பொட்டி புதுசு

ஒரு வழியாகப் புதிய நெட்புக் ஒன்றினை வாங்கினேன். இந்தக் கணினி வாங்குதலில் எப்போதுமே குழப்பமிருக்கும். கார் வாங்குவதைப் போல. அவரவர்கள் அவரவர்களின் விருப்பு வெறுப்புகளை நம்மீது திணிப்பார்கள். ‘பொண்ணு +1 படிக்கிறா, அவளுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கனும். கெட்ட விஷயமெல்லாம் நிறைய இருக்காமே, அதெல்லாம் இல்லாம வாங்கணும்’ என்பதில் ஆரம்பித்து, ‘டெல் 14.1”க்கும் எச்.பிக்கும் இருக்கிற மேஜர் வித்தியாசம், அகலவாக்குல டெல் 1.5 செ.மீ அதிகம்” என்று அலப்பும் நுட்ப ஜிகினாக்களுக்கும் நடுவே தான் நம்முடைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஹைப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் 56 வகையான சோப்பில் எதை எடுப்பது என்கிற வீட்டுக்காரம்மாவின் குழப்பத்திற்கு ஈடானது தான், எதை வாங்குவது என்பது?

பொதுவாகவே நமக்கு அடுத்தவீட்டுக்காரன் என்ன செய்கிறான் என்பதில் இருக்கும் ஆர்வம், அதன் மூலமாக எழும் பொறாமை, ஆசை, பேராசையில் தான் பல முடிவுகள் தவறாக எடுக்கப்படுகின்றன. கணினியில் இயங்கும் நிறைய பேர்களுக்கே, எதை வாங்க வேண்டும், எது தமக்கு தேவை என்பதில் தெளிவில்லை. போனவாரம், QR கோடில் கொஞ்சம் மண்டை குழம்பியதால், இந்த வாரம் லைட்டாக கணினி வகைகள், பயன்பாடுகள், யாருக்கு எது தேவை என்பதைப் பார்ப்போம்.

தொழில்நுட்பம் அரபிக்குதிரைப் பாய்ச்சலில் ஒடிக் கொண்டிருக்கும் காலக்கட்டமிது. நாளுக்கு ஒரு மாடல், வருடத்திற்கு ஒரு புதிய இயங்குதளம், அதிவேக சாத்தியங்கள் என்று டொர்னேடோ சூழலில் சிக்கித் தவிக்கிறது கணிமையுலகம். தற்போது ஸ்மார்ட் போன்களையும் சேர்த்து 5 விதமான வகைகள் நமக்கு இருக்கிறது.

  • மேசைக்கணினி (Desktop PC)
  • மடிக் கணினி (Laptops)
  • குறுங்கணினி (Netbooks)
  • தொடுதிரை சிலேட்டுகள் (Tablets)

மேசைக் கணினி / Desktop PC

இதைத் தமிழில் மேசைக்கணினி என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். மேசைக்கணினி, நாற்காலிக் கணினி, சைக்கிள் கேரியர் கணினி என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஆரம்ப நாளில் ஒரு அறையினை அடைத்துக் கொண்டு ஆக்ரமித்துக் கொண்டிருந்த கம்யூட்டர் என்கிற சமாசாரத்தை டேபிளின் மீது அடக்கக்கூடிய வகையில் மாற்றி அமைத்ததில்தான் பில்கேட்ஸ் பில்லியனரானார். இன்றைக்கு வரைக்கும் மேசைக்கணினியின் வேகம் பிற வகையில் இல்லை என்பது தான் உண்மை.

இண்டெலும், ஏ.எம்.டியும் போட்டிப் போட்டுக் கொண்டு சிலிக்கான் சில்லுகளை பதித்து, வேகத்தைக் கூட்டி, உலகத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டு 20 வருடங்களாகின்றன. இன்றைய செல்பேசியின் வேகம் கூட ஆரம்பக் கால 80களின் கணினியில் இல்லை என்பது தான் நிஜம். இப்போதைக்கு அதி வேகமான மேசைக் கணினிகளைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பல தொழில்கள் இணையத்தில் சுருங்கியதற்கு காரணம் இதுதான்.

