருக்கையில் மட்டும்

கொஞ்சமதிகம் நெழ்ந்தென்னை

காட்டித்தரும் துரோகி துப்பட்டா.

69

உனைச்சந்தித்துத்திரும்பும்‌

எந்தத்தேதியின் இரவிலும்

உறங்கியதேயில்லை நான்.

70

கன்னிமையழிக்காமல்

கற்பழிக்கும் வித்தையை

எங்கேயடா கற்றாய்?

பெட்டி நிறையத் தங்கம்

ஒரு பக்தர், கடவுளை நினைத்துத் தவம் இருந்தார். பல நாள் கழித்துக் கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பக்தா, நும் தவத்தை மெச்சினோம், என்ன வரம் வேண்டும், கேள்!’

பக்தருக்கு உடம்பெல்லாம் பரவசம். கடவுளுக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு, ‘நிறைய செல்வம் வேண்டும்!’ என்றார்.

‘அப்படியே ஆகட்டும்!’ என்று ஆசிர்வாதம் செய்தார் கடவுள். மறுவிநாடி, அவரைக் காணவில்லை. ஆனால், செல்வமும் கிடைக்கவில்லை!

பக்தர் குழம்பிப்போனார். ஒருவேளை, நாளைக்குக் கிடைக்குமோ என்று யோசித்தபடி வீட்டுக்கு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எதேச்சையாகத் தெருவைப் பார்த்தால் அங்கே ஒரு பெட்டி கிடந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் காணோம்!

ஆச்சர்யத்தோடு அந்தப் பெட்டியை நெருங்கினார் பக்தர். திறந்துபார்த்தார், உள்ளே முழுவதும் தங்கம், வெள்ளி, வைர நகைகள்!

அவர் படாரென்று பெட்டியை மூடினார். அதை வீட்டுக்குள் கொண்டுவந்தார். ’ஒருவேளை, இதுதான் கடவுள் சொன்ன செல்வமாக இருக்குமோ?’

‘ம்ஹூம், இது அநேகமாக யாரோ திருடிய சொத்து. நான் இதை விற்றுப் பணமாக்க முயற்சி செய்தால் போலிஸ் என்னைப் பிடித்து உள்ளே  போட்டுவிடும்!’ என்றும் அவருடைய உள்மனது சொன்னது. இந்த விஷயத்தில் தெளிவான ஒரு முடிவெடுக்கமுடியாமல் திணறினார்.

அடுத்த ஒன்றிரண்டு நாள்கள் அவர் கவலையோடு சுற்றிக்கொண்டிருந்தார். கடைசியில் பிரச்னையே வேண்டாம் என்று அந்தப் பெட்டியைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார்.

அன்று மாலை, அவர் தியானத்தில் அமர்ந்தபோது, கடவுள் அவர்முன்னே தோன்றினார். ‘பெட்டி நிறைய செல்வம் அனுப்பினேனே, பெற்றுக்கொண்டாயா?’ என்று கேட்டார்.

‘அச்சச்சோ! அது நீ அனுப்பினதா? சொல்லவே இல்ல!’ என்றார் பக்தர். ‘அதைப் போலிஸ்ல கொடுத்துட்டேனே!’

‘நீதான் அந்தப் பெட்டி கைக்கு வந்தபிறகு தியானமும் செய்யவில்லை, தவமும் செய்யவில்லை, ஒரு நிமிஷம் கண் மூடி நிற்கக்கூட இல்லை!’ என்று சிரித்தார் கடவுள். ‘செல்வம் கிடைப்பதற்கு முன்னால் மாதக்கணக்கில் தவம் செய்து என்ன புண்ணியம்? அது கிடைத்தபிறகு ஏற்பட்ட குழப்பத்தை உன்னால் தீர்க்கமுடியவில்லையே!’

‘மன்னிக்கவேண்டும் கடவுளே, இப்போது நான் என்ன செய்வது?’ புலம்பிய பக்தருக்குப் பதில் சொல்லக் கடவுள் அங்கே இல்லை!

தியானத்தை ஒரு வாழ்க்கை முறையாகக் கருதுவதுதான் ஜென். அப்படியில்லாமல் கடவுளிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்கான சாதனமாக அதை உபயோகித்தால் இதுபோன்ற விபரீதங்களைத் தவிர்க்கமுடியாது!