காதல் புராணம் 2

ஆகாசத்தாமரை

பெதும்பை [வயது : 8-11]

11

நீயும் நானும்

சேர்ந்து நடக்கையில்

சில சமயம் விரலுரச‌,

பரஸ்பரம் புன்னகைப்போம் –

அதற்கு என்ன அர்த்தம்?

12

கால்டுவெல் விளக்கி விட‌

அத்தனை எளிதன்று

நம்மிருவர் பாஷைகளின்

ஒப்பீட்டிலக்கணம்.

13

குடையற்ற மழையில்

உன்னுடன் நனைந்ததில்

ஜலதோஷம் பிடித்தது –

மிக மிகப் பிடித்தது.

14

உனது சட்டை நிறத்தில்

யார் அணிந்து வந்தாலும்

சிலகணமேனும் தடுமாறிக்

கலைகிறதென் மனக்கவனம்.

15

அழகாய்த்தானடா இருக்கிறாய் நீ –

கொஞ்சமாய்த் தலை சாய்த்துக்

கோணலாய்ப் புன்னகைக்கையிலும்.

16

சளிப்பிடித்த தினங்களின்

சம்பாஷணைகளில்

மூக்கில் பேசுவாயே,

அது தனி அழகு.

17

உனக்குத் தெரியாது –

என்னிடம் உனக்குப்

பொய் சொல்லத்

தெரியாதென்று.

18

எனக்கான கனவுகள் பற்றி

என்னிடம் கேட்டவன் நீ –

பின் உனக்காகவே தான்

உருவாக்கிக்கொண்டேன்

எனக்கான கனவுகளை.

19

உன்னைக்கண்டாலே

இடம்வலமாகிற‌தென்

ம்ச‌ஞ்ப‌ர‌பி.

20

உன் வரவுக்காகக் காத்திருந்து

ஒவ்வோர் அழைப்பு மணிக்கும்

அவ‌சரமாயோடிக் கதவு திறந்து

ஏமாறுகையில் உறைந்துருகும் –

இருதயச்சுவரில் குருதித்திரவம்.

கிரிக்கெட் புத்தகங்கள்

கிரிக்கெட்டை பார்த்த அளவிற்கு நான் அதைப் பற்றி படித்ததில்லை.   இந்துவில் ஸ்போர்ட்ஸ் செக்‌ஷனை மட்டுமே ஒரு காலத்தில் நாள் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக கிரிக்கெட்டை அதிகம் படித்ததில்லை.

சின்னப் பையனாய் இருக்கும் போது மாமாவிடம் இருந்து கர்சீப் போட்டு எடுத்து வந்த கவாஸ்கரின் One Day Wonders, Idols மற்றும் Sunny days என்று மூன்று புத்தகங்களை மட்டுமே முழுமையாக படித்திருக்கிறேன். சென்னைப் புத்தகச் சந்தையில் வாங்கிய விஜய் மெர்சண்ட்டின் கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்ற பச்சை அட்டை போட்ட புத்தகத்தை வாங்கியது ஞாபகம் இருக்கிறது. படித்தேனா என்று ஞாபகமில்லை. உள்ளம் கவர் கபில்தேவின் Straight from the heart படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், இன்னும் படித்தபாடில்லை.

சச்சின் மாதிரியான ரிச் அனுபவமுள்ள ஆட்கள் சுயசரிதை எழுதினால் எதாவது வம்பு அகப்படும் என்றே படிக்கத் தோன்றுகிறது. ஆனால் இதுவரை 444 ஒன்- டேயில் ஆடியிருக்கும் அவருக்கு எத்தனை விஷயம் தான் ஞாபகம் இருக்க முடியும்.

இவ்வருட கிரிக்கெட் ஆரம்பித்து விட்டது. எல்லா மார்கெட்டிங் மானேஜர்களுக்கும் நான்-ஸ்டாப் வேலை. விளம்பரங்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளப் போகின்றன. தோனி ஸ்டம்பிங்கை அடித்தாரா இல்லையா என்று தெரியும் முன் எந்த நட்சத்திரமோ எதோ ஒரு சக்கரைத் தண்ணியை குடித்து விட்டு ‘ ஆஹா’ என்று சொல்ல ஆரம்பிக்க ஏர்டெல் போனில் யாரோ யாரையோ விளிக்க ஹிரோ ஹோண்டாவின் கரிஷ்மாவில் நாம் பயணித்து வருவதற்குள் எலக்ட்ரானிக் போர்டில் நாட்-அவுட் போட்டு விடுவார் தேர்ட் அம்பயர்.

ஆனாலும் சச்சின் மாதிரி ஒரு இந்திய மகா விளையாட்டு வீரனின் கடைசி வோர்ல்ட் கப் என்று எதிர்ப்பார்ப்பை தாங்கி வரும் இந்தப் போட்டியை சாதாரணமாய் வென்று விட முடியும் என்று தோன்றவில்லை. என்ன தான் ஃபார்மேட்டில் மாறுதல் செய்திருந்தாலும் சட்டியில் இருந்தால் தான் அகப்பையில். இந்த ஃபார்மேட்டில் முதல் ஒரு மாதத்துக்கு எல்லாமே ட்ரையல்ஸ் போலத் தான் தோன்றப்போகிறது. கடைசி இரண்டு வாரங்களின் ஒரேடியாக திடுக் திருப்பங்கள் வரப் போகின்றன.