அதிகமான செயல்திறனும், வேகமான இடையூடாலும் தேவைப்படும் எல்லாத் தொழில்களுக்கும், இன்னமும் மேசைக் கணினி தான் சிறந்தது. கிராபிக்ஸ் வேலைகள், CAD/CAM வரைப்படங்கள், பெரும் ப்ராசஸிங் தேவைப்படும் விஷயங்கள், கட்டிட வரைப்படங்கள், தட்பவெப்பநிலை சமாச்சாரங்கள் என processor intensive விஷயங்கள் அனைத்திற்கும் மேசையே மேல்.

இது தாண்டி, சீரியல் பார்த்த பாக்கி நேரத்தில் வெட்டியாய் இருக்கும் மக்கள், வீட்டிலிருந்தப்படியே பல்வேறு விதமான வேலைகளில் ஈடுபடவும் மேசைக்கணினியே சாஸ்வதம். பங்குச்சந்தையில் பங்குப் பெறலாம்; டேட்டா எண்ட்ரி அடிக்கலாம்; ஈ பேயில் பொருட்கள் வாங்கி விற்கலாம்; குரூப்பானின் குளோன்களில் பொருட்கள் வாங்கி அடுக்ககத்தில் அடுக்கலாம்; கொஞ்சம் சாமர்த்தியமும், தேடலும் இருந்தால், வீட்டிலிருந்தே ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவலாம்; எடிட்டிங் செய்யலாம்; ட்யூஷன் எடுக்கலாம்; ஆலோசனைகள் தரலாம்.

தற்போதைய நிலைமை:

இண்டெல் கோர் 2 டியோவிலிருந்து ஐ3 – ஐ5 வரைக்கும் போயாயிற்று. சராசரியாய் 2ஜிபிலிருந்து 4ஜிபி வரைக்கும் ரேம் கிடைக்கும். 1டிபி வரை ஹார்ட் டிஸ்க் கிடைக்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் செய்யவில்லையெனில், மேசைக்கணினி போவது வீண்.

மடிக் கணினி / Laptops

மடிக் கணினி என்றால் ஆசாரமான கணினி என்றுப் பொருளோ என்னவோ. 2004க்கு பிறகுதான் இந்தியாவில் மடிக்கணினியின் பெருக்கம் அதிகரித்தது. இன்றைக்கு எல்லா தொழிலதிபர்களும் காதில் போனோடும், மேசையில் மடிக்கணினியோடும் போஸ் கொடுக்கிறார்கள். 80களில் டேபிளில் இருந்த மூவர்ண போன்களுக்கு பதில் இப்போது லேப்டாப்.

லேப்டாப் இன்னமும் தமிழ் சினிமாவில் செட் ப்ராப்பர்டி தான். ஆனால், கடந்த ஆறு வருடங்களில் லேப்டாப் அமிர்தாஞ்சனின் நெற்றி போல எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. இன்றைய லேப்டாப்கள் கிட்டத்தட்ட பெரும் வேலைகள் செய்யக் கூடிய அளவுக்குத் திறன் படைத்தவை. அதே சமயத்தில் அதன் எடையும் அதற்கேற்றாற் போல கூடுவதும், அதன் பேட்டரி தன் திறனை இழப்பதும் கூடவே நடக்கிறது. பெரும்பாலானவர்கள், லேப்டாப் வாங்கவேண்டுமே என்று வாங்கி விட்டு, பின் அதை நித்திய கர்ப்பிணி மாதிரி முதுகில் சுமந்து கொண்டு திரிகிறார்கள். கங்காருவுக்கும் மென்பொருள் ஆசாமிக்கும் இருக்கும் ஒரே விஷயம், கங்காருவின் பை முன்னால், மென்பொருள் ஆசாமிக்கு பின்னால்.

இணையத்தில் உலாவுதல், மடல்கள், ஆபிஸ் சமாசாரங்கள், எம்பி3 கேட்டல், யூட்யூப் பார்த்தல், டொரண்டுதல், ஒரளவிற்கு டெஸ்க்டாப் செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்தல், போன் பேசுதல், VOIPயில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல், ட்வீட்டும், ஃபேஸ்புக்குமாய் குடித்தனமிருத்தல், சந்தடி சாக்கில் கேப் கிடைத்தால் ஆட்ரினா லிமாவின் ஆட்டங்களைப் பார்த்தல் என்பதற்கெல்லாம்.லேப்டாப் போதும். அமெரிக்க/ ஐரோப்பிய/ வளைகுடா ரிடர்ன் என்பதாலேயே வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு லேப்டாப்பினைக் கொண்டு வராதீர்கள். பெரியவர்களின் கை அழுந்தாது. அவர்களுக்கு டெஸ்க்டாப் விசைப் பலகைத் தான் சரி. அதைப் போல லேப்டாபின் வீல்கள், தடவல்கள், ரைட் கிளிக் சமாசாரங்கள் சரிப்படாது. அவர்களுக்கு மேசைக்கணினி தான்.

தற்போதைய நிலைமை

12.1”ல் ஆரம்பித்து கிட்டத்திட்ட 19” வரைக்கும் லேப்டாப்கள் கிடைக்கின்றன. பேட்டரியின் சராசரி நேரம் 2.5 மணி நேரங்கள். இண்டெலின் கோர் 2 டியோவிலிருந்து ஐ3 சீரிஸ் வரைக்கும் கிடைக்கிறது. ரேம் 2-3ஜிபி அதிகப்பட்சமாய். ஹார்ட் டிஸ்க்: 320ஜிபி வரை

முக்கியமாய் பார்க்க வேண்டியது

பேட்டரி நிற்கும் திறன், விசைப் பலகையின் பழகுத் திறன், மடியிலோ, மேசையிலோ வைத்தால் எழும் வெப்பம், உள்ளே பேன்கள் சுழலும் சப்தம், ஆன்/ஆப் ஸ்விட்ச் இருக்கும் இடம்

குறுங்கணினி / Net books

முதல் பேராவில் சொன்ன குறுங்கணினி தான் நான் வாங்கியது. குறுங்கணினிகள் என்பவை 2007க்கு பிறகான சமாசாரங்கள். குறுங்கணினிகள் என்பவை எப்போதும் பறந்து கொண்டே இருப்பவர்களுக்காகவும், எந்நேரமும் காரிலேயே ஒடிக் கொண்டிருப்பவர்களுக்குமானது. முக்கியமாக, இணையத்திலேயே பெரும் பணிகளைச் செய்பவர்களுக்கானது.

லேப்டாபின் எல்லா விதமான சாத்தியங்களும் இன்றைக்கான குறுங்கணினியில் இருக்கிறது. டிவிடி ப்ளேயர் கிடையாது. அதனால் எடைக் குறைவு. வெறும் 1கிலோ.

வெறுமனே “ஐயன்மீர் என்று ஆரம்பித்து, நன்றியுள்ள” என்று முடிக்கும் ஆபிஸ் கடிதங்கள், எக்ஸெல் தாள்கள், படங்காட்டும் பிரசண்டேஷன்கள், இணைய உலாவல், பாட்டுக் கேட்டல், யூட்யூப் வீடியோக்கள், மடல்கள் என்று உங்கள் தொழில் இருந்தால், உங்களின் லேப்டாப்பினை யாராவது ஏமாந்த சோணகிரிக்குக் கொடுத்து விடுங்கள். உங்களுக்கு குறுங்கணினி போதும். எழுத்தும், கொஞ்சமாய் கிராபிக்ஸும் மட்டுமே இருப்பின் குறுங்கணினியைத் தவிர வேறெதுவும் தேவையில்லை. நான் குறுங்கணினிக்கு மாறியதற்கு காரணமும் இதுதான். நம்முடைய வேலை என்ன என்பதில் தெளிவு வந்துவிட்டால், தேவையில்லாத விஷயங்களை வாங்குவதைக் குறைக்கலாம்.