ஞாயிறன்று சும்மா ஆடிய முதல் ஒன்- டேயில், இந்திய விக்கெட்டுகள் எப்படி ஸ்பின்னுகின்றன எனத் தெரிந்தது. இந்திய பாட்டிங் சரிய, நம்மூர்ப் பையன் அஷ்வின் எதோ தட்டித் தட்டி மானத்தை காப்பாற்றினான். தெளிவான தொடக்கத்திற்கு பிறகு சாவ்லாவிற்கு பாவ்லா காட்ட முடியாமல் ஆஸ்திரேலியா ஆல்-அவுட்டாக, தோனி தன் பாட்ஸ்மேன்களை சந்தேகத்துடன் பார்க்கிறார்.

1983இன் கபில்தேவின் 175யும், மதன்லால் மற்றும் அம்ர்நாத்தின் தலா மூன்று விக்கெட் பைனலையும் நினைத்துப் பார்த்தபடி, இந்தியா – பெஸ்ட் ஆஃப் லக்.

0000

உண்மைக்கு மிக அருகில் இருப்பதைப் போல் எடுக்கப்பட்ட Noone Killed Jessica என்ற இந்தித் திரில்லர் படம் பார்க்க நேர்தது. 1999ல் டெல்லியில் ஒரு மூடப்படும் பாரில் இன்னுமொரு மதுபானம் கேட்கப் போன ஒரு மத்திய அமைச்சரின் மகன், கற்பூரம் ஏத்தியாச்சு, நோ மோர் ட்ரிங்க்ஸ் என்று சொன்ன ஜெஸிக்கா லாலை சுட்டுக் கொன்று விடுகிறான். பணத்தாலும் செல்வாக்காலும் சாட்சிகளை கலைத்து வெளிவரும் அவனை ஒரு என்.டி.டி.வி நிருபினியின் உதவியால் மீண்டும் உள்ளே அடைக்கிறார்கள்.

இந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை முன்னும் பின்னும் பயணிக்கிறது. கதையின் பின்புலமாக நடக்கும் விஷயங்களில் கடும் ஆராய்ச்சி தெரிகிறது. பாதி படம் டிவி நியுஸிலேயே நகர்வதால், இந்த டிவி நியூஸில் காட்டப்படும் பங்குச் சந்தை இண்டக்ஸ் முதற்கொண்டு எல்லாமே ஒரிஜனல் விஷயங்கள். ரொம்பவே அடக்கி வாசித்து நடிக்கும் வித்யா பாலன் தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதற்குப் பிறகு அனய் கோஸ்வாமியின் காமிரா.

நிருபினியாய் தொண்டை கமர பேசும் ராணி முகர்ஜி அடிக்கடி கெட்ட வார்த்தை உதிர்க்கிறார், சட்டென கெட்ட காரியம் செய்கிறார், சிகரெட் புகைக்கிறார். இந்த மாதிரி டிவி நிருபினியாய் வருபவர்கள் எல்லோரும் மாடர்னாகத் தான் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள். இத்தனை கெட்ட வார்த்தைகளில் ஒன்றிரண்டாவது தமிழ் சென்ஸார் அனுமதித்தால் நலம். இல்லையென்றால் சென்னைக் தாதாக்கள் எல்லாம் ..த்தா மட்டும் சொல்லித் தான் பயமுறுத்த முடியும். இந்த வார்த்தைகளை தற்போதைய ஸ்கூல் பையன்கள் கூட யூஸ் பண்ணுவதில்லையாம்.

தெய்வம் தந்த பூ

அது ஒரு ஜென் ஆசிரமம். சிறு பையன்கள் தொடங்கி முதியவர்கள்வரை பலரும் அங்கே தங்கிக் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த ஆசிரமத்தின் தலைவர் அவர்களுக்குத் தினந்தோறும் பாடங்களை நடத்தினார்.

ஒருநாள் அவர் சீரியஸாகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது முன் வரிசையில் ஒரு பையன் ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தான், பக்கத்தில் உள்ளவர்களோடு அரட்டையடித்தான், குருநாதர் சொல்வதைக் கவனிக்கவே இல்லை.

கடுப்பான குருநாதர் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். ‘நீ ஒரு முட்டாள்’ என்றார். ‘நிச்சயமா நீ உருப்படப்போறதில்லை. வெளியே போ!’ என்று உறுமினார்.

சிறுவன் அவரைத் தீவிரமாகப் பார்த்தான். ‘ஐயா, நீங்க சொன்னா நான் வெளியே போறேன். ஆனா, நான் நிச்சயமா முட்டாள் இல்லை, உருப்படாம போறவனும் இல்லை!’ என்றான்.

’எப்படிச் சொல்றே?’

’என்னைப் படைச்சவர் கடவுள். அவர் எப்பவும் பயன்படாத விஷயங்களைச் செய்யமாட்டார்ன்னு நான் நம்பறேன்!’ கம்பீரமாகச் சொன்னான் அவன்.

குருநாதர் அதிர்ந்துபோனார். அப்படியே அந்தச் சிறுவன் காலில் விழுந்தார். ’இனிமேல் நீதான் என்னுடைய குரு’ என்றார்.