டிவியின் காண்ட்ராஸ்ட் ரேஷியோவும் கணினிகளின் ரேஷியோவும் வெவ்வேறு. ப்ளாப்பி ஒழிந்தது போல, டிவிடியும் ஒழிந்தது. ஆனால், மீண்டும், மீண்டும் நாம் டிவிடியும், சினிமாவும், இன்னபிறவையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், கஷ்டம். என்னதான் டொரண்டிப் பார்த்தாலும், 5.1 ஸ்ட்ரீயோ, HD தரம் கணினியில் வருவது கடினம். ஆகவே செலவோடு செலவாக ரூ.3,000 கொடுத்தால், அற்புதமான 5.1 ஸ்ட்ரீயோ டிவிடி ப்ளேயர் ரெடி. அந்த ஒரு காரணத்துக்காக லேப்டாப்பையும் டெஸ்க்டாப்பையும் வாங்கி வைப்பது மடத்தனம்.

இன்றைய நிலைமை

இண்டெல் ஆடம் ப்ராசசரும், குறைந்த பட்சம் 2ஜிபி டிடிஆர் 2 ரேமும் அதிக பட்சமாக 320ஜிபியும் கிடைக்கும். டெல், எச்.பி, சாம்சங், சோனி, அஸுஸ், தோஷிபா என சகலரும் குறுங்கணினிக்கு வந்துவிட்டார்கள்.

முக்கியமாய் பார்க்க வேண்டியது

பேட்டரியின் தாங்கும் நேரம், விசைப்பலகையின் வசதி, ரேம் நிறை குறைகள் (DDR 2 Vs DDR 3)

தொடுதிரை சிலேட்டுகள் / Tablets

ஆப்பிள் ஐபேடு என்றைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் கொடுத்தாரோ அன்றைக்குப் பிடித்தது இந்தக் கிறுக்கு. ஐபேடு என்பது நம்மூர் சிலேட் மாதிரி. தொடுதிரை வசதியோடு இணையத்தில் உலாவலாம். புத்தகம் படிக்கலாம்; பாட்டுக் கேட்கலாம்; வீடியோ பார்க்கலாம்; ட்வீட் அடிக்கலாம்; பேஸ்புக்கில் கதைக்கலாம்; அடிப்படை வேலைகள் செய்யலாம்.

மேற்சொன்ன மூன்றைப் போல, இதற்கு தனியாக விசைப் பலகைக் கிடையாது. தனியான சமாசாரங்கள் எதுவும் கிடையாது. டிவிடி டிரைவ் கிடையாது. நியுயார்க் டைம்ஸில் 2010ல் தொடுதிரை சிலேட்டுகள் குறுங்கணினிகளை ஓரங்கட்டிவிட்டன என்று போட்டிருந்தார்கள். எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை. இன்றைக்கும் தொடுதிரை சிலேட்டுகள் குறுங்கணினிகள் செய்யும் வேலைகளைச் செய்யமுடியாது. இன்னொன்று, தொடுதிரை சிலேட்டுகள் பெரும்பாலும், அவர்களின் ஆப் ஸ்டோர்ஸில் (App Stores) இருக்கும் செயலிகளைக் கொண்டே இயங்க முடியும். நாம் சராசரியாக பயன்படுத்தும் எல்லா செயலிகளும், இன்னும் வரவில்லை.

இப்போதைக்கு தொடுதிரை சிலேட்டுகள் போர்டபிள் எண்டர்டெயின்மெண்ட் சாதனங்கள். முக்கியமான அலுவல்களை ஆன் ஸ்க்ரீன் விசைப்பலகையினைக் கொண்டு செய்ய முடியாது. இன்னும் ஐபேடு 2.0 அல்லது சாம்சங்கின் கேலக்சி டாப்போ, ரிம்மின் ப்ளேபுக்கோ, டெல்லின் ஸ்ட்ரீக்கோ முழுமையான பயன்பாட்டோடு வரவில்லை. இப்போதைக்கு காசு கொழுத்திருந்தால், ஏதாவது ஒரு டேப்லட் வாங்கி சீன் போடலாம். ஆனால், தொடுதிரை சிலேட்டுகளின் பயன்பாடுகளும் அதிகரிக்கின்றன. முந்தாநாள், குவால்காம் தங்களுடைய ஸ்னாப் ட்ராகன் ப்ராசசரில் நெட்ப்ளிக்ஸின் லைவ் ஸ்ட்ரீமிங்கினை, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் போட்டு காண்பித்திருக்கிறார்கள். ஆக, தொடுதிரை சிலேட்டுகள் இயங்குவதும், இயக்குவதும் இன்னும் வரும் நாட்களில் இலகுவாகும்.

இன்றைய நிலைமை

ஆப்பிள் ஐபேடு, சாம்சங் கேலக்சி டேப், எச்.பியின் வரப்போகும் டச்பேட்

கணினி நவீனயுகத்தின் அச்சாணி. மேகக் கணிமை (cloud computing) பரவலாகும்போது, நம்மிடையே இருக்கக்கூடிய கணினியின் திறன்களின் மீதான அழுத்தம் குறையக் கூடும். ஸ்டோரேஜும், ப்ராசசர்களும் சல்லிசாக மாறியிருக்கக் கூடிய ஒரு காலக்கட்டத்தில், இனி நம்முடைய பிரச்னை அதுவல்ல. தொடர்ச்சியான ட்சுனாமியாய் வந்து குவியும் தகவல்களையும், வேலைகளையும் நாம் எப்படி 24×7 ல் மேற்கொள்ளப் போகிறோம் என்பது தான். உங்களுடைய வேலை எப்படியோ, அதற்கேற்றாற்ப் போலத்தான் நீங்கள் வாங்கும் கணினியும் இருக்க வேண்டும். அதை விடுத்து, அடுத்தவன் வாங்கியதைப் போலவே நானும் வாங்குவேன் என்றால், நஷ்டப்படுவது நீங்களாகத் தான் இருப்பீர்கள்.

விரல் ரேகை மாறுவதுப் போல, ஒவ்வொருவருக்கும் பயன்பாடுகளுக்கான ரேகையும் மாறியிருக்கிறது. உங்களின் தொழில் ரேகையினைப் பொறுத்து உங்களுடைய தேர்வு இருக்கட்டும்.

காதல் புராணம் 3

3. நெடுங்குருதி

மங்கை [வயது : 12-13]

21

நான் பூப்படைந்த கணத்தில்

என்ன செய்து கொண்டிருந்தாய்

நீ?

22

உன் தொடுகையில் மட்டுமே

நினைவினில் கசிந்தோடுகிறது

எங்கோ ஒரு மறைவாழத்தில்

ஊற்றாய் ஒளிந்திருக்குமென்

ஒட்டுமொத்தமான‌ பெண்மை.

23

நீ அழுந்தப்பார்த்தாலே

தள்ளிப் போகிறதென்

மாதவிலக்கு நாட்கள்.

24

இன்னமும் புரிந்த பாடில்லை –

உனக்காக தாவணியணிகையில்

கூடுதல் நாடா இறுக்கத்துடன்

பாவாடை கட்டியது ஏனென்று.

25

உன்னிடம் சொல்லியதில்லை இதுவரை –

உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த‌ போதே

வகுப்பிலொரு சமயத்தில் விலக்கானதை.

26

நீ ஈரக்கை துடைத்த துப்பட்டா

தூங்குகிறதென் அலமாரியில் –

இன்னமும் துவைக்கப்படாமல்.

27

உன் பார்வை அத்துமீறும்

ஒவ்வொரு முறையும்

பூப்படைகிறேன் நான்.

28

தனியாயிருந்தும்

தனிமையில்லை –

உன் நினைவுகளால்.

29

வருவது போலயிருந்து

வராமலே ஏமாற்றுகிறது

விலக்கு – உனைப்போல.

30

தீட்டுக்கழியும் நாட்களில்

தனியாய்யுன்னிடம் மாட்டி

அவஸ்தைப்படுவேன் – சுகம்.

பெண்டாட்டி சுமை

அந்தக் கல்லூரியில் ஒரு ஜென் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. பல நாடுகளைச் சேர்ந்த ஜென் மாஸ்டர்கள் அங்கே வந்து சொற்பொழிவாற்றினார்கள், கலந்துரையாடினார்கள்.

முதல் நாளன்று, அந்தக் கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்தவர், மத்திய அமைச்சர். அவர் இதற்காகவே டெல்லியிலிருந்து வந்திருந்தார்.

விழா மேடையில், மத்திய அமைச்சர் பக்கத்திலிருந்த ஜென் மாஸ்டரிடம் கிசுகிசுத்தார். ‘சாமி, நீங்க கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா?’

‘இல்லைங்க. நான் பிரம்மச்சாரி!’

’கொடுத்து வெச்ச ஆளுங்க நீங்க!’ என்றார் அமைச்சர். ‘நாங்கதான் இந்த சம்சார சாகரத்தில சிக்கி அவஸ்தைப்படறோம். என் பொண்டாட்டி நாளுக்கு நாள் புதுப்புது பிரச்னைகளைச் சொல்லிப் புலம்பறா. அதையெல்லாம் கேட்கவும் முடியலை, கேட்காம இருக்கவும் முடியலை!’

பக்கத்திலிருந்த ஜென் மாஸ்டர் சிரித்தார். ‘நீங்க டெல்லியிலிருந்து தனியாவா வந்தீங்க?’

‘இல்லையே, எப்பவும்போல என் அஸிஸ்டென்டும் வந்திருக்காரே!’

’சரி, நீங்க இந்தப் பயணத்துக்காக எடுத்துகிட்டு வந்த சூட்கேஸ் என்ன எடை இருக்கும்ன்னு உங்களுக்குத் தெரியுமா?’

அமைச்சர் யோசித்தார். ‘ஏழெட்டு கிலோ இருக்கும்ன்னு நினைக்கறேன்!’

’ஏன் நினைக்கணும்? உங்க உதவியாளரைக் கூப்பிட்டு விசாரிங்க!’

உடனே, அமைச்சர் தன் உதவியாளரை அழைத்தார். அதே கேள்வியைக் கேட்டார். ‘நான் கொண்டுவந்த சூட்கேஸ் என்ன எடை இருக்கும்ன்னு தெரியுமாய்யா?’

’ஓ, நல்லாத் தெரியும்ங்கய்யா!’ என்றார் உதவியாளர். ‘பதினேழரை கிலோ!’

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜென் மாஸ்டர் புரிந்ததுபோல் புன்னகை செய்தார். ‘அது உங்க பெட்டிதான். அதுக்குள்ள இருப்பதும் உங்க பொருள்கள்தான். ஆனா நீங்க அதைச் சுமக்கலை, யாரோ சுமந்துகிட்டிருந்ததால, உங்களுக்கு அதோட கனத்தைச் சரியா ஊகிக்கமுடியலை. சரியா?’

‘ஆமா, ஆனா இதுக்கும் நான் முன்ன சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘உங்க மனைவி சொல்ற பிரச்னைகளெல்லாம் உங்களுக்கு லேசாத் தோணலாம். ஆனா, அவங்களைப் பொறுத்தவரைக்கும் அதோட கனம் அதிகம், ஏன்னா அவங்க அதைச் சுமக்கறாங்க, நீங்க சுமக்கலை, ஒண்ணு நீங்களும் அதுல கொஞ்சத்தைத் தாங்கிச் சுமக்கணும், இல்லாட்டி அவங்க சுமையை இறக்கிவைக்க உதவி பண்ணணும், அதை விட்டுட்டு மூணாம் மனுஷனான என்கிட்ட இப்படிப் புலம்பினா எந்தப் பிரயோஜனமும் இருக்காது!